திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பணி கரிசல்குளம் என்கிற கிராமத்தின் 300 வருட கதையை சமூகத்தின் நினைவுகளில் இருந்து மீட்டெடுத்து தலித் சமூக-அரசியல் வரலாற்றை ஒரு சித்திரமாக அளிக்கிறது ஜெ. பாலசுப்பிரமணியமின் “புதைந்த பாதை: ஒரு கிராமத்தின் தலித் நினைவும் வரலாறும்”. அப்புத்தகம் பற்றிய சிறு அறிமுகமே இப்பதிவு.
முகவுரையிலேயே பாலசுப்பிரமணியம் வரலாற்று ஆவணங்களை தேடித் தொகுத்து இந்நூல் எழுதப் படவில்லை என்று சொல்லிவிடுகிறார். ஆயினும் இது வெறும் செவி வழி புராணமல்ல ஏனென்றால் சம காலத்தில் நிகழ்ந்தவையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2000-ஆம் வருடம் ஒரு போகிப் பண்டிகையின் போது வெளியி வீசப்பட்ட ஒரு பெட்டியில் மூன்று ஆவணங்கள் கிடைக்கின்றன. 1942-ஆம் ஆண்டு "ஆதி திராவிட மகாஜன சபை"யின் அழைப்பு, ஒரு இரங்கல் கடிதம், ஒரு இரங்கல் தீர்மானத்தின் நகல். இங்கிருந்து பாலசுப்பிரமணியம் நினைவுகளின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் ஒரு கதையை வாசகனுக்கு மீட்டெடுத்து அளிக்கிறார்.
கிராமம் “வடக்கூர்”, ‘தெற்கூர்” என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. வடக்கூரில் பிள்ளைமார், நாயுடு, மறவர், ஆசாரி ஆகியோரும், தெற்கூரில் மறவர், நாடார், பள்ளர், பறையர், அருந்ததியர், புதிவரை வண்ணார் ஆகியோரும் வசிக்கின்றனர். வடக்கூர் மறவரும் தெற்கூர் மறவரும் வெவ்வேறு.
பிஷப் கால்டுவெல்லின் திருநெல்வேலி பற்றிய குறிப்புகள் பள்ளர், பறையர் சாதியினருக்கு மட்டும் இங்கு குடிப் பெயர்ந்து வந்ததாக சான்றுகள் இல்லையென்றும் மற்றவர்கள் குடிப் பெயர்வு மூலம் இங்கு வாழ வந்ததற்கு ஆதாரம் இருப்பது அவ்விரு இனத்தாரும் பூர்வ குடிகளாக இருக்க வாய்ப்புண்டு என்பதைச் சொல்கிறது.
தலித்துகளின் நினைவுகளில் ஒன்பது தலைமுறைக்கு முன் ஆதிதிராவிடர்களும் தேவேந்திரர்களும் ஊரின் மத்தியில் இருந்ததாக நம்பப்படுகிறது. ஒரு கோயில் திருவிழாவில் சப்பரம் உலா வரும் போது பறையர்கள் வீட்டில் இருந்த மாட்டிறைச்சியை காகம் ஒன்று கொத்திச் சென்று சப்பரத்தின் மீது போட அதனால் கோபமுற்ற ஆதிக்க சாதியினர் தேவேந்திரர்களையும், ஆதி திராவிடர்களையும் சேர்த்து விரட்டி விடுகின்றனர் தெற்கூருக்கு. இதில் தேவேந்திரர் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் அவர்களையும் ஏன் சேர்த்தார்கள் என்று யோசித்தால் ஒரு சேர இவர்களை விரட்டி விட்டு நிலம் கையகப் படுத்துவதற்காகவே இருக்கலாம் என்பது புலனாகிறது.
மீண்டும் மீண்டும் பாலசுப்பிரமணியம் போன்ற ஆய்வாளர்கள் தலித் வரலாற்றில் அடிக்கோடிடுவது தலித்துகளின் சுய அரசியல்-சமூக முயற்சிகளை. பொது புத்தியில் ஆழப் பதிந்து விட்ட “அவர்களுக்கு எல்லாமே கற்றுக் கொடுத்து கைத் தூக்கி விட வேண்டிய நிலையில் இருந்தார்கள்” என்பதை மறுப்பதே இவ்வரலாறுகள் உணர்த்துவது. அநேக நிகழ்வுகள் தரவு அடிப்படையிலேயே இருக்கிறது.
1905-இல் ஆதி திராவிடர்கள் தன் முயற்சியாலேயே ஒரு பள்ளி துவக்கப்பட்டது, பின் 1920-இல் அது “திருப்பணி கரிசல்குளம் ஆதிதிராவிடர் கல்வி அபிவிருத்தி சங்கம்” என்ற அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. அந்தப் பள்ளி ஆரம்பத்தில் ‘ஆதி திராவிட ஆரம்ப பள்ளி” என்ற பெயரிலும் அதன் பின் ‘அரிசன துவக்கப் பள்ளி’ என்றும் பின் “டாக்டர் அம்பேத்கர் பள்ளி” என்றும் வழங்கியதே நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது.
1940-கள் தொடங்கி திராவிட இயக்கத்தோடு ஆதி திராவிடர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். செப்டம்பர் 13 1942-இல் திருமதி மீனாம்பாள் சிவராஜ் தலைமையிலான மாநாட்டுக்கு பெரியாரும் ஒரு பேச்சாளர். பின்னர் 1949-க்கு பின் திமுகவோடு இக்கிராமத்து தலித் அமைப்புகளும் தலித்துகளும் நெருக்கமாயினர். அவ்வுறவை சிதைத்தது ஒரு கொலை.
மறவர்களின் ஆதிக்கத்தை எதிர்க்க 1968-இல் “திருப்பணி கரிசல்குளம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்’’ ஆரம்பிக்கப்பட்டது. ஆதி திராவிடரும், நாடாரும் இச்சங்கத்தில் உறுப்பினர்கள். இதை தொடர்ந்து இரட்டை டம்பளர் ஒழிப்பு என்று எழுச்சிப் போராட்டங்களும் நடந்தன. இந்த அரசியல் எழுச்சி ஆதிக்க சாதியினரை உறுத்த முக்கியஸ்தரான மந்திரமூர்த்தி கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் சம்பந்தப்பட்ட மறவர்களை காப்பதற்கு திமுக துணை செய்ததால் ஆதி திராவிடர்கள் பின்னர் அதிமுக நோக்கி நகர்ந்தனர். அதுவரை பெரும் அரசியல் ஈடுபாடு காட்டாத மறவர்கள் திமுக பக்கம் சாய்ந்தனர். ஆசிரியர் முக்கியமாக சுட்டுவது கொலைச் செய்த மறவர்கள் பலர் ஏழைகள் அவர்கள் குடும்பங்கள் வழக்குக்குகளைச் சந்திக்க இயலாமல் பொருளாதார சிக்கலுக்கு ஆளாயின.
சமகால நிகழ்வுகளுக்கு நகர்ந்தது ஆசிரியர் ஆதி திராவிடர்களின் முன்னேற்றத்துக்கு காரணமாக சுட்டுவது புலம் பெயர்தலை. மும்பைக்கும், இலங்கைக்கும் பிழைக்கச் சென்றவர்கள் செல்வம் ஈட்டி கிராமத்தை விட்டு நகரத்துக்கு போகும் வெள்ளாளரின் நிலங்களை வாங்கும் அளவுக்கு உயர்ந்தனர் என்கிறார் பாலசுப்பிரமணியம். இடப்பெயர்வு தலித்துகளின் முன்னேற்றத்திற்கு பெரும் காரணம். ஒரு காலத்தில் பண்ணையில் வேலைச் செய்பவர்களாக இருக்கும் போது தங்கள் திருமணங்களைக் கூட இரவில் நடத்த நிர்பந்திக்கப்பட்டவர்கள், பகலில் திருமணம் நடந்தால் வேலைத் தடைபடும் என்று நிலவுடமையாளர்கள் விடுவதில்லை, வீடு, நிலம் வாங்கும் அளவுக்கு இடப் பெயர்வால் உயர்ந்தனர்.
இந்த இடத்தில் எனக்க் இஸபெல் வில்கர்ஸனின் “The Warmth of the Other Suns: The Epic story of America’s Great Migration” நினைவுக்கு வந்தது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் இருந்து வடக்கு நோக்கி இடப்பெயர்வு செய்தே முன்னேறினார்கள்.
கிராமங்கள் சாதிய அமைப்பின் இறுக்கத்தில் மூச்சுத் திணற வைக்கும். எனக்கு, பண்பாடு, கிராமியம், இயற்கை என்ற வார்த்தைகளைக் கேட்டால் ஓட்டம் எடுக்கத் தோன்றும். நகரமும், நகரம் சார்ந்த பொருளியலுமே தான் முன்னேற்றத்துக்கு வழி என்று நம்புகிறேன். காந்தியோடு நேருவும் அம்பேத்கரும் முரன்பட்ட இன்னொரு இடம் கிராமம் பற்றிய காந்தியின் பார்வை. காந்தியாவது கொஞ்சம் நிதர்சனத்தோடு அனுகினார் ஆனால் காந்தியவாதிகள் கிராமத்தை புனிதப்படுத்துவார்கள். சமீபமாக இன்னொரு கூட்டமும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்த நூலின் குறைபாடுகளை வாசகன் உணரும் முன்பே ஆசிரியரே சொல்லிவிடுகிறார். இது ஒரு முழு ஆய்வு நூல் அல்ல. ஒரு எளிய வாசகன் படிக்கக் கூடியது தான். ஆயினும் படித்து முடித்தப் பின் நினைவில் தங்கிவிடக் கூடிய ஒரு படைப்பு என்பதில் தான் ஆசிரியரின் வெற்றி இருக்கிறது. நினைவில் நிற்பதோடல்லாமல் நம் பொதுப் புரிதலை இன்னும் ஒரு முறை அசைத்து வரலாற்றுப் புரிதலை விரிவாக்கும் இன்னொரு படைப்பு. கிண்டிலில் கிடைக்கிறது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.