Pages

Sunday, August 26, 2018

மனுஷ்யபுத்திரனும் இலக்கியவாதிகளின் அரசியலும் மதம்/சாதிய பற்றும்: பாரதி, ஜெயகாந்தன் முதல் கண்மணி குணசேகரன் வரை

மனுஷ்யபுத்திரன் மீது வீசப்படும் குற்றச்சாட்டுகள் பலவும் அதை விட அதிக நியாயங்களோடு பாரதி பற்றிச் சொல்லி விட முடியும் என்று இரண்டு வரியை பேஸ்புக்கில் எழுதவும் வந்த பதில்கள் சுவாரசியமானவை. "நீயும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து விட்டாயா", "பாரதியை மனுஷோடு ஒப்பிடுவதா" என்றெல்லாம் ஒரு தரப்பும், "அஹா இதைத் தானே நாங்கள் இத்தனை நாள் சொன்னோம்" என்று இன்னொரு தரப்பும், "சரி என்ன தான் சொல்ல வருகிறாய்" என்று மூன்றாம் தரப்பும் சொன்னார்கள். எல்லோருக்குமான விரிவான பதில் இது.



ஜெயமோகன் இந்தச் சர்ச்சை குறித்து எழுதியதோடு பெரிதும் உடன்படுகிறேன் அவரின் சில நிபந்தனைகள் முழுவதுமாக ஏற்க முடியவில்லை. எனக்கு எக்காலத்திலும் மனுஷ்ய புத்திரன் பாரதியாக முடியாது. அதற்கான சுருக்கமான விளக்கம் கட்டுரையின் முடிவில். இதை ஆரம்பத்திலேயே சொல்வதற்கான காரணம் பலர் சில பத்திகளைத் தாண்டி படிக்காமல் போகலாம் என்ற நம்பிக்கையால்.

கருத்துரிமை: 


முதலில் கருத்துரிமை பற்றி ஒரு விளக்கம். கருத்துரிமை என்பது சட்டத்தில் எல்லோருக்குமானது. படைப்பாளிக்கென்று சட்டத்தில் எந்தத் தனி விசேஷ சலுகையும் கிடையாது. அப்படிச் செய்யவும் கூடாது. ஆதலால் நாம் முதலில் கை விட வேண்டியது "படைப்பாளிக்கு அதைச் சொல்லும் உரிமை இருக்கிறது" என்பது. படைப்புரிமை என்பது படைப்பில் சலுகைகளைக் கொடுப்பது. கஸண்ட்ஸாகிசுக்கு இயேசுவும் மக்தலீனாவும் உறவுக் கொண்டார்கள் என்று படைப்பின் ஊடாக எழுதும் சுதந்திரம் இருக்கிறது. சாமானியன் அப்படிச் சொல்லலாமா என்றால் சாமான்யனும் அப்படிச் சொல்லலாம் என்பதே சரி. சாமான்யனோ படைப்பாளியோ வெறுப்பரசியலால் உந்தப்பட்டு அப்படிச் சொல்வார்களானால் முகச் சுளிப்போடு விலகிப் போனால் போதும் அதைத் தடுக்கத் தேவையில்லை என்று நினைப்பவர்கள் சிலர் அதைச் சட்டத்தின் துணைக் கொண்டு தடுக்க நினைப்பவர்கள் சிலர். இவ்விருவரிடையே ஊசலாடுவது தான் கருத்துரிமை.

மேலும், கருத்திரிமை என்பது சகலருக்கும் பிடித்தமானவர் யாரையும் புண்படுத்தாமல் சொல்வதைக் காப்பதற்கல்ல. கருத்துரிமை என்பது நமக்குப் பிடிக்காதவர்கள் நமக்குப் பிடிக்காததைப் பேசும் போது அது அவர்களின் உரிமை என்பது தான்.

எல்லாச் சமூகத்திலும் ஏதோ ஒரு எல்லைக்கப்பால் கருத்துரிமை வரயறுக்கப் படுகிறது. அமெரிக்காவிலும் நீங்கள் விமானத்தில் உட்கார்ந்து கொண்டு "வெடி குண்டு இருக்கிறது" என்று சொன்னால் கைதுச் செய்யப்படலாம். உடனே, பார்த்தாயா எல்லை இருக்கிறதே என்று குதூகலித்து இன்று சனிக்கிழமை என்று சொன்னாலே கைதுச் செய்தால் என்ன என்பது வாதம் அல்ல விதண்டாவாதம். கருத்துரிமையின் எல்லைகளின் விரிவும் இறுக்கமும் ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு. உங்கள் சமூகம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது உங்கள் கையில்.

மனுஷ் சார்லி ஹெப்டோ விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னார் என்கிறார்கள். (இது ஜெயமோகன் கட்டுரையில் தொடப்பட்டதா என்று தெரியவில்லை). அதாவது அப்போது இஸ்லாமியரின் மரபை அந்தப் பத்திரிக்கை மீறி விட்டதாகவும் அது ஏற்புடையதல்ல என்றும் அவர் சொன்னதாகச் சொல்கிறார்கள். அவர் அதை இன்று மறுத்திருக்கிறார் விகடனுக்கு அளித்த பேட்டியில். Even if he was a hypocrite his hypocrisy can be pointed out but not used against him to deny him his freedom.

மனுஷ்-பாரதி ஒப்பீடு: 


மனுஷ் பற்றி வைக்கப்பட்ட குற்றாச்சாட்டுகள் ஒரு தரப்பு அவர் கவிதைகளில் அவரின் குல்லா தெரிகிறது, அவரின் கட்சி கரை வேட்டித் தெரிகிறது என்பது. அவர் இந்து மதத்தை விமர்சிக்கக் கூட இல்லை அதன் இயல்பின் வரையறைக்குள் நின்றே ஒரு கவிதைப் புனைந்தார். அது தங்கள் மதத்தின் இயல்பு என்று பெருமையோடு சொல்லிக் கொண்டே அதிலும் அவர் குல்லாவை பார்த்தவர்கள் அநேகம். அப்புறம் அவர் சார்ந்திருக்கும் கட்சி. திமுக என்பது வெகுஜன அரசியல் செய்யும் பிரதான கட்சி என்பதோடு அதற்கென்று இந்துக்கள் மத்தியில், குறிப்பாகப் பிராமணர்கள் மத்தியில் ஒரு பிம்பம் இருக்கிறது. அந்தப் பிம்பம் திமுகவும் மு.க.வும் சேர்ந்து, ஜெயமோகன் சொல்வதைப் போல், 50 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பியது தான். அந்தப் பிம்பத்துக்குத் திமுகத் தரப்பிலும் நியாயங்கள் உண்டு அதன் எதிர் தரப்பிலும் நியாயங்களுண்டு. அந்தப் பிம்பம் குறித்து இரு தரப்பின் மதிப்பீடுகளிலும் நியாயம் இருக்கிறது. கொஞ்சமேனும்.

இந்தப் புள்ளியில் தான் எனக்குப் பாரதி ஒப்பீடு ஆரம்பித்தது. பாரதியின் பாடல்களில் பூணூலை தேடக்கூட வேண்டாம் சும்மா மேலோட்டமாகப் பார்த்தாலே அவன் பாடல்களிலும் கட்டுரைகளிலும் அது கிடைக்கும். ஜெயகாந்தன் மீனாட்சிபுரத்தில் நடந்த மத மாற்றத்தை கருவாக வைத்து எழுதிய 'ஈஸ்வர் அல்லா தேரே நாம்' கதையில் ஒவ்வொரு அத்தியாத்தின் ஆரம்பித்திலும் ஒரு மேற்கோள் இருக்கும் அப்படி அவர் சுட்டிய ஒரு பாரதி மேற்கோள்:

"மேலும், இந்தியாவிலுள்ள முஸல்மான்களில் பலர் ஹிந்து சந்ததியார். அவர்களுடைய நெஞ்சில் ஹிந்து ரத்தம் புடைக்கிறது...ஹிந்து தேசத்தில் பிறந்தவன் ஹிந்து. இந்தியா, இந்து, ஹிந்து, மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள், இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்ல, ஹிந்து ஜாதி" -- 'மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் "ஹிந்து-முஸ்லிம் ஸமரஸம்" என்ற கட்டுரையிலிருந்து' (இங்கே ஜெயகாந்தனின் மேற்கோள் அப்படியே இருக்கிறது. மேலும் அவர் பாறதியை குறிப்பிட்ட விதத்தையும் அப்படியே சொன்னதால் அதுவும் மேற்கோள் குறிக்குள்ளே)

பாரதியின் பாடல்களில் அவன் மீண்டும் மீண்டும் முன் வைத்தது 'ஆரியம்' தானே? நாம் அவன் முன் வைத்த ஆரியமும் இன்று இந்துத்துவத்துக்குப் பதாகைத் தூக்கும் தமிழ் பிராமணர்களின் ஆரியமும் வேறு என்று வாதிடலாம் ஆனால் அவன் முன் வைத்த கருத்தியல் பிராமணர்களுக்கு இன்று ஆயுதமாகியிருக்கிறது என்பதை மறுக்க முடியாதே.

பாரதி அக்காலத்தில் பிராமணர்களும் மேட்டுக் குடியினரும் கோலோச்சிய காங்கிரஸ் கட்சியில் தீவிர செயல்பாட்டாளன். பாரதி மகாகவியா என்ற விவாதம் இன்றும் முன்னெடுக்கப்படுவது அக்காலத்தில் அவன் எழுதிய 'கவிதைகள்' எளிய மேடைப் பாடல்கள், பிரச்சாரத் தொனிக் கொண்டவை ஏனென்றால் அவன் முதலில் களப் போராளி, பத்திரிக்கையாளன், பத்தி எழுத்தாளன் அவற்றுக்குப் பின் தான் கவிஞன் என்ற பார்வையால் தான். தாகூர் பாரதியை விட நுட்பமான கவிஞர் என்றும் வாதிடுவதும் அதனால் தான். பாரதியை பொறுத்தவரை தாகூர் பெருங் கவிஞரல்ல. இன்று நமக்குச் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த காங்கிரஸ், அதில் பங்கெடுத்த பாரதி, பாரதியின் துயர் மிகுந்த வாழ்க்கை, திமுக மேடைகளிலும் மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் என்று பாரதி நமக்கு இன்று மிகப் பெரிய பிம்பம். ஆனால் அந்தப் பிம்பத்திலிருந்து விலகினால் நான் சொல்ல வரும் ஒப்பீடு புரியும்.

பாரதிக்கு திலகர் மிகப் பெரிய ஆதர்சம். ஜெயாகாந்தனின் நாவலில் வரும் ஒரு காந்தியவாதியும், "நாம் அடிமை இருளில் கிடந்த நாட்களில் பாரதத்தின் தலைசிறந்த பிராமணோத்தமரான பால கங்காதர திலகர் தொடங்கிய அந்த விடுதலைப் போராட்டங்களில் இஸ்லாமிய நண்பர்கள் பெரும் அளவில் சேராமல் இருந்தார்கள்" என்பார்.

பாரதி மிகச் சிறந்த பத்திரிக்கையாளன் என்பது சீனி விஸ்வநாதனின் தொகுப்பைப் புரட்டினாலே தெரியும். அவனுக்கும் சரி பின்னால் வந்த ஜெயகாந்தனுக்கும் திலகரின் இன்னொரு முகம் தெரிவதில்லை. திலகர் ஆணாதிக்கவாதி, சனாதன இந்து, அப்பட்டமான ஜாதியத்தை வெளிப்படையாகப் பேசியவர், அரசியலுக்குள் மதத்தைத் தீவிரமாகப் புகுத்தியவர். இன்று நாம் பாரதியையும் திலகரையும் அவரவர் காலத்தின் வார்ப்புகள் என்றும் அவரவர் சிறுமைகளையும் தாண்டியவர்கள் என்று நமக்குச் சுதந்திர போராட்டம் குறித்துப் பள்ளிக் காலம் முதலே எழுப்பப்பட்ட பிம்பத்தால் சலுகையோடு நோக்குகிறோம் ஆனால் சம காலத்தில் அந்தச் சலுகைகளை நாம் மனுஷுக்கு மறுக்கிறோம்.

மனுஷ் தான் எழுதிய கவிதைக்கும் இந்து மதத்தின் 'தேவிக்கும்' சம்பந்தமில்லை என்று பின் வாங்கிவிட்டாரே என்று நகைக்கிறோம். மனுஷ் அப்படிச் செய்ததற்கு உயிர் பயம் காரணமில்லையா? கௌரி லங்கேஷும், குல்பர்கியும் சந்தித்த முடிவுகள் அண்டை மாநிலத்தில் தானே நடந்தது? இதில் நகைக்க என்ன இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்தியா இருப்பதற்கு இந்தியன் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் நாண வேண்டும். பிரிட்டிஷ் சர்க்காரிடம் தான் உண்மையான பிரஜையாக இருப்பேன் என்று சரணாகதி கடிதம் அளித்துவிட்டு அதன் பின் இறக்கும் வரை எந்தத் தேசிய உணர்வுப் பாடலையும் பாரதி எழுதவில்லை என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும். பாரதியையோ, சவர்க்கரையோ அவர்கள் எழுதிய அக்கடிதங்களுக்காக இன்று அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு ஓய்வு நேரத்தில் தட்டச்சு செய்யும் எனக்கு எள்ளி நகையாடுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

"சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான், தீயதொரு கனையாலே கண்ணன் மாண்டான்" என்கிறான் பாரதி. முகமறியா, பெயர் அறியா யாரோ எங்கோ எய்த அம்பும் சிலுவையும் ஒன்றா என்று கிறிஸ்தவர்கள் கேட்கலாம். முழுக் கவிதையும் படித்தால் அந்தளவு துண்புறுத்தாது ஆனால் இன்று குதிக்கும் பலரும் அந்த மன நிலையில் இல்லையே?

பிராமணரான பாரதிக்கு இயேசுவை பற்றியும் அல்லாவை பற்றியும் எழுதும் உரிமை இருக்கிறதென்றால் அந்த உரிமை மனுஷுக்கு கிடையாதா? அதுவும் மரபுகளை மீறாமல் எழுதப் புகுந்த மரபுக்குள் இருந்தே எழுதுவதற்கு உரிமை இல்லையா? ஸ்தாபன ரீதியான கிறிஸ்தவத்துக்கு வெளியே கதையின் நாயகன் தன் கிறிஸ்துவை கண்டடைகிறான் என்று 'கடல்' திரைப்படத்தில் தான் வடித்த கதாபாத்திரம் பற்றி ஜெயமோகன் எழுதியதாக நினைவு. பிலிப் புல்மேன் "Good man Jesus and scoundrel Christ" என்று எழுதும் உரிமை இருக்கிறதென்றால் ஜெயமோகனுக்கும் மனுஷுக்கும் பாரதிக்கும் அந்த உரிமைகள் உண்டு. அதே போல் அப்படிப் பட்ட உரிமை வெண்டி டோனிகருக்கும் உண்டு.

மனுஷின் கவிதையின் தரம் இன்று விவாதப் பொருளாகிவிட்டது. ஒரு சூடான பிரச்சினையின் போது எழுதப்பட்டதால் கவிதைக்கான நுணுக்கம் இல்லை என்கிறார்கள். கவனிக்க அப்படிச் சொல்லுபவர்களில் ஜெயமோகன் போன்ற சிலருக்குத் தான் அப்படிச் சொல்லும் தகுதி இருக்கிறது. பெரும்பாலோருக்கு கவிதை என்பது தமிழ் சினிமாப் பாடல் தான். ஜெயமோகன் அவருடைய தளத்தில் இருந்து பாரதியையும் கேள்வி கேட்டிருக்கிறார். அது வேறு வகையான தளம் என் எல்லைக்கு அப்பாற்பட்டது. என் எல்லைக்குள் நின்று சில வார்த்தைகள்.

கவிதை எழுதுவோர், அதுவும் சமூகத்தில் சம காலத்தில் நிகழும் ஏதேனும் நெருடலான ஒன்று குறித்து எழுதுவோர், உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நுணுக்கம் என்பதைப் பின் தள்ளி தானே எழுதுகிறார்கள்? பாரதியின் "ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி" அப்படிப்பட்ட கவிதை தானே? லெனினின் கொள்கைகளை மிகத் தீர்க்கமாகத் தன் கட்டுரைகளில் விமர்சித்த பாரதி ஒரு கவிஞனாக அந்தப் புரட்சி பற்றி மிக எளிமையாகத் தான் எழுதினான் என்றால் மிகையில்லை.

தஞ்சையில் பாரதி பற்றிய உரை ஒன்றில் (நான் நேரில் கேட்டது) ஜெயகாந்தன் பாரதியின் அந்தக் கவிதையின் கடைசி வரியான 'கிருத யுகம் எழுக மாதோ' என்பதைச் சுட்டிக் காட்டி கடவுள் நம்பிக்கையை நிராகரித்ததால் கம்யூனிஸம் தோற்றது என்றார். பாரதி ஓர் பிராமண இந்துவின் பார்வையில் தான் ருஷ்ய புரட்சியைப் புரிந்து கொள்கிறான் அதையே வாசகர்களுக்கும் முன் வைக்கிறான். அதுவும் ஒரு பார்வை. அதை ஏற்பதும் நிராகரிப்பதும் நம் சுதந்திரம். ஆனால் அவனுக்கு நாம் அளிக்கும் சலுகையை மனுஷுக்கும் கொடுக்க வேண்டும். அவர் காணும் உலகை இஸ்லாமிய பார்வையில் இருந்து சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. ஜெயமோகன் போன்றவர்களுக்குப் பிரச்சினை அதுவல்ல ஆனால் பலருக்கு அதுவே தான் பிரச்சினை.

மனுஷ் பொருள் தேடும் பொருட்டு இப்படிச் செய்கிறாரா? இருக்கலாம். அதனால் என்ன? பாரதியும் பொருளும் பேரும் தேட சீட்டுக் கவிகள் எழுதினானே? மனுஷை ஜெயமோகன் ஏன் தொண்டன் என்று சொல்கிறார் என்பதில் தான் பாரதிக்கும் மனுஷுக்கும் உள்ள வேறுபாடுகள் ஆரம்பிக்கின்றன. அங்குத் தான் பாரதி மனுஷ் எட்ட முடியாத உயரத்துக்குப் போகிறான். அதைப் பேசுவதற்கு முன் இன்னும் கொஞ்சம் இந்த ஜாதி மத விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்.

ஜெயகாந்தன், சுஜாதா, கண்மணி குணசேகரன்: 


இன்று மனுஷ் அவர் சாராத ஒரு மதத்தின் விழுமியத்தை மையமாக வைத்து ஒரு படைப்பை சமூகத்தின் முன் ஒரு பிரச்சினையினால் உந்தப் பட்டு எழுதி விட்டார். மனுஷ் ரங்கராஜனாக இருந்திருந்தால் இன்று அந்தக் கவிதை 'பார்த்தீர்களாக எங்கள் தரப்பில் இருந்தே குருமூர்த்திக்கு எதிர் வினையாற்றி இருக்கிறோம்' என்று சொல்லியிருப்பார்கள். மனுஷின் துரதிர்ஷடம் அவர் பெயர் ஹமீது.

ஜெயகாந்தனின் 'தவறுகள் குற்றங்கள் அல்ல' என்று ஒரு சிறுகதை. பெண்களிடம் முறை தவறி நடப்பதையே வழக்கமாகக் கொண்ட இந்து மேலாளர் ஒருவர் தன்னிடம் வேலைப் பார்க்கும் கிறிஸ்தவக் காரியதரிசியிடம் முறை தவறி நடந்து கொள்ள யத்தனித்து அவள் எதிர்பாராத போது முத்தமிட்டு விடுவார். காரியதரிசியான தெரசா அவரை மூர்க்கமாக எதிர்க்காமல் மிக மெண்மையாக "Please leave me I regret it" என்று சொல்லி கண்ணீர் சிந்தி விட்டு சென்று விடுவார். இதை எதிர்ப்பார்க்காத மேலாளர் வருந்தி அவளிடம் தன் செய்கையை அவர்கள் மரபில் தந்தை மகளை முத்தமிடுவது போல் எண்ணி மன்னித்து விடச் சொல்வார். கதையில் கிறிஸ்தவ வீடுகளில் குடும்பமாய் மது அருந்துவதாகவும் வரும். தெரஸா ஸ்கர்ட் அணிந்திருப்பார். தெரஸா ஆங்கிலோ-இந்தியப் பெண்மணி என்பதற்கான அறிகுறியில்லை. இன்று மனுஷை எதிர்க்கும் பலரின் மன நிலையில் இருந்து கிறிஸ்தவர்கள் இந்தக் கதைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அப்படிச் செய்தால் அது முட்டாள் தனம்.

பலரும் மனுஷ் இந்தச் செயலை பிரபலமடையச் செய்கிறார் என்கிறார்கள். என்னமோ மனுஷ் இது வரை பிரபலமாகாதது மாதிரி. அதிர்ச்சி மதிப்புக்காக மனுஷை விட அதிகமாகச் சீண்டலாகப் பேசியவர் ஜெயகாந்தன். 'வசை மாரி பொழிந்தார் ஜெயகாந்தன்' என்று அசோக மித்திரன் ஒரு பேட்டியில் சமீபத்தில் சொன்னார். 'நான் தமிழில் எழுதியதற்காக வெட்கப்படுகிறேன். இந்தியில் எழுதியிருந்தால் என்னை நாற்பது கோடிப் பேருக்குத் தெரிந்திருக்கும்' என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ராஜராஜன் விருதைப் பெற்றுக் கொண்டு சொன்னார் ஜெயகாந்தன். ஞானபீடம் கிடைத்த சமயத்தில் 'தமிழ் தமிழ் என்று தற்பெருமைப் பேசுகிறவர்கள் தம்மைத் தாமே நக்கிக் கொள்ளும் நாய்களைப் போல்' என்றார் அப்புறம் எதிர்ப்பு வலுத்ததும் 'தம்மைத் தாமெ நக்கிக் கொள்ளும் சிங்கத்தைப் போல்' என்றார். ஜாதி அமைப்பை ஆதரித்தார், வர்ணாஸ்ரமத்துக்காக வாதாடினார். இன்னும் பல.

லெனினை சந்தித்த வைணவ கம்யூனிஸ்ட் திருமாலாச்சார்யார் கம்யூனிஸ புரட்சி வருவதற்கு இந்தியா மத நம்பிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றால் அத்தகைய புரட்சியே வேண்டாம் என்றதை நினைவுக் கூர்ந்து சமய நம்பிக்கை, 'தமிழும் சைவமும்', நம்மில் பிரிக்க இயலாதது என்றார் ஜெயகாந்தன். அப்போதெல்லாம் யாரும் அவரைக் கண்டித்ததாகத் தெரியவில்லை. பாலகன் ஒருவனுக்குத் தீட்சை அளிக்கப்பட்டது என்றவுடன் சுடச் சுட கதை எழுதி இந்து மதம் பெரும் அநீதி செய்து விட்டது என்று புலம்பினார், 'கழுத்தில் விழுந்த மாலை' கதையில். அப்புறம் 'ஹர ஹர சங்கர' எழுதி நற்பெயர் மீட்டார். இதையெல்லாம் செய்ய அவருக்கு அனுமதி கிடைத்ததற்குக் காரணம் அவர் பிள்ளை சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் (ஆம் அது தான் ஜெயகாந்தனின் உண்மையான பெயர்). கொசுறுச் செய்தி ஜெயகாந்தனுக்கும் பாலகுமாரனுக்கும் தான் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர். ஹமீதுக்கு அல்ல. ஆண் அரசியல் வாதிகளிலும் இந்து அரசியல்வாதிகள் தான் மிகுதியாக இரு மனைவியர் கொண்டுள்ளனர். எத்தனை பேர் அந்தச் சுடச்சுட எழுதிய கதைகளின் தரம் பற்றி விவாதித்தனர்.

சுஜாதா என்கிற ரங்கராஜனின் தளமே வேறு. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் சுஜாதாவை சீண்டியது. இன்று மனுஷை ஹமீது என்று விளித்து எழுதி அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் எத்தனை பேர் சுஜாதாவை ரங்கராஜன் என்று எழுதியிருக்கிறார்கள்? தீவிர வைணவரான ரங்கராஜன் நாமம் குழைத்து நெற்றியில் இட்டுப் பிராமணச் சங்க மீட்டிங்குக்குப் போனதோடல்லாமல் தன் "ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்" புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்குக்கும் நாமம் போட்டு அழகுப் பார்த்தவர். ஹாக்கிங்கின் மேற்கோள் ஒன்றை எடுத்து திரித்து அதில் வராத ஆண்மீக கருத்தை தினித்து விஞ்ஞானிகளுக்கும் பூணூல் மாட்டி சந்தோஷப் பட்டார். மனுஷின் ஆக்கங்களில் குல்லா தெரிவதை விடச் சுஜாதாவின் வசனங்களில் பூணூலை கண்டு பிடிப்பது எளிது. "அங்கவை சங்கவை, பொங்கவை" என்ற வசனம் நினைவுக்கு வரலாம். இன்று மனுஷை கரித்துக் கொட்டும் பலரும் ரங்கராஜனை சுஜாதா என்றும் தமிழ் நாட்டுக்கு கிடைத்த விஞ்ஞானச் சூரியன் என்றும் எண்ணுபவர்கள்.

கண்மணி குணசேகரன் இன்று வெளிப்படையாகவே தன்னை வன்னிய எழுத்தாளர் என்பதோடு காடுவெட்டி குருவின் மறைவுக்கு அஞ்சலி குறிப்பும், அவரே அது கவிதை இல்லை என்றார், எழுதுகிறார். கண்மணி முதலில் பா.ம.க. கூட்டிய வன்னிய எழுத்தாளர் மாநாட்டுக்குச் சென்ற போது 2009-இல் 'நிழல் தேடுவதில்லை நெடுமரம்' என்று ஜெயமோகன் எழுதினார்.

சாதிய அல்லது குறுங்குழு அடையாளத்தை எழுத்தாளர்கள் விரும்ப மாட்டார்கள் அவர்கள் அப்படியொரு வட்டத்துக்குள் தங்களைப் பொருத்திக் கொள்ள மாட்டார்கள் என்றார் ஜெயமோகன். 50-களில் "ஈழவ நாளிதழான கலா கௌமுதி" ஈழவ எழுத்தாளர்களை ஒன்று திரட்ட முற்பட்ட போது அது தோல்வியில் முடிந்தது என்கிறார். ஆனால் அத்தோல்வி ஜெயமோகன் முன் வைக்கும் குறுங்குழுவில் சேர விருப்பமின்மை என்பதைத் தாண்டி இன்றூ வரை தலித்துகள் பொது வெளியில் தங்கள் அடையாளத்தைச் சொல்ல சவுகரியப்படாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்று இதன் இன்னொரு பக்கத்தைத் தமிழகத்தில் காணலாம். இன்று தமிழகத்தில் தான் பிராமணன் என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டால் எழுத்துலகில் பிரச்சினை என்கிறார்கள் நண்பர்கள் (இது ஒரு விவாதத்தில் வெளி வந்தது). தேசிய இயக்கம் பிராமண ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் தேசியமும் பிராமணீயமும் இயைந்து இருந்த கட்டத்தில் பிராமண எழுத்தாளர்களுக்கு அந்தச் சங்கடம் இருக்கவில்லை.

மனுஷ் பி.ஜே போன்ற மத அடிப்படைவாதிகளுடன் சேருகிறாரே என்று எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் சொல்கிறேன் காஞ்சி பரமாச்சாயாரின் 'தெய்வத்தின் குரல்' புத்தகத்தில் அவர் முன் வைத்த கருத்துகளை அதன் சமஸ்கிருத தமிழ், சாஸ்த்திரிய முலாம் ஆகியவற்றைத் தாண்டி அப்பட்டமாகப் பார்த்தால் அவருக்கும் காடுவெட்டி குரு "நாங்க என்ன மோளக்கார ஜாதியா?" என்று கேட்டதற்கும் எந்த வித்தியாசமுமில்லை. (அது பற்றி விரிவாக எழுதுகிறேன்). பரமாச்சார்யாருடன் அணுக்கமான எழுத்தாளர்களின் முகமூடிகள் குறித்து நாம் கேள்வி எழுப்புவதில்லையே? (இந்தக் கேள்வி ஜெயமோகனுக்கானதல்ல).

தலித் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள் என்று எத்தனையோ வகைமைகள் இருக்கும் போது வன்னிய எழுத்தாளரும் இஸ்லாமிய எழுத்தாளரும் இருக்கலாம். ஜெயமோகன் போன்ற சிலரைத் தவிர்த்துப் பலருக்கு அது தான் பிரச்சினை. ஜெயமோகன் அடிக்கோடிடும் பிரச்சினைகளைப் பார்ப்பதற்கு முன் ஜெயமோகனின் பதிவுக்கு வந்த எதிர் வினை ஒன்றையும் மனுஷை ஹமீதாக விளித்து எழுதிய ஒரு பதிவையும் பார்ப்போம்.

கார்ல் மேக்ஸ் கணபதி: 


இவர் முதலில் மேக்ஸா, மார்க்ஸா என்பதே ஒரு புதிர். ஜெயமோகன் பதிவை மறுத்து இவர் எழுதியததை எதிர்பாராத நண்பர் ஒருவர் சிலாகித்தார். அதனால் அதைப் படித்தும் பார்த்தேன். ஹ்ஹ்ம்ம்ம்.

இயற்கைப் பேரிடர்களில் இருந்து காப்பாற்றுமாறு இறைவனை வேண்டுவதும் அந்தப் பேரிடர்கள் இறைவனின் சீற்றம் என்றும் நினைப்பது எளிய பக்தி மனம் என்று ஜெயமோகன் சொன்னதை எடுத்து ஜெயமோகன் பக்திமான் ஆகவே அவருக்கும் அதே எண்ணம் இருந்திருக்கும். வெளிப்படையாகச் சொல்லி மாட்டிக் கொண்டார் குருமூர்த்தி ஜெயமோகன் சாதுர்யமாக மவுனமாக இருந்து விட்டார் என்கிறார் கணபதி. மேலும் இத்தகைய மவுடீகங்களைக் கம்யூனிசமும் திராவிட இயக்கங்களும் மறுத்து வந்திருக்கின்றன என்கிறார்.

ஜெயமோகன் ஓர் இந்து. மதம், அது சார்ந்த எளிய நம்பிக்கைகள், ஆச்சார அனுஷ்டானங்கள் இவையெல்லாம் வெவ்வேறு ஒவ்வொன்றையும் வெவ்வேறு தளத்தில் செய்ய முடியும். ஜெயமோகன் கணபதி சொல்லும் விதத்தில் பக்திமான் அல்ல. அப்படிச் சொல்வது அவதூறு ஆனால் கழகக் கண்மணியிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்.

கருணாநிதியின் மறைவை ஒட்டி நிகழ்ந்த நிகழ்வுகளைப் பார்த்தால் தெரியும் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு லட்சணம். ராஜாத்தி வீட்டில் இருந்த கருணாநிதியின் உடலுக்கு, பிணம் என்று சொன்னால் பகுத்தறிவு மனம் புண்படும், ஒவ்வொருவரும் மாலை வைத்து கையெடுத்து கும்பிட்டுப் போனார்கள். அது நீத்தாருக்கு செய்யும் மரியாதை மட்டுமல்ல, நீத்தார் தெய்வமானார் என்பதன் அறிகுறி. அது தான் எளிய மனம். செய்தவர்களை நான் குறைச் சொல்லவில்லை. ஆனால் இவர்களின் பகுத்தறிவு பம்மாத்து வெறும் பம்மாத்து.

ராமன் எந்தக் கல்லூரியில் படித்தான் என்பதை ஏன் ஜெயமோகன் போன்றோர் இந்து மதக் காழ்ப்பு என்று சொல்கிறார்கள்? காரணம் உள்ளங்கை நெல்லிக்கனி. அப்படிக் கேட்டு விட்டு ரம்ஜான் நோன்பு கஞ்சி குடிக்கக் குல்லா போட்டுக் கொண்டு ஸ்டாலின் காட்சித் தருவார் அல்லது கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பா எழுதி வெளியிடுவார். இவர்களுடைய பகுத்தறிவின் எல்லை ஶ்ரீரங்கம் கோயில் வாசல் வரை தான். பள்ளிவாசல் என்றாலோ சர்ச் வாசல் என்றாலோ இவர்கள் பகுத்தறிவு பல்லிளித்து விடும்.

ஆமாம் பசுவை முன் வைத்துத் தமிழகத்தில் கொலைகள் நடப்பதில்லை. ஆனால் கவுரவக் கொலைகள் தலை விரித்தாடுகிறதே. அது பற்றிச் செயல் தலைவர் என்ன செய்தார்?

கணபதியின் பதிவு இந்துத்துவத்துக்கு எதிரான ஜெயமோகனின் குரலை நிராகரித்துத் தான் பொய் மூட்டையாக மலர்கிறது. பாவம் அவர் சார்ந்திருக்கும் இடம் அப்படி.

ராஜகோபாலன் என்பவரின் பதிவு: 


இவர் சில கேளிகளை எழுப்பி மனுஷுக்கு கரிசணையோடு சில யோசனைகளையும் முன் வைத்தார். அவர் பேஸ்புக் திரியில் மேலே சொன்னவைகளில் தொடாத சில பதில்களை இங்குத் தருகிறேன்.

மனுஷ்யபுத்திரன் என்று பேஸ்புக்கில் இருந்தவர் இன்று ஹமீது என்று தன்னை அழைத்துக் கொள்வது ஏன் என்றார் ராஜா. மனுஷின் பெயர் மாற்றம் பேஸ்புக் விதிகளால் நிர்பந்திக்கப்பட்டது. இணையத்தில் நான் அறிந்த இருவர் புனைப் பெயரை துறக்க நேர்ந்தது. தட்சினாமூர்த்தித் தான் கருணாநிதி என்பதை அறிந்தவர்களை விட மனுஷ்யபுத்திரன் ஹமீது என்று அறிந்தவர்கள் மிக அதிகம். சாரு அவரை ஹமீது என்று விளித்து எழுதிப் பல பதிவுகள் இருக்கின்றன. மேலும் ராஜா, ""யாரோ” புகார் கூறியதாகச் சொல்லி தன் பெயரை தெளிவாக அப்துல் ஹமீத் என்று மாற்றிக்கொண்ட ஒருவர் முகநூலில் எழுதும் எழுத்துதான் நாம் பார்ப்பது." என்றார். அதற்கான பதில், "இது வெறும் கான்ஸ்பிரஸி தியரி. இங்கிருந்து ஆரம்பிக்கிறது உங்களுக்கு அவர் ஹமீதாக இருக்கும் பிரச்சினை"

ராஜா, மனுஷ் இந்தப் பிரச்சினையை, எச்.ராஜா புண்ணியத்தில், பூதாகரமாக்கி விளம்பர வெளிச்சம் தேடிக் கொள்கிறார் என்றும் பெருமாள் முருகன் இப்படி டிவி சேனல் ஒவ்வொன்றிலும் தோன்றி வெளிச்சம் தேடிக் கொள்ளவில்லை என்றும் சுட்டிக் காட்டினார். சர்ச்சையாக்கியது எச்.ராஜாவும் அவர் அடிப்பொடிகளும் ஆனால் பழி ஹமீது மீது. அதுவும் பெருமாள் முருகன் மாதிரி மௌனித்துச் சரண் அடைய வேண்டுமாம். நல்ல வேளை தினமணி ஆசிரியரை இழுத்து வந்து சன்னிதியின் முன் சாஷ்டாங்கமாக விழச் செய்து அதில் குளிர் காய்ந்தது போல் எதையும் பரிந்துரைக்கவில்லை நண்பர். சிறு கருணைகளுக்கு நன்றி சொல்வோம். மனுஷ் இன்று நேற்றா டிவி சேனல்களை ஆக்கிரமிக்கிறார்? மனுஷ் ஒரு பெரும் கட்சியின் பின்புலம் உள்ளவர் அவருக்குப் பெருமாள் முருகனின் நிர்பந்தம் கிடையாது.

கடைசியாக நண்பர் இலவசமாக ஒரு அட்வைஸும் தந்தார். ஹமீது ஈராயிரம் ஆண்டுக் கவி மரபு மீண்டும் தன்னுள் விழித்தெழும் போது மனுஷாகத் திரும்ப வேண்டுமாம். ஷத்திரியன் படத்தில் திலகன் "நீ பழைய பண்ணீர் செலவமா வரணும்" என்ற தொனியில் இருக்கிறது. ஆமாம் அது என்ன ஈராயிரம் ஆண்டுக் கவி மரபு? அரசனிடம் தம்பிடி காசு வாங்க அன்னத்தின் நடை சிறந்ததா தமயந்தியின் நடை சிறந்ததா என்று ஆராய்ந்ததா இல்லை பெண்ணின் தலை முடிக்கு இயற்கையிலேயே வாசனை இருக்குமா என்று ஆராய்ந்ததா? அல்குலையும், மார்பையும் சென்சார் செய்தால் முக்கால்வாசி கவி மரபு காணாமல் போகுமே? ஓகேவா ராஜா? அந்தக் கவி மரபு தன்னுள் உயிர்ப்போடு இருந்ததால் தான் வாலி என்கிற ரங்கராஜன் கவிதையாகக் கொட்டித் தீர்த்தார். மேற்கோள் காட்டவா?

ஜெயமோகனோடு முரண்படும் இடங்கள்: 


ஜெயமோகனின் இரண்டு கருத்துகளோடு ஒப்புதல் இல்லை. முதலாவதாக மனுஷ் தி.மு.க மேடையில் பேசுவதற்கெல்லாம் இலக்கியவாதிகள் அணி திரண்டு காக்கத் தேவையில்லை என்கிறார். இலக்கியவாதி என்பவன் கருத்து என்பது முச்சந்தி முதல் தி.மு.க மேடை வரை எங்குப் பேசப்பட்டாலும் அது நசுக்கப் படும் போது குரல் கொடுக்க வேண்டும் அது தான் இலக்கியவாதியின் கர்மா. பேசப்படும் இடத்தை வைத்துக் கருத்துரிமைக்கான தார்மீகம் மாறுவதில்லை.

இரண்டு ஜெயமோகன் தி.மு.க அரசியலை முச்சந்தி அரசியல் என்பது. அரசியல் என்பது ஜனநாயக அமைப்பில் முச்சந்தியில் தான் இருக்க வேண்டும். அதைத் தானே காந்தி செய்தார்? தி.மு.கவை நாம் விமர்சிக்கலாம், நிராகரிக்கலாம் ஆனால் முச்சந்தி அரசியல் என்று விலக்குதல் கூடாது.

ஜெயகாந்தனும் கண்ணதாசனும் முச்சந்தி அரசியலில் ஈடுபட்டவர்கள் தாம் என்பதை நாம் மறக்கவியலாது. கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்து மதம்' குப்பை ஆனால் அதை இன்று கொண்டாடுபவர்கள் அதிகம். மேலும் அதை அவர் எழுதக் கூடாதென்று யாரும் சொல்லவில்லையே? 'சினிமாவுக்குப் போன சித்தாளு' முச்சந்தி அரசியலில் இருந்து முகிழ்ந்தது தான். அது கலைப் படைப்பா என்பதை விட அது மிக முக்கியமான அரசியல் ஆக்கம் என்பதை மறுக்க முடியுமா?

மனுஷின் கவிதை இந்து மரபுக்கு அப்பாற்பட்டதோ அந்த மரபை சிறுமைப்படுத்துவதோ இல்லை என்ற பின் மனுஷ் தி.மு.கவோடு இருப்பது பொருளியல் ஆதாயத்துக்காக என்று சந்தேகம் எழுப்புவது தேவையில்லை. கலைஞர் விருதை சந்தோஷமாக வாங்கிக் கருணாநிதியால் பொருளியல் ஆதாயம் அடைந்தவர் ஜெயகாந்தன் என்பதை மறக்கலாமா? மேலும் இன்று திமுக மேடைகளில் அதிகம் காணப்படுவது இந்து என்.ராம் தான்.

மனுஷ் என்கிற திமுகத் தொண்டன்: 


மனுஷை தீப்பொறி ஆறுமுகத்தோடு ஒப்பிட்டு விட்டார் ஜெயமோகன் என்று கொதித்ததோடல்லாமல் இப்போது திராவிட விசிலடிச்சான் கூட்டம் தீப்பொறி ஆறுமுகம் ஞானபீடத்துக்குத் தகுதியானவர் என்கிற ரேஞ்சில் வாதிட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த அபாயத்தை ஜெயமோகன் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

இலக்கியவாதிகள் அரசியல் செயல்பாட்டில் இருப்பதே குற்றம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அது விஷயமல்ல. ஆனால் அப்படி ஈடுபடும் இலக்கியவாதிக்கு அந்த அரசியல் அரங்கில் என்ன இடம்? அவன் தன்னை அந்த அரசியல் சதுரங்கத்தில் எந்த இடத்தில் வைத்துக் கொள்கிறான் என்பது தான் முக்கியம். இங்குத் தான் மனுஷிடமிருந்து பாரதியும், ஜெயகாந்தனும், கண்ணதாசனும் வேறுபடுகிறார்கள்.

பாரதி பல இடங்களில் பிராமணர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளான், ஜாதியத்தைச் சாடுகிறான், எந்தக் குழுவுக்குள்ளும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் விஸ்வரூபமெடுக்க விரும்புகிறான். ஞானாகசத்தின் நடுவே நின்று பூமண்டலத்திற்கு அருள் பாலித்திட விரும்புகிறவன் அவன். காந்தியோடு முரண்படுகிறான், விவேகாநந்தரை சாடியிருக்கிறான், எல்லோருக்குமான கல்வி குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதுகிறான், காங்கிரஸில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று சாடுகிறான். அவன் சாகரம். எந்தச் சிமிழிலும் அடைக்க முடியாத காலப் பிரவாகம் அவன்.

கம்யூனிஸ்டுகளுக்குக் காந்தியும் நேருவும் எதிரிகள். கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நேரு பெரிய அடக்குமுறையையே கட்டவிழ்த்து விட்டார். ஆனால் ஜெயகாந்தன் அவர்கள் இருவரையும் ஆராதித்தார். கம்யூனிஸ்டுகளோடு பிணக்குக் கொண்டார். பிற்காலத்தில் அமெரிக்கா வந்து பார்த்து விட்டு அமெரிக்காவில் தொழிலாளி சுபிட்சமாக இருக்கிறான் என்று சொல்லி கம்யூனிஸ்டுகளின் முகத்தில் கரியைப் பூசினார். காமராஜரை ஆதரித்தார். காமராஜருக்குப் படிப்பறிவு இல்லை என்பதை வெளிப்படையாகச் சொன்னார். ஈ.வெ.ராவிடம் நான் இலக்கியவாதி நானே தீர்மானிப்பேன் நான் என்ன எழுத வேண்டும் என்பதை என்றார். எம்.ஜி.யாரை விடக் கருணாநிதியை மேன்மையானவராக நினைத்தார். வீரமணியோடு நட்பாக இருந்த போதும் திராவிடர் கழகத்தை நிராகரித்தார்.

கண்ணதாசனின் கதையும் கிட்டத்தட்ட ஜெயகாந்தன் கதை தான். அண்ணாதுரையின் இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்து ஜெயகாந்தன் பேசினால் என்ன பேசுவார் என்பதை அறிந்தே அழைத்தார். 'வனவாசம்' தமிழில் எழுதப்பட்ட சுயசரிதைகளுள் நேர்மையானவற்றைத் தொகுத்தால் அதில் இடம் பெறும்.

மேலே சொன்ன எதையுமே மனுஷ்யபுத்திரன் செய்யவில்லை. மாறாக அடிப்படைத் தொண்டனின் நிலையிலேயே கருணாநிதி பற்றிப் பேசுகிறார். அதைத் தான் ஜெயமோகன் சீண்டும் என்று தெரிந்தே 'தீப்பொறி ஆறுமுகம் போல்' என்றார்.

முடிவுரை:

மனுஷ்ய புத்திரன் பற்றிய பிரச்சினை பல திசைகளிலும் பயணித்து விட்டது. அவர் இந்து மதத்தை அவமதிக்கவில்லை. அவருடைய அரசியல் ஈடுபாட்டிற்கும் அந்தக் கவிதைக்கும் சம்பந்தமில்லை. அவருடைய அரசியல் ஈடுபாட்டால் அவர் கவித்திறம் கறைப்பட்டதா என்பதும் அது கறையா என்பதும் வேரு தளத்தில் முன்னெடுக்க வேண்டிய விவாதம். அவருடைய அரசியல் நேர்மையானதா என்றால் இல்லை என்பதே பதில். இன்று அரசியல் என்பதே அதிகாரத்தைக் கைப்பற்றும் செப்பிடு வித்தை என்றானப் பின் எந்தக் கட்சியில் இருந்தாலும், அதுவும் மனுஷ் மாதிரி தொண்டனாக, நேர்மையாக இருப்பதென்பது முடியாது. அந்த மேடைகளில் இருந்து நேர்மையாக ஒரு சொல்லை சொல்லி விட முடியாது.

எழுதுபவரின் பின்புலம், ஜாதியோ மதமோ குடியுரிமையோ, விமர்சனத்துக்கு சம்பந்தமில்லாதது என்றுச் சொல்ல மாட்டேன். ஆனால் அதைச் சுட்டிக் காட்டி விமர்சிக்கும் போது கவனமாகச் செய்ய வேண்டும். அது தான் காரணமா என்பதை தீர ஆராய வேண்டும் அதை தீர்க்கமாக நிறுவ வேண்டும். எழுதியவரின் பெயர் ஹமீது ஆகவே இந்து வெறுப்பாளன் என்பது விமர்சகனின் வெறுப்பரசியல்.


சுட்டிகள்:

1. https://www.jeyamohan.in/112345#.W4KuI63MxBy
2. https://www.jeyamohan.in/554#.W4KuJ63MxBy
3. கார்ல் மேக்ஸ் கணபதியின் பதிவு https://www.facebook.com/gkarlmax/posts/2103369616363217?__xts__%5B0%5D=68.ARBfP_KqSPHN9mlXVxnTIWV2DkuJyD5CIsiO3NB8K01FPyRZLN_0OHsuT46aGw1ruCiowaiwMVLHFh72x3Sun3NaxHnLfS1Y8m5l559LTYSuznZECy_8yy5B67kNlgbOcXuuTUQ&__tn__=K-R
4. ராஜகோபாலன் பதிவு (இதில் என் எதிர் வினைகளும் இருக்கும்) https://www.facebook.com/rajagopalan.j.7/posts/10210034009806363?__xts__%5B0%5D=68.ARAYewzNLWyhplHHyHZrh3rbSZ0wtQ9Ck9Lk-uk7Ydy_cqlL08MGLe2Lr7EfnT2u8Cqwy5-1MrnDQT4KczwOTU3NmEDCkOcS9hUM_wIxxYD9cwGIDN6itvxWOucxJcsAEf6Yoic&__tn__=K-R

2 comments:

  1. ஐயா, தங்கள் பதிவைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். சரியா என்று பார்க்கவும்:
    "
    பாரதி ஒரு குழப்பவாதி.
    மனுஷ் ஒரு இலக்கியவாதி.

    பாரதி ஒரு பிராமணர், அதனால் அவருடைய குறைகளை யாரும் பெரிது படுத்தவில்லை.
    மனுஷ் ஒரு இஸ்லாமியர். அதனால், தேவியின் குருதி என்ற மதம் சாராத இலக்கியப் பொழிவை, இந்துத்துவ தீவிரவாதிகள் கொச்சைப்படுத்தினர்.

    பாரதி ஒரு பயந்தாங்கொள்ளி.
    மனுஷ் ஒரு பாசறைப் போராளி.

    ரங்கராஜன் என்னும் ஸமஸ்கிருத பிராமணப்பெயரை மறைத்து, சுஜாதா எனும் புனைபெயரில் தன்னைத் தூய சங்கத்தமிழ் மறவனாகக் காண்பித்து ஏமாற்றினார்(ரங்கராஜன்).
    அப்துல் ஹமீது என்னும் சாதி,மத அடையாளமில்லாத பெயர் இருந்தாலும், 'மனுஷ்ய புத்திரன்' எனும் எளிய தமிழ்ப்பெயரில் தன்னை அடையாளம் காண்பித்தார்(ஹமீது)

    ர(ரா)ங்கராஜனின் அறிவியல் அறிவு ஒரு பம்மாத்து.
    மனுஷ் ஒரு உளவியல் விஞ்ஞஆணி.

    தினமணி ஆண்டாள் குறித்து வெளியிட்ட அறிவியல் கட்டுரைக்குப் பயந்து, சன்னிதியின் முன் பணிந்தது.
    மனுஷ் ஒரு அறத்தமிழ்ப் போராளி.

    பரமாச்சாரியரும் காடு வெட்டி குருவும் ஒரே மாதிரியான மனநிலை கொண்டவர்கள்.
    "

    ReplyDelete
    Replies
    1. திராவிட‌இயக்க பாணி புரிதல் ஹஹஹா!

      Delete

Note: Only a member of this blog may post a comment.