Monday, August 2, 2021

ஸ்டாலின் ராஜாங்கம்: வரலாறு என்னும் மொழி

 ஜூலை 31 2021 அன்று ஸ்டாலின் ராஜாங்கத்தின் மூன்று புத்தகங்களை ஒட்டி "வரலாரு என்னும் மொழி" என்று ஒரு கலந்துரையாடலை ஒருங்கிணைத்திருந்தேன். ஸ்டாலினின் வரலாற்றுப் பார்வை, வரலாறு எப்படி கட்டமைக்கப்படுகிறது, 'எழுத்து' மட்டுமே வரலாறா என்று பல புள்ளிகளை விவாதம் தொட்டுச் சென்றது. "பெயரழிந்த வரலாறு: அயோத்தி தாசரும் அவர் கால ஆளுமைகளும்", "எண்பதுகளின் தமிழ் சினிமா", "எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்" ஆகிய மூன்று நூல்களும் மூன்று வெவ்வேறு தளத்துக்கானவை ஆனால் மையச் சரடாக எழுத்து சார்ந்த வரலாறும் மக்களிடையே புழங்கும் வழக்காறும் எப்படி ஒரு சித்திரத்தை அளிக்கிறது என்று இருக்கும்.




இந்நிகழ்வுக்கென்று நூல்கள் குறித்தும் பேஸ்புக்கில் எழுதிய குறிப்புகளின் தொகுப்பை இங்கு அளிக்கிறேன். இவை முறையான நூல் விமர்சனங்களல்ல. ஓர் அறிமுகம் மட்டுமே.


பெயரழிந்த வரலாறு: ஒரு குறிப்பு

-------------------------------


இப்புத்தகம் தமிழ் வரலாற்றெழுத்தில் ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். அயோத்திதாசரை மையமாகக் கொண்டு உ.வே.சா, பாரதி, இரட்டைமலை சீனிவாசன் முதலானோர் பரஸ்பரம் ஒருவரையொருவர் பெயர் குறிப்பிடாமல் எதிர்வினையாற்றியதை வைத்து வெகு நேர்த்தியாக ஊடும் பாவுமாய் ஸ்டாலின் வரலாற்றை நெய்த்திருக்கிறார்.


சீவக சிந்தாமணியை பதிப்பித்த உ.வே.சா அக்காப்பியத்துக்கு உரை எழுத சம காலத்தில் வாழ்ந்த சமணர்களை சந்தித்து கற்றுக் கொண்டார். ஆனால் மணிமேகலைக்கு உரை எழுத சம காலத்தில் "அழிந்தது" என கருதப்பட்ட பௌத்தத்திற்கு அவர் மேற்குலக பௌத்தர் அல்லாத ஆசிரியர்க்களின் நூல்களை, நேரடியாகக் கூட அல்ல, நண்பர் மூலம் கேட்டறிந்து (ஏனெனில் அவை ஆங்கிலத்தில் இருந்ததால்), அதன் மூலம் அறிந்த பௌத்தத்தையும் தன் பாரம்பர்யம் சார்ந்த புரிதலையும் சேர்த்து காப்பியத்துக்கு துணை நூலாக "பௌத்த மும்மணி" ஒன்றை எழுதினார், அது புத்தரின் வரலாற்றையும் அடக்கியது.


பௌத்தம் அழிந்தது என்று கொள்வது சரியா? என்ற கேள்வியில் தொடங்கி அயோத்திதாசர் அத்தகைய நூலினை, உ.வே.சா. பெயர் குறிப்பிடாமல் எதிர்வினையாற்றுகிறார். பௌத்தம் அறியாத மேற்குலகின் ஆசிரியர்களின் புரிதலையும் உ.வே.சா.வின் புரிதலையும் அயோத்திதாசர் கேள்விக்குட்படுத்துகிறார்.
மேற்க்கத்திய ஆய்வாளர்களும் வாயிலாக பௌத்தத்தை அறிந்த உ.வே.சா எழுதிய பௌத்தம் பற்றிய துணை நூல் வாசகனுக்கு காப்பியத்துக்குள் ஒரு நுழை வாயில் மட்டுமல்ல காப்பியத்துள் இருக்கக் கூடிய பௌத்தத்தை கூட வாசகன் உ.வே.சா அளித்த சட்டகத்தின் வழியாகவே புரிந்துக் கொள்ளக் கூடும். அது முழுமையானப் புரிதலா?

அயோத்திதாசரின் எழுத்தின் நோக்கம் இரண்டு. "1)சாதி பேதம் நீண்ட காலத்தவை அல்ல. 2) ஒன்றைக் காலத்தால் பழமையாக்கிக் காட்டுவதால் ஏற்படும் நிரந்தரத் தன்மையின் பிரச்சினை"
"அவரின் வரலாற்று துல்லியத்தை விட இவ்வாறு காலத்தால் பழமையாக்குவதால் சாதியமைப்புக்குக் கிடைக்கும் சமூக ஏற்பைப் பற்றிப் பேசியிருப்பது கவனிக்க வேண்டியதாகிறது"
"பிராமணர்களுக்கு அளிக்கப்படும் தொன்மை என்பது அவர்கள் பௌத்தத்திடமிருந்து இடையிலே 'போலச் செய்து' பலவற்றை தங்களவையாக உருமாற்றி ஏற்றம் பெற்றுக் கொண்டதை மறைக்கிறது என்று கருதினார். இவ்வாறு அவர்களுக்கு தரப்படும் தொன்மை என்பது சாதியமைப்புக்குத் தரப்படும் தொன்மையாக ஆகிவிடுகிறது என்றும் யோசித்தார்".

இவ்விடத்தில் யொஹானஸ் பிராங்க்ஹர்ஸ்ஸ்ட் (Johannes Bronkhorst) எழுதிய "பிராமணியத்தின் நிழலில் பௌத்தம்" (Buddhism in the shadow of Brahminism) நூலில் சொல்வது கவனிக்க வேண்டியது, "The rule of the Mauryas, it appears, was remembered in various ways, by Brahmins and Buddhists alike....This shared memory, it appears, could be moulded by Brahmins in a manner that suited their purposes. Such colonization of the past became all the easier in later days when the influence of Brahmins at the court had become a fact.....Buddhists of the sub continent came to reformulate their own past in Brahminical terms".


மௌர்ய ராஜ்யம், பௌத்தம் பற்றிய நினைவுகள் பிற்காலத்தில் அரச சபையில் கோலோச்சிய பிராமணர்களால் எந்தளவு கட்டமைக்கப்பட்டதென்றால் காலப் போக்கில் பௌத்தர்களே பிராமணவயமான சொல்லாடல்களையும் கதையாடல்களையும் ஸ்வீகரித்தார்கள் என்கிறார் பிராங்க்ஹர்ஸ்ட். அவர் முக்கியமாக சுட்டிக் காட்டுவது சாணக்கியனால் சந்திரகுப்தன் சாம்ராஜ்யம் உருவானதென்கிற தொன்மம் கட்டமைக்கப்பட்ட விதம். பௌத்தம் செழித்த காந்தாரத்தில் பிராமணியம் அரச கொள்கையாக இல்லாததை சுட்டிக் காட்டும் பிராங்க்ஹர்ஸ்ட் சாதியம் எப்படி பிராமணர் அதிகாரம் செலுத்தாத காலங்களிலும் இடங்களிலும் நிலைப் பெறவில்லை என்கிறார். இப்போது மீண்டும் ஸ்டாலின் அயோத்திதாசர் பற்றிச் சொல்வதை படித்துப் பாருங்கள்.

இந்நூலின் பலம் என்பது ஸ்டாலின் கையாளும் ஜாக்கிரதையுணர்வு. நிறைய யூகங்களின் அடிப்படையில் நெய்யப்படும் வரலாற்றில் அடிப்படையல்லாத யூகங்களை தவிர்ப்பதோடு தன் யூகங்களுக்கான குறைந்தப் பட்ச முகாந்திரங்களை ஸ்டாலின் அளிக்கிறார். அதை விட முக்கியம் தன் யூகத்தையோ கருத்தையோ, தரவுகளைக் கூட, வாசகன் எப்படி புரிந்துக் கொள்ளக் கூடாதென்று தெளிவாகச் சொல்கிறார். உதாரணத்துக்கு இரட்டமலை சீனிவாசன் தரப்புக்கும் அயோத்தி தாசர தரப்புக்குமான பெயர் குறிப்பிடாத வாக்குவாதங்களை தெளிவாக ஒவ்வொரு தரப்பின் மனச் சாய்வுகளை அடையாளப் படுத்தி வாசகன் தன்னையறியாமல் ஏதேனும் ஒரு பக்கம் சாய்வதை தடுக்கிறார். 

"வரலாறு என்றால் என்ன, தரவுகள் என்பவை எவை, வரலாற்றை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறோம், எவ்வாறு எழுதுகிறோம் என்பதான கேள்விகளினூடாகவும் விவாதித்தப் படியே நகர்ந்துள்ளது. வரலாறு தரவுகள் சார்ந்தது மட்டுமல்ல, தரவுகளை எவ்வாறு பொருள்கொள்கிறோம் என்பதையும் சார்ந்தது தான்"


எண்பதுகளின் தமிழ் சினிமா - ஓரு குறிப்பு

-----------------------------------------
தமிழர்களுக்கு சினிமா உயிர்மூச்சு. அரை நூற்றாண்டுக்கு மேலாக திரைத்துறையோடு சம்பந்தப்பட்டவர்களே ஆளும் மாநிலம். தற்போதய முதல்வர் உட்பட. சினிமா எங்கோ வானில் இருந்தா விழுகிறது? சினிமா நம் சமுகத்தை பிரதிபலிக்கிறது. அதே சமயம் நம் சமூகத்தை கட்டமைக்கவும் செய்கிறது. இவ்விரண்டிலும் துலக்கமாக பண்பாட்டு வரலாறு, சாதியம், பெண்கள் குறித்த கட்டமைப்புகள் நிகழ்ந்த சினிமாக்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.“எண்பதுகளின் தமிழ் சினிமா” என்று தலைப்பிட்டாலும் 90-களையும் சேர்த்தே கணக்கில் எடுக்கிறார் ஸ்டாலின். அந்த 90-களின் அடிப்படை எண்பதுகளின் சினிமா என்பதால் அத்தலைப்பு.



ரஜினி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவோடு, தமிழ் நாட்டின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முதல்வர், கொண்டிருந்த எதிர்ப்பையும் ரஜினியின் வெற்றிப் படங்களான ‘மன்னன்’, ‘படையப்பாவையும்’ ஸ்டாலின் தொடர்பு படுத்தி பார்க்கிறார். ரஜினியின் திரைக்கு வெளியான பெண் முதல்வரை எதிர்க்கும் நிலைக்கும் திரையில் தன் சுயமாக நிற்கும் பெண்களை எதிர்க்கும் பிம்பத்துக்கும் தொடர்புண்டு. 


தமிழ் பண்பாட்டு தளத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களான நீலியையும், கண்ணகியையும் ‘மன்னன்’, ‘படையப்பா’, ‘பாட்ஷா’ படங்களின் கதையம்சங்களோடு ஸ்டாலின் விவாதிக்கிறார். காப்பிய கண்ணகி எப்படி ‘பத்தினி’யாக முன்னிறுத்தப்பட்டாள் என்பதை சுட்டி படையப்பாவில் நீலாம்பரி நிராகரிக்கப்பட்டு வேலைக்காரப் பெண்மணி முன்னிறுத்தப்படும் ஒற்றுமையை ஸ்டாலின் சுட்டிக் காட்டுகிறார்.இத்தொகுப்பில் அற்புதமான ஒரு கட்டுரைல் “பொதுமகளும் குலமகளும்: 1990 சினிமாக்களில் நடந்த ஊடாட்டம்”. தமிழ் சினிமாவில் வெகு காலம் நிலவி வந்த தேவதாசி சித்தரிப்பை விவரிக்கிறார். “மூவலூர் ராமாமிர்தத்தின் நாவலின் தலைப்பே கூட தேவதாசி மரபை எதிர்மறையாக குறிப்பிடும் வகையில் ‘தாசிகளின் மோசவலை அல்லது மதிப்பெற்ற மைனர்’ என்றே அழைத்தது. இவ்விடத்தில் முற்போக்கு இயக்கம் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் திமுகவினரின் சினிமாவிலும் இத்தகைய சித்தரிப்பே தொடர்ந்தது. பின்னாளில் ஜெயலலிதாவை வசந்தசேனை என்று மேடைகளில் விளிக்கப்பட்டதும் நடந்தது. 1990-களின் ஆரம்பத்தில் வெளி வந்த கிழக்கு வாசல், தெய்வ வாக்கு, சின்னத்தாயி ஆகியப் படங்களில் பொது மகளிரின் சித்தரிப்பு குடுமபத்தை சிதைப்பவர்கள் என்கிற நிலையில் இருந்து மாறுகிறது.

இன்னொரு கட்டுரையில் “பல்வேறு அம்மன்களும் வழிபாடுகளும் சாதிமாறிக் காதலித்ததால் கொல்லப்பட்டுத் தெய்வமாக்கப்பட்ட பெண்களின் கதைகளாக இருக்கின்றன” என்பதை சுட்டிக் காட்டி திரைப்படங்களில் மரபு கதைகள் எப்படி மாற்றமடைகின்றன என்றும் விளக்குகிறார். ‘துளசி’, தெய்வவாக்கு’, ‘சின்னத்தாய்’ படங்களில் பிரதான கதாபாத்திரங்களை “முன்பிருந்த தெய்வ நிலையோடு விட்டுவிடாமல் அதிலிருந்து மனித நிலைக்கு மாற்றிவிட்டிருக்கிறார்கள். மூன்று இடத்திலும் காதல் தான் மீட்பை நிகழ்த்துகிறது. அது யாரோடு கொண்ட காதல் என்பது முக்கியமானது. அவ்விடத்தில் தெய்வ நிலையிலிருந்து மனித நிலைக்கு கொணருபவர்களாக தலித் கதா பாத்திரங்கள் இருக்கின்றன”.

பாரதிராஜாவின் மண் வாசனை படம் பற்றி ஸ்டாலின் எழுதுகிறார், “நிஜத்தில் அறுத்துக்கட்டும் கலாச்சாரமுடைய ஒரு இனக்குழுவை சித்தரித்த படம். முத்துப் பேச்சி இன்னொருவரை மணம் செய்யாமல் இருப்பதை தமிழ்பண்பாடு என்று உயர்ந்தோர் பண்பாடாக்குகிறார் (பாரதிராஜா). பாலியல் தூய்மையைப் புனிதமாக்குகிறார்.

தேவர் மகன் படத்தின் மிகப் பிரபலமான வசனம், “போங்கடா, போய் புள்ளக் குட்டிங்களை படிக்கை வைங்கடா”. “படித்த அவனை பாரம்பர்யம் என்னவாக்கியது என்பதை அவன் ஏனோ அனுபவமாக்கிக் கொள்ளவில்லை” என்று ஆசிரியர் சுட்டிக் கேட்கிறார்.

தமிழ் சினிமா பற்றி பேசும் போது திரையிசைப் பாடல்கள் பற்றி பேசாமலிருக்க முடியாது. அவ்வகையில் தமிழ் சினிமாவில் வட்டாரப் பாடல்கள் சினிமாவில் ராஜாவும் தேவாவும் எடுத்தாண்டதை ஸ்டாலின் தனிக் கட்டுரையில் சொல்கிறார்.

சினிமா என்பது தமிழருக்கான மிக முக்கியமான பண்பாட்டு அடையாளம். அவ்வடையாளத்தில் மக்களிடையேப் புழங்கும் தொன்மன்ங்கள், சாதியம், பெண்கள் பற்றியப் பார்வைகள், பட்லர்கள் பற்றிய பரிகாசங்கள் எல்லாம் அங்கம் வகிக்கின்றன. ஸ்டாலின் பெண்களின் ஒடுக்குதல் பற்றி அதிகமாக எழுதியது இக்கட்டுரைகளில் தான் என்று நினைக்கிறேன்.சினிமாக்களில் எத்தனையோ சித்தரிப்புகள் மதம், சார்ந்து தான் இருக்கின்றன. ‘நாயகன்’ படத்தில் வரும் படித்த, பயந்த சுபாவம் உள்ள ஐயர் கதாபாத்திரம் முதல் விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் வரும் கிறிஸ்தவர்கள் பற்றிய ஸ்டீரியோடைப், அப்புறம் இஸ்லாமியர் குறித்து வரும் சித்தரிப்புகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.சினிமா பற்றி தொடர்ச்சியாக எழுதும் சிலர் இப்புத்தகம் குறித்து விரிவான விமர்சனம் எழுதினால் இன்னும் நன்று. ஒரு கமல் ரசிகனாக சின்ன வருத்தம் அட்டைப் படத்தில் கமல் இல்லாதது

எழுதாக் கிளவி: ஒரு குறிப்பு.

-----------------------------
“பெயரழிந்த வரலாறு” பண்டைய வரலாறு பற்றி 19,20-ஆம் நூற்றாண்டுகளில் நடந்த விவாதங்களை மையமாக வைத்து வரலாறு என்றால் என்ன? வரலாறு எவ்வாறு உருவாக்கப்படுகிறாது, தரவுகள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றன போன்ற கேள்விகளைக் கேட்டது. “எண்பதுகளின் தமிழ் சினிமா” அதையே பண்பாட்டு தளத்தில் செய்தது. ‘எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள்’ அதே வழியில் சம கால அரசியலை, குறிப்பாக திராவிட இயக்கதையும் தலித் அரசியல் இயக்கத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது.



ஸ்டாலினின் முன்னுரை புத்தகத்தின் நோக்கத்தைச் சொல்கிறது, “தலித் வரலாற்றை எதிர்மறையாக அமையும் விமர்சன வரலாறாகவே சுருக்கிவிடக் கூடிய அபாயத்திலிருந்து விலகி தனக்கான சுயமான தரவுகளிலிருந்து தலித் வரலாற்றியல் தன்னை இங்கு கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தலித் வரலாற்றாஇ விரிந்த தளத்தில் விவாதிப்பதே கூட இன்றைய திராவிட இயக்க விடுபடல்களுக்கான பதிலாக இருக்க முடியும்”.
“பரந்த சமூக அனுபவங்களிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ‘உண்மை’களின் பதிவே வரலாறு என்று ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரலாற்றிற்கு வெளியே நிறுத்தப்பட்ட அனுபவங்களைத் திரும்ப அழைத்து வரௌவதன் மூலம் நிலவி வரும் வரலாற்றை எதிர்க் கொள்ள விரும்புகின்றன இக்கட்டுரைகள்” என்று வாசக முன்னுரையில் சொல்கிறார் ஸ்டாலின்.

“வரலாற்றிற்கு வெளியே நிறுத்தப்பட்ட அனுபவங்களை” என்றவுடன் பல சராசரி வாசகர்கள் தவறாக ஸ்டாலின் ஏதோ அடிப்படைகளே அற்ற கற்பனைக் கட்டுக் கதைகளை வரலாறு என்று ஜோடித்து விடுகிறார் என்று நினைக்கிறார்கள். இது மிகத் தவறு. 

ரெட்டியூர் பாண்டியனின் கதை ஸ்டாலினின் வரலாற்று முறைமைக்கு நல்ல எடுத்துக் காட்டு. காட்டு மன்னார்குடிப் பேருந்து நிலையத்தின் வாயிலில் ஒரு மார்பளவு சிலை ‘ரெட்டியூர் பாண்டியன்’ என்கிற பெயர் பொறிக்கப்பட்டு நிற்கிறது. அச்சிலை பிரபலமான யாருடையச் சிலையும் அல்ல. ஸ்டாலின் அச்சிலையின் கதையை விவரிக்கிறார். (இக்கட்டுரை தினமலரில் வெளி வந்திருக்கிறது https://m.dinamalar.com/weeklydetail.php?id=15028)

என் போன்ற பலருக்கும் தெரியாத, இன்னும் அநேக பேருக்கும், ஒரு செய்தி தமிழ் நாட்டில் சிறிதும் பெரிதுமாக பல இடங்களில் தலித்துகள் ‘இழி தொழில் செய்ய மறுப்பு’ போராட்டங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். இது வரை நான் படித்த எந்த வரலாற்று நூலும் அது பற்றி பேசியதில்லை. எண்பதுகளில் கூட தலித் தலைவர் எல். இளைய பெருமாள் அத்தகையப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். “செத்த மாட்டெடுக்க மறுப்பு, பிணக்குழி தோண்ட மறுப்பு” போன்ற போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன.1962-ஆம் ஆண்டு முதல் காட்டுமன்னார்குடி வட்டாரத்தில் யாரும் பறையடிக்கப் போகக் கூடாது, உள்ளூரில் பறை அடிக்கப்படவும் கூடாதென்று என்று தீர்மானம் இயற்றப்பட்டது. 1985 ஆகஸ்டு மாதம் தீ மிதி விழாவுக்கு பறையடிக்க யாரும் வராததால் வெளியூரில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட ஊர் கலவர பூமியானது. கலவர்த்தை அடக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்த பாண்டியன் என்பவர் கொல்லப்பட்டார். போலீஸுக்கோ, எதிர் தரப்புக்கோ எந்த பாதகமுமில்லை. அப்படி இறந்த பாண்டியனின் நினைவாக பாடல் இயற்றப்பட்டு இன்றளவும் ஒப்பாரியாகவும், வயற்காட்டில் நடவுப் பாட்டாகவும் பாடப்படுகிறது. அக்கட்டுரையில் இளையபெருமாளின் போராட்டங்கள் குறித்து சொன்னாலும் ஸ்டாலின் தெளிவாக அப்போராட்டங்களால் பாண்டியன் உந்த பட்டாரா என்பதற்கு ஆதாரம் இல்லை என்கிறார். மேலும் அந்த சிலை பாண்டியனின் உருவமாக கூட இருக்காது, அது ஒரு நினைவுச் சின்னம் தான் என்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலினை வரலாற்றாய்வாளராக நான் வியப்பது இங்கு தான். ஒரு சிலை இருக்கிறது, அதற்கென்று மக்களிடையே ஒரு கதை இருக்கிறது ஆனால் அது வெறும் கதையாக இருந்தால் அதற்கு மதிப்பிராது. அதையொட்டி நாம் வரலாறு என்று புரிந்துக் கொள்ளும் தரவுகளுடைய நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தி வரலாற்றின் இடை வெளியை நிரப்புகிறார். அவர் குறிப்பிடும் பாடல் இன்றும் புழக்கத்தில் இருப்பது ஒரு வகை தரவு தான். இக்கட்டுரை வாயிலாக ஒரு வாசகன் அறிந்துக் கொள்ளக் கூடியச் செய்திகள் அநேகம். சரி, பாண்டியன் வரலாற்றையே ஒதுக்கி விட்டு பார்ப்போமே. இளையபெருமாள் நடத்திய போராட்டங்கள் பொய் அல்லவே!! அப்போராட்டங்கள் பற்றி பொதுவில் பலரும் அறியாததே நமக்கு செய்திகளும் வரலாறும் எப்படி கட்டமைக்கப்படுகிறதென்று சொல்கிறதே. அதுவும் 1980-களில் இப்படிப்பட்ட போராட்டங்களின் தேவைகள் சமூகத்தைப் பற்றி ஒரு சித்திரத்தையும், இங்கு தமிழகத்தில் சமூக நீதியின் நிலைப் பற்றிய புரிதலையும் அளிக்கிறதே. 

அரிஜன சேவா சங்க செயல்பாட்டாளர் ஆனந்ததீர்த்தரின் கதையை ஸ்டாலின் ஒரு துப்பறிவாளனின் ஊக்கத்தோடு தேடித் தேடி தொகுத்து, “தலித்துகள் மத்தியில் காந்தி தொண்டர்கள் செயற்பட்டிருக்கலாம் என்று யோசித்துப் பார்க்கக் கூட யாருமில்லை. அப்படியே இருந்தார்கள் என்று அறியப்பட்டாலும் அவற்றை உள் நோக்கமாக ‘கட்டுடைத்து’விட்டு, அது பற்றி தலித்துகளின் நினைவுகள் எவை என்று ஆராயமலேயே விட்டிருக்கும் அரசியல் வரலாறுகளே இங்குண்டு”. இதை பேஸ்புக் விவாதத்திலேயே கண்டிருக்கிறேன். ஸ்டாலின் சொல்வது நிஜம். 

“இந்தி எதிர்ப்புப் போராட்டம்: தலித் தலைமையும் தமிழ் அடையாளமும்” கட்டுரையும், “டி.எம். நாயர் கலந்துகொண்ட ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டம்” கட்டுரையும் முக்கியமானவை. ஸ்டாலின் எவ்வித சார்பும் இன்று எழுதுபவர் என்பதற்கு சான்று மீனாம்பாள் குறித்து திராவிட இயக்க சார்புடைய நம்பி ஆரூரனின் மேற்கோள்களையும் நேர்மையாகவே கொடுத்திருப்பது. ஓரிடத்தில் இந்தி எந்திர்ப்பு போராட்டத்தின் போது ராஜாஜி வீட்டின் முன் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை பெரியார் நிறுத்தியதையும் ஸ்டாலின் பதிவுச் செய்கிறார். 

ஏன் ஸ்டாலினின் எழுத்து இன்று முக்கியமானது? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்கள் என்று பலரும் சொல்வது, ‘தாளமுத்து-நடராசன்’ என்கிற இருவரை. இருவரில் தலித் இளைஞரான நடராசனே முதல் உயிர் நீத்தவர். அப்புறம் ஏன் வரிசை மாறியது? தலித் சமூகத்துக்கும் பொதுப் பிரச்சனையான இந்தி எதிர்ப்புக்கும் எப்படி இணைப்பு ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? நீதிக் கட்சிக்கு ஆரம்ப காலத்தில் தலித் சமூகமும் எம்.சி.ராஜாவும் எப்படி ஆதரவளித்தார்கள்? நீதிக் கட்சி, காங்கிரசுடனான தலித் சமூகத்தின் உறவுகள் எப்படி இருந்தன? ஏன் டி.எம். நாயரை எம்.சி.ராஜாவும் அயோத்தி தாசரும் உயர்த்திப் பேசினார்கள்? என்று பல கேள்விகளுக்கான விடைகள் ஸ்டாலினின் புத்தகம் மூலம் “சான்றுகளோடு” கிடைக்கின்றன.நீதிக் கட்சி, காங்கிரசுடனான தலித் அரசியலின் உறவைப் பற்றி சொல்லும் போது ஸ்டாலின் அநேகமாக நிகழ் காலத்தையும் மனத்தில் வைத்து எழுதுகிறார், “தலித்துகளின் அரசியல் உறவு நிலையற்றதாக மாறிக் கொண்டிருப்பதற்குத் தலித்துகள் மட்டுமே காரணமல்ல”.


மூன்று தகவல்கள் இங்கு குறிப்பிடக் கூடியன.

“சிதம்பரம் தாலுகா போர்டுக்கு ஆதி திராவிடரை ஏன் நியமிக்கவில்லை என்று எம்.சி.ராஜா கேட்ட போது, ‘தாலுகா போர்டு அலுவலகம் சாதி இந்து ஒருவரின் கட்டடத்தில் இயங்கி வருவதால், அக்கட்டத்தில் ஆதி திராவிடர் நுழௌவதை விரும்பாததா; பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை’ என்றார் அமைச்சர்”

“இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை “கொச்சைப்படுத்த” நினைத்த அரசு அப்போராட்டத்தில் கலந்துக் கொண்ட அநேக தலித்துகளைச் சுட்டிக் காட்டி, “அற்பக் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களென்றும் சிறையில் ஒழுங்காகச் சோறு கிடைக்குமென்பதாலும் பல அரிஜனங்கள் கைதாகியிருந்ததாக ராஜாஜி மட்டுமல்லாமல் பிராமணரல்லாத தமிழரான டாக்டர் சுப்பராயனும் சட்ட மன்றத்திலேயே கூறினார்.”

“1920 முதல் 1927 வரை நீதிக் கட்சி ஏழு முறை அமைச்சரவைகளை அமைத்தும் ஒரு முறை கூட அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளைத் தலித்துகளுக்கு வழங்கியதில்லை. 1929-ஆம் ஆண்டில் தான் ஓர் இக்கட்டான சூழலில் எம்.சி.ராஜாவை சட்டமன்ற துணைத் தலைவராக்கியது.”

Eugene Irschick-இன் “Politics and Social Conflict in South India: The Non-Brahman Movement and Tamil Separatism 1916-1929” மிக அற்புதமான புத்தகம். தலித் சமூகத்துக்கும் நீதிக் கட்சிக்குமிடையே நடந்த உரசல்களை 1969-இலேயே இர்ஷ்சிக் எழுதியிருக்கிறார். ஆனால் அப்புத்தகத்தில் எம்.சி.ராஜாவுக்கு கிடைத்த இடம் ஒன்றரை பக்கம். 1969-இல் ஓர் அமெரிக்க ஆய்வாளர் இவ்வளவு தெளிவாக எழுதியிருப்பதே ஆச்சர்யம். இர்ஷ்சிக்கைத் தாண்டி செல்ல நமக்கு முரசொலி மாறன், நெடுஞ்செழியன் எழுதிய வரலாறுகள் போதாது அந்த இடத்தில் நம் தேவையை இன்று பூர்த்திச் செய்வது ஸ்டாலினின் புத்தகம்.


ஜெயமோகனும் தலித் ஆளுமைகளும்:

ஸ்டாலின் ராஜாங்கத்தின் “பெயரழிந்த வரலாறு: அயோத்திதாசரும் அவர் கால ஆளுமைகளும்” படித்துக் கொண்டிருக்கிறேன். ராஜ் கௌதமன் பற்றிய ஒரு கட்டுரையை படித்தப் போது தோன்றியது, தலித் தரப்பில் தான் எவ்வளவு அறிவுத் தள கருத்தியல் முன்னெடுப்புகள் நிகழ்கின்றன என. ஸ்டாலின் அக்கட்டுரை ராஜ் கௌதமனின் “தலித்திய அரசியல்” நூல் பற்றியது. அந்நூலே பேராசிரியர் பெ. தங்கராசுவின் “சாதி ஒழிப்பின் வரலாற்று படிப்பினை” என்கிற நூலுக்கு எதிர் வினை.
எனக்கு தங்கராசு யாரென்று தெரியாது. ராஜ் கௌதமனை ஜெயமோகன் வாயிலாக தெரியும். தலித் வட்டாரத்துக்கு வெளியே பலருக்கு எம்.சி. ராஜா, ரெட்டமலை சீனிவாசன், அயோத்தி தாசர் ஆகியோரை ஜெயமோகன் வாயிலாக அறிந்தவர்கள் அதிகம் என்றால் மிகையில்லை. ஸ்டாலினையும் அப்படித் தான் அறிந்தேன் என்று நினைக்கிறேன். ஸ்டாலின் பற்றியும் ஜெயமோகன் தொடர்ந்து சுட்டிக் காட்டியிருக்கிறார். அம்பேத்கரை பற்றியும் அநேகம் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். தர்மராஜின் நூல் அறிமுக விழாவில் முக்கிய உரை ஜெயமோகனுடையது.



ஜெயமோகன் அளவுக்கு தலித் ஆளுமைகள் பற்றி மற்றவர்கள் யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஸ்டாலினின் “பெயரழிந்த வரலாறு” தமிழில் வெளிவந்த வரலாற்றெழுத்தில் மிக முக்கியமானதும், அபாரமான நுட்பத்தோடும் எழுதப் பட்டது. நாளை சிறு குறிப்பாவது எழுதுகிறேன். அந்நூலை வைத்து ஒரு அரை நாள் விவாத மேடையே நடத்தலாம்.
அதேப் போல் தலித் வரலாறுகளை பதிப்பித்ததில் காலச்சுவடின் பங்களிப்பும் மெச்சக் கூடியது.

No comments: