கர்நாடக சங்கீதத்தின் பிராமணமயமாக்கலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியும்
எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் நிறம் கறுப்பாக இருந்திருந்தாலோ, அவர் தன்னை பிராமணப் பெண்மணியாக முன்னிறுத்தாமல் இருந்திருந்தாலோ, பக்த சிரோன்மணியாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்திருந்தாலோ அவர் இன்று பிராமணர்களிடையே அடைந்திருக்கும் இன்றைய ஏகோபித்த ஏற்பையோ புகழையோ அடைந்திருப்பாரா என்று டி.எம்.கிருஷ்ணா கேள்வி எழுப்ப சர்ச்சை வெடித்தது.
குறிப்பு: இக்கட்டுரை காலச்சுவடு பத்திரிக்கையில் பிப்ரவரி இதழில் முதலில் வெளிவந்தது. அவர்கள் அனுமதியோடு என் தளத்தில் வெளியிடப்படுகிறது. பிரசுரித்த அவர்களுக்கு நன்றிகள். குறிப்பாக என் தமிழை மெய்ப்புப் பார்த்த அந்தப் பொறுமைசாலிக்கு நன்றிகள்.
தமிழ் வடிவில் எப்படி காலச்சுவடுக்கு அளிக்கப்பட்டதோ அப்படியே இங்கு பதிவிட்டுள்ளேன். காரணம் இரண்டு. பத்திரிக்கைப் பிரதியும் இணையத்தில் வெளியிடப்படுவதும் ஒன்றாக இருக்க வேண்டும். மிகச் சொற்பமான திருத்தங்கள் செய்யப்படுள்ளன. இக்கட்டுரையில் சொன்னதைப் போல் இதன் விரிவான ஆங்கில வடிவம் https://contrarianworld.blogspot.com/2018/02/carnatic-music-and-bharata-natyam.html.
சரி, அப்படியென்றால் ஏன் இங்கே வெளியிட வேண்டும். காலச்சுவடு இணையத் தளம் சில மாறுதல்களைச் செய்கிறது. முன்பு கட்டுரை வெளிவந்த 15- நாட்களில் எல்லோரும் படிக்கும் வண்ணம் இருக்கும் இப்போது அப்படியில்லை. இக்கட்டுரை நான் எழுதியவைகளிலேயே அதிக உழைப்பைக் கோரிய ஒன்று. தமிழில் படிப்பது சிலருக்குச் சுலபம். ஆங்கிலக் கட்டுரையை விட இது சுருக்கமானதும் கூட. ஆகவே தான் பதிப்பகத்தாரின் அனுமதி கிடைத்த பின்பே இங்கு வெளியிடுகிறேன்.
முன்னுரை
கிருஷ்ணாவும் அவருக்கு மறுப்பு எழுதிய பலரும் கர்நாடக சங்கீதமும் பரதமும் பிராமணமயமாக்கலின் பின்னனியையும், எம்.எஸ். சமகாலத்தில் எப்படிப் பார்க்கப் பட்டார் என்பனப் போன்றவற்றைத் தரவுகளோடு எழுதப்பட்ட முதன்மை ஆராய்ச்சியாளர்களின் பல்கலைக் கழக வெளியீடுகளைச் சுட்டிக் காட்டவில்லை. வரலாற்றெழுத்தில் முன் முடிவுகளுக்கு சாதகமானத் தரவுகளைத் தேடிப் போக கூடாது, மேலும் சாதகமான தரவுகள் கிடைத்தாலும் அக்கருத்துகள் தகுந்த ஆதாரங்களோடு வைக்கப் பட்டிருக்கின்றனவா, அவற்றை யாராவது மேலதிக ஆதாரங்களோடு மறுத்திருக்கின்றார்களா என்றெல்லாம் சீர் தூக்கிப் பார்த்து எழுதப் பட வேண்டும். அப்படியான முயற்சி இக்கட்டுரை. இக்கட்டுரையின் விரிவான வடிவம் மேலதிக தகவல்களுடன் என் தளத்தில் வெளியிடப்படும். அமண்டா வீட்மேன், லக்ஷ்மி சுப்ரமணியன், மில்டன் சிங்கர், முனைவர் கே. சதாசிவன், தாவேஷ் சோன்ஞி, பேராசிரியர் நம்பி ஆரூரன், ஆகியோரின் நூல்களை வைத்து எழுதப்பட்டது இக்கட்டுரை.
இந்து பத்திரிக்கையின் இலக்கிய விழாவில் உரையாடிய சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன் ஒவ்வொருவர் ஒவ்வொரு தொழிலைச் செய்து பொருள் ஈட்டுவதாகவும் தனக்கு சங்கீதம் அப்படியே என்கிறார். மேலும் சபையோரின் மூலம் தான் உற்சாகம் பெறுவதாகவும் சொல்கிறார். தான் சங்கீதம் கற்க உற்சாகம் அளித்தது நவராத்திரியின் போது வீடுகளில் பாடினால் அதிகமாக கிடைத்த சுண்டல் என்கிறார். இவற்றையெல்லாம் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக் கொண்டு குதூகலமாகப் பேசுகிறார். அவர் பேச்சில் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் இது எதையும் எம்.எஸ் மட்டுமல்ல இன்றைய பிராமண பெண் பாடகர்கள் கூட எளிதில் பேசி விட முடியாது. அது தான் கிருஷ்ணாவின் விமர்சனத்தின் மையம்.
எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் தோற்றமும் அதன் அரசியலும்
எம்.எஸ் பற்றி இந்திரா மேனன் சொல்கிறார், “அவர் உலகத் தலைவர்களோடு ஆளுமையாக மென்மையாகவும் கவுரமாகவும் வலம் வந்தாலும் வீட்டில் அவர் சராசரி வீட்டுப் பெண். வீட்டில் அவர் பூஜை அறைக்கு மாலை கோர்த்துக் கொண்டு, கோலம் போட்டுக் கொண்டிருப்பார். மேடையிலோ அவர் ஓர் ஈர்க்கும் புண்ணகை அல்லது தூக்கிய புருவம் ஆகியவற்றால் கவர்கிறார், சபையோருக்காக அல்ல தெய்வத்துக்காக”.
எம்.எஸ்ஸின் தோற்றம் கவனமாக வடிவமைக்கப் பட்டது என்கிறார் லக்ஷ்மி சுப்ரமணியன். பிராமணர்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விழையும் பிம்பங்களுக்கு எம்.எஸ்ஸின் பாடலும் அதில் தோய்ந்த பக்தியும் முக்கியமான அங்கமாயின. ஆண்கள் மேடைகளில் ஜிப்பா, வேஷ்டி-சட்டை என்று விதவிதமாக அணியலாம் ஆனால் கர்நாடக சங்கீத மேடைகளில் பெண்களுக்கான உடையும் அலங்காரமும் வரையறுக்கப்பட்டவை என்கிறார் வீட்மேன். இதை இன்றும் காணலாம். இது தற்செயல் அல்ல. பெண் என்பவள் பண்பாட்டின் சின்னமாகவும் அவள் உடை பண்பாட்டின் வெளிப்பாடாகவும் பார்க்கும் மரபின் நீட்சி இது. ருக்மினி தேவி தேவதாசிகளின் சதிர் அல்லது சின்ன மேளம் என்றழைக்கப்பட்ட நடனத்தை பரதம் என்று பெயர் மாற்றியதோடு செய்தது பரதநாட்டியத்தின் உடையை மாற்றியமைத்தது தான். பால சரஸ்வதி அந்த உடை மாற்றத்தை ஏற்கவில்லை. எம்.எஸ். மடிஸார் அணியலாமா என்று காஞ்சி பரமாச்சாரியாரிடம் கேட்கப் பட்டது.
பெண் பாடகிகளின் குரலின் அரசியல்
எம்.எஸ்ஸின் குரல் சுதந்திரமாக ஒலித்தக் காலத்தையும் பின்னர் சபையோருக்கு தேவையான பக்தி ரசமிக்க குரலாக மாறியதை கிருஷ்ணா சுட்டிக் காட்டினார். எம்.எஸ். ‘ராமா நன்னு ப்ரோவரா’ பாடினால் அதில் இழையோடிய சோகமும் பக்தியும் அவர் வாழ்வின் கசப்பில் இருந்து வந்தவை அதனால் தான் அந்த குரலில் அப்படியொரு உணர்வுப் பெருக்கு என்பாராம் வீட்மேனின் சங்கீத ஆசிரியர். பெண் பாடகிகளின் குரல் பற்றி ஆண் விமர்சகர்கள் முன் வைத்த விமர்சனங்களை வீட்மேன் மேற்கோள் காட்டுகிறார்.
“பெண்கள் பாடும் போது அது அவர்களுக்கு இயற்கையாக வரும் குரலாக இருத்தல் அவசியம் என்று கருதப்பட்டது. இயற்கையான குரல் என்பதும் கற்புள்ள பெண் உடலும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தப்பட்டன. 1950-களில் சங்கீதம் பாடும் பெண்களின் குரலும் சினிமா பாடல் பாடும் பெண்களின் குரலும் ‘இயற்கையான குரல்’, ‘செயற்கையான குரல்’ என்று தரம் பிரிக்கப்பட்டன”. எம்.எஸ்ஸின் குரலை புகழ்ந்து எழுதிய கல்கி கிருணமூர்த்தி லதா மங்கேஷ்கரின் குரலை ‘வசீகரமானது’ என்று குறிப்பிட்டு ரசிகர்கள் அதில் தங்கள் மனத்தை தொலைத்து விடலாகாது என்று எச்சரிக்கிறார். இங்கே ‘வசீகரமானது’ என்பது பாலியல் ரீதியாக கவர்ந்திழுப்பதை குறிப்பது என்கிறார் வீட்மேன், சரியாக.
பெண் பாடகிகளின் குரலின் இயற்கைத் தன்மையும் புனிதத்துவமும் அவர்கள் சங்கீத மேடையைத் தவிர வேறேங்கும் வேறெந்த பிரச்சினையிலும் தங்கள் குரல் ஒலிக்காமல் இருக்கும் போது பாதுகாக்கப் படுவதாக கருதப்படுகிறது என்கிறார் வீட்மேன். பெங்களூர் நாகரத்தினம் அம்மாளும் வை.மு.கோதைநாயகியும் பொது விஷயங்கள் குறித்துச் சுதந்திரமாக கருத்துச் சொன்ன காலத்தில் எம்.எஸ்ஸும் பட்டம்மாளும் மௌனம் காத்தனர். இது இன்றும் தொடரும் பழக்கம். டி.எம்.கிருஷ்ணா, சித்திர வீணை ரவிக்கிரன் ஆகியோர் பத்திரிக்கைகளில் பல விஷயங்கள் குறித்து எழுதிகிறார்கள். ஆனால் பெண்கள்?
அருனா சாய்ராமோடு ஓர் உரையாடலில் வி.ஸ்றீராம் பிருந்தா பற்றி ஓர் ஆண் பாடகர், “தேனொழுக பாடுகிறாள் ஆனால் நாக்குல அரிவாள்மனையை வெச்சிருக்கா” என்றதை மேற்கோள் சொன்னார். ஒரு பெண்ணின் இடம் எது என்பதை ஆண்கள் வரையறுக்கும் தருணம் அது தான். பெண்கள், பிராமணர்கள் உட்பட, தமக்கென ஒரு குரலுடன் இருப்பதை ஆணாதிக்கம் அனுமதிப்பதில்லை.
தேவதாசிகளும் மியூஸிக் ஆகடமியும்
வீணை தனம்மாள், பிருந்தா மற்றும் பால சரஸ்வதியை சென்னை மியூஸிக் அகாடமியும் அவர்களிடம் பயின்ற பிராமண சங்கீத வித்வான்களையும் மேற்கோள் காட்டி அத்தகைய நிகழ்வுகள் கர்நாடக சங்கீதம் மற்றும் அதன் விற்பன்னர்களின் பன்முகத் தன்மைக்கும் ஓர் எடுத்துக் காட்டாகச் சொல்லப் படுகிறது. இந்த நிகழ்வுகளின் பின்னனியில் சிக்கலான வரலாறு உண்டு.
தேவதாசிகளின் வரலாறு வரலாறு அறியாதவர்களால் இப்போது பிரச்சாரம் செய்யப் படுகிறது. சோழர் காலம் முதல் நிலவி வந்த ஒரு வழக்கம் 20-ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது. இடைப்பட்டக் காலத்தில் அம்மகளிர் மேன்மையும் கீழ்மையும் கலந்த வாழ்வையே வாழ்ந்தார்கள். தேவேஷ் சோன்ஞி மற்று முனைவர் சதாசிவத்தின் புத்தகங்கள் தேவதாசிகளின் பிற்கால வாழ்க்கைச் சிதைவையும் அவர்கள் வரலாற்றின் ஏற்றத் தாழ்வுகளையும் எடுத்துக் கூறும் முக்கியமான ஆவணங்கள்.
பிராமண ஆண்கள் ஆதிக்கத்தில் உருவான மியூஸிக் அகாடமி, ருக்மினி அருண்டேலின் கலாக்ஷேத்திரா, தேவதாசி ஒழிப்பு முயற்சிகளுக்கு ஊக்கமளித்த இசை வேளாளர்கள் என்ற முன்று தளங்களில் 1850-1947 வரையிலான சமூக மாற்றங்களை ஆராய்ந்தால் இந்த ‘பிருந்தாவை கவுரவித்தோம், பாலா சங்கீத கலாநிதி ஆனார்’ என்ற இறுமாப்பின் இன்னொரு பக்கம் புலனாகும்.
மியூஸிக் அகாடமி பிராமணர்கள் ஏற்க முடிந்த தேவதாசிகளைத் தமிழ் இசை நிர்வாக அமைப்புகள் முன்னிறுத்த விழையவில்லை. அந்த வித்தியாசத்தின் பின் ஓரு சமூகத்தின் அமைப்பு இருக்கிறது. தேவதாசிகள் தொன்றுத் தொட்டுக் கோயிலோடு தொடர்புடையவர்கள், கோயில்களில் அதிகாரம் பிராமணர்களிடம் இருந்தது, இருக்கிறது. அக்காலம் தொட்டே இவ்விருவரிடையேயும் சாஸ்திரம் அனுமதித்த உறவு இருந்தது என்கிறார் சதாசிவம். “ ‘கடவுளின் மனைவியரை’க் காமுறுவதிலோ, அவர்களைக் கிளர்ச்சியுறச் செய்வதிலோ அர்ச்சகர்களுக்கு எவ்விதமான தயக்கமோ, மனச்சான்றின் உறுத்தலோ கிடையாது”. மியூஸிக் அகாடமி பிராமணர்கள் அவர்கள் முன்னிறுத்திய தேவதாசிகளோடு உறவு கொண்டார்கள் என்பதல்ல இங்கே சொல்ல வருவது. மாறாக தேவதாசிகளோடு பழகுவது பிராமண ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று மற்றும் அது அவர்களுக்கு எவ்வித குலத் தாழ்ச்சியையும் கொடுத்துவிடாது என்கிற கருத்தும் உடந்தை. மேலும், கலைகளை பயிலுதல் அவற்றைப் பேணுதல் ஆகியவை தேவதாசிகள் குல மரபும் தர்மமும் என்று நிறுவப்பட்டதால் அவர்களோடு உறவாடுதல் வர்ணாஸ்ரம தர்மத்தைக் கைக்கொள்ளும் எந்த பிராமண ஆணுக்கும் எவ்வகையிலும் களங்கம் உண்டாக்காது. தேவதாசி ஒழிப்பை எதிர்த்த காங்கிரஸ் தலைவரும் பிராமணருமான ஶ்ரீனிவாச சாஸ்திரி அந்தச் சீர்திருத்த முயற்சி அத்தோடு நில்லாமல் பின்னர் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்று மாறுமோ என அச்சம் தெரிவித்தார்.
இந்த இடத்தில் குல தர்மத்தை மீறி கலைகளில் ஈடுப்பட்ட தம் குலப் பெண்களை அதே பிராமண இசை விற்பண்ணர்கள் எப்படி எதிர் கொண்டார்கள் என்பதை ஒப்பு நோக்கினால் மேற்சொன்ன விவாதத்தின் கோணம் இன்னும் தெளிவாகும்.
எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யை சாருமதி ராமசந்திரன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஆண்கள் பெண் பாடகர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்க இருக்க விரும்புவதில்லை அல்லது தங்களுக்கு பக்க வாத்தியக்காரர்களாக இருக்கவும் விரும்புவதில்லை என்றுச் சொல்லி நீண்ட பட்டியலைத் தருகிறார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், லால்குடி ஜெயராமன், செம்மங்குடி ஶ்ரீனிவாச ஐயர், மதுரை மணி என்று நீள்கிறது அப்பட்டியல். பிராமணரான சரஸ்வதி பாய் ஹரிகதா செய்ய முற்பட்ட போது அவர் சந்தித்த சவால்கள் அநேகம்.
மருத்துவர் முத்துலக்ஷ்மி ரெட்டி முன்னெடுத்த தேவதாசிகள் ஒழிப்பு முயற்சிக்கு இசை வேளாளர்களைச் சேர்ந்த ஆண்கள் ஆதரவளித்தனர். தேவதாசிகள் தாயாதி வழி முறையும் அவர்கள் மீது படிந்த கறையும் தங்கள் மீதும் விழுவதாக நினைத்ததும் இசை வேளாளர் இனத்தின் ஆண்களுக்கு சவாலாக அமைந்தது. 1920-இல் இசை வேளாளர்கள் என்று ஒரு தொகுப்பு உருவாக்கப் பட்ட போது ‘அம்பட்டன் இசைக் கலைஞர்கள்’ என்றறியப்பட்டவர்கள் நாகஸ்வரம் மற்றும் நட்டுவனார்களோடும் இணைக்கப்பட்டது எதிர்ப்பைச் சந்தித்தது. இசையும் மிகச் சிக்கலான உள் மடிப்புகள் கொண்ட ஜாதியமும் இரண்டறக் கலந்தது என்பது இதன் மூலம் தெளிவாவதோடு ஒரு காலத்தில் இசை என்பது எப்படி பலத் தரப்பட்ட பிராமணரல்லாதார் மத்தியில் வேரூன்றியிருந்தது என்பதை உணர்த்துகிறது.
தனம், பிருந்தா, பாலா ஆகிய மூவரும் மீண்டும் மீண்டும் நிலை நிறுத்துப்படுவதே தேர்ந்தெடுக்கப்பட்டச் செயல் ஏனென்றால் இந்தக் கௌரவம் வேறெந்த தேவதாசிக்கும் அளிக்கப் படுவதில்லை. இதைத் தான் கிருஷ்ணா “எத்தனை பிருந்தாக்கள் கொண்டாடப் படாமல் மறக்கப்பட்டிருக்கலாம்” என்கிறார்.
தேவதாசிகள் மட்டுமல்ல அவர்களை ஆட்டுவிக்கும் பிள்ளை சமூகத்தைச் சார்ந்த நட்டுவனார்களையும் மேடையிலிருந்து விலக்கி குடும்பப் பெண்களுக்கு ஏற்றவாறு கலையை சீரமைப்பது என்று உறுதிக் கொண்டு அதில் பெரு வெற்றியும் கண்டவர் ருக்மினி அருண்டேல். அவர் முயற்சிகள் நடன மேடையை மட்டுமல்ல சங்கீத மேடையையும் பாதித்தது. இன்று டி.எம்.கிருஷ்ணா சங்கீதத்தின் சமஸ்கிருதமயமாக்கல் பற்றிப் பேசினால் சினம் கொள்ளும் யாரும் அதன் வரலாறு அறியாதவர்கள்.
அன்னி பெஸண்ட், பிராமண எதிர்ப்பு, தேசியம்
இன்று தமிழகத்தில் பரவியிருக்கும் பிராமண துவேஷத்தின் ஆணிவேர் அன்னி பெஸண்ட் முன்னெடுத்த அப்பட்டமான பிராமணீயம் தான். “வேறு யாரையும் விட உயர் ஜாதிக் குழுவினரிடையே ஒரு பிரத்யேக அந்தஸ்து அன்னி பெஸண்டுக்கு உண்டு ஏனென்றால் அவர் திட்டவட்டமாக பிராமணியத்துக்கு பாரபட்சமாய் இருந்தார்” என்கிறார் லக்ஷ்மி சுப்ரமணியன். அந்த பிராமணியத்துக்கு எதிர் விசையாக ஆரம்பிக்கப் பட்டது தான் பிராமணரல்லாதோர் சங்கம்.
பரதக் கலைக்கு நாட்டிய சாஸ்திரம் பரத முனிவர் என்கிற தொன்ம ஆளுமை (mythical) பங்களித்ததை விட பன்மடங்கு பங்காற்றியவர்கள் ‘தஞ்சை நால்வர்’ என்றறியப்பட்ட பிள்ளை சமூகத்தைச் சேர்ந்த பொன்னைய, சின்னையா, வடிவேலு ஆகியோர். வடிவேலு வயலின் வாசிப்பதிலும் வித்தகர். தியாகைய்யருக்கு வயலினை அறிமுகப் படுத்தியவர் வடிவேலு. கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை மேற்கத்திய குறியீடுகளோடு (notations) சுப்புராம தீட்சிதர் எழுதுவதற்கு முக்கியப் பங்களித்தவர் சின்னஸ்வாமி முதலியார் என்கிற கிறித்தவர். ஜுத்தூர் சுப்ரமணியன் செட்டியார் நாகஸ்வரக் கலைஞர்களுக்கென ஒரு வைப்பு நிதியை உருவாக்கினார். கிறித்தவர்களான ஆபிரஹாம் பண்டிதர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை முக்கியமானவர்கள். ராஜா அண்ணாமலைச் செட்டியார் இசைக் கல்லூரியை ஸ்தாபித்தார். வீணை தனம், பிருந்தா, பாலா ஆகியோரின் ஆசிரியர்களின் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர்.
தெற்கில் ருக்மினி அருண்டேலும் மியூஸிக் அகாடமியும் முன்னெடித்த சமஸ்கிருதமயமாக்கலை வடக்கே இந்துஸ்தான் இசையில் வி.என். பண்டார்க்கரும் பலுஸ்கரும் செய்தனர். இவ்விரண்டையும் ஒப்பு நோக்கினால் ‘சமஸ்கிருதமயமாக்கலின்’ தீவிரம் புரியும்.
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை ஒட்டி பண்பாட்டுத் தளத்தில் “நம் பாரம்பர்யம் எது? நம் பண்பாட்டின் வேர் எங்கிருக்கிறது? பண்பாடு செல்ல வேண்டிய திசை என்ன?” என்ற கேள்விகள் விஸ்வரூபமெடுத்தன. அவற்றுக்கான பதில்களை அளிக்க, அப்போது கல்வியில் முன்னனியில் அதிகம் இருந்தவர்களும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் அதிகம் இருந்தவர்களுமான, ஸ்மார்த்த பிராமணர்கள் மிகவும் ஊக்கத்தோடு முன் வந்தனர். கலைகளின் மூலங்களாக சாஸ்திரங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன, பிறகு அதன் விளைவாக கலைகள் யாரிடம் இருக்கலாம் என்பதும் முக்கியமான கேள்வியாயிற்று.
சென்னையில் பஜனை மரபுகள் காலூன்றிய காலத்தில் அங்கு காங்கிரஸ் மாநாடு 1927-இல் நடந்த போது அதையொட்டி ஓர் இசை மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டுக்காக வசூலிக்கப்பட்ட பணத்தின் மீதியில் ஆரம்பிக்கப்பட்டது மியூஸிக் அகாடமி. தேசியமும் இசையும் பிணைக்கப்பட்டன. பின்னர் காந்தியின் கூடுகைகளில் கர்நாடக சங்கீதம் இடம் பெற ஆரம்பித்தது.
மியூஸிக் அகாடமி, தியாகராஜர், பக்தி மார்க்கம், கலாக்ஷேத்திரா, இந்துஸ்தானி இசை
மியூஸிக் அகாடமி கர்நாடக இசைக்கு என்று மரபுகளை உருவாக்கத் தொடங்கியது. இம்முயற்சியில் அவர்கள் ஸ்தாபன ரீதியாகச் செய்தவை மெச்சத்தக்கவை ஆனால் அதன் விளைவாக நடந்தவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1930-களில் தான் ‘சங்கீத மும்மூர்த்திகள்’ என்றச் சொற்றொடர் புழக்கத்தில் வந்தது. அம்மும்மூர்த்திகளில் முக்கியமானவராக தியாகராஜர் உருவெடுத்தார். அது வரை தாளத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ராகத்துக்கு இடம் மாறியது. ராகம் முக்கியமான உடன் அதுவரை இசை மேடையில் பிரதானமாக இருந்த இசைக் கருவிகளும் அதை இசைத்த இசை வேளாளர்களும் புறந்தள்ளப் பட்டனர். 1927-இல் நடந்த இசை கூடுகையில் மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், கொன்னக்கோல் வாத்தியக்காரர்கள் பங்குப் பெற்று தத்தம் இசைக் கருவிகளை இசைத்துக் காண்பித்தனர். ஆனால் பின்னர் மியூஸிக் அகாடமி நிறுவப்பட்ட போது கர்நாடக சங்கீத மேடைக்கு மிருதங்கம் மட்டுமேப் போதும் என்று முடிவுச் செய்யப்பட்டது.
பின்னாளில் பிராமணப் பெண்கள் மேடையேறியபோது அவர்களோடு இசை வேளாளர்கள் மேடையில் அமர்வது குறைய ஆரம்பித்தது. தியாகராஜரின் பக்தி விதந்தோதப்பட்டது. ‘நிதி சால சுகமா’ என்று பாடிய தியாகராஜரும் அவர் கொண்ட பக்தியுமே கலையின் பண்பாட்டுக் குறிக்கோளாக அடையாளம் கொள்ளப்பட்டன. மியூஸிக் அகாடமயைத் தொடர்ந்து ஆரம்பிக்கப் பட்ட சபாக்கள் பலவும் அவர்கள் ரசிகர்களின் ஜாதிக்கேற்ப இருப்பிடத்தை மற்றிக் கொண்டதும் நடந்தது.
“தியாகராஜரை சாதாரண பக்தியையும் உயரிய கல்வியறிவையும் ஒருங்கினைத்து செல்வங்களையும் புகழையும் தேடாமல் நிராகரித்த மேதையாக பார்ப்பதன் மூலம் தங்களைப் பற்றி தங்களுக்கிருக்கும் பிம்பத்தை உறுதிச் செய்துக் கொண்டனர் பிராமணர்கள்”. “பார்ப்பனக் குலம் கெட்டழிவெய்திய கலிகாலம் ஆதலால் வேர்ப்ப வேர்ப்ப பொருள் சேர்ப்பதையேக் குறிக்கோளாகக் கொண்டனன்” என்று பாரதி தன் தந்தைப் பற்றி எழுதியது இங்கே சுட்டத் தக்கது. எம்.எஸ் பணம் வாங்காமல் பாடும் நிலையில் இருப்பதே தன் விருப்பம் என்றும் அரசாங்கம் கலைஞர்களின் வாழ்வியலைப் பார்த்துக் கொண்டால் அப்படி இருக்கலாம் என்றும் சதாசிவம் கூறியதாக படித்திருக்கிறேன்.
பிராமணர்கள் பொது வெளியில் தங்களுகென்று ஓர் தனித்துவமான இடத்தை உருவாக்கிக் கொள்ள இசை உதவியது. இசையை ரசிப்பதையும் இசையோடு தொடர்புபடுத்திக் கொள்வதையும் பிராமணர்கள் தங்களுக்கும் தங்கள் சமூகத்திற்கும் ஒரு பிரத்யேகத் தன்மையை கொடுப்பதாக நினைத்தார்கள். இதைத் தான் கிருஷ்ணா பிராமணர்கள் எம்.எஸ்ஸின் இசையை ரசிக்கும் போது அதை இசை என்ற ஒன்றையும் தாண்டி ஒரு பண்பாட்டுத் தொடர்புபடுத்தலையும் சேர்த்தே, இன்னும் சொல்லப் போனால், அதனாலேயே ரசிக்கிறார்கள் என்றார்.
மியூஸிக் அகடமி படிப்படியாகச் செய்ததை ருக்மினி அருண்டேல் அதிரடியாகச் செய்தார் ஏனென்றால் அவர் குறிக்கோள் தன்னைப் போன்ற பிராமணப் பெண்கள் ஏறத்தக்க மேடையாக நடன மேடை இருக்க வேண்டும் அதற்காக நடனம் என்பதன் இலக்கணத்தையும் மேடையின் வழக்கங்களையும் மாற்றுவதே வழியென்று அறிந்தார்.
ஒரு விஜயதசமி நாளன்று ருக்மினி தேவி சொன்னார் “பாரம்பர்ய நடன ஆசிரியர்களிடம் இருந்து நம் கலையை பிரித்து விட்டோம். அவர்கள் ஒரு சிறு குழுவினர். வேரு யாரும் அவர்கள் வேலையைச் செய்ய முடியாது என்று நம்பியவர்கள். இது ஒழிக்கப்பட வேண்டும் என்று உறுதி கொண்டேன். பாரம்பர்ய குலத்தின் மகளிர் தான் நடனமாட முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் இப்போதோ நல்லக் குடும்பத்துப் பெண்கள் அற்புதமாக நடனமாடுகிறார்கள். அடுத்ததாக நிகழ்ந்தது நல்ல குடும்பத்தில் இருந்து நட்டுவனார்கள் பயிற்றுவிக்கப்பட்டது. இந்த விஜயதசமி தினத்தன்று அவர்கள் நமக்கு இனித் தேவையில்லை என்று நிரூபித்தது எனக்கு மகிழ்ச்சி”. குரூரமும், வன்மமும், மேட்டிமைத்தன்மையும் கலந்த சொற்கள். இந்த நீண்ட மேற்கோளை குறிப்ப்டிட்டுவிட்டு மேத்யூ ஆலென் விக்கித்துப் போகிறார் “அறிவில் சிறந்தப் பெண்மணி ஒரு சுப தினத்தில் இப்படியாப் பேசுவார்” என்று.
சதிரை கோயில் வளாகத்தில் இருந்து பொது மேடைக்கு பரதம் என்று நாமகரணம் செய்து மேடையேற்றியவர் கோயிலை மேடையில் ஏற்றினார். நடராஜர் விக்கரகமும் மேடை ஏறியது. பால சரஸ்வதி வெறுத்த மாற்றங்களுள் இதுவும் ஒன்று. நடன விமர்சகர்கள் புதிய சொல்லாடல்களை பயன்படுத்தத் தொடங்கினர். “கலையின் மீது பற்றற்றக் காதல்” என்ற வார்த்தைகள், சதிரைப் பற்றி எழுதும் போது உபயோகிக்காத சொற்கள், விமர்சனங்களில் இடம் பெற ஆரம்பித்தன.
எம்.எஸ்ஸுக்கு சதாசிவம் மீள் உருவாக்கத்தில் உதவியதுப் போல் ருக்மினி தேவி அருண்டேலுக்கு அவர் கணவரும் அன்னி பெஸண்டுக்குப் பின் தியொஸாபிக்கல் சொஸைட்டியின் தலைவரான ஜார்ஜ் அருண்டேல் முக்கியப் பங்காற்றினார். ருக்மினி தேவி நடனத்தில் அறிமுகப் படுத்திய மாற்றங்கள் தியோஸாபிக்கல் சொஸைட்டியோடு நெருங்கியத் தொடர்புக் கொண்டிருந்த பிராமண சமூகம் உதவியது.
தெற்கே இம்மாற்றங்கள் நிகழும் போது வடக்கே இதே வழி முறைகளைக் கைக்கொண்டு இஸ்லாமியர் பெரும் பங்கு வகித்த இந்துஸ்தானி இசையை பட்காண்டேவும் பலுஸ்கரும் மாற்றினர். வேதத்தை எழுதி வைக்கக் கூடாது என்று வரையறுத்து வாய்மொழி வழியாகவே கற்பிக்கப்பட வேண்டும் என்றுச் சொன்னவர்களுக்கு இஸ்லாமியரின் ‘கராணா’ முறை எரிச்சல் ஏற்படுத்தியது. இசையை முறைமைப் படுத்தப்பட்டக் கல்வியாக பயிற்றுவிக்க ஸ்தாபன ரீதியான முயற்சிகளைச் செய்தார் பட்காண்டே. பாரம்பர்ய சமூகத்தைச் சார்ந்தவர்கள் பற்றிய எரிச்சலும் எக்காளமும் ருக்மினி தேவியைப் போலவே பட்காண்டேவுக்கும் இருந்தது. இஸ்லாமிய இசை விற்பண்ணர்கள் படிப்பறிவில்லாதவர்கள், முன்னேற்றத்திற்கு தடைக் கற்கள் என்றார். அவர் பின் வந்த பலுஸ்கார் இன்னும் ஒரு படி மேலே போய் பாரம்பர்ய இசை அறிஞர்களின் நடத்தைச் சரியில்லை என்றார். இவ்விருவரும் தேச விடுதலை முயற்சியோடு தங்கள் முயற்சிகளை, தெற்கே நடந்ததைப் போலவே, பிணைத்தார்கள். அவர்களும் இந்துஸ்தானி இசையின் வரலாறை இந்து தொன்மங்களோடும் சாஸ்திரங்களோடும் இணைத்தார்கள். இத்தகைய முயற்சியைத் தான் எம்.என். ஶ்ரீனிவாஸ் போன்றவர்கள் ‘சமஸ்கிருதமயமாக்கல்’ என்கிறார்கள்.
எம்.எஸ்.சுப்புலட்சுமையை அறிவுப் பூர்வமாக ஆராயலாமா?
டி.எம்.கிருஷ்ணாவின் கருத்துக்கு எதிராக எழுதியவர்கள் கர்நாடக சங்கீதத்தை இந்து மதத்தின் விழுமியங்களில் இருந்து பிரிப்பது தகாது என்று கிருஷ்ணா கூறியதை மெய்ப்பிக்கும் விதமாக எழுதியதைப் பார்த்திருக்கிறேன். இதனால் தான் தியாகரஜர் விழா என்று க்ளீவேண்டில் நடக்கும் விழாவில் விஷாகா ஹரி தியாகராஜரை ராம பக்தராக முன்னிலைப் படுத்தி கதா காலட்சேபம் நடத்துகிறார். மேற்கத்திய செவ்வியல் இசையில் பாக் எழுதிய கோயில் இசையை (Mass in B minor) வெகு எளிதாக திருச்சபையின் குறியீடுகள் எதுவிமில்லாத மேடையில் இசைத்துப் பார்க்கலாம். தியாகராஜரின் பக்தியைப் பற்றிப் பேசலாகாது என்று சொல்லவில்லை ஆனால் அவரை பக்த சிரோன்மணியாக மட்டுமே குறுக்குவது தான் பிராமணீயம்.
மேற்சொன்னதோடு தொடர்புடையது இன்னொரு மறுப்பு. எம்.எஸ்ஸை அறிவுப் பூர்வமாக அனுகக் கூடாது என்கிறார்கள் சுதா ரகுநாதனும் ரவி கிரணும் மற்றவர்களும். பிராமணர்களுக்கும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட தத்துவப் புரிதலுக்கும் உள்ள முக்கியமான உறவை பௌத்தம், பிராமணியத்தை ஆராயும் யொஹான்ஸ் ப்ராங்க்ஹோஸ்ட் முன் வைக்கிறார். தத்துவத் தளத்தில் பௌத்தத்தோடு சமர் புரிய வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிராமணர்கள் நியாய சாஸ்திரம், தர்க்க சாஸ்திரம் என்று தர்க்க ரீதியான தத்துவத் தளம் அமைத்தார்கள். அத்தகைய எதிர்ப்பு இல்லாத வேறெந்த தளத்திலும் அவர்கள் தர்க்க ரீதியானப் புரிதலை விரும்புவதில்லை என்கிறார். இன்னொரு காரணம், எதையும் பக்தி தளத்தில் வைப்பது பிராமணர்களை முதன்மைப் படுத்தும் என்று அதைச் செய்கிறார்கள். அதனால் தான் தியாகராஜரை ஓர் அறிவாசானாகப் பார்க்காமல், பார்க்க மறுத்து, பக்த சிரோன்மணியாகவே பார்க்கிறார்கள். இதையே எம்.எஸ் விஷயத்திலும் கடைப் பிடிக்கிறார்கள்.
மியூஸிக் அகாடமியும் தமிழ் இசையும்
பிராமணியம் அல்லது சமஸ்கிருதமயமாக்கல் என்று சொல்லும் போது மொழியும் அது சார்ந்த அரசியலும் முக்கியமானதாகிறது. கர்நாடக சங்கீத மேடைகளில் தமிழ் என்றுப் பேச்செடுத்தாலே ‘சங்கீதத்துக்கு மொழியில்லை’ என்பார்கள். வீட்மேன் தெளிவாகச் சொல்கிறார், “கர்நாடக சங்கீதத்தை செவ்வியல் இசை ஆக்கும் முயற்சி மொழியை விட இசையேப் பிரதானம் என்று நிறுவுவதை சார்ந்து இருந்தது. செவ்வியல் இசை என்பதில் மொழி, இசையோடு ஒப்பிட்டால், இரண்டாம் பட்சம். மேலும், மொழி தாய் மொழியோடு சம்பந்தமில்லாததாகவும் சிறப்பாக பயில வேண்டிய ஒன்றாகவும் புதிதாக கட்டமைக்கப்பட்டது. இசைக்கான வரையறைகளை வகுப்பவர்களாக பிராமணர்கள் இடம் பெறப் பெற தெலுங்கும் சமஸ்க்ருதமும் இசையில் முதன்மைப் படுத்தப்பட்டன. கர்நாடக சங்கீதம் தமீழில் இருந்து இலக்கிய மொழியாகவும் தாய் மொழியாகவும் துண்டிக்கப்பட்டது”.
கர்நாடக சங்கீத உலகம் கை மாறிக் கொண்டிருந்தக் காலத்தில் தான் உலகின் மூத்த மொழியும் மிகுந்த நீண்டப் பாரம்பர்யமும் கொண்ட தமிழ் மொழி கல்வி நிலையங்களில் பிராந்திய மொழியாக (vernacular) பின்னுக்குத் தள்ளப்பட்டு சமஸ்கிருதமும் பிரெஞ்சும் முன்னிலைப் படுத்தப்பட்டன. பல்கலைக் கழக சிண்டிக்கேட்டில் அதிக உறுப்பினர்களான பிராமணர்களும், பிராமணர்கள் நிறுவிய இந்துப் பத்திரிக்கையும் கிட்டத் தட்ட தமிழ் விரோதப் போக்கினை கடைப் பிடித்தார்கள். ‘திராவிட மறுமலர்ச்சி’ எனும் நூலில் பேராசிரியர் நம்பி ஆரூரன் இதை அற்புதமாக ஆவணப் படுத்தியிருக்கிறார்.
தமிழ் இசைக் கோரிக்கை எழுந்த போது மியூஸிக் அகாடெமியும் அதன் பிராமண உறுப்பினர்களும் மிகவும் கோபாவேசமாக எதிர்க் கொண்டார்கள். எம்.எஸ். சுப்புலக்ஷ்மி தமிழ் இசை மாநாட்டில் பாடி பணம் திரட்டிக் கொடுத்தார் என்பதற்காக 4-வருடங்கள், டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் தூண்டுதலினால், மியூஸிக் அகாடமி எம்.எஸ்ஸை பகிஷ்காரம் செய்தது. பின்னர் அவர்களுக்கு பணம் திரட்ட வேண்டிய சூழல் வந்த போது எம்.எஸ்ஸின் தேவையை உணர்ந்து அத்தடையை மகிழ்ச்சியோடு நீக்கினார்கள். பால சரஸ்வதியின் துணைவர் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கியமான பிரமுகரும் பின்னர் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சருமான ஷன்முகம் செட்டி என்பது குறிப்பிடத் தக்கது. பாலாவும் தமிழ் இசையில் நாட்டம் கொண்டிருந்தார்.
ராஜா அண்ணாமலைச் செட்டியார் தமிழ் இசையைப் பரப்ப பண உதவிச் செய்த போது அகாடமியும், இந்துப் பத்திரிக்கையும் பணத்தைக் கொண்டு ஒரு வகை இசைக்கு ஆதரவுச் சேர்ப்பதைக் கண்டித்தனர். ஆனால் அதே செட்டியார் மியூஸிக் அகாடமிக்கு பண உதவி செய்த போது யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. சுதந்திர இந்தியாவில், அனைத்திந்திய வானொலி நிலையம் போன்ற கலாசார அமைப்புகளில் அதிகார பீடத்தில் அமர்ந்த பிராமணர்கள் கர்நாடக சங்கீதத்தை முன்னிறுத்தினார்கள்.
காலப் போக்கில் தமிழ் இசையை மேடையேற்ற பெரும்பாலும் பாரதி, ஊத்துக்காடு வெங்கடக் கவி, பாபனாசம் சிவன் என்றுக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் பாடல்கள் மட்டுமே இடம் பெற்றன. மறந்தும் பாரதிதாசன் பாடல்கள் இடம் பெறாது. ‘மொழி’, பிராங்க்ஹோர்ஸ்ட் எழுதுகிறார், ‘பிராமணர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று’. ரவி கிரணின் மனைவி, மங்கையர் மலருக்கு அளித்த பேட்டியில், தன் கணவருக்கு சில மொழிகளைத் தெரியும் என்றுச் சொல்லிவிட்டு சமஸ்கிருதத்தை மட்டும் குறிப்பிடுகிறார்.
சுப்புலட்சுமியின் நிறம்
நிறமும் பிராமணர்களுக்கு முக்கியம். ரிக் வேதம் சொல்கிறது, “வெண்மை நிறமுடையவர்கள் கறுப்பு நிறமுடையவர்களை தெற்கேத் தள்ளினார்கள்”. கறுப்பு நிறமான தன் மருமகளை “சூத்திர நிறத்தில் இருக்கிறாள்” என்றுச் சொன்ன பிராமண அம்மாள் என் நினைவுக்கு வருகிறார். பிராமணர்களுக்கு மட்டுமல்ல இந்தியர்களுக்கே, ஜாதி மதங்களைக் கடந்து, கறுப்பு நிறம் பற்றிய ஒவ்வாமை உண்டு. உலகிலேயே வெண்மையாக்கும் கிரீமை பல கோடி மக்கள் உபயோகிக்கும் தேசத்தில் வாழ்ந்துக் கொண்டு கிருஷ்ணா, “எம்.எஸ் கறுப்பு நிறமாயிருந்தால் ஏற்கப்பட்டிருப்பாரா” என்றுக் கேட்டதற்காக சினம் கொள்வது நகை முரன்.
முடிவுரை
இசையை மொழி, தேசியம், ஜாதி, மதம் என்று மிகச் சிக்கலான கூட்டணியின் பிண்ணனியில் புத்துருவாக்கம் செய்த காலத்தில் அதன் கட்டாயங்களுக்கு உட்பட்டே எம்.எஸ். சுப்புலக்ஷ்மி என்கிற மகா கலைஞர் கலையின் உச்சத்தைத் தொட்டார். கிருஷ்ணாவின் கேள்விகளுக்கு அர்த்தம் எம்.எஸ். சிகப்பாகவும், பிராமணியத்தைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்த காரணம் மட்டுமே அவரை உயர்த்தியது என்பதல்ல. அந்தக் கேள்விகளின் சாரம் “நம் இசை மரபு இன்று அந்த தளைகளில் இருந்து விடுபட்டதா? பெருவாரியான சமூகத்திடம் இருந்து மாறுப்பட்ட வேறு யாராவது எவ்வளவு எளிதில் இந்தக் கலையில் முன்னேற முடியுமா? அப்படி வேறுப்பட்டவர்கள் எளிதாகக் கலையை மட்டுமே உபாசிப்பவர்களாக வரவேற்கும் சூழல் இருக்கிறதா” என்றெல்லாம் சுய பரிசோதனையாக கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பதே அவர் அவா.
தமிழ் நாட்டில் இன்று மிக அருவருக்கத் தக்க வகையில் வேரூன்றியிருப்பது பிராமணத் துவேஷம். நாஜித்தனமான வெறியாகவே இது மாறிவிட்டது. கர்நாடக சங்கீதம் பிராமணர்கள் கைவசம் வந்திருக்காவிட்டால் இன்று பிராமணர்கள் நோக்கிச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் பிள்ளை சமூகத்தினர் குறித்துச் சொல்லப்பட்டிருக்கும் ஏனென்றால் இங்கே எல்லா ஜாதியினரும் தத்தம் உரிமைகளை வேறெவெருக்கும் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ருக்மினி தேவியின் கசப்பில் நியாயமேயில்லை என்றுச் சொல்ல முடியாது. அதற்கு அவர் கண்டப் பரிகாரம் தான் வன்மம் நிறைந்தது. காந்தி என்றுமே தனித்து நிற்பது இதனால் தான். தன்னை சந்தித்த ஜஸ்டிஸ் கட்சியினரிடம் “நீங்கள் ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. மாறாக பிராமண அதிக்கத்திற்குப் பதில் உங்கள் ஆதிக்கம் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்” என்றார். அரசியல் தளத்தில் அந்த ஆரூடம் பலித்தது. பிராமண ஆதிக்கம் இடை நிலை ஜாதியினரின் ஆதிக்கத்திற்கு வழி விட்டது.
மற்ற எல்லாச் சமூகங்களையும் விட சுயப் பரிசோதனைச் செய்வது, சுய விமர்சனம் செய்வது, சீர் திருத்தங்களை மேற்கொள்வது ஆகியவற்றில் பிராமணர்கள் நிச்சயம் முன்னிலை வகிக்கிறார்கள். பாரதி முதல் கிருஷ்ண வரை பிராமண சமூகத்தில் கலகக் குரல்களுக்கு நீண்ட மரபுண்டு.
கிருஷ்ணாவின் விமர்சனம் பல பிராமணர்களை முகம் சுளிக்க வைத்தது. இதை ஏன் கிளறுவானேன் என்று சினந்தார்கள் சிலர். கடந்த காலம் என்பது முழுவதுமாக என்றுமே கடந்த காலமாகாது என்றார் வில்லியம் ஃபாக்னர். வரலாற்றறிவு எதிர் காலத்தை வடிவமைக்க மிக அத்தியாவசியமானது. சாதாரண அலுவலகம் கூட சிறுப்பான்மையினர் சங்கோஜம் இல்லாமல் சிகஜமாக கலந்து பணியாற்றினால் தான் தங்குத் தடையின்றி பலத் தரப்பட்ட பங்களிப்பு நிகழும் என்கிறார்கள். ஒரு பெரும் பண்பாட்டுத் தளத்தில் பல் வகையினரும் கலந்துக் கொள்ளும் வகையில் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதே கிருஷ்ணாவின் விருப்பம்.
நூல் பட்டியல்:
- From the Tanjore Court to the Madras Music Academy: A social history of music in South India — Lakshmi Subramanian
- Bala Saraswati: Her Art and Life - Douglas M. Knight Jr.
- Unfinished Gestures: Devadasis, memory, and modernity in South India - Davesh Soneji
- When a Great Tradition Modernizes: An Anthropological Approach to Civilization - Milton Singer
- Singing the Classical, Voicing the Modern: The Postcolonial Politics of Music in South India — Amanda Weidman
- Nityasumangali: Devadasi Tradition in South India - Saskia Kersenboom
- தமிழகத்தில் தேவதாசிகள் - முனைவர் கே. சதாசிவன். (தமிழில்: கமலாலயன்)
- Tamil Renaissance and Dravidian Nationalism: K. Nambi Arooran
- The Politics of South India: 1920-1937 — Christopher John Baker
- Politics and Nationalist Awakening in South India, 1852-1891 — R. Suntheralingam
- Two Men and Music: Nationalism in the Making of an Indian Classical Tradition — Janaki Bakhle
- Aruna Sairam V. Sriram interview https://youtu.be/G2LfJLDinqc
- Sanjay Subrahmanyan interview https://youtu.be/omMolRDT_uo
- M.S. A Life in Music - T.J.S. George
- T.M. Krishna’s speech https://youtu.be/MRyhgog0RtA
- M.S. banned from music academy https://blogs.timesofindia.indiatimes.com/tracking-indian-communities/when-ms-braved-a-ban-to-bring-tamil-centrestage/
- M.S. Subbulakshmi and Music Academy https://sriramv.wordpress.com/2010/10/28/ms-subbulakshmi-and-the-music-academy/
- Matthew Allen on Rukmini Devi http://acceleratedmotion.org/wordpress/wp-content/uploads/2014/12/rewriting_script.pdf
- Saraswati Bhai http://www.thehindu.com/features/metroplus/she-paved-the-way/article6887087.ece
- On Devadasis - Johannes Bronkhorst http://www.brill.com/sites/default/files/devadasis.pdf
- Removal and re-introduction of percussion instruments in Carnatic Music - http://www.thehindu.com/features/friday-review/music/Crowning-glory-for-percussion-instruments/article16852558.ece
22. New Mansions for music: Performance, Pedagogy and Criticism - Lakshmi Subramanian
"நிறமும் பிராமணர்களுக்கு முக்கியம். ரிக் வேதம் சொல்கிறது, “வெண்மை நிறமுடையவர்கள் கறுப்பு நிறமுடையவர்களை தெற்கேத் தள்ளினார்கள்”. " - இதுக்கு ரெபெரென்ஸ் என்ன? 19/20ம் நுற்றாண்டுகள் பல மேற்கத்தியர்கள் தங்கள் சாய்வுக்கேற்றபடி வேதங்களை மொழி பெயர்த்தும் உரை எழுதியும் இருந்தனர் , அதனால் உங்கள் ரெபெரன்ஸை அறிய ஆவல்
ReplyDeleteHello contrarian
ReplyDeleteYou write so much about the alleged cultural resonances , nuances and politics behind Carnatic music. It is a particular narrative which fits in with the present fashion of blaming brahmins and beyond a point, is neither here nor there. Are you a connoisseur of carnatic music and do you regularly or occasionally goto carnatic concerts ? if a particular ragam is sung below par , will your aesthetic ears pick it up ? have your fiends and relatives been suppressed in their musical learning or career advancement by the alleged caste clique in carnatic music?
Funny , in all 'cultural criticisms' there has never been first person narration of experiences.
cheers
ৱন্বাক্কম্ ৱিজযরাঘৱন্
@வன்பாக்கம் விஜயராகவன்
ReplyDeleteI'll reply to your comments when I write a response to questions I got from others.
A couple of observations
ReplyDeleteWe seem to forget that perhaps the greatest Brahmin of them all i.e., Veda Vyasa was the son of woman of "fisher" caste. He has been described as dark in colour and self described as ugly as well.
As for the Madisar mode of wearing a sari which seems a major issue is quite amusing In most parts of India perhaps Kerala and North east excepted the use of "kacha(m)" was common to both men and women. In Bengal in particular the majority of highly educated intellectuals(including the Communists) wore their dhoti with unusual elegance. And one can see the traditional rural women and fisherwomen in Maharashtra wearing the sari in a "madisar' mode. Perhaps Tmails need to travel more and see India.
One can hardly disagree with T M Krishna but his combative methods seem to be quite
the common approach in TN. All one needs to see is the difference between Mr EVR and Sree Narayana Guru of Kerala.