டில்லி நிஜாமுதீன் இஸ்லாமிய விழாவில் கரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு பிடித்து மருத்துவம் பார்க்காமல் ஓரிடத்தில் அடைத்து வைத்து சாக விட்டு விட வேண்டும் என்று இந்துத்துவர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
கருனைகளுள் மானுட அளவிலான கருணை, தெய்வாம்சமான கருணை என்று இரு வகைகளை பாரதி குறிப்பிடுகிறான். பின்னது தனக்கு கெடுதல் செய்வோருக்கும் நன்மைப் புரிவது. அத்தகைய கருணைக்கு உதாரண புருஷர்களாக அவன் முன்னிறுத்தியது இயேசு கிறிஸ்துவையும், புத்தனையும்.
நேற்று முதல் எல்லா இந்துத்துவர்களும் விஷம் கக்கிக் கொண்டிருக்கிறார்கள் "ஐயகோ பார்த்தீரா இந்த முஸ்லீம்களை" என்று. எத்தனையோ ஊர்களில் ஊரடங்கு உத்தரவை குப்பையில் போட்டிருக்கிறார்கள். காணொளிகள் கிடைக்கின்றன. இந்திய முஸ்லிம்கள் இந்தியர்கள் தானே? இந்தியர்கள் எப்படிப் பொதுவில் "நீ என்னச் சொல்வது நான் என்ன கேட்பது" என்று இயங்குவார்களோ அப்படித்த்தானே அவர்களும். சினிமா தியேட்டரில் கூட வரிசையில் நின்று டிக்கட் வாங்கத் தெரியாத சமூகத்தில் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும். கோவையில் கடைத்தெருக்களில் கூட்டம் இருக்கிறது, மீன் மார்க்கெட்டில் கூட்டம் இருக்கிறது. அதெல்லாம் பெரும் விவாதமாகவில்லை. அட, கொடுமையே மருத்துவர்களை வீட்டை காலிப் பண்ணச் சொல்கிறார்கள். சரி, அதெல்லாம் ஒரு புறம். கும்ப மேளாவும் காலராவும் என்று சும்மா தட்டிப் பாருங்கள் இணையத்தில்.
2018-இல் வெளியான் ஓர் ஆய்வறிக்கைச் சொல்கிறது, 2015-இல் நடந்த கும்ப மேளாவின் விளைவால் கோதாவரி நதியின் பாக்டீரியா தொகுப்பின் வகைமை மாறியதாம், மேலும் மருந்து எதிர்ப்பு சக்திக் கொண்ட சூப்பர் நுண்கிருமிகள் (super bugs) உண்டானவாம். அது மட்டுமல்ல இயற்கையாக நதிகளில் தோன்றும் பாக்ட்டீரியாக்களை விட மனித முகம், கைகள், மலம் ஆகியவற்றில் தோன்றும் பாக்ட்டீரியாக்கள் மிகுந்தனவாம். சுற்றுச் சூழல் பாதுகாவலர்களுக்கும், தொற்று நோய் தடுப்பாளர்களுக்கும் பிரத்யேக சவால் மக்களின் மூட நம்பிக்கை. புனித நீராடும் தலங்கள் நோய் அளிக்காது என்கிற மூட நம்பிக்கை பெரிய சவால். கும்ப மேளாவுக்கும் காலராவுக்கும் நீண்ட தொடர்புண்டு.
1891-இல் நடந்த கும்ப மேளாவில் காலரா பரவி இறந்தோர் எண்ணிக்கை 724,384. 1895-இல் காப்டன் ஹெர்பர்ட் "The Natural History of Hardware Fair Cholera Outbreaks" என்று ஓர் ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். அற்புதமான ஆய்வறிக்கை (சுட்டியை ரெபெரன்ஸ் பகுதியில் கான்க). சுற்றுச் சூழல் தண்ணீரில் இருந்து சாம்பிள் எடுத்து ஆய்வு, மேளாவுக்கு வந்தவர்கள் கணக்கு, ஹரித்வாரில் கங்கையின் நீரளவு (1881-1894 வரை ஒவ்வொரு ஆண்டும்), படித்துறைகள் பற்றிய குறிப்புகள், மேளாவுக்க்குப் பிறகான தட்ப வெப்பம் என்று மிகச் சீரிய ஆய்வு. பிரமாதம். எல்லாம் வல்ல மெக்காலேவுக்கு நன்றி. இல்லைன்னா "இதெல்லாம் விதிப்படின்னா நடக்குது" அப்படீன்னு சொல்லியிருப்பாங்க. இந்த ஆய்வில் 1894-இல் British Medical Journal கும்ப மேளா பற்றி ஆராய்ந்ததையும் ஹெர்பர்ட் மேற்கோள் காட்டுகிறார், அதில் "தெளிந்த நீர் நேரமாக ஆக குளிப்பவர்களினால் அழுக்கடைந்தது, நாற்றமடித்தது, அந்நீரில் நுண்ணுயிரிகள் பல்கி பெருகின" என்றது. 1867-இலும் இந்திய சுகாதார ஆய்வறிக்கை இதுப் போன்றச் செய்தியைச் சொல்லியிருக்கிறது.
கும்ப மேளா சமயத்தில் காலரா எல்லா தடவையும் உருவாவதில்லை என்பதையும் சுட்டி அதற்கான விளக்கத்தையும் ஹெர்பர்ட் அளித்தார். முடிவாக அவர் கும்பல் கூடுவதால் அழுக்கான நீர், நீரின் அளவு, தட்ப வெப்பம், ஹரித்துவார் தாண்டி காலரா பரவும் போது அந்தந்த உள்ளூர் வகைமை இன்னும் வலுவுடைய காலராவாக மாற வாய்ப்புகள் உண்டு என்று தெரிவிக்கிறார்.
காலரா உலகளாவிய பரவலாக்கத்தில் (Pandemic) முக்கிய வருடம் 1899. ஹரித்துவார் கும்ப மேளாவில் உருவான காலரா பஞ்சாபை அடைந்தது. அதன் பின் வலுப்பெற்று உலகெங்கிலும் 25 வருடங்கள் பற்பல கோடி உயிர்களை காவு வாங்க்கியது. இந்தியாவில் மட்டும் 800,000. அப்போதிருந்த மக்கட் தொகையில் இது மிகப் பெரிய விழுக்காடு. கும்ப மேளாக்களினால் உருவான காலரா பல வருடங்களில் பல இந்தியர்களை, எல்லா மதத்திலும், காவு வாங்கியிருக்கிறது. இதில் கும்ப மேளாக்களின் போது நடக்கும் கூட்ட நெரிசல் அசம்பாவிதங்களை சேர்க்கவில்லை. அது தனி கணக்கு.
20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே ஆங்கிலேய அரசு இந்து மத விழாக்களின் போது காலரா பரவுவதை தடுக்க நடவிக்கைகள் எடுத்தன. இன்றைய இந்துத்துவ வெறியர்களைப் போல் அவர்கள் நடக்கவில்லை. 1912-இல் அரசு மத யாத்திரை தலங்களில் சுகாதார ஆய்வு நடத்த ஒரு கமிட்டியை ஏற்பாடு செய்தது. சென்னை கமிட்டி சென்னை ராஜதானியில் 21 திருத்தலங்களைப் பார்வையிட்டது. நடுவில் உலக மகா யுத்தம் இடையூறுச் செய்தது. பின்னர் 1920 ஒரு பிரத்தியேக ஆபீஸர் நியமிக்கப்பட்டார். அவர் நேரடிப் பார்வையில் 1920 கும்பகோணம் மகாமகத்துக்கான சுகாதார அமைப்புகள் செய்யப்பட்டன. கும்பகோணத்தில் விழா தொடங்கும் முன்னரே காலரா பரவ ஆரம்பித்தாலும் விழா செவ்வனே நடைப்பெற்றதுடன் விழாவினால் காலரா மேலும் பரவவில்லை. அந்த ஆபீஸர் 1922-இல் இறுதி அறிக்கையை சமர்பித்தார். இந்து பக்த சிரோண்மணிகள் குவியும் இடங்களில் சுகாதார அமைப்புகள் செய்வதன் அவசியத்தை அறிக்கை வலியுறுத்தியது. மகாமகத்தை நல்லபடி நடத்தி முடித்த அந்த ஆபீஸர் மருத்துவர் கே.டி. மேத்யூ. அவர் மேத்யூ, ஜடாயு அல்ல, செத்துப் போகட்டுமே என்று சொல்வதற்கு.
உச்ச நீதிமன்ற வக்கீலும் எழுத்தாளருமான அபினவ் சந்திரசூட் பிளேக் நோயின் போது ஆங்கிலேய அரசு எடுத்த நடவடிக்கைகளும் அதற்கு மக்கள்பால் எழுந்த அதிருப்தி பற்றியும், முக்கியம பால கங்காதர திலகரால் தூண்டப்பட்ட மருத்துவர்களை கொன்ற சாப்பேக்கர் சகோதரர்கள் பற்றியும் அருமையான கட்டுரை எழுதியுள்ளார்.
1896-இல் மும்பையில் பிளேக் நுழைந்தது. நோய் பீடித்த 80 சதவீதத்தினர் செத்து மடிந்தனர். ஆங்கிலேய அரசு நோயைச் சமாளிக்க ஒரு சட்டத்தை அமல் செய்தது. அச்சட்டத்தின் படி வீடு வீடாக அதிகாரிகள் உட் புகுந்துச் சோதனைச் செய்யவோ, நோயுற்றவர்களை இழுத்துச் செல்லவோ முடியும். அப்போது சமீபத்தில் அறிமுகமான புகைவண்டிகளிலும் பிரயாணிகளை சோதிக்கவோ இழுத்துச் செல்லவோ முடியும். உடல் முழுதும் சநாதனம் ஊறிப் போன பிராமணரான திலகருக்கு கோபம் வந்தது. திலகர் தன் பத்திரிக்கையில் மராட்டிய மன்னன் சிவாஜி காலத்தில் யாராவது நம் வீட்டுப் பெண்கள் மேல் கை வைத்திருப்பார்களா என்று தலையங்கம் எழுதினார். வேறு இரண்டு பேருக்கு (பிராமணர்களா என்று தெரியவில்லை ஆனால் உயர் ஜாதியினர்) உடனே மூக்கில் வேர்த்தது. சாப்பேக்கர் சகோதரர்கள் என்று இன்று அடையாளப்படுத்தும் இருவர் பிளேக் நோயை கட்டுப்படுத்த முயன்ற அதிகாரிகளை சுட்டுக் கொன்றார்கள். அந்த சாபேக்கர்களுக்கு பிந்நாளைய இந்திய அரசு ஸ்டாம்பு வெளியிட்டு கவுரவம் செய்தது. இந்தியர்கள் விந்தையானவர்கள். மகாமகத்தை காப்பாற்றிய கே.டி.மேத்யூ பற்றி ஒரு செய்தியும் கண்டறிய முடியவில்லை ஆனால் சாப்பேக்கர் சகோதரகள் பற்றி விக்கிப்பீடியா பக்கமே இருக்கிறது.
அப்போது ஆங்கிலேய அரசின் முக்கிய பிரச்சனை மருத்துவமனைக்கு செல்ல மறுத்த இந்துக்களை கவனிப்பது. பலருக்கு மருத்துவமனை சென்று கீழ் ஜாதிக்காரனோடு ஒரே அறையில் இருக்க நேர்வதை விட இறப்பதே மேல் என்ற வீம்பு வேறு. அவர்களை, ஜடாயு சொல்வதைப் போல், 'செத்துப் போ' என்று விடாததற்கு அந்த ஆங்கிலேய அதிகாரி கொடுத்த விலை அவரது உயிர். சந்திரசூட் அக்கட்டுரையில் வைக்கும் முக்கியமான கருத்து அரசு நோயைக் கட்டுப்படுத்த அத்துமீறிய அடுக்கு முறையை ஏவுவது தவறு என்பதே.
ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ் முதல் அநேக ஆயுர்வேத (இந்திய அறிதல் முறை மருத்துவம்) ஆகியவற்றால் தவறான மருத்துவத்தால் உயிர் இழந்தவர்களைப் பற்றி ஆய்வு நடத்த வேண்டிய நிலையில் என்னமோ தாங்கள் மாத்திரம் ஐன்ஸ்டீனின் பேரப் பிள்ளைகள் மாதிரியும் இஸ்லாமியர் மூட நம்பிக்கைகளும் மதப் பற்றும் கொண்டவர்கள் அவர்களை செத்துப் போக விட்டு விட வேண்டும் என்றெல்லாம் கூவுவது அநாகரீகம்.
சென்ற வருடம் கிட்டத்தட்ட ரூ.4200 கோடி செலவழித்து மிக, மிக பிரம்மாண்டமாகவும், சுத்தமாகவும் கும்ப மேளா நடத்தப்பட்டது. ஆங்கிலேய அரசு காப்பாற்றிக் கொடுத்த மேளா தான் இன்று விசுவரூபமெடுத்து இருக்கிறது. இது தான் ஒரு சமூகம் செய்யக் கூடியதும், செய்ய வேண்டியதும்.
அறிவியல் அறிவும், அற உணர்வு ஆகியவை கொஞ்சமேனும் நம் அறிவை மேம்படுத்தினால் இந்த விவாதமே தேவையிருந்திருக்காது.
References:
- https://en.wikipedia.org/wiki/Haridwar_Kumbh_Mela
- https://en.wikipedia.org/wiki/1899–1923_cholera_pandemic
- https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/19328/7/07_chapter%203.pdf
- ஹெர்பர்ட் ஆய்வறிக்கை https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5142980/pdf/indmedgaz71281-0010b.pdf
- https://scienceline.org/2018/11/worlds-largest-gathering-infectious-disease/
- https://www.sciencedirect.com/science/article/pii/S1201971216000114#bib0140
- https://www.ncbi.nlm.nih.gov/pubmed/29536131
- https://mumbaimirror.indiatimes.com/opinion/columnists/ajit-ranade/after-kumbh-an-epidemic/articleshow/69065187.cms
- https://www.clinicalmicrobiologyandinfection.com/article/S1198-743X(14)00107-4/pdf
- https://apps.who.int/iris/bitstream/handle/10665/41711/WHO_MONO_43;jsessionid=CC0CD469FAF655BA182ECB1CBE916D30?sequence=1
- Mahamakam and Dr K.T. Matthew https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/102837/6/thiru_chapter%204.pdf
- திலகர், பிளேக் நோய் https://theprint.in/opinion/plague-1896-sedition-covid-19-mustnt-set-laws-outlive-crisis/386552/
- சாப்பேக்கர் சகோதரர்கள் https://en.wikipedia.org/wiki/Chapekar_brothers
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.