Pages

Wednesday, August 11, 2021

உ.வே.சா. சனாதனியா?

 உ.வே.சா. பற்றி இன்று அடிக்கடி கேள்விப்படும் ஒரு சித்தரிப்பு அவர் 'சநாதனி' என்று. இன்றைய அரசியல் சூழலில் ஒருவரை, அதுவும் குறிப்பாக பிராமணரை, சநாதனி என்றழைப்பது, ஆங்லத்தில் சொல்வதென்றால், ஒரு "loaded term". உ.வே.சா சநாதனியா? ஆம் என்றால் எந்த அர்த்தத்தில். 

எழுத்தாளரும் வரலாற்றாய்வாளருமான ஸ்டாலின் ராஜாங்கத்தின் "பெயரழிந்த வரலாறு" பற்றி உரையாற்றிய பேராசிரியர் கல்யாணராமன் அவர் உரையினைடையே உ.வே.சா ஒரு சநாதனி என்றார். அவர் நிச்சயமாக அந்த சித்தரிப்பை உ.வே.சா பற்றி தி.க.வினர் பேசும் அர்த்தத்தில் அதை சொல்லவில்லை. ஆனால் அந்த சித்தரிப்பு சட்டென்று உறுத்தியது. அப்போதே ஒரு சிறு குறிப்பை எழுதினாலும் மனத்தில் எண்ணங்கள் சுழன்றதால் இப்பதிவு.



பெருமாள் முருகன் தொகுத்த "உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்" நூலில் பொ.வேல்சாமியின் இரண்டு கட்டுரைகளில் ஒன்றின் தலைப்பே, "ஒரு சனாதனியின் நவீனத்துவம்". கட்டுரையின் முதல் பத்தியே உ.வே.சா பெயர் காரணம் பற்றி. உ.வே.சா.வுக்கு பெற்றோர் இட்டப் பெயர் "வேங்கடராமன்" ஆனால் சைவரான மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு வைணவப் பெயரை அழைக்க விருப்பமில்லாததால் 'சாமிநாதன்' என்று உ.வே.சா.வுக்கு பெயரிட்டார் என்ற்று சொல்லி, மேலும் எழுதுகிறார் பொ.வேல்சாமி, "சூத்திரப் புலவர் இட்ட பெயரை ஆசாரமான பார்ப்பனக் குடும்பத்தினர் எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டனர். தங்களுடைய ஆசாரத்தைக் காட்டிலும் தங்கள் மகனின் தமிழ்க் கல்வி மேன்மையுடையது என்னும் கருத்தை அவர்கள் ஒத்துக் கொண்டது தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்".

அந்த வரிகளை உற்று நோக்குவோம். மீனாட்சிசுந்தரம் பிள்ளை சூத்திரர் என்று அறிமுகப் படுத்துகிறார். உ.வே.சா.வின் குடும்பம் "ஆசாரமான பார்ப்பனக் குடும்பம்" என்று அறிமுகப்படுத்தப்படுகிறது. மீனாட்சிசுந்தரம் பிள்ளையை சைவர் என்று அறிமுகப்படுத்தாமல் பொ.வேல்சாமி உ.வே.சா.வுக்கு எதிர் நிலையில் வைத்து "சூத்திரர்" என்று அறிமுகப் படுத்தப்படுகிறார். இதுவே விஷமத்தனமானது. மேலும் இந்த நிகழ்வில் உண்மையான ஆசாரவாதி மீனாட்சிசுந்தரம் தான். ஆனால் "சனாதனி" என்கிற பட்டம் உ.வே.சா.வுக்கு தான். 

வேல்சாமியின் கட்டுரையை மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் புதுமைப் பித்தனின் ஒரு மேற்கோளையும் சேர்த்துக் கொள்வோம். "(உ.வே.சாமிநாத)அய்யரவர்கள் தமிழ் இலக்கியத்தின் மெய்க்காப்பாளர் மட்டுமல்ல; பழைய சம்பிரதாயங்கள், பழைய மனப்பான்மைகள் இவற்றின் பிரதிநிதி" என்கிறார் புதுமைப் பித்தன். புதுமைப் பித்தன் உ.வே.சா ஏதோ உலகப் புரட்சி செய்திருக்க வேண்டும் என்று ஏனோ எதிர்ப்பார்த்திருக்கிறார். அதுவும் என்னமோ உ.வே.சா காலத்தில் மற்றவர்களெல்லாம் சமூக நீதி போராளிகளாகத் திகழ்ந்ததுப் போலவும் உ.வே.சா மாத்திரம் மரபுகளின் காவலனாக இருந்ததுப் போலவும் வருத்தப்படுகிறார். 

ஆசார சனாதனியான உ.வே.சா சமண காவியமான சீவக சிந்தாமணியைப் பதிப்பித்த வரலாற்றை வேல்சாமி விரிவாக, உ.வே.சா.வின் 'என் சரித்திரம்' நூலை ஆதாரமாகக் கொண்டு, எழுதுகிறார். அதனிடையே ஒரு செய்தியைச் சொல்கிறார், "திருவாடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த சுவாமிநாத தேசிகர் 'இலக்கணக் கொத்து' என்னும் நூலை இயற்றியுள்ளார். அதில் சைவ நூல்களைத் தவிர பிற நூல்களைப் பயில்வோர் தம் வாழ்நாளை வீணாகக் கழிப்பவர்கள் என்று கூறுகிறார்". கவனிக்கவும் அவ்வரிகளில் எங்கும் சுவாமிநாத தேசிகர் ஆசாரவாதி என்றோ சனாதனி என்றோ குறிக்கப்படுவதில்லை. 

திராவிட இயக்கச் சொல்லாடலின் தாக்கம் "சனாதனி", "ஆசாரவாதி" ஆகியச் சொற்களை பிராமணர்களை மட்டுமே குறித்துச் சொல்லப்படுவனவாக மாற்றியதன் விளைவாகக் கூட பொ.வேல்சாமியும் அப்படி தேசிகரை சனாதனி என்றழைக்காததற்கு காரணமாக இருக்கலாம். வேல்சாமி திராவிட இயக்கத்தை ஏற்றவர் என்பது பொருளல்ல. திராவிட இயக்கதை முழு மூச்சாக எதிர்த்த ஜெயகாந்தனின் மேடைப் பேச்சுகள் திராவிட இயக்க ஸ்டைலிலேயே இருக்கும். 

சீவகசிந்தாமணி பதிப்பின் போது "சம்வசரணம்" என்கிற சொற்றொடரின் பொருள் அறிய ஒரு சமண அம்மையார் உதவுகிறார், அதுவும் ஒரு மறைவில் நின்றுக் கொண்டு உரையாடலின் மூலம். உ.வே.சா.வின் சமணம் பற்றிய ஞானத்தைக் கேட்டு வியந்து அப்பெண்மணி, "இவர் பவ்யஜீவன் போல் இருக்கிறது" என்றார். புலவர்களோடு பழகும் உ.வே.சா அச்சாதாரணப் பெண்ணின் பாராட்டை பெருமையாகச் சொல்வதை வேல்சாமி எடுத்துக் காட்டுகிறார். மேலும் சொற்களுக்கான பொருள் அறிய பொதுச் சமூகத்தில் சாதாரணர்களைத் தொடர்ந்து உ.வே.சா நாடியிருப்பதையும் சொல்கிறார் வேல்சாமி. புலமை என்பது சமூகத்தில் எங்கும் இருக்கலாம் என்று உ.வே.சா நினைத்தார் எனக் கொள்ளலாம் என்கிறார் வேல்சாமி. 

அவ்வளவையும் சொல்லிவிட்டு கட்டுரையின் முடிவில் வேல்சாமி எழுதுகிறார், "சனாதனத்தில் ஊறிய சமூகத்தில் பிறந்து, பிற்போக்குக் கலாச்சாரமாகிய ஆசார அனுஷ்டானங்களையெ தன்னுடைய அன்றாட வாழ்வாகக் கொண்ட வருணாசிரமவாதி, செம்மையான தமிழ்ப் புலமையின் ஊடாக நவீன உலகத்தைப் புரிந்துக் கொண்டு அவர் காலத்தில் வாழ்ந்த முற்போக்காளர்க்கள் என்று கருதப்பட்ட பல தமிழ்ப் புலவர்களை விடவும் பல தளங்களில் மேம்பட்டுத் தம்முடைய துறையில் சிகரத்தைத் தொட முடியும் என நீரூபித்தவர் உ.வே.சாமிநாதையர்".

"சனாதனத்தில் ஊறிய சமூகத்தில் பிறந்து", "பிற்போக்கு கலாச்சாரமாகிய", "ஆசார அனுஷ்டானங்கள்", அப்பாடி மூச்சுத் திணறுகிறது. போதாக்குறைக்கு, "வருணாசிரமவாதி". ஒரு நிமிடம் இங்கு நின்று நிதானிப்போம். இதையெல்லாம் நாம் ஒரு பிராமணருக்கு மட்டும் தான் சொல்ல முடியுமா? மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர் முதலாக பலருக்கும் நாம் அவற்றை எளிதாகச் சொல்லலம். ஆறுமக நாவலரின் சாதியப் பார்வை பிரசித்தம். ஆனால் இது வரை அவரை யாரும் "சனாதனி", "வருணாசிரமவாதி" என்றழைத்துப் பார்த்ததில்லை. அந்த கொடுப்பினை உ.வே.சா.வுக்கு தான். 

வேல்சாமி மிகக் கவனமாக தொழில் முறையில் ஆசாரங்களை மீறிய உ.வே.சா சொந்த வாழ்வில் அதை மீறவில்லை என்று ஒரு சித்திரம் வரைந்து தனி வாழ்வில் (private life) ஒருவர் ஆசாரவாதியாக இருப்பினும் தொழில் முறை புலமையில் வேறு மாதிரி இருக்கலாம் என்று முடிக்கிறார். அதையும் பார்ப்போம்.

அந்த பவ்ய ஜீவன் நிகழ்வையே எடுத்துக் கொள்வோம். அது வெறும் தனி வாழ்வில் ஆசாரவாதியாகவும் புலமைத் தேடலில் நவீனத்துவராகவும் இருக்கும் ஒருவர் செய்யும் செயலா? உ.வே.சா என்ன அந்நியன் அம்பியா? இல்லை ஆசாரம் என்ன வீட்டில் மட்டும் போட்டுக் கொள்ளும் சட்டையா? ஆசாரம் என்பது என்ன? சந்தியாவந்தனம் செய்வதா? பிள்ளைகளுக்கு தன் சமூகத்தில் சம்பந்தம் பார்ப்பதா? பூணூல் தரிப்பதா? அதெல்லாமும் தான் ஆனால் அது மட்டுமல்ல. அந்த சமணப் பெண்மணியை தன் புலமைத் தேடலினால் அனுகினார் என்றே வைத்துக் கொள்வோம் அதுவும் அவர் அனுஷ்டித்த ஆசாரத்தின் தளர்வே. இன்னொரு நிகழ்வைப் பார்ப்போம்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றறியப்பட்ட சாமுவேல் வேதநாயகம் பிள்ளை திருவாடுதுறை மடத்தின் பேராபிமானம் கொண்டு பாடல்கள் எழுதியதன் மூலம் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகரின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானார். அதன் வழியே உ.வே.சா.வின் மதிப்பையும் வேதநாயகம் பிள்ளை பெற்றிருந்தார். உ.வே.சா கிறிஸ்தவரான வேதநாயகம் பிள்ளை விட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். 

உ.வே.சா.வின் வாழ்வில் உதவிப் புரிந்தோரும், சேர்ந்து பணியாற்றியப் பலரும் பல்வேறு சமூகத்தினர். முதலியார், பிள்ளை, சமணர்கள், ஆங்கிலேயர், கிறிஸ்தவர். தனக்குப் பணம் உதவிச் செய்தவர்கள் பட்டியலை உ.வே.சா வெளியிட்டிருக்கிறார் சென்னையை தவிர அநேக நகரங்களில் அவருக்கு உதவியர்கள் அநேகர் பிராமணரல்லாதோர். அப்படியென்றால் அத்தனைப் பேரிடமும் அவருக்கு நல்லுறவு இருந்தது. இங்கு ஒரு கேள்வி எழலாம், 'அவர்கள் வீடுகளில் உணவு உண்டாரா?' என. தெரியாது என்பதே பதில் (அல்லது யாரேனும் தகவலறிந்தால் சொல்லலாம்). அவர் உணவு உண்ணவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அவர் காலத்தில் வேறு சமூகத்தினர் பலரும் வெளியிடங்களில் உணவு உண்ணாதவர்கள் தாம். 

கி.வா.ஜ எழுதிய "என் ஆசிரியப்ப்பிரான்" நூலில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி. இராமநாதபுரம் ஜமீனை சேர்ந்த கமுதி என்கிற கிராமத்தில் நாடார்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்குள் நுழைந்தது கலவரத்தை உண்டாக்கியது. தனக்கு நாடார்கள் நண்பர்களாக இருப்பினும் மரபு மீறல் கூடாதென்று நாடார்கள் கோயில் நுழைவிற்கு எதிராக இராமநாதபுரம் அரசர் வழக்குத் தொடர்ந்தார். அவ்வழக்கில் தனக்கு சாதகமாக சாட்சியளிக்க உ.வே.சா.வை அரசர் அழைத்தார். உ.வே.சா "நாடார்களைப் பற்றி இழிவாகக் கூறாமல் அவர்களில் எத்தனையோ பக்தர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி, ஆனாலும் மரபு பிறழக்கூடாதென்று வற்புறித்தினார்" என்றும் அந்த சாட்சியமே வழக்கில் முக்கியமானதென்றும் கி.வா.ஜ எழுதுகிறார். இவ்விடத்தில் "ஆஹா சாதியவாதி உ.வே.சா" என்று நாம் இன்று கூப்பாடு போட்டால் அதை முக்கியமாக இராமநாதபுரம் அரசரை நோக்கித் தான் செய்ய வேண்டும். 

தான் கம்பராமாயணம் படித்த போது அதில் சந்தேகங்களை கேட்டறிய உ.வே.சா.வும் சக மாணவர்களும் திரிசிபுரம் கோவிந்த பிள்ளை என்பவரிடம் பாடம் கற்கலாம் என்று ஆசைப்பட்டனர். கோவிந்தப் பிள்ளை கம்ப ராமாயணத்தை முழுதுமாக அச்சிட்டவர் என்றும் "பிரபந்த வியாக்கியானங்களிலும் வைஷ்ணவ சம்பிரதாய நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி" இருந்ததென்றும் உ.வே.சா சொல்கிறார். கோவிந்த பிள்ளை அப்போது கபிஸ்தலத்தில் "ஶ்ரீமான் துரைசாமி மூப்பனார்" அவர்களுக்கு தமிழ் பயிற்றுவித்து கம்பராமாயணமும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாராம். திருவாடுதுறை வந்த கோவிந்த பிள்ளை சில சங்கடங்களை சந்தித்தார். மடத்து மாணவர்களும் அவரிடம் கொஞ்சம் முறுக்கு காட்டினார்கள் என்று சொல்லும் உ.வே.சா, "வைஷ்ணவராகிய அவருக்கு சைவ சமூகத்தில் பழகுவது சிறிது சிரமமாகவே இருந்தது" என்கிறார். இது தான் அக்காலத்திய நிலை. ஏதோ உ.வே.சா.வும் பிராமணர்கள் மட்டுமே சனாதனிகள் என்கிற பிம்பம் இப்போது நிலவுவது உண்மைக்குப் புறம்பானது. அந்த துரைசாமி மூப்பனார் "ஶ்ரீகருடபுராணவசனம்" என்ற நூலை வெளியிட்டியிருக்கிறார். 

உ.வே.சா.வின் 'என் சரித்திரம்' வாயிலாக நமக்கு கிடைக்கும் இன்னொரு முக்கியப் புரிதல் கல்வியறிவு பிராமண சமூகத்திடம் மட்டும் இருந்தது என்கிற திராவிட இயக்க பிரச்சாரம் பொய் என்பதே அது. பல சமூகத்தினரிடமும் கல்வியறிவும், செல்வமும் இருந்தது. அதற்காக கல்வியறிவில் தடைகள் இல்லை என்பதல்ல பொருள்.

"பிராமணர்களுக்கு மட்டுமே உ.வே.சா பாடம் சொல்லிக் கொடுத்தார்" என்று ஒரு அபவாதம் உலவுகிறது. இது அப்பட்டமானப் பொய். "மடத்துக்கு வருவோர்" என்ற தலைப்பிட்டக் கட்டுரையில் தன்னிடம் பயின்ற மாணவர்கள் பெயர்களை குறிப்பிடுகிறார் உ.வே.சா:

"என்னிடம் அக்காலத்தில் படித்த தம்பிரான்கள் சுந்தரலிங்க தம்பிரான், விசுவலிங்கத் தம்பிரான், சொக்கலிங்கத் தம்பிரான், பொன்னம்பலத் தம்பிரான், வானம்பாடி சுப்பிரமணிய தம்பிரான், சிவக்கொழுந்துத் தம்பிரான் முதலியோர்.

வெள்ளை வேஷ்டிக்காரர்களுள் பேரளம் இராமகிருஷ்ண பிள்ளை, சிவகிரிச் சண்முகத் தேவர்,                            ஏம்பல் அருணாசலப் புலவர், சந்திரசேகரம் பிள்ளை, ஏழாயிரம் பண்ணை தாமோதரம் பிள்ளை, கோயிலூர் பரதேசி ஒருவர், நெளிவண்ணம் சாமுப் பிள்ளை, திருவாடுதுறை பொன்னுசாமி செட்டியார்,திருவாடுதுறை சன்முகம் பிள்ளை என்போற் முக்கியமானவர்கள்"

அதே கட்டுரையில் காவடிச் சிந்து இயற்றிய அண்ணாமலை ரெட்டியார் தன்னிடம் பாடம் பயின்றவர் என்றும் இலக்கணத்தை விட செய்யுள் இயற்றுவதில் நாட்டமுடையவர் என்றும் சொல்கிறார் உ.வே.சா. 

வெகு எளிதாக "சனாதனி" என்கிற வார்த்தையை வீசி விடுகிறார்கள். சி.வை.தாமோதரம் பிள்ளை பிறப்பால் கிறிஸ்தவர் ஆனால் அதன் பின் சைவ மதத்தை தழுவியதோடு 'விவிலிய விரோதம்' என்கிற கிறிஸ்தவ எதிர்ப்பு நூலையும் எழுதினார். அதோடு "சைவ மகத்துவம்" என்றொரு நூலையும் வெளியிட்டிருக்கிறார். இப்போது சி.வை.தா.வை நாம் என்னவென்று அழைப்பது? 

சமணம், பௌத்தம் ஆகிய மதங்களை மையமாகக் கொண்ட இலக்கியங்களைப் பதிப்பித்தாலும் அதனால் எவ்வகையிலும் தன் பிறப்பு சார்ந்த மத நம்பிக்கைகளை உ.வே.சா மாற்றிக் கொள்ளவில்லை என்று பெருமாள் முருகன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதாக நினைவு. உ.வே.சா.வே அது குறித்து எழுதியிருக்கிறார். இன்று பௌத்தம், இந்து மதம் பற்றி அநேக மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள் அவர்களுள் பலர் கிறிஸ்தவர்கள் ஆனால் யாரும் பௌத்தத்துக்கோ, இந்து மதத்துக்கோ மாறியதில்லை. அப்படி மாற வேண்டுமென்றும் யாரும் எதிர்ப்பார்ப்பதில்லை. ஏனோ உ.வே.சா. மீது மட்டும் அத்தகைய எதிர்ப்பார்ப்பை ஏற்றுகிறோம். 

காந்தி தன்னை சனாதனி என்றே அழைத்துக் கொண்டார் ஆனால் அவர் தன்னை சனாதனி என்று குறிப்பிட்டதற்கும் இன்று தீவிர மத வெறுப்புகள் உள்ளடக்கிய இந்துதுவர்கள் தங்களை சனாதனிகள் என்று அழைத்துக் கொள்வதற்கும் சம்பந்தமேயில்லை. உ.வே.சா.வை சனாதனி என்றழைப்பது சரியல்ல. வேல்சாமி அதை அறிவு நேர்மையில்லாமலே செய்கிறார். வேறு பலர் அதே காரணத்துக்காகவோ அறியாமலோ அதை செய்கிறார்கள். 

பதிப்பு வரலாற்றில் உ.வே.சா ஒரு துருவ நட்சத்திரம். ஆமாம் அவருக்கு முன்னோடிகள் உண்டு. ஐசக் நியூட்டன் தன் முன்னோடிகளை விட தான் அதிக தூரம் பார்க்க முடிந்தது ஏனென்றால் தான் அவர்கள் தோள் மீது நின்றதால் என்றார். அது உ.வே.சா.வுக்கும் பொருந்தும். முன்னோடிகள் இருந்தார்கள் என்பதால் ஐசக் நியூட்டனின் இடம் தவறா? இல்லை. விஞ்ஞானத்தில் நியூட்டன் ஒரு துருவ நட்சத்திரம். அப்படித் தான் உ.வே.சா.வும். 

 

நூல்கள்:

1. 'என் சரித்திரம்' - செம்பதிப்பு. ஆசிரியர் ப.சரவணன்

2. உ.வே.சா: பன்முக ஆளுமையின் பேருருவம் -- தொகுப்பு பெருமாள் முருகன்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.