Sunday, August 7, 2016

'Gandhi's dress, a 'costume': Mathimaran's Calumny. "காந்தியின் உடை ஒரு 'காஸ்டியூம்' - மதிமாறனின் அவதூறு"

திராவிட இயக்கத்தினருக்கே உரித்தான வரலாறைப் பற்றிய அறியாமையும் அதனாலேயே உண்டாகும் தடித்தனத்துடனும் மதிமாறன் என்பவர் காந்தி தரித்த உடையை ஒரு 'காஸ்டியூம்' என்றும் ஏழைகளின் ஏழ்மை குறித்துக் கவலைக்கொள்ளாதவர் என்றும் மாட மாளிகைகளிலேயே காந்தி தங்கினார் என்றும் அவதூறாக எழுதியுள்ளார். அதற்குத் திமுகவில் பொறுப்பில் இருக்கும் ஒரு இஸ்லாமியரும் 'லைக்' போட்டுள்ளார். மதிமாறனையெல்லாம் மதித்துப் பதில் சொல்ல வேண்டுமா என்று ஒதுங்குவது சரியல்ல. மறுக்கப் படாத அவதூறுகள் மீண்டும் மீண்டும் உரைக்கப்பட்டு உண்மைகளாக உலா வரும் கோயபல்ஸ் தந்திரத்திற்கு நாம் துணைப் போகலாகாது.

அந்த இஸ்லாமிய நண்பரை மனத்தில் நிறுத்தி என் மறுப்புரையைத் தொடங்குகிறேன். அகா கான் அரண்மனையில் சிறை வைக்கப் பட்டது, பிர்லாவின் மாளிகையில் தங்கியிருந்த போது கொலையுண்டது ஆகியன போன்ற தருணங்களை வைத்துக் காலம் காலமாகக் காந்தியின் மீது வீசப்பட்ட அவதூறுகளைத் தான் மதிமாறன் கையில் எடுத்துள்ளார். உண்மையென்ன?

நவ்காளி யாத்திரைப் பற்றி லாரி காலின்ஸும் டாமினிக் லேபியரும் எழுதிய "Freedom at Midnight" புத்தகத்தில் சொல்கிறார்கள், "ஒவ்வொரு கிராமத்திலும் காந்தியின் வழக்கம் ஒன்றே. உலகத்தின் மிகப் புகழ்பெற்ற ஆசிய மனிதன் ஒரு கிராமத்தை வந்தடைந்தவுடன் ஏதாவது ஒரு குடிசைக்குச் சென்று, இஸ்லாமியரின் குடிசையாக இருத்தல் கூடுதல் தகுதி, தங்குமிடத்திற்காக இறைஞ்சி நிற்பார். இடம் மறுக்கப்பட்டால் வேறு குடிசைக் கதவைத் தட்டுவார். 'எனக்கு இடம் கொடுப்பார் யாருமில்லையென்றால் மர நிழலில் சந்தோஷமாக ஒதுங்குவேன்'". மத நல்லிணக்கம் மட்டுமே காந்தியின் குறிக்கோளாக இருக்கவில்லை என்கிறார்கள் அந்த ஆசிரியர்கள். இந்தியர்களின் சுகாதாரமின்மை குறித்துச் சினம் கொண்ட காந்தி கிராமத்தில் கழிப்பறைகள் இருக்கின்றனவா என்று கண்டறிந்து அப்படியில்லையென்றால் எளிமையான கழிப்பிடங்கள் கட்டுவது பற்றி வகுப்பெடுத்தார். காந்தியின் வழியில் விஷமிகளால் இறைக்கப்பட்டிருக்கும் மலத்தினைக் காந்தியே அப்புறப்படுத்துவார். உலகப்பிரகாரமான அன்றாடக் கணக்குகளின் படி நவ்காளி யாத்திரை ஒரு தோல்வியே என்று சொல்லும் ஜோசப் லெலிவெல்ட் அந்த யாத்திரை நடந்து அரை நூற்றாண்டு கழித்து 2009-இல் நடந்த மத நல்லிணக்கக் கூட்டத்தில் அந்த யாத்திரையின் எதிரொலியினைப் பார்த்து வியந்து இது தான் காந்தியின் வெற்றி என்று அவர் புத்தகத்தில் கூறுகிறார்.காஸ்டியூமாம் காஸ்டியூம்.

நவ்காளியில் காந்தி. லெலிவெல்டின் புத்தகத்திலிருந்து.
இந்தியாப் பிரிவினை செய்யப்படும் என்றறிந்தப் போது காந்தி ஒருவர் தான் அது எத்தகைய கொடூரமாக இருக்கும் என்று ஆரூடம் சொன்னார். 'தாயின் கர்ப்பத்தைக் கிழித்து இந்தத் தேசங்கள் பிறக்கும்' என்றார். மதக் கலவரங்கள் வட இந்தியா முழுக்க விழுங்கிக் கொண்டிருக்க வங்காளம் சிதறுண்டால் உள் நாட்டுக் கலகத்திற்கினணையான சூழல் உருவாகி இந்தியாவே சிதறலாம் என்று நேரு, பட்டேல், மவுண்ட்பாட்டன் அஞ்சினர். ராணுவமோ பஞ்சாபில் குவிக்கப்பட்டு விட்டது. காஷ்மீர் எல்லையில் பதட்டம். 1946-இல் நேரடி நடவடிக்கை தினம் என்று அறிவித்து ரத்த வெறியாட்டத்திற்குப் பிள்ளையார் சுழிப் போட்ட முஸ்லிம் லீக்கின் தலைமை கல்கத்தாவில் இந்துக்கள் பழி வாங்கத் தொடங்கினால் குருதிப் பெருக்கெடுத்து ஓடும் என்று தெரிந்துச் செய்வதறியாது திகைத்தனர். எல்லோர் மனத்திலும் எழுந்த பெயர் 'காந்தி'.

காந்தி புனதராகப் போற்றப்படுவதை ரசிக்காத வேவல் மவுண்ட்பாட்டனிடம் "wily Gandhi" என்றார். மேற்கத்திய ஆசிரியர்கள் பலரும் காந்தியின் புனிதப் பிம்பத்திற்குப் பின் ஒரு பனியா இருப்பதைப் பல முறைச் சுட்டிக் காட்டியுள்ளனர். அவர் ஏமாற்றுக்காரர் என்றல்ல அவருடைய எதார்த்தவாதம், மக்களின் உணர்வை புரிந்து அவர்கள் அளவில் செயல் திட்டங்களை வகுத்து நடைமுறை படுத்தக் கூடியதும் அதே சமயம் ஓர் உயர்ந்த கொள்கையின் பால் அவர்களைத் தவறாமல் ஈர்க்கும் சாமர்த்தியமும் ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் நாடகத்தன்மை கொண்ட போராட்டத் தருணங்களை முன்னெடுக்கும் திறன் ஆகியவற்றை வியந்திருக்கின்றனர். கல்கத்தாவில் அந்தக் காந்தி மீண்டும் ஒரு முறை ஒளிர்ந்தார்.

1946 கலவரத்தைத் தூண்டி வழி நடத்தியதில் முக்கியஸ்தரான ஷகீத் சுராவர்தியினைக் காந்தி தன்னோடு வந்து தங்கும் படி அழைத்தார். காந்தி தங்குவதற்குத் தேர்ந்தெடுத்த இடம் பெலியாகட்டா என்னும் சேரி. பெலியாகட்டா முஸ்லிம்களும் இந்துக்களும் வாழ்ந்த இடம் மட்டுமல்ல கலவரங்கள், ஆயுதங்களோடும் வெடிகுண்டுகளோடும், நடைப்பெற்ற இடம். காந்தியின் திட்டம் கேள்விப்பட்ட சர்தார் பட்டேல் எள்ளலோடு "So you have got detained in Calcutta..[in] a notorious den of gangsters and hooligans. And in what company too!" என்று டெல்லியில் இருந்து உள்துறை அமைச்சராக எழுதினார்.

காந்தியும் சுராவர்தியும் தங்கிய 'ஹைதாரி மன்ஸில்' (Hydari Manzil) "ஒரு பாழடைந்த ஒற்றைத் தளம் கொண்ட வீடு. ஒரு கழிப்பறை, ஒரு சார்ப்பாய்" என்கிறார் லெலிவெல்ட். சத்தியாகிரகம் கோழைகளுக்கானது அல்ல என்று சொன்ன காந்தி கலவரத்தைத் தடுப்பதிலும் உயிர்களைக் காப்பதிலும் உயிர் தியாகம் செய்ய அழைப்பு விடுத்தார். தான் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டால் தன்னைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் மற்றவர்கள் கவணிக்கப் படமாட்டார்கள் என்று சொல்லி உண்ணாவிரதம் மேற்கொண்டார் காந்தி.

உண்ணாவிரதத்தால் குண்டர்கள் மனம் மாறுமா என்று கேட்ட ராஜாஜியிடம் குண்டர்கள் உருவாக்கப் படுக்கிறார்கள், அவர்களை உருவாக்குபவர்களின் ஆன்மாவோடு தான் போரிடுவதாகவும் அப்போரில் தன் உயிர் போவது உயிரோடு இருந்து ஒன்றும் செய்ய முடியாமலிருப்பதை விட மேல் என்றார். மனங்கள் மாறியது. இந்துக்களும், முஸ்லிம்களும் காந்தியிடம் சரண் அடைந்தனர். மவுண்ட்பாட்டன் "பஞ்சாபில் 55000 எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் இருக்கிறார்கள் ஆனால் கலவரத்தை அடக்க முடியவில்லை. கல்கத்தாவில் ஒற்றை மனிதர் கலவரத்தை அடக்கி விட்டார்" என்று அதிசயித்தார். அவதூறுக்கு லைக் போட்ட இஸ்லாமிய நண்பருக்கு வரலாறுத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். காந்தி எங்கே தங்கினார் என்று ஆராய்பவர்கள் அவரால் பிழத்த உயிர்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடத் தயாரா?

Hydari Manzil as in 1947 (More info and pictures in http://sohamchandra.blogspot.com/2015/10/gandhi-bhawan-hyderi-manzil.html)


அடுத்து டெல்லிச் சென்ற காந்தி வழக்கமாகத் தங்கும் சேரியில் தங்கவில்லை. காந்தித் தங்குகிறார் என்பதாலேயே அடிப்பொடிகள் அங்கு வசிப்பவர்களுக்குத் தொல்லைக் கொடுத்ததாலும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பலர் அங்கே குடியேறியதால் இட நெருக்கடி ஏற்பட்டதால் பிர்லாவின் மாளிகையில் காந்தி தங்கினார் என்கிறார் லெலிவெல்ட். அந்தச் சேரிகளில் காந்தித் தங்கிய முன் காலங்களில் அவரைக் காண்பதற்காக எல்லோரும் தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டோர் வாழ்ந்த அந்தச் சேரிக்குச் சென்றதையும் லெலிவெல்ட் சுட்டிக் காட்டுகிறார்.

இர்வினுடன் ஒப்பந்தம் கையெழுத்தானப் பின் இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்ற காந்தி ஹோட்டல்களையும் அவர் தங்கள் வசதியான வீடுகளில் தங்க வேண்டுமென்றும் விரும்பிய பலரையும் ஒதுக்கிவிட்டு ஏழ்மையான பகுதியான ஈஸ்ட் எண்டில் சாதாரணக் குடியிருப்பில் தான் காந்தி தங்கினார். இறக்குமதித் துணிகளுக்கெதிரான காந்தியின் கொள்கையால் பாதிக்கப்பட்ட லண்டன் மில் தொழிலாளிகள் ஆயிரக்கணக்கில் கூடி காந்தியை அரவனைத்து இன்முகம் காட்டிக் கொண்டாடினர்.வரலாறில் அதற்கு முன்னும் பின்னும் தங்கள் பொருளாதார இழப்பையும் பொருட்படுத்தாது தங்கள் நாட்டிற்குச் சவால் விட்ட ஒரு தலவைனை அந்நாட்டின் குடிமக்கள் கொண்டாடிப் பார்த்தது கிடையாது.

காந்தி இங்கிலாந்தில் தங்கிய இடம் (http://www.ppu.org.uk/memorials/peace/london/kingsley.html) 
தொழிலாளிகளோடு காந்தி (http://dilipsimeon.blogspot.com/2012/10/gandhi-visits-poor-people-of-england-in.html)


காந்தி அவரின் அரை நிர்வாணக் கோலத்தில் இர்வினைக் காணச் சென்றது சகிக்காமல் வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில், "கிழக்கில் வெகு பரிச்சயமான அரை நிர்வாண பக்கிரியைப் போல் உடை தரித்து வைஸ்ராயின் மாளிகையின் படியேறி நம் மகாராஜாவின் பிரதிநிதியான வைஸ்ராயோடு சரி சமமாகப் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறார் (காந்தி)" என்று முழங்கினார். காந்தியை வன்மத்தோடு இகழ்ந்தபோதும் சர்ச்சில் அதனூடாக முக்கியமான ஒரு தருணத்தைத் தனக்கேயுரிய வரலாற்றுத் திறனோடு அடையாளம் காண்பிக்கிறார். காந்தி வெறும் கலகக்காரராகவோ, ஓர் குழுவின் தலைவராகவோ இர்வினைக் காணச் செல்லவில்லை மாறாக ஒரு தேசத்தின் பிரதிநிதியாக வைஸ்ராயோடு சரி சமமாக உரையாடச் செல்கிறார் என்பது தான் அது.

இங்கிலாந்து ராஜாவைக் காணப் போகும் போதும் அரை நிர்வாணமாகவே சென்ற காந்தி மகாராஜா இருவருக்கும் போதுமான உடை அணிந்திருந்ததாக நகைத்தார்.

தண்டியாத்திரையின் போது காந்தி தங்கிய குடிசை வெறும் குச்சிகளாலும் சில ஓலைகளாலும் கட்டப் பட்டது. தன் பரிவாரத்திற்காகச் சூரத்திலிருந்து பால் வரவழைக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட காந்தி சினந்தார். தன்னோடு நடைப் பயணம் மேற்கொண்டவர்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு கேட்டார்.

தண்டி அருகே காரடி எனும் ஊரில் காந்தி பண்ணிரண்டு நாட்கள் இந்தக் குடிசையில் தங்கினார் (புகைப்படம்: Gandhi's hut at Karadi Dandi
தன்னுடைய உப்புச் சத்தியாகிரக யாத்திரையில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்றார் காந்தி ஏனெனில் பெண்கள் இருந்தால் ஒரு வேளை ஏகாதிபத்தியத்தின் அதிகார இரும்புக் கரம் இளகி எங்கே தன் முழுமையான வன்மத்தைக் காண்பிக்காமல் போய்விடுமோ என்ற ஐயப்பாட்டினால். பின்னாளில் தான் எதிர்ப்பார்த்தக் கடுமையான ஷரத்தை விடச் சாதாரணமானச் சட்ட விதியைக் கான்பித்துக் கைது செய்யப்பட்ட போது காந்தி வருத்தப்பட்டார்.

இந்தியாவை முதலில் அறிந்துக் கொள் என்று கோகலே சொன்னதற்காக ரயிலில் மூன்றாம் வகுப்பிலேயே இந்தியாவைச் சுற்றிப் பார்த்து அப்பயணத்தில் தான் காண நேர்ந்த ஏழை இந்தியா பற்றி மிகக் கவலையோடு காந்தி எழுதியது முக்கியமான ஆவணம்.

மேற்சொன்னவற்றையெல்லாம் படிப்பவர்கள் "சரி, அப்படியென்றால் காந்தியை விமர்சிக்கவே கூடாதா?" என்பார்கள். அப்படியில்லை. அவர் காலத்திலேயே அவர் பிரதம சீடர் நேரு காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளை நிராகரித்துள்ளார் அவை ஏழ்மையைப் போக்க வல்லமையற்றதென்று சொல்லி. காந்தி ஏழ்மையைத் துதிபாடுவதை நேரு ரசித்ததேயில்லை. பாரதி கூடக் காந்தியின் செல்வத்தை நிராகரிக்கும் கொள்கையை மறுக்கிறார். காந்தியின் பொருளாதாரக் கொள்கையை நிராகரிப்பது என்பது வேறு அவருக்கு ஏழைகள் பால் இருந்த அக்கறையை மறைத்து ஏழைகளைப் பற்றிக் காந்திக்குக் கவலையில்லை என்று அவதூறுச் சொல்வது வேறு.

முன்பொருமுறை அரவிந்தன் நீலகண்டன் காந்தியின் பூர்வீக விட்டின் புகைப்படத்தை வெளியிட்டு காந்தி ஒன்றும் ஏழைப் பங்காளி இல்லை என்ற தொனியில் எழுதியதாக நினைவு. திராவிட இயக்கத்தினரும் இந்துத்துவர்களும் இணையும் புள்ளி காந்தியை வெறுப்பது. கல்கத்தா கலவரத்தை காந்தி அடக்கியப்பின்னர் ராஜாஜி "இன்று காந்தியின் உயிர் இந்துக்களை விட இஸ்லாமியர்களிடம் பத்திரமாக இருக்கிறது" என்றார். எவ்வளவு பயங்கரமான தீர்க்கத் தரிசனம்.

மதிமாறன் போன்ற உள்ளூர் பீரங்கிகள் முதல் அருந்ததி ராய் போன்ற அரைவேக்காடு உலகப் பிரசித்தமான பீரங்கிகள் வரை காந்தியைப் புழுதி வாரித் தூற்றிக் கொண்டேயிருக்கலாம் ஆனால் உண்மையைச் சிறிதேனும் அறிய முற்பெடும் எவெரும் மகத்துவத்தை எளிதில் அறியலாம். மீண்டும் ஒரு முறை அவதூறுகளை மறுப்பதற்காகக் காந்தியைப் பற்றிப் படித்த போது மீண்டும் ஒரு முறை காந்தியின் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது.

ஐன்ஸ்டீன் காந்தி பற்றிச் சொன்னது உலகப் பிரசித்தம். ஆயினும் இன்னுமொரு முறை அதை நினைவுக் கூர்தல் அவசியம். "இப்படியொருவர் சதையும் எலும்புமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் என்பதை வருங்காலச் சந்ததியினர் நம்புவதற்கு மிகவும் பிரயத்தனப்படுவார்கள்".

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!
அடிமை வாழ்வ கன்றிந் நாட்டார் விடுதலை யார்ந்து, செல்வம்
குடிமையி லுயர்வு, கல்வி ஞானமும் கூடி யோங்கிப்
படிமிசைத் தலைமை யெய்தும் படிக்கொரு சூழ்ச்சி செய்தாய்!
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய, புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!


References:


  1. கோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட அம்பேத்கரும் - மதிமாறன் (https://www.facebook.com/mathimaranv/posts/10206888757719555)
  2. "Mahatma" - D.G. Tendulkar Vol 3 & 8
  3. Freedom at Midnight -- Larry Collins and Dominique Lapierre
  4. Great Soul: Mahatma Gandhi and his struggle with India -- Joseph Lelyveld
  5. Gandhi - William Shirer
  6. On the Salt March: Historiography of Mahatma Gandhi's march to Dandi --- Thomas Weber.
  7. Gandhi's Visit to London (a short documentary ) 



9 comments:

silviamary.blogspot.in said...

யார் என்ன சொன்னாலும் இந்தியாவின் உருவாக்கத்திற்கு காந்தியின் பங்கை மறக்கவோ மறைக்கவோ முடியாது. மதிமாறன் காந்தியின் உடையை விமர்சித்திருக்கிறார். அவ்வளவு தானே! காந்தியைக் கொன்ற இந்துத்துவவாதிகளுடன் அவரை ஏன் சமப்படுத்திப் பேசுகிறீர்கள்!
ஏழ்மையை ஒழிக்கப் படுபடவேண்டுமே தவிர ஏழையைப் போல் உடை அணிவேன் என்று வாழ்வது எப்படி சரியாகுமென்று கேட்கிறார்? இந்த நாட்டில் உள்ள ஏழைகள் எல்லோருக்கும் வயிறார உணவு கிடைக்கும் வரை நானும் உண்ணவே மாட்டேன்; அல்லது அவர்களைப் போலவே நானும் ஒருவேளை அதுவும் கூழோ கஞ்சியோ மாதிரியான எளிய உணவுகளையே தான் உண்பேன் என்று ஏன் பிடிவாதம் பிடிக்கவில்லை. ஆட்டுப்பால் மாதிரியான அபூர்வ உணவுகளைத் தானே தேர்ந்தெடுத்து உண்டார். அவரின் எளிமையைப் பேணுவதற்கு நிறைய செலவு செய்ய வேண்டி இருந்தது என்பதும் உண்மை தானே! அவரின் வாழ்க்கை வரலாறான சத்திய சோதணையை வாசிக்கும் போது அவர் மிகவும் பிடிவாதமானவராக தரிசனமாகிறாரே தவிர எளிமையானவராக தரிசனமாகவில்லை. எததெற்கோ உண்ணாவிரதமிருந்த காந்தி இந்தியாவில் தீண்டாமை ஒழியும் வரை தலித்துகளும் எல்லோராலும் சரிசம்மாக நடத்தப் படும்வரை எல்லாக் கோயில்களிலும் அவர்களும் புழங்குவதை சாதி இந்துக்கள் அனுமதிக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று ஏன் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்து அவர் உண்ணாவிரதம் தொடங்கியிருந்தால் அவரை சாதி இந்துக்கள் சாகட்டுமென்று விட்டிருப்பார்கள் என்பது தானே கசக்கிற நிஜம் நண்பரே! ஆங்கிலேயர்கள் பொத்திப் பொத்திப் பாதுகாத்த மகாத்மாவை சுதந்திர இந்தியாவில் நம்மவர்களால் இரண்டு வருஷங்கள் கூட உயிரோடு விட்டு வைத்திருக்க முடியவில்லையே! அதனால் மதிமாறன் போன்றவர்கள் காந்தியை விமர்சிப்பதை விளங்கிக் கொள்ளுங்கள். அவர் என்றைக்கும் அவதூறு செய்ததில்லை. விவாதத்திற்குத் தயாராகவே இருக்கிறார். எனக்கும் காந்தியை ரொம்பவும் பிடிக்கும். ஆனால் புனித பிம்பமாக அல்ல; சக மனிதராக.

GG said...

வாழ்க நீ! எம்மான்

இந்த வரிகளை எத்தனை முறை படித்தாலும் தொண்டை சிறிது நேர அடைத்து போகிறது. இனம் புரியாத உணர்வு.

Unknown said...

நேசத்தை நெகிழச் செய்தது உங்கள் பதிவு. இன்னொரு காந்தியை இந்த நாடு அல்ல உலகம் இனி காணுமா என்பதே சந்தேகம் தான்.

kmr.krishnan said...

மஹத்மா காந்திஜி பிறந்து வளர்ந்த வீடு போர்பந்தரில் உள்ளது. அந்த இல்லம் காந்திஜியின் தாத்தா உத்தம் சந்த்(ஓதா) காந்தியால் கட்டப்ப்ட்டது.தரைதளம்,முதல், இரணடாவது தளம் என்று மூன்றடுக்கு மாடி வீடு. வெளியில் இருந்து பார்ப்பதற்கு பெரிய கட்டிமாகத் தெரிந்தாலும், உள்ளே சென்றால் சிறிய சிறிய அறைகள் ஒன்றோடு ஒன்று கதவுகளால் இணைக்கப்பட்ட ப வடிவக் கட்டிடம். சுமார் 2500 முதல் 3000 சதுர அடி இருக்கலாம்.(தோராய மதிப்பு)
உத்தம் சந்த் காந்திக்கு ஆறு ஆண் பிள்ளைகள்.அதில் மஹாத்மா காந்திஜியின் தந்தை கரம் சந்த் (கபா) காந்தியும் ஒருவர். ஆகவே வீடு ஆறு பாகமாகப் பிரிக்கப்பட வேண்டும்.அதில் ஒரு பாகம் காந்திஜியின் தந்தைக்கு வந்திருக்கும். அவருடைய பாகத்தின் அளவு 500‍ முதல் 600 சதுர அடிவரை இருக்கலாம். காந்திஜிக்கு இரண்டு மூதத‌ சகோதரர்கள்.மூன்று சகோதரிகள்.சகோதரிகளுக்கு சொத்துரிமை அக்காலத்தில் இல்லை என்று கொன்டால் காந்திஜியின் பங்கு 200 சதுர அடிதான் இருக்கலாம்.
இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால் காந்திஜியின் வீட்டினை புகைப்படத்தில் பார்த்துவிட்டு அதன் தோற்றத்தைக் கொண்டு காந்திஜி பெரிய பணக்காரர் என்று செய்தியைக் கசிய விடுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு விளக்கமாகத்தான் இதைச் சொல்கிறேன்.
காந்திஜியே தனது மூதாதையர்கள் போர்பாந்தர், ராஜ்கோட் சமஸ்தானங்களில் திவான், பிரதம மந்திரியாக இருந்ததாகச் சொல்கிறார். அதனால் அதிகச் செல்வம் படைத்தவறாக இருந்திருக்கலாமோ என்று ஒரு யூகம்.ஆனால் சமஸ்தானமோ ஆங்கிலேயரின் நேரடிக் கட்டுப்பாட்டில்.எனவே இந்த திவான் பதவியெல்லாம் வெற்று அலங்காரப் பதவிதான்.வருமானம் ஒரு நடுத்தர வர்க்கத்துக்கானதுதான். மேலும் மகாதேவ தேசாய் எழுதிய காந்திஜியின் சரித்திரத்தில் அவர்கள் திவான் எல்லாம் அல்ல‌.வெறும் வரிவசூல்காரர்கள்தான் என்று சொல்கிறார்.காந்திஜி ஏன் திவான், பிரதம மந்திரி என்று சத்திய சோதனையில் எழுதினார் என்பது விளங்கவில்லை.
ஏழைகளிடம் அடித்துப் பிடித்து வரி வசூல் செய்த தன் மூதாதையர்கள் மேல் காந்திஜிக்கு வருத்தம் இருந்தது என்று அவர் கடிதங்களில் இருந்து அறிகிறோம்.
பாரிஸ்டெர் படிப்புப் படிக்க இலண்டன் செல்ல மனைவியின் நகைகள் விற்கப்பட்டன.அந்த அளவு நகைகள் மனைவியிடம் இருந்தது என்றால் அவர் பணக்காரர்தானே என்று ஒரு வாதம். காந்திஜி சம்பாதித்து வாங்கிக் கொடுத்த நகைகளல்ல அவை. திருமணத்தின் போது கஸ்தூர்பா அன்னையின் இல்லத்தார் அவர்களுக்குச் சீதனமாகக் கொடுத்தது.
நல்ல படிப்பு அனுபவமும், ஆய்வு மனப்பான்மையும் உள்ள ஓர் அறிவுஜீவி ,ஆனால் காந்திஜியின் மீது காரணமில்லாமல் காழ்ப்பு உண‌ர்வு கொண்டவர்,
அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரைக்கு இப்போது தான் எதிர் வினை ஆற்றியுளேன்.Better late than never.
My FB ENTRY Dt 29 July 2016

Athenaeum said...

ஐயா உங்களுக்கு சுத்தமாக வரலாறு தெரியவில்லை. காந்தியை யாரும் சூப்பர் மேன் என்று சொல்லவில்லை. காந்தியின் பூனா ஒப்பந்த உண்ணாவிரதம் மிகப்பெரிய திருப்புமுனை. அதன் பிறகு அவர் தேசம் முழுதும் தீண்டாமை ஒழிப்பு யாத்திரை மேற்கொண்டார். இன்றைக்கு தலித்துகள் அடைந்திருக்கும் முன்னேற்றத்தில் காந்தியின் பங்கு அளப்பரியது.

பாகிஸ்தான் உருவாக்கம் காந்தியால் தான் என்பது மிகத்தவறான புரிதல்.

பகத் ஸிங் விவகாரத்தில் காந்தி அவதூறு செய்யப்படுகிறார். விரிவாக எழுதுகிறேன். ஆனால் உங்களைப்போன்றவர்களுக்கு பகத் சிங் பற்றியெல்லாம் பெரியக் கவலையெல்லாம் கிடையாது என்பது எனக்குக் தெரிகிறது. உங்களுக்குத் தேவை எதையாவது காந்தியின் மீது வீச வேண்டும் என்பதே.

Muthu said...

பத்ரி சேஷாத்ரி தளத்தில் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் வே.மதிமாறன் என்பவரை குறிப்பிட்டீர்களா என்று தெரியவில்லை. அவரைத்தான் எனில், உங்களது தளத்தின் தரத்திற்கு அது மிக அதிகம். மற்றபடி மிக காத்திரமான கட்டுரை.

Athenaeum said...

ஆமாம் அவரை தான் குறிப்பிட்டேன். காந்தி மாளிகைகளில் தங்கினார் என்ற அவதூறு மிகப்பிரபலம். ஆகவே இது மற்றவர்களுக்குமான மறுப்பு

A.SESHAGIRI said...

மதிமாறன் போன்றவர்களின் எழுத்தின் தரம் பொருட்படுத்தவேண்டியவை அல்ல,இருந்தபோதிலும் காந்தியை பற்றி சிறிதும் அறியாமல் மனம் போனபோக்கில் எழுதும் இவரையும் மதித்து உண்மை நிலையை எழுதியுள்ள உங்களுக்கு நன்றி. மேலும் இதற்கு பின்னூட்டம் இட்ட அன்பர் காந்தியை அவர் அவதூறு செய்யவில்லை என்று சாதிக்கிறார்.ஆனால் மதிமாறனின் கீழ்கண்ட கருத்துக்கு என்ன அர்த்தம் என்பது எனக்கு புரியவில்லை.
"அண்ணல் அம்பேத்கரின் உடை ஆதிக்க எதிர்ப்பு குறியீடு. காந்தியின் உடை ஏழ்மையை தன் செல்வாக்கிற்கு பயன்படுத்திய பாணி, (கிழிந்த உடையில் இருக்கும் கிழவியை கட்டிப்பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த எம்.ஜி.ஆர். பாணி)"

சங்கர் said...

கொண்டாடப்பட வேண்டிய எல்லாவற்றையும் வீம்புக்கு எதிர்த்து விளம்பரம் தேடிக்கொள்வது என்பது திராவிட இயக்கங்கள் வளர்த்தெடுத்த ஒரு வியாதி.

ராஜராஜ சோழன் முதல் தமிழருவி மணியன் வரை பாரதியார் முதல் சிவாஜி கணேசன் வரை பல மதிக்கத்தக்க் பெருமகன்களை சாதீய , சித்தாந்த ரீதியான காழ்ப்புணர்வு ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்து, சகட்டு மேனிக்கு வசை பாடும் ஒருவரின் கருத்துக்கு உங்களது உண்மை ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்த மறுவினை சரியான பதிலடி.

சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்திலும் அண்ணல்இ காந்தியை பற்றி இது போன்ற கண்டிக்கத்க்க கருத்து மறைமுகமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு காந்தியை விட உண்மையாக பாடுபட்டவர் எவருமில்லை என்பதே உண்மை. எளிமையும் தியாகமும் இன்று ஒரு சிலருக்காவது நினைவிருப்பதற்கு அவர் மட்டுமே காரணம்.