முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் “எங்கே அந்த அக்கறை மிக்க நடுத்தர வர்க்கம்” என்ற தலைப்பில் சுதந்திர போராட்டக் காலத்து அற உணர்வுக் கொண்ட நடுத்தர வர்க்கம் இன்று சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை முதல் பலவற்றையும் கண்டும் காணாமல் இருக்கிறதே என்று வினவியிருந்தார். அக்கட்டுரைக்கு எதிர்வினையாக எழுத்தாளர் பாலா முத்துசுவாமி “காலம் மாறிப் போச்சு காங்கிரஸாரே” என்று தலைப்பிட்ட கட்டுரையில் காங்கிரஸின் செயலின்மையே பாஜக வளர்ச்சிக்கு உதவுகிறது என்றார். இரண்டு கட்டுரைகளிலும் உண்மைகள் உண்டு. ஆயினும், இரு கட்டுரையாளர்களும் தொடாத ஒரு கோணமும் உண்டு, அது வாக்காளர்களின் மதவாதம் பற்றி. எந்த அரசியலும் வாக்காளர்களின் பெருவாரியான ஏற்பில்லாமல் வெற்றிப் பெற முடியாது ஆனால் வாக்காளர்களின் தேர்வுகளின் நோக்கத்தை கேள்விக் கேட்கவேக் கூடாதென்று ஒரு பொது மவுனம் நிலவுகிறது. அதனை உடைத்துப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
2016 அமெரிக்க தேர்தல் அளித்தப் பாடம்:
2016 அமெரிக்க தேர்தல் சூடு உச்சத்தில் இருந்த சமயம் ஒரு பொதுக் கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் டிரம்பின் வாக்காளர்களில் சிலரை இனவாதம், பெண் வெறுப்பால் உந்தப் பட்டவர்கள் என்று குறிக்கும் வண்ணம் இழிவானவர்கள் (“basket of deplorable”) என்று சீறினார். ஹிலாரிக்கு எதிராக கண்டனக் கனைகள் பறந்து வந்தன. வாக்காளர்களின் நோக்கம் எதுவாயினும் அவர்களை பழிச் சொல்லலாகாது அவர்களை தன் தரப்புக்கு ஈர்ப்பதே ஒரு அரசியல்வாதியின் கடமை என்று ஹிலாரியை கண்டித்தார்கள். இந்த களேபரத்தில் டொனால்ட் டிரம்ப் கறுப்பினத்தவரை, பெண்களை, ஹிஸ்பானிக்குகளை எல்லாம் வெள்ளை பேரினவாதிகளின் மனம் குளிர ஆபாசமாகப் பேசியதெல்லாம் மறக்கப்பட்டது. தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மூன்று மாநிலத்தில் ஹிலாரி தோற்கடிக்கப்பட்டு டிரம்ப் ஜனாதிபதியானார்.
தேர்தலுக்குப் பின் புள்ளி விபரங்கள் கருத்துக் கணிப்புகள் ஹிலாரியின் அந்த பேச்சு உண்மையென்று நிரூபித்தன. பல வெள்ளைக்கார வாக்காளர்கள் இனவாதத்தாலும் பெண் வெறுப்பாலும் தூண்டப் பட்டே வாக்களித்தார்கள் என்று தெளிவானது. ஹிலாரி டிரம்பை விட பொது வாக்கெடுப்பில் மூன்று மில்லியன் வாக்குகள் அதிகம் வாங்கியிருந்தார், அதில் கணிசனமானவை வெள்ளைக்காரர்களும் தான். டிரம்பின் வெற்றியில் இனவாதத்தின் பங்களிப்புப் பற்றி தொடர்ச்சியாக புத்தகங்கள் வெளியாயின.
இந்திய வாக்காளர்கள் சாதியத்தால் உந்தப்பட்டு வாக்களிப்பவர்கள் என்பதை ஆங்கிலத்தில் அழகான பகடியாக “They don’t cast their vote they vote their caste” என்பார்கள். அந்த வாக்காளர்கள் இப்போது மத ரீதியாகவும் யோசித்து வாக்களிக்கிறார்கள். பாஜகவின் அரசியல் வெற்றிகள் குறித்து ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் புத்தகங்கள் அனைத்தும் இதை சுட்டிக்காட்டத் தவறுவதில்லை ஆனால் தமிழ்ச் சூழலில் அந்த ஆய்வுகள் பரவலாகப் பேசப்படுவதில்லை. தமிழ் கட்டுரைகள் பெரும்பாலும் பாஜக உயர்ஜாதியினர் கட்சி, சனாதன இந்து மத கட்சி என்ற எளிமையான கட்டமைப்புகளையேச் சொல்கின்றன. சிதம்பரமும் பாலாவும் அந்த புள்ளியைக் கூடத் தொடவில்லை.
காங்கிரஸ் செயலற்று கிடக்கிறதா?
காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவிழந்து கிட்டத்தட்ட வெறுங்கூடு என்கிற அளவுக்கு சுருங்கியது இந்திய அரசியலுக்கு அரோக்கியமானதல்ல. காங்கிரசின் உட்கட்சி பூசல்கள் உலகப் பிரசித்தம். சோனியாவின் உடல் நலக்குறைவு, ராகுலின் விலகி-விலகாத நிலை, அடுத்தக் கட்ட தேசியத் தலைமை இல்லாமை என்று காங்கிரஸ் வலுவிழந்து வீழ்ந்ததற்கு காங்கிரஸ் தரப்பிலான காரணங்களுண்டு. அதே சமயம் காங்கிரசும் மற்ற கட்சிகளும் பாஜக ரூபத்தில் சந்திப்பது இந்திய ஜனநாயகமும் வரலாறும் காணாத ஒரு ராட்சத தேர்தல் இயந்திரத்தை. அதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுருக்கமாக பாலா முத்துசுவாமியின் சில விமர்சனங்களை காண்போம்.
பாலா முத்துசுவாமி காங்கிரஸ் செயலற்று இருக்கிறதென்றும், மாநிலங்களில் மக்களிடமிருந்து விலகிவிட்டது என்றும், சமூக நீதி முன்னெடுப்புகளின் வழியே தான் இனி ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தை அது நெருங்கி அரசியலில் வெற்றி பெற முடியுமென்கிறார்.
ஜெயிப்பவர்கள் எதையோ சரியாகச் செய்கிறார்கள், தோற்பவர்கள் எங்கோ தவறிழைக்கிறார்கள் என்று எண்ணுவது மனித இயல்பு. அதுவும் ஜெயிக்கும் கட்சி ராட்சத வெற்றிகளையும் தோற்பவர்கள் பரிதாப தோல்விகளையும் தழுவும் போதும் அந்த எண்ணம் வலுப் பெறுகிறது.
காங்கிரஸ் முக்கியமானப் போராட்டங்களை முன் எடுத்திருக்கிறது என்பதை பாலா கணக்கில் கொள்ளாமல் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்கிறார். உத்தர பிரதேசத்தில் ஹத்திராஸில் நடந்த படுகொலையைக் கண்டித்து களத்துக்கு ராகுலும் பிரயங்காவும் விரைந்தனர். போலீஸார் பிரயங்காவின் மேலாடையை பிடித்து இழுத்து தள்ளியப் புகைப்படம் இணையத்தில் பிரபலமாகவே வந்தது. இத்தனைக்கும் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் அமைப்பு ரீதியாக கிட்டத்தட்ட அழிந்து விட்டது. ராகுலே அமேதியில் தோற்றார். ராகுல் காந்தி தற்போது இந்தியா நெடுகிலும் நடைபயணம் ஆரம்பித்திருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி.யே தவறு என்கிறார் பாலா. அது வேறு விவாதம். பொருளாதார வல்லுனர்களின் துணைக் கொண்டு தான் அது உருவானது. காங்கிரஸ் தான் வழிச் செய்தது. இன்று காங்கிரஸ் அதன் குளறுபடிகளை சுட்டிக் காட்டுவதோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவது இட ஒதுக்கீடு இழப்பால் ஒடுக்கப்பட்டவர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கிறது என்று பாலா சொல்வது கணக்கில் கொள்ள வேண்டும். அதற்காக நஷ்டத்தில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை மட்டுமே தனியார் மயமாக்க வேண்டும் லாபகரமானதையெல்லாம் அரசே நடத்த வேண்டும் என்று சொல்வதை பொருளாதார வல்லுனர்கள் ஏற்க மாட்டார்கள். தொலைப்பேசி, புகைப்படச் சுருள், விளக்குக் கம்பம், கார், யூரியா என்று இந்திய அரசு தயாரித்து விற்ற பொருட்கள் அநேகம். பலவும் நஷ்டத்திலோ தரமற்ற பொருள் தயாரிப்பிலோ தத்தளித்தவை தான். சஷி தரூரின் “From Midnight to Millennium” புத்தகத்தில் தொலைப்பேசிகள் அடிக்கடி செயலிழக்கின்றன என்று பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அன்றைய அமைச்சர் “அந்த வேலைச் செய்யாத கருவிக்கு பலர் லைனில் நிற்கிறார்கள்” என்று எகத்தாளமாக பதில் சொன்னதை சுட்டிக் காட்டியிருப்பார்.
காங்கிரஸ் சமூக நீதியை முன்னெடுக்க வேண்டுமென்கிறார் பாலா. பாஜக வளர்ச்சியைப் பற்றிய எந்த ஆய்வாளரின் கட்டுரையும், ஆவணப் படங்களும் வி.பி.சிங்கின் மண்டல் பரிந்துரை அமலாக்கத்தின் அதிர்வலைகளையும் உயர் ஜாதியின் ஒட்டுகள் மொத்தமாக காங்கிரஸ் அல்லது முன்னாள் காங்கிரசாரின் கட்சிகளிடமிருந்து விலகி பாஜகவை நெருங்க காரணமாயிற்று என்கிறார்கள். மண்டல்-மஸ்ஜித் என்ற சொற்றொடரே பிறந்தது. மன்மோகன் சிங்குக்கு அரசியல் நெருக்கடி அளிக்கவே அர்ஜுன் சிங் ஐஐடி போன்ற இந்திய உயர் கல்வி நிலையங்களுக்கு மண்டல் பரிந்துரையை நீட்டித்து அமல் செய்தார் என்பதை நாம் மறக்கலாகாது. அதன் அதிர்வுகளை இன்றும் அக்கல்வி நிலையங்களில் காண முடியும். ஆக சமூக நீதி அரசியல் காங்கிரசுக்கு பாதகமாகவே முடிய வாய்ப்புண்டு. இன்னொரு விஷயம், சமூக நீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு என்று பலராலும் சுருக்கப்படுகிறது. சமூக நீதியென்பதி இட ஒதுக்கீட்டையும் தாண்டி பல முன்னெடுப்புகளை உள்ளடக்கியது, அவற்றுள் காங்கிரஸ் முக்கியப் பங்காற்றி இருக்கிறது.
ஒரு கட்சி அல்லது சித்தாந்தம் வெற்றி அடையும் போது, குறிப்பாக ராட்சத வெற்றி அடையும் போது, எதிர் தரப்பின் போதாமைகளைத் தாண்டி வெற்றிப் பெற்றவர்கள் எந்த வகையில் வாக்காளர்களை ஈர்த்தனர் என்றும் ஆராய வேண்டும். வாஜ்பாயிக்கும், அத்வானிக்கும் கிடைக்காத பெரும்பான்மை மோடிக்கு ஏன் இரண்டு முறை, அதுவும் இரண்டாம் முறை இன்னும் அதிகமாக, கிடைத்தது என்று கேட்டுக் கொள்வோம்.
மாறிய நடுத்தர வர்க்கம்:
2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஆய்வாளர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலாட் “பிஸினஸ் ஸ்டாண்டர்டு” நாளேடுக்கு அளித்தப் பேட்டியில் சிதம்பரம் நடுத்தர வர்க்கத்தின் மீது சொல்லும் விமர்சனத்தை அப்போதே சொன்னார். “தாராளமயமாக்கலினால் புதிய வகை நடுத்தர வர்க்கம் உருவாகியிருக்கிறது. இவர்கள் முன்பை விட அரசியல் ஈடுபாடுள்ளவர்களாகவும் ஊழலை எதிர்ப்பவர்களாகவும் சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கண்டு கொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்கள்….வளர்ச்சி எப்படியாவது நடந்தால் சரி என்று நினைக்கிறார்கள், சுற்றுச் சூழல், பொருளாதார ஏற்றத் தாழ்வு இவர்களுக்கு பொருட்டல்ல….இவர்கள் பாஜகவை ஆதரிக்க இன்னொரு காரணம் தங்கள் பொருள்மயமான வாழ்க்கை நோக்கை அதீத மத நம்பிக்கைக் கொண்டு ஈடு செய்ய நினைப்பதும் அதற்கு சமஸ்கிருதமயமாக்கல்லை சுவீகரித்து இந்து அடையாளத்தை வரித்துக் கொள்வதே. மேலும் இந்த நடுத்தர வர்க்கம் இட ஒதுக்கீடு “மெரிட்டுக்கு” எதிர் என்று நினைப்பவர்களாயிருக்கிறார்கள். இவ்விரண்டிலும் இவர்கள் தேர்வு பாஜகவாக இருக்கிறது”. பாஜகவின் அரசியல் ஏறுமுகத்துடன் இஸ்லாமியரின் பிரதிநிதித்துவம் இறங்குமுகமாகிறதென அப்போதே ஜாஃப்ரலாட் கணித்தார். இன்று பாஜகவுக்கு இருக்கும் 350+ பாராளுமன்ற பிரதிநிதிகளுள் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.
ஷேகர் குப்தா “Why India’s middle classes are Modi’s ‘Muslims?” என்று தலைப்பிட்ட கட்டுரையில் இன்றைய நடுத்தர வர்க்கத்தினர் ஒரு காலத்தில் காங்கிரசுக்கு வாக்கு வங்கியாக இருந்த இஸ்லாமியர் போல் மோடிக்கு வாக்கு வங்கியாக இருக்கிறார்கள் என்கிறார். காங்கிரஸ் என்றாலே சோஷலிஸ அரசு பணக்காரர்கள் நடுத்தர வர்க்கத்தினரிடம் பிடுங்கி ஏழைகளுக்கு கொடுக்கிறார்கள் என்று ஒரு பிம்பம் பாஜகவினரிடம் உண்டு. உண்மையில் இன்று பாஜக ஏழைகளுக்கு அளிக்கும் பல திட்டங்கள் நடுத்தர வர்க்கத்தினர் மீது நேரடி மற்றும் மறைமுக வரிகளால் சாத்தியப்படுத்தப் படுகிறது என்கிறார் குப்தா. பண மதிப்பிழப்பு போன்ற இமாலய குழப்பத்துக்கு அப்புறமும் இந்த வாக்கு வங்கி அசராததற்கு முக்கியக் காரணம் இஸ்லாமியர் மீதான வெறுப்பு.
லீலா பெர்னாண்டஸின் புத்தகம், “India’s New Middle Class: Democratic Politics in an Era of Economic Reform”, மாறிய நடுத்தர வர்க்கம் பற்றி சில வாதங்களையும் புரிதல்களையும் முன் வைக்கிறது. நடுத்தர வர்க்கம் ஜனநாயகம் ஊழல் மயமானது என்ற பார்வையைக் கொண்டு அதற்கு பதிலாக சர்வாதிகாரமே இந்தியாவுக்கு சரியென்று நம்புகிறது. மேலும் ஜனநாயகம் என்பது வாக்காளர்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அவர்கள் பார்வையில் தாழ்ந்த ஜாதியினர், சிறுபான்மையினருக்கும் மட்டுமே செவி சாய்க்கும் என்றும் தங்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லையென்றும் நம்புகிறது. மேலும், புதிய நடுத்தர வர்க்கம் தான் ஒரு குடிமகன் என்ற நிலையில் இருந்து மாறி அரசின் இயந்திரம் என்பது நுகர்பொருளாகவும் அதனை பிரயோகிக்கும் பிரஜையாகவும், ஒரு consumer-citizen ஆக, உருவகித்துக் கொண்டது என்கிறார் பெர்னாண்டஸ். இதனால் தான் இன்று பாஜக புகழ் பாடும் பல நடுத்தர வர்க்கத்தினர் பாஸ்போர்ட் எளிதில் கிடைக்கிறது போன்ற காரணங்களைச் சுட்டுக் காட்டுகின்றனர்.
நவதாராளமயமான பொருளாதாரம், ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கை இழப்பு போன்றவற்றை வைத்து நடுத்தர வர்க்கத்தின் அரசியலை தட்டையாகவும் புரிந்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறார் பெர்னாண்டஸ். நடுத்தர வர்க்கம் என்பதே ஒரு ஒற்றைப் படையான கூட்டமுமல்ல. இவ்விடத்தில் அவர் 2004-இல் பாஜக முன்னெடுத்த இந்தியா ஒளிர்கிறது பிரச்சாரத்தின் தோல்வியையும் சுட்டிக் காட்டுகிறார். இதனை இன்றைய பாஜக நன்கு உணர்ந்திருப்பதால் தான் நடுத்தர வர்க்கத்தையும் தாண்டி மற்றவர்களை உள்ளிழுக்க பல தந்திரோபாயங்களை அது செய்கிறது.
பாஜக பற்றி இரண்டு முக்கியமான பிம்பங்கள் ஓரளவு நியாயத்தோடு கட்டமைக்கப்பட்டது, அதாவது, ஒன்று, அக்கட்சி உயர் ஜாதிகளுக்கானது, இரண்டு, அக்கட்சி ஏழைகளுக்கு எதிரானது. இரண்டையுமே மோடி மாற்றியிருக்கிறார் என்பதே நிஜம். அந்த் மாற்றங்களுக்காக நடுத்தர வர்க்கம், குறிப்பாக உயர் ஜாதியினர், பாஜகவை விட்டு விலகியிருக்க வேண்டும் ஆனால் அது நடவடிக்கவில்லை. அது ஏன் என்று காண்பதற்கு முன் இந்த பிம்பங்களை அவர் எப்படி மாற்றினார் என்று பார்ப்போம்.
பயனாளர்களுக்கு நேரடி பணப் பட்டுவாடா அரசு:
நளின் மேத்தா எழுதிய “The New BJP: Modi and the making of the world’s largest political party” அநேக தரவுகளைத் திரட்டி எழுதப்பட்ட புத்தகம். மேத்தா மோடி எப்படி காங்கிரஸ் விட்டுச் சென்ற பயனாளர்களுக்கு நேரடி பணப் பட்டுவாடா செய்யும் கட்டமைப்பை விஸ்தீரணப்படுத்தி ஏழைகளின் வாக்கு வங்கியைக் கவர்ந்தார் என்று சொல்கிறார். 2013 ஜனவரி 1-ஆம் தேதி “உங்கள் காசு உங்கள் கைகளில்” கோஷத்தோடு காங்கிரசின் அமைச்சர் ஹெய்ராம் ரமேஷ் ஆதார் திட்டத்தை உபயோகித்து பணப் பட்டுவாடா திட்டத்தை அறிவித்தார். 43 நகரங்களில் 20 அரசு திட்டங்களுக்கு பரிசோதனை முயற்சியாக இத்தட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்துக்கான மென்பொருள் முதலான கட்டமைப்பு அத்தனையும் காங்கிரசுடையது. 2014-இல் தேர்தல் நெருங்கும் போது இது தங்கள் வெற்றிக்கு உதவுமென்றே காங்கிரஸ் நினைத்தது.
2014-இல் வெற்றி பெற்றவுடன் காங்கிரசின் திட்டத்தை மோடி சுவீகாரம் செய்ததோடு அதனை முடுக்கிவிட்டார். கவனிக்கவும் இதில் இடைத் தரகர்களோ அரசு இயந்திரமோ இடையீடு செய்யாமல் ஏழைகளுக்கு பணம் செல்கிறது. 2013-14-இல் இம்மாதிரி 10.8 கோடி பேருக்கு ரூ 7,367 கோடி அளிக்கப்பட்டது. 2018-19-இல் 76.3 கோடி பேருக்கு 2,14,092 கோடிகள் அளிக்கப்பட்டது. இது 29 மடங்கு வளர்ச்சி. இம்மதிரி திட்டங்களை நேரடியாக மோடியின் பிம்பத்தோடு தொடர்புபடுத்தி வாக்குகளை பாஜக அறுவடைச் செய்தது.
பாஜக உயர் ஜாதி கட்சியா?
பாஜக-வை உயர் ஜாதியினர், குறிப்பாக பிராமணர்கள், கட்சி என்று பிம்பம் நிலவுகிறது. அதில் உண்மையுண்டு ஆனால் அது மட்டுமே உண்மையில்லை. உலகின் ஐம்பது ஜனநாயகங்களை ஆராய்ந்து அரசியல் பிளவுகள் பற்றி பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கட்டி முதலானோர் எழுதிய புத்தகத்தில் இந்தியா பற்றிய அத்தியாயத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகளின் மத, சாதிய வாக்காளர் விகிதத்தை அளிக்கிறார்கள்.
1967 தேர்தலில் ஓவ்வொரு சமூகத்தினருள்ளும் காங்கிரஸுக்கு வாக்களித்தோர்: தோராயமாக, இஸ்லாமியர் 48%, பட்டியல் இனத்தவர் 52%, பிற்படுத்தப்பட்டவர் 45%, பிராமணரல்லாத உயர்ஜாதியினர் 35%, பிராமணர்கள் 41% காங்கிரசுக்கு வாக்களித்தனர்.
அப்போது பாஜகவுக்கு ஒவ்வொரு சமூகத்தினருள்ளும் வாக்களித்தோர்: (அப்போதைய ஜன சங்கமும் கூட்டணிக் கட்சியினரும்) இஸ்லாமியர் 9%, பட்டியலினத்தவர் 12%, பிராமணரல்லாத உயர் ஜாதியினர் 35%, பிராமணர்கள் 40%
2014 தேர்தலில் காட்சி மாறுகிறது. ஓவ்வொரு சமூகத்தினருள்ளும் காங்கிரஸுக்கு வாக்களித்தோர்: இஸ்லாமியர் 47% (20 வருடங்களாக இது மாறவேயில்லை), பட்டியலினத்தவர் 38%, பிராமணரல்லாத உயர் ஜாதியினர் 28%, பிராமணர்கள் 18% காங்கிரசுக்கு வாக்களித்தனர்.
பாஜகவுக்கு ஒவ்வொரு சமூகத்தினருள்ளும் வாக்களித்தோர்: இஸ்லாமியர் 10% (20 வருடங்களாக இது மாறவே இல்லை), பட்டியல் இனத்தவர் 30% (1967-இல் இருந்து இரு மடங்கு), பிராமணரல்லாத உயர் ஜாதியினர் 50%, பிராமணர்கள் 60%.
கிட்டத்தட்ட 50 ஆண்டு தேர்தல் வரலாற்றை பார்க்கும் போது மூன்று விஷயங்கள் தெளிவாகிறது. ஒன்று, காங்கிரஸ் 1962-2009 காலம் வரை பரந்துப் பட்ட ஆதரவுடனேயே, இஸ்லாமியர் உட்பட, வாக்குகளைப் பெற்று இருக்கிறது. இரண்டு, 1967-2014 வரை பாஜக-வால் இஸ்லாமியர் வாக்கினை பெருவாரியாக கூட அல்ல 10% தாண்டுவதே கடினமாக இருந்திருக்கிறது (2019-இலும் அப்படியே). மூன்று, இஸ்லாமியர் தவிர, உயர் ஜாதியினர் பெருவாரியாகவும் மற்றவர்கள் கணிசமாகவும், பாஜக பக்கம் சென்று விட்டார்கள்.
2019 தேர்தலை அலசிய ‘தி இந்து’-லோக்நிதி கணிப்பு பாஜக இந்துக்கள் வாக்கினை 44% வென்றது என்கிறது. அதில் உயர்ஜாதியினர் 52%, தலித்துகள் 34%, பழங்குடியினர் 44%. இஸ்லாமியரின் ஓட்டு (மேலுள்ளா படத்தில் காண்பிக்கப்படவில்லை) 8%, கிறிஸ்தவர்கள் 11%. மாநிலவாரியாக பிரித்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் இஸ்லாமியர் அங்கிருக்கும் பிரதான பாஜக எதிர்ப்புக் கட்சிக்கே வாக்களித்துள்ளனர். ஆக, பாஜக இன்று இந்துக்களின், எல்லா சாதியினரும் உள்ளடக்கி, பெருவாரியான தேர்வாக இருக்கிறது. பாஜகவை உயர் ஜாதியினரின் கட்சி என்று வகைப்படுத்துவது தவறு மட்டுமல்ல அவர்கள் வாக்கு வங்கியை புரிந்துக் கொள்ளாமை. ஒரு கட்சியின் வாக்கு வங்கியை எதிர் கட்சியினர் சரியாகப் புரிந்துக் கொள்வது மிக அவசியம்.
பாஜக மிகத் துல்லியமாக சாதிய அரசியலை கைக் கொள்கிறது என்று மேற்சொன்ன புள்ளி விபரங்கள் தெளிவாக்குகின்றன. சமீபத்திய உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதியின் ஜாதவ் சாதி தவிர்த்த பட்டியலினத்தவர் பாஜகவுக்கு கணிசமாக வாக்களித்தனர். கவனிக்கவும் அகிலேஷ் யாதவுக்கு இஸ்லாமியரும் யாதவ சாதியினருமே வாக்களித்தனர்.
பாஜக தலித்துகளின் வாக்குகளை பெறுவதற்கு முயல்கிறது அதற்காகவே அம்பேத்கரையும் சுவீகரிக்கிறார்கள். இதனை நாம் அங்கீகரிக்கும் போதே இன்னொரு உண்மையையும் அங்கீகரிக்க வேண்டும். மற்ற கட்சிகளைப் போல் தான் பாஜக தலித்துகளின் வாக்கு வங்கியை குறி வைக்கிறது. இது வரை தங்களை சமூக நீதிக் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டவர்களின் ஆட்சிகளில் ஏற்பட்ட ஏமாற்றங்களே தலித்துகளை பாஜக பக்கம் நகர்த்துகிறது. பாஜக இதனாலெல்லாம் உயர் ஜாதியினர் கட்சி என்ற அடையாளத்தை முற்றும் துறந்து விட்டதாக சொல்ல முடியாது. மஹாராஷ்டிரா தலித்துகளை பீமா கோரேகான் கிளர்ச்சியில் வேட்டையாடப்பட்டதோடு பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சாட்சியங்கள் அதி நுட்பமான தொழில் நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்று பத்திரிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களுள் அம்பேத்கரின் பேரனும் பேராசிரியருமான ஆனந்த் டெல்டும்ப்டேவும் ஒருவர். தலித்துகள் பண்பாட்டு ரீதியாக பௌத்த மீட்பு பேசினால் பாஜக உயர் ஜாதியினரிடமிருந்து வரும் எதிர் வினைகள் சொல்லும் அக்கட்சியின் ஆன்மா யாரென்று. அம்பேத்கரை இந்துத்துவம் சுவீகரிப்பது போன்ற ஒரு பித்தலாட்டம் வேறொன்றில்லை.
பாஜக வெற்றிபெற பிற காரணங்கள்:
2019 படு தோல்விக்குப் பின் ‘தி இந்து’ பத்திரிக்கையில் வெளிவந்த ராகுல் காந்தியின் கட்டுரை ஒன்றில் (நினைவில் இருந்து சொல்கிறேன்) அவர் தோல்விக்கு பொறுப்பேற்கும் அதே சமயம் எத்தகையதொரு அரசியல் கட்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று சுட்டிக் காட்டினார். முக்கியமாக தேர்தல் கமிஷனின் பாரபட்சம், நீதிமன்றங்கள் அரசுக்கு வளைந்து கொடுப்பது, பல அரசு ஸ்தாபனங்கள் பாஜகவுக்கு துணை நின்றதை எல்லாம் பட்டியலிட்டார்.
ஜாஃப்ரலாட் தேர்தல் கமிஷன் எப்படி பாஜகவுக்கு ஆதரவாக 2019-இல் செயல்பட்டதென தொகுத்திருக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் 84 இடங்களில் வருமான வரி ரெய்டுகள் நடந்தன. அனைத்தும் எதிர்கட்சியினரின் இடங்கள். மோடி மீதும் அமித் ஷா மீதும் அவர்கள் தேர்தல் பரப்புரைகள் பற்றி அளிக்கப்பட்ட 11 புகார்களையும் கமிஷன் தள்ளுபடிச் செய்தது. அதே கமிஷன் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார் என்று மாயாவதியை 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய விடாமல் தடை விதித்தது. யோகி ஆதித்யாநாத் மீதும் அப்படி ஒரு தடை விதிக்கப்பட்ட போது அவர் “தேர்தல் பிரச்சார மேடையில் பஜனையா செய்ய முடியும்?” என்று கேட்டு விட்டு எதிர்கட்சியினரை “பாபரின் வழித் தோன்றல்கள்” என்று ஏசினார்.
2018 முதல் கட்சிகள் தேர்தல் நிதியை சந்தை பத்திரம் (Electoral Bonds) மூலமாக திரட்டலாம் என்று சட்டம் அமலானது. அப்படி திரட்டப்பட்ட நிதிகளில் பாஜக 67.9% (ரூ 4,215 கோடி); காங்கிரஸ் 11.3% (ரூ 706 கோடி) பெற்றிருக்கின்றன. இக்கட்சிகளுக்கு யார் அல்லது எந்த நிறுவனங்கள் பணம் கொடையளித்தன என்று வெளியிடத் தேவையில்லை. அயல்நாடுகளிலிருந்தும் பணம் சேகரிக்கலாம். உண்மையில் இப்படி ஒரு சட்டம் அமெரிக்காவில் சாத்தியமேயில்லை, அதுவும் அமெரிக்க குடிமகனாக இல்லாத ஒருவர் அரசியல் கட்சிக்கு பணம் கொடையளிக்க முடியாது. பொதுவாகவே எல்லா ஜனநாயகத்திலும் ஆளும் கட்சிக்கு தனியார் நிறுவனங்களும் மற்றவர்களும் அதிகமாகவும் பிரதான எதிர்கட்சிக்கு சற்று குறையவும் கொடையளிப்பார்கள் ஆனால் இந்தியாவில் மட்டும் ஆளும் கட்சி மிகப் பெரும் பங்கை அள்ளுகிறது. இந்த அசுர பண பலம் பாஜகவுக்கு பிரச்சாரங்களுக்கு, இணைய தள விளம்பரங்களுக்கு உதவுகிறது. பெரும்பாலான இவ்வகை நிதிகள், 91%, ஒரு கோடியை தாண்டும் என்கிறது குவிண்ட் பத்திரிக்கை, அப்படியானால் அவை பணக்காரர்களும் பெரும் நிறுவனங்களும் அளித்தவை தான். இது ஆரோக்கியமே அல்ல.
பாஜக வெற்றியில் பெரும்பங்கு வகிப்பது சமூக வலைதளங்களில் அக்கட்சி செலுத்தும் செல்வாக்கு. அதுவே அக்கட்சி மதவாத வாக்காளர்களை உருவாக்கவும் பின் தேர்தல் சமயத்தில் அவர்கள் வாக்குகளை அறுவடை செய்யவும் உதவும் முக்கியமான அஸ்திரம். மதவாதம் ஏன் பாஜகவுக்கு தேவைப்படுகிறது, ஒரு கட்சியின் மதவாதம் எப்படி வாக்காளர்களின் தேர்தல் நேர தேர்வுகளில் முக்கியமாகிறது என்று புரிந்துக் கொள்ள முதலில் பாஜக வெற்றியில் சமூக வலை தளங்களின் பங்கினை பார்ப்போம்
சமுக வலைதளங்களும் வெறுப்பு பிரச்சாரமும்:
சென்ற வருடம் “ஃபேஸ்புக் எப்படி நம்மை வெறுப்பில் அமித்துகிறது” என்ற தலைப்பில் அருஞ்சொல் தளத்தில் வெளியான என் கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.
“2019 தேர்தலுக்கு “ஐ.டி. படை வீரர்கள்” (I.T. Yoddhas) என்று ஒரு அணியையே அமித் ஷா தயார் செய்தார். அவர்களுள் ஒருவரான தீபக் தாஸ் 1,114 வாட்ஸப் குழுமங்கள் நடத்தியதாக சொல்கிறார். இவர் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ கட்சி உறுப்பினர் அல்ல, மாறாக “நானும் சௌகிதார்” என்று உறுதி மொழி எடுத்துக் கொண்ட வாக்கு சேகரிப்பாளர் அல்லது வாக்காளர் மீது தாக்கம் (influrence)செலுத்தும் 10 மில்லியன் ஆதரவாளர்களுள் ஒருவர்.
2019-இல் பா.ஜ.க 200,000-300,000 வாட்ஸப் குழுமங்கள் நடத்தியதாகவும் காங்கிரஸ் 80,000-100,000 வரை நடத்தியதாகவும் தெரிகிறாது. பேஸ்புக் பொய்ச் செய்தி பரப்பும் போலி அக்கவுண்டுகளை முடக்கியதில் முக்கியமானது பா.ஜ.க சார்பான “India Eye”. ராகுல் காந்தியை இஸ்லாமியர் என்றும், காங்கிரஸ் அரசியல்வாதிகள் பாகிஸ்தானின் கொடியை வைத்திருப்பது போலவும் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. 2017 உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித் ஷா ஒரு கூட்டத்தில், “ பொய்யோ மெய்யோ நாம் ஒரு செய்தியை எல்லா மக்களிடத்தும் கொண்டு சேர்க்கும் திறன் படைத்தவராக இருக்க வேண்டும்” என்றார்.”
“பேஸ்புக்கில் இந்திய வெறுப்பரசியலின் முக்கிய அங்கமாக பா.ஜ.க இருப்பதை பற்றி ஆகஸ்டு 2020-இல் WSJ முதலில் விரிவான கட்டுரை வெளியிட்டது.
பா.ஜ.க எம்.பி அணந்தகுமார் ஹெக்டே இந்திய முஸ்லிம்கள் கொரோனா தொற்றினை பரவச் செய்கின்றனர் என்று சமூக வலைத் தளங்களில் பதிவுகள் எழுதினார். ட்விட்டர் அவரை வெளியேற்றியது, ஆனால் பேஸ்புக்கோ WSJ இக்கட்டுரை தொடர்பாக கேட்கும் வரை நீக்கவில்லை. பிப்ரவரி 2020 கபில் மிஷ்ரா இஸ்லாமியரை மிரட்டிய பேச்சு ஒன்று பேஸ்புக்கில் அவரால் வலையேற்றப்பட்ட சில மணி நேரங்களில் டில்லியில் கலவரம் வெடித்தது. CrowdTangle என்கிற பேஸ்புக்கின் மென்பொருள் மூலம் ஆராய்ந்ததில் மிஷ்ராவின் அந்த பதிவுக்கு முன் ஒரு மாதத்தில் சில ஆயிரம் வலைத் தள பரிமாற்றமாக (interactions, probably refers to comments and not just rehshares) இருந்த அவர் பதிவுகள் 2.5 மில்லியனாக எகிறியதாம். வெறுப்புத் தீயாக பரவும் வகைக் கொண்டது.”
“இந்தியாவில் பேஸ்புக் இயங்கும் முறையும் அங்கிருக்கும் உரையாடல்களையும் ஆராய முனைந்து பேஸ்புக்கின் ஊழியர் ஒருவர் ஒரு பொய் கணக்கை துவக்கி பேஸ்புக்கின் அல்காரிதம் பரிந்துரைக்கும் குழுமங்களில் இணைவது, பரிந்துரைத்த காணொளிகளைக் காண்பது என்று ஒரு சாதாரண பயணாளியாக அந்த பதிவர் இயங்க ஆரம்பித்தார். பிறகு மளமளவென்று வன்முறை பதிவுகள் வர தொடங்கின, பொய் செய்திகள் தொடர்ந்தன. மூன்றே வாரத்தில் தன் வாழ்நாளில் பார்த்த மொத்த வன்முறை காட்சிகளையும் விட அதிகமாக பார்க்க நேரிட்டதாம் அந்த பரிசோதனை பதிவருக்கு. பாகிஸ்தானுக்கு எதிராக, இஸ்லாமியரை மிகக் கீழ்த்தரமாக வசை பாடி, மோதியை துதிபாடி அதீத வன்முறை பதிவுகள் வர தொடங்கின. பேஸ்புக்கின் உள்ளேயே இந்தியாவில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்குத் தொடர்ந்து வெறுப்பு பதிவுகளுக்கான தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக வெளிப்படையாக ஒரு அறிக்கை சொன்னது.”
இந்த சமூக வலைதள முன்னெடுப்புகள் பெருமளவில் வாசிக்கப்பட்டு, சுவீகரிக்கப்பட்டு மறு பகிர்தல் செய்யப்படுகிறது என்பதாலேயே தான் பாஜக இதில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. இத்தனையையும் ஊக்குவித்து பங்காற்றும் வாக்காளர்களை நாம் எந்த கேள்விக்கும் உட்படுத்தாமல் மொத்தப் பழியும் ஒரு கட்சியின் செயல்பாட்டாளர்கள் மீது மட்டுமே போடுவது ஜனநாயகத்துக்கு ஆபத்து. வாக்காளர்கள் வழி நடத்தப்படுவது எந்தளவு உண்மையோ அந்தளவு வாக்காளர்களால் கட்சிகள் வழி நடத்தப்படுவதும். முதல் படியை தலைமைகள் தாம் எடுத்து வைக்கிறார்கள் அதன் பின் வாக்காளர்களின் ஊக்குவிப்பும் பங்களிப்பும் தீர்மானிக்கிறது.
2014-இல் தேசிய அரசியலில் பாஜகவின் முகமாக முன் வைக்கப்பட்ட போது ஊதி பெறுக்கப்பட்ட ‘குஜராத் மாடல்’ பிம்பம் எந்தளவு முக்கியமோ அதே அளவுக்கு 2002 குஜராத் கலவரமும் அதனை பின் தொடர்ந்த மோடியின் செயல்பாடும் முக்கியமானது. 2002 கலவரத்தின் காரணமாகவே மோடியை வெறுத்தவர்கள் உள்ளதைப் போல் மோடி அக்கலவரத்தின் பொருட்டு எவ்வித மன்னிப்புக் கோரலும் செய்யாததற்காகவே நேசித்தவர்களும் இருந்தார்கள்.
ஜனநாயகங்களில் தீவிர வலது சாரியோ இடது சாரியோ பெரு வெற்றி அடைய முடியாது, மாறாக ஓரளவு மையத்துடன் நெருங்குகிறவர்களே வெற்றி பெறுவார்கள் என்பது நியதி. இந்திய வரலாற்றிலும் மோடி வரை இதுவே உண்மை. வாஜ்பாயியும் அத்வானியுமே அவ்வண்ணமே ஆட்சியில் இருந்த போது எந்த மதவாதத்தைக் கொண்டு வெற்றிப் பெற்றார்களோ அதனை ஓரளவேனும் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். மோடியின் இரும்பு மனிதன் பிம்பத்துக்குப் பின் அவர் ஆட்சியில் நடந்த, இஸ்லாமியரை குறி வைத்த, என்கவுண்டர்களை நீதிமன்றமும் சி.பி.ஐ-யும் போலி என்று நிரூபித்த எந்த தருணத்திலும் மோடி அவற்றுக்காக வருத்தம் தெரிவிக்காதது அவர் ஆதரவாளர்களிடையே ஒரு பிம்பத்தை வளர்த்தது என்கிறார் ஜாஃப்ரலாட். இன்று யோகி ஆதித்யாநாத் “புல்டோசர் பாபா” என்று புகழப்படுவதோடு ஒப்பிட்டுப் பார்க்கவும். இன்று மைய அரசியலே வெற்றி பெரும் என்கிற கருத்தை பொய்யாக்கி தீவிர மதம் சார்ந்த வலது சாரி கட்சி வெற்றி பெற முடியுமென்று மோடி நிரூபித்ததன் மூலம் புதியதோர் அரசியல் அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார் எனலாம்.
பாஜக தேர்தல் வியூகமும் மதவாதமும், இஸ்லாமிய புறக்கணிப்பு:
சென்ற ஜூலை மாதம் முதல் இந்தியாவின் இரண்டு பாராளுமன்ற அவைகளிலும் இந்தியாவின் ஆளும் கட்சிக்கு, அதுவும் அறுதி பெரும்பான்மை பெற்ற கட்சிக்கு, ஒரு உறுப்பினர் கூட இஸ்லாமியர் அல்ல. மேலும் 28 மாநிலங்களிலும் 3 யூனியன் பிரதேசங்களிலும் பாஜகவுக்கு ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை. இந்தியாவில் இஸ்லாமியர் 15%, சிறுபான்மையினர் என்பது உண்மையில் மக்கள் தொகையில் மொத்த எண்ணாகப் பார்த்தால் மிகப் பெரிய ஜனத் திரள். இப்படி இந்தியாவின் ஒரு பகுதியினருக்கு பாஜகவில் இடமே இல்லை என்பது தற்செயல் அல்ல.
பாஜக மிகச் சொற்பமான முஸ்லிம் வேட்பாளர்களையே நிறுத்தியது. “2019-இல் 6 முஸ்லிம் வேட்பாளர்கள், அதுவும் மூவர் ஜம்மு-காஷ்மீரில், இருவர் மேற்கு வங்கத்தில், ஒருவர் லக்ஷதீபத்தில்”. பிரஷாந்த ஜாவும் நளின் மேத்தாவும் மற்றவர்கள் இது பாஜகவின் தேர்தல் வியூகம் என்கிறார்கள். இஸ்லாமியர் 20% இருக்கும் உ.பி.யில் 1991-2019 வரை ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக ஒன்று அல்லது இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களைத் தான் நிறுத்தி இருக்கிறது. 2019-இல் பூஜ்யம்.
20-30% முஸ்லிம்கள் இருக்கும் தொகுதிகளில் பாஜக மற்ற கட்சிகளைப் போலல்லாது இந்து வேட்பாளரையே நிறுத்தும். அதனால் 70% இந்துக்களின் வாக்கு சிதறாமல் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கிறது. ஒரு கட்சி தனக்கு ஆதரவான வாக்காளர்களை குறி வைப்பதில் தவறில்லை ஆனால் இங்கே கவனிக்கப்பட வேண்டியது முஸ்லிம்கள் தேவையே இல்லை என்று ஒரு பிரதான கட்சி நினைப்பதும் இந்து வாக்குகள் சிதறாமல் இருக்க தேர்தல் பிரச்சாரங்களில், இந்த தொகுதிகளில் என்று இல்லை பொதுவாகவே, மதவாதம் மறைமுகமாகவோ அப்பட்டமாகவோப் பேசப்படுவதும்.
வாக்காளர்களுக்கு மதம் எந்தளவு முக்கியமாக இருக்கிறது? இவ்வருடம் நடந்த உ.பி. தேர்தலில் பொதுவாக எந்த பிரச்சனை வாக்கை நிர்ணயிக்கிறது என்று கேட்டால் பெரும்பாலோர் வளர்ச்சி என்றும் மிகச் சிலரே மதம் சார்ந்த காரணம் என்கிறார்கள். ஆனால் அதுவே காரணங்களை பட்டியலிட்டு இதில் எது முக்கியம் என்றால் மீண்டும் வளர்ச்சி, பண வீக்கம், வேலையின்மை என்று சொன்னாலும் கணிசமானோர், பத்தில் நான்கு, ராமர் கோயில், மத அடையாளம் என்று சொன்னார்கள்.
உ.பி. தேர்தலை ஆராய்ந்த கருத்து கணிப்பு வாக்காளர்களிடையே மத ரீதியான பிளவை படம் பிடித்துக் காட்டியது. இந்துக்கள் வாக்கு பாஜகவுக்கு 54%, சமாஜ்வாடி கட்சிக்கு 26%, பி.எஸ்.பி-க்கு 14%; இஸ்லாமியர் வாக்கு பாஜகவுக்கு 8%, சமாஜ்வாடி கட்சிக்கு 79%. இது தேசிய அளவிலும் இஸ்லாமியர் பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு சதவீதத்துடன் ஒத்துப் போகிறது. தேசம் மத ரீதியாக தெளிவாகப் பிளவுக் கண்டுள்ளது.
மதவாதம் தேசத்தின் வேர்களிலும் கிளைகளிலும் விஷமென பரவியிருக்கிறது. இந்திய பாராளுமன்றத்தில் ஆஸாதுதின் ஒவைஸி பதவியேற்கும் போது பாஜக உறுப்பினர்கள் “ஜெய் ஶ்ரீராம்” என்று கோஷமிட்டனர். இது மிக கீழ்மையான அநாகரீகம். இந்தியாவின் மக்கள் பிரதிநிதிகள் அமரும் பிரதான அவையில் ஒரு முஸ்லிம் உறுப்பினருக்கு இத்தகைய இடையூறு இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்ததில்லை. அத்தகைய இடையூறுக்கு கட்சித் தலைமை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரலாற்றில் சில சமயம் சாதாரண நிகழ்வுகள் சமூகத்தின் மாற்றங்களைத் துல்லியமாக பிரதிபலிக்கும். அப்படித் தான் அந்த நிகழ்வு எனக்குத் தெரிந்தது.
தேசப் பிதா மஹாத்மா காந்தியின் கொலையை ஹிந்து மகாசபா உறுப்பினர் பூஜா பாண்டே மீட்டுருவாக்கம் செய்தார் என்ற செய்தி அதிர்ச்சி அலைகளை தேசமெங்கும் கிளப்பியது. கோட்ஸேவை தேச பக்தன் என்று சொன்ன பிரக்யா தாகூர் இன்று பாஜக எம்.பி. கோட்ஸே காலம் தாழ்த்தி காந்தியை கொன்றான் என்று பேட்டியளித்த உமா ஆனந்த் தமிழகத்தில் பாஜக சார்பில் பிராமணர்கள் கணிசமாக வாழும் மயிலாப்பூரில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளராக நின்று ஜெயித்தார். கோட்ஸேவை இவர்கள் புகழ்வதற்கு காரனம் காந்தி இஸ்லாமியருக்கு துணை நின்றார் என்று கோட்ஸேவே சொன்னதை இவர்களும் ஏற்பதே. காந்தியை விதந்தோதி மோடி நியூ யார்க் டைம்ஸில் கட்டுரை எழுதுகிறார் ஆனால் அவர் கட்டுபாட்டில் இருக்கும் கட்சியினரோ கோட்ஸே ஆதரவாளர்கள்.
ராகுல் காந்தி வயநாட்டில் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்த போது பேரணியாக காங்கிரசும் அவர்கள் கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக்கும் அவரவர் கட்சிக் கொடியுடன் சென்றனர். உடனே பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ராகுலின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடியுடன் சென்றனர் என்று அவதூறு செய்தனர் அது காட்டுத் தீயென பரவவும் செய்தது.
முஸ்லிம்கள் கணிசமாக இருக்கும் எந்த மாநிலத்திலும் பாஜக எளிதில் வெற்றி பெற இயலாது அதனாலேயே அந்த மாநிலங்களில், பெரும்பாலும் வடக்கில், தேர்தல் பிரச்சாரங்களில் மத வெறுப்பு அதீதமாகப் பேசப்படுகிறதென்று சுட்டிக் காட்டுகிறார் பிர்ஷாந்த ஜா. 2013 முஸாபர்நகரில் நடந்த இந்து முஸ்லிம் கலவரத்தை மோதி பின்னர் உத்தர பிரதேசத் தேர்தலின் போது இந்துக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டது போலவும் அதற்கு மற்ற கட்சியினர் துணை நின்றதுப் போலவும் பேசி மக்களைத் தூண்டினார். ஒரு தேர்தல் உரையில் முஸ்லிம் சுடுகாடுகள் குறித்தும் பேசினார். சாதி, மத வேற்றுமைகளை கூர் படுத்தும் உரைகளை கட்சியினர் அவ்வப்போது கையில் எடுப்பார்கள் ஆனால் அவை கட்சியின் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையில் இருக்கும் பேச்சாளர்கள் செய்வார்கள், பாஜகவில் உச்சத் தலைவர்களே அத்தகைய உரைகளைப் பேசினார்கள். அத்தகையப் பேச்சுகளுக்கு வாக்காளர்கள் நல்ல பலன் கொடுத்தார்கள்.
உ.பி. தேர்தலில் மத ரீதியான வாக்கு விகிதத்தை ‘தி இந்து’ ஆய்வு வெளியிட்டது. பெரும்பான்மை இந்துக்கள் பாஜக் பக்கமே. இஸ்லாமியரோ கிட்டத்தட்ட ஒட்டு மொத்தமாக எதிர் பக்கம். கவனிக்கவும் காங்கிரசுக்கு யாதவ், ஜாதவ் அல்லாத இந்துக்களின் வாக்கு மிக மிக சொற்பம்.
இந்து வாக்குகள் முஸ்லிம்கள் 20% அதிகமாக உள்ள தொகுதிகளில் மிக அதிகமாக பாஜகவுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்தது என்கிறது ‘தி இந்து’ கணக்கெடுப்பு.
இவ்விடத்தில் வாசகர்கள் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். பாஜக எல்லோரும் வியக்கும் நல்லாட்சியைக் கொடுத்திருந்தால் இந்தளவு மதவெறி பிரச்சாரம் ஏன் தேவைப்படுகிறது. ஏன் என்றால் பாஜகவின் நேரடி பண பட்டுவ்வாடா போன்றவை பல கோடி பேரை சென்றடைந்தாலும் அவர்கள் இந்திய ஜனத்தொகையில் சொற்பமே. மேலும் எந்த ஜனநாயகத் தேர்தலிலும் சாதாரண வாக்காளனை வாக்குச் சாவடிக்கு ஈர்ப்பது ஒரு பக்கமென்றால் தங்கள் கட்சியின் உள்ளார்ந்த அடித்தள வாக்காளனை வாக்குச் சாவடிக்கு ஈர்ப்பது மட்டுமல்ல ஒரு தளகர்த்தராகவே செயல்பட வைக்க வேண்டும் அதற்கு அந்த உள்ளார்ந்த வாக்களனின் தேவை, படித்த நடுத்தர வர்க்கம் உட்பட, சொல்லப் போனால் அவர்கள் தான் பிரதான குறி, அப்பட்டமான மத அரசியல் தாம். ஆக இங்கே வாக்காளனே கட்சியை வழி நடத்துகிறான்.
நடுத்தர வர்க்கத்தின் முக்கியமான அடையாளம் அவர்கள் கல்விக் கற்றவர்கள். “படித்தவன் இப்படிச் செய்யலாமா”, “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், ஐயோவென்று போவான்” என்கிற பழமொழிகள் நாம் கல்விக் கற்றவர்கள் அறம் அறிந்தவர்கள் என்று வைக்கும் நம்பிக்கையைச் சொல்கிறது. அறிவுத் தளத்தோடு பாஜகவுக்கு இருக்கும் உறவும் உயர் கல்வி நிலையங்களில் இன்று நிலவும் இந்துத்துவமும் பேசப்பட வேண்டியது.
JNU பல்கலைக் கழகமும் பாஜகவும்:
இந்துத்துவத்தை எதிர்க்கும் பத்திரிக்கையாளர்களை ‘வேசிகள்’ (presstitute) என்பது, முற்போக்காளர்களை பாகிஸ்தானியக் கைக்கூலிகள், தேச விரோதிகள், தேசத்தை உடைப்பவர்கள் என்று தொடர்ந்து ஏசுவது, மாற்றுக் கருத்தோ தங்கள் வரலாற்று திரிபுகளுக்கோ துணைப் போகாத கல்வியாளர்களை சமூக வலைதளங்களில் அச்சுறுத்துவது என்று பாஜக அறிவுத் தரப்பின் மீது ஒரு பெரும் போரே தொடுத்திருக்கிறது எனலாம். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் டில்லி பல்கலைக் கழகமும் (DU) ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் (JNU).
JNU-வை இந்தியாவின் இந்துத்துவ எதிர்ப்பின் பிரதான குறியீடாக பாஜக கருதுகிறது ஆகவே அதனை கைப்பற்றுவதை ஒரு பிராஜக்டாகவே முன் எடுத்தார்கள். ஜாஃப்ரலாட் JNU-வின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட மமிடாலா ஜகதீஷ் குமார் அதற்கு முன் ஐஐடி-யில் பேராசிரியராக இருந்த போது சங் பரிவாரத்துடன் தொடர்பு கொண்ட ‘விஞ்ஞான பாரதி’ அமைப்பில் செயல்பட்டதாக சொல்கிறார். குமார் அக்குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். வேறொரு செய்தி கட்டுரையில், 2018 பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போது மாணவர்கள் சமூக நலனில் அக்கறை காட்ட வேண்டுமென்று அறிவுறுத்தி சில பிரச்சனைகளை பூமி வெப்பமடைதல் போன்றவற்றை பட்டியலிட்டவர் சட்டத்தை மீறி இந்தியாவில் குடியேறுபவர்களால் உண்டாகும் ஆபத்து (இது பொதுவாக இஸ்லாமியரை குறிக்கும் வசை) என்ற பிரச்சனையையும் சேர்த்தார். இவர் இன்று பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவர்.
ஜகதீஷ் குமார் துணைவேந்தராக இருந்த போது தான் இடது சாரி மாணவர் அமைப்புகளுக்கும் இப்போதும் பல பல்கலைக் கழகங்களில் வலுப் பெற்றிருக்கும் பாஜக சார்ந்த ‘அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்’ மாணவர் அணியும் மோதிக் கொண்டன. அப்போது தான் கன்ஹையா குமார் கலந்துக் கொண்ட கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டதென அவதூறு செய்யப்பட்டது. JNU பல்கலைக் கழகம் ஒழுக்கக் கேடான பல்கலைக் கழகமென்று நிறுவ அவதூறுகள் முளைத்தன. ஒரு பாஜக எம்.எல்.ஏ பல்கலைக் கழக வளாகத்தில் 3000 ஆணுறைகள் கண்டெடுக்கப்பட்டன என்றார். ஒரு போலீஸ் அறிக்கை இன்னும் ஒரு படி மேலே போய் மாணவர்கள் மஹிஷாசுரன் என்ற அரக்கனுக்கு விழா எடுக்கிறார்கள், மாட்டுக் கறி பிரியாணி சாப்பிடுகிறாற்கள் என்று சொன்னது.
JNU மீதான இந்த தொடர் தாக்குதல்களால் இப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களை மற்ற பல்கலைக் கழகங்கள் ஒதுக்க ஆரம்பித்தன. அப்படியென்றால் மற்ற பல்கலைக் கழகங்கள் தங்களை தேச பக்தி நிலயங்களாக காண்பித்துக் கொள்ள தலைப்பட்டன என்பதே பொருள். இந்த நிலையில் தான் இந்தியாவின் உயர் கல்வி நிலையங்கள் இருக்கின்றன. 2016, 2020 ஆண்டுகளில் JNU-வில் பெரும் கலவரங்கள் நடந்தன. 2020 கலவரம் திட்டமிட்ட வன்முறை என்றே சொல்லலாம்.
செப்டம்பர் 2021-இல் ஆகஸ்டு 14 “பிரிவினை பயங்கரங்கள் நினைவு கூறும் நாள்” என ஜகதீஷ் குமார் ட்வீட் செய்தார். பேச்சாளர்கள் பட்டியலில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை. பிரிவினை குறித்து வரலாறுகள் எழுதிய யாஸ்மின் கான், அயிஷா ஜலால் போன்றவர்களை தவிர்த்துவிட்டார்கள். இப்படித் தான் ஒரு பெருந்துயர் சம்பவம் பற்றி இந்தியாவின் பிரதான பல்கலைக் கழகம் கருத்தரங்கு நடத்துகிறது.
ஜகதீஷ் குமார் UGC-க்கு தலைவராக இவ்வருடம் (2022 பிப்ரவரி) பணி மாற்றம் செய்யப்பட்டவுடன் அடுத்து நியமிக்கப்பட்ட ஷாந்திஶ்ரீ துலிபுலி பண்டிட் குமாரை விட அதிக சர்ச்சைக்குள்ளானார். “காந்தியும் கோட்ஸேவும் கீதையைப் படித்தார்கள், கோட்ஸே செயலாற்றுவது முக்கியமென்று உணர்ந்து இந்தியாவின் ஒற்றுமைக்காக மஹாத்மா காந்தியைக் கொல்வதே தீர்வென்று நினைத்தார். வருத்தங்கள்” என்று ட்வீட்டியது முதல் முஸ்லிம்கள் பற்றியெல்லாம் மிக ஆட்சேபகரமாக ட்வீட் செய்திருந்ததெல்லாம் வெளி வந்தவுடன் தன் ட்விட்டர் பக்கத்தை அழித்து விட்டார்.
ஐஐடி-களில் இன்று இந்துத்துவ அமைப்புகளும் அம்பேத்கரிய அமைப்புகளும் மோதிக் கொள்வது பரவலாக நடக்கிறது. ரோஹித் வெமுலாவின் தற்கொலை பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. ஐஐடி டில்லியில் மாட்டு மூத்திரத்தின் பலன்களை கண்டறிய 50 ஆய்வு விண்ணப்பங்கள் வந்தனவாம், அதுவும் 2017-இலேயே. எதையும் ஆராய்வதில் தவறில்லை ஆனால் மாட்டு மூத்திரத்தின் மீதான இந்த திடீர் பரிவு இந்துத்துவத்தோடு தொடர்புடையதென்று குழந்தைக்கும் தெரியும்.
கடந்த 20 வருடங்களுள் பெருகி விட்ட சங் பரிவார் நடத்தும் பள்ளிகளில் இஸ்லாமிய வெறுப்பு, இந்து மதம் பற்றிய அதீத பிரச்சாரங்கள், பாடப்புத்தகங்களில் வரலாற்று திரிபுகள் பற்றியெல்லாமும் கவலையுடனும் அச்சத்துடனும் ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். கல்வி நிலையங்களில் மிகப் பரவலாக இருக்கும் இந்துத்துவம் நடுத்தர வர்க்கத்தின் மீது ப.சிதம்பரம் வைக்கும் விமர்சனத்தை நிரூபிக்கிறது.
காங்கிரஸ் மீதும் இந்திரா, ராஜீவ் மீதும் அநேக குற்றச்சாட்டுகள் வைத்தாலும் அவர்கள் குறைந்தப் பட்சம் மதவாதிகள் என்று சொல்ல இயலாது, மேலும் தவறுகளுக்காக அவர்கள் வருத்தம் தெரிவித்ததும் குறைந்தப் பட்ச ஜனநாயக மாண்புகளுக்காவது செவி சாய்த்ததும் உண்டு. மிகச் சிறந்த உதாரணம் எமர்ஜன்சி முடிந்தப் பின் ஜே.என்.யூ மாணவர் தலைவராக இருந்த சீதாராம் யெச்சூரி இந்திராவின் வீட்டருகே ஒரு கூட்டத்திற்கு அவரை அழைத்து மாணவர்களின் கோரிக்கைகளைப் படித்தார். இந்திரா நின்றுக் கொண்டே மவுனமாக கேட்டுக் கொண்டார். (புகைப்படம் கீழே, உதவி இந்தியா டுடே).
மாறிவிட்ட இந்தியாவும் மாறி வரும் தமிழகமும்:
செக்யூலரிஸம் என்பதை மதச் சார்பின்மை என்று மொழி மாற்றம் செய்வது எனக்கு உடன்பாடில்லை. ‘தான் அல்லாத பிற வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் ஏற்பதும் பொதுத்தன்மையுடைய எவ்விடத்திலும் சமய / மத நம்பிக்கைகளை தவிர்ப்பதுமே செக்யூலரிஸம். தலித்துகளை மற்றவர்கள் ஒடுக்குவதும் செக்யூலரிஸத்துக்கு எதிரானதே என்ற கருத்தியலின் அடிப்படையில் இங்கே நான் ‘செக்யூலரிஸம்’ என்றே எழுதுகிறேன்.
பாஜக அடைந்த அரசியல் வெற்றிகளை விட மிக அச்சுறுத்துவது அதன் கலாசார வெற்றி தான். எல்லா அரசியல் கட்சிகளும் இன்று ‘செக்யூலரிஸம்’ பேசினாலும் அவர்கள் அஞ்சுவது “இந்து விரோத கட்சி” என்கிற முத்திரைக்கே. அதனாலேயே அர்விந்த் கெஜ்ரிவாலும் மமதா பாணர்ஜியும் தங்களால் ஹனுமான் சாலிஸா ஒப்பிக்க முடியும் என்று சவால் விட்டனர். ராகுல் காந்தியும் கோயில்களுக்கு போவதை விளம்பரம் செய்தார். இவர்கள் எல்லோரும், பாஜகவின் அப்பட்டமான மதவாதத்தை எதிர்க்கும் நேரம் தவிர, முஸ்லிம்கள் நலன் பற்றியோ முஸ்லிம்களின் வாழ்வாதரங்கள் குறித்தோ, பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தார்கள். 2014-க்கு முன்பும் கூட சிறு பான்மையினர் உண்மையான பிரச்சனைகளைத் தவிர்த்து மேம்போக்காகத் தான் பேசினார்கள் என்பதே நிஜம், இப்போது அது மேலும் தீவிரமடைந்திருக்கிறதோடு தாங்கள் ‘இந்துக்களுக்கு நண்பர்கள்’ என்று ஆணித்தரமாக கட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். உ.பி.யில் இஸ்லாமியர்களே அகிலேஷ் கட்சியின் பிரமுகர்களிடம் தங்களோடு நெருக்கம் காண்பிப்பதை தவிர்த்தால் பரவாயில்லை என்று கூறிய அவலமும் நிகழ்ந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை “இது பெரியார் மண்” என்று ஒரு மாய பிம்பம் நிலவுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட தமிழர்களுக்குத் தான் ஒரு காலத்தில், 1991-க்கு முன், விநாயக சதுர்த்தியை வட மாநிலங்கள் போல் கொண்டாடாத தமிழகத்தைத் தெரியும். இன்று தமிழகத்தில் நிகழும் மாற்றங்களுக்கு மூன்று உதாரணங்கள்.
ஒன்று, திருமாவளவனை கண்டித்துப் பேசிய காயத்திரி ரகுராம் ஓங்கார குரலில் ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கூச்சலிடுகிறார். தமிழ் நாட்டில் என்றைக்கு ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கூவியிருக்கிறோம்? இது சாதாரண மாற்றமா?
இரண்டு, சென்னை குடியிருப்புகளில் இப்போது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அக்கொண்டாட்டங்கள் ஆரோக்கியமான தேச உணர்வா அல்லது அச்சுறுத்தும் தேசியமா? யாருக்கான தேசியம் அங்கே முன்னிறுத்தப்படுகிறது? இது தமிழ் நாட்டு வழக்கமா?
மூன்று, தஞ்சையில் மிகப் பாரம்பர்யமிக்க தேவாலயம் சிவகங்கை தோட்டத்தின் அருகில் இருக்கும் கோட்டைக் கோயில் என்பது. அதன் அருகில் சமீபத்தில் அனுமார் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கோயிலில் வைக்கப்பட்டுள்ள பதாகையி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று எழுதியிருக்கிறது, அதுவும் தஞ்சையில். மேலும் அந்த முக்கோன கொடி தஞ்சை அல்லது தமிழக மரபா? அனுமாரே கூட கொஞ்சம் வட இந்திய சாயலோடு தான் இருக்கிறார்.
பாஜக தமிழகத்தில் காலூன்றினால் இன்னொரு தலைமுறையும் அதற்கடுத்தவர்களுக்கும் ‘ஜெய் ஶ்ரீராம்’, ‘பாரத் மாதா’ என்று சொல்லாத போதும் சாதாரண இந்து மதம் செழிப்பாகவே இருந்த தமிழகம், காந்தியை மகாத்மாவாக்கிய தமிழகம் இருந்ததே மறந்துப் போகும்.
பாஜக முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு போட்டியாக மற்ற மதங்களும் புதுப்புது விழாக்கள் முன்னெடுக்கிறார்கள். கடந்த 20 வருடங்களுக்குள் சென்னையில் ஆரம்பித்திருக்கும் புது கிறிஸ்தவ விழா வேளாங்கன்னி யாத்திரை போன்ற ஒன்று. நகரே ஸ்தம்பித்ததை நேரில் பார்த்தேன். BJP has ignited a competitive religiosity.
‘கோகுல கண்ணனுக்கு ஜெயந்தி விழா’ என்று ஜாதி சங்கம் ஒன்றின் பதாகையும் தஞ்சைக்கு புதிது. அதுவும் அந்த சொற்றொடர்களை கவனியுங்கள். இதை தான் ‘sanskritization’ என்று சமூகவியலில் சொல்வார்கள். இன்னொன்றையும் சொல்ல வேண்டும் 2015-இல் தான் முதன் முதலாக தஞ்சையில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் சுவர் விளம்பரங்களையும் பார்த்தேன்.
தங்களை சிறுபான்மையினரின் நலன் காப்பவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் பற்றி ஒரு சிறு பத்தி தான் இருக்கிறது அதுவும் முன்னாள் மத்திய அரசுகளின் இரண்டு அறிக்கைகளை, சச்சார் கமிட்டி அறிக்கையும் ரங்கநாத் மிஷ்ரா கமிட்டி அறிக்கையையும், சுட்டிக் காட்டி அவற்றை நிறைவேற்ற அழுத்தம் தருவோம் என்றது. அதே தேர்தல் அறிக்கையில் மிக விரிவாக இந்து அறநிலையத்துறை மூலம் முன்னெடுக்கப் போகும் கோயில் பராமரிப்புகள், பூசாரிகள் நலன் ஆகியவை பட்டியலிடப்பட்டன. சிறுபான்மையினர் என்றால் இட ஒதுக்கீடு, மத நல்லிணக்கம் தாண்டி எதுவும் யாரும் பேசுவதில்லை.
பாராளுமன்றத்திலும் தமிழக சட்டசபையிலும் சிறுபான்மையினர் பற்றி தீர்மானங்களையோ விவாதங்களையோ தமிழக உறுப்பினர்கள் நடத்தியதாகத் தெரியவில்லை. காஷ்மீர், குடியுரிமை மசோதா பற்றி பாராளுமன்றத்தில் நடக்கும் பொது விவாதத்தில் திமுக எம்.பி.க்கள் சிலர் பேசியிருக்கிறார்கள் அதுவும் பாஜகவின் மதவாதத்தைச் சுட்டாமல். தொன்று தொட்டே இது தான் நிலை. அதே வேளையில் தமிழக அரசின் அறாநிலையத் துறை அமைச்சர் தான் முதல்வருக்கு அடுத்து மிக முக்கியமாக பேசப்படுகிறவர். தங்களை பகுத்தறிவு அரசு என்று சொல்லிக் கொண்டவர்களின் அமைச்சர் “இது ஆன்மிக அரசு” என்கிறார். இவற்றை எல்லாம் கேள்விக் கேட்டால் “பாஜக வருவதை தடுக்க தந்திரோபாயம்” என்று வாயடைத்து விடுகிறார்கள். இன்று எந்த அரசு கட்டிட அடிக்கல் நாட்டு விழாவும் பூமி பூஜை இல்லாமல் நடைபெறுவதில்லை, அதுவும் ஐயர் முன்னிலையிலும் அமைச்சர்களின் ஆர்வ பங்களிப்புடனும்.
ராமனும் அனுமனும் இன்று அவர்கள் வழக்கமான சாந்த ரூப சித்தரிப்புகளை விட போர்க்கோல சித்தரிப்புகளே மிகுதி. பட்டாபிஷேக ராமன், சீதாராமன் போன்ற சித்தரிப்புகளை விட இன்று இலங்கேஸ்வரனை வீழ்த்த கோபாவேசமான கோதண்டராமன் சித்தரிப்புகளையே காண்பது தற்செயலல்ல. அதே போல் ராமன் முன் பனிந்து சினேக பாவத்துடன் இருக்கும் அனுமனை விட பஜ்ரங் பலி அனுமனின் சித்தரிப்பையே நிறைய காண்கிறோம். தமிழகத்திலும்.
காங்கிரஸோ, வேறு மாநிலக் கட்சிகளோ இன்று இஸ்லாமியர் மொத்த வாக்குகளை அள்ளுவதற்கு காரணம் இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் பாஜகவைப் பற்றிக் கொண்டிருக்கும் மரண பயமே. இன்று பாஜக இந்தியாவை கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் நிலை ஏதோ திடீரென்று நடந்ததோ அவர்கள் மட்டுமே முயன்று செய்ததோ அல்ல. இன்றைய பாஜக மதவாதத்தின் வேர்கள் நெடிது.
2019 தேர்தலில் வேலைவாய்ப்பின்மையைவிட பாகிஸ்தான் மீது, புல்வாமாவுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதல் தங்களை பாஜகவுக்கு வாக்களிக்க ஈர்த்தது என்று 50% இளைஞர்கள் சொன்னதாக ‘தி இந்து’ கருத்துக் கணிப்பு சொல்கிறது. அதுவே, பாகிஸ்தான் மீதான தாக்குதல் பற்றி கேள்விப்படாத இளைஞர்கள் 30%தான் பாஜகவுக்கு வாக்களித்தனர். இது சொல்லும் செய்தி மிக முக்கியம். எதிர்கட்சியினர் இன்று எத்தகைய தேர்தல் எதிரியை எதிர்கொள்கின்றனர் என்பதே அது
இன்னும் விரிவாக ஆராய வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. பேச இவ்வளவு இருக்க ‘பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸின் செயலின்மையே காரணம்’ என்று மொத்த பழியையும் ஒரு கட்சியின் மீது இறக்குவது நியாயமும் இல்லை; பாஜகவை ஆக்கபூர்வமாக எதிர்கொள்வதற்கான வழியும் இல்லை!
இக்கட்டுரை அருஞ்சொல் இதழில் வெளிவந்தது https://www.arunchol.com/aravindhan-kannaiyan-on-bjp-congress
உசாத்துணைகள்
- Modi’s India: Hindu Nationalism and the Rise of Ethnic Democracy - Christophe Jaffrelot
- How the BJP Wins: Inside India’s Greatest Election Machine - Prashant Jha
- The New BJP: Modi and the Making of the World’s Largest Political Party — Nalin Mehta
- Hindutva: Exploring the Idea of Hindu Nationalism — Jyotirmaya Sharma
- Letters for a Nation: From Jawaharlal Nehru to His Chief Ministers 1947-1963 — Edited by Madhav Khosla
- Recent Essays and Writings on the Future of India, Communalism and Other Subjects — Jawaharlal Nehru
- https://www.arunchol.com/p-chidambaram-on-middle-class
- https://www.arunchol.com/balasubramaniam-muthusamy-on-pc-comment
- https://thefederal.com/news/fir-filed-against-rahul-priyanka-after-highway-drama-en-route-to-hathras/
- https://indianexpress.com/article/india/india-others/sunday-story-mandal-commission-report-25-years-later/
- Arjun Singh and Mandal and IIT https://frontline.thehindu.com/cover-story/article30209328.ece
- https://www.thehindu.com/news/national/karnataka/congress-plans-protests-against-increase-in-gst-on-food-items/article65662129.ece
- https://www.ndtv.com/india-news/it-is-cruel-to-raise-taxes-congress-leader-jairam-ramesh-slams-centre-on-new-gst-hike-3175678
- https://en.wikipedia.org/wiki/2019_Indian_general_election
- https://theprint.in/national-interest/why-indias-middle-classes-are-modis-muslims/259523/
- https://www.business-standard.com/article/opinion/new-middle-class-supports-the-bjp-more-than-cong-christophe-jaffrelot-114041900883_1.html
- https://www.thehindubusinessline.com/blink/read/why-the-indian-middle-class-gravitates-towards-modi/article33269351.ece
- BJP’s 2019 Campaign - Christophe Jaffrelot https://doi.org/10.1080/09584935.2020.1765985
- https://theprint.in/opinion/muslims-in-india-are-semi-citizens-now-political-and-civil-rights-have-been-bulldozed/994854/
- https://theprint.in/features/savarkar-broke-monopoly-of-nehru-gandhi-history-books-now-theres-new-appetite-wishlist/1045572/
- https://carnegieendowment.org/2018/07/23/most-advantageous-thing-bjp-could-do-is-real-political-finance-reform...-it-would-still-out-fundraise-opponents-pub-76907
- https://theprint.in/opinion/now-we-know-who-is-behind-the-massive-funding-gap-between-bjp-and-congress-the-corporates/231086/
- https://www.thehindu.com/news/national/call-for-pm-modi-to-break-silence-on-haridwar-hate-speech-event/article38032474.ece
- https://thewire.in/communalism/narendra-modi-citizenship-amendment-act-protests-clothes
- https://www.bbc.com/news/world-asia-india-61090363
- https://twitter.com/dramsinghvi/status/833272469096128512
- https://www.thequint.com/news/india/only-19-parties-received-money-from-electoral-bonds-bjp-got-68-investigation-bjp-reporters-collective-supreme-court-105-parties#read-more
- https://thecognate.com/6-muslim-candidates-win-elections-in-tamil-nadu-aimim-sdpi-iuml-do-not-secure-single-seat/
- https://www.thehindu.com/elections/uttar-pradesh-assembly/development-close-to-voters-hearts/article65215834.ece?homepage=true
- https://www.thehindu.com/elections/uttar-pradesh-assembly/religious-polarisation-and-electoral-choices/article65215835.ece
- https://thewire.in/government/in-one-months-time-bjp-will-have-no-muslim-representatives-in-parliament-assemblies
- https://www.business-standard.com/article/elections/voters-send-36-muslim-candidates-to-18th-up-assembly-2-more-than-earlier-122031100174_1.html
- https://www.bbc.com/news/world-asia-india-47141098
- https://www.thehindu.com/news/national/other-states/bjp-mp-pragya-thakur-refers-to-godse-as-patriot/article33568997.ece
- https://www.indiatoday.in/fact-check/story/fact-check-did-wayanad-cheer-up-for-rahul-gandhi-waving-pakistan-flags-1492508-2019-04-02
- https://en.wikipedia.org/wiki/2020_Jawaharlal_Nehru_University_attack
- https://indianexpress.com/article/india/mamidala-jagadesh-kumar-jawaharlal-nehru-university-vice-chancellor-6211988/
- https://theprint.in/india/smriti-irani-didnt-want-jagadesh-kumar-as-jnu-v-c-but-pranab-mukherjee-picked-him-anyway/345549/
- https://thewire.in/education/shantishree-dhulipudi-pandit-jnu-vc
- https://twitter.com/mamidala90/status/1440541258640814100 Partition Horrors Day
- https://indianexpress.com/article/india/iit-delhi-gets-50-research-proposals-to-study-benefits-of-cow-urine-under-svarop-programme-4780110/
- https://www.facebook.com/arvindkannaiyan/posts/pfbid0jrj1AnoZ9uFUxhTKCnicuyA6FLmCqn4LrdRtvFmYxEm4bhSTu6VtudYNAMndAqiel
- https://www.dmk.in/dmk-manifesto-english-2021.
- https://www.thehindu.com/elections/uttar-pradesh-assembly/the-labharthi-factor/article65215837.ece
- Modi Campaign in UP ‘Mahamilavati’ https://www.youtube.com/watch?v=Hh5F8hVfoz0
- IIT Kharagpur http://www.iitkgpsandhi.org/publication.html
- https://www.ndtv.com/education/iit-kharagpur-to-showcase-indias-cultural-history-through-scientific-perspective-in-book-fair-1807771
- https://theprint.in/india/iit-kgp-is-now-attempting-to-prove-that-ancient-india-inspired-pythagoras-theorem-msmes/824138/
- https://www.thehindu.com/specials/the-hindu-csds-lokniti-post-poll-survey/article61455949.ece
- BJP Preferred by Youth https://www.thehindu.com/elections/lok-sabha-2019/the-most-preferred-party-of-young-india/article27277454.ece
- https://www.thehindu.com/elections/lok-sabha-2019/43-newly-elected-lok-sabha-mps-have-criminal-record-adr/article27253649.ece
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.