Friday, December 31, 2021

இந்திய ஜனநாயகத்துக்கு பேஸ்புக் அச்சுறுத்தலா? வெறுப்பரசியலும் சமூக வலைத் தளங்களும்.

அக்டோபர் 3-ஆம் தேதி பிரான்சிஸ் ஹாகென் (Frances Haugen) ஒரு அமெரிக்க தொலைக்காட்சி நேரலையில் தோன்றி பேஸ்புக்கின் செயல்பாடுகள் குறித்து செப்டம்பர் முதல் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளிந்த கட்டுரைகளுக்கு தரவுகள் தந்துதவியது பேஸ்புக்கிலேயே வேலைப்பார்க்கும் தான் தான் என்று ஒப்புக் கொண்டு மேலும் செய்திகள் சொன்னார். அடுத்த 24 மனி நேரத்தில் பேஸ்புக்கின் பங்கு சந்தை மதிப்பு 6 பில்லியன் டாலர் சரிந்தது. மேலும் சோதனையாக பேஸ்புக் செயலி பல மணி நேரங்கள் செயலிழந்ததும் அந்நிறுவனத்தின் செயல் திறன் மீது கேள்விகள் எழுப்பியது


இச்சூழலில் அமெரிக்காவின் மூன்று முக்கிய பத்திரிக்கைகள் - நியூ யார்க் டைம்ஸ் (NYT), வாஷிங்டன் போஸ்ட் (WaPo), வால்ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ)- அடுத்தடுத்து பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் வெறுப்பரசியலை வளர்க்க உதவுவதாகவும் அதை தடுக்க எந்த பிரயத்தனமும் செய்யவில்லை என்றும் நீண்ட கட்டுரைகள் வெளியிட்டன. இப்படி மூன்று மிக முக்கிய பத்திரிக்கைகள் இந்தியாவை மையமாக வைத்து பேஸ்புக்கின் செயல்பாட்டினை அம்பலப்படுத்தியது மெதுவாகவே இந்திய ஆங்கில ஊடகங்களில் பேசப்பட்டன, அதுவும் மேம்போக்காக; தமிழ் ஊடகங்களில் இவ்விஷயம் பெரும் கவனத்தைக் கோரவில்லை. இதில் அமெரிக்க பத்திரிக்கைகளின் கண்ணோட்டத்தையும் தாண்டி இந்திய அரசியலை உற்று கவனிப்போர் விவாதிக்க வேண்டிய விஷயம் இருப்பதாக எனக்குத் தோன்றுவதால் இக்கட்டுரை




பேஸ்புக்கின் உளவியலும் நன்மைகளும்


குகைகளில் கோட்டோவியம் வரைந்த ஆதி மனிதன் முதல் இன்று வரை எண்ணங்களை சக மனிதனோடு பகிர்வது அடிப்படை அவாவாக இருக்கிறது. சகல ஜீவராசிகளும் கூட அதில் ஏதோவொரு வகையைப் பின் பற்றினாலும் மனிதனால் தான் தன் பின்புலத்தோடு வேறுபட்ட மற்றவர்களோடு அர்த்தத்துடன் உறவாடி அறிவுத் தளத்தில் இணைந்து செயல் பட முடிகிறது. அவ்வகையில் சமூக வலைதளங்களின் அறிமுகமும் நிவீன யுகத்தின் இணைய வசதிகளும் அவ்வுணர்வுக்கு நெய்யூற்றி வளர்த்தது. உலகம் நிஜமாகவே இன்று கையளவு தான்.


அக்டோபர் மாதம் டில்லியில் வாழும் எழுத்தாளர் பி..கிருஷ்ணன், ஸ்வீடனில் வாழும் பாகிஸ்தானிய வரலாற்றாசிரியர் இஷ்டியாக் அஹ்மத், நியூ ஜெர்ஸியில் வாழும் நான் ஆகியோர் முகம்மது அலி ஜின்னா பற்றிய நேரலை நிகழ்வொன்றை பேஸ்புக் மூலம் ஒருங்கிணைத்தோம்; பார்வையாளர்கள் எல்லோரும் தமிழ் நாட்டில். நிகழ்வின் முடிவில் ஜின்னா போன்ற ஓர் ஆளுமையைப் பற்றி பலரும் அறிய முடிந்தது. அதே போல் தலித் வரலாற்றாசிரியர்களோடு நிகழ்த்திய நேரலைகளும் பலருக்கு புதிய வரலாற்று புரிதல்களை அளித்தது


பேரிடர்களின் போது பேஸ்புக் மூலம் உதவிகள் ஒருங்கிணைப்பது, மருத்துவ செலவுகளுக்கு பணம் திரட்டுவது - ஒரு குழந்தையின் மருத்துவத்துக்கும் கோடிக் கணக்கில் பணம் திரட்டியதும் சமீபத்தில் நடந்தது - ஜனநாயகம் காக்க எதேச்சாதிகார அரசுகளுக்கு எதிராக திரள உதவுவது என் பேஸ்புக்கின் நற்பயன்களையும் நாம் அன்றாட வாழ்விலேயே சந்திக்கிறோம்


விஞ்ஞானம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எப்போதுமே இரு முனைக் கத்தி தான். அனு சக்தியால் நகரங்கள் அழிந்திருக்கின்றன ஆனால் அதே அனு சக்தி புற்று நோயிலிருந்து காக்கவும் உதவும். பேஸ்புக்கில் நன்மைகள் பெரிதா தீமைகள் பெரிதா என்று பட்டிமன்றமே நடத்தலாம். இப்போது அரசுகளின் கவனம் பேஸ்புக்கினால் விளையும் தீமைகள் பற்றியதே.



அமெரிக்க அரசியலும் பொய்ச் செய்திகளும் பேஸ்புக்கும்


2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உலகமே ஆச்சர்யப்படத்தக்க வகையில் ஹிலாரி கிளிண்டன் தோற்று டொனால்ட் டிரம்ப் ஜெயித்தார். அமெரிக்க அரசியல் உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்த நிகழ்வு அது. அவ்வெற்றியில் முக்கியப் பங்கு  வகித்தது டிவிட்டரை மிகச் சாதுர்யமாக டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய விதம். அத்தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா என்று ஆராய்ந்த அமெரிக்க அரசு நிறுவனங்கள்ஆம், ரஷ்யா ஒரு மிகப் பெரும் பொய்ச் செய்தி பரப்புரையை மேற்கொண்டது, சமூக ஊடகங்களின் துணையோடுஎன்று அறிவித்தன. வாஷிங்டன் டி.சி. அருகே ஒரு பீட்சா ஹட் உணவகத்தில் ஹிலாரி கிளிண்டனின் பாலியல் ரீதியாக குழந்தைகளை துன்புறுத்துவதாக ஒரு பொய்ச் செய்தி பேஸ்புக்கில் பரவ அந்த உணவகம் தாக்கப்பட்டது சமூக வலைத் தளங்களின் வீச்சுக்கும் தாக்கத்திற்கும் சிறந்த உதாரணம்


2020 தேர்தலின் முடிவில் டொனால்ட் டிரம்ப் தோற்றார் ஆனால் தன் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து அமெரிக்க ஜனாதிபதியான அவரே பொய்ச் செய்திகளை பரப்பினார். அவர் ஆதரவாளர்கள் அச்செய்திகளை சமூக வலைத் தளங்களில் மேலும் பரவலாக்கினர். அமெரிக்க தேர்தலின் மீது அமெரிக்கர்களே நம்பிக்கையில்லாமல் மோசடி நடந்தது என்று பேசலாயினர். டிரம்பின் நீதித் துறையே தேர்தல் நேர்மையாக நடந்ததென்று சான்றளித்தை டிரம்ப் ஆதரவாளர்கள் கேட்கவில்லை. முத்தாய்ப்பாக தேர்தல் ரிசல்ட்டை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க காங்கிரஸ் ஏற்கும் நாளன்று அமெரிக்காவே திகைக்கும் வகையில் காங்கிரஸை தாக்கி சூறையாடினார்கள் டிரம்ப் ஆதரவாளர்கள். இதில் பேஸ்புக்கின் பங்கு கணிசமானது


இன்ஸ்டாகிராமும் பதின்ம வயதுப் பெண்களின் உளைச்சலும்


செப்டம்பர் 14 அன்று WSJ பேஸ்புக்கின் இன்னொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் எவ்வாறு பதின்ம வயதுப் பெண்களுக்கு தங்கள் உடல் பற்றிய திருப்தியின்மையை உருவாக்கி பெரும் மன உளைச்சல் அளிக்கக் காரணமாகின்றது என விரிவான கட்டுரை வெளியிட்டது. அக்கட்டுரை வெளியான சமயம் தான் பேஸ்புக் இன்ஸ்டாகிராமை இளம் பதின்ம வயதினருக்கு அனுமதியளிக்க எத்தனித்தது.


WSJ கட்டுரை பேஸ்புக்கின நிறுவன ஆய்விலேயே மூன்றில் ஒரு பங்கு (33%) பதின்ம வயதுப் பெண்கள் இன்ஸ்டாகிராமினால் தங்கள் உடல் அழகின் மீது அதிருப்திக் கொண்டு உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள் என்றதை சுட்டிக் காட்டியது. தற்கொலை எண்ணம் எழுந்த பதின்ம வயதினரில் அமெரிக்காவில் 6% இன்ஸ்டாகிராமை குற்றம் சாட்டினார்கள். பதின்ம வயதினரும் இள வயதினரும் பேஸ்புக்கை விட இன்ஸ்டாகிராமையே அதிகம் விரும்புகின்றனர் என்கிற புள்ளி விபரத்தை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இந்த பிரச்சனைகள் எல்லா ஸ்நாப்சேட் போன்ற தளங்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமுக்கே பிரத்தியேகமாக சில பிரச்சனைகள் உண்டு


பேஸ்புக் தானே அறிய வந்த இந்த உண்மைகளை பொது வெளியில் மட்டுப்படுத்தியே பேசியதோடல்லாமல் இது போன்ற ஆய்வின் முடிவுகளைக் கேட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கே விபரங்களை அளிக்க தட்டிக் கழித்தது என்றது WSJ கட்டுரை


வெறுப்பை ஊக்குவிக்கும் அல்காரிதம்


 மென்பொருள் (Software) செயலபாட்டினை நிர்ணயம் செய்வதும் கட்டமைப்பு செய்வதும் அதனை எழுத பயன்படுத்தும் மொழியும் அது சார்ந்த இலக்கணமும். அம்மொழிகளை வைத்து கட்டமைக்கப்படும் ஒவ்வொரு செயலுக்கான விளைவினைஅல்காரிதம்என சொல்லலாம். ஒரு பொத்தானை அழுத்தினால் அடுத்து என்ன நிகழும் என்று கட்டமைப்பதே அல்காரிதம். இன்று சமூக வலைத்தளங்கள் வெறுப்பை ஊக்குவிக்கும் செயலிகளாக உரு மாறியிருப்பது தற்செயலல்ல


2016-இல் பேஸ்புக் நிறுவனத்தின் ஆய்வாளரே வெளியிட்ட பதிவொன்றில் சமூக வலைத் தளங்கள் மூலம் செய்திகளை படித்து ஒரு ஊக்கமற்ற தன் தேவைக்கான நுகர்வோராக (passive user) மட்டுமே இருப்பது மன ஆரோக்கியத்துக்கு கேடு என்று கண்டறிந்து எழுதினார். அதற்கு தீர்வாக பேஸ்புக் முன் வைத்தது ஒரு பேஸ்புக் உபயோகிப்பாளர் செய்திகள், பதிவுகளைப் படித்து தன்னிறைவுக் கொள்வதோ தன் விழுமியங்களுக்கான அங்கீகாரத்தை கண்டடைந்து நிறைவுப் பெறுவதோடு நில்லாமல் படித்தவற்றை இன்னொருவரோடு பகிர்வதே ஆரோக்கியம் என்றது. அதாவது பேஸ்புக்கால் விளையும் மன பாதிப்புக்கு மருந்து பேஸ்புக் மூலம் இன்னும் பலருடன் பகிர்தலே குணப்படுத்தும் என கண்டறிந்து அதனை ஊக்குவிக்கும் வகையில் பேஸ்புக் செயல்பட ஆரம்பித்தது.


பேஸ்புக்கின் புதிய அல்காரிதம் விருப்பக் குறிக்கு (like) 1 மதிப்பெண், மறுப்பகிர்வுக்கு 5, முக்கியமான நீள கமெண்ட் அல்லது மறுப் பகிர்வுக்கு 30 என்று பதிவுகளை மதிப்பிட ஆரம்பித்து அத்தகைய பதிவுகளை பயனர்களின் செய்திச் சுருளில் (news feed) வருமாறு செய்தது. இதன் விளைவாக சர்ச்சைப் பதிவுகள் பிரதான இடம் பெற்றன, ஆக்ரோஷத்தை உண்டாக்கும் பதிவுகள் பிரமோட் செய்யப்பட்டன. போலந்தில் ஒரு அரசியல் கட்சி 50%-50% நற்செய்தியும்-எதிர்மறை செய்திகளையும் பகிர்ந்து வந்தது. இந்த அல்காரிதம் மாற்றத்துக்குப் பின் எதிர்மறை செய்திகளின் பங்கு 80% ஆக எகிறியது. இவ்விடத்தில் பாஜக-வின் .டி. விங்கின் எதிர்மறை செய்திகளை நாம் நினைவுக் கூற வேண்டும். சென்ற வருடம் பேஸ்புக் கோப உணர்வு எமோஜிக்கான மதிப்பீட்டை பூஜ்யமாக்கியதும் வன்முறை பதிவுகள் குறைந்தன என்று நிறுவனத்தின் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்


நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பேஸ்புக்கின் அல்காரிதத்தின் பகடைக் காய்கள் தாம். நீண்ட நாள் பேஸ்புக் செயல்பாட்டாளனாக இதை உறுதியாகச் சொல்ல முடியும். தமிழ் பதிவுகளில் பிராமணர்களை காழ்ப்புடன் பழிப்பதோ, பெரியாரை காட்டமாக விமர்சிப்பதோ நொடிப் பொழுதில் வைரலாகும். மார்க் ஸக்கர்பர்க் இந்த எதிர்மறை விளைவுகளை மட்டுப்படுத்த நிறுவன ஊழியர்கள் முன் வைத்த யோசனைகளை நிராகரித்தார் என்கிறது WSJ.


இந்த இடத்தில் தான் நாம் இந்தியா தொடர்பான பேஸ்புக் செயல்பாடுகளையும், பாஜகவின் வெறுப்பரசியலையும் ஆராய வேண்டியிருக்கிறது


2019 தேர்தலும் பாஜகவின் சமூக வலைத் தள பிரச்சாரமும்


2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக அசுர வெற்றி பெற்றது ஏன் என்று கிரிஸ்டோஃப் ஜாஃப்ரலாட்டும் கில்லிஸ் வெர்னியர்ஸும் “Contemporary South Asia” இதழில் வெளியிட்ட கட்டுரையில் சில காரணங்களை முன் வைத்தார்கள். அத்தேர்தலில் பாஜக சமூக வலைத் தளங்களை எப்படி பயன் படுத்தியது என்று கவனப் படுத்தியிருக்கிறார்கள். சில விவரங்களை இங்கு தொகுக்கிறேன்


பா.. ஆர்.எஸ்.எஸ்-உடன் இணைந்து மிகப் பெரும் களப் பணியாளர் படையை உருவாக்கியது. மஹாராஷ்டிராவில் மட்டும் 92,000 பூத் கண்காணிப்பாளர்கள். எந்த ஒரு பணியாளரும் 100 வாக்காளருக்கு மேல் பொறுப்பாக இருக்க மாட்டார், அந்தளவு பணியாளர்களும் இருந்தார்கள். 2018-இல் அமித் ஷா பூத் செயல்பாட்டு திட்டம் (Booth Action Plan) ஒன்றை உருவாக்கினார். 900,00 செல்போன் பிரமுகர்கள் (cell phone pramukhs), ஒவ்வொரு பூத்துக்கும் ஒருவர், என்று பணியாளர் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதே குறிக்கோள். அவர்கள் வெறும் செய்தி சேகரிப்பாளர்கள் மட்டுமல்ல செய்திகளைப் பரவலாக்குவோரும். அவர்களுக்கு செல்போன் அளித்து வாட்ஸப் குழுமங்கள் உருவாக்கி அதன் மூலம் பிரச்சாரம் செய்வதே குறிக்கோள். .டி. விங்கின் தலைவர் அமித் மாளவியா 1.2 மில்லியன் களப் பணியாளர்கள் பா.. அரசின் சாதனைகளை பரப்புரை செய்கிறார்கள் என்றார். ஒரு டிரோல் (troll) படையே உருவாக்கப்பட்டது என்கிறார்கள் கட்டுரை ஆசிரியர்கள்


2019 தேர்தலுக்கு.டி. படை வீரர்கள்” (I.T. Yoddhas) என்று ஒரு அணியையே அமித் ஷா தயார் செய்தார். அவர்களுள் ஒருவரான தீபக் தாஸ் 1.114 வாட்ஸப் குழுமங்கள் நடத்தியதாக சொல்கிறார். இவர் பா...வின் அதிகாரப்பூர்வ கட்சி உறுப்பினர் அல்ல, மாறாகநானும் சௌகிதார்என்று உறுதி மொழி எடுத்துக் கொண்ட வாக்கு சேகரிப்பாளர் அல்லது வாக்காளர் மீது தாக்கம் (influrence)செலுத்தும் 10 மில்லியன் ஆதரவாளர்களுள் ஒருவர்.


2019-இல் பா.. 200,000-300,000 வாட்ஸப் குழுமங்கள் நடத்தியதாகவும் காங்கிரஸ் 80,000-100,000 வரை நடத்தியதாகவும் தெரிகிறாது. பேஸ்புக் பொய்ச் செய்தி பரப்பும் போலி அக்கவுண்டுகளை முடக்கியதில் முக்கியமானது பா.. சார்பான “India Eye”.  ராகுல் காந்தியை இஸ்லாமியர் என்றும், காங்கிரஸ் அரசியல்வாதிகள் பாகிஸ்தானின் கொடியை வைத்திருப்பது போலவும் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. 2017 உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித் ஷா ஒரு கூட்டத்தில், “ பொய்யோ மெய்யோ நாம் ஒரு செய்தியை எல்லா மக்களிடத்தும் கொண்டு சேர்க்கும் திறன் படைத்தவராக இருக்க வேண்டும்என்றார்


பா...வின் தேர்தல் வியூகத்தில் மட்டுமல்ல தேசத்தை அரசாளும் வியூகத்திலும் சமூக வலைத் தளத்துக்கு பெரும் பங்குண்டு. அதன் மூலம் தான் அதன் வெறுப்பரசியல் வாக்காளர்களின் விரல் நுனிகளுக்கும் விழித் திரைகளுக்கும் சென்றடைகிறது. இது இன்று நேற்று நடப்பதல்ல


பேஸ்புக்கும் அங்கி தாஸின் ராஜினாமாவும்


பேஸ்புக்கில் இந்திய வெறுப்பரசியலின் முக்கிய அங்கமாக பா.. இருப்பதை பற்றி ஆகஸ்டு 2020-இல் WSJ முதலில் விரிவான கட்டுரை வெளியிட்டது


பா..-வின் டி. ராஜா சிங், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர், ரோஹிங்யாக்கள் பற்றியும், இந்திய முஸ்லிம்கள் பற்றியும் மிக ஆட்சேபகரமானப் பதிவுகளை, வன்முறையைத் தூண்டும் விதமாகவே (விரிவாக அப்பேச்சுகள் இந்திய ஊடகங்களிலும் பேசப்பட்டது, சுட்டிகளை கட்டுரையின் கீழ் காண்க) எழுதவும் பேசவும் செய்தார். அவரை போன்ற வன்முறை பேச்சுகள் பேசியவர்களை அமெரிக்காவில் பேஸ்புக் தன் எல்லா தளங்களிலிருந்து நீக்கியிருந்தாலும் ராஜா சிங் மீது நடவடிக்கை எடுத்தால் ஆளும் பா..-வை பகைத்துக் கொள்ள நேரிடுமோ என பேஸ்புக் இந்தியாவின் முக்கிய பொறுப்பில் இருந்த அங்கி தாஸ் மறுத்து விட்டார். பேஸ்புக்கை அமெரிக்காவில் உபயோகிப்போர் 200 மில்லியனுக்கும் சற்று குறைவு, இந்தியாவில் பயனாளர்கள் எண்ணிக்கை 300 மில்லியனை நெருங்குகிறது


அங்கி தாஸ் பா.. சார்புடையவராக இயங்கினார் என்று பேஸ்புக் நிறுவன ஊழியர்களே சொன்னார்கள். 2014-இல் அங்கி தாஸ் நரேந்திர மோதியின் சமூக வலைத் தள பிரச்சாரத்தை முடுக்கி விட உதவியதாகவும் அதன் பின் நிகழ்ந்ததும் ஊரறிந்தது என்று பதிவிட்டார். இன்னொரு பதிவில் அவர் 30 வருட களப் பணி இந்தியாவை சோஷலிஸத்தில் இருந்து விடுவித்தது என காங்கிரஸை தாக்கி பதிவிட்டார். அங்கி தாஸின் செயல்கள் பாரபட்சமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு தாஸின் பதிவுகள் முழுமையாகப் பார்த்தால் எந்த பாரபட்சத்தையும் காட்டவில்லை என பேஸ்புக் நிறுவனம் சமாதானம் சொன்னது. தாஸ் இஸ்லாமியரை பற்றியும் கீழ்த் தரமான பதிவொன்றை பகிர்ந்திருந்தார்.


பா.. எம்.பி அணந்தகுமார் ஹெக்டே இந்திய முஸ்லிம்கள் கொரோனா தொற்றினை பரவச் செய்கின்றனர் என்று சமூக வலைத் தளங்களில் பதிவுகள் எழுதினார். ட்விட்டர் அவரை வெளியேற்றியது, ஆனால் பேஸ்புக்கோ WSJ இக்கட்டுரை தொடர்பாக கேட்கும் வரை நீக்கவில்லை. பிப்ரவரி 2020 கபில் மிஷ்ரா இஸ்லாமியரை மிரட்டிய பேச்சு ஒன்று பேஸ்புக்கில் அவரால் வலையேற்றப்பட்ட சில மணி நேரங்களில் டில்லியில் கலவரம் வெடித்தது. CrowdTangle என்கிற பேஸ்புக்கின் மென்பொருள் மூலம் ஆராய்ந்ததில் மிஷ்ராவின் அந்த பதிவுக்கு முன்  ஒரு மாதத்தில் சில ஆயிரம் வலைத் தள பரிமாற்றமாக (interactions, probably refers to comments and not just rehshares) இருந்த அவர் பதிவுகள் 2.5 மில்லியனாக எகிறியதாம். வெறுப்புத் தீயாக பரவும் வகைக் கொண்டது. இக்கட்டுரைகளின் விளைவாக அங்கி தாஸ் அக்டோபரில் பதவி விலகினார்


டிசம்பர் 2020-இல் WSJ இன்னொரு கட்டுரையில் பேஸ்புக் சமூக வன்முறை உண்டாகக் கூடிய இடங்களில் மிக உச்சப்பட்ச ஆபத்து இருக்கும் தொகுப்பான டியர்-1 (Tier -1)-இல் இந்தியாவை கணக்கிட்டது என்றது.


இவ்வருடம் மீண்டும் பேஸ்புக்கின் செயல்பாடுகளை விமர்சித்து முன்பு கூறிய மூன்று பத்திரிக்கைகளும் - NYT, WaPo, WSJ - கட்டுரைகள் வெளியிட்டன. அதில் இந்தியாவுக்கு தனிக் கவனமாக பிரத்தியேக கட்டுரைகள் வெளி வந்தன.



பேஸ்புக்கின் கட்டமைப்பு போதாமை


ஒரு முக்கியமான புரிதலை சமீபத்தியக் கட்டுரைகள் உணர்த்தின.  பேஸ்புக் உலகில் எல்லா நாடுகளில் இருந்தாலும் அதன் பொய்ச் செய்திகளை கண்டறிவதற்கான அதன் நிதி ஒதுக்கீட்டில் 87% அமெரிக்காவுக்கும் வெறும் 13% அமெரிக்கா தவிர்த்த மொத்த உலகுக்கும் செலவாகிறது. இந்தியாவில் ஹிந்தியிலும் வங்காள மொழியிலும் வெறுப்பு மொழியாடல்களை கண்டறிய மென்பொருளில் முதலீடு செய்ததாக பேஸ்புக் சொல்கிறது. சமீபத்திய தேர்தலுக்குப் பின் மேற்கு வங்காளத்தில் 40% பதிவுகள் பொய்கள் என்று பேஸ்புக் கண்டறிந்தது. ஒரு பொய்ப் பெயர் பதிவாளர் 30 மில்லியன் லைக் போன்றவற்றை அள்ளியதாம்


தமிழில் பொய் செய்திகளைக் கண்டறியவும் வன்மம் கொண்ட பதிவுகளைக் கண்டறிந்து நீக்கவும் பேஸ்புக் தமிழ் மொழியில் முதலீடு செய்யவில்லை என்று தெரிகிறது. தமிழில் பிராமணர்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும், சிறு பான்மையினருக்கு எதிராகவும் (இதில் பிராமணர்களும் சேர்த்தி) மிக வன்மத்துடன் பதிவுகள் சாதாரணமாக அன்றாடம் தென்படும். அடிப்படையில் யாரோ யாரை பற்றியோ வன்மத்துடன் எழுதுகிறார்கள். மிகவும் அருவருக்கத் தக்க சொல்லாடல்கள் மிகச் சாதாரணமாக தெறிக்கும். மேலும் ரிப்போர்ட் அடிப்பது என்கிற புகார் சொல்லுதலை வைத்து பதிவர்களை, அவர் எழுதியது - வன்மமோ இல்லையோ- பிடிக்காதவர்கள், முடக்குவதும் அடிக்கடி நிகழும் ஒன்று. ஆனால் அதையெல்லாம் மட்டுப்படுத்தும் கட்டமைப்பு பேஸ்புக்கிடம் இல்லை.


இந்திய வெறுப்பரசியலைக் கண்டு அஞ்சிய பேஸ்புக் ஆய்வாளர்கள்


முன்பு குறிப்பிட்டதைப் போல் இவ்வருடம் பேஸ்புக்கின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தியக் கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்ததுமே மூன்று முக்கிய நாளிதழ்கள் - WSJ, NYT, WaPo- பேஸ்புக்கினால் இந்தியாவில் பெருகும் அல்லது வெளிவரும் வெறுப்பரசியலை பற்றி பிரத்யேக கட்டுரைகள் வெளியிட்டன. உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் நிகழும் அரசியலும் அதில் சமூக வலைத் தளங்களின் பங்கு பற்றியும் உலக அரங்கில் இருக்கும் முக்கியத்துவமே அக்கட்டுரைகளுக்கு காரணம்.


இந்தியாவில் பேஸ்புக் இயங்கும் முறையும் அங்கிருக்கும் உரையாடல்களையும் ஆராய முனைந்து பேஸ்புக்கின் ஊழியர் ஒருவர் ஒரு பொய் கணக்கை துவக்கி பேஸ்புக்கின் அல்காரிதம் பரிந்துரைக்கும் குழுமங்களில் இணைவது, பரிந்துரைத்த காணொளிகளைக் காண்பது என்று ஒரு சாதாரண பயணாளியாக அந்த பதிவர் இயங்க ஆரம்பித்தார். பிறகு மளமளவென்று வன்முறை பதிவுகள் வர தொடங்கின, பொய் செய்திகள் தொடர்ந்தன. மூன்றே வாரத்தில் தன் வாழ்நாளில் பார்த்த மொத்த வன்முறை காட்சிகளையும் விட அதிகமாக பார்க்க நேரிட்டதாம் அந்த பரிசோதனை பதிவருக்கு. பாகிஸ்தானுக்கு எதிராக, இஸ்லாமியரை மிகக் கீழ்த்தரமாக வசை பாடி, மோதியை துதிபாடி அதீத வன்முறை பதிவுகள் வர தொடங்கின. பேஸ்புக்கின் உள்ளேயே இந்தியாவில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்குத் தொடர்ந்து வெறுப்பு பதிவுகளுக்கான தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக வெளிப்படையாக ஒரு அறிக்கை சொன்னது.


பேஸ்புக்கின் செயல்பாடு இப்படியேத் தொடர்ந்தால் இன்னும் பத்து வருடத்தில் வெறுப்பு மட்டுமே எஞ்சும் என்று ஒர் இஸ்லாமியர் பேஸ்புக்கின் ஆய்வாவாளர்களிடம் சொன்னாராம். லவ்-ஜிஹாத், கொரானா தொற்று ஆகியவற்றுக்கு இஸ்லாமியரை வசைப் பாடி வரும் பதிவுகளில் பெரும்பாலானவை ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளிடமிருந்து தானாம். பஜ்ரங் தள், ராம் சேனா ஆகிய குழுக்கள் பற்றி பேஸ்புக் நிறுவனத்துக்குள்ளேயே அச்சம் இருந்தது ஆனால் அவற்றை தடைச் செய்தால் பா...வின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமோ என பேஸ்புக் தயங்கியது. பஜ்ரங் தள் பதிவுகளுக்கும் நிஜ வாழ்வில் நடக்கும் வன்முறைக்கும் தொடர்பிருக்கிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி


திரிபுராவில் 11 வயது பையன் ஒருவன் ஜூன் 26 அன்று இறந்த பின் அவன் கிட்னியை திருடுவதற்காக கொலை செய்யப்பட்டான் என்று வதந்தி பரவியதன் விளைவாக உண்டான கலவரத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அந்த வதந்தியை பரப்பியதில் முக்கியமானவர் பா..-வை சேர்ந்த ரத்தன் லால் நாத். பிள்ளைகளைக் கடத்துகிறார்கள் என்று வாட்ஸப்பில் பரவும் வதந்திகளால் மஹாராஷ்டிராவில் மட்டும் ஒரு மாதத்துக்குள்ளேயே 14 கலவரங்கள். மாடுகளை கடத்துகிறார் என்று பெஹ்லு கான் அடித்தே கொல்லப்பட்டார்


பரவும் வெறுப்புக் கலாசாரமும் ஏற்றுமதியாகும் வெறுப்பும்


பேஸ்புக் பற்றிய உண்மைகள் அம்பலமானதும் அது ஒரு தனியார் நிறுவனம் தன் லாப நோக்குக்கான உறுபசிக்கு சமூகங்களை காவு கொடுக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது. உண்மை. ஆனால் அது மட்டுமே உண்மையில்லை. பேஸ்புக் இந்திய அரசோடு கருத்துரிமைக்காக சில சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்ற எண்ணம் பொதுவில் மேலோங்கிய போது இந்தியா இந்திய தயாரிப்பானகூ” (Koo) என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. உடனே பா..-வினர் கூ-வை நோக்கிப் பாய்ந்தனர். “கூதளத்தில் மட்டுறுத்தல் செய்வதற்கு ஆட்கள் இல்லை. வெறுப்பு பதிவுகள் உடனே பெருகியது. ஒரு பதிவர் இஸ்லாமியரை எந்த வசைச் சொல்லை வைத்து அழைக்கலாம் என்று நான்கு அச்சில் ஏற்ற முடியாத சொற்களை சாய்ஸாக அளித்திருந்தார்


கூ தளத்தைப் போல் கிளப்ஹவுஸ் வலைத் தளத்திலும் சாதியமும் இஸ்லாமியருக்கு எதிரான வசைகளும் தளம் ஆரம்பித்து இந்தியர்கள் சேர்ந்த உடனேயே தொடங்கியது. ஒரு கிளப்ஹவுஸ் நிகழ்வில் முஸ்லிம்ஜெய் ஶ்ரீராம்என்று சொன்னால் ரூ. 500 அளிப்பதாகச் சொல்லப்பட்டது. பேஸ்புக் நிறுவனம் தன் கடமையில் தவறுகிறது, ஆனால் அதை தாண்டி இந்தியாவில் நிலவும் வெறுப்புச் சூழல் இந்தியாவின் பிரச்சனை, இந்தியர்களின் பிரச்சனை. இதனை மழுப்பவே முடியாது.


வெளியுறவு கொள்கைகள் பற்றி செய்திகளும் கட்டுரைகளும் வெளியிடும் “Foreign Policy” இதழ் சென்ற வருடம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இஸ்லாமிய வெறுப்பு என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது. பொய்ச் செய்திகளை ஆராயும் ஒரு ஆய்வகம் இந்தியாவை மையமாக கொண்டு செயல்படும் 260 போலி ஊடக தளங்கள் 65 நாடுகளில் வியாபித்து இருப்பதாகச் சொல்கிறது. வெளிநாடுகளில் இடது சாரி அரசியல்வாதிகள் கூட தங்கள் தொகுதி இந்தியர்களின் மோதி ஆதரவை அனுசரித்து பேசும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகள் முதல் பல்கலைக் கழக பேராசிரியர்கள் வரை அமெரிக்க வாழ் இந்துத்துவர்களின் சமூக வலைத் தள தாக்குதல்களுக்கு, பலவும் வன்முறையை அப்பட்டமாகப் பேசும், உள்ளாகியிருக்கிறார்கள்.


தமிழ் நாட்டில் கர்நாடக சங்கீதத்தில் கிறிஸ்தவர்கள் பற்றி பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்த போது டி. எம்.கிருஷ்ணா நியூ ஜெர்சியில் நிகழ்ச்சி நடத்த வந்திருந்தார். அப்போது எழுந்த அச்சுறுத்தல்களைப் பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே விக்கித்துப் போய் அமெரிக்க போலீஸிடம் பாதுகாப்பு கேட்ட அவலமும் நடந்தது. கவனியுங்கள் வாசகர்களே மிரட்டியவர்கள் அமெரிக்க வாழ் மெத்தப் படித்த தமிழர்கள். முன்பொரு முறை சுப்பிரமணிய சுவாமியின் நிகழ்ச்சி ஒன்றுக்கு நியூ ஜெர்சியில் நேரில் சென்றிருந்தேன். சுவாமி பேசிய அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு மெத்தப் படித்தவர்கள் பலர் கைத் தட்டியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இந்தியர்கள் இங்கு அமெரிக்காவில் சிறுபான்மையினர், இங்கு எந்த பாதுகாப்பை தங்களுக்கு விழைகிறார்களோ அதனை அமெரிக்க வாழ் இந்துத்துவர்கள் இந்தியாவில் தர மறுக்கிறார்கள். இது அசிங்கமான இரட்டை வேடம்


இந்தியா உலகின் ஜனநாயக நாடுகளில், அதன் மக்கட் தொகைப் பொருட்டும் அங்கிருக்கும் பல கோடி சிறுபான்மையினராலும், அமெரிக்காவுக்கு சற்றும் குறையாத முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனநாயகம் உலகில் எங்கு சிதைவுற்றாலும் அது உலகெங்கிலுமுள்ள ஜனநாயகத்தை பலவீனமாக்கும். இன்று ஜனநாயகத்துக்கு முக்கிய அச்சுறுத்தலாக சமூக வலைத் தளங்கள் உருவெடுத்திருக்கின்றன. அரசுகளும் சமூகங்களும் இது குறித்து கவலையோடு அவசரமாக பல்வித உரையாடல்களை முன்னெடுக்க வேண்டும். எல்லாப் பழியையும் வலைத் தளங்களின் மீது போட்டு விட்டு சமூகங்கள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கக் கூடாது. சமூக வலைத் தளங்கள் ஊது குழல்கள், முகம் காட்டும் கண்ணாடிகள். அடிப்படை வெறுப்பு சமூகத்தில் உள்ளே ஊற்றெடுக்கிறது. அதை தான் நாம் வெல்ல வேண்டும்


பி.கு: இக்கட்டுரை முதலில் 'அருஞ்சொல்' தளத்தில் வெளிவந்தது. https://www.arunchol.com/aravindan-kannaiyan-article-on-facebook-and-hate-arunchol 


சுட்டிகள்
  1. https://www.wsj.com/articles/facebook-services-are-used-to-spread-religious-hatred-in-india-internal-documents-show-11635016354
  2. https://www.nytimes.com/2021/10/23/technology/facebook-india-misinformation.html 
  3. https://www.nytimes.com/2021/10/25/business/facebook-papers-takeaways.html
  4. https://www.washingtonpost.com/technology/2021/10/24/india-facebook-misinformation-hate-speech/
  5. https://www.washingtonpost.com/technology/2021/10/25/what-are-the-facebook-papers/ 
  6. https://www.wsj.com/articles/facebook-hate-speech-india-politics-muslim-hindu-modi-zuckerberg-11597423346 
  7. https://theprint.in/tech/facebook-research-flagged-inflammatory-content-against-muslims-in-india-says-wsj-probe/755878/ 
  8. https://www.bbc.com/news/world-asia-india-54715995 
  9. https://www.vice.com/en/article/v7gq98/wsj-investigation-of-facebook-india-links-with-bjp-sparked-political-row 
  10. https://www.indiatoday.in/technology/news/story/facebook-turned-a-blind-eye-to-anti-muslim-hate-speech-and-propaganda-in-india-says-report-1868737-2021-10-24 
  11. https://www.washingtonpost.com/world/asia_pacific/as-mob-lynchings-fueled-by-whatsapp-sweep-india-authorities-struggle-to-combat-fake-news/2018/07/02/683a1578-7bba-11e8-ac4e-421ef7165923_story.html 
  12. https://news.yahoo.com/uproar-over-fabindia-commercial-highlights-085504363.html 
  13. https://www.buzzfeednews.com/article/pranavdixit/koo-muslim-hate-india 
  14. https://www.hindustantimes.com/india-news/twitter-says-its-algorithm-amplifies-right-wing-political-content-101634926182240.html 
  15. https://www.thequint.com/news/india/clubhouse-twitter-spaces-hate-speech-islamophobia-casteism-bullying 
  16. https://theprint.in/opinion/twitter-facebook-profited-a-lot-from-indias-hate-agenda-time-to-pull-the-plug-with-a-law/425047/ 
  17. https://time.com/6112549/facebook-india-islamophobia-love-jihad/ 
  18. https://foreignpolicy.com/2020/07/01/india-islamophobia-global-bjp-hindu-nationalism-canada/ 
  19. https://thediplomat.com/2019/05/manufacturing-islamophobia-on-whatsapp-in-india/ 
  20. https://www.rollingstone.com/feature/anatomy-of-a-fake-news-scandal-125877/ 
  21. https://www.wsj.com/articles/facebook-executive-supported-indias-modi-disparaged-opposition-in-internal-messages-11598809348
  22. https://scroll.in/article/979033/ankhi-das-track-record-at-facebook-will-make-her-successors-unenviable-job-even-harder 
  23. https://www.livemint.com/Politics/jkSPTSf6IJZ5vGC1CFVyzI/Death-by-Social-Media.html