Sunday, May 21, 2023

எல். இளையபெருமாள்: நெடுவழி விளக்கான ஒரு போராட்ட வரலாறு

எல். இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டான இவ்வருடம் வெளிவந்திருக்கும் பாலசிங்கம் இராஜேந்திரனின்இளையபெருமாள்: வாழ்க்கை சரித்திரம்ஒரு முக்கியமான வாழ்க்கையின் வரலாறு. வாழ்க்கை வரலாறுகளுக்கே உரித்தான வகையில் அது ஒரு காலக்கட்டத்தின் வரலாறும் கூட. வாழ்க்கை வரலாறுகள் சிறப்புறுவது அவ்வரலாற்றுக்கு சமகாலத்தில் இருக்கும் பொருத்தப்பாடு, அவ்வகையில் இளையபெருமாளின் போராட்ட வரலாற்றுக்கு இன்றைய தமிழகத்தில் பொருத்தப்பாடு இருப்பது ஒரு வகையில் நம் சமூகத்தின் அவலமென்றாலும் அது அவரின் வாழ்வின் செயல்பாட்டை புரிந்துக் கொள்ளவும் உதவுகிறது




காலமும் களமும்


ஸ்டாலின் ராஜாங்கம் நூலுக்கு மிகச் செறிவான முன்னுரையை வழங்கி இருக்கிறார். வாசகனுக்கு இளையபெருமாள் வாழ்வுக்குள் நுழைவதற்கு ஒரு நுழைவாயிலை, ஒரு சட்டகத்தை ஸ்டாலினின் முன்னுரை அளிக்கிறது. 

இளையபெருமாள் பெரும்பாலும் பணியாற்றிய சிதம்பரம் பகுதி பற்றி ஸ்டாலின் ஒரு குறுஞ்சித்திரம் அளிக்கிறார். “வைதீக மதக் கதையாடலுக்கு இணையாகத் தீண்டாமை பற்றிய தொன்மத்தைக் கொண்டதாகவும் சிதம்பரம் இருக்கிறது. நந்தனார் என்னும் உருவகத்தை, தமிழக அளவிலான தீண்டாமைக்கான கருத்தாடலாக, சிதம்பரத்தை வைத்தே உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வைதீகக் கதையாடலுக்கும் இப்பகுதியில் உருவான / நிலவிய சாதி அமைப்புக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.” “இன்று வரையிலும், ரயில் நிலையம், பல்கலைக்கழகம் தவிர்த்து நகரத்தின் நவீனக் குணாம்சங்கள் அதிகம் பரவாத பகுதி இது.” 

தலித்துகளின் அரசியல் செயல்பாடு தனித்துவச் சிக்கல்கள் கொண்டது. “ஒரே நேரத்தில் அரசு எந்திரத்தை எதிர்ப்பவர்களாகவும் சமூக அதிகாரத்தை எதிர்ப்பவர்களாகவும்” தலித்துகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டிய நிர்பந்தம் உருவாக்கும் “எதிர்மறை விளைவுகளைப் புரிந்துகொண்டவர்களாகவே” இளையபெருமாள் போன்றோரது அரசியலும் சமூகச் செயல்பாடுகளும் இருந்தன. 

அரசியல் அல்லது சமூகச் செயல்பாட்டாளர்களின் பங்களிப்பை மதிப்பிடும் போது தற்காலத்தில் நிகழும் ஒரு போக்கு நாம் இன்று முற்போக்கு என்ற வகைமையில் உள்ளடக்கிய கருத்தியல்களை வரித்துக் கொண்டவர்களாக இருக்கிறார்களா என்றும் பிற்போக்கு என்ற வகைமையில் உள்ளடக்கியவற்றை மறுப்பவர்களாகவும் இருக்கிறார்களா என்று எடைப் போட்டு அதனடிப்படையில் அவர்கள் இடத்தைத் தீர்மானிப்பது நடக்கிறது. இவ்வகைத் தீர்ப்புகளில் கருத்தியல் தூய்மைவாதம் முன்னிலைப்படுத்தப்பட்டுச் செயல்பாட்டின் நேர்மையோ பலனளிக்கும் தன்மையோ பின்னுக்குத் தள்ளப்படுகிறது. “கருத்தியல் ஆதரவாளர்களாகக் கருதப்பட்டவர்களை விட நடைமுறை சார்ந்து செயல்பட்டவர்களால் நடந்த நன்மைகளே தலித்துகளுக்கு அதிகமாக இருக்கின்றன” என்கிறார் ஸ்டாலின். உதாரணத்துக்கு முற்போக்கு கொள்கைகளும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் இயக்கமெனச் சொல்லப்படும் திராவிட இயக்கத்தின் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இளையபெருமாளுக்கு எதிர் தரப்பில் வன்னியர் பிரதிநிதியாகவே செயல்பட்டதை ஸ்டாலின் சுட்டிக் காட்டுகிறார். 

காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் கடந்த 50 வருடமாக முன்னெடுக்கப்பட்ட பெரியாரிய கதையாடல்களில் பிற்போக்கானதென்றும் சாதியத்துக்கு எதிரான செயல்பாடுகள் அற்றதாகவும் சித்தரிக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் இதனை ஸ்டாலின் ராஜாங்கம் தவறென்று அவரின் அரசியல் ஆய்வுகளில் மறுக்கிறார். “எல்.இளையபெருமாள் காங்கிரஸிற்குள் ஒரு தலித் தலைவராகவும் - அவர்களின் பிரச்சினைகளுக்குத் தயக்கமில்லாமல் ஆதரவு காட்டுகிறவராகவும் இருக்க முடிந்தது என்பதே அவரது தனித்துவம். காங்கிரஸில் தலித்துகளுக்கான இந்த வெளி காந்தியின் அரிஜன சேவா சங்கத்தின் தொடர்ச்சியால் உருவாகியிருந்தது.” 

“தலித்துகளைக் கையாளுவதில் காங்கிரஸுக்குள் சுவாரஸ்யமான முரண் ஒன்றிருந்தது. சமூகரீதியாக நிலவுடைமையாளர்களையும் அரசியல்ரீதியாகத் தலித்துகளையும் அரவணைப்பதாக அக்கட்சி இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சி அரிஜன முன்னேற்ற விழுமியங்களையும் தொடர வேண்டி இருந்தது. இந்த வாய்ப்பைத் தலித்துகளை நோக்கி இணக்கப்படுத்தியவர்களுள் எல்.இளையபெருமாள் முக்கியமானவர்.” 

காங்கிரஸில் தலித்துகளுக்கு இருந்த செயல்பாடு சுதந்திரம் பற்றிச் சொல்லும் ஸ்டாலின் அதே வேளையில் காந்தியத்தின் தலித்திய செயல்பாடுகள் சுகாதாரம், கல்வி, சாதி இந்துக்களின் மனமாற்றம் என்ற வட்டத்துக்குள் இயங்கியதையும் இளையபெருமாள் போன்ற காங்கிரஸ்காரர் இழித் தொழில் மறுப்புப் போராட்டங்களை முன்னெடுக்கும் போது அம்பேத்கரிய தன்மையை வெளிப்படுத்தியதையும் நுட்பமாக விளக்குகிறார். 

வரலாற்றெழுத்தில் கருத்தியலாளர்கள் முதன்மைப் பெற்றுச் செயல்பாட்டாளர்கள், அதுவும் பெரிய கருத்தியல் கதையாடல்கள் நிகழ்த்தாதவர்கள், பின்னுக்குத் தள்ளப்படும் மரபை மறுத்து இளையபெருமாளின் செயல்பாடு சார்ந்த வரலாற்றின் முக்கியத்துவம் இன்று அதிகம் பேசப்படாத ‘இளையபெருமாள் கமிட்டி அறிக்கை” போன்றவற்றை அறிவதன் மூலம் விளங்கும் என்கிறார் ஸ்டாலின். 

“இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே பிற வட்டார ஒடுக்கப்பட்டோர் அரசியலிலிருந்து சிதம்பரம் வட்டார அரசியல் வேறுபட்டிருந்தது. இந்தப் பின்னணியில் தான் பெரியவர் இளையபெருமாள்” செயல்பட்டார். நந்தனார் தொன்மத்தை தன் அடையாளமாகக் கொண்ட சுவாமி சகஜானந்தர் தன் களப் பணிக்குச் சிதம்பரம் நோக்கி நகர்ந்ததில் வியப்பில்லை. இளையபெருமாளை அறியும் முன் சகஜானந்தரை அறிதல் அவசியம். 

முன்னோடியாக சகஜானந்தர் 


பிராமணர்களும் சாதி இந்துக்களும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிமுகமான நவீனக் கல்வி நிலையங்களில் பயில மிகவும் உதவிய ஒரு ஏற்பாடு அவர்களுக்கான உறைவிடங்கள் அந்நிறுவனங்களில் உருவாக்கப்பட்டது. கிராமங்களில் இருந்து தொலைவில் நகரங்களிலும் சிறு நகரங்களிலும் அமையப்பெற்ற கல்வி நிறுவனங்கள் உண்டு, உறைவிடக் கல்வி நிலையங்களாக இருந்தது பிராமணர்களுக்கு எந்தளவு உதவியதென்று ரமேஷ் பேரி போன்ற ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளார்கள். இந்தப் பின்னணியில் தான் நாம் சகஜானந்தர் அவரது 26-ஆவது வயதில் 1916-இல் தொடங்கிப் பின் உண்டு, உறைவிடப் பள்ள்ளியாக மாறிய ‘நந்தனார் கல்வி கழகம்’ எத்துனை முக்கியத்துவம் வாய்ந்ததென்று புரிந்து கொள்ள வேண்டும். அப்பளிக்க்கு அடிக்கல் நாட்டியவர் உயர்நீதிமன்ற நீதிபதி சதாசவ ஐயர். 1923-இல் அப்பள்ளிக்கு காட்டுமன்னார்குடி அருகே 56 ஏக்கர் நிலமும், சேத்தியாத்தோப்புக்கு அருகே 28 ஏக்கர் நிலமும் வழங்கியது ராஜாஜியின் அரசு. 




கல்விப் பணியோடு அட்டவணைச் சமூக மக்களுக்கான உரிமைப் போராட்டங்களையும் சகஜானந்தர் முன்னெடுத்தார். “நந்தன் அக்னியில் இறங்கியதாகக் கூறாப்படும் சிதம்பரம்-ஓமக்குளத்தில் அட்டவணாஇ சமூகத்தவர்கள் நுழயவும் நீர் எடுக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது”. 1917 முதல் அக்குளத்தில் நீர் எடுக்கத் தொடர் போராட்டங்களைச் சகஜானந்தர் மேற்கொண்டார். அதன் தாக்கமும் வேறு போராட்டங்களின் தாக்கமும் 1924-இல் இரட்டமலை சீனிவாசன் போன்றோரின் முன்னெடுப்பால் பொது இடங்களில் யாரையும் விலக்குதல் கூடாதென்ற சட்டம் அமலானது. 

சகஜானந்தரின் பள்ளியில் மாணவர்கள் பிராமணர்களைப் போல் குடுமி வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் விபூதி பட்டை அடித்துக் கொள்ள வேண்டுமென்றும் நிபந்தனை இருந்ததை இளையபெருமாள் பிற்காலத்தில் எதிர்த்தார். இருப்பினும் இளையபெருமாள் ஒரு போராட்டத்தின் விளைவாகப் போலீஸால் தேடப்பட்ட போது சகஜானந்தரின் நந்தனார் மடத்தில் அடைக்கலம் தேடினார், சகஜானந்தரும் அவரைக் காப்பாற்றியதோடல்லாமல் வழக்கையும் நடத்த உதவி புரிந்தார். சகஜானந்தரின் நூற்றாண்டு விழாவை 1990-இல் அன்றைய தமிழக முதல்வர் கருனாநிதியை சிறப்பு அழைப்பாளராகக் கொண்டு இளையபெருமாள் நடத்தினார். 

இளையபெருமாள் வாழ்வில் 1946-ஆம் ஆண்டு


பள்ளிப் பருவத்திலேயே பள்ளியில் நிலவிய சாதிய வேற்றுமைகளை மாணவப் பருவத்துக்கே உரிய அளவில் எதிர்த்த இளையபெருமாள் தொடர்ந்து கல்விப் பயில வாய்ப்பில்லாமல் 1944-இல் அவரின் 20-ஆவது வயதில் இராணுவப் பணியில் சேர்ந்தார். ராணுவப் பணியிலும் சாதிய வேற்றுமைகளை அவர் எதிர்கொண்டார் என்று சொல்லும் ஆசிரியர் மேலதிக விபரங்கள் அளிக்கவில்லை. 

இரண்டாம் உலகப் போர் சமயமது. அப்போரில் லட்சகணக்கான இந்தியர்கள் இராணுவத்தில் பணியாற்றியிருக்கின்றனர். இராணுவ ரெஜிமெண்டுகளில் போர்க் குடிகள் என்று சில சாதிகள் குறிக்கப்பட்டு அதிக அளவில் சேர்க்கப்பட்டனர். அப்போதைய இராணுவத்தின் சாதியம், ஆள் சேர்ப்பில் நிலவும் சாதியத்துக்கு எதிரான அம்பேத்கர் செயல்பாடுகள் பற்றி அறிய வரலாற்றாசிரியர் ஸ்டீவன் வில்கின்சனின் “Army and Nation” முக்கியமானதொரு புத்தகம். 1937-இல் இந்திய ரானுவத்தில் சேரும் சாதிகள் பற்றிய குறிப்பேட்டில் பற்பல சாதிகள் பற்றி சாதிய நோக்கில் குறிப்புகள் இருந்ததாக வரலாற்றாசிரியர் ஶ்ரீநாத் ராகவன் “India’s War” புத்தகத்தில் தகவல் சொல்கிறார். 

ஒரு வருடத்தில் இராணுவத்தில் இருந்து வெளியேறிய இளையபெருமாள் 1946-இல் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட்டார். ஆசிரியர் சுட்டிக்க்காட்டும் போராட்டங்களின் வாயிலாக ஒரு சமூக சித்திரமே நமக்கு கிடைக்கிறது. 

காட்டுமன்னார்குடி வட்டாரத்தை சேர்ந்த உடையூர் கிராமத்தில் பறையர் கூலி விவசாயி ஒருவருக்கு நிகழ்ந்த கொடுமையை எதிர்த்த போராட்டமே இளையபெருமாள் வாழ்வில் முதல் பெரும் போராட்டம். உடல்நலக்குறைவால் இரண்டு நாள் வேலைக்கு வராதததால் அந்த விவசாயியை கட்டி வைத்து அடித்ததோடு குடும்பமும் துன்புறுத்தப்பட்டது. அக்காலத்தில் அம்மாதிரி வேலைக்கு வராதவர்களை பறையர்களைக் கொண்டே சாட்டையால் அடிக்கும் வழக்கமிருந்தது. பின்னர் ஏதேனும் விசாரனை வந்தால் அடித்தவரே பறையர் தான் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளத் தான் இத்தந்திரம். மேலும் விவசாயியின் வீட்டைச் சுற்றி முள் வேலி அமைத்து குடும்பத்தாரையும் இன்னலுக்கு ஆளாக்குவதுண்டு. “பண்ணை வேலைக்கு வரும் ஆண்களுக்கு தினக்கூலியாக ஒரு மெட்ராஸ் மெஷர் மட்டுமே கொடுப்பார்கள், பெண்களுக்கு அதுவும் கிடையாது”. 

பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பாக இளையபெருமாள் உயிருக்கு அஞ்சாமல் களமிறங்கியதும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து 3000க்கும் மேற்பட்ட அட்டவணைச் சமூக மக்கள் திரண்டு அவருடன் பேரணியாக வந்தார்கள். நிலவுடமையாளர்களுக்கும் விவசாயிகளுக்குமிடையே கலவரம் மூளாமல் தடுக்க காவல்துறையின் உயர் அதிகாரிகளும் விரைந்தனர். பேச்சுவார்த்தைகளின் முடிவில் விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு கூலி உயர்வு ஒப்பந்தமானது. 1964-இல் சிதம்பரத்தில் மாபெரும் கூலி உயர்வு மாநாடு ஒன்றை இளையபெருமாள் நடத்தியது இவ்விஷயத்தில் அவரின் தொடர் ஈடுபாட்டைக் காட்டுவதோடு அத்தகைய போராட்டங்களின் தேவை விவசாயிகளுக்கு நெடுங்காலமாக, சுதந்திர இந்தியாவிலும் இருந்ததை காண்பிக்கிறது.

அதே வருடம் புளியங்குடியில் இராணுவத்தில் இருந்து திரும்பி வந்த இளைஞர் ஒருவர் மீசை வைத்து நல்ல உடை அணிந்ததற்காக வன்னியர்களால் கட்டி வைத்து அடிக்கப்பட்டதோடு மீசையை தீ வைத்து பொசுக்கவும் பட்டார். வன்னியர்கள் மிகுதியாக இருந்த கிராமமாதலால் பறையர்களை அக்கிராமத்தை விட்டே வெளியேறி வேறொரு கிராமத்தில் குடியமர்த்தினார் இளையபெருமாள். பின்னர் நடந்த சமாதான பேச்சு வார்த்தையின் விளைவாக வன்னியர்கள் சார்பில் மன்னிப்புக் கோரப்பட்டதுடன் பறையர்கள் மீதான வன்முறை இனி நடைபெறாதென்று உறுதி அளிக்கப்பட்டது.

1946-இல் தொடங்கப்பட்ட ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் பொறுப்பேற்ற இளையபெருமாள் கோயிலில் சாமியாடும் பெண்கள் உடை அலங்கோலமாவதை கண்டு கொள்ளாமல் ஆடுவதும் அது சாதி இந்துக்களுக்கு ஏளனமாகத் தெரிவதும் அவரை வருத்தியதால் அப்படியான ஆட்டங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். கூடவே நாகரீகமான உடை அணியவும் சங்கம் வழிகாட்டியது. மாட்டிறைச்சி உண்பது, கள் குடிப்பது ஆகிய வழக்கங்களுக்கு எதிராகவும் இச்சங்கத்தின் வாயிலாக இளையபெருமாள் பிரச்சாரம் செய்தார். சகஜானந்தரைப் போலவே இளையபெருமாளும் ஒரு உண்டு-உறைவிடப் பள்ளியை 1948-இல் துவக்கினார். பள்ளி காந்தியின் பெயரால் இயங்கியது. 

காங்கிரசில் இளையபெருமாள்


இந்தியாவின் முதல் தேர்தல் 1951-இல் நடந்த போது சமூகச் செல்வாக்குப் பெற்ற தலைவர்களைக் காங்கிரஸில் இணைப்பதில் காமராஜர் நேரடியாக ஈடுபட்ட போது இளையபெருமாளை சந்தித்துக் காங்கிரசில் சேர வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு 27 வயதில் பாராளுமன்றம் சென்றார். அச்சமயத்தில் ராஜாஜி இவரை நேரடியாக அம்பேத்கரிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தார். தொடர்ச்சியாக 1957, 1962 தேர்தல்களிலும் போட்டியிட்டு மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1967-இல் முதல் முறையாகத் தோல்வியைச் சந்தித்தார் இளையபெருமாள். 



ஸ்டாலின் ராஜாங்கம் தன் பிற நூல்களிலும் இந்நூலின் முன்னுரையிலும் காங்கிரஸில் தலித் தலைவர்கள் தலித் நலனுக்காகச் சுதந்திரமாகச் செயல்பட்டதை அடிக்கோடிடுகிறார். இந்நூலாசிரியரும் அதனை இளையபெருமாளின் செயல்பாடுகள் மூலம் நிறுவுகிறார். காஙிரசின் இச்செயல்பாடு காந்தியின் தாக்கமே என்று அவர்களும் நானும் சொல்வோம். இதற்கான விதை எம்.சி,ராஜாவுக்கும் காந்திக்கும் இடையே நடந்த ஒரு பேச்சுவார்த்தை எனலாம் என்பேன். தீண்டாமை ஒழிப்புக்கு எதிரான யாத்திரையின் போது காந்தியை சந்தித்த எம்.சி,ராஜா தலித்துகள் காங்கிரசில் செயல்படுவது குறித்துப் பேசினார். அப்போது காந்தி தலித்துகள் காங்கிரஸில் பணியாற்ற வேண்டும் என்று கோரியதுடன் அவர்கள் எக்காலத்திலும் தலித்துகளுக்கு விரோதமான எந்தக் கொள்கையையும் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாலேயே ஆதரிக்கத் தேவையில்லை என்று உறுதியளித்தத்தோடு சத்தியமூர்த்தி மூலம் அப்படி ஓர் அறிக்கையே வெளியானது. கக்கன் முதலானோரும் இத்தகைய சுதந்திரத்தை காங்கிரஸில் அனுபவித்தனர். அம்மாதிரி சுதந்திரத்தை சத்தியவாணி முத்துக் கருணாநிதியிடம் எதிர்பார்த்த போது கிடைத்த ஏமாற்றம் அவரை அக்கட்சியை விட்டு விலக வைத்தது. 

காங்கிரஸில் இருந்து கொண்டே தான் இளையபெருமாள் ஆதி திராவிட மகாஜன சபை தலைவராகவும் இருந்தார், 1961-இல் காமராஜர் தலைமையில் அம்பேத்கர் பெயரிட்ட இல்லம் ஒன்றையும் திறந்து வைத்தார். காங்கிரஸ் பற்றியும் காந்தி பற்றியும் மிகக் காட்டமான கருத்துகளைக் கொண்டிருந்தவர் அம்பேத்கர் என்று வாசகர்கள் நினைவு படுத்திக் கொள்ளவும். காங்கிரஸ்காரராகவே இளையபெருமாள் தொடர்ச்சியாகத் தலித்துகள் தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டார். 

ஜூலை 1978-இல் விழுப்புரத்தில் நடந்த மிகப் பெரிய சாதிக் கலவரத்தில் 12 தலித்துகள் கொல்லப்பட்டனர். அன்றைய அரசு நீதிபதி சதாசிவம் தலைமையில் ஒரு குழு அமைத்தாலும் தலித் தரப்பிலான அறிக்கை ஒன்றினை டி.டேவிட் என்பவர் தயாரித்து வெளியிட்டார். அவ்வறிக்கைக்கு உறுதுணையாக இருந்ததவர்களுள் இளையபெருமாள் முக்கியமானவர். இது தொடர்பாக டேவிட்டின் நூலை மறு வெளியீடு செய்திருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். அந்நூலுக்கான பின்னுரையில் ஸ்டாலின், “விழுப்புரம் கலவரத்தின் போது தலித் மக்களுக்கு அதரவாயிருந்தவர்களில் காங்கிரஸ்காரர்களே அதிகம்” என்கிறார். 

காங்கிரஸில் தலித் தலைவர்கள் சுதந்திரமாகச் செயல்பட்டதோ தலித்துகளுக்கு ஆதரவாகக் காங்கிரஸ்காரர்கள் செயல்பட்டதோ அவ்வியக்கம் முற்றிலும் சாதியம் கடந்த இயக்கமென்ற புரிதலை வாசகன் அடைந்துவிடக் கூடாது. 1979-இல் இளையபெருமாள் தமிழகக் காங்கிரஸின் தலைவரானார். இன்று வரை சமூக நீதி கட்சிகளில் பட்டியல் இனத்தவர் தலைவர்களாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. எமர்ஜென்ஸிக்குப் பின் தன் அரசியல் மீட்சிக்காகக் காங்கிரஸும் இந்திரா காந்தியும் போராடிய முக்கியமான காலக் கட்டம் அது. 

1980 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி 24 தொகுதிகள் பெற்று 21 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றதில் இளையபெருமாளின் பங்கு முக்கியமானது. இத்தேர்தலில் போது கே.பி.எஸ்.மணியை வேட்பாளராக்கியது கட்சியிலுள்ள சாதி இந்துக்களை எரிச்சலடையச் செய்தது. தேர்தலுக்குப் பின் இளையபெருமாளுக்கு எதிராக மூப்பனார் செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்றார். 1984-இல் இளையபெருமாள் காங்கிரசிலிருந்து வெளியேறினார். 

இளையபெருமாள் கமிட்டி


இளையபெருமாள் காங்கிரஸில் இருந்த காலத்தில் அவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பங்களிப்பு அவர் 1965-69-இல் தலைமையேற்று நடத்திய ‘இளையபெருமாள் கமிட்டி’-யும் அதன் அறிக்கையும். 4 வருடங்கள் இக்கமிட்டி இந்தியா முழுதும் சுற்றி வந்து தீண்டாமை குறித்துப் புள்ளி விபரங்களைச் சேகரித்தனர். இன்று தலித் தரப்பும் காங்கிரஸும் அதிகம் மறந்து விட்ட இவ்வறிக்கைப் பற்றி முக்கிய விபரங்களை இப்புத்தகம் அளிக்கிறது. 

இளையபெருமாள் கமிட்டியின் அறிக்கையில் தெளிவாகும் செய்தி ஒன்று தான், அது அசாம் முதல் தமிழகம் வரை இந்தியா முழுதும் குறுக்கும் நெடுக்குமாகத் தீண்டாமையும் நிலவியது என்ற செய்தி தான் அது. 

“சித்தூர் மாவட்டத்திலுள்ள பங்காரிபோல்யம் கிராமத்திலுள்ள உணவு விடுதிகளில் அட்டவணைச் சமூக மக்களுக்குத் தட்டில் உணவு வழங்கப்படுவதில்லை”. பீகரில் ஒரு மாவட்டத்தின் பள்ளிகளில் மாணவர்கள் பெஞ்சில் அமர அனுமதியில்லை. விக்கிரவாண்டியில் சாதி இந்துக்களின் தெரு வழியே செல்லும் அட்டவணைச் சமூகத்தினர் செருப்பணிந்து செல்ல முடியாது. திருச்சியில் ஒரு கிராமத்தில் அட்டவணைச் சமூகத்தினர் தங்களது திருமண ஊர்வலங்களில் வாத்திய கருவிகள் பயன்படுத்த அனுமதியில்லை. 

1955-இல் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் பொது இடங்களில் தீண்டாமை சட்ட விரோதமானது என்று மட்டும் தான் சொன்னது. அதன் பிறகும் தீண்டாமை நாடு முழுதும் தலை விரித்தாடியதை தான் இளையபெருமாள் கமிட்டி அறிக்கை சொன்னது. நூலில் சுட்டிக் காட்டாத ஒரு விபரம் ஒன்று இணையம் வழி கிடைத்தது இக்கமிட்டி அறிக்கையின் முக்கியத்துவத்தைச் சொல்லும். 1970-இல் மத்திய அரசு அட்டவணைச் சமூகத்து மாணவர்களுக்குக் கல்வி நிலயங்களில் தங்கும் வசதி சரியாக இருக்கிறதா என்று மாநில அரசுகளிடம் இக்கமிட்டி அறிக்கையைத் தான் சுட்டிக் காட்டி கேட்டது (காண்க தரவுப் பட்டியலில் சுட்டி). இளையபெருமாள் கமிட்டி அறிக்கையைக் காங்கிரஸ் அரசே கிடப்பில் தான் போட்டது. ஆயினும் இந்திரா அரசு 1976-இல் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை மேலும் கடுமையாக்கி பொது உரிமைச் சட்டம் என்று பாராளுமன்றத்தில் அமலாக்கம் செய்ய முன் நின்றார். அச்சட்டத்திற்கு ஒரு முக்கியக் காரணம் இளையபெருமாள் அறிக்கை. 1989-இல் ராஜீவ் காந்தி அரசு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றியதற்கும் இக்கமிட்டி அறிக்கை முக்கியத் தூண்டுதல்.

வன்கொடுமைக்கு எதிர்ப்பு, இயக்கங்கள், 1989 தேர்தல்


காங்கிரசிலிருந்து வெளியேறிய இளையபெருமாள் இயக்கங்கள் தோற்றுவிக்கிறார், வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்கிறார், 1989 தேர்தலில் தனிக் கட்சியாகக் களம் காண்கிறார். ஒரு பேரியக்கத்திலிருந்து பிரிந்தாலும் தன் சமூகத்தின் நலனுக்காகத் தொடர்ந்து தீவிரமாகச் செயலாற்றினார் இளையபெருமாள். 

1984-இல் ‘இந்திய மனித உரிமைக் கட்சி’யை இளையபெருமாள் தொடங்கினார். பொருளாதார மேம்பாடு, கடன் வசதிகள், அட்டவணைச் சமூகத்திற்குத் தனி வங்கி அமைத்தல், மதமாற்றம் மேற்கொண்ட தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை இவ்வியக்கம் வலியுறுத்தியது. 

ஆகஸ்டு 15, 1985 அன்று இழித்தொழில் மறுப்புப் போராட்டம் ஒன்றை ஒடுக்கிய போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ரெட்டியூர் பாண்டியன் கொல்லப்பட்டார். ரெட்டியூர் பாண்டியன் பற்றி ஸ்டாலின் ராஜாங்கம் தன் “எழுதாக் கிளவி” புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். அச்சமயத்தில் தலித் இயக்கங்கள் தொகுப்பாக இயங்கினால் அரசின் மீது அழுத்தம் கொடுக்கவும் சமூக அநீதிகளை எதிர்க்கவும் வலுவாக இருக்கும் என்று பல்வேறு தலித் இயக்கங்கள் ‘ஷெட்யூல்ட் இன விடுதலை கூட்டமைப்பு’ என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்தன. 

‘ஷெட்யூல்ட் இன விடுதலை கூட்டமைப்பு’ இயக்கத்தின் முக்கியக் கோரிக்கைகளாவன, “கிராமங்களிலும் நகரங்களிலும் புதைகுழி தோண்டுதல், செத்த மாட்டை அப்புறபடுத்துஅல், பிணம் எரித்தல், மலத்தைச் சுமந்து செல்லுதல் உள்ளிட்ட இழிதொழில்களைச் செய்ய மாட்டோம் என மறுத்தல்”. 1985-இல் ஓர் இயக்கம் இத்தகைய கோரிக்கைகளை வைக்க வேண்டிய நிலையில் தான் தமிழகம் இருந்தது என்பது எந்தவொரு தனி இயக்கம் மீதான விமர்சனம் என்பதை விட ஒரு சமூகத்தின் மீதான விமர்சனம் என்றே கொள்ளலாம். அக்கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாக இன்றும், 2023-இல், மலக்குழி மரணங்கள் பற்றித் தலித்துகள் கட்டுரை எழுதுவது என்னே ஓர் அவலம். இக்கூட்டமைப்பு வெகு சீக்கிரமே பிளவுற்றது. பின் உதயமானது “ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கம்”. 

1989 தேர்தலில் தனிக் கட்சியாக “ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கம்” களம் கண்டது. ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றார். மற்றவர்கள் தோல்வியடைந்தாலும் கணிசமான வாக்குகள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இளையபெருமாள் கணிசமான வாக்குகள் பெற்றாலும் தோற்றார். இத்தேர்தலில் இவ்வியக்கம் தலித் வாக்கு வங்கி பற்றி ஒரு கருத்தியல் உருவாக உதவியது என்று புரிந்துக் கொள்ளலாம். 

இக்காலக்கட்டத்தில் மிக முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்தது பறையர்-வன்னியர் மோதல். 

பறையர்-வன்னியர் மோதலும் உறவும் முரண்களும்


வன்னியர் சாதி பெண்ணைக் காதலித்ததற்காகக் கொல்லப்பட்ட தலித் இளைஞன் இளவரசன் நினைவாகத் தலித் ஆய்வறிஞர்கள் ஐவரால் கூட்டாக வெளியிடப்பட்ட “சாதி இன்று” அறிக்கை தமிழ்நாட்டில் நூற்றாண்டு கடந்து ஆதிக்கம் செலுத்தும் கருத்தியலான பிராமணருக்கு எதிரான பிராமணரல்லாதார் அரசியலின் எல்லைகளைச் சுட்டிக் காட்டும் நூல். பாலசிங்கம் இராஜேந்திரன் நூலில் ‘பறையர்-வன்னியர்’ உறவு பற்றிய அத்தியாத்தை புரிந்து கொள்ள ‘சாதி இன்று’ நூலில் இருந்து சில மேற்கோள்கள். 

“பிராமணரல்லாத சாதிகளின் எழுச்சியைப் பெரியார் உற்சாகப்படுத்தினார். ஏனெனில், சாதி என்றால் அது பிராமணர் சாதியோடு மட்டுமே தொடர்புடையது என்றே பெரியார் விளங்கிக் கொண்டார்”. “ பிராமணரல்லாத சாதிகளின் அதிகார மேலான்மை ‘புரட்சிகரச் சொல்லாடலோடு’” இணைக்கப்பட்டது. 

“இங்குச் சமூக மாற்றத்திற்கு ஆதாரமாக இட ஒதுக்கீட்டு முறைதான் ஒரே வழிமுறையாக நம்பப்படுகிறது”. “பெரும்பாலான சாதி அமைப்புகள் இட ஒதுக்கீட்டு கோரிக்கைக்காகவே முளைத்தன. இட ஒதுக்கீடு கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால், அத்தகைய சாதிக் கட்சிகளின் இட ஒதுகீட்டுக் கோரிக்கைகளும் இங்கு ஆதரிக்கப்படுகின்றன”. 

“திராவிட இயக்கம் வகுப்புவாரியான ஒதுக்கீடு என்கிற கருத்தை மிக நீண்ட காலமாகப் பேசி வந்துள்ளது. பிராமணரால் பிராமணரல்லாதோர் அனைவருமே ஒடுக்கப்பட்டவர்களாகச் சொல்லப்பட்டதால் பிராமணரல்லாதாரிடையே காணப்பட்ட சாதி உயர்வு, தாழ்வு மற்றும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை ஆகியவை இந்த இயக்கத்தின் ஒற்றைமயப் பிரச்சாரத்தால் மறைந்து போனது. இதன் மூலம் தீண்டப்படாதவர்களுக்குப் போலவே தீண்டப்படுவோர்களுக்கும் ஒதுக்கீடு செய்வது நியாயமாக்கப்பட்டது”. 

இந்தப் பிண்ணனியில் தான் 1987 ஆண்டில் அப்போது வன்னியர் சங்கம் செப்டம்பர் 17 முதல் 23-ஆம் தேதி வரை தமிழகமெங்கும் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தினர். அப்போரட்டத்தில் போக்குவரத்தை மாநிலம் முழுதும் ஸ்தம்பிக்கச் செய்வதற்கு அச்சங்கத்தினர் மரங்களை வெட்டி தெருக்களில் போடுவது வழக்கமாயிற்று. அதெல்லாம் முக்கியச் செய்திதாள்களில் கவனம் பெற்றன ஆனால் அப்போது அதிகக் கவனம் பெறாதது இப்போராட்டங்களின் சம காலத்தில் தலித் குடியிறுப்புகள் வன்னியர்களால் தாக்கப்பட்டன. “தென்னாற்காடு மாவட்டத்தில் மட்டும் 36 கிராமங்களில் அட்டவணைச் சமூக மக்களின் குடிசைகள் தீ வைக்கப்பட்டன”. பறையர்களின் குடிசை எரிப்புகளைத் தடுக்கத் தவறிய காவல் துறை பொது அமைதிக்கு மறியல் போராட்டம் குந்தகம் விளைவிக்கிறது என்று துப்பாக்க்கி சூடு நடத்தியதில் 21 வன்னியர் இறந்தனர். இன்றய திமுக அரசு அவர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்புகிறது. 

குடிசை இழந்த பறையர்களுக்கு வீடுகள் கட்டித் தர எம்.ஜி.ஆரை இளையபெருமாள் சந்தித்தார். “ஒரு கிராமத்தில் 30 வீடுகள் வரை தான் கட்டித் தர விதிகள் உள்ளன” என அதிகாரிகள் சொன்ன போது வீடிழந்த எல்லோருக்கும் வீடு கட்டித் தரவில்லையென்றால் தமிழகத்தில் “சட்டம் ஒழுங்கு இருக்காது” என இளையபெருமாள் எச்சரித்த பின் தாட்கோ அமைப்பின் மூலம் வீடு கட்டிக் கொள்ள வசதி செய்யப்பட்டது. 




இக்கலவரங்களைத் தொடர்ந்து இரு சமூகத்தினிரிடையே இணக்கம் ஏற்படச் சிலரின் முயற்சியால் இளையபெருமாளும் வன்னியர் சங்கத் தலைவர் ராமதாஸும் அப்போதைய தமிழக ஆளுநர் முன்னிலையில் 1988-இல் நவம்பர் 11-ஆம் தேதி சமாதான ஒப்பந்தம் செய்தனர். ஒப்பந்தத்தின் முக்கியக் கோரிக்கை வன்னியர்கள் பறையர்களை இழித் தொழில் செய்ய நிர்பந்திக்கக் கூடாது. இரண்டு தேசங்கள் ஒப்பந்தம் செய்வது போல் தமிழகத்தில் இரண்டு சாதியினர் ஒப்பந்தம் செய்தனர். இச்சமாதான முயற்சிகளில் சமூக நீதி இயக்கங்கள் என்று சொல்லிக் கொள்ளும் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு இல்லை என்றே தெரிகிறது. இதே போன்ற இன்னொரு ஒப்பந்தம் 1991-இலும் கையெழுத்தானது. 1988 ஓப்பந்தத்துக்குப் பின் இது ஏன் தேவைப்பட்டதென நூலில் விளக்கம் காணவில்லை. இந்த ஒப்பந்தத்திலும் பறை அடித்தல், செத்த மாட்டைப் புதைத்தல், பிணம் எடுத்தல் போன்ற இழித் தொழில்களுக்குப் பறையறை அழைக்கக் கூடாதென்று சொல்லப்பட்டது. இக்கோரிக்கைகள் தொடர்ச்சியாகப் பேசப்படுவதே நமக்குச் சமூகம் பற்றி ஒரு சித்திரத்தை அளிக்கிறது. 

தொல்.திருமாவளவன் ராமதாஸுடன் இணைந்து செயல்பட்ட காலத்தில் அவருக்கு “தமிழ் குடிதாங்கி” என்ற பட்டம் அளித்தார். அப்பட்டத்தின் பின் இருந்த ‘கதை’ குடிதாங்கி கிராமத்தில் தலித் பிணம் ஒன்றை புதைக்கத் தடங்கல் ஏற்பட்ட போது ராமதாஸே சடலத்தைத் தூக்கிச் சென்று பெருந்தன்மை காட்டினார் என்பதே அக்கதை. இப்பிரச்சனையில் ஏற்கனவே அ.தி.மு.க அரசு சடலம் எடுத்துச் செல்லும் பாதையைப் பொதுப் பாதை என்று அறிவித்திருந்தார். 

குடிதாங்கி சம்பவம் குறித்தும் அதன் நுட்பமான அரசியல் குறித்தும் ஸ்டாலின் ராஜாங்கம் தன் ‘எழுதாக் கிளவி’ நூலில் சொல்கிறார், “அனுபவம் ஒன்றைத் தன்னுடைய ‘சாதி ஒழிந்தது’ நூலில் டி.எம். மணி பகிர்ந்துகொள்கிறார். அதாவது குடிதாங்கி என்ற கிராமத்தில் தலித் பிணத்தை வன்னியர்களால் மறுக்கப்பட்ட பாதை வழியே ராமதாஸ் தூக்கிச்சென்ற ‘புகழ்பெற்ற’ சம்பவமுண்டு. ஆனால், இந்தச் சுடுகாட்டுப் பாதைக்காகச் சுமார் நான்காண்டு காலம் வெவ்வேறு தருணங்களில் உள்ளூர் தலித் அமைப்புகள் போராடி வந்தன என்று கூறும் டி.எம். மணி, தலித்துகளின் போராட்டத்திற்குக் கிடைக்காத கவனம், தலித் அல்லாத ஒருவரின் கடைசிநேரத் தலையீட்டிற்குப் பெரிய அளவில் கிடைத்துவிடுகிறது என்கிறார். இந்த நுட்பமான பார்வையைப் பல தளங்களுக்கும் நாம் விவரித்துப் பார்க்க முடியும். ராமதாஸை எஸ்.சி / பி.சி ஒற்றுமையின் அரசியல் அடையாளமாகக் காட்ட பலருக்கும் குடிதாங்கிச் சம்பவம் உதவியது.” ‘இளையபெருமாள்’ நூலாசிரியர் இது போன்ற செய்திகளை அடிக்குறிப்பாகச் சேர்த்தளித்திருந்தால் நூல் இன்னும் சிறப்புற்றிருக்கும். டி.எம். மணி இளையபெருமாளுடன் சேர்ந்து பணி செய்தவர். 

இளையபெருமாளின் அரசியல் வாழ்வில் ஓர் ஆச்சர்யம் 1996 தேர்தலில் ராமதாஸின் பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தது. 1991-இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசு தலித்துகளுக்குத் துரோகம் இழைத்தது என்று இளையபெருமாள் கருதியதாகச் சொல்லும் ஆசிரியர் மேலதிக விபரங்களைச் சொல்லவில்லை. இரண்டு பிரதான கட்சிகளும் சாதிய ரீதியாகத் தலித்துகளை ஒதுக்குகின்றன என்று விமர்சித்து ராமதாஸிடமே கூட்டணி வைத்தது ஆச்சர்யமே. இப்படியான கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை, தோல்வி தான் கிட்டியது. பிற்காலத்தில் திருமாவளவனும் இப்படியான தலித்-வன்னியர் கூட்டணியை அமைத்துத் தோல்வி தான் கண்டார். இம்மாதிரி கூட்டணிகள் சாதாரண அரசியல் ஆதாயக் கூட்டணிகளல்ல. இதிலுள்ள நுட்பமான அரசியல் தனியே விவாதிக்கப்பட வேண்டியது. 

திராவிட இயக்கமும் பெரியாரும் இளையபெருமாளும்


டிசம்பர் 25, 1968-இல் கீழ்வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய தலித்துகள் மீது நடந்த தாக்குதலில் 44 தலித்துகள், பெண்களும் குழந்தைகளும், உயிரோடு கொளுத்தப்பட்டது 1967-இல் சமூக நீதி முழக்கமிட்டு ஆட்சியைப் பிடித்திருந்த திமுகவுக்கு இச்சம்பவம் பெரும் களங்கமானது. இந்நூலில் அண்ணாதுரை “கூலி உயர்வு கேட்டு போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காக கிசான் போலீஸ் என்ற படைப்பிரிவை தஞ்சாவூர் மாவட்டத்தில் உருவாக்கியிருந்தார்” எனும் செய்தி  சொல்லப்படுகிறது. சொல்லப்படும் குற்றச்சாட்டின் முக்கியத்துவம் கருதி அச்செய்திக்கான ஆதாரத்தையும் ஆசிரியர் சுட்டி இருக்கலாம். 

இளையபெருமாள் பெரியார் பற்றி எதிர்மறையான கருத்துக் கொண்டிருந்தார். 1948-ஆம் ஆண்டு பெரியாரை இளையபெருமாள் நேரில் சந்தித்து சந்தித்து இழிதொழில் மறுப்பு போராட்டத்துக்கு ஆதரவு கோரிய போது பெரியார் “உங்கள் சமூகத்தவர்கள் இந்தத் தொழில்களை செய்யவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்” என்று வினவினாராம். 1998-இல் ஒரு பேட்டியில் இளையபெருமாள் தலித்துகளுக்காக “உண்மையாக பாடுபட்டதாக தெரியவில்லை” என்றார். 

“எழுதாக் கிளவி” நூலிலும் இளையபெருமாள் பெரியார் குறித்துச் சொன்ன ஒரு எதிர்மறை செய்தியை ஸ்டாலின் ராஜாங்கம் விவரிக்கிறார். பெரியாரோடு பணியாற்றிய தொண்டு வீராசாமி பெரியாரிடமிருந்து பிரிந்ததற்கு காரணம் தனிப்பட்ட காரணங்கள் என்று “பெரியார்: ஆகஸ்டு 15’ என்ற நூலில் எழுதும் எஸ்.வி.ராஜதுரை அக்காரணங்கள் என்னவென்று விவரிக்காததோடு அம்பேத்கர் விழா நடத்தியதால் விராசாமி பெரியாரால் வெளியேற்றப்பட்டார் என்ற இளையபெருமாளின் குற்றச்சாட்டை மறுக்கும் ஆதாரங்கள் இல்லாமல், “அபத்தமானது; அருவருக்கத்தக்க குற்றசாட்டு” என்று எஸ்.வி.ஆர் புறந்தள்ளினார் என்கிறார் ஸ்டாலின். 

இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே திமுக உறுப்பினர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வன்னியர் சார்பாகவே செயல்பட்டது சொல்லப்பட்டது. இளையபெருமாள் வரலாற்றில் வன்னியர்-பறையர் மோதல் மிகப் பிரதானமாக இருந்தது. அம்மோதலில் இரண்டு திராவிட கட்சிகளின் மீதும் குற்றச்சாட்டுகளை வைக்கிறார் இளையபெருமாள். ஆயினும் திமுக தன்னை சமூக நீதிக் கட்சி என்று முன்னிலைப்படுத்துவதால் அக்கட்சி மீதே, குறிப்பாக கருணாநிதி மீதே, இளையபெருமாள் சில அதிருப்திகளை தெரிவிக்கிறார். திமுகவின் இந்த சுய பிம்பம் தான் அக்கட்சியை தலித் வரலாற்றெழுத்தில் அதிக விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறது.

கருணாநிதியின் மருமகள் தலித் என்பதாலேயே அவர் இளையபெருமாளை ‘சம்பந்தி’ என்று அழைப்பாராம். கருணாநிதிக்கும் இளையபெருமாளுக்கும் தனிப்பட்ட முறையில் சுமுகமான உறவு இருந்தது என்றாலும் தலித் சமூகத்துக்கு எதிரான சாதிய வன்முறைகள் திமுக ஆட்சியில் அதிகமான போது கருணாநிதி போதிய அளவில் அரசு ரீதியில் செயல்படவில்லை என்ற விமர்சனத்தை இளையபெருமாள் வைக்கிறார். 

நெடுவழி விளக்கு


தலித் ஆளுமைகளும் போராட்டங்களும் குறித்து எழுதிய புத்தகத்துக்கு ‘நெடுவழி விளக்குகள்’ என்ற நயமான சொற்றொடரை ஸ்டாலின் ராஜாங்கம் தலைப்பாக்கினார் நானும் இளையபெருமாள் வாழ்வைக் குறிக்க அதையே வரித்துக் கொண்டேன். 

இளையபெருமாள் குறித்து இதற்கு முன்பே முனைவர் ரவிக்குமார் எழுதி ஒரு புத்தகம் வெளிவந்திருப்பினும் பாலசிங்கம் ராஜேந்திரனின் இந்நூல் இன்றைய வாசகருக்கு மீண்டும் இளையபெருமாளையும் அவர் போராட்ட வாழ்வையும் மீள் அறிமுகம் செய்கிறது. வாழ்க்கை வரலாறு எழுதப் புகும் ஆசிரியர்கள், எழுதப்படுபவர் ஹிட்லர் போன்ற வெகுஜன விரோதி போன்ற ஒருவராக இல்லாத போது, தாம் எடுத்துக் கொண்ட ஆளுமைகள் குறித்து ஏதேனும் ஒரு வகையில் ஈர்க்கப்பட்டிருப்பர், அதனாலேயே எழுத்திலும் அவ்வாளுமைக் குறித்து, விமர்சனம் சொல்லும் போது கூட, ஒரு பரிவு தென்படும். அந்தப் பரிவுத் தன்மை விதந்தோதுதலுக்குள் வீழ்ந்து விடாமல் தடுப்பது சொல்லப்படும் ஆளுமைகளின் சறுக்கல்களையும் வாசகனுக்கு அளிப்பதே. அவ்வகையில் இந்நூலாசிரியர் இளையபெருமாளின் நீண்ட வாழ்வின் ஏற்ற இறக்கங்களை நேர்மையாக அளித்து விடுகிறார். உதாரணத்துக்கு இளைய தலைமுறை தலைவராக உருவெடுத்துக் கொண்டிருந்த திருமாவளவன் பற்றி இளையபெருமாள் தன் அரசியல் தலைமைக்கு எதிராக எதிரிகளால் முன் நிறுத்தப்படுகிறார் என்று கருதியதை பதிவு செய்திருப்பது. அதே போல் இளையபெருமாள் அரசியலில் பல காரணங்களுக்காகக் கண்ட ஏற்றா இறக்கங்களையும் ஆசிரியர் விவரித்திருக்கிறார். 

இந்த நூலின் மீதான விமர்சனங்களாக நான் வைக்கக் கூடியவை சில. இது வரையிலான கட்டுரையிலேயே ஆங்காங்கே ஆசிரியர் என்ன மாதிரியான தகவல்களைச் சேர்த்திருந்தால் புத்தகம் மெருகேறி இருக்கும் என்று சுட்டிக் காட்டி இருக்கிறேன். இளையபெருமாளின் அரசியல் வாழ்வையே சுற்றி இந்நூல் நெய்யப்பட்டிருக்கிறது. அவரின் தனி வாழ்வு பற்றிக் கிட்டத்தட்ட தகவல்கள் ஏதும் இல்லை. நாம் எதிர்கொள்ளும் அனைவரையும் இளையபெருமாள் வழியாகவே பார்க்கிறோம் மற்றவர்கள் பார்வையில் இளையபெருமாள் காட்டப்படும் போதெல்லாம் அவை அவரை மேன்மைப் படுத்தும் நிகழ்வுகளாகவே இருக்கின்றன. சில இடங்களில் இளையபெருமாள் தன் மதிப்பீடுகளாகச் சொல்லப்படுபவை அதிலுள்ள நியாய அநியாயங்களைச் சுட்டாமல் வாசகனுக்கு அளிக்கப்படுகிறது. ஆளுமைகள், இயக்கங்கள் மீதான அவரின் விமர்சனங்களை அவரின் அபிப்ராயங்கள் என்றே வாசகன் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆசிரியர் நினைத்திருந்தால் அதனைச் சற்றே தெளிவுப் படுத்தி இருக்கலாம். 

ஓர் ஆளுமைக் குறித்த வரலாறு முழுமைப் பெறுவது ஆசிரியர் முடிவில் அந்த வாழ்வை ஒரு தொகுப்பாக மதிப்பிட்டு வரலாற்றில் அவர் பார்வையில் என்ன இடம் என்று விளக்கி முடிக்கும் போது தான். இந்நூலில் ஒரு வாசகனாக நான் எதிர்கொண்ட ஒரு முக்கியமான முரண் ஆசிரியர் ஒரு பக்கத்தில் கருணாநிதி அல்லது கருப்பையா மூப்பனார் பற்றி விமர்சனம் வைத்து விட்டு அடுத்து வரும் பக்கங்களில் கருணாநிதியோ ஜி.கே.வாசனோ இளையபெருமாளிடம் காண்பிக்கும் தனிப்பட்ட கரிசனத்தைப் பதிவு செய்கிற போது அதனை “contextualize” செய்திருக்கலாம். திமுக மீது அநேக விமர்சனங்கள் உள்ள புத்தகத்தில் இளையபெருமாளுக்கு வந்த அஞ்சலிகளில் கருணாநிதியின் அஞ்சலியை முதன்மைப்படுத்தி இருப்பது ஆச்சர்யம் மட்டுமல்ல முரணும் கூட எனலாம். 

ஸ்டாலின் ராஜாங்கமின் நூல்களோடு பரிச்சயமுள்ள ஆசிரியர் பொருத்தமான பல இடங்களில் அவர் நூல்களில் இருந்து தகவல்களைச் சேர்த்தளித்திருந்தால் சில முக்கியமான பார்வைகள் முழுமை பெற்றிருக்கும். உதாரணத்துக்கு இட ஒதுக்கீட்டுக்கான வன்னியர் சங்க போராட்டம், பெரியார் பற்றிய இளையபெருமாளின் குற்றச்சாட்டு ஆகியவை. அடுத்தப் பதிப்பில் இன்னும் பட்டைத் தீட்டினால் காலத்துக்கும் உதாரணமாக நிற்க வல்ல வரலாறு இப்புத்தகம். 

இந்தப் புத்தகம் வெளிவந்த வருடம் தான் தலித்துகள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலக்கப்பட்டது, தலித்துகள் கோயிலுக்குள் நுழைவதை வன்னியர்கள் பெருந்திரளாகத் தடுக்கின்றனர், மாதம் தவறினாலும் மலக்குழி மரணங்கள் தவறுவதில்லை. இந்த அநீதிகளுக்கு எதிராகத் தலித் கட்சியான வி.சி.க கூடக் கூட்டணி தர்மம் கருதி சில சமரசங்களோடு தான் எதிர்வினையாற்றுகிறது. திமுக, அதிமுகத் தனித் தொகுதி எம்.எல்.ஏக்களோ கட்சியை மீறி எதுவும் சொல்லவியலா நிலையில் இருக்கிறார்கள். இளையபெருமாள் போல் சுதந்திரமாகச் செயல்படும் ஆளுமைகள் இன்று தலித்தல்லாத கட்சிகள் இல்லை, அக்கட்சிகளும் முன் காலத்திய காங்கிரஸ் போல் அந்தச் சுதந்திரத்தையும் சகிக்காது, ஊக்குவிக்காது. 

இந்நூலை படிப்பதற்கு முன்பு ஸ்டாலின் ராஜாங்கமின் "எழுதாக் கிளவி"-யையும் "நெடுவழி விளக்குகள்" புத்தகத்தையும் வாசித்தால் வாசகருக்கு ஒரு பரந்துப் பட்ட புரிதல் கிடைக்கும். 

பாலசிங்கம் இராஜேந்திரனின் வெற்றி இன்று இளையபெருமாளை மீண்டும் பேசு பொருளாக்கியது. இளையபெருமாள் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் பற்றி அறிவித்த முதல்வர் தன் அறிக்கையில் இப்புத்தகத்தில் இருந்தே சில தகவல்களைச் சுட்டிக் காட்டினார். இளையபெருமாளின் வரலாற்றில் இருந்து மேலதிகமாகப் பல விவாதங்களை வாசகர்கள் தனக்குள்ளாகவோ சமூகமாகவோ நிகழ்த்தத் தூண்டும் வகையில் இப்புத்தகம் அமைந்திருப்பதே ஆசிரியரின் வெற்றி எனலாம். 

நெடுவழி விளக்குகள் கடந்து வந்த தூரத்தை உணர்த்தவும் செல்ல வேண்டிய தூரத்தை அடையாளம் காட்டவும் உதவுவது. இளையபெருமாள் தமிழக வரலாற்றில் ஒரு நெடுவழி விளக்கு. 


References:

1. இளையபெருமாள்: வாழ்க்கைச் சரித்திரம் -- பாலசிங்கம் இராஜேந்திரன்.  (நீலம், 2022)
2. சாதி இன்று - சி.லக்‌ஷ்மணன், ஸ்டாலின் ராஜாங்கம், ஜெ.பாலசுப்ரமணியம், அ.ஜெகநாதன், அன்புசெல்வம். (நீலம், 2022)
3. நெடுவழி விளக்குகள்: தலித் ஆளுமைகளும் போராட்டங்களும் - ஸ்டாலின் ராஜாங்கம். (காலச்சுவடு, 2022)
4. விழுப்புரம் படுகொலை 1978 -- டி.டேவிட், பதிப்பாசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம். (காலச்சுவடு, 2012)
5. எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள் - ஸ்டாலின் ராஜாங்கம். (காலச்சுவடு, 2018. 


No comments: