முதுகுளத்தூரில் கலவரச் சூழல் நிலவிய போது ஈ.வெ.ரா சொன்னார், “முதுகுளத்தூரில் நடக்கும் ஜாதிச் சண்டையை நிறுத்த நான் என் கருப்புச் சட்டைப் படையை அனுப்ப மாட்டேன். அங்கே போய்ச் சும்மா சாகவா? அல்லது தமிழனைத் தமிழன் சாகடிக்கவா? ஜாதிகள் ஒழிந்தாளொழிய சண்டைகள் தீராது”. இந்து-முஸ்லிம் கலவரங்களை அடக்கத் தன் உயிரை பணையம் வைத்த மகாத்மா என் மனக்கண்ணில் ஒரு நிமிடம் வந்து மறைந்தார். மேலும் யோசிக்கையில் என் ஆதர்சங்களான காந்தி, பாரதி, நேரு ஆகிய மூவரிடத்திலும் நான் கண்டு வியக்கும் குணாதிசியங்களோடு ஈ.வெ.ராவின் அரசியலை ஒப்பு நோக்கினால் எனக்கு ஏன் ஈ.வெ.ரா மீது பற்றுதல் மட்டுமல்ல மரியாதையும் வரவில்லை என்பது புலனானது.
கலவர பூமியில் காந்தி:
நவகாளியும் பீகாரும் மதக் கலவரங்களால் ரத்த பூமியானது. நவகாளியில் இந்துக்கள் கொல்லப்பட்டனர், அதற்குப் பதிலடியாகப் பீகாரில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். நேரு பீகாரில் முகாமிட்டார். காந்தி நவகாளி நோக்கிச் சென்றார். நவகாளி சென்ற காந்தி டிசம்பர் 5-ஆம் தேதி ஓர் அறிக்கையில் "நான் எந்த முடிவுக்கும் தயாராக இருக்கிறேண். 'செய்' அல்லது 'செத்து மடி' என்பது பரிசோதிக்கப்பட வேண்டிய இடம் இங்கே. 'செய்' என்பது இந்துக்களும் முஸ்லிம்களும் இணக்கமாகவும் அமைதியாகவும் வாழக் கற்பது. இது நடக்காவிட்டால் அந்த முயற்சியில் நான் செத்தும் போகலாம்".
லூயி பிஷர் எழுதுகிறார், "காந்தி நவகாளி யாத்திரையின் போது 49 கிராமங்களில் தங்கினார். காலை 4-மணிக்கு எழுந்து 3 அல்லது 4 மைல் தூரம் வெறுங்காலில் கிராமங்களில் நடப்பார், ஆங்காங்கே ஒன்றிரண்டு நாட்கள் தங்குவார், கிராமத்தாரோடு பேசுவார், விடாது ஜெபிப்பார் பிறகு அடுத்தக் கிராமத்துக்குச் செல்வார். ஒவ்வோர் இடத்திலும் ஏழைக் குடிசை ஒன்றின் முன் நின்று, பொதுவாக முஸ்லிம்களின் குடிசை, தங்குவதற்கு அனுமதி கேட்பார். ஆனுமதி கிடைக்காவிட்டால் அடுத்தக் குடிசைக்குச் செல்வார். நவம்பர் 7 1946 முதல் மார்ச்சு 2 1947 வரை இது தான் அவரது வழக்கம். அவருக்கு வயது 77". இவருக்கு நான் கொடுக்கும் மரியாதையில் பத்தில் ஒரு பங்கை கூட ஈ.வெ.ராவுக்கு என்னால் கொடுக்க முடியாது.
மவுண்ட்பாட்டன் மமதையோடும் முன் யோசனை ஏதுமின்றியும் தெரிவித்து விட்ட சுதந்திர தேதியை நோக்கி இந்தியாவும் பாகிஸ்தானும் வரலாறு காணாத மனித இடப் பெயர்வுக்கிடையே, கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் கலவரங்கள் வெடிக்க, விடுதலை நாளை நோக்கி நகர்ந்தன. எல்லோர் மனதிலும் பெரும் அச்சம் விளைவித்தது ஒரேயொரு கேள்வி மேற்கு வங்கத்தில் கலவரம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தான். ஆகஸ்டு 16 1946-இல் ஜின்னாவின் 'நேரடிச் செயல் தினம்' அறைகூவலின் விளைவாக நடந்த கலவரத்தில் பெருமளவு இந்துக்கள் கொல்லப்பட்டனர். இப்போது முஸ்லிம்களின் முறையாக இருக்கும் என்று எல்லோரும் அஞ்சினர். கலவரத்தை அடக்கப் போதுமான அளவு ராணுவம் இல்லை. ஆகஸ்டு 9 1947 காந்தி கல்கத்தா வந்தடைந்து ஒரு முஸ்லிம் வீட்டில் சுராவர்தியோடு தங்கினார்.
ஆகஸ்டு 31-ஆம் தேதி அவர் தங்கிய வீட்டை ஒரு கலவர கும்பல் முற்றுகை இட்டது. காந்தியை தாக்க வந்த ஒரு ரவுடியை காந்தியே நேரடியாக எதிர்கொண்டு வணக்கம் சொல்ல அந்தச் சமயம் வீசப்பட்ட செங்கல் காந்தியருகே நின்றிருந்த இன்னொருவரைத் தாக்கியது. அடுத்த நாள் காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார். அவருக்கு வயது 78. செப்டம்பர் 4-ஆம் தேதி காந்தி உண்ணாவிரதத்தை முடித்த போது கல்கத்தா பெருமளவு அமைதிக்குத் திரும்பியது. கலவர கும்பல்கள் காந்தியின் காலடியில் தங்கள் ஆயுதங்களை ஒப்புவித்து அமைதி அறிக்கையில் கையெழுத்திட்டனர். இன்று அங்கிருக்கும் அருங்காட்சியகத்தில் அந்த ஆயுதங்களில் சில பார்வைக்கு வைக்கப்படுள்ளன.
Weapons Surrendered to Gandhi at Hydari Manzil |
காந்தி அசகாயச் சூரர் அல்லர். அவர் ஒன்றும் ஒற்றை ஆள் ராணுவமும் கிடையாது. நவகாளி யாத்திரை வெற்றி என்று சொல்ல முடியாது. ஆனால் அதற்காகச் சோராமல் தான் கல்கத்தா சென்றார். 'சத்தியாகிரஹிக்குத் தோல்வி கிடையாது' என்பார் காந்தி. அவர் கர்ம வீரர். மீண்டும், மீண்டும் மக்களின் மீதும் மனிதனின் இதயத்தில் ஒளிந்திருக்கும் நல்லியல்பை தன்னால் தீண்டி விட முடியும் என்ற நம்பிக்கையும் அப்படி முடியாவிட்டால் அந்த முயற்சியில் தன் உயிர் போவதே ஒரு சத்தியாகிரஹி செய்யக் கூடியது என்று நம்பியதோடல்லாமல் அப்படியே நடந்தார். இவர் எங்கே, கலவரம் வெடிக்கும் நிலையில் இருக்கும் ஒரு கொந்தளிப்பான சூழலில் 'நான் போக மாட்டேன்' என்று வெட்டி அறிக்கை விட்ட வைக்கம் வீரர் எங்கே?
காந்தி ஜெயந்தி வரும் போதெல்லாம் இந்தப் பெரியாரிஸ்டுகளின் தொல்லைத் தாங்க முடியாது. ஈ.வெ.ரா என்றோ எழுதினாராம் காந்தியின் உயிருக்கு உயர் ஜாதியினரால் தான் கேடு வருமென்று. முக்காலமும் உணர்ந்த 20-ஆம் நூற்றாண்டி நாஸ்டிராடாமஸ் ஈ.வெ.ரா. இன்னும் கொஞ்சம் தேடினால் 2016 அமெரிக்கத் தேர்தலில் ஹிலாரியை மத அடிப்படைவாதிகளும் அமெரிக்க மனுவாதிகளும் தோற்கடிப்பார்கள் என்றும் கூட ஈ.வெ.ரா எழுதி வைத்திருப்பதைக் கண்டடையலாம். யார் கண்டது.
காந்தியின் உயிருக்கான அச்சுறுத்தல்கள் வெகு காலமாகவே இருந்து வந்திருக்கிறது. ஜோசெப் லெலிவெல்ட் காந்திக்கு எதிராக மக்கள் திரும்பிய தருணத்தைத் துல்லியமாகக் கூறுகிறார். பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகு காந்திதீண்டாமைக்கெதிராக ஒரு மாபெரும் நடை பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் காந்தி அரசியல் பற்றிப் பேசுகிறாரா எனகண்காணிக்க ஆங்கிலேய அரசு உளவுப் போலீஸாரை நியமனம் செய்தது. அவர்களின் குறிப்புகள் கூறுகின்றன காந்தி செல்லுமிடமெல்லாம்தங்களை ‘சனாதன இந்துக்கள்’ எனக் கூறிக்கொண்டவர்கள் காந்தியை நோக்கி “செத்துப் போ” என்று கூவுவதும், அவர் சென்ற ரயிலைக்கவிழ்க்கப் பார்த்ததும், அவர் மேல் காறி உமிழ்ந்ததும், கொலை முயற்சிக் கூடச் செய்ய முயன்றதும் எனப் பல செயல்களில், இஸ்லாமியரோ மற்றவரோ செய்யத் துனியாத செயல்களில், ஈடுபட்டனர்.
காந்தியை போன்ற ஒரு வாழ்க்கை நோயினாலோ வெறும் இயற்கை மூப்பினாலோ முடிவது வரலாற்று நியாயமே அல்ல. மானுடத்துக்காக வாழ்ந்த உயிர் மானுட சேவைக்கு அர்ப்பணிப்பாகத் தன் கடைசிக் குருதியையும் சிந்தி தான் முடிய வேண்டும். அது தான் அழகு. தன் பேத்தி மனுவிடம் காந்தி சொன்னார் "நான் நோயுற்று இறந்தால் நீ கூரை மீதேறி நான் பொய்யான மகாத்மா என்று கூவிச் சொல்ல வேண்டும். அப்போது தான் என் ஆன்மா சாந்தியடையும். மாறாக ஒரு வெடியினாலோ யாரோ ஒருவனின் துப்பாக்கிக் குண்டை என் வெற்று மார்பில் ஏற்று ராமனின் பெயரைச் சொல்லி இறந்தால் தான் நான் மகாத்மா". இவர் எங்கே தனக்குத் தானே சிலைகளை நிறூவி தானே அதைத் திறந்து வைத்து களிக் கொண்ட ஈ.வெ.ரா எங்கே?
உயர் ஜாதியினர் மலம் அள்ளுவார்களா என்று இன்று பெரியாரிஸ்டுகள் போஸ்டர் ஒட்டி புரட்சி செய்கிறார்கள். காந்தியும், காந்தியின் ஆஸ்ரமத்தாரும் மலம் அள்ளுவதை வாடிக்கையாகவே கொண்டிருந்தனர். யார் மலம் அள்ளுவது என்பதைத் தாண்டி இந்தியர்களின் பெரும்பாலோர் கழிப்பறை வசதிகளின்றிப் பொது வெளியில் மலம் கழித்துச் சுகாதாரமின்மையால் நோய்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஒவ்வொரு கிராமத்துக்குப் போகும் போதும் எளிய முறையில் கழிப்பறை அமைப்பதெப்படி என்று பாடமெடுப்பார் காந்தி.
காந்தியின் அரசியல் வளர்ச்சிக் குறித்து எழுதிய நூலில் ஜூடித் பிரவுன் சம்பாரன், கேதா, அகமதாபாத் போராட்டங்கள் பற்றியும் அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு போராட்ட முறையைக் கையாண்ட விதம், சாமனியர்களோடு காந்தி உறவாடியது, உள்ளூர் பிரச்சினைகளை முதலில் கண்டறிந்து அதற்கேற்ப தன் வியூகத்தையும் தீர்வுகளையும் வகுத்துக் கொள்ளும் திறன், வெறும் கூலிப் போராட்டங்களாக அவை முடிந்து விடாமல் அங்கிருக்கும் வாழ்வியல் முறைகளைத் தொகுப்பாக ஆராய்ந்து மேம்படுத்த முயன்றது என்று பல கோணங்களில் பிரவுன் காந்தி தலைவராக முகிழ்ந்ததைச் சொல்லியிருப்பார். நம் கல்வி முறையில் காந்தி சம்பாரனுக்குச் சென்றார் விவசாயிகளுக்கு ஏதோ நல்லது நடந்தது என்று படித்து மனனம் செய்து ஒப்புவித்து நமக்கும் வரலாறு தெரியும் என்று சொல்லிக் கொள்கிறோம்.
முதுகுளத்தூர் கலவரத்திடையே ஈ.வெ.ரா 'விடுதலை' பத்திரிக்கையில் எழுதுகிறார், "சாதி ஒழிபடவேண்டுமா வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தூக்குக் கயிற்றுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள். இளைஞர்களாயிருப்பவர்கள் இரத்தத்தில் கையெழுத்துப் போட்டு அனுப்புங்கள், காந்தி சிலையை உடைக்கிறேன், பார்ப்பானை ஒழிக்கிறேன் என்று". (முதுகுளத்தூரில் கலவரம் தலித்துகளுக்கும் தேவர்களுக்கும் தான் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்).
உண்மையில் என்னால் ஈ.வெ.ராவை எந்த விதத்திலும் மரியாதையோடு நோக்க முடியவேயில்லை.
பாரதி:
(முன்பொரு முறை சீனி விசுவநாதனின் 'கால வரிசையில் பாரதி படைப்புகள்' தொகுதிப் பற்றி எழுதியதில் இருந்து சில குறிப்புகள்)
கல்வியைப் பற்றி நிறைய எழுதிய பாரதி மீண்டும் மீண்டும் மேற்கத்திய விஞ்ஞான முன்னேற்றங்களை இந்தியர்கள் கற்கவேண்டுமென்று விரும்புகிறான். ஜகதீஷ் சந்திர போஸின் உரைகளைக் கவனமாகப் பின் தொடர்ந்து அவ்வப்போது அதைத் தமிழ்வாசகர்கள் படிக்கும் பொருட்டு மொழிப்பெயர்த்துத் தருகிறான் பாரதி.
“அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்” என்றவன் “இத்தகைய கல்வி கற்பிப்பதில் பிள்ளைகளிடம்அரையணாக்கூடச் சம்பளம் வசூலிக்கக் கூடாது” என்று எழுதியதில் வியப்பில்லை.
தாகூர் தன் செல்வத்தைக் கொண்டு உலகெலாம் சுற்றிப் பொருள் சேர்த்தும் விஸ்வபாரதி பல்கலையை நிறுவினார். ஆயினும் அவரைவிட மிகத் தீர்க்கமாகக் கல்வியைப் பற்றி நடைமுறை படுத்த கூடிய முக்கியமான யோசனைகளைப் பாரதி முன்மொழிகிறான். ‘தேசியக்கல்வி’ என்ற தலைப்பிலான கட்டுரையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாக மெட்ரிகுலேஷன் படித்தவர்கள் போதும் என்றும், கற்பிக்கவேண்டிய பாடங்களாகச் சரித்திரம், பூகோளம், தத்துவம், வரி விதிப்பு, பிராந்திய வரலாறு என்று பட்டியலிட்டுப் பின் ‘ஐரோப்பியஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும்” என்று சேர்க்கிறான். மேலும் “பௌதிக சாஸ்த்திரங்கள் கற்றுக்கொடுப்பதில் மிகவும் தெளிவான எளிய தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும் ஸுலபமாக விளங்குபடி சொல்லிக் கொடுக்க வேண்டும்.” என்கிறான். பாடங்கள், குறிப்பாக அறிவியல் சொற்கள் எப்படித் தமிழ்ப்படுத்துவது என்றும் தெளிவாகச் சொல்லியுள்ளான். கற்றுக்கொடுத்தலையும் மாணவனின் சௌகரியம் ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழ், சமஸ்கிருதம், ஆங்கில மூலச் சொற்கள்எப்படிப் பயன்படுத்துவது என்று நடைமுறைவாதமாகச் சொல்கிறான். “யாத்திரை” (excursion) படிப்பில் ஓர் அங்கமாகவேண்டுமென்கிறான். இந்துக்கள் அல்லாத மாணாக்கர்களின் மதப்போதனை அவரவர்களின் மத நம்பிக்கையை ஒத்ததாகவும்“அன்னிய மதத் தூஷனை” இல்லாததாகவும் இருக்க வேண்டும். சாந்தினிகேதனில் விஞ்ஞானத்திற்கு இடமில்லை. தாகூரின் கல்விபற்றிய கொள்கைகள் மிகவும் பின்தங்கியவை, மேற்கை நிராகரிக்கும் மும்முரமே அதில் இருந்தது. தாகூர் தேசிய கல்வி பற்றி எழுதிய கவிதையைப் பாரதி மொழிப் பெயர்த்து வெளியிட்டுள்ளான். அக்கவிதையில் விசேஷமாக ஏதுமில்லை. சாரமில்லாத கனவு.
'ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி ' என்று ரஷ்யப் புரட்சியைப் பாராட்டிய பாரதி லெனின் மற்றும் கம்யூனிஸம் குறித்தும் மேலும் விரிவாக ‘செல்வம்’ என்ற தலைப்பிட்ட ஏப்ரல் 23 1920-இல் வெளியான கட்டுரையில் பேசுகிறான் (http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=426:2011-10-14-02-34-09&catid=28:2011-03-07-22-20-27 )
“எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக் கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க ஸமத்வம், ஸகோதரத்துவம் என்ற தெய்வீக தர்மங்களைக் கொண்டோர் அவற்றைக் குத்துவெட்டு பீரங்கி துப்பாக்கிகளினால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கையென்று நான் நினைக்கின்றேன்..”
“..'கொலையாளிகளை அழிக்கக் கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகின்றது. நியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேருகிறது' என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமேயொழிய குறைக்காது. பாபத்தைப் புண்ணியத்தாலே தான் வெல்ல வேண்டும். பாபத்தைப் பாபத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை..."
“பார்ப்ப னக்குலங் கெட்டழி வெய்திய பாழ டைந்த கலியுக மாதலால்” என்றும் “போலீசுக்கார பார்ப்பானுக்கு உண்டதிலே பீசு” எழுதியவன் ஒரு பகடியில் பிராமணர்கள் உஞ்சவிருத்தி தான் செய்யத் தெரியுமே தவிர வேறு கைத்தொழில் தெரியாதவர்கள் என்று எழுதுகிறான்.
அக்காலத்தில் பிராமண எதிர்ப்பை மூலதனமாகக் கொண்டு அரசியல் சக்தியாக உருவெடுத்த ஜஸ்டிஸ் கட்சியினரை ஆங்காங்கே நிராகரித்தே எழுதுகிறான். “பிராமணர்களைப் பகைப்பதே மனித ஜன்ம மெடுத்ததின் பரம லட்சியமென்றும், தனிப் பெருங்கடமை யென்றும் நினைக்கும் “பிராமணரல்லாதார்” என்ற புதியதோர் எதிர் மறை நாமம் பூண்டு வெளிப்பட்டிருக்கும் ஸ்வதேச விரோதிகள்” என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆரூடம் போல் எழுதியிருக்கிறான்.
“ஆறிலொரு பங்கு” கதையின் முகவுரையில் பாரதி “நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரட்சிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்த தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம்” செய்கிறான்.
“காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், கலவியினால் கவலைத் தீருமாம்” என்று எழுதியவன், விதவையாகி விட்டதாலேயே காம உறுப்புகள் மறைந்து விடுமா அல்லது காம உணர்வுகள் தான் மடிந்து விடுமா என்று கடுமையாகக் கேட்டான். 1920-இல் அதை எழுதுவதற்குத் தைரியம் வேண்டுமென்பதை சொல்லவும் வேண்டுமோ?
‘பெண் விடுதலை’ என்று தலைப்பிட்டக் கட்டுரையில், ‘பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை’ என்று ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் சொன்னதை முன் மொழிந்து பென் விடுதலைக்கான ஆரம்பப் படிகளைப் பட்டியலிடுகிறான்: இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்ய வற்புறுத்தக் கூடாது, விவாகரத்திற்கு ஆதரவு, பெண் ருதுவான பின்பே திருமணம் செய்விப்பது, பிதுரார்ஜிதத்தில் பெண்ணுக்கு சம பாகம் கொடுக்க வேண்டும், விதவை மறுமணம், விவாகமே செய்து கொள்ளாமல் தனியாக இருப்பதும் தன் இஷ்டப்படி வியாபாராம் முதலியவற்றில் ஈடுபடும் சுதந்திரம், அன்னிய புருஷர்களோடு சம்பாஷிக்கும் சுதந்திரம், கல்வி மற்றும் உத்யோகத்தில் பெண்களுக்குச் சம உரிமை.
கற்பு பற்றிய கட்டுரையில் பாரதி “அறிவு சம்பந்தப்படாத வெறும் உடலாசை “காதல்” அல்லது பிரேரனை என்று சொல்வதறகுத் தகுதியுடையதில்லை.” “பெண்களுக்குக் கற்பு நிலை எத்தனை அவசியமோ, அத்தனை ஆண்களுக்கு அவசியமில்லையென்று நினைப்பதைப் போல் மூடத்தனம் ஏறு கிடையாது”.
வ.வே.சு ஐயர், அரவிந்தர், வ.உ.சி, ஜி. சுப்ரமணிய ஐயர் என்று நீளூம் பட்டியலில் குறைவாகப் படித்தது பாரதி தான். வ.வே.சு. ஐயரும் அரவிந்தரும் மெத்தப் படித்த ஞானிகள். இதனாலேயே அவர்களுடன் பழகியே பாரதியின் உலக ஞானம் இரவல் பெற்றது போன்ற ஒரு பிம்பம் நிலவுகிறது. உண்மையில்லை. 1905 நடந்த ருஷ்ய புரட்சி பற்றி 1906-இல் கட்டுரை எழுதுகிறான், ஜப்பான் யுத்தம், துருக்கி பற்றி, இங்கிலாந்து பாராளுமன்ற விவாதங்கள், 1917 ருஷ்யப் புரட்சி பற்றிக் கவிதை (ஆஹாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி), பிஜித் தீவில் ஹிந்து பெண்கள், யதுநாத் சர்க்கார் மொகலாயச் சாம்ராஜ்யம் பற்றி எழுதியது, இத்தாலி பற்றி என்று அவன் பார்வையில் இருந்து எதுவும் தப்புவதில்லை.
எனக்குப் பாரதியிடம் கிடைக்காத எதுவும் ஈ.வெ.ரா என்ற எளியரிடம் கிடைத்துவிடப் போகிறதா என்ன?
ஜவஹர்லால் நேரு:
காந்தியும், பாரதியும், நேருவும் வெவ்வேறு தளத்தில் சிந்தனையாளர்கள். இதில் காந்தியும் மற்ற இருவரும் இரு வகையான சிந்தனையாளர்கள். பாரதியும் நேருவும் கற்றுத் தேர்ந்தவர்கள் அதிலும் நேரு கல்வியில் மிகத் தேர்ந்தவர், தேடித் தேடி புத்தகங்களை வரவழைத்துப் படித்துக் கற்றுத் தேர்ந்தவர்.
ஈ.வெ.ரா அவருக்கே உரிய பாணியில் தடாலடியாகக் கல்லூரிகளை முடச் சொன்னார். ஏன் அப்படிச் சொன்னார் என்று ஒரு பேட்டியில் கேட்டதற்கு அவர் பதில் - “"நான் எதிர்பார்ப்பது நடைபெறவில்லை. படிச்சவனுக்கு வேலை கிடைக்கல்லியே! ஒரு பையன் எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சா, உடல் உழைப்பிலே அவன் நம்பிக்கை இழக்கிறான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாயிடுத்து. உதாரணம் சொல்றேன். 1940-இல் கம்மானுக்கு 9 அணா 10 அணா கூலி கொடுத்தேன். கொல்லத்துக்காரனுக்கு ஒரு நாள் சம்பளம் 12 அணா. பெண் பிள்ளைக்கு ஒரு அணாதான் கூலி. இன்னிக்கு எட்டு ரூபா பத்து ரூபா கூலி கேட்கிறாங்க. காரணம், ஜனங்க எண்ணம் படிப்பிலே ஈடுபட்டது. கொஞ்சம் படிச்சவன் மண்வெட்டி கையிலே எடுக்கிறது கௌரவக் குறைச்சல்னு நினைக்கிறான். வேலைக்கு ஆள் இல்லை. இன்னொரு பக்கம் படிச்சவனுக்கு வேலையில்லை; வேலையில்லாத் திண்டாட்டம். காலேஜ் இருந்து என்ன உபயோகம்?”
இவர் எங்கே தான் படித்த உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கு நிகரான கல்லூரி இந்தியாவின் குடிமகனுக்குக் கிடைக்க வேண்டும் என்று அபுல் கலாம் ஆஸாத்தோடும் ஹோமி பாபாவோடும் திட்டம் போட்டு கல்லூரிகளை உருவாக்கிய நேரு எங்கே?
1947-இல் இந்தியா அணு ஆராய்ச்சி நிலையம் ஆரம்பிக்கும், அதுவும் ஏழே வருடங்களில் என்று யாராவது உலக அரங்கில் சொல்லியிருந்தால் கேட்பவர் வாயால் சிரித்திருக்க மாட்டார்கள். ஆனால் நடந்தது. 1954-இல் பாபா அணு மின் நிலையம் ஆரம்பிக்கப் பட்டது. 1947-இல் இந்தியாவில் இருந்த உயர் கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுத்து பிறகு 1964-இல் நேரு இறக்கும் போது இருந்த கணக்கை ஒப்பு நோக்கினால் இந்தியாவின் பாய்ச்சல் எத்தகையது என்று புரியும். அதில் ஒவ்வொன்றிலும் நேருவின் பங்குள்ளது. நேருவை பற்றி எழுதிய குறிப்பொன்றில் பி.ஏ.கிருஷ்ணன் அவரை “சிறியன சிந்தியாதான்” என்று சொல்லியிருப்பார்.
தன் கட்சியில் சேர்ந்து விட்டால் தன்னைக் கேள்விக் கேட்கக் கூடாதென்றவர் ஈ.வெ.ரா ஆனால் காந்தியோ தன்னை முக்கியமான கொள்கைகளில் மறுத்த நேருவை தன் வாரிசாகவே நினைத்தார். நேருவை விமர்சித்துப் படேல், ராஜாஜி, பிரசாத் ஆகியோர் எழுதிய கூட்டறிக்கையைத் தன் கடிதத் தொகுப்பில் சேர்த்தே வெளியிட்டார் நேரு. பின்னாளில் தன்னைப் பிறிந்து தன்னை மிகவும் காட்டமாக விமர்சித்த ராஜாஜியை நேரு ஒரு சுடு சொல் சொல்லியிருப்பாரா? தன்னைப் பிரிந்த அண்ணாத்துரையையும் திமுகவினரையும் ஈ.வெ.ரா ஆபாச அர்ச்சனை செய்தார்.
நேருவை எதிர்த்து அரசியல் புரிந்த ராஜாஜியோ நேரு பற்றிய இரங்கல் குறிப்பில், “என்னை விடப் பதினோறு வயது இளையவர், என்னை விட இந்நாட்டிற்குப் பதினோறு முறை முக்கியமானவர், என்னைவிடப் பதினோறாயிரம் முறை தேசத்தால் நேசிக்கப் பட்டவர் நேரு”, என்று அங்கலாய்த்தார்.
இன்றைக்கும் இந்துத்துவர்களின் தீராப் பகையை நேரு சம்பாதித்தன் காரணம் இரண்டே இரண்டு தான். ஒன்று அவரின் மிக மிகத் தீர்க்கமான மதச் சார்பின்மை. இரண்டு பல்லாயிரமாண்டு பாரம்பர்யம் மிக்கத் தொன்மையான மதத்தை அரசியலமைப்பைக் கொண்டு சீரமைத்தது தான். இந்து மதச் சீரமைப்பு மசோதா மிகப் பெரும் சாதனை.
நேருவின் மிகப் பெரிய பங்களிப்பு மிகக் கொந்தளிப்பான காலக் கட்டத்தில் ஜனநாயக மரபுகளைக் கட்டிக் காத்ததோடல்லாமல் சராசரி இந்தியனின் மனதில் ஜனநாயகத்தின் குறியீடாகவே நேரு வாழ்ந்தது தான். தான் சர்வாதிகாரியாகக் கூடுமோ, தன்னிடம் எதேச்சாதிகாரத்தின் சாயல் இருக்கிறதோ என்று தன்னைப் பற்றியே அநாமதேயமாகக் கட்டுரை எழுதி வெளியிட்ட நேரு 17 வருடங்கள் ஜனநாயகத்தைக் குடத்தில் இட்ட விளக்காகக் காப்பாற்றினார். மாநில முதல்வர்களுக்கு நேறு எழுதிய கடிங்களின் தொகுப்பை படித்தால் ஜனநாயக மரபுகள் அற்ற ஒரு தேசத்தில் ஆசானாகவே அவர் இருந்திருக்கிறார் என்பது புரியும்.
அறிவியலாளாராக அரசின் உதவிப் பெற்ற மேக்நாட் சாஹா பின்னர்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஆகி நேருவை எதிர்த்தார். அப்போதும் நேரு தன் நிலைத் தவறியதில்லை. ஜனநாயக மாண்புகளைக் காப்பதிலும் அதற்கான அடித்தளத்தை உருவாக்குவதிலும் காந்தியை விட நேரு மேன்மையானவர் என்றே சொல்லலாம்.
நேரு பற்றி எழுதிய கட்டுரையைக் கிளெமெண்ட் அட்லீ (Lord Clement Atlee), “With malice towards none” என்று தலைப்பிட்டார். நேருவின் நீண்ட அரசியல் வாழ்வில் அவரோடு பயணத்தை ஆரம்பித்துப் பின்னர்ப் பிரிந்தவர்கள் உண்டு, அவரோடு என்றும் எதிர் கருத்துடையவர்கள் உண்டு ஆனால் யாராக இருந்தாலும் அடிப்படை மனிதப் பண்போடு அவர்களை நேரு அனுகினார். இவருக்குக் கொடுக்கும் மரியாதையை நான் எப்படி ஈ.வெ.ராவுக்குக் கொடுக்க முடியும்?
காந்தி, பாரதி நேருவின் பொதுப் பண்புகளும் ஈ.வெ.ராவின் கீழ்மைகளும்:
காந்தியும், பாரதியும், நேருவும் பல தரப்பட்ட அறிவுஜீவிகளோடு கடிதத் தொடர்பும், நட்பும் கொண்டிருந்தனர். முக்கியமாகக் காந்தியும் நேருவும். காந்தி டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதங்கள் மிகப் பிரபலம். காந்தியால் ஈர்க்கப்பட்டு அநேக அறிவுஜீவிகள் அவரைச் சந்தித்து, உரையாடி வாதிட்டு தொடர்பிலிருந்திருக்கின்றனர். காந்தியின் தத்துவார்த்த வளர்ச்சியின் பின் முக்கியமான நூல்கள் இருந்துள்ளன. ஜான் ரஸ்கின், தோரூ, டால்ஸ்டாய், விவிலியம், கீதை ஆகியவை காந்தியின் மீது தாக்கம் ஏற்படுத்திய நூல்கள்.
நேரு புத்தகங்களை மிக நேசித்தவர். அன்றைய மிகப் பிரபலமான பதிப்பகங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியாகும் நூல் பட்டியலை நேருவுக்கு அனுப்புவார்கள் அவற்றில் இருந்து பல்வகையான நூல்களைத் தருவித்துக் கொள்வார் நேரு. தன் சகோதரிகளுக்கும் மகளுக்கும் எழுதும் கடிதங்களில் அநேகப் புத்தகங்களைப் பரிந்துரைச் செய்வார். நேரு அவர் தங்கைக்கும் மகளுக்கும் எழுதிய கடிதங்கள் வாசிப்பதற்கு ஓர் சுகானுபவம். அக்காலத்தில் பெண்களுக்கு இப்படிக் கடிதம் எழுதிய மற்ற ஆண்கள் இருந்தார்களா என்று தெரியாது.
நேரு செல்லுமிடமெல்லாம் விஞ்ஞானிகளையும், இலக்கியவாதிகளையும் சந்திப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தார். பெர்னார்ட் ஷா, ஐன்ஸ்டீன் ஆகியோரைத் தேடிப் போய்ப் பார்த்தார். மார்டின் லூதர் கிங் இந்தியா வந்த போது மிகச் சிறப்பான வரவேற்புக் கொடுத்தார் நேரு. கிங் சென்னைக்கும் வந்தார் ஆனால் அவரை ஈ.வெ.ரா சந்திக்கவில்லை. ஈ.வெ.ரா எந்த அறிவு ஜீவியோடும் நெடிய உறவோ சந்திப்போ செய்து கொண்டதில்லை. அதெல்லாம் அவருக்கு அப்பாற்பட்டது.
ஈ.வெ.ரா பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர் என்பது ஒரு புறம் அதன் பின் எதையும் படித்தறியாதவர் என்பது தான் நகைப்பான உண்மை. தமிழை ஏன் காட்டு மிராண்டி மொழி என்று சொன்னார் எனக் கேட்டதற்கு நமதருமை பகுத்தறிவுப் பகலவன் சொன்னார்:
“ஆமாம், சொன்னேன். என்ன தப்பு? ஒருத்தனோடு ஒருத்தன் சண்டை போட்டுக்கிட்டுத் தமிழில் திட்டறானே - எப்படித் திட்டறான்? சண்டைக்காரனை மட்டுமா திட்டறான்? அவன் அம்மா, அப்பா, அக்கா, பொண்டாட்டி - எல்லாரையும்னா இழுக்கிறான்? (இந்த இடத்தில் சில நடைமுறை தமிழ் வசவுகளை உதாரணத்துக்குக் குறிப்பிடுகிறார் திரு. பெரியார்.)
அதே மாதிரி சண்டை வந்து இங்கிலீஷ்லே திட்டினா '·பூல்'னு திட்டலாம்; 'இடியட்'னு திட்டலாம். தமிழிலே திட்டற மாதிரி அவ்வளவு கேவலமாத் திட்டறதுண்டா? அதுவும் கிராமங்களிலே பெண் பிள்ளைங்க சண்டை போட்டுக்கிறதைக் கேட்டா நான் சொல்றது புரியும்!
இந்தி மேலே இருந்த துவேஷம் தமிழ் மேலே அன்பா மாறித்து. அதுதான் உண்மை. குழந்தைகளெல்லாம் வீட்டிலேயே இங்கிலீசில் பேச வேணும். அது நல்ல நாகரிகத்தைக் கொண்டு வரது. ஏன், 'குறளை' எடுத்துக்குங்க! நான் மட்டுந்தான் குறளைக் கண்டிக்கிறேன்!”
பாவம். ஆங்கிலம் அறிந்த யாரிடமாவது தமிழிலுள்ள வசைகளுக்கு இணையான சொற்கள் இருக்கின்றனவா என்று கேட்டறிந்திருந்திருக்கலாம். சுய புத்தியும் கிடையாது. சொல் புத்தியும் கிடையாது.
காந்தியின் தலைமையில் காங்கிரஸில் பெண்கள் முக்கியப் பொறுப்புகள், தலைமைப் பொறுப்பு உட்பட, ஏற்றனர். சுதந்திர இந்தியாவில் நேருவின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த சுஷீலா நாயர் பெண்கள் கருத்தடைச் சாதனமான ‘லூப்’ என்பதை இந்தியாவில் பிரபலமாக்கியதை மிக வியப்போடு 1965-இல் டைம் பத்திரிக்கை பதிவுச் செய்துள்ளது. சும்மா ‘பெரியார் கர்ப்பப் பை சுதந்திரம் பேசினார்’ என்பதெல்லாம் வாய்ப்பந்தல். செய்து காட்டியது சுஷீலா நாயர். (http://content.time.com/time/subscriber/article/0,33009,841894-1,00.html)
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பற்றிப் பெரியாரிஸ்டுகள் வாய் கிழியப் பேசுவார்கள் (முத்துலக்ஷ்மி ரெட்டி பற்றி வாய் திறக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர் காங்கிரஸ்காரர்) ஆனால் பெரியார், “"தனக்குப்பிறகு இயக்கத்தைக் கட்டிக் காத்து நடத்த மணியம்மையாரை விட்டால் வேறு யாருமில்லை'' என்று சொன்னதையும் அதற்கு இராமாமிர்தம் அம்மையார் “"ஏன்? எனக்குக் கூடவா அந்தத் தகுதி இல்லை’' என்று கேட்டதையும் பற்றிப் பேச மாட்டார்கள் (http://keetru.com/index.php/2011-03-30-06-18-53/2013/24220-2013-06-20-14-22-22 )
பெண்களைத் தலைவர்களாக, அவர்கள் தகுதியின் பால் மதிப்புக் கொண்டு, உருவாக்கிய காந்திக்கும் நேருவுக்கும் கொடுக்கும் மரியாதையை நான் எப்படி ஈ.வெ.ராவுக்குக் கொடுப்பது?
தேசாபிமானிகளானவர்களும் தேசத்தின் முன்னேற்றம், தேச விடுதலை ஆகியவற்றுக்காகப் பல இழப்புகளைத் தாங்கிய காந்தி, பாரதி, நேருவுக்குக் கொடுக்கும் இடத்தின் அருகில் கூட ஆகஸ்டு 15-ஐ கருப்புத் தினமாக அறிவித்த ஈ.வெ.ராவை வைக்க முடியாதே?
பெரியாரிஸ்டுகள் அடிக்கடி “பெரியார் ராஜாஜியோடும் கல்கியோடும் நட்பாக இருந்தார்” என்று நெக்குருகுவார்கள். இது அரை வேக்காட்டுத்தனம். ‘பெரியார் ராஜாஜியோடு நட்பாக இருந்தார்’ என்பது சரியல்ல ‘பெரியாரும் ராஜாஜியும் நண்பர்கள்’ என்பது தான் சரி. நட்பு என்பது இருவர் விரும்பி பேணும் உறவு. பெரியார் பிராமணர்களைப் பேசியதைப் போல் தேவர்களைப் பற்றிப் பேசி விட்டு முத்துராமலிங்கத் தேவரிடம் நட்புக் கரம் நீட்டியிருந்தால் கரம் திரும்பி வந்திருக்காது.
தன்னைச் சிறை வைத்த ஜெனரல் ஸ்மட்ஸுக்கு காந்தி தென்னாப்பிரிக்காவை விட்டு கிளம்பும் போது ஒரு ஜோடி செருப்பகள் தைத்துக் கொடுத்தார். பின்னர்க் காந்திக்கு 70-வயது ஆன போது அதைத் திருப்பிக் கொடுத்த ஸ்மட்ஸ், “இந்தச் செருப்புகளை நான் பல காலம் உபயோகித்திருக்கிறேன் கோடைகளில். ஆனால் இந்தச் செருப்பகளுக்கு நான் அருகதையானவன் அல்ல” என்றார். தன்னை நோக்கி அம்பேத்கர் எத்தனை வசைகளை வீசினாலும் ஒரு வசையைக் கூடக் காந்தி அவர் மீது தொடுத்ததில்லை. அவர் எங்கே வாயைத் திறந்தாலே வசை மாறிப் பொழிந்த ஈ.வெ.ரா எங்கே?
The Sandals Gandhi made for Smuts. |
காந்திக்கும் ஈ.வெ.ராவுக்கும் உள்ள இன்னொரு பெரிய வித்தியாசம் தலித்துகள் சம்பந்தமானது. ஈ.வெ.ரா தலித்துகள் தனக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்த பிரபுத்துவச் சீமான். காந்தியோ தலித்துகளுக்குத் தானோ பிற உயர் ஜாதி இந்துக்களோ சேவை செய்வது முன்னர் இழைத்த பாவத்திற்குப் பிராயசித்தம் என்று நினைத்தவர்.
1928, ஐனவரி 24 ல் செளராஷ்ராவின் பவநகர் பகுதியில் வர்தேஜ் கிராமத்தில் பட்டியல் இனமக்களுக்காகக் கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி காந்தி பேசியது—
“ஒரு சாதி-இந்து, தீண்டத்தகாதவர் ஒருவருக்குச் சேவை செய்தால், அதற்காக அத்தீண்டத்தகாதவர் சாதி-இந்துக்குக் கடமைப்பட்டவராக ஆகிவிட முடியாது. சாதி-இந்து தான் செய்யவேண்டிய கடமையைத்தான் செய்தவனாகிறான்.
“தீண்டத்தகாத சகோதரர்களின் இந்நிலைமைக்குக் காரணமானவர்கள் சாதி-இந்துக்கள்தான். மிக அதிகமான பாவங்களைச் செய்திருக்கிறார்கள். சுயமாகத் தன்னைத் திருத்திக் கொண்டோ, பரிகாரங்களைச் செய்தோ கழுவ முடியாத அளவிற்கு அதிகமான பாவங்களைச் செய்திருக்கிறார்கள். எனவே, தீண்டத்தகாதவர்களுக்கு உதவி செய்ய எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அது கடவுளாக எனக்குக் கொடுத்த வாய்ப்பு, பழைய பாவங்கள் நீங்குவதற்கு ஒரு சிறிய சந்தர்ப்பம் என்று எண்ணவேண்டும்். சேவை செய்துவிட்டோமே, போதும் இனி நாம் நம் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கவே கூடாது.
ஒரு இந்துவால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு இந்துக்களாகிய நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். சாதியும், மதமும் இருக்கும் வரை, ஒவ்வொரு தனிமனிதத் தவறுக்கும், பாவத்திற்கும் ஒட்டு மொத்த சமுதாயமும் பொறுப்பேற்க வேண்டும்.
தீண்டத்தகாத சகோதரனிடம் இதைக்கூற விரும்புகிறேன். உங்களுடைய முன்னேற்றத்திற்கு நீங்கள் தான் உழைக்க வேண்டும். சாதி-இந்துக்கள் உங்களுக்கு உதவுகிறார்கள் என நம்பிக்கை கொள்ளவேண்டாம். உங்களுக்கு உதவுவதால் சாதி இந்துக்கள், தங்களுக்குத் தாங்களே உதவிக் கொள்கிறார்கள் அவ்வளவுதான். உங்கள் மன உறுதியை,வலிமையைக் காட்ட விரும்பினால் உடனே விழித்தெழுங்கள்”
ஈ.வெ.ரா செப்டம்பர் 17, 1956-இல் ஒரு சொற்பொழிவில் (விடுதலைப் பத்திரிக்கையில் 21-9-1956 அன்று வெளியான செய்திக் குறிப்பில்) இப்படிச் சொல்கிறார்:
“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பார்ப்பானுக்கு விரோதம் என்று புரிந்து, 1950-ல் அதை எடுத்துவிட்டார்கள். நாங்கள் இடையறாது செய்த கிளர்ச்சிகளின்பயனாய் சில திருத்தங்கள்செய்துள்ளார்கள். படிப்பு, பதவி, சமூகம் ஆகியவற்றில் பின் தங்கியவர் களுக்குச் சலுகைகள் செய்யலாம் என்பதே அந்த அரசியல் சட்டத் திருத்தம். அதனால் ஆதித்திராவிட மக்களுக்கு அவர்களுக்குரிய விகிதாச்சாரம் முழுவதுமே கிடைத்து விடுகிறது. மற்ற திராவிட மக்களுக்கு விகிதாச்சாரம் கிடைக்கவேயில்லை என்பதைச் சுட்டிக் காட்டும்போது, ஆதித்திராவிட மக்கள், நாங்கள் அவர்களுக்கு எதிராக இதைச் சொல்லுகிறோம் என நினைப்பது நன்றி கெட்ட செயல். ஆதித்திராவிடர்களின் கோயில் நுழைவு, தெரு நுழைவுக்காக முதன் முதல் போராடிச் சிறை சென்ற எங்களையா சந்தேகப்படுவது? இன்றைக்கு ஆதித்திராவிட மக்கள் படித்தவர்களாகவும், உத்தியோகஸ்தர்களாகவும், சட்டசபை உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும் ஆனார்கள் என்றால், பார்ப்பனர்களாலா? இதற்கெல்லாம் அவர்கள் நமக்கு நன்றி, செலுத்தவில்லை என்றாலும், நமக்கு விரோதிகளாகவாவது ஆகாமல் இருக்க வேண் டாமா?”
இந்தப் பிரபுத்துவ மன நிலையை இன்றும் திமுகவினரிடம் காணலாம். திருமாவளவன் மென்மையாகக் கருணாநிதியை விமர்சித்தாலும் “அவரைத் தலைவர் கலைஞர் தன்னோடு உட்கார வைத்து தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தினார்” என்பார்கள். சக அரசியல்வாதியை உட்கார வைத்துப் பேசுவதே இவர்கள் இடும் பிச்சை என்கின்ற அருவருப்பான தொனி.
ஈ.வெ.ராவின் இந்தப் பேட்டியைப் படித்த போது சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. ஏன் தினமும் குளிப்பதில்லை என்ற கேள்விக்குப் பகுத்தறிவாளர் பதில், (https://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=07210509&week=jul2105 )
“குளிக்க வேணுங்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்லை. அதை ஒரு தொந்தரவாகவே நினைக்கிறேன். இப்ப நான் குளிச்சி ஆறு நாள் ஆச்சு! அந்தக் காலத்திலே, நான் சின்னப் பையனா இருந்தப்போ, எங்க வீட்டிலே எல்லோரும் தவறாமே குளிப்பாங்க. சந்தைக்குப் போய் வந்தா குளிப்பாங்க. போன இடத்திலே பல பேர் மேலே பட்டிருப்போமே, தீட்டாயிருக்குமே என்று குளிப்பாங்க. ஏன் கக்கூஸ் போயிட்டு வந்தாக்கூடக் குளிப்பாங்க. 'தீட்டு', 'தொடக்கூடாது' என்பதெல்லாம் அவ்வளவா லட்சியமில்லை எனக்கு. வீட்டிலே என்னை அடக்கிப் பார்த்தாங்க. முடியல."
எப்படி நாத்திகரானார் எனக் கேட்டதற்குப் பதில், “"நான் அதுக்காகன்னு ஒண்ணுமே படிக்கல்லே; ஆராய்ச்சி பண்ணலே. பக்குவம் அடையலே. என் பகுத்தறிவுக்கு எட்டினதைச் சொல்றேன்."
படிக்கவில்லை, ஆராய்ச்சி செய்யவில்லை, பக்குவம் அடையவில்லை ஆனால் பகுத்தறிவுக்கு எட்டியதைச் சொன்னாராம். இந்தத் தரத்தில் தான் இன்றைய தமிழ் நாட்டுக் கல்வியும் அறிவுச் சூழலும் இருக்கிறது. இதனால் தான் பி.ஏ.கிருஷ்ணன் தமிழ் நாட்டின் வறண்ட அறிவுச் சூழலில் தான் ஈ.வெ.ரா போன்ற கள்ளிச் செடி ஆராதிக்கப்படும் என்றார்,
இறப்பதற்கு முன் கடைசியாக ஈ.வெ.ரா பேசியது, “பார்ப்பானைப் பார்த்தால் ‘வாப்பா தேவடியாள் மகனே’ என்று அழைக்க வேண்டும். ஏனென்றால் நாமெல்லாம் தேவடியாள் மகன் என்று அவன் எழுதி வைத்துள்ளான்”. இது தான் ஈ.வெ.ரா. கடைசி மூச்சு வரை ஆபாசம், வெறுப்பு, நாஜித்தனம்.
காந்தியும், பாரதியும், நேருவும் புனிதர்களல்ல ஆனால் மிக மேன்மையான மனிதர்கள். எல்லா மனிதர்களிடமும் காணப்படும் குறைகள் அவர்களிடமுண்டு. காந்தி மிகுந்த சிக்கல்களும் குறைகளுமுடையவர். ஆனால் வரலாற்றில் அவர்களின் இடம் மகத்தானது. ஈ.வெ.ரா மனிதர்களிடம் இருக்க வேண்டிய அடிப்படையான பண்புகளுக்காகவே வானளாவப் புகழப்பட்டு மனிதர்களிடம் எக்காலத்திலும் குடிக் கொண்டுவிடக் கூடாத ஆபசமும், மடமையும், வெறுப்பும் கடைசி வரை கொண்டிருந்தார் என்பது மறக்கப் படுகிறது.
கொல்லப்படும் கடைசி நிமிடம் வரை இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இந்தியாவின் எதிர்காலம் என்று தான் காந்தி விவாதித்துக் கொண்டிருந்தார். ஐன்ஸ்டீன் காந்தி இறந்த போது, “இப்படி ஒரு மனிதன் எலும்பும் தோலுமாக நம்மிடையே நடமாடினான் என்று சொன்னால் வருங்காலச் சந்ததியினர் நம்ப மாட்டார்கள்” என்றார். அது மிகையில்லை. காந்தியின் கொலையோடு இந்தியாவுக்குள் மதக் கலவரங்கள் பெருமளவு ஓய்ந்தன. இயேசு மனிதனின் பாவத்திற்காகச் சிலுவையில் மாண்டதாகக் கிறித்தவர்கள் நம்புவார்கள். இயேசு என்பவர் வாழ்ந்தாரா இல்லையா என்பதற்கு ஆதாரம் இல்லை ஆனால் காந்தி வாழ்ந்தார். காந்தியின் கொலை தேசத்தின் ஆன்மாவைத் தொட்டது, பெரும் கலவரங்கள் ஓய்ந்தன.
இறப்பதற்குச் சில மாதங்கள் முன் கிட்டத்தட்ட கடைசியாகப் பாரதி சுதேசமித்திரனில் 19 ஜூலை 1921 இதழில் “ஐர்லாந்தும் இந்தியாவும்” என்ற கட்டுரையை எழுதியிருக்கிறான். கட்டுரையின் ஆரம்பத்தில் தாமஸ் ஆல்வா எடிஸன் பற்றிய குறிப்பைச் சொலிவிட்டு ஐர்லாந்துக்கே சீக்கிரம் விடுதலை கிடைத்து விடலாம் என்றும் இந்தியாவிற்கு எப்போது கிடைக்கும் என்றும் வினவுகிறான்.
“5000 வருஷங்களுக்கு முன்னே வேதாந்தப் பயிற்சி செய்தது; முப்பது கோடி ஜனங்கள் உடையது; இன்றைக்கும் ஜகதீச சந்த்ரர் முதலியவர்களின் மூலமாக உலகத்தாருக்கு நாகரிகப் பாதையிலே வழிக்காட்டுவது; பூமண்டல சரித்திரத்திலே வீர்ய முதலிய ராஜ குணங்களில் நிகரற்றதாகிய இந்தியாவுக்கு விடுதலை எப்போது தரப் போகிறீர்கள்?”
இறப்பதற்குச் சில தினங்கள் முன்பு எழுதிய கடைசிக் குறிப்பில் ராபர்ட் பிராஸ்டின் கவிதை ஒன்றை நேரு எழுதி வைத்திருந்தார், அக்கவிதையில் “ காப்பாற்ற வேண்டிய சத்தியங்கள் இருக்கின்றன, கண் உறங்குவதற்குள் செல்ல வேண்டிய தூரத்திற்கு மைல்கள் இருக்கின்றன” என்ற வரிகளை எழுதி வைத்திருந்தார். நேருவின் அஸ்தி அவர் நேசித்த இமய மலைச் சாரல், கங்கை என்று இந்தியாவெங்கும் தெளிக்கப்பட்டது அவர் உயிலில் எழுதியிருந்த படி.
இந்தியர்களால் தான் எப்படி நினைவுக் கூறப் படவேண்டும் என்று நேரு எழுதியிருக்கிறார், மொழியாக்கத்தின் சிதைவுகளின்றி, அவர் வார்த்தைகளிலேயே, “If any people choose to think of me then, I like them to say: This was the man who, with all his his mind and heart, loved India and the Indian people. And they, in turn, were indulgent to him and gave him of their love most abundantly and extravagantly”.