உ.வே.சா என்றறியப்பட்ட ‘உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன்’ (1855-1942) தமிழ்த் தாத்தா என்று பரவலாக அறியப்படுபவர். இன்று அவர் குறித்து இரண்டு தரப்பு உள்ளது. ஒன்று அவரைப் போற்றுபவர்கள், இரண்டு அவரைத் தூற்றுபவர்கள் அல்லது அதீதமாகப் போற்றப்படுகிறார் என்று குறைபடுவோர். இவ்விரு தரப்பிலும் அவர் பற்றிய ஞானமும் அவர் பணியின் சிறப்பும் அறியாதவர் தான் அதிகம். ஏன் என்று தெரியாமலே, செவி வழிச் செய்திகளை வைத்தே, போற்றுதலும் தூற்றுதலும் நடக்கிறது.
தமிழ்ப் பதிப்புத் துறையில் “ஆறுமுக நாவலர் அடித்தளம் அமைத்தார், சி.வை. தாமோதரம் பிள்ளை சுவர் எழுப்பினார், உ.வே.சா கூரை வேய்ந்தார்” என்ற திரு.வி.கவின் மேற்கோளைச் சுட்டிக் காட்டி சுப.வீரபாண்டியன், “அடித்தளம் அமைத்தவர், சுவர் எழுப்பியவரை விட்டுவிட்டு கூரை வேய்ந்தவரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறோம்” என்றார். பதிப்புலக வரலாற்றில் உ.வே.சாவுக்கு என்ன இடம் என்று பார்ப்போம்.
யாருக்காக
உ.வே.சா எழுதிய ‘என் சரித்திரம்’ படிக்கும் அவகாசமோ, வசதியோ இல்லாதவர்கள் ஆனால் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பவர்களுக்கானது இப்பதிவு. மேலும் சுப.வீ மாதிரி ஒருவர் போகிற போக்கில் சொல்வதை எதிர் கொள்ள ‘என் சரித்திரம்’ மட்டும் படித்தால் போதுமானதல்ல அதைத் தாண்டி கொஞ்சம் பரந்த பார்வை வேண்டும். கொஞ்சம் தேடலும் குழு மனப்பான்மையும் இல்லாத சாதாரண வாசகருக்கானது இப்பதிவு.
முன்னோடிகள்
“நான் என் முன்னோர்களை விட அதிக தூரம் உலகைப் பார்க்க முடிந்ததற்குக் காரணம் நான் அவர்களின் தோளின் மீதேறி நின்றேன்” என்றார் ஐசக் நியூட்டன். உ.வே.சா அவர் தம் எழுத்தில் தன் முன்னோடிகளையும் சம காலத்தவர்களையும் அடையாளப்படுத்தியிருக்கிறார்.
உ.வே.சாவின் முன்னோடிகளுள் முக்கியமானவர்கள், முறையே, ஆறுமுக நாவலர் (1822-1879) மற்றும் சி.வை.தாமோதரம் பிள்ளை (1832-1901). நாவலருக்கும் சி.வை.தாவுக்கும் இரண்டு ஒற்றுமைகளுண்டு. இருவரும் இலங்கையிலிருந்து தமிழகம் வந்தவர்கள். இருவருக்கும் கிறிஸ்தவத்தோடு தொடர்புண்டு. நாவலர் பைபிள் தமிழ் மொழியாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். சி.வை.தாவையும் நாவலைரையும் இணைக்கும் கண்ணி, இலங்கையிலும் தமிழகத்திலும் கிறிஸ்தவ இறைப் பணியாற்றிய பீட்டர் பெர்சிவல் என்கிற சமஸ்கிருதமும் தமிழும் பயின்ற பாதிரியார்.
இலங்கையில் கிறிஸ்தவ மத குருமார் மத மாற்றத்துக்காக நடத்திய இந்து மத நிந்தனைப் பிரச்சாரங்களால் சீண்டப் பட்டு சைவ சன்னதமாக உருமாறியவர் ஆறுமுக நாவலர். தமிழகம் வந்த நாவலர் சைவ நூல்களைப் பதிப்பித்தார், சைவப் பள்ளிகள் நடத்தினார். அவர் பதிப்பு முறைகளைக் கற்றது விவிலிய மொழியாக்கத்தின் போது. நாவலரின் முக்கியமான பதிப்புகள், பெரிய புராணம், நன்னூல், தொல்காப்பியம் மற்றும் கிறிஸ்தவப் பிரச்சாரங்களை எதிர்கொள்ள சைவர்களுக்கு உபயோகம் ஆகும் வகையிலான நூல்கள்.
ஆறுமுக நாவலர் |
ஓலைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கும் எவரும் எதிர்கொள்ளும் இடையூறுகள் சுவடிகளில் மெய்யெழுத்துகள் கையாளப்பட்ட விதம், நிறுத்தக் குறிகள் (Punctuation) இல்லாமை (கவனிக்கவும் ‘நிறுத்தக் குறிகள் என்ற வார்த்தையே சமீபத்திய மொழியாக்கம் தான்), பலவித பிரதிகள் சுற்றலில் இருப்பது ஆகியவை. பிரதிகளைச் சேகரித்து பாட பேதங்கள் களைந்து, “அருஞ்சொற்பொருள் தரல், இடப்பெயர் சுட்டல், பிற நூல் சுட்டல்”, மேலும் இலக்கணப் பிழைகள் களைந்து நல்ல அச்சுக் கோர்ப்பில் பதிப்பிப்பதே நாவலர் காலத்தில் பெரும் சாதனைகள்.
திருக்குறள் தவிர மற்ற பதிப்புகளில் மிகச் சொற்பமாகவே அடிக்குறிப்புகள் கொடுக்கிறார் நாவலர். “பெரிய புராணத்தில் 4 அடிக்குறிப்பு” தான். எந்தப் பிரதிகள் பயன்படுத்தப்பட்டன என்ற குறிப்புகள் நாவலர் பதிப்பில் இல்லை. பதிப்புரை, முகவுரை எழுதும் வழக்கம் நாவலருக்கில்லை. சில நூல்களில் அவை இருக்கின்றன. இக்குறைகளை நினைவில் நிறுத்திக் கொள்ளவும்.
ப. சரவணனின் “தாமோதரம்: சி.வை.தா பதிப்புரைகள்” சி.வை.தா பற்றி அறிந்துக்கொள்ள முக்கியமான நூல். சி.வை.தா பிறப்பால் கிறிஸ்தவர் பின்னர் சைவத்துக்கு மாறினார். இவர் உ.வே.சாவுக்குப் பதிப்புலகில் முன்னோடி என்றாலும் சம காலத்தவரும் கூட. சி.வை.தா 12 நூல்கள் பதிப்பித்துள்ளார், அவற்றுள் முக்கியமானவை தொல்காப்பியம் (1868, 1885, 1886, 1891, 1892), வீரசோழியம் (1881, 1895), கலித்தொகை(1887). உ.வே.சாவின் முதல் நூல் பதிப்பு 1878-இல், அதன் பிறகு முதல் முக்கிய நூல் பதிப்பு 1887-இல் சீவக சிந்தாமணி. ஆக சி.வை.தா உ.வே.சா.வுக்கு முன்னோடி என்று தெளிவாகிறது.
ஓலைச் சுவடிகளைப் பெறுவதில் சி.வை.தா.வுக்குப் பிரத்தியேக சங்கடங்கள் இருந்தன என்கிறார் சரவணன். பிறப்பால் கிறிஸ்தவர், வேற்று தேசத்தவர், மடங்களில் பயிலாதவர் ஆகியவை அவருக்கு தடங்கல்கள் என்கிறார் சரவணன். மேலும் தன் பதிப்புகளில் சி.வை.தா சுவடிகளின் உரிமையாளர்கள் பற்றி எழுதிய எதிர் மறைக் கருத்துகளாலும் மேலும் சுவடிகள் கிடைப்பதில் தடங்கல்கள் சந்தித்திருக்கலாம்.
ஒரு நல்ல பதிப்பாசிரியன் நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர், பரிசோதகனாசிரியர் ஆகிய எல்லா குணங்களும் ஒருங்கே கொண்டிருக்க வேண்டும் என்கிறார் சி.வை.தா. நூல்களைப் பதிப்பிக்கும் போது புதிய வழக்கமாக நூலின் காலம், ஆசிரியர் காலம் ஆகியவற்றை அக மற்றும் புறச்சான்றுகள் வைத்து கணித்து சி.வை.தா குறிப்பிடும் வழக்கம் கொண்டிருந்தார். காலனி ஆட்சியில் வெளியான இலக்கிய வரலாறுகள், இலக்கிய மற்றும் பண்பாட்டாய்வு பத்திரிக்கைகளில் பழம் இலக்கியம் மற்றும் வேதங்களுக்கு காலம் கணிப்பது ஒரு புது ஆர்வத்தோடு மேற்கொள்ளப்பட்டது.
நாவலரைப் போலல்லாது சி.வை.தா சமய நூல் பதிப்புகளை விட இலக்கண நூல் பதிப்பில் ஆர்வம் காட்டினார். மீண்டும், மீண்டும் புதிய புதிய உரைகள், புதிய சேர்க்கைகளோடு தொல்காப்பியத்தை பதிப்பித்தார். இவர் பதிப்பித்த இலக்கணம் சாராத பழந்தமிழ் இலக்கிய நூல் கலித்தொகை (1887). சி.வை,தா இயற்றிய நூலில் முக்கியமானவை ‘சைவ மகத்துவம் (1867)’ மற்றும் ‘விவிலிய விரோதம்’ (1867). நாவலரும், சி.வை.தா.வும் சைவ சமய நோக்குடையவர்களே. நாவலர் பிராமணர்களை எதிர்த்ததோடு, தீவிர சாதிய நோக்கும் உடையவர் தான்.
சி.வை.தா.வின் பங்களிப்பு 12 நூல்கள். அவற்றுள் தொல்காப்பியம் மட்டுமே நான்கு பதிப்புகள். 1867-இல் கலித்தொகை வெளிவந்த போது உ.வே.சா.வின் முதல் பழந்தமிழ் இலக்கிய பதிப்பும், பேரிலக்கியம் என்றும் சொல்லத் தக்க சீவக சிந்தாமணி வெளிவந்தது. தமிழ்ப் பதிப்புலகின் இன்னொரு யுகத்தின் முதல் படி அது.
உ.வே.சா, நாவலர், சி.வை.தா, போலல்லாது சமய நோக்கற்றவராக இருந்தார். எந்த சமயத்துக்கும் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ பிரச்சாரத்துக்காகவோ நூல்களைப் பதிப்பிக்காமல் தமிழுக்காகவே பதிப்பித்தார். அதற்குச் சான்று அவர் முதன் முதலில் பதிப்பித்த பழந்தமிழ் இலக்கியமான சீவக சிந்தாமணி அனுபவங்கள்.
சீவக சிந்தாமணியும் பதிப்பு முயற்சிகளும் உ.வே.சா.வுக்கு கிடைத்த அறிமுகமும்
சீவக சிந்தாமணியை உ.வே.சா கண்டெடுத்தவர் அல்ல. அவருக்கும் முன்பே அந்நூலின் இருப்பு அறிஞர்கள் மத்தியில் தெரிந்து இருந்தது. 1858-இல் வெளியான ''The Madras Journal of Literature and Science' இதழில் ரெவெரெண்ட் பெர்சிவல் சிந்தாமணி குறித்து நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார் (Reference # 25). 1868-இல் ரெவெரண்ட்.பவர் (Rev. H. Bower) சிந்தாமணிக்கு ஓர் அறிமுக நூல் எழுதி அதன் முதல் பகுதியான நாமகள் இலம்பகத்தை பதிப்பித்துள்ளார், கிறிஸ்தவ அச்சகத்தில் ( Christian Knowledge Society’s Press, Vepery).
ஆக, உ.வே.சா.வுக்கு ஏன் முக்கியத்துவம்? பவர் பதிப்பு பலரால் சுட்டிக் காட்டப்படுகிறது உ.வே.சா எதையும் புதிதாகச் செய்யவில்லை என்று. மிகத் தவறு. பவர் பதிப்பித்தது ஒரு சிறு பகுதியைத் தான். அதுவும் ஆங்கிலமும் தமிழும் கலந்து எழுதிய பதிப்பு அது. சி.வை.தா.வுக்குச் சீவக சிந்தாமணி பற்றிக் கேள்வி ஞானம் தான் இருந்தது. ஒரு முழு பதிப்புக்கான மொத்த நூலின் தொகுப்பு அவரிடம் இல்லை.
அக்டோபர் 10, 1880 அன்று உ.வே.சா மெத்தப் படித்த, தமிழிலும் வட மொழியிலும் தேர்ச்சி பெற்று சங்கீத ஞானமும் உடைய சேலம் இராமசாமி முதலியாரைச் சந்தித்த போது முதலியார் உ.வே.சா படித்தறிந்த பழந்தமிழ் இலக்கியம் பற்றி வினவினார். உ.வே.சா தாம் படித்தறிந்த இலக்கியங்களைப் பட்டியலிட்ட போது, “அவற்றுக்கெல்லாம் பழமையானது தெரியுமா” என்றார் முதலியார். பிறகு சீவக சிந்தாமணி நூல் பற்றிச் சொல்லி அதை மிகுந்த தேடலுக்குப் பின் ஒரு பிரதி கைவசமிருப்பதாகவும் ஆனால் படித்துப் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்கிறார். இது தான் முக்கியம். இலக்கிய நூல்களோடு மிகுந்த பரிச்சயம் உள்ள ஒருவராலேயே அப்பிரதியைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவர் புரிந்துக் கொள்ளக் கூடிய வகையில் உரைகள் அவருக்கு கிடைத்தில, முதலியார் உ.வே.சா.விடம் சீவக சிந்தாமணிக்கு உரை எழுதி பதிப்பிக்க கேட்கிறார்.
முதலியார் அவ்விதம் கேட்ட போதே நச்சினார்க்கினியர் உரை பிரபலம். பின் ஏன் இன்னொரு பதிப்புக் கேட்கிறார்? நச்சினார்கினியரின் உரையில் போதாமைகள் அநேகம். 14-ஆம் நூற்றாண்டில் நச்சினார்க்கினியர் செய்தது அபாரம் ஆனால் 19-ஆம் நூற்றாண்டில் நவீனக் கல்வியுகத்தில் ஒரு மாணவனுக்கோ, இலக்கிய ஆர்வலனுக்கோ படித்தறிய அவ்வுரை போதவில்லை என்பது முதலியாரின் கோரிக்கையிலேயே தெரிகிறது.
நச்சினார்க்கினியரின் உரைகளின் போதாமைகளை உ.வே.சா சுட்டிக் காட்டியுள்ளார். நச்சினார்க்கினியரது உரையில் காப்பியத்துக்கான பின்னணி கதை விளக்கப்படவில்லை, இலக்கண குறிப்புகளிடையே சிந்தாமணியின் செய்யுள் பகுதிகள் எப்பகுதியில் இருந்து எடுத்தவை என்ற குறிப்பு இல்லாமல் கையாளப் பட்டிருக்கும்.
“ஓரிடத்திலுள்ள பாட்டிலிருக்கும் சொல்லைப் பல பாட்டுக்கு முன்னே மற்றோரிடத்திலுள்ளதோடு இணைத்து மாட்டெறிகின்றார். அத்தகைய இடங்களில் அவர் உரையில் சிறிது வெறுப்புத் தட்டியது. ஒரு விஷயத்துக்கோ சொற்பிரயோகத்துக்கோ ஒரு நூற் செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டுமிடத்தில் அந்த நூற் பெயரைச் சொல்வதில்லை. ‘என்றார் பிறரும்’ என்று எழுதி விட்டு விடுகிறார்”.
நச்சினார்க்கினியர் உரையின் குறைகள் பற்றி உ.வே.சா சொல்லும் பட்டியல் கதை அளந்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் பட்டியலிட்ட குறைகளாலே தான் படித்தறிய இயலாமல் முதலியார் இன்னொரு பதிப்பு கோரினார்.
1887-இல் வெளிவந்த உ.வே.சா.வின் பதிப்பு தமிழ் இலக்கிய உலகில் ஒரு மைல்கல். ஏன் என்று நெருங்கிப் பார்ப்போம்.
பவ்ய ஜீவனாகும் உ.வே.சா:
ஓலைச் சுவடிகளில் இருந்து பிரதியெடுப்பதிலுள்ள இடர்களை உ.வே.சா விளக்குகிறார், “இது கொம்பு, இது சுழி என்றுவேறு பிரித்து அறிய முடியாது. மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியேயிராது. ரகரத்துக்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது. சரபம் சாபமாகத் தோன்றும்; சாபம் சரபமாகத் தோன்றும். ஓர் இடத்தில் சரடு என்று வந்திருந்த வார்த்தையை நான் சாடு என்றே பல காலம் எண்ணியிருந்தேன்.”
உரையிலுள்ள சவால்களை விஞ்சியது சீவக சிந்தாமணியைப் புரிந்துக் கொள்ளல். சமணம் மிகவும் அருகிவிட்ட சமயமானதோடு சமணர்களுக்கும் சைவர்களுக்குமிடையே நிலவிய துவேஷம் சமய நூல்களை மறுத்து ஒதுக்கும் நிலைக்குக் கொண்டு சென்றது. நச்சினார்க்கினியரே முதலில் வெளியிட்ட உரையிலுள்ள குறைகளைக் களைய சமணராக வேடமிட்டு கற்று இரண்டாம் உரை எழுதினாராம்.
“மூவா முதலாவுலகம்” எனத் தொடங்கும் பாடலுக்குத் தீர்க்கமான விளக்கம் இருக்கும் என்று ஐயமுற்ற உ.வே.சா ஊரிலுள்ள ஜைனர்களை அணுகினார். ஒரு சைவர், அதுவும் சைவ மடத்தின் மாணவர், இதைச் செய்ததே ஆச்சர்யம்.
சமய இலக்கியங்களை வருடாவருடம் ஒரு குருவின் வழி காட்டுதலோடு கேட்பதும், பயில்வதும் அப்படிப் பயில்வது முடிவடையும் நாளும் விமரிசையாகக் கொண்டாடப்படுவதைச் ‘சிரவணம்’ என்பார்கள். அப்படிச் சமணர்களுக்கு சிரவண நடைபெறும் சமயத்தில் குருவாக செயல்பட்ட அப்பாசாமி நயினாரைச் சந்தித்தார் உ.வே.சா. அப்பாசாமி நயினாரின் மகன் சக்கரவர்த்தி நயினார் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்று பின்னர் குடந்தை மற்றும் சென்னை மாநிலக் கல்லூரிகளில் தத்துவ ஆசிரியராக மிளிர்ந்தார். தமிழ் இலக்கியத்துக்கும் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் மிஷனரிகளுக்கும் இருந்த தொடர்புகள் தனியே விவரமாக எழுதப் பட வேண்டியவை.
பாடல்களுக்குப் பொருள் விளங்கிக் கொள்வதிலுள்ள முனைப்பு உ.வே.சா.வை அலைக்கழித்தது. அவர் தேடலில் ஒரு முக்கியமான தருணத்தில் அவருக்கு உதவியது வெளி ஆண்களோடு முகம் பார்த்து பேசாத ஒரு ஜைனப் பெண்மணி. ஜன்னலுக்கு அப்பாலிருந்து உ.வே.சா தன் சந்தேகங்களைக் கேட்க அப்பெண் விளக்கினார். உ.வே.சா.வின் கேள்விகளில் தெரிந்த விஷய ஞானத்தைப் பார்த்து வியந்த அப்பெண் “பவ்ய ஜீவன் போலிருக்கிறதே” என்றார். “பவ்ய ஜீவனென்பது ஜைனர்களுள் கிரமமாக மோக்ஷமடைவதற்குத் தகுதியான நிலைமையில் இருக்கும் ஆத்மாவைக் குறிப்பது”.
காயசண்டிகையின் உறு பசியை விஞ்சியது உ.வே.சா.வின் தேடல். ஒரு பிரதியை வைத்துக் கொண்டு பதிப்பு வெளிவருமானால் அது முழுமையாகாதென்று எங்கெல்லாம் சீவக சிந்தாமணியின் பதிப்புகள் கிடைக்குமா அங்கெல்லாம் போய்ச் சேகரிக்கிறார். திருவாடுதுறை ஆதீனம் (சைவ மடத்திலேயே பிரதி இருந்தாலும் அது வரை, மீனாட்சி சுந்தரம் பிள்ளை உட்பட, யாருக்கும் அது பற்றி அதுவரை தெரியவில்லை என்பது கவனிக்கத்தக்கது), சி.வை.தாமோதரம் பிள்ளை (இவரிடமும் பிரதி இருந்தது ஆனால் பதிப்பு வெளியிடும் ஆசை மட்டுமே அவருக்கு இருந்தது), பின்னர் தஞ்சையில் விருஷபதாச முதலியாரென்பவரிடம் உள்ள பிரதி வரை தேடல் தொடர்ந்தது. முதலியார் சைவ சமயத்தவரான உ.வே.சா.விடம் பிரதியைக் கொடுக்க மறுத்தார். சமய உணர்வுகளுக்கும் பிரதிக்கும் உண்மையுள்ள பதிப்பை வெளியிட உறுதியளித்த பின் உ.வே.சா.விடம் பிரதி ஒப்படைக்கப்பட்டது. இவ்விடத்தில் உ.வே.சா ஓலைச் சுவடிகள் சேகரிப்பதில் சந்தித்த அனுபவங்களைச் சிறிது நோக்குவோம்.
ஓலைச் சுவடிகள் தேடிய அனுபவங்கள்: கசப்புகளும் போட்டிகளும்
உ.வே.சா ஓலைச் சுவடிகள் சேகரித்தார், அதற்காகப் பிரயத்தனப்பட்டார் என்பது பிரபலம் ஆனால் அதிலுள்ள மேலதிக சிக்கல்கள் பலரும் யோசிப்பதில்லை.
முதலில், உ.வே.சா ஒரு சாதாரண ஆசிரியர், நடுத்தர வர்க்கம் என்றும் கூறவியலாத பொருளாதார நிலை தான். அவருக்கென்று பிரத்தியேக புரவலர்கள் கிடையாது. இன்றிருப்பது போல் நல்கை வழங்கும் அமைப்புகளும் இல்லை. பிரயாண வசதிகளும் கிடையாது. இவற்றுக்கிடையே தான் விடுமுறைக் காலங்களிலும் ஊர் ஊராகச் சுவடிகள் தேடி அலைந்தார் உ.வே.சா.
பல இடங்களில் உ.வே.சா.வுக்கு ஓலைச் சுவடிகள் கிடைத்தன. சில இடங்களில் அபவாதங்களையும் எதிர் கொண்டார். சுவடி தேடிய அனுபவம் குறித்து உ.வே.சா எழுதுகிறார், “சிலர் வீட்டில் இருந்து கொண்டே இல்லையென்று சொல்லியனுப்பிவிடுவார்கள். சிலர் பலமுறை வரச்சொல்லி அலைக்கழிப்பார்கள். சிலரிடம் எவ்வளவோ நயந்து கெஞ்சிப் பிணைக்கொடுத்துச் சுவடிகளைப் பெற வேண்டியிருக்கும். சிலரிடம் அவமதிப்புக் கூட அடைந்திருக்கிறேன்”.
ஓரிடத்தில் சுவடிகள் கிடைக்கும் என்று சென்ற போது சுவடி தருவதாகச் சொன்னவர் அச்சுவடிகளையே (அல்லது பிரதிகள்) சி.வை.தா.வும் கேட்டதால் அவருக்கே அளிப்பதாகவும் அதனால் உ.வே.சா.வுக்கு உதவ இயலாதென்று கைவிரித்ததோடல்லாமல் உ.வே.சா ஏதேனும் கண்டடைந்தால் அதைத் தன்னிடம் அளிக்குமாறு கேட்கிறார். சி.வை.தா அப்போது செல்வாக்கு மிக்கவர், அநேகமாகப் பொருளாதாரத்திலும் மேன்மையானவர்.
உ.வே.சா பற்றிய ஓர் உரையில் வையாபுரிப்பிள்ளை அவர் மற்றவர்களுக்கு சுவடிகளை மனமுவந்து தருபவரல்ல என்றும் சிலருக்கு சுவடிகள் கிடைப்பதில் முட்டுக்கட்டைகள் போட்டார் என்றும் சொல்கிறார். அதே மூச்சில் தனக்கு உ.வே.சா சுவடிகள் கொடுத்ததைச் சொல்கிறார். அநேக போட்டிகள் மற்றும் இன்னல்களுக்கிடையே தான் உ.வே.சா சுவடிகளைப் பெற்றார் அதை எளிதில் மற்றவர்களுக்குக் கொடுக்க இசையாதது தவறேயல்ல. முக்கியமான ஆளுமையைப் பற்றி போகிற போக்கில் குற்றம் சாட்டுகிறார் வையாப்புரிப்பிள்ளை. இப்படித்தான் உ.வே.சா.வின் மீதான விமர்சனங்கள் இருக்கின்றன.
சீவக சிந்தாமணி முதல் பதிப்பு
தன் பதிப்பு முயற்சிகள் பற்றி உ.வே.சா ‘என் சரித்திரம்’ நூலில் விரிவாக எழுதியுள்ளார். ஒரு வரலாற்றாசிரியனின் நேர்மையோடு தன் முயற்சிகள் பற்றி எழுதியிருக்கிறார். ஒவ்வொரு விஷயத்திலும் உதவி செய்தவர்களை அவர் நினைவு கூர்கிறார். சிந்தாமணியின் பல பிரதிகளை ஒப்பு நோக்கி பாட பேதங்கள் ஆராய்வதில் அவரிடம் பயின்ற மாணவர்கள் உதவினார்கள்.
புத்தகம் அச்சுக்குப் போன போது உ.வே.சா “பாட்டு, பொழிப்புரை, விசேடவுரை எல்லாம் ஒன்றாக இருக்கின்றனவே” என்ற போது அதற்கு யோசனை சொன்னவர் ராஜகோபாலச்சார்யார். ராஜகோபாலச்சார்யாரின் யோசனைகளை உ.வே.சா பட்டியலிடுகிறார், “மூலத்தைப் பெரிய எழுத்திலும், உரைகளைச் சிறிய எழுத்திலும் அச்சிடவேண்டும். மொழிப்புரையையும் விசேட உரையையும் தனித்தனியே பாரா பாராவாக அமைத்துவிட்டால் அவை வேறு வேறு என்று தெரியவரும். நூற்பெயர், இலம்பகப் பெயர், தலைப்பு, மூலம், உரை என்பவற்றை வெவ்வேறு எழுத்துக்களில் அமைக்கும்படி ராஜகோபாலாச்சாரியர் திட்டம் செய்தார். முதற் பாட்டிற்குரிய உரையில் மேற்கோள்கள் பல இருந்தன. அவற்றை அடிக்குறிப்பிலே எவ்வாறு தெரிவிப்பதென்று நான் மயங்கினேன். அவர் உடுக்குறிமுதலிய அடையாளங்களை முறையே போட்டு அவற்றின் பெயரை எனக்குத்தெரிவித்தார்.”
மேலே சொன்னதில் நமக்கு விளங்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகை பதிப்பித்தல் தமிழில் அநேகமாக அது வரை முன்னெடுக்கப்படவில்லை. சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த சுப்பராயலு நாயகர் “புரூப் பார்த்து” (மெய்ப்பு என்பது சமீபத்திய சொல்) உதவி செய்தார்.
உ.வே.சா செய்த சில சிறப்புகள் நூலின் கதையும், சமணமும் பலருக்கும் புதிது என்பதால் சீவகனைப் பற்றி சரித்திரச் சுருக்கம் அளித்தார். மேலும் அகராதிகளைச் சேர்த்தார். அவ்வகராதிகள் இரு வகை. பொருள் விளங்கிய சொற்கள் (120 பக்கங்கள்) , பொருள் விளங்காச் சொற்கள் (3 பக்கங்கள்) என்று இரண்டு அகராதிகள். நல்ல முகவுரை ஒன்றையும் எழுதி அதில் எந்தெந்த பிரதிகள் யாரிடமிருந்து பெறப்பட்டன என்கிற பட்டியல் (இப்பட்டியல் சொல்லும் செய்திக்கு பின்னர் வருகிறேன்). பிழைத் திருத்தங்கள் தெளிவாக எந்தெந்த வார்த்தைகள் எந்தெந்த பக்கம்-வரிகளில் திருத்தப்பட்டது என்று சொல்கிறது. இன்றைய எந்த பதிப்புக்கும் குறைவாகச் சொல்ல முடியாத பதிப்புகள்.
சீவக சிந்தாமணி பதிப்பு பெரும் வரவேற்பை உள்ளூரில் பெற்றதோடு பாரீசிலிருந்த தமிழ் ஆராய்ச்சியாளர் ஜூலியன் வின்ஸோனின் கவனத்தையும் ஈர்த்தது. உ.வே.சா எதிர் கொண்ட விமர்சனங்களைத் தொகுக்கும் பகுதியில் இந்நூல் பற்றி வந்த விமர்சனங்களைச் சொல்கிறேன்.
புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை
சிந்தாமணி பதிப்பினைத் தொடர்ந்து உ.வே.சா புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றைப் பதிப்பித்தார். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை சவால்.
புறநானூறைப் பதிப்பிக்கும் போது வரலாற்றுக் குறிப்பெழுதுவது பெரும் சவாலாக இருந்தது. பாடல் பாடினோர், பாட்டின் பொருளான அரசர்கள், திணைகள், துறைகள் இவை பற்றி வரலாற்றாசிரியர் வி. கனகசபை மற்றும் புலவர்கள், அறிஞர்கள் பலரிடம் செய்திகள் சேகரித்தார் உ.வே.சா. புறநானூறு பதிப்பில் உ.வே.சா ஒரே மாதிரியான சொல்லும் கருத்தும் எங்கெல்லாம் வருகிறதோ அவற்றைப் பட்டியலிடும் (“Concordance”) முறையை ஒரு பைபிள் பிரதியைப் படித்துக் கொண்டிருந்த சக ஆசிரியர் மூலம் அறிந்து அதையும் செய்தார். புறநானூறுப் பிரதி கிடைக்கப் பெற்ற ஆக்ஸ்போர்டில் பணியாற்றிய ஜி.யு. போப் பதிப்பினைப் பாராட்டி உ.வே.சா.வுக்குக் கடிதம் எழுதினார்.
சிலப்பதிகாரம் பதிப்பிக்க முனைந்த உ.வே.சா.வுக்கு இம்முறை சவாலாக அமைந்தது அக்காப்பியத்தில் வரும் இசை பற்றிய குறிப்புகள். இசை சம்பந்தமாகக் கிடைத்த பழந்தமிழ் நூல்களைத் தேடிப் படித்ததோடல்லாமல் வைத்தியநாய ஐயர் (இவர் பற்றி உ.வே.சா ஒரு வரலாற்று கட்டுரையே எழுதியிருக்கிறார்) என்கிற வித்துவானைச் சந்தித்து குறிப்புகள் எடுத்தார்.
சைவ சமயத்தவரான உ.வே.சா சிந்தாமணியை பதிப்பதற்காக ஜைன மதம் பற்றிக் கேட்டறிந்ததைப் போல் பௌத்த சமய அடிப்படையிலான மணிமேகலை பதிப்பிக்க முற்பட்ட போது பௌத்தம் பற்றி கற்றார். பௌத்தம் பற்றிய பல நூல்கள் ஆங்கிலத்தில் இருந்தமையால் அவற்றை ஆராய்வதற்கு துணை புரிந்தவர் மளூர் ரங்காச்சார்யார். இந்திய மரபில் ஒரு மரபை இன்னொரு பக்கத்தில் இருந்து மறுப்பது பரபக்கம் எனப்படும். பௌத்த மதம் பற்றிய சைவ பரபக்க நூல்களையும் உ.வே.சா விட்டுவைக்கவில்லை. மணிமேகலை இலங்கைக்குச் சென்றதாக இருக்கும் குறிப்பைத் தொடர்ந்து இலங்கை பௌத்த ஆசிரியர் ஸுமங்களரை அணுகி மேலும் குறிப்புகள் பெற்றார் உ.வே.சா. மணிமேகலைப் பதிப்பில் வாசகருக்காக பௌத்தர்கள் மும்மணி என்று குறிக்கும் பௌத்தம், தர்மம், சங்கம் ஆகியவற்றையும் சேர்த்தார் உ.வே.சா. பின்னாளில் அதைத் தனியாகவும் பதிப்பித்தார். மணிமேகலைக்கு முறையான உரையில்லாத காரணத்தால் உரையாசிரியர் வேலையையும் உ.வே.சா செய்தார்.
உ.வே.சா பதிப்பித்த ‘பௌத்த மும்மணி’ அதன் வரலாற்றுத் தன்மையால் பிரபலமாக இருந்தது என்கிறார் வரலாற்றாசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம். உ.வே.சா ஒரு காப்பியத்தைப் பதிப்பிக்கும் பொருட்டு எடுத்துக் கொண்ட சிரத்தையின் விளைவாக மிகவும் அருகிவிட்ட ஒரு தத்துவ மரபு குறித்து செய்தி சேகரித்து துணை நூலாக வெளியிட்டது முக்கியமான நூல் ஆனது என்பதற்கு இது ஒரு முக்கியமான புறச் சான்று.
பாடத்திட்ட விளக்கவுரையாசிரியராக உ.வே.சா
உ.வே.சா பற்றி அதிகம் பேசப்படாத விஷயம் அவர் மாணவர்களுக்கு எழுதிய பாடத்திட்ட விளக்கவுரை. முனைவர் இரா.வெங்கடேசன் இது குறித்து விரிவாக எழுதியதிலிருந்து ஒரு பகுதி:
“பாடநூலாய்ப் புறநானூறு (பா.101-125) அன்றைய காலத்தில் (1911) பி.ஏ. மாணவர்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடல்களுக்குப் பதவுரையும் விளக்கவுரையும் ஒப்புமைப் பகுதியும் உ.வே.சாமிநாதையர் அவர்கள் எழுதியுள்ளார். இது புதுமையானதாகும். புறநானூறின் முதல் பதிப்பிற்கும் (1834) இரண்டாம் பதிப்பிற்கும் (1923) இடையே பி.ஏ. மாணவர்களுக்குப் பாடமாக (1911) இருந்த புறநானூறு 101 முதல் 125 பாடல்களுக்குச் சிறந்ததொரு பதவுரையும் விளக்கவுரையும் தருகிறார். இந்த உரை குறித்து யாரும் பேசவில்லை.
இந்நூலில் முகவுரை, பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, புறநானூறு மூலம் உரையும் [க0க – கஉரு] திணை விளக்கம், துறை விளக்கம், பிரயோக விளக்கம் போன்றவற்றைத் தந்துள்ளார். மேலும் சொல் பிரிப்பு, பதவுரை, விசேடவுரை, சொற்பொருள நிரை, சொற்பொருள் மயக்கம் தவிர்த்தல், ஒருசொல்லுக்குப் பல பொருள் பயிலும் நிலையை எடுத்துரைத்தல், உரையாசிரியர்கள் வழிநின்று சொற்பொருள் வரையறுத்தல், உரையாசிரியர் தரும் பொருள் விளக்கங்களை எடுத்துரைத்தல், சொற்களின் வடிவம் பற்றிய சிந்தனை, சொல்தேர்ச்சி, இலக்கணம், பிரதிபேதங்கள், விசேட உரையும் குறிப்புரையும், ஒப்புமைப் பகுதி போன்றவறறைத் தருகின்றார்”.
உ.வே.சா அளிக்கும் சமூகச் சித்திரம்
‘என் சரித்திரம்’ நூலும் உ.வே.சா.வின் மற்றைய எழுத்துகளும் நமக்கு ஒரு காலத்தின் சமூகம் பற்றி ஒரு சித்திரத்தை அளிக்கின்றன. உ.வே.சா வரலாற்றாசிரியர் அல்லர் ஆனால் வரலாற்றுணர்வு மிகுதியாக உள்ளவர் ஆதலால் சந்தித்த மனிதர்கள் பற்றி அநேகத் தகவல்களை துல்லியமாக அள்ளி வழங்குகிறார்.
சமணர்கள் என்றழைக்கப்பட்டவர்கள் செட்டியார்களாகவும், முதலியார்களாகவும் இருந்ததும் அவர்களிடையே கல்வியறிவு மிகப் பரவலாயிருந்தது நவீன அரசியலில் ஒரு சமூகத்தினர் மட்டுமே கல்விப் பயின்றார்கள் என்கிற பரப்புரை எவ்வளவு பொய்யானது என்று 'என் சரித்திரம்' வாயிலாக நமக்குத தெரிய வருகிறது.
பிராமணர்கள் மற்ற எல்லோருக்கும் கல்வியை மறுத்தார்கள் என்று ஒரு அவதூறு சொல்லப்படுவதுண்டு. ‘என் சரித்திரம்’ படித்த யாரும் உணர்வது அது உண்மையல்ல என்பது. தமிழைப் பாதுகாத்ததில் பிராமணரல்லாத சைவ மடங்களின் பங்களிப்பு, சைவர்கள், சமணர்கள் ஆகியோரின் பங்கு தெரிய வரும். கல்வி என்பது உயர் ஜாதி இந்துக்களிடையே பரவலாகவே இருந்தது. உ.வே.சா தன் முன்னுரைகளில் ஒவ்வொரு நூலின் பதிப்புக்கும் பயன்படுத்திய பிரதிகளையும் அவை யாரிடம் பெறப்பட்டது என்றும் விவரம் சொல்கிறார். மிகப் பெரும்பாலான பிரதிகள் பிராமணரல்லாதாரிடமிருந்து தான் கிடைக்கின்றன. துல்லியமாகச் சொன்னால், கல்வி என்று சொல்ல முடியாத சமய நூல்கள் சார்ந்த எழுத்தறிவு, பரவலாக இருந்தது.
உ.வே.சா காலத்தில் தமிழ் அறிஞர்களும் புரவலர்களும் ஓர் அறிவியக்கமாகவே செயல்பட்டிருக்கிறார்கள் எனலாம். அவ்வியக்கத்தில் சைவம், பிராமணியம், பிராமண எதிர்ப்பு, கிறிஸ்தவம் ஆகியவைப் பற்றி தனியாகவே ஆராய்ந்து எழுதலாம். உ.வே.சா.வுக்கு மறைமலை அடிகளுக்கும் இருந்த உறவு ஆச்சர்யம். முதலில் பரஸ்பரம் நூல்கள் பற்றி பேசிக் கொள்வதும், நூல் பதிப்பு பற்றி தெரிவிப்பதுமாக இருந்த உறவு பின்னர் ஒரு வழக்கில் இருவரையும் எதிரெதிர் அணியில் வாழ்க்கைச் சூழல் நிறுத்தியது.
செவி வழிக் கதை ஒன்றில் கோயில் சார்ந்த தேவதாசிப் பெண் கடுமையாக தண்டிக்கப்பட்ட நிகழ்வு நமக்கு கோயில், மனிதர்கள் பற்றி ஓர் அரிய செய்தியைச் சொல்கிறது. இப்படிப் பல.
உ.வே.சா மீதான விமர்சனங்கள்
சம காலத்திலேயே அரசு மற்றும் அறிஞர்களின் அங்கீகாரங்கள் குறைவில்லாமல் உ.வே.சா.வைத் தேடி வந்தன. பதிப்புகள் வெளிவர உதவிய செல்வந்தர்கள், ஆராய்ச்சிகளுக்குக் கைக்கொடுத்த அநேக அறிஞர்கள், அரசு அளித்த மகாமகோபாத்தியாயர் பட்டம், பாரதியால் பாடப்பட்டது, மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்ட சதாபிஷேகம் என்று வாழும் காலத்திலேயே உ.வே.சா கௌரவிக்கப்பட்டார்.
கௌரவங்கள் கிடைத்ததைப் போலவே விமர்சனங்களும் உ.வே.சா நோக்கி வந்தன. ‘’கண்டனப் புயல்’ என்று தலைப்பிட்டு உ.வே.சா.வே எதிர் கொண்ட விமர்சனங்கள் பற்றி எழுதியிருக்கிறார். சிந்தாமணியில் பிழைகள் கணக்கற்றவை என்று அவதூறூகள் பறந்தன.
பெருமாள் முருகன் தொகுத்த ‘உ.வே.சா: பன்முக ஆளுமையின் பேருருவம்” வையாபுரிப் பிள்ளை, கார்த்திகேசு சிவத்தம்பி, பொ.வேல்சாமி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கியது. உ.வே.சா.வின் பங்களிப்பைப் பாராட்டும் போதே விமர்சனம் என்று ஏதாவது சொல்ல வேண்டுமே என்று இவர்கள் எல்லாம் இட்டுக்கட்டிய விமர்சனங்களையே வைக்கிறார்கள்.
உ.வே.சா பதிப்புகளில் தவறுகள் இருந்தன என்கிறார் வையாபுரிப்பிள்ளை. அடுத்தடுத்தப் பிரதிகளில் பிழைகள் திருத்தப்படும் போது யார் சொல்லி அப்பிழைகள் கவனத்துக்கு வந்தன என்று உ.வே.சா வெளிப்படுத்தவில்லை என்கிறார் இன்னொருவர். சிந்தாமணி யின் முதற் பதிப்பின் முன்னுரையிலேயே பிழைகளைக் கண்டறிந்து ‘விவேகிகள் தெரிவிப்பார்களாயாயின்” நன்றியுடயவனாக இருப்பேன் என்றார் உ.வே.சா. அதே போல் அடுத்தடுத்தப் பதிப்புகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனால் இன்றளவும் எந்த பதிப்பாசிரியரும் ஒவ்வொரு பிழைத் திருத்தமும் யார் சொல்லி நடந்தது என்று தெரியப்படுத்துவதில்லை. கவனிக்கவும் பல பிழைகளை ஒரு பதிப்பின் பின் மேலும் கிடைத்த ஆதாரங்கள் கொண்டு அறிந்து திருத்தியவர் உ.வே.சா.வே தான்.
புறநானூறு பதிப்பில் அரசர்களின் குறிப்புகள் இருந்தாலும் அந்த அரசர்கள் பற்றி குறிப்புகள் இருந்தாலும் அவ்வரசர்களின் வரலாற்று முக்கியத்துவம் அனைத்திந்திய அளவில் பொருத்திப் பார்த்து உ.வே.சா விளக்கவில்லை என்றும் அதை நினைவில் கொண்டு சி.வை.தா.வின் வரலாற்று குறிப்புகளை நோக்கினால் சி.வை.தா.வின் மேன்மை விளங்கும் என்கிறார் காத்திகேசு சிவத்தம்பி. சிந்தாமணி, மணிமேகலை பதிப்புகளுக்கு இலங்கை தமிழறிஞர்களிடமிருந்து அதிகமாக எதிர்வினைகள் வந்ததைச் சுட்டிக் காட்டி சிவத்தம்பி உ.வே.சா போன்றே இலங்கையிலும் பதிப்பாசிரியர்கள் இருந்தார்கள் என்கிறார். எல்லாமே சாரமற்ற விமர்சனங்கள். பார்ப்போம்.
பழந்தமிழரின் வரலாறு பற்றி ஆராய்ச்சிகளும், புத்தகங்களும் உ.வே.சா காலத்தில் தான் வர ஆரம்பித்தன. கனகசபை பிள்ளைக்குப் பின் வந்தவர் தாம் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி. சாஸ்திரி சோழர் கால வரலாறு அற்புதமான ஆராய்ச்சி ஆனால் அந்நூலே சோழர்களின் முக்கியத்துவத்தை அனைத்திந்திய அளவில் எல்லாம் வாசகனுக்கு அறிமுகம் செய்யவில்லை. இந்த லட்சணத்தில் உ.வே.சா அதைச் செய்யவில்லை என்பது என்ன நியாயம்? மேலும் சி.வை,தா.வின் வரலாற்று ஆய்வுத் திறன் என்பது மிகைப்படுத்தப்பட்டது. ‘வீர சோழியம்’ நூலில் தமிழர் வரலாற்று காலத்தை ஒரு தோராயமாகப் பகுத்துச் சொன்னார் அவ்வளவு தான்.
யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர்கள் சிந்தாமணி போன்றவற்றைப் பதிப்பிக்கும் திறன் கொண்டவர்களாக இருந்திருக்கலாம், பதிப்புகளும் வெளி வந்திருக்கலாம். ஆனால் காலத்தை விஞ்சி நிற்பது உ.வே.சா பதிப்புகள் தாமே? மற்ற பதிப்புகள் பற்றி குறிப்புகள் இல்லாத நிலையில் ஏதும் சொல்ல இயலாது. மேலும் நாவலர் காலந்தொட்டு யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர்களுக்கும் தமிழ் நாட்டுத் தமிழறிஞர்களுக்கும் சமய ரீதியாகவும் தொழில் முறையாகவும் போட்டி நிலவியது. சிவத்தம்பியின் விமர்சனத்தை அந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும்.
க.நா. சுப்பிரமணியன் போகிறப் போக்கில், வையாப்புரிப்பிள்ளை சொன்னார் என்று, உ.வே.சா எழுதிய பிற்காலத்தியக் கட்டுரைகள் மற்றும் ‘என் சரித்திரம்’ நூலின் பெரும்பகுதி உ.வே.சா எழுதியதல்ல என்கிறார். இது கேவலமான அவதூறு. தொகுப்பாசிரியர் பெருமாள் முருகனின் ஆசியோடு எவ்வித மறுப்பும் இல்லாமல் இக்கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. வையாப்புரிப்பிள்ளை சொன்னால் போதுமா? ஆதாரம் வேண்டாமா? நம்மூரில் விமர்சனங்கள் இந்த முறையில் தான் பெரும்பாலும் இருகின்றன. வையாப்புரிப்பிள்ளையின் குற்றச்சாட்டுகளை இப்புத்தத்தில் இருக்கும் வேறு கட்டுரையாசிரியர்களும் மீண்டும், மீண்டும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆக, ஒருவர் சொன்னதை வழி வழியாக கிளிப்பிள்ளைப் போல் சொல்கிறார்கள்.
புதுமைப்பித்தன் முதல் பொ.வேல்சாமி, பெருமாள் முருகன் வரை உ.வே.சா பிராமணராக இருந்தது அவர்களை உறுத்துகிறது. எல்லோரும் சொல்லி வைத்தது போல் ஒரு ‘back handed compliment’ மாதிரி அவர் சமண, பௌத்த அடிப்படையிலான காப்பியங்களைப் பதிப்பித்ததைப் பாராட்டுகிறார்கள். உ.வே.சா சமூக சீர்திருத்தவாதியோ, பகுத்தறிவு போர்வாளோ கிடையாது. தனி வாழ்க்கையில் அவர் பிராமணர் தாம். தன் வாழ்வில் சைவராகத் தொடர்வதாகவும் ஆனால் மத துவேஷம் கூடாதென்றும் அவரே எழுதுகிறார்.
உ.வே.சா பற்றி இன்னொரு அவதூறு அவர் “சூத்திரர்களுக்குத்” தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை என்று. அவர் ஆசிரியரே சூத்திரர் தானே? தன்னிடம் பாடம் பயின்ற சிலரின் பெயர்களை உ.வே.சா குறிப்பிட்டுள்ளார் அவர்களுள் தம்பிரான்கள், செட்டியார், தேவர், பிள்ளை ஆகியோர் இருந்தார்கள். மேலும் உ.வே.சா ஆராய்ச்சிக்கும் பொருளுதவிக்கும் நாடிய மிகப் பெரும்பாலோர் சூத்திரர்கள் என்பவர்கள் தாம்.
உ.வே.சா பன்முக ஆளுமையா என்றால் ஆமாம் எனலாம். ஆனால் அதற்கு நாம் பெருமாள் முருகனின் புத்தகத்தை விடுத்து முனைவர் சரவணனின் உ.வே.சா பதிப்புகளை நாட வேண்டும்.
முனைவர் சரவணன் வாயிலாக தெரிய வரும் உ.வே.சா என்கிற ஆளுமை
உ.வே.சா. என்றதுமே பலரும் ‘என் சரித்திரம்’ நூலைச் சொல்வார்கள். முனைவர் ப. சரவணன் பதிப்பித்துள்ள உ.வே.சா நூல்கள் நமக்கு உ.வே.சா பற்றிய சித்திரத்தை முழுமைக் கொள்ளச் செய்கின்றன.
முனைவர் ப. சரவணன் (தி இந்து தமிழ் திசை) |
உ.வே.சா தன் பதிப்புகளுக்கு எழுதிய முன்னுரைகளைத் தொகுத்து ‘சாமிநாதம்’ (2014) என்று வழங்கினார் சரவணன். சரவணன் சந்தித்த சவால்கள் அநேகம். உதாரணத்துக்கு, உ.வே.சா நூலகத்தில் நகலெடுக்க அனுமதியில்லை, சாதாரண கைப்பேசியிலேயே புகைப்படம் எடுத்துள்ளார். உ.வே.சா பதிப்பித்த ஒவ்வொரு நூலையும் அவற்றின் ஒவ்வொரு பதிப்பையும் தேடிக் கண்டெடுத்து முகப்பு அட்டைகளைப் புகைப்படமாகவும் தட்டச்சு செய்யப்பட்ட பக்கங்களாகவும் தருகிறார். உ.வே.சாவின் முன்னுரைகள் அநேக தகவல்களை அளிக்கும் பெட்டகம், உதாரணமாக ஒவ்வொரு பதிப்புக்கும் எந்தெந்தப் பிரதிகள் உபயோகப்படுத்தப்பட்டன, ஒவ்வொரு பிரதியையும் அளித்தது யார் என்ற விபரங்கள் இருக்கும். சி.வை.தா.வுக்கும் உ.வே.சா.வுக்குமிடையே பகை இருந்தது போல் இன்று உருவாக்கப்படும் சித்திரத்தைத் தன் முன்னுரையில் எளிதாகச் சரவணன் மறுக்கிறார். சி.வை.தா திருத்தங்களையும் விமர்சனங்களையும், உ.வே.சா.வை விட, மனமுவந்து ஏற்றதாக ஒரு சித்திரத்தை வையாபுரிப்பிள்ளை கொடுத்தது சரியல்ல என்று சரவணன் விமர்சங்கள் குறித்து சி.வை.தா காட்டமாக எழுதியதை மேற்கோள் காட்டி சமன் செய்கிறார்.
‘என் சரித்திரம்’ (2017, 2018) நூலைச் செம்பதிப்பாக வெளிக்கொணர்ந்தார் சரவணன். இணையத்தில் கிடைக்கும் ‘என் சரித்திரம்’ பதிப்புக்கும் இச்செம்பதிப்புக்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு. ‘என் சரித்திரம்’ ஒரு தன் வரலாற்று நூல். அந்நூல் முழுவதிலும் உ.வே.சா அறிமுகப்படுத்தும் பெயர்கள் பற்பல. சரவணன் மிகப்பெரும்பாலான பெயர்களுக்குத் தேடி அலைந்து புகைப்படம் சேகரித்து தந்துள்ளார். ‘என் சரித்திரம்’ முதன் முதலில் விகடனில் வெளிவந்த போது இருந்த புகைப்படங்கள் இணையத்தில் இருக்கும் பதிப்புகளில் கிடையாது. அப்புகைப்படங்களையும் சேர்த்து சரவணன் பல புதிய படங்களை இணைத்துள்ளது வாசிக்கும் போது சுவாரசியம் கூட்டுவது வாசக உளவியல். இப்பதிப்பின் இன்னொரு முக்கியமான அம்சம் கி.வா.ஜ எழுதிய ‘என் ஆசிரியப்பிரான்’ சேர்க்கப்பட்டிருப்பது.
உ.வே.சா வம்சா வழியினர் பற்றிய தகவலும், உ.வே.சா பற்றி விரிவான வாழ்க்கை குறிப்பும் அடங்கும். முத்தாய்ப்பாக இப்பதிப்பு விகடனில் முதலில் வெளிவந்த உ.வே.சா எழுதிய தொடரை மூலப் பிரதியாகக் கொண்டு அமைக்கப்பட்டது. பல இந்திய நூல்கள், பெரு நிறுவனங்கள் வெளியிடும் ஆங்கில நூல்கள் உட்பட, பொருளடைவு (Index) இருக்காது அல்லது ஏனோ தானோவென்று இருக்கும். எவ்விதக் கணினித் தொழிற்நுட்பமும் இல்லாமல் கைப்பட இந்நூலில் பொருளடைவு தந்திருக்கிறார். ஒவ்வொரு பக்கத்திலும் 2-5 பெயர்கள், இடங்கள் சுட்டி இருக்கும் நூலுக்குப் பொருளடைவு தருவது பகீரதப் பிரயத்தனம். ‘சாமிநாதம்’ மற்றும் ‘என் சரித்திரம்’ பதிப்புகளில் சரவணனின் ஆகப் பெரும் பங்களிப்பு உ.வே.சா பதிப்பித்த நூல்களின் மிக விரிவான பட்டியலை முக்கிய குறிப்புகளோடு தருவது.
2016-இல் சரவணன் உ.வே.சா எழுதிய பல கட்டுரைகளைப் பொருண்மை (Subject) அடிப்படையில் தொகுத்து 5 புத்தகங்களாக வெளியிட்டார். அவை, ‘டிங்கினானே’, ‘தலைமுறைக்கும் போதும்’,’நிலவில் மலர்ந்த முல்லை’ம, ‘முள்ளால் எழுதிய ஓலை’ மற்றும் ‘உயிர் மீட்சி’.
‘நிலவில் மலர்ந்த முல்லை: தன் வரலாற்றுக் கட்டுரைகள்’ நூலில் என் சரித்திரம் நூலில் சொல்லப்படாத அல்லது முன் சொல்லப்பட்டாலும் விரிவுப் படுத்தப்பட்ட தன் வரலாற்று நிகழ்வுகள் அடங்கிய நூல். இந்நூலில் தான் பவ்ய ஜீவன் என்று தான் அழைக்கப்பட்ட தருணத்தை விரிவாக எழுதியுள்ளார். மேலும் சுவடி தேடியது, தான் பதிப்பித்த பௌத்த வரலாறு குறித்து விவாதித்த பேராசிரியர், பிரஸிடென்ஸி காலேஜ் நினைவுகள், சில சொற்றொடர்கள் (‘இடையன் எறிந்த மரம்’, ‘செனடலங்காரர்’, ‘கும்மாயம்’) அர்த்தம் தேடி அலைந்த கதைகள், மும்மணி பதிப்பு ஆகியன பற்றிய தகவல்கள் அடங்கியவை. இன்றும் உ.வே.சா பற்றி எழுதும் பலர் சுட்டிக் காட்டுபவை எல்லாமே அவரிடமே இருந்து எடுத்தவை தான். இப்பதிப்பிலும் சிறப்பம்சம் புகைப்படங்கள் தாம். 12 பக்க நினைவோடை வகை கட்டுரையில் 18 படங்கள் இருக்கின்றன, தெளிவாகவும் பெயர் குறிப்புடனும் ஸ்டாம்பு அளவில்.
‘டிங்கினானே: வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்’ உ.வே.சா.வின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டும். இத்தொகுப்பில் உ.வே.சா எழுதிய வாழ்க்கை வரலாறுகள் மறைந்து போன ஒரு யுகத்தின் மகத்தான ஆளுமைகளைப் பற்றி இன்று எஞ்சியிருக்கும் முக்கிய ஆவணம். உ.வே.சா வாழ்வில் முக்கியப் பங்காற்றிய தியாகராச செட்டியார் மற்றும் பூண்டி அரங்கநாத முதலியார் பற்றி விரிவான வரலாற்று சித்திரங்களும் பாரதியார், ஆறுமுக நாவலர் பற்றிய குறிப்புகளும் அடங்கும்.
‘தலைமுறைக்கும் போதும்: இசைக் கட்டுரைகள்’ கனம் கிருஷ்ணையர், கோபாலகிருஷ்ண பாரதியார் மற்றும் மகா வைத்தியநாதையர் ஆகிய இசைக் கலைஞர்கள் பற்றி மிக விரிவான கட்டுரைகளும், ஏகலைவன் கதையை நினைவுறுத்தும் வகையான ‘பொறாமைத் தீ’ என்கிற சுவாரசியமான கட்டுரையும் அடங்கிய தொகுதி.
‘முள்ளால் எழுதிய ஓலை: செவிவழிக் கதைக் கட்டுரைகள்’ நாட்டார் வகைக் கட்டுரைகள் எனலாம். மிக சுவாரசியமான நடையில் எழுதப்பட்ட செவி வழிக் கதைகள்.
சரவணன் தொகுத்த இந்நூல்கள் உ.வே.சா.வுக்கு அறிவுலக வாரிசு அவரே என்று நிறுவுகின்றன. உ.வே.சா பற்றிய விமர்சனங்களுக்கு முற்பகுதியில் மறுப்பு எழுத இந்நூல்களே எனக்குத் துணை. சரவணனின் உ.வே.சா பதிப்புகள் தமிழின் பால் நேசமுள்ள அனைவரும் வாங்கி படிக்க வேண்டிய முக்கியமான ஆக்கங்கள். உ.வே.சா பற்றிய பதிப்புகளிடையே ‘தாமோதரம்: சி.வை,தா பதிப்புரைகள்’ (2017) என்கிற நூலையும் சரவணன் வெளியிட்டுள்ளார். உ.வே.சா-சி.வை.தா ஒப்புமையைப் புரிந்துக்கொள்ள இந்நூல் மிக உதவியது.
வரலாற்றில் உ.வே.சா.வின் இடம் என்ன?
உ.வே. சா தன் மீது வைக்காத விமர்சனத்தை யாரும் இது வரை வைக்கவில்லை, உ.வே.சா முன்னெடுத்த முயற்சிகள் மற்றும் அவற்றின் சிறப்புகள் குறித்தும் யாரும் இதுவரை உ.வே.சா.வை விட சிறப்பாக எடுத்துச் சொல்லவில்லை. இது ஒரு குறைபாடு தான். உ.வே.சா நூல்களைத் தாண்டி அவரைப் பற்றி ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு எழுதப்படவில்லை.
பதிப்பு வரலாற்றில் உ.வே.சா.வுக்கு முன்னோடிகளும் பின் வந்தோரும் உள்ளனர் ஆயினும் உ.வே.சா.வுக்கான இடம் தனியிடம் தான். இது வரை சொன்னவற்றை மீண்டும் ஒரு முறை வாசகர்கள் தொகுத்துக்கொள்ள வேண்டும்.
ஆறுமுக நாவலரின் முக்கியமான பதிப்பு பெரிய புராணம், இலக்கண நூல்கள் மற்றும் சைவ சமயம் சார்ந்த நூல்கள். சி.வை.தாமோதரம் பிள்ளை 12 நூல்கள் பதிப்பித்தார் அவற்றுள் கலித்தொகை தவிர மற்றவை பெரும்பாலும் இலக்கண நூல்கள், அதுவும் ஒரே நூலின் அடுத்தடுத்தப் பதிப்புகள். உ.வே.சா.வுக்குப் பின் வந்த வையபுரிப்பிள்ளை பெரும்பாலும் இலக்கியங்களின் கால நிர்ணய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர், இடையே அவர் பதிப்பித்த முக்கியமான ஆக்கம் சீவக சிந்தாமணி.
மேற்குறிப்பிட்ட பிண்ணனியில் உ.வே.சா.வின் முக்கியமான பதிப்புகளின் சுருக்கமான பட்டியல்: சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை, புத்த சரித்திரம், ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துப்பட்டு. அவற்றோடு முக்கியமான வாழ்க்கை சரித்திரங்கள் - மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தியாகராச செட்டியார், மகா வைத்தியநாத ஐயர், கோபாலகிருஷ்ண பாரதியார்.
பதிப்பு முறைகள், வரலாற்று ஆராய்ச்சிகள், தன் சமயம் தாண்டிய மூன்று காப்பியங்கள் பதிப்பத்தது என்றெல்லாம் தொகுத்துப் பார்த்தால் உ.வே.சா ஏன் சம காலத்திலும் பிற்காலத்திலும் கொண்டாடப்பட்டார் என்பது புலனாகும். உ.வே.சா அளவுக்கு நாவலருக்கும், சி.வை.தா.வுக்கும் வெளிச்சம் கிடைக்கவில்லை என்பது உண்மை ஆனால் அவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்ச நினைத்து உ.வே.சா.வின் இடத்தை குறைப்பது நியாயமல்ல.
உ.வே.சா பற்றிய விமர்சனங்களைப் படிக்கும் முன் முதலில் உ.வே.சா.வைப் படிக்க வேண்டும். அப்படிச் செய்தால் உ.வே.சா.வின் முதல் விமர்சகர் உ.வே.சா.வே என்ற தெளிவு கிடைக்கும் அதன் பிறகு துலக்கமான ஒர் உருவம் நம் கண் முன் விரியும். தமிழுக்காகவே இறுதி மூச்சு வரை, நிஜமாகவே, வாழ்ந்த ஒருவருக்கு நாம் செய்யும் மரியாதை அது தான்.
Thanks to good friend Chitra Balasubramanian for patient help with correcting the blog. All responsibilities for the blog and mistakes are entirely my own.
References:
- என் சரித்திரம் (2018) - பதிப்பாசிரியர் ப.சரவணன். காலச்சுவடு.
- சாமிநாதம் (2014) - பதிப்பாசிரியர் ப. சரவணன். காலச்சுவடு.
- நிலவில் மலர்ந்த முல்லை: தன் வரலாற்றுக் கட்டுரைகள், உ.வே.சாமிநாதையர் (2018)- பதிப்பாசிரியர் ப. சரவணன். காலச்சுவடு.
- டிங்கினானே: வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள், உ.வே.சாமிநாதையர் (2018)- பதிப்பாசிரியர் ப. சரவணன். காலச்சுவடு.
- முள்ளால் எழுதிய ஓலை: செவிவழிக் கதைக் கட்டுரைகள், உ.வே.சாமிநாதையர் (2018)- பதிப்பாசிரியர் ப. சரவணன். காலச்சுவடு.
- தலைமுறைக்கும் போதும்: இசைக் கட்டுரைகள், உ.வே.சாமிநாதையர் (2018)- பதிப்பாசிரியர் ப. சரவணன். காலச்சுவடு.
- உ.வே.சா.: பன்முக ஆளுமையின் பேருருவம் - தொகுப்பு பெருமாள் முருகன்(2016). காலச்சுவடு.
- தாமோதரம்: சி.வை.தா பதிப்புரைகள் (2017) - பதிப்பாசிரியர் ப. சரவணன். காலச்சுவடு.
- உ.வே.சா - https://ta.wikipedia.org/wiki/உ._வே._சாமிநாதையர்
- உ.வே.சா பற்றி அவர் பேரன் எழுதியது - https://s-pasupathy.blogspot.com/search/label/உ.வே.சாமிநாதய்யர்
- Tamil Renaissance and Swaminatha Iyer by Dennis Hudson - https://scholarsarchive.byu.edu/cgi/viewcontent.cgi?article=1047&context=ccr
- என் சரித்திரம் இணையத்தில் - https://ta.wikisource.org/wiki/என்_சரித்திரம்
- பவ்ய ஜீவன் - http://www.heritagewiki.org/index.php?title=பவ்ய_ஜீவன்
- பூண்டி அரங்கநாத முதலியார் - https://ta.wikipedia.org/wiki/பூண்டி_அரங்கநாத_முதலியார்
- Rev W.H.Drew - https://en.wikipedia.org/wiki/William_Henry_Drew_(missionary)
- சிவஞான சித்தியார் பரபக்கம் - https://shaivam.org/saiva-siddhanta/sivagyana-siththiyar#pirabakaran-matham
- பவர் பதிப்பு முன்னுரை - https://archive.org/details/anintroductiont00bowegoog/page/n5/mode/2up
- சிந்தாமணி பதிப்பு வரலாறு (ஓர் ஆய்வுக் கட்டுரையின் பகுதி) https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/295998/5/05_chapter%202.pdf
- உ.வே.சா சீவக சிந்தாமணி (ஆறாம் பதிப்பு) - https://archive.org/details/Chintamani/mode/2up
- மணிமேகலை (நான்காம் பதிப்பு) - https://archive.org/details/Manimekhalai-U-Ve-Sa-4th-edn-1949/mode/2up
- கவனம் பெறாத உ.வே.சா பாடத்திட்ட விளக்கவுரை - ஆய்வுக் கட்டுரை - https://www.vallamai.com/?p=83879
- நல்லுரைக் கோவை - https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU1lMyy.TVA_BOK_0000612/mode/2up
- நாவலர் பதிப்புகள் Archive.org - https://archive.org/search.php?query=Arumuga%20Navalar
- தாமோதரன் பதிப்புகள் Archive.org - https://archive.org/search.php?query=Thamotharam
- ஆறுமுக நாவலர் பற்றிய சரித்திரம் - http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/others/tcl/arumuga_naavalar_sarithram.pdf
- ஆறுமுக நாவலர் - https://ta.wikipedia.org/wiki/ஆறுமுக_நாவலர்
- ஆறுமுக நாவலர் பெரிய புராண சூசனம் - https://archive.org/details/PeriyaPuranamSusanamArumugaNavalar/mode/2up
- சி.வை.தா - https://ta.wikipedia.org/wiki/சி._வை._தாமோதரம்பிள்ளை
- பீட்டர் பெர்சிவல் - https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_பெர்சிவல்
- Madras Journal of Literature and Science (1858) - Chintamani article by Percival https://books.google.com/books?id=AVoYAQAAIAAJ&pg=PA46#v=onepage&q&f=false
- திருவாடுதுறை ஆதீனம் - https://ta.wikipedia.org/wiki/திருவாவடுதுறை_ஆதீனம்
- சக்கரவர்த்தி நயினார் - https://ta.wikipedia.org/wiki/சக்கரவர்த்தி_நயினார்
- நச்சினார்க்கினியர் - https://ta.wikipedia.org/wiki/நச்சினார்க்கினியர்
- நீலகண்ட சாஸ்திரி - https://ta.wikipedia.org/wiki/க._அ._நீலகண்ட_சாத்திரி
- வி. கனகசபை - https://ta.wikipedia.org/wiki/வி._கனகசபை
- ஜூலியன் வின்ஸன் (Julien Vinson) -- https://en.wikipedia.org/wiki/Julien_Vinson
- ஜி.யூ. போப் - https://en.wikipedia.org/wiki/George_Uglow_Pope
- சிரவணம் https://ta.wikipedia.org/wiki/சிரவணம
- 'தி இந்து' தமிழ் திசையில் ப. சரவணன் பேட்டி https://www.hindutamil.in/news/literature/191555--6.html
- Religion, caste, and Nation in South India: Maraimalai Adigal, the neo-saivaite movement, and Tamil Nationalism 1876-1950 -- V. Ravi Vaithees
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.