Monday, December 31, 2018

டி.எம்.கிருஷ்ணாவின் லுங்கி, யூஜா வாங்கின் கவர்ச்சி, சதிர் பரத நாட்டியம் ஆன போது: இசை, அரசியல், உடைத் தேர்வுகள்

அக்டோபர் 6-ஆம் தேதி நியூ ஜெர்ஸியில் நடந்த டி.எம்.கிருஷ்ணவின் கச்சேரி மிகுந்த கவனத்தையும் சர்ச்சையயும் ஈர்த்தது. கவனமும் சர்ச்சையும் அவர் பாடல் தேர்வுகளை முன் வைத்தல்லாமல் அவர் அணிந்த உடையைச் சார்ந்து எழுந்தது. கிருஷ்ணா லுங்கியும் பூப்போட்டச் சட்டையும் அணிந்திருந்தார். அந்நிகழ்வைக் குறித்து நான் பேஸ்புக்கில் எழுதிய குறிப்பை விட அக்குறிப்பை ஒட்டி நான் வெளியிட்டப் புகைப்படங்கள் மிகப் பிரபலமாகி விட்டன. இந்தச் சர்ச்சையைக் குறித்துக் கொஞ்சம் அவதானித்தால் இசையுலகுக்கும் உடைத் தேர்வுகளுக்கும் இருக்கும் தொடர்புகளும் அதன் காரணிகளும் விளங்கும். கிருஷ்ணாவும் கர்நாடக சங்கீத சர்ச்சையும்: ஓரு பின்னனி 

கிருஷ்ணா லுங்கி அணிந்ததற்கும் அதற்கும் சூறாவளியாய் ஒரு தரப்பில் எதிர்ப்பு விளைந்ததற்கும் ஒரு பிண்ணனி இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஓ.எஸ். அருண் என்கிற கர்நாடக சங்கீதப் பாடகர் கிறிஸ்தவப் பாடல்களைக் கர்நாடக சங்கீத மரபில் பாடியச் செய்தி வெளிவரவும் பெரும் சர்ச்சை வெடித்தது. அந்தச் சர்ச்சையின் பரிமாணங்கள் இப்பதிவோடு தொடர்பில்லாதவை. அருணை ஒரு இந்துத்துவத் தீவிரவாதி தொலைபேசியில் கூப்பிட்டு மிரட்டும் போது அருண், ஒரு வேளை அச்சத்தால் உந்தப்பட்டு, “ஏன் அப்படிச் செய்த மற்றவர்களைக் கேட்கவில்லை” என்று சொல்லி மீண்டும் மீண்டும் டி.எம்.கிருஷ்ணா பெயரைக் குறிப்பிட்டார். கிருஷ்ணா ஏற்கனவே கர்நாடக சங்கீதத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் மற்றும் எம்.எஸ். பற்றியும் கருத்துகளை வெளியிட்டு மிகுந்த எதிர்ப்புக்குள்ளாகியிருந்தார். 

தன் பெயர் இழுக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட கிருஷ்ணா உடனே தான் மாதமொன்றுக்கு அல்லா அல்லது கிறுஸ்து பற்றிய பாடல்களைப் பாடப் போவதாக அறிவித்தார். எதிர்ப்பாளர்கள் கெக்கலித்தார்கள். கெக்கெலிப்புகளுக்கிடையே ஒரு கேள்வி, “அப்பாடல்களைப் பாடும் போது லுங்கி அணிவாரா?” என்று. 

கர்நாடக சங்கீத உலகுக்கும் உடைத் தேர்வுகளுக்கும் உள்ளத் தொடர்பை பார்க்கும் முன் மேற்கத்திய செவ்வியல் இசை உலகில் உடைத் தேர்வு பற்றிய உரையாடல்களைச் சற்று நோக்குவோம். 

(குறிப்பு: மேற்கத்திய செவ்வியல் இசை என்று சொல்லும் போது கர்நாடக சங்கீத இசையைச் செவ்வியல் என்று சொல்லாததில் எந்த அரசியலும் இல்லை. மேற்கத்திய இசையை வகைப்பட்டுத்திச் சொல்லும் போது செவ்வியல் இசையைச் செவ்வியல் இசை என்று தனியே அடையாளப்படுத்துவது வழக்கம். கர்நாடக சங்கீதத்தைப் பொதுவாக அப்படித் தனியே குறிப்பதில்லை அது எப்போதும் செவ்வியல் இசை என்றே வகைமை படுத்தப் படுகிறது. இதை எழுதும் போது தோன்றுகிறது இதுவே தனியே ஒரு கோணத்தில் பேசப்பட வேண்டியது). 

யூஜா வாங்கின் கவர்ச்சி, கேமரான் கார்பெண்டரின் உடைத் தேர்வுகளும்: 

செவ்வியல் இசை என்றாலே அதில் ஓர் இறுக்கமும் மரபு சார் பழக்கங்களும் கோலோச்சி விடுகின்றன. மேற்கத்திய செவ்வியல் இசையும் இதற்கு விதிவிலக்கல்ல. 

இசைக் கலைஞர்கள் கறுப்பு உடை அணிவது கிட்டத்தட்ட சீருடை கட்டுப்பாடு அளவுக்குப் பின் பற்றபடுகிறது. அதற்கான முதன்மைக் காரணம் கலைஞர்களின் வித்தையும் அவர்கள் அளிக்கும் இசையுமே ரசிகனின் கவனத்தில் இருக்க வேண்டும் கவனம் சிதறக்கூடாது என்பதே. இசை நிகழ்வின் நடத்தும் விதமும் அப்படியே. முதன்மையான தனி ஆவர்த்தனக்காரர்கள் (Soloist) வாசிக்கும் போது இசை நடத்துநர் (conductor) மற்றும் இசைக் குழுவினர் சிலையாக இருப்பார்கள். கர்நாடக சங்கீத மேடையில் பக்க வாத்தியக்காரர் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் போது பாடகர்கள் செய்யும் கொன்ஷ்டைகள் இங்குக் கிடையாது. 

உடைத் தேர்வில் ஒரு மேட்டிமைத்தனம் நிச்சயம் உண்டு. ஜீன்ஸ், டீ ஷர்ட் போன்றவைகளுக்கு அனுமதி இல்லை அவை கறுப்பாக இருந்தாலும். ஆக நிறத் தேர்வு கவனச் சிதறலை தவிர்க்க என்றால் அதுவும் சீருடைத் தரத்தில் இருப்பது ஓர் மேட்டிமை உணர்வை ரசிகனுக்கு அளிப்பதும் ரசிகனுக்கு இசை மட்டுமல்ல அதை இசைப்பவர்களும் இசை நிகழ்வும் ஒரு முழு மேட்டிமை (elitist) அனுபவத்தைத் தருவதே நோக்கம். செவ்வியல் இசை என்பதன் நோக்கம் மேட்டிமைத் தன்மை என்பது குறுகலான புரிதல். அதுவும் அதன் நோக்கங்களிம் ஒன்று அவ்வளவே. செவ்வியல் இசை என்பதன் கலாச்சார நோக்கங்கள் மிக விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை. 

பெண் இசைக் கலைஞர்கள் உடை கவுன் தான். சமீபத்தில் சில ஆர்கெஸ்டிராக்கள் பேண்ட் போட அனுமதிக்கின்றன. பாரம்பர்யமிக்க நியூ யார்க் பில்ஹார்மானிக் பெண் கலைஞர்களுக்குப் பேண்ட் அணிய அனுமதியளிக்க ‘யோசிப்பதாக’ சமீபத்தில் நியு யார்க் டைம்ஸ் சொல்கிறது. 

1958-இல் மிக மதிக்கப்படுகிற இசை நடத்துநர் லியோனார்ட் பெர்ன்ஸ்டீன் ஒரு இசை நிகழ்வில் தன் குழுவினருக்கு நேருவின் கோட் போன்ற (Nehru Jacket) உடையை அணிவித்திருந்தார். பிறகு அது ஏற்கப்படாத போது கைவிட்டு ‘பெர்ன்ஸ்டீன் தவறுகள்’ என்ற பட்டியலில் அதைச் சேர்த்து விடலாம் என்றார். ஆனால் சமீபத்தில் கிரிஸ்டோப் எஸ்கென்பாக் (Christoph Eschenbach) எனும் நடத்துநர் மீண்டும் அவ்வுடையை வழக்கமாக்கியுள்ளார். இம்முயற்சிகள் போலல்லாது தங்கள் உடைத் தேர்வின் மூலமாக இசையைக் கலையாக வடிவமைக்கும் தங்கள்படைப்பூக்கத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல அதன் காரணமும் என்று நிறுவுபவர்களில் இருவர் மிக முக்கியம். 

கிறிஸ்தவத் தேவாலயங்களில் ஆர்கன் (Organ) இசை என்பது பிரதானமானதும் பிரம்மாண்டமானதும். இது வெறும் பியானோ இசை அல்ல. கேமரான் கார்பெண்டர் இன்று அதிகம் பேசப்படும் ஆர்கன் இசைக் கலைஞர். கேமரான் வெற்றுடம்போடு போஸ் கொடுப்பது, ஸ்படிகங்கள் (Crystal) பதித்த உடை மற்றும் காலணி அணிவது என்று உடைத் தேர்வால் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்வதொடு அவர் நாத்திகரும் கூட. அவர் லட்சியம் என்பது ஆர்கன் என்கிற இசைக் கருவியைத் தேவாலயங்களிலிருந்து வெளிக் கொணர்வது தான். ஆனால் ஒரு சிக்கல் ஆர்கன் என்பது பிரம்மாண்டமான கருவி. அதனாலேயே கேமரான் நிகழ்ச்சிகளுக்கு எடுத்துச் செல்லத் தக்க ஆர்கனை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட கலைஞன் தன் உடைத் தேர்விலும் தன்னை வெளிப்படுத்துவது இயல்பே. அந்த மாதிரியான வெளிப்படுத்துதலுக்கு மேற்கத்திய இசை மரபும் அது சார்ந்த சூழலும் இடமளிக்கின்றன. அது தான் இங்குக் கவனிக்கப்பட வேண்டியவை. 

2011-இல் ஹாலிவுட் பௌல் (Hollywood Bowl) என்கிற நிகச்சியில் பியானோ வாசிக்க வந்த புகழ் பெற்ற கலைஞர் பெய்ஜிங்கில் பிறந்து வளர்ந்த யூஜா வாங் என்பவர். பார்வையாளர்கள் அதிர்ந்தார்கள். இறுக்கமான, மிகவும் குட்டையான அதுவும் ஆரஞ்சு நிறத்தில் கவுன் அணிந்து நடக்கவே முடியாத உயரிய காலணியும் போட்டுக் கொண்டு டொக் டொக் என்று மேடையில் வந்தார். பிரமாதமாக வாசித்தார். அடுத்த நாள் சில விமர்சகர்கள் அந்த உடைத் தேர்வை விமர்சித்தார்கள். 

ஒரு விமர்சகர் வாங்கின் மெல்லிய (petite) உருவத்தோடு அவர் பியானோவை இசைக்கும் போது உண்டாகும் தாக்கத்தை அவர் உடைத் தேர்வு அடிக்கோடிடுகிறது அதற்கு உதவவும் செய்கிறது என்றார். தன் உடைத் தேர்வு பற்றித் திட்ட வட்டமாக வாங், “நான் வாசிக்கும் இசை அழகும் சிருங்காரமும் நிறைந்தது அப்படியென்றால் என் உடையும் அதற்கேற்றார் போல் இருப்பது தானே சரி? இது ஒரு வகையான ஆளுமை ( power and persusasion). இதில் வதைக்கும் தன்மையும் உண்டு (sadomasochistic). என் இசையோடு நான் நிர்வாணம் ஆகும் போது அதை இசைக்கின்ற பொழுதும் அந்நிலை எனக்கு ஒப்புடையதாக வேண்டும்” (To avoid misunderstanding here’s her packed quote “If the music is beautiful and sesual, why not dress to fit? It’s about power and persuasion. Perhaps it’s a little sadomasochistc of me. But if I am going to get naked with my music, I may as well be comfortable while I’m at it”). 

வாங் பற்றி இன்னொரு விமர்சகர், அவர் வழக்கமான உடை அணிந்து வாசிக்கும் போது அவர் இசை சாதாரணமாக இருக்கிறது ஆனால் மரபு மீறல் உடை அணியும் போது அவர் இசை வேறு தளத்தில் இருக்கிறது என்றார். “மரபு என்பது சாம்பலை கும்பிடுவது அல்ல நெருப்பைப் பாதுகாப்பது” என்கிறார் வாங். 

வாங் மற்றும் கார்பெண்டரின் உடைத் தேர்வுகள் விமர்சணங்களைச் சந்திக்கின்றன ஆனால் இன்று அவர்கள் இருவரும் பரவலாகக் கொண்டாடப் படவே செய்ய்ப்படுகிறார்கள். 

ஆடை வடிவமைப்புக்கு உதவிய பீத்தோவானின் இசை:

அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத் தாக்கில் போய் இளைஞர்களைத் தன் வங்கியில் பனியாற்ற அழைக்கச் சென்ற ஜேமி டைமன் வழக்கமான உடையைத் தவிர்த்து அந்த இளைஞர்களின் பாணி உடைக்கு மாறியிருந்தார் என்கிறது ஒரு செய்தி. அமெரிக்க வங்கிகளில் மிகக் கட்டுப்பாடாகக் கோட்-ஸூட் என்று இருந்த காலம் போய் இன்று இளைஞர்களுக்காகவும் பல தரப்பட்ட மக்களுக்காகவும் உடைக் கட்டுப் பாடுகள் மிகவும் தளர்த்தப்பட்டதோடு வித விதமான உடைகளை அணிய உற்சாகப் படுத்துகிறார்கள். நாம் அணியும் உடை நம்மைப் பற்றியும் நம் உளவியில் பற்றியும் சொல்வதோடு அதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான காரணி என்பது இதன் மூலம் தெளிவு. 

இக்கட்டுரைக்கான ஆராய்ச்சியில் கிடைத்த ஒரு சுவையான தகவல் ஆடை வடிவமைப்பதற்கு ஒரு பிரபலமான வடிவமைப்பாளருக்கு இசை எப்படி உந்து சக்தியானது என்பது. 

கரோலினா ஹெர்ரேரா (Carolina Herrera) என்பவர் புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர். அவர் வடிவமைக்கும் ஆடைகளுக்கான காட்சி நிகழ்வில் மேடையில் மாடல்கள் நடந்து வரும் போது ஒலிக்க இசைக் கோர்வைகள் செய்வது வழக்கம். டாம் ஹாட்ஜ் (Tom Hodge) ஹெர்ரேராவுக்கு இசைக் கோர்ப்பு செய்கிறவர். அவர் பீத்தோவானின் ‘கிராய்ட்ஸர் சொனாட்டா”வை  (Kreutzer Sonata) எடுத்தி மாற்றியமைத்தார். பீத்தோவனின் இசையை ஹாட்ஜ் முக்கியமான மாறுதல்களைச் செய்து கரொலினாவுக்கான இசைக் கோர்வை எனப் பெயரிட்டு அளித்தார். பொதுவாக ஆடை காட்சி நிகழ்வுகளுக்கு இப்படிப் பிரத்தியேக இசை அமைப்பது இல்லை. நிகழ்வில் காட்சிப்படுத்தப் போகும் ஆடைகளை தேர்வு செய்தப் பின் அந்த ஆடைகளின் குணாதிசியத்திற்கு ஏற்ற இசையை அமைப்பது தான் வழக்கம். ஆனால் பெரும் பொருட் செலவில் முதலில் இசை அமைக்கப்பட்டது இம்முறை. பிறகு ஹெர்ரேரா இசைக்கேற்ற உடையை வடிவமைத்தாராம். 

உடை வடிவமைப்பும் இசையும் கலைகள் அவை ஒன்றுக்கொன்று கொடுத்தும் பெற்றும் தங்கள் எல்லைகளை விஸ்தரிக்கின்றன என்பது இதன் மூலம் புலனாகிறது. 

மொஸார்த், கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள்: 

மேற்கத்திய செவ்வியல் இசையின் பிதாமகன்கள் பலரும் 17-ஆம், 18-ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய பேஷன்களில் அதிக நாட்டம் கொண்டவர்கள். மொஸார்த், பின்னர் வந்த ஷோபின் ஆகியோர் மிக அலாதியாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை விரும்பி அணிந்தவர்கள். அதற்குக் காரணம் அவர்களின் இசை ஐரோப்பிய அரசவைகள் மற்றும் பிரபுக்களின் ஆதரவில் வளர்ந்தது. அதனாலேயே அவர்கள் இசையில் காதல், காமம், கருமாதி எல்லாமும் இருந்தது. மொஸார்த்தின் மிகப் பிரபலமான இசைக் கோர்வை ஒருவர் மரணத்துக்காக நடத்தப்படும் தேவாலய நிகழ்வில் (funeral) இசைக்கப்படும் மரணத்துக்கான இசை (Requiem). மேற்கத்திய இசையும் கோயில் சார்ந்தது தான் ஆனால் கிறிஸ்தவத்தில் மரணம் பற்றிய பார்வை இந்து மதத்தில் இருந்து வேறு பட்டது ஆதலால் அந்த இசை சாத்தியமானது. 

அதிகம் பேசப்படாத இன்னொரு விஷயம் மேற்கத்திய இசையில் ஓரின சேர்க்கையாளர்கள். ஷைக்காவ்ஸ்கி, ஹேண்டல், ஏரன் கோப்லேண்ட், லியோனார்ட் பெர்ன்ஸ்டீன் குறிப்பிடத் தக்க சிலர். சமீபத்தியவர்களில் ஜான்-யீவ்ஸ்-திபெடோ (Jean-Yves-Thibaudet). 

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஆசாரமான பிராமணர்கள் அவர்களுக்கு இசை என்பது பக்தி மார்க்கம் மேலும் அது சார்ந்தே அவர்கள் உடையும் இருந்தன. அரசவையில் இருந்து விலகி இருந்த தியாகராஜரும் அப்படி இல்லாத முத்துசுவாமி தீட்சதரும் தங்கள் ஆசார உடையைத் தான் அணிந்தனர். ஆனால் அரசவை மற்றும் பிரபுக்களின் ஆதரவில் வளர்ந்த சதிர் என்கிற நாட்டிய வடிவில் இந்த ஆசாரங்கள் இல்லை. அதனால் தான் சதிரை பரத நாட்டியம் என்று மீட்டுருவாக்கம் செய்த ருக்மணி அருண்டேல் உடையலங்காரத்தையும் கங்கணம் கட்டிக் கொண்டு மாற்றினார். 

ருக்மினி தேவியும் பால சரஸ்வதியும் கச்சேரி காஸ்டியும்களும்:

காம்யா ஷர்மா என்கிற ஆய்வாளர் “கலாட்சேத்திராப் புடவை” என்பது பற்றிய கட்டுரையில் சதிரை பரதநாட்டியம் என்று மாற்றியதில் ஓர் அங்கமாகவே நாட்டியத்துக்கான உடையையும் வடிவமைத்தார் ருக்மினி அருண்டேல் என்று விரிவாக விவாதித்துள்ளார். 

“தேவதாசிகளின் உடை அலங்காரமாகவும் ஜிகினா வேலைப்பாட்டோடும்” இருக்கிறது என்றார் ருக்மினி தேவி. கோயில் சிலைகள் மற்றும் சாஸ்திரங்களைப் படித்து ருக்மினி தேவி பரத நாட்டியத்துக்கான ஆடையை வடிவமைத்தார் என்கிறார் அவர் பற்றிய சரித்திரம் எழுதிய லீலா சேம்சன். உடைக்கும் கலைக்குமான உறவை ஸ்திரப்படுத்தியதில் ருக்மினியின் பங்கை காம்யா ஷர்மா தரவுகளோடு நிரூபணம் செய்கிறார். நெசவாளர்களுக்கான மையம் ஒன்றை திறந்து வைத்து அவ்வுறவை மேலும் நெருக்கமாக்கினார் ருக்மினி தேவி. புடவைகளுக்கான பெயர்களும் பாரம்பர்யம் சார்ந்த பெயர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டன. இந்த உறவை கிருஷ்ணா அவரது கலகக் குரலால் கட்டுடைக்கிறார் என்கிற அச்சம் தான் பலரின் காழ்ப்பு நிறைந்த எதிர்ப்புக்கான காரணம். 

ருக்மினி தேவி சதிரை பரத நாட்டியமாக்கி நாட்டிய மேடையில் நடராஜரை அறிமுகப் படுத்தியதை ஒப்புக் கொள்ளாத பால சரஸ்வதி உடை மாற்றத்தையும் ஏற்காமல் கடைசி வரை அவர் சார்ந்த தேவதாசி மரபு சார்ந்த வழியில் புடவையில் தான் நாட்டியம் ஆடினார். 

இன்று கர்நாடக சங்கீத கச்சேரி மேடைகளில் தோன்றும் பெண் பாடகர்கள் தங்கள் பாடல் தேர்வுகளில் கவனம் செலுத்துவதை விட மேடையில் தோன்றும் போது அணியும் புடவகளில் மிக அதிகமாகக் கவனம் செலுத்தும் ஒரு டிரெண்ட் பற்றி “Silk and Sabha” என்று கட்டுரைகளே வருகின்றன. ஆண்களும் பெணளும் கர்நாடக சங்கீத மேடையில் தங்கள் உடை மூலமாக ஒரு கலாச்சாரச் செய்தியை முன் வைக்கிறார்கள். அன்றாட வாழ்வில் ஜீன்ஸ், டீ ஷர்ட், வெறும் நெற்றியோடு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரும் ஆண்கள் கச்சேரி மேடை என்றால் வேஷ்டி, பட்டுச் சட்டை, நெற்றியில் திருநீறு அல்லது நாமம் என்று எழுந்தருளிகிறார்கள். நோக்கம் வெகு தெளிவு. 

கர்நாடக இசையைக் கலாசாரத்தின் உச்சம் என்று நிறுவ பிராமணர்கல் 1930-களில் முயன்ற போது பெண்களைக் கலாசாரத்தின் கருவூலங்களாக முன்னிறுத்தினார்கள். எம்.எஸ் பற்றிச் சொல்லும் போது ஆராய்ச்சியாளர் அமாண்டா வீட்மேன் இதைச் சுட்டிக் கட்டியிருக்கிறார். இன்றும் பெண் பாடகர்கள் ஆண்களைப் போலல்லாது பொதுப் புகைப்படங்களில் கூட அதிகப் படசம் சுரிதார் தான் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கிறார். இவையெல்லாம் தற்செயல் அல்ல. 

லோலா அஸ்டனோவா (Lola Astanova)என்கிற ரஷ்ய பியானோ கலைஞர் யூஜா வாங் போல் கவர்ச்சியாக உடை அணிவதோடு தன் இன்ஸ்டாகிராமில் பிகினி உடை புகைப்படம் எல்லாம் வெளியிட்டுள்ளார். ஒரு கட்டுரையில் உள்ளாடை என்று சொல்லத்தக்க ஓருடையில் பியானோ மீது ஏறி அமர்ந்துள்ள புகைப்படம் பார்த்தேன். சரி இதெல்லாம் வெறும் ஜாலம், வியாபாரம், தேவையில்லாதது இன்னும் சொல்லப் போனால் இப்படியெல்லாம் கர்நாடக சங்கீதம் சீரழிந்து விடக் கூடாது என்று பலரும் கூறலாம். ஆனால் கர்நாடக சங்கீத உலகை உலுக்கிய சமீபத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் அவ்வுலகின் இன்னொரு பக்கத்தை நமக்குக் காட்டியது. 

ஒரு காலத்தில் நாகஸ்வர கலைஞர்கள் மேடையில் அமரவும் கூடாது சட்டையும் போட கூடாது என்று விதிக்கப்பட்டவர்கள். தன் மேதமையினால் அந்தக் கட்டுப்பாட்டை உடைத்து மேடையில் அமர்ந்தும். 
சட்டைப் போட்டும் கச்சேரி செய்தவர் டி.என். ராஜரத்தினம் பிள்ளை. சில சமயம் பேண்ட் போட்டுக் கொண்டு கச்சேரி செய்ததாகக் குறிப்புகள் சொல்கின்றன. உடைக்கும் இசைக்கும் நெருக்கமான உறவுண்டு. 

கிருஷ்ணாவின் லுங்கியும் பாடல் தேர்வுகளும்:

அக்டோபார் 6-ஆம் தேதி பிளெயின்ஸ்பரோ (Plainsboro) என்கிற பெரும்பாலும் உயர் நடுத்தர வர்கத்தினரும் அநேக இந்தியர்களும் வாழும் நகரின் பள்ளியில் நிகழ்ச்சி நடத்தினார். அலங்காரமான உயர் ரக லுங்கியும் உயர் ரகப் பூப்போட்டச் சட்டையும் அணிந்து மேடைக்கு வந்தார். மேடைக்கு வந்த

 கிருஷ்ணா சபையோரை வணங்கிவிட்டு அமர்ந்து மடி மீது சால்வைப் போர்த்திக் கொண்டு அடுத்த முன்று மணி நேரமும் சங்கீத மழைப் பொழிந்தார். அவர் சபை நடத்தையிலோ சங்கீத வெளிப்பாட்டிலோ எந்த வித்தியாசமும் இல்லை. வித்தியாசம் பாடல் தேர்வுகளில் தான். 

கர்நாடக சங்கீத மேடைகளில் தமிழ் பாடல்கள் ஒலிக்கின்றன ஆனால் அவை பெரும்பாலும் பாரதியின் கவிதைகளோ தமிழ் பக்தி இலக்கியப் பாடல்களோ தான். சம காலத்திய கவிதைகள் அல்லது அதிகம் பேசப்படாதப் பொருளைப் பற்றிய பாடல்கள் அல்ல. எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘ஆந்தை’ பற்றிய கவிதையைப் பாடி அசத்தினார் கிருஷ்ணா. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடலும் பாடினார். தான் லுங்கி அணியும் முடிவைப் பர்றி இது வரை கிருஷ்ணா எந்த விரிவான குறிப்பும் பேசியதில்லை. ஒரு வேளை தன் பாடல் தேர்வின் மூலம் அதை உணர்த்துகிறார் என்று நான் எடுத்துக் கொள்கிறேன். உடைத் தேர்விலும் தன் சுதந்திரத்தை நிலை நாட்டி அதைத் தன் இசையிலும் பிரதிபலிக்கிறார் கிருஷ்ணா. 

தமிழ் பண்பாட்டில் லுங்கி என்பது தொழிலாளர்களின் உடை, முஸ்லிம்களின் உடை அல்லது இரவு உடை என்கிற அளவில் தான் மதிக்கப்படுகிறது. இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஏதேனும் விழா என்றால் வேஷ்டி தான் அணிகிறார்கள். 

லுங்கி வேஷ்டி மாதிரியான உடை தான். அதே வடிவம் தான். இன்னும் சொல்லப் போனால் பஞ்சகச்சத்திலாவது அதன் தரம் பொறுத்து உள்ளாடைகள் தெரியும் லுங்கி அப்படியல்ல. ஆனாலும் இன்று பல கோயில்களிலும் “லுங்கி அணிந்து வரக் கூடாது” என்கிறார்கள். சில கோயில்களில் ஆண்கள் சட்டைப் போட்டுக் கொண்டு நுழைய முடியாது. இது விந்தையானது. ரோமில் பல சர்ச்சுகளில் ஆணும் பெண்ணும் முட்டிக்கு மேல் இருக்கும் உடையோ, தோள்கள் தெரியும் உடையோ அணிந்து செல்ல முடியாது. அப்படிப் போனால் சர்ச்சிலேயே துண்டுகள் கொடுக்கிறார்கள் வாங்கிப் போர்த்திக் கொள்ளலாம். இந்த இருமை (dichotomy) எனக்கு ஆச்சர்யம். புடவையும் வேஷ்டியும் உடல் பாகங்களை வெளிப்படுத்துவன ஆனால் அது தான் பாரம்பர்யம் என்கிறார்கள். உடலை கவுரவமாக மறைக்கும் லுங்கி பலருக்கு, குறிப்பாகப் பிராமணர்களுக்கு, எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்களின் பிரச்சினை உடல் தெரிவதல்ல. 

லால்குடி ஜெயராமன் பற்றிய பிரபலமான புகைப்பட்டம் ஒன்று அவர் தன் குழுவினரோடு காஞ்சி பரமாச்சார்யார் என்றழைக்கப்படும் ஶ்ரீ சந்திரசேகரேந்திரர் முன் சட்டையில்லாமல் அரை நிர்வானமாக வயலின் வாசிப்பது. சங்கராச்சார்யார் முன் யாரும், பொதுவாக, சட்டை அணிய முடியாது. ரமண மகரிஷி காந்தியை விட மிகச் சிறிய கோவணம் தான் உடுத்தியிருந்தார். குறைவான ஆடைக் கூடப் பிரச்சினைக் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அப்படி உடுத்துபவர்கள் வணங்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால் கிருஷ்ணாவின் உடைக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பும், காழ்ப்பும், நக்கலும்?


கிருஷ்ணா கர்நாடக சங்கீதத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். எம். எஸ். தன்னைப் பிராமணராக உருவாக்கிக் கொண்டதாலேயே ஏற்கப்பட்டார் என்று மீண்டும் மீண்டும் சொல்லி பலரின் எரிச்சலுக்கும் கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கிறார். மோடியையும், இந்துத்துவத்தையும் விமர்சிக்கிறார். கர்நாடக சங்கீத ரசிகர்களில் பலர் மென் அல்லது முழுமையான இந்துத்துவர்கள் தாம். 

பிராமணர்களுக்குக் கர்நாடக சங்கீதம் என்பதும் திருநீறு, நாமம், பூணூல் போன்றது. அது அவர்களது சுய அடையாளத்தை நிர்ணயிப்பது. பிராமணத் துவேஷம் விஷம் போல் வேரூன்றி விட்ட தமிழகத்தில் ஆட்சியதிகாரத்தில் இருந்து மிகவும் ஒதுக்கப்பட்டு விட்ட பிராமணர்கள் தாங்கள் கோலோச்சும் கலாசாரப் பீடமான கர்நாடக இசையும் தங்கள் கையை விட்டுப் போய் விடுமோ என்று அச்சப்படுவது மிக முக்கியமான காரணம். ஆதிக்கங்களைத் தகர்த்து அநேகரும், எதிலும், பங்கேற்பது முக்கியம் ஆனால் தமிழக அரசியல் களனில் பிராமணர்கள் மேல் மட்டுமே அத்தனை பாவ கணக்கையும் எழுதி அவர்களை ஒதுக்கிவிட்டால் சம தர்மம் பூத்துக் குலுங்கும் என்று நிறுவப்பட்டது. பிராமணர்கள், எண்ணிக்கை இல்லாததாலேயே, ஜனநாயக அமைப்புகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்கள். அந்தக் கசப்பு அவர்களுக்குக் கிருஷ்ணாவின் கோரிக்கைகளைக் காழ்ப்போடு எதிர் நோக்கச் செய்கிறது. மேலும் அவரைத் துரோகி போல் சித்தரிக்கவும் தோண்றுகிறது அவர்களுக்கு. அவர்களின் முக்கியமான குற்றாச்சாட்டு இசையில் அரசியலை கிருஷ்ணா கலக்கிறார் என்பது. 

இசைக் கலையை அரசியலாக்குகிறாரா கிருஷ்ணா? 

இசை என்கிற கலை வடிவத்தில் கிருஷ்ணா அரசியலை நுழைக்கிறார் என்று பலர் கூக்குரலிடுகிறார்கள். எந்தக் கலையும் கலை என்கிற எல்லைக்குள் சம காலச் சமூகத்தோடு தொடர்புடைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டாலும் சம காலம் தாண்டி முடிவிலா எதிர்காலத்து மானுட குலத்துக்கு ஒரு செய்திதை கடத்துவதாகும். அப்படிச் செய்வது மட்டும் தான் கலையா என்பது வேறு விவாதம். 

பீத்தோவானின் 9-ஆவது ஸிம்பொனி அக்காலத்திய அரசியல் கொந்தளிப்பை பிரதிபலப்போதுடு இன்றும் புரட்சியாளர்கள் விரும்பும் சங்க நாதமாக இருக்கிறது. தியானென்மென் சதுக்கத்தில் குழுமிய மாணவர்கள் சீன அரசின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தங்கள் கிளர்சியின் நாதமாகத் தேர்ந்தெடுத்தது அந்த ஜெர்மனிய ஸிம்பொனி தான். அமெரிகாவில் கறுப்பினத்தவரின் உரிமைப் போராட்டத்தையும் ஜாஸ் இசை வரலாற்றையும் பிரித்துப் பேச முடியாது. நினா சிமோன் போன்ற கலைஞரைப் பேசாமல் அந்த அறப்போர் பற்றிய முழுச் சித்திரத்தை அளிக்க முடியாது. கலைஞன் என்பவன் சமூகத்தின் ஆன்மா. அதனால் தான் தன் மக்கள் பெரும் ஏகாதிபத்தியத்தை எதிர் கொண்ட போது உலகம் போற்றும் செல்லோ கலைஞர் ம்ஸ்டிஸ்லாவ் ராஸ்டிரபோவிச் தன் உயிரை பணயம் வைத்து மக்களோடு நின்று சோவியத் டாங்கிகளை எதிர்த்தார். எந்நேரமும் டாங்கிகள் தாக்கக் கூடிய சூழலில் செஞ்சதுக்கத்தில் பாக் இசையை வாசித்தார் ராஸ்டிரபோவிச். கலைக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 

கர்நாடக சங்கீதத்தின் வரலாறுத் தெரியாதவர்கள் தான் இசையில் அரசியல் கலக்கிறதே என்று அங்கலாய்ப்பார்கள். சென்னை மியூஸிக் அகாதமி நிறுவப்பட்டதே 1920-இல் சென்னையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி நடத்தப்பட்ட இசை மாநாட்டுக்கு வசூலித்த பணத்தில் தான். தேசிய போராட்டத்தில் அன்று கர்நாடக இசையும் இசைக் கலைஞர்களும் கலந்தது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. பால சரஸ்வதியின் சரித்திரத்தை எழுதிய டக்ளஸ் நைட் சொல்கிறார், “காங்கிரஸ் மாநாடுகளில் இசைக் கலைஞர்கள் காங்கிரஸின் அரசியல் பிரச்சாரங்களை முன்னெடுத்தார்கள்”. 

இன்று நாமறியும் கர்நாடக இசையும் பரதமும் 1930-களில் எழுந்த தேசிய எழுச்சியைப் பின்னனியாகக் கொண்டு ஒரு கலாச்சார உருவாக்கத்தின் விளைவாகப் பிறந்தது தான். அந்தச் சூழலில் தான் இவற்றைச் சாஸ்திரத்தோடும் தொன்மங்களோடும் பிணைப்பது நடந்தது (விரிவான அலசலக்கு என் கட்டுரை காண்க). 

கர்நாடக இசையும் பரதமும் பக்தி மார்க்கமாக மாற்றப்பட்டது அந்த 1930-களில் தான். அதற்குக் காரணம் தமிழ் நாட்டில் தேசியமும் கலையும் ஸ்மார்த்த பிராமணர்களின் கை வசம் இருந்தது தான். தேசியம், பாகவத கலாசாரம், கலைகளைப் பக்தி மார்க்கம் ஆக்குதல் ஆகியவை ஒன்றோடொன்று பிணைந்தவை. 

கர்நாடக இசைக்கு அரசியல் புதிதல்ல ஆனால் கிருஷ்ணா முன்னிறுத்தும் அரசியல் வகைப் புதிது என்று வேண்டுமானால் சொல்லலாம். 

கிருஷ்ணா பிளவுகளை ஊக்குவிக்கிறாரா?

கிருஷ்ணா ஒற்றுமைகளை வலியுறுத்தாமல் போதாமைகளைப் பற்றியே பேசுவது ஒரு பிளவு மனப்பான்மையை வளர்க்கிறது என்பது இன்னொரு குற்றச்சாட்டு. இது சாரமற்றது. எல்லாக் காலத்திலும் சீரமைப்பாளர்களை நோக்கி இத்தகைய குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு யாத்திரையின் போது காந்தியை சந்தித்த ஸ்ரீ சந்திரசேகரேந்திரர் காந்தியின் கைகளைப் பற்றிக் கொண்டு “இந்து மதத்தை அழித்து விடாதீர்கள்” என்றார். 

கிருஷ்ணாவின் செயல்களை விவாதிக்கும் போது காந்தியின் பெயரை உச்சரித்தால் பலர் புருவங்களை உசத்தக் கூடும், சிலர் கேலிப்பேசசும் கூடும். காந்தி போன்ற ஒருவரின் வாழ்வைப் படித்தறியும் போது அதை வெறும் தகவல்களாக உள்வாங்குவது பாமர மனம். மாறாக அத்தகவல்களின் வழியாக ஒரு வரலாற்றுத் தருணத்தைப் புரிந்து கொள்வதும் அதைப் படிமமாகக் கொண்டு பின்னர் வேறோருச் சூழலுக்குப் பொருத்திப் பார்த்து விடையளிப்பதோ விவாதிப்பதோ தேர்ந்த வாசகனின் கடமை. காந்தியின் வாழ்வின் சில கீற்றுகளோடு கிருஷ்ணாவின் செயல்களை ஒப்பிட்டால் அதற்கு அர்த்தம் கிருஷ்ணா ஏகாதிபத்தியத்தின் தூண்களை அசைத்துக் கொண்டிருக்கிறார் என்பதல்ல. மாறாகக் கிருஷ்ணாவின் செயல்களையும் அதற்கு வரும் எதிர் வினைகளையும் புரிந்து கொள்ளக் காந்தியின் வாழ்வு ஒரு படிமம் அவ்வளவு தான். 

இசையைத் தாண்டி அநேக விஷயங்களைப் பற்றிக் கிருஷ்ணா பேசுகிறார் அதில் சில சமயம் அவருக்குப் பேசுப்பொருளின் துறைகள் பரிச்சயமில்லாதது என்பதும் தெளிவாகிறது, ஏன் இப்படிப் பேச வேண்டும்? தனக்குத் தெரிந்த இசைத் துறையோடு கிருஷ்ணா நிறுத்திக் கொள்ளலாமே என்கிறார்கள். காந்தி பேசாத விஷயமா? பொருளாதாரம் பற்றிக் காந்தி எதார்த்தமும், தெளிந்தப் புரிதலும், பல சமயங்களில் மௌடீகமாகவும் பேசியிருக்கிறார். பாலுறவு பற்றிய காந்தியின் கருத்துகள் முட்டாள் தனமானவை. கிருஷ்ணாவின் பேசு பொருட்களைக் குறுக்குவது அவருக்கு வாய்ப்பூட்டுப் போடத்தான். சிறுகச் சிறுக குறுக்கி கடைசியில் அவர் ராகம் தாளம் பற்றி மட்டும் பேசினால் போதும் என்பார்கள். அது தான் குறிக்கோள். 

காந்தி வாழ் நாளெல்லாம் தன் சிந்தனைகளைச் செப்பனிட்டுக் கொண்டே இருந்தவர். கொல்லப்படுவதற்கு இரண்டு வருடம் முன்பு தான் பிரம்மச்சர்ய சோதனை என்ற முட்டாள் தனத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணாவின் கருத்தியல்கள் கடந்த சில வருடங்களாகத் தான் வெளிப்பட்ட ஆரம்பித்திருகின்றன. ஆகவே ஒவ்வொரு முறையும் அவர் தவறு செய்கிறாரா என்று நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்து தவறு நிகழும் போது அவரை அவசரமாகக் கழுவில் ஏற்ற வேண்டாம். உலக வரலாற்றீல் எந்தச் சீரமைப்பாளரும் தவறுகள் செய்யாமல் இருந்ததில்லை. தவறிழைக்கக் கிருஷ்ணாவுக்கு உரிமை உண்டு. அதை அடையாளம் கண்டு கண்டிக்க மற்றாவர்களுக்கு உரிமை உண்டு. 

ஆனால் கிருஷ்ணா கவனமாக இருக்க வேண்டியதும் உண்டு. தவறிழைக்கலாம் ஆனால் தவறுகள், சே குவேரா படம் போட்ட கோட் அணிந்து போஸ் கொடுப்பது போன்ற தவறுகள், கூடிக் கொண்டே போனால் காலப் போக்கில் அவரையும் அவர் கருத்துகளையும் உதாசீனப் படுத்தி விடுவார்கள். 

நிலைத்த மாற்றத்தை கிருஷ்ணாவால் உருவாக்க முடியுமா?

கிருஷ்ணாவின் செயல்கள் எந்த நிலையான மாற்றத்தையும் உருவாக்காது என்று நப்பாசையோடு சிலர வாதிடுகிறார்கள். அந்தக் கச்சேரியின் போதே என்னருகே அமர்ந்திருந்த பெண்மணி ஒருவருக்கு இலக்கு கிருஷ்ணாவின் இசை மட்டுமே. அவருக்கு, நான் கவனித்த வரை, ராகம் தாளத்தில் இருந்த ஈடுபாடு குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல் வரிகளிலோ, பெருமாள் முருகனின் கவிதை வரிகளிலோ அவை இந்த மாதிரி கச்சேரி மேடையில் அரங்கேறுவதன் சிறப்பிலோ ஈடுபாடு இல்லை. பேச்சினூடாக அறிந்தது அப்பெண்ணுக்கு அவர் அரசியல் அவ்வளவாகப் பிடிக்கவில்லை, ‘இதெல்லாம் தேவையில்லாத வேலை’ என்பதே அவர் சொன்னது. வந்திருந்தவர்கள் எல்லோரும் அப்படி என்று சொல்ல முடியாது. 

காந்தியோ, ஈ.வெ.ராவோ மக்கள் தாங்கள் எதை எடுத்துக் கொள்வது எதை நிராகரிப்பது என்று ஒரு மனதளிவிலான வடிகட்டி வைத்திருக்கிறார்கள். காந்தியின் ஆஸ்ரமத்தில் மலம் அள்ளிய உயர் ஜாதியினர் ஆஸ்ரமத்துக்கு வெளியே அவ்வளவாக அதைச் செய்ததில்லை. 

சில விமர்சனங்களில் சாரம் உண்டு. கிருஷ்ணாவின் இசைக் குழுவே பிராமணர்கள் அடங்கியது தான். இதை எவ்வித அசூயையோடும் சொல்லவில்லை. பெருமாள் முருகனின் கவிதைக்கு அற்புதமாக இசை வடிவம் கொடுத்தவர் வயலின் வாசித்த பக்க வாத்தியக்காரர் தான். பிராமணரல்லாதவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பதாகை தூக்கிப் பிரச்சாரம் செய்து விட்டு இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவர் குழு இப்படியே இருந்தால் அது முரண்பாடு என்பதைத் தாண்டி ஒரு ஹிபாக்ரஸி என்றே பேசப்படும். 

இன்னொரு குற்றச்சாட்டுத் தினசரிகளில் கட்டுரைகள் எழுதுவதைத் தாண்டி கிருஷ்ணா என்ன செய்கிறார் என்கிற கேள்வி. சித்திரவீணை ரவிக்கிரன் (அவர் பற்றிய சமீபத்திய சர்ச்சை சொல்ல வரும் கருத்துக்குச் சம்பந்தமில்லாதது) அரசாங்கப் பள்ளிகளில் சில ஆயிரம் மாணவர்களுக்குக் கர்நாடக இசையைப் பயிற்றுவித்திருக்கிறார். கிருஷ்ணாவுக்கு என் வேண்டுகோள் இது தான், தயவு செய்து காந்தியின் சரித்திரத்தை அறிந்து கொள்ளுங்கள், ராமசந்திர குஹாவின் புத்தகம் நல்ல அறிமுகம். ஐன்ஸ்டீன் காந்தி பற்றிய இரங்கல் குறிப்பில், காரணமில்லாமலா, இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக வாழ்ந்தார் என்று சொன்னால் எதிர்காலச் சந்ததியினர் நம்ப மாட்டார்கள், என்று சொன்னார். காந்தி மிகுந்த செயல் திறன் படைத்தவர். பிரச்சனைகளுக்குத் தீர்வை நோக்கி காந்தி எப்படி நகர்ந்தார் என்பதை அறிய ஜூடித் பிரவுன் எழுதிய “Gandhi’s Rise to Power” சிறந்த புத்தகம். 

(பி.கு: ஆங்கிலக் கட்டுரை வெளி வந்தவுடன் நண்பர் சொன்னார் கிருஷ்ணாவும் களப் பணிச் செய்கிறார் இன்றிருக்கும் சூழலில் அப்பணிகளின் பாதுகாப்புக் கருதி வேறெதுவும் சொல்லும் நிலையில் இல்லை).

சரி கிருஷ்ணாவின் முயற்சிகள் தோல்வி அடைகின்றன எதிர்காலத்தில் அவர் எழுப்பிய கேள்விகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன என்றே வைத்துக் கொள்வோம். அதுவும் முன்னேற்றமே. காந்தியால் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை ஆனால் அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் ஒரு இம்மி அளவுக்காவது முன்னேற்றத்தை அளித்துள்ளது. அது தான் முக்கியம். 

கர்நாடக சங்கீத உலகோடு எனக்கு அவ்வளவு பரிச்சயம் கிடையாது ஆகையால் கிருஷ்ணாவின் செயல்பாடுகளை நான் அதீதமாக அங்கீகரிக்கவும் வாய்ப்புண்டு ஏனென்றால் வேறெவரது முயற்சிகளும் நானறியேன். ஆனால் நான் அறிந்தவரை கிருஷ்ணா முன் வைக்கும் கருத்துகள், குறிப்பாகக் கர்நாடக சங்கீதத்தின் பிராமணமயமாக்கல், எம்.எஸ்., பிராமணரல்லாதோரை ஊக்குவித்தல் போன்றவை குறுத்து வேறு யாரும் இப்படித் தொடர்ச்சியாகக் கருத்துரைத்ததில்லை. பலரும் அவர் கருத்துகளை மறுக்கும் முகமாக வரலாற்றை மறைத்துப் பூசி மெழுகவே முற்படுகிறார்கள். 

சகிப்புத் தன்மையற்றச் சூழலில் கலை:

சமூக வலைத் தளங்கள் இல்லாத காலத்தில் காந்தியின் இந்தியாவில் எம்.எஸ். சுப்புலட்சுமி அல்லா பற்றிப் பாட முடிந்தது. இன்று அவரால அதைச் செய்ய முடியாது. இது தான் இன்றுள்ள பிரச்சினை. இன்னொன்றையும் சொல்ல வேண்டும் , “கிருஷ்ணா செய்வது புதிதல்ல எம்.எஸ் செய்திருக்கிறார்” என்கிற பலரும் அவரவர் வீட்டில் எம்.எஸ்சின் சுப்பிரபாதத்தைத் தான் வைத்திருக்கிறார்கள் அல்லா பாட்டையல்ல. இன்று எம்.எஸ். நினைவுக் கூறப் படுவதும் அவர் பக்தி ரசம், இந்து பக்தி, சொட்டச் சொட்டப் பாடுவார் என்கிற மதிப்பீட்டினால் தான். 

இன்று கிருஷ்ணாவுக்கு எதிராகக் கிளம்பும் எதிர்ப்பு அலையின் உக்கிரமும் விஷத்தன்மையும் சாதாரணமானதல்ல. மாதமொரு பாட்டு அல்லா அல்லது கிறிஸ்து பற்றிப் பாடுகிறேன் என்று அவர் சொன்னதும் அமெரிக்காவில் மேரிலாந்தில் இருக்கும் சிவா-விஷ்ணு கோயிலில் ஏற்பாடாகியிருந்த நிகழ்ச்சியை ரத்துச் செய்யப் பேஸ்புக்கில் அக்கோயிலின் பதிவில் அநேக பின்னூட்டங்கள் அதில் அவரை ‘ஜாதி ஒதுக்குதல்’ செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது. இவர்களெல்லாம் கருத்துரிமைக்கு முதன்மையான அரசியல் சாசன ரீதியான பாதுகாப்பளிக்கும் அமெரிக்காவில் செல்வந்தர்களாகவும் உயர் நடுத்தர வர்க்கமாகவும் உலவுபவர்கள். 

தென்னமரிக்கக் கர்நாடக சங்கீத சம்மேளனம் தான் நியூ ஜெர்ஸி நிகழ்ச்சியை ஏற்பாடுச் செய்தது. அந்த நிர்வாகிகளுக்கு மிரட்டல் மின்ஞ்சல்கள் அனுப்ப பட்டன. அதிர்ந்துப் போன நிர்வாகிகள் உள்ளூர் காவல் துறையிடம் முறையிட்டு நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பளிக்கக் கோரினார்கள். உள்ளூர் காவல் நிலையம் நிகழ்ச்சி நடக்கும் பள்ளிக்கு அருகிலேயே இருப்பதைச் சுட்டிக் காட்டி காவல் துறையினர் வீண் செலவு வேண்டாம் ஏதேனும் தேவை இருந்தால் நொடிப் பொழுதில் வந்து விடுவோம் என்று அளித்த உறுதியின் பேரில் விழா நடந்தது. இந்த லட்சணத்தில் நம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்களைப் பற்றி ‘முன் மாதிரியான சிறு பான்மையினர்” (model minority) என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். வெட்கக் கேடு. 

கிருஷ்ணாவின் நோக்கங்களைக் கேள்வி கேட்கிறார்கள், அவருக்கு ஏதோ அரசியல் உள் நோக்கம் இருப்பதாகச் சந்தேகிக்கிறார்கள். அவர்களுக்கு எளிய மறு மொழி, அவர் செயலுக்கு அவர் அளிக்கும் விலையை நீங்கள் அளிக்கத் தயாரா? அவருக்கென்று குடும்பம் இருக்கிறது. கௌரி லங்கேஷ் கொல்லப்படும் சூழல் இருக்கும் போது அவருக்கும் அச்சங்கள் இருக்காதா? அந்தச் சூழல் தானே இன்று இந்தியாவில் நிலவுகிறது? இந்தச் சர்சையில் ஈடுபடவில்லையென்றால் அவருக்குத் தானாகச் சங்கீத கலாநிதி பட்டம் தேடி வந்திருக்கும். அவருக்குப் பொருளியல் இழப்புகள் இருக்கின்றன. அவர் நோக்கங்கள் பற்றி ஏதேனும் ஆதாரம் தெளிவாகக் காண்பிக்கப்படும் வரை இத்தகைய சந்தேகந்தங்கள் ஊகங்கள் என்பதை விட ஒரு வித சதி மனபான்மையின் வெளிப்பாடு என்று தான் நான் வகைப்படுத்துவேன். 

இன்னொரு விஷயம், கிருஷ்ணாவின் அநேக எதிர்ப்பாளர்கள் பிராமணர்கள் தான் ஆனால் அவருக்குத் தீவிர ஆதரவளிப்பவர்களில் பலரும் பிராமணர்கள் தான். அதே போல் அவரை எதிர்ப்பவர்கள் எல்லோரும் ஏதோ மாற்றத்தை விரும்பாதவர்களும் அல்லர் அதில் சிலராவது வேறு அணுகு முறைகளை முன் வைத்து அவர் செல்லும் பாதையில் இருந்து தங்களை விலக்கிக் கொள்கிறார்கள். 

கர்நாடக சங்கீதம் என்கிற கலையும் பன்முகத் தன்மை செழிக்கும் இந்தியாவும் எதிர்காலத்தில் சிறக்க டி.எம்.கிருஷ்ணாவின் முயற்சிகள் வெற்றியடைவது முக்கியம். 

Note: This Tamil version was published in Minnambalam as a three part essay and is a version of earlier blog in English. My thanks to Minnambalam

ஆதாரங்கள்: 


4. New York Times article on women's dress and New York Philharmonic https://www.nytimes.com/2018/06/14/arts/music/new-york-philharmonic-women-dress-code.html
6. Kaamya Sharma profile http://iim.academia.edu/KaamyaSharma
8. English version of Bala Saraswati's speech
10. "If the music is sensuous..." - Yuja Wang's profile in The Guardian https://www.theguardian.com/music/2017/apr/09/yuja-wang-piano-interview-fiona-maddocks-royal-festival-hall
13. WaPo article on Yuja Wang'd dress (another one), "which offends, her short dress or a critic's narrow view" https://www.washingtonpost.com/lifestyle/style/2011/08/10/gIQAMvtOBJ_story.html?noredirect=on&utm_term=.7feb406c8991
17. My Facebook post https://www.facebook.com/arvindkannaiyan/posts/10212449821900202?notif_id=1542770616634756&notif_t=feedback_reaction_generic (these photos are mine and have been practically reused by many) This is the original post.
19. கர்நாடக சங்கீதமும் பிராமணமயமாக்கலும் http://contrarianworld.blogspot.com/2018/03/blog-post.html

No comments: