விதவைகள் மறுமணம் செய்து கொள்வது பற்றிய விவாதத்தில் பாரதியின் பெயர் இடம் பெறாமல் போகுமா? அவ்விவாதத்தின் தொடர்ச்சியாகப் பெண்ணுரிமை பற்றிப் பாரதியின் கருத்துகளும் பேசப்பட்ட போது எழுத்தாளர் அம்பை பாரதி 'சக்ரவர்த்தினி' எனும் பத்திரிக்கையில் அரசியல் உரிமை கோரும் பெண்கள் "அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள்" என்று குறிப்பிட்டதாகச் சொன்னார். இத்தகைய முரனையும் சேர்த்தே நாம் பாரதியை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அம்பை. பாரதியிடம் முரன் இருந்ததா என்பதையும் அது முரனா இல்லை ஒரு சறுக்கலா இல்லை ஒரு காலக்கட்டத்தில் சாதாரணமாகச் சொல்லப்பட்டதா என்பதைப் பார்ப்போமே.
ஜெயமோகன் பெண் எழுத்தாளர்களை மிகக் கடுமையாக விமர்சித்து எழுதிய பதிவை எதிர்த்துத் 'தமிழ் இந்து'வில் "பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்" என்ற தலைப்பிலான கட்டுரையில் அந்த மேற்கோளை அம்பை சுட்டியுள்ளார்.
"இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை (அம்பை இங்கே குறிப்பிடுவது 'ஜெயமோகனைப் போன்ற' எனும் அர்த்தத்தில்) பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மன நொயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிக்கையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும் போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகதவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஒரு முறை தி. ஜானகிராமனின் கதை ஒன்றைக் குறித்துக் குகப்ரியை விமர்சித்த போது, "குகப்ரியை மாமி மடியாக எழுதுபவர்" என்று தி.ஜானகிராமன் பதிலளித்தார் என்று குகப்ரியை என்னிடம் குறிப்பிட்டதுண்டு"
பெண்கள் எழுதுவதை மன நோயின் வெளிப்பாடாக ஆண்கள் பார்க்கிறார்கள் என்று சொல்லி, பாரதியை மேற்கோள் காட்டி அதன் பின் தி.ஜா மிக நக்கலாகவும் சீண்டலாகவும் ஒரு பெண் எழுத்தாளரைப் பற்றிக் குறிப்பிட்டதையும் வைத்து முடிக்கும் போது நமக்குப் பாரதி என்னமோ 'நிழல் நிஜமாகிறது' படத்தில் கமல் வரும் ஆணாதிக்கப் பாத்திரம் போல் தெரிகிறார். போதாதற்குக் கட்டுரையின் தலைப்போ "பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்". மிகத் துரதிர்ஷ்டமான சித்தரிப்பு. மேலே செல்வதற்கு முன், பாரதி அப்படி எழுதியிருக்கிறார் என்பது உண்மை.
முதலில் 'சக்ரவர்த்தினி' பத்திரிக்கையின் வரலாறே ஆச்சர்யமானது. ரா.அ. பத்நாபனின் 'சித்திர பாரதி' அவ்வரலாற்றைத் தருகிறது, சற்றே. "தமிழ் நாட்டு மாதர்களின் அபிவிருத்தியே நோக்கமாக வெளியிடப்படும் மாதாந்திரப் பத்திரிக்கை" என்ற பேனரோடு தலைப்பிட்டு வைத்யநாத ஐயர் வெளியிட சி. சுப்ரமணிய பாரதி ஆசிரியராக 1905 ஆகஸ்டு முதல் வெளிவந்தது. இதில் என்ன புரட்சி? பெண்களுக்கான பத்திரிக்கையை ஆண்கள் வெளிக்கொணர்ந்து ஆண்கள், குறிப்பாகப் பாரதியே, கட்டுரைகள் எழுதுவது பெண்ணியமா எனக் கேட்பது அறிவிலித்தனம். வரலாற்றில் எல்லா வகையான புரட்சியும் சமூக மற்றும் கல்வி அந்தஸ்த்தில் மற்றவர்களை விட உயரிய நிலையில் இருப்பவர்கள் தான் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார்கள். கார்ல் மார்க்ஸும் எங்கெல்ஸும் தொழிலாளிகள் அல்ல. வைதிக மரபு, மரபு சார்ந்த குலத்தில் பிறந்தவர்கள் மரபை மீறும் சீர்திருத்தத்திற்கு அடி கோலினார்கள் என்பது கவனிக்க வேண்டியது. மேலுள்ள படத்தில் ஒரேயொரு கட்டுரை ஒரு பெண்ணால் எழுதப்பட்டது. ஆர். எஸ். சுப்புலட்சுமி என்பவர் 'பார்வதி சோபனம்' எனும் கட்டுரையை எழுதியுள்ளார். அவர் யார் என்று நான் தேடிய போது விக்கிப்பீடியா மிக ஆச்சர்யமான தகவல்களைத் தந்தது.
ஆர். எஸ். சுப்புலக்ஷ்மி பிராமணக் குடும்பத்தில் பிறந்து இளம் விதவையானவர். பின் சென்னை பிரெஸிடென்ஸி கல்லூரியில் 1911-இல் படித்துப் பட்டம் பெற்ற முதல் இந்துப் பெண்மணி. விதவைகளுக்காகச் 'சாரதா இல்லம்' நிறுவி நிர்வகித்தார். 1906-இல், அவர் பட்டம் பெறுவதற்கு முன்பே, அவரின் எழுத்துக்கு ஓர் மேடையாகப் பாரதியின் சக்ரவர்த்தினி இருந்திருக்கிறது. அன்றைய பிராமணச் சமூகத்தில் இது மிகப் பெரிய புரட்சி. இதே காலத்தில் தான் முத்துலெட்சுமி ரெட்டி முதல் பெண் மருத்துவரானார். 1930-இல் தேவதாசி ஒழிப்பு மசோதாவை முத்துலெட்சுமி கொண்டு வர முணைந்த போது தமிழ் நாடு காங்கிரஸின் மூத்த தலைவரும் பிராமணருமான சத்தியமூர்த்தித் தேவதாசி முறை இந்துக் கலாசாரத்தில் முக்கியமானது என்று வாதிட்டது அக்காலத்தில் பாரதி போன்றோருக்கான எதிர் அணியின் வலுவுக்குச் சான்று.
இந்தியர்கள் இந்திய ஞானியர், தத்துவ மேதைகள் குறித்துக் கிறிஸ்தவ மதக் குருமார் மற்றும் அவர்கள் நடத்தும் கல்விநிலயங்களில் நடக்கும் பிரச்சாரங்களில் மயங்கி இந்திய மரபுகளைக் குறித்து ஏளனமான எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் பாரதிக்கு இருந்தது. அதைக் களையும் பொருட்டு இந்திய ஞான மரபு, விவேகாநந்தர், இராமகிருஷ்ணர் ஆகியோர் பற்றித் தான் பணிபுரிந்தப் பத்திரிக்கைகளில் எழுதி வந்தார். அவ்வண்ணமே சகர்வர்த்தினியிலும் பாரதி எழுதினார்.
ஒரு வாசகி, "ஐயா, உமது சக்ரவர்த்தினிப் பத்திரிக்கை அத்தனை ரஸமில்லை. இன்னும் எத்தனை காலம் விவேகாநந்தரைப் பற்றி எழுதிக் கொண்டே போகப் போகிறீர்? பத்திரிக்கையின் வெளிபுறத்திலே தடித்த எழுத்துக்களில் 'பெண்களின் அபிவிருத்தியின் பொருட்டாக' என்று எழுதி விட்டீர்; உள்ளே விவேகாநந்தர் சந்நியாசம் வாங்கிக் கொண்ட விஷயம், புத்தர் ராஜாங்கத்தை விட்டுவிட்டு பிச்சைக்குப் புறப்பட்ட விஷயம்- இதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் இதனால் பெண்களுக்கென்ன அப்விருத்தி ஏற்படும்" என்று பாரதியிடம் நேரில் கேட்டார். அப்பெண்மணியைப் பாரதி "மிகுந்த கல்வியில்லாவிடினும் கூர்மையான அறிவு கொண்ட பெண்மணி" என்று அறிமுகம் செய்கிறார்.
முதலில் தன் முயற்சிப் பாராட்டப்படவில்லையே என்று தோன்றினாலும், "மேற்படி மாது சொன்னது சரி. நான் செய்தது பிழை" என்று ஒப்புக் கொள்கிறார் பாரதி. தமிழ் நாட்டுப் பெண்களிடையே படிப்பறிவு அதிகமில்லாததால் தன் பத்திரிக்கையின் கட்டுரைகளை ஆண்கள் படித்து "அதன் மூலமாகப் பெண்களை அபிவிருத்தி செய்விக்க" வேண்டுமென்றத் தன் நோக்கம் தவறென்று தெளிந்து, படிப்பறிவு உள்ள ஆண்களுக்கு வேறெங்கும் கிடைக்காத எந்தத் தகவலும் தன் பத்திரிக்கையில் இல்லை என்பதையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, "இந்த நிமிஷமே மாதர்களுக்கு அர்த்தமாகக் கூடிய விஷயங்களை, அவர்களுக்கு அர்த்தமாகக் கூடிய நடையிலேயே எழுத ஆரம்பிக்க வேண்டுமென்று நிச்சயித்துவிட்டேன்" என்று உறுதியளித்துப் பின் "ஸ்பெயின் ராஜாவின் விவாகச் சமயத்திலே வெடிகுண்டு விபத்து" எனும் கட்டுரையைத் தருகிறார்.
சாதாரண வாசகி ஒருவரின் புகாரை கருத்தில் கொண்டு அதை வெளிப்படையாகத் தன் பத்திரிக்கையிலும் வெளியிட்டுத் தன் தரப்புத் தவறு என்றும் ஒப்புக் கொண்டு தன் வழியை மாற்றிக் கொள்ளும் ஆண் பத்திரிக்கை ஆசிரியர்கள் இருபதாம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் இல்லை.
கவனிக்கவும் பாரதிக்கு அப்போது வயது வெறும் 23-24. 2017-இல் 24 வயது தமிழ் நாட்டு ஆண்கள் பாரதியின் விவேகத்தில் கிஞ்சித்தாவது கைக் கொண்டிருந்தால் தற்காலத் தமிழ் பெண்கள் இன்னும் பாதுகாப்பாக இருப்பார்கள்.
இந்தியா பத்திரிக்கையின் அதிபரும் பாரதியின் நண்பருமான மண்டையம் ஸ்ரீநிவாஸாச்சார்யாரின் மகள் யதுகிரி, பாரதியும் அவர் குடும்பத்தாரும் புதுவையில் அடைக்கலம் புகுந்த போது, சிறுமி. பாரதியின் அன்புக்கு மிகவும் பாத்திரமான யதுகிரி 1939-இல் எழுதி 19540இல் வெளியிட்ட 'பாரதி நினைவுகள்' புத்தகத்தின் சில வரிகளை வைத்துப் பாரதியை விமர்சிப்போர் உண்டு.
யதுகிரி எழுதியது ஒரு சிறுமி பின்நாளில் மகாகவி என்று கொண்டாடப்பட்டவரோடு பழகக் கிடைத்த சில வருடங்கள் பற்றிய நினைவுத் தொகுப்பு. அவ்வளவு தான் அதற்கு மதிப்பு. அவர் சிறுமியாக இருந்த போது பாரதியோடு சமமாகக் குழைந்தகளுக்கே உரித்தான உரிமை எடுத்துக் கொள்வதைச் செய்து வாதிட்டதை நினைவாக எழுதும் போது வந்து விழுந்த சில வரிகள் தான் இன்று மேற்கோள் காட்டப்படுகின்றன.
பாரதிக்கும் செல்லம்மாவுக்கும் வந்த சச்சரவுகள், யதுகிரியின் நூலில் இருக்கும் செய்திகளை வைத்துப் பார்த்தால், மிகச் சாதாரணமான லௌகீக காரணங்களுக்காக ஏற்படுபவை. அந்தச் சச்சரவுகளில் நுழைந்த யதுகிரி துடுக்காகப் பாரதியிடம் கேட்கிறார், "நீர் பாட்டில் பெண் விடுதலையைக் கொண்டாடுகிறேன் என்று பெண்டாட்டியோடு சண்டை போட்டால் என்ன பிரயோசனம்" என்று வினவுகிறார். 'தலையில் துணி போட்டுக் கொண்டு' போவேன் என்று சினந்து சொன்ன பாரதியிடம் தானும் அப்படிச் செல்லலாமே என்ற செல்லம்மாவை பாரதி கடிந்து கொள்ள, யதுகிரி "உம்மைப் போலத் தானே செல்லம்மாவும்? ஏன் போக முடியாது? அங்கு விடுதலை இல்லையா?" என்று கேட்கிறார்.
சண்டையின் முகாந்திரம் செல்லம்மாள் பாரதியை பத்திரிக்கைக்கு எழுதி அனுப்ப வேண்டிய கட்டுரையை எழுதி அனுப்பத் தூண்டியதில் ஆரம்பித்தது. குழந்தையிடம் இருவரும் முறையிட்டப் பின் மனம் லேசாகி எல்லோரும் கடற்கரைக்குச் செல்கிறார்கள் அப்போது பாரதி யதுகிரியிடம் சொல்கிறார்: "பொறுப்புத் தெரியாமல் இருந்தால் பொறுப்பை வற்புறுத்திக் காட்ட வேண்டும். நிர்பந்தம் செய்யக் கூடாது. ஆனால் செல்லம்மா சொல்லியது சரி. என் கவிதையின் பைத்தியம் என்னை இழுத்துச் சென்றது. அந்தச் சூட்டில் இரண்டு பேச்சு நடந்தது. வீட்டில் தங்கக் கிளிகள் போல் குழந்தைகள். ஆனால் நாம் கொடுத்து வைக்கவில்லை. அவைகளுக்குத் தங்கத்தால் கவசம் பண்ணிப் போடலாம். புலவர் வறுமை புராணப் பிரசித்தம்....தலைவிக்கு வேண்டியது பணம். பணம் இருந்து விட்டால் என் செல்லம்மா உலகத்தையே ஆண்டு விடுவாள். அது இல்லாததால் என்னைக் கட்டுப் படுத்துகிறாள்; கேட்கிறாள்; சண்டை பிடிக்கிறாள்....என் செல்லம்மா முக்கியப் பிராணன்! என் செல்வம்! எல்லாம் எனக்கு அவள் தான். அவள் பாக்கியலக்ஷ்மி!"
புதுவை வாசத்தின் போது பாரதி போதைக்கு அடிமையானார், திடீரென்று மௌன விரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்தார். இவையெல்லாம் செல்லாமாவுக்குத் துயரம் அளித்தன. எல்லாக் கணவன் மனைவியும் ஒவ்வொரு காரணத்தால் பரஸ்பரம் இம்சிப்பது ஆதாம்-ஏவாள் காலம் முதல் வழக்கம். பாரதியின் மௌன விரதத்தால் மனம் வெதும்பிய செல்லம்மா யதுகிரியிடம் முறையிடுகிறார். பாரதியோ செய்வி சாய்ப்பதாயில்லை. யதுகிரி, "பாரதி வாயால் பெண்கள் சுதந்திரம் பாடினாரே ஒழியச் செல்லம்மாவைத் தம் நோக்கத்தின் படியே தான் நடக்கும்படி செய்தார். செல்லம்மா தமதிஷ்டப்படி நடப்பது வெகு அபூர்வமே" என்கிறார் அந்தச் சர்ச்சையை முன் வைத்து.
அடுத்தப் பத்தியிலேயே யதுகிரி "ஒரு தரம் நாற்பது நாள் விரதம் இருந்து கவிதைகள் செய்தார். அது தான் 'பாரதி அறுபத்தாறு' என்ற பெயரில் இப்போது உலவுகிறது. இன்று அதைப் படித்தால் அன்று அவர் அதைச் செய்ய எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும் என்பது விளங்குகிறது". பாரதி கவி சிரேஷ்டன் அவனைச் சராசரிகளுக்கான அளவுகோல் கொண்டு அளக்கக் கூடாது. மேலும் அவன் கொண்ட கருத்துக்கும் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் அதிகத் தூரமில்லை, முரன்களுமில்லை.
பாரதி சீர்த்திருத்தவாதி, பூணூல் அணியாமல் 'நான் சூத்திரன்' என்றவன், செல்லம்மாவின் விருப்பத்துக்கு மாறாகத் தன் பெண்கள் ருதுவான பின் தான் மணம் முடிக்க வேண்டும் என்றவன். செல்லம்மா எழுத்தறிவில்லாத பிராமணப் பெண் பாரதி கற்றறிந்தவன், தன் மரபார்ந்த தளைகளைத் தகர்த்து புதிய சமதர்ம வாழ்வை நோக்கிச் சென்றவன் இந்தப் பின்னனியில் காந்தி-கஸ்தூர்பா, நேரு-கமலா ஆகியோரையும் ஒப்பிடல் அவசியம். தாகூர் தன் பெண்ணைச் சிறு வயதிலேயே மணம் முடித்தார் என்பதும் நினைவில் கொள்வது அவசியம். பாரதியிடம் முரண் இருந்ததா என்பதை அவன் மனைவியை நடத்தியதை விடத் தன் மகள்கள் மற்றும் யதுகிரியை நடத்திய விதத்தை வைத்து அளக்கலாம்.
யதுகிரிக்கு வரன் பார்க்கிறார்கள் என்றவுடன் அவருக்குச் சில புத்திமதிகளைப் பாரதி சொல்கிறார், அதிலிருந்து சில பகுதிகள், "முக்கியமாகக் கூச்சம், வெட்கம் இரண்டும் அநாவசியமான சரக்குகள்.....புக்ககத்திற்குப் போனாலும் தைரியமாக இரு. பயப்படாதே. ஒட்டுக் கேட்காதே. ப்றர் கடிதங்களை உடைத்துப் பார்க்காதே. மனத்தில் உள்ளதை நேரில் சொல்லிவிடு...உன்னை விலைக் கொடுத்து அவர்கள் வாங்கவில்லை...படிப்பை விடாதே. கேவலம் அடிமைத்தனத்திற்கு ஒத்துக் கொள்ளாதே. உனக்கு உரிமை உண்டு. புத்தி உண்டு. ஸ்வதந்திரம் உண்டு. தலை நிமிர்ந்து நட. இயற்கையைக் கண் குளிரப் பார். நேர்ப் பார்வையில் பார். கடைக் கண் பார்வையில் பார்க்கத் தகுந்தவன் கணவன் ஒருவனே....நிமிர்ந்து உட்கார். பேசுவதை ஸ்பஷ்டமாகப் பேசு. தைரியமாகப் பேசு".
பாரதியின் அநேகப் பாடல்களில் இருக்கும் அதே கருத்துகள் தான். துளியும் முரன் இல்லை. இன்றைக்கும் எந்தத் தகப்பனும் தன் பெண்ணுக்குச் சொல்லக் கூடியவை இவை. இது என்ன பெண்ணுக்கு மட்டும் ஆலோசனையா என்பவர்கள் பாரதியைச் சுற்றிப் பெண் குழந்தைகள் தாம் இருந்தன என்பதை மறந்து விடக் கூடாது. இந்த அறிவுரையின் இடையே ஆண்களை இடித்துரைத்திருப்பார். ஓர் ஆண் பிள்ளைக்குப் புத்திச் சொல்லும் வாய்ப்பு அமைந்திருந்தால் நிச்சயம் பாரதி வேறு மாதிரிப் பேசியிருப்பார்.
'நிமிர்ந்த நன்னடை, நேர்க் கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச் செறுக்கு', 'நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்' என்று கவிதைகளில் சொன்னதைத் தான் யதுகிரிக்குச் சொல்லியிருக்கிறான் பாரதி.
ஒரு ஆண் பெண்களுக்குப் புத்திமதிச் சொல்வது இன்றைய பெண்ணியவாதிகளுக்கு நகைப்பாகவும் மேட்டிமைத் தனமாகவும் தெரியலாம். தங்கம்மாள் பாரதி எழுதிய "பாரதியும் கவிதையும்" நூலில் பாரதி சொல்கிறான் "நீ ஒரு புருஷன் தானே, உன்னால் எங்கனம் ஸ்திரீகளின் இயல்பை அறிய முடியும்? என்று நீ கேட்கலாம். எனக்குப் பெண்கள் முன்னேற்றாத்தில் விசேஷ சிரத்தை யிருப்பதற்குக் காரணத்தையும் கூறுகிறேன், கேள்".
"ஒரு நாள் ஒரு கனவு கண்டேன். என் உடம்பும் பெண்ணூருவாக மாறியது. எங்குப் பார்த்தாலும் பெண்கள் படுந் துயரம் என்னைத் திகிலுறச் செய்தது. கல்வியறிவில்லாமல் பெண்கள் கடுந்துயரில் அகப்பட்டு உழன்றனர்.....ஆதலால் வருங்காலச் சந்ததிக்காகவும், முதலில் நமது ஸ்திரீகளுக்குக் கல்வியளிக்க வேண்டும். அறிவுத் தெளிந்தால் உடனே அவர்களைப் பிடித்திருக்கும் அஞ்ஞானம் நீங்கும்....வேதகாலத்துப் பெண்களைப் போல வாழ்வார்கள்". பெண்கள் முன்னேற்றாம் பற்றிய ஒவ்வொரு கட்டுரையிலும் பாரதி மீண்டும், மீண்டும் சொல்வது பெண்கள் கல்வி அறிவுப் பெற வேண்டும் என்பதைத் தான். விடுதலை என்பது யாரும் கொடுத்துப் பெறுவதல்ல என்பதையும் சொல்லி கல்வியறிவு பெற்ற பெண்கள் அதைத் தாமே தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார்.
13 வயதே ஆன தங்கம்மாள் ஓர் உறையாற்றியிருக்கிறார், அநேகமாகப் பாரதி எழுதிக் கொடுத்த உரை. காந்தியின் சத்யாகிரஹ பாணியைப் பின்பற்றிப் பெண்கள் ஆண்கள் தங்களைச் சமத்துவமாக நடத்தினால் ஒழிய அவர்களுடன் வாழ மாட்டோம் என்பதைத் தெளிவுறச் சொல்ல வேண்டும், சமத்துவம் கிடைக்காத பட்சத்தில் காந்திய வழியில், "உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்துத் தள்ளீனால் ரஸ்தாவில் கிடந்து சாவேன்" என்று போராடச் சொல்கிறார். இன்று இது நகைப்பாகத் தோன்றலாம் ஆனால் 1918-இல் ஒரு பதின்ம வயது சிறுமி மேடையேறி இதைச் சொல்வதற்கு அவளுக்கும் அதை விட அவள் தந்தைக்கும் தைரியம் வேண்டும். பிராமணரல்லாதாரோடு உணவுண்டார் என்பதற்காகவே கடயத்தில் ஊரைவிட்டுச் சோறில்லாமல் விலக்கி வைக்கப்பட்டார் பாரதி என்பதை இங்கே சொல்ல வேண்டும்.
1918-இல் எழுதிய கட்டுரையில் 'பெண் விடுதலைக்கான ஆரம்பப் படிகள்' என்று பாரதி பட்டியலிடுவன: சொத்துரிமை, ருதுவான பின் தான் திருமணம், விவாகத்தில் சுதந்திரம், தனித்து வாழும் சுதந்திரம், பிற ஆடவருடன் உரையாடும் சுதந்திரம், உயர்தரக் கல்வி, அரசாட்சியில் பங்கு, அன்னி பெஸண்டைப் போல் தலைமை வகிக்க ராஜரிக உரிமை. "ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹ ரிஷிகளாக முயலுதல் மூடத்தனம்" என்று அக்கட்டுரை முடிகிறது.
யதுகிரியிடம் தான் ரயிலில் சந்தித்த கணவன் மனைவி பற்றிப் பாரதி சொல்கிறார். கணவன் முன் பேசா மடந்தையாக இருந்த பெண் கணவன் அகன்றதும் பாரதியிடம் பேச்சுக் கொடுத்தாள், பின் கணவன் வந்ததும் மீண்டும் மௌனம். அந்நிகழ்வைச் சொல்லி ஏன் இந்தப் பித்தலாட்டம் பிற ஆடவனுடன் பேசினால் என்ன என்று பாரதி கொதித்தார்.
பாரதியின் கவிதைகளில் அவர் பெண்கள் பற்றிச் சொன்னதற்கும், கட்டுரைகளில் எழுதியதற்கும், தனி வாழ்வில் தன்னைச் சுற்றி வளர்ந்தப் பெண் குழந்தைகளை அவர் நடத்திய விதமும் அவர்களுக்குச் சொன்ன அறிவுரையும் ஒரே நேர்க் கோட்டில் தான் பயணிக்கின்றன.
விதவைகள் விவாகம் சம்பந்தமாகக் காந்தியையும் விவேகாநந்தரையும் மறுத்த பாரதி:
தாம் மிகவும் மதித்த காந்தியையும் விவேகாநந்தரையும் மிகத் தீர்க்கமாகப் பாரதி மறுத்து எழுதியது வதவைகள் மறுமணம் குறித்துத் தான்.
காந்தி விதவைகள் மறுமணம் குறித்து எழுதும் போது வயது முதிர்ந்த ஆண்களே மனைவியை இழந்தவர்கள் அவர்கள் மறு மணம் செய்யாமல் இருந்தால் அவர்களால் மணக்கப்பட இருக்கும் இளம் பெண்கள், இளம் பெண்களாக இருப்பதாலேயே, விதவைகள் ஆகாமல் இருக்கக் கூடும் எனும் அர்த்தத்தில் எழுத, சரியாகச் சொன்னால் காந்திச் சொன்னதுக்கு அது தான் அர்த்தம் என்கிறார் பாரதி, பாரதி அதைத் திட்டவட்டமாக மறுக்கிறார்.
ஆணோ, பெண்ணோ, வயது முதிர்ந்துவிட்டது என்பதற்காக "போக விருப்பமும் போக சக்தியும் இல்லாமற் போகும்படி கடவுள் விதிக்கவில்லை" என்கிறார் காட்டமாக. "ஸ்ரீமான் காந்தி சொல்லும் உபாயம் நியாய விரோதமானது; சாத்தியப்படாதது; பயனற்றது" என்கிறார் தீர்மானமாக. மேலும் "விதவைகள் எந்தப் பிராயத்திலும் தமது பிராயத்துக்குத் தகுந்த புருஷரை புனர் விவாகம் செய்து கொள்ளலாம்" என்கிற தைரியத்தைச் சமூகம் அளிக்க வேண்டும் என்கிறார்.
விவேகாநந்தரின் மீது பெருமதிப்பு வைத்திருந்தார் பாரதி ஆனால் விவேகாநந்தர் துறவு மார்க்கம் மேற்கொண்டதால் திருமணம் பற்றியும் விதவைகளின் நிலைப் பற்றியும் கொண்டிருந்த கருத்துகளைத் தாட்சண்யமின்றி நிராகரித்துள்ளார்.
மேல் ஜாதியினருக்குள் விதவைகள் மறுமணம் என்பது நடக்காததற்கு அவர்களிடையே, ஜன ஸங்கையின் (census) படி, ஆண்கள் எண்ணிக்கைக் குறைவாதலால் என்று விவேகாநந்தர் ஒரு கடிதத்தில் குறிப்பிட பாரதி விதவைகள் மறுமணம் செய்யக் கூடாதென்ற வழக்கங்கள் உருவான போது 'census' எடுக்கும் வழக்கமில்லையென்றும், "ஜன ஸங்கையா ஸ்திரீகளுடைய ஆபரண்க்களஒ கழற்றி அவர்களுடைய தலையைச் சிரக்க வேண்டுமென்று சொல்லிற்று? ஜன ஸங்கையா விதவைகள் ஒரு நேரந்தான் சாப்பிடலாமென்று விதித்தது?" என்று காட்டமாகவே எழுதுகிறார்.
கைம்பெண் என்பவர்கள் "கணவர்களையிழந்தார்களே யன்றி, உடம்பை இழக்கவில்லை; ஐம்புலன்களை இழக்கவில்லை; உணர்வை இழக்கவில்லை. காம விருப்பத்தை இழக்கவில்லை. காமக் கருவிகளை இழக்கவில்லை. அவர்கள் கல்லாய் விடவில்லை" என்று காந்திக்கு சொன்ன மறுப்பை மீண்டும் ஆணித்தரமாகப் பதிவுச் செய்கிறார். பாரதியைப் படிக்கும் போது வியக்க வைப்பது இந்தத் தெளிவும் முன்னுக்குப் பின் முரனாகப் பேசாததும் தான்.
மேற்கத்திய நாக்ரீகத்தின் ஊடுறுவலைக் கண்டு அச்சம் கொண்ட பலரும் கிராப் வைத்துக் கொள்ளிதல், உடையலங்காரம் இவை நீங்கலாகச் சிலதை ஏற்கலாம் என்பதைப் பாரதி நாகரீகம் என்பது "ஸ்தூல வஸ்து" அன்று "துண்டு துண்டாக வகுக்கவும் வேண்டிய அம்சங்களை எடுத்துக் கொள்ளவும்". "புற ஆசாரங்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் நமது தேசத்து மாதர் மித மிஞ்சிய கவலை செலுத்துவதை மாற்ற வேண்டுமென்ற நோக்கம்" என்று தெளிவாகச் சொல்லி "ஐரோப்பிய நாகரிகத்தின் கலப்பிலிருந்து ஹிந்து தர்மம் தன் உண்மை யியல்பு மாறாதிருப்பது மட்டுமேயன்றி முன்னைக் காட்டிலும் அதிகச் சக்தியும் ஒளியும் பெற்று விளங்குகிறது. இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாக உணர்ந்து கொண்டாலன்றி, இவர்களுடைய ஸ்வதர்ம ரக்ஷணம் நன்கு நடைபெறாது" என்கிறான் எட்டுத் திக்கும் சென்று அறிவுச் செல்வங்களைச் சேகரித்துத் தமிழ்த் தாயிடம் சமர்ப்பிக்கச் சொன்னவன்.
இங்கிலாந்தில் சம உரிமைக் கோரும் பெண்களிடம் அதை மறுக்கும் ஆண்கள் "பெண்களிடையே ஷேக்ஸ்பியர் போன்ற மேதை உண்டா" எனக் கேட்கிறார்கள் என்றும் அப்படியொரு கேள்வி தமிழ் நாட்டில் கேட்கப்பட்டால் "ஔவையாரைப்போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக் கூடிய ஓராண் மகன் இங்குப் பிறந்திருக்கிறானா" என்று மறுமொழிச் சொல்லலாம் என்றும் ஔவையைக் 'கவியரசி' என்று கொண்டாடுகிறான்.
பெண்களுக்கு எழுதும் கட்டுரைகளில் பெண்களின் சாதனைகளையும் பெண்கள் முன்னின்று நடத்தும் உரிமைப் போராட்டங்களையும் தவறாது பாரதி முன்னிலைப் படுத்தியிருக்கிறான்.
இந்தியர்கள் வெளிநாடுகளில் பிரபலமாவது இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பது என்றும் அப்படிப் புகழ்பெற்றவர்களை இந்தியர்களும் உவப்பாகக் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லி அப்படிப் புகழ்பெற்ற ஆண்களைப் போல் புகழைடந்த பெண்களையும், சரோஜினி நாயுடு உட்பட, பட்டியலிட்டு "இங்கனம், தமிழ் மாதர்களிலும் பலர் மேல்நாடுகளுக்குச் சென்று புகழ் பெற்று மீள்வராயின்" அது இங்குள்ள பெண்களின் மதிப்புயர உதவுமென்கிறார். "ஔவையார் பிறந்து வாழ்ந்த தமிழ்நாட்டு மாதருக்கு அறிவுப் பயிற்சி கஷ்டமாகுமா" என்றும் தைரியமூட்டுகிறார்.
1920-இல் அதை எழுதிய போது தாகூருக்கு தகுதிக்கு மீறி நொபல் பரிசுக் கிடைத்ததாகவும் அது மட்டும் தனக்குக் கிடைத்துவிட்டால் தன் தரித்திர வாழ்வுக்கு ஒரு முடிவு வருமென்று பாரதி நம்பிய காலம். தாகூரின் கவித்திறம் பற்றிக் கறாராகக் கருத்துச் சொன்ன பாரதி சரோஜினி நாயுடுவின் கவித் திறம் பற்றியோ அவர் அடைந்த புகழ் பற்றியோ அசூயைக் கொள்ளாமல் பெண்களுக்கு உதாரணமாகக் காட்டுகிறான். உலகம் சுற்றிய செல்வந்தரும் வங்கத்தின் சீர்த்திருத்த சூழலின் மையத்தில் வளர்ந்தவருமான தாகூர் பெண்களைப் பற்றி மிகச் சம்பிரதாயமான பிற்போக்கு எண்ணங்களைத் தான் கொண்டிருந்தார் தன் பெண்ணுக்கு, ஏழை பாரதியைப் போல் அல்லாது, குழந்தைப் பருவத்திலேயே மணம் முடித்தார்.
தன் மகன் தந்தையைப் போல் மேதையாக இல்லாமல் சாதாரண மனிதனாக வளர்ந்தால் போதும் என்று ஷெல்லியின் மனைவி சொன்னாராம் ஏனெனில் ஷெல்லி தன் வாழ்வில் அவர் தாயையும், மனைவியையும், சுற்றத்தாரையும் அவ்வளவு இம்சித்திருந்தார் என்கிறார் 'இண்டெலெக்சுவல்ஸ்' எனும் நூலாசிரியர் பால் ஜான்சன். ஜான்சன் டால்ஸ்டாய், ஹெமிங்வே, ரஸ்ஸல், ரூஸோ, ஷெல்லி என்று பலரின் வாழ்க்கையில் இருந்தத் தனிப்பட்ட பலவீணங்களையும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளுக்கு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குமான முரன்களைச் சொல்லி 'இவர்களோ மனித சமூகத்தின் ஆசான்களாக இருக்க யோக்யதையுள்ளவர்கள்' என்று முடித்திருப்பார்.
1951-இல் வானொலிக்கு அளித்த பேட்டியில் செல்லம்மா "உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாக இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்" என்றார்.
செல்லம்மா படிப்பறிவில்லாத வைதிகக் குடும்பத்தில் பிறந்த பெண் என்பதை நாம நினைவில் கொள்ள வேண்டும். அவர் கருத்துப் படி உலகத்தோடொட்டி வாழ்வதென்பது பெண்ணை 8-9 வயதில் மணமுடிக்க வேண்டும் என்பது உள்ளிட்டுப் பல்வேறு மூடப் பழக்கங்கள் உள்ள உலகம். அவ்வுலகில் கட்டிய மனைவியின் தோளில் கைப்போட்டு அனைத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்வது கூடப் புரட்சி தான். பாரதியின் அப்படிப் பட்டப் புகைப்படம் பிரசித்தம்.
"நீ மட்டும் மாநாட்டிற்கு வந்து என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்ட நிவேதிதாவை குருவாகப் பாரதி ஏற்கிறான் அதன் பின் பெண்கள் முன்னேற்றம் குறித்து அநேகம் எழுதுகிறான் ஆனால் அதன் பிறகு சென்ற மாநாட்டுக் கூடச் செல்லமாளை அழைத்துப் போகவில்லையே என்று கேட்கலாம். பொருளாதாரம் இடம் கொடுத்திருக்காது, செல்லம்மாளுக்கும் விருப்பம் இருந்திருக்காது. 1908 சூரத் காங்கிரஸ் மிகப் பதற்றமான சூழலில் நடந்தது, திலகர் வெளியேறினார், தடியடி நடந்தது. குடும்பத்தோடு சென்றிருக்கவே முடியாது.
அரவிந்தர், காந்தி, நேரு, தாகூர் என்று அன்றைய பெரும் ஆளுமைகள் பலரின் மனைவியர் மிகச் சாதாரணர். அவர்கள் அனைவரும் தங்கள் கணவர்களின் நிழலில் தான் நடக்க முடிந்தது. மேலும் அவர்களின் கணவர்களின் போக்கினால் அந்தந்த மனைவியரும் மிக இல்லலுற்றனர் என்பதே உண்மை. நேருவும் பாரதியும் தங்களால் மாற்ற முடிந்த தத்தம் மகள்களோடு இருந்த உறவோ வேறு. முன்பே பாரதி எப்படித் தங்கம்மாளை வளர்த்தார் என்று பார்த்தோம்.
இரண்டு மாதம் நோய்வாய்ப்பட்டிருந்த தன் இரண்டாம் மகள் சகுந்தலா மிகுந்தக் கவலைக்கிடமாக இருந்த போது 'நீ பெரிய சபைகளில் லெக்சர் கொடுக்கப் போகிறாய்; பெரிய பண்டிதையாகப் போகிறாய் என்று இருந்தேனே! உன் நாக்குப் புரள்வதில்லையே!' என்று அரற்றி சுவரில் மோதிக் கொண்டு அழுதாராம்.
"வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம் - தீராத குழப்பம்!" "இரண்டு மாத காலம் இரவு பகலுமாக நானும் செல்லம்மாவும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம்...பயம், பயம், பயம்! சக்தீ, உண்ணை நம்பித்தானிருக்கிறேன். நீ கடைசியாகக் காப்பாற்றினாய்".
யதுகிரியின் நினைவோடையில் பாரதி தன்னைச் சுற்றி இருந்தோரிடம், மனைவி, குழந்தைகளிடம் அன்றாடம் உரையாடலில் ஈடுபட்டு அவர்களைத் தன்னோடு சமமாக உரையாடும் வகையிலேயே வைத்திருந்தது தெரிகிறது. நெல்குத்தும் பெண்மனிப் பாடும் மெட்டில் ஒரு பாட்டு, ரயிலில் பிச்சைக் கேட்டு இந்துஸ்தானியில் பாடிய பெண்ணின் மெட்டில் ஒரு பாட்டு, யதுகிரி, செல்லம்மா, தங்கம்மா கேட்டதற்கிணங்க ஒவ்வொரு மெட்டில் ஒரு பாட்டு என்று தன்னைச் சுற்றி இருந்த பெண்களை, இக்கால முறைப்படிப் பார்த்தாலும், மிகக் கௌரவமாகவே பாரதி நடத்தியிருக்கிறான். காந்தியைப் பற்றி அப்படிச் சொல்ல இயலாது.
பணக்காரன் சீர்திருத்தம் பேசுவதும் செய்வதும் சில வகைகளில் எளிதே, உதாரணம் நேரு குடும்பத்தாரின் வாழ்க்கை. ஏழைப் புலவனின் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. சீர்த்திருத்தம் பேசும் ஏழையின் மனைவி, அதுவும் இரண்டு பெண்களின் தாயார், அண்டை அயலாரை நம்பித்தான் வாழ்க்கையை நகர்த்த வேண்டும். அதன் பொருட்டு நிச்சயம் கசப்புகள் செல்லம்மாவுக்கு இருந்திருக்கும். பெண் சீர்திருத்தவாதிகளுக்கும் அவர்களின் சுற்றத்தார் இந்தச் சங்கடத்தை அனுபவித்திருப்பார்கள், பன்மடங்காகவே. அந்தக் கசப்புகளை நாம் ஒரு நிகழ்வாகப் படிக்கலாமே தவிர அதைக் கொண்டே ஒருவரை மதிப்பிடலாகாது.
பாரதி தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் மிக அன்புப் பாராட்டியவன். 'அன்பு மிக உடையோர் மேலோர்' என்று எழுதியவனாயிற்றே. தன் சகோதரன், மைத்துனன், மாப்பிள்ளை ஆகியோருக்கு உதவ முடியா நிலையில் இருந்தது பாரதியை வருத்தி இருக்கிறது. தன் மகள்கள் மீது பேரன்பு கொண்டிருந்தான். யதுகிரியை தன் மகளாகவே கருதி அச்சிறுப் பெண்ணின் கேள்விகள், விவாதங்களுக்குச் செவி சாய்த்திருக்கிறான்.
யதுகிரி அம்மாளின் 'பாரதி நினைவுகள்' படிப்பதற்கு சுவாரசியமான உரையாடல் முறையில் உள்ளது. பாரதியை உரையாடல்கள் வழியே நமக்குக் காண்பிக்கிறார். ஆனால் அவர் சொல்லும் பாடல்களின் காலம் சீனி.விஸ்வநாதனின் 'கால வரிசையில் பாறதி பாடல்கள்' தொகுப்பில் இருக்கும் தேதிகளோடு எல்லாச் சமயமும் ஒத்துப் போவதில்லை.
தங்கம்மாள் பாரதியின் நூலும் சுவாரசியமான சிலத் தகவல்களைக் கொண்டது.
ரா.அ. பத்மநாபனின் 'சித்திர பாரதி' அரியப் புகைப்படங்களும் தகவல் கோர்வையுமாக உள்ளது. மிகப் பெரிய குறை இப்புத்தகத்தில் காலம் முன்னும் பின்னுமாகச் செல்கிறது. மேலும் யதுகிரி நூலில் இருந்து எடுத்தாண்ட மேற்கோள்களை அவர் அடையாளப்படுத்தவேயில்லை. இது மிகவும் தவறு. உதாரணம் சகுந்தலா நோய்வாய்ப்பட்டச் சமயம் பாரதி அரற்றியது எல்லாம் யதுகிரியின் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
மேற்சொன்ன எல்லா நூல்களும், வ.ராவின் நூல் உட்பட, விதந்தோதும் வாழ்க்கை வரலாறுகள் (hagiography) தாம்.
பரலி நெல்லையப்பருக்கு எழுதியக் கடிதத்தில் பாரதி, "தம்பி நான் ஏது செய்வேனடா! தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது. தம்பி, உள்ளமே உலகம். ஏறு!ஏறு!ஏறு! மேலே, மேலே, மேலே!"
ஆனால் அதே பாரதி தான், "சிந்து நதியின் மிசை நிலவினிலே, சேர நன்னாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து, தோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்" என்றும் பாடினான்.
டால்ஸ்டாய், காரல் மார்க்ஸ் ஆகியோரின் வாழ்க்கை மிகுந்த முரன்கள் உடையது. பாரதியின் வாழ்வில் அப்படியில்லை. தனி வாழ்வும் பொதுவில் அவன் எழுதியதும் மிகப் பெரும்பாலான நேரங்களில் எவ்வித முரனும் இல்லாமல் ஒன்றுகொன்று ஒத்தே இருந்திருக்கின்றன. இன்றைய நவீன வாழ்வில் சாதாரணர்களின் வாழ்வில் இருக்கும் முரன்கள் கூடப் பாரதியின் வாழ்வில் இல்லை என்பது தான் உண்மை.
சரி, அப்படியென்றால் அந்த ஒரு வரியை எப்படிப் புரிந்து கொள்வது. அது ஒரு சறுக்கல் அவ்வளவே. 24-வயது வாலிபன் 1906-இல் எழுதிய ஒரு வரியை வைத்து அவன் வாழ்க்கையில் வாழ்ந்ததையும், வாழ் நாளெல்லாம் எழுதியெழுதி குவித்ததையும் புறந்தள்ள முடியாது என்பதோடு அந்த ஒற்றை வரியை வைத்துப் 'பெண் வெறுப்பு" என்ற நீண்ட படலத்தின் ஆரம்பப் புள்ளியாகச் சித்தரிப்பது மிகை மட்டுமல்ல அதீத காழ்ப்பு.
1990-இல் நான் தஞ்சையில் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது அநேகப் பெற்றோர் இரு பாலார் சேர்ந்துப் படிக்கும் பொறியியல் கல்லூரிக்கு தன் பெண்களை அனுப்ப பயந்து தாங்கள் கும்பிடும் தெய்வங்களை நிந்தித்து எழுதி அதை அவர்கள் பணத்திலேயே பிரசுரித்து வீட்டுக்கு அனுப்பும் கி.வீரமணியின் கல்லூரியில் சேர்த்தார்கள் ஏனென்றால் அக்கல்லூரி பெண்களுக்கான பிரத்தியேகக் கல்லூரி. பெரியார் வழி வந்தவர்கள் இரு பாலாருக்குமான கல்லூரியை நடத்தவில்லை. நான் சேர்ந்த கல்லூரியிலோ பேருக்குத் தான் இரு பாலாரும் சேர்ந்துப் படித்தோம். என் கல்லூரியில் பெண்களுக்கு உடையில் கட்டுப்பாடு, ஆண் மாணவர்களோடு பேசுவதில் கட்டுப்பாடு, கிட்டத்தட்ட தாலிபான் ரேஞ்சில் தான் கல்லூரி செயல்பட்டது. நான் உயர்நிலைப் பள்ளியும் அப்படித்தான். பள்ளியும், கல்லூரியும் பிராமணர்களால் நடத்தப்பட்டது. இப்போது நிதானித்து யோசித்துப் பாருங்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் பாரதி பெண் சுதந்திரமாக ஆணிடம் பேச வேண்டும் என்று கேட்டதை.
விமர்சனமாகச் சொல்ல வேண்டுமென்றால் பாரதி ஏன் ஆண்களை நோக்கிக் கட்டுரை எழுதவில்லை என்றுக் கேட்கலாம். ஆனால் அது காந்தி ஏன் ஆங்கிலேயரை நோக்கி எழுதவில்லை, மார்டின் லூதர் கிங் ஏன் வெள்ளாஇயரை நோக்கி எழுதவில்லை என்றுக் கேட்பதற்கு இணையானது. எக்கட்டுரையிலும் ஆண்களுக்காக பாரதி வாதிடுவதில்லை, பூசி மெழுகுவதில்லை.
இன்றைக்கும் பெண் விடுதலைப் பற்றி எந்தத் தமிழ் பெண்ணும் பேசத் தலைப்பட்டால் அப்பெண்ணுக்கு முதல் ஆசான் பாரதி தான். நவீனத் தமிழ் உலகின் ஆசானும் பாரதியே.
References:
http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl2511/stories/20080606251101400.htm
https://ta.wikipedia.org/wiki/முத்துலட்சுமி
https://en.wikipedia.org/wiki/R._S._Subbalakshmi
http://tamil.thehindu.com/general/literature/பெண்-வெறுப்பு-என்றொரு-நீண்ட-படலம்/article6136159.ece
http://www.thehindu.com/2000/12/11/stories/13110781.htm
https://archive.org/stream/BharathiyumKavithaiyumThangammalBharathi1947/Bharathiyum%20Kavithaiyum-Thangammal%20Bharathi%20%281947%29#page/n127/mode/2up
https://archive.org/details/BharathiNinaivugalYathugiriAmmal1954
http://enbharathi.blogspot.com/2009/04/blog-post_15.html
http://www.tamilhindu.com/2009/09/state-of-widows-in-india-bharathiyar/
"கால வரிசியில் பாரதி படைப்புகள்" -- சீனி விசுவநாதன். தொகுப்புகள் 2, 3, 10, 12,13,
சக்ரவர்த்தினி
"இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை (அம்பை இங்கே குறிப்பிடுவது 'ஜெயமோகனைப் போன்ற' எனும் அர்த்தத்தில்) பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மன நொயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிக்கையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும் போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகதவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஒரு முறை தி. ஜானகிராமனின் கதை ஒன்றைக் குறித்துக் குகப்ரியை விமர்சித்த போது, "குகப்ரியை மாமி மடியாக எழுதுபவர்" என்று தி.ஜானகிராமன் பதிலளித்தார் என்று குகப்ரியை என்னிடம் குறிப்பிட்டதுண்டு"
பெண்கள் எழுதுவதை மன நோயின் வெளிப்பாடாக ஆண்கள் பார்க்கிறார்கள் என்று சொல்லி, பாரதியை மேற்கோள் காட்டி அதன் பின் தி.ஜா மிக நக்கலாகவும் சீண்டலாகவும் ஒரு பெண் எழுத்தாளரைப் பற்றிக் குறிப்பிட்டதையும் வைத்து முடிக்கும் போது நமக்குப் பாரதி என்னமோ 'நிழல் நிஜமாகிறது' படத்தில் கமல் வரும் ஆணாதிக்கப் பாத்திரம் போல் தெரிகிறார். போதாதற்குக் கட்டுரையின் தலைப்போ "பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்". மிகத் துரதிர்ஷ்டமான சித்தரிப்பு. மேலே செல்வதற்கு முன், பாரதி அப்படி எழுதியிருக்கிறார் என்பது உண்மை.
'சக்ரவர்த்தினி' பத்திரிக்கையின் அட்டைப் படம் வலப்புறம் கீழே "C. Subramania Bharathi, Editor" (பட உதவி காலச்சுவடு கட்டுரை http://www.kalachuvadu.com/archives/issue-206/உவே-சாமிநாதையரைப்-பாராட்டிய-பாரதி-பாடல்-புதிய-ஆதாரங்கள் ) |
ஆர். எஸ். சுப்புலக்ஷ்மி பிராமணக் குடும்பத்தில் பிறந்து இளம் விதவையானவர். பின் சென்னை பிரெஸிடென்ஸி கல்லூரியில் 1911-இல் படித்துப் பட்டம் பெற்ற முதல் இந்துப் பெண்மணி. விதவைகளுக்காகச் 'சாரதா இல்லம்' நிறுவி நிர்வகித்தார். 1906-இல், அவர் பட்டம் பெறுவதற்கு முன்பே, அவரின் எழுத்துக்கு ஓர் மேடையாகப் பாரதியின் சக்ரவர்த்தினி இருந்திருக்கிறது. அன்றைய பிராமணச் சமூகத்தில் இது மிகப் பெரிய புரட்சி. இதே காலத்தில் தான் முத்துலெட்சுமி ரெட்டி முதல் பெண் மருத்துவரானார். 1930-இல் தேவதாசி ஒழிப்பு மசோதாவை முத்துலெட்சுமி கொண்டு வர முணைந்த போது தமிழ் நாடு காங்கிரஸின் மூத்த தலைவரும் பிராமணருமான சத்தியமூர்த்தித் தேவதாசி முறை இந்துக் கலாசாரத்தில் முக்கியமானது என்று வாதிட்டது அக்காலத்தில் பாரதி போன்றோருக்கான எதிர் அணியின் வலுவுக்குச் சான்று.
சக்ரவர்த்தினியும் ஓரு வாசகியின் புகாரும் பாரதியின் பதிலும்
ஒரு வாசகி, "ஐயா, உமது சக்ரவர்த்தினிப் பத்திரிக்கை அத்தனை ரஸமில்லை. இன்னும் எத்தனை காலம் விவேகாநந்தரைப் பற்றி எழுதிக் கொண்டே போகப் போகிறீர்? பத்திரிக்கையின் வெளிபுறத்திலே தடித்த எழுத்துக்களில் 'பெண்களின் அபிவிருத்தியின் பொருட்டாக' என்று எழுதி விட்டீர்; உள்ளே விவேகாநந்தர் சந்நியாசம் வாங்கிக் கொண்ட விஷயம், புத்தர் ராஜாங்கத்தை விட்டுவிட்டு பிச்சைக்குப் புறப்பட்ட விஷயம்- இதையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் இதனால் பெண்களுக்கென்ன அப்விருத்தி ஏற்படும்" என்று பாரதியிடம் நேரில் கேட்டார். அப்பெண்மணியைப் பாரதி "மிகுந்த கல்வியில்லாவிடினும் கூர்மையான அறிவு கொண்ட பெண்மணி" என்று அறிமுகம் செய்கிறார்.
முதலில் தன் முயற்சிப் பாராட்டப்படவில்லையே என்று தோன்றினாலும், "மேற்படி மாது சொன்னது சரி. நான் செய்தது பிழை" என்று ஒப்புக் கொள்கிறார் பாரதி. தமிழ் நாட்டுப் பெண்களிடையே படிப்பறிவு அதிகமில்லாததால் தன் பத்திரிக்கையின் கட்டுரைகளை ஆண்கள் படித்து "அதன் மூலமாகப் பெண்களை அபிவிருத்தி செய்விக்க" வேண்டுமென்றத் தன் நோக்கம் தவறென்று தெளிந்து, படிப்பறிவு உள்ள ஆண்களுக்கு வேறெங்கும் கிடைக்காத எந்தத் தகவலும் தன் பத்திரிக்கையில் இல்லை என்பதையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, "இந்த நிமிஷமே மாதர்களுக்கு அர்த்தமாகக் கூடிய விஷயங்களை, அவர்களுக்கு அர்த்தமாகக் கூடிய நடையிலேயே எழுத ஆரம்பிக்க வேண்டுமென்று நிச்சயித்துவிட்டேன்" என்று உறுதியளித்துப் பின் "ஸ்பெயின் ராஜாவின் விவாகச் சமயத்திலே வெடிகுண்டு விபத்து" எனும் கட்டுரையைத் தருகிறார்.
சாதாரண வாசகி ஒருவரின் புகாரை கருத்தில் கொண்டு அதை வெளிப்படையாகத் தன் பத்திரிக்கையிலும் வெளியிட்டுத் தன் தரப்புத் தவறு என்றும் ஒப்புக் கொண்டு தன் வழியை மாற்றிக் கொள்ளும் ஆண் பத்திரிக்கை ஆசிரியர்கள் இருபதாம் நூற்றாண்டிலும் தமிழகத்தில் இல்லை.
கவனிக்கவும் பாரதிக்கு அப்போது வயது வெறும் 23-24. 2017-இல் 24 வயது தமிழ் நாட்டு ஆண்கள் பாரதியின் விவேகத்தில் கிஞ்சித்தாவது கைக் கொண்டிருந்தால் தற்காலத் தமிழ் பெண்கள் இன்னும் பாதுகாப்பாக இருப்பார்கள்.
யதுகிரி அம்மாளின் நினைவோடை:
யதுகிரி எழுதியது ஒரு சிறுமி பின்நாளில் மகாகவி என்று கொண்டாடப்பட்டவரோடு பழகக் கிடைத்த சில வருடங்கள் பற்றிய நினைவுத் தொகுப்பு. அவ்வளவு தான் அதற்கு மதிப்பு. அவர் சிறுமியாக இருந்த போது பாரதியோடு சமமாகக் குழைந்தகளுக்கே உரித்தான உரிமை எடுத்துக் கொள்வதைச் செய்து வாதிட்டதை நினைவாக எழுதும் போது வந்து விழுந்த சில வரிகள் தான் இன்று மேற்கோள் காட்டப்படுகின்றன.
பாரதிக்கும் செல்லம்மாவுக்கும் வந்த சச்சரவுகள், யதுகிரியின் நூலில் இருக்கும் செய்திகளை வைத்துப் பார்த்தால், மிகச் சாதாரணமான லௌகீக காரணங்களுக்காக ஏற்படுபவை. அந்தச் சச்சரவுகளில் நுழைந்த யதுகிரி துடுக்காகப் பாரதியிடம் கேட்கிறார், "நீர் பாட்டில் பெண் விடுதலையைக் கொண்டாடுகிறேன் என்று பெண்டாட்டியோடு சண்டை போட்டால் என்ன பிரயோசனம்" என்று வினவுகிறார். 'தலையில் துணி போட்டுக் கொண்டு' போவேன் என்று சினந்து சொன்ன பாரதியிடம் தானும் அப்படிச் செல்லலாமே என்ற செல்லம்மாவை பாரதி கடிந்து கொள்ள, யதுகிரி "உம்மைப் போலத் தானே செல்லம்மாவும்? ஏன் போக முடியாது? அங்கு விடுதலை இல்லையா?" என்று கேட்கிறார்.
சண்டையின் முகாந்திரம் செல்லம்மாள் பாரதியை பத்திரிக்கைக்கு எழுதி அனுப்ப வேண்டிய கட்டுரையை எழுதி அனுப்பத் தூண்டியதில் ஆரம்பித்தது. குழந்தையிடம் இருவரும் முறையிட்டப் பின் மனம் லேசாகி எல்லோரும் கடற்கரைக்குச் செல்கிறார்கள் அப்போது பாரதி யதுகிரியிடம் சொல்கிறார்: "பொறுப்புத் தெரியாமல் இருந்தால் பொறுப்பை வற்புறுத்திக் காட்ட வேண்டும். நிர்பந்தம் செய்யக் கூடாது. ஆனால் செல்லம்மா சொல்லியது சரி. என் கவிதையின் பைத்தியம் என்னை இழுத்துச் சென்றது. அந்தச் சூட்டில் இரண்டு பேச்சு நடந்தது. வீட்டில் தங்கக் கிளிகள் போல் குழந்தைகள். ஆனால் நாம் கொடுத்து வைக்கவில்லை. அவைகளுக்குத் தங்கத்தால் கவசம் பண்ணிப் போடலாம். புலவர் வறுமை புராணப் பிரசித்தம்....தலைவிக்கு வேண்டியது பணம். பணம் இருந்து விட்டால் என் செல்லம்மா உலகத்தையே ஆண்டு விடுவாள். அது இல்லாததால் என்னைக் கட்டுப் படுத்துகிறாள்; கேட்கிறாள்; சண்டை பிடிக்கிறாள்....என் செல்லம்மா முக்கியப் பிராணன்! என் செல்வம்! எல்லாம் எனக்கு அவள் தான். அவள் பாக்கியலக்ஷ்மி!"
புதுவை வாசத்தின் போது பாரதி போதைக்கு அடிமையானார், திடீரென்று மௌன விரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்தார். இவையெல்லாம் செல்லாமாவுக்குத் துயரம் அளித்தன. எல்லாக் கணவன் மனைவியும் ஒவ்வொரு காரணத்தால் பரஸ்பரம் இம்சிப்பது ஆதாம்-ஏவாள் காலம் முதல் வழக்கம். பாரதியின் மௌன விரதத்தால் மனம் வெதும்பிய செல்லம்மா யதுகிரியிடம் முறையிடுகிறார். பாரதியோ செய்வி சாய்ப்பதாயில்லை. யதுகிரி, "பாரதி வாயால் பெண்கள் சுதந்திரம் பாடினாரே ஒழியச் செல்லம்மாவைத் தம் நோக்கத்தின் படியே தான் நடக்கும்படி செய்தார். செல்லம்மா தமதிஷ்டப்படி நடப்பது வெகு அபூர்வமே" என்கிறார் அந்தச் சர்ச்சையை முன் வைத்து.
அடுத்தப் பத்தியிலேயே யதுகிரி "ஒரு தரம் நாற்பது நாள் விரதம் இருந்து கவிதைகள் செய்தார். அது தான் 'பாரதி அறுபத்தாறு' என்ற பெயரில் இப்போது உலவுகிறது. இன்று அதைப் படித்தால் அன்று அவர் அதைச் செய்ய எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும் என்பது விளங்குகிறது". பாரதி கவி சிரேஷ்டன் அவனைச் சராசரிகளுக்கான அளவுகோல் கொண்டு அளக்கக் கூடாது. மேலும் அவன் கொண்ட கருத்துக்கும் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் அதிகத் தூரமில்லை, முரன்களுமில்லை.
பாரதி சீர்த்திருத்தவாதி, பூணூல் அணியாமல் 'நான் சூத்திரன்' என்றவன், செல்லம்மாவின் விருப்பத்துக்கு மாறாகத் தன் பெண்கள் ருதுவான பின் தான் மணம் முடிக்க வேண்டும் என்றவன். செல்லம்மா எழுத்தறிவில்லாத பிராமணப் பெண் பாரதி கற்றறிந்தவன், தன் மரபார்ந்த தளைகளைத் தகர்த்து புதிய சமதர்ம வாழ்வை நோக்கிச் சென்றவன் இந்தப் பின்னனியில் காந்தி-கஸ்தூர்பா, நேரு-கமலா ஆகியோரையும் ஒப்பிடல் அவசியம். தாகூர் தன் பெண்ணைச் சிறு வயதிலேயே மணம் முடித்தார் என்பதும் நினைவில் கொள்வது அவசியம். பாரதியிடம் முரண் இருந்ததா என்பதை அவன் மனைவியை நடத்தியதை விடத் தன் மகள்கள் மற்றும் யதுகிரியை நடத்திய விதத்தை வைத்து அளக்கலாம்.
யதுகிரிக்கு திருமணத்தின் முன் சொன்ன ஆலோசனை:
பாரதியின் அநேகப் பாடல்களில் இருக்கும் அதே கருத்துகள் தான். துளியும் முரன் இல்லை. இன்றைக்கும் எந்தத் தகப்பனும் தன் பெண்ணுக்குச் சொல்லக் கூடியவை இவை. இது என்ன பெண்ணுக்கு மட்டும் ஆலோசனையா என்பவர்கள் பாரதியைச் சுற்றிப் பெண் குழந்தைகள் தாம் இருந்தன என்பதை மறந்து விடக் கூடாது. இந்த அறிவுரையின் இடையே ஆண்களை இடித்துரைத்திருப்பார். ஓர் ஆண் பிள்ளைக்குப் புத்திச் சொல்லும் வாய்ப்பு அமைந்திருந்தால் நிச்சயம் பாரதி வேறு மாதிரிப் பேசியிருப்பார்.
'நிமிர்ந்த நன்னடை, நேர்க் கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச் செறுக்கு', 'நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்' என்று கவிதைகளில் சொன்னதைத் தான் யதுகிரிக்குச் சொல்லியிருக்கிறான் பாரதி.
தங்கம்மாள் பாரதி:
"ஒரு நாள் ஒரு கனவு கண்டேன். என் உடம்பும் பெண்ணூருவாக மாறியது. எங்குப் பார்த்தாலும் பெண்கள் படுந் துயரம் என்னைத் திகிலுறச் செய்தது. கல்வியறிவில்லாமல் பெண்கள் கடுந்துயரில் அகப்பட்டு உழன்றனர்.....ஆதலால் வருங்காலச் சந்ததிக்காகவும், முதலில் நமது ஸ்திரீகளுக்குக் கல்வியளிக்க வேண்டும். அறிவுத் தெளிந்தால் உடனே அவர்களைப் பிடித்திருக்கும் அஞ்ஞானம் நீங்கும்....வேதகாலத்துப் பெண்களைப் போல வாழ்வார்கள்". பெண்கள் முன்னேற்றாம் பற்றிய ஒவ்வொரு கட்டுரையிலும் பாரதி மீண்டும், மீண்டும் சொல்வது பெண்கள் கல்வி அறிவுப் பெற வேண்டும் என்பதைத் தான். விடுதலை என்பது யாரும் கொடுத்துப் பெறுவதல்ல என்பதையும் சொல்லி கல்வியறிவு பெற்ற பெண்கள் அதைத் தாமே தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார்.
13 வயதே ஆன தங்கம்மாள் ஓர் உறையாற்றியிருக்கிறார், அநேகமாகப் பாரதி எழுதிக் கொடுத்த உரை. காந்தியின் சத்யாகிரஹ பாணியைப் பின்பற்றிப் பெண்கள் ஆண்கள் தங்களைச் சமத்துவமாக நடத்தினால் ஒழிய அவர்களுடன் வாழ மாட்டோம் என்பதைத் தெளிவுறச் சொல்ல வேண்டும், சமத்துவம் கிடைக்காத பட்சத்தில் காந்திய வழியில், "உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்துத் தள்ளீனால் ரஸ்தாவில் கிடந்து சாவேன்" என்று போராடச் சொல்கிறார். இன்று இது நகைப்பாகத் தோன்றலாம் ஆனால் 1918-இல் ஒரு பதின்ம வயது சிறுமி மேடையேறி இதைச் சொல்வதற்கு அவளுக்கும் அதை விட அவள் தந்தைக்கும் தைரியம் வேண்டும். பிராமணரல்லாதாரோடு உணவுண்டார் என்பதற்காகவே கடயத்தில் ஊரைவிட்டுச் சோறில்லாமல் விலக்கி வைக்கப்பட்டார் பாரதி என்பதை இங்கே சொல்ல வேண்டும்.
பெண் விடுதலைக்கான ஆரம்பப் படிகளும் யதுகிரியிடம் பாரதி சொன்ன ரயில் பிரயாணிக் கதையும்:
யதுகிரியிடம் தான் ரயிலில் சந்தித்த கணவன் மனைவி பற்றிப் பாரதி சொல்கிறார். கணவன் முன் பேசா மடந்தையாக இருந்த பெண் கணவன் அகன்றதும் பாரதியிடம் பேச்சுக் கொடுத்தாள், பின் கணவன் வந்ததும் மீண்டும் மௌனம். அந்நிகழ்வைச் சொல்லி ஏன் இந்தப் பித்தலாட்டம் பிற ஆடவனுடன் பேசினால் என்ன என்று பாரதி கொதித்தார்.
பாரதியின் கவிதைகளில் அவர் பெண்கள் பற்றிச் சொன்னதற்கும், கட்டுரைகளில் எழுதியதற்கும், தனி வாழ்வில் தன்னைச் சுற்றி வளர்ந்தப் பெண் குழந்தைகளை அவர் நடத்திய விதமும் அவர்களுக்குச் சொன்ன அறிவுரையும் ஒரே நேர்க் கோட்டில் தான் பயணிக்கின்றன.
விதவைகள் விவாகம் சம்பந்தமாகக் காந்தியையும் விவேகாநந்தரையும் மறுத்த பாரதி:
தாம் மிகவும் மதித்த காந்தியையும் விவேகாநந்தரையும் மிகத் தீர்க்கமாகப் பாரதி மறுத்து எழுதியது வதவைகள் மறுமணம் குறித்துத் தான்.
காந்தி விதவைகள் மறுமணம் குறித்து எழுதும் போது வயது முதிர்ந்த ஆண்களே மனைவியை இழந்தவர்கள் அவர்கள் மறு மணம் செய்யாமல் இருந்தால் அவர்களால் மணக்கப்பட இருக்கும் இளம் பெண்கள், இளம் பெண்களாக இருப்பதாலேயே, விதவைகள் ஆகாமல் இருக்கக் கூடும் எனும் அர்த்தத்தில் எழுத, சரியாகச் சொன்னால் காந்திச் சொன்னதுக்கு அது தான் அர்த்தம் என்கிறார் பாரதி, பாரதி அதைத் திட்டவட்டமாக மறுக்கிறார்.
ஆணோ, பெண்ணோ, வயது முதிர்ந்துவிட்டது என்பதற்காக "போக விருப்பமும் போக சக்தியும் இல்லாமற் போகும்படி கடவுள் விதிக்கவில்லை" என்கிறார் காட்டமாக. "ஸ்ரீமான் காந்தி சொல்லும் உபாயம் நியாய விரோதமானது; சாத்தியப்படாதது; பயனற்றது" என்கிறார் தீர்மானமாக. மேலும் "விதவைகள் எந்தப் பிராயத்திலும் தமது பிராயத்துக்குத் தகுந்த புருஷரை புனர் விவாகம் செய்து கொள்ளலாம்" என்கிற தைரியத்தைச் சமூகம் அளிக்க வேண்டும் என்கிறார்.
விவேகாநந்தரின் மீது பெருமதிப்பு வைத்திருந்தார் பாரதி ஆனால் விவேகாநந்தர் துறவு மார்க்கம் மேற்கொண்டதால் திருமணம் பற்றியும் விதவைகளின் நிலைப் பற்றியும் கொண்டிருந்த கருத்துகளைத் தாட்சண்யமின்றி நிராகரித்துள்ளார்.
மேல் ஜாதியினருக்குள் விதவைகள் மறுமணம் என்பது நடக்காததற்கு அவர்களிடையே, ஜன ஸங்கையின் (census) படி, ஆண்கள் எண்ணிக்கைக் குறைவாதலால் என்று விவேகாநந்தர் ஒரு கடிதத்தில் குறிப்பிட பாரதி விதவைகள் மறுமணம் செய்யக் கூடாதென்ற வழக்கங்கள் உருவான போது 'census' எடுக்கும் வழக்கமில்லையென்றும், "ஜன ஸங்கையா ஸ்திரீகளுடைய ஆபரண்க்களஒ கழற்றி அவர்களுடைய தலையைச் சிரக்க வேண்டுமென்று சொல்லிற்று? ஜன ஸங்கையா விதவைகள் ஒரு நேரந்தான் சாப்பிடலாமென்று விதித்தது?" என்று காட்டமாகவே எழுதுகிறார்.
கைம்பெண் என்பவர்கள் "கணவர்களையிழந்தார்களே யன்றி, உடம்பை இழக்கவில்லை; ஐம்புலன்களை இழக்கவில்லை; உணர்வை இழக்கவில்லை. காம விருப்பத்தை இழக்கவில்லை. காமக் கருவிகளை இழக்கவில்லை. அவர்கள் கல்லாய் விடவில்லை" என்று காந்திக்கு சொன்ன மறுப்பை மீண்டும் ஆணித்தரமாகப் பதிவுச் செய்கிறார். பாரதியைப் படிக்கும் போது வியக்க வைப்பது இந்தத் தெளிவும் முன்னுக்குப் பின் முரனாகப் பேசாததும் தான்.
பெண்களை மேற்கத்திய நாகரீகத்தையும் ஏற்கச் சொன்ன பாரதி. ஔவையைக் கொண்டாடுதல்.
இங்கிலாந்தில் சம உரிமைக் கோரும் பெண்களிடம் அதை மறுக்கும் ஆண்கள் "பெண்களிடையே ஷேக்ஸ்பியர் போன்ற மேதை உண்டா" எனக் கேட்கிறார்கள் என்றும் அப்படியொரு கேள்வி தமிழ் நாட்டில் கேட்கப்பட்டால் "ஔவையாரைப்போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக் கூடிய ஓராண் மகன் இங்குப் பிறந்திருக்கிறானா" என்று மறுமொழிச் சொல்லலாம் என்றும் ஔவையைக் 'கவியரசி' என்று கொண்டாடுகிறான்.
பெண்களுக்கு எழுதும் கட்டுரைகளில் பெண்களின் சாதனைகளையும் பெண்கள் முன்னின்று நடத்தும் உரிமைப் போராட்டங்களையும் தவறாது பாரதி முன்னிலைப் படுத்தியிருக்கிறான்.
இந்தியர்கள் வெளிநாடுகளில் பிரபலமாவது இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பது என்றும் அப்படிப் புகழ்பெற்றவர்களை இந்தியர்களும் உவப்பாகக் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லி அப்படிப் புகழ்பெற்ற ஆண்களைப் போல் புகழைடந்த பெண்களையும், சரோஜினி நாயுடு உட்பட, பட்டியலிட்டு "இங்கனம், தமிழ் மாதர்களிலும் பலர் மேல்நாடுகளுக்குச் சென்று புகழ் பெற்று மீள்வராயின்" அது இங்குள்ள பெண்களின் மதிப்புயர உதவுமென்கிறார். "ஔவையார் பிறந்து வாழ்ந்த தமிழ்நாட்டு மாதருக்கு அறிவுப் பயிற்சி கஷ்டமாகுமா" என்றும் தைரியமூட்டுகிறார்.
1920-இல் அதை எழுதிய போது தாகூருக்கு தகுதிக்கு மீறி நொபல் பரிசுக் கிடைத்ததாகவும் அது மட்டும் தனக்குக் கிடைத்துவிட்டால் தன் தரித்திர வாழ்வுக்கு ஒரு முடிவு வருமென்று பாரதி நம்பிய காலம். தாகூரின் கவித்திறம் பற்றிக் கறாராகக் கருத்துச் சொன்ன பாரதி சரோஜினி நாயுடுவின் கவித் திறம் பற்றியோ அவர் அடைந்த புகழ் பற்றியோ அசூயைக் கொள்ளாமல் பெண்களுக்கு உதாரணமாகக் காட்டுகிறான். உலகம் சுற்றிய செல்வந்தரும் வங்கத்தின் சீர்த்திருத்த சூழலின் மையத்தில் வளர்ந்தவருமான தாகூர் பெண்களைப் பற்றி மிகச் சம்பிரதாயமான பிற்போக்கு எண்ணங்களைத் தான் கொண்டிருந்தார் தன் பெண்ணுக்கு, ஏழை பாரதியைப் போல் அல்லாது, குழந்தைப் பருவத்திலேயே மணம் முடித்தார்.
பாரதியும் செல்லம்மாவும்:
1951-இல் வானொலிக்கு அளித்த பேட்டியில் செல்லம்மா "உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாக இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்" என்றார்.
செல்லம்மா படிப்பறிவில்லாத வைதிகக் குடும்பத்தில் பிறந்த பெண் என்பதை நாம நினைவில் கொள்ள வேண்டும். அவர் கருத்துப் படி உலகத்தோடொட்டி வாழ்வதென்பது பெண்ணை 8-9 வயதில் மணமுடிக்க வேண்டும் என்பது உள்ளிட்டுப் பல்வேறு மூடப் பழக்கங்கள் உள்ள உலகம். அவ்வுலகில் கட்டிய மனைவியின் தோளில் கைப்போட்டு அனைத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்வது கூடப் புரட்சி தான். பாரதியின் அப்படிப் பட்டப் புகைப்படம் பிரசித்தம்.
"நீ மட்டும் மாநாட்டிற்கு வந்து என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்ட நிவேதிதாவை குருவாகப் பாரதி ஏற்கிறான் அதன் பின் பெண்கள் முன்னேற்றம் குறித்து அநேகம் எழுதுகிறான் ஆனால் அதன் பிறகு சென்ற மாநாட்டுக் கூடச் செல்லமாளை அழைத்துப் போகவில்லையே என்று கேட்கலாம். பொருளாதாரம் இடம் கொடுத்திருக்காது, செல்லம்மாளுக்கும் விருப்பம் இருந்திருக்காது. 1908 சூரத் காங்கிரஸ் மிகப் பதற்றமான சூழலில் நடந்தது, திலகர் வெளியேறினார், தடியடி நடந்தது. குடும்பத்தோடு சென்றிருக்கவே முடியாது.
அரவிந்தர், காந்தி, நேரு, தாகூர் என்று அன்றைய பெரும் ஆளுமைகள் பலரின் மனைவியர் மிகச் சாதாரணர். அவர்கள் அனைவரும் தங்கள் கணவர்களின் நிழலில் தான் நடக்க முடிந்தது. மேலும் அவர்களின் கணவர்களின் போக்கினால் அந்தந்த மனைவியரும் மிக இல்லலுற்றனர் என்பதே உண்மை. நேருவும் பாரதியும் தங்களால் மாற்ற முடிந்த தத்தம் மகள்களோடு இருந்த உறவோ வேறு. முன்பே பாரதி எப்படித் தங்கம்மாளை வளர்த்தார் என்று பார்த்தோம்.
இரண்டு மாதம் நோய்வாய்ப்பட்டிருந்த தன் இரண்டாம் மகள் சகுந்தலா மிகுந்தக் கவலைக்கிடமாக இருந்த போது 'நீ பெரிய சபைகளில் லெக்சர் கொடுக்கப் போகிறாய்; பெரிய பண்டிதையாகப் போகிறாய் என்று இருந்தேனே! உன் நாக்குப் புரள்வதில்லையே!' என்று அரற்றி சுவரில் மோதிக் கொண்டு அழுதாராம்.
"வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம் - தீராத குழப்பம்!" "இரண்டு மாத காலம் இரவு பகலுமாக நானும் செல்லம்மாவும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம்...பயம், பயம், பயம்! சக்தீ, உண்ணை நம்பித்தானிருக்கிறேன். நீ கடைசியாகக் காப்பாற்றினாய்".
யதுகிரியின் நினைவோடையில் பாரதி தன்னைச் சுற்றி இருந்தோரிடம், மனைவி, குழந்தைகளிடம் அன்றாடம் உரையாடலில் ஈடுபட்டு அவர்களைத் தன்னோடு சமமாக உரையாடும் வகையிலேயே வைத்திருந்தது தெரிகிறது. நெல்குத்தும் பெண்மனிப் பாடும் மெட்டில் ஒரு பாட்டு, ரயிலில் பிச்சைக் கேட்டு இந்துஸ்தானியில் பாடிய பெண்ணின் மெட்டில் ஒரு பாட்டு, யதுகிரி, செல்லம்மா, தங்கம்மா கேட்டதற்கிணங்க ஒவ்வொரு மெட்டில் ஒரு பாட்டு என்று தன்னைச் சுற்றி இருந்த பெண்களை, இக்கால முறைப்படிப் பார்த்தாலும், மிகக் கௌரவமாகவே பாரதி நடத்தியிருக்கிறான். காந்தியைப் பற்றி அப்படிச் சொல்ல இயலாது.
பணக்காரன் சீர்திருத்தம் பேசுவதும் செய்வதும் சில வகைகளில் எளிதே, உதாரணம் நேரு குடும்பத்தாரின் வாழ்க்கை. ஏழைப் புலவனின் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. சீர்த்திருத்தம் பேசும் ஏழையின் மனைவி, அதுவும் இரண்டு பெண்களின் தாயார், அண்டை அயலாரை நம்பித்தான் வாழ்க்கையை நகர்த்த வேண்டும். அதன் பொருட்டு நிச்சயம் கசப்புகள் செல்லம்மாவுக்கு இருந்திருக்கும். பெண் சீர்திருத்தவாதிகளுக்கும் அவர்களின் சுற்றத்தார் இந்தச் சங்கடத்தை அனுபவித்திருப்பார்கள், பன்மடங்காகவே. அந்தக் கசப்புகளை நாம் ஒரு நிகழ்வாகப் படிக்கலாமே தவிர அதைக் கொண்டே ஒருவரை மதிப்பிடலாகாது.
பாரதி தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் மிக அன்புப் பாராட்டியவன். 'அன்பு மிக உடையோர் மேலோர்' என்று எழுதியவனாயிற்றே. தன் சகோதரன், மைத்துனன், மாப்பிள்ளை ஆகியோருக்கு உதவ முடியா நிலையில் இருந்தது பாரதியை வருத்தி இருக்கிறது. தன் மகள்கள் மீது பேரன்பு கொண்டிருந்தான். யதுகிரியை தன் மகளாகவே கருதி அச்சிறுப் பெண்ணின் கேள்விகள், விவாதங்களுக்குச் செவி சாய்த்திருக்கிறான்.
பாரதி பற்றிய நூல்கள் ஒரு விமர்சனக் குறிப்பு:
தங்கம்மாள் பாரதியின் நூலும் சுவாரசியமான சிலத் தகவல்களைக் கொண்டது.
ரா.அ. பத்மநாபனின் 'சித்திர பாரதி' அரியப் புகைப்படங்களும் தகவல் கோர்வையுமாக உள்ளது. மிகப் பெரிய குறை இப்புத்தகத்தில் காலம் முன்னும் பின்னுமாகச் செல்கிறது. மேலும் யதுகிரி நூலில் இருந்து எடுத்தாண்ட மேற்கோள்களை அவர் அடையாளப்படுத்தவேயில்லை. இது மிகவும் தவறு. உதாரணம் சகுந்தலா நோய்வாய்ப்பட்டச் சமயம் பாரதி அரற்றியது எல்லாம் யதுகிரியின் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
மேற்சொன்ன எல்லா நூல்களும், வ.ராவின் நூல் உட்பட, விதந்தோதும் வாழ்க்கை வரலாறுகள் (hagiography) தாம்.
மூன்றாம் பரிசுப் பெற்ற பாரதி:
சென்னையில் உள்ள ஏதோ ஒருச் சங்கம் இந்தியாவைப் பற்றி நல்லப் பாட்டு எழுதுவோருக்குப் பரிசு என்றொருப் போட்டியை அறிவித்திருந்தனர். பாரதி, 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்றப் பாட்டை எழுதி அனுப்பினாராம். மூன்றாம் பரிசுக் கிடைத்தது என்கிறார் யதுகிரி.பரலி நெல்லையப்பருக்கு எழுதியக் கடிதத்தில் பாரதி, "தம்பி நான் ஏது செய்வேனடா! தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது. தம்பி, உள்ளமே உலகம். ஏறு!ஏறு!ஏறு! மேலே, மேலே, மேலே!"
ஆனால் அதே பாரதி தான், "சிந்து நதியின் மிசை நிலவினிலே, சேர நன்னாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து, தோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்" என்றும் பாடினான்.
1990-இல் தஞ்சை கல்லூரிகளில் பெண்கள் நிலையும் பாரதியை மதிப்பிடலும்