காந்தியின் வாழ்க்கை வரலாறுகள் பலவும் பூனா ஒப்பந்தத்தை ஒட்டி அம்பேத்கரையும் தலித் தரப்பு அரசியலையும் பேசுவதோடு கடந்து போய்விடுவன. சமீபத்திய குஹாவின் வாழ்க்கை வரலாற்றில் தான், சம கால விமர்சனங்களை கணக்கில் கொண்டு, அம்பேத்கருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. காந்தியை பற்றி பேசும் பொதுவான இன்றைய காந்தியவாதிகள் பலரும் காந்திக்கும் தலித் தரப்புக்குமான உறவு பற்றி அதிகம் பேசுவதேயில்லை. அவர்களுக்கு கதர், கிராமியம், வயல், புல்வெளி இதெல்லாம் ரொம்ப முக்கியம். தலித் தரப்பை பேசும் போதும் காந்தி-அம்பேத்கர் மோதல் என்கிற மிகச் சிறிய வட்டமே பிரதானம் கொள்கிறது. சஹஜானந்தர் பற்றி காந்தியர்களை விட ஸ்டாலின் ராஜாங்கம் தான் அதிகம் பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
நீலம் பதிப்பகம் வெளியிட்டுள்ள வே.அலெக்ஸ் தொகுத்த “எம்.சி.ராஜா சிந்தனைகள்” மிக முக்கியமான வரலாற்று ஆவணம். ராஜா-காந்தி-அம்பேத்கர் என்றொரு முக்கோண உறவில் பல சுவாரசியங்களும் மறக்கப்பட்ட வரலாறுகளும் இருக்கின்றன. பூனா ஒப்பந்தத்துக்கு முன் ராஜா காந்தியை விமர்சித்துப் பேசியிருக்கிறார். ஒரு வித ஆதங்கத்துடன் என்றும் சொல்லலாம். காந்தி போன்ற ஒரு செல்வாகுள்ள ஆளுமை தேசிய சுதந்திரத்துக்கு ஈடாக தலித் முன்னேற்றத்தையும் தீண்டாமை ஒழிப்பையும் கைக்கொள்ளலாமே என்கிற ஆதங்கம் இருந்திருக்கிறது. A disappointment too. பூனா ஒப்பந்தம், அரிஜன சேவா சங்கம் நிறுவியது போன்ற செயல்பாடுகள் ராஜாவை காந்தியிடம் ஈர்க்கிறது. அரிஜன சேவா சங்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பதாக ராஜா சொல்கிறார்.
“இந்து நாளிதழில் திரு. எம்.சி.ராஜா அரிஜனங்களுக்கு கான்ந்தி கூறிய அறிவுரை (ஏப்ரல் 12 1937)” எனத் தலைப்பிட்ட கட்டுரையில் இருந்து சில பகுதிகள். பேஸ்புக் பதிவென்பதால் மேலதிக தகவலகளை அதிகம் சேர்க்காமல் தருகிறேன். கட்டுரையில் இருக்கும் அக்காலத்திய சொல்லான அரிஜனங்கள் என்பதை அப்படியே எழுதியிருக்கிறேன். வேறு நோக்கமில்லை.
‘அரிஜனங்களும் தேர்தல்களும்’
—————————————-
(அரிஜனங்களின் காலனியில் தங்கியிருந்த காந்தியிடம் 1936 வாக்கில் சந்தித்து வரவிருக்கும் தேர்தலில் அரிஜனங்கள் ஏதேனும் ஒரு பிரதான அரசியல் கட்சியுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டுமா என்று கேட்ட ராஜாவுக்கு காந்தி அளித்த பதில். இடம் கருதி பொருள் மாறாத வகையில் எடிட் செய்திருக்கிறேன்)
“நீங்கல் எந்தவொரு கட்சியுடனும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது…. பல்லாண்டு காலமாக நீங்க தாங்கிக் கொண்டிருக்கும் வினோதமான குறைபாடுகள் மாறாமலேயே இருக்கும் பட்சத்தில் இந்தியாவிலுள்ள மிக முற்போக்கான கட்சி உட்பட வேறெந்தவொரு கட்சியுடனும் நீங்களே உங்களை அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் எதிர்ப்பார்க்க போவதில்லை. அரசாங்கத்தால் தரப்படும் எதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் ஆனால் உங்களுடைய சுய மரியாதையை நீங்கள் தியாகம் செய்யவேக் கூடாது. மதுவிலக்கு, உப்புவரி ஒழிப்பு போன்ற காங்கிரஸ் கட்சியின் திட்டங்களில் உள்ள நல்லவைகளை நீங்கள் ஆதரிக்கலாம். ஆனால் ஏழை இந்தியாவிலிருந்து எந்த வகையிலும் அரிஜனங்கள் தனிமைப்ப்படுத்தப்படுவதை நீங்கள் ஒப்புக் கொள்ளவே கூடாது. இந்தியாவின் நலன்களும் உங்களுடைய நலன்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தே உள்ளன”.
ராஜா எழுதுகிறார், “அரசியல் கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சிக்கு உடனடி ஆதாயம் பெற்றுத்தரும் எந்தவொரு சிந்தனையுமில்லாமல் முழுக்க முழுக்க அரிஜனங்களின் நலன்களை கருத்தில் கொண்டே திரு. காந்தி தந்த உன்னதமான அறிவுரை இத்தகையதாகவே அமைந்திருந்தது.
‘காங்கிரஸ் சிந்தனைகள்’
———————————-
(தேர்தல் சமயத்தில் தமிழக காங்கிரஸ் தலைமை அட்டவணைச் சாதி வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்கள் நிறுத்திய போது ராஜா காந்திக்கு மேலே சொன்ன அறிவுரை 1937-இலும் பொருந்துமா என்று எழுதி கேட்கிறார். காந்தி ஆமாம் என்கிறார். அப்புறம் காந்தி, ராஜா, தமிழக காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோரிடையே கடித பரிமாற்றம் நிகழ்கிறது. அதனை தொடர்ந்து சத்தியமூர்த்தி காங்கிரஸ் வேட்பாளர்களாக நிற்க விரும்பும் அட்டவணைச் சாதியினர் கருத்தில் கொள்ள வேண்டிய நிபந்தனைகளை அறிக்கையாகவே வெளியிடுகிறார். கவனிக்கவும் இது காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அட்டவணை வேட்பாளர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் நிபந்தனைகள். இடம் கருதி பொருள் மாறாத வகையில் எடிட் செய்திருக்கிறேன்)
“1. அரசுடன் ஒத்துழையாதிருக்கும் எந்த திட்டமும் சட்டப் பேரவைகளை புறக்கணிக்கும் திட்டமும் காங்கிரஸ் மேற்கொள்ளுகையில் அத்தகைய தீர்மானங்களின்படி செயல்பட விரும்பாத சூழ்நிலையில் அவை அரிஜனங்களைக் கட்டுப்படுத்துவதில்லை.
2. கட்சியின் ஏற்கப்பட்ட கொள்கையிலிருந்து வேறுபடும் போது அரிஜன சமுதாயத்தின் நலன்களைப் பாதிக்கும் விஷயங்களில் கருத்துகளைச் சொல்வதற்கும் சுயமாகவே வாக்களிப்பதற்கும் காங்கிரஸ் கட்சியிலுள்ள அரிஜன உறுப்பினர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு”
என் கருத்து
——————
இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே தான் நீதிக் கட்சியை சேர்ந்தவனல்ல என்றும் அக்கட்ட்சி வேட்பாளரை தோற்கடித்தே வென்றதாகவும் சொல்லும் ராஜா, திவான் பகதூர் ஆர். சீனிவாசனுடன் இணைந்து ‘அட்டவணைச் சாதிகளின்’ கட்சியை உருவாக்க முணைந்ததையும் அத்தகையக கட்சியின் கொள்கையை “‘ஒத்துழைப்பு’ எனும் ஒரே சொல்லால் வெளிப்படுத்தலாம்” என்கிறார். அதாவது மக்கள் நலனுக்காக யார் எதனை முன்னெடுத்தாலும் தன் கட்சி ஒத்துழைப்பு நல்கும் என்கிறார். அதையே தான் காந்தியும் எதிர்ப்பார்த்தார். பிற்காலத்தில் 90-களில் கூட்டணி ஆட்சிகள் மத்தியில் நிலைப்பெற்ற போது “Common Minimum Program” என்கிற சொல்லாடல் பிறந்தது. ஆனால் அதற்கு அரை நூற்றாண்டு முன்பே காந்தியும், ராஜாவும் அதை செயல்படுத்தியிருக்கிறார்கள்.
சம கால அரசியலோடு காந்தி, காங்கிரஸ், தலித் தரப்பின் செயல்பாடுகளை ஒப்பிட்டால் அக்கால அரசியல் தெளிவும் ஓவ்வொரு தரப்பின் பெருந்தன்மையும், அநேக குறைகளையும் தாண்டி, சிந்தனை தெளிவும் பிரம்மிக்க வைப்பது.
இப்பதிவு ஏதோ ராஜா காந்தியையும் காந்திய இயக்கத்தையும் தலையில் வைத்துக் கொண்டாடினார் என்று நிறுவும் முயற்சியல்ல. இன்னும் சொல்லப் போனால் ராஜாவுக்கு தமிழக காங்கிரஸ் அமைப்பின் மீதான நம்பிக்கையை விட காந்தியின் மீது நம்பிக்கை இருக்கிறது. காந்தியையும் ராஜா விமர்சிக்க தவறவில்லை.
ராஜா-அம்பேத்கர்-மூஞ்சே ஒப்பந்தம் மிக முக்கியமான ஒப்பந்தம். பூனா ஒப்பந்ததுக்கு நிகராக விவாதிக்கப்பட வேண்டியது. அது தொடர்பாக ராஜா எழுதிய கடிதங்கள் அபாரம்.
எம்.சி.ராஜாவின் வரலாற்றை முன் வைத்து காந்தியின் வரலாற்றையும், அக்கால நிகழ்வுகளின் சூழலையும் புரிந்துக் கொள்ள முயல்வது அத்தியாவசியமான முயற்சி.
(பேஸ்புக் பதிவு சுட்டி https://www.facebook.com/arvindkannaiyan/posts/10220277305502400 )
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.