Thursday, August 19, 2021

ஆப்கான் போர் நீண்டது அமெரிக்க ஆயுத விற்பனைக்கா?

 ஜனவரி 17 1961-இல் தன் பதவிக்காலம் முடிய சில நாட்கள் இருந்த போது ஜனாதிபதி ட்வைட் ஐசன்ஹோவர் ஓர் உரையில்ராணுவ-தனியார் நிறூவன கூட்டுக்கு” (Military-Industrial Complex) எதிராக கவனமாக இருக்க வேண்டுமென்றார். அது முதல் அச்சொற்றொடர் இடது சாரியினருக்கு சுவாசம் போல் ஆனது. ஐசன்ஹோவர் வலது சாரி :-). 

நண்பர் கே.வீ ஆப்கான் போர் பற்றி ஐந்து பதிவுகள் எழுதினார் அதன் கடைசிப் பகுதியில் (https://www.facebook.com/kay.vee.716970/posts/381022000249749 ) அப்போர் 20 வருடம் நீடித்ததற்கு இந்த ஆயுத தயாரிப்பு நிறுவனங்களே பெரும் காரணம் என்றார். அங்கே மறுமொழியிட்ட பலரும் அமோதித்தனர், சிலர்குத்துங்க எஜமான், இந்த அமெரிக்காவே இப்படித் தான், இந்த ஆயுத கம்பனிகளே இரண்டு தரப்புக்கும் சப்ளை செய்தார்கள்என்று கமெண்டுகள். கொஞ்சம் உண்மை என்ன என்று பார்ப்போமா?

ஆப்கான் போரினால் நிகழ்ந்த இழப்புகள், ஏமாற்றங்கள், நிறைவேறா நோக்கங்கள் இன்று நிகழ்ந்திருக்கும் வெளியேற்றத்தால் உண்டாகும் பின் விளைவுகள் இக்கட்டுரையின் எல்லைக்கப்பால். இக்கட்டுரை போர் நீண்டதற்கு ஆயுத நிறுவனங்கள் காரணமா என்பது மட்டுமே பேசுப் பொருள். 




தீவிர இடது சாரி இணைய தளம் “Intercept”இந்த ஆப்கான் வெளியேற்றத்தைத் தொடர்ந்து இப்போரில் பயன் பெற்றவர்கள் ஒரேயொரு தரப்பு தான், அது அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் என்றது. போரின் ஆரம்பத்தில் அந்த நிறுவனங்களில் $10,000 போட்டிருந்தல் அதுவே இன்று $97,795 மதிப்புப் பெறும் ஆனால் அதே பணத்தை S&P 500-இல் போட்டிருந்தால் $61,612 தான் மதிப்பு பெறும் என்றார்கள். கொசுறு செய்தி, அதே $10,000-த்தை ஆப்பிளில் 2001-இல் முதலீடு செய்திருந்தால் 2012-இல் அது $667,159 மதிப்புப் பெறும் என்று ஒரு கணக்குச் சொல்கிறது. இது மாதிரி பல கணக்குகள் இருக்கின்றன.




ஆச்சர்யமாக "Intercept" கட்டுரைக்கான மறுப்பு "Slate" என்கிற இடது சாரி தளத்தில் ஃபிரெட் காப்லன் என்பவரால் எழுதப்பட்டது. காப்லன் முக்கிய அமெரிக்க ஆயுத நிறுவனங்களான போயிங், லாக்ஹீட் மார்ட்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ரோப் கிரம்மன் ஆகியவற்றின் தளவாட விற்பனைகளை சுட்டிக் காட்டி, அவை பெரும்பாலும் மிகப் பெரிய விமானங்கள் அல்லது மிக நுட்பமான விலையுயர்ந்த கருவிகள் போன்றவையே, அவற்றுக்கு ஆப்கான் போரில் பெரும் பங்கு எதுவுமில்லை என்கிறார். மேலும் ஆப்கான் போரே நடக்கவில்லை என்றாலும் இந்த நிறுவனங்கள் கிட்டத் தட்ட இதே லாபத்தை அடைந்திருக்கும் என்கிறார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இந்தியா ரபேல் விமானத்தை காஷ்மீர் தீவிரவாதத்துக்காகவா வாங்கியது? பாகிஸ்தானை உத்தேசித்து தான் இந்தியா வாங்கியது. போபர்ஸ் பீரங்கியும் அப்படி வாங்கியது தான். 

தலிபான் வைத்த்திருக்கும் ஆயுதங்கள் பெரும்பாலும் தோற்று ஓடிய ஆப்கான் படையினரிடம் இருந்து கைப்பற்றியதும் கள்ள மார்க்கெட்டில் வாங்கியதும் தான். அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் நினைத்தப் படி ஆயுதங்களை விற்க முடியாது. ஆயுத நிறுவனங்கள் யாருக்கு விற்கலாம், விற்க கூடாதென்பதற்கெல்லாம் அநேக சட்டங்கள் இருக்கின்றன. உடனே "ஆஹா அதெல்லாம் இடைத் தரகர் மூலம் நடக்கும்" என்று சொல்வதெல்லாம் தீவிர இடதும்/வலதும் சமைக்கிற கனவு சூழ்ச்சிகள், ஆதாரமில்லை. விதிகளை மீறி ஆயுதம் விற்றால் இந்த கம்ப்பெனிகளுக்கு கடும் தண்டனைகள் உண்டு. பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கே அவர்களிடையே புழங்கும் நிதிக்கு நதிமூலம், ரிஷிமூலம் தெரியாமல் பணம் பரிவர்த்தனை செய்து அது தீவிரவாதிகளுக்கு உதவியாக இருந்தால் அந்நிறுவனங்கள் மிகக் கடுமையான சட்டங்கள் பாயும். 

மேலே சொன்னதெல்லாம் பொதுப்ப்படையான கருத்து தான். ஆயுத நிறுவனங்கள் மற்ற எல்லா அமெரிக்க நிறுவனங்களையும் போல் லாபியிஸ்டுகள் வைத்திருப்பார்கள் அதன் மூலம் தங்களுக்கு சாதகமான சட்டங்கள் உருவாக்க செயல்படுவார்கள். அதெல்லாம் இங்கு சாதாரணம். ஆனால் அதற்காக அரசையே கட்டுபடுத்துகிறார்கள் என்பதெல்லாம் கற்பனை. அமெரிக்க ஆயுத நிறுவனங்களா பின் லேடனை அமெரிக்காவை தாக்கு எங்களுக்கு வியாபாரம் நடக்கும் என்று ஊக்குவித்தார்கள்? இல்லையே? 9/11 சராசரி அமெரிக்கர் எல்லோருமே போருக்கு ஆதரவாகவே இருந்தனர். அன்று புத்தரே அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் போருக்கு போயிருப்பார். 

அமெரிக்காவின் தற்காப்பு பொருளாதார ஒதுக்கீட்டில் கணிசமான பகுதி சம்பளம், பயிற்சி, மருத்துவம் ஆகியவற்றுக்கு தான். 




அமெரிக்கா நிச்சயமாக உலக நாடுகள் பலவற்றோடு ஒப்பிட்டால் பல நூறு பில்லியன் டாலர் அதிகமாக ராணுவத்துக்கு செலவழிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் செலவை அமெரிக்க வருடாந்திர மொத்த உற்பத்தியோடு ஒப்பிட்டால் அது அவ்வளவு பெரிதல்ல என்று புரியும். 1980-களில் பனிப்போரின் உச்சத்தில் மொத்த பொருளாதாரத்தில் 7% இருந்த ராணுவ ஒதுக்கீடு இன்று 4% தான். இன்று அது கிட்டத்தட்ட $700 பில்லியன் டாலர். 



ஆயுத விற்பனையில் அமெரிக்காவின் பங்கு, உலக சந்தையில், 2016-2020 ஆண்டுகளுக்கு, 37%. அதே காலக் கட்டத்தில் ருஷ்யாவின் பங்கு 20%, பிரான்ஸ் 8.2%, ஜெர்மனி 5%, சீனா, 5%. இதில் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் சீனாவுக்கு தளவாடம் விற்பது கூட அதிக கவலைத் தருவதல்ல மாறாக நுட்பமான தகவல் கருவிகள், சாப்ட்வேர் போன்றவற்றை விற்பதே பிரச்சனை. இதில் எங்கே தாலிபானுக்கும், அல் கொய்தாவுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் விற்பது. 



2005-இல் ஐரோப்பாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட ஜார்ஜ் புஷ் ஐரோப்பிய அரசுகள் தங்கள் ராணுவத்துகாக செலவு செய்வதை விட சீனாவுக்கு விற்பதில் மும்முரம் காட்டுவதை கண்டித்தார் என்றது எகானமிஸ்டு பத்திரிக்கை. (https://www.economist.com/leaders/2005/02/24/merci-yall ). நேட்டோ ஒப்பந்தப் படி ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் பாதுகாப்புக்கென்று வருடாந்திர மொத்த பொருளாதாரத்தில் ஒரு விகிதத்தை செலவு செய்ய வேண்டும் ஆனால் பிரான்ஸும், ஜெர்மனியும் அதை செய்வதில்லை மாறாக அமெரிக்கா செலவு செய்யும் என்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்று டிரம்ப் குற்றம் சாட்டியது நியாயமே. அமெரிக்க ராணுவ செலவு என்பது அமெரிக்காவுக்கானது மட்டுமல்ல.

அமெரிக்க நிதி ஒதுக்கீட்டில் ராணுவ ஒதுக்கீடு எவ்வளவு? மக்கள் நலன் சார்ந்த ஒதுக்கீடு எவ்வளவு. இதோ 2020-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு. (https://www.cbo.gov/publication/57170 )




ராணுவ ஒதுக்கீடு $714 பில்லியன், வயதானோருக்கான மருத்துவக் காப்பீடு $769 பில்லியன், வசதியற்றோருக்கான மருத்துவக் காப்பீடு $458 பில்லியன், கோவிட்டால் பணி நீக்கம் செய்யாமிலிருக்க நிறுவனங்களுக்கு அளித்தது $526 பில்லியன், பென்ஷன் ஒதுக்கீடு $1.1 டிரில்லியன். என்னமோ அமெரிக்காவே ஆயுத கம்பெனிகளுக்கு தாரை வார்த்து எல்லோரும் பசி, பட்டினியால் வாடுவது போல் யாரும் நினைக்க வேண்டாம். நிச்சயமாக போர் செலவினங்கள் வேறு செலவுகளுக்கு உதவியிருக்கலாம். அது வேறு விவாதம். ஆப்கான் போர் அமெரிக்கா மீது திணிக்கப்பட்ட போர் தான். 

அமெரிக்கா போரிடுகிறது என்று அங்கலாய்ப்பவர்கள் பல விஷயங்களை மறந்து விடுகிறார்கள். சீனாவும், ரஷ்யாவும் என்ன பூப்பரித்துக் கொண்டிருக்கிறார்களா? சீனா ஆப்பிரிக்காவை கபளீகரம் செய்கிறது, தெற்காசிய கடல் பகுதிகளில் கோலோச்ச நினைக்கிறது, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கிறது. ரஷ்யா உக்ரைனை சுவாஹா செய்கிறது, ஜார்ஜியாவை அடக்குகிறது, சிரியாவில் மிகப் பெரிய படு பாதகங்களை பஷார் அசாத்துடன் கைக்கோர்த்து செய்கிறது. சிரியாவில் விஷ வாயு குண்டு பிரயோகித்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றார் ஒபாமா அப்புறம் கை கழுவியது தான் மிச்சம். ஈரான் அனுகுண்டு தயாரிக்கிறது அதை அமெரிக்கா தடுக்க முயன்றது, முயல்கிறது. அது இந்தியாவுக்கு பயன் தான். அதற்கான பணத்தில் என் வரிப்பணமும் உண்டு. 

அமெரிக்க பரிசுத்த நாடு அல்ல. உலகமும் பரிசுத்தமல்ல. ஆனால் நிச்சயம் இன்று அமெரிக்க தலைமையின்றி உலகின் சுதந்திர பகுதிகள் பாதுகாப்பாக இருக்க முடியாது. America, for good reason, remains the leader of the free world. 


Wednesday, August 11, 2021

உ.வே.சா. சனாதனியா?

 உ.வே.சா. பற்றி இன்று அடிக்கடி கேள்விப்படும் ஒரு சித்தரிப்பு அவர் 'சநாதனி' என்று. இன்றைய அரசியல் சூழலில் ஒருவரை, அதுவும் குறிப்பாக பிராமணரை, சநாதனி என்றழைப்பது, ஆங்லத்தில் சொல்வதென்றால், ஒரு "loaded term". உ.வே.சா சநாதனியா? ஆம் என்றால் எந்த அர்த்தத்தில். 

எழுத்தாளரும் வரலாற்றாய்வாளருமான ஸ்டாலின் ராஜாங்கத்தின் "பெயரழிந்த வரலாறு" பற்றி உரையாற்றிய பேராசிரியர் கல்யாணராமன் அவர் உரையினைடையே உ.வே.சா ஒரு சநாதனி என்றார். அவர் நிச்சயமாக அந்த சித்தரிப்பை உ.வே.சா பற்றி தி.க.வினர் பேசும் அர்த்தத்தில் அதை சொல்லவில்லை. ஆனால் அந்த சித்தரிப்பு சட்டென்று உறுத்தியது. அப்போதே ஒரு சிறு குறிப்பை எழுதினாலும் மனத்தில் எண்ணங்கள் சுழன்றதால் இப்பதிவு.



பெருமாள் முருகன் தொகுத்த "உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்" நூலில் பொ.வேல்சாமியின் இரண்டு கட்டுரைகளில் ஒன்றின் தலைப்பே, "ஒரு சனாதனியின் நவீனத்துவம்". கட்டுரையின் முதல் பத்தியே உ.வே.சா பெயர் காரணம் பற்றி. உ.வே.சா.வுக்கு பெற்றோர் இட்டப் பெயர் "வேங்கடராமன்" ஆனால் சைவரான மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு வைணவப் பெயரை அழைக்க விருப்பமில்லாததால் 'சாமிநாதன்' என்று உ.வே.சா.வுக்கு பெயரிட்டார் என்ற்று சொல்லி, மேலும் எழுதுகிறார் பொ.வேல்சாமி, "சூத்திரப் புலவர் இட்ட பெயரை ஆசாரமான பார்ப்பனக் குடும்பத்தினர் எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டனர். தங்களுடைய ஆசாரத்தைக் காட்டிலும் தங்கள் மகனின் தமிழ்க் கல்வி மேன்மையுடையது என்னும் கருத்தை அவர்கள் ஒத்துக் கொண்டது தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்".

அந்த வரிகளை உற்று நோக்குவோம். மீனாட்சிசுந்தரம் பிள்ளை சூத்திரர் என்று அறிமுகப் படுத்துகிறார். உ.வே.சா.வின் குடும்பம் "ஆசாரமான பார்ப்பனக் குடும்பம்" என்று அறிமுகப்படுத்தப்படுகிறது. மீனாட்சிசுந்தரம் பிள்ளையை சைவர் என்று அறிமுகப்படுத்தாமல் பொ.வேல்சாமி உ.வே.சா.வுக்கு எதிர் நிலையில் வைத்து "சூத்திரர்" என்று அறிமுகப் படுத்தப்படுகிறார். இதுவே விஷமத்தனமானது. மேலும் இந்த நிகழ்வில் உண்மையான ஆசாரவாதி மீனாட்சிசுந்தரம் தான். ஆனால் "சனாதனி" என்கிற பட்டம் உ.வே.சா.வுக்கு தான். 

வேல்சாமியின் கட்டுரையை மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் புதுமைப் பித்தனின் ஒரு மேற்கோளையும் சேர்த்துக் கொள்வோம். "(உ.வே.சாமிநாத)அய்யரவர்கள் தமிழ் இலக்கியத்தின் மெய்க்காப்பாளர் மட்டுமல்ல; பழைய சம்பிரதாயங்கள், பழைய மனப்பான்மைகள் இவற்றின் பிரதிநிதி" என்கிறார் புதுமைப் பித்தன். புதுமைப் பித்தன் உ.வே.சா ஏதோ உலகப் புரட்சி செய்திருக்க வேண்டும் என்று ஏனோ எதிர்ப்பார்த்திருக்கிறார். அதுவும் என்னமோ உ.வே.சா காலத்தில் மற்றவர்களெல்லாம் சமூக நீதி போராளிகளாகத் திகழ்ந்ததுப் போலவும் உ.வே.சா மாத்திரம் மரபுகளின் காவலனாக இருந்ததுப் போலவும் வருத்தப்படுகிறார். 

ஆசார சனாதனியான உ.வே.சா சமண காவியமான சீவக சிந்தாமணியைப் பதிப்பித்த வரலாற்றை வேல்சாமி விரிவாக, உ.வே.சா.வின் 'என் சரித்திரம்' நூலை ஆதாரமாகக் கொண்டு, எழுதுகிறார். அதனிடையே ஒரு செய்தியைச் சொல்கிறார், "திருவாடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த சுவாமிநாத தேசிகர் 'இலக்கணக் கொத்து' என்னும் நூலை இயற்றியுள்ளார். அதில் சைவ நூல்களைத் தவிர பிற நூல்களைப் பயில்வோர் தம் வாழ்நாளை வீணாகக் கழிப்பவர்கள் என்று கூறுகிறார்". கவனிக்கவும் அவ்வரிகளில் எங்கும் சுவாமிநாத தேசிகர் ஆசாரவாதி என்றோ சனாதனி என்றோ குறிக்கப்படுவதில்லை. 

திராவிட இயக்கச் சொல்லாடலின் தாக்கம் "சனாதனி", "ஆசாரவாதி" ஆகியச் சொற்களை பிராமணர்களை மட்டுமே குறித்துச் சொல்லப்படுவனவாக மாற்றியதன் விளைவாகக் கூட பொ.வேல்சாமியும் அப்படி தேசிகரை சனாதனி என்றழைக்காததற்கு காரணமாக இருக்கலாம். வேல்சாமி திராவிட இயக்கத்தை ஏற்றவர் என்பது பொருளல்ல. திராவிட இயக்கதை முழு மூச்சாக எதிர்த்த ஜெயகாந்தனின் மேடைப் பேச்சுகள் திராவிட இயக்க ஸ்டைலிலேயே இருக்கும். 

சீவகசிந்தாமணி பதிப்பின் போது "சம்வசரணம்" என்கிற சொற்றொடரின் பொருள் அறிய ஒரு சமண அம்மையார் உதவுகிறார், அதுவும் ஒரு மறைவில் நின்றுக் கொண்டு உரையாடலின் மூலம். உ.வே.சா.வின் சமணம் பற்றிய ஞானத்தைக் கேட்டு வியந்து அப்பெண்மணி, "இவர் பவ்யஜீவன் போல் இருக்கிறது" என்றார். புலவர்களோடு பழகும் உ.வே.சா அச்சாதாரணப் பெண்ணின் பாராட்டை பெருமையாகச் சொல்வதை வேல்சாமி எடுத்துக் காட்டுகிறார். மேலும் சொற்களுக்கான பொருள் அறிய பொதுச் சமூகத்தில் சாதாரணர்களைத் தொடர்ந்து உ.வே.சா நாடியிருப்பதையும் சொல்கிறார் வேல்சாமி. புலமை என்பது சமூகத்தில் எங்கும் இருக்கலாம் என்று உ.வே.சா நினைத்தார் எனக் கொள்ளலாம் என்கிறார் வேல்சாமி. 

அவ்வளவையும் சொல்லிவிட்டு கட்டுரையின் முடிவில் வேல்சாமி எழுதுகிறார், "சனாதனத்தில் ஊறிய சமூகத்தில் பிறந்து, பிற்போக்குக் கலாச்சாரமாகிய ஆசார அனுஷ்டானங்களையெ தன்னுடைய அன்றாட வாழ்வாகக் கொண்ட வருணாசிரமவாதி, செம்மையான தமிழ்ப் புலமையின் ஊடாக நவீன உலகத்தைப் புரிந்துக் கொண்டு அவர் காலத்தில் வாழ்ந்த முற்போக்காளர்க்கள் என்று கருதப்பட்ட பல தமிழ்ப் புலவர்களை விடவும் பல தளங்களில் மேம்பட்டுத் தம்முடைய துறையில் சிகரத்தைத் தொட முடியும் என நீரூபித்தவர் உ.வே.சாமிநாதையர்".

"சனாதனத்தில் ஊறிய சமூகத்தில் பிறந்து", "பிற்போக்கு கலாச்சாரமாகிய", "ஆசார அனுஷ்டானங்கள்", அப்பாடி மூச்சுத் திணறுகிறது. போதாக்குறைக்கு, "வருணாசிரமவாதி". ஒரு நிமிடம் இங்கு நின்று நிதானிப்போம். இதையெல்லாம் நாம் ஒரு பிராமணருக்கு மட்டும் தான் சொல்ல முடியுமா? மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர் முதலாக பலருக்கும் நாம் அவற்றை எளிதாகச் சொல்லலம். ஆறுமக நாவலரின் சாதியப் பார்வை பிரசித்தம். ஆனால் இது வரை அவரை யாரும் "சனாதனி", "வருணாசிரமவாதி" என்றழைத்துப் பார்த்ததில்லை. அந்த கொடுப்பினை உ.வே.சா.வுக்கு தான். 

வேல்சாமி மிகக் கவனமாக தொழில் முறையில் ஆசாரங்களை மீறிய உ.வே.சா சொந்த வாழ்வில் அதை மீறவில்லை என்று ஒரு சித்திரம் வரைந்து தனி வாழ்வில் (private life) ஒருவர் ஆசாரவாதியாக இருப்பினும் தொழில் முறை புலமையில் வேறு மாதிரி இருக்கலாம் என்று முடிக்கிறார். அதையும் பார்ப்போம்.

அந்த பவ்ய ஜீவன் நிகழ்வையே எடுத்துக் கொள்வோம். அது வெறும் தனி வாழ்வில் ஆசாரவாதியாகவும் புலமைத் தேடலில் நவீனத்துவராகவும் இருக்கும் ஒருவர் செய்யும் செயலா? உ.வே.சா என்ன அந்நியன் அம்பியா? இல்லை ஆசாரம் என்ன வீட்டில் மட்டும் போட்டுக் கொள்ளும் சட்டையா? ஆசாரம் என்பது என்ன? சந்தியாவந்தனம் செய்வதா? பிள்ளைகளுக்கு தன் சமூகத்தில் சம்பந்தம் பார்ப்பதா? பூணூல் தரிப்பதா? அதெல்லாமும் தான் ஆனால் அது மட்டுமல்ல. அந்த சமணப் பெண்மணியை தன் புலமைத் தேடலினால் அனுகினார் என்றே வைத்துக் கொள்வோம் அதுவும் அவர் அனுஷ்டித்த ஆசாரத்தின் தளர்வே. இன்னொரு நிகழ்வைப் பார்ப்போம்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றறியப்பட்ட சாமுவேல் வேதநாயகம் பிள்ளை திருவாடுதுறை மடத்தின் பேராபிமானம் கொண்டு பாடல்கள் எழுதியதன் மூலம் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகரின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானார். அதன் வழியே உ.வே.சா.வின் மதிப்பையும் வேதநாயகம் பிள்ளை பெற்றிருந்தார். உ.வே.சா கிறிஸ்தவரான வேதநாயகம் பிள்ளை விட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். 

உ.வே.சா.வின் வாழ்வில் உதவிப் புரிந்தோரும், சேர்ந்து பணியாற்றியப் பலரும் பல்வேறு சமூகத்தினர். முதலியார், பிள்ளை, சமணர்கள், ஆங்கிலேயர், கிறிஸ்தவர். தனக்குப் பணம் உதவிச் செய்தவர்கள் பட்டியலை உ.வே.சா வெளியிட்டிருக்கிறார் சென்னையை தவிர அநேக நகரங்களில் அவருக்கு உதவியர்கள் அநேகர் பிராமணரல்லாதோர். அப்படியென்றால் அத்தனைப் பேரிடமும் அவருக்கு நல்லுறவு இருந்தது. இங்கு ஒரு கேள்வி எழலாம், 'அவர்கள் வீடுகளில் உணவு உண்டாரா?' என. தெரியாது என்பதே பதில் (அல்லது யாரேனும் தகவலறிந்தால் சொல்லலாம்). அவர் உணவு உண்ணவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அவர் காலத்தில் வேறு சமூகத்தினர் பலரும் வெளியிடங்களில் உணவு உண்ணாதவர்கள் தாம். 

கி.வா.ஜ எழுதிய "என் ஆசிரியப்ப்பிரான்" நூலில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி. இராமநாதபுரம் ஜமீனை சேர்ந்த கமுதி என்கிற கிராமத்தில் நாடார்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்குள் நுழைந்தது கலவரத்தை உண்டாக்கியது. தனக்கு நாடார்கள் நண்பர்களாக இருப்பினும் மரபு மீறல் கூடாதென்று நாடார்கள் கோயில் நுழைவிற்கு எதிராக இராமநாதபுரம் அரசர் வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கில் தனக்கு சாதகமாக சாட்சியளிக்க உ.வே.சா.வை அரசர் அழைத்தார். உ.வே.சா "நாடார்களைப் பற்றி இழிவாகக் கூறாமல் அவர்களில் எத்தனையோ பக்தர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி, ஆனாலும் மரபு பிறழக்கூடாதென்று வற்புறித்தினார்" என்றும் அந்த சாட்சியமே வழக்கில் முக்கியமானதென்றும் கி.வா.ஜ எழுதுகிறார். இவ்விடத்தில் "ஆஹா சாதியவாதி உ.வே.சா" என்று நாம் இன்று கூப்பாடு போட்டால் அதை முக்கியமாக இராமநாதபுரம் அரசரை நோக்கித் தான் செய்ய வேண்டும். 

தான் கம்பராமாயணம் படித்த போது அதில் சந்தேகங்களை கேட்டறிய உ.வே.சா.வும் சக மாணவர்களும் திரிசிபுரம் கோவிந்த பிள்ளை என்பவரிடம் பாடம் கற்கலாம் என்று ஆசைப்பட்டனர். கோவிந்தப் பிள்ளை கம்ப ராமாயணத்தை முழுதுமாக அச்சிட்டவர் என்றும் "பிரபந்த வியாக்கியானங்களிலும் வைஷ்ணவ சம்பிரதாய நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி" இருந்ததென்றும் உ.வே.சா சொல்கிறார். கோவிந்த பிள்ளை அப்போது கபிஸ்தலத்தில் "ஶ்ரீமான் துரைசாமி மூப்பனார்" அவர்களுக்கு தமிழ் பயிற்றுவித்து கம்பராமாயணமும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாராம். திருவாடுதுறை வந்த கோவிந்த பிள்ளை சில சங்கடங்களை சந்தித்தார். மடத்து மாணவர்களும் அவரிடம் கொஞ்சம் முறுக்கு காட்டினார்கள் என்று சொல்லும் உ.வே.சா, "வைஷ்ணவராகிய அவருக்கு சைவ சமூகத்தில் பழகுவது சிறிது சிரமமாகவே இருந்தது" என்கிறார். இது தான் அக்காலத்திய நிலை. ஏதோ உ.வே.சா.வும் பிராமணர்கள் மட்டுமே சனாதனிகள் என்கிற பிம்பம் இப்போது நிலவுவது உண்மைக்குப் புறம்பானது. அந்த துரைசாமி மூப்பனார் "ஶ்ரீகருடபுராணவசனம்" என்ற நூலை வெளியிட்டியிருக்கிறார். 

உ.வே.சா.வின் 'என் சரித்திரம்' வாயிலாக நமக்கு கிடைக்கும் இன்னொரு முக்கியப் புரிதல் கல்வியறிவு பிராமண சமூகத்திடம் மட்டும் இருந்தது என்கிற திராவிட இயக்க பிரச்சாரம் பொய் என்பதே அது. பல சமூகத்தினரிடமும் கல்வியறிவும், செல்வமும் இருந்தது. அதற்காக கல்வியறிவில் தடைகள் இல்லை என்பதல்ல பொருள்.

"பிராமணர்களுக்கு மட்டுமே உ.வே.சா பாடம் சொல்லிக் கொடுத்தார்" என்று ஒரு அபவாதம் உலவுகிறது. இது அப்பட்டமானப் பொய். "மடத்துக்கு வருவோர்" என்ற தலைப்பிட்டக் கட்டுரையில் தன்னிடம் பயின்ற மாணவர்கள் பெயர்களை குறிப்பிடுகிறார் உ.வே.சா:

"என்னிடம் அக்காலத்தில் படித்த தம்பிரான்கள் சுந்தரலிங்க தம்பிரான், விசுவலிங்கத் தம்பிரான், சொக்கலிங்கத் தம்பிரான், பொன்னம்பலத் தம்பிரான், வானம்பாடி சுப்பிரமணிய தம்பிரான், சிவக்கொழுந்துத் தம்பிரான் முதலியோர்.

வெள்ளை வேஷ்டிக்காரர்களுள் பேரளம் இராமகிருஷ்ண பிள்ளை, சிவகிரிச் சண்முகத் தேவர்,                            ஏம்பல் அருணாசலப் புலவர், சந்திரசேகரம் பிள்ளை, ஏழாயிரம் பண்ணை தாமோதரம் பிள்ளை, கோயிலூர் பரதேசி ஒருவர், நெளிவண்ணம் சாமுப் பிள்ளை, திருவாடுதுறை பொன்னுசாமி செட்டியார்,திருவாடுதுறை சன்முகம் பிள்ளை என்போற் முக்கியமானவர்கள்"

அதே கட்டுரையில் காவடிச் சிந்து இயற்றிய அண்ணாமலை ரெட்டியார் தன்னிடம் பாடம் பயின்றவர் என்றும் இலக்கணத்தை விட செய்யுள் இயற்றுவதில் நாட்டமுடையவர் என்றும் சொல்கிறார் உ.வே.சா. 

வெகு எளிதாக "சனாதனி" என்கிற வார்த்தையை வீசி விடுகிறார்கள். சி.வை.தாமோதரம் பிள்ளை பிறப்பால் கிறிஸ்தவர் ஆனால் அதன் பின் சைவ மதத்தை தழுவியதோடு 'விவிலிய விரோதம்' என்கிற கிறிஸ்தவ எதிர்ப்பு நூலையும் எழுதினார். அதோடு "சைவ மகத்துவம்" என்றொரு நூலையும் வெளியிட்டிருக்கிறார். இப்போது சி.வை.தா.வை நாம் என்னவென்று அழைப்பது? 

சமணம், பௌத்தம் ஆகிய மதங்களை மையமாகக் கொண்ட இலக்கியங்களைப் பதிப்பித்தாலும் அதனால் எவ்வகையிலும் தன் பிறப்பு சார்ந்த மத நம்பிக்கைகளை உ.வே.சா மாற்றிக் கொள்ளவில்லை என்று பெருமாள் முருகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதாக நினைவு. உ.வே.சா.வே அது குறித்து எழுதியிருக்கிறார். இன்று பௌத்தம், இந்து மதம் பற்றி அநேக மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள் அவர்களுள் பலர் கிறிஸ்தவர்கள் ஆனால் யாரும் பௌத்தத்துக்கோ, இந்து மதத்துக்கோ மாறியதில்லை. அப்படி மாற வேண்டுமென்றும் யாரும் எதிர்ப்பார்ப்பதில்லை. ஏனோ உ.வே.சா. மீது மட்டும் அத்தகைய எதிர்ப்பார்ப்பை ஏற்றுகிறோம். 

காந்தி தன்னை சனாதனி என்றே அழைத்துக் கொண்டார் ஆனால் அவர் தன்னை சனாதனி என்று குறிப்பிட்டதற்கும் இன்று தீவிர மத வெறுப்புகள் உள்ளடக்கிய இந்துதுவர்கள் தங்களை சனாதனிகள் என்று அழைத்துக் கொள்வதற்கும் சம்பந்தமேயில்லை. உ.வே.சா.வை சனாதனி என்றழைப்பது சரியல்ல. வேல்சாமி அதை அறிவு நேர்மையில்லாமலே செய்கிறார். வேறு பலர் அதே காரணத்துக்காகவோ அறியாமலோ அதை செய்கிறார்கள். 

பதிப்பு வரலாற்றில் உ.வே.சா ஒரு துருவ நட்சத்திரம். ஆமாம் அவருக்கு முன்னோடிகள் உண்டு. ஐசக் நியூட்டன் தன் முன்னோடிகளை விட தான் அதிக தூரம் பார்க்க முடிந்தது ஏனென்றால் தான் அவர்கள் தோள் மீது நின்றதால் என்றார். அது உ.வே.சா.வுக்கும் பொருந்தும். முன்னோடிகள் இருந்தார்கள் என்பதால் ஐசக் நியூட்டனின் இடம் தவறா? இல்லை. விஞ்ஞானத்தில் நியூட்டன் ஒரு துருவ நட்சத்திரம். அப்படித் தான் உ.வே.சா.வும். 

 

நூல்கள்:

1. 'என் சரித்திரம்' - செம்பதிப்பு. ஆசிரியர் ப.சரவணன்

2. உ.வே.சா: பன்முக ஆளுமையின் பேருருவம் -- தொகுப்பு பெருமாள் முருகன்



Monday, August 2, 2021

ஸ்டாலின் ராஜாங்கம்: வரலாறு என்னும் மொழி

 ஜூலை 31 2021 அன்று ஸ்டாலின் ராஜாங்கத்தின் மூன்று புத்தகங்களை ஒட்டி "வரலாரு என்னும் மொழி" என்று ஒரு கலந்துரையாடலை ஒருங்கிணைத்திருந்தேன். ஸ்டாலினின் வரலாற்றுப் பார்வை, வரலாறு எப்படி கட்டமைக்கப்படுகிறது, 'எழுத்து' மட்டுமே வரலாறா என்று பல புள்ளிகளை விவாதம் தொட்டுச் சென்றது. "பெயரழிந்த வரலாறு: அயோத்தி தாசரும் அவர் கால ஆளுமைகளும்", "எண்பதுகளின் தமிழ் சினிமா", "எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்" ஆகிய மூன்று நூல்களும் மூன்று வெவ்வேறு தளத்துக்கானவை ஆனால் மையச் சரடாக எழுத்து சார்ந்த வரலாறும் மக்களிடையே புழங்கும் வழக்காறும் எப்படி ஒரு சித்திரத்தை அளிக்கிறது என்று இருக்கும்.




இந்நிகழ்வுக்கென்று நூல்கள் குறித்தும் பேஸ்புக்கில் எழுதிய குறிப்புகளின் தொகுப்பை இங்கு அளிக்கிறேன். இவை முறையான நூல் விமர்சனங்களல்ல. ஓர் அறிமுகம் மட்டுமே.


பெயரழிந்த வரலாறு: ஒரு குறிப்பு

-------------------------------


இப்புத்தகம் தமிழ் வரலாற்றெழுத்தில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். அயோத்திதாசரை மையமாகக் கொண்டு உ.வே.சா, பாரதி, இரட்டைமலை சீனிவாசன் முதலானோர் பரஸ்பரம் ஒருவரையொருவர் பெயர் குறிப்பிடாமல் எதிர்வினையாற்றியதை வைத்து வெகு நேர்த்தியாக ஊடும் பாவுமாய் ஸ்டாலின் வரலாற்றை நெய்த்திருக்கிறார்.


சீவக சிந்தாமணியை பதிப்பித்த உ.வே.சா அக்காப்பியத்துக்கு உரை எழுத சம காலத்தில் வாழ்ந்த சமணர்களை சந்தித்து கற்றுக் கொண்டார். ஆனால் மணிமேகலைக்கு உரை எழுத சம காலத்தில் "அழிந்தது" என கருதப்பட்ட பௌத்தத்திற்கு அவர் மேற்குலக பௌத்தர் அல்லாத ஆசிரியர்க்களின் நூல்களை, நேரடியாகக் கூட அல்ல, நண்பர் மூலம் கேட்டறிந்து (ஏனெனில் அவை ஆங்கிலத்தில் இருந்ததால்), அதன் மூலம் அறிந்த பௌத்தத்தையும் தன் பாரம்பர்யம் சார்ந்த புரிதலையும் சேர்த்து காப்பியத்துக்கு துணை நூலாக "பௌத்த மும்மணி" ஒன்றை எழுதினார், அது புத்தரின் வரலாற்றையும் அடக்கியது.


பௌத்தம் அழிந்தது என்று கொள்வது சரியா? என்ற கேள்வியில் தொடங்கி அயோத்திதாசர் அத்தகைய நூலினை, உ.வே.சா. பெயர் குறிப்பிடாமல் எதிர்வினையாற்றுகிறார். பௌத்தம் அறியாத மேற்குலகின் ஆசிரியர்களின் புரிதலையும் உ.வே.சா.வின் புரிதலையும் அயோத்திதாசர் கேள்விக்குட்படுத்துகிறார்.
மேற்க்கத்திய ஆய்வாளர்களும் வாயிலாக பௌத்தத்தை அறிந்த உ.வே.சா எழுதிய பௌத்தம் பற்றிய துணை நூல் வாசகனுக்கு காப்பியத்துக்குள் ஒரு நுழை வாயில் மட்டுமல்ல காப்பியத்துள் இருக்கக் கூடிய பௌத்தத்தை கூட வாசகன் உ.வே.சா அளித்த சட்டகத்தின் வழியாகவே புரிந்துக் கொள்ளக் கூடும். அது முழுமையானப் புரிதலா?

அயோத்திதாசரின் எழுத்தின் நோக்கம் இரண்டு. "1)சாதி பேதம் நீண்ட காலத்தவை அல்ல. 2) ஒன்றைக் காலத்தால் பழமையாக்கிக் காட்டுவதால் ஏற்படும் நிரந்தரத் தன்மையின் பிரச்சினை"
"அவரின் வரலாற்று துல்லியத்தை விட இவ்வாறு காலத்தால் பழமையாக்குவதால் சாதியமைப்புக்குக் கிடைக்கும் சமூக ஏற்பைப் பற்றிப் பேசியிருப்பது கவனிக்க வேண்டியதாகிறது"
"பிராமணர்களுக்கு அளிக்கப்படும் தொன்மை என்பது அவர்கள் பௌத்தத்திடமிருந்து இடையிலே 'போலச் செய்து' பலவற்றை தங்களவையாக உருமாற்றி ஏற்றம் பெற்றுக் கொண்டதை மறைக்கிறது என்று கருதினார். இவ்வாறு அவர்களுக்கு தரப்படும் தொன்மை என்பது சாதியமைப்புக்குத் தரப்படும் தொன்மையாக ஆகிவிடுகிறது என்றும் யோசித்தார்".

இவ்விடத்தில் யொஹானஸ் பிராங்க்ஹர்ஸ்ஸ்ட் (Johannes Bronkhorst) எழுதிய "பிராமணியத்தின் நிழலில் பௌத்தம்" (Buddhism in the shadow of Brahminism) நூலில் சொல்வது கவனிக்க வேண்டியது, "The rule of the Mauryas, it appears, was remembered in various ways, by Brahmins and Buddhists alike....This shared memory, it appears, could be moulded by Brahmins in a manner that suited their purposes. Such colonization of the past became all the easier in later days when the influence of Brahmins at the court had become a fact.....Buddhists of the sub continent came to reformulate their own past in Brahminical terms".


மௌர்ய ராஜ்யம், பௌத்தம் பற்றிய நினைவுகள் பிற்காலத்தில் அரச சபையில் கோலோச்சிய பிராமணர்களால் எந்தளவு கட்டமைக்கப்பட்டதென்றால் காலப் போக்கில் பௌத்தர்களே பிராமணவயமான சொல்லாடல்களையும் கதையாடல்களையும் ஸ்வீகரித்தார்கள் என்கிறார் பிராங்க்ஹர்ஸ்ட். அவர் முக்கியமாக சுட்டிக் காட்டுவது சாணக்கியனால் சந்திரகுப்தன் சாம்ராஜ்யம் உருவானதென்கிற தொன்மம் கட்டமைக்கப்பட்ட விதம். பௌத்தம் செழித்த காந்தாரத்தில் பிராமணியம் அரச கொள்கையாக இல்லாததை சுட்டிக் காட்டும் பிராங்க்ஹர்ஸ்ட் சாதியம் எப்படி பிராமணர் அதிகாரம் செலுத்தாத காலங்களிலும் இடங்களிலும் நிலைப் பெறவில்லை என்கிறார். இப்போது மீண்டும் ஸ்டாலின் அயோத்திதாசர் பற்றிச் சொல்வதை படித்துப் பாருங்கள்.

இந்நூலின் பலம் என்பது ஸ்டாலின் கையாளும் ஜாக்கிரதையுணர்வு. நிறைய யூகங்களின் அடிப்படையில் நெய்யப்படும் வரலாற்றில் அடிப்படையல்லாத யூகங்களை தவிர்ப்பதோடு தன் யூகங்களுக்கான குறைந்தப் பட்ச முகாந்திரங்களை ஸ்டாலின் அளிக்கிறார். அதை விட முக்கியம் தன் யூகத்தையோ கருத்தையோ, தரவுகளைக் கூட, வாசகன் எப்படி புரிந்துக் கொள்ளக் கூடாதென்று தெளிவாகச் சொல்கிறார். உதாரணத்துக்கு இரட்டமலை சீனிவாசன் தரப்புக்கும் அயோத்தி தாசர தரப்புக்குமான பெயர் குறிப்பிடாத வாக்குவாதங்களை தெளிவாக ஒவ்வொரு தரப்பின் மனச் சாய்வுகளை அடையாளப் படுத்தி வாசகன் தன்னையறியாமல் ஏதேனும் ஒரு பக்கம் சாய்வதை தடுக்கிறார். 

"வரலாறு என்றால் என்ன, தரவுகள் என்பவை எவை, வரலாற்றை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறோம், எவ்வாறு எழுதுகிறோம் என்பதான கேள்விகளினூடாகவும் விவாதித்தப் படியே நகர்ந்துள்ளது. வரலாறு தரவுகள் சார்ந்தது மட்டுமல்ல, தரவுகளை எவ்வாறு பொருள்கொள்கிறோம் என்பதையும் சார்ந்தது தான்"


எண்பதுகளின் தமிழ் சினிமா - ஓரு குறிப்பு

-----------------------------------------
தமிழர்களுக்கு சினிமா உயிர்மூச்சு. அரை நூற்றாண்டுக்கு மேலாக திரைத்துறையோடு சம்பந்தப்பட்டவர்களே ஆளும் மாநிலம். தற்போதய முதல்வர் உட்பட. சினிமா எங்கோ வானில் இருந்தா விழுகிறது? சினிமா நம் சமுகத்தை பிரதிபலிக்கிறது. அதே சமயம் நம் சமூகத்தை கட்டமைக்கவும் செய்கிறது. இவ்விரண்டிலும் துலக்கமாக பண்பாட்டு வரலாறு, சாதியம், பெண்கள் குறித்த கட்டமைப்புகள் நிகழ்ந்த சினிமாக்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.“எண்பதுகளின் தமிழ் சினிமா” என்று தலைப்பிட்டாலும் 90-களையும் சேர்த்தே கணக்கில் எடுக்கிறார் ஸ்டாலின். அந்த 90-களின் அடிப்படை எண்பதுகளின் சினிமா என்பதால் அத்தலைப்பு.



ரஜினி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவோடு, தமிழ் நாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முதல்வர், கொண்டிருந்த எதிர்ப்பையும் ரஜினியின் வெற்றிப் படங்களான ‘மன்னன்’, ‘படையப்பாவையும்’ ஸ்டாலின் தொடர்பு படுத்தி பார்க்கிறார். ரஜினியின் திரைக்கு வெளியான பெண் முதல்வரை எதிர்க்கும் நிலைக்கும் திரையில் தன் சுயமாக நிற்கும் பெண்களை எதிர்க்கும் பிம்பத்துக்கும் தொடர்புண்டு. 


தமிழ் பண்பாட்டு தளத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களான நீலியையும், கண்ணகியையும் ‘மன்னன்’, ‘படையப்பா’, ‘பாட்ஷா’ படங்களின் கதையம்சங்களோடு ஸ்டாலின் விவாதிக்கிறார். காப்பிய கண்ணகி எப்படி ‘பத்தினி’யாக முன்னிறுத்தப்பட்டாள் என்பதை சுட்டி படையப்பாவில் நீலாம்பரி நிராகரிக்கப்பட்டு வேலைக்காரப் பெண்மணி முன்னிறுத்தப்படும் ஒற்றுமையை ஸ்டாலின் சுட்டிக் காட்டுகிறார்.இத்தொகுப்பில் அற்புதமான ஒரு கட்டுரைல் “பொதுமகளும் குலமகளும்: 1990 சினிமாக்களில் நடந்த ஊடாட்டம்”. தமிழ் சினிமாவில் வெகு காலம் நிலவி வந்த தேவதாசி சித்தரிப்பை விவரிக்கிறார். “மூவலூர் ராமாமிர்தத்தின் நாவலின் தலைப்பே கூட தேவதாசி மரபை எதிர்மறையாக குறிப்பிடும் வகையில் ‘தாசிகளின் மோசவலை அல்லது மதிப்பெற்ற மைனர்’ என்றே அழைத்தது. இவ்விடத்தில் முற்போக்கு இயக்கம் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் திமுகவினரின் சினிமாவிலும் இத்தகைய சித்தரிப்பே தொடர்ந்தது. பின்னாளில் ஜெயலலிதாவை வசந்தசேனை என்று மேடைகளில் விளிக்கப்பட்டதும் நடந்தது. 1990-களின் ஆரம்பத்தில் வெளி வந்த கிழக்கு வாசல், தெய்வ வாக்கு, சின்னத்தாயி ஆகியப் படங்களில் பொது மகளிரின் சித்தரிப்பு குடுமபத்தை சிதைப்பவர்கள் என்கிற நிலையில் இருந்து மாறுகிறது.

இன்னொரு கட்டுரையில் “பல்வேறு அம்மன்களும் வழிபாடுகளும் சாதிமாறிக் காதலித்ததால் கொல்லப்பட்டுத் தெய்வமாக்கப்பட்ட பெண்களின் கதைகளாக இருக்கின்றன” என்பதை சுட்டிக் காட்டி திரைப்படங்களில் மரபு கதைகள் எப்படி மாற்றமடைகின்றன என்றும் விளக்குகிறார். ‘துளசி’, தெய்வவாக்கு’, ‘சின்னத்தாய்’ படங்களில் பிரதான கதாபாத்திரங்களை “முன்பிருந்த தெய்வ நிலையோடு விட்டுவிடாமல் அதிலிருந்து மனித நிலைக்கு மாற்றிவிட்டிருக்கிறார்கள். மூன்று இடத்திலும் காதல் தான் மீட்பை நிகழ்த்துகிறது. அது யாரோடு கொண்ட காதல் என்பது முக்கியமானது. அவ்விடத்தில் தெய்வ நிலையிலிருந்து மனித நிலைக்கு கொணருபவர்களாக தலித் கதா பாத்திரங்கள் இருக்கின்றன”.

பாரதிராஜாவின் மண் வாசனை படம் பற்றி ஸ்டாலின் எழுதுகிறார், “நிஜத்தில் அறுத்துக்கட்டும் கலாச்சாரமுடைய ஒரு இனக்குழுவை சித்தரித்த படம். முத்துப் பேச்சி இன்னொருவரை மணம் செய்யாமல் இருப்பதை தமிழ்பண்பாடு என்று உயர்ந்தோர் பண்பாடாக்குகிறார் (பாரதிராஜா). பாலியல் தூய்மையைப் புனிதமாக்குகிறார்.

தேவர் மகன் படத்தின் மிகப் பிரபலமான வசனம், “போங்கடா, போய் புள்ளக் குட்டிங்களை படிக்கை வைங்கடா”. “படித்த அவனை பாரம்பர்யம் என்னவாக்கியது என்பதை அவன் ஏனோ அனுபவமாக்கிக் கொள்ளவில்லை” என்று ஆசிரியர் சுட்டிக் கேட்கிறார்.

தமிழ் சினிமா பற்றி பேசும் போது திரையிசைப் பாடல்கள் பற்றி பேசாமலிருக்க முடியாது. அவ்வகையில் தமிழ் சினிமாவில் வட்டாரப் பாடல்கள் சினிமாவில் ராஜாவும் தேவாவும் எடுத்தாண்டதை ஸ்டாலின் தனிக் கட்டுரையில் சொல்கிறார்.

சினிமா என்பது தமிழருக்கான மிக முக்கியமான பண்பாட்டு அடையாளம். அவ்வடையாளத்தில் மக்களிடையேப் புழங்கும் தொன்மன்ங்கள், சாதியம், பெண்கள் பற்றியப் பார்வைகள், பட்லர்கள் பற்றிய பரிகாசங்கள் எல்லாம் அங்கம் வகிக்கின்றன. ஸ்டாலின் பெண்களின் ஒடுக்குதல் பற்றி அதிகமாக எழுதியது இக்கட்டுரைகளில் தான் என்று நினைக்கிறேன்.சினிமாக்களில் எத்தனையோ சித்தரிப்புகள் மதம், சார்ந்து தான் இருக்கின்றன. ‘நாயகன்’ படத்தில் வரும் படித்த, பயந்த சுபாவம் உள்ள ஐயர் கதாபாத்திரம் முதல் விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் வரும் கிறிஸ்தவர்கள் பற்றிய ஸ்டீரியோடைப், அப்புறம் இஸ்லாமியர் குறித்து வரும் சித்தரிப்புகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.சினிமா பற்றி தொடர்ச்சியாக எழுதும் சிலர் இப்புத்தகம் குறித்து விரிவான விமர்சனம் எழுதினால் இன்னும் நன்று. ஒரு கமல் ரசிகனாக சின்ன வருத்தம் அட்டைப் படத்தில் கமல் இல்லாதது

எழுதாக் கிளவி: ஒரு குறிப்பு.

-----------------------------
“பெயரழிந்த வரலாறு” பண்டைய வரலாறு பற்றி 19,20-ஆம் நூற்றாண்டுகளில் நடந்த விவாதங்களை மையமாக வைத்து வரலாறு என்றால் என்ன? வரலாறு எவ்வாறு உருவாக்கப்படுகிறாது, தரவுகள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன போன்ற கேள்விகளைக் கேட்டது. “எண்பதுகளின் தமிழ் சினிமா” அதையே பண்பாட்டு தளத்தில் செய்தது. ‘எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்’ அதே வழியில் சம கால அரசியலை, குறிப்பாக திராவிட இயக்கதையும் தலித் அரசியல் இயக்கத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது.



ஸ்டாலினின் முன்னுரை புத்தகத்தின் நோக்கத்தைச் சொல்கிறது, “தலித் வரலாற்றை எதிர்மறையாக அமையும் விமர்சன வரலாறாகவே சுருக்கிவிடக் கூடிய அபாயத்திலிருந்து விலகி தனக்கான சுயமான தரவுகளிலிருந்து தலித் வரலாற்றியல் தன்னை இங்கு கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தலித் வரலாற்றாஇ விரிந்த தளத்தில் விவாதிப்பதே கூட இன்றைய திராவிட இயக்க விடுபடல்களுக்கான பதிலாக இருக்க முடியும்”.
“பரந்த சமூக அனுபவங்களிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ‘உண்மை’களின் பதிவே வரலாறு என்று ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரலாற்றிற்கு வெளியே நிறுத்தப்பட்ட அனுபவங்களைத் திரும்ப அழைத்து வரௌவதன் மூலம் நிலவி வரும் வரலாற்றை எதிர்க் கொள்ள விரும்புகின்றன இக்கட்டுரைகள்” என்று வாசக முன்னுரையில் சொல்கிறார் ஸ்டாலின்.

“வரலாற்றிற்கு வெளியே நிறுத்தப்பட்ட அனுபவங்களை” என்றவுடன் பல சராசரி வாசகர்கள் தவறாக ஸ்டாலின் ஏதோ அடிப்படைகளே அற்ற கற்பனைக் கட்டுக் கதைகளை வரலாறு என்று ஜோடித்து விடுகிறார் என்று நினைக்கிறார்கள். இது மிகத் தவறு. 

ரெட்டியூர் பாண்டியனின் கதை ஸ்டாலினின் வரலாற்று முறைமைக்கு நல்ல எடுத்துக் காட்டு. காட்டு மன்னார்குடிப் பேருந்து நிலையத்தின் வாயிலில் ஒரு மார்பளவு சிலை ‘ரெட்டியூர் பாண்டியன்’ என்கிற பெயர் பொறிக்கப்பட்டு நிற்கிறது. அச்சிலை பிரபலமான யாருடையச் சிலையும் அல்ல. ஸ்டாலின் அச்சிலையின் கதையை விவரிக்கிறார். (இக்கட்டுரை தினமலரில் வெளி வந்திருக்கிறது https://m.dinamalar.com/weeklydetail.php?id=15028)

என் போன்ற பலருக்கும் தெரியாத, இன்னும் அநேக பேருக்கும், ஒரு செய்தி தமிழ் நாட்டில் சிறிதும் பெரிதுமாக பல இடங்களில் தலித்துகள் ‘இழி தொழில் செய்ய மறுப்பு’ போராட்டங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். இது வரை நான் படித்த எந்த வரலாற்று நூலும் அது பற்றி பேசியதில்லை. எண்பதுகளில் கூட தலித் தலைவர் எல். இளைய பெருமாள் அத்தகையப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். “செத்த மாட்டெடுக்க மறுப்பு, பிணக்குழி தோண்ட மறுப்பு” போன்ற போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன.1962-ஆம் ஆண்டு முதல் காட்டுமன்னார்குடி வட்டாரத்தில் யாரும் பறையடிக்கப் போகக் கூடாது, உள்ளூரில் பறை அடிக்கப்படவும் கூடாதென்று என்று தீர்மானம் இயற்றப்பட்டது. 1985 ஆகஸ்டு மாதம் தீ மிதி விழாவுக்கு பறையடிக்க யாரும் வராததால் வெளியூரில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட ஊர் கலவர பூமியானது. கலவர்த்தை அடக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்த பாண்டியன் என்பவர் கொல்லப்பட்டார். போலீஸுக்கோ, எதிர் தரப்புக்கோ எந்த பாதகமுமில்லை. அப்படி இறந்த பாண்டியனின் நினைவாக பாடல் இயற்றப்பட்டு இன்றளவும் ஒப்பாரியாகவும், வயற்காட்டில் நடவுப் பாட்டாகவும் பாடப்படுகிறது. அக்கட்டுரையில் இளையபெருமாளின் போராட்டங்கள் குறித்து சொன்னாலும் ஸ்டாலின் தெளிவாக அப்போராட்டங்களால் பாண்டியன் உந்த பட்டாரா என்பதற்கு ஆதாரம் இல்லை என்கிறார். மேலும் அந்த சிலை பாண்டியனின் உருவமாக கூட இருக்காது, அது ஒரு நினைவுச் சின்னம் தான் என்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலினை வரலாற்றாய்வாளராக நான் வியப்பது இங்கு தான். ஒரு சிலை இருக்கிறது, அதற்கென்று மக்களிடையே ஒரு கதை இருக்கிறது ஆனால் அது வெறும் கதையாக இருந்தால் அதற்கு மதிப்பிராது. அதையொட்டி நாம் வரலாறு என்று புரிந்துக் கொள்ளும் தரவுகளுடைய நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தி வரலாற்றின் இடை வெளியை நிரப்புகிறார். அவர் குறிப்பிடும் பாடல் இன்றும் புழக்கத்தில் இருப்பது ஒரு வகை தரவு தான். இக்கட்டுரை வாயிலாக ஒரு வாசகன் அறிந்துக் கொள்ளக் கூடியச் செய்திகள் அநேகம். சரி, பாண்டியன் வரலாற்றையே ஒதுக்கி விட்டு பார்ப்போமே. இளையபெருமாள் நடத்திய போராட்டங்கள் பொய் அல்லவே!! அப்போராட்டங்கள் பற்றி பொதுவில் பலரும் அறியாததே நமக்கு செய்திகளும் வரலாறும் எப்படி கட்டமைக்கப்படுகிறதென்று சொல்கிறதே. அதுவும் 1980-களில் இப்படிப்பட்ட போராட்டங்களின் தேவைகள் சமூகத்தைப் பற்றி ஒரு சித்திரத்தையும், இங்கு தமிழகத்தில் சமூக நீதியின் நிலைப் பற்றிய புரிதலையும் அளிக்கிறதே. 

அரிஜன சேவா சங்க செயல்பாட்டாளர் ஆனந்ததீர்த்தரின் கதையை ஸ்டாலின் ஒரு துப்பறிவாளனின் ஊக்கத்தோடு தேடித் தேடி தொகுத்து, “தலித்துகள் மத்தியில் காந்தி தொண்டர்கள் செயற்பட்டிருக்கலாம் என்று யோசித்துப் பார்க்கக் கூட யாருமில்லை. அப்படியே இருந்தார்கள் என்று அறியப்பட்டாலும் அவற்றை உள் நோக்கமாக ‘கட்டுடைத்து’விட்டு, அது பற்றி தலித்துகளின் நினைவுகள் எவை என்று ஆராயமலேயே விட்டிருக்கும் அரசியல் வரலாறுகளே இங்குண்டு”. இதை பேஸ்புக் விவாதத்திலேயே கண்டிருக்கிறேன். ஸ்டாலின் சொல்வது நிஜம். 

“இந்தி எதிர்ப்புப் போராட்டம்: தலித் தலைமையும் தமிழ் அடையாளமும்” கட்டுரையும், “டி.எம். நாயர் கலந்துகொண்ட ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டம்” கட்டுரையும் முக்கியமானவை. ஸ்டாலின் எவ்வித சார்பும் இன்று எழுதுபவர் என்பதற்கு சான்று மீனாம்பாள் குறித்து திராவிட இயக்க சார்புடைய நம்பி ஆரூரனின் மேற்கோள்களையும் நேர்மையாகவே கொடுத்திருப்பது. ஓரிடத்தில் இந்தி எந்திர்ப்பு போராட்டத்தின் போது ராஜாஜி வீட்டின் முன் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை பெரியார் நிறுத்தியதையும் ஸ்டாலின் பதிவுச் செய்கிறார். 

ஏன் ஸ்டாலினின் எழுத்து இன்று முக்கியமானது? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் என்று பலரும் சொல்வது, ‘தாளமுத்து-நடராசன்’ என்கிற இருவரை. இருவரில் தலித் இளைஞரான நடராசனே முதல் உயிர் நீத்தவர். அப்புறம் ஏன் வரிசை மாறியது? தலித் சமூகத்துக்கும் பொதுப் பிரச்சனையான இந்தி எதிர்ப்புக்கும் எப்படி இணைப்பு ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? நீதிக் கட்சிக்கு ஆரம்ப காலத்தில் தலித் சமூகமும் எம்.சி.ராஜாவும் எப்படி ஆதரவளித்தார்கள்? நீதிக் கட்சி, காங்கிரசுடனான தலித் சமூகத்தின் உறவுகள் எப்படி இருந்தன? ஏன் டி.எம். நாயரை எம்.சி.ராஜாவும் அயோத்தி தாசரும் உயர்த்திப் பேசினார்கள்? என்று பல கேள்விகளுக்கான விடைகள் ஸ்டாலினின் புத்தகம் மூலம் “சான்றுகளோடு” கிடைக்கின்றன.நீதிக் கட்சி, காங்கிரசுடனான தலித் அரசியலின் உறவைப் பற்றி சொல்லும் போது ஸ்டாலின் அநேகமாக நிகழ் காலத்தையும் மனத்தில் வைத்து எழுதுகிறார், “தலித்துகளின் அரசியல் உறவு நிலையற்றதாக மாறிக் கொண்டிருப்பதற்குத் தலித்துகள் மட்டுமே காரணமல்ல”.


மூன்று தகவல்கள் இங்கு குறிப்பிடக் கூடியன.

“சிதம்பரம் தாலுகா போர்டுக்கு ஆதி திராவிடரை ஏன் நியமிக்கவில்லை என்று எம்.சி.ராஜா கேட்ட போது, ‘தாலுகா போர்டு அலுவலகம் சாதி இந்து ஒருவரின் கட்டடத்தில் இயங்கி வருவதால், அக்கட்டத்தில் ஆதி திராவிடர் நுழௌவதை விரும்பாததா; பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை’ என்றார் அமைச்சர்”

“இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை “கொச்சைப்படுத்த” நினைத்த அரசு அப்போராட்டத்தில் கலந்துக் கொண்ட அநேக தலித்துகளைச் சுட்டிக் காட்டி, “அற்பக் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களென்றும் சிறையில் ஒழுங்காகச் சோறு கிடைக்குமென்பதாலும் பல அரிஜனங்கள் கைதாகியிருந்ததாக ராஜாஜி மட்டுமல்லாமல் பிராமணரல்லாத தமிழரான டாக்டர் சுப்பராயனும் சட்ட மன்றத்திலேயே கூறினார்.”

“1920 முதல் 1927 வரை நீதிக் கட்சி ஏழு முறை அமைச்சரவைகளை அமைத்தும் ஒரு முறை கூட அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளைத் தலித்துகளுக்கு வழங்கியதில்லை. 1929-ஆம் ஆண்டில் தான் ஓர் இக்கட்டான சூழலில் எம்.சி.ராஜாவை சட்டமன்ற துணைத் தலைவராக்கியது.”

Eugene Irschick-இன் “Politics and Social Conflict in South India: The Non-Brahman Movement and Tamil Separatism 1916-1929” மிக அற்புதமான புத்தகம். தலித் சமூகத்துக்கும் நீதிக் கட்சிக்குமிடையே நடந்த உரசல்களை 1969-இலேயே இர்ஷ்சிக் எழுதியிருக்கிறார். ஆனால் அப்புத்தகத்தில் எம்.சி.ராஜாவுக்கு கிடைத்த இடம் ஒன்றரை பக்கம். 1969-இல் ஓர் அமெரிக்க ஆய்வாளர் இவ்வளவு தெளிவாக எழுதியிருப்பதே ஆச்சர்யம். இர்ஷ்சிக்கைத் தாண்டி செல்ல நமக்கு முரசொலி மாறன், நெடுஞ்செழியன் எழுதிய வரலாறுகள் போதாது அந்த இடத்தில் நம் தேவையை இன்று பூர்த்திச் செய்வது ஸ்டாலினின் புத்தகம்.


ஜெயமோகனும் தலித் ஆளுமைகளும்:

ஸ்டாலின் ராஜாங்கத்தின் “பெயரழிந்த வரலாறு: அயோத்திதாசரும் அவர் கால ஆளுமைகளும்” படித்துக் கொண்டிருக்கிறேன். ராஜ் கௌதமன் பற்றிய ஒரு கட்டுரையை படித்தப் போது தோன்றியது, தலித் தரப்பில் தான் எவ்வளவு அறிவுத் தள கருத்தியல் முன்னெடுப்புகள் நிகழ்கின்றன என. ஸ்டாலின் அக்கட்டுரை ராஜ் கௌதமனின் “தலித்திய அரசியல்” நூல் பற்றியது. அந்நூலே பேராசிரியர் பெ. தங்கராசுவின் “சாதி ஒழிப்பின் வரலாற்று படிப்பினை” என்கிற நூலுக்கு எதிர் வினை.
எனக்கு தங்கராசு யாரென்று தெரியாது. ராஜ் கௌதமனை ஜெயமோகன் வாயிலாக தெரியும். தலித் வட்டாரத்துக்கு வெளியே பலருக்கு எம்.சி. ராஜா, ரெட்டமலை சீனிவாசன், அயோத்தி தாசர் ஆகியோரை ஜெயமோகன் வாயிலாக அறிந்தவர்கள் அதிகம் என்றால் மிகையில்லை. ஸ்டாலினையும் அப்படித் தான் அறிந்தேன் என்று நினைக்கிறேன். ஸ்டாலின் பற்றியும் ஜெயமோகன் தொடர்ந்து சுட்டிக் காட்டியிருக்கிறார். அம்பேத்கரை பற்றியும் அநேகம் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். தர்மராஜின் நூல் அறிமுக விழாவில் முக்கிய உரை ஜெயமோகனுடையது.



ஜெயமோகன் அளவுக்கு தலித் ஆளுமைகள் பற்றி மற்றவர்கள் யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஸ்டாலினின் “பெயரழிந்த வரலாறு” தமிழில் வெளிவந்த வரலாற்றெழுத்தில் மிக முக்கியமானதும், அபாரமான நுட்பத்தோடும் எழுதப் பட்டது. நாளை சிறு குறிப்பாவது எழுதுகிறேன். அந்நூலை வைத்து ஒரு அரை நாள் விவாத மேடையே நடத்தலாம்.
அதேப் போல் தலித் வரலாறுகளை பதிப்பித்ததில் காலச்சுவடின் பங்களிப்பும் மெச்சக் கூடியது.

Wednesday, July 7, 2021

ஐ.ஐ.டி. மெட்ராசும் சாதியமும்: சாதியே தகுதியா?

 ஜூலை 1-ஆம் தேதி சென்னை ..டி.யில் மனிதவளம்-சமூகவியல் துறை துணைப் பேராசிரியர் விபின் வீட்டில் அனுப்பிய மின்னஞ்சலில் அக்கல்வி நிலையத்தில் சாதிய வேற்றுமைகள் இருக்கின்றன என்று குற்றம் சாட்டி ராஜினாமா செய்வதாகச் சொல்லியிருந்தார். ..டி.க்களில் பொதுவாகவே சாதியப் பாகுபாடுகள் நிலவுகின்றன, உயர் சாதியினர் ஆதிக்க மனோபாவத்தோடு செயல்படுகிறார்கள், சமூக நீதிக்கு எதிராக அரசு சட்டங்களையே உதாசீனம் செய்யும் நிலை இருப்பதாகவும் சமீப காலங்களில் விமர்சனங்கள் ஒலிக்கின்றன. அதே சமயம் இந்தக் கல்வி நிலையங்கள் தேசத்தின் பொக்கிஷங்கள், இந்தியா வல்லரசாக இவை தான் நம்பிக்கை நட்சத்திரங்கள், சமூக நீதியின் பேரால் தகுதியைக் காவு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் சிலர், குறிப்பாக உயர் சாதியினர், வாதிடுகின்றனர். இச்சர்ச்சையை முன் வைத்துக் கொஞ்சம் வரலாற்றையும் நிகழ் கால எதார்த்தங்களையும் பார்ப்போம்.




சாதியே தகுதியாய்


..டி.க்களில் சாதியம் குறித்த உரையாடலில் இன்று முக்கியப் பங்கு வகிப்பது அஜந்தா சுப்பிரமணியனின் “The Caste of Merit: Engineering Education in India”. ..டி.களின் சாதிய நோக்கும் பிராமண ஆதிக்கமும் அதன் கருவிலேயே சூல் கொண்டதென்று சுட்டிக் காட்டுகிறார் அஜந்தா


ஜனநாயகத்தின் தேவையை என்றும் மறுக்காத சிறந்த ஜனநாயகவாதியான ஜவஹர்லால் நேரு அவ்வப்போது ஜனநாயகத்தின் விலை தகுதி நீர்த்துப் போவதாக இருக்கலாம் என்ற அக்கறையையும் பதிவு செய்திருக்கிறார். ..டி பட்டமளிப்பு விழாவில் இனி பொறியாளர்களே தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பார்கள் என்றார். நேரு அத்தகைய உரையை வேறு சாதாரணப் பொறியியல் கல்லூரியில் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



இந்திய அறிவியல் ஸ்தாபனங்கள் பற்றிய குறிப்பில் அரசு அறிக்கை ஒன்று பட்டவர்த்தனமாக இத்தகைய முன்னெடுப்புகள்தகுதி வாய்ந்த சிலர்மட்டுமே ஈடுபடக் கூடியதென்றது. அதன் பொருட்டு அரசின் முதலீடு தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆராய்ச்சி நிறுவனங்களில் மட்டும் தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் அது நீர்த்துப் போகும் என்றது. பொருளாதார நெருக்கடியால் சில இடங்களில் மட்டுமே முதலீடு என்று சொல்லாமல் தகுதி நீர்த்துப் போகுமோ என்பதே காரணமாகச் சொல்லப்பட்டது


சர்கார் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிராகக் கருத்துச் சொன்னவர்கள் நஸீர் அகமதும் மேக்னாட் சாஹா. ஒருவர் இஸ்லாமியர், இன்னொருவர் ஒடுக்கப்பட்ட இனத்தவர். இருவரும் இப்படிப்பட்ட தனிக் கல்வி நிலயங்கள் வேண்டுமா, இருக்கும் கல்வி நிலயங்களை மேம்படுத்தலாமே, இப்படிப் புதிதாக உருவாகும் கல்வி நிலயங்கள் கவனத்தை ஈர்த்து ஏற்கனவே இருக்கும் கல்வி நிலையங்கள் பின் தங்கிவிட வாய்ப்புண்டு, என்றெல்லாம் எதிர்த்தார்கள். அவர்கள் அச்சங்கள் ஒவ்வொன்றையும் வரலாறு சரியென்று நிரூபித்தது


..டியில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் தங்களைத் தனித்துவமிக்க, ஜெயமோகனின் வார்த்தையில் சொல்வதானால், விதி சமைப்பவர்களாக எண்ணிக் கொள்வது ஒரு தொடர் செயல்பாடு. ..டி பற்றிப் புத்தகம் எழுதிய சந்திபன் தேப் புத்தகத்தின் உப தலைப்பு, “உலகை மாற்றியமைக்கும் பட்டதாரிகளும் அவர்கள் உருவான இந்தியாவின் சிறந்த நிறுவனத்தின் கதை”. இப்புத்தகம் பற்றிச் சக ..டி பட்டதாரியான ஜெயராம் ரமேஷிடம் சந்திபன் சொன்ன போது ஜெயராம், “ஏன்நள்ளிரவின் பிராமணர்கள்என்று தலைப்பிட்டிருக்கலாமே? ஆகஸ்டு 15 1947 நள்ளிரவில் விதியோடு நிகழ்ந்த சந்திப்பின் விளைவாக மலர்ந்த கல்வி நிலையம் தானே ..டி? அதை உருவாக்கிய நோக்கம் புதிய வகைப் பிராமணர்களை உருவாக்குவது தானே? இவர்கள் சாத்திரம் படிக்கும் பிராமணர்களல்ல மாறாகப் பொறியாளர்கள்என்றாராம். சந்திபனின் புத்தகத்தில் அநேக இடங்களில்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்என்ற சொல்லாடல் இருக்கிறது என்கிறார் அஜந்தா. சிறந்தவர்கள், விதி சமைப்பவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் சொல்லி அவர்கள் நவீன வகைப் பிராமணர்கள் என்பது ஒரு உள்ளார்ந்த சாதியப் பார்வை


Ajantha Subramanian



மைய நீரோட்டத்தில் இருந்து தனிமை படுத்தப்பட்ட இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் உலகாயதமான பார்வை அதனாலேயே மேட்டிமைத் தனமாகவே இருந்தது என்கிறார் அறுபதுகளில் சென்னை ..டி.யில் படித்து வெளியேறிவர். “என் வகுப்புத் தோழர்கள் எங்கோ அமெரிக்காவில் இறந்த நடிகை மர்லின் மன்றோவுக்காக அதிகம் வருந்தினர் ஆனால் அருகிலேயே வேளச்சேரியில் இருக்கும் வறுமை அவர்கள் அக்கறையில் இல்லைஎன்றார். இத்தகைய போக்குகள் சமீப காலத்தில் சற்றேனும் மாறியிருக்கிறது. சமூகப் பணியில் இப்பட்டதாரிகள் பணியாற்றுகிறார்கள். அது பற்றி மேலும் பின்னர்


சென்னை ..டியின் புகழ் பெற்ற இயக்குனர் பி.வி.இந்திரேசன் 1973-இல் ..டி.களில் அறிமுகப் படுத்தப்பட்ட பட்டியல் இனத்துகான இட ஒதுக்கீட்டை சாடி, “ஒரு பிரிவு மக்களால் ஈடு கொடுக்க முடியாத கல்வியின் தரம் அதன் பொருட்டே யாருக்கும் கிடைக்காமல் செய்யும் அதிகாரம் அவர்களின் கையில் இருக்க வேண்டுமா என்று விவாதிக்க வேண்டும்….சமூக அளவில் பின் தங்கியவர்களுக்கென்று பிரத்யேக உரிமைகள் இருக்கலாம் ஆனால் தகுதியானவர்களுக்கு எந்த உரிமையும் கூடாதென்பது தான் சமூக நீதியாஎன்று தன் இயக்குனர் அறிக்கையில் எழுத்து மூலமாகவே சொன்னார். அஜந்தா சொல்கிறார், “கவனிக்கவும் இந்திரேசன் எப்படிசமூக அளவில் பின் தங்கியவர்கள்என்றும்தகுதியானவர்கள்இரண்டு வகையாகப் பிரிப்பதன் மூலம் இட ஒதுக்கீடு இல்லாதவர்களின் தகுதியின் பின் இருக்கும் சமூகக் காரணிகளைக் கவனத்தில் கொள்ளவில்லை”. 


இப்படிப்பட்ட பார்வைக் கொண்ட ஒருவர் 1979-84 வரை சென்னை ..டி.யை வழி நடத்தினார் என்றால் அந்தக் காலத்தில் சமூக நீதி அந்நிலையத்தில் எப்படி இருந்திருக்கும் என்று வாசகர்கள் யூகிக்கலாம். 2004-இல் ஃப்ரண்ட்லைனுக்கு அளித்த ஒரு பேட்டியில் அப்போது உருவாகியிருந்த ஐ.ஐ.டி-கள் தாண்டிய பொறியியல் கல்லூரிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்குமான ஒரு முயற்சி வெடிமருந்து தயாரிக்கும் நகரமான சிவகாசியில் நிறுவியிருந்த "Industrial Security CORE" தனக்கு ஐ.ஐ.டி இயக்குனராக இருந்த போது தோன்றியிருக்காது என்றார். 


என்பதுகளில் படித்துப் பட்டம் பெற்ற வெங்கட் என்கிற பிராமணர் இட ஒதுக்கீட்டினால் ..டியில் நுழையும் மாணவர்கள் அக்கல்வி நிலையத்தின் மரபணு தொகுதியை நீர்த்துப் போகச் செய்கிறார்கள் (‘diluting the gene pool’)” என்று அஜந்தாவிடம் சொன்னார். இது போன்ற தனி மனிதரின் மனப் பதிவுகளைச் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே அஜந்தா கருதுகிறார் ஏனென்றால் இத்தகைய சொல்லாடல்களை அவர் மீண்டும் மீண்டும் கேட்கப் பெறுகிறார்


2006-இல் மண்டல் பரிந்துரையினால் பட்டியல் இனத்தவர் தவிரப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு ..டி.யில் அனுமதிக்கப்பட்ட போது சாதியம் சம்பந்தப் பட்ட உரசல்கள் தீவிரமடைந்தன. அதன் முக்கியப் பகுதியாய் மாணவர்கள் தங்கள் வகுப்புகளில் யார் இட ஒதுக்கீட்டின் வழி அட்மிஷன் பெற்றார்கள் என்பதைக் கண்டறிய பல உபாயங்களை மேற்கொள்வதையும் அப்படிக் கண்டறியப்பட்டவர்களை நோக்கி சாதிய வேற்றுமைகளை ஏவுவதும் நடந்தது. ..டி.யில் நுழைந்த பல மாணவர்கள் படிப்பின் சுமைத் தாங்காது தடுமாறுவதுண்டு ஆனால் இட ஒதுக்கீட்டின் வழி வந்த மாணவர்கள் தடுமாறுவது மட்டும் தகுதியின்மையால் என்கிற சித்திரம் இருந்தது. பொதுத் தொகுதியில் நுழைந்த மாணவர்களிடையேயும் ஆங்கில வழி பள்ளிக் கல்வியில்லாததால் ஆங்கிலத்தில் தடுமாற்றங்கள் இருந்தாலும் ஆங்கில வழிக் கல்விப் பெறாத இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு மட்டுமே ஆங்கில வகுப்புகள் தேவை என்பதை ஒரு பட்டதாரி அஜந்தாவிடம் வலியுறுத்தினார்


அஜந்தாவின் புத்தகம் நமக்கு ..டி கட்டமைப்பும் அதனால் உருவாகும் மாணவர்களின் உலகாயதமான பார்வை பற்றியும் ஒரு சித்திரம் கிடைக்கிறது. இந்தப் பிண்ணனியில் நாம் விபின் வீட்டிலின் புகார் பற்றிய மற்ற கோணங்களைப் பார்ப்போம்.


ஒரு சாதியப் புகாரின் கதை


பாலியல் வன்முறை புகார்களைப் போலவே சாதிய ஒடுக்குதலுக்கு எதிரான புகார்களும் எளிதில் நிரூபிக்க முடியாதவை என்பதோடு, புகார் அளிப்பவர்களே விசாரணைக்கு உட்படுத்தப்படும் நிலையும், புகார் அளிப்பவர் மீதே வெளிச்சத்தைத் திருப்புவதும் அதன் உச்சக் கட்டமாகப் புகார் அளித்தவர் மீதே வேறு வகைப் புகார்களை அடுக்கி செயலிழக்கச் செய்வதும் நடக்கும். இவை அத்தனையும் சாதிய வன்முறைக்கு எதிரான ஒரு புகாரில் நடந்திருக்கிறது


பிப்ரவரி 1, 2018-இல் ..டி கான்பூரில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராஜீவ் ஷேகர் ஒரு மின்னஞ்சலில் தலித் பேராசிரியரான சுப்பிரமணியம் சதேர்லாவை சாதிய இழிவு செய்யும் வகையில் அனுப்பியிருந்தார். அந்த மின்னஞ்சல் விவகாரத்தில் வேறு மூன்று பேராசிரியர்களும் உடந்தை


சதேர்லாவின் புகாரின் மீது விசாரணை நடக்கும் போதே ராஜீவ் ஷேகர் ..டி தன்பாடுக்கு இயக்குனராக நியமிக்கப்பட்டார். விசாரணையில் அந்தப் பேராசிரியர்கள், ராஜீவ் உட்பட, சாதிய வன்மம் காட்டியதாக நிரூபிக்கப்பட்டது. ராஜீவ் ஷேகரைத் தவிர அந்த மூன்று பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. சாதியக் காழ்ப்புப் புகார் இருக்கும் ஒருவர் எப்படி இன்னொரு கல்லூரிக்கு இயக்குனராக நியமிக்கப்பட்டார், மற்றவர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம் மட்டுமா தண்டனை என்பதெல்லாம் தொக்கி நிற்கும் கேள்விகள்


இவற்றுக்கு இடையே சதேர்லா மீது ஆராய்ச்சிக் கட்டுரையில் அறிவுத் திருட்டு (Plagiarism) குற்றச்சாட்டு ஒரு அநாமதேய புகாரின் விளைவாக முளைத்தது. இந்தப் புகார் சதேர்லா புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பின் வந்தது. முதலில் ஒரு கமிட்டி இந்த அநாமதேய புகாரை எடுத்து விசாரித்துச் சதேர்லாவின் முனைவர் பட்டத்தைத் திரும்பப் பெற பரிந்துரை செய்தது. பிறகு வேறொரு வெளியார் கமிட்டி ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையின் முகவுரையில் மட்டும் சில மாற்றங்களைச் செய்யப் பரிந்துரைத்து முனைவர் பட்டத்தைத் திரும்பப் பெற வேண்டியதில்லை என்றது


இப்போது இயக்குனராகி விட்ட ராஜீவு ஷுக்லா மீது நடவடிக்கை எடுக்க ..டி விதிகள் படி ஜனாதிபதி ஒப்புதல் தேவையாயிருந்தது. ஜனாதிபதி அப்துல் கலாம் மத்திய மனித வள அமைச்சர் இப்புகாரின் மீது நடவடிக்கையைப் பரிந்துரைக்கலாம் என்றார். அமைச்சரும் ..டி கான்பூர் ராஜீவ் ஷேகரை பேராசிரியர் ரேங்கில் இருந்து இறக்க அனுமதியளித்தது. இதனால் அவர் இயக்குனராக நீடிக்க இயலாமல் போனது


இந்த ஒரு வழக்கு சொல்லும் கதைகள் ஏராளம். ஒரு சாதியப் புகார் பதியப்படுகிறது, முதன்மை குற்றவாளி பதவி உயர்வே பெற்று இயக்குனராக்கிறார், அப்புறம் அந்தப் பதவியே அவருக்குக் காபந்தாகிறது, ஜனாதிபதை வரை அனுமதி பெற வேண்டியிருக்கிறது, இவற்றுக்கிடையே புகார் அளித்தவர் மீது வேறொரு புகார், அநாமதேயமாக முளைக்கிறது அந்த அநாமதேயப் புகார் விசாரணைக்கும் ஏற்கப்படுகிறது


சரி, சுப்பிரமணியம் சதேர்லா மீது அறிவுத் திருட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருந்தால்? (அது பற்றி இணையத்தில் சில சுட்டிகள் இருக்கின்றன). அதனாலென்ன? அதற்கும் அவர் அளித்த புகாருக்கும் என்ன சம்பந்தம். மேலும் அறிவுத் திருட்டு என்பது இந்திய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை செய்வது தான்.

இந்தியாவின் மிகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஸி.என்.ஆர். ராவ் மீதே இப்படி ஒரு புகார் எழுந்து பிறகு அது கவனக்குறைவால் ஏற்பட்ட பிழை என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. போலி ஆராய்ச்சி அறிவியல் இதழ்களில் வெளியான போலி ஆராய்ச்சிகளில் இந்தியர்களின் பங்கு 35%. இன்னொரு தேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் ஒரு துறையின் பேராசிரியர் மீதும் அறிவுத் திருட்டு பற்றி ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.

சமீபத்திய கோவிட் சூழலால் ஆன்லைன் பரீட்சைகள் நடக்கும் போது ..டி.க்களில் பரவலாகத் திருட்டுத்தனம் நடக்கிறது என்பதை நிர்வாகிகளே ஒப்புக் கொள்கிறார்கள். இதில் வகுப்பில் முதல் நிலையில் இருக்கும் மாணவர்களும் அடக்கம்


..டி.யும் சாதியமும்


ஏப்ரல் 2021-இல் ..டி. காரக்பூரின் பேராசிரியர் சீமா சிங் பட்டியல் இன மாணவர்களுக்காக நடத்தப்படும் தயாரிப்பு வகுப்பு (Prep Class) ஜூம் நிகழ்வில் மாணவர்களை, “bastard”, என்று திட்டியது வெளி வந்தது. கோவிட் கால மன அழுத்ததால் அப்படிப் பேசிவிட்டதாகவும் வருத்தம் தெரிவிப்பதாகவும் சீமா சிங் ஒரு அறிக்கை விடுத்தார். அதற்கு மேல் வேறொன்றும் நடவடிக்க எடுத்த மாதிரி எந்தச் செய்தியும் இல்லை. 1000 முன்னாள் மாணவர்கள் ..டி.யில் நிலவும் சாதியம் குறித்தும் அந்தப் பேராசிரியையின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அறிக்கை வெளியிட்டனர்


..டி.களின் பெருமைமிகு ஏற்றுமதிகளில் ஒன்று சாதியமும். அஜந்தாவின் புத்தகத்தில் சொன்னதைப் போலவே அமெரிக்காவிலும் ..டி. பட்டதாரிகள் இன்னொரு ..டி மாணவரை பணியிடத்தில் சந்திக்க நேரிட்டால் நுழைவுத் தேர்வு மதிப்பெண் கேட்டு நச்சரித்து அதை வைத்து தலித் சாதியனரை அம்பலப்படுத்துவது நடந்திருக்கிறது. இது தொடர்பாகச் சிஸ்கோ நிறுவனத்தில் ஒரு வழக்கே நடக்கிறது


..டி.க்களின் ஆகப் பெரிய சாதியம் பேராசிரியர் நியமனங்களில் தான் நடக்கிறது. இது சட்ட மீறலாகவும் நடக்கிறது என்பது மிகப் பெரிய அவலம். 2019-இல் பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது அரசே, “23 ..டி.க்களில் 6,043 ஆசிரியர் பதவிகளுக்குள் 148 SC, 21 ST, ஆசிரியர்கள்இருப்பதாகத் தெரிவித்தது. அதாவது 3%. சில கல்லூரிகளில் ஒரு ஆசிரியர் கூடப் பட்டியல் இனத்திலிருந்து இல்லை


(புகைப்படம் https://www.indiaspend.com/if-iits-had-more-dalit-professors-would-aniket-ambhore-be-alive-69867 )


சென்னை ..டி.யில் கணிதத் துறையில் நியமனம் குறித்து வசந்தா கந்தசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமே ஒப்புக்கொண்டது ..டி செய்த இரண்டு நியமனங்கள் விதிகளுக்குப் புறம்பானதென்று. விதிகளை வளைத்ததை நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. வசந்தா 1997 முதல் போராடி 2016-இல் வெற்றிக் கண்டார். வசந்தாவின் ஆராய்ச்சி தரம் குறித்து விமர்சனங்கள் உண்டு. அது இங்கு முக்கியமல்ல. ..டி கரக்பூரில் நாற்பதாண்டுகளாக விதிகளுக்குப் புறம்பாக அங்கு வேலைச் செய்வோரின் பிள்ளைகளுக்குப் பிரத்யேக கோட்டா இருந்திருக்கிறது என்று தகவல் அறியும் சட்டம் வாயிலாகப் பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அம்பலப் படுத்தியது


இட ஒதுக்கீடு சட்டங்கள் மீறப் படுவது பற்றி மீண்டும் மீண்டு ..டி, ..எம் போன்ற கல்வி நிலையங்கள் சொல்லும் சால்ஜாப்பு தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லையென்பது. அந்தக் கூற்றின் உண்மையை ஆராய்வதற்கு முன் மும்பை ..டி.யில் பணியாற்றும் இந்திய அறிதல் முறைகள் துறையின் (மனித வளம்-சமூகவியல் துறையில் அடங்கும்) பேராசிரியர் ராமசுப்பிரமணியன் நியமனமான விதம் பற்றிப் பார்ப்போம்


தி இந்துவுக்கு ராமசுப்பிரமணியன் அளித்த பேட்டியில்..டி. மும்பைக்கு 2004-இல் இந்திய வானவியல் குறித்து உரையாற்ற சென்றேன். அவ்வுரைக்குப் பின் அங்கிருந்த ஆசிரியர்கள் எனக்கு ..டியில் ஆசிரியராகச் சேர விருப்பமா என்று கேட்டார்கள். என் மூலம் நம் மாணவர்களுக்கு இந்திய அறிவியல் குறித்துத் தெரிய வரும் என்றார்கள். ஒரு மாதம் கழித்து நான் சரி என்று சொன்னேன். உடனே பணியில் சேரச் சொன்னார்கள்என்றார். இவ்வளவு தான். பணியிடத்துக்கு விளம்பரமில்லை, தேர்வு கமிட்டி இல்லை, விண்ணப்பதாரர்கள் இல்லை. ஒன்றும் இல்லை. ஒரே உரை. ஏனென்றால் பேசியவர் பிராமணர், சமஸ்கிருத விற்பண்ணர் என்று பெயரெடுத்தவர். இவர் 2019-இல் ஒரு பிராமணர் கூட்டத்தில்சதுர்வர்ணம்குறித்து உரையாற்றினார்.


,,டி மும்பையில் முனைவர் பட்டப்படிப்புக்கான சேர்க்கை முறையில் நேர்முகத் தேர்வில் பிற்படுத்தப்பட்டவர்களும் பட்டியல் இனத்தவரும் பெருமளவில் வடிக்கட்டப்படுகிறார்கள் என்றுதி இந்துதகவல் அறியும் சட்டம் மூலம் கிடைத்தத் தகவல்களை வெளியிட்டது.




சென்னை ..டி.யிடம் இருந்து தகவல் பெறுவதேதி இந்துவுக்கு சவாலாக இருந்தது. பல துறைகள் தகுந்த ஆவணங்கள் இல்லையென்று கை விரித்துவிட்டார்கள். இவர்கள் தான் ஹாற்வர்டுடன் ..டி. போட்டி போடும் எனும் மகானுபவர்கள். சென்னை ..டி.யில் கிடைத்த தகவல் அடிப்படையில், மும்பை போலல்லாது, பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு ஏற்ற வகையில் முனைவர் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் ஆனால் பட்டியல் இனத்தவரின் கதி அதே தான்


பாஸ்கர் ராமமூர்த்தியும் வேளச்சேரி கேட் விவகாரமும்

பாஸ்கர் ராமமூர்த்திச் சென்னை ..டி இயக்குனராக 2011-இல் பதவியேற்றார். அவர் நியமனம் குறித்த வழக்கில் 2017-இல் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் அவர் நியமனத்தை ஏற்ற போதிலும் நியமன முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றது. உண்மையில் நீதிமன்றங்கள் மீண்டும், மீண்டும் ..டிக்களை விமர்சித்திருக்கின்றன. இந்த வழக்குகளின் தொகுப்பே நமக்கு இக்கல்வி நிலையங்கள் பற்றி ஒரு சித்திரத்தை அளிக்கின்றன


From Huffington Post


1959-இல் சென்னை ..டி நிறுவப்பட்ட போது அக்கல்லூரிக்காக வேளச்சேரி, தரமணி ஆகிய இடங்களை ஒட்டி 76 ஏக்கர் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவை ஆதி திராவிடர்கள் அதிகம் வாழும் பகுதி. நிலம் கையகப் படுத்தப்பட்ட போது அவ்விடங்களின் சர்பாஞ்சுகளோடு கல்லூரியும், அன்றைய முதல்வர் காமராஜரும் கல்லூரி வளாகத்துக்குள் அமையவிருந்த பள்ளியில் அம்மக்களின் பிள்ளைகள் படிக்கவும், அவர்களின் கோயிலான பீலியம்மன் கோவிலுக்குச் சென்று வர வழியும் இருக்கும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது (ஒப்பந்தம் வாய்மொழியா இல்லை சட்டப் பூர்வமான படியா என்று தெரியவில்லை). 


திடீரென்று 2020-இல் பாஸ்கர் ராமமூர்த்தி வேளச்சேரிக்குச் செல்லும் கல்லூரி வாசலை மூடிவிட்டார். வேளச்சேரியில் இருந்து கல்லூரிக்கும் அதன் வழியாக மற்ற இடங்களுக்குச் செல்வோர், குழந்தைகள் உட்படச் சுற்றி வளைத்து மூன்று கிலோமீட்டர் அதிகம் பயணிக்க வேண்டியிருந்தது. வேளச்சேரியில் இருந்து மாணவிகளுக்குத் தொல்லை இருந்ததாகக் கல்லூரி சொன்னது. ஆனால், கல்லூரியைச் சேர்ந்த 1500 மாணவர்கள், அநேக மாணவியரும் அடக்கம், வேளச்சேரி மக்களுக்கு ஆதரவாகத் திரண்டனர்


..டி.யினர் அடிக்கடி தங்களை அமெரிக்க ஐவி-லீக் கல்லூரிகளோடு ஒப்பிட்டுக் கொள்வர் ஆனால் இந்த மாதிரி விஷயத்தில் அப்படிச் செய்ய மாட்டார்கள். 1968-இல் நியூ யார்க்கில் இருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகம் கறுப்பு இனத்தவர் அதிகம் வாழும் ஹார்லம் பகுதியை ஒட்டி கல்லூரியை விரிவு படுத்த திட்டமிட்ட போது அதற்காகவும் வேறு காரணங்களுக்காகவும் கலவரமே வெடித்தது. அதன் பின் கல்லூரி தான் வசிக்கும் பகுதியினரின் ஒப்புதலை பெறவும் பகுதி மக்களுக்கென்று உதவிகள் செய்யவும் முன் வந்தது. 2009-இல் இன்னொரு விரிவாக்கத் திட்டத்தின் போது கொலம்பியா பல்கலைக் கழகம் சுற்று வட்டாரத்தில் $20 மில்லியன் மதிப்புள்ள உதவிகளும், கல்லூரியின் சில வசதிகளைப் பொது மக்கள் உபயோகிக்கவும் ஒப்புக் கொண்டது. கல்லூரி விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் வீடு உரிமையாளர்களுக்கு என்று ஒரு நிதியும் உருவாக்கப்பட்டது


..டி வளாகத்துக்குள் இருக்கும் பள்ளிகளில் வேளச்சேரி பகுதி குழந்தைகள் 500 படிக்கிறார்கள். அது பற்றி அச்சூழலை அறிந்த நண்பர் சொன்னது, “குழந்தைகளைச் சேர்ப்பதில் அடிக்கடி சச்சரவுகள் வரும்”. அதே போல் சுற்று வட்டாரத்தினர் வேலைக்கு எடுத்த போது பெரும்பாலும் உடல் உழைப்பு சார்ந்த வேலைகளே அளிக்கப்பட்டன என்றார்


..டி.களால் சமூகத்திற்கு நன்மையுண்டா என்கிற கேள்வி இப்போது எழுகிறது


..டி-களும் சமூகமும்

எந்த பொறியாளர்கள் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு வித்திடுவார்கள் என்று நேரு நம்பினாரோ அவர்கள் 70-கள் தொடங்கி 90-களின் பிற்பகுதி வரை பெரும் அளவில் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்குப் படிக்கச் சென்று அங்கேயே குடியேறினர். இந்தியர்களின் வரிப்பணத்தில் மிகச் சொற்பமாகச் செலவழித்துப் படித்தவர்கள், அநேகர் உயர் சாதியினர், இந்தியாவுக்கு எவ்வகையிலும் பயன்படவில்லை. கடந்த 20 வருடங்களாக இந்நிலை மாறியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆயினும் பெரும்பாலோர் தனியார் துறையில் பல லட்சம் வருட சம்பளம் தரும் வேலைக்குத் தான் செல்கிறார்கள். தமிழ் நாட்டு அரசுப் பொதுப் பணித் துறையில் எத்தனை சென்னை ..டி மாணவர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தால் ஆச்சர்யமிராது


வெளிநாடு செல்வதோ, தனியார் துறைக்கு வேலைக்குச் செல்வதோ தவறேயல்ல. ஆனால் இவ்வளவு வருமானம் ஈட்டும் திறமையுடையோர் தகுந்த விலைக் கொடுத்து படிக்க வேண்டும். கல்விக் கடன்கள் எளிதாக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டில் மருத்துவ உயர் படிப்புக்குப் பிணைப் பணம் செலுத்த வேண்டும். சில லட்சங்கள். ஆனால் அவர்களுக்கில்லாத சம்பாதிக்கும் திறன் இந்தப் பொறியாளர்களுக்குண்டு


சமீப காலமாக .,டி.கள் சமூகத் தொண்டில் ஈடுபடுவதைச் சிலர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அவற்றில் மாணவ அணிகள் தாமே முன் வந்து செய்யும் பணிகளும் அடக்கம். ..டி.கள் கொலம்பியா மாதிரி தங்கள் செல்வாக்கிற்கு ஏற்ற அளவில் சமூகப் பங்களிப்பு செய்கிறார்களா என்பது கேள்விக் குறி


எல்லா நிறுவனங்களும் இப்போது சி.எஸ்.ஆர் என்கிற “Corporate Social Responsibillity” துறை அமைத்துச் சமூகப் பணிக்கென்று செலவழிக்க வேண்டுமென்பது சட்டம். இத்துறையோடு சம்பந்தப்பட்ட இரு வேறு நண்பர்கள் சொன்னது, இத்துறைகள் பிராமணர்களால் நிறைந்தவை என்று. தலித் வெளியீடு ஒன்று சி.எஸ்.ஆர் பற்றிய ஆய்வில் சொல்வது அத்துறைகளில் தலித்துகளின் பங்களிப்பே இல்லாததால் சாதியத்தை எதிர்க்கும் அல்லது ஒடுக்கப்பட்டோருக்கு உதவியான பணிகள் மேற்கொள்ளப் படுவதில்லை என்று. சி.எஸ்.ஆருக்கென்று இந்திய நிறுவனங்கள் செலவிட்ட தொகை ரூ.6,518 கோடி


..டிகள் தொழில் முனைவோருக்கு முதலீடு அளித்துத் தொழில் தொடங்கவும், புதிய தொழில் நுட்பம் வளர்க்கவும் உதவும் என்கிறார்கள். இது தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் மத்திய அரசு தரும் பொருளுதவி, அதுவும் 16 ..டி, 14 ..எம், 20 என்..டி ஆகியவற்றுக்கு மட்டும். மீண்டும் இது மக்களின் வரிப்பணம் தான். இந்தக் கல்வி நிலையங்களில் படிப்பவர்கள் மட்டும் தான் மாணவர்களா? எத்தனையோ தனியார் மற்றும் மாநில அரசுகள் நடத்தும் பொறியியல் கல்லூரிகளும் தரமானவை இருக்கின்றனவே. மேலும் அவை பெரு நகரங்களில் மட்டும் இல்லாது மிகப் பரவலாக இருக்கின்றன. அவற்றுக்கு நிதி அளித்தால் என்ன


உலகத் தரப் பட்டியலில் இது வரை ..டி.களின் இடம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை என்பதே உண்மை. கண்டு பிடிப்புகள், புத்தகங்கள், ஆய்வுகள் என்று எந்த அலகின் படி பார்த்தாலும் ..டிகள் அதன் பிம்பத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாத அளவில் பங்களிப்பில் பின் தங்கித் தான் இருக்கின்றன. உடனே உலக அரங்கில் உயர் நிலையில் இருக்கும் சுந்தர் பிச்சைப் போன்றோரைக் கைக் காட்டுவார்கள். ஒன்று, சுந்தர் பிச்சைகள் உண்மையில் சொற்பமே. இரண்டு, சுந்தர் பிச்சை ..டி. தயாரிப்பு என்பதை விட அமெரிக்கத் தயாரிப்பு என்பதே சரி.

சென்ற வருடம் ,.டி இயக்குனர்களும் வேறு சிலரும் ஆசிரியர் நியமனத்தில் சாதிவாரியான இட ஒதுக்கீடு இருக்கக் கூடாதென்று கூட்டறிக்கை சமர்பித்திருக்கிறார்கள். இது வெட்கக் கேடு. அமெரிக்க நீதிமன்றங்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளை எடுத்துக் கொள்ளும் போது மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களும் உயர் பல்கலைக் கழகங்களும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வாதிடுவர். நம்மூரில் நிலமை தலை கீழ்


இவ்விடத்தில் ஒன்றை தெளிவாகச் சொல்கிறேன். எனக்கு இட ஒதுக்கீடு பற்றி, குறிப்பாகத் தமிழ் நாட்டில் நிலவும் இட ஒதுக்கீடு பற்றி, தீவிர விமர்சனமுண்டு. என் நிலைப்பாடு தனிப்பட்டது. இந்த ..டி-க்கள் மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறியிருக்கின்றன. மேலும் மொத்தமாக இட ஒதுக்கீடே கூடாதென்பது என் நிலைப்பாடல்ல. இன்னொன்று, இந்த “islands of excellence” என்பது அடிப்படையிலேயே ஜனநாயக விரோதமானது. அவை ஒழிக்கப்பட வேண்டும்


இந்திய அரசின் வருடாந்திர பட்ஜெட்டில் 26.96% ..டிகளுக்கும், 17.99% என்..டி.களுக்கும், ஏனைய நூற்றுக் கணக்கான பொறியியல் கல்லூரிகளுக்கு 48.9% ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ..டிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதி சமைப்பவர்களுக்கானது, அவர்களே இந்தியாவின் வல்லரசு கனவை நினைவாக்குவார்கள் என்கிற பிம்பத்துக்கு மற்ற கல்லூரி மாணவர்களும் சாதாரணர்களும் தொடர்ந்து விலைக் கொடுக்கிறார்கள். இந்தளவுக்கு இன்னொருவர் முதுகின் மீதேறி சவாரி செய்து தங்களை ஏதோ விண்ணில் இருந்து வாழ்விக்க வந்த தேவதூதர்கள் என்று எண்ணிக் கொள்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது


ஐ.ஐ.எம்-இல் சாதியம்:


ஐ.ஐ.டி.யை ஒத்த இன்னொரு ஸ்தாபனம் ஐ.ஐ.எம், இது மேலாண்மைக்கான கல்வி நிலையம். இங்கு 20 ஐ.ஐ.எம்.களில் 12-இல் பட்டியலினத்தவர் யாரும் ஆசிரியர்கள் இல்லையென்று மனித வள அமைச்சர் பொக்ரியால் பாராளுமன்றாத்தில் தெரிவித்துள்ளார். 


Source: The Quint 
தி க்விண்ட் பத்திரிக்கைச் சொல்கிறது இதற்கு முக்கியக் காரணம் விஞ்ஞானம், தொழில் நுட்பம் சார்ந்த பதவிகளில் இந்நிறுவனங்கள் இட ஒதுக்கீடு கடைப் பிடிக்கத் தேவையில்லை என்று அனுமதியளித்த 1975 ஆணை. அப்படி ஒரு ஆணையை கேட்டுப் பெற்றது ஐ.ஐ.எம் அகமதாபாத் மட்டும். ஆனால் மற்ற ஸ்தாபனங்கள் அது தங்களுக்கு பொருந்தும் என்று தாமாகவே முடிவெடுத்தன.


2019-இல் இந்த ஸ்தாபனங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் நியமனத்தில் காட்டும் போக்கினை மாற்ற மத்திய அரசு 2019-இல் ஆசிரியர் வேலையில் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்த போது அந்த 1975 ஆணையைச் சுட்டிக் காட்டி ஐ.ஐ.எம்.கள் தங்களுக்கு விலக்குக் கோரின. ஹார்வர்ட் கூட இதை செய்யாது. 2019-இல் 6 மாத காலத்தில் இட ஒதுக்கீடுக்குட்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப யு.ஜி.ஸி இந்த ஸ்தாபனங்களுக்கு ஆணையிட்டது. இல்லையென்றால் யு.ஜி.ஸி அளிக்கும் நல்கைகளை நிறுத்த நேரிடும் என்று எச்சரித்தது.


ஒன்று தெளிவாகிறது. அசுர பலம் கொண்ட மத்திய அரசும், நீதி மன்றங்களும் இந்த கல்வி நிறுவனங்களை மீண்டும், மீண்டும், மீண்டும் எச்சரிக்கின்றன. சட்டத்தை மீறும் இவர்களுக்கு அதிகப் பட்ச தண்டனை எச்சரிக்கைகள் மட்டுமே. 


Source : The Hindu 


இதில் சுவாரசியமான முரன் ஒன்றுள்ளது புதிதாக நிறுவப்பட்ட ஐ.ஐ.எம்.கள் ஆதி காலத்து ஐ.ஐ.எம்.களை விட கொஞ்சமேனும் இட ஒதுக்கீட்டை கடைப் பிடித்துள்ளனர். ஐ.ஐ.எம்-களுக்குள்ளாகவே ஒரு சாதியம் நிலவுகிறது.


பிராமணத் துவேஷமும் சென்னை ..டி சர்ச்சைகளும் 


சென்னை ..டி மாணவி ஃபாத்திமா லத்தீப் 2019-இல் தற்கொலைச் செய்து கொண்ட போது அவர் விட்டுச் சென்ற குறிப்பு மூன்று பேராசிரியர்களைக் குற்றம் சாட்டியது. அதில் ஒருவர் பிராமணர். உடனே இணையம் தீப்பற்றியது. அவர் புகைப்படம் காட்டுத் தீயெனப் பரவியது. அவர் இஸ்லாமிய வெறுப்பாளர் என்று சொல்லப்பட்டது. அதற்கு யாரும் எந்த ஆதாரமும் காட்டவில்லை. ஒரு மாணவி இறந்த தருணத்தில் ஆதாரம் கேட்டதே தவறு என்றார் உற்ற நண்பர். அந்தச் சமயம் ஒரு கட்டுரை அதிகம் பகிரப்பட்டது, “ஆஹா இதல்லவோ பத்திரிக்கையாளருக்கு மாதிரிஎன்று பாராட்டுடன். ஆனால் அக்கட்டுரையில் அநேக ஓட்டைகள். விரிவாகவே கட்டுடைத்து எழுதினேன் (காண்க https://www.facebook.com/arvindkannaiyan/posts/10215024167817241) அப்போது பலர் முகம் சுளித்தார்கள். வேறு பலர்ஆகா உண்மைஎன்று பதிவைப் பாராட்டினார்கள். என் நிலைப்பாடு எப்போதும் உண்மைகள் வரட்டும் என்பதே


இன்று விபின் வீட்டில் புகாரிலும் ..டி விசாரிக்கட்டும் என்றே சொல்வேன். நண்பர் ஒருவர் விபினையும் விசாரிக்க வேண்டும் என்ற போதுபுகாரை விசாரிப்பது வேறு, புகார் அளித்தவரை விசாரிப்பது வேறுஎன்றேன். “இல்லை தமிழ் நாட்டில் சென்னை ..டி.யை பிராமணக் கல்வி நிலையமாகப் பாவித்துத் தமிழகத்துக்கே உரிய பிராமணத் துவேஷத்தோடு அழிக்கப் பார்க்கிறார்கள்என்றார் நண்பர்


பிராமண ஆதிக்கம் சென்னை ..டி-யில் இருக்கிறதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. சாதியம் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அவற்றை விமர்சனத்துக்கும் ஆய்வுக்கும் உட்படுத்துவது தகும். அதே சமயம் எனக்கு ஒப்புதலில்லாதது உடனேஎல்லாப் பிராமணர்களும் இப்படித்தான்என்பதும் சாதிய வேற்றுமையெல்லாம் பிராமணர்கள் மட்டுமே செய்கிறார்கள் என்பது போல் பேசுவதும்


உண்மையில் பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை தமிழகத்தில் சாதியம் இருக்கிறது. ஒரு தமிழ் எழுத்தாளர் தன்னை வைத்துக் கொண்டே சக ஆசிரியர்கள், “ஹரிஜன் தான் ஆனாலும் திறமையானவர்என்று பேசியதை எழுதியிருக்கிறார். தமிழ் நாட்டுப் பள்ளியில் தான் என்பதுகளில் ஒரு ஆறு வயது தலித் சிறுமி, தனம், பள்ளிக் குழாயில் தண்ணீர் குடித்தார் என்பதற்காக ஆசிரியர் ஓங்கி அறைந்ததில் கண் பார்வை பாதிக்கப்பட்டது. சமீப காலமாகத் தமிழகப் பள்ளிகளில் சாதியம் தலை விரித்தாடுகிறது. ஆதிக்கச் சாதி குழந்தை ஒரு தலித் குழந்தையின் முதுகில் பிளேடால் கீறியது சமீபத்தில் பெரும் அதிர்ச்சியளித்த சம்பவம். அநேக கல்லூரிகளில் ஆதி திராவிட மாணவர்கள் உதவித் தொகைப் பெறுவதும் ஆதி திராவிட நல விடுதிகளில் தங்குவதும் அவர்களை மற்றவர்களுக்கு அடையாளப்படுத்துவதோடு எள்ளலுக்கு ஆளாக்குவது நிதர்சனம்


செய்ய வேண்டியன 


..டிகள், ஐ.ஐ.எம்.கள் மீது நாடு தழுவிய விசாரணை வேண்டும். அவற்றின் செயல் பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும், வெளிப்படைத் தன்மை எல்லாச் செயலிலும் வலியுறுத்தப்பட வேண்டும். சாதாரணக் குடிமகனின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளுக்கு வசதிகள் செய்து கொடுப்பது ..டிகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை விட முன்னிறுத்த பட வேண்டும். போதும் கல்வியில் இரட்டை டம்ப்ளர் முறை


பள்ளி முதல் கல்லூரி வரை எல்லா வகையான சாதியமும் களையப்பட வேண்டும். தலித் மாணவனோ, பிராமண மாணவனோ கல்வி நிலையத்தில் சாதிய எள்ளலுக்கு எள் முனையளவும் இடம் இருக்கக் கூடாது. அதே போல் பெண்கள், ஓரின சேர்க்கையாளர்கள்  யாராயினும் பாதுகாப்பான சூழல் இருக்க வேண்டும். குறைகள் இருப்பின் சுதந்திரமாகப் புகார் அளிக்கும் முறைகள் வேண்டும். புகார் அளிப்பவர் மீது பழி வாங்கும் நடவடிக்கைகள் கூடாது


நடக்குமா என்று தெரியாது


பி.கு: இக்கட்டுரை ஜூலை 7 "சமயம்" இணைய இதழில் வெளிவந்தது. டி.ஐ.அரவிந்தனுக்கு நன்றி https://tamil.samayam.com/latest-news/state-news/vipin-veetil-death-has-brought-the-casteism-to-the-fore-in-madras-iit/articleshow/84198332.cms?fbclid=IwAR08MthOcJcQZBq61lm-e8ZhPaeVS99LX1HcSqbUj0x9tl7dTNnXm8bS75w

References

  1. https://theprint.in/india/iit-madras-professor-resigns-alleging-multiple-instances-of-caste-based-discrimination/688627/  
  2. https://theprint.in/india/education/iits-should-be-exempt-from-caste-based-reservations-in-faculty-hirings-panel-tells-govt/567706/  
  3. https://www.hindustantimes.com/cities/others/rti-data-iits-not-following-reservation-rules-for-faculty-101624994117807.html 
  4. https://thewire.in/caste/iit-alumni-kharagpur-professor-caste-sc-st-students   
  5. https://www.news18.com/news/india/govt-gives-nod-to-issue-show-cause-notice-to-iit-dhanbad-director-in-caste-discrimination-case-2309467.html 
  6. https://www.telegraphindia.com/india/iit-go-ahead-for-demotion-over-caste-bias/cid/1705224 
  7. https://indianexpress.com/article/cities/lucknow/iit-kanpur-caste-harassment-faculty-forum-passes-resolution-to-divest-deputy-director-of-duties-5458299/  
  8. https://www.indiaspend.com/if-iits-had-more-dalit-professors-would-aniket-ambhore-be-alive-69867 
  9. https://timesofindia.indiatimes.com/city/chennai/madras-hc-upholds-appointment-of-bhaskar-ramamurthi-as-iit-m-director/articleshow/58964389.cms  
  10. https://www.thehindu.com/sci-tech/science/iisc-plagiarism-row-hots-up/article2917125.ece 
  11. https://theprint.in/india/education/plagiarism-data-manipulation-hurting-indias-research-govt-panel-raises-alarm/260918/ 
  12. https://www.nature.com/articles/nature.2012.10102
  13. https://www.thenewsminute.com/article/do-indian-educational-institutes-take-plagiarism-seriously-educationists-weigh-72790
  14. https://www.financialexpress.com/education-2/iits-find-ways-to-curb-cheating-in-online-exam/2139155/ 
  15. https://www.ndtv.com/opinion/at-iit-with-online-exams-teachers-confront-high-tech-cheating-2351311 
  16. https://www.dnaindia.com/india/report-iit-madras-director-appears-before-national-commission-for-scheduled-castes-2093570 
  17. https://scroll.in/article/905692/untouchability-at-iit-madras-segregation-of-dining-hall-for-pure-vegetarian-students-sparks-row 
  18. https://science.thewire.in/education/seema-singh-iit-kharagpur-students-marginalised-caste-backgrounds-higher-education-casteism/ 
  19. https://www.bloomberg.com/news/features/2021-03-11/how-big-tech-is-importing-india-s-caste-legacy-to-silicon-valley 
  20. https://www.hindustantimes.com/delhi/iit-kharagpur-kept-aside-illegal-quota-for-staff/story-k3ujl59h9JhdUDi5DC6RjP.html 
  21. https://www.deccanchronicle.com/nation/in-other-news/230816/madras-hc-slams-iit-ms-gross-irregularities-in-selection-of-professors.html 
  22. https://www.thehindu.com/features/friday-review/interview-with-prof-ramasubramanian/article6886634.ece 
  23. https://thewire.in/education/iim-directors-diversity-problem 
  24. https://thewire.in/education/less-than-3-of-all-faculty-members-at-iits-are-sc-st 
  25. https://www.thehindu.com/news/cities/chennai/phd-entry-to-iit-madras-is-harder-for-students-from-marginalised-communities/article33830776.ece 
  26. https://www.thehindu.com/news/national/phd-entry-in-iits-tougher-for-students-from-marginalised-communities/article33824475.ece 
  27. https://www.thehindu.com/news/national/higher-studies-and-the-marginalised-scheduled-tribe-seats-for-phd-programmes-in-iit-bombay-remain-unfilled/article33835735.ece 
  28. https://www.thehindu.com/news/national/with-startup-india-research-parks-to-bloom/article7793560.ece 
  29. https://www.facebook.com/arvindkannaiyan/posts/10215007163672148 
  30. https://www.facebook.com/arvindkannaiyan/posts/10215024167817241 
  31. https://www.facebook.com/arvindkannaiyan/posts/10214249986023180
  32. https://www.huffpost.com/archive/in/entry/iit-madras-casteism-gate-dalit-community_in_5e380cb1c5b611ac94d86d64 
  33. https://www.thehindu.com/news/cities/chennai/mp-meets-iit-m-director-over-the-closure-of-gate/article30437589.ece
  34. https://frontline.thehindu.com/other/advertorial/article30224875.ece
  35. https://www.thequint.com/news/india/iit-iim-sc-st-representation-missing-lack-of-caste-diversity
  36. https://www.thehindu.com/education/93-of-st-professor-positions-at-central-universities-80-of-st-posts-at-iims-unfilled/article34076556.ece
  37. “The Caste of Merit: Engineering Education in India” — Ajantha Subramanian