அமெரிக்காவில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் செப்டம்பரிலேயே வந்து விட்டது, போப் பிரான்சிஸின் வருகையால். தேசமே திருவிழாக் கோலம் பூண்டது என்றால் மிகையில்லை. அமெரிக்காவில் கத்தோலிக்கர்கள் சிறுபான்மையினர் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. இது கத்தோலிக்கத் திருச்சபையின் மதத் தலைவர் என்பதற்காக மட்டும் நிகழ்ந்துவிடவில்லை. போப் பெனடிக்ட் வந்திருந்தால் இவ்வளவு வரவேற்பு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. அப்படியெனில் இந்தக் கோலாகலம் ஏன் நிகழ்ந்தது என்ற கேள்விக்கு விடைக் காண நாம் அமெரிக்க அரசியிலின் போக்கு, அமெரிக்கச் சமூகம் மற்றும் அரசியில் அமைப்புகளுக்கு வாடிகனுடனான, குறிப்பாகப் போப்புகளுடனான, உறவு மற்றும் போப் எனும் பதவியை வகிப்பவரின் ஆளுமை என்று பல தரப்புகளில் புரிந்து கொள்ள வேண்டிய நிகழ்வு.
ஒரு காலத்தில் அயர்லாந்திலிருந்து குடியேறிய ஐரிஷ்-அமெரிக்கர்கள், பெரும்பான்மையோர் கத்தோலிக்கர்கள், வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள். வேலையிடங்களில் வெளிப்படையாக “ஐரிஷ்காரர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை” என்று அறிவித்த காலமுண்டு. கென்னடி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது அவருடைய ஐரிஷ்-கத்தோலிக்கப் பின்புலம் விவாதத்துக்குள்ளானது. அவர் அமெரிக்க ஜனாதிபதியாகச் சுயமாகச் செயல்படுவாரா இல்லை வாடிகனுக்குக் கட்டுப்பட்டு ஒரு கத்தோலிக்கராகச் செயல் படுவாரா என்ற கேள்வி கிட்டத்தட்ட ஓர் அவதூறு பிரசாரமாகவே முன்னெடுக்கப் பட்டது. அக்கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாகக் கென்னடி மதச் சார்பின்மைக் குறித்து ஒரு பேருரையாற்றினார். அமெரிக்கா வாடிகன், கத்தோலிக்கர்கள் மற்றும் போப் ஆகியோருடனான உறவு மாற்றமடைந்த புள்ளியை சொல்ல வேண்டுமென்றால் போப் ஜான் பால் (இரண்டாமவர். இவரை இனி போப் ஜான் பால் என்றே சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்) அவர்களின் 1979-ஆம் ஆண்டு வருகையைத்தான் குறிப்பிட வேண்டும்.
போலந்து நாட்டில் கரோல் வொத்தெலாவாகப் பிறந்தவர் போப் ஜான் பால் ஆனபோது வாடிகனின் வரலாற்றில் வரவேற்கத் தக்க மாற்றங்களுக்குப் பிள்ளையார் சுழி போட பட்டது. இருபதாம் நூற்றாண்டு என்றில்லை வாடிகனின் வரலாற்றிலேயே கத்தோலிக்கத் திருச்சபைக்கு ஒரு கௌரவத்தைத் தேடித் தந்தவர் போப் ஜான் பால் என்றால் அது மிகையாகாது. தான் மதத் தலைவர் என்பதையும் தாண்டி தன்னை மானுடத்தின் குரலாகவும், சாமானியர்களும் நெருங்கும் சாதாரணனாகவும், கம்யூநிசத்தை வீழ்த்தும் ஓர் ஆன்ம எழுச்சியாகவும் உலகுக்கு அறிமுகமான ஜான் பால் அநேகரை வாடிகனைப் பற்றிய அவரவர் பிம்பங்களை மாற்றியமைக்கக் காரணமாயிருந்தார்.
போப் பிரான்சிஸுக்குக் கொடுக்கப்பட்ட கோலாகல வரவேற்பை பல வர்ணனையாளர்கள் “Rock star welcome” என்று ஒப்பீடு செய்தனர். இந்த “rock star” ஒப்பீடு ஒரு மதத்தலைவருக்கு எப்போதிருந்து ஆரம்பிக்கப்பட்டது என்று ஒருவர் துல்லியமாக அடையாளம் காண்பித்தார். போப் ஜான் பால் 1979-இல் அமெரிக்கா வந்த போது நியு யார்க் நகரில் மேடிஸன் ஸ்கொயர் கார்டன் எனும் பேரரங்கில் பல்லாயிரகணக்கானோர் நிரம்பி வழியும் ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போப் பேசுவதற்கு ஆரம்பிக்கும் போதே கூட்டம் ஆர்ப்பரித்தது. அவர் பேசினால் கேட்க முடியாத அளவு உற்சாகக் கூக்குரல்கள். அப்போது போப் மைக்கருகே குனிந்து ‘உ உ உ உம்’ என்று ஊத ஆரம்பித்தார். கூட்டத்தின் கூச்சல் குறைய ஆரம்பித்தது. கடைசியாகப் போப் “ஊஊஊஊம்ம்ம்” என்று நீண்ட ஓர் உச்சாடனத்தோடு முடித்தார். கூட்டம் அமைதியானது போப்பும் தன் உரையை முடித்தார். பிறகு தான் அங்கிருந்த ஊடகக் காரர்களுக்குப் புரிந்தது போப் செய்த உச்சாடணம் ஒரு போலந்து நாட்டு நாட்டர் வழக்கென்று. வாசகர்களே இங்குக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். போப் என்பவர் ஆயிரத்து ஐநூறு ஆண்டுக்கு மேல் பாரம்பர்யம் உள்ள, பற்பலக் கோடி உறுப்பினர்கள் கொண்ட, பல நாடுகளின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ஓர் ஆல மரத்தின் தலைமை அப்படிப்பட்டவர் ஒரு பேருரையின் ஆரம்பத்தில் மக்களோடு மக்களாக இணைந்து உற்சாகத்தில் கலப்பது போல் கலந்து அதை ஒழுங்குப் படுத்துவதென்பது போப் என்பவரைப் பற்றியிருந்த அபிப்பிராயத்தைப் புரட்டிப் போட்டதோடல்லாமல் வாடிகன் ஓர் இறுகிய மத நிறுவனம் என்ற எண்ணத்தைத் தூக்கி அடித்தது. அப்போது பிறந்தது தான் இந்த rock star எனும் ஒப்புமை.
படத்திற்கு நன்றி http://cardinaldolan.org/index.php/a-documentary-of-saint-john-paul-iis-visit-at-madison-square-garden/
|
1980-இல் ரேகன் ஜனாதிபதி ஆன போது அமெரிக்காவிற்கும் வாடிகனுக்குமுள்ள உறவு இன்னொரு பரிமானத்தை அடைந்து இன்னும் நெருக்கமானது. ரேகன் கம்யூனசித்திற்கும் ரஷ்யாவிற்கும் எதிராக அமெரிக்கா ஆணித்தரமான எதிர் அணியில் சுதந்திரத்தின் பால் நிற்கும் என்று முடிவு செய்த போது நாஜிக்களாலும் பின் ஸ்டாலினாலும் சூரையாடப்பட்ட போலந்து நாடிலிருந்து போப்பான ஜான் பால் கைக் கொடுக்கத் தயாராக இருந்தார். போலந்து நாட்டில் வெடித்த கம்யூநிச எதிர்ப்பில் போப் ஜான் பாலின் ஆண்மீக உறுதுணை அளப்பரிய பங்காற்றியது என்றால் மிகையில்லை. கிழக்கு ஜெர்மனியினிலிருந்த லைப்ஸிக் நகரில் 90-களில் பேரலையாகத் தோன்றிய கம்யூனிச எதிர்ப்பில் அந்நகரின் திருச்சபையின் பங்கு, புரோடஸ்டண்ட் திருச்சபை என்ற போதிலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
போப் ஜான் பாலுக்குப் பிறகு போப் என்பவர் ஒரு சபையின் தலைவர் என்பதைத் தாண்டி மானுடத் திரளோடு உரையாடும் ஓர் ஆன்மாவின் குறியீடானார். போப் என்பவர் இப்போது உலகளாவிய ஓர் ஆளுமை.
போப் ஜான் பாலின் மறைவுக்குப் பிறகு பதவிக்கு வந்த போப் பெனடிக்ட் ஜான் பால் போலல்லாமல் திருச்சபையினை மீண்டும் சடங்களாலும், தத்துவ விவாதங்களை ஒரு கட்டுக்குள் செய்யும் ஓருறைந்த ஸ்தாபனமாக மீள் உருவாக்கம் செய்யத் தலைப்பட்டார். அப்படியொரு விவாதம் உலகெங்கும் பெரும் கலவரங்கள் நடக்க ஏதுவாகிப் போனது. ஆனால் வாடிகன் வரலாற்றிலேயே அதிர்வுகளைக் கிளப்பும் விதமாகப் போப் பெனடிக்ட் உடல்நிலைக் காரணமாக ராஜினாமா செய்தார். வாடிகனின் வரலாற்றில் 741-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன் முறையாக ஒரு ஐரோப்பியர் அல்லாதவரும், முதல் ஜெஸுயிட்டும் ஆன ஹோர்ஹே பெர்கோக்லியோ புனித பிரான்சிஸின் பெயர் கொண்டு போப் பிரான்சிஸ் ஆனார்.
கத்தோலிக்கத் திருச்சபயையும், கிறித்தவத்தையும் (ஏன், இஸ்லாமும் கூட) நிறுவன மதங்கள் என்று வாயில் நுரைப் பொங்க எள்ளி நகையாடுபவர்களுக்கு வரலாற்றின் அரிச்சுவடி கூடத் தெரியாதென்பதே உண்மை. கிறித்தவமும் அது சார்ந்த நிறுவனங்களும் அவை புழங்கிய சமூகங்களும் ஒன்றோடொன்று உறவாடி, உரையாடி, முரன்பட்டு, எதிர்த்து, இசைந்து ஒரு மாபெரும் வரலாற்று முரணியக்கத்தின் மூலமாக ஒன்றையொன்று செழுமை படுத்தியிருக்கிறது என்பதே உண்மை. அந்த முரணியக்கத்தில் பற்பல ஆளுமைகள் பெரும் விவாதங்களை முன்னெடுத்து திருச்சபையினையும் சமூகத்தின் போக்கின் மீதும் முத்திரைப் பதித்துள்ளனர். அப்படியொருவராக இன்று பிரான்சிஸ் பார்க்கப் படுகிறார்.
புனித பிரான்சிஸின் பெயரை தேர்ந்தெடுத்தற்கு ஏற்றவாறு போப் பிரான்சிஸ் ஆரம்பம் முதலே எளிமையைக் கடைப் பிடிக்க ஆரம்பித்தார். சம்பிரதாயமான படாடோபங்களைத் தன் உடையலங்காரத்திலும், நிகழ்வுகளிலும் தவிர்க்க ஆரம்பித்தார் போப் பிரான்சிஸ்.
இந்தப் பிண்ணனிகளில் பொருத்திப் பார்க்க வேண்டிய ஒரு நிகழ்வு தான் போப் பிரான்சிஸின் அமெரிக்க விஜயம்.
பராக் ஒபாமாவும் அமெரிக்கக் காங்கிரசும் கட்சிப் பேதமின்றி ஒருமித்துப் பரிபூரணச் சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தனர் போப் பிரான்சிஸுக்கு. ஒபாமா, சம்பிரதாயங்களுக்கு மாறாக, நேரடியாகப் போப்பை விமான நிலயத்திற்கே சென்று வரவேற்றார்.
போப் பிரான்சிஸ் அமெரிக்கா வருவதற்கு முன்பே பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், முதலாளித்துவம், புவி வெப்பமாதல், கருக் கலைப்பு, சட்ட விரோதமாகக் குடியேறுபவர்கள், ஓரின சேர்க்கையாளர்களின் திருமண உரிமைகள் ஆகியவை பற்றியெல்லாம் கொண்டிருந்த கருத்துகள் அமெரிக்க அரசியலுக்குள் சூடாக விவாதிக்கப்படுபவை. அதுவும் இது ஜனாதிபதி தேர்தல் நடக்கும் ஆண்டு ஆகையால் அந்தப் பிரச்சனைகள் குறித்துக் கட்சி சார்பு நிலைகளையொட்டி விவாதக் களமே வெப்பமேறியிருக்கிறது.
போப் பிரான்சிஸின் கருத்துகளை அமெரிக்காவின் இரு பிரதானக் கட்சியினரும் மாறி, மாறிக் கொண்டாடினர் அக்கருத்துகள் அவர்களுக்குச் சாதகமாக இருக்கும் பட்சத்தில். அவர் முன் வைத்த கருத்துகளை நாம் அந்த அரசியல் விவாதத்தினூடாகவே அலசலாம்.
2008-ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஆணிவேரே அசைத்துப் பார்க்கப் பட்டது. முதலாளித்துவம் மிகத் தீவிரமான பரிசீலனைக்குட்பட்டது. சமூகத்தில் பெருகி வரும் பொருளாதார வேற்றுமைகள் அமரிக்கர்களைத் தங்கள் தேசம் இன்னமும் சாமானியர்களின் முன்னேற்றத்துக்கான வழி கோலும் சமூகமா இல்லை ஒரு நிலப் பிரபுத்துவ அமைப்பின் கூறுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி இன்று பிரதானமாக இருக்கிறது. ஜனநாயகக் கட்சியைச் சார்ந்தவர்கள் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு பணக்காரர்கள் மீது மென்மேலும் வரி விதிப்பது என்பது உட்பட, அவர்கள் பார்வையில், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு நன்மைப் பயக்குமென்று நினைக்கும் சில வழி முறைகளை முன் வைக்கின்றனர். குடியரசுக் கட்சியினரோ வரி விதிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு ஊறு விளைவித்து அது முன்னேற்றம் தேவைப்படுகிற நடுத்தர வர்கத்தையே அதிகம் பாதிக்குமென்றும், வரி விலக்குகள் அல்லது வரிக் குறைப்பின் மூலமாகப் பொருளாதாரத்தை மென்மேலும் வளர்க்க முடியும் என்றும், தொழில் முறையில் அரசாங்கத்தின் தலையீடுகள் குறைக்கப் பட வேண்டுமென்றும் வாதிடுகின்றனர். போப் பிரான்சிஸ் இதில் நேரடியாக எந்தச் சார்பையும் வெளிப் படுத்தவில்லை ஆனால் அவர் மீண்டும் மீண்டும் பொருளாதார வேற்றுமைகளைப் பற்றிப் பேசுவது தங்கள் அக்கறையையே பிரதிபலிப்பதாக ஜனநாயகக் கட்சியினர் கருதுகின்றனர்.
வெள்ளை மாளிகையில் பேசுகையில் போப் பிரான்சிஸ் புவி வெப்பமயமாதல் பற்றித் தன் கவலையைத் தெரிவித்தார். இந்நிலைப்பாடும் ஜனநாயகக் கட்சியினருக்கு உவப்பானது. குடியரசுக் கட்சியைச் சார்ந்த பலரும் புவி வெப்பமயமாதல் என்பதையே சந்தேகிக்கிறவர்களும் அப்படியே அதை ஏற்றுக் கொண்டாலும் அதற்கு மனித செயல்களே காரணமென்பதையோ ஏற்றுக் கொள்ளாதவர்கள். மேலும் புவி வெப்பமாதலை தடுப்பதிலோ மிதப் படுத்துகிறோம் என்ற போர்வையில் அரசாங்கம் தொழில் முறைகளில் தலையீடு செய்வதையும், பொருளாதார முடிவுகளின் போக்கினை மாற்றும் அரசாங்க கொள்கை முடிவுகள் ஆகியவை பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பது குடியரசுக் கட்சியினரின் ஆட்சேபனை. புவி வெப்பமயமாதல் என்பது விஞ்சானப் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட ஒன்று. ஆனால் ஒபாமாவும் அவர் கட்சியினரும் முன் வைக்கும் பல கொள்கைகள் அதைத் தடுத்து நிறுத்தும் வழிகளை உண்டுப் பண்ணுபவையல்ல மாறாக அதன் பெயரில் பல சட்டங்களை இயற்றி பொருளாதாரத்தினை அரசாங்கத்தின் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வரும் நீர்த்துப் போன சோஷலிசம் என்றால் மிகையில்லை.
ஐ.நா சபையில் பேசும் போதும் போப் பிரான்சிஸ் புவி வெப்பமாதல் பற்றியே ஆணித்தரமாகப் பேசினார். மனித உரிமைகளுள் ஒன்றாக “சூழியல் உரிமை” உண்டு என்று புதியதோர் கோட்பாட்டை முன் வைத்தார். மனிதன் மீது சுற்று சூழல் செலுத்தும் பாதிப்பைக் குறிப்பிட்டு சுற்று சூழலுக்கு ஊறு விளைவிக்கும் எதுவும் மனிதனுக்கு நேரடியாக ஊறு விளைவிப்பவை என்றார். எல்லா மதங்களிலும் சுற்றுச் சூழல் நன்மை அடிப்படையிலேயே உள்ளது என்றும் சொன்னார்.
ஒருங்கே கூட்டப்பட்ட அமெரிக்கப் பாராளுமன்றத்தின் இரு சபைகளைச் சேர்ந்தவர்களிடையே பல முக்கியப் பிரச்னைகளைத் தொட்டுப் பேசினார் போப். இப்படி விருந்தினருக்காக இரு சபையோரையும் ஒருங்கே கூட்டுவதென்பது ஒரு பெரும் அங்கீகாரம்.
மதம், சித்தாந்தம் மற்றும் பொருளாதார அமைப்பு ஆகியவற்றின் பெயரால் நடக்கும் வன்முறைக்கெதிராக விழிப்புனர்வுடன் இருக்க வேண்டுமென்று உரைத்த போப் மேலும் இன்றைய நடப்புலகில் நுண்மைகளைக் காணும் சக்தியிழந்து உலகை கறுப்பு வெள்ளையாக அவரவர் பார்வையிலே பார்ப்பது வன்முறையை வளர்க்கும் என்று எச்சரித்தார். மேலும் தன் பேராயர்களுடன் தன் திருச்சபை மரணத் தண்டனைக்கெதிரான நிலைப்பாடு கொண்டதையும் வலியுறுத்தினார். இங்கே கவனிக்க வேண்டியது முன்னேறிய நாடுகளிலேயே இன்றும் மரணத் தண்டனை வழக்கத்திலுள்ள நாடு அமெரிக்கா. அமெரிக்கர்களிடமும் அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் மரணத் தண்டனைக்கு வரவேற்புண்டு. பிறகு வேறொரு முக்கியப் பிரச்னைக்குத் திரும்பினார் போப்.
அமெரிக்கா எதிர் நோக்கியிருக்கும் இன்னொரு மிக முக்கியமான பிரச்சினை சட்ட விரோதமாகக் குடியேறிவர்கள். கிட்டத் தட்ட 14 மில்லியன் பேர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள். ஹிஸ்பானிக்குகள் என்றழைக்கப் படுபவர்கள் அதில் பெரும் பகுதியினர். அவர்களை வெளியேற்றுவதென்பது நடை முறைக்கு ஒவ்வாதது அதே சமயம் அவர்களுக்குப் பொது மன்னிப்பின் மூலமாகக் குடியுரிமை வழங்குவதென்பதையும் அமெரிக்கர்களில் பெரும்பாலோர் எதிர்க்கின்றனர், குறிப்பாகக் குடியரசுக் கட்சியினர். 1980-களில் ரேகன் அப்படியொரு பொது மன்னிப்பை வழங்கிய போது 3 மில்லியனாக இருந்த சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் இப்போது 14 மில்லியன். பொது மன்னிப்புக் கொடுத்ததே மேன்மேலும் அலயெனத் திரண்டு வருவதற்கு உற்சாகத்தைக் கொடுத்தது. இதில் திருச்சபையும் ஜனநாயகக் கட்சியினரும் மனிதாபனமே தங்களை உந்துகிறது, பொது மன்னிப்புக் கொடுக்க, என்று கூறினாலும் அவரவர்க்கு அதில் ஆதாயமில்லாமலில்லை. ஹிஸ்பானிக்குகள் பெரு வாரியாகத் தங்களுக்கேயான வாக்கு வங்கியென்பது ஜனநாயகக் கட்சியினருக்கு உவப்பான ஒன்று. அதே போல் அவர்களில் பெரும்பாலோர் கத்தோலிக்கர்கள் என்பது கத்தோலிக்கத் திருச்சபைக்கு முக்கியமானது. முடிவாகக் குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் பற்றிக் கூறி தன் உரையை முடித்துக் கொண்டார்.
போப் பிரான்சிஸின் அமெரிக்கப் பிரயானத்தின் இன்னொரு முக்கிய அம்சம் ஒரு ஹிஸ்பானிக் பாதிரியாரை, ஜுனிபெரோ செர்ரா, புனிதராக அறிவிப்பது. ஹிஸ்பானிக் அமெரிக்கர்களுக்குப் பெரு உவகைத் தந்த நிகழ்வு அது. ஆனால் அதுவே கத்தோலிக்கத் திருச்சபையின் சங்கடமான கறுப்புப் பக்கத்தை மீண்டும் பொது வெளிக்குக் கொண்டு வந்தது. ஜூனிபெரோ செர்ராவின் மத மாற்றங்கள் அமெரிக்கப் பூர்வக் குடிகளின் மீது கட்டற்ற வன்முறையைக் கையாண்டதன் மூலமே சாத்தியமாயிற்று. பூர்வக் குடி அமெரிக்கர்கள் இதற்கு எதிராக வாடிகனுக்கு எடுத்துரைத்தனர் ஆனால் பலனில்லை.
போப் பிரான்சிஸின் மேற்சொன்னக் கருத்துகளுக்காக அமெரிக்காவின் சமூகத் தாராளவாதிகள் (social liberals) கொண்டாடிய போது குடியரசுக் கட்சியினர் நமுட்டு சிரிப்புடன் “காத்திருங்கள் அவர் அடுத்து குடும்ப அமைப்பு, கருக் கலைப்பு, ஓரிண சேர்க்கையாளர்களின் திருமண உரிமை ஆகியன பற்றிப் பேசப் போகிறார் அப்போது தெரியும் அவர் யார் பக்கமென்று” எனக் காத்திருந்தனர்.
போப் பிரான்சிஸ் அமெரிக்கா வருவதற்கு முன் சமீபத்தில் இரு நிகழ்வுகள் அமெரிக்க அரசியல் மற்றும் சமூகப் பரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியன. அமெரிக்காவின் உச்ச நீதி மன்றம் ஒவ்வொரு மாகாணமும் ஓரின சேர்க்கையாளர்களிம் திருமண உரிமையை மறுக்கும் சட்டங்கள் சட்ட விரோதமானவை என்று தீர்ப்பளித்து அமெரிக்கச் சமூக அமைப்பில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கு அடி கோலிட்டது. மீண்டும் அமெரிக்கா கட்சி ரீதியாகப் பிரிந்தது. குடியரசுக் கட்சியினரில் சிலர் ஓரின சேர்க்கை என்பதே இயற்கைக்கு முரனானது என்று நம்புபவர்கள், அப்படி எண்ணாதவர்கள் கூடத் திருமண உறவென்பது இரு பாலாருக்கிடையேதான் நடைபெற வேண்டுமென்று எண்ணுபவர்கள் அதிகம். கத்தோலிக்கத் திருச்சபையும் திருமணமென்பது இரு பாலாருக்கிடையேதான் என்ற நிலைப்பாடுடையது. ஜனநாயகக் கட்சியினர் தங்களை ஏதோ மனித உரிமைகளின் ஏக போக உரிமையாளர்களாகக் காட்டிக் கொள்வது நகைப்புக்குரியது. திருமணப் பாதுகாப்புச் சட்டம் எனும் ஷரத்தில் கையெழுத்திட்டதே பில் கிளிண்டன் தான். ஹிலாரியும், ஒபாமாவும் 2008-இல் திருமணம் இரு பாலாருக்கிடையே தான் என்று கூறினர். 2012-இல் ஓரின சேர்க்கையாளர்களும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூருவது அரசியலில் தனக்கு அனுகூலமாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்ட ஒபாமா தன் நிலைப் பாட்டை மாற்றிக் கொண்டார். போப் பிரான்சிஸ் திருச்சபையின் நிலையை முற்றிலுமாக மாற்றிக் கொள்ளவில்லையெனினும் தன் எதிர்ப்பின் தீவிரத்தை மாற்றிக் கொண்டதோடல்லாமல் ஓரின சேர்க்கையாளர்களும் அரவணைக்கப் பட வேண்டியவர்களே என்று மாற்றத்திற்கு வித்திட்டார்.
போப் பிரான்சிஸ் பிலடெல்பியாவில் பேசும் போது மனிதர்களுக்கு அளிக்கப் பட்ட சுதந்திரத்தில் முக்கியமானது மத நம்பிக்கைகளைப் பேணும் சுதந்திரம் என்றார். சிறு பான்மையினரின் மத வழிபாடு முறைகளைப் பாதுகாக்கும் பொருட்டுப் பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது ‘மதச் சுதந்திரம் ஷரத்து’ கையெழுத்திடப்பட்டது. இப்போது அதுவே அமெரிக்க அரசியலின் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளலாமென்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகு அமெரிக்காவின் சில மாகாணங்களில் சலசலப்புத் தொடங்கியது. தன் தனிப்பட்ட மத நம்பிக்கையினால் ஒரின சேர்க்கையை ஒப்புக் கொள்ளாத அரசாங்க ஊழியர்களும் வணிக ஸ்தாபன உரிமையாளர்களும் தங்கள் சேவையைக் கோருவோர் ஓரின சேர்க்கையாளர்கள் என்று தெரிந்தால் அவர்களுக்குச் சேவையை மறுப்பது அவர்களின் மதச் சுதந்திரம் என்ற வாதங்கள் எழும்பின. கான்ஸஸ் மாநிலத்தில் திருமண உரிமம் வழ்ங்கும் கிம் டேவிஸ் என்பவர் நீதி மன்ற தீர்ப்பை நிராகரித்து ஒரின சேர்க்கையாளர்களுக்குத் திருமண உரிமங்கள் வழங்க மறித்து நீதி மன்ற அவமதிப்புக்காகக் கைது செய்யப் பட்டார். குடியரசுக் கட்சியின் சில வேட்பாளர்கள் அவருக்கு ஆதரவாக நின்றனர்.
இந்த மதச் சுதந்திரத்தின் பெயரால் வேற்றுமைப் படுத்துவது, என் பார்வையில், மிக ஆபத்தான இரு முனைக் கத்தி. இன்று கிம் டேவிஸுக்காகத் திரளும் குடியரசுக் கட்சியனர் பலர் அமெரிக்க இஸ்லாமியர்கள் இங்கே ஷரியா சட்டத்தைப் புகுத்தி விடுவார்களென்று ஒரு விஷம விஷப் பிரசாரத்தையும் முன் வைக்கின்றனர். சில விமான நிலையங்களில் டாக்ஸி ஓட்டும் சோமாலிய இஸ்லாமியர் வாடிக்கையாளர்கள் மது வகைகளை வைத்திருப்பது தெரிந்தால் அவர்களுக்கு வண்டி ஓட்டுவது தங்கள் மத உணர்வுகளுக்கு ஊறு விளைவிப்பது என்று வாதிட்டனர். கட்டாயமாகக் கிம் டேவிஸுக்காகத் திரளும் எவரும் அந்த டாக்ஸிகாரர்களும் அதே வாதத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆக அவர்களுக்கு முக்கியம் மதச் சுதந்திரம் என்ற பெயரில் கிறித்தவ அடிப்படைவாதத்திற்கு ஒரு கட்டற்ற உரிமமே.
அமெரிக்கத் தேர்தல் களைத்தை மேலோட்டமாகக் கவணிப்பவர்களுக்கே இங்கே கருக்கலைப்பு பற்றி நடக்கும் விவாதம் திகைப்பூட்டக் கூடிய அளவு இரு சாராரையும், ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களையும், மிகவும் பிளவு படுத்த கூடிய ஒரு பிரச்சினை. கத்தோலிக்கர்கள் அதிகமுள்ள அயர்லாந்தில் கருக் கலைப்பு என்பது அறவே செய்ய முடியாத ஒன்று, தாயின் உயிருக்கு ஆபத்தான போது கூட. ஓர் இந்தியப் பெண் கருக் கலைப்பு செய்யவியலாததாலேயே சமீபத்தில் மாண்டது அங்குப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கரு என்பதும் ஓருயிரே என்பது திருச்சபையின் நிலைப்பாடு. குடியரசுக் கட்சியனரில் பெரும்பாலோர் அத்தகைய நிலைப்பாடுடயவர்களே. போப் பிரான்சிஸ் அமெரிக்கா வருவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவெங்கும் கிளைகள் கொண்ட ஒரு பெண்கள் நல மையம், அங்கே கருக் கலைப்பும் செய்யப் படுவதுண்டு, கலைக்கப் பட்டக் கருக்களின் பாகங்களை விற்பதாக அங்கே பணிபுரிபவர்களே வாக்கு மூலம் கொடுத்தது போன்ற ஒரு ரெகார்டிங் வெளியாகி ஒரு சூறாவலியைக் கிளப்பியது.
மதச் சுதந்திரமென்பதை தங்கள் அடிப்படை வாதங்களுக்கு ஒரு போர்வையாகக் குடியரசுக் கட்சியின் ஒரு பகுதியினை எள்ளி நகையாடும் ஜனநாயகக் கட்சியனர் அவர்கல் பங்குக்கு ஓட்டு அரசியலுக்கு அதே சுதந்திரத்தை முன் வைத்தே கத்தோலிக்க நிறுவனங்களுக்கு ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுச் சீரமப்பின் சில விதிகளில் இருந்து விலக்களிக்கப் பட்டுள்ளதை ஏற்பதோடல்லாமல் அதற்கான சட்ட வரையறகளையும் செய்து கொடுத்தனர்.
ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுச் சீரமப்பின் விதிகளின் படி நிறுவனங்கள் தங்களிடம் வேலைப் பார்ப்பவர்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு சாதனங்கள், கருத்தடை சிகிச்சை மற்றும் கருக் கலைப்பு செய்தால் கூட, அதற்கான செலவை, தாங்கள் அளிக்கும் காப்பீட்டு உரிமத்தின் மூலம் வழங்க வேண்டுமென்று உள்ளது. அவை எல்லாமே கத்தோலிக்கத் திருச்சபையின் சட்டங்களுக்குப் புறம்பானவை என்று கத்தோலிக்க நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப் பட்டது. என் பார்வையில் இது மிகத் தவறு. வேலை நிறுவனத்தின் ஸ்தாபகர்களின் மத நம்பிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட உரிமை, அவற்றைத் தொழிலாளி மீது சுமத்துவது தொழிலாளியின் உரிமைகளை மீறுவதாகும். ஒரு காலத்தில் இன வேற்றுமைக்கு விவிலியத்தை ஆதாரம் காட்டியவர்களுண்டு ஆனால் இன்று அதைச் சட்டம் மட்டுமல்ல சமூகமும் ஏற்காது.
போப் பிரான்சிஸ் பயணத்தின் மிக முக்கியமான ஏமாற்றம் அமெரிக்கக் கத்தோலிக்கப் பாதிரிமார் பலர் சிறுவர்களை வண்புணர்வு செய்த மிகத் துயரமான நிகழ்வைப் பற்றி வெளிப்படையாகப் பேசாதது. பாதிரியார்களின் பிரம்மசர்யம் பற்றிய உரையாடல் மிக அவசரமாகவும் தீர்க்கமாகவும் மேற்கொள்ளப் பட வேண்டியது. ஓரின சேர்க்கை இயற்கைக்குப் புறம்பானதா என்று விவாதிப்பதைவிடப் பிரம்மச்சர்யம் இயற்கைக்குப் புறம்பானதா என்று வெளிப்படையாகப் பேசலாம். மகாத்மா காந்தியே சறுக்கியது பிரம்மசர்யத்தைக் காக்கும் வேள்வியில் தான்.
புவி வெப்பமாதல், பொருளாதார ஏற்றத் தாழ்வு போன்ற விஷயங்களில் பெரும் கவனம் செலுத்தும் போப் பிரான்சிஸ் தன்னுடைய திருச்சபையின் சில நம்பிக்கைகளையும் மறு பரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமே.
அமெரிக்கப் பயணத்தில் இரு சந்திப்புகள் மனதை வருடியவை. பிலடெல்பியா அருகேயுள்ள ஒரு சிறைச்சாலைக்குப் போப் பிரான்சிஸ் சென்று கைதிகளைச் சந்தித்து உரையாற்றினார். போப் உட்காருவதற்கான நாற்காலி அந்தக் கைதிகளால் செய்யப் பட்டது. தான் அடியார்க்கு அடியார் என்று தன் சீடர்களுக்கு உணர்த்தும் விதமாகக் கிறிஸ்து அவர்களின் கால்களைக் கழுவியதை நினைவுக் கூர்ந்த போப் “நானே, வழியும், சத்தியமும் ஆவேன் என்றுரைத்தவர், உலகில் மனம் மாற்ற முடியாதவர்களுண்டு என்ற பொய்யிலிருந்து நம்மை மீட்டவர்” எனக் கூறி முடித்தார்.
பிலடெல்பியா வந்திறங்கிய போப் விமானத்திலிருந்து தன் வண்டியில் ஏறிப் புறப்பட்ட போது அங்கே வளர்ச்சிக் குன்றிய ஒரு சிறுவனைப் பார்த்து விட்டு வண்டியை நிறுத்தி அவனிடம் சென்று ஒரு பிரார்த்தனை செய்து பின் ஆசிர்வதித்தது அடுத்த நாள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயெனப் பரவியது. இது போன்ற ஆனால் சற்று வேறு பட்ட நிகழ்வொன்றும் நடந்தது. போப் ஜான் பால் 1979-இல் வந்த போது ஒரு பெண் குழந்தையைத் தூக்கி வைத்து கொஞ்சினார். இன்று வளர்ந்து விட்ட அக்குழந்தை போப் பிரான்சிஸை சந்தித்தார். இரண்டு போப்களைச் சந்தித்ததை உவப்போடு பகிர்ந்து கொண்டார் அவர்.
Pope John Paul |
அமெரிக்காவின் கருத்துச் சுதந்திரத்திற்கு ஓர் எடுத்துக் காட்டும் நடந்தது. ஒபாமாவை இஸ்லாமியர் என்று ஓர் அவதூறு பிரசாரம் அமெரிக்காவில் உண்டு. போப் பிரான்சிஸ் புவி வெப்பமாதல் முதலிய முற்போக்கு கருத்துகளைப் பற்றிப் பேசுவதைப் பார்த்து இங்கிருக்கும் குடியரசுக் கட்சியினர் ஒபாமாப் போலவே போப்பும் இஸ்லாமியரோ என்று சந்தேகிக்கிறார்கள் என்று ஒரு கேலிச் சித்திரம் வெளியானது. இந்தச் சுட்டிக்கு சென்றால் மேலும் பல கேலி சித்திரங்களைக் கண்டு மகிழலாம் - http://www.usnews.com/opinion/cartoons/2015/09/16/editorial-cartoons-on-pope-francis
போப் பிரான்சிஸ் ஒவ்வொரு உரையின் முடிவுலும் தாழ்மையுடன் ‘தயவு செய்து எனக்காக ஜெபியுங்கள்’ என்று முடித்தார். அவர் வணங்கும் கடவுள், திருச்சபைக்கும், உலகுக்கும் ,அவர் ஒரு புதிய பாதையைக் காண்பிக்க அருள் பாலிக்கட்டும்.
மேலும் சுட்டிகள்:
- போப் ஆற்றிய உரைகளின் தொகுப்பு http://www.popefrancisvisit.com/pope-francis-u-s-visit-speech-transcripts/
- ஜுனிபெரொ செர்ரா http://www.cnn.com/2015/09/23/us/pope-junipero-serra-canonization/
- போப்பும் சிறுவனும் https://www.washingtonpost.com/news/acts-of-faith/wp/2015/09/26/pope-francis-saw-a-boy-with-cerebral-palsy-this-is-what-happened-next/
குறிப்பு: இந்தக் கட்டுரை முதலில் சொல்வனம் இதழுக்காக எழுதப் பட்டது. இன்று இதை அவர்களிடம் சேர்ப்பிக்கும் முன் சொல்வனம் இதழில் குளக்கரை என்ற பெயரில் அவதூறும், வன்மமும் தொனிக்கும் இந்தக் கட்டுரையைப் படிக்க (http://solvanam.com/?p=42030) நேர்ந்தது. அப்படியொரு கட்டுரையைத் தனி எழுத்தாளர் யாராவது எழுதியிருந்தால் நான் பொருட் படுத்தியிருக்க மாட்டேன் ஆனால் எழுதியது "பதிப்புக் குழு". மஞ்சள் பத்திரிக்கை தரத்தில் எழுதப் பட்ட அக்கட்டுரை பதிப்பாளர்களின் பார்வையென்றால் அப்படிப்பட்ட பத்திரிக்கையில் என் எழுத்து வருவது சரியல்ல என்பதால் அவர்களைக் கூப்பிட்டு மன்னிப்புக் கோரி கட்டுரையைத் தரவியலாத சூழலை விளக்கிவிட்டேன். எனினும் இப்படி நான் தமிழில் எழுதுவதற்கு அவர்கள் தந்த ஊக்கத்திற்காகவும் வாய்ப்புக்காகவும் நன்றி.
1 comment:
Clerk Kim Davis from Kentucky not from Kansas.
Post a Comment