Saturday, March 5, 2022

காந்தி கொலையின் தனித்துவமும் கோட்ஸேவை ஆதரிப்பதன் அபாயமும்:

பா.ஜ.க சார்பில் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போடியிட்டு வெற்றி பெற்ற உமா ஆனந்த் சர்ச்சையான கருத்துகள் பேசி பிரபலமானவர். அவர் பேசியதிலேயே மிக அதிர்ச்சித் தரத் தக்கது கோட்ஸே காந்தியைக் கொன்றது சரி என்கிற காணொளி. பா.ஜ.க.வினர் மத்தியில் இன்று கோட்ஸே மிகப் பிரபலம். உமா ஆனந்தின் தேர்தல் வெற்றி சில விவாதங்களை பேஸ்புக்கில் கிளப்பியது. அவ்விவாதத்தின் தொடர்பாக காந்திக் கொலையின் தனித்துவமும் கோட்ஸே ஆதரவின் அபாயமும் பற்றி எழுதினேன். அப்பதிவே கீழுள்ளது. இந்தியாவில் நடந்த மூன்று முக்கியமான அரசியல் கொலைகள் முறையே, காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி (குழப்பம் வராமல் இருக்க இனி காந்தி, இந்திரா, ராஜீவ் என்று குறிப்பிடுகிறேன்). இந்திரா, ராஜீவ் கொலைகளை முதலில் பார்ப்போம். இது சுருக்கமான பேஸ்புக் பதிவு ஆதலால் ரொம்பவும் ரெபரன்ஸ் எல்லாம் இருக்காது. சில புள்ளிகளை தொட்டுச் செல்கிறேன்.

இந்திரா, ராஜீவ் கொலைகளில் கொஞ்சமேனும் பஸ்மாசுரன் கதை உண்டு. இந்திரா பஞ்சாப்பில் அகாலி தளத்துக்கு தொல்லைக் கொடுக்க பிந்த்ரன்வாலேவை வளர்த்தார் (சஞ்சய் காந்தியும் ஜெயில் சிங்கும் இதில் ஆற்றிய பங்கு குறித்து குல்தீப் நய்யர் இந்தியா டுடேவில் எழுதிய கட்டுரை இது). கடைசியில் அதுவே இந்திரா கொலைக்கு வித்தானது. இந்திரா கொலையில் கவனிக்கப்பட வேண்டியது, கொன்றவர்கள் இந்திரா தங்கள் மதத்தின் அதி புனிதமான பொற்கோவில் மீது ராணுவ தாக்குதல் ஏவினார் என்கிற சினம். இந்திராவின் கொலை தங்கள் மதத்தின் புனிதத்தின் மீது கை வைத்ததற்கு பழி வாங்கல் என்றே கொலைகாரர்கள் கருதினார்கள். இந்திரா வேறு மதத்துக்கு காவலாக நிற்கிறார் என்பதற்காகக் கொல்லவில்லை.
அடுத்தது ராஜீவ் கொலை. இதில் திமுகவை மட்டும் புலி ஆதரவு கட்சியென்று சித்தரிப்பது தவறு. வரலாறு மறந்த செயல். இலங்கைக்கு குடைச்சல் கொடுக்க இந்திரா ஆட்சியில் பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு (போராட்டக்குழுக்களுக்கு) இந்தியாவே பயிற்சி அளித்தது. கறுப்பு ஜூலை தமிழர் இனப் படுகொலை தமிழகத்தை உலுக்கியது. அப்போதைய எதிர்கட்சியான திமுக நியாயமாகவும், அரசியலாகவும் அப்பிரச்சனையை தனதாக்கியது. பதிலடியாக எம்ஜிஆரும், அதிமுகவும் கூட புலிகளுக்கு ஆதரவு நிலை எடுத்தார்கள்.
பிரபாகரன் மு.க.வை புறக்கணித்து எம்.ஜி.ஆரிடம் நெருக்கமும் பாராட்டினார். ஆக, என்னமோ திமுக மட்டுமே ஆயுதக்குழுக்களோடு உறவாடியது என்கிற பிம்பம் தவறு. ராஜிவ் கொலை வரை தமிழகத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட எல்லா குழுவுக்கும் தார்மீக ஆதரவு பரவலாகவே இருந்தது. ஆயுத குழுக்களிடையே பிரபாகரன் முதன்மையானதும் அவர் மீது ஆதரவு குவிந்தது.
ராஜீவ் கொலைக்கான பின்னணி அவர் இலங்கையோடு செய்த உடன்படிக்கையும் அதற்கு பிரபாகரனை கையெழுத்திட அவரது அரசின் ஆலோசகர்கள் செய்த எதேச்சாதிகாரமும். அப்புறம் இந்திய அமைதிப்படை என்று ஒரு மிகச்சிக்கலான கதை இருக்கிறது. ராஜீவ் அடுத்த பிரதமரானால் தனக்கு இடையூறு என்று நினைத்த பிரபாகரன் கொடூரமான கொலையை நிகழ்த்தினார். ஒரே இரவில் தமிழ்நாட்டின் பெரும் ஆதரவை இழந்தார். நிச்சயம் அதற்குப் பின்னும் பிரபாகரனை ஆதரித்தவருண்டு. ஆனால் அவர்களும் அவருக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்பந்தமில்லை என்கிற சால்ஜாப்புகள் சொல்லித் தான் ஆதரித்தனர்.
ராஜீவின் கொலையை ஆதரித்தோ அது சரி என்றோ திமுக தலைமை பேசியதில்லை. அந்த கொலையில் திமுகவிற்கு தொடர்பிருக்கலாம் என்று கருத்து நிலவியதே 1991 தேர்தலில் திமுகவின் வரலாறு காணாத தோல்விக்கு காரணமானது. தேர்தல் தோல்விக்குப் பின் கருணாநிதியே கைது செய்யப்படக் கூடும் என்ற சூழல் நிலவியது. அப்புறம் புலிகளின் உதவியோடு வைகோ திமுக தலைமையை கைப்பற்ற திட்டம் என்று உண்மையிலேயே மு.க நம்பினார் (வாசந்தி இது குறித்து எழுதியிருக்கிறார்).
2009-இல் கருணாநிதி செல்வா கொல்லப்பட்ட போது இரங்கற்பா எழுதினார். அதுவும் ஏனென்றால் செல்வா எல்.டி.டி.ஈ.-இன் ஆயுதம் தாங்காத செயல்பாட்டாளர் என்ற காரணத்தினால். அப்போது போரில் எல்.டி.டி.ஈ அடி வாங்க ஆரம்பித்த போது மீண்டும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றே பார்க்கப்பட்டது. எல்.டி.டி.ஈ-ஐ பிற் காலத்தில் மு.க விமர்சிக்க போய் தமிழர் விரோதி என்றெல்லாம் தூற்றப்பட்டதும் நடந்தது.
இன்றும் அந்த எழுவர் விடுதலையில் அதிகம் பேசப்படுவது பேரறிவாளன் தான். அதுவும் ஏனென்றால் விசாரணை செய்த காவல் துறை உயர் அதிகாரிகளே பேட்டிகளிலும், புத்தகங்களிலும் அவர் குற்றமற்றவர் என்று பேச ஆரம்பித்தது தான். மேலும் நேரடி குற்றவாளிகள் கொல்லப்பட்ட பின் கொலையில் நேரடி சம்பந்தமில்லாதவர்கள் 30 வருடமாக சிறையில் இருக்கிறார்கள் என்பதை மக்கள் அநீதியாக பார்க்கிறார்கள். இதெல்லாம் கட்சி பாகுபாடில்லாமலேத் தான்.
உண்மையில் திமுக அந்த எழுவர் விடுதலைக்கு எதிராக செயல்பட்டதென்று ஜெயலலிதாவே குற்றம் சாட்டினார். ராஜீவின் கொலைக்கும் அதிமுக தேர்தல் வெற்றிக்கும் சம்பந்தமில்லை என்றும் சோனியா பற்றியும் காட்டமாக பேசியதெல்லாம் ஜெயலலிதா தான். ஆனால் இன்று கேள்விகள் ஏன் காங்கிரஸ் திமுகவோடு கூட்டு சேர்கிறதென்று. என்ன நியாயம் இது? ராஜீவ் கொலைக்கும் காரணம் அவரால் தங்களுக்கு பாதகம் என்ற எண்ணம் தான். ராஜீவ் இந்து விரோதி என்று கருதியா பிரபாகரன் கொன்றார்? இல்லையே.
சீமான் கட்சியில் பிரபாகரனை ஹீரோவாக பார்க்கிறார்களே, ராஜீவ் கொலையை நியாயப்படுத்துகிறார்களே என்று கேட்கப்படுகிறது. சீமான் கட்சி எத்தனை கவுன்சிலர், எம்.எல்.ஏ சீட்டுகளில் ஜெயித்தது? பூஜ்யம் தானே? சீமானை மட்டுமல்ல அவர் கட்சி ஆளையும் கைது செய்தது திமுக தானே?
இப்போது காந்தி கொலைக்கு வருவோம். காந்தியால் இந்துக்களுக்கோ, கோட்ஸேவுக்கோ என்ன பாதகம்? ஒன்றுமே இல்லை. இஸ்லாமியரை காந்தி பாதுகாக்கிறார், பாகிஸ்தானுக்கு சேர வேண்டிய பணத்தை கேட்கிறார் என்று தான் கோட்ஸே கொல்ல முடிவெடுக்கிறார். அதாவது காந்தி இல்லாதிருந்தால் இஸ்லாமியரை ஒரு கை பார்த்திருக்கலாம் என்பது தான் காரணம். இஸ்லாமியருக்கு எதிராக வன்முறை நிகழ்த்துவதற்கு காந்தி என்கிற ஒரு சீன பெருஞ்சுவரை கடந்தால் தான் முடியும் என்பதாலேயே தான் காந்தியைக் கொல்வது கோட்ஸேவுக்கு தேவையானது.
காந்தி மீதும், நேரு மீதும் இன்று அமிலம் உமிழும் பாஜகவினரும், அமிலம் உமிழவில்லையென்றாலும் ஏதோ ஒரு வகையில் அந்த இருவரும் இந்துக்களை விட இஸ்லாமியரிடம் பரிவு காட்டினார்கள் என்று எண்ணும் பாஜக வாக்காளருக்கும் அந்த இருவரிடமும் ஒரேயொரு பிரச்சனை தான், அவர்கள் இருவரும் இஸ்லாமியரை பாதுகாத்தார்கள், இஸ்லமியருக்கு கூடுதலாக இடம் கொடுத்தார்கள் என்பதே. நேருவிய பொருளாதாரக் கொள்கை என்றெல்லாம் வடை சுடும் பாஜக ஆதரவாளர்களை கொஞ்சம் சுரண்டினால் “இந்துக்களுக்கு ஆபத்து” என்கிற காரணம் பல் இளிக்கும்.
கோட்ஸேவுக்கு ஆதரவாக நிறைய பா.ஜ.கவினர் பேசியிருக்கிறார்கள். இது வெறும் கோட்ஸே ஆதரவல்ல. இஸ்லாமியர், கிறிஸ்தவர் மீதான ஆழ்ந்த வன்மமும் இந்தியாவில் மதச் சார்பின்மையின் பிரதான அடையாளமான காந்திக்கு எதிரான காழ்ப்பும்.
மோடி நியூ யார்க் டைம்ஸில் காந்தியைப் புகழ்ந்து எழுதினாரே அப்படியெனில் கோட்ஸே ஆதரவு பாஜகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடல்ல என்று வாதிடப்படுகிறது. இது கேலிக் கூத்து. பாஜக என்ன தனது தேர்தல் அறிக்கையில் கோட்ஸே ஆதரவு என்றா பேசும்? அந்தளவு இன்னும் நிலமை மோசமாகிவிட வில்லை. ஆனால் அதே மோடியின், அதாவது கட்சியை தன் கை விரலில் வைத்திருப்பவரின், கட்சியில் தான் பிரக்யா தாகூர் போன்ற ஒருவர் எம்.பி. பிரக்யா, காந்தியின் உருவ பொம்மையை சுட்டு கொலையை “re-enact” செய்து மகிழ்ந்தவர். இப்படிப்பட்ட ஒருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே விலக்கி இருக்க வேண்டும். அது தான் காந்தியை உண்மையிலேயே மோடி மதித்திருந்தால் செய்திருப்பார். நியூ யார்க் டைம்ஸுக்கு யார் வேண்டுமானாலும் கட்டுரை எழுதலாம். இஸ்லாமியரை கடுமையாகப் பேசினார் என்பதற்காகவே சர்தார் படேலை கூப்பிட்டு கண்டித்தவர் காந்தி.
உமா ஆனந்துக்கு சீட்டே கொடுக்கப்பட்டிருக்க கூடாது. மேலும் கோட்ஸே பற்றிய அவர் பேச்சுக்கும் அவரை விலக்கியிருந்திருக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் அப்பட்டமான சாதியவாதம் பேசியிருக்கிறார்.
வேறு எந்த கட்சியிலும் இல்லாத கோட்ஸே ஆதரவு ஏன் பாஜக கட்சியில் இருக்கிறது? இது தற்செயலே அல்ல என்று பாஜக அரசியலை அறிந்தவர்கள் சொல்வார்கள். பாஜகவின் அடிமட்ட வாக்காளர் மத்தியில் பரவியிருக்கும் கோட்ஸே அதரவுக்கும் பாஜகவின் சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலுக்கும் பிரிக்க முடியாத தொடர்புண்டு. சரி காந்தியையும், நேருவையும் நேசிப்பவர்கள் இருக்கிறார்களே, கோட்ஸேவை கண்டிப்பவர்களும் பாஜக வாக்காளர்களில் இருக்கிறார்களே? நுட்பமாக பார்த்தால் அவர்கள் காந்தியையும், நேருவையும் அசடர்கள், இந்துக்களின் மன நிலையைப் புரிந்துக் கொள்ளாதவர்கள், நல் உள்ளம் கொண்ட அறிவிலிகள், ஒட்டகம் நுழைய மதியிழந்து இடம் கொடுத்தவர்கள் என்று தான் பேசுவார்கள் மேலும் கோட்ஸேவின் கொலைச் செயலை ஏற்காவிட்டாலும் கோட்ஸேவின் மன உளைச்சலில் நியாயமில்லையா என்பார்கள்.
ஒரு நேருவிய இந்துத்துவர் (இந்த இந்துத்துவ வகையறாக்கள் அலாதி) காந்தி கொலை வேறு, ராஜீவ் கொலை வேறு என்று ஜிலேபி சுற்றுவார்கள் என்று நக்கல் அடித்தார். ஆமாம் மேலே சொன்ன காரணங்களுக்காக காந்தியின் கொலையும் தனித்துவம், கோட்ஸே ஆதரவும் தனித்துவமான ஆபத்து தான்.

No comments: