Sunday, August 26, 2018

மனுஷ்யபுத்திரனும் இலக்கியவாதிகளின் அரசியலும் மதம்/சாதிய பற்றும்: பாரதி, ஜெயகாந்தன் முதல் கண்மணி குணசேகரன் வரை

மனுஷ்யபுத்திரன் மீது வீசப்படும் குற்றச்சாட்டுகள் பலவும் அதை விட அதிக நியாயங்களோடு பாரதி பற்றிச் சொல்லி விட முடியும் என்று இரண்டு வரியை பேஸ்புக்கில் எழுதவும் வந்த பதில்கள் சுவாரசியமானவை. "நீயும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து விட்டாயா", "பாரதியை மனுஷோடு ஒப்பிடுவதா" என்றெல்லாம் ஒரு தரப்பும், "அஹா இதைத் தானே நாங்கள் இத்தனை நாள் சொன்னோம்" என்று இன்னொரு தரப்பும், "சரி என்ன தான் சொல்ல வருகிறாய்" என்று மூன்றாம் தரப்பும் சொன்னார்கள். எல்லோருக்குமான விரிவான பதில் இது.



ஜெயமோகன் இந்தச் சர்ச்சை குறித்து எழுதியதோடு பெரிதும் உடன்படுகிறேன் அவரின் சில நிபந்தனைகள் முழுவதுமாக ஏற்க முடியவில்லை. எனக்கு எக்காலத்திலும் மனுஷ்ய புத்திரன் பாரதியாக முடியாது. அதற்கான சுருக்கமான விளக்கம் கட்டுரையின் முடிவில். இதை ஆரம்பத்திலேயே சொல்வதற்கான காரணம் பலர் சில பத்திகளைத் தாண்டி படிக்காமல் போகலாம் என்ற நம்பிக்கையால்.

கருத்துரிமை: 


முதலில் கருத்துரிமை பற்றி ஒரு விளக்கம். கருத்துரிமை என்பது சட்டத்தில் எல்லோருக்குமானது. படைப்பாளிக்கென்று சட்டத்தில் எந்தத் தனி விசேஷ சலுகையும் கிடையாது. அப்படிச் செய்யவும் கூடாது. ஆதலால் நாம் முதலில் கை விட வேண்டியது "படைப்பாளிக்கு அதைச் சொல்லும் உரிமை இருக்கிறது" என்பது. படைப்புரிமை என்பது படைப்பில் சலுகைகளைக் கொடுப்பது. கஸண்ட்ஸாகிசுக்கு இயேசுவும் மக்தலீனாவும் உறவுக் கொண்டார்கள் என்று படைப்பின் ஊடாக எழுதும் சுதந்திரம் இருக்கிறது. சாமானியன் அப்படிச் சொல்லலாமா என்றால் சாமான்யனும் அப்படிச் சொல்லலாம் என்பதே சரி. சாமான்யனோ படைப்பாளியோ வெறுப்பரசியலால் உந்தப்பட்டு அப்படிச் சொல்வார்களானால் முகச் சுளிப்போடு விலகிப் போனால் போதும் அதைத் தடுக்கத் தேவையில்லை என்று நினைப்பவர்கள் சிலர் அதைச் சட்டத்தின் துணைக் கொண்டு தடுக்க நினைப்பவர்கள் சிலர். இவ்விருவரிடையே ஊசலாடுவது தான் கருத்துரிமை.

மேலும், கருத்திரிமை என்பது சகலருக்கும் பிடித்தமானவர் யாரையும் புண்படுத்தாமல் சொல்வதைக் காப்பதற்கல்ல. கருத்துரிமை என்பது நமக்குப் பிடிக்காதவர்கள் நமக்குப் பிடிக்காததைப் பேசும் போது அது அவர்களின் உரிமை என்பது தான்.

எல்லாச் சமூகத்திலும் ஏதோ ஒரு எல்லைக்கப்பால் கருத்துரிமை வரயறுக்கப் படுகிறது. அமெரிக்காவிலும் நீங்கள் விமானத்தில் உட்கார்ந்து கொண்டு "வெடி குண்டு இருக்கிறது" என்று சொன்னால் கைதுச் செய்யப்படலாம். உடனே, பார்த்தாயா எல்லை இருக்கிறதே என்று குதூகலித்து இன்று சனிக்கிழமை என்று சொன்னாலே கைதுச் செய்தால் என்ன என்பது வாதம் அல்ல விதண்டாவாதம். கருத்துரிமையின் எல்லைகளின் விரிவும் இறுக்கமும் ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பு. உங்கள் சமூகம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது உங்கள் கையில்.

மனுஷ் சார்லி ஹெப்டோ விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னார் என்கிறார்கள். (இது ஜெயமோகன் கட்டுரையில் தொடப்பட்டதா என்று தெரியவில்லை). அதாவது அப்போது இஸ்லாமியரின் மரபை அந்தப் பத்திரிக்கை மீறி விட்டதாகவும் அது ஏற்புடையதல்ல என்றும் அவர் சொன்னதாகச் சொல்கிறார்கள். அவர் அதை இன்று மறுத்திருக்கிறார் விகடனுக்கு அளித்த பேட்டியில். Even if he was a hypocrite his hypocrisy can be pointed out but not used against him to deny him his freedom.

மனுஷ்-பாரதி ஒப்பீடு: 


மனுஷ் பற்றி வைக்கப்பட்ட குற்றாச்சாட்டுகள் ஒரு தரப்பு அவர் கவிதைகளில் அவரின் குல்லா தெரிகிறது, அவரின் கட்சி கரை வேட்டித் தெரிகிறது என்பது. அவர் இந்து மதத்தை விமர்சிக்கக் கூட இல்லை அதன் இயல்பின் வரையறைக்குள் நின்றே ஒரு கவிதைப் புனைந்தார். அது தங்கள் மதத்தின் இயல்பு என்று பெருமையோடு சொல்லிக் கொண்டே அதிலும் அவர் குல்லாவை பார்த்தவர்கள் அநேகம். அப்புறம் அவர் சார்ந்திருக்கும் கட்சி. திமுக என்பது வெகுஜன அரசியல் செய்யும் பிரதான கட்சி என்பதோடு அதற்கென்று இந்துக்கள் மத்தியில், குறிப்பாகப் பிராமணர்கள் மத்தியில் ஒரு பிம்பம் இருக்கிறது. அந்தப் பிம்பம் திமுகவும் மு.க.வும் சேர்ந்து, ஜெயமோகன் சொல்வதைப் போல், 50 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பியது தான். அந்தப் பிம்பத்துக்குத் திமுகத் தரப்பிலும் நியாயங்கள் உண்டு அதன் எதிர் தரப்பிலும் நியாயங்களுண்டு. அந்தப் பிம்பம் குறித்து இரு தரப்பின் மதிப்பீடுகளிலும் நியாயம் இருக்கிறது. கொஞ்சமேனும்.

இந்தப் புள்ளியில் தான் எனக்குப் பாரதி ஒப்பீடு ஆரம்பித்தது. பாரதியின் பாடல்களில் பூணூலை தேடக்கூட வேண்டாம் சும்மா மேலோட்டமாகப் பார்த்தாலே அவன் பாடல்களிலும் கட்டுரைகளிலும் அது கிடைக்கும். ஜெயகாந்தன் மீனாட்சிபுரத்தில் நடந்த மத மாற்றத்தை கருவாக வைத்து எழுதிய 'ஈஸ்வர் அல்லா தேரே நாம்' கதையில் ஒவ்வொரு அத்தியாத்தின் ஆரம்பித்திலும் ஒரு மேற்கோள் இருக்கும் அப்படி அவர் சுட்டிய ஒரு பாரதி மேற்கோள்:

"மேலும், இந்தியாவிலுள்ள முஸல்மான்களில் பலர் ஹிந்து சந்ததியார். அவர்களுடைய நெஞ்சில் ஹிந்து ரத்தம் புடைக்கிறது...ஹிந்து தேசத்தில் பிறந்தவன் ஹிந்து. இந்தியா, இந்து, ஹிந்து, மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள், இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்ல, ஹிந்து ஜாதி" -- 'மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் "ஹிந்து-முஸ்லிம் ஸமரஸம்" என்ற கட்டுரையிலிருந்து' (இங்கே ஜெயகாந்தனின் மேற்கோள் அப்படியே இருக்கிறது. மேலும் அவர் பாறதியை குறிப்பிட்ட விதத்தையும் அப்படியே சொன்னதால் அதுவும் மேற்கோள் குறிக்குள்ளே)

பாரதியின் பாடல்களில் அவன் மீண்டும் மீண்டும் முன் வைத்தது 'ஆரியம்' தானே? நாம் அவன் முன் வைத்த ஆரியமும் இன்று இந்துத்துவத்துக்குப் பதாகைத் தூக்கும் தமிழ் பிராமணர்களின் ஆரியமும் வேறு என்று வாதிடலாம் ஆனால் அவன் முன் வைத்த கருத்தியல் பிராமணர்களுக்கு இன்று ஆயுதமாகியிருக்கிறது என்பதை மறுக்க முடியாதே.

பாரதி அக்காலத்தில் பிராமணர்களும் மேட்டுக் குடியினரும் கோலோச்சிய காங்கிரஸ் கட்சியில் தீவிர செயல்பாட்டாளன். பாரதி மகாகவியா என்ற விவாதம் இன்றும் முன்னெடுக்கப்படுவது அக்காலத்தில் அவன் எழுதிய 'கவிதைகள்' எளிய மேடைப் பாடல்கள், பிரச்சாரத் தொனிக் கொண்டவை ஏனென்றால் அவன் முதலில் களப் போராளி, பத்திரிக்கையாளன், பத்தி எழுத்தாளன் அவற்றுக்குப் பின் தான் கவிஞன் என்ற பார்வையால் தான். தாகூர் பாரதியை விட நுட்பமான கவிஞர் என்றும் வாதிடுவதும் அதனால் தான். பாரதியை பொறுத்தவரை தாகூர் பெருங் கவிஞரல்ல. இன்று நமக்குச் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த காங்கிரஸ், அதில் பங்கெடுத்த பாரதி, பாரதியின் துயர் மிகுந்த வாழ்க்கை, திமுக மேடைகளிலும் மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் என்று பாரதி நமக்கு இன்று மிகப் பெரிய பிம்பம். ஆனால் அந்தப் பிம்பத்திலிருந்து விலகினால் நான் சொல்ல வரும் ஒப்பீடு புரியும்.

பாரதிக்கு திலகர் மிகப் பெரிய ஆதர்சம். ஜெயாகாந்தனின் நாவலில் வரும் ஒரு காந்தியவாதியும், "நாம் அடிமை இருளில் கிடந்த நாட்களில் பாரதத்தின் தலைசிறந்த பிராமணோத்தமரான பால கங்காதர திலகர் தொடங்கிய அந்த விடுதலைப் போராட்டங்களில் இஸ்லாமிய நண்பர்கள் பெரும் அளவில் சேராமல் இருந்தார்கள்" என்பார்.

பாரதி மிகச் சிறந்த பத்திரிக்கையாளன் என்பது சீனி விஸ்வநாதனின் தொகுப்பைப் புரட்டினாலே தெரியும். அவனுக்கும் சரி பின்னால் வந்த ஜெயகாந்தனுக்கும் திலகரின் இன்னொரு முகம் தெரிவதில்லை. திலகர் ஆணாதிக்கவாதி, சனாதன இந்து, அப்பட்டமான ஜாதியத்தை வெளிப்படையாகப் பேசியவர், அரசியலுக்குள் மதத்தைத் தீவிரமாகப் புகுத்தியவர். இன்று நாம் பாரதியையும் திலகரையும் அவரவர் காலத்தின் வார்ப்புகள் என்றும் அவரவர் சிறுமைகளையும் தாண்டியவர்கள் என்று நமக்குச் சுதந்திர போராட்டம் குறித்துப் பள்ளிக் காலம் முதலே எழுப்பப்பட்ட பிம்பத்தால் சலுகையோடு நோக்குகிறோம் ஆனால் சம காலத்தில் அந்தச் சலுகைகளை நாம் மனுஷுக்கு மறுக்கிறோம்.

மனுஷ் தான் எழுதிய கவிதைக்கும் இந்து மதத்தின் 'தேவிக்கும்' சம்பந்தமில்லை என்று பின் வாங்கிவிட்டாரே என்று நகைக்கிறோம். மனுஷ் அப்படிச் செய்ததற்கு உயிர் பயம் காரணமில்லையா? கௌரி லங்கேஷும், குல்பர்கியும் சந்தித்த முடிவுகள் அண்டை மாநிலத்தில் தானே நடந்தது? இதில் நகைக்க என்ன இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்தியா இருப்பதற்கு இந்தியன் என்று சொல்லிக் கொள்ளும் எவரும் நாண வேண்டும். பிரிட்டிஷ் சர்க்காரிடம் தான் உண்மையான பிரஜையாக இருப்பேன் என்று சரணாகதி கடிதம் அளித்துவிட்டு அதன் பின் இறக்கும் வரை எந்தத் தேசிய உணர்வுப் பாடலையும் பாரதி எழுதவில்லை என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும். பாரதியையோ, சவர்க்கரையோ அவர்கள் எழுதிய அக்கடிதங்களுக்காக இன்று அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு ஓய்வு நேரத்தில் தட்டச்சு செய்யும் எனக்கு எள்ளி நகையாடுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

"சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான், தீயதொரு கனையாலே கண்ணன் மாண்டான்" என்கிறான் பாரதி. முகமறியா, பெயர் அறியா யாரோ எங்கோ எய்த அம்பும் சிலுவையும் ஒன்றா என்று கிறிஸ்தவர்கள் கேட்கலாம். முழுக் கவிதையும் படித்தால் அந்தளவு துண்புறுத்தாது ஆனால் இன்று குதிக்கும் பலரும் அந்த மன நிலையில் இல்லையே?

பிராமணரான பாரதிக்கு இயேசுவை பற்றியும் அல்லாவை பற்றியும் எழுதும் உரிமை இருக்கிறதென்றால் அந்த உரிமை மனுஷுக்கு கிடையாதா? அதுவும் மரபுகளை மீறாமல் எழுதப் புகுந்த மரபுக்குள் இருந்தே எழுதுவதற்கு உரிமை இல்லையா? ஸ்தாபன ரீதியான கிறிஸ்தவத்துக்கு வெளியே கதையின் நாயகன் தன் கிறிஸ்துவை கண்டடைகிறான் என்று 'கடல்' திரைப்படத்தில் தான் வடித்த கதாபாத்திரம் பற்றி ஜெயமோகன் எழுதியதாக நினைவு. பிலிப் புல்மேன் "Good man Jesus and scoundrel Christ" என்று எழுதும் உரிமை இருக்கிறதென்றால் ஜெயமோகனுக்கும் மனுஷுக்கும் பாரதிக்கும் அந்த உரிமைகள் உண்டு. அதே போல் அப்படிப் பட்ட உரிமை வெண்டி டோனிகருக்கும் உண்டு.

மனுஷின் கவிதையின் தரம் இன்று விவாதப் பொருளாகிவிட்டது. ஒரு சூடான பிரச்சினையின் போது எழுதப்பட்டதால் கவிதைக்கான நுணுக்கம் இல்லை என்கிறார்கள். கவனிக்க அப்படிச் சொல்லுபவர்களில் ஜெயமோகன் போன்ற சிலருக்குத் தான் அப்படிச் சொல்லும் தகுதி இருக்கிறது. பெரும்பாலோருக்கு கவிதை என்பது தமிழ் சினிமாப் பாடல் தான். ஜெயமோகன் அவருடைய தளத்தில் இருந்து பாரதியையும் கேள்வி கேட்டிருக்கிறார். அது வேறு வகையான தளம் என் எல்லைக்கு அப்பாற்பட்டது. என் எல்லைக்குள் நின்று சில வார்த்தைகள்.

கவிதை எழுதுவோர், அதுவும் சமூகத்தில் சம காலத்தில் நிகழும் ஏதேனும் நெருடலான ஒன்று குறித்து எழுதுவோர், உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நுணுக்கம் என்பதைப் பின் தள்ளி தானே எழுதுகிறார்கள்? பாரதியின் "ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி" அப்படிப்பட்ட கவிதை தானே? லெனினின் கொள்கைகளை மிகத் தீர்க்கமாகத் தன் கட்டுரைகளில் விமர்சித்த பாரதி ஒரு கவிஞனாக அந்தப் புரட்சி பற்றி மிக எளிமையாகத் தான் எழுதினான் என்றால் மிகையில்லை.

தஞ்சையில் பாரதி பற்றிய உரை ஒன்றில் (நான் நேரில் கேட்டது) ஜெயகாந்தன் பாரதியின் அந்தக் கவிதையின் கடைசி வரியான 'கிருத யுகம் எழுக மாதோ' என்பதைச் சுட்டிக் காட்டி கடவுள் நம்பிக்கையை நிராகரித்ததால் கம்யூனிஸம் தோற்றது என்றார். பாரதி ஓர் பிராமண இந்துவின் பார்வையில் தான் ருஷ்ய புரட்சியைப் புரிந்து கொள்கிறான் அதையே வாசகர்களுக்கும் முன் வைக்கிறான். அதுவும் ஒரு பார்வை. அதை ஏற்பதும் நிராகரிப்பதும் நம் சுதந்திரம். ஆனால் அவனுக்கு நாம் அளிக்கும் சலுகையை மனுஷுக்கும் கொடுக்க வேண்டும். அவர் காணும் உலகை இஸ்லாமிய பார்வையில் இருந்து சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. ஜெயமோகன் போன்றவர்களுக்குப் பிரச்சினை அதுவல்ல ஆனால் பலருக்கு அதுவே தான் பிரச்சினை.

மனுஷ் பொருள் தேடும் பொருட்டு இப்படிச் செய்கிறாரா? இருக்கலாம். அதனால் என்ன? பாரதியும் பொருளும் பேரும் தேட சீட்டுக் கவிகள் எழுதினானே? மனுஷை ஜெயமோகன் ஏன் தொண்டன் என்று சொல்கிறார் என்பதில் தான் பாரதிக்கும் மனுஷுக்கும் உள்ள வேறுபாடுகள் ஆரம்பிக்கின்றன. அங்குத் தான் பாரதி மனுஷ் எட்ட முடியாத உயரத்துக்குப் போகிறான். அதைப் பேசுவதற்கு முன் இன்னும் கொஞ்சம் இந்த ஜாதி மத விஷயங்கள் பற்றிப் பார்ப்போம்.

ஜெயகாந்தன், சுஜாதா, கண்மணி குணசேகரன்: 


இன்று மனுஷ் அவர் சாராத ஒரு மதத்தின் விழுமியத்தை மையமாக வைத்து ஒரு படைப்பை சமூகத்தின் முன் ஒரு பிரச்சினையினால் உந்தப் பட்டு எழுதி விட்டார். மனுஷ் ரங்கராஜனாக இருந்திருந்தால் இன்று அந்தக் கவிதை 'பார்த்தீர்களாக எங்கள் தரப்பில் இருந்தே குருமூர்த்திக்கு எதிர் வினையாற்றி இருக்கிறோம்' என்று சொல்லியிருப்பார்கள். மனுஷின் துரதிர்ஷடம் அவர் பெயர் ஹமீது.

ஜெயகாந்தனின் 'தவறுகள் குற்றங்கள் அல்ல' என்று ஒரு சிறுகதை. பெண்களிடம் முறை தவறி நடப்பதையே வழக்கமாகக் கொண்ட இந்து மேலாளர் ஒருவர் தன்னிடம் வேலைப் பார்க்கும் கிறிஸ்தவக் காரியதரிசியிடம் முறை தவறி நடந்து கொள்ள யத்தனித்து அவள் எதிர்பாராத போது முத்தமிட்டு விடுவார். காரியதரிசியான தெரசா அவரை மூர்க்கமாக எதிர்க்காமல் மிக மெண்மையாக "Please leave me I regret it" என்று சொல்லி கண்ணீர் சிந்தி விட்டு சென்று விடுவார். இதை எதிர்ப்பார்க்காத மேலாளர் வருந்தி அவளிடம் தன் செய்கையை அவர்கள் மரபில் தந்தை மகளை முத்தமிடுவது போல் எண்ணி மன்னித்து விடச் சொல்வார். கதையில் கிறிஸ்தவ வீடுகளில் குடும்பமாய் மது அருந்துவதாகவும் வரும். தெரஸா ஸ்கர்ட் அணிந்திருப்பார். தெரஸா ஆங்கிலோ-இந்தியப் பெண்மணி என்பதற்கான அறிகுறியில்லை. இன்று மனுஷை எதிர்க்கும் பலரின் மன நிலையில் இருந்து கிறிஸ்தவர்கள் இந்தக் கதைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அப்படிச் செய்தால் அது முட்டாள் தனம்.

பலரும் மனுஷ் இந்தச் செயலை பிரபலமடையச் செய்கிறார் என்கிறார்கள். என்னமோ மனுஷ் இது வரை பிரபலமாகாதது மாதிரி. அதிர்ச்சி மதிப்புக்காக மனுஷை விட அதிகமாகச் சீண்டலாகப் பேசியவர் ஜெயகாந்தன். 'வசை மாரி பொழிந்தார் ஜெயகாந்தன்' என்று அசோக மித்திரன் ஒரு பேட்டியில் சமீபத்தில் சொன்னார். 'நான் தமிழில் எழுதியதற்காக வெட்கப்படுகிறேன். இந்தியில் எழுதியிருந்தால் என்னை நாற்பது கோடிப் பேருக்குத் தெரிந்திருக்கும்' என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ராஜராஜன் விருதைப் பெற்றுக் கொண்டு சொன்னார் ஜெயகாந்தன். ஞானபீடம் கிடைத்த சமயத்தில் 'தமிழ் தமிழ் என்று தற்பெருமைப் பேசுகிறவர்கள் தம்மைத் தாமே நக்கிக் கொள்ளும் நாய்களைப் போல்' என்றார் அப்புறம் எதிர்ப்பு வலுத்ததும் 'தம்மைத் தாமெ நக்கிக் கொள்ளும் சிங்கத்தைப் போல்' என்றார். ஜாதி அமைப்பை ஆதரித்தார், வர்ணாஸ்ரமத்துக்காக வாதாடினார். இன்னும் பல.

லெனினை சந்தித்த வைணவ கம்யூனிஸ்ட் திருமாலாச்சார்யார் கம்யூனிஸ புரட்சி வருவதற்கு இந்தியா மத நம்பிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றால் அத்தகைய புரட்சியே வேண்டாம் என்றதை நினைவுக் கூர்ந்து சமய நம்பிக்கை, 'தமிழும் சைவமும்', நம்மில் பிரிக்க இயலாதது என்றார் ஜெயகாந்தன். அப்போதெல்லாம் யாரும் அவரைக் கண்டித்ததாகத் தெரியவில்லை. பாலகன் ஒருவனுக்குத் தீட்சை அளிக்கப்பட்டது என்றவுடன் சுடச் சுட கதை எழுதி இந்து மதம் பெரும் அநீதி செய்து விட்டது என்று புலம்பினார், 'கழுத்தில் விழுந்த மாலை' கதையில். அப்புறம் 'ஹர ஹர சங்கர' எழுதி நற்பெயர் மீட்டார். இதையெல்லாம் செய்ய அவருக்கு அனுமதி கிடைத்ததற்குக் காரணம் அவர் பிள்ளை சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் (ஆம் அது தான் ஜெயகாந்தனின் உண்மையான பெயர்). கொசுறுச் செய்தி ஜெயகாந்தனுக்கும் பாலகுமாரனுக்கும் தான் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர். ஹமீதுக்கு அல்ல. ஆண் அரசியல் வாதிகளிலும் இந்து அரசியல்வாதிகள் தான் மிகுதியாக இரு மனைவியர் கொண்டுள்ளனர். எத்தனை பேர் அந்தச் சுடச்சுட எழுதிய கதைகளின் தரம் பற்றி விவாதித்தனர்.

சுஜாதா என்கிற ரங்கராஜனின் தளமே வேறு. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் சுஜாதாவை சீண்டியது. இன்று மனுஷை ஹமீது என்று விளித்து எழுதி அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் எத்தனை பேர் சுஜாதாவை ரங்கராஜன் என்று எழுதியிருக்கிறார்கள்? தீவிர வைணவரான ரங்கராஜன் நாமம் குழைத்து நெற்றியில் இட்டுப் பிராமணச் சங்க மீட்டிங்குக்குப் போனதோடல்லாமல் தன் "ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்" புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்குக்கும் நாமம் போட்டு அழகுப் பார்த்தவர். ஹாக்கிங்கின் மேற்கோள் ஒன்றை எடுத்து திரித்து அதில் வராத ஆண்மீக கருத்தை தினித்து விஞ்ஞானிகளுக்கும் பூணூல் மாட்டி சந்தோஷப் பட்டார். மனுஷின் ஆக்கங்களில் குல்லா தெரிவதை விடச் சுஜாதாவின் வசனங்களில் பூணூலை கண்டு பிடிப்பது எளிது. "அங்கவை சங்கவை, பொங்கவை" என்ற வசனம் நினைவுக்கு வரலாம். இன்று மனுஷை கரித்துக் கொட்டும் பலரும் ரங்கராஜனை சுஜாதா என்றும் தமிழ் நாட்டுக்கு கிடைத்த விஞ்ஞானச் சூரியன் என்றும் எண்ணுபவர்கள்.

கண்மணி குணசேகரன் இன்று வெளிப்படையாகவே தன்னை வன்னிய எழுத்தாளர் என்பதோடு காடுவெட்டி குருவின் மறைவுக்கு அஞ்சலி குறிப்பும், அவரே அது கவிதை இல்லை என்றார், எழுதுகிறார். கண்மணி முதலில் பா.ம.க. கூட்டிய வன்னிய எழுத்தாளர் மாநாட்டுக்குச் சென்ற போது 2009-இல் 'நிழல் தேடுவதில்லை நெடுமரம்' என்று ஜெயமோகன் எழுதினார்.

சாதிய அல்லது குறுங்குழு அடையாளத்தை எழுத்தாளர்கள் விரும்ப மாட்டார்கள் அவர்கள் அப்படியொரு வட்டத்துக்குள் தங்களைப் பொருத்திக் கொள்ள மாட்டார்கள் என்றார் ஜெயமோகன். 50-களில் "ஈழவ நாளிதழான கலா கௌமுதி" ஈழவ எழுத்தாளர்களை ஒன்று திரட்ட முற்பட்ட போது அது தோல்வியில் முடிந்தது என்கிறார். ஆனால் அத்தோல்வி ஜெயமோகன் முன் வைக்கும் குறுங்குழுவில் சேர விருப்பமின்மை என்பதைத் தாண்டி இன்றூ வரை தலித்துகள் பொது வெளியில் தங்கள் அடையாளத்தைச் சொல்ல சவுகரியப்படாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்று இதன் இன்னொரு பக்கத்தைத் தமிழகத்தில் காணலாம். இன்று தமிழகத்தில் தான் பிராமணன் என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டால் எழுத்துலகில் பிரச்சினை என்கிறார்கள் நண்பர்கள் (இது ஒரு விவாதத்தில் வெளி வந்தது). தேசிய இயக்கம் பிராமண ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் தேசியமும் பிராமணீயமும் இயைந்து இருந்த கட்டத்தில் பிராமண எழுத்தாளர்களுக்கு அந்தச் சங்கடம் இருக்கவில்லை.

மனுஷ் பி.ஜே போன்ற மத அடிப்படைவாதிகளுடன் சேருகிறாரே என்று எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் சொல்கிறேன் காஞ்சி பரமாச்சாயாரின் 'தெய்வத்தின் குரல்' புத்தகத்தில் அவர் முன் வைத்த கருத்துகளை அதன் சமஸ்கிருத தமிழ், சாஸ்த்திரிய முலாம் ஆகியவற்றைத் தாண்டி அப்பட்டமாகப் பார்த்தால் அவருக்கும் காடுவெட்டி குரு "நாங்க என்ன மோளக்கார ஜாதியா?" என்று கேட்டதற்கும் எந்த வித்தியாசமுமில்லை. (அது பற்றி விரிவாக எழுதுகிறேன்). பரமாச்சார்யாருடன் அணுக்கமான எழுத்தாளர்களின் முகமூடிகள் குறித்து நாம் கேள்வி எழுப்புவதில்லையே? (இந்தக் கேள்வி ஜெயமோகனுக்கானதல்ல).

தலித் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள் என்று எத்தனையோ வகைமைகள் இருக்கும் போது வன்னிய எழுத்தாளரும் இஸ்லாமிய எழுத்தாளரும் இருக்கலாம். ஜெயமோகன் போன்ற சிலரைத் தவிர்த்துப் பலருக்கு அது தான் பிரச்சினை. ஜெயமோகன் அடிக்கோடிடும் பிரச்சினைகளைப் பார்ப்பதற்கு முன் ஜெயமோகனின் பதிவுக்கு வந்த எதிர் வினை ஒன்றையும் மனுஷை ஹமீதாக விளித்து எழுதிய ஒரு பதிவையும் பார்ப்போம்.

கார்ல் மேக்ஸ் கணபதி: 


இவர் முதலில் மேக்ஸா, மார்க்ஸா என்பதே ஒரு புதிர். ஜெயமோகன் பதிவை மறுத்து இவர் எழுதியததை எதிர்பாராத நண்பர் ஒருவர் சிலாகித்தார். அதனால் அதைப் படித்தும் பார்த்தேன். ஹ்ஹ்ம்ம்ம்.

இயற்கைப் பேரிடர்களில் இருந்து காப்பாற்றுமாறு இறைவனை வேண்டுவதும் அந்தப் பேரிடர்கள் இறைவனின் சீற்றம் என்றும் நினைப்பது எளிய பக்தி மனம் என்று ஜெயமோகன் சொன்னதை எடுத்து ஜெயமோகன் பக்திமான் ஆகவே அவருக்கும் அதே எண்ணம் இருந்திருக்கும். வெளிப்படையாகச் சொல்லி மாட்டிக் கொண்டார் குருமூர்த்தி ஜெயமோகன் சாதுர்யமாக மவுனமாக இருந்து விட்டார் என்கிறார் கணபதி. மேலும் இத்தகைய மவுடீகங்களைக் கம்யூனிசமும் திராவிட இயக்கங்களும் மறுத்து வந்திருக்கின்றன என்கிறார்.

ஜெயமோகன் ஓர் இந்து. மதம், அது சார்ந்த எளிய நம்பிக்கைகள், ஆச்சார அனுஷ்டானங்கள் இவையெல்லாம் வெவ்வேறு ஒவ்வொன்றையும் வெவ்வேறு தளத்தில் செய்ய முடியும். ஜெயமோகன் கணபதி சொல்லும் விதத்தில் பக்திமான் அல்ல. அப்படிச் சொல்வது அவதூறு ஆனால் கழகக் கண்மணியிடம் வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்.

கருணாநிதியின் மறைவை ஒட்டி நிகழ்ந்த நிகழ்வுகளைப் பார்த்தால் தெரியும் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு லட்சணம். ராஜாத்தி வீட்டில் இருந்த கருணாநிதியின் உடலுக்கு, பிணம் என்று சொன்னால் பகுத்தறிவு மனம் புண்படும், ஒவ்வொருவரும் மாலை வைத்து கையெடுத்து கும்பிட்டுப் போனார்கள். அது நீத்தாருக்கு செய்யும் மரியாதை மட்டுமல்ல, நீத்தார் தெய்வமானார் என்பதன் அறிகுறி. அது தான் எளிய மனம். செய்தவர்களை நான் குறைச் சொல்லவில்லை. ஆனால் இவர்களின் பகுத்தறிவு பம்மாத்து வெறும் பம்மாத்து.

ராமன் எந்தக் கல்லூரியில் படித்தான் என்பதை ஏன் ஜெயமோகன் போன்றோர் இந்து மதக் காழ்ப்பு என்று சொல்கிறார்கள்? காரணம் உள்ளங்கை நெல்லிக்கனி. அப்படிக் கேட்டு விட்டு ரம்ஜான் நோன்பு கஞ்சி குடிக்கக் குல்லா போட்டுக் கொண்டு ஸ்டாலின் காட்சித் தருவார் அல்லது கருணாநிதி கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பா எழுதி வெளியிடுவார். இவர்களுடைய பகுத்தறிவின் எல்லை ஶ்ரீரங்கம் கோயில் வாசல் வரை தான். பள்ளிவாசல் என்றாலோ சர்ச் வாசல் என்றாலோ இவர்கள் பகுத்தறிவு பல்லிளித்து விடும்.

ஆமாம் பசுவை முன் வைத்துத் தமிழகத்தில் கொலைகள் நடப்பதில்லை. ஆனால் கவுரவக் கொலைகள் தலை விரித்தாடுகிறதே. அது பற்றிச் செயல் தலைவர் என்ன செய்தார்?

கணபதியின் பதிவு இந்துத்துவத்துக்கு எதிரான ஜெயமோகனின் குரலை நிராகரித்துத் தான் பொய் மூட்டையாக மலர்கிறது. பாவம் அவர் சார்ந்திருக்கும் இடம் அப்படி.

ராஜகோபாலன் என்பவரின் பதிவு: 


இவர் சில கேளிகளை எழுப்பி மனுஷுக்கு கரிசணையோடு சில யோசனைகளையும் முன் வைத்தார். அவர் பேஸ்புக் திரியில் மேலே சொன்னவைகளில் தொடாத சில பதில்களை இங்குத் தருகிறேன்.

மனுஷ்யபுத்திரன் என்று பேஸ்புக்கில் இருந்தவர் இன்று ஹமீது என்று தன்னை அழைத்துக் கொள்வது ஏன் என்றார் ராஜா. மனுஷின் பெயர் மாற்றம் பேஸ்புக் விதிகளால் நிர்பந்திக்கப்பட்டது. இணையத்தில் நான் அறிந்த இருவர் புனைப் பெயரை துறக்க நேர்ந்தது. தட்சினாமூர்த்தித் தான் கருணாநிதி என்பதை அறிந்தவர்களை விட மனுஷ்யபுத்திரன் ஹமீது என்று அறிந்தவர்கள் மிக அதிகம். சாரு அவரை ஹமீது என்று விளித்து எழுதிப் பல பதிவுகள் இருக்கின்றன. மேலும் ராஜா, ""யாரோ” புகார் கூறியதாகச் சொல்லி தன் பெயரை தெளிவாக அப்துல் ஹமீத் என்று மாற்றிக்கொண்ட ஒருவர் முகநூலில் எழுதும் எழுத்துதான் நாம் பார்ப்பது." என்றார். அதற்கான பதில், "இது வெறும் கான்ஸ்பிரஸி தியரி. இங்கிருந்து ஆரம்பிக்கிறது உங்களுக்கு அவர் ஹமீதாக இருக்கும் பிரச்சினை"

ராஜா, மனுஷ் இந்தப் பிரச்சினையை, எச்.ராஜா புண்ணியத்தில், பூதாகரமாக்கி விளம்பர வெளிச்சம் தேடிக் கொள்கிறார் என்றும் பெருமாள் முருகன் இப்படி டிவி சேனல் ஒவ்வொன்றிலும் தோன்றி வெளிச்சம் தேடிக் கொள்ளவில்லை என்றும் சுட்டிக் காட்டினார். சர்ச்சையாக்கியது எச்.ராஜாவும் அவர் அடிப்பொடிகளும் ஆனால் பழி ஹமீது மீது. அதுவும் பெருமாள் முருகன் மாதிரி மௌனித்துச் சரண் அடைய வேண்டுமாம். நல்ல வேளை தினமணி ஆசிரியரை இழுத்து வந்து சன்னிதியின் முன் சாஷ்டாங்கமாக விழச் செய்து அதில் குளிர் காய்ந்தது போல் எதையும் பரிந்துரைக்கவில்லை நண்பர். சிறு கருணைகளுக்கு நன்றி சொல்வோம். மனுஷ் இன்று நேற்றா டிவி சேனல்களை ஆக்கிரமிக்கிறார்? மனுஷ் ஒரு பெரும் கட்சியின் பின்புலம் உள்ளவர் அவருக்குப் பெருமாள் முருகனின் நிர்பந்தம் கிடையாது.

கடைசியாக நண்பர் இலவசமாக ஒரு அட்வைஸும் தந்தார். ஹமீது ஈராயிரம் ஆண்டுக் கவி மரபு மீண்டும் தன்னுள் விழித்தெழும் போது மனுஷாகத் திரும்ப வேண்டுமாம். ஷத்திரியன் படத்தில் திலகன் "நீ பழைய பண்ணீர் செலவமா வரணும்" என்ற தொனியில் இருக்கிறது. ஆமாம் அது என்ன ஈராயிரம் ஆண்டுக் கவி மரபு? அரசனிடம் தம்பிடி காசு வாங்க அன்னத்தின் நடை சிறந்ததா தமயந்தியின் நடை சிறந்ததா என்று ஆராய்ந்ததா இல்லை பெண்ணின் தலை முடிக்கு இயற்கையிலேயே வாசனை இருக்குமா என்று ஆராய்ந்ததா? அல்குலையும், மார்பையும் சென்சார் செய்தால் முக்கால்வாசி கவி மரபு காணாமல் போகுமே? ஓகேவா ராஜா? அந்தக் கவி மரபு தன்னுள் உயிர்ப்போடு இருந்ததால் தான் வாலி என்கிற ரங்கராஜன் கவிதையாகக் கொட்டித் தீர்த்தார். மேற்கோள் காட்டவா?

ஜெயமோகனோடு முரண்படும் இடங்கள்: 


ஜெயமோகனின் இரண்டு கருத்துகளோடு ஒப்புதல் இல்லை. முதலாவதாக மனுஷ் தி.மு.க மேடையில் பேசுவதற்கெல்லாம் இலக்கியவாதிகள் அணி திரண்டு காக்கத் தேவையில்லை என்கிறார். இலக்கியவாதி என்பவன் கருத்து என்பது முச்சந்தி முதல் தி.மு.க மேடை வரை எங்குப் பேசப்பட்டாலும் அது நசுக்கப் படும் போது குரல் கொடுக்க வேண்டும் அது தான் இலக்கியவாதியின் கர்மா. பேசப்படும் இடத்தை வைத்துக் கருத்துரிமைக்கான தார்மீகம் மாறுவதில்லை.

இரண்டு ஜெயமோகன் தி.மு.க அரசியலை முச்சந்தி அரசியல் என்பது. அரசியல் என்பது ஜனநாயக அமைப்பில் முச்சந்தியில் தான் இருக்க வேண்டும். அதைத் தானே காந்தி செய்தார்? தி.மு.கவை நாம் விமர்சிக்கலாம், நிராகரிக்கலாம் ஆனால் முச்சந்தி அரசியல் என்று விலக்குதல் கூடாது.

ஜெயகாந்தனும் கண்ணதாசனும் முச்சந்தி அரசியலில் ஈடுபட்டவர்கள் தாம் என்பதை நாம் மறக்கவியலாது. கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்து மதம்' குப்பை ஆனால் அதை இன்று கொண்டாடுபவர்கள் அதிகம். மேலும் அதை அவர் எழுதக் கூடாதென்று யாரும் சொல்லவில்லையே? 'சினிமாவுக்குப் போன சித்தாளு' முச்சந்தி அரசியலில் இருந்து முகிழ்ந்தது தான். அது கலைப் படைப்பா என்பதை விட அது மிக முக்கியமான அரசியல் ஆக்கம் என்பதை மறுக்க முடியுமா?

மனுஷின் கவிதை இந்து மரபுக்கு அப்பாற்பட்டதோ அந்த மரபை சிறுமைப்படுத்துவதோ இல்லை என்ற பின் மனுஷ் தி.மு.கவோடு இருப்பது பொருளியல் ஆதாயத்துக்காக என்று சந்தேகம் எழுப்புவது தேவையில்லை. கலைஞர் விருதை சந்தோஷமாக வாங்கிக் கருணாநிதியால் பொருளியல் ஆதாயம் அடைந்தவர் ஜெயகாந்தன் என்பதை மறக்கலாமா? மேலும் இன்று திமுக மேடைகளில் அதிகம் காணப்படுவது இந்து என்.ராம் தான்.

மனுஷ் என்கிற திமுகத் தொண்டன்: 


மனுஷை தீப்பொறி ஆறுமுகத்தோடு ஒப்பிட்டு விட்டார் ஜெயமோகன் என்று கொதித்ததோடல்லாமல் இப்போது திராவிட விசிலடிச்சான் கூட்டம் தீப்பொறி ஆறுமுகம் ஞானபீடத்துக்குத் தகுதியானவர் என்கிற ரேஞ்சில் வாதிட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த அபாயத்தை ஜெயமோகன் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

இலக்கியவாதிகள் அரசியல் செயல்பாட்டில் இருப்பதே குற்றம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அது விஷயமல்ல. ஆனால் அப்படி ஈடுபடும் இலக்கியவாதிக்கு அந்த அரசியல் அரங்கில் என்ன இடம்? அவன் தன்னை அந்த அரசியல் சதுரங்கத்தில் எந்த இடத்தில் வைத்துக் கொள்கிறான் என்பது தான் முக்கியம். இங்குத் தான் மனுஷிடமிருந்து பாரதியும், ஜெயகாந்தனும், கண்ணதாசனும் வேறுபடுகிறார்கள்.

பாரதி பல இடங்களில் பிராமணர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளான், ஜாதியத்தைச் சாடுகிறான், எந்தக் குழுவுக்குள்ளும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் விஸ்வரூபமெடுக்க விரும்புகிறான். ஞானாகசத்தின் நடுவே நின்று பூமண்டலத்திற்கு அருள் பாலித்திட விரும்புகிறவன் அவன். காந்தியோடு முரண்படுகிறான், விவேகாநந்தரை சாடியிருக்கிறான், எல்லோருக்குமான கல்வி குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதுகிறான், காங்கிரஸில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று சாடுகிறான். அவன் சாகரம். எந்தச் சிமிழிலும் அடைக்க முடியாத காலப் பிரவாகம் அவன்.

கம்யூனிஸ்டுகளுக்குக் காந்தியும் நேருவும் எதிரிகள். கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நேரு பெரிய அடக்குமுறையையே கட்டவிழ்த்து விட்டார். ஆனால் ஜெயகாந்தன் அவர்கள் இருவரையும் ஆராதித்தார். கம்யூனிஸ்டுகளோடு பிணக்குக் கொண்டார். பிற்காலத்தில் அமெரிக்கா வந்து பார்த்து விட்டு அமெரிக்காவில் தொழிலாளி சுபிட்சமாக இருக்கிறான் என்று சொல்லி கம்யூனிஸ்டுகளின் முகத்தில் கரியைப் பூசினார். காமராஜரை ஆதரித்தார். காமராஜருக்குப் படிப்பறிவு இல்லை என்பதை வெளிப்படையாகச் சொன்னார். ஈ.வெ.ராவிடம் நான் இலக்கியவாதி நானே தீர்மானிப்பேன் நான் என்ன எழுத வேண்டும் என்பதை என்றார். எம்.ஜி.யாரை விடக் கருணாநிதியை மேன்மையானவராக நினைத்தார். வீரமணியோடு நட்பாக இருந்த போதும் திராவிடர் கழகத்தை நிராகரித்தார்.

கண்ணதாசனின் கதையும் கிட்டத்தட்ட ஜெயகாந்தன் கதை தான். அண்ணாதுரையின் இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்து ஜெயகாந்தன் பேசினால் என்ன பேசுவார் என்பதை அறிந்தே அழைத்தார். 'வனவாசம்' தமிழில் எழுதப்பட்ட சுயசரிதைகளுள் நேர்மையானவற்றைத் தொகுத்தால் அதில் இடம் பெறும்.

மேலே சொன்ன எதையுமே மனுஷ்யபுத்திரன் செய்யவில்லை. மாறாக அடிப்படைத் தொண்டனின் நிலையிலேயே கருணாநிதி பற்றிப் பேசுகிறார். அதைத் தான் ஜெயமோகன் சீண்டும் என்று தெரிந்தே 'தீப்பொறி ஆறுமுகம் போல்' என்றார்.

முடிவுரை:

மனுஷ்ய புத்திரன் பற்றிய பிரச்சினை பல திசைகளிலும் பயணித்து விட்டது. அவர் இந்து மதத்தை அவமதிக்கவில்லை. அவருடைய அரசியல் ஈடுபாட்டிற்கும் அந்தக் கவிதைக்கும் சம்பந்தமில்லை. அவருடைய அரசியல் ஈடுபாட்டால் அவர் கவித்திறம் கறைப்பட்டதா என்பதும் அது கறையா என்பதும் வேரு தளத்தில் முன்னெடுக்க வேண்டிய விவாதம். அவருடைய அரசியல் நேர்மையானதா என்றால் இல்லை என்பதே பதில். இன்று அரசியல் என்பதே அதிகாரத்தைக் கைப்பற்றும் செப்பிடு வித்தை என்றானப் பின் எந்தக் கட்சியில் இருந்தாலும், அதுவும் மனுஷ் மாதிரி தொண்டனாக, நேர்மையாக இருப்பதென்பது முடியாது. அந்த மேடைகளில் இருந்து நேர்மையாக ஒரு சொல்லை சொல்லி விட முடியாது.

எழுதுபவரின் பின்புலம், ஜாதியோ மதமோ குடியுரிமையோ, விமர்சனத்துக்கு சம்பந்தமில்லாதது என்றுச் சொல்ல மாட்டேன். ஆனால் அதைச் சுட்டிக் காட்டி விமர்சிக்கும் போது கவனமாகச் செய்ய வேண்டும். அது தான் காரணமா என்பதை தீர ஆராய வேண்டும் அதை தீர்க்கமாக நிறுவ வேண்டும். எழுதியவரின் பெயர் ஹமீது ஆகவே இந்து வெறுப்பாளன் என்பது விமர்சகனின் வெறுப்பரசியல்.


சுட்டிகள்:

1. https://www.jeyamohan.in/112345#.W4KuI63MxBy
2. https://www.jeyamohan.in/554#.W4KuJ63MxBy
3. கார்ல் மேக்ஸ் கணபதியின் பதிவு https://www.facebook.com/gkarlmax/posts/2103369616363217?__xts__%5B0%5D=68.ARBfP_KqSPHN9mlXVxnTIWV2DkuJyD5CIsiO3NB8K01FPyRZLN_0OHsuT46aGw1ruCiowaiwMVLHFh72x3Sun3NaxHnLfS1Y8m5l559LTYSuznZECy_8yy5B67kNlgbOcXuuTUQ&__tn__=K-R
4. ராஜகோபாலன் பதிவு (இதில் என் எதிர் வினைகளும் இருக்கும்) https://www.facebook.com/rajagopalan.j.7/posts/10210034009806363?__xts__%5B0%5D=68.ARAYewzNLWyhplHHyHZrh3rbSZ0wtQ9Ck9Lk-uk7Ydy_cqlL08MGLe2Lr7EfnT2u8Cqwy5-1MrnDQT4KczwOTU3NmEDCkOcS9hUM_wIxxYD9cwGIDN6itvxWOucxJcsAEf6Yoic&__tn__=K-R

Saturday, August 18, 2018

Gods and Calamities: From Gandhi to Gurumurthy. Voltaire and Lisbon Earthquake

Calling a natural disaster as divine retribution is an age old game stretching into antiquity. S. Gurumurthy, a chartered accountant and a complete bigot and purveyor of revisionist history, now appointed director of RBI and perennial invitee to SASTRA, has asked the courts of law to investigate whether Gods are punishing Kerala for the sin of a court adjudicating on allowing women into the Sabarimala temple.  Gurumurthy is treading a well worn path that Gandhi and Rousseau have trodden.

Many have expressed their disgust at such intemperate bigoted nonsense. Strangely, no one remembered the notorious incident of Gandhi linking an earthquake to the sin of untouchability. On 15th January 1934 a 8.0 magnitude earthquake shook Bihar and nearly 10,000-12,000 died. Gandhi who was in Tirunelveli (Tamil Nadu) in his tour against untouchability heard of the tragedy and said that that was divine retribution for Hindus practicing untouchability. Tagore who read about Gandhi's comment was enraged and wrote to 'dear Mahatmaji' and asked if he has said so. Tagore issued a rebuttal and Gandhi printed it in 'Harijan' on 16th February 1934. 

Tagore wrote, "the kind of argument, that Mahatmaji uses by exploiting an event of cosmic disturbances far better suits the psychology of his opponents than his own, and it would not have surprised me at all if they had taken this opportunity of holding him and his followers responsible for the visitation of divine anger". Gandhi, in his reply, also published in Harijan, concurs that "Santanists have a  perfect right to say that it was due to my crime of preaching against untouchability".




Tagore was prescient. It is the Sanatanists who are using the 'divine retribution' argument today. It'd be stupidity to take Gurumurthy's idiocy and flagellate a community or a religion. Yes the Sangh Parivar is showing crass idiocy and grotesque bigotry as their twitter posts show but they're being equally and more vehemently opposed by other Hindus. 

A fundamentalist Christian sect, essentially one family's church, used to go to military funerals in US and hold up placards saying that such deaths were god's punishment for US tolerating gays and a long list of, what in their opinion, were sins against the Church. 

In November 1755 an earthquake occurred in Lisbon and nearly 30,000 were killed. The quake happened on 'All Saints day' when Churches were crowded. "Death finding its enemies in close formation had reaped a rich harvest". The French clergy rejoiced that it was a divine retribution. (Remember the story of Sodom and Gomorrah). Voltaire, enraged and pained, composed a poem asking:

"Seeing this mass of victims, will you say,“God is avenged. Their death is the price of their crimes”? What crime, what fault had the young committed,Who lie bleeding at their mother’s breast?Did fallen Lisbon indulge in more vicesThan London or Paris, which live in pleasure?Lisbon is no more, but they dance in Paris."


Will Durant captures the Voltaire's theological conundrum, "Either God can prevent evil and he will not; or he wishes to prevent it and he cannot. He was not satisfied with Spinoza's answer that good and evil  are human terms, inapplicable to the universe, and that our tragedies are trivial things in the perspective of the eternity". 

Jewish Rabbi Harold Kushner's son died of progeria he struggled with the same conundrum and wrote the bestseller 'When bad things happen to good people". Kushner struggles with reconciling God's omnipotence and the existence of tragedies and evil. Anyone visiting a pediatric cancer ward will leave an atheist or resign oneself to wooly theorizing of divine retribution. Seeing a Jewish child being thrown up in the air and being shot mid-air as sport a holocaust memoir recalls an exasperated comment, "if there is god on earth where is he now?"

It is not only the orthodoxy that come up with such nonsense and insensitivities. From Rousseau to K. Veeramani the so called rationalists have not acquitted themselves with any great show of sensibility either. Rousseau, Durant says, considered ",an himself was to be blamed for the disaster. If we had lived out in the fields, not in the towns, we should not be killed on so large a scale; if we lived under the sky, and not in houses, houses would not fall upon us". "Voltaire was amazed at the popularity won by this profound theodicy". In response Voltaire wrote, in three days, Candide. "Never was", Durant says, "pessimism so gaily argued; never was man made to laugh so heartily while learning that this is a world of woe". K. Veeramani, in his rag sheet of a newspaper, has often exulted when pilgrims to Sabarimala encountered accidents and asked "where was God". 

Voltaire was never an atheist. Blessing Benjamin Franklin's grandson the aging philosopher said, "God and liberty". His final statement dictated to his secretary Wagner said, "I die adoring God, loving my friends, not hating my enemies, and detesting superstition".

I'd not like the reader to even remotely think that I'm equating Gandhi's stupidity with Gurumurthy's bigotry. Gandhi's stupidity, while being stupidity, at least had a nobler intention to draw attention to Hinduism's most cruel practice, untouchability. It was during that untouchability tour that Santanists made attempts on Gandhi's life and in places shouts of 'death to Gandhi' happened. Gandhi in his reply to Tagore conceded that his concept of linking cosmic events to a society's morals could be ridiculed and that many would shy, fearing ridicule, from voicing such opinions. Too often Gandhi's readiness to be open is used to give him a pass. For such a self-ware man it is not fear of ridicule that should have restrained him but the sheer stupidity of the opinion should've restrained him. 

A side note, Thamizachi Thangapandiyan, another charlatan, albeit of the Dravidian party kind, once threw a canard that Tagore, due to this incident, took back the title 'Mahatma'. Of course, that was a complete lie as the letters showed. To Tagore Gandhi was always a Mahatma and to Gandhi Tagore was always a Gurudev. I had written a detailed rebuttal to that canard of Thamizhachi in 2012.


The current climate of unabashed bigotry and brazenness in opining openly, with no shame, is unprecedented and it is a clear outcome of what is normalized in Modi's India. Rajiv Malhotra, a perfect companion to Gurumurthy in parading bigotry and charlatan takes on history was not be left behind. He tweeted, "please donate to help Kerala HIndus. Christian & Muslims worldwide raising lots of money to help mainly their own ppl & agenda". The location tag says "Princeton North, NJ", time stamped "8:43 AM ; 18th August 18". I was in Princeton university the same day noon. Thank god my joyous weekend visit was spared the agony of sighting this scumbag. The tweet is now deleted but, thanks to FaceBook here it is. Modi's India is becoming a swamp of bigotry unprecedented in the recent history of India.

In an interesting coincidence Gurumurthy has as his profile picture the much revered pontiff of Kanchi mutt, Sri. Chandrasekarendra Swamigal. During Gandhi's untouchability tour the pontiff met him and pleaded not to destroy Hinduism with his campaign against Hinduism. 

I'm not well versed in either the Bible or Hinduism and from my limited knowledge I wonder about this fetish of Sangh Parivar to ascribe the doctrine of divine retribution to the Kerala floods. It is certainly a Christian notion, particularly Judaic or Old Testament, to ascribe God's anger at a city's waywardness manifested as natural disasters like flood and earthquake. Why do Gandhi and Gurumurthy, two very devout Hindus, use that metaphor? Doesn't Gurumurthy know that the days even the use of a Christian metaphor could be construed as being a crypto-Christian or a secretly converted Hindu who stands exposed in a verbal slip?


References:

1. The Mahatma and the Poet: Letters and Debates between Gandhi and Tagore 1915-1941 - Ed. Sabyasachi Bhattacharya . A PDF version is available at https://www.mkgandhi.org/ebks/the-mahatma-and-the-poet.pdf
4. The Story of Philosophy - Will Durant

5. When Bad Things Happen to Good People - Harold Kushner
6. My rebuttal to Thamizhachi's Slander on Gandhi http://contrarianworld.blogspot.com/2012/07/thamizhachi-thangapandiyans-slander-on.html

Thursday, August 9, 2018

கருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.

பிராமணர்களைத் தவிர்த்துப் பார்த்தால் திராவிட இயக்கத்தை விமர்சனத்துக்கும், ஆய்வுக்கும் சமீப காலத்தில் உட்படுத்தியவர்கள் தலித்துகள் என்றால் அது மிகையில்லை. ஆனால் விநோதமாகக் கருணாநிதியை கொண்டாடும் சில தலித் சமூகத்தினரின் பேஸ்புக் பதிவுகளைப் பார்த்தேன். துணுக்குற்றேன். நேற்று வரை இரண்டாம், மூன்றாம் கலைஞரையெல்லாம் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் தீடீரென்று அவர்களை உருவாக்கிய முதலாம் கலைஞரை புனிதர் ரேஞ்சில் பேச ஆரம்பித்து விட்டார்கள். இது சரியா?

அடிப்படையில் எனக்கு மேற்கத்திய மனம் என்ற முடிவுக்கு நான் எப்போதோ வந்துவிட்டேன். இறப்பது யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றிக் கொஞ்சமேனும் நேர்மையாக எழுதப்பட்ட அஞ்சலி குறிப்புகள் தான் இங்கு வெளிவரும். அதுவும் இறந்து சில மணி நேரத்துக்குள்ளாகவே. அமெரிக்காவின் மிகப் பிரபலமான மதப் பிரச்சாரகர் பில்லி கிரஹாம் இறந்த சில மணி நேரத்துக்குள் வெளியான ஒரு அஞ்சலி குறிப்பு அவர் எளியர், ஆழ்ந்தப் புரிதல் இல்லாதவர் என்ற ரீதியில் இருந்தது.

பல பிராமணர்கள் கருணாநிதி மெரினாவில் தான் புதைக்கப் பட வேண்டும் என்று எழுதியதைப் பார்த்தேன். இன்னும் சிலர் அவர் ஒரு சகாப்தம் என்றார்கள். கருணாநிதியை தனிப்பட்ட முறையில் கரித்துக் கொட்டிய பிராமணர்களுமுண்டு. அவர்கள் பெரும்பாலும் இந்துத்துவர்கள். ஆனால் அவர்கள் கூடக் கருணாநிதி என்ற தனி மனிதனைத் தான் ஏசினார்கள் அவர் இனத்தையல்ல.

அடிப்படையில் இந்திய மனம் பெருந்தன்மையானது என்று சொல்லலாம். In a charitable way, not too literally. அந்த வகையில் தலித் பதிவுகளையும் சேர்க்கலாம். ஆனால் சமீபமாக மனத்தில் உழலும் சில சிந்தனைகளை அப்பதிவுகள் கிளறியதால் சிலவற்றுக்கு இன்று பதில் சொல்லலாம் என்று நினைத்தேன்.

திருநெல்வேலியில் வேலிக்குள்ளே அம்பேத்கர் (https://tamil.samayam.com/latest-news/state-news/mla-vasantha-kumar-garlanded-dr-ambedkar-statue-in-tirunelveli/articleshow/58177621.cms)


கருணாநிதியும் சுய மரியாதையும்:


கருணாநிதி யாரும் காலில் விழுவதை விரும்புவதில்லை என்றார் ஒருவர். வைகோ பலமுறை விழுந்துள்ளாரே, புகைப்படங்களும் இருக்கிறதே என்ற போது, 'இல்லை அதைக் கலைஞர் விரும்பவில்லை' என்றார் பதிவு எழுதியவர். கலைஞர் மனத்தில் என்ன எண்ணம் ஓடியது என்பதை அவர் எப்படியோ அறிந்துள்ளார்.

பிராமணர்களில் சில நண்பர்கள் சமீபத்தில் "நாங்கள் சாதுவானவர்கள்" என்றார்கள். அப்போது அவர்களிடம் வன்முறை என்பது வெட்டரிவாளும், வேல் கம்பும் மட்டுமல்ல என்றேன். அது பற்றி விரிவானப் பதிவு சீக்கிரம் வரும். அதே மாதிரி காலில் விழுவது மட்டுமா சுய மரியாதை இழுக்கு?

கருணாநிதியின் 2006-11 ஆட்சியின் போது துதிப்பாடல் அருவருப்புகளின் எல்லைகளை விஸ்தீரணம் செய்தது. கம்பனும், வள்ளுவனும், இளங்கோவும் கருணாநிதியின் காலில் மலர் சொறிவது போல் பிளெக்ஸ் போர்டு வைக்கப்பட்டது அதை அவரும் ரசித்தார் என்றது பத்திரிக்கை குறிப்பு.

8 மணி நேரம் சினிமா துறையினர் ஆபாச நடனங்களும் அதை விட ஆபாசமான முதுகுச் சொறியும் துதிப் பாடல்களை அரங்கேற்றி கருணாநிதியின் மனம் குளிர வைத்தனர். அதை அவரும் ஏதோ இமைய மலை வென்றெடுத்த மமதையோடும் மந்தகாச சிரிப்போடும் ரசித்தார். எழுத்தாளர் ஞானி ஒருவர் மட்டும், "இதுவா ஒரு அமைச்சரவையின் வேலை? ஒரு கல்வியாளரின் பேருரையை ஒரு மணி நேரம் இவர்கள் கேட்பார்களா?"என்றுக் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவில் குடியரசு கட்சியைச் சார்ந்த கவர்னர்கள் கூட்டம் ஒன்றில் ஒரு மதியத்தை ஒதுக்கி யேல் பல்கலைக் கழகப் பேராசிரியர், தலைச் சிறந்த அறிவியல் சம்பந்தமான பத்தி எழுத்தாளர், நியூ யார்க் டைம்ஸின் பிரசித்திப் பெற்ற எழுத்தாளர், ஆகியோரோடு நீண்ட விவாதங்கள் நடத்தினர் அமெரிக்காவில் எப்படிக் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதென்று. ஹ்ஹ்ம்ம்ம்...

கருணாநிதி எழுத்தாளர்களிடம் நட்புடன் இருப்பார். தமிழ் எழுத்தாளர்களும், ஜெயகாந்தன் உட்பட, அவரிடம் சகஜமாகவே பழகினர். பராக் ஒபாமா பல எழுத்தாளர்களுடன் நட்பில் இருந்தார். இரண்டும் வேறு வகை. முன்னதில் ஜெயகாந்தன் தவிர மற்ற அனைவரும் கிட்டத் தட்ட கருணாநிதி காலில் விழாத குறை தான். வைரமுத்துவும், அப்துல் ரகுமானும் கிட்டத்தட்ட மாவட்ட செயலாளர் ரேஞ்சில் தான் இருந்தார்கள்.

அதிமுக அடிமை கூடாரம் என்பது மட்டுமல்ல தாங்கள் அடிமைகள் என்பதும் அடிமைகளாக இருப்பதற்கு மட்டுமே தகுதியுடையவர்கள் என்பதையும் உணர்ந்தவர்களின் கூடாரம். திமுகவினர் தாங்கள் கொத்தடிமைகள் என்பதை உணராமலோ அல்லது உணர்ந்தாலும் என்னமோ தன்மானச் சிங்கங்கள் போல் பம்மாத்துக் காட்டும் அடிமைகள் நிரம்பிய கூட்டம். அண்ணாதுரை நூற்றாண்டு விழாவில் தனக்குத் தானே அண்ணா விருது அளித்துக் கொண்டு அதற்கும் தானே கவியரங்கம் ஏற்பாடு செய்து, அதற்கு ரஜினிகாந்தை அடிமையாகப் பக்கத்தில் உட்கார வைத்து இரண்டு மணி நேரம் திகட்ட திகட்ட ஒலித்த புகழாரங்களைக் கேட்டு திளைத்தார் சுய மரியாதை சிங்கம். ஜகத்ரட்சகன் தன்னை நாயாக உருவகித்துப் பேசினார். வாலியும், வைரமுத்துவும், மற்றவர்கள் பேசியதையெல்லாம் கேட்பதற்குப் பதில் ஓபிஎஸ் ஜெயலலிதா முன் நெஞ்சான்கிடையாக விழுவதைப் பார்க்கலாம்.

ஒரு மனிதனை உடல் ரீதியாகக் காலில் விழவைத்து 'நீ அடிமை' என்பதற்கு அவன் அறிவை அதிகார பலம் கொண்டோ வசீகரித்தோ வளைத்துத் தனக்குச் சேவகம் புரிய வைப்பது கொஞ்சமும் குறைவான வக்கிரமல்ல.

மேடையில் பேசிய பலரும் கருணாநிதியின் தாராள குணம் பற்றி அரற்றினார்கள். எம்ஜியார் வாழ்ந்து அரசியல் எதிரியாக இருந்த போது அவர் சட்டசபையில் தாக்கப் பட்டார், இரண்டாம் நிலைப் பேச்சாளர்கள் அவர் ஆண்மை குறித்துப் பேச ஊக்குவிக்கப்பட்டனர், அவரை மலையாளி என்று தூற்றினார்கள். ஆனால் இறந்தவுடன் 'நாற்பதாண்டு கால நட்பு" என்றாராம், திமுகக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க ஆணையிட்டாராம்.

கருணாநிதியின் அரசியல் நாகரீகம் என்பது பச்சைப் பொய். அரசியல் மேடைகளில் நாகரீகம் தொலைந்ததே அண்ணாதுரையும் கருணாநிதியும் ஈவெராவும் அரசியலுக்கு வந்த பின்னர்த் தான். இது தான் வரலாறு.

கருணாநிதியின் போராட்ட குணமும் அரசியல் சாதுர்யமும் 


இது அடுத்த மாய்மாலம். அரசியலுக்கு வரும் யாருக்கும் போராட்ட குணமிருக்கும். எம்ஜியார் கட்சி ஆரம்பித்த போது அவர் வயது முதிர்ந்தவர், அவர் சினிமா வாழ்வு தேய்பிறையிலுருந்தது, வெகு ஜன அரசியல் அறியாதவர். அவருக்கு அது ஒரு மிகச் சிக்கலான காலக்கட்டம். ஜெயலலிதா மிகுந்த போராட்ட குணமுடையவர் தான். மறுக்க முடியுமா?

கருணாநிதி என்றதும் பால்யத்தில் அவர் முன்னெடுத்த கல்லக்குடி போராட்டம் என்பார்கள். ஓடாத ரயிலின் முன் உட்கார்ந்து தர்ணா செய்தார், எழுத்துப் பலகை மீது தார் அள்ளிப் பூசினார். அவ்வளவு தான்.

இந்திப் போராட்டத்தில் முதலில் உயிர் நீத்தது நடராசன் என்னும் தலித் இளைஞர் பின்னர்த் தான் தாளமுத்து. ஆனால் திராவிட இயக்க வரலாறு அவர்களை எப்போதும் தாளமுத்து-நடராசன் என்று வரிசை மாற்றிச் சொல்கிறதே என்று ஆதங்கப் பட்டவர்கள் தான் இன்று 'என்ன இருந்தாலும்...' என்று தழுதழுக்கிறார்கள்.

எம்ஜியார் ஆட்சியில் 'நீதிக் கேட்டு நெடும் பயணம்', இலங்கைப் போராட்டம் என்று ஏதாவது செய்து கொண்டிருந்தவர் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் பெரிதும் ஓய்ந்துப் போய் விட்டார் என்பது தான் உண்மை. வயதும், உடல் நிலையும் காரணமாய் இருக்கலாம்.

கருணாநிதியின் அரசியல் சாதுர்யம் மிகவும் மிகைப் படுத்தப்பட்ட பிம்பம். எம்ஜியாருக்கு இருந்த கவர்ச்சியை மிகவுக் குறைத்து மதிப்பிட்டார் 13 ஆண்டுக் கால வனவாசம் அனுபவித்தார். 1996-இல் ஜெயலலிதா மட்டும் வளர்ப்பு மகன் திருமணம் என்ற கூத்தை நடத்தி தன் தலையில் தானே மன்னை வாரிப் போட்டுக் கொள்ளவில்லையென்றால் 1996-இல் ஆட்சியைப் பிடித்தது நடந்திருக்காது. 2001-இல் தப்பு கணக்கு. 2006-இல் கலர் டீவி என்ற போதை மருந்தை விற்று மைனாரிட்டி ஆட்சி. அதன் பிறகு இரண்டு சட்டசபை தேர்தல், ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி. அந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி வரலாறு காணாதது. ஜெயாவின் பிரச்சாரத் திறமையை, 'செய்வீர்களா', கிண்டலடித்தார்கள் ஆனால் எந்தக் கூட்டனியுமில்லாமல் தன்னந்தனியாய் ஜெயா அமோக வெற்றிப் பெற்றார்.

அடுத்தப் பெரிய கட்டமைப்பு மாநில உரிமை சுயாட்சிப் பற்றியது. அதெல்லாம் ஒரு சுக்கும் நடக்கவில்லை. சுதந்திர தினமன்று மாநில முதல்வர் கொடியேற்றலாம் என்ற ஒரு சாதனை தான். மற்றப்படி தோற்றாலும் ஜெயித்தாலும் மருமகனுக்கு முக்கிய அமைச்சரவையை மத்தியில் கெஞ்சி கூத்தாடிப் பெறுவார் அவ்வளவு தான்.

கலர் டீவி இலவசமும் தலித் மாணவர்கள் போராட்டமும்:


2006 தேர்தலில் ஆரம்பக் கால கருத்து கணிப்புகள் ஜெயலலிதா ஜெயிக்கக் கூடும் என்ற போது லயோலா கல்லூரி பொருளாதார பேராசிரியர் நாகநாதன் அறிவுரையின் மேல் எல்லோருக்கும் இலவச கலர் டீவி என்றார். முழுப் பெரும்பான்மைக் கிடைக்காமல் மைனாரிட்டி அரசாக பதியேற்றார். டீவி கொடுத்தார், பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில்.

டிசம்பர் 21 2010 சென்னை நகரம் ஸ்தம்பித்தது. பிரதான சாலையை ஒட்டியிருந்த ஆதி திராவிட மாணவர் விடுதியைச் சேர்ந்த மாணவர்கள் சாலை மறியல் செய்திருந்தார்கள். சென்னை நகரின் முழுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அந்த விடுதியைப் பற்றிய கட்டுரையை பிரண்ட்லைன் பத்திரிக்கை "Hellhole Hostels" (https://www.frontline.in/static/html/fl2802/stories/20110128280209000.htm ) என்றுத் தலைப்பிட்டது. மனுஷப் பிறவியெடுத்த யாரும் வசிக்க முடியாத இடம் நாயும் புசிக்க முடியாத உணவு. காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட எம்.சி.ராஜா மாணாவர் விடுதி மூத்திர நாத்தம் அடித்தது. ஆனால் தமிழகமே இலவச டீவியில் மானாட மயிலாடப் பார்த்து மகிழ்ந்தது.

வாளியில் தான் சாப்பாட்டை எடுத்துச் செல்ல வேண்டும். பெரியாரும் அம்பேத்கரும் புகைப்படங்களாக இருக்கிறார்கள்

அஜீத் படத்தின் தலைப்பு 'காட்பாதர்' என்று இருந்தால் தமிழ் செத்து விடுமா இல்லை அதை 'வரலாறு' என்று மாற்றியதால் தமிழ் வாழ்ந்து விடுமா? பின்னதுக்கு விலை தமிழக வரிப்பணம் நூறு கோடிக்கு ஒவ்வொரு வருடமும் ஐந்து வருடங்கள் செலவானது. எத்தனை பள்ளிகள் கல்லூரிகளுக்கான பணம் அது. யாருக்கு அதிகப் பாதிப்பு?

இட ஒதுக்கீடு கொடுத்தார் என்கிறார்கள். எந்த ஊரிலாவது அரசாங்கப் பள்ளிகள் மனித குழந்தைகள் படிக்கும் நிலையில் இருக்கிறதா? அது யாரை அதிகம் பாதித்தது? தலித்துகளைத் தானே?

அரசாங்கம் இலவச மருத்துவமனை நடத்துகிறது ஆனால் அதில் பலவும் கழிப்பறைகளை விட மோசமான நிலையில் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்தாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு வரிப்பணம் மடை மாற்றம் செய்யப் பட்டது பல்லாயிரம் கோடியாகக் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில். கிராமங்களில் நல்ல தனியார் மருத்துவமனைகள் கிடையாது. ஆக இதுவும் கிராமப் புறங்களைத் தான் பாதித்தது. மருத்துவச் செலவுகள், வரிப்பணம் இனாமாகக் கிடைப்பதால், மருத்துவமனைகளால் விஷம் போல் ஏற்றப் பட்டது தான் கண்ட பலன்.

சமச்சீர் கல்வியை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிமுகப் படுத்தியது எந்த இனத்தவரை அதிகம் பாதித்தது? சும்மா வந்து நீட் மீது பழிப் போடாதீர்கள். நீட்டில் பிரச்சனைகள் உண்டு அது வேறு விஷயம். ஆனால் எந்த இந்திய அளவிலான தேர்விலும் தமிழக மாணவர்கள் சோபிப்பதில்லை. இன்று சாதாரணத் தொழிலாளி கூடப் பிள்ளைகளைப் பல்லாயிரம் செலவழித்துத் தனியார் பள்ளிக்குத் தான் அனுப்புகிறார். இது தான் நிதர்சனம். இந்தியாவிலேயே தமிழ் நாடு தான் கல்விக் கடனில் முதல். இது யாரை பாதிக்கிறது நண்பர்களே?

"கலைஞர் ஆட்சி வந்திருந்தால் நாங்கள் வேலைக்குப் போயிருப்போம்" என்று தமிழக ஆசிரியர் படிப்புப் பட்டதாரிகள் சொன்னதை நிலைத் தகவலாகப் பகிர்வது வேடிக்கை. 1996-2001 கல்வி அமைச்சராக இருந்த அன்பழகன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி திறப்பதில் ஊழல் செய்தவர் (தனிப்பட்ட முறையில் தெரியும்). இன்றைய தமிழக ஆசிரியர் பட்டப் படிப்பு படித்த பலர் ஆசிரியர் தேர்வில் தோற்றார்கள் இது தான் பலரின் தரம். எல்லாமே சீரழிந்தது கல்வியைப் பொறுத்தவரை. இதற்கு ஜெயா அரசுகளும் காரணம் தான். ஆனால் யாரும் ஜெயலலிதாவை கல்வியின் காவலர் என்று தலையில் தூக்கி வைத்து ஆடுவதில்லையே. கொஞ்சமாவது மன சாட்சியோடு துதிப் பாடுங்கள்.

இட ஒதுக்கீட்டை பெருமளவு உயர்த்தியது எம்ஜியார். அதற்குச் சட்ட பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தது ஜெயலலிதா. மறுக்க முடியுமா? 1967-77 பத்து வருடக் காலம் ஒரு தொழில் கல்லூரி கூடத் தொடங்கப்படவில்லை தெரியுமா? மன சாட்சியை உறங்க வைத்தால் தான் கருணாநிதி புகழ் பாட முடியும்.

நவோதயாப் பள்ளிகலள் மற்ற மாநிலங்களில் தலித்துகளுக்கு அதிகம் உதவியது. அவற்றைத் தமிழ் நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்து குலக் கல்வியைத் திணித்தது எந்த மகானுபவர்? சிந்திப்பீர்.

பெரியார் என்கிற பிம்பம். திமுகவும் திருமாவும்:


பெரியார் என்கிற பிம்பத்தை வளர்த்து அயோத்தி தாசர் இருட்டடிப்புச் செய்யப் பட்டார் என்று உங்கள் நண்பரும் ஆய்வாளருமான ஸ்டாலின் ராஜாங்கம் தான் சொல்கிறார். பெரியாரை விமர்சித்து எழுதிய ரவிக் குமார் சந்தித்த சவால்கள் ஊரறியுமே. சவால்கள் எங்கிருந்து முளைத்தன? மறந்ததோ?

மு.க.வின் ஜாதிக் குறித்துப் பாமக வட்டாரங்களில் எப்போதும் நக்கல் இருக்கும் ஆனால் எளிதாக ஒரு கல்யாணப் பத்திரிக்கைக் கொடுக்கப் போன இடத்தில் தேர்தல் உடன்படிக்கையயும் முடித்து விட்டு எகத்தாளச் சிரிப்போடு வெளி வந்தார் ராமதாஸ். தேர்தல் சமயத்தில் ஜாதிக் கட்சி ஆரம்பித்த கண்ணப்பனுக்கு அள்ளிக் கொடுத்தார்கள் 7 சீட்டுகள். விசிகவுக்கு முதலில் கொடுத்தது 1, சமீபத்தில், இன்னும் 1 கிடைப்பதற்குத் திருமா பகீரதப் பிரயத்தனம் செய்தார். தகவல் சரி தானே?

திருமாவை செத்துப் போ என்றும் அவர் ஜாதியைக் குறித்தும் திமுகவினர் ஏசியதெல்லாம் மறந்ததா? யார் கொடுத்த கலாசாரம் அது?

திமுகவினர் பிராமணர்களை மிக, மிக ஆபாசமாக ஏசியிருக்கிறார்கள் ஆனால் என்றாவது சோ அல்லது சுவாமி வீட்டுக்கு புடவையும் உடைந்த வளையல்களையும் பார்சல் அனுப்பியிருக்கிறார்களா திமுகவினர்? அந்தப் பாக்கியம் தனபாலுக்குத் தானே கிடைத்தது? மறந்து விட்டீர்களா நண்பர்களே? பிராமணக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரை திட்டுவதற்கு 'அவாள்' கவிதை தான் அதிகப் பட்சம்.

தீண்டாமைச் சுவர் பிரச்சனைகளில் உதவுவது கம்யூனிஸ்ட் கட்சியினர் தானே? என்றாவது திமுகவினர் கீழ்வெண்மணி பற்றியோ இம்மானுவேல் சேகரன் பற்றியோ பேசியதுண்டா?

நிலம் எங்கள் உரிமை என்று இரண்டு ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டவருக்காகக் கோஷம் எழுப்புவது நிலமற்ற உங்கள் சகோதரனை கேலிச் செய்வது. கலைஞரின் இந்து மதத் துவேஷத்தையும் அம்பேத்கரின் இந்து மதத் துவேஷத்தையும் ஒப்பிட்டு கலைஞரை அம்பேத்கருக்கு அருகில் வேறு யாராவது நிறுத்தியிருந்தால் தலித்துகள் சும்மா விடுவார்களா? விடலாமா? சுருட்டுப் புடிச்சவரெல்லாம் சர்ச்சில் இல்லை. அது சரி 'ராமன் எந்தக் கல்லூரியில் இஞ்னியரிங் படித்தார்' என்று கேட்டவர் 'புத்தர் எங்கே படித்தார்' என்றோ 'ஆசையைத் துறந்தவனுமில்லை அழுக்குத் தீர குளித்தவனுமில்லை' என்று பேசினால் என்ன செய்வீர்கள். அம்பேத்கரை மணந்த பிராமணப் பெண் பற்றிப் பெரியார் பேசியதை மறந்தீர்களோ?

ஆ.ராசா மட்டும் தனியே மாட்டியிருந்தால் கை கழுவி இருப்பார்கள். நல்ல காலம் கனிமொழியும் சேர்ந்தே மாட்டினார். அப்படியிருந்தும் ராசா தன் சொந்த திறமையால் தானே வெளிவந்தார். திமுக என்ன கிழித்தது ராசாவுக்கு? ராசா மிகத் திறமையாகப் பேசுகிறார் பேட்டிகளில் ஆனால் திமுகவில் அடுத்தப் பட்டத்து இளவரசர் மூன்றாம் கலைஞர் தானே? ராசாவின் இடம் எங்கே? உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.

உணர்ச்சி வசப்படலாம் ஆனால் உண்மைகளைக் காற்றில் பறக்க விடலாமா?



கருணாநிதியும் மதியிழந்த சமூகமும். ஆபாசமும் வெறுப்பரசியலும்.

கருணாநிதி என்கிற சகாப்தம் முடிந்துவிட்டது. 70 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக மற்றும் இந்திய அரசியலிலும் ஓர் பெரும் சக்தியாக விளங்கியவர் மறைந்துவிட்டார். 94 வயது வரை வாழ்ந்து ஓர் யுகத்தின் அடையாளமாக இருந்தவர் ஓய்ந்துவிட்டார். ஆம் அவர் ஒரு வரலாறு தான். ஆனால் வரலாற்றின் சிக்கலே அவர் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளும் அவரின் ஏற்றத் தாழ்வுகளும் தான். கடந்த ஒரு வார காலமாகத் திகட்டத் திகட்ட அவரைப் புனிதராக்கி விட்டார்கள். வாசகர்கள் பயப்பட வேண்டாம் நான் ஒன்றும் அவர் வாழ்வின் ஓவ்வொரு தருணத்தையும் பிரித்து மேய்ந்து வரலாறு எழுதப் போவதில்லை. 2016 மாநிலத் தேர்தலுக்கு முன் எழுதிய பதிவு மிக விரிவானது (சுட்டி கட்டுரையின் முடிவிலுள்ளது) . ஆனால் சில உண்மைகளை மீண்டும் சொல்ல வேண்டும். இந்த மரணம் உறுதிப் படுத்திய உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும்.

நல்லவை:


முதலில் நல்லவை சில. கருணாநிதி ஊக்கத்தோடு செயல்பட்டிருந்தால் இப்படி நடக்கவிட்டிருப்பாரா என்று எண்ணிய சமீபத்திய தருணம் வைரமுத்துவின் ஆண்டாள் சர்ச்சையின் போது. வைரமுத்து கிட்டத்தட்ட அநாதையாகியிருந்தார் அவரை மிக மிகக் கீழ்த்தரமாக எட்டுத் திக்கிலிருந்தும் பிராமணர்கள் தாக்கினார்கள். சிவாஜியை மரணத்துக்குத் தள்ளியது ஜெயலலிதா அவர் குடும்பத்தைப் படுத்திய பாடு. சிவாஜி இறந்த போது கருணாநிதி ஆட்சியில் இல்லை. இரங்கல் தெரிவிக்க வந்தவர் சிவாஜியை உடலைப் பார்த்து அழுது "போறதுன்னு முடிவாயிடுச்சுன்னா நான் ஆட்சியில் இருக்கும் போது போயிருக்கலாமே" என்றார். ஆம், அவர் ஆட்சியில் இருக்கும் போது சிவாஜி இறந்திருந்தால் அரசு மரியாதையே செய்திருப்பார். சிவாஜிக்கு கொடுத்து வைக்கவில்லை.

கருணாநிதியின் உழைப்பு அசாத்தியமானது. கடவுளோ இயற்கையோ எதுவோ அவருக்கு நீண்ட ஆயுளையும் கிட்டத்தட்ட இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு வரையிலாவது நல்ல செயல்பாட்டுடன் இருக்கும் அறிவுத் திறன் இருந்தது. அவரின் நினைவாற்றல், கூர்மையான சாதுர்யம், அரசியல் சதுரங்க ஆட்டம், நிர்வாகத் திறன், போராட்ட குணம், தோல்விக் கண்டு துவளாமை என்று எந்தச் சராசரி மனிதனும் வியக்கும் குண நலன்கள் உண்டு அவரிடம். எங்கோ ஒரு கிராமத்தில் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்து இன்று கோடிக்கணக்கானோர், அதுவும் பல தலைமுறைகள், கண்ணீர் சிந்த வாழ்க்கைப் பயணம் முடிவடைவது மாபெரும் சாதனை.

ஏன் இந்தப் பதிவு:


ஒரு மரணம் என்பது ஒரு வாழ்க்கையின் பயணத்தை நேர்மையோடு தொகுத்துப் பார்க்கத் தூண்டும் நேரம். தமிழ் நாட்டிலோ மரணம் என்பது புனிதர்களை உருவாக்கும் தருணங்களாகிவிட்டது. ஜெயலலிதா இறந்த போது "இரும்பு மனுஷி இறந்தார்" என்று அலறினப் பத்திரிக்கையெல்லாம். இன்று அதே பத்திரிக்கைகள் வேறு விதமாகக் கூவுகின்றன. ஜெயலலிதா பற்றி நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறேன் அவரின் நல்லவை, அல்லவைகளைப் பட்டியலிட்டு. அது அவர் 2014-இல் கைதானப் போது எழுதியது. அவர் இறந்த போது இப்படிப் பிரத்தியேகமாக எழுதத் தோன்றவில்லை. அதற்கான காரணம் இணையத்தில் திமுகவுக்கு இருப்பது போல் அதிமுகவுக்குக் கம்பு சுத்த அவ்வளவாக யாருமில்லை, மேலும் ஜெயலலிதாவை யாரும் இன்று கருணாநிதியைப் புனிதராக்குவது போல் ஆக்கவில்லை. ஜெயலலிதா இறந்த போது அவர் மீதான ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் இருந்தது எல்லோர் மனத்திலும் எழுத்திலும் தெரிந்தது. இன்று அப்படியல்ல. அதற்கு மேலாக ஜெயலலிதா இறந்த போது பார்க்காத சில அவலங்களை இப்போது பார்க்க நேர்கிறது ஆகவே எழுதுகிறேன்.

ஒரு விளக்கம்


மேலும் படிப்பதற்கு முன் ஒரு விளக்கம். சிலர் நினைப்பது போல் கருணாநிதி 'மருத்துவர் பிள்ளைகள் மருத்துவர் ஆகக் கூடாது' என்ற பிரகடனத்தோடு கொண்டு வந்த பட்டம் பெறாத பெற்றோறின் பிள்ளைகளுக்கு மொத்த மதிப்பெண்ணோடு 5 மதிப்பெண் இலவசம் என்ற மோசடித் திட்டத்தால் பாதிக்கப்பட்டதால் அவர் மீது வன்மமெல்லாம் இல்லை. இன்று நான் சுபிட்சமாகவே இருக்கிறேன். கனவுக் காணும் உரிமைகளற்ற முன்னேறிய வகுப்பினன் என்பதால் +2 படிக்கும் போதே மருத்துவமோ பொறியியலோ எது கிடைக்கிறதோ அதைப் படிக்க வேண்டும் என்ற தெளிவிருந்தது. ஆகா "நீ சமூக நீதிக்கு எதிரானவன்" என்று யாரும் மூக்கை சிந்த வேண்டாம். சமூக நீதிப் போராளிகளில் எத்தனை பேர் இரண்டாம், மூன்றாம் தலைமுறை பயனாளர்கள், எத்தனை பேர் போலி சான்றிதழளாளர்கள் என்பது ஊரறியும். 1996-இல் கருணாநிதி ஜெயிக்க வேண்டும் என்று எண்ணாதவர்கள் இல்லை. நானும் ஒருவன். கல்லூரி மேடைகளில் அக்காலத்தில் ஜெயலலிதாவை விமர்சித்தே தான் பேசியிருக்கிறேன். 2001-லும் திமுகவே ஜெயிக்க வேண்டும் என்று விரும்பினேன் ஏனென்றால் தர்மபுரி பஸ் எரிப்பெல்லாம் பார்த்ததால். நம்ப முடியாதவர்கள் நம்பத் தேவையில்லை. சரி அந்த 5-மார்க் விவகாரம் தான் காரணம் என்றாலும் என் விமர்சனம் பொய்யாகிவிடுமா? நான் வைக்கும் தர்க்கங்களை முறிக்க என் உந்துதல் பற்றிய ஆராய்ச்சித் தேவையில்லாதது முடிந்தால் உங்கள் பக்கத்துத் தர்க்கங்களை முன் வையுங்கள், தர்க்க ரீதியாக.

தரம் தாழ்ந்த 'தி இந்து' பத்திரிக்கை: 


'தி இந்து' பத்திரிக்கை குறித்து ஜவஹர்லால் நேரு தன் சுயசரிதையில் கூறுகிறார், "இந்தியர்கள் நடத்தும் ஆங்கிலப் பத்திரிக்கைகளி 'தி இந்து' அளவுக்குச் சிறப்பானது வேறில்லை. அப்பத்திரிக்கை வரம்பு மீறிய குறும்பான சொல் ஒன்றைக் கேட்டால் முகம் சுளிக்கும் கண்டிப்பான ஒழுக்கமுடைய மூதாட்டியைப் போன்று எனக்குத் தோன்றும். அது வாழ்வில் மேட்டுக்குடிகளுக்கானது. ஏற்றத் தாழ்வுகள் ஊடைய வாழ்வின் நிழற்பக்கங்கள் அதுக்கு ஒவ்வாதது. வேறு பத்திரிக்கைகளும் இந்த ஒழுக்கமான மூதாட்டி மனநிலையோடு செயல்படுகின்றன ஆனால் அவை 'தி இந்து' போல் சிறப்பாக இல்லை" (roughly translated).

கருணாநிதிக்கும் இந்துப் பத்திரிக்கைக்கும், இன்னும் சொல்லப் போனால் பிராமணர்களுக்கும், என்றும் ஓரு அன்பும்-கடிதலும் மாறி மாறி வரும் உறவுண்டு. அவருக்குப் பிடிக்காதது அல்லது அவரை விமர்சித்தால் இந்துப் பத்திரிக்கையை 'மவுண்ட் ரோடு மஹா விஷ்ணு' என்பார். அவரைப் பாராட்டி இந்துப் பத்திரிக்கை தலையங்கம் தீட்டினால் 'உடன் பிறப்பே இந்துப் பத்திரிக்கையே சொல்கிறது' என்று புளங்காகிதம் அடைவார். அவர் மகள் கனிமொழி ஒரு காலத்தில் இந்துவில் தான் பணியாற்றினார். என்.ராம் அடிக்கடி திமுக மேடைகளில் தோன்றுவார். 'இந்து' பத்திரிக்கை கருணாநிதியை விட ஜெயாவோடு தான் அதிகம் மோதியது.

கருணாநிதி இறந்தவுடன் முரசொலியோடு போட்டிப் போட்டது 'தி இந்து'. 'தமிழ் தி இந்து' சமஸ் புண்ணியத்தில் எப்போதோ முரசொலியை விஞ்சிவிட்டது. மொரார்ஜி, இந்திரா ஆகியோரை சமாளித்த கருணாநிதி என்றொரு கட்டுரை. கர்மம். மிகச் சாதாரணச் சொல்லாடல்களை என்னமோ சாக்ரடீஸ் ரேஞ்சுக்குக் கொண்டாடியிருந்தது. சரி அது தான் தொலயட்டும் என்றால் கருணாநிதி 'நேருவின் மகளே வருக நிலையான ஆட்சித் தருக' என்று அரசியல் ஆதாயத்துக்காக அடித்த அந்தர் பல்டியை அது கேவலமான அரசியல் பிழைப்புவாதம் என்ற விமர்சனம் இல்லாமலே கடந்து சென்றது. ஆனால் அதையெல்லாம் விஞ்சியது ஒரு நிகழ்வைப் பற்றிய நினைவுக் கூறல்.

எமெர்ஜன்ஸி காலத்தின் போது சிறைப்பட்ட திமுகவினர் வீடுகளுக்கு ரூ.200 அனுப்பி வைத்தாராம் மாதா மாதம். பிற்காலத்தில் ஏதோ ஒரு விழாவில் ஆபாச நாராச பேச்சுகளுக்குப் பெயர் போன வெற்றிக் கொண்டான் "என் வீட்டுக்கு மட்டும் ரூ.100 தான் வந்தது என்று என் மனைவி சொன்னாள்" என்றாராம். அடுத்துப் பேசிய முத்தமிழ் அறிஞர் "அதற்குக் காரணம் உன் இரண்டாவது மனைவிக்கு அடுத்தப் பாதி ரூ.100 அனுப்பப்பட்டது. இரண்டு பெண்டாட்டி கஷ்டம் எனக்குத் தெரியும்" என்றாராம். இந்த அசிங்க கர்மத்தை 'தி இந்து' வெளியிட்டுக் கொண்டாடியிருக்கிறது. இதுக்குப் பேசாமல் பத்திரிக்கையை மூடி விட்டு 'வண்ணத் திரை' நடத்தலாம்.

இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி வாழ்நாள் போராளி என்றும் கடைசிக் காலத்தில் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டவர் என்றும் ஒரு கட்டுரைச் சொன்னது. கருணாநிதியைப் பொறுத்தவரை பல விஷயங்கள் 'பொய்யாய், பழங்கதையாய் மெல்ல மெல்லப் போனதுவே தான்'. தமிழ் மொழி, இலங்கைப் பிரச்சினை எல்லாமே ஆரம்பத்தில் கொள்கை, சித்தாந்தம் என்று தான் ஆரம்பிக்கும் அப்புறம் பாதி வழிக்கு மேல் அது வெறும் பிழைப்புவாதமாகி இருக்கும். 1980-களில் இலங்கைப் பர்ச்சினை அவருக்கு அரசியல் சித்து விளையாட்டுக்குத் தான் பயன் பட்டது. அதற்கு மகுடம் வைத்தது அந்த 2009 உண்ணாவிரதம் என்கிற கூத்து. நடப்பதோ இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் போர். இவரோ மாநில அரசியல் தலைவர். இவர் உண்ணாவிரதம் இருந்தாராம், மத்திய அரசு இலங்கையோடு பேசியதாம், போர் நிறுத்தம் ஏற்பட்டதாம், இவர் உண்ணாவிரதத்தைக் கலைத்தாராம். இதை விட அத்தைக்கு மீசை முளைத்தது பார் என்று சொல்லியிருக்கலாம். இதையெல்லாம் உடன் பிறப்புகள் விடலைத்தனமாக நரம்பு புடைக்கச் சொல்லலாம் ஒரு பத்திரிக்கை அதைச் செய்யலாமா?

கருணாநிதியின் தமிழ் சினிமா வசனத்தின் வசீகரம் போல் கட்டமைக்கப்பட்ட பிம்பம் வேறொன்றுமில்லை. 'மனோகரா' தர்பார் வசனத்தைப் பேப்பரில் எழுதிப் படித்துப் பாருங்கள். வெறும் குப்பை. 'உன் குடலை உருவிடுவேன். உன் எலும்ப நொறுக்கிடுவேன், எங்க ஆத்தா மேல சத்தியம், அந்த அவுசாரிய என்ன பன்றேன் பாரு' இது தான் அந்த நெடிய வசனத்தின் சாரம். குப்பை. இவர் 'நான் தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்' என்பார். கண்ணதாசன், 'தென்றலை நாம் தீண்ட முடியாது அதுவாக நம்மைத் தீண்டினால் தான் உண்டு' என்று கிண்டலோடு திருத்துவார். சும்மாவாச்சும் 'விதவை என்று எழுதினால் கூடப் பொட்டு வைக்க முடிவதில்லையே' என்று யாரோ புலம்ப இவர் 'விதவை என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதிலாகக் கைம்பெண் என்ற தமிழ் சொல் பயன்படுத்தினால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாம்' என்று சொன்னதை இன்னமும் கண்ணீர் மல்க உடன் பிறப்புகள் குறிப்பிடுவார்கள். கர்மம். இது தான் நம்மவர்களுக்குத் தமிழ்ப் புலமை.

வெள்ளித் திரைக்குத் திராவிடக் கருத்தியலைக் கொண்டு சென்றாராம். தலையில் அடித்துக் கொள்ள வேண்டும். 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்று கண்ணாம்பா உருகிப் பேசும் வசனம் மடமையும் மூட நம்பிக்கையும் போட்டிப் போடும் வசனம். சிலப்பதிகாரத்தைக் கிட்டத்தட்ட மதமாகவே மாற்றினார் கருணாநிதி. அதுவோ அவர் பார்வையில் சொன்னால் மூட நம்பிக்கைகள் கொண்ட சமணக் காவியம். அதை எதிர்த்திருக்க வேண்டியவரே அவர் தான்.

இன்னொரு கட்டுரை கருணாநிதி நடத்திய 2010-ஆம் ஆண்டுச் செம்மொழி மாநாட்டை ஆகா ஓகோவென்று புகழ்கிறது. அது வெறும் தண்டம். மக்கள் வரிப்பணத்தைத் தற்பெருமைக்காக வாரியிறைத்தார் தன் வாழ் நாளெல்லாம் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தியவர். அதே நாட்களில் நான் தஞ்சையில் இருந்தேன். எம்ஜியார் கட்டினார் என்பதற்காகவே தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தைச் சீரழிய விட்டிருந்தார் இந்தத் தமிழ்ப் போராளி. பல்கலைக் கழகம் சிதிலமடைந்திருந்தது அப்போது. அதெல்லாம் மவுண்ட் ரோடில் உட்கார்ந்து கொண்டு காலாட்டிய படியே கட்டுரை எழுதும் ராமகிருஷ்ணன்களுக்குத் தெரியாது. கருணாநிதியின் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி தான் பயின்றனர் அதுவும் நகரின் விலையுயர்ந்தப் பள்ளிகளில்.

ஜெயகாந்தன் முன்பு அண்ணாதுரை பற்றிப் பேசியது:

"பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை"

அது இன்றும் கருணாநிதிக்கும் பொருந்தும். கலைஞர் விருதை பின்னாளில் கருணாநிதியிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஜெயகாந்தன் மேற்சொன்ன எதையும் பின் வாங்கவில்லை. கருணாநிதி கொடுத்தார் ஜெயகாந்தன் வாங்கிக் கொண்டார். அவ்வளவு தான்.

'தி இந்து' பத்திரிக்கை ஆசிரியர் திமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

கருணாநிதியின் கவித் திறனும் ஆபாச மனமும்: 


கருணாநிதிக்கு இல்லாதது கவித் திறன். அபாரமாக இருப்பதோ இரட்டை அர்த்தம், இல்லையில்லை அதெல்லாம் விடலைகள் செய்வது, நேரடியாக ஆபாசமாகப் பேசுவது. இணையத்தில் பிரபலமாக இருக்கும் அவர் படிக்கும் கவிதை ஒன்றை ஒரு தற்குறி இன்று ஒரு பேட்டியில் பெருமைப் பொங்க குறிப்பிட்டார். மேற்கொண்டு படிப்போருக்கு ஓர் எச்சரிக்கை இது சரோஜா தேவி வகை. கருணாநிதி விவகாரமாச்சே.

கவிதையை, அப்படித்தான் அதைச் சொல்கிறார்கள், கேட்டால் எம்ஜியார் காலத்தில் ஏதோவொரு இடைத் தேர்தலில் தோற்றப் பிறகு நடத்தப்படும் திமுக முப்பெரும் விழாவில் படித்தது, தோற்றவர்கள் ஏன் விழா எடுக்கிறார்கள் என்று யாரோ கிண்டல் செய்திருக்கிறார்கள் அதற்குப் பதில் சொல்லும் விதமாகக் கவிதை என்ற பெயரில் ஒன்றை படிக்கிறார் முத்தமிழ் ஆசான்.

பின்னாளில் இவரும் இவர் மகனும் கட்டவிழ்த்துவிட்ட 'திருமங்கலம் பார்முலா' எம்ஜியார் காலத்து இடைத் தேர்தல் தில்லுமுல்லுவையெல்லாம் சிறு பிள்ளை விளையாட்டாக்கியது. அந்தக் கவிதையில் எம்ஜியார் என்னமோ தில்லாலங்கடிச் செய்துவிட்டார் என்பதைக் குறிப்பிட்டு எம்ஜியாரின் பெயரான ராமச்சந்திரனை சிலேடையாக்கி ராமனின் வாலி வதத்தோடு முடிச்சுப் போட்டிருப்பார். என்ன செய்வது நம்மவர் தரத்துக்கு அது தான் சிலேடை. அதற்குப் பின் தான் கச்சேரி களைக் கட்டும். இப்படித் தோல்வியுற்றப் பின் ஏன் விழா எடுக்கும் மனோபாவம் என்பதற்கு விவரிக்கத் தொடங்குகிறார், "படுக்கையில் இருந்தேன், அப்போது பக்கமது நெருக்கமாகப் படுத்துக் கொண்டு, வெட்கமது சிறிதுமில்லாமல், என்னை ஒருத்தி ஓடி வந்து தழுவிக் கொண்டாள்". அப்போது திமுக விடலைகளின் சீட்டி சத்தமும் கரவொலியும் காதைப் பிளக்கிறது. மேலும், "அவளை அள்ளி அணைப்பதற்கு நான் முயலவில்லை என்றாலும், தள்ளிவிட மனமில்லை, தழுவட்டும் என்றிருந்தேன், அதன் பின்னர் மற்றொருத்தி வந்தாள்". அரங்கம் அதிர்கிறது இப்போது. அநேகமாகப் பல உடன் பிறப்புகள் உச்சம் எய்தியிருப்பார்கள். "என்ன இது இரு மங்கை ஒரு படுக்கை எனக் கேட்பீர், பொறுத்திடுக". கூட்டம் கெக்கலிக்கிறது. "முதலில் வந்தவள் பெயர் தூக்கம், மற்றொருத்தி கனவு மங்கை". ஆஹா இதல்லவோ தமிழ்ப் புலமை. இவனல்லவோ நமக்கு வாய்த்திட்ட 20-ஆம் நூற்றாண்டு கவிச் சக்கரவர்த்தி என்கிறார்கள். அற்பர் கூட்டம். மூடர் கூடம்.

ஒரு வசன வரியை ஒரு முறைக்கு இரு முறை ஒவ்வொரு வரியையும் படித்தால் அதுவே அதைக் கவிதையாக்கிவிடும் என்று எந்தச் சண்டாளனோ அவரிடம் சொல்லிவிட்டான். ஒவ்வொரு வரியையும் இரண்டிரண்டு முறை படிக்கிறார். ஒரு வேளை திமுகத் தற்குறிகளுக்குச் சரோஜா தேவி மேட்டர் என்றாலும் இரண்டு முறை சொன்னால் தான் புரியும் என்று நினைத்தாரோ அந்தப் புண்ணியவான்?

இன்னொரு காணொளி இருக்கிறது. சுந்தர்.சி படத்தைப் பார்த்துவிட்டுப் பேசுவது. 80-களில் இளமைத் துள்ள வேண்டும் என்று மனப்பால் குடிக்கும் ஒருவரின் வயோதிக-வாலிப பேச்சு. அப்போது அவர் முதல்வர். இவர் மட்டும் முழு நேர எழுத்தாளராகியிருந்தால் சரோஜா தேவி என்ற அந்தப் புனைப் பெயர் இவருடையதோ என்று எண்ணும் அளவுக்குக் காத்திரமான படைப்புகள் வந்திருக்கும்.

பகுத்தறிவு மாய்மாலம்:


ஒருவர் எழுதுகிறார் கலைஞரை இந்து மத ஆச்சாரங்கள் எதையும் செய்யாமல் நாத்திகராகவே அனுப்பி வைத்தார்களாம். அந்த அம்மணிக்குத் தெரியாது இறந்த ஒருவருக்கு பூ வைத்து அவரை நோக்கித் தொழுவது நாத்திகம் இல்லை. 'பிணத்தினைப் போற்றேல்' என்கிறான் நம் ஆசான் பாரதி. உடன் பிறப்புகள் 'எழுந்து வா' என்று கூக்குரலிட்டார்களாம் அவர் ஆயுள் நீண்டதாம். இது தான் பகுத்தறிவு மாய்மாலம் என்பது. பகுத்தறிவு என்பது மரணத்தின் நிச்சயம் உணர்வது. அதுவும் 94-வயது முதியவர் இறக்கலாம் எனும் போது வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது பகுத்தறிவு அல்ல. கருணாநிதி நல்ல ஆத்திகர். அவர் கடவுள்கள் ஈ.வெ.ராவும் அண்ணாதுரையும்.

வெறுப்பரசியல்: 


கருணாநிதியை மெரினா கடற்கரையில் புதைப்பதில் சிக்கல். மாநில செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பிராமணப் பெண், அங்கே புதைக்க அனுமதிப்பு சட்ட சிக்கல்கள் நிறைந்தது என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அவ்வளவு தான் இணையம் தகித்தது. அவருக்கு நகரின் மையத்தில் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாகச் சொல்லப்பட்டது. 'கக்கூஸ்' என்ற ஆவணப் படம் எடுத்து அதனாலேயே தனக்குப் பின் ஒரு ஒளிவட்டம் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் திவ்யா பாரதி என்பவர், "நிங்க ஒதுக்கறதா சொன்ன அந்த இரண்டு ஏக்கர் நிலத்துல எடப்பாடிக்கும் கிரிஜாவுக்கும் வேணும்னா சமாதி கட்டி விளையாடுங்க" என்று எழுதினார். அதற்குப் பின்னூட்டத்தில் வந்தவற்றுள் ஒன்று, "கழுகளுக்குப் பசியாற கொடுக்கலாம்". இங்கே இந்தத் திரியில் வந்து பதவிசாக இப்படியெல்லாம் எழுத வேண்டாமே என்று வருடிக் கொடுத்த நாச்சியாள் சுகந்தி என்பவரின் பேஸ்புக் பக்கமும் அந்த லட்சணத்தில் தான் இருந்தது.

யமுனா ராஜேந்திரன் என்றொருவர் பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன அடிமைகளைத் தவிர எல்லோரும் ஒன்று திரண்டு விட்டார்களாம் கலைஞரின் பின்னால் என்றார். அப்புறம் என்ன தலைமுடிக்கு அந்தக் கட்சி தொடர்ந்து மூன்று தேர்தலில் தோற்றது? இதை மறு பகிர்வு செய்த ஜெயகாந்தனின் பெண் 'Spot the Hyenas' என்கிறார். பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ.

எல்லோரும் தத்தம் புகைப்படம் எல்லாம் போட்டு இதையெல்லாம் பகிரங்கமாகவே பேசுகிறார்கள். இன்னொரு பத்திரிக்கையாளர், பிரண்ட்லைனில் வேலைச் செய்பவர், குருமூர்த்தியை ஒரு துளி விஷம் என்றார். சரி அவர் ஒரு துளியென்றால் அவரால் விஷமாக்கப்பட்டதாகச் சித்தரிக்கப்படும் பால் குடம் என்ன பிராமணர்கள் அனைவருமா? அப்படியென்றால் அவர்களை அவர் என்ன செய்வதாக உத்தேசம்? கொலைக் களனா? பிராமணர்களில் சிலராவது கருணாநிதியை நாராசமாகப் பேசியிருக்கிறார்களா? நிச்சயமாக. ஆனால் நான் பார்த்த வரை யாரும் கருணாநிதி ஒரு துளி விஷம் என்று சொல்லி அவர் சார்ந்த ஜாதியினரை ஒட்டு மொத்தமாக விஷம் என்று உருவகிக்கவில்லை.

தமிழ் நாட்டில் பிராமணர்கள் மட்டுமே ஜாதி வெறியர்களாகவும் ஆண்டப் பெருமை பேசுபவர்களாகவும் இருந்திருந்தால் இந்நேரம் தமிழகம் ஜாதியற்ற சமூகமாகியிருக்கும். ஆனால் கீழ் வெண்மணி முதல் தர்மபுரி வரை நிதர்சனமும் உண்மையும் வேறு.

உண்மையிலேயே எந்தக் கூச்சமோ அருவருப்போ இல்லாமல் பிராமணர்களை ஆபாசமாக வசைப் பாடுகிறார்கள். கடந்த ஒரு வாரமாகத் தமிழில் எழுதப் பட்ட பேஸ்புக் குறிப்புகளைத் தொகுத்து அயலான் ஒருவன் ஆராய்ந்தால் தமிழ் நாடு உலகின் மிகப் பெரிய மன நோய் விடுதி என்றும் நாஜி ஜெர்மனி போன்றது என்றும் நினைப்பான். ஐயா வாசகரே, பிராமண வாசகர்களையும் சேர்த்தே சொல்கிறேன், நான் ஒன்றும் பிராமணர்கள் யூதர்கள் என்றோ அவர்களைப் போல் ஒடுக்கப் பட்டார்கள் என்றோ சொல்லவில்லை. இங்கு நான் சொல்வது புழங்கும் வெறுப்பைத் தான்.

சக மனிதன் தன்னைத் தொடக் கூடாது என்று ஒருவன் நினைக்கக் கூடாது அப்படி நினைப்பதும் செய்வதும் வன்முறையே அது கேவலம் என்று நினைப்பவன் நான். அதே மாதிரி ஒருவனின் குலத்தை வைத்து "சமாதியில் போடு" என்பதும் கழுகு தின்னட்டும் என்பதும் மிருக நிலை. இப்படி வெளிப்படையாக ஒரு இனத்தை வெறுப்பதை அவர்களை இப்படிப் பேசுவதையும் பெருமையாக நினைக்கும் மன நோய் வேறெங்கும் இல்லை. இது தான் ஈ.வெ.ராவும், அண்ணாதுரையும், கருணாநிதியும் நெய்யூற்றி வளர்த்த வெறுப்பரசியல்.

பொது வெளியில் கருணாநிதியின் ஜாதியை எள்ளி நகையாடிப் பேசியது வைகோவும் காடுவெட்டி குருவும். பிராமணர்களல்ல. அதையெல்லாம் கண்டிக்கவோ சுட்டிக் காட்டவோ துப்பில்லாதவர்கள் தான் என்னமோ பிராமணக் குலமே ஒன்று திரண்டு கருணாநிதிக்கு எதிராக நிற்பதைப் போல் பிம்பம் உருவாக்குகிறார்கள். தமிழ் நாட்டில் ஒருவன் எத்தகைய கயவனாகவோ முட்டாளாகவோ மூர்க்கனாகவோ இருக்கலாம் ஆனால் அத்தனை பாவத்தையும் கழுவி புண்ணியம் தேடித் தரத்தக்க தாரக மந்திரம் 'பார்ப்பண எதிர்ப்பு'. இரண்டு வரியாவது 'பார்ப்பான்', 'பாப்பாத்தி' என்று எழுதி விட்டால் போதும் ஒருவனோ ஒருத்தியோ எவ்வளவு முட்டாள் தனமான கருத்தையும் சமூக நீதி என்று முலாம் பூசி விற்று விடலாம்.

பிராமணர்கள் சத் புத்திரர்களா என்றால் நிச்சயமாக இல்லை. இன்று மோடிக்கு ஜால்ரா அடிக்காத இந்துத்துவத் தமிழ் பிராமணர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களுக்கு இரண்டு வரியாவது சிறு பான்மையினரை ஆபாசமாக எழுதி விட்டால் போதும் ஒருவனோ ஒருத்தியோ எவ்வளவு முட்டாள் தனமான கருத்தையும் தேசியம் அல்லது பாரம்பர்யம் என்று முலாம் பூசி விற்று விடலாம். ஆனால் அதைக் கண்டிக்கும் உரிமை திராவிட இயக்க வெறுப்பு வியா

கழகக் கண்மணிகமள் "ஆகா நிலம் எங்கள் உரிமை. இறந்த பிறகும் என் தலைவன் போராட வேண்டியிருக்கிறதே" என்று ஆர்த்தெழுந்தார்கள். சோகமான உண்மை இதற்குச் சில தலித்துகளும், திருமாவளவன் உட்பட, இதில் சேர்ந்துக் கொண்டார்கள். ஐயா நியாயமாரே, அவருக்கு இரண்டு ஏக்கர் நிலம், பல நூறு கோடி பொறுமானுள்ளதை, அரசாங்கம் அளித்தது. நிலம் இங்குப் பிரச்சினையல்ல. பிரச்சனை எந்த இடம் என்பதில். புதைக்க இடமில்லாத ஒடுக்கப்பட்டவர்களையும் கருணாநிதியையும் ஒன்றாக்கி ஒடுக்கப்பட்டவர்களை அவமதிக்காதீர்கள்.

கருணாநிதியை திருமா சிறுது விமர்சித்தாலும் "எங்கள் தலைவர் திருமாவை சமமாக உட்கார வைத்துப் பேசியவர்" என்று உடன் பிறப்புகள் குத்தலாகச் சொல்லும் போதெல்லாம் சினம் கொள்வோர் கூட இரண்டு நாட்களாகக் கலைஞர் அப்படி, கலைஞர் இப்படி என்று உருகுகிறார்கள். அயோத்திதாசர் இருட்டடிப்பு செய்யப்பட்டாரே என்று மனம் வெதும்பியவர்கள் பெரியாரின் தலைமைப் புரோகிதருக்காக நெக்குரிகியது ஆச்சர்யம்.

கருணாநிதி நீண்ட நாள் வாழ்கிறார், அவர் எதிரிகள் பலரும் இறந்து கொண்டிருந்தார்கள் என்பதாலேயே உடன் பிறப்புகள் "அவர் எதிரிகளுக்கு அவர் இரங்கற்பா எழுதுவார்" என்று அருவருப்பாகச் சொல்வார்கள். இப்படிப்பட்ட கேவலமான பேச்சுகள் வேறு எங்கும் நான் கேள்விப்பட்டதில்லை. இது தான் திராவிட இயக்கத்தின் கலாசாரம். இன்று அவர் இல்லை ஆனால் அவரை விமர்சிப்பவர்களில் பலர் இருக்கிறார்கள்.

பெருந்தேவி என்பவர், கவிஞராம், பிராமணர் கூட, தன் பங்குக்கு எதையோ காட்டமாகக் கருணாநிதிக்கு ஆதரவாக எழுதியிருந்தார். இப்போது அவர் பேஸ்புக் பக்கமே இல்லை. போகன் சங்கர், அவரும் கவிஞர், இந்தியாவில் கேரளாவைத் தவிர வேறெங்குச் சென்றாலும் தமிழனாகப் பெருமையாக உணர்கிறாராம் அதற்குக் கலைஞரே காரணம் என்கிறார். ஐயா கவிஞர் கவிதாயினிகளே கடந்த 25 வருடங்களாகத் தமிழ் நாட்டை ஜெயாவும் கருணாவும் மாறி மாறித் தான் ஆண்டிருக்கிறார்கள். ஆகப் பெருமையைச் சரி பாதியாகப் பகிர்ந்துக் கொடுக்கவும். ஒரு வேளை இலக்கியவாதியாகி விட்டால் வரலாறு மறந்து விடுமோ? அல்லது வேறு ஏதும் கஷ்ட காலமோ என்ன எழவோ. 1947-67 20 வருட காங்கிரஸ் ஆட்சி. 1967-77 பத்து வருடம் திமுக. 1977-87 அதிமுக. அப்புறம் 25 வருடத்துக்கு ஒருவர் மாற்றி ஒருவர். இது தான் வரலாறு. பூனைக்குக் கண்ணாடி மாட்டினால் மட்டும் போதாது பூனை கண்ணையும் திறந்துப் பார்த்தால் தான் காட்சித் தெரியும்.

கீழிருக்கும் இந்தப் புகைப்படம் எப்போதும் என்னை உறுத்தும். முன்னர் எழுதிய பதிவில் இருந்து, "கருணாநிதி இடம் பெற்றிருக்கும் புகைப்படங்களிலேயே மிகவும் அருவருக்கத் தக்கது என்றால் நான் தயங்காமல் கீழிருக்கும் படத்தைச் சொல்வேன். கட்சிக்கு நிதி சேர்ப்பது எல்லோரும் செய்வது. பாவம் பல தொண்டர்கள் தங்களிடம் இருக்கும் கடைசிக் காசையும் கட்சி நிதிக்காகக் கரைத்த கதைகள் ஏராளம். அப்படிச் சேகரித்த பணத்தைக் கிரீடமாக்கி தலைவனுக்கு முடி சூட்டி அகமகிழ்ந்து இளித்துக் கொண்டு நிற்கும் இந்த அற்பர்களுக்குத் தெரியுமா இந்தச் சுதந்திரமும் ஜனநாயகமும் கிடைக்க என்ன விலைக் கொடுக்கப் பட்டதென்று? "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா?" இந்த அற்பர்களின் கட்சியிலா ஜனநாயகம் வாழ்கிறது. ஜனநாயகம் என்பதைப் பற்றிப் பேசும் அருகதையற்றவர்கள்"


                                              



முடிவுரை: 


கருணாநிதி ஒரு பேரியக்கத்தின் தலைவராகவும் அதன் தளகர்த்தராகவும் 50-ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளார். அவ்வியக்கம் பற்றியோ அவரைப் பற்றியோ நேர்மையாகவும் எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் தீர்க்கமாகவும் கூற இன்று வரை ஒரு நல்ல நூல் இல்லை. தயவு செய்து யாரும் எனக்கு ஆர்.முத்துகுமாரின் நூலை பரிந்துரைக்க வேண்டாம்.

கருணாநிதி மற்றும் திராவிட இயக்கத்தின் பெரும் பாதிப்பாக நான் பார்ப்பது பொது வாழ்வில் கயமை, அரசியல் பிழைப்புக்காக எதையும் செய்வது, கலாசார அடிப்படைவாதம், பகுத்தறிவு என்ற பெயரில் முட்டாள் தனங்கள். And a culture of mediocrity and crassness. எல்லாவற்றையும் விட அந்த மிக மிக அருவருப்பான வெறுப்பரசியல். என்னால் புரிந்துக் கொள்ளவே முடியாதது அது தான். இதில் துயரம் என்னவென்றால் 'பாப்பாத்திகளுக்குத் தான் பார்ப்பன வெறி அதிகம்" என்று எழுதி விட்டு பிராமண நண்பர்களோடு குலாவுவது. இந்த விஷயத்தில் எனக்கு அப்படிச் சொன்னவரின் பிராமண நண்பர்களையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதே மாதிரி மிக மிக அருவருப்பாக எழுதும் இந்துத்துவர்களிடமும் பலர் பேஸ்புக்கிலும் நேரிலும் நட்பாகவே இருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது? இது என்ன மன நிலை? எனக்குப் புரியவில்லை.

கருணாநிதியை மெரினாவில் புதைக்க அனுமதி என்ற செய்தி கிடைத்தவுடன் உடைந்து அழும் மு.க.ஸ்டாலின் காட்சி உருக்கமானது. நான் பெற்றோரைப் பிரிந்து தனி வாழ்க்கை ஆரம்பித்து 20 வருடமாகி விட்டது ஆயினும் அப்பா இறந்த பின் அவரைப் புதைத்து விட்டு வீட்டுக்கு வந்ததும் அங்கிருந்த வெறுமையும் புகைப்படத்தில் இருந்து சிரித்த அப்பாவும் மனத்தை வருத்தியது. இன்றும் அவருக்குப் பிடித்த ஏதேனும் பார்க்க நேர்ந்தால் கண நேரத்தில் நினைவு வந்து வெறுமையும் கூடவே வரும். கோபாலபுரத்தில் இத்தனை பல்லாண்டுகள் வளைய வந்த ஒருவர், அவர்கள் அனைவரின் வாழ்வின் அச்சாணி இன்று முதல் இல்லை. அவர் பிள்ளைகளுக்கு நிச்சயமாக இது வருத்தமான நாள் தான். அவர் தொண்டர்களுக்கும் அவரை ஏதோ ஒரு காரணத்துக்காக மாபெரும் ஆளுமையாகப் பார்ப்போருக்கும் இன்று இழப்பு தான்.

ஆனால், ஜெயகாந்தன் அண்ணாதுரையின் இரங்கலில் சொன்னதைப் போல், இறந்தவர் தனிப்பட்ட மனிதர் அல்லவே.

"ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும். ஆனால், அண்ணாதுரை விஷயத்தில் அது ஒரு சமூக அநாகரிகமாக மாறி, எனது உணர்ச்சிகளை வெகுவாகப் பாதித்திருந்தது."  
              "இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது."