Pages

Thursday, August 19, 2021

ஆப்கான் போர் நீண்டது அமெரிக்க ஆயுத விற்பனைக்கா?

 ஜனவரி 17 1961-இல் தன் பதவிக்காலம் முடிய சில நாட்கள் இருந்த போது ஜனாதிபதி ட்வைட் ஐசன்ஹோவர் ஓர் உரையில்ராணுவ-தனியார் நிறூவன கூட்டுக்கு” (Military-Industrial Complex) எதிராக கவனமாக இருக்க வேண்டுமென்றார். அது முதல் அச்சொற்றொடர் இடது சாரியினருக்கு சுவாசம் போல் ஆனது. ஐசன்ஹோவர் வலது சாரி :-). 

நண்பர் கே.வீ ஆப்கான் போர் பற்றி ஐந்து பதிவுகள் எழுதினார் அதன் கடைசிப் பகுதியில் (https://www.facebook.com/kay.vee.716970/posts/381022000249749 ) அப்போர் 20 வருடம் நீடித்ததற்கு இந்த ஆயுத தயாரிப்பு நிறுவனங்களே பெரும் காரணம் என்றார். அங்கே மறுமொழியிட்ட பலரும் அமோதித்தனர், சிலர்குத்துங்க எஜமான், இந்த அமெரிக்காவே இப்படித் தான், இந்த ஆயுத கம்பனிகளே இரண்டு தரப்புக்கும் சப்ளை செய்தார்கள்என்று கமெண்டுகள். கொஞ்சம் உண்மை என்ன என்று பார்ப்போமா?

ஆப்கான் போரினால் நிகழ்ந்த இழப்புகள், ஏமாற்றங்கள், நிறைவேறா நோக்கங்கள் இன்று நிகழ்ந்திருக்கும் வெளியேற்றத்தால் உண்டாகும் பின் விளைவுகள் இக்கட்டுரையின் எல்லைக்கப்பால். இக்கட்டுரை போர் நீண்டதற்கு ஆயுத நிறுவனங்கள் காரணமா என்பது மட்டுமே பேசுப் பொருள். 




தீவிர இடது சாரி இணைய தளம் “Intercept”இந்த ஆப்கான் வெளியேற்றத்தைத் தொடர்ந்து இப்போரில் பயன் பெற்றவர்கள் ஒரேயொரு தரப்பு தான், அது அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் என்றது. போரின் ஆரம்பத்தில் அந்த நிறுவனங்களில் $10,000 போட்டிருந்தல் அதுவே இன்று $97,795 மதிப்புப் பெறும் ஆனால் அதே பணத்தை S&P 500-இல் போட்டிருந்தால் $61,612 தான் மதிப்பு பெறும் என்றார்கள். கொசுறு செய்தி, அதே $10,000-த்தை ஆப்பிளில் 2001-இல் முதலீடு செய்திருந்தால் 2012-இல் அது $667,159 மதிப்புப் பெறும் என்று ஒரு கணக்குச் சொல்கிறது. இது மாதிரி பல கணக்குகள் இருக்கின்றன.




ஆச்சர்யமாக "Intercept" கட்டுரைக்கான மறுப்பு "Slate" என்கிற இடது சாரி தளத்தில் ஃபிரெட் காப்லன் என்பவரால் எழுதப்பட்டது. காப்லன் முக்கிய அமெரிக்க ஆயுத நிறுவனங்களான போயிங், லாக்ஹீட் மார்ட்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ரோப் கிரம்மன் ஆகியவற்றின் தளவாட விற்பனைகளை சுட்டிக் காட்டி, அவை பெரும்பாலும் மிகப் பெரிய விமானங்கள் அல்லது மிக நுட்பமான விலையுயர்ந்த கருவிகள் போன்றவையே, அவற்றுக்கு ஆப்கான் போரில் பெரும் பங்கு எதுவுமில்லை என்கிறார். மேலும் ஆப்கான் போரே நடக்கவில்லை என்றாலும் இந்த நிறுவனங்கள் கிட்டத் தட்ட இதே லாபத்தை அடைந்திருக்கும் என்கிறார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இந்தியா ரபேல் விமானத்தை காஷ்மீர் தீவிரவாதத்துக்காகவா வாங்கியது? பாகிஸ்தானை உத்தேசித்து தான் இந்தியா வாங்கியது. போபர்ஸ் பீரங்கியும் அப்படி வாங்கியது தான். 

தலிபான் வைத்த்திருக்கும் ஆயுதங்கள் பெரும்பாலும் தோற்று ஓடிய ஆப்கான் படையினரிடம் இருந்து கைப்பற்றியதும் கள்ள மார்க்கெட்டில் வாங்கியதும் தான். அமெரிக்க ஆயுத நிறுவனங்கள் நினைத்தப் படி ஆயுதங்களை விற்க முடியாது. ஆயுத நிறுவனங்கள் யாருக்கு விற்கலாம், விற்க கூடாதென்பதற்கெல்லாம் அநேக சட்டங்கள் இருக்கின்றன. உடனே "ஆஹா அதெல்லாம் இடைத் தரகர் மூலம் நடக்கும்" என்று சொல்வதெல்லாம் தீவிர இடதும்/வலதும் சமைக்கிற கனவு சூழ்ச்சிகள், ஆதாரமில்லை. விதிகளை மீறி ஆயுதம் விற்றால் இந்த கம்ப்பெனிகளுக்கு கடும் தண்டனைகள் உண்டு. பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கே அவர்களிடையே புழங்கும் நிதிக்கு நதிமூலம், ரிஷிமூலம் தெரியாமல் பணம் பரிவர்த்தனை செய்து அது தீவிரவாதிகளுக்கு உதவியாக இருந்தால் அந்நிறுவனங்கள் மிகக் கடுமையான சட்டங்கள் பாயும். 

மேலே சொன்னதெல்லாம் பொதுப்ப்படையான கருத்து தான். ஆயுத நிறுவனங்கள் மற்ற எல்லா அமெரிக்க நிறுவனங்களையும் போல் லாபியிஸ்டுகள் வைத்திருப்பார்கள் அதன் மூலம் தங்களுக்கு சாதகமான சட்டங்கள் உருவாக்க செயல்படுவார்கள். அதெல்லாம் இங்கு சாதாரணம். ஆனால் அதற்காக அரசையே கட்டுபடுத்துகிறார்கள் என்பதெல்லாம் கற்பனை. அமெரிக்க ஆயுத நிறுவனங்களா பின் லேடனை அமெரிக்காவை தாக்கு எங்களுக்கு வியாபாரம் நடக்கும் என்று ஊக்குவித்தார்கள்? இல்லையே? 9/11 சராசரி அமெரிக்கர் எல்லோருமே போருக்கு ஆதரவாகவே இருந்தனர். அன்று புத்தரே அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் போருக்கு போயிருப்பார். 

அமெரிக்காவின் தற்காப்பு பொருளாதார ஒதுக்கீட்டில் கணிசமான பகுதி சம்பளம், பயிற்சி, மருத்துவம் ஆகியவற்றுக்கு தான். 




அமெரிக்கா நிச்சயமாக உலக நாடுகள் பலவற்றோடு ஒப்பிட்டால் பல நூறு பில்லியன் டாலர் அதிகமாக ராணுவத்துக்கு செலவழிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் செலவை அமெரிக்க வருடாந்திர மொத்த உற்பத்தியோடு ஒப்பிட்டால் அது அவ்வளவு பெரிதல்ல என்று புரியும். 1980-களில் பனிப்போரின் உச்சத்தில் மொத்த பொருளாதாரத்தில் 7% இருந்த ராணுவ ஒதுக்கீடு இன்று 4% தான். இன்று அது கிட்டத்தட்ட $700 பில்லியன் டாலர். 



ஆயுத விற்பனையில் அமெரிக்காவின் பங்கு, உலக சந்தையில், 2016-2020 ஆண்டுகளுக்கு, 37%. அதே காலக் கட்டத்தில் ருஷ்யாவின் பங்கு 20%, பிரான்ஸ் 8.2%, ஜெர்மனி 5%, சீனா, 5%. இதில் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் சீனாவுக்கு தளவாடம் விற்பது கூட அதிக கவலைத் தருவதல்ல மாறாக நுட்பமான தகவல் கருவிகள், சாப்ட்வேர் போன்றவற்றை விற்பதே பிரச்சனை. இதில் எங்கே தாலிபானுக்கும், அல் கொய்தாவுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் விற்பது. 



2005-இல் ஐரோப்பாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட ஜார்ஜ் புஷ் ஐரோப்பிய அரசுகள் தங்கள் ராணுவத்துகாக செலவு செய்வதை விட சீனாவுக்கு விற்பதில் மும்முரம் காட்டுவதை கண்டித்தார் என்றது எகானமிஸ்டு பத்திரிக்கை. (https://www.economist.com/leaders/2005/02/24/merci-yall ). நேட்டோ ஒப்பந்தப் படி ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் பாதுகாப்புக்கென்று வருடாந்திர மொத்த பொருளாதாரத்தில் ஒரு விகிதத்தை செலவு செய்ய வேண்டும் ஆனால் பிரான்ஸும், ஜெர்மனியும் அதை செய்வதில்லை மாறாக அமெரிக்கா செலவு செய்யும் என்று வேடிக்கை பார்க்கிறார்கள் என்று டிரம்ப் குற்றம் சாட்டியது நியாயமே. அமெரிக்க ராணுவ செலவு என்பது அமெரிக்காவுக்கானது மட்டுமல்ல.

அமெரிக்க நிதி ஒதுக்கீட்டில் ராணுவ ஒதுக்கீடு எவ்வளவு? மக்கள் நலன் சார்ந்த ஒதுக்கீடு எவ்வளவு. இதோ 2020-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு. (https://www.cbo.gov/publication/57170 )




ராணுவ ஒதுக்கீடு $714 பில்லியன், வயதானோருக்கான மருத்துவக் காப்பீடு $769 பில்லியன், வசதியற்றோருக்கான மருத்துவக் காப்பீடு $458 பில்லியன், கோவிட்டால் பணி நீக்கம் செய்யாமிலிருக்க நிறுவனங்களுக்கு அளித்தது $526 பில்லியன், பென்ஷன் ஒதுக்கீடு $1.1 டிரில்லியன். என்னமோ அமெரிக்காவே ஆயுத கம்பெனிகளுக்கு தாரை வார்த்து எல்லோரும் பசி, பட்டினியால் வாடுவது போல் யாரும் நினைக்க வேண்டாம். நிச்சயமாக போர் செலவினங்கள் வேறு செலவுகளுக்கு உதவியிருக்கலாம். அது வேறு விவாதம். ஆப்கான் போர் அமெரிக்கா மீது திணிக்கப்பட்ட போர் தான். 

அமெரிக்கா போரிடுகிறது என்று அங்கலாய்ப்பவர்கள் பல விஷயங்களை மறந்து விடுகிறார்கள். சீனாவும், ரஷ்யாவும் என்ன பூப்பரித்துக் கொண்டிருக்கிறார்களா? சீனா ஆப்பிரிக்காவை கபளீகரம் செய்கிறது, தெற்காசிய கடல் பகுதிகளில் கோலோச்ச நினைக்கிறது, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கிறது. ரஷ்யா உக்ரைனை சுவாஹா செய்கிறது, ஜார்ஜியாவை அடக்குகிறது, சிரியாவில் மிகப் பெரிய படு பாதகங்களை பஷார் அசாத்துடன் கைக்கோர்த்து செய்கிறது. சிரியாவில் விஷ வாயு குண்டு பிரயோகித்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றார் ஒபாமா அப்புறம் கை கழுவியது தான் மிச்சம். ஈரான் அனுகுண்டு தயாரிக்கிறது அதை அமெரிக்கா தடுக்க முயன்றது, முயல்கிறது. அது இந்தியாவுக்கு பயன் தான். அதற்கான பணத்தில் என் வரிப்பணமும் உண்டு. 

அமெரிக்க பரிசுத்த நாடு அல்ல. உலகமும் பரிசுத்தமல்ல. ஆனால் நிச்சயம் இன்று அமெரிக்க தலைமையின்றி உலகின் சுதந்திர பகுதிகள் பாதுகாப்பாக இருக்க முடியாது. America, for good reason, remains the leader of the free world. 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.