Wednesday, January 22, 2025

நேருவின் பெருங்கனவை மூத்திர சந்தில் நிறுத்திய காமகோடி

 இந்தியாவின் இன்றைய விஞ்ஞான ஸ்தாபனங்களும் ஐஐடி போன்ற உயர் தொழிற் கல்லூரிகளுக்குமான விதை இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பே 1940-களில் விதைக்கப்பட்டது. அவ்விதைகள் பெரும் ஸ்தாபனங்களாக நிறுவப்பட்டதும் அந்நிறுவனங்களுக்கான அரசு அதரவு அடித்தளமாக அமைந்ததும் ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில் நேருவின் நேரடி ஈடுபாட்டுடன் நடந்தவை, அதனால் தான், மிகையாகவெனினும், இந்தியாவின் சிற்பி நேரு என்கிறோம். இன்றைய மோடிகளும், அமித் ஷாக்களும், காமகோடிகளும் இருந்திருந்தால் மாட்டு தொழுவங்கள் தாம் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும். உடனே மோடி ஆட்சியில் பல்கி பெருகிய ஐஐடி, ஐஐஎம் கணக்குகளை சொன்னால் என் பதில், “நேருவின் அடித்தளம் அக்கல்லூரிகளில் கோலோச்சும் உயர் சாதியினருக்கு, இன்று அவர்களில் பெரும்பாலோர் பாஜக அடிப்பொடிகள், உயிர் மூச்சு, அது அறிந்து தான் மோடி மேலும் கல்லூரிகளை துவக்கினார். நேருவின் முன் மாதிரி இல்லாவிடின் இவை இன்று உருவாகி இருக்காது ஏனென்றால் முன் மாதிரிகளை உருவாக்கும், முக்கியமாக கல்விப் புலத்தில், அறிவு விசாலம் இந்த கோமூத்திர கூட்டத்துக்கு கிடையாது”.



இன்று இந்திய அறிதல் முறை, இந்திய மரபு மருத்துவம் என்று பிதற்றும் இந்த மூத்திரக் கூட்டம் “அமெரிக்க எம்.ஐ.டி போல் ஒன்றை நிறுவுவோம்” என்று சொல்லும் அறிக்கையை குப்பைக் கூடையில் போட்டிருப்பார்கள். இன்றைய கோமூத்திர கூட்டம் அன்று இந்தளவு செல்வாக்கு பெற்றிருந்தால் அப்படி ஒரு அறிக்கை எழுதப்பட்டிருக்காது, எழுதினாலும் பிரதமர் வீட்டு குப்பை கூடைக்கு தான் அது போயிருக்கும்.
பொதுத்துறை நிறுவனம் ஒன்றை திறந்து வைத்து நேரு “இதோ நவீன இந்தியாவுக்கான கோயில்கள்” என்றார். அக்கூட்டத்தில் இருந்த தலித் சிறுவன் நேருவிடம் “கோயில்களில் எங்களுக்கு அனுமதியில்லை, இந்த கோயில் எப்படி?” என்று வினவ அவனிடம் நேரு, “இக்கோயிலில் எல்லோருக்கும் அனுமதி உண்டு” என்றார். அச்சிறுவன் காஞ்சா ஐலையா. இன்றோ கோயில் கட்டுவது, கோமூத்திரமே அரசு தரப்பின் உரையாடல்கள். ஐயா நேரு, நீ எப்படிய்யா இந்த தேசத்தில் பிறந்தாய்? ஹ்ஹ்ம்ம் இந்தியாவின் நல்லூழ். நேரு மட்டுமல்ல அன்றைய தலைமுறையில் பலரும் அறிவியல் முன்னேற்றம், கல்வி பரவலாக்கம், தரமான கல்வி, தொழில் முன்னேற்றம் என்று பேசி, எழுதி, செயல்பட்டனர்.
நம் மகாகவி நேருவுக்கு குறைந்தவனில்லை. விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் நேசித்து அதனை நம் தேச முன்னேற்றத்துக்கு நுகத்தடியாக கைக்கொள்ள பிரயாசைப்பட்டான். பாட்டிலும் கட்டுரையிலும் பாரதி மீண்டும் மீண்டும் கல்வியின் முக்கியத்துவம், அறிவியலின் அவசியம் குறித்து எழுதினான். இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸின் உரையை மொழிபெயர்த்து வெளியிட்டான், திருச்சியில் தொழில் நுட்ப பயிலகம் திறக்கப்பட்டது குறித்து குதூகலித்து நம்மவர் “எஞ்சினியரிங் படிக்க வேண்டும்” என்று ஆசைப்பட்டான். அவனும் நேருவும் பிராமணர்கள் தான் ஆனால் காமகோடி மாதிரி காஞ்சி சங்கர மடத்தில் மூளையை அடகு வைத்து சாதிய கிணற்றுக்குள் சுற்றிய தவளைகல்ல.
காமகோடி மார்கழி பஜனை செய்து தெருவில் நடந்து போகும் படம் ஒன்று சமீபத்தில் வெளிவந்தது, அதனை ட்விட்டரில் போட்டு “இதை கண்டால் அரவிந்தன் கண்ணையன் எரிச்சலடைவார்” என்றார் ஒருவர். ஏனய்யா அந்தாள் தெருத் தெருவாக அங்க பிரதட்சணமே வேண்டுமானால் செய்யட்டும் எனக்கென்ன, அவர் உடம்பு, அவர் நம்பிக்கை. இது எனக்கு பிரச்சனையே அல்ல.
மாறாக மாட்டு மூத்திரம் நோய் தீர்க்கவல்லது, “அமெரிக்காகாரனே சொல்லிட்டான்”, “சயன்ஸே சொல்லுது” என்ற பம்மாத்துடன் பேசியது தான் என்னை உறுத்துகிறது. உடனே ஏதோ சில காப்புரிமை பதிவுகள், சில ஆராய்ச்சி வெளியீடுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. பேஸ்புக் நண்பர் ஒருவர் மலத்தில் இருந்து பேக்டீரியா எடுத்து இன்னொருவருக்கு செலுத்தி ஒரு குறிப்பிட்ட குடல் நோயை குணப்படுத்தும் முறை பற்றி அமெரிக்காவின் மிக உயரிய பல்கலைக் கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் வெளியிட்ட ஆராய்ச்சிக் குறிப்பை சுட்டினார். இதில் பிரச்சனை அந்த ஆராய்ச்சி தெளிவாகச் சொல்கிறது கண்டவரின் மலத்தில் இருந்து பேக்டீரியா எடுத்து இன்னொருவருக்கு செலுத்தக் கூடாது, மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொடையாளியிடமிருந்து தான் எடுக்க வேண்டும் அதுவும் மிக குறிப்பிட்ட குடல் வியாதிக்கு மட்டுமே இது தீர்வு கண்ட குடல் வியாதிக்கும் செய்யக் கூடாதென்கிறது. இதே தான் மாட்டு மூத்திரத்துக்கும் பொருந்தும். கண்ட மாட்டு மூத்திரத்தை எடுத்து குடித்து விட்டு நோய் தீருமென்று நம்ப மாட்டு மூளை தான் இருக்க வேண்டும்.
மூத்திரமோ, மலமோ, ஏன் கொடிய விஷமோ கூட மேற்கத்திய அறிவியல் பாகுபாடின்றி எடுத்து மருத்துவத்துக்கு பயன்படுத்தும் ஆனால் மிக, மிக கவனமாக பல்லாண்டு ஆராய்ச்சிகளுக்குப் பின். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அவர்களுக்கு விஞ்ஞானத்தை தாண்டி மூத்திரத்தையோ மலத்தையோ தேர்ந்தெடுக்க வேண்டிய உந்துதல் கிஞ்சித்தும் கிடையாது. கோமூத்திர குடியன் காமகோடி அப்படி பட்டவரில்லை. அவரிடன் பன்றி மூத்திரத்தில் நோய் தீர்க்கும் குணம் இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள், அவ்வளவு ஏன், பன்றியை சாப்பிட்டால் நோய் தீரும் என்று சொல்லிப் பாருங்களேன்.
இன்று உலகெங்கும் நீரிழிவு நோய்க்கும் உடல் பருமனைக் குறைக்கவும் அருமருந்தாக இருக்கும் ஓஸெம்பிக் (Ozempic) மாதிரி மருந்துகளின் அடிப்படை ஒரு வகை பல்லியின் விஷம் தான். இந்த குறிப்பிட்ட பல்லிகள் சொற்ப உணவில் உயிர் வாழ்வதை ஆராய்ந்து மிக நுட்பமாக குறிப்பிட்ட மாலிக்யூல்களை அடையாளம் கண்டது ஒருவர். இது பற்றி நியூ யார்க் டைம்ஸ் மயிர் கூச்செறியும் கட்டுரை ஒன்று வெளியிட்டிருக்கிறது. கோமூத்திரத்துக்கு பதிலாக அந்த ஆராய்ச்சியாளரின்……குடித்தாலாவது காமகோடிகளுக்கு புத்தி வரலாம், அப்போதும் வராமல் போகலாம்.
காமகோடி ஓர் ஆராய்ச்சியாளராச்சே அவருக்கு விஞ்ஞான நோக்கிலான அறிவுச் செயல்பாடு (‘scientific temperament’) இருக்குமே என்றால் அது அவரிடம் இல்லை என்பதோடு அவர் விஞ்ஞானம் தொழில்நுட்பமெல்லாம் ஏதோ படித்தார், ஒரு துறையில் முன்னேற தேவையான ஆராய்ச்சியை ஒரு கடைநிலை ஊழியனின் சீட்டு தேய்க்கும் மனோபாவத்துடன் செய்தார். இந்தாள் தன்னிடம் பாஸ்போர்ட் இல்லை என்று இளித்துக் கொண்டு “simple sudha” மாதிரி சொல்வார், உடனே பேட்டி எடுப்பவருக்கு புல்லரிக்கும், “சார் ஐஐடி-யில் படித்து விட்டு எப்படி சார் வெளிநாடு போகாம இருக்கீங்க என்பார்” இவரும் இன்னும் விசாலமாக இளிப்பார். இந்தாள் காஞ்சி மகா பெரியவா சொன்னதை கேட்டு கடல் தாண்டினால் தீட்டு என்ற ஒரே காரணத்துக்காக பாஸ்போர்ட் எடுக்காத கோமூத்திர தண்டம், இதில் என்ன பெருமை. பாஸ்போர்ட் எடுப்பதே தாய்லாந்து போய் பலான மஸாஜ் செய்து கொள்ள என்று நினைத்திருப்பார். பிரயாணமே உலக ஞானம் என்பதோடு சர்வதேச கருத்தரங்குகள் ஒரு விஞ்ஞானிக்கு முக்கியமானவை. அது புரியாத சாதிய கிணற்றுத் தவளை. பாரதிக்கு வறுமை வாட்டியது, “ஐயோ பணம் இருந்தால் உலகத்து மேன்மை எல்லாம் கண்டு ருசித்திருப்பேனே” என்று அங்கலாய்த்தான். அவனும் பிராமணன் தான்.
இன்று காமகோடியை, அவர் பிராமணர் என்பதாலேயே, நக்கலடிக்கும் திராவிட இயக்கத்தாரும் யோக்கியமில்லை. கபசுர குடிநீர், சித்த மருத்துவம், பஞ்ச கவ்யம் என்று பிதற்றி அலையும் கூட்டத்துக்கு கழக அரசும் கழகத்தினரும் பெரும் ஆதரவாளர்கள் தாம். சித்தா, ஆயுர்வேதா எல்லாம் காலத்துக்கு ஒவ்வாத டுபாக்கூர் மருத்துவங்கள். அவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கு நல்லவைகளை, அதையும் அமெரிக்கா காரன் ஆராய்ச்சி செய்து இதனால் தான் இதில் வியாதி குனமாகிறது என்று சொன்ன பிறகு, வைத்துக் கொண்டு தம்பட்டம் அடித்து ஊரை ஏமாற்றுகிறார்கள் இந்த மரபு மருத்துவக் கூட்டம்.
பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கும் போது அவற்றை நிர்வகிக்க நிர்வாக மேலான்மை பயிற்சி பிரத்யேக கல்வி என்றுணர்ந்து அதற்கும் கல்லூரிகளை, ஐஐஎம், உருவாக்கினார் நேரு. வெளியுறவுத் துறை பணிக்கும் கல்லூரி. நேருவிய திட்டமிட்ட பொருளாதாரத்தின் தந்தை மஹலனாபிஸ் நிறுவிய புள்ளியியல் கல்லூரியில் உலகெங்கிலும் இருந்து மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் வந்தனர். ஓ அது அது தான் எப்பேற்பட்ட யுகம். அவன் சிறியன சிந்தியாதான்.
1951 ஐஐடி மாதிரி ஒரு கல்வி நிலையத்தை ஒரு இஸ்லாமியர் கல்வி அமைச்சராக இருந்த போது, நாடு மிகுந்த ஏழ்மையில் உழன்ற போது திறப்பதற்கு அசாத்திய விசாலப் பார்வை வேண்டும். அப்ப்டி ஒருவன் இருந்தான் என்பதே இன்று ஆச்சர்யம். அவனாலேயே அத்தகைய கனவுகளை சாதாரணர்களும் கல்வியாளர்களும் ஆய்வாளர்களும் வளர்த்துக் கொண்டனர். யதா ராஜா ததா பிரஜா.
காமகோடி பேசியதை தானே தமிழிசையும் நம்மாழ்வாரும் பேசினார்கள் ஏன் காமகோடிக்கு இத்தனை காட்டமான அர்ச்சணை என்று கேட்டால் அதற்கு என் பதில், “காமகோடியின் பதவி அவர் சொல்லுக்கு ஒரு மேடை அமைக்கிறது. அது தமிழிசைக்கும் நம்மாழ்வாருக்கும் ஏன் எச்.ராஜாவுக்கு கூட கிடையாது. மேலும் இவரை போன்ற ஹிபாக்ரட்டுகள் மேற்குலக ஞான மரபின் பலன்களை பெற்றுக் கொண்டே ஊரை ஏமாற்றுகிறார்கள் ஆகவே இவரை தான் அர்ச்சிக்க வேண்டும்”.
உண்மையாகவே இன்றைய தமிழ் பிராமண சமூகம் பரிதாபத்துக்குரியது. பாரதி, நிலகண்ட சாஸ்திரி போன்றவர்களில் இருந்து வெகுவாக கீழிறங்கி துக்ளக் சோ என்று வந்து அதிலிருந்தும் கீழிறங்கி இன்று எச். ராஜா, விஷாகா ஹரி, மதுவந்தி, கஸ்தூரி, காமகோடி, நாராயண மூர்த்தி என்று வந்து நின்றிருக்கிறது.
“பார்ப்பனக் குலம் கெட்டழிவு எய்திய
பாழடைந்த கலியுகம் ஆதலால்
வேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே
மேன்மை கொண்ட தொழில் எனக்கொண்டனன்”
வெங்கி ராமகிருஷ்ணனை மறக்க இருந்தேன். அவரும் பிராமணர் தான் ஆனால் விஞ்ஞானத்தை விஞ்ஞானமாக மட்டுமே பார்த்த மிகச் சிறந்த அறிவியலாளர். அவரை அழைத்து இந்த அரசு கூத்தடித்த போது விட்டால் போதும் என்று ஓடி விட்டு இந்திய அறிவியல் காங்கிரசில் பிரம்மாஸ்திரத்தில் அணு அராய்ச்சி மாதிரி உரைகளைக் கேட்டு அரண்டு போனதாக சொன்னார். யதா ராஜா ததா பிரஜா.
இன்னும் ஓர் நூற்றாண்டு ஆனாலும் காமகோடிகளால் ஃபெயின்மேன் மாதிரி எழுதவோ பேசவோ முடியாது. போய் ஒரு பள்ளியில் ஃபெயின்மேன் பற்றி உரை நிகழ்த்த யோக்கயதையோ ஊக்கமோ இல்லை மாறாக கோமூத்திர உரை நிகழ்த்த தான் காமகோடிக்குத் தெரியும். அவர் ஃபெயின்மேனை எல்லாம் படித்திருப்பார் ஆனால் பரப்புரை செய்வது கோமூத்திரம். Bloody scumbag and Hypocrite.

References:
7.

Sunday, January 19, 2025

ஜல்லிக்கட்டு போராட்டம் : பண்பாடு, சாதியம் குறித்த ஒரு பார்வை

2017-இல் தமிழகம் கண்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் பற்றி என் அப்போதையப் பதிவுகளைத் தொகுத்து கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட "ஜல்லிக்கட்டு" புத்தகத்தில் கட்டுரையாக வெளிவந்தது இக்கட்டுரை. 8 வருடங்கள் கழித்து இன்றும் என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை.



ஒரு மாத காலம் தமிழகத்தையே கட்டிப்போட்டதோடு ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ஜல்லிகட்டு போராட்டம். பெருவாரியான மக்களால் விதந்தோதப்பட்ட இந்தப் போராட்டம் சாதித்தது என்ன? அலசுவோம். 

பண்பாடு எனும் முக்காடு 

ஜல்லிக்கட்டை ஏன் காப்பாற்றவேண்டும் என்பதற்குச் சொல்லப்படும் முக்கியமான காரணம், பண்பாடு. இந்த ஒற்றைச் சொல்லைக் கொண்டு நீதிமன்றத்தைச் செயலிழக்கச் செய்யும் தாரக மந்திரம் ஒன்று உருவானது. இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பல சீர்திருத்தங்கள் ஆரம்பம் முதலே பண்பாடு என்னும் பெயரால்தான் எதிர்க்கப்பட்டு வந்தன. தேவதாசி முறை, குழந்தைத் திருமணம், உடன் கட்டை ஏறுவது, தீண்டாமை என்று ஒரு நீண்ட பட்டியலையே தயாரிக்கலாம். இவையனைத்துமே பண்பாட்டின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டன. அந்த எஃகு கோட்டையைத் தகர்த்துதான் சீர்திருத்தங்கள் சாத்தியமாயின. 

இதன் பொருள் பண்பாடு என்றாலே பழமை, எனவே எல்லாவற்றையும் குப்பையில் வீச வேண்டும் என்பதல்ல. அதே போல் பண்பாடு என்பதற்காகவே கேள்விகள் எதையும் எழுப்பக்கூடாது என்று சொல்லப்படுவதும் ஏற்கத்தக்கதல்ல. ஜல்லிக்கட்டு தமிழர்கள் அனைவரின் பண்பாடு வெளிப்பாடா? இதைப் பாதுகாக்கத்தான் வேண்டுமா? இதில் சாதியம் இல்லையா? இப்படி எதிர்க்கேள்விகளை எழுப்பினால் ‘தமிழ் விரோதி’ என்று முத்திரை குத்தப்படுகிறது. விவாதங்கள் எதுவுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் ஒருவித மயக்க நிலையில் ஒன்றை ஏற்றுக்கொள்வதும் செயல்படுத்துவதும் பெருமைப்படத்தக்கதல்ல. 

ஜல்லிக்கட்டில் சாதியம் உள்ளது என்று அதன் ஆதரவாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஜல்லிக்கட்டை ஆதரித்து எழுதும் என் உற்ற நண்பர்கள் சிலரிடம் பேசினேன். எல்லோரும் இங்கே அமெரிக்காவில் இருப்பவர்கள், பல தரப்பட்ட அரசியல் சார்புடையவர்கள். ஜல்லிக்கட்டு நிச்சயம் நடத்தப்பட்டே தீரவேண்டும் என்பது அவர்கள் திடமான கருத்து. சரி, தலித்துகள் பங்கேற்பு இல்லை என்று சொல்லப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் அளித்த பதில்கள் இவை. ‘தலித்துகள் பங்கேற்பில் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஆட்சேபணை எதுவுமில்லை’. ‘சமூகம் மாற நாம் அதன் போக்கில் விட்டுப் பிடிக்கவேண்டும்’. ‘ஒரே நாளில் இதற்கெல்லாம் தீர்வு காணமுடியாது’. ‘முதலில் ஜல்லிக்கட்டு. மற்ற விஷயங்களைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’. 

2025 ஜல்லிக்கட்டில் பட்டியல் இன மாடு பிடி வீரர் ஒதுக்கப்பட்டதில் எழுந்த சர்ச்சை

ஆக இவர்கள் எல்லோருக்கும் தங்கள் பண்டிகை தடையில்லாமல் கோலாகலமாக நடக்கவேண்டும் என்பதில் மட்டும்தான் அக்கறை இருக்கிறது. அனைவருக்குமான பண்டிகையாக அது இருக்கவேண்டும் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல. 



வரலாற்றாசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் பி.பி.சி.க்கு ஜல்லிக்கட்டில் சாதியம் பற்றி அளித்த பேட்டியின் சுட்டி https://www.bbc.com/tamil/media-38687862

ஒருவர் மிகவும் அதிர்ச்சி தரத்தக்க எதிர் வாதங்களை முன்வைத்தார். அமெரிக்காவில் அவர் குடியிருக்கும் பகுதியிலிருந்து சிறிது தூரம் தள்ளி ஹிஸ்பானிக் மக்கள் குடியிருக்கிறார்களாம். அவர்களுடைய பழக்கவழக்கங்கள் வேறுபட்டவை. தலித்துகளும்கூட ஒருவகையில் ஹிஸ்பானிக்குகளைப் போன்றவர்கள்தாம் என்றார் அவர். ‘அவர்கள் பகுதியில் அவர்கள் மாடு பிடி நடத்துவது சரிதானே?’ என்றார். தவிரவும், அலங்காநல்லூரில் தலித்துகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதாகவும் அவர் சொன்னார். ஆனால் மற்ற இனத்தவரின் மாடுகளை தலித்துகள் அடக்கினால் பல கிராமங்களில் கலவரம் வெடிக்கும் அல்லவா? அதை எப்படிப் புறக்கணிக்கமுடியும்? 

ஒன்றிணைந்திருக்கிறார்களா? 

ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழினமே பாகுபாடின்றி ஒன்றிணைந்திருக்கிறது என்பதெல்லாம் பசப்பு. இந்த மாணவர்கள் மட்டும் ‘இனி ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு இருக்கக்கூடாது‘ என்று சொல்லிப் போராடியிருந்தால் இவ்வளவு பெரிய கூட்டம் சேர்ந்திருக்குமா? மாணவர்களிடையே சாதி இல்லை என்பதெல்லாம் வீண் பேச்சு. சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும் தேவர் மாணவர்கள் அக்கல்லூரியின் முழுப் பெயரான ‘அம்பேத்கர் சட்டக் கல்லூரி’ என்பதைச் சொல்ல மறுத்தும் அதைத் தொடர்ந்து கலவரம் வெடித்ததும் நமக்கெல்லாம் தெரியும். 

‘அரசாங்க மேற்பார்வைக் குழு ஒன்று அமைத்து, போட்டி பாதுகாப்பாகவும் எல்லாரும் பங்கேற்பதாகவும் இருக்கும்படி விதிகளைச் சட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்’ என்று நண்பரிடம் சொன்னேன். ‘அதெல்லாம் சரி வராது. உள்ளூர் மட்டத்தில்தான் இதையெல்லாம் கையாளவேண்டும்’ என்று மறுத்துவிட்டார் அவர். ‘ஐயா, உள்ளூர் வழக்கங்களுக்குக் கட்டுப்பட்டால் சமூக நீதி கிடைக்காதே’ என்றேன். அதற்கு அவர் ‘நீங்கள் ஐரோப்பிய மனநிலையில் பேசுகிறீர்கள்’ என்று முடித்துக்கொண்டார். 

இங்கே காந்தியின் பூனா ஒப்பந்தத்தை நினைவுகூற வேண்டும். பிரச்னை தனித் தொகுதி கொடுப்பதில் ஆரம்பித்தது. ஆனால் அதுவே ஆலய நுழைவு, தீண்டாமை ஒழிப்பு என்று விரிவடைந்தது. சிறையில் இருந்து மீண்ட மகாத்மா, தேச விடுதலைப் போராட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு சமூக விடுதலைக்காக நடைப்பயணம் மேற்கொண்டார். 

எல்லோருக்கும் வாக்குரிமை, இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு, மதச் சுதந்தரம் ஆகிய லட்சியங்களை உள்ளடக்கி 1950ல் இந்திய அரசியல் சாசனம் உருவெடுத்தது. ‘லோக்கல் உணர்வுகள்’ என்று புறக்கணித்திருந்தால் தலித்துகள் மட்டுமல்ல அவர்களை இன்று ஒடுக்கும் பலரும்கூட ஒடுக்கப்பட்ட நிலையிலேயே இருந்திருப்பார்கள். 

சட்டத்தின் முக்கியத்துவம் 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்திய விஷயம் சராசரி தமிழருக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு, சட்டம் பற்றியும் நீதிமன்றம் குறித்தும் இருந்த பாமரத்தனமான புரிதலே. கும்பலின் எண்ணிக்கை எனும் அளவுகோலுக்கு சட்டத்தைக் கைப்பாவையாக்கியது காண சகிக்காதது. ஜல்லிக்கட்டு போராளிகள் பலரும் நீதிமன்ற தடையுத்தரவை எப்படியெல்லாம் சட்டசபையின் துணையோடு முறியடிக்கலாம் என்பதில்தான் முனைப்பாக இருந்தனர். மேலும் காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு கண்டுகொள்ளாதது சுட்டிக் காட்டப்பட்டு ‘நாமும் அப்படியே செய்யலாமே’ என்றொரு கோஷம் எழுந்தது. 

ராஜிவ் காந்தி அரசு ஷா பானோ வழக்கில் நடந்துகொண்ட விதம்தான் இதற்கான உந்துசக்தி. இஸ்லாமியப் பெண்ணான ஷா பானோ ஜீவனாம்சம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகி அதற்கான உரிமையைப் பெற்றார். அன்று நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை கொண்டிருந்த ராஜிவ் அரசு ஓட்டு அரசியலுக்காக அத்தீர்ப்பை மறுத்து சட்டமியற்றியது. பின்னர் நீதிமன்றம் அச்சட்டத்தை ரத்து செய்தது. அதனால் இஸ்லாமியப் பெண்கள் நன்மையடைந்தனர். 

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இன்னும் உயிர்ப்புடன் செயல்படும் ஒன்று. காவிரி பிரச்னையில் தவறு நீதிமன்றத்தில் இல்லை. மத்திய அரசும், மாறி மாறி மத்திய அமைச்சரவைகளில் அங்கம் வகித்த தமிழ் நாட்டு மாநிலக் கட்சிகளும்தான் இதற்குப் பொறுப்பு. மிக முக்கியமான உரிமைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே நமக்கு அரணாக நிற்கிறது. மெரினாவில் கூடிய கும்பலிடம் கேஷவானந்த பாரதி வழக்கு, நக்கீரன் கோபால் வழக்கு, 356 சட்டப் பிரிவு குறித்த எஸ்.ஆர். பொம்மை வழக்கு ஆகியன பற்றிய அறிமுகமாவது உண்டா என யாராவது கேட்டால் இல்லையென்றே பதில் வந்திருக்கும். தமிழகத்தில் பலரும் கோரிய ராஜிவ் கொலையாளிகளின் மரண தண்டனை குறைப்பைக் கடைசியில் உச்ச நீதிமன்றமே செய்தது. மத்திய அரசு அவர்களின் கருணை மனுக்கள்மீது 20 வருடங்களுக்கு மேலாக முடிவெடுக்காததால் நீதிமன்றம் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.நமக்கு ஒரு தீர்ப்பு பிடிக்கவில்லை என்பதற்காக சட்டத்தின் இடுக்குகளில் புகுந்து போராட்டம் என்ற பெயரில் கும்பல் சேர்த்துவிட்டால் அதையே சாதனையாக எடுத்துக்கொள்ளமுடியுமா? 

இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதை நிறுத்துவதற்காகச் சில விதிமுறைகளை நீதிமன்றம் அறிமுகப்படுத்தியது. ஆனால் அவை பின்பற்றப்படுவதில்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்தான் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்களோ பீட்டாவைத் தடை செய்யவேண்டுமென்று குதிக்கிறார்கள். அவர்கள் அப்படி என்ன செய்துவிட்டார்கள்? இந்தத் தடை இல்லையென்றால் மாடுகள் நடத்தப்பட்ட நிலை பற்றியும் ஜல்லிக்கட்டில் நிலவும் சாதி வெறி பற்றியும் உரையாடலாவது நடந்திருக்குமா? 

இன்னமும் இவர்கள் யாரும் மாடுகள் நடத்தப்படும் விதம் மட்டுறுத்தப்படும் என்றோ, ஜல்லிக்கட்டில் சாதியத்துக்கு இடமில்லை என்றோ விதிமீறல்களைக் கண்டறிய மேற்பார்வை அவசியம் என்றோ சொல்லவில்லை. பீட்டாவைத் தடை செய்து மிருக வதை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்று அவர்கள் கோருவதற்குக் காரணம் மேற்பார்வை என்பதே இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். நிச்சயம் பீட்டா விமரிசனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. அந்நிறுவனம் அமெரிக்காவிலேயே அதிகம் விமரிசிக்கப்படும் ஓர் அமைப்புதான். ஆனால் மிருக வதை குறித்து விழிப்பூட்டுவதில் அவர்களுடைய பங்களிப்பு முக்கியமானது என்பதை மறந்துவிடக்கூடாது. 

இந்து தெய்வங்களோடு சம்பந்தப்பட்ட மிருகங்களின் பட்டியலைப் போட்டுவிட்டு, ‘எங்களுக்கா மிருகங்களை நடத்த தெரியாது?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிலர். நடத்தத் தெரியாது என்பதுதான் உண்மை. கோயில் யானைகளின் நிலை பரிதாபகரமானது. மாட்டு வண்டிகள் பரவலாக இருந்த காலத்தில் அவை பெருமளவில் கொடுமைப்படுத்தப்பட்டன. மிருகங்களை நடத்தும் விதம் பற்றி பல நாடுகளில் சமீபத்தில்தான் விழிப்புணர்வு மேம்பட்டிருக்கிறது. மருத்துவப் பரிசோதனைகளுக்கு மிருகங்களை உட்படுத்தும் வழக்கம் இன்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் தமிழ் நாடோ இந்த விஷயத்தில் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. 

அவசர சட்டம் இயற்றிய பிறகு நடந்த ஜல்லிக்கட்டுகளில் பலர் காயமுற்று இருக்கின்றனர். இறந்தவரில் ஒருவர் அவருடைய கிராமத்தின் முதல் பட்டதாரி. பார்வையாளர்கள் பலர் காயப்பட்டுள்ளனர். ஆக, மாடுகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும்கூட பாதுகாப்பு இல்லை என்பதே யதார்த்தமான நிஜம். 

மாலுமியில்லாத கப்பல் 

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தலைவனில்லாத போராட்டம் என்று பெருமையுடன் கூறப்படுகிறது. பேருந்துகளின் கண்ணாடிகள் உடைபடவில்லை. ஆண்களும் பெண்களும் சகஜமாகத் தோளோடு தோள் நின்று போராடுகிறார்கள். தீக்குளிப்புகள் நிகழவில்லை. இப்படி நல்ல மெச்சத்தக்க, வியக்கத்தக்க வகையில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் பாராட்டுக்குரியர்வர்கள். அதே சமயம், இவையனைத்தும் இயல்பாக நடக்கவேண்டிய விஷயங்கள்தாம். இவற்றை வியந்து பாராட்டவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதே உண்மை. 

மெரினா போராட்டத்தை வைத்து, தமிழகம் பெண்களைப் போற்றும் மாநிலம் என்று யாராவது நம்பினால் அது தவறு. இதே தமிழகத்தில்தான் பெண்கள் பற்றி மிக, மிக ஆபாசமான மொழிகளில் வசைகளும் வந்துவிழும். இப்போராட்டத்திலும் அதைப் பார்க்கமுடிந்தது. ஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி என்று பலர் சிலாகித்தார்கள். அரபு வசந்தம்போல் இது தமிழ் வசந்தம் என்றும் சிலர் உணர்ச்சிவசப்பட்டனர். 

அரபு வசந்தம் மட்டுமல்ல, பிளாக் லைவ்ஸ் மேட்டர், வால்ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம் ஆகியவையும்கூட சமூக ஊடகங்கள் வழியாக முகிழ்ந்தவைதாம். இந்தப் போராõட்டங்களுக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்பதும் உண்மைதான். ஒரு சமூகத்தில் பல காரணங்களுக்காகக் கனன்று கொண்டிருக்கும் கோபம் ஏதோவொரு பொறியில் வெடிக்கும். அத்தருணத்தை யாராலும் கணிக்கமுடியாது. இந்தக் கோபம் சமூக ஊடகம் தரும் இணைப்பு காரணமாக காட்டுத் தீயாகப் பரவி சுயம்பு போராட்டமாக உருவெடுக்கும். 

இப்போராட்டங்களுக்கு மையத் தலைமைகள் இராது. அத்தகைய தலைமைகள் உருவாவதை இவர்கள் நிராகரிக்கவும் செய்வார்கள். மேலும், சமகால அரசியல் அமைப்புகள் அனைத்தையும் இவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும் செய்வார்கள். அமெரிக்காவின் மதிக்கப்படும் போராளியும் தற்கால காங்கிரஸ் உறுப்பினருமான ஜான் லூயிஸை, ‘நீயும் அமைப்பின் ஒரு பகுதிதான்’ என்று சொல்லி வெளியேறச் சொன்னார்கள். இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் தோல்வியைத் தழுவின அல்லது பிசுபிசுத்துப் போயின. 

ஜல்லிக்கட்டு இந்த இடத்தில் மாறுபடுகிறது. அது பிசுபிசுக்கவில்லை என்பதோடு வெற்றியும் பெற்றது. அதற்குக் காரணம் தெளிவாக வரையறுக்கக்கூடிய குறிக்கோளை அது கொண்டிருந்ததுதான். ‘இது நிறைவேறினால் வெற்றி’ என்று சொல்லத்தக்க ஒரு விஷயத்தை அவர்கள் எடுத்துக்கொண்டனர். 

ஜல்லிக்கட்டை விமரிசித்தவர்களைப் போராட்டக்காரர்களும் அவர்களைப் பின்னாலிருந்தும் தொலைவிலிருந்தும் ஆதரித்தவர்களும் உதாசீனப்படுத்தியதையும் எட்டப்பர்கள் என்று வசை பாடியதையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது. ‘அரசு வன்முறைக்குப் பலியாகாதீர்கள்’ என்றுச் சொன்ன மனுஷ்யபுத்திரன், ராகவா லாரன்ஸ் போன்றோர் அரசின் ஏஜெண்டுகள் என்று அழைக்கப்பட்டனர். போராட்டத்தின் இறுதிக் கணங்களில் காவல்துறையினரிடம் அடிபட்டு மாணவர்கள் கொடுத்த விலை அதிகம் என்றாலும் அது தவிர்க்கவியலாதது என்று சிலர் நியாயப்படுத்தினார். அவர்களுடைய சொந்த மகனோ மகளோ இப்படி அடிபட்டிருந்தால் அவ்வாறு சொல்லியிருப்பார்களா? 



காவல் துறை எங்களுடைய நண்பர்கள் என்று சொல்லிவந்த போராட்டக்காரர்கள் ஒரு கட்டத்தில் மோதலைச் சந்திக்கவேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது? அதற்கான காரணத்தை இரண்டு தரப்பிடமும் தேடவேண்டும். காவல் துறை பல இடங்களில் தன் கோர முகத்தைக் காட்டியிருக்கிறது. அதேபோல்தான் போராட்டக்காரர்களும். சரியான தலைமை இருந்திருந்தால் அல்லது தலைமையை ஏற்கும் பண்பிருந்தால் இது நடந்திருக்காது. ஆனால் இந்த இரண்டு பண்புகளுமே இத்தகைய போராட்ங்களின் தன்மைக்கு ஒவ்வாதவை. 

மாணவர்களின் அறியாமை அப்பட்டமாக வெளிப்பட்டதையும் நாம் பார்த்தோம். போராட்டக்களத்தில் இருந்து அவர்கள் அளித்த பேட்டிகள் அவர்களுடைய புரிதல் திறனை மட்டுமல்ல தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறித்த சந்தேகத்தையும் எழுப்பின. தமிழ் நாட்டில் கல்வி தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இந்தியாவிலேயே கல்விக் கடன் பெறுவதில் தமிழ் நாடு முதலிடம் வகிக்கிறது. இருந்தும் தமிழ் நாட்டுப் பொறியியல் கல்லூரி மாணவர்களில் 18% பேர் மட்டுமே ஒரு நேர்முகத் தேர்வில் தேர்ச்சிப் பெறமுடியும் என்று அரசாங்க ஆய்வு சொல்கிறது. 2015ம் ஆண்டு சமச்சீர் கல்வியில் பயின்ற மாணவர்களில் 9 பேர் மட்டுமே ஐஐகூ-ஒஉஉ தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பல கல்வி நிலையங்களில் ‘நன்கொடை’ பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதற்கெல்லாம் போராடாத மாணவர்களை எக்காலத்திலும் மதித்துவிடமுடியாது. 

அறப் போராட்டமா? 

காந்தியைப் பற்றி அறியாதவர்கள் மட்டுமே இந்தப் போராட்டத்தை காந்திய போராட்டம் என்று அழைக்கமுடியும். ஹிப் ஹாப் ஆதியின் ‘டக்கர்’ பாட்டு இப்போராட்டத்துக்கு முக்கியக் காரணி. ஆனால் அந்தப் பாட்டு விவரிக்கும் சூழல் என்பது ஒரு சதி கேட்பாடு மட்டுமே. காந்தியம் என்பது வெறும் போராட்ட உத்தியல்ல. ஆரம்பம் முதல் கடைசி வரை சத்தியம் என்பதுதான் காந்தியம். காந்தியம் என்பது எதிர் கருத்துடையவனை மட்டுமல்ல விலகிச் செல்பவனைக்கூட எதிரியாகவோ துரோகியாகவோ பார்க்காது. பண்பாடு என்னும் பெயரில் மிருக வதையை அவர் ஒப்புக்கொண்டிருப்பாரா? மக்களில் ஒரு சாரார் விலக்கி வைக்கப்படுவதை நீக்கினாலொழிய காந்தியின் கையொப்பம் இதற்குக் கிடைத்திருக்காது. பண்பாடு, கலாசாரம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு போராடுபவர்களின் பதில் என்ன? ஆக காந்தியம் குறித்தும்கூட இவர்கள் அரைகுறையாகத்தான் தெரிந்து வைத்திருக்கிறார்கள். 

முதலில் போராட்ட இடத்தில் சிறார்களையும் பெண்களையும் காந்தி அனுமதித்திருக்க மாட்டார். காந்தியின் போராட்டங்கள் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டவை. மார்ட்டின் லூதர் கிங் தன் பேரணியைத் திட்டமிட்டபோது, காந்தி எப்படித் தன் கூட்டங்களை ஒழுங்குபடுத்தினார், கழிப்பறை வசதிகளை எப்படிப் பார்த்துக்கொண்டார் என்பதைத் தன்னுடைய உதவியாளரைக் கொண்டு ஆராயச் சொன்னார். பல்லாயிரக்கணக்கான கறுப்பினத்தவர் உரிமைக்குரல் எழுப்பும் இடத்தில் ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்தாலும் பெரும் இழுக்கு வந்துசேரும் என்பதால் கிங் அதே கவலைகளைக் கொண்டிருந்த காந்தியை ஆராய்ந்தார். நம் போராட்டக்காரர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை.காந்தியிடம் இவர்கள் பயிலாத இன்னொன்று, போராட்டத்தை எப்போது திரும்பப்பெறவேண்டும் என்பதை. இதுவே பெரிய அவலத்தை ஏற்படுத்தியது. 

அமெரிக்காவில் ஆதரவு 

அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் என்பவை கேளிக்கை விரும்பிகளின் கூடாரங்களாகவே இருக்கின்றன. படித்த பண்பாளர்கள்கூடத் தங்கள் மாண்புகளை இழந்து சராசரிகளாகும் இடம் தமிழ்ச் சங்கம். ‘மீசையை முறுக்கு, பீட்டாவை நொறுக்கு’ என்று தொண்டைக் கிழிய இங்குள்ள பெண்கள் கத்தும்போது சிரிப்புதான் வருகிறது. இப்பஐ முழங்குவதன்மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் என்ன கற்றுக்கொடுக்கிறீர்கள்? ஓர் அமைப்பின் செயல் பிடிக்கவில்லையா? அதை எதிர்த்து கோஷம் போடலாம், அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தித் தோற்கடிக்கலாம். ஆனால் தடை செய்ய கோருவது அநாகரிகம் இல்லையா? பிடிக்காதவர்களை ‘நொறுக்க’ வேண்டும் என்று சொல்வது அறுவறுப்பு இல்லையா? அதுவும் மீசையை முறுக்கிக்கொண்டு? ஒரு வேளை இந்த ஆபாசங்கள்தான் தமிழர் பண்பாடோ? 



ஒவ்வொருமுறை தமிழ் சங்கங்களுக்குச் சென்று வரும்போதும் தோன்றுவது இதுதான். ‘காப்பாற்றத்தக்க எந்த பண்பாடும் நம்மிடையே இல்லையா?’ இந்தச் சிந்தனைதான் ஜல்லிக்ட்டு விஷயத்திலும் தோன்றியது. அமெரிக்காவில் தனியார் கம்பெனியில் டாலரில் சம்பாதித்துக்கொண்டு கோக் குடித்துக்கொண்டே தமிழ் நாட்டுக்காரனுக்கு ‘கோக் குடிக்காதே, தனியார்மயமாக்கலை எதிர்த்துப் போராடு’ என்று உபதேசம் செய்ய நம் தமிழர்களைப் போல் நெஞ்சுரம் யாருக்கு வரும்? வெறும் நடிப்பு சுதேசிகள். 

அநேகருக்கு இந்திய இலக்கியமோ வரலாறோ கிஞ்சித்தும் தெரியவில்லை என்பதும்கூட அவர்களுடைய அர்த்தமற்ற முழக்கங்களில் வெளிப்பட்டது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் கல்லூரிகளில் கேட்ட அதே ‘பனைமரத்துல வவ்வாலா, தமிழனுக்கே சவாலா’ போன்ற முழக்கங்களைத்தான் இன்றும் கேட்கமுடிகிறது. 

மாநிலமும் நாடும் 

தேசம் குறித்தும் சட்டம் குறித்தும் உரிமைகள் குறித்தும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். நீதிமன்றமும் நாடாளுமன்றமும் செயல்படும்விதம் குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டும். நம்முடைய நிறை, குறைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். போராடுவது தவறல்ல, ஆனால் நோக்கம் முக்கியமானது. இது போக, தமிழர்களுக்குச் சொல்ல தனிப்பட்ட செய்தி ஒன்று இருக்கிறது. இந்தியாவோ உலகமோ உங்களுக்கு எதிரியல்ல. வேற்று மொழிகள்மீது விரோதம் கொள்ள தேவையில்லை. எல்லாவற்றிலும் சதி இருப்பதாக சந்தேதிக்கவேண்டியதும் இல்லை. 

இதைச் சொல்வதற்குக் காரணம் தனித் தமிழ்நாடு குரல்களும் இந்திய வெறுப்புக் குரல்களும் இந்தப் போராட்டத்தில் வெளிப்பட்டதைப் பார்த்தோம். இந்தியா ஒரு தேசம் என்பதை ஏற்கமுடியாது என்றும்கூடச் சிலர் ஜல்லிக்கட்டை முன்வைத்து வாதிட்டனர். தேசம் என்பதே கற்பிதம் என்றால் மொழி, இனம் என்பதெல்லாமும் கற்பிதங்களே. பண்பாடு, கலாசாரம் ஆகியவையும்கூட கற்பிதங்கள்தாம். அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு தனித் தமிழ்நாடு பற்றி நீட்டி முழக்குபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். தேசம் சிதறுவதைத் தடுப்பதற்காகவே உள்நாட்டுப் போரொன்றை முன்னெடுத்து ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகையை இழந்த நாடு அமெரிக்கா. இந்தியாவை அறிந்திராத, அதன் பண்பாடு பற்றி அறிந்திராதவர்களின் அறிவு வீழ்ச்சிதான், குடியரசு தினத்தைத் தமிழர்கள் கொண்டாடக்கூடாது என்னும் முழக்கமும் தனித் தமிழ்நாடு என்னும் கோரிக்கையும் ஆகும். 

சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவை வெறும் விடுமுறை தினங்களல்ல அவை பெரும் குறியீடுகள். அதனால்தான் ஒரு சாரார் அதனைத் துக்க நாள் என்று குறிக்கத் துடிக்கிறார்கள். அது சரியல்ல. ஏன்? முதலில் உங்களைச் சுற்றிப் பாருங்கள். பாகிஸ்தான், மியான்மர், சீனா, ஆப்கானிஸ்தான், கொஞ்சம் தள்ளி ரஷ்யா, சிங்கப்பூர் என்று ஆசியக் கண்டத்தில் இந்தியா போன்ற நிலப் பரப்பும், வேற்றுமைகளையும் உள்ளடக்கி ஒரு முதிர்ந்த ஜனநாயகமாகவும் எந்த நாடும் இல்லை என்பது தற்செயல் அல்ல. 

அரசியல் சாசனம் எழுதப்பட்ட காலத்தில் (1947-1950) இந்தியாவின் சூழலைக் கவனித்துப் பாருங்கள். மிகப் பெரிய மனித இடப்பெயர்வு, உள்நாட்டுப் போருக்கு இணையான கலவரங்கள், எல்லையில் அடுத்தடுத்த போர்கள் இவற்றுக்கிடையே இந்தியா உருவாக்கிய அரசியல் அமைப்பு அபாரமானது. முப்பது வருடங்களுக்கு முன்பு லெனினால்கூடச் செய்யமுடியாதது அது. இந்தியனாகப் பிறந்த யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்றும் அதற்காகப் பரப்புரையும் மேற்கொள்ளலாம் என்று அக்காலத்தில் சொல்வதற்கு அசாதாரணமான நெஞ்சுறுதி வேண்டும். தீண்டாமை ஒழிப்பு, மனித உரிமைகள், எல்லோருக்குமான ஓட்டுரிமை, பேச்சுரிமை என்று நம்மைச் சுற்றியுள்ள பல நாடுகளிலும் இல்லாத உரிமைகள் சராசரி இந்தியர்கள் அனுபவிக்கிறார்கள். 

நேருவின் முதல் அமைச்சரவையைப் பார்த்தால் அதில் இந்தியாவை ஒருவர் பார்க்கமுடியும். பாகிஸ்தானில் ஓர் இந்து ஜனாதிபதியாகமுடியுமா என்று கேட்பதற்குப்பதில் இந்தியாவில் ஒரு சீக்கியர், இஸ்லாமியர், தலித் ஜனாதிபதியாகலாம் என்று நாம் பெருமிதம் கொள்ளவேண்டும். கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கமுடியுமா என்பதைவிட கர்நாடக இலக்கியவாதிக்குச் சென்னையில் சிலை வைக்கும் மாண்பு தமிழனுக்கு இருக்கிறது என்பது முக்கியமானது. காமராஜரும் கக்கனும் ஆட்சி செய்த அரசியல் அமைப்பு நம்முடையது. 

தமிழகம் இந்தியாவில் இருந்து பெற்றதும் அதிகம், கொடுத்ததும் அதிகம். எதை இழந்தோம் என்று கணக்குப் பார்த்தாலும் பெற்றதே அதிகம். ‘என் மகள் தமிழ் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்‘ என்றார் நேரு. தேசிய அளவில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவுக்குத் தமிழகமும் தமிழகத்துக்கு இந்தியாவும் ஒன்றுக்கொன்று இன்றியமையாதவை. 

எந்தத் தேசத்திலும் எந்த அரசியல் அமைப்பிலும் குறைகளோ அக்குறைகளால் உண்டாகும் கோபங்களோ இல்லாமல் இல்லை. 250 வருடப் பாரம்பர்யம் கொண்ட அமெரிக்க அரசியல் அமைப்பை இன்று எகானமிஸ்ட் பத்திரிக்கை ‘குறைபாடுள்ள ஜனநாயக நாடுகள்’ பட்டியலில் சேர்த்திருக்கிறது. உலக நாகரிகங்கள் குறித்து எழுதிய வில் டூரண்ட்,நாகரிகம் என்பது ஒவ்வொரு தலைமுறையும் புதுப்பிக்க வேண்டிய ஒன்று என்கிறார். நமக்கான நாகரிகத்தை நாம்தான் உருவாக்கவேண்டும். 

Friday, January 10, 2025

பாரதி எனும் முதல் இந்தியன்

 பாரதி எனும் முதல் இந்தியன்:

யார் ‘இந்தியன்’, இந்தியனாக இருப்பதென்பது யாது என்ற கேள்விக்கு தன் வாழ்வையே பதிலாக அளித்து அதன் பொருட்டே தன் உயிரையும் அளித்தவர் காந்தி அவருக்கும் முன்பாக காந்தி நெடுங்காலம் பயணித்து அடைந்த புள்ளியைச் சுட்டிச் சென்றவன் நம் தமிழ் மகாகவி பாரதி. தாகூரால் கூட எட்ட முடியாத சிந்தனை உயரத்தை அடைந்தவன் பாரதி என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமேயில்லை.



அமெரிக்க அரசு முத்திரையில் “E Pluribus Unum” என்று லத்தீன் வாசகமுள்ளது, “பன்மையிலிருந்து ஒருங்கிணைந்த ஒற்றுமையான ஒன்று” என்ற அர்த்தம் (Out of many, one). பாரதிக்கு அந்த வாசகம் அறிந்ததாக தெரியவில்லை, ஆயினும், 26 வயதே ஆன கவிஞன் 1909-இல் எழுதுகிறான்:
"முப்பது கோடி முகமுடையாள், உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.
நண்பர்களே இந்திய தேசிய கீதத்தை 1911-இல் எழுதும் போது தாகூருக்கு வயது 50, அப்பாடலில் இல்லாத கருத்தியல் பாரதியின் கவியில் தான் உள்ளது. “உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்” எனும் போதே பாரதிக்கு தெரியும் இங்கிருக்கும் பிரிவினைகள், அதனால் தான், “எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம், எல்லாரும் இந்திய மக்கள்” (1922) என்றும் எழுதுகிறான்.
காந்தியும், குறிப்பாக பாரதியும், உயர்குடி என்று சுட்டப்படும் ஜாதிகளில் பிறந்தவர்கள் அதன் பலன்களையும் அடைந்தவர்கள் என்பதோடு அதுவே அவர்களின் விசாலப் பார்வை என்று நாம் இன்று சொல்லக் கூடிய பார்வையை ‘இந்தியா’ என்ற கட்டமைப்புக் குறித்து எழுப்ப முடிந்ததென்று நியாயமான விமர்சனமாகவே சொல்லலாம். சுதந்திர போராட்டமே வெறும் வெள்ளையர் ஆதிக்கத்தை அகற்றுவது என்று மட்டுமே இருந்த காலத்தில் தான் பாரதி வாழ்ந்தான். காந்தி வெகு காலம் தீண்டாமைக்கு எதிராக செயலாற்றினாலும் பூனா ஒப்பந்ததுத்துக்கு பிறகு தான் 6 வருடம் தேச விடுதலையை விட ஒடுக்கப்பட்டோர் நலனை முன்னிறுத்தி செயலாற்றுகிறார். இந்த பின்னணியில் பாரதியை பற்றி சில கோணங்களை முன் வைக்கிறேன்.
“ஸ்வதந்திர பள்ளு” (1909, பாரதியின் அகவை 26) என்ற பாடலை “பள்ளர் களியாட்டம்” என்று உப தலைப்பிட்டே பாரதி எழுதுகிறான். தேச விடுதலை பற்றியப் பாடலின் முதல் வரியே “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே” என்று சொல்லி அதன் பின்னர் தான் “வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே” என்கிறான். ‘சுய சாதி விமர்சனம்’ என்ற கருத்தாடலோ, சொல்லாக்கமோ இல்லாத யுகத்தில் அதனை தொடர்ந்து செய்தவன் பாரதி. இதே பாடலில் மீண்டும் சொல்கிறான், “எங்குஞ் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு”. உண்மையில் இதனை எழுதியவன் இந்தியாவின் தெற்கு மூலையில் ஒரு சிற்றூரில் வாழ்ந்த 26 வயது வாலிபனென்றால் இன்றும் யாரும் நம்ப மாட்டார்கள். அன்றைய இந்தியாவில் பாரதியின் சமகாலத்தில் இப்படி எழுதிய கட்டுரையாளர்கள், கவிஞர்கள் இருந்தார்களா எனத் தெரியவில்லை. சமத்துவமில்லா இந்தியா இந்தியாவே அல்ல என்று தெளிவுடன் இருந்தவன் பாரதி.
பாரதி, எல்லாப் புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள், முன்னோடிகளையும் போல் தன் சம கால விதிகளை மீறுபவனாகவும், தகர்ப்பவனாகவும் இருக்கும் அதே வேளையில் சம காலத்தின் பிடியில் இருந்து மொத்தமாக துண்டிக்கப்பட்டவனுமல்ல என்ற புரிதல் முக்கியம். இதனை குறிப்பாக ஸ்டாலின் ராஜாங்கம் சுட்டிக் காட்டி இருப்பார். சமத்துவ சமூகம் பேசிய பாரதி ஒரு ‘paternalistic’ இடத்தில் இருந்தே பேசுவதை சுட்டிக் காட்டி அது மாறி வரும் இந்திய சமூக உறவுகளின் தொடக்க யுகத்தில் இருந்த சிந்தனையாளனின் போக்கு என்றும் அதனை பரிவுடன் நோக்குதல் வேண்டும் என்றார்.
வ.உ.சி-யைப் பற்றி தாகூர் பாடல் எழுதவில்லை ஆனால் நம் பாரதி திலகர், கோகலே, லாஜபதி ராய் பற்றி பாடல் எழுதினான். தாகூர் அவர்களைப் பற்றியும் பாடல் எழுதியதில்லை. ருஷ்யப் புரட்சி, முதல் உலகப் போரில் பெல்ஜியத்தின் வீழ்ச்சி குறித்தெல்லாம் பாடல் எழுதிய கவிஞர்கள் இந்தியாவில் வேறெங்கிலுமுண்டா? கட்டுரைகளில் எத்தனையெத்தனை உலக விவகாரங்களை பாரதி கையாண்டிருக்கிறான் என்று பார்த்தால் வியப்பு மேலிடும். ஏப்ரல் 23 1920-இல் “செல்வம்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் எழுதுகிறான்:
“ஏற்கனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின் ஸ்ரீமான் மிந்த்ரோஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொதுவுடமையாகி விட்டது….கொலையாளிகளை அழிக்க கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகின்றது. நியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேருகிறது' என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை….மேலும் ருஷ்யாவிலுங்கூட இப்போது ஏற்பட்டிருக்கும் 'ஸோஷலிஸ்ட்' ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருத வழியில்லை.”
சாதி பேதமற்ற இந்தியா மத ரீதியாக பிரிந்து நிற்பதை சகியாதவன் எம் கவிஞன். 1906-இல், 25 வயதில், எழுதுகிறான், “இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவு மகமதியர்களுக்கும் சொந்தம்”. அதே வருடம் திலகர் நடத்தும் சிவாஜி ஞாபகார்த்த கொண்டாட்டங்கள், பவானி பூஜை போன்றவற்றால் இஸ்லாமியரை சாடும் போக்கினை மறுத்து எழுதியவன் “நம் நாட்டார் அனைவரும் அக்பர் சக்கரவர்த்தியின் உற்சவத்தையும் கொண்டாடுவர் என நம்புகிறோம்” என்கிறான். இஸ்லாமியரின் மீலாது நபி விழாக்கள் பலவற்றில் கலந்து கொண்டு முகம்மது நபி பற்றி உரையாற்றி இருக்கிறான். இவ்விடத்தல் நாம் பாரதியை வியக்கும் போதே இப்படி ஒருவனை அழைத்த இஸ்லாமிய சமூகத்தினரையும் வியக்க வேண்டும்.
பாரதி கனவுக் கண்ட இந்தியா புதுமையானது, பழமைகளில் இருந்து விடுதலைப் பெற்று அறிவியல் தழைத்தோங்கும், எல்லோருக்குமான கல்வி கிடைக்கும் தேசமாக மலர வேண்டுமென்பதே அவன் அவா. “காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான்,காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்றவன் எழுதிய அறிவியல் கட்டுரைகள் அபாரம். வங்காள அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸின் உரைகளை தமிழில் சமகாலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிட்டான். ஓ அவன் தான் எப்பேர்ப்பட்ட முன்னோடி. பிச்சை எடுத்தாவது கல்வி கற்க சொன்ன தமிழ் மூதுரையை தலை கீழாக்கி ஏழைக்கு கல்வி அளிப்பதே கோயில், குளம் கட்டுவதை விட சிறப்பென்றான். 1906-இல் “சக்கரவர்த்தினி” இதழில் “மொத்தம் 10,000 ஸ்திரீகளுக்கு, 94 ஸ்திரீகளே கல்விப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இந்த பயிற்சியும் அதி சொற்பமானதாகவே இருக்குமென்று நாம் தெரிவிக்க வேண்டுவதில்லை” என்று கவலைப் படுகிறான். 25 வயதுக்குள் இந்த இளைஞனுக்கு தான் எத்தனையெத்தனை தெளிவும், தொலை நோக்கும். பெண் விடுதலப் பேசியவர்கள் என்று இன்று கொண்டாடப்படும் எவருக்கும் குறைந்தவனல்ல பாரதி என்பதோடு அப்படி கொண்டாடப்படும் பலரின் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட பக்கங்கள் பாரதிக்கு இல்லை என்பதையும் சுட்ட வேண்டும்.
வரலாற்றில் பாரதியின் இடம் பற்றி எழுத நினைத்ததே இப்பதிவின் காரணம். இந்தியாவின் மிக முக்கியமான சிந்தனையாளனுக்கு இன்றும் ஒரு முழுமையான வாழ்க்கை வரலாறு எழுதப்படாதது பெருங்குறை.
கடவுளால் நேசிக்கப்படுபவர்கள் இள வயதில் இறப்பார்கள் என்ற விதிக்குட்பட்டு 39 வயதில் நம்மை பிரிந்து விட்டான். பராசக்தி பாரதியை கொஞ்சம் குறைவாக நேசித்திருக்கலாம்.
இன்றும் ஒரு தமிழன் மட்டுமல்ல இந்தியாவின் எந்த பிரஜையும் இந்தியனாக இருப்பதென்பது யாது என்று வினவினால் “பாரதியைப் போல்” என்று சந்தேகமற கூறலாம்.
பி.கு: பாரதி பற்றி ஒரு சிறு குறிப்பு தான் இப்பதிவு. பாரதி பற்றிய அறிய நூல்கள் பரிந்துரை பட்டியல் ஒன்றினையும் பாரதி பற்றிய விரிவான நிகழ்வு ஒன்றின் காணொளியின் சுட்டியும் முதல் இரண்டு கமெண்டுகளில் இருக்கிறது.
உதவிய நூல்கள்:
1. காலவரிசையில் பாரதி பாடல்கள் - பதிப்பு சீனி.விசுவநாதன்
2. கால ரிசையில் பாரதி படைப்புகள் -தொகுதி 2 - பதிப்பு சீனி.விசுவநாதன்.
3. கல்விச் சிந்தனையில் பாரதியார் - தொகுப்பு கலாநிதி ந.இரவீந்திரன்
4. பெயரழிந்த வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம் (மற்றும் ஒரு நேரலை நிகழ்ச்சி)
5. ஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம் - கலாபூஷணம் மாணா மக்கீன்.