பௌத்தம் உயிர்த்தெழுந்தது
வெகுகாலம் பல காரணங்களால் இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சியடைந்து கிட்டத்தட்ட வழக்கொழிந்து போயிருந்த நிலையில் காலனி ஆட்சிக்காலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகள், பழம் இந்தியாவின்இ லக்கிய மீட்டெடுப்புகள் பௌத்தத்தை மீண்டும் பேசு பொருளாக ஆக்கியது. 19-20 ஆம் நூற்றாண்டுகளில் பல தளங்களில் பௌத்தம் இந்தியாவில் புத்துயிர் பெற்றது. பௌத்த புத்தியிர்ப்பு மூன்று முக்கியத் தளங்களில் நிகழ்ந்தது.
முதல் தரப்பு, பௌத்த புத்தியிர்ப்பில் வரலாற்று ரீதியான தத்துவ பௌத்தத்தை, அதன் மத மையத்துடன், மீட்டெடுக்க முயன்றது. இந்த தரப்பில் முக்கியமானவர்கள் தர்மானந்த கோசாம்பி, ராகுல சாங்கிருத்யாயன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆச்சார்யா நரேந்திர தேவா சிங்காரவேலர் ஆகியோர். இவ்வகையில் பெரும்பாலோர் பிராமணர்களாகவே இருந்தனர்.
19-ஆம் நூற்றாண்டில் தலித்தியத் தரப்பு பௌத்தத்தை மீட்பது என்பதை தாண்டி பௌத்தத்தை மறு உருவாக்கமே செய்து தத்தவார்த்தமாகவும் அரசியலாகவும் பௌத்தத்தை சுவீகரித்ததை இன்னொரு தரப்பு எனலாம். இத்தரப்பின் முன்னோடியாக அயோத்திதாசரையும் உச்சமாக அம்பேத்கரையும் சொல்லலாம். லக்ஷ்மி நரசு, தலித் அல்லாதவரெனினும், அயோத்திதாசருடன் பணியாற்றியவர்களுள் முக்கியமானவர்.
மூன்றாவது தரப்பு பௌத்தத்தை அதன் சாதி, சடங்குகள் கடந்த அறிவுப் பூர்வமான மையத்தை முதன்மைப்படுத்தி புதியதோர் இந்தியாவுக்கு ஒரு கருத்தியலாக முன் எடுத்துச் சென்றது. இத்தரப்பில் இன்று அதிகம் பேசப்படாதவர் ஜவஹர்லால் நேரு.
நேருவுக்குப் பள்ளிக் காலமுதல் பிரதமராக இருந்த காலம் வரை புத்தரின் மீதும், பௌத்தத்தின் மீதும் அவற்றின் நீட்சியாக அசோகரின் மீதும் பெரும் ஈர்ப்பு உண்டு. தான் நிர்மானிக்க நினைத்த அறிவியல் பூர்வமான மத பூசல்களற்ற இந்தியாவுக்கு பௌத்தம் ஓர் தத்துவ அடித்தளம் என்று கருதினார் நேரு. அந்த தத்துவார்த்த அடித்தளத்தை செயல்படுத்துவதற்கு அசோகரை முன் மாதிரியாக கொண்டார். நேரு பிரதமராக இருந்த போது மிக முக்கிய பௌத்த மீட்டெடுப்புகள் நிகழ்ந்தன. அவற்றின் முக்கியத்துவத்தையும் அதில் நேருவின் பங்கையும் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
பௌத்தம், புத்தர், அசோகர் பற்றி நேரு
நேருவின் முதல் ஆசிரியர் எஃப்.டி. புரூக்ஸ் (Ferdinand T. Brooks) தியோஸாபிக்கல் சொஸைட்டியைச் சேர்ந்தவர். ப்ரூக்ஸின் மூலமாக 11 வயதில் நேருவுக்கு புத்தரின் தம்மபாதம் அறிமுகமுகமானது. பின்னர் நேரு அன்னி பெசண்டின் ஆசீர்வாதத்தோடு தியோஸாப்பிக்கல் சொஸைட்டியில் சேர்ந்தார். அங்கு ஹென்றி ஆல்காட்டையும் சந்தித்தார். ஆல்காட்டும் அயோத்திதாசரும் சேர்ந்து பணியாற்றியவர்கள்.
சோவியத் புரட்சியின் பத்தாம் ஆண்டு விழாவின் போது ஜவஹர்லாலும், மோதிலால் நேருவும் மாஸ்கோவில் இருந்தனர். அந்த பயணத்தைப் பற்றிய தன் கட்டுரைத் தொடரில் ரஷ்ய பௌத்த ஆய்வாளர் பேராசிரியர் பியோதர் ஸ்டெர்பேட்ஸ்கி (Fyodor Stcherbatsky) நேரு குறிப்பிட்டதை பார்த்து தர்மானந்த கோசாம்பி பௌத்தம் பயில ருஷ்யா சென்றார்.
நைனி சிறையிலிருந்து ஜனவரி 20, 1931-இல் நேரு தன் 14-வயது மகளுக்கு எழுதிய கடிதத்தில் மதங்களைப் பற்றி எழுதும்போது பௌத்தம் பற்றியும் புத்தர் பற்றியும் குறிப்புத் தருகிறார். புத்தர் சீர்திருத்தவாதி என்றும் பிராமணர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர் என்றும் நேரு எழுதுகிறார். அதே வருடம் நேரு தன் மனைவி மகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றார். புத்த மடங்களுக்கும் சென்றனர். அனுராதபுரத்தில் இருக்கும் உயர்ந்த அமர்ந்த நிலையில் இருக்கும் புத்தரின் சிலையின் முன் நின்றது தனக்கு அமைதியைத் தந்தது என்றும் பின்னர் ஒரு நண்பர் அச்சிலையின் புகைப்படத்தை இன்னொரு சிறைவாசத்தில் இருந்த தனக்கு அனுப்பியதாகவும் அப்படம் தனக்கு துணையாக இருக்கிறது, அதனை பார்க்கும் போதெல்லாம் மனம் தெம்புற்றதாகவும் தன் சுயசரிதையில் எழுதுகிறார். பௌத்தத்தின் மீது தனக்கு எப்போதும் ஈர்ப்பு இருந்ததென்றும் அது மதம் சாராத புத்தர் என்கிற ஆளுமையின் மீதான ஈர்ப்பு என்கிறார் நேரு.
மஹா போதி சங்கம் 1931-இல் தக்ஷசீலத்தில் புத்தரின் நினைவுப் பொருள்களை புதிதாக நிர்மாணித்த புத்தக் கோயிலில் வைக்கும் விழாவில் நேரு மனைவி, மகளுடன் பங்கெடுத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அநேக பௌத்த சமயம் சார்ந்த தலங்களுக்கு செல்வதை நேரு வழக்கமாகக் கொண்டிருந்தார்.
1942-1945 வரை நேரு சிறையிலிருந்த போது அவருடன் இருந்தவர்களுள் முக்கியமானவர் ஆச்சார்யா நரேந்திர தேவ். நரேந்திர தேவ் பன்மொழிப் புலவர் 1956-இல் இவர் எழுதிய “பௌத்த தர்ம தரிசனம்” 1957-இல் சாகித்ய அகாதமி விருது பெற்றது. நேரு இந்த சிறைவாசத்தின் போது எழுதிய “இந்தியாவை கண்டடைதல்” புத்தகத்தில் பௌத்தம் பற்றியும் அசோகர் பற்றியும் குறிப்பிடும்படியான அத்தியாயங்களை எழுதினார்.
“வாரணாசிக்கு அருகிலுள்ள சாரநாத்தில் 2500 வருடம் முன்பு நிகழ்ந்த புத்தரின் சொற்பொழிவு தூரத்து எதிரொலியாய் என் காதுகளில் கேட்டதாக உணர்ந்த சமயத்தில் புத்தரையே நேரில் பார்த்தது போல் இருந்தது. அசோகரின் ஸ்தூபிகளைப் பார்த்த போது அதன் கல்வெட்டுகளின் அபாரமான மொழி நடையில் ஒரு மனிதன், சக்கரவர்த்தியாக இருந்த போதிலும், எல்லா மன்னர்களையும் விட மேலான ஒருவரை அடையாளம் காட்டியது”.
“நான் இதனை வைசாகி தினத்தில் எழுதுவது தற்செயல்……புத்தருக்கு பெரும்பான்மை மதம், மூடப்பழக்கங்கள், புரோகிதர்கள், ஆகியவற்றையும் அதனால் ஆதாயம் அடைபவர்களையும் தாக்குவதற்கு தைரியம் இருந்தது…..”
“எட்வின் ஆர்னால்ட்டின் ‘ஆசிய ஜோதி’ புத்தகம் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. புத்தரின் தொன்மங்களோடு சம்பந்தப்பட்ட பல இடங்களுக்கு செல்வதும் எனக்கு விருப்பமான சுற்றுலா….பௌத்தம் இன்றும் உயிர்ப்புடனும் பெரும்பான்மையாகவும் இருக்கும் நாடுகளுக்கு செல்லும் போது அங்குள்ள விஹாரங்கள், மடங்களுக்கு சென்று அங்கிருப்பவர்களிடம் புத்தர் அவர்கள் வாழ்வில் உண்டாக்கிய தாக்கம் பற்றி வினவி அறிய முயல்வேன். (நான் கேள்விப்பட்டவற்றுள்) எனக்கு ஒவ்வாதவை பல. பகுத்தறிவை மையமாகக் கொண்ட ஒரு தத்துவ மரபு சடங்குகளுக்குள் அடைபட்டது, புத்த பிக்குகள் அறியாமையினால் பீடிக்கப்பட்டனர், கீழ் படிதலை அதிகாரமாக கோருபவர்களாக இருந்தார்கள்…மனதுக்கு பிடித்தவையும் இருந்தது….மடங்கள் அமைதியான சூழலாக இருந்தன.” “பௌத்தத்தின் நம்பிக்கையின்மை (Pessimism), வாழ்வியலில் இருந்து ஒதுங்கி இருத்தல் ஆகியவை என்னை ஈர்க்கவில்லை” என்கிறார் நேரு. இந்த புள்ளியில் இருந்து தான் அடுத்து அவர் அசோகரை பற்றி பேச ஆரம்பிக்கிறார்.
இந்திராவுக்கு உலக வரலாறு பற்றி எழுதிய கடிதங்களில் மார்ச்சு 30 1932 அன்று “கடவுள்களால் விரும்பப்பட்ட அசோகர்” என்ற கடிதம் அசோகரைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அசோகர் எவ்வாறு மத வேற்றுமைகளை ஏற்றார், எந்த நேரத்திலும் பொதுமக்கள் சேவைக்கு அணுகக் கூடியவராக இருந்தார், ஆட்சியின் கொள்கைகளைக் கல்வெட்டுகள் மூலம் சகலரும் அறியச் செய்தார் என்று வியக்கிறார் நேரு. அசோகரின் மீதான இந்த வியப்பினை தான் அரசின் தலைமையேற்ற போது எப்படிச் செயலாக மாற்றினார் நேரு என்று பார்ப்போம்.
அசோகரே அரசியல் முன் மாதிரியாக
ஜூலை 22 1947 அன்று அரசியல் சட்ட நிர்ணய சபையில் இந்திய தேசிய கொடியை அறிமுகம் செய்த நேரு கொடியில் ஏன் காந்தியின் ராட்டையின் இடத்தை அசோகரின் சக்கரத்துக்கு கொடுக்கப்பட்டதென்று அழகியல் ரீதியான காரணத்தைச் சொல்லிவிட்டு தத்துவார்த்த காரணத்தை சொல்கிறார்.
“நான் அசோகரின் பெயரை குறிப்பிட்டவுடன் நீங்கள் இந்திய வரலாற்றில் அசோகரின் காலம் உலகோடு உறவு கொண்ட காலம், அக்காலம் குறுகிய தேசியமயமான காலம் அல்ல என்று நினைவு கூர்ந்திருக்க வேண்டும். அக்காலத்தில் இந்தியாவின் தூதுவர்கள் தூர நாடுகளுக்கு, ஏகாதிபத்தியத்துக்காக அல்ல, அமைதியின் பெயராலும் கலாசாரத்துக்காகவும் சென்றனர்” என்றார் நேரு.
நேருவின் இத்தேர்வுக்குப் பின் இருந்திருக்கக் கூடிய சிந்தனையையும் அத்தேர்வுகள் நேருவைப் பற்றி நமக்கு உணர்த்துவதையும் வரலாற்றாசிரியர் அனன்யா வாஜ்பேயி விளக்குகிறார். அசோகரின் சக்கரம் ஒரு புறம் தம்மத்தையும், மொத்த பௌத்த குறியீடுகளின் தொகுதியாகவும் இன்னொரு புறம் சுழன்று செல்லும் சக்கரம் தன் சாம்ராஜ்யமெங்கும் தம்மத்தை பரப்பவும் அதனை பாதுகாக்கவும் கடமையாகக் கொண்ட சக்கரவர்த்தியை உணர்த்துவதாகும்.
அசோகரைப் பற்றி நேரு “இந்தியாவை கண்டடைதல்” புத்தகத்தில் எழுதும் போது அசோகரின் அரசில் இருந்து கட்டுக் கோப்புத் தன்மை, குடிமக்களுக்கான நலத் திட்டங்கள், கட்டுமானங்களை பெரிய அளவில் முன்னெடுத்தது ஆகியவற்றை சுட்டிக் காட்டுவார். நேருவை இந்தியாவின் சிற்பி என்று வரலாற்றாசிரியர்கள் சுட்டும் போது அவர் காலத்தில் இந்தியாவில், அவரின் நேரடி பங்களிப்புடன், உருவான பல்வேறு ஸ்தாபனங்களைச் சொல்வார்கள். நேருவுக்கு முன்பு இருந்த அறிவியல், கலாசார, அரசு நிர்வாக அமைப்புகளையும் அவர் இறந்த போது இருந்த ஸ்தாபனங்களையும் ஒப்பிட்டால் நேரு தன்னை ஒரு அசோகராகவே பாவித்து அரசாண்டது விளங்கும்.
பௌத்தத்திலும் அசோகரின் ஆட்சி முறையிலும் நேருவை பெரிதும் ஈர்த்தது மாற்று மதங்களுக்கான சுதந்திரமும், ஏற்பும். இந்து மத சீரமைப்பு மசோதா விவாதத்தின் போது சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்ற நாடுகளையும், மத வழக்கத்தையும் சாடிப் பேசிய போது நேரு அதற்கு மறுப்பு தெரிவிக்க, மே 22 1934-இல், அசோகரின் கல்வெட்டு ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். “தன் மதத்தை ஆராதிக்கும் ஒருவன் அதன் பொருட்டே இன்னொன்றை இழிவாகப் பேசி தன் மதத்தை தூக்கிப் பிடிப்பது தன் மதத்துக்கே ஊறு விளைவிக்கும்” என்று சொல்லி இக்கல்வெட்டின் வாசகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிறார். ஆக, நேருவுக்கு அசோகர் வெறும் வரலாற்று நாயகன் அல்ல, மாறாக இந்தியாவின் ஆன்மா, என்றும் இந்தியாவை வழிநடத்தும் கருத்தியல்.
பண்டைய அரசர்களில் அசோகர் அளவுக்கு தாம் நினைத்ததை எழுத்தில் வடித்தவர் வேறு ஒருவருமில்லை என்கிறார் அனன்யா வாஜ்பேயி. ஜவஹர்லால் நேரு, அக்காலத்திய வேறு பெரும் ஆளுமைகள் போல், எழுதி குவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள் மட்டும் நூறு தொகுதிகளை எட்டும். சம காலத்து மாநில முதலமைச்சர்களுக்கு நேரு எழுதிய கடிதங்கள் ஒரு ஜனநாயக தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முன் மாதிரி. நேருவின் இப்பண்பில் அசோகரின் பண்பை காண்கிறார் அனன்யா வாஜ்பேயி.
சுதந்திர போராட்ட காலத்தில் பல தலைவர்கள், நேரு உட்பட, இத்தாலியை ஒருங்கிணைத்த மாஜினியின் வரலாற்றை வியந்து படித்தார்கள். ஆனால் பிரபல அமெரிக்க வெளியுறவு பத்திரிக்கை “Foreign Affairs”க்கு 1938-இல் இந்தியா ஒன்றுபட்ட தேசமாக இருக்க முடியுமா என்ற கேள்விக்கு அசோகர் காலத்தில் அவர் சாம்ராஜ்ஜியத்தின் விரிவைத் தான் சுட்டிக் காட்டி இந்தியாவுக்கு இன்னொரு அரசியல் ஒற்றுமை சாத்தியமே என்றார் நேரு.
1956-இல் டில்லியில் நடந்த யுனெஸ்கோ மாநாட்டுக்கு வரும் உலகத் தலைவர்கள் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று வேண்டுமென்று உணர்ந்து அரசு செலவில், 2-3 கோடி ரூபாய், கட்டப்பட்டது தான் இன்றும் நிற்கும் டில்லி அஷோகா ஹோட்டல். ஆம் அதற்கும் அசோகரின் பெயரை தேர்ந்தெடுத்தது நேருவே.
பௌத்தத்தை முன் நிறுத்தியதில் நேரு தனியரல்ல. 1950-இல் இந்தியா குடியரசான போது பதவியேற்ற ராஜேந்திர பிரசாத்தின் இருக்கைக்குப் பின் 2000 ஆண்டுகள் முன் மதுராவில் வடிக்கப்பட்ட புத்தரின் சிலை ஒன்று தருவிக்கப் பட்டு நிறுத்தப் பட்டது. பௌத்தம் இந்தியாவுக்கான கருத்தியல் என்ற நிலையைத் தாண்டி இந்தியாவின் சர்வதேசக் கொள்கையிலும் எப்படி முக்கியமான பங்கு வகித்ததெனப் புரிந்துக் கொள்ள நேருவின் ஆட்சியில் நிகழ்ந்த மூன்று பௌத்த நிகழ்வுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
புத்த கயா மீட்பு
ஜவஹர்லால் நேருவும் அவர் அரசும் பௌத்தத்துக்கு ஆற்றிய முதல் முக்கியமான பணி பன்னெடுங்காலமாக அனாகரிக தர்மபாலர் போராடிய புத்த கயா மீட்புக்கு உதவியது தான். புத்த கயா மீட்பின் வரலாற்றை விவரமாகவும் அற்புதமாகவும் சொல்லும் நூல் டேவிட் கியரியின் (David Geary) “The Rebirth of Bodh Gaya: Buddhism and the Making of a World Heritage Site”.
இந்தியாவில் பௌத்தம் தன் இடத்தை இழந்தப் பின், 12-13 ஆம் நூற்றாண்டுகளில், புத்த கயாவுக்குப் பௌத்தர்கள் வருகை குறைய ஆரம்பித்தது. பின்னர் 16-ஆம் நூற்றாண்டில், 1590 பொ.யு., கோஸைன் கமாண்டி கிரி (Ghosain Ghamandi Giri) எனும் சைவர் புத்த கயாவை கைப்பற்றுகிறார். இச்சூழலில் தான் 1875 பொ.யு. ஒரு பர்மிய அரசர் புத்த கயாவுக்கு வழிபட வருகிறார். அப்போது அங்கே புத்த சிலைகளும் வழிபட்டிடமும் சிதிலமடைந்து இருப்பதை கண்டார். அவ்விடத்தை தாங்கள் புணரமைக்க ஆங்கிலேய அரசிடம் அனுமதி கோரி சில வேலைகளும் நடந்தன. அதே சமயம் பௌத்தம் பற்றிப் பல செய்திகள் முதல் முறையாகப் பல் வேறு அகழ்வாராய்ச்சிகள், வெளியீடுகள் மூலம் அறிய வரும் காலனிய அரசு முழுமையான தல ஆராய்ச்சியைப் புத்த கயாவில் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் தலைமையில் தொடங்குகிறது. அப்போது தான் இந்து மதம் எப்படி பௌத்தத்தை உள் வாங்கிச் செறித்திருக்கிறது என்று புரிந்துக் கொண்டனர். பௌத்த ஸ்தூபிகள் சிவ லிங்கங்களாக மாற்றப்பட்டிருந்தது ஓர் உதாரணம். புத்த கயாவின் ஆலய மறு நிர்மானம் 1879-1884 இல் இரண்டு லட்ச ரூபாய் (அக்காலத்தில் மிகப் பெரிய பணம்) செலவில் செய்யப்பட்டது.
1879-இல் “ஆசிய ஜோதி” வெளியிட்ட பின் எட்வின் ஆர்னால்ட் இலங்கைக்குச் சென்று சுமங்களரை சந்தித்தார். அப்போது மஹா போதி ஆலயத்தை மீட்க உதவுமாறு ஆர்னால்டிடம் கோரிக்கை வைக்கப்படது. இங்கிலாந்துக்கு திரும்பிய ஆர்னால்ட் ஓர் அறிக்கைப் போரை துவங்கினார். 1891-இல் மஹா போதி சங்கம் ஆரம்பித்த அனாகரிக தர்மபாலர் புத்த கயா மீட்பை தன் குறிக்கோளாகக் கொண்டார். அந்த முன்னெடுப்புகளில் முக்கியத் திருப்பு முனை தர்மபாலர் வழிபாட்டு உரிமை கோரி தொடர்ந்த வழக்கு. தர்மபாலரை ஆங்கிலேய அரசு ஒரு தொந்தரவாக பார்க்க ஆரம்பித்தனர். ஆங்கிலேய அரசால் கை விடப்பட்ட தர்மபாலர் அப்போது எழுச்சி பெற்றுக் கொண்டிருந்த தேசிய இயக்கத்தையும் அதன் தலைவரான காந்தியையும் அனுகினார்.
1922-இல் பீஹார் பிரதேச காங்கிரஸ் கூட்டம் கயாவில் நடந்த போது நூற்றுக்கும் மேற்பட்ட பர்மிய பௌத்தர்கள் அதில் கலந்துக் கொன்டனர். தர்மபாலர் காந்திக்கு எழுதிய கடிதத்திற்கு அப்போது சிறையில் இருந்த காந்தி பதில் அனுப்பினார். தன்னால் தற்போது உதவக் கூடிய சூழல் இல்லையென்றும் சுதந்திர இந்தியாவில் இப்பிரச்சனை தீர்க்க இயலும் என்று தீர்க்க தரிசனமாகவே சொன்னார். ஆன போதிலும் இப்பிரச்சனையில் ராஜேந்திர பிரசாத் தீர்வுக் காண பணிக்கப்பட்டார். பல்வேறு காரணங்களுக்காக இது சர்வதேச பிரச்சனையாகவே உருவெடுத்தது. இடையில் இரண்டாம் உலகப் போரும் ஆரம்பிக்க அப்போது இப்பிரச்சனை பர்மியர்களால் மேலும் சிக்கலடைந்தது. ஆனால் இந்திய சுதந்திரத்துக்குப் பின் தான் மீண்டும் முழுமையான கவனத்தை இப்பிரச்சனை கோரிப் பெற்றது. அப்போது முக்கியப் பங்காற்றியவர் இந்திய பிரதமரும் பௌத்தத்தின் மீது பெருமதிப்புக் கொண்டவருமான ஜவஹர்லால் நேரு என்கிறார் கியரி.
மார்ச்-ஏப்ரல் 1947-இல் நேரு தலைமையில் தில்லியில் நடந்த ஆசிய உறவுமுறை கூட்டத்தில் சீனா, திபெத், நேபால், பர்மா, இலங்கை பிரதிநிதிகள் புத்த கயா மீட்பு பற்றி அழுத்தம் கொடுத்தனர். இப்பிரச்சனையின் சர்வதேச பரிமாணத்தைப் புரிந்து கொண்ட நேரு இதனை தீர்ப்பது பௌத்தம் தழைக்கும் அண்டை நாடுகளோடு இந்தியா நல்லுறவு கொள்ள உதவும் என்று நினைத்தார்.
நேருவின் ஒப்புதலோடு பீஹார் முதல் அமைச்சர் எஸ்.கே.சின்ஹா “புத்த கயா ஆலய சட்டம்” (Bodh Gaya Temple Act) 1948-இல் முன்மொழிந்தார். மஹா போதி சங்கம் அதில் மாறுதல்களை கோரியது. நேருவோடு கலந்தாலோசித்து சின்ஹா மாற்றங்கள் செய்தார். தன் காரியதரிசிக்கு எழுதிய கடிதத்தில் நேரு புத்த கயா கோயிலுக்கு ஒரு சர்வதேசத் தன்மை அளிப்பது பௌத்த உலகுக்கு ஒரு சிமிக்ஞை அனுப்பும் என்றார். இப்படி ஒரு சிறுபான்மையினரின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இந்திய இஸ்லாமியருக்கும் இந்திய அரசின் சிறுபான்மையினரை பாதுகாக்கும் நோக்கை தெளிவுப்படுத்தும் என்று சின்ஹா நினைத்தார்.
ஜூன் 1949 சட்டம் அமலானது. மஹா போதி சங்கம் இச்சட்டத்தை அரை மனதோடு ஏற்றது. இச்சட்டத்துக்கு இடையூறு கொடுக்க ஆரம்பித்த மஹந்தை நேரு கோயில் நிலங்களின் பயன்பாட்டை அரசு ஆராயும் என்று எச்சரித்தார். முடிவாக 1952 மஹந்தும் சட்டத்தை ஒப்புக் கொண்டு பௌத்தர்களும் இந்துக்களும் சேர்ந்து நிர்வாகம் அனுமதியளித்தார்.
மே 28 1953-இல் புத்த பூர்னிமா அன்று மிக விமரிசையான விழாவில் புதிய நிர்வாக கமிட்டியிடம் புத்த கயா ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வின் முடிவில் எட்வின் ஆர்னால்ட்டின் ஆசிய ஜோதியில் இருந்து சில வாசகங்கள் படிக்கப்பட்டன.
புத்தரின் சீடர்களின் நினைவுச் சின்னங்களின் மீட்பு
வரலாற்றாசிரியர் ஹிமான்ஷு பிரபா ரே-யின் “The Return of the Buddha: Ancient Symbols for a New Nation” பௌத்த நினைவுச் சின்னங்களின் மீட்டெடுப்பு சுதந்திர இந்தியாவில் பிரதானமானதை விவரிக்கிறது. சர்வதேச உறவுகள், உலக பௌத்த சங்கங்களின் முன்னெடுப்புகள் அவற்றின் நெருக்கடிகளை புத்தகம் விவரமாக சொல்கிறது.
ஜனவரி 14, 1949 கல்கத்தா மைதானத்தில் கோலாகலமான விழா நடத்தி புத்தரின் சீடர்களான் சாரிபுட்டா, மொகல்லானா ஆகியோரின் நினைவுச் சின்னங்களை இங்கிலாந்திலிருந்து மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதை நேரு கொண்டாடினார்.
சாஞ்சியின் சுற்று வட்டாரங்களில் அகழ்வாராய்ச்சி நடத்திய அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாமும் எஃப்.சி. மெய்ஸியும் சாரிபுட்டா, மொகல்லன்னாவின் நினைவுச் சின்னங்களைக் கண்டறிந்தனர். அவற்றை இருவரும் தத்தம் பங்கு என்று பிரித்து இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டனர். மஹா போதி சங்கத்தின் லண்டன் கிளை ஏப்ரல் 17, 1932 அன்று விக்டோரியா-ஆல்பர்ட் அருங்காட்சியகத்துக்குக் கடிதமெழுதி அங்கு காட்சிப் பொருளாக இருக்கும் மெய்ஸியின் சேகரிப்புகள் புனிதமானவை என்றும் அவை புதிதாகக் கட்டப்பட்ட சாரநாத் விஹாருக்கு சொந்தமானவை என்றும் வாதிட்டனர். பிப்ரவரி 1947-இல் அந்த சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட பெட்டிகளிலல்லாமல் அதன் மாதிரிகளில் வைத்து லண்டன் மஹா போதி சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பிறகு எல்லா ஒரிஜினலும் சர்வதேச சுற்றுலா சென்று கடைசியாக ஒரு பகுதி இந்தியாவுக்கு வந்தது. அப்படி வந்ததை தான் சர்வதேச விழாவே எடுத்து நேரு கொண்டாடினார். நினைவுச் சின்னங்கள் மஹா போதி சங்கத் தலைவரான ஷ்யாம பிரசாத் முகர்ஜியிடம் அளிக்கப்பட்டன.
Picture Courtesy: The Wire. See References. |
நேருவின் அரசு நேரடியாக இந்த மீட்பில் பெரும் பங்காற்றவில்லையெனினும் இந்த பௌத்த அடையாளங்களின் மீட்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு விழாவாக கொண்டாடினர். மேலும், மீண்டும் நேரு இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பௌத்தத்தை ஒரு கருத்தியலாகப் பேசினார். புத்தரின் சீடர்களின் நினைவுப் பகுதிகளை சக பௌத்த அண்டை நாடுகளோடு பகிர்ந்ததன் மூலம் அவற்றை பௌத்தம் தோன்றிய தாய் மண்ணான இந்தியாவொடு பிணைப்பதும் நேருவின் அரசியல் நோக்கமாக இருந்தது என்று அவர் எழுத்துகளின் வாயிலாகவே அறிகிறோம்.
நாகார்ஜுன சாகர் அணையும் பௌத்த அடையாளங்களை பாதுகாத்தலும்
ஹிமான்ஷு பிரபா ரே நாகார்ஜுன சாகர் அணையைக் கட்ட இந்திய அரசு முயன்றபோது சந்தித்த சவால்களையும் பௌத்த அடையாளங்களை பாதுகாக்க நேரு அரசின் முயற்சிகளையும் விவரிக்கிறார்.
நாகார்ஜுன கொண்டா பகுதியில் 30 பௌத்த ஸ்தாபனங்களும், 19 இந்து ஸ்தாபனங்களும் கண்டு பிடிக்கப்பட்டன என்கிறார் ஹிமான்ஷு பிரபா ரே. நாகார்ஜுன கொண்டா பகுதியில் சில பௌத்த ஆலயங்கள் இந்து ஆலயங்களாக மாற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
1950-களில் கிருஷ்ணா நதியின் மீது ஓர் அணையைக் கட்டி ஆந்திராவில் 2 மில்லியன் ஏக்கருக்கு மேல் பாசனத்துக்கு உதவத் திட்டமிடப்பட்டது. அப்படிக் கட்டினால் நாகார்ஜுன கொண்டா பகுதி நீரில் மூழ்கும் என்று தெரிந்தது. அப்பகுதியில் 1920-களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட பௌத்த அடையாளங்கள் மஹா போதி சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து அப்பகுதியில் இன்னும் பௌத்த அடையாளங்கள், இந்து அடையாளங்கள் இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது. அணையைக் கட்டி நீரில் மூழ்கடித்தால் வரலாறு அழிந்து போகும் ஆனால் அதே சமயம் பல்லாயிர கணக்கானோரின் அன்றாட வாழ்வியல் மேன்மையடையாமல் தடங்கலை சந்திக்கும்.
பாரம்பர்யத்தைக் காப்பதா புதிய வாழ்வாதாரத்துக்கு வழி செய்வதா என்று தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனமும் பொறியாளர்களும் விவாதித்தனர், முடிவு தான் கிட்டவில்லை. ஒரு கமிட்டியின் ஆய்வுக்குப் பின் வேறிடத்தில் அணையைக் கட்ட முடியாதென்று தீர்மானமானதென்கிறார் வரலாற்றாசிரியர் உபிந்தர் சிங் தன் “Idea of Ancient India” புத்தகத்தில்.
நேருவின் நேரடி உத்தரவின் பேரில் மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட்டு அணையைக் கட்டுவதற்கு முன் விரிவான அகழ்வாராய்ச்சி நடத்தி கண்டுபிடிக்கப்படுபவை புதிய அருங்காட்சியத்துக்கு நகர்த்தப் பட தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சியில் பணம் பிரச்சனையில்லை என்று நேரு தெளிவாக்கினார். பணிகளின் முன்னேற்றத்தை நேரு தொடர்ந்து நேரடியாக கண்காணித்தார் என்கிறார் உபிந்தர். மேலும் இந்து ஆலயங்களும் கணிசமான அளவில் இருந்தாலும் அரசியலுக்காக பௌத்த அடையாளத்தை நேரு அரசு முன்னிலைப் படுத்தியதாக உபிந்தர் குற்றம் சாட்டுகிறார்.
1956 புத்த ஜெயந்தி
நேருவின் ஆட்சிக் காலத்தில் பௌத்தம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டதும் அதன் மூலம் ஒரு அரசியல் தளம் அமைத்ததும் 1956-இல் கொண்டாடப்பட்ட புத்தரின் 2500-ஆவது ஜெயந்தி விழா தான்.
புத்த ஜெயந்தியின் 2500-ஆம் ஆண்டு விழாவுக்கு ஒரு வருடம் முன்பே, பிப்ரவரி 1955-இல், நேரு வெளியுறவுத் துறை செயலருக்கு “இந்த கொண்டாட்டங்களுடன் நாம் நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும்” என்று எழுதுகிறார். சர்வதேச அளவில் பௌத்தம் பெரும்பான்மை மதமாக இருக்கும் நாடுகள் இவ்விழாவைக் கொண்டாடும் என்று கணித்து பௌத்தத்தின் தாய்நாடான இந்தியா இதனை முன்னெடுத்து செல்வது உலக அரங்கில் ஆசிய நாடுகளிடையே வெளியுறவுக்கும் உதவும் என்று நேரு நினைத்தார். மேற்குலகம் கிறிஸ்தவ பாரம்பர்யத்தால் பிணைந்திருப்பதை நாம் இங்கே ஒப்பு நோக்க வேண்டும்.
விழாக் குழுத் தலைவராக இருக்கத் தகுதியானவர் தான் அல்ல என்று மறுத்து துணை ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை, பௌத்தம் பற்றியும் தத்துவ இயல் குறித்தும் பிரசித்திப் பெற்ற புத்தகங்கள் எழுதியவர் என்பதால், பரிந்துரைக்கிறார் நேரு. மஹா போதி சங்கத்தோடு சேர்ந்து விழா கமிட்டி அமைக்கலாம், வெளிநாட்டினர் அநேகம் பேர் இருக்கலாம், பௌத்தத்தோடு சம்பந்தபடாத இந்துக்கள் அவர்கள் பிரபலமானவர்கள் என்பதாலேயே சேர்க்கப்படக் கூடாதென்கிறார், அதே போல் பட்டியல் இணத்தவரையும் பௌத்தத்தோடு தொடர்பிருந்தால் சேர்க்கலாம் இல்லையென்றால் வேண்டாமென்கிறார் (இது ஒரு கடிதத்துக்கான பதில். அந்த கடிதம் அநேகமாக எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் கோரி இருக்கலாம்).
விழாவை ஒட்டி கலாசார நிகழ்வுகள், பௌத்தம் சம்பந்தபட்ட கலை காட்சிகள், சினிமா, வெளியீடுகள் ஆகியவற்றுக்கு திட்டமிடப்பட்டது. வெளியீடுகளுக்கு ரூபாய் 6,00,000 மிக அதிகம், கலைக் காட்சிக்கு 3 லட்சம் அதிகம் என்றும் நேரு செலவுகளை வெகுவாக குறைக்கச் சொல்கிறார். இவ்விழாவை ஒட்டி “2500 Years of Buddhism” உள்பட 13 வெளியீடுகள் வந்தன. புத்தர் பற்றிய சினிமா கான் விழாவில் சிறப்பு பரிசு பெற்றது. விழாவில் அரசின் பங்கு கலாசார ரீதியாக மட்டுமே இருக்க வேண்டும் மதச்சார்பாக அல்ல என்று நேரு வலியுறுத்தினார். மே 23 1956 ஆரம்பித்து வருடம் முழுதும் விழா நடக்கும், “The Year of Buddha” என்று கொண்டாடப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
புத்த ஜெயந்திக்கு பல நாடுகளிலிருந்து தலைவர்களும் பௌத்த ஆய்வாளர்களும் வந்தனர், அவர்களுள் மிக முக்கியமான ஒருவர் தலாய் லாமா. தலாய் லாமாவுக்கு ஒரு தேசிய தலைவர் போல் வரவேற்பு கிடைத்தது அதே சமயத்தில் இந்தியா வந்திருந்த சீனத் தலைவர் சூ என் லாய்க்கு எரிச்சல் ஏற்படுத்தியது.
புத்த ஜெயந்தியின் ஆரம்ப விழாவை ஒட்டி மே 24 1956 நேரு “புத்தரின் வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார். நேரு தன் உரையில் புத்தர் கடவுள் அல்ல, மனிதர் என்றார். மேலும் புத்தரின் அமைதிக்கான வழி, உலகில் போர்ச் சூழல், பஞ்ச சீல கொள்கை, சாதிக்கு எதிராக புத்தரின் செயல்பாடு என்று புத்தரையும் பௌத்தத்தையும் ஒரு கருத்தியலாகவும் வாழ்வியலுக்கான வழிக்காட்டியாகவும் முன் வைத்து நேரு பேசினார். இதே போல் இன்னொரு உரையை கலாசாரம், தத்துவத் துறைகளில் பௌத்தத்தின் பங்களிப்பு பற்றிய கருத்தரங்கின் நிறைவில் நவம்பர் 29 1956 நேரு நிகழ்த்தினார்.
இலங்கையில் புத்த ஜெயந்தி விழா
2500-ஆவது புத்த ஜெயந்தி தொடர்பாக இலங்கை அரசின் அழைப்பின் பேரில் நேரு இலங்கைக்கு, நிறைவு விழாவிற்கு, மே 17-20 1957 வரை பயணமானார். புத்த பூர்ணிமா அன்றே வந்திருக்க விருப்பமிருந்தும் அது சுப தினமென்பதால் அன்றைய நாளில் தொடங்கிய இந்திய பாராளுமன்றத்தின் கூட்டத் தொடரில் கலந்துக் கொண்டு பிறகு இலங்கை வந்ததாகச் சொல்கிறார் நேரு. தன் பயணம் ஒரு ஷேத்திராடனம் (pilgrimage) என்கிறார்.
மே 18, 1957 அன்று அனுராதபுரத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஒரு நகரை திறந்து வைத்து புத்தர் நமக்களித்த செய்தி குறித்து உரையாற்றினார் நேரு. நேருவுக்கு சமாதி நிலையிலிருக்கும் புத்தர் சிலை ஒன்றும் சங்கமித்திராவை சித்தரித்த ஓவியம் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது. தாகூர் எழுதிய புத்தர் பற்றிய கவிதையை மேற்கோள் சொன்னார் நேரு.
புத்தரும் காந்தியும் தொடர்ந்து நமக்கு வழி நடத்தக் கூடியவர்கள் என்று மே 19 நீண்ட உரையாற்றினார் நேரு. இலங்கை-இந்திய உறவு, ஜனநாயகத்தில் மக்களை வழி நடத்துவதிலுள்ள யதார்த்த எல்லைகள், சமரசத்தின் தேவை, அமைதிக் காலம் என்பது போரில்லா காலம் மட்டுமல்ல ஒவ்வொரு மனித மனதிலும் அமைதி இருக்கும் காலம், ஏழ்மையை விரட்டுவதே முதன்மை பணி என்று தன் அரசின் நோக்கத்தையும் தெளிவுற பேசினார்.
மீண்டும் மீண்டும் புத்தரின் மீது நேருவுக்கு இருந்த பற்றுதல், மதம் சாரா பற்றுதல், நமக்குத் தெளிவாகிறது. மேலும் அவர் தன்னை உலகத்தின் பிரஜையாகவே கருதி செயல்பட்டிருக்கிறார் என்றும் தெரிகிறது. அப்படியான செயல்பாட்டில் அவருக்கு பௌத்தம் ஒரு ஊக்கமாக இருந்தது என்றால் மிகையில்லை.
ராகுல சாங்கிருத்யாயனுக்கு நேரு உதவ மறுத்தாரா?
பௌத்த ஆய்வாளரும் அறிஞருமான ராகுல சாங்கிருத்யாயன் பௌத்த ஆய்வு மேற்கொள்ள சீனா செல்லும் முன் ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத்திடம் உதவிக் கேட்டு எழுதியதாகவும் அவ்வுதவி கிடைப்பதை நேரு தடுத்தார் என்று ஒரு செய்தி உலவுகிறது. இது பாதி தான் உண்மை.
நவம்பர் 16, 1957-இல் ராஜேந்திர பிரசாத் நேருவுக்கு கடிதமெழுதி ராகுல சாங்கிருத்யாயன் தான் மேற்கொள்ளவிருந்த சீன பயணத்துக்கு அறிமுக கடிதம் கேட்டிருப்பதாகவும் அத்தகைய கடிதத்தை தான் ஜனாதிபதியாக வழங்குவது முறையா என நேருவிடம், பிரதம மந்திரி என்ற முறையில், கடிதம் எழுதி கேட்கிறார் என்பது நேருவின் பதிலில் இருந்து ஊகிக்க முடிகிறது. கடிதம் கிடைத்தவுடனேயே நேரு பதில் எழுதியிருக்கிறார்.
நேரு தன் பதிலில் ஜனாதிபதி ஒரு பரிந்துரைக் கடிதம் கொடுத்தால் அதை பெறும் சீன அரசு சார் அதிகாரிகள் ராகுல சாங்கிருத்யாயன் இந்திய அரசின் அதிகாரப் பூர்வ பிரதிநிதியென்று தவறாக நினைக்கக் கூடுமென்றும் அப்படி நினைத்தால் சாங்கிருத்யாயனின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறார். அப்படி அரசு பொறுப்பேற்பதிலுள்ள அபாயத்தை முன் ஒருவர் அப்படிச் சென்று சீனாவிலிருந்து நிறைய சுவடிகளை அள்ளிக் கொண்டு வந்ததும் அதனை குறித்து சீன அரசு வினவியதையும் உதாரணமாகச் சொல்கிறார். ஆனால், சீனாவிலுள்ள இந்திய தூதரகத்துக்கு செய்தி அனுப்பி சாங்கிருத்யாயன் கேட்டுக் கொண்டபடி மா சே துங்கை சந்திக்க உதவலாம் என்று முடித்துக் கொள்கிறார். ராஜேந்திர பிரசாத் நேருவின் பரிந்துரையை ஏற்கிறார்.
மேற்படி நிகழ்வில் ஒரு ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு சாதாரண நிகழ்விலும் அதிகார வரம்புகளை மதிப்பதும் ஒரு சாதாரணரின் கோரிக்கையைக் கூட அவர் ஆய்வாளர் என்பதாலேயே மரியாதையுடன் அனுகியது தெரிய வரும். ராகுல சாங்கிருத்யாயனுக்கு நேரு சாகித்ய அகாதமி விருதை நேரில் 1958-இல் வழங்கியிருக்கிறார், மேலும் நேருவின் அரசு 1963-இல் சாங்கிருத்யாயனுக்கு பத்ம பூஷன் விருதளித்து கௌரவித்தது. சாங்கிருத்யாயன் உடல் குன்றி இருந்த போது பொருளுதவி செய்யவும் நேரு முனைந்தார் (பிரிஜ் மோகனுக்கு எழுதிய கடிதம், ஜனவரி 20, 1962)
நேரு அம்பேத்கரை புறக்கணித்தாரா?
புத்த ஜெயந்தியை முன் வைத்து நேரு மீது வைக்கப்படும் ஒரு விமர்சனத்துக்கு சூழல் சார்ந்து தரவுகளின் அடிப்படையில் ஒரு விளக்கம். பேராளுமைகள் விமர்சனத்துக்குட்பட்டவர்களே ஆயினும் அவ்விமர்சனங்கள் தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். அம்பேத்கரின் “புத்தரும் அவர் தம்மமும்” புத்தகத்தை உதாசீனம் செயார் என்று ஒரு விமர்சனம் சமீப காலமாக சொல்லப்படுகிறது. அது உண்மையா?
செப்டம்பர் 14, 1956 அன்று அம்பேத்கர் நேருவுக்கு கடிதமெழுதி தான் அப்போது எழுதி முடித்திருந்த “புத்தரும் அவர் தம்மமும்” புத்தகத்தின் பொருள் அடக்கம் பகுதியை நகலாக இணைத்து, “இது சொல்லும் இப்புத்தகத்தின் விரிவை” என்று சொல்லி, புத்தகத்தின் வெளியீட்டு செலவு ரூபாய் 20,000, புத்த ஜெயந்தியை ஒட்டி அரசு 500 பிரதிகள் வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்கிறார். “பௌத்தத்தின் மீது உங்களுக்கு இருக்கும் ஈடுபாடு அறிந்து கேட்கிறேன்” என்கிறார் அம்பேத்கர்.
அடுத்த நாளே நேரு உடனடியாக பதில் எழுதுகிறார், வெளியீடுகளுக்கென்று ஒதுக்கிய பணம் செலவாகி விட்டது, இத்தனை பிரதிகளை அரசு வாங்க இயலாது, ஆயினும் விழாக் குழுத் தலைவரான இராதாகிருஷ்ணனுக்கு அம்பேத்கரின் கடிதத்தை அனுப்பி வைப்பதாகவும் விழா சமயத்தில் அநேகரின் வருகையின் போது அம்பேத்கர் தன் புத்தகத்தை விற்பனைக்கு வைத்தால் நல்ல விற்பனைக்கு வாய்ப்புண்டு என்றும் யோசனை சொல்கிறார். நேருவிடமிருந்து கடிதம் கிடைக்கப்பெற்ற இராதாகிருஷ்ணன் அம்பேத்கரை தொலைப்பேசியில் அழைத்து உதவ முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
முன்பே சொன்னது போல் நேரு வெளியீடுகளுக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டாம் என்ற அறிவுரையை ஒரு வருடம் முன்பே சொல்லி விட்டார். மேலும் விழா கிட்டத்தட்ட முடியும் தருவாயில் தான் அம்பேத்கர் உதவி கேட்கிறார். இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும் அம்பேத்கர் தொடர்ச்சியாக அரசையும், நேருவையும் விமர்சித்து வந்தவர். ஆனாலும் அவரிடமிருந்து கடிதம் கிடைத்த உடனேயே நேரு பதில் எழுதுகிறார், இராதாகிருஷ்ணனுன் உடனடியாக கூப்பிட்டு பேசுகிறார். வேறு தருணங்களிலும் இவர்கள் அம்பேத்கர் மீதான் தங்கள் உயரிய மதிப்பை பதிவு செய்திருக்கிறார்கள். இன்றையச் சூழலில் அரசை விமர்சிக்கும் ஒருவரின் கடிதம் எப்படி ஆட்சியாளர்களால் எதிர்கொள்ளப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொண்டு அக்காலத்தில் இருந்த பரஸ்பர மதிப்பையும் பண்பையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
யுவன் சுவாங்கின் நினைவும் நேருவும்
புத்த ஜெயந்தி 1956-இல் முடிந்தவுடன் ஜனவரி 12, 1957-இல் நலந்தாவில் தலாய் லாமா, பஞ்சன் லாமா, நேரு, சீன தூதுவர் முன்னிலையில் பெரும் புகழ்பெற்ற சீன யாத்திரிகர் யுவன் சுவாங்கின் மண்டையோட்டிலிருந்து சிறு பகுதி சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் புத்த பிக்கு காஷ்யப்பர். காஷ்யப்பர் சீனாவுக்குப் பயணம் செய்த போது பௌத்த முக்கியஸ்தர்களை சந்தித்து இதற்கான கோரிக்கையை வைத்தார். யுவான் சுவாங்கின் நினைவுச் சின்னங்களை அளித்ததோடு அதனை முறையான அருங்காட்சியகத்தில் வைக்கவும் சீனா ரூபாய் 5,74,713 நன்கொடையாக அளித்தது. நிகழ்ச்சிப் பற்றியும் மேற்கொண்டு செய்ய வேண்டுவன பற்றியும் நலந்தாவில் இருந்த படியே நீண்ட கடிதமொன்றை நேரு மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதியிருக்கிறார்.
நேருவின் பௌத்த அரசியலும் அதன் எல்லைகளும்
பௌத்தத்தை முதன்மைபடுத்துவதில் இரண்டு நோக்குகள் நேருவுக்கு இருந்தன என்கிறார் ஆய்வாளர் டக்ளஸ் ஓபர். ஒன்று, மதத்தால் பிளவுப்பட்டு ரத்தம் சிந்திய நாட்டில் காந்தியத்தையும் பௌத்தத்தையும், தனித் தனியாகவும் பிணைத்தும், அமைதி மார்க்கங்களாகவும், மதம் கடந்த, அறிவியல் பூர்வமான சமூகத்துக்கான விழுமியமாகவும் சித்தரிப்பது பிரிவினையின் ரணங்களில் களிம்பு பூசி புதிய இந்தியாவுக்கு அடி கோலும் என்று நேரு நம்பினார். இரண்டாவது, காலணி ஆதிக்கத்தில் இருந்து வெளியேறும் பல ஆசிய நாடுகளில் பௌத்தம் தழைத்திருந்தது. அவர்களையெல்லாம் பௌத்தத்தின் பிறந்த வீடான இந்தியாவோடு பௌத்தத்தைக் கொண்டு பிணைப்பது உலக அரங்கில் இந்தியாவுக்கு கௌரவம் என்பதை விட தன் அணிசேரா கொள்கைக்கு நண்பர்களை அளிக்கும் என்று நம்பினார். நேரு தன்னுடைய அணிசேரா கொள்கை, பஞ்ச சீல கொள்கை ஆகியவற்றோடு பௌத்த மரபுக்கு தொடர்பிருந்ததென கூறவும் செய்தார்.
நேருவின் அரசு முன்னெடுத்த பௌத்த விழாக்களும் கொண்டாட்டங்களும் அநேகம். அவற்றில் எல்லாம் அண்டை நாடுகளும் பௌத்தம் சென்றடைந்த நாடுகளும் மிக உற்சாகமாக பங்கு பெற்றன என்கிறார் ஓபர். அதிலெல்லாம் மஹா போதி சங்கம், பௌத்த பிக்குகள், பௌத்த ஆய்வாளர்கள் பங்கு பெற்ற போதிலும் நேரு மிகக் கவனமாக மீண்டும் மீண்டும் தன் உரைகளில் பௌத்தத்தின் அறிவியல் தன்மையையே அழுத்தம் கொடுத்து பேசினார்.
ஒரு நாட்டின் வெளியுறவுக்கான சாத்தியங்களில் பற்பல உத்திகள் இருக்கும். கலாசாரமும், மதமும் நிச்சயம் அதில் பெரும்பங்கு வகிக்கும். பௌத்தத்தை அயலுறவுக் கொள்கைக்கு மிக நிதானமாகவே நேரு கையாண்டார்.
புத்த ஜெயந்தியை ஒட்டி இந்தியா வந்திருந்த சீன, இலங்கை, நேபாள தலைவர்களுடன் நேரு நடத்தியப் பேச்சு வார்த்தைகளின் விபரங்கள் அவர் எழுத்துகளின் தொகுப்பில் (தொகுதி 36) இருக்கின்றன. சீனாவின் சூ என் லாயுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளை நேருவே பதிவு செய்கிறார், 50 பக்கங்களுக்கு மேலாக. பேச்சு வார்த்தை எங்கும் பௌத்தம் பற்றி இல்லை, மாறாக நேருவின் அமெரிக்கப் பயணம், ஐசன்ஹோவர் பற்றி, சீனாவில் இருக்கும் 10 அமெரிக்க கைதிகள், தலாய் லாமாவின் அரசியல் பிரச்சனை என்று உலக அரசியல் பற்றியதாகவே இருக்கிறது. இதே தான் பண்டாரநாயகா கடிதத்திலும், நேபாள பிரதமருடனான பேச்சு வார்த்தை பற்றிய குறிப்புகளிலும் காணக் கிடைக்கும்.
பௌத்தம் நேருவின் பார்வையில் அவருக்கும் அவர் நிர்மாணிக்க நினைத்த இந்தியாவுக்கும் அவர் வடிவமைக்க நினைத்த உலக அரசியலுக்குமான விழுமியங்களை அளித்த பண்டைய இந்திய மரபு. பண்டைய மரபு எனினும் சம கால பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்கு பௌத்தமும் , வேறு பல தத்துவங்களுடன், ஒரு திறவு கோல் என்று நேரு கருதினார்.
இந்தியாவை தொடர்ந்து ஒருங்கிணைக்கவும் மத நல்லிணக்கத்துக்கு அடி கோலவும் நேரு கலாசார முன்னெடுப்புகள் பலவற்றையும் மேற்கொண்டார். பௌத்த முன்னெடுப்புகள் போன்றே உருதுவை தேசிய மொழிப் பட்டியலில் சேர்த்ததோடல்லாமல் இஸ்லாமியர் பங்கு பெறும் முஷைராக்களை மீண்டும் உயிர்பித்து வருடாந்திர குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுடன் சேர்த்தது என்று இந்தியர்களை கலாசார ரீதியாக, மதத்தில் இருந்து சற்றேனும் விலகி, ஒருங்கிணைத்தார். இது தேர்ந்த அரசியல்வாதிகள் கவனமாக செய்யும் முன்னெடுப்பு. நோக்கங்கள் சிதைவுற்றால் என்ன நேரும் என்பதையும் நாம் சம காலத்தில் பார்க்கிறோம்.
இந்தியாவின் மிக கொந்தளிப்பான நேரத்தில் பெரும்பாலும் இறை மறுப்பாளர் என்று, தவறாகவே, அறியப்பட்ட ஜவஹர்லால் நேரு பௌத்தத்தின் மீதும் அசோகரின் மீதும் பற்றுக் கொண்டு அவற்றின் கருத்தியல்களை சுவீகரித்து புதிய இந்தியாவுக்கு வழிக் காட்ட முனைந்தார் என்பது இன்று அதிகம் பேசப்படாவிடினும் அறிந்துக் கொள்ளப்பட வேண்டிய வரலாறு. இது நேருவை மட்டுமல்ல இந்தியாவையும் புரிந்து கொள்ள உதவும்.
உசாத்துணைகள்:
- Selected Works of Jawaharlal Nehru: Volumes 4, 28, 33, 36,38, 74
- https://ia802905.us.archive.org/18/items/selectedworksofjawaharlalnehru2ndseriesvolume38_968_w/Selected%20Works%20of%20Jawaharlal%20Nehru%20%282nd%20Series%29%20Volume%2038_text.pdf
- https://archive.org/details/HindSwaraj-Nehru-SW-04/page/n577/mode/2up - Nehru's first glimpse of Anuradhapura Buddha, Pg 533.
- https://archive.org/details/seletedworsofjaw74madh/page/24/mode/2up - Vol 74
https://archive.org/details/selectedworksofjawaharlalnehru2ndseriesvolume36_843_p/page/194/mode/2up - Volume 36. Detailed instructions on Buddha movie (Pg 194); Transplanting relics from Nagarjuna, Relics of Huen Tsung. (Pg 184-196)
- Nehru Visit to Lanka http://archives.sundayobserver.lk/2006/09/24/pow02.asp
- From Buddha Bones to Bo Trees: Nehruvian India, Buddhism, and the poetics of power, 147-1956 — By Douglas F. Ober
- Righteous Republic: The Political Foundation of Modern India — By Ananya Vajpeyi
- The Rebirth of Both Gaya: Buddhism and the Making of a World Heritage Site — By David Geary
- The Idea of Ancient India: Essays on Religion, Politics and Archeology — By Upinder Singh
- The Return of the Buddha: Ancient Symbols for a New Nation — By Himanshu Prabha Ray
- The Light of Asia: The Poem that Defined the Buddha — By Jairam Ramesh
- Ambedkar’s Writings - Vol 17 http://drambedkarwritings.gov.in/upload/uploadfiles/files/Volume_17_01.pdf
- Glimpses of World History ; Autobiography; Discovery of India - Jawaharlal Nehru
- https://thewire.in/history/the-lesser-known-journey-of-buddhist-relics-from-india-to-uk-and-back
- https://www.telegraphindia.com/india/how-bodh-gaya-averted-an-ayodhya/cid/1822115
- https://www.thebetterindia.com/133034/dalai-lama-first-visit-india/
- https://www.thebetterindia.com/163268/nehru-delhi-five-star-hotel-news/
- Nehru's Speech on Flag https://indiankanoon.org/doc/21455/
- Acharya Narendra Deva https://www.thehindu.com/books/remembering-a-titan/article19969853.ece
- https://www.thehindu.com/books/remembering-a-titan/article19969853.ece
- Rahul Sankrityayan Sahitya Akademi https://medium.com/@anoop_tiwari/rahul-sankrityayan-the-forgotten-genius-10768ae7a8e3
- https://thewire.in/history/the-lesser-known-journey-of-buddhist-relics-from-india-to-uk-and-back
- https://www.thebetterindia.com/139629/buddha-purnima-nehru-buddha-relics-ladakh-1950/
- https://www.foreignaffairs.com/articles/india/1938-01-01/unity-india
- https://www.theweek.in/theweek/cover/2021/09/16/what-triggered-a-hindu-buddhist-dispute-in-the-19th-century-in-bodh-gaya.html
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.