Thursday, March 29, 2018

பெர்னினி, மிக்கெலேஞ்சலோ, மேற்கத்திய சிற்பங்கள்: ஒரு குறிப்பு

யாரோ ஜெயமோகனிடம் "கலையுணர்வற்றவை, பரோக் [Baroque art] பாணியைச் சேர்ந்தவை" என்று சொல்லியிருக்கிறார்கள் அதுவும் இந்திய சிற்பங்கள் அவ்வகையைச் சார்ந்ததென்று. ஜெயமோகனும் அக்கருத்து மேற்கத்தியவர்களால் கட்டமைக்கப்பட்டது என்கிறார். ச்சே இந்த மேற்கத்தியவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. இந்திய சிற்பங்கள் பரோக் வகையைச் சார்ந்ததா என்று எனக்குத் தெரியாது ஆனால் கலையற்றவை பரோக் பாணியைச் சேர்ந்தவை என்று மேற்கத்தியவர்கள் சொல்லியிருக்கா வாய்ப்பு மிகக் குறைவு ஏனென்றால் செவ்வியல் இசை முதல் சிற்பக் கலை, கட்டிடக் கலை வலை 'பரோக்' வகையறா அலாதியான நுட்பங்கள் கொண்டவற்றைத் தான் குறிக்கும் சொல். பாக் (Bach), இசையும் பெர்னினியின் சிற்பங்களும் இந்த வகைக் கலையம்சத்தின் முக்கிய உதாரணங்கள். சென்ற வருடம் இத்தாலிப் பயணத்தின் போது நான் அதிகம் நினைத்தது பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் ஜெயமோகனை. ஜடாயுவையும் கூட நினைத்துக் கொண்டேன் வாடிகன் முழுக்க விரவியிருக்கும் பாகனிய குறியீடுகளுடைய கலைப் பொக்கிஷங்களைக் கண்ட போது. அங்கிருந்து ஜெயமோகனுக்குக் கடிதமும் எழுதினேன் ஏனென்றால் அந்தச் சமயத்தில் ஏதோ ஒரு பதிவை அவர் எழுத அது சம்பந்தமாக மறுப்பு எழுதினேன். பயணக் குறிப்புகள் எழுத நினைத்து வெவ்வேறு சண்டை சச்சரவுகளில் மாதங்கள் ஓடி விட்டன. இரண்டு, மூன்று பதிவுகளாவது எழுத உத்தேசம்.

Rape of Proserpina
ரோமின் மிக முக்கியமான கலைக் கூடம் 'வில்லா போர்கீஸீ' (Villa Borghese). அங்கே பெர்னினி ( Bernini) வடிவமைத்த சிற்பம் 'Rape of Proserpina'. புளூட்டோ என்கிற கடவுள் ப்ரோசெர்ப்பினாவை கவர்ந்து செல்லும் போது ப்ரோசெர்ப்பினா புளூட்டோவின் பிடியில் இருந்து விலகி கேசம் அலைப்பாயக் கண்ணில் நீர் வழிய தவிக்கும் காட்சியைத் தத்ரூபமாக வடிவமைத்திருப்பார் பெர்னினி. அதிலும் அந்த ப்ரோசெர்ப்பினாவின் செழுமையும் தின்மையுமான தொடையில் கை விரல்கள் பதிந்திருப்பதைச் சிற்பத்தில் கொண்டு வந்திருப்பது தான் ஹைலைட். இந்தச் சிலையைப் பார்த்தப் போது பல எண்ணங்கள் தோன்றின.


பெர்னினி கத்தோலிக்கக் கோயில்களுக்கும், வாடிகனுக்கும், ரோம் நகருக்கும் போப்புக்காகவும் மற்றவர்களுக்காகவும் சிலைகளை வடிவமைத்தவர். அவரே இப்படி ஒரு கற்பழிப்புக் காட்சிக்கும் சிலை அமைத்திருக்கிறார் என்பது விசேஷம். மேற்கத்திய இலக்கியம் மற்றும் கலைகளில் கற்பழிப்புகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இது எனக்கு விநோதமாகத் தோன்றியது. இச்சிலையைப் பார்த்தப் போது தான் ஷேக்ஸ்பியர் லுக்ரீஸின் கற்பழிப்பு (Rape of Lucrece) பற்றி எழுதிய கவிதையும், ரோமாபுரி கட்டமைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் சபைன் இனப் பெண்கள் கூண்டாகக் கற்பழிக்கப்பட்டதையும் (Rape of Sabine Women) முக்கிய ஓவியர்கள் வரைந்துள்ளார்கள் அவை ரோம் நகர அருங்காட்சியகங்களில் காட்சி படுத்தப்பட்டிருக்கின்றன. மேற்கத்திய கலை மற்றும் அறிவுத் தளம் தரும் கிளர்ச்சி அலாதியானது. பெர்னினி, கரவாஜ்ஜியோ, மிக்கெலேஞ்சலோ, ரஃபேல் என்று ஒவ்வொரு ஓவியமும், சிலையும் ஒரு பண்பாட்டில் இருந்து துளிர்த்த மாபெரும் சிருஷ்டிக் கர்த்தாக்களின் வாழ்க்கை வரலாறும் அதனூடாக வரும் பண்பாட்டு வரலாறும் படித்தறிய நமக்குக் கிடைப்பது இவ்வனுபவங்களை வேறொரு தளத்துக்கு இட்டுச் செல்கிறது. இந்தச் சிலைகள் வடிவமைத்தவன் பற்றியும் ஒன்றுமே தெரியாது, அவை வடிவமைக்கப்பட்ட சூழல் பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும், யார் இதைச் செய்விக்கப் பணம் திரட்டினார்கள், அதிலுள்ள சண்டை சச்சரவு ஆகிய எது பற்றியும் செவி வழி செய்திகளும் வரலாற்றுத் துணுக்குகளுமே இருந்தால் அது தரும் அனுபவம் வேறு. எனக்கு இரண்டாம் வகைக் கொஞ்சம் சப்பென்று இருக்கிறது. பெர்னினி வடிவமைத்த இன்னொரு சிலை 'பியாட்ஸா நவோனா' (Piazza Navona) என்கிற சதுக்கத்தில் இருக்கிற நான்கு நதிகள் சிற்பங்களின் தொகுப்பு. உலகின் நான்கு நதிகளைக் குறிக்கும் சிலைகள் அவை. அதில் கங்கையைக் குறிக்கும் சிலையின் கையில் துடுப்பு இருக்கும் கங்கைப் படகால் கடக்கக் கூடியது (navigable) என்பதைக் குறிக்க.

பெர்னினியின் கங்கை
நாம் மீண்டும் மீண்டும் வெளியுலகினர் இந்தியா பற்றிக் கொண்டிருந்த புரிதல்கள் பற்றி அங்கலாய்க்கிறோம். பெரும்பாலும் கொந்தளிப்பும் தாழ்வுணர்ச்சியும் கலந்தே. பொதுவில் சொல்கிறேன், ஜெயமோகனை சொல்லவில்லை. இந்தியாவைச் சரியாகவும் மிகுந்த மதிப்போடும் புரிந்து கொண்ட மேற்கத்தியர்கள் அநேகம், அநேகம், அநேகம். அதை விட முக்கியம் மேற்கத்தியர்கள் தங்களைத் தாண்டிய உலகை அவதானிக்கிறார்கள், அது பற்றிய குறிப்புகளைச் சேகரிக்கிறார்கள், தங்கள் கலைகளில் மிகச் சந்தோஷமாக வெளித் தாக்கங்களைச் சுவீகரித்து உருவாக்குகிறார்கள். ரோமாபுரி சிலைகள் முதல் மார்வின் கே இசை வரை இதைப் பார்க்கலாம். இந்தச் சிலைத் தொகுப்புக் கத்தோலிக்கப் போப்பின் கொடையில் உருவாக்கப்பட்டது. சிலையின் மையக் கருத்து நான்கு நதிகளும் சிலை மத்தியில் இருக்கும் ஊசி முனை (obelisk), போப்பை குறிப்பது, சிற்பத்ததின் மீதுள்ள பிரம்மிப்பை வெளிப்படுத்துவது. உடனே, "ஆகா பார்த்தீர்களா போப்புக்குக் கங்கை தலை குனிகிறது" இதை அரவிந்தன் கொண்டாடுகிறார் என்று ஒரு கூட்டம் ஆர்ப்பரிக்கும். ப்ளோரென்ஸ் நகரில் இன்னொரு அதிசயம் கண்டேன். ப்ளோரென்ஸ் நகரில் 'மெடிச்சி பேலஸ்' (Medici Palace) என்கிற இடத்தில் இருக்கும் 'பூகோள வரைப்பட அறை' உலக நாடுகளின் பூகோள வரைப்படங்கள் அடங்கியது. 16-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. இந்தியா பற்றித் துல்லியமான வரைப்படம் இருக்கிறது அங்கே. தமிழகத்து ஊர்கள் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. நம்மூர் ராஜாக்கள் யாராவது இப்படியெல்லாம் சேகரித்து இருக்கலாம் ஆனால் அவை இப்படிப் பாதுக்காக்கப்பட்டிருக்காது. தஞ்சை சரஸ்வதி மகாலுக்குப் போயிருக்கிறேன். ப்ளோரன்ஸில் அந்த நினைவு வந்தது. எரிச்சலும் வந்தது. நியூ ஜெர்ஸியில் நான் வசிக்கும் தெருவில் இருந்து பத்து நிமிடத்தில் அமெரிக்காவில் பிரபலமான புத்தகைக் கடையின் கிளை உண்டு. அங்கே இத்தாலியின் சிற்பங்கள், ஓவியர்களின் வரலாறுகள் எல்லாம் எளிதாகக் கிடைக்கும். நான் தஞ்சையில் 25 வருடம் இருந்திருக்கிறேன். அங்கே அப்போது இருந்த ஒரே புத்தகக் கடை 'அப்பர் புக் ஸ்டால்'. கல்லூரிக்குத் தேவையான புத்தகங்கள், கோனார் நோட்ஸ், கொஞ்சம் பாலகுமாரன், கண்ணதாசன், அப்புறம் ஒன்றிரண்டு ஆங்கிலப் புத்தகங்கள் இவை தான் கிடைக்கும். திருச்சி இதை விட ஒரு இழை தான் சிறப்பு. இவ்விரு ஊர்களிலும் மூன்று, நான்கு கலைக் கல்லூரிகள், அநேகப் பள்ளிகள், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உண்டு, பல்கலைக் கழகமும் உண்டு ஆனால் புத்தக நிலையங்கள்? குப்பைக் கூடங்கள். அப்புறம் எங்கிருந்து தஞ்சாவூர் காரனுக்குப் பெரிய கோயில் சிற்பம், ஓவியம் பற்றியெல்லாம் தெரியும்? அன்னாந்துப் பார்த்து 'எப்படிக் கட்டியிருக்கான் பார் ராஜ ராஜ சோழன். சிவாஜி கணேசன் அப்படியே அவனைக் கண்ணு முன்னாடி கொண்டு வந்திருவார்' என்று கலயைப் பாராட்டிவிட்டு, கொஞ்சம் சுண்டலை கோயிலில் வாங்கிக் கொண்டு, கோயிலுக்கு வெளியே சர்பத் குடித்து விட்டு வீட்டுக்குப் போவது வழக்கம். 

இத்தாலியில் பெரும்பாலான கோயில்களில் தல வரலாற்றை, நேர்மையாக, தெரிந்துக் கொள்ள வசதி செய்திருக்கிறார்கள். ஒரு அல்லது இரண்டு யூரோ காசுப் போட்டால் வரலாற்றை பயாஸ்கோப் மாதிரி கருவி சொல்லித் தரும். சியென்னா மாதிரி இடத்தில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட புத்தகங்கள் கோயிலேயே கிடைக்கும், விலைக்குத் தான். அவை அக்கோயிலின் சிற்பங்கள், ஓவியங்களை நமக்குச் சொல்லித் தரும் ஆவணங்கள். முன்பொருமுறை பிரஸ்ஸல்ஸ் அருகில் உள்ள ப்ரூஜ் என்ற நகருக்குப் போயிருந்தேன். அங்கேயிருக்கும் கோயிலில் மிக்கெலேஞ்சலோவின் 'மடோனாவும் குழந்தையும்' சிலையைப் பார்த்தேன். சிலை தந்த பிரம்மிப்பை விட 15-ஆம் நூற்றாண்டில் பல நூறு மைல்கள் தாண்டி வேறொரு தேசத்தில் வேறொரு மொழிப் புழங்கிய நாட்டில் இருக்கும் சிற்ப கலைஞனை நாடி அவனைக் கொண்டு சிலை வடித்து எடுத்துப் போயிருக்கிறார்கள்.

ப்ரூஜ் நகரில் மிக்கெலேஞ்சலோவின் மடோனா


இப்படி ஏதாவது இந்தியாவிலும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் இங்கே வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. திட்டவட்டமாகச் சொல்லலாம். மிக்கெலேஞ்சலோ நமக்குத் தொன்மம் அல்ல. ரத்தமும் சதையுமாக வாழ்ந்த அந்த மகா கலைஞனைப் பற்றி நமக்கு அநேக விஷயங்கள் தெரியும் ஏனென்றால் அவன் காலத்திலேயே வாழ்ந்த ஜார்ஜியோ வசாரி என்கிற எழுத்தாளன் எழுதியிருக்கும் வரலாறு கிடைக்கிறது. கவனிக்கவும் இதெல்லாம் 15-ஆம் நூற்றாண்டு. கலை வரலாற்று எழுத்தின் முன்னோடி வசாரி என்கிறது விக்கிப்பீடியா. ஒரு சாதாரணக் கோயில் மாடிப்படி வரலாற்று முக்கியத்துவம் பெற்று விடுகிறது ஏனென்றால் அதை வடிவமைத்தது பெர்னினி. அந்த மாடிப்படியின் விசேஷம் என்னவென்றல் சுழல் மாடிப்படிகளில் (spiral staircase) முதுகெலும்பாக ஒரு தூண் இருக்க வேண்டும் அப்போது தான் அது வலுப் பெற்று நிற்கும் ஆனால் நத்தை ஓட்டின் சுழற்சியை ஒத்த வடிவில் அமைத்த அந்த மாடிப்படியில் அப்படி இருக்காது. இதைச் சுட்டிக் காட்டவும் அது பற்றிப் பேசி பிரபலமாக்குவதும் தான் இங்கே முக்கியம். இணையத்தில் 'Bernini staircase' என்று தேடினால் உடனே சாண்டா மரியா மஜ்ஜியோரே (Santa Maria Maggiore) என்ற கோயிலுக்குள் இருக்கும் இந்த மாடிப்படியின் படம் கிடைக்கிறது. அப்படிப் பிரபலமாவதற்கு எத்தனை ஆண்டுகளாக இது பேசப்பட்டிருக்க வேண்டும்?

பெர்னினி வடிவமைத்த படிக்கட்டு
மிக்கெலேஞ்சலோ, கரவாஜ்ஜியோ இவர்களை மையப்படுத்தியே தனிப் பதிவுகள் எழுதலாம். ப்ளோரென்ஸின் 'உஃப்ஃபிஸி கேலரி' (Uffizi Gallery) ஒரு வரலாற்றுப் பெட்டகம். ஒவியங்கள் வழியாக மேற்குலகின் முக்கிய நகரின் கலாசார பண்பாட்டு வரலாற்றையே எழுதி விடலாம். பி.ஏ.கிருஷ்ணனையும், ஜெயமோகனையும் அதிகம் நினைவுக் கூர்ந்த இடம் அது. ஓவியத்தில் உயர் குடிப் பெண்களுக்கு மிகவும் மேலேறிய மோட்டு நெத்தி இருப்பதாக சித்தரிக்கப்படும் என்பதை எடுத்துக் காட்டோடுப் பார்த்த போது நானறிந்த பெண் ஒருவரை நினைத்துக் கொண்டேன்.

கலிலேயோவும் வாடிகனும் மோதிக் கொண்டதும் கலிலேயோ முடக்கப்பட்டதும் பிரசித்தம். ஆனால் பலர் ஆறியாதது பிளோரன்ஸ் நகரின் மிக முக்கிய கத்தோலிக்க கோயிலில் பிரதான இடத்தில் கலிலேயோவும் மிக்கெலேஞ்சலோவும் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். வாடிகனுடனான மோதலால் கிறிஸ்தவ முறைப்படி புதைக்கப்பட அனுமதி மறுக்கப்பட்ட கலிலேயோ அவர் இறந்து 95 வருடங்கள் கழித்து கோயிலேயே புதைக்கப்பட்டார். ஐரோப்பா கலை மற்று வரலாற்றை நேசிப்பவர்களுக்கு, கையில் காசும் இருந்தால், பல மாதங்களைச் சுற்றிப் பார்த்து பரவசமடைய எத்தனையோ. சாதாரண பேஸ்புக் குறிப்பாக எழுத ஆரம்பித்தது ஒரு பதிவாகவே மாறிவிட்டது. ரொம்ப நாள் கிடப்பில் போட்ட இந்தப் பதிவுகளைத் தொடர்வதற்கு இன்று ஒரு ஆரம்பம். ஆரம்பத்துக்கு காரணம் ஜெயமோகனே !!! ஜெயமோகனுக்கு நன்றி.

Reference:


3 comments:

Arjun said...

" இந்திய சிற்பங்கள் பரோக் வகையைச் சார்ந்ததா என்று எனக்குத் தெரியாது ஆனால் கலையற்றவை பரோக் பாணியைச் சேர்ந்தவை என்று மேற்கத்தியவர்கள் சொல்லியிருக்கா வாய்ப்பு மிகக் குறைவு ஏனென்றால் செவ்வியல் இசை முதல் சிற்பக் கலை, கட்டிடக் கலை வலை 'பரோக்' வகையறா அலாதியான நுட்பங்கள் கொண்டவற்றைத் தான் குறிக்கும் சொல். பாக் (Bach), இசையும் பெர்னினியின் சிற்பங்களும் இந்த வகைக் கலையம்சத்தின் முக்கிய உதாரணங்கள். "

முற்றிலும் தவறு. நீங்கள் குறிப்பிட்ட wiki யே பாருங்கள் - https://en.wikipedia.org/wiki/Baroque#End_of_the_style,_condemnation_and_academic_rediscovery

இதையே தான் ஜெமோவும் எழுதியிருக்கிறார். அதாவது 18-19 நூற்றாண்டுகளில் மேற்கத்தியவர்களுக்கே baroque மீது ஓர் இழிவான பார்வை உருவாகி வந்தது . ஆகையினால் அன்றளவில் நாயக்கர் சிற்பங்களைக் குறித்து எழுதுகையில் "baroque" என்னும் சொல் அவை தரம்குறைந்தவை என்பதை குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டது .

Mahesh Gopalmohan said...

I like your writings in English.
I am unable to read Tamil
Can you provide a English Translated version of your Writings

Thank you

German Karthik said...

Nice article. I have roamed around Europe except for southern Europe. I find that even a 200 year old items is properly researched, agreed and documented. You don't need to depend on guides. However there are exceptions like Berlin Wall Walk, done by Voluntary organization. In India I guess Invasion (Muslims, British - who selectively documented) followed by Atheism is the basic reason for unauthenticated source of Info. Further if anyone attempts, it is criticized and the leftist politics take over. Most of th treasures are in temples which are managed by Leftists and Atheists.