ஜெயகாந்தன் இறந்ததாகச் செய்தி வந்தவுடன் நண்பரொருவர் "ஜெயகாந்தன் போயாச்சாம். இந்தியாவில் யாருக்கும் அஞ்சலி எழுதத் தெரியாது என்று ஆரம்பித்து ஒருவர் எழுதுவார்" என்றார். என்னைத் தான் சொன்னர். இன்னொரு நண்பர் சமீபத்தில் தான் இறக்க நேர்ந்தால் யார் யார் என்னவெல்லாம் எழுதுவார்கள் என்று எழுதினார்: "அரவிந்தன், இந்தியர்களுக்கு அஞ்சலி எழுதத் தெரியவில்லை என்பார்".
இந்தியாவில் எழுதப்படும் அஞ்சலிக் குறிப்புகள் குறித்த ஆதங்கம் பிரசித்தம். கூடவே சிலரின் மரணத்தை ஒட்டி நான் எழுதிய குறிப்புகள் சில நண்பர்களை முகச் சுளிப்புக்கும் ஆளாகியிருக்கிறது.
நண்பர் சுரேஷ் கண்ணன் மிகவும் ஆதங்கத்தோடு 'அறிவு ஜீவிகள்' ஒருவரின் இறப்பைக் குறித்து எழுதும் தருணத்தில் தங்கள் மேதா விலாசத்தை நிலை நாட்டவும் கறார் தன்மையை வெளிப்படுத்தவும் பாமரர்கள் செய்யத் தயங்கும் அநாகரீகத்தைச் செய்கிறார்கள் என்று எழுதினார்.
அக்குறிப்புப் பொதுவில் எழுதியது என்று அவர் சொன்னாலும் இக்கேள்விகள் என்னை நோக்கி வேறு சிலராலும், நண்பர்கள் உட்பட, கேட்கப்பட்டதாலும் இது போன்ற சர்ச்சைகளில் வலுவில் ஆஜராகும் என் குணத்திற்கேற்ப இதோ என் பதில்.
"ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்"
எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய புத்தகத்திற்கு அறிமுகம் எழுதிய ஜெயமோகன் அதில் எம்.எஸ்.சின் பூர்வீகம் குறித்து எழுதி விட்டார். பிடித்தது சனி அவருக்கு. சரமாரியாக மின்னஞ்சல்கள் தாக்கின. "ஏன் அவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி எழுத வேண்டும்", "கலையை ரசித்தால் போதாதா? இந்த விவரமெல்லாம் யாருக்கு வேண்டும்?" அவரும் அசராமல் "ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்" என்று தலைப்பிட்டு எழுதினார் (http://www.jeyamohan.in/36561#.WEi7Lzvijoo)
"நாம் இன்னும் நம்முடைய பழங்குடி-நிலப்பிரபுத்துவ மனைலைகளிலேயெ இருக்கிறோம்"."காமராஜ் பற்றியோ அண்ணாத்துரை பற்றியோ ஒரு உண்மையான வரலாறு இங்கு எழுதப்படவில்லை. நம்முடைய பழங்குடி மனநிலை எழுதவும் விடாது".
எம்.எஸ்.சின் பாடலை ரசிப்பதற்கு அவரின் தனி வாழ்க்கையின் உண்மைகள் தெரிய வேண்டியதில்லை. ஆனால் எம்.எஸ் எனும் கலைஞரைப் பற்றி எழுதும் போது அவர் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளும் அதன் பண்பாட்டு பின்புலமும் அவசியமாகிறது. பீத்தோவானின் ஒன்பதாவது ஸிம்பொனி பற்றி முழுவதுமாகப் புரிந்து கொள்ளக் கொஞ்சமாவது நெப்போலியின் பற்றியும் ஐரோப்பிய வரலாறுப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மேற்கத்திய ரசிகனும் மறுக்க மாட்டான். தியாகைய்யரின் 'நிதி சால சுகமா' எனும் பாடலை வரலாற்றுணர்வே இல்லாதுத் தலையாட்டி ரசிக்கும் கும்பல் நம்மவர்கள்.
மொஸார்த் பற்றி ஒரு புனைவு நாடகத்தைக் கொண்டு இயற்றப்பட்ட 'அமடேயஸ்' படத்தில் மொஸார் ஓரிடத்தில் தன்னைப் பற்றிச் சொல்வார்: 'நான் விரசமானவன் ஆனால் என் இசை விரசமானதல்ல' ('I'm a vulgar man your majesty but I assure you my music is not'). ஸால்ஸ்பர்க் நகரிலுள்ள மொஸார்த் அருங்காட்சியகத்தில் நான் அதை உண்மையாக்கும் ஓரு காட்சிப் பொருளைப் பார்த்தேன்.
மொஸார்த் இலக்கை நோக்கிக் குறிப் பார்த்து சுடும் விளையாட்டில் நாட்டம் உள்ளவர். பொதுவாக இலக்காக ஒரு வட்டத்தை வரைந்து வைப்பார்கள் ஆனால் மொஸார்த் தன் தந்தைக்குக் கடிதம் எழுதிப் புது மாதிரியான இலக்கு அடையாளம் செய்யச் சொன்னார். ஒரு ஆண் குனிந்து கொண்டு தன் ஆடையைக் கீழிறக்கிப் பிருஷ்டத்தைத் தூக்கிக் காண்பிப்பது போல் ஓர் ஓவியம் வரைந்து அனுப்புமாறு சொல்லியிருந்தார். அக்கடிதமும் அந்த ஓவியமும் அங்கே இருந்தன.
அமெரிக்காவின் தந்தையருள் ஒருவரான தாமஸ் ஜெபர்ஸன் தன் கறுப்பு அடிமைப் பெண் ஒருவர் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்டார் என்று ஆராய்ந்துச் சொன்னவரின் புத்தகம் மிக உயரியப் பரிசான புலிட்சரை வென்றது. நம்மூரிலோ நேரு எட்வினாவுக்கு எழுதிய கடிந்தங்கள் சோனியாவின் கட்டை விரலுக்குக் கீழே. அண்ணாதுரைப் பற்றி அறிய வேண்டுமென்றால் கண்ணதாசன் கிசு கிசு பாணியில் எழுதிய "வனவாசம்" தான் வரலாற்று ஆவணம்.
ழான் பால் ஸர்த்தரின் பாலியல் வன்முறைகள் இன்று வெளிப்படையான செய்தி. ஆனால் ஜெயகாந்தனுக்கு இரண்டு மனைவியர் என்பதே நம்மவரில் பலருக்குத் தெரியாது. அவர் இறந்த போது வந்த அஞ்சலிக் குறிப்புகளைப் பாருங்கள் பலர் அதைக் குறிப்பிடவேயில்லை. அவரே ஒப்புக் கொண்ட விஷயம் அது.
சங்கடமான வரலாறு என்றால் அது படுக்கயறை சமாச்சாரம் மட்டுமல்ல. வி.எஸ்.நைபால் தன் வாழ்க்கை வரலாறை எழுத பாட்ரிக் பிரெஞ்ச் என்பவரைத் தேர்ந்தெடுத்தார். பிரெஞ்ச் பிரபலமான எழுத்தாளர். பிரெஞ்ச் விதித்த நிபந்தனை தனக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப் பட வேண்டுமென்பதே. நைபால் அவர் மனைவிகளை நடத்திய விதம் முதல் அவர் மற்றவர்களோடு கொண்ட சண்டைச் சச்சரவுகளை வெளிப்படையாக எழுதினார் பிரெஞ்ச். நைபால் எனும் கலைஞனைப் பற்றிய மிக முக்கியமான வரலாற்று ஆவனமாக அப்புத்தகம் என்றும் இருக்கும். இப்படி யாராவது ஜெயமோகனுக்கு எழுதினால் சுவையாக இருக்கலாம்.
ஜெயகாந்தனைப் பற்றிய ரவி சுப்பிரமனியத்தின் ஆவனம் மிகச் சாதாரணமான ஒன்று. அதில் இருந்த ஒரே வெளிப்படையான உண்மை அவர் மது அருந்தும் காட்சிகள் தான். ஜெயகாந்தனின் கதைகளைத் திறம்பட ஆய்வு செய்த ஒருவரோ, அவர் கருத்துகளை மறுத்த எவருமோ அதில் இடம் பெறவில்லை. ஆனால் மிக அதிகம் பேரால் பாராட்டப் பட்ட ஆவணம் அது.
லிண்டன் ஜான்ஸன் பற்றிய வரலாற்றில் ராபர்ட் கேரோ ஜான்ஸன் செனட் தேர்தலில் கோல்மால் செய்ததை ஆதாரத்துடன் வெளிக் கொணர்ந்தார். அது முக்கியமா என்றால்? அம்முடிவு வாசகனும் எதிர்காலச் சந்ததியினரும் எடுக்க வேண்டியது. ஆய்வாளனின் வேலை ஆதாரத்தை வெளியிடுவது தான்.
எம்.எஸ் எப்படித் தன்னைப் பிராமணராகச் சதாசிவத்தின் உதவியோடு மாறினார் என்பது தமிழ் சமூகம் மற்றும் கர்நாடக இசையுலகின் பல பரிமாணங்களைச் சொல்லும் சரித்திரம். அதை வெளிப்படையாகப் பேசுதல் அவசியம்.
ஜெயமோகனும் ஜெயகாந்தனும் அரசியல் அமைப்புகளில் இருந்தவர்கள் மேலும் அதைப் பற்றி வெளிப்படையாக எழுதியவர்களும் கூட. அவர்களின் அரசியல் பங்களிப்பு அவர்களின் படைப்புகளில் சிலவற்றை முழுமையாகப் புரிந்து கொள்ள அவசியம்.
ஆலன் கம்மிங் எனும் நடிகர் எழுதிய சுய சரிதையில் அவர் தந்தையினால் பட்டத் துன்பங்களை விவரித்திருப்பார். அவர் தந்தையின் வன்முறைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள அவர் கைக்கொண்ட உத்திகள் அவரை நடிகராக்கியது என்றார். அவர் வெளிப்படையாக இரு பாலின உறவுக்காரர் (bi-sexual).நம் நடிகர்களிடம் இந்த வெளிப்படையை எதிர்ப்பார்க்கவே முடியாது.
சரி வரலாறாக எழுதுவதெல்லாம் வேறு ஒருவர் இறக்கும் தருவாயில் அப்போதே இரங்கல் குறிப்பில் குறைகளைச் சேர்த்துச் சொல்ல வேண்டுமா?
நீத்தார் பற்றிக் குறைச் சொல்லலாமா?
நீத்தார் நினைவு போற்றுதல், இந்திய மரபு மட்டுமல்ல, உலக மரபும் கூட. லத்தீன் மொழி சொலவடை ஒன்று, "இறந்தவர் பற்றி நல்லவை மட்டுமே" என்பது (' De mortuis nihil nisi bonum' - of the dead, nothing unless good). ஆனால் இதற்கு விதி விலக்கு பொது வாழ்வில் இருப்பவர்கள். ஏன்?
தமிழ் நாட்டில் அரை நூற்றாண்டைக் கடந்தும் சர்ச்சையைக் கிளப்புவது அண்ணாதுரை அவர்களுக்காகக் கூட்டப்பட்ட இரங்கல் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசியது. அண்ணாதுரையின் மரணத்துக்கு வந்த கூட்டம் கின்னஸ் சாதனைப் படைத்தது. அன்று அண்ணாதுரை தமிழகத்தை வியாபித்திருந்த விஸ்வரூபம். அவரும் ஜெயலலிதாப் போன்றே நோய் வாய்ப்பட்டு, அதுவும் அக்காலத்தில் யாரும் கேட்டாலே பயப்படும் புற்று நோய், கடும் போராட்டத்திற்குப் பிறகு இறந்திருந்தார். ஜெயகாந்தனின் உரையில் இருந்த தீக்கங்கு போன்ற சில வரிகள் இன்று பிரசித்தம்: 'அவரை அறிஞர் என்று மூடர்களும், பேரறிஞர் என்று பெரு மூடர்களுமே அழைக்கலாயினர்'. 'அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாக மலர்ந்து விடப் போவதில்லை'.
ஜெயகாந்தனின் உரை ஒரு கொந்தளிப்பான சூழலில் உணர்ச்சி வயப்பட்ட ஒரு கூட்டத்தை மிகவும் மென்மையாக அதன் உணர்ச்சியை மடை மாற்றி அறிவுத் தளம் நோக்கிப் பேசத் தொடங்குகிறது.
"இங்கே வந்திருக்கிற நீங்கள் அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய கும்பலை ஒத்தவர்கள் அல்லர். நீங்கள் அங்கேயும் போயிருந்திருக்கலாம். எனினும், அந்தக் கும்பலில் நீங்கள் கரைந்து விடவில்லை. எனவேதான், நீங்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.
அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய அந்தக் கும்பல் எவ்வளவு பெரிது எனினும் இந்தக் கூட்டம் அதனினும் வலிது. கலைகின்ற கும்பல் கரைந்த பிறகு அந்தக் கும்பலில் பங்கு கொண்ட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஒரு கூட்டமாகச் சந்திப்பதற்கு நான் இங்கு அழைக்கிறேன். இது எனது தனித்த குரலே ஆயினும் இது காலத்தின் குரல் என்பதனைக் கண்டு கொள்ளுங்கள். இந்தக் குரலுக்கு வந்து கூடுகின்ற இந்தக் கூட்டம், பதட்டமில்லாதது; நாகரிக மரபுகள் அறிந்தது; சிந்தனைத் தெளிவுடையது. இதற்கு ஒரு நோக்கமும், இலக்கும், குறியும், நெறியும், நிதானமும் உண்டு"
அந்தச் சில வரிகளை நினைவுக் கூறும் பலரும் ஜெயகாந்தன் ஏன் அப்படிப் பேசினார் என்று யோசிப்பதே இல்லை. அதற்கான பதில் ஜெயகாந்தனின் "ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்" புத்தகத்தில் உள்ளது (இதை பதிவேற்றம் செய்து புண்ணியம் கட்டிக் கொண்டவர்கள் 'இட்லிவடை' எனும் தளம். சுட்டி இங்கே http://idlyvadai.blogspot.com/2009/09/blog-post_2410.html).
"ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும். ஆனால், அண்ணாதுரை விஷயத்தில் அது ஒரு சமூக அநாகரிகமாக மாறி, எனது உணர்ச்சிகளை வெகுவாகப் பாதித்திருந்தது."
"இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது."
ஓரு மரணம், அதுவும் பொது வாழ்வில் இருப்பவரது மரணம் என்பது நாம் அவர் பற்றிய எண்ணங்களைத் தொகுத்துக் கொள்ளும் ஓரு முக்கியமான வாய்ப்பு (இதை ஜெயமோகன் எழுதியதாக நினைவு).
இந்தியாவில் பத்திரிக்கைத் துறை இன்றும் குழந்தைப் பருவத்தில் தான் இருக்கிறது. பத்திரிக்கையியலே அங்கு இன்னும் வளரவில்லை. இது ஆங்கிலப் பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும். அஞ்சலிக் குறிப்பு எழுதுவது என்பது ஒரு கலை.
அஞ்சலிக் குறிப்பு ஒருவரைப் பற்றி முழுமையான சித்திரத்தை அளிக்க வேண்டும். முழுமையான சித்திரம் என்றால் நல்லது, கெட்டது இரண்டும் சேர்த்து தான். ரேகன் இறந்த போது நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பில் அவர் ஆட்சிக் காலத்தின் முக்கியத்துவம், அது பற்றிய எதிர் கருத்துகளின் குறிப்பு, ஆட்சியில் நடந்த முக்கியமான சர்ச்சைகள், அவர் வாழ்வின் சித்திரம் என்று வாசகனுக்கு ஒரு வரைப்படத்தைக் கொடுத்தது.
தங்கள் முன்னாள் பதிப்பாளரான காத்ரீன் கிரஹாம் இறந்த போது வாஷிங்டன் போஸ்ட் அவரின் மன வாழ்க்கை அவர் கனவரின், அப்போதைய பதிப்பாளரின் தந்தை, மன நலமின்மை ஆகியனக் குறித்து அஞ்சலிக் குறிப்பில் எழுதியது.
நடிகர் பிலிப் சீமோர் ஹாஃப்மென் போதையினால் இறந்த போது அது அஞ்சலிக் குறிப்பில் இடம் பெற்றதோடு அவர் மரணத்தை முன்னிட்டுப் பலரும் போதைப் பழக்கம் குறித்து விழிப்புணர்வுடன் பேசினர்.
நடிகர் ராபின் வில்லியம்ஸ் மன உளைச்சலினால் உந்தப் பட்டு தற்கொலைச் செய்து கொண்ட போது அதுவும் வெளிப்படையாக ஒரு விழிப்புணர்வுக்கான தருணமாகப் பேசப்பட்டது.
நாளை பில் கிளிண்டன் இறந்தால் அவர் சாதனைகளோடு அவரின் சறுக்கல்களும் பேசப்படும். கிளிண்டன் சுய சரிதை எழுத முற்பட்ட போது அவர் பதிப்பாளர் கிளிண்டன் வெளிப்படையாக மோனிகா லுவின்ஸ்கி பற்றி எழுதத் தயாரா என்று கேட்டுக் கொண்ட பிறகே பதிப்பிக்க ஒப்புக் கொண்டனர். கிளிண்டனும் அவ்விவகாரத்தைப் பற்றிக் குறைந்த பட்ச நேர்மையோடவே எழுதினார்.
நம்மவர்களுக்குக் கண் மூடித்தனமான பக்திக்கும் கண் மூடித்தனமான வெறுப்புக்குமிடையே எந்த இடை நிலையும் தெரியாது. அது தான் பெரும் சிக்கல். மேலும் ஒரு வாழ்வை மதிப்பிட நமக்கு அடிப்படையிலேயே மதிப்பிடல் பற்றி ஆரோக்கியமான ஈடுபாடும் அதற்கான் அறிவு முதிர்ச்சியும் தேவை.
ஏன் மதிப்பிட வேண்டும்:
தர வரிசைகள் சம்பந்தப்பட்ட விவாதங்களை ஜெயமோகன் அளவுக்கு முன்னெடுத்தவர்கள் மிகச் சிலரே. "ஏன் ஒப்பீடு செய்ய வேண்டும்? ஒவ்வொன்றையும் தனித் தனியாக அனுபவித்துப் போகலாமே", "ஏன் தர வரிசை? அதைச் சொல்ல நீ யார்" என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கேட்டு என் காது புளித்துப் போய் விட்டது.
ஒரு விடுதியில் உணவு உண்பதற்குக் கூட நாம் ஒப்பீடு செய்து தர வரிசைப் படுத்தித் தான் செய்கிறோம். ஆனால் இசையுலகில் இளையராஜாவின் இடம் 1970-1990 தமிழ் திரையிசையைத் தாண்டாது என்றால் மேற்சொன்ன கேள்விக் கணைகள் வரும். இதில் பிரச்சினைத் தரப்படுத்தல் அல்ல. பெரும்பான்மையோர் ஒப்புக் கொண்ட தர வரிசைக்கெதிரான கருத்தை முன் வைப்பதே. இளையராஜாவைக் கொண்டாடும் பலர் தேவாவையோ, அம்சலேகாவையோ கொண்டாடுவதில்லை. அவர்கள் அறிவுக்கு எட்டிய வரையில் ராஜாவே ராஜா. அதை மறுத்து விவாதங்களின் அடிப்படையில் ராஜாவின் இடம் வேறு என்று சுட்டும் போது தன் தரப்பு வாதங்களைத் தொகுக்கத் தெரியாதவர்கள் தான் "என்னமோப்பா எனக்கு இவரைத் தான் பிடித்திருக்கிறது. நீ சொல்வதை நான் ஏன் ஏற்க வேண்டும்?" என்றெல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் இந்தியர்களுக்கே உரித்தான சால்ஜாப்புகளை அடுக்குவார்கள்: "எங்கள் ஊருக்கு இதுவே அதிகம்", "இங்கேயிருக்கும் வசதி வாய்ப்பு..."
நாம் ஓட்டும் வாகனம், போடும் துணி, உணவு, சுற்றுலாச் செல்லும் இடம், மணம் புரியும் பெண்/ஆண், கட்டும் வீடு, வாங்கும் பொருட்கள் எல்லாவற்றிலும் தரமும் மதிப்பும் பார்க்கும் நாம் ஏன் கலை என்று வந்துவிட்டால் மட்டும் தர வரிசையைக் கண்டும் மதிப்பிடல்களைக் கண்டும் இப்படி மிரள்கிறோம், இகழ்கிறோம்? ஏனெனில் நமக்குக் கார் வாங்குவதற்கான மதிப்பிடும் அளவுக்கோல்கள் எளியது, அதைப் புரிந்து கொள்ள எளிய அறிவே போதும். ஆனால் பாலகுமாரனா அசோகமித்திரனா, அசோகமித்திரனா மிலன் குந்தேராவா, ராஜாவா ஜான் வில்லியம்ஸா என்றால் இந்தியக் கல்வி முறையின் பற்றாக்குறையால் விக்கித்து நின்று அசட்டு வாதங்களை வீசுவோர் தான் அதிகம்.
பாலு மகேந்திரா, ஜெயலலிதா மற்றும் சோ பற்றிய குறிப்புகள்:
ஜெயலலிதா இறந்த போது வந்து விழுந்த அஞ்சலிக் குறிப்புகள் பல அருவருக்கத்தக்கவை. ஒரு பெண்ணாக ஆணாதிக்கச் சமூகத்தில் அதுவும் பெண்களைப் போகப் பொருளாக மட்டுமே பார்க்கத் தெரிந்த திராவிட இயக்க கழிசடைகளின் இடையே வென்றார் என்பதே மீண்டும், மீண்டும் பேசப் பட்டது. போதாக் குறைக்கு "இரும்பு மனுஷி" என்ற அடைமொழி அல்லோல கல்லோலப்பட்டது. சிலர் தங்கள் தனி வாழ்வில் அவர்களிடம் ஜெயலலிதா காட்டிய கருணைகளைக் கண்ணீர் மல்க எழுதினர்.
ஜெயலலிதா என்பவர் கடந்த 30 ஆண்டுகள் தமிழ் நாட்டின் இரு பெரும் அரசியல் ஆளூமைகளுள் ஒருவர். ஆறு முறை முதல்வரானவர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். அவர் ஆட்சிக் காலத்தில் நடந்தேறிய அவலங்கள் பற்பல. அவர் ஆட்சியில் அவர் கட்சியினர் செய்த அராஜகங்கள் அநேகம். ஜெயலலிதாவின் போராட்ட குணம், தைரியம் பற்றிச் சிலாகிக்கும் பலர் அவரின் குணக் கேடுகள் பற்றிச் சிறிதாவது எழுதியிருக்கலாம். அரசாங்க அலுவலகத்துக்காகக் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியது எதேச்சாதிகாரம். இன்னொருவர் கட்டினார் என்பதற்காகவே ஒரு நூலகத்தைச் சீரழித்தார். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் செய்தவை ஏராளம். தலை நகரமே வெள்ளத்தில் தத்தளித்த போது நிர்வாகத்தின் நிழற் தடம் கூடத் தெரியவில்லையே.
ஜெயலலிதாவின் தனி வாழ்க்கையில் எத்தனையோ வெளிப்படையாகத் தெரியாத பக்கங்களுண்டு அவை பற்றி அவதூறுகளும் உண்டு. அதையெல்லாம் அஞ்சலிக் குறிப்பில் எழுதத் தேவையில்லை எழுதவும் கூடாது. ஆனால் நான் மேற்சொன்னவை அவர் ஆட்சி செய்த விதம் பற்றி. அவர் நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டுப் பல மர்மங்கள் விலகாமலே இறந்தது சோகமே ஆனால் இன்றும் சந்திரலேகாவின் முகம் பழைய மாதிரி ஆக முடியாதே? இன்றும் விஜயன் பீடு நடைப் போட முடியாதே?
சோவை ஏதோ அரசியல் சாணக்கியர் என்ற ரேஞ்சில் எழுதுகிறார்கள். அவர் ஏதோ மாற்று வலது சாரி அரசியலை முன் வைத்ததாகவும் சொல்கிறார்கள். அதற்குத் தான் நான் அவரை வில்லியம் எஃ பக்லி (William F. Buckley) போன்றோரோடு ஒப்பிட இயலாதென்றேன்.
50-ஆண்டுக் கால இடது சாரி அரசியலுக்கு எதிராக 70-களில் அமெரிக்காவில் பெரும் வலது சாரி எழுச்சி நடந்தது. அது ஒரு பெரும் அறிவியக்கம். அவ்வியக்கத்தின் முன்னத்தி ஏர் பக்லி. இதைச் சொன்னதற்கு ஒரு நண்பர் இந்தியாவில் சோ எழுத ஆரம்பித்த காலத்தில் விக்கிப்பீடியா இல்லை, வசதிகள் இல்லை என்று சால்ஜாப்புப் பல்லவிப் படித்தார். நியாயமாரே கன்னிமரா நூலகதினுள் சோ நுழைந்தாவது பார்த்திருப்பாரா? நாடாளுமன்ற உருப்பினராக இருந்தாரே தில்லியின் நூலகங்களுக்குச் சென்று கொஞ்சமாவது படித்தாரா? நான் அவருக்குச் சொன்னேன் "நம்மூரில் ஜெய்சங்கரை 'தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்' என்பார்கள் அது போல் நீங்கள் சோ தென்னகத்து பக்லி என்கிறீர்கள்". அண்ணாதுரையைக் கல்கி "தென்னகத்துப் பெர்னார்ட் ஷா" என்றதை ஜெயகாந்தன் "தமிழர்களே உங்கள் தகுதிக்கு இவர் தான் பெர்னார்ட் ஷா என்பது தான் அதன் உண்மையான அர்த்தம்" என்றார்.
சோ கருத்துரிமைக்குப் போராடினார் என்று தழுதழுக்கிறார்கள். ஒரு பத்திரிக்கையாளர் அதைக் கூடச் செய்யவில்லையென்றால் அவர் பேசாமல் வேறு தொழிலுக்குச் சென்றிருக்கலாம். இவ்வளவும் பேசுகிறவர்கள் அவர் கடந்த 20 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் ஆலோசகராக ஒரு அரசியல் புரோக்கராகச் செயல்பட்டார் என்பதை மழுப்புகிறார்கள். கேவலம் ஒரு அரசு சாராய விற்பனைப் பிரிவுக்கும் தலைமை வகித்தார் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால். இதையெல்லாம் சுட்டிக் காட்டி எழுதினால் "பாமரர்கள் கூடச் செய்யத் தயங்கும் அநாகரீகம்" என்கிறார்கள்.
ஆமாம் அது தான் பாமரனுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். ஜெயலலிதாவின் பிணத்தின் முன் தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழும் பாமரனுக்கும் ஃபேஸ்புக்கில் ஜெயலலிதா 'இரும்பு மனுஷி', 'எனக்கு டீ போட்டுக் கொடுத்தார்' என்று எழுதுவதற்கும் வித்தியாசமில்லை.
தரம் பிரித்து மரியாதைக் கொடுக்கத் தெரியாதவன் எல்லாவற்றையும் ஒரே மாதிரி மதிப்பதாக எண்ணிக் கொள்வது கட்டாயமாகப் பாமரத் தனமான எண்ணம் தான். அவன் செய்வதெல்லாம் எல்லாவற்றையும் ஒரு சேர அவமதிப்பது தான்.
பாலு மகேந்திரா இறந்த போது அவரைக் 'காமிரா கவிஞர்' என்று கொண்டாடியர்வர்கள் தான் அநேகம் பேர். ஆனால் பாலு மகேந்திரா சகஜமாக ஹாலிவுட் படங்களைச் சுட்டவர். சமீபத்தில் நடந்த 80-கள் நடிகர்கள் கூடும் விழாவில் இறந்தவர்கள் பட்டியலை சுகாசினி படித்த போது தான் தெரிந்தது ஷோபாவுக்கு இறக்கும் போது 17-வயது என்று. கிட்டத்தட்ட 15-16 வயதில் பாலு மகேந்திராவோடு உறவு கொண்டார். இதை அமெரிக்காவில் 'statutory rape' என்பார்கள். இன்றும் ஆஸ்கர் விருதுப் பெற்ற ரோமன் பொலான்ஸ்கி மீது ஒரு வன்புணர்வு வழக்கு நிலுவையில் உள்ளது. அவரால் அமெரிக்காவினுள் நுழைய முடியாத சூழல் இருக்கிறது அதனால். பொலான்ஸ்கி இறக்கும் போது அச்சம்பவத்தைக் குறிப்பிடாத அஞ்சலிக் குறிப்பு வரவே வராது. பாலு மகேந்திரா தமிழ் திரையுலகில் முக்கியமான சாதனையாளரே ஆனால் அஞ்சலி குறிப்பில் அவரின் ஒளிப்பதிவுத் திறன் மற்றும் திரை மொழி ஆகியன பற்றி மட்டும் பேசுவது பாமரத் தனமே.
டி.எம்.எஸ் போன்றவர்கள் இறக்கும் போது வரும் ஃபேஸ்புக் பதிவுகள் இன்னொரு வகை. இனி அவரைப் போல் யார் பாடுவார்கள் என்பார்கள். அவர் பாடுவதை நிறுத்தி 40 வருடங்கள் ஆயிற்று. வாலி இறந்த போது "ஆகா இந்தப் பாட்டைக் கேளுங்கள்", 'அதைக் கேளுங்கள்' என்றார்கள். தமிழ் திரைப்பாடல்களில் மிக, மிக அருவருக்கத் தக்க ஆபாசக் குப்பைகளை எழுதி குவித்தவரும் வாலி தான். அஞ்சலி குறிப்பென்றால் அதைச் சுட்டிக் காட்டவாவது வேண்டாமா?
எனக்குச் சிவாஜியை ரொம்பப் பிடிக்கும். அவர் இறந்த போது மனம் வருத்தப்பட்டது ஆனால் அதற்காக அவரின் குப்பைகளை மறக்க முடியுமா. கௌரவமும் வியட்நாம் வீடு படமும் செய்த சிவாஜி தான் 'முதல் மரியாதை', 'தேவர் மகன்' படங்களையும் செய்தார்.
நான் எழுதிய குறிப்புகளில் காழ்ப்பு இருந்திருக்கலாம் அது பெரும்பாலும் மேற்சொன்ன கண்மூடித்தனமான பாமரத்தனங்களுக்கெதிரான எரிச்சலே. ஆனால், பாலு மகேந்திரா போன்றவர்களின் அஞ்சலி குறிப்புகள் தவிரப் பெரும்பாலும் நான் கிசு கிசுக்களைத் தவிர்த்து விடுவேன். நான் ஜெயலலிதாப் பற்றியும் கருணாநிதி பற்றியும் எழுதிய பதிவுகளில் காட்டம் இருக்கும் ஆனால் அவதூறு இருக்காது.
என் குறிப்புகளில் உண்மையில்லையா என்னிடம் சொல்லுங்கள் திருத்துகிறேன். என் வாதத்திற்கு எதிர் வாதம் இருக்கிறதா சொல்லுங்கள் கேட்டுக் கொள்வேன். மொழியில் கடுமை தவிர்க்கலாம் என்கிறீர்களா பரிசீலிக்கிறேன். நான் சொல்பவைகளுள் நேர்மையில்லையென்று காட்டுங்கள் நீக்கி விடுகிறேன். அவை தவிர உங்கள் பாசத்துக்குரிய தலைவனையோ, தலைவியையோ, கலைஞரையோ, ஆசானையோ விமர்சித்தற்காக எரிசலுற்றீர்களென்றால் அது உங்கள் பிரச்சினை. உங்களைக் காயப்படுத்தியிருந்தால் வருத்தங்கள் ஆனால் என் வழி எப்போதும் ஒரே வழி தான்.
References:
1. Suresh Kannan's post on Facebook:
ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவரை மகத்தான புனிதப்பசுவாக்குவதும் வரலாற்றில் மேலதிகமான திருவுருவாக்குவதும் எனக்கு உவப்பில்லாத ஒன்று.
ஆனால் சமகாலத்தின் துயரம், இழப்பு சார்ந்த பொதுஅலைவரிசையை முற்றிலும் நிராகரித்து அப்போதைய அஞ்சலிக்குறிப்புகளில் கூட தங்களின் கறார்த்தன்மையையும் மேதமையையும் வலிந்து திணித்து முற்றிலும் எதிர்நிலைத்தன்மை கொண்ட எழுத்துக்களை காண்பது சகிக்க முடியாததாக இருக்கிறது. இது அடிப்படையான நாகரிகமல்லாதது மட்டுமல்ல, அபத்தமும் கூட.
கொள்கைகள், சித்தாதந்தங்கள், போன்ற எல்லாமே ஒருவகையில் தற்காலிகம்தான். சூழலுக்கேற்ப மாறக்கூடியது, அவரவர் தரப்புகளின் நியாயங்களைக் கொண்டது. வரலாற்றின் காற்றில் கரைந்து விடக்கூடியது.
ஆனால் மரணம் என்பது மட்டுமே மாறாதது. அறிவியலால் கூட விளங்கிக் கொண்டாத புதிர்த்தன்மையைக் கொண்டது. இறப்பும் புனிதமும் நெருங்கி வருவது தற்செயலானதல்ல.
ஒருவர் இறந்த சமயத்தில் தற்காலிகமாவாவது அவரைப் பற்றிய நல்லதைப் பற்றி மட்டும் பேச வேண்டும் என்று சொல்லப்படுகிற மரபு பாமரத்தனமானது அல்ல. பண்பாட்டு ரீதியானது.
பாமரர்கள் கூட செய்யத்தயங்கும் அநாகரிகத்தை அறிவுஜீவிகள் அநாயசமாக செய்வது துரதிர்ஷ்டமானது.
3 comments:
சமூக வலைதளங்கள் எந்த அளவுக்கு எழுதுகின்றவருக்கு சுதந்திரம் வழங்கும் என்பதனை உங்கள் கட்டுரையின் வாயிலாக கண்டு கொண்டேன். நல்ல வேளை ஆங்கிலத்தில் எழுதாமல் தமிழில் எழுதியதற்கு வாழ்த்துகள். நெஞ்சுரம் மிக்கவர்.
இப்படி யாராவது ஜெயமோகனுக்கு எழுதினால் சுவையாக இருக்கலாம். !!
விரிவான மற்றும் சிறப்பான அலசல். நன்றிகள் அரவிந்தன்.
Post a Comment