Wednesday, April 13, 2022

மொழி அரசியல்

அமித் ஷா இந்தியே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்றதும் தமிழகத்தில் எதிர்ப்பார்த்ததுப் போலவே சர்ச்சை கிளம்பியது. பி..கிருஷ்ணன் தொடர்ச்சியாக அந்த எதிர்ப்புகளை கிண்டலடித்தும், எதிர்த்தும் பல பதிவுகள் எழுதி விட்டார்


அரசியல் சாசனம் இந்தியை ஊக்குவிக்க வேண்டுமென்று சொல்கிறதென்றும் அதை ஒரு ஒன்றிய அமைச்சர் செய்வதில் என்ன தவறு என்றும் வேண்டுமானால் அரசியல் சாசனத்தை மாற்றக் கோரிக்கை விடுக்கலாம் என்றும் தன் தரப்பை பி..கே சொல்லி விட்டார். இது தொடர்பாக சில குறிப்புகள்.





திராவிட இயக்கம் மொழியை வைத்து அரசியல் ஆதாயம் அடைந்தார்களா? ஆமாம். மொழிப் போர் என்ற பெயரில் இளைஞர்கள் தூண்டப்பட்டனரா? ஆமாம். “நாங்கள் இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம் இந்தியை அல்ல”, “நாங்கள் ஆங்கிலத்துக்கு எதிரிகள் அல்லஎன்று சொல்வதெல்லாம் திராவிட இயக்கத்துக்கே உரிய வார்த்தை ஜாலங்களா? ஆமாம். இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்று நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தடுத்தது தவறா? ஆமாம். தமிழ் மொழி வெறியும் எனக்கு கொஞ்சமும் உவப்பில்லாதது. மொழியை வைத்து வியாபரமே நடக்கிறதென்றும் சொல்லலாம், உதாரணம் செம்மொழி மாநாடு


சரி இப்போது அமித் ஷாவுக்கு வருவோம். தமிழ் நாட்டுக்கு வரும் போதெல்லாம் வள்ளுவர், பாரதி என்று மழலைத் தமிழில் பிரதமர் பேசியதெல்லாம்பொய்யா கோப்ப்ப்பால்மொமண்ட் இது. அரசியல் சாசனம் எவ்வளவோ சொல்கிறது அதெல்லாம் அமித் ஷாவுக்கு பொருட்டே அல்ல, ஆனால் இதை மட்டும் ஏன் கையில் எடுக்கிறார். அவரும் குழந்தை அல்ல நாங்களும் முட்டாள்களல்ல


இந்திய விடுதலைப் போராட்டத்தின் போதுதேசியம்என்றால் ஏதேனும் குறைந்தப் பட்ச அலகில் ஒரே மாதிரி இருத்தல் அவசியம் என்கிற ஐரோப்பிய கருத்தியலே ஓங்கியிருந்தது. இந்திய ஞான மரபில் தேசம், தேசியம், விடுதலை என்பதெல்லாம் புழக்கத்தில் இல்லாதது. இந்தியா விடுதலை அடைந்த தருணத்தில் இந்தியா போன்ற ஒரு நாடே உலகில் எங்கும் சுதந்திரமான, ஜனநாயகமான நாடாக, இந்திய அளவில், இருந்ததில்லை. இந்தியா என்கிற தேசம் பற்றி எல்லா தேசியத் தலைவர்களுமே ஏதேனும் ஒரு வகையில், ஒரு அலகிலாவது, இந்தியா ஒற்றைப் படையான ஒற்றுமைக் கொண்டிருக்க வேண்டுமென்றே நினைத்தார்கள். மொழி, கலாசாரம், மதம் என்று இத்தனை வேறுபாடுகளோடு இந்தியா ஒன்றுபட்ட தேசமாக இருக்க இயலாது என்று அச்சப்பட்டனர். இந்தியப் பிரிவினையும் பின்னர் நிகழ்ந்த மொழி வாரி மாநில சீரமைப்பும் அந்த அச்சத்துக்கு உரம் சேர்த்தது





பன்மைத் தன்மையை ஏற்கும் போதே தேசத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் நிஜத்தில் இருந்த சில பண்பாட்டு ஒற்றுமைகளையும், அவர்களாக கற்பிதம் செய்துக் கொண்ட ஒற்றுமைகளையும் அதீதமாக பிரகடனம் செய்தனர். பின்னதில் பெரும் பங்கு வகித்தது காந்தியும் நேருவும். இவற்றுக்கு அன்று தேவையும் இருந்தது. இந்த சூழலில் எழுதப்பட்ட அரசியல் சாசனத்தில் என்றாவது ஒரு நாள் இந்தியா முழுமையும் இந்திப் பரவலாகும், ஆக வேண்டும், அது நோக்கிய முயற்சிகள் வேண்டுமென்று நினைத்தார்கள்


காலமும் தொழில்நுட்பமும் உலகமயமாக்கலும் இந்தி பரவலாக்கம் தேவையே இல்லாத முன்னெடுப்பு என்கிற நிலைக்கு கொண்டு வந்து விட்டது. பாராளுமன்றத்திலேயே இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேசலாம் என்கிற விதிக்கு விலக்காக மற்ற் மொழியினர் பேசும் வகை 60-கள் தொட்டே இருந்து வந்திருக்கிறது, இன்றைய தொழில் நுட்பம் அவ்வேலையை எளிதாக்கி இருக்கிறது. இந்நிலையில் அந்த மொழிக் கட்டுப்பாட்டையே நீக்கலாம் என்றே நாம் கோர வேண்டும்.


இந்தியை ஊக்குவிக்க வேண்டுமென்ற அரசியல் சாசனம் புதிய சொற்கள் தேவைப்படும் போது சமஸ்கிருதத்தையே முதலில் நாட வேண்டுமென்றும் என்றும் அதன் பின்னரே பிராந்திய மொழியை நாட வேண்டும் என்கிறது. உடனேஇந்தி பெரும்பாலும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டதுஎன்பார்கள். இருக்கட்டுமே. அதற்காக புதிய சொற்களை உருவாக்குவது தொடர்பாக ஏன் அப்படியொரு கட்டுபாடு? “சென்றிடுவீர் எட்டுத் திக்கும்என்ற பிராமண கவிஞனுக்குசமஸ்கிருதத்துக்கு முதலில் போஎன்று எழுத தெரியாதா? அவனுக்கு இருந்த யதார்த்தமும் மன விசாலமும் ஏன் அரசியல் சாசனம் எழுதியவர்களுக்கு இல்லை? சரி, அவர்களுக்கு இல்லை, நாம் ஏன் இன்றும் அதைப் பிடித்துக் கொண்டு தொங்கி கொண்டிருக்க வேண்டும்? அமித் ஷாவுக்கு உளப் பூரிப்பளிப்பது இது போன்ற காரணம் தானே? இது தானே அவர் கட்சியின் “world view”. பாஜகவுக்கு பாரதியும் அம்பேத்கரும் தேர்தல் தந்திரோபாயங்கள் அடிப்படையில் அக்கட்சி இந்துத்துவ கட்சி தான், இந்துத்துவத்தின் அடிப்படை பிராமணியமும் சமஸ்கிருதமும் தான்





திராவிட இயக்கத்தின் இந்தி எதிர்ப்புக்கு அடிப்படையே இல்லையா? இருக்கிறது. அன்றும், இன்றும். 90-களில் ரஷ்யாவிலேயே படித்து வளர்ந்த ஒரு தமிழ் உறவினர் கேட்டார், “நான் வரி கட்டும் குடிமகன். என் பணத்தில் நடக்கும் தொலைக் காட்சி ஏன் என் படுக்கை அறை வரை எனக்கு புரியாத, தேவையில்லாத பாஷையிலேயே நிகழ்ச்சிகளை அளிக்கிறது?” தாராளமயமாக்கலினால் சன் டீ.வி தோன்றும் வரை இந்திக்காரர்கள் அடித்த கொட்டம் கொஞ்சமா நஞ்சமா


பண்பாட்டு தளத்தில் இந்திக்காரர்கள் எத்தனை அராஜகமாக உலா வந்தனர் என்று பி..கிருஷ்ணனின் தலைமுறைக்கு நன்றாகத் தெரியும். அதன் பின் வந்த என் தலைமுறைக்கும். இந்தியாவில் பண்பாடென்றால் சினிமா தான் பிரதானம். 60-களில் வெளி வந்த செம்மீன் தான் முதலில் தேசிய விருது பெற்றது. பிராந்திய சினிமாவை சினிமா என்றே கருதாத காலம் அது. இந்தி திரையுலகில் அவமானப்படுத்தப்பட்ட தென்னகத்து நடிகர்கள் அநேகம். 80-களின் பிற்பகுதியில் தான் இந்தியா டுடே ரஜினியும், சிரஞ்சீவியும் அமிதாப்பை விட மிகப் பெரிய வணிக வெற்றிகள் அடைந்தவர்கள் என்று எழுதியது. அடுக்கிக் கொண்டே போகலாம்


அமெரிக்க அலுவலகத்தில் கூட இந்த இந்திக்காரர்கள் தொல்லைத் தாங்காது. அவர்கள் உண்மையிலேயே தாங்கள் மட்டுமே இந்தியர்கள், தங்களுக்கு தெரிந்ததே இந்தியா, இந்தியே இந்தியா என்று நினைப்பவர்கள். மற்ற மொழியினருக்கும் இக்குணமுண்டு ஆனால் இந்திக்காரகள் மட்டும் தான்இந்தி தெரியாதா, அது தேசிய மொழி ஆச்சேஎன்பார்கள். அப்போதெல்லாம்டேய் அப்படியே இருந்தாலும் அது இந்தியாவில், நீ இருக்கிறது நியூ யார்க்கில்என்று சொல்லத் தோன்றும்


திராவிட இயக்கம் மொழியை வைத்து செய்த பண்பாட்டு அரசியலின் அதீதங்களை ஒதுக்கினாலும் அந்த அரசியல் இங்கு நடத்தப்படவே இல்லை என்றால் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் இந்தி ஒழித்திருக்கவே வாய்ப்புண்டு


இந்தியை ஊக்குவிப்பதை அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது என்பதற்காகவே மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் இதற்கென ஒரு துறையும் அலவலரும் உண்டு. சென்னையில் இருக்கும் இந்தியன் ஆயில் அலுவலகத்தில் “Today’s Hindi Word” என்று ஒரு பலகை இருக்கும் அதில் ஒரு வெட்டி ஆபீஸர் தினமும் ஏதேனும் ஒரு வார்த்தையை எழுதி, அர்த்தம் சொல்லி ஒரு வாக்கியமும் எழுதி வைக்க வேண்டும். பார்த்து சிரித்திருக்கிறேன்


இந்திய அரசியல் சாசனம் மிக நீளமானது என்கிற விமர்சனத்தை ஜவஹர்லால் நேரு முன் வைத்தார். ஒரு குடிமகனின் வாழ்வில் அநேக விஷயங்களில் அரசியல் சாசனத்தின் தலையீடுண்டு. அமெரிக்க அரசியல் சாசனம் அரசின் அதிகாரத்தை கட்டுப் படுத்துவதையே முதன்மை நோக்காகக் கொண்டது. அரசியல் சாசனம் புனிதப் பசு அல்ல. அதுவும் அரசியல் சாசனம் நூற்றுக்கு மேற்பட்ட திருத்தங்களைப் பார்த்து விட்டது. இந்த இந்தி மொழித் தொடர்பான ஷரத்துகளை குப்பைக்கு அனுப்பலாம்.