Friday, October 14, 2022

காந்தியின் தீண்டாமை யாத்திரையும் பெண்களும் - சித்ரா பாலசுப்ரமணியன்

1933 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய காந்தியின் தீண்டாமைக்கு எதிரான யாத்திரை 1934 ஆகஸ்டு இரண்டாம் தேதி வரையான ஒன்பது மாதங்கள் நீடித்தது. அரசியல் செயல்பாடுகள் இல்லாமல் முழுக்க முழுக்கத் தீண்டாமைக்கு எதிரான உரையாடலாகத் தமது முழுப் பயணத்தையும் காந்தி அமைத்துக்கொண்டார்.

விடுதலைக்கான போராட்டங்களிலும் சமூக விடுதலைக்கான போராட்டங்களிலும் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது; இதைத் தென்னாப்பிரிக்காவிலேயே உணர்ந்திருந்தவர் காந்தி. தம் சத்தியாகிரகச் சோதனைகளுக்கான உந்துதல்களை கஸ்தூர்பாவிடமிருந்து பெற்றிருப்பதாக காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.தண்டி யாத்திரையில் பெண்கள் இடம்பெறவில்லை. ஆசிரமத்தில் பயிற்சிபெற்ற ஆண்களும் வெளியாட்கள் சிலருமே அதில் இடம்பிடித்திருந்தனர். ஆசிரமப் பெண்கள் பலவாறு கோரிக்கை வைத்தும், “நீங்கள் போராடும் நேரம் வரும்போது களத்திற்கு வாருங்கள்,” என்று காந்தி குறிப்பிட்டார். தண்டி யாத்திரை முடிவிலும் எதிர்பார்த்தபடி காந்தி கைது செய்யப்படவில்லை. தண்டியைச் சுற்றியிருந்த கிராமங்களுக்குச் சென்று உரைகளைத் தொடர்ந்து நிகழ்த்துகிறார் காந்தி. இதில் பெருமளவு பங்கேற்றவர்கள் பெண்கள்

1930 ஏப்ரலில் அப்ரமா, மாட்வாட் பகுதிகளில் காந்தி அழைப்பு விடுத்த கூட்டங்களில் பங்குகொண்டவர்களில் சரிபாதிக்கும் அதிகமானோர் பெண்கள். அடுத்து விராஜ்பூரில் பெண்களுக்கானப் பிரத்யேகக் கூட்டத்திற்கு காந்தி அழைப்பு விடுக்கிறார். விராஜ்பூருக்குப் பரோடா வழியாக வரும் வழி அடைக்கப்படுகிறது. ஏறக்குறைய இருபது மைல் சுற்றிவர வேண்டும். கூட்டம் நடப்பதே கேள்விக்குறியாகிறது. ஆனால் பெருந்திரளாகப் பெண்கள் திரண்டு வருகிறார்கள். காந்தியின் பார்வையில் அது வெற்றிக் கூட்டம் என தாமஸ் வெப்பர் எழுதுகிறார். உப்புக் காய்ச்சுதலோடு கள்ளுக் கடை மறியல், அந்நியத் துணி புறக்கணிப்பு என்றும் பலப்பல வகைகளில் பெண்கள் களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள். சிறை செல்வது, சாகசப் பயணம் செல்வதைப் போன்ற உத்வேகத்தைத் தந்த காலகட்டம். கல்வியறிவற்ற, தம் முக்காடுகளை விலக்காத, தம் தெருக்களைக்கூடத் தாண்டியிராத பெண்கள் கூட்டம் கூட்டமாகக் கடற்கரைகளிலும் சாலைகளிலும் போராடிய காட்சி தேசம் இதுவரை கண்டிராதது. சிறை சென்ற பெண்களின் அனுபவங்களும் பதிவாகியுள்ளன. காந்தியரான அம்புஜம்மாள், தம் சில காலச் சிறை அனுபவத்தைத் தன் சுயசரிதையானநான் கண்ட பாரதம்புத்தகத்தில் விவரித்திருக்கிறார். கோவை அய்யாமுத்து தன் மனைவி கோவிந்தம்மாளைச் சிறையில் சென்று பார்த்த காட்சியை விவரித்திருப்பார்.

1931இன் பிற்பகுதிவரை நீடித்த இத்தகைய போராட்டங்களுக்குப்பின் காந்தி மீண்டும் 1933 இல் வீதிகளுக்கு வருகிறார். இம்முறை புதிய செய்தி, புதுவகைப் போராட்டம். தீண்டாமை ஒழிப்பை  காந்தி தென்னாப்பிரிக்காவில் செயல்படுத்தத் தொடங்கியிருந்தார். அங்கு அவரது ஃபீனிக்ஸ், டால்ஸ்டாய் பண்ணைகள் இரண்டிலும் தீண்டாமைக்கு இடமில்லை. இந்தியா திரும்பியபின் தொடங்கிய கோச்ரப் ஆசிரமத்திலும் ஒடுக்கப்பட்ட தம்பதியினரைச் சேர்ப்பதால் பிரச்சினை மூண்டு ஆசிரமத்துக்கான நிதி தடைப்படும் என்ற நிலையிலும் காந்தி தீண்டாமைக்கு எதிரான தம் நிலையிலிருந்து பின்வாங்கவில்லை. அவருடைய சகோதரி தீண்டாமையை ஆதரிப்பவர்; அதனால் ஆசிரமத்திற்கு வரத் தேவையில்லை என்று காந்தி தடுத்துவிடுகிறார். தம் பேச்சு, எழுத்து, செயல்பாடுகளில் காந்தி தீண்டாமைக்கு எதிரானவராக இருந்ததால் நாடு தழுவிய தீண்டாமைக்கு எதிரான மிகப்பெரிய, உரையாடலைக் கட்டியெழுப்பியது இந்த யாத்திரை. 1933, 34 ஆம் ஆண்டுகளில் இது சாத்தியமாகிறது. அதற்கும் சற்றே முன்னர் ஹரிஜன் சேவக் சங் தொடக்கப்பட்டு நாடெங்கும் அதற்குக் கிளைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. காந்தியின் அழைப்புக்கிணங்கப் பல்லாயிரம் சாதி இந்துக்களும் பிராமணர்களும் தீண்டாமை ஒழிப்புப் பணிகளுக்குத் தம்மை அர்ப்பணிக்கிறார்கள்.




காந்தியின் தீண்டாமை யாத்திரை, அவருடைய மற்ற யாத்திரைகள்போல அவ்வளவு விரிவாகப் பேசப்படவில்லை என்றே தோன்றுகிறது. தண்டி யாத்திரை உலகளாவிய கவனத்தைப் பெற்றது. கதருக்காக அவர் நடத்திய யாத்திரை பிரசித்தமானதே. நவகாளி யாத்திரை உணர்வுபூர்வமாகவும் முக்கியத்துவம் பெற்றது. ஆயின், காந்தி நடத்தியவற்றில் உண்மையிலேயே பிரமாண்டமான யாத்திரை தீண்டாமை யாத்திரையே ஆகும். அதன் கால அளவு மட்டுமின்றி, இதில் காந்தி கடந்த தொலைவு, சந்தித்த கோடிக்கணக்கான மனிதர்கள், எந்த தேசியத் தலைவரும் செல்லாத இடங்கள், பொருட்டாகக் கருதாத மனிதர்கள் இன்னும் சொல்லப்போனால் காந்திக்கு மட்டுமே சாத்தியமான பயணம் இது என்று சொல்ல வேண்டும். காந்தியின் தீண்டாமை யாத்திரை குறித்து, அந்தக் காலகட்டத்திலேயே அதிக அளவில் புத்தகங்கள் எழுதப்பட்டன என . ராமசாமி தன்னுடையதமிழ்நாட்டில் காந்திபுத்தகத்தில் குறிப்பிட்டாலும் முக்கியமான படைப்புகளாக இதுவரை எதுவும் கண்ணில் படவில்லை (தெரிந்தவர்கள் கவனப்படுத்துக).

தீண்டாமைப் பயணத்தில் பெண்களின் பங்கு அளப்பரியது.மிகப் பெருவாரியாக காந்தி செல்லும் இடங்கள் அனைத்திலும் பெண்கள் திரண்டிருந்தார்கள்.அது சாலைப் பயணமாயினும் சரி, அகால வேளைகளில் இரயில் நிலையங்களில் வந்திறங்குவதானாலும் சரி, பின்னிரவு நேரப் பொதுக் கூட்டங்களானாலும் சரி, காந்தி வந்திறங்கிய நந்தி தீரமானாலும் சரி, அனைத்து இடங்களிலும் பெண்கள் கூட்டம் அலை மோதியது.

காந்தியின் காலைப் பிரார்த்தனைக்கான நேரம் அதிகாலை நான்குமுதல் நாலேமுக்கால்மணிவரை. இந்தப் பிரார்த்தனைக் கூட்டங்களில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கிறார்கள். அவர்களில் சரிபாதியினர் பெண்கள் என வாசிக்கும்போது   ஆச்சரியத்தை அடக்கமுடியவில்லை. தொலைதூரக் கிராமங்களில் இருந்தெல்லாம் கால்நடையாகவே வந்து இரவில் காந்தி தங்கியிருக்கும் இடங்களின் வெளிப்புறத்திலேயே கண்ணுறங்கி அவர் பேசும் சில வாக்கியங்களைக் கேட்டுப் பின் மீளும் அவர்களின் மனநிலையை எங்ஙனம் விவரிக்க முடியும்?

காந்தி 1933 நவம்பர் மாதம் ஏழாம் தேதி வார்தாவின் அருகில் உள்ள செலு என்ற இடத்திலிருந்து தீண்டாமைக்கு எதிரான தமது பயணத்தைத் தொடங்கினார். அடுத்து ஒன்பது மாதங்கள் நீண்ட அந்தப் பயணம் 1934ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இரண்டாம் தேதி பனாரஸில் பெருமளவு பெண்கள் திரண்டிருந்த, பிரத்யேகமான பெண்கள் கூட்டத்தில் உரையாற்றுவதோடு நிறைவுபெறுகிறது. அதன்பின் காந்தி வார்தா திரும்புகிறார்.

''


இந்தப் பிரத்யேகப் பெண்கள் கூட்டமானது இந்த யாத்திரையில் காந்தி சென்ற மாகாணங்கள் அத்தனையிலும் கூடியது. நகரங்களில் மட்டுமின்றிச் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் கூடப் பெண்களுக்காகக் கூட்டங்கள் நடந்தன; இது தனித்துவமானது. அந்தந்தப் பிரதேசத்தின் ஹரிஜன் சேவக் சங் அமைப்பே இதனை ஒருங்கிணைக்கிறது. எனினும் இதற்காக முன்னணியில் நின்று செயல்பட்ட பெண்கள் எவராகயிருப்பர் என்று அறியக் கூடவில்லை. பல கூட்டங்களில் பெண்கள் தம் குழந்தைகளுடன் கலந்து கொள்கிறார்கள். குழந்தைகளின் அழுகைச் சத்தமும் கூப்பாடும் தள்ளு முள்ளுமாகப் பல கூட்டங்களில் காந்தி யால் உரை யாற்றக்கூட இயலவில்லை. ஆனால் தாம் எது குறித்துப் பேச வந்திருக் கிறோம் என அப்பெண்கள் அறிவார்கள். அது தெரிந்தும் பெரும் எண்ணிக்கையில் பெண்கள் திரண்டது தீண்டாமைக்கு எதிராக அவர்கள் செயல்பட விரும்பியதை எடுத்துக் காட்டியதாக காந்தி பலமுறை குறிப்பிடுகிறார்.

இந்தப் பயணத்தில் காந்தியின் குழுவிலும் பெண்கள் உண்டு. இதன் தலைமை இடம் மீரா பென்னுக்கு.

மீராவின் பங்களிப்பு இதில் அசாத்தியமானது. காந்தியின் பிரத்யேகத் தனிச் செயலராகப் பல்வேறு பணிகளைச் சிறப்பாக ஒருங்கிணைக்கிறார். செல்லும் இடங்களில் எல்லாம் பெண்களிடையே உரையாற்றுகிறார்.



காந்தியின் சார்பாக நிதி வசூல் செய்கிறார். உடன் செல்லும் மற்ற இரு பெண்களில் ஒருவர் காந்தியர் ஜம்னாலால் பஜாஜின் மகளான ஓம். இன்னொரு இளம் பெண் கிஸன். இவர் அச்சமயத்தில் வார்தா ஆசிரமத்தின் பொறுப்பினை மேற்கொண்டிருந்த மராட்டியத்தைச் சேர்ந்த பிரேமாபென் காண்டக்கின் தோழி. சுறுசுறுப்பும் ஆர்வமும் செயல்திறமும் கொண்ட இளம்பெண் என்று காந்தி குறிப்பிடுகிறார். இவர்கள் ஏறக்குறைய களப்பணி அனுபவம் பெறத்தான் காந்தியுடன் செல்கிறார்கள். பிரயாணத்தின் இடையில் அகதா ஹாரிசன், முரியல் லெஸ்டர் (இரண்டாம் வட்ட மேசை மாநாட்டின் போது இலண்டனில் இவரது எளிய ஜாகையில் காந்தி தங்கியிருந்தார்) ஆகியோரும் பங்கெடுக்கின்றனர்.


காந்தியின் கூட்டங்கள் அனைத்திலும் அவருக்கு வரவேற்புரை வாசித்தளிக்கப் படுகிறது. ஒவ்வோர் இடத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வரவேற்புரைகள். அவை பெரும்பாலும் காந்தியை வாழ்த்தியும், தற்போது மேற்கொண்டிருக்கும் செயல் வெற்றியடையவும் வாழ்த்துவதோடு, தாம் தத்தம் பகுதிகளில் தீண்டாமையைக் களைய மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளையும் பட்டியலிடும். பெண்கள் கூட்டங்களிலும் அத்தகைய வரவேற்புரைகள் வாசித்தளிக்கப் பட்டன. ராய்ப்பூரில், தாம்தரி என்ற சிற்றூரில் பெண்கள் கூட்டிய கூட்டம்.

விதவைத் திருமணத்துக்கான ஆதரவு, பெண்கல்வி, நாட்டிற்காக உழைப்பதில் எங்களையும் இணைத்துக்கொள்வதோடு எங்களுக்கான முக்கிய அங்கீகாரம் இவற்றை வழங்கும் உங்களின் வழிகாட்டுதலோடு தீண்டாமை ஒழிப்பில் எங்களால் இயன்றதை முழுமனதோடு செய்வோம்,” என உறுதியளிப்பதாகப் பெண்களின் வரவேற்புரை அமைந்தது. இந்த முறையிலான வரவேற்புரைகள் அநேகம். காந்தி இந்த வரவேற்புரைகளை அங்கங்கேயே ஏலம் விட்டு அந்தச் சிறுதொகையையும் தீண்டாமை எதிர்ப்பு நிதியில் சேர்த்துவிடுவார். நீண்ட பயணத்தில் இவற்றையும் சுமந்து செல்வது கூடுதல் சுமையாகுமல்லவா? இந்த வரவேற்புரைகள் தொகுக்கப்பட்டிருந்தால் அவையும் அக்காலகட்டத்தியச் சமூக ஆவணங்களாக இருந்திருக்கும்.

பெண்கள் பெருந்திரளாகக் கூட்டங்களில் கலந்துகொண்டது, அவர்களுக்கான பிரத்யேகக் கூட்டங்கள் என்ற ஆச்சரியங்களோடு பெருவியப்பைத் தரும் இன்னொன்று, பெண்கள் தம் அணிகலன்களைக் கழற்றி நிதியாக அளித்த விதம் தான். யாத்திரை தொடங்கிய உடனேயே சொக்கமேளா ஹரிஜன் பெண்கள் விடுதி வளாகத்தில் நிகழ்ந்த கூட்டத்தில் காந்தி இப்பணிக்கு உதவுங்கள் என்று கோரிக்கை வைத்தவுடன் பெண்கள் தன்னியல்பாகச் சிறு சிறு நகைகளை வழங்குகின்றனர். இது ஏறக்குறைய இந்த யாத்திரை முழுதும் மட்டுமின்றி காந்தியி்ன் ஆயுள் வரை தொடர்கிறது. சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த தாயரும் காந்தியிடம் நகைகளை வழங்குவதில் முந்திக்கொள்ள நினைக்கிறார்கள். அன்றைய கேரளாவில் கௌமுதி என்ற பெண் கூட்டத்தின் இடையில் காந்தியை சந்திக்கிறார். மேடையேறி வந்து தன் காது, கழுத்து, கைகளில் மாட்டியிருந்த நகைகளை காந்தியிடம் வழங்குகிறார். மகிழ்வோடு பெற்றுக்கொண்ட காந்தி இதற்கான நிபந்தனையையும் நினைவுபடுத்துகிறார். காந்தியைப் பொறுத்தவரை பெண்களுக்கு நகைகள் தேவையற்றவை. அதை நிதியாகப் பெண்கள் வழங்கிவிட்டால், அவ்வாறு வழங்கியபின் மீண்டும் எவ்வித நகைகளையும் அணியக் கூடாது.

கௌமுதி தமக்கு அந்த நிபந்தனை தெரியும் என்றும் இனி வாழ்நாள் முழுக்கத் தாம் நகைகள் அணியப் போவதில்லை என்றும் உறுதியளிக்கிறார். குடகில் காந்தி பயணம் செய்த தருணம்; அங்கு கௌரம்மா என்ற பெண் உண்ணாவிரதம் இருக்கிறார், காந்தி தன் வீடு வந்து தம் நகைகளை நிதியாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமென! காந்தி அங்கு செல்கிறார். அருகில் நிற்கும் அப்பெண்ணின் இளம் கணவரிடம்இதில் உனக்கும் சம்மதம்தானேஎன்றும் வினவுகிறார். அதற்கு அவரோ, “இந்த நகைகள் அவளுக்கு உரிமையானவை, அதை என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் முழு உரிமையும் அவளுடையதே,” எனப் பதிலிறுக்கிறார். நகைகளைப் பெற்றுக் கொண்ட காந்தி நான் இளைஞனாக இருந்தபோது, ஒரு கணவனாக எனக்கு இவ்வளவு தெளிவு இல்லாமல் போனதே என்றுகூறிச் சிரிக்கிறார். உத்கல் பகுதியில் நடைப் பயணமாக யாத்திரை தொடர்கிறது.

அங்கு ஒரு மூதாட்டி காந்தியிடம் தனது நீண்ட காதணியைக் கழற்றித் தருகிறார். கைகளில் அணிந்திருக்கும் வெள்ளிக் காப்புகளைத் தரவும் முன் வருகிறார். ஆனால் அணிந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் காப்புகள் கழற்ற முடியாத நிலையில் இருந்தன. காந்தி சிரித்துக்கொண்டே, “என் நினைவாக உங்களிடமே இருக்கட்டும்,” எனக் கூறிவிடுகிறார். நாக்பூரில் தூய்மைப் பணியாளர் குடியிருப்பு ஒன்றிற்கு காந்தி செல்கிறார். அங்கு அய்யங்கர் எனும் பெண்மணி தன் வாழ்நாள் சேமிப்பு என்று தன் தங்க வளையல்களைச் சுட்டிக்காட்டி, “எம் போன்ற மக்களுக்காக உழைக்கும் உங்கள் பணிக்கு இவற்றை உதவுவதே சிறப்பானது,” எனக்கூறி அவற்றைக் கழற்றித் தருகிறார். காந்தியின் கண்களில் கண்ணீர்த் துளிகள்.

இன்னும் ஓர் அற்புதமான பெண்மணி, ஒரிஸ்ஸாவின் ரமாதேவி சௌத்ரி. ஒரிஸ்ஸாவில் 21 நாட்கள் காந்தி நடைப்பயணமாகவே இந்த யாத்திரையைத் தொடர்ந்தார். சுட்டெரிக்கும் மே மாத வெய்யிலில் நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் ரமாதேவியோடு சில மாணவியரும் கலந்துகொள்கின்றனர். காந்தி தங்கியிருக்கும் இடங்களின் அருகில் உள்ள ஒடுக்கப்பட்டோர் குடியிருப்புகளுக்குச் சென்று இம்மாணவிகள் காந்தியின் வார்த்தைகளைப் பேசுகிறார்கள். அந்த மக்கள் குறித்த தகவல்களை காந்தியிடம் சேர்க்கின்றனர். ஏறக்குறைய ஒரிஸ்ஸா பயணம் முழுக்க இவர்களும் காந்தியோடே நடந்திருக்கிறார்கள். மற்ற மாகாணங்களிலும் இதே போன்ற தீண்டாமை ஒழிப்புக்கான நடைப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று காந்தி அழைப்பு விடுக்கும்போது, வங்காளத்தில் சதீஷ் சந்திர தாஸ் குப்தா நடைப்பயணம் மேற்கொள்கிறார். அந்தக் குழுவிலும் பெண்கள் இணைந்து  வங்காள கிராமங்களுக்கு காந்தியின் செய்தியைச் சுமந்து செல்கிறார்கள்.

தீண்டாமை ஒழிப்பில் குறிப்பிடத்தக்க அளவு பணியாற்றியவர் நேரு குடும்பத்தின் மருமகளான இராமேஸ்வரி நேரு. கராச்சியில் காந்தியின் தீண்டாமைப் பயணத்தின்போது, அங்கு உள்ள ஒடுக்கப்பட்டோர் குடியிருப்பு களுக்குச் செல்கிறார். தக்கர் பாபாவோடு இணைந்து இந்தியா முழுக்கப் பயணம் சென்று ஒடுக்கப்பட்டோருக்காக ஆற்றிய பணிகள் விரிவாக எழுதப்பட வேண்டியவை. இன்னும் பம்பாயின் கோசிபென் படேல் , அனுசுயா பென் எனப் பலப் பலரின் உத்வேகமான பங்களிப்புகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை.

ஹரிஜன் சேவக் சங்அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து பெண்கள் ஆற்றிய பங்களிப்பு மேலும் ஆராய்தற்குரியதாகும்


நன்றி: சித்ரா பாலசுப்ரமணியன் இக்கட்டுரை 'காலச்சுவடு' அக்டோபர 2022 இதழில் ( https://kalachuvadu.com/magazines/காலச்சுவடு/issues/274/articles/3-காந்தி-பெண்களும்-தீண்டாமை-யாத்திரையும் ) வெளியானது. இதழில் வெளியான கட்டுரை எவ்வித மாற்றமும் இன்றி இங்கு வெளியிடப்படுகிறது. 

No comments: