உடன் பிறப்புகளே வியக்கும் வண்ணம் பேராசிரியர் ராஜன்குறை உதயநிதிக்காகக் கம்பு சுத்திக் கொண்டிருக்கிறார். இதில் அவர் புதிதாக முன் வைத்திருக்கும் கோஷம் 'neo-monarchy'. வாரிசு அரசியல் தவறேயில்லை என்று பல காலமாகத் தான் வாதிட்டு வருவதாகச் சொன்னார். அவர் டைம்லைனில் நேற்று நான் கண்டெடுத்த முத்து பிபிசி வலைப்பக்கத்தில் அவர் எழுதிய கட்டுரை ஒன்று. இன்று அவரும் அதை மீண்டும் பகிர்ந்திருக்கிறார்.
ஜனநாயகம், அரசியல் சாசனம் இவையிரண்டையும் புரிந்து கொள்ளாமல் முரசொலி கட்டுரையாளர் ஒருவர் திமுக சங்கர மடம் இல்லை என்று முரட்டு முட்டுக் கொடுத்தல் கட்டுரை எழுதினால் எப்படி இருக்குமோ அப்படியிருந்தது அக்கட்டுரை.
கட்டுரையின் மையக் கருத்து அரசாட்சியோ மக்களாட்சியோ அதிகாரம் ஒரு நபரிடம் குவியும். அதிகாரம் என்பது குவிமையம். அந்நபர் மந்திரிகளின் ஆலோசனைக் கேட்டே நடப்பார். அரசாட்சிக்கும் மக்களாட்சிக்கும் ஒரே வித்தியாசம் இரண்டாவதில் அதிகாரம் குவியும் நபர் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவ்வளவே.
அப்புறம் வாரிசுகள் நியமிக்கப் பட்டாலும் அவர்கள் தனித்திறமையால் மட்டுமே அவர்களால் ஜீவிக்க முடியும் இல்லையென்றால் மக்கள் தூக்கிப் போட்டு விடுவார்கள் ஆகவே இதெல்லாம் 'அரசியல்ல சகஜமப்பா' என்கிற ஸ்டைலில் கடந்து போகலாம் என்கிறார் பேராசிரியர்.
முதலில் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். அமெரிக்க அரசியல் சாசனம் முதல் இந்திய அரசியல் சாசனம் வரை அரசியலமைப்புச் சட்டங்கள் எதிர் கொள்ளும் முதல் சவால தனி நபர் அதிகார குவிமையங்களைத் தடுக்கும் முகமாக அரசியல் அமைப்பை உருவாக்குவது தான். அதனால் தான் சட்டம் இயற்றுபவர்கள் (legislature); சட்டத்தைச் செயல்படுத்துவபர்கள் (executive); நீதியமைப்பு (Judiciary) என்று மூன்று சம பலம் உள்ள அமைப்பை உருவாக்குகிறார்கள் இதில் நான்காவது தூன் சுதந்திர பத்திரிக்கை துறை. இதற்கும் மன்னராட்சிக்கும் வித்தியாசம் அதிகமில்லை என்று வாதிடுவதற்கு ஒன்று சநாதன வர்ணாஸ்ரம ஆதரவாளராக இருக்க வேண்டும் அல்லது உடன் பிறப்பாக இருக்க வேண்டும். அரசியல் சட்ட வடிவின் விவாதங்களில் மீண்டும் மீண்டும் தலையெடுக்கும் பிரச்சினை அதிகார குவி மையத்தைத் தடுப்பது தான்.
ஜனநாயகங்கள் அதிகார குவி மையத்தைத் தடுக்க நினைத்தாலும் அவ்வப்போது அதில் வழுக்கவும் செய்யும். இன்றும் ஜனநாயகம் மற்றும் அதன் விவாதங்களிலும் மிகுதியாக இருக்கும் ஆங்கிலச் சொற்கள் நமக்கு ஒன்றை தெளிவு படுத்துகிறது. இம்மரபு இந்திய மரபு அல்ல. அது இன்றும் இங்கு வேரூன்றவில்லை. மேலும் இவ்விவாதங்களில் நாம் ஆங்கில மூலப் பதங்களுக்கு இந்திய மொழியில் மொழி மாற்றம் செய்து வேண்டுமானால் எழுதலாம் ஆனால் அது முதன்மைச் சிந்தனை ஆகாது. தயவு செய்து யாரும் ராஜராஜன் காலத்து குடவோலை முறை என்றெல்லாம் நீட்டி முழக்க வேண்டாம்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இன்று வலது சாரி வெகுஜன தலைவர்கள் (even that's a poor translation of 'populist leaders') ஆட்சிக்கு வருவது குறித்து அச்சத்தோடு எழுதும் பேராசிரியர்கள் இருக்கிறார்கள். 'Death of Democracy", Rise of populism என்பவை இன்று வெளியாகும் முக்கியப் புத்தகங்களின் பேசு பொருள். இதில் அவர்கள் சொல்லும் முக்கியக் காரணம் மக்களுக்கு ஜனநாயகம் உண்மையிலேயே மக்கள் குரல் இல்லை என்கிற எண்ணமும் அதிகார பீடங்களின் சிலரின் கைப்பாவையாக இருக்கிறது என்கிற எண்ணமும் தான்.
'அதிகார குவிமையம் என்பது குறியீடு தான்' கணிசமான அதிகாரம் "நிழல் மனிதர்கள்" கையில் இருக்கும் என்கிறார் ராஜன். அப்படியான ஒரு நிழல் மனிதர் இந்திராவின் செயலரான ஆர்.கே. தவான் என்கிறார். இந்திராவின் ஆட்சியின் மீது வைக்கப்பட்ட மிக முக்கியமான குற்றச்சாட்டே இம்மாதிரி நிழல் அதிகார மையத்தின் மீது தான். இந்திராவின் கேபினட் வேறு சமயலறை கேபினட் (kitchen cabinet) வேறு என்கிற விமர்சனம் அக்காலத்தில் மிக நியாயத்தோடு வைக்கப்படது. எம்.ஜி.ஆரின் நிழல் அதிகார மையம் டி.ஜி.பி. மோகந்தாஸ். கருணாநிதியின் 2006-2011 ஆட்சிக் காலத்தில் அவர் குடும்பங்கள் (2) அதிகார மையங்கள் ஆயின. நிழல் அதிகார மையங்கள் வாரிசு அரசியலுக்கான வாதத்துக்கு வலுச் சேர்க்காது மாறாக அவை மக்கள் தேர்ந்தெடுத்த தலைவர்களின் போதாமையைத் தான் சுட்டிக் காட்டுகின்றன.
நடிகர்களின் பிள்ளைகள் நடிக்க வருகிறார்களே அவர்கள் மக்கள் ஏற்பதால் தானே பின்னர் வெற்றி பெறுகிறார்கள் என்கிறார் ராஜன். அபிஷேக் பச்சனும், பிரபுவும் பற்பல தோல்விப் படங்களுக்குப் பின் தான் ஓரளவேனும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். உண்மையிலேயே தந்தையரின் பெயர் இல்லையென்றால் இவர்கள் காணாமல் போயிருப்பார்கள் என்பது தான் உண்மை. இது அடிப்படையில் ஓர் அநீதி. இதை முன்னுதாரனமாக்குவது அதுவும் தான் சார்ந்த கட்சியின் அவல நடவடிக்கைக்காக அதைச் செய்வது ஒரு பக்கா உடன்பிறப்பின் செய்கை.
இதில் வேடிக்கை என்னவென்றால். 1990-இல் கருணாநிதி குடும்பத்தில் முதன் முதலில் தொழில் முறை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்போருக்கு 5 மார்க் இலவசம் என்று அறிவித்தார். அப்பன் வீட்டு சொத்தா என்ன. அள்ளிக் கொடுத்தார் பாரி வள்ளல். அப்போது அவர் சொன்னது ‘இத்திட்டம் மருத்துவர் பிள்ளைகள் மருத்துவர் ஆவதை தடுக்கவே’. அப்போதே பலரும் மு.க.ஸ்டாலினை சுட்டிக் காட்டினார்கள். ஒரு வேளை கருணாநிதியின் அத்திட்டம் ராஜனுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ.
தனியார் கம்பெணிகளில் வாரிசுகள் தலைமைப் பொறுப்புக்கு வருவதையும் அவர்களே பெற்றோரின், பொதுவாகத் தந்தையின், ‘பங்குகளுக்கு’ (shares) உரிமைதாரர் ஆவதையும் சுட்டிக் காட்டுகிறார் ராஜன். திமுகத் தனியார் கம்பெனியா? மேலும் இன்று உலக ஜாம்பவான்களான மைக்ரோசாப்ட், IBM, ஆப்பிள் போன்றவற்றிலும் இன்ன பிற கம்பெனிகளிலும் வாரிசுகள் தலைமைப் பொறுப்பில் இல்லை என்பதோடு அவற்றின் பில்லியனர் முதலாளிகள் தத்தம் சொத்துகளைக் கூடத் தர்மத்துக்கு எழுதி வைக்கும் போக்கு இருக்கிறது.
இங்கே ஓர் முக்கியமான வித்தியாசம் நான் பட்டியலிட்டது எல்லாம் அமெரிக்க நிறுவனங்கள். அமெரிக்கக் காங்கிரஸிலும் வாரிசுகள் அதிகமாவது கவலையோடு நோக்கப் படும் ஒன்றே தவிர யாரும் அதை ‘ஆகா அதனாலென்ன’ என்று பேசவில்லை. அடிப்படையில் இந்தியர்களுக்குச் சலாம் போடும் மனம். நமக்கு இன்னும் தனி மனித உரிமைகள், தனி மனிதன், ஜனநாயகப் பண்பு என்பதெல்லாம் ஊறவில்லை.
ஜார்ஜ் புஷ்சும் ஹிலாரி கிளிண்டனும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட போது வாரிசு அரசியல் பேசப்பட்டது. அவர்கள் கட்சிக்குள்ளேயே அவர்கள் போட்டியிட்டு தான் வேட்பாளர்கள் ஆனார்கள். 2008-இல் ஒபாமா என்கிற சூறாவளி ஹிலாரியை உள்கட்சித் தேர்தலில் தோற்கடித்த போது அதி தீவிர திமுக அபிமானியான என் உறவினர் ஒருவர் சொன்னார், “இதெல்லாம் இங்குத் தான் சாத்தியம். திமுகவில் முடியாது”.
ஜெப் புஷ் 2016-இல் அதிபர் பதவிக்குக் குடியரசு கட்சியில் போட்டியிட்ட போது அசுர பணப் பலத்தோடு நுழைந்தார் ஆனால் டிரம்ப் சூறாவளி அவரைத் தூக்கியடித்தது. ‘ஆகா பார்த்தீரா, வாரிசு அரசியலால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை’ என்று குதூகலிக்க முடியாது. ஜெப் போட்டியிட்டதாலேயே சிலர் விலகவும் செய்தனர். அதே போல் ஹிலாரி 2016-இல் ஜனநாயக கட்சியில் அசுர பலத்தோடு களம் இறங்கி பலரையும் பின் வாங்கச் செய்தார். கடைசியில் மொத்தமாக டிரம்ப் ஜெயித்தார். தகுதியானவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதும் பின்னர் வாரிசுகளின் தலைமை தோற்கடிக்கப் படுவதும் ஆரோக்கியமல்ல. ராகுல் காந்தி அதை இன்று உணர்ந்திருக்கிறார்.
வாரிசு அரசியல் திறமையானவர்களைப் புறந்தள்ளுவதில்லை மாறாக உண்மையிலேயே திறமையானவர்கள் வாரிசுகளை வெல்வார்கள் என்கிறார் ராஜன். இதில் பாதி உண்மை தான் இருக்கிறது. இந்தியா போன்ற ஜனநாயக மரபுகள் வேரூன்றாத மண்ணில் இந்திரா மாதிரி ஒருவர் அதிகார பீடத்தை அடைந்த உடனேயே மக்களின் அன்பையும் ஆதரவையும் மிக எளிதாக அறுவடைச் செய்து விட முடிகிறது. அதன் பின் வேறு தகுதியானவர்களுக்கு அவர்களை வீழ்த்துவது இமாலயச் சாதனை. ‘என்று மடியும் எங்களின் அடிமை மோகம்’ என்று சும்மாவா பாடினான் பாரதி.
சுதந்திர இந்தியாவுக்கு ஜவஹர்லால் நேரு ஆற்றிய பெரும் பணி என்றால் அது அவர் ஜனநாயக மரபுகள் பற்றி ஓர் ஆசிரியனாகவே தேச முழுமைக்கும் மாறியது தான். ஆனால் அவரும் சறுக்கியது அங்கே தான். ஒரு தந்தையாக இந்திரா காங்கிரஸ் தலைவராக ஆனதை ஏற்றார். ஆனால் அவர் முழு மனதோடு அதை ஏற்கவில்லை என்பது மிகச் சிறிய சமாதானம். நேருவின் மீது வைக்கப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டு அவர் தன் நண்பர்களையும் சகோதரியையும் முன் வைத்தார் என்பதே. அதில் ராதாகிருஷ்ணன் மாதிரி நல்லவர்களும் இருந்தார்கள். விஜயலக்ஷ்மி பண்டிட்டும், இந்திராவும் இருந்தார்கள். இன்று அக்காரியங்கள் மிக மிக மோசமான முன்னுதாரங்களாகிவிட்டன. நேரு செய்தார் என்பதாலேயே அவை சரியாகிவிடாது.
கருணாநிதியும் நேரு செய்தார் என்பதற்காகவெல்லாம் தானும் செய்யவில்லை. வாரிசு அரசியல் கருணாநிதியின் ரத்தத்தில் ஊறியது. நேருவின் பல மேன்மைகள் கருணாநிதிக்குக் கிடையாது. முக்கியமாகக் கவனிக்க வேண்டியது நேரு தேசத்தின் ஆட்சியை இந்திராவுக்குத் தாரை வார்க்கவில்லை. கட்சித் தலைமை வேறு தேசத் தலைமை வேறு என்ற புரிதல் நேருவுக்கு இருந்தது. லால்பகதூர் சாஸ்திரிக்கு நேரு தன் மகளைத் தேசத் தலைமைக்கு முன்னிறுத்துவார் என்ற சந்தேகம் இருந்தது உண்மை. ஆனால் நேரு அதைச் செய்யவில்லை என்பதைச் சாஸ்திரி பின்னாளில் ஒப்புக் கொண்டார். தான் யாரையும் முன் முழிய மாட்டேன் என்றும் அப்படிச் செய்தால் முன் மொழியப்பட்டவர் அக்காரணத்தாலேயே நிராகரிக்கப் படக் கூடும் என்றும் நேரு சொன்னார்.
1984-இல் இந்திரா கொடூரமாகக் கொலயுண்ட போது அதில் அரசியல் ஆதாயம் தேட முற்பட்டவர் கருப்பையா மூப்பனார். அவரே ராஜீவை பிரதமராக்கினார். நூறவது முறையாகச் சொல்கிறேன் ஜனநாயக மரபு வேரூன்றாத இந்தியாவில் ராஜீவை மக்கள் ஏக போகமாக ஏற்றனர். ஜாக்குலின் கென்னடி நினைத்திருந்தால் கூட அதிபராகியிருக்க முடியாது. சகோதரர்களின் கொலையைக் கூட டெட் கென்னடியால் அறுவடைச் செய்ய முடியவில்லை. நரசிம்ம ராவ், பிரனாப் முகர்ஜி போன்ற திறமையான அனுபவசாலிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு ராஜீவ் பிரதமரானார். அனுபவின்மையால் பல தவறுகள் செய்து பின்னர் ஆட்சியும் இழந்தார். அப்புறம் இன்னொரு துரதிர்ஷ்டமே நரசிம்ம ராவ் ஆட்சிக்கு வர வழி வகுத்தது. வாரிசு அரசியல் பல பாதகங்களைச் செய்திருக்கிறது. அதை வார்த்தை ஜாலங்கள், சமத்காரமான வாதங்கள் மூலமாக மறைப்பது நேர்மையற்ற செயல்.
திறன்கள் கலாசார மூலதனம் என்கிற அபாயகரமான வாதத்தை முன் வைக்கிறார் ராஜன். அவருக்கே அது பற்றி ஓர் அச்சம் இருக்கிறது அதை ஜாதியம் என்று சொல்லிவிடுவார்களோ என. ராஜாஜியின் கல்விக் கொள்கையை ‘குலக் கல்வித் திட்டம்’ என்று இன்று வரை தூற்றும் திமுகக் கும்பலின் பக்கம் இருந்து இந்த வாதம் முன்வைக்கப்படுவது நகைமுரன். (அல்லது முரன்நகை. ஏதோ ஒன்று). உண்மையில் ராஜனுக்கு, ஓர் பேராசிரியர் என்று அழைக்கப்படுபவருக்கு, இவற்றில் உள்ள அபத்தங்கள் புரியவில்லையா அல்லது அடிமைத் தனம் கண்ணை மறைக்கிறதா?
இந்திரா, சோனியா, ராஜீவ், ராகுல், ஸ்டாலின், உதயநிதி ஆகிய எல்லோரும் சொல்லும் பாடம் வம்சா வழி கலாசார மூலதனம் என்று எந்தக் குப்பையும் இல்லை என்பது தான். காந்தி சொன்ன வர்ணாஸ்ரம் வேறு மனு சொன்ன வர்ணாஸ்ரம் வேரு என்று சொன்னால் வரிந்துக் கட்டிக் கொண்டு வரும் கும்பலின் அங்கத்தினரான ராஜன் முன் வைத்துருப்பதும் அதே தான். நேரு போன்ற ஜனநாயகவாதியின் மகள் ஜனநாயகத்தைக் குழித் தோண்டிப் புதைத்தார். மு.க.ஸ்டாலினுக்கு அவர் தந்தையின் தமிழ் இலக்கிய அறிவோ பேச்சாற்றலோ எள் முனையளவுக் கூடக் கிடையாது. ஸ்டாலின் மு.க.ஸ்டாலினாக இல்லாமலிருந்திருந்தால் இன்று திமுக மேடையில் கூடப் பேசுமளவு வளர்ந்திருக்க மாட்டார். இது தான் கசப்பான உண்மை.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் ஒரு மாணவன் அல்லது ஒரு வேட்பாளரின் வெற்றிக்கு அடிக் கோலுவது இன்று மிக அதிகமாக விவாதிக்கப்படுவது. மேலும் குடும்பச் சூழல் ஒருவருக்கு அளிக்கும் முன்னுரிமைகளும் சாதகங்களும் அவை கிடைக்கப் பெறாத இன்னொருவருக்கும் ஒரு சம தளத்தை (level playing field) உருவாக்குவதே இன்று முக்கியமான உரையாடல். இன்று ஜனநாயகம் பற்றி உரையாடும் எந்தப் பேராசிரியரும் அதைத் தான் செய்வார். அப்படிச் செய்யாத ஒருவர், பேராசிரியராக இருந்தாலும், கழக உடன்பிறப்பே.
ராஜனை நேற்று நான் ‘நீங்கள் பேராசிரியரா அல்லது உடன் பிறப்பா?’ என்று நான் கேட்டது அவரை மிகவும் சீண்டியிருக்கிறது. சீண்டுவது நோக்கமல்ல ஆனால் தான் என்னவாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். பேராசிரியர் உடன்பிறப்பாக இருக்கக் கூடாதா என்று கேட்டார். தாராளமாக இருக்கலாம் அப்புறம் அதற்குரிய மரியாதை தான் கிடைக்கும்.
பேராசிரியர்கள் கட்சி சார்பாகவோ சித்தாந்தத்தின் சார்பாகவோ தாராளமாகப் பேசலாம். கோஷமும் போடலாம். ஆனால் தங்கள் சார்பு நிலையை நியாயப் படுத்த தங்கள் அறிவையெல்லாம் திரட்டி சால்ஜாப்புகள் சமைக்கும் போது அவர்கள் ஒரு அகடெமிக் (academic) தளத்தில் இருந்து இறங்கி தெருவில் கோஷம் போடும் அடிமட்டத் தொண்டனாகிவிடுகிறார்கள். இந்நிலைக்குப் போகும் முதல் பேராசிரியர் ராஜன் அல்ல. அவர் கடைசியுமல்ல. இப்படிக் கீழிறங்கும் பேராசிரியர்கள் இடது சாரி மற்றும் கம்யூனிஸ்ட் சார்பு கூடாரங்களில் மிக அதிகம். இன்று அதற்குப் போட்டியாக இந்தியாவில் பாஜக ஆதரவு ஆசிரியர்கள் உருவாகுகிறார்கள்.
இந்த விவாதத்தின் தொடர்பாக ராஜன் எழுதிய இன்னொரு பதிவில் அவர் பேஸ்புக்கில் பதிவுகள் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து ‘neo monarchy’ என்பதே அவர் அரசியல் கோட்பாடு என்று கூறியிருப்பதாகவும் “அதைப் பல முறை நிலைத் தகவல்களில் குறிப்பிடவும் செய்திருக்கிறேன்” என்றார். முதல் கமெண்டில் நண்பர் ஒருவர், “neo monarchy ஆதரவாளரா? இதைப் பற்றி நீங்கள் எங்கேனும் விளக்கி எழுதியிருந்தால் படிக்க ஆவல்” என்று கேள்விக் கேட்டார். அதற்கு ராஜன், “இந்தச் சொற்சேர்க்கையைப் பயன்படுத்தாமல் வாரிசு அரசியல் பற்றி எழுதியுள்ளேன். இனிமேல் பயன்படுத்துவேன்” என்று பதில் சொன்னார். இந்தப் பதிலும் அவர் பதிவில் எழுதியதும் நேரெதிர். பல முறை ‘neo-monarchy’ பற்றி எழுதியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அப்புறம் அந்தச் சொற்களைப் பயன் படுத்தியதேயில்லை என்கிறார். பேஸ்புக் பதிவுகள் முனைவர் ஆய்வுக் கட்டுரைகள் அல்ல ஆனாலும் இப்படி முன்னுக்குப் பின் முரனாகக் பேசுவதை என்ன சொல்வது?
இந்த விவாதத்துக்கே தேவையில்லாத இடையீடுகள் ஜெயமோகனுக்கும் எனக்குமான உறவும் என் குடியுரிமையும். இணையத்தில் திமுகச் சார்பில் கம்பு சுத்தும் பலர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களே. அதில் ஒருவர் சமீபத்திய தேர்தலில் தமிழகம் சென்று பிரச்சாரமே செய்தார். புலம் பெயர்ந்தவர்கள் பலரும் இந்திய அரசியலில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவர். ஓர் அமெரிக்கனாகவே இருந்தாலும் இந்தியா என்கிற ஜனநாயகத்தை உற்று நோக்குவோர் பலர். ராஜன் நினைப்பது போலல்லாமல் இன்று வரை நான் ஜெயமோகனின் வெண் முரசை படித்ததில்லை. என் வீட்டுக்கு வந்து தங்குகிறேன் என்ற போதே ஜெயமோகன் “அதற்காக நீங்கள் என்னை எதிர்ப்பதை எல்லாம் எதுவும் மாற்றிக் கொள்ள வேண்டாம்” என்றார். அதற்கு முன்னும் பின்னும் அவரை மறுத்தும் ஏற்றும் எழுதியிருக்கிறேன். மனம் போன போக்கில். இது போன்ற வாதங்களைக் கிளப்புவது உடன் பிறப்புகள் ஸ்டைல்.
திமுகத் தனியார் நிறுவனம் அல்ல. நாளையே ஆட்சிக் கட்டிலில் அமரக் கூடிய பிரதான எதிர் கட்சி. திமுகவோ அதிமுகவோ அவற்றில் இப்படித் தலைமைகள் தோன்றுவது இந்திய ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிப்பது. இவற்றை மக்கள் ஏற்றாலும் அதைக் கண்டிக்க வேண்டிய பொறு அறிவுத் தளத்தில் செயல்படுவதாகச் சொல்லிக் கொள்ளும் யாருக்கும் கடமை. இது போன்ற கட்டுரைகளால் ராஜன் ஏதோ தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைகிறார் என்பதல்ல என் வாதம். இன்னும் சொல்லப் போனால் எவ்வித ஆதாயத்தையும் எதிர்ப்பார்த்து அவர் இவ்வாதங்களை முன்னெடுக்கவில்லை. அவர் இவ்வாதங்களை உள சுத்தியோடு நம்புகிறார் என்பதே இதை முக்கியமாக்குகிறது.
முடிவாக, வாரிசுகள் வாரிசுகள் என்பதாலேயே தடுக்கப் படுவதோ வாரிசுகள் என்பதாலேயே முன்னிறுத்தப்படுவது இரண்டுமே ஜனநாயக விரோதம். இதில் இரண்டாம் வகை மிக ஆபத்தானது.
திமுக சங்கர மடம் இல்லை. சங்கர மடத்தில் வாரிசுகள் பதவிக்கு வருவதில்லை.
சுட்டிகள்:
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.