இந்திய கிறிஸ்தவம் பற்றி அம்பேத்கர் எழுதிய “மதம் மாறியவர்களின் நிலை” (Condition of the Converted) கட்டுரையில் கிறிஸ்தவ அமைப்புகளின் கல்வி பங்களிப்பை புள்ளி விபரங்களோடு குறிப்பிட்டு பாராட்டினாலும் அவ்வமைப்புகள் பெரும்பாலும் ஜாதி இந்துக்களுக்கே பெரும்பயன் அளித்தது என்கிறார். “இந்திய கிறிஸ்தவர்கள் (இங்கு அம்பேத்கர் தலித்துகளை குறிக்கிறார்) மிகுந்த ஏழ்மையும் முன்னேறும் உத்வேகமும் இல்லாத சூழலில் இருப்பவர்கள் ஆகையால் இந்தப் பள்ளிகளின் மூலம் கல்விப் பயன் அடைய முடியாதவர்கள். பள்ளிகள், கல்லூரிகள், ஹாஸ்டல்கள் இந்திய கிறிஸ்தவர்களைப் பொருத்த மட்டில் தவறான இடத்தில் செலவிட்ட பணம் (அதாவது சாதி இந்துக்களுக்கே அந்த செலவு பயன் பட்டது)”.
கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய பல பள்ளிகள் மதம் மாறிய தலித்துகளுக்கு கல்வியின் கதவுகளைத் திறந்தன என்பது எந்தளவு உண்மையோ அதே அளவு 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரபல கிறிஸ்தவக் கல்லூரிகள் தலித்துகளுக்குக் கல்வி அளிப்பதில் ஊக்கம் காட்டாததோடு அதற்கு எதிரான செயல்பாட்டினையும் கொண்டிருந்தன என்று சமீபத்திய தலித் வரலாற்றாய்வுகள் சொல்கின்றன. காலப் போக்கில் அவை மாறியிருந்தாலும் ஒரு முக்கியமான காலக் கட்டத்தில் புகழ் பெற்ற கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் ஜாதி இந்துக்களைக் கவரும் பொருட்டு தலித் கல்விக்குத் தடையாக இருந்தன.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் ஆரம்பக் கால வரலாறு தலித்துகள் கல்விப் பெறுவதில் ஏற்படுத்திய தடைகளை ஆராய்ந்தால் மேலே சொன்ன கருத்தில் உள்ள வரலாற்று உண்மை புலனாகும். இக்கட்டுரை கிறிஸ்தவக் கல்லூரியை மையமாக வைத்து நவீனக் கல்வி அறிமுகமாந 19-ஆம் நூற்றாண்டில் தலித்துகளின் கல்விக்கு பல தரப்புகளில் இருந்து எழுந்த தடைகளைப் பற்றிய வரலாறு.
தலித்துகளின் கல்விப் பற்றி மிஷனரிகளின் பார்வை:
ரூபா விஸ்வநாத்தின் “The Pariah Problem: Caste, Religion and The Social in Modern India” தலித்துகளின் மதமாற்றம், மத மாற்றத்தில் மிஷனரிகளின் பங்கு, தலித்துகள் பற்றி மிஷனரிகளின் கருத்தியல், காலனி அரசின் கருத்தியல், ஜாதி இந்துக்களின் எதிர்ப்புகள் ஆகியவற்றை ஊடும் பாவுமாய் விவரிக்கும் ஆழ்ந்த ஆராய்ச்சி நூல். தலித்துகள் ஏமாற்றி மதம் மாற்றப் பட்டார்கள் என்கிற பரவலான அபிப்பிராயத்தை ரூபா தகர்க்கிறார். ரூபாவின் கருத்தியல் வேறு தலித் வரலாற்றாசிரியர்களின் வரலாறுகளோடு ஒத்துப் போகின்றது.
கிறிஸ்தவ மிஷனரிகள் தலித்துகளைப் பெருமளவில் மதம் மாற்றவில்லை மாறாக தலித்துகளின் பிரதிநிதிகள் வாயிலாக தலித்துகள் பல்வேறு கிறிஸ்தவத் திருச்சபைகளோடு நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் ஊடாக நிகழ்ந்த மதம் மாற்றங்களே அநேகம். இத்தகைய செயல்பாட்டினை “மத மாற்றம்” (conversion) என்று அழைப்பதை தவிர்க்கிறார்கள் தலித் ஆய்வாளர்கள், மாறாக அவற்றை “இயக்க நகர்வு” (movement) என்கிறார்கள். மதம் மாற விரும்பிய தலித்துகள் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் மீண்டும், மீண்டும் வைக்கும் முக்கியமான கோரிக்கை கல்விக்கான வாய்ப்பு தான். மதம் மாறியதும் தங்கள் குடியிருப்புகளில் ஒரு சர்ச்சும், கல்விச் சாலையும் தான் கட்டித் தர மீண்டும், மீண்டும் கேட்கிறார்கள். கல்வியை ஒரு வேட்கையாகவே தலித்துகள் மேற்கொண்டனர்.
தலித்துகளின் மத மாற்றம் தலித்துகளே முன்னெடுத்த சில சாமர்த்தியமான காய் நகர்த்தல்களை உள்ளடக்கியதை ரூபா சுட்டிக் காட்டுகிறார். கல்வி வாய்ப்பு அழுத்தமாக கோரப்பட்டதுடன் ஒரு கட்டிடமாக சிறு பள்ளிக் கட்டிடமாவது மிஷனரிகள் சேரிகளில் கட்டித் தர கேட்கப்பட்டார்கள். அக்காலத்தில் அத்தகைய கட்டிடம் ஜாதி இந்துக்களிடையே எத்தகைய எரிச்சலை உண்டாக்கியிருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஜாதியக் கட்டுபாடுகளால் நல்ல உடை உடுத்த முடியாத தலித்துகள் பள்ளிக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகளுக்கு மிஷனரிகள் உணவும், உடையும் அளித்து படிக்க வைத்தது ஏற்புடையதாக இருந்தது. தலித்துகளை ‘சுத்தப்படுத்துகிறோம்’ என்று மிஷனரிகள் நினைத்தார்கள். தலித்துகளோ அதிலும் ஓர் எதிர்ப்புணர்வுக்கு வடிகால் கண்டனர். 1714 ஸீகன்பால்கு மிஷனரிகளின் பள்ளிகளில் உணவும், உடையும் அளிக்கும் வழக்கம் இருந்ததை குறிப்பிட்டு கடிதமெழுதினார். அக்கடிதத்திலேயே ஜாதி இந்துக்களுக்கு பறையர் குழந்தைகள் தங்களோடு சேர்ந்து படிப்பது எரிச்சல் தருவதாக சொன்னதையும் பதிவு செய்கிறார்.
தலித்துகள் பற்றிய மிஷனரிகளின் பார்வை அவர்கள் சோம்பேறிகள், ஒழுக்கமற்றவர்கள், கரையேற்றப்பட வேண்டியவர்கள் என்றே இருந்தது. தலித்துகளுக்கு அளிக்கப்படும் கல்வி அவர்களை கிராம வாழ்க்கியில் இருந்தோ, உடல் உழைப்பில் இருந்தோ விலகும் மனப்பான்மையை வளர்த்து விடக் கூடாதென்றும் மிஷனரிகள் கருதினர் என்கிறார் ரூபா. இதனாலேயே பல கல்வி நிலையங்களில் இருந்து அவர்கள் விலக்கி வைக்கப்பட்டனர். அப்போதய சில உயர் வகை கல்வி நிலையங்கள் ஜாதி இந்துக்களுக்கானது என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டன. ரூபாவின் கருத்துகளுக்கு முக்கியமான ஒரு ஆதாரம் தயானந்தன் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரை.
ஜான் ஆண்டர்ஸனின் வருகை.
தயானந்தன் மூதாதையர் 1898-1902-இல் மதம் மாறினார்கள். தம் மூதாதையரின் மதம் மாற்றம் குறித்தும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தலித் மத மாற்றங்கள் குறித்தும் ஆராயும் போது சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் ஆரம்பக் கால வரலாறு அவ்வாராய்ச்சிக்கு முக்கியமான புள்ளியாக தயானந்தனுக்குத் தெரிகிறது.
ஸ்காட்லாந்து மிஷனரியான மறைதிரு ஜான் ஆண்டர்சன் 1837-இல் சென்னைக்கு வந்து சேர்ந்தவுடன் அதுவரை எழும்பூரில் இரண்டு ஸ்காட்லாந்து பாதிரியார்களால் நடத்தப்பட்டு வந்த பள்ளியை கறுப்பர் நகரத்துக்கு (Black Town) இடமாற்றினார். 59 இந்து மாணவர்களோடு ஏப்ரல் 3 1837-இல் பிற்காலத்தில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி என்றழைக்கப்படும் பள்ளி ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து ஆண்டர்சன் காஞ்சிபுரத்தில் மே 29 1839-இல் ஒரு பள்ளியும், ஆகஸ்டு 1940-இல் நெல்லூரில் ஒரு பள்ளியையும், திருவள்ளூரில் 1857-இல் ஒரு பள்ளியையும் நிறுவினார். அவை மூன்றும் இன்றும் செயல்பாட்டில் இருக்கின்றன.
1837-இல் கறுப்பர் நகரத்துக்குப் பள்ளியை இடமாற்றிய ஒரு வருடத்தில் அக்டோபர் 1838-இல் மூன்று பறையர் மாணவர்கள் போலியாக ஜாதி அடையாளங்கள் தரித்து பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டவுடன் அவர்களைப் பள்ளியிலிருந்து விலக்குமாறு மற்ற மாணவர்கள் நிர்வாகத்தை வற்புறுத்தினர். 277 மாணவர்களில் 100 பேர் பள்ளியில் இருந்து விலகினார்கள் ஆனால் ஆண்டர்சன் அந்தப் பறையர் மாணவர்களை விலக்க மறுத்து உறுதியாக நின்றார்.கல்லூரியில் இருந்து விலகிய மாணவர்களில் பலர் மீண்டும் பள்ளிக்கு வந்தனர். இந்நிகழ்ச்சி மற்ற கிறிஸ்தவப் பள்ளி நிர்வாகத்தினருக்கு அனைத்து மாணவர்களையும் சேர்ப்பதற்கு ஊக்கம் அளித்தது.
பறையர் மாணவர்கள் விஷயத்தில் உறுதியாக நின்ற ஆண்டர்சனின் செய்கை கொள்கையாக உரு பெறவில்லை. பறையர்களுக்குக் கல்வி அளிப்பது ஜாதி இந்துக்களைப் பள்ளிக்கும், கிறிஸ்தவத்துக்கும் ஈர்ப்பதில் தடையாக இருக்கும் என்றே ஆண்டர்சன் நினைக்கவும் செயல்படுத்தவும் செய்தார். தாம் அளிக்கும் கல்விக்காகப் பள்ளியில் சேர்ந்து அதன் பின் கிறிஸ்தவத்தின் மகிமையை உணர்ந்து ஜாதி இந்து மாணவர்கள் மதம் மாற வேண்டும் என்பதே ஆண்டர்சனின் செயல் திட்டம். பள்ளியிலும் மதப் பிரச்சாரம் தீவிரமாகவே இருந்தது, கிறிஸ்தவத்துக்கு ஆதரவாகவும், இந்து மதத்தை எதிர்த்தும்.
ஆண்டர்சனின் உத்தி 1841-இல் இரண்டு ஜாதி இந்து மாணவர்களின் மதமாற்றத்தைக் கண்டது. முதலியாரான ராஜகோபாலும், பிராமணரான வெங்கடராமையாவும் 18 வயதில் மதம் மாறினர். பின்னர் இவரகளின் மதப் பிரசாரத்தின் பலனாக 1841-1863 ஆண்டுகளில் 108 ஆண்களும், பெண்களும், அவர்களின் 81 குழந்தைகளும் ஞான ஸ்நானம் பெற்றனர். அந்த இரண்டு மாணவர்கள் மதம் மாறியது சென்னை நகரத்தில் பெரும் கொந்தளிப்பைக் கிளப்பியது. அதே வருடம் 1841-இல் ஜாதி இந்துக்கள் சென்னையில் பச்சையப்பன் கல்லூரியைத் தொடங்க இதுவும் ஒரு முக்கியக் காரணம்.
மதம் மாறிய 108 இந்துக்களில் ஒரேயொருவருவர் தான் ஜாதியற்றவர், ஏனையோர் பிராமணர், முதலியார், நாயுடு, செட்டியார் ஆகியோர். கவனிக்கம் 22 ஆண்டுகளில் மதம் மாறியது சொற்பம் 189 தான். இந்தச் சூழலில் தான் வில்லியம் மில்லர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு வருகிறார்.
வில்லியம் மில்லரும் திசை மாறிய சென்னை கிறிஸ்தவக் கல்லூரியும்:
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் வரலாற்றில் ஸ்தாபகரான ஆண்டர்சனை விட ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் மறைதிரு வில்லியம் மில்லர். மில்லர் 1862-இல் சென்னைக்கு வந்தார். மில்லர் வந்த போது ஆண்டர்சனின் பள்ளி நலிவடையத் தொடங்கியிருந்தது. மில்லர் முதன்மையாகக் கல்வியாளர். அவரால் தான் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி முதலில் கல்லூரி அந்தஸ்தையும் பின்னர் சிறந்த கல்விச் சாலையாகவும் பெயரெடுத்தது.
William Miller (courtesy Wikipedia) |
ஆண்டர்சனின் மதமாற்றத்தை மில்லர் மொத்தமாகப் பின்னுக்குத் தள்ளி கல்லூரியின் குறிக்கோள் மதப் பரப்புரைக்கு ஏற்ற வகையில் மாணவரை தயார் செய்வது ( ‘Preparatio evangelica’) மட்டுமே என்று வரையறுத்தார். 1874-இல் சென்னிந்தியாவில் ஒரு கிறிஸ்தவக் கல்லூரியின் தேவைக் குறித்து ஸ்காட்லாந்து திருச்சபைக்கு எழுதிய கடிதத்தில் மில்லர் அரசு நடத்தும் கல்விச் சாலைகளில் மத பரப்புரையோ கிறிஸ்தவ விழுமியங்களோ பயிற்றுவிக்கப்படுவதில்லை (இது குறித்துப் பின்னர் வரும் பகுதியில் சொல்கிறேன்) என்று சுட்டிக் காட்டி அதன் வெற்றிடத்தை தன் கல்லூரி இட்டு நிரப்பும் என்றும் அதற்கு நிதி வேண்டும் என்று கேட்கிறார்.
கிறிஸ்தபக் கல்லூரியின் கல்வி மாணவனை மத பரப்புரைக்கு தயார் செய்யும் வித்தாக இருக்க வேண்டுமென்று மில்லர் கருதினாலும் கல்லூரியின் பாடத்திட்டம் மதப் பரப்புரைக்கு உதவும் வகையில் இல்லை என்றும் பல் வகையான கருத்தியல்களுக்கும் இடமளிக்கும் வகையில் இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார் சூஸன் பில்லிங்கடன் ஹார்ப்பர். அடுத்தப் பகுதியில் இது குறித்த உதாரணத்தைப் பார்ப்போம். 1885-இல் சென்னைக்கு வந்து தீவிர மதப் பரப்புரையை மேற்கொண்ட மறைதிரு மாரிஸ் பிலிப்ஸ் ஸ்காட்லாந்து மிஷனரிகளான அலெக்ஸாந்தர் டஃபும் (Alexander Duff) ஜான் ஆண்டர்சனும் கல்வியை, மத பரப்புரையை விட, அதிகம் முன்னிறுத்தினார்கள் என்று குற்றம் சாட்டியது கிறிஸ்தவக் கல்லூரி மத மாற்றத்தை முக்கியமாக கருதவில்லை
ஸ்காட்லாந்துகாரனுக்கு ஜிப்ஸி மக்கள் எப்படி வேறுபட்டவர்களாகத் தெரிவார்களோ அப்படி தலித்துகள் “உண்மையான குடிமக்களின்று வேறுபட்டவர்கள்” (‘separate from true inhabitants’) என்று மில்லர் கருதினார். தலித்துகள் இந்தியாவின் பெரும்பான்மை மக்களின்று வேறுபட்டவர்கள் என்றும் கருதினார். அந்த “உண்மையான இந்துக்கள்” நோக்கியே தன் கல்விப் பணி இருக்க வேண்டும் என்று மில்லர் நினைத்தார்.
ஜாதி இந்துக்கள் கல்விக் கற்க சென்னை கிறிஸ்தவக் கல்லூரி ஏற்றச் சூழலை தர வேண்டுமென்ற மில்லரின் கருத்தியல் துல்லியமாகச் செயல் வடிவம் பெற்றது மாணவர்களுக்கான விடுதிகளில் தான். 1882 ஆரம்பிக்கப்பட்ட முதல் மாணவர் தங்கும் விடு பிராமணர்கள் அல்லது வைணவர்களுக்கு மட்டுமே என்ற விதிக்குட்பட்டது. 1888-இல் கிறிஸ்தவ மாணவர்களுக்கென்று தனியே விடுதி அமைக்கப்பட்டது. இதில் எல்லா வகுப்பினரும் இருந்திருக்கலாம் ஆனால் தலித்துகள் இருந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு, கிறிஸ்தவ மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமில்லை. 1903-இல் பிராமணரல்லாத மாணவர்களுக்கென்று ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்களிடையே ஜாதி வித்தியாசம் குறைய வேண்டுமென்று நினைத்த மில்லர் ஏற்காட்டில் நடக்கும் ஒரு நிகழ்வுக்கு எல்லோரும் சேர்ந்து தங்க வகைச் செய்தார் ஆனால் பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஜாதிகள் கலந்த விடுதி ஒன்று 1919-இல் தொடங்கப்பட்டது. அங்கும் கூட பிராமணர்கள், பிராமணரல்லாதோர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு தனித் தனி சாப்பிடும் இடங்கள்.
1888 மத மாற்ற சர்ச்சை:
ஏப்ரல் 1888-இல் கல்லுரியில் ஒரு பிராமண மாணவன் மதம் மாற விரும்புவதாகச் செய்தி பரவியது. மேலும் அம்மாணவனின் பெற்றோரின் சம்மதமில்லாமலே அது நடக்கிறதென்றும் செய்திப் பரவி கொந்தளிப்பு ஏற்படுத்தியது. கல்லூரி பேராசிரியர்கள் இந்து மதத்தை நிந்தனை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் மாணவர் கிளர்ச்சியில் பிரதானமானது. இந்தப் பிரச்சனை இந்திய பத்திரிக்கைகள் பலவற்றிலும் எழுதப்பட்டது. இந்து பத்திரிக்கை “கிறிஸ்தவ மாணவர்கள் அநேகம் பேர் பயிலும் கல்லூரியில் இந்து பேராசிரியர்கள் இப்படிப் பேசினால் அம்மாணவர்கள் சும்மா இருப்பார்களா” என்று கேட்டது. இச்சர்ச்சையைப் படிக்கும் யாரும் அக்காலத்தில் கிறிஸ்தவக் கல்லூரி இந்து மதத்துக்கும் முழுதும் எதிரானது என்று நினைக்கக் கூடும். ஒரேயொரு பிராமண மாணவனின் மத மாற்றம் தேசிய பிரச்சனையாகவே நாளிதழ்களில் கவனப்படுத்தப்பட்டது.
அம்பேத்கரின் மத மாற்ற பிரகடனத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட எம்.சி. ராஜா தான் கிறிஸ்தவப் பள்ளிகளில் (கிறிஸ்தவக் கல்லூரி உட்பட) பயின்று அங்கேயே ஆசிரியராகவும் வேலை செய்தாலும், கிறிஸ்தவ விழுமியங்கள் பால் ஈர்ப்பிருந்தாலும் தான் மதம் மாறவில்லை என்று தன் மறுப்பில் தெரிவித்தை நினைவுக் கூற வேண்டும்.
மில்லரும் கிறிஸ்தவக் கல்லூரியில் மறைமலை அடிகளாரும்:
தயானந்தனும் சூஸன் பில்லிங்கடன் ஹார்ப்பரும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி சைவ சமயத்துக்கு ஆற்றிய பெரும்பங்கினை எழுதவில்லை. மறைமலை அடிகளாரை முன் வைத்து சைவ சித்தாந்த சபையின் செயல்பாட்டின் வரலாறு குறித்து எழுதிய ரவி வைத்தீஸ் அரிய தகவல்களைத் தருகிறார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் கல்வித் திட்டமும் செயல்பாடும் பல்வேறு தரப்புகளுக்கு இடமளித்தது என்ற ஹார்ப்பரின் கருத்துக்கு வலு சேர்ப்பது வைத்தீஸின் தகவல்கள். மேலும் கிறிஸ்தவக் கல்லூரியில் விடுதிகள் முதல் கல்விச் செயல்பாடு வரை ஜாதி இந்துக்களின் செல்வாக்கை காண முடியும்.
1898-இல் மறைமலை அடிகள் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்த் துறையில் சேர்ந்தார். அவரின் பணி விண்ணப்பத்துக்கு திருவாடுதுறை அதீனம் உள்ளிட்ட சைவ சித்தாந்த முக்கியஸ்தர்கள் சிலர் உறுதுணையாக இருந்தது கவனிக்கத் தக்கது. சம்பந்தப் பட்ட கல்லூரி கிறிஸ்தவக் கல்லூரி என்பதோடு 1888-இல் சென்னையில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்திய ஒரு பிராமண மாணவனின் மத மாற்றம் நிகழ்ந்து 11 வருடங்களுக்குள்ளாக.
சுந்தரம் பிள்ளை, பரிதிமாற் கலைஞர் என்றறியப்பட்ட சூரியநாராயண சாஸ்திரி, ஜி.யு.போப் ஆகிய சைவ சித்தாந்தத்தை ஏற்றவர்களின் கட்டுரைகள் மில்லர் ஸ்தாபித்த கல்லூரி நாளிதழில் (Christian College Magazine) வெளிவந்திருக்கின்றன. ‘திராவிட பாஷா அபிவிருத்தி சங்கம்’ 1887-இல் நிறுவப்பட்டது, அதன் நோக்கம், “மாணவர்களிடையே தமிழ் இலக்கியம் படிப்பதை தூண்டுவது”. ‘மில்லர் தமிழ் சங்கம் நூலகம்’ ராமநாதபுரம் ராஜா சேதுபதி பெரும்பாலும் அளித்த 200 தமிழ் செவ்வியல் படைப்புகளைக் கொண்டது. மேலும் “Madras Hindu Social Reform Association’-இன் கூட்டங்கள் அடிக்கடி கிறிஸ்தவக் கல்லூரியின் ஆண்டர்சன் ஹாலில் நடைபெற மில்லர் அனுமதியளித்தார்.
மறைமலை அடிகளின் முக்கியமான மாணவர்கள் பட்டியல் மில்லரின் கிறிஸ்தவக் கல்லூரி பற்றி சித்திரம் அளிக்கிறது, “சோமசுந்தர பாரதி, வி.எஸ். செங்கல்வராயப் பிள்ளை, டி.எம்.கிருஷ்ணசுவாமி ஐயர், சுப்பராயன், வி. கிருஷ்ண ஐயர், டி.கே.சிதம்பரநாதர் முதலியார், எஸ், வையாபுரி பிள்ளை, சி.என். முத்துரங்க முதலியார்”.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, தயானந்தன் சொல்வது போல், பிராமணர்களுக்கும் மற்ற ஜாதி இந்துக்களுக்குமே முக்கியத்துவம் அளித்தது என வாசகருக்கு இப்போது விளங்கியிருக்கும். ஆனால் ஜாதி இந்துக்களுக்கு முக்க்யத்துவம் அளித்ததோடு நில்லாமல் தலித் விரோத போக்கினையும் கல்லூரி மேற்கொண்டதை மில்லருக்கும் ஆடம் ஆண்டிரூவுக்கும் நடந்த மோதல்கள் தெளிவாக்கும்.
“பறையர்” ஆடம் ஆண்ட்ரூவும் மில்லரின் கல்லூரியும்:
தலித்துகள் வரலாற்றில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜேம்ஸ் டிரெமன்ஹீருக்கும் ஆடம் ஆண்ட்ரூவுக்கு பிரதான இடமுண்டு. இருவரின் அறிக்கைகள் தாம் தலித்துகளுக்குக் காலனி ஆட்சியில் நிலம் கிடைக்க வழிச் செய்தன. மிஷனரியான ஆடம் ஆண்ட்ரூ பறையர்களிடம் காட்டிய பரிவுக்காகவும் அவர்களுக்காகத் தீவிரமாகச் செயல்பட்டதாலும் “பறையர்” ஆண்ட்ரூ என்றே அழைக்கப்பட்டார்.
1879-இல் ஆடம் ஆண்ட்ரூ தன் மனைவியுடன் செங்கல்பட்டுக்கு வந்து 35 வருடங்கள் தலித்துகளுக்காகவும் கிறிஸ்தவத்துக்காகவும் உழைத்தார். 1881-இல் ஐந்து கிராமங்களில் பள்ளிகள் துவக்கினார். தலித்துகளின் பெரும் மத மாற்றங்களை இப்போது ஆசிரியர்கள் “தலித் முன் நகர்வு இயக்கம்” (Dalit movements) என்றே அழைக்கிறார்கள். அவை பெரும்பாலும் 1890-க்குப் பின் ஆரம்பமாகின. 1893-இல் ஆண்ட்ரூ முயற்சியால் 22 கிராமப் பள்ளிகள் உருவாகி, 656 மாணவர்கள் படித்து வந்தனர். 1912-வாக்கில் அதுவே 67 பள்ளிகள், 131 ஆசிரியர்கள், 2722 மாணவர்கள் (அவற்றுள் 2145 மாணவர்கள் கிறிஸ்தவர்கள்) என விரிவடைந்தது. தலித்துகள் திடீரென்றெல்லாம் கண் மூடித்தனமாக மதம் மாறவில்லை. நிறைய யோசித்து வார கணக்கில், மாத கணக்கில் விவாதித்துப் பின் தான் மதம் மாறினார்கள். கல்வி அவர்கள் வைத்த முதன்மையான கோரிக்கை. மதம் மாறிய சேரிகள் பலவற்றிலும் ஒரு சிறு தேவாலயமும், பள்ளியும் கட்டிடங்களாக எழும்பின.
தங்கள் சுற்றுச் சூழலில் நிகழ்ந்த இம்மத மாற்றங்களை கிறிஸ்தவக் கல்லூரியின் நாளிதழ் எள்ளி நகையாடியது. மதம் மாறியவர்களின் எண்ணிக்கையாக ஆண்ட்ரூ சொன்னதை நாளிதழின் ஆசிரியர் “வெறும் எண்ணிக்கையை ஒரு பணியின் அளவாகக் கொள்ள முடியாது” என்று எழுதினார். தலித்துகளின் மத மாற்றம் உள்ளார்ந்ததல்ல என்கிற தொனியில் 1896-இல் ஒரு கூட்டத்தில் மில்லர் கடிந்துரைத்தார். ஆண்டிரூவின் செயல்பாடுகளை கல்லூரி நாளிதழ் இருட்டடிப்பே செய்தது.
1936-1946 ஆண்டுகளில் காஞ்சிபுரம் பகுதியில் மிஷனரியாகச் செயல்பட்ட பிஷப் லெஸ்லி நியுபிகின் (Rev. Leslie Newbigin) அவர் சுயசரிதையில் எழுதுகிறார், “காஞ்சிபுரம் பகுதிகளில் இருந்து ஒரு மாணவருக்குக் கூட சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இடமில்லை. அவர்களுக்குத் தகுதியில்லை என்று சொல்லப்பட்டது”, “கிராமப்புற திருச்சபைகளில் இருந்து ஒரு மாணவர் கூட கிறிஸ்தவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டதில்லை. அது தான் மில்லரின் மரபு. அதனை எதிர்த்து நான் போராடி சில மாணவர்களைச் சேர்த்தேன்”.
1874-இல் கிறிஸ்தவக் கல்லூரியின் தேவைக் குறித்துக் கடிதமெழுதிய மில்லர் அக்கடிதத்தில் பல கல்லூரிகளுக்கு பதிலாக ஒரேயொரு கல்லூரி இருப்பதே உசிதம் என்றும் வாதாடியிருப்பார். அது போலவே தன் கல்லூரியின் பிரபலத்தை ஸ்தாபித்து வேறு கல்லூரிகள் உருவாக முடியாத சூழலை மில்லர் உருவாக்கியதால் தலித்துகளுக்கு வேறு போக்கிடமுமில்லை.
கிறிஸ்தவக் கல்லூரியில் நுழைய முடியாததால் தலித்துகள் இழந்ததென்ன? சென்னை பிரஸிடென்ஸி அழைக்கப்பட்ட தென்னிந்தியாவின் முக்கிய அரசு பணிகள், வேறு உயர் வேலை வாய்ப்புகள் இந்தியாவில் முதன்மை கல்லூரியாக கருதப்பட்ட கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்களைத் தேடி வந்தது. “1917-1918 ஆண்டுக்கான கல்லூரி காலண்டர் 4207 மாணவர்கள் பட்டம் பெற்றார்கள்….அவர்களுள் 3530 மாணவர்கள் பொறாமைக் கொள்ளத்தக்க பணிகளில் சேர்ந்தார்கள் என்றது”. “1921-க்கான காலண்டர் படி 43% அரசு ஊழியர்களாகவும், 31% வக்கீல்களாகவும், 22% ஆசிரியர்களாகவும் மற்றவர்கள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் ஏனைய தொழில் செய்பவர்களாகவும் தேர்ச்சிப் பெற்றனர்”. அரசியலிலும் அரசுப் பணியிலும் மிக முக்கிய இடங்களை கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் அடைந்தனர் ஆனால் தலித்துகள் அவற்றில் பங்கு பெறாதது தலித்துகளை மேலும் ஓரம் கட்டியது.
தலித் இறையியலை வடிவமைத்தவர்கள் இந்திய கிறிஸ்தவத்தின் இறையியல் தலித் வாழ்க்கை முறைகளில் இருந்து விலகி பிராமணவயமான அல்லது ஜாதி இந்துக்களின் விழுமியத்தை சார்ந்ததாக இருந்ததற்கு முக்கிய காரணம் அதனை உருவாக்கிய செஞ்சையா (Chenchiah, இவர் பிராமண குடும்பத்தில் பிறந்தவர்), வெங்கல் சக்கரை (Vengal Chakkarai Chettiar) போன்றோர் ஜாதி இந்துக்களாக இருந்ததே என்று விமர்சித்தனர். இருவருமே சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள். அக்காலத்தில் அக்கல்லூரியில் இருந்து தலித் இறையியல் பிறந்திருக்க வாய்ப்பில்லை.
சென்னை உயர்நிலைப் பள்ளியும் காலனி அரசின் தலித் விரோதமும்:
மில்லர் தன் கடிதத்தில் அரசு நடத்தும் கல்விச் சாலைகளில் கிறிஸ்தவப் பண்பாடு சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்று சுட்டிக் காட்டியதை பார்த்தோம். அது உண்மையா?
1841-இல் இரண்டு ஜாதி இந்துக்களின் மத மாற்றம் கொந்தளிப்பு ஏற்படுத்தியதையும் அந்தச் சூழலில் உருவான பச்சயப்பன் கல்லூரி பற்றியும் முன்பு சொன்னேன். பச்சயப்பன் கல்லூரியும் கிறிஸ்தவக் கல்லூரிக்குப் போட்டியாக உயர் ஜாதியினர் அதிகம் வசிக்கும் கறுப்பு நகரிலேயே அமைந்தது தற்செயலல்ல. கல்வி அளிப்பதில் போட்டி நிலவிய போதிலும் அதன் நோக்கம் ஜாதி இந்துக்களின் மத மாற்றத்தை தடுப்பது மட்டுமே. “எல்லோருக்குமான கல்வி” என்பது பச்சயப்பனிலும் நோக்கமில்லை. பச்சயப்பன் கல்லூரியிலும் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு தலித்துகளுக்கு அனுமதியில்லை. அதனை எதிர்த்து போரிட்டு தலித்துகளுக்கு அனுமதி வாங்கியதில் முக்கியமானவர் எம்.சி. ராஜா.
அதே 1841 இன்னொரு முக்கிய நிகழ்வு அரசே தொடங்கிய “சென்னை உயர்நிலைப் பள்ளி” (Madras High School). கவர்னர் எல்ஃபின்ஸ்டனின் முயற்சியால் தொடங்கப்பட்டது. அப்பள்ளியை நிர்வகிக்க பல்கலைக் கழக போர்ட் ஒன்றும் உருவானது. எல்லோருக்கும் பள்ளியில் அனுமதி உண்டென்று சொல்லப்பட்டாலும் “சமூக உணர்வுகளுக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளப்படும்” என்றும் சொல்லப்பட்டது.
மில்லரை போலவே எல்ஃபின்ஸ்டனும் ஜாதி இந்துக்களுக்கு கல்வி அளித்தால் அது கீழ் நோக்கிப் பரவும் (filteration theory) என்ற கருத்தேக் கொண்டிருந்ததோடு தலித்துகள் கல்விப் பெற்றால் மற்ற சமூகத்தினர் ஏற்க மாட்டார்கள் என்றும் கருதினார். அம்பேத்கர் எல்ஃபின்ஸ்டனின் மேற்கோளைத் தருகிறார், “நம் கல்வி முறை அவர்களிடையே (தலித்துகள்) வேர் கொண்டால் அது மேலும் பரவாது. மேலும் மற்றவர்களைக் காட்டிலும் பயனுள்ள அறிவில் மேலோங்கியிருக்கும் ஒரு புதிய வகுப்பின் (அதாவது கல்விப் பெற்ற தலித்துகளின்) தலைமையில் இருப்போம், இந்த புதிய வகுப்பினை வெறுக்கும் மற்ற ஜாதியினரை விட இவர்களையே நாமும் நாடும் நிலையில் இருப்போம்”.
மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பிராமணர்களும் மற்ற ஜாதி இந்துக்களுமே. இதற்கு முக்கியக் காரணம் மாதம் நான்கு ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்ட பள்ளிக் கட்டணம். அக்கட்டணத்தை குறைக்கச் சொல்லி வந்த கோரிக்கைகளை பல்கலைக் கழக போர்ட் பத்து வருடங்களுக்கு நிராகரித்தது. தலித்துகள் (Polluting castes) பள்ளியில் சேரக் கூடாதென்று ஜாதி இந்துக்களின் சார்பில் போர்ட் தீவிரமாகவே செயல்பட்டது.
Lord Elphinstone (Courtesy Wikipedia) |
1851-இல் தான் ஒரு தலித் மாணவன் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அது பெரும் எதிர்ப்பை இந்துக்களிடையே கிளப்பியது. பல்கலைக் கழக போர்டில் ஒரு இந்து உறுப்பினர் ராஜினாமா செய்தார். அந்த மாணவனின் சேர்க்கையை ரத்து செய்ய போர்ட் மறுத்தாலும் அது அதன் பிறகு பெரும் மாற்றங்கள் எதையும் நிகழ்த்திவிடவில்லை.
கிறிஸ்தவ மிஷனரிகள் அரசு கல்வி நிலயங்களில் கிறிஸ்தவம் பற்றி பயிற்றுவிக்க கோரிக்கைகள் விடுப்பதும் அவற்றுக்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் 1858 ஆங்கிலேய அரசு மத விஷயங்களில் தலையிடுவதில்லை என்கிற கொள்கையை முன்மொழிந்தப் பின் படிப்படியாக குறைந்தது. அதனால் தான் 1874-இல் எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவத்தைப் பரப்ப கிறிஸ்தவக் கல்லூரி வேண்டுமென்றார். ஆனால் அவர் கல்லூரியை நடத்திய விதத்தை பார்க்கும் போது அக்கோரிக்கையே பணம் பெறுவதற்காகவே சொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லலாம்.
தலித்துகளுக்கு கல்வியை மறுப்பதில் பல ஜாதியினரும் தத்தம் பங்குக்கு எதையேனும் செய்தார்கள். 1933-இல் வெளிவந்த ஹட்டனின் கணக்கெடுப்பில் ஒரு குறிப்பு (JH Hutton ‘1931 Census of India, Published 1933) சொல்கிறது, “ராமநாதபுரத்தில் கள்ளர்கள் தலித்துகள் ( Exterior castes) மீது நிறைய கட்டுபாடுகள் விதித்திருந்தார்கள் அவற்றுள் ஒன்று அவர்கள் பிள்ளைகள் கல்வி கற்கக் கூடாதென்பது”.
இரட்டைமலை சீனிவாசனின் கல்வியும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் கல்வியும்:
தலித்துகள் கல்விப் பெறுவதற்கு சந்திக்க வேண்டிய இடையீடுகளை புரிந்துக்கொள்ள இரட்டைமலை சீனிவாசன் தான் கல்விப் பெற சந்தித்த சவால்களை விவரித்ததை நாம் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் கல்விப் பெற்ற சூழலோடு ஒப்பிட்டால் ஒரு புரிதல் கிடைக்கும்.
சீனிவாசன் சுயசரிதையில் எழுதுகிறார், “ நான் செங்கல்பட்டு கிராமங்களிலொன்றில் 1860ஆம் வருடம் பிறந்தேன். கோயம்புத்தூர் கலாசாலையில் நான் வாசித்தபோது சுமார் 400 பிள்ளைகளில் 10பேர் தவிர மற்றவர்கள் பிராமணர். ஜாதி கோட்பாடுகள் மிக கடினமாய் கவனிக்கப்பட்டன. பிள்ளைகளிடம் சிநேகித்தால் ஜாதி, குடும்பம், இருப்பிட முதலானவைகளை தெரிந்துகொண்டால் அவர்கள் தாழ்வாக என்னை நடத்துவார்கள் என்று பயந்து பள்ளிக்கு வெளியே எங்கேனும் வாசித்துக்கொண்டிருந்து பள்ளி ஆரம்ப மணி அடித்தபிறகு வகுப்புக்குள் போவேன். வகுப்பு கலையும்போது என்னை மாணாக்கர்கள் எட்டாதபடி வீட்டுக்கு கடுகன நடந்து சேருவேன். பிள்ளைகளோடு கூடி விளையாடக் கூடாமையான கொடுமையை நினைத்து மனங்கலங்கி எண்ணி எண்ணி இந்த இடுக்கத்தை எப்படி மேற்கொள்ளுவதென்று யோசிப்பேன்.” சீனிவாசன் குறிப்பிடும் பள்ளி எது என்றோ யார் நடத்தியதென்றோ தெரியவில்லை என்கிறார் வரலாற்றாசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்.
சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் வாழ்க்கை சரித்திரம் எழுதிய அவர் மகனும் வரலாற்றாய்வாளருமான சர்வபள்ளி கோபால் தந்தையின் கல்லூரி நாட்கள் பற்றி எழுதியிருக்கிறார். இராதாகிருஷ்ணன் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் ஆயினும் 1904-இல் கல்லூரியில் படிக்கச் செல்லும் அவருக்கு மாதாந்திர உதவித் தொகையுடன் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைக்கிறது (உதவித் தொகை கல்லூரி கொடுத்ததா என்று தெளிவில்லை). அப்போது கல்லூரியில் ஆசிரியர்களாக இருந்த வில்லியம் மில்லர், ஏ.ஜி.ஹாக் (A.g. Hogg), ஸ்கின்னர் (Skinner) போன்றவர்கள் இராதாகிருஷ்ணன் மீது தாக்கம் ஏற்படுத்தினார்கள் என்கிறார் கோபால். அப்படியென்றால் அங்கு ஆசிரிய-மாணவ உறவு சுமுகமாக இருந்திருக்கிறது. மாணவரின் ஜாதியும் உதவியிருக்கலாம். இளங்கலை முடித்தப் பின் முதுகலைக்கும் இராதாகிருஷ்ணனுக்கு உதவித் தொகை கிடைக்கிறது.
இராதாகிருஷ்ணன் மாணவராக இருந்த போது ஹாக் பகவத் கீதையின் கருத்தியலை இழிவாக தன் உரைகளில் குறிப்பிடுவாராம். மேலும் கல்லூரியில் நிலவியச் சூழல் (கோபால் குறிப்பிடுவது இந்து மதத்தை இழிவாக பேசும் போக்கு) இராதாகிருஷ்ணனை சீண்டியதென்கிறார் கோபால். சீண்டப்பட்ட இராதாகிருஷ்ணன் இந்து மதம் பற்றி ஆழ்ந்து படிக்கலானார். முதுகலை பட்டத்துக்கு தேவையான ஆய்வு தலைப்பாக வேதாந்தம் குறித்து எழுதினார் இராதாகிருஷ்ணன் (‘The Ethics of the Vedanta and Its Metaphysical Presuppositions’). ஹாக்கும் இன்னொரு ஆசிரியரும் இராதாகிருஷ்ணனின் ஆய்வின் நேர்த்தியை பாராட்டியதாகச் சொல்லும் கோபால் கல்லூரி நிர்வாகத்துக்கு உவப்பான ஆய்வாக எழுதியிருந்தால் இராதாகிருஷ்ணனுக்கு இரண்டாம் நிலை தேர்ச்சியை விட முதல் வகுப்பிலேயே தேர்ச்சிப் பெற்றிருக்கலாம் என்று யூகத்தை முன் வைக்கிறார். இராதாக்கிருஷ்ணனின் ஆய்வை ஒரு உள்ளூர் அச்சகம் பதிப்பித்து வெளியிட்டதாம்.
இராதாகிருஷ்ணன் வரலாற்றில் நாம் கவனிக்க வேண்டியவை, இந்து மத நிந்தனை பரவலான கல்லூரியில் அவர் ஜாதி அவருக்கு பலம், இந்து மத தத்துவ ஆய்வுக்கு கல்லூரியும் இடமளிக்கிறது, ஒரு மாணவனின் முதுகலைப் பட்ட ஆய்வு உடனே நூலாக வெளிவரும் சூழல் இருக்கிறது (அப்படியென்றால் நடந்துக் கொண்டிருந்த சர்ச்சைகளிடையே இவ்வாய்வு பற்றி எப்படியோ வெளியே செய்தி பரவி இருக்கிறது).
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆரம்பக் காலங்களில் நிலவிய இந்து மதத்துக்கு எதிரான காழ்ப்பு நிறைந்தச் சூழலில் தான் இராதாகிருஷ்ணனும், பின்னர் மறைமலை அடிகளும் சுதந்திரமாக செயல்பட்டனர். இந்த சுதந்திரம் அங்கு பயின்ற எம்.சி.ராஜாவுக்கு இருந்ததா என்று தெரியவில்லை.
ஒரு தலித் மாணவனுக்கு கிறிஸ்தவக் கல்லூரியில் கிடைக்காத வசதிகள் பிராமணரான இராதாகிருஷ்ணனுக்கு கிடைத்தது. முதுகலை உதவித் தொகை மாதாந்திரம் ரூ 25 (1906-இல்). அது தவிர தனி வகுப்புகளும் எடுக்கும் வாய்ப்புகள் இராதாகிருஷ்ணனுக்கு இருந்தது. அந்த வருவாயில் இரு குடும்பத்தையே அவரால் காப்பாற்ற முடிந்தது.
முடிவுரை:
தலித்துகளின் கல்விக்கு எதிரான சூழலே இந்தியாவில் சுதந்திரம் வரை நிலவியது. அதற்கு பின்னும் நிலமை ஒன்றும் உடனே மாறிவிடவில்லை. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது நவீன கல்வி அறிமுகமான முதல் நூற்றாண்டில் தலித்துகளுக்கு கல்வி கிடைப்பதரிதாகவே இருந்திருக்கிறது. ஜாதி இந்துக்களே அந்த காலக்கட்டத்தில் கல்வியையும் அதனால் வரும் அதிகார பலத்தையும் ஏக போகமாக அனுபவித்தனர். கொள்கை முடிவு எடுக்கும் இடங்களில் நிலவிய சாதியம் அநேக விஷயங்களில் தலித்துகளில் நலன் பாதுகாக்கப்படாதது மட்டுமல்ல தலித் நலன்களுக்கு விரோதமான கொள்கைகள் அரசின் கொள்கைகளாக மாறவும் வழி செய்தது. மும்பையில் தலித் குழந்தைகளுக்கு வெயிலும் மழையும் படாத இடத்தில் கல்வி அளிக்கப்பட்டால் போதுமானது என்று சொல்லி குழந்தைகள் வகுப்புக்கு வெளியே அமர வைக்கப்படலாம் என கொள்கை முடிவே இருந்தது.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மில்லரின் காலத்துக்குப் பின்னும் தலித் விரோத போக்கினை 1937-இல் மேலும் விரிவடைந்து இன்றைய தாம்பரம் வளாகத்துக்கு இடம் மாறிய போதும் கை விடவில்லை என்கிறார் தயானந்தன். “ஒரு நூற்றாண்டு காலம் மத மாற்றத்துக்கு இசைவான மன நிலையை உருவாக்கும் கல்வியை ஜாதி இந்துக்களுக்கு முதலில் அளித்து அவர்களிடமிருந்து கீழ் நோக்கிப் பரவும் என்ற கருத்தியல் தலித்துகளின் கல்விக்கு தடையானதோடு கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கும் உதவவில்லை. இக்கருத்தியலினால் (மில்லரின் கருத்தியல்) தாங்கள் பெற்ற ஆங்கிலக் கல்வியை தங்கள் ஜாதிய மேலான்மையை தலித்துகளுக்கு எதிராக ஸ்தாபிக்க ஜாதி இந்துக்களுக்கு உதவியது” என்றும் தயானந்தன் குறிப்பிடுகிறார்.
ஜாதி இந்துக்களுக்காக தலித்துகளை தங்கள் கல்வி நிலையங்களில் இருந்து தள்ளி வைப்பது தமிழகத்தில் மட்டுமல்ல வேறிடங்களிலும் நடந்துள்ளது. அமெரிக்க மெத்தடிஸ்ட் திருச்சபையினர் பணியாற்றிய அவத் (Oudh or Awadh) பிரதேசத்தில் அவர்களும் அலெக்ஸாந்தர் டஃபின் (Alexander Duff) முன் சொன்ன உயர் ஜாதியினருக்கு கல்வி அளிப்பது என்ற கொள்கையையே பின் பிற்றி அதிகளவில் கல்விக்காகவே தங்களை நாடி வந்த சமர்களை (Chamar) சில கல்வி நிலையங்களில் இருந்து விலக்கி வைத்தனர். அலெக்ஸாந்தர் ட்ஃப், வில்லியம் மில்லர் ஆகிய இருவரின் கொள்கையின் விளைவு பல தலித்துகளுக்கு ஒரு முக்கியமான காலக் கட்டத்தில் கல்வியின் முழுப் பலன் கிடைக்காமல் போனது.
சென்னை போன்ற பெரு நகரில் மட்டுமே கல்லூரிகள் அமைக்கப் பெற்றது பலரும் கல்வி கற்கத் தடையாக இருந்தது. சென்னையும் தமிழகமும் பின்னாளில் பிரிந்துப் போன ஆந்திரத்தை விட கல்வியில் மேம்பட்டு இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம். அப்போதும் கூட பிராமணர்கள் அதிகம் வசிக்கும் மிகச் சிறு நகரமான கும்பகோணத்தில் அரசுக் கல்லூரி அமைக்கப்பட்டது, படித்தவர்களும் ஆசிரியர்களும் பெரும்பாலும் பிராமணர்களே.
ஒரேயொரு பிராமண மாணவன் மதம் மாறுகிறான் என்கிற செய்தி தேசிய ஏடுகள் பலவற்றிலும் சுடச்சுட விவாதிக்கப்பட்டது. ஆனால் தலித் மாணவர்கள், மூன்றே பேர், பள்ளியில் சேர்ந்தது எழுந்த கொந்தளிப்புக்கு எதிராக ஏதாவது எழுதப்பட்டதா என்று தெரியவில்லை. அநேகமாக இருந்திருக்காது. தலித்த்துகளுக்கு கல்வியை மறுப்பதில் பிராமணர், செட்டியார், முதலியார், கள்ளர் என்று இந்துக்களில் கிட்டத்தட்ட எல்லா ஜாதியினரும் கைக் கோர்த்துக் கொண்டனர்.
அரசும், பச்சையப்பன் கல்லூரி மாதிரி கல்வி நிலையங்களும் தலித் விரோதமாக செயல்பட்டது தவறு என்றாலும் ஓரளவில் எதிர்ப்பார்க்கக் கூடியதும். தலித்துகள் கல்விக்காகவே மதம் மாறியவர்கள், அவர்களே இந்திய கிறிஸ்தவத்தில் பெரும்பான்மை அப்படி இருக்க இந்திய அளவில் மிகவும் பாரட்டப்பட்ட கிறிஸ்தவக் கல்லூரி ஒன்றில் அவர்கள் விலக்கி வைக்கப்பட்டது மற்ற யார் செய்ததையும் விட மோசமான அற வீழ்ச்சி.
கிறிஸ்தவக் கல்லூரியின் இவ்வரலாறு மொத்த மிஷனரி கல்வி வரலாறு அல்ல. தலித் மாணவர்களுக்கு உயர் கல்வியை விட தொழிற்சார் கல்வி (ITI போன்ற) போதுமென்று நினைத்தார்கள் மிஷனரிகள் என்று ரூபா விமர்சித்தாலும் அக்கொள்கையில் சில யதார்த்தங்களும் இருந்தது. ஐ.டி.ஐ போன்ற பள்ளிகள் பல கத்தோலிக்கர்களால் நடத்தப்பட்டது, அவை சிறு நகரங்களில் அது வரை வெறும் உடல் சார்ந்த உழைப்பு (unskilled labor) செய்தவர்களை தொழில் நுட்பம் சார்ந்த உழைப்புக்கு (skilled labor) நகர்த்தி முன்னேற வழி செய்தது. (இதை சுட்டிக்காட்டிய நண்பருக்கு நன்றி).
பேஸ்புக் மற்றும் இணைய தளங்களில் கிறிஸ்தவக் கல்வி நிலையங்களைப் பற்றி வெறுப்புடன் எழுதும் 40-50 வயது கடந்த பலரும் ஏதேனும் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் பயின்ற ஜாதி இந்துக்களாகவே இருப்பார்கள் என்று நான் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். ஒரு நீதிபதியே கிறிஸ்தவப் பள்ளிகள் பற்றி ஆட்சேபகரமான கருத்து ஒன்றை சொன்ன போது இணையத்தில் அப்பள்ளிகளுக்காக வாதிட்ட பல நண்பர்கள் தலித்துகளே. இங்கு தான் தயானந்தன் சொன்ன விமர்சனம் துல்லியமாக நியாயம் என்று நிரூபனமாகிறது. எந்த ஜாதி இந்துக்களுக்காக தலித்துகளை ஒரு காலத்தில் கிறிஸ்தவக் கல்லூரி விலக்கி வைத்ததோ அவர்களால் கிறிஸ்தவத்துக்குப் பயனில்லை. மாறாக நெடுங்காலம் கல்வி மறுக்கப்பட்ட தலித்துகள் தாம் தங்களுக்கு சில வாசல்களையேனும் திறந்துக் கொடுத்த கிறிஸ்தவக் கல்வி நிலையங்களின் பால் நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள் என்றால் மிகையில்லை.
சுட்டிகளும் நூல் பட்டியலும்
- Local Dalit Christian History - Edited by George Oommen, John C.B. Webster
- Politics and Nationalist Awakening in South India, 1852-1891 - R. Suntheralingam
- Images of Man Religion and Historical Process in South Asia - Edited by Fred W. Clothey (Anti-Missionary Feeling and Hindu Revivalism in Madras: The Hindu Preaching and Tract Societies, c 1886-1891 - By Geoff A. Oddie)
- Religion, Caste, and Nation in South India: Maraimalai Adigal, the Neo-Saivite Movement and Tamil Nationalism 1876-1950 — V. Ravi Vaithees
- In the Shadow of the Mahatma: Bishop V.S. Azariah and the Travails of Christianity in British India — Susan Billington Harper
- An Unforgettable Dalit Voice: Life, Writings and Speeches of M.C. Rajah — Edited by Swaraj Basu
- The Pariah Problem: Caste, Religion, and the Social in Modern India — Rupa Viswanath
- Radhakrishnan: A Biography - Sarvepalli Gopal
- ஜீவிய சரித்திர சுருக்கம்: இரட்டைமலை ஆர். சீனிவாசன் - பதிப்பாசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்
- திவான் பஹதூர் இரட்டைமலை ஶ்ரீநிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்: தொகுப்பாசிரியர் புலவர் வே. பிரபாகரன்
- https://en.wikipedia.org/wiki/John_Anderson_(missionary)
- https://www.mea.gov.in/Images/attach/amb/Volume_05.pdf (Condition of the Converts)
- https://archive.org/details/dli.ministry.04746/page/n1/mode/2up - William Miller’s letter in 1874 “Need of a Christian College”
- https://archive.org/details/openingclosingad00mill/mode/2up William Miller’s address to General Assembly of Free Church of Scotland 1896.
- https://www.thehindu.com/features/metroplus/madras-miscellany-presidency-college-a-175yearold-landmark/article8399426.ece
- https://en.wikipedia.org/wiki/Vengal_Chakkarai
- https://en.wikipedia.org/wiki/P._Chenchiah
- Equity in Education? Schooling of Dalit Children in India - Geetha B. Namibisan (https://www.jstor.org/stable/4404063) E&PW
- William Miller https://en.wikipedia.org/wiki/William_Miller_(missionary)
- MCC https://en.wikipedia.org/wiki/Madras_Christian_College
- The ‘Untouchable School’: American Missionaries, Hindu Social Reformers and the Educational Dreams of Labouring Dalits in Colonial North India by Arun Kumar https://doi.org/10.1080/00856401.2019.1653162
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.