தமிழ் நாட்டில் எதிர்மறையாகவே மட்டும் அறியப்படும் ஆளுமைகளுள் சமீப காலமாக இணைந்திருப்பவர் வ.வே.சு. ஐயர் என்றறியப்படும் வரகனேரி வேங்கடேச சுப்பிரமணியம் ஆவார். ஐயர் நிறுவிய சேரன் மாதேவி குருகுலம் சார்பான சர்ச்சை சமீப காலத்தில் பிரபலமாகும் வரை அவர் மதிப்பு மிக்கவராகவே அறியப்பட்டார். 'வ.வே.ஸு. ஐயர்' என்று தலைப்பிட்ட தி.சே.சௌ.ராஜன் அவர்களின் புத்தகத்தைப் படித்த போது அது ஒருவரை பற்றிய அறிமுகம் என்பதை விட இந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு காலத்தின் அறிமுகமாகத் தோன்றியதன் விளைவே இப்பதிவு.
உளவு
இந்திய விடுதலைக்காக முனைந்தவர்களை வேவு பார்ப்பது காலனி அரசின் முக்கியப் பணியாக இருந்தது. உளவுச் சொல்வோரின் அரசாங்க அறிக்கைகள் மிக முக்கிய ஆவணங்கள். ராஜனின் இந்த எளிய நூலில் லண்டனில் விடுதலை விரும்பிகளின் முக்கிய ஸ்தலமாக இருந்த இந்தியா ஹவுஸ் உளவுப் பார்க்கப்பட்டதை விவரிக்கிறார். ஆச்சர்யமான திருப்பங்களுடன்.
உளவுப் பார்த்தப் பலர் வெகு சாதாரணர்கள். வ.உ.சியை வேவுப் பார்த்த ஒருவரை வ.உ.சி. தனக்குப் பணிவிடை செய்ய வேலைக்கு வைத்துக் கொண்டார். அது பற்றிக் கிண்டலாக அரசு தனக்குச் செய்த கைங்கர்யம் என்றாராம்.
கீர்த்திகர் (Kirtikar) - இவருடைய முழுப் பெயர் கிடைக்கவில்லை- இந்தியா ஹவுஸில் தங்கிய போது அவரைக் குறித்துச் சாவர்க்கர், ஐயர், ராஜன் ஆகிய மூவருக்கும் ஐயமேற்பட்டது. ஒரு நாள் கீர்த்திகர் அறையில் இல்லாத போது அவர் உடமைகளைச் சோதனையிட்ட ஐயர் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்தார். பின்னர்க் கீர்ரித்கரை மூவரும் மிரட்டி ஒப்புக் கொள்ள வைத்ததோடு அவர் சமர்ப்பிக்க்கும் அறிக்கைகளை ஐயர் சரி பார்த்தப் பின்பே அனுப்ப வேண்டும் என்று ஒப்புக் கொள்ள வைத்தனர். மேலும் உளவுப் பார்க்க அரசு அவருக்குக் கொடுக்கும் கூலியில் ஒரு பகுதியை இந்தியா ஹவுஸுக்கு செல்லுத்தவும் ஆரம்பித்தார். இந்தியா ஹவுஸில் இருந்த "சுறுசுறுப்பும் நல்ல முகவெட்டும் உள்ள வேலைக்காரி"யுடன் கீர்த்திகருக்கு தொடர்பும் ஏற்பட்டது.
தங்களை அரசு உளவுப் பார்ப்பதைப் போலவே தாங்கள் அரசை வேவுப் பார்த்தாலென்ன என்ற யோசனையின் விளைவு லண்டனுக்கு வந்து இந்தியா ஹவுஸில் அடைக்கலம் புகுந்த எம்.பி.டி.ஆச்சார்யாவை ஸ்காட்லாண்டு யார்டுக்கு வேலைக்கு அமர்த்தினார்கள் சாவர்க்கரும், ஐயரும். ஆச்சார்யா இப்படியாக ஸ்காட்லாண்ட் யார்டில் பணிக்கு சேர்ந்து அந்த வருவாயையும் இந்தியா ஹவுஸுக்கு கொடுத்தார். ஸ்காட்லாண்ட் யார்ட் ஏமாந்தார்கள்.
மொராக்கோ போன திருமாலாச்சார்யார், துப்பாக்கிப் பயிற்சி எடுத்த ராஜன்
ஆயுதப் போராட்டமே விடுதலைக்கு வழியென்று சாவர்க்கரும், ஐயரும் பிறரும் தீவிரமாக நம்பிய காலக்கட்டம் அது. அதற்காக லண்டனிலேயே துப்பாக்கிப் பயிற்சிக்கு முயன்றார்கள் ஆனால் எந்த இடத்திலும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் ராஜனுக்கு மட்டும் ஓரிடத்தில் அனுமதி கிடைத்தது ஆனால் அதுவும் மூன்று நாட்களுக்குப் பின் ரத்தானது. மனம் தளராத ராஜன் பாலிடெக்னிக் ஒன்றில் சேர்ந்து இன்னும் கொஞ்சம் பயிற்சிப் பெற்றார்.
துப்பாக்கிச் சுடுவது மட்டும் போதாது போர் நடத்த அனுபவம் தேவை என்றுணர்ந்தவர்கள் அப்போது, 1909-1910, மொராக்கோவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே நடந்த போரில் பங்குப் பெற்றால் படை நடத்தும் அனுபவம் கிடைக்குமென்று எம்.பி.டி. ஆச்சார்யா மற்றும் இருவரை மொராக்கோ அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் இஸ்லாமியர். முயற்சி பலனளிக்கவில்லை எந்தப் படையும் இம்மூவரையும் ஏற்கவில்லை. ஏழு மாதங்களுக்குப் பின் ஆச்சார்யா மட்டும் மிகவும் நலிந்த நிலையில் இந்தியா ஹவுஸ் திரும்பினார்.
M.P.T. Acharya |
1907-இல் சாவர்க்கரும், ஐயரும் லண்டன் வந்திருந்த துருக்கியின் பிரமுகர் முஸ்டாபா கெமால் அடாடுர்க்கை சந்தித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
காந்தியை சந்திப்பது
1909-இல் காந்தி லண்டனுக்குச் சென்றார். அப்போது சாவர்க்கரும் ஐயரும் அவரைச் சந்தித்தார்கள். காந்தி ஏதோ பெரிய ஹோட்டலில் தங்கியிருப்பார் என்று தேடி அலைந்து பின் அவர் ஒரு சாதாரண இடத்தில் இந்தியாவிலிருந்து வந்து சிற்றுண்டி நடத்தும் ஒருவரின் வீட்டில் சந்த்தித்தார்கள் சாவர்க்கரும், ஐயரும். சுரேஷ் பிரதீப் சமீபத்தில் "காந்தியத்தின் முதலைப் பற்கள்" என்று எழுதிய போது இந்நிகழ்வை படித்துக் கொண்டிருந்தேன். என்ன முதலைப் பற்களோ. மூன்று நாட்கள் சாவர்க்கரும் ஐயரும் காந்தியை மீண்டும் மீண்டும் சந்தித்து விவாதிக்கிறார்கள். அவ்விவாதங்களுக்கு எதிர் வினையாகத் தான், குறிப்பாக மேற்கத்திய நாகரீகத்துக்கு எதிராகவும் தீவிரவாதத்தை நிராகரித்தும், காந்தி "ஹிந்த் ஸ்வராஜ்" புத்தகத்தைத் திரும்பிச் செல்லும் போது கப்பலிலேயே பித்துப் பிடித்தவரைப் போல் எழுதி முடித்தார்.
24 அக்டோபர் 1909-இல் இந்தியா ஹவுஸில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்கள் (மற்ற சரித்திர ஆசிரியர்கள் எல்லோரும் இதனை விஜய தசமி விழா என்றே குறிப்பிடுகிறார்கள்). பண்டிகை பல இந்தியர்களை ஒருங்கிணைக்கும் என்று எண்ணியவர்களுக்கு ஒரு சிக்கல், அப்போது லண்டனில் தங்கியிருந்த பிரபலமான இந்தியர்கள், கோகலே, விபின் சந்திர பால், லாஜபதி ராய், எல்லோரும் விழாத் தலைமையேற்க மறுக்கவும் காந்தியை சாவர்க்கரும் ஐயரும் அழைத்தார்கள்.
விழா நாளன்று இந்தியா ஹவுஸ் வந்த காந்தியை அங்கிருந்தோர் அடையாளம் தெரியாமல் விருந்துக்கு வந்தவர் என்று நினைத்து அப்போது நடந்து கொண்டிருந்த சமையல் வேலையில் ஈடுபடுத்துகிறார்கள். ஐயரும் சாவர்க்கரும் வீட்டுக்கு வந்து இவர் தான் காந்தி என்ற போது மற்றவர்கள் திகைக்க அந்த முதலைப் பற்களுக்குச் சொந்தக்காரர் சிரித்தார்.
காந்தியின் உரையை விடச் சாவர்க்கரின் ராமாயணம். பற்றிய உரை மிகவும் ரசிக்கப்பட்டது. காந்தியை சந்தித்த முதல் நாள் மாலை ஐயர் ராஜனிடம், "மனித சிருஷ்டியில் உயர்ன்ந்த்அஅவ்அஅர்உஉம் ஒப்பற்றவருமான ஒருவரை இன்று சந்தித்தேன்" என்றாராம். ராஜன் வருடத்தைத் தவறாக 1908 என்று குறிக்கிறார்.
மேடம் காமா
மேடம் காமா (Madam Cama) என்றழைக்கப்பட்ட பிகாஜி காமா ஒரு பார்ஸி பெண்மணி, விவாகரத்தானவர், தேச விடுதலைக்காகப் போர்க் குணத்தோடு செயல்பட்ட ஆச்சர்யபடத்தக்க பலருள் ஒருவர். இந்திய விடுதலைப் பயணத்தில் தான் எத்தனையெத்தனை ஆச்சர்யப்படத்தக்க ஆளுமைகள். ஓ அது ஒரு காலம்.
காமா செல்லுமிடமெல்லாம் தான் வைத்திருக்கும் மூவர்ணக் கொடியை "மேஜையிலோ அல்லது நாற்காலியிலோ ஒரு சன்னக் குழாயை நிறுத்தி அதில் பறக்கவிட்டுப் பிறகு தான் பேச ஆரம்பிப்பார்கள். ஆங்கிலப் பத்திரிக்கைகளில், "கொடி தாங்கி அம்மையார்" என்று எழுதுவது வழக்கம்".
சாவர்க்கர் வழக்கும் துரோகிகளும் ஐயரும்
அக்காலத்தில் பாரீஸ் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அடைக்கல நகராகச் செயல்பட்டது. இந்தியாவில் பாண்டிச்சேரி போல். ஜனவரி 1910-இல் சாவர்க்கர் லண்டனில் தான் கைது செய்யப்படலாம் என்று பாரிஸுக்குப் போனார். பிறகு 13 மார்ச் 1910 லண்டனுக்குத் திரும்பும் போது விக்டோரியா ஸ்டஷனில் கைது செய்யப்பட்டார் (ராஜன் இதை டோவர் துறைமுகம் என்று எழுதுகிறார்). சிறையில் இருந்த சாவர்க்கரை அடிக்கடி சந்தித்தது ஐயர் தான். சாவர்க்கரை தப்புவிக்கும் ஒரு முயற்சியில் ஈடுபட்டார் முயற்சி பலனளிக்கவில்லை ஆனால் அம்முயற்சிக்காக லண்டன் போலீசால் கைது செய்யப்பட இருந்தார். ஏப்ரல் மாதம் ஐயர் பாரீஸுக்கு சீக்கியர் போல் வேடமிட்டு தப்பினார். அதற்கு அவர் தாடியும் தோற்றமும் துணைப் புரிந்தன.
ஜூலை 1910 சாவர்க்கரை இந்தியாவுக்கு அனுப்பி வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று லண்டனில் முடிவானது. ப்ரான்ஸில் இருக்கும் மார்ஸே வழியே தான் கப்பல் பயணிக்க வேண்டும். மார்ஸே துறைமுகத்தில் சாவர்க்கர் கழிப்பறை துளை வழியே தப்பிக் கடலுக்குள் குதித்தார். ராஜன் சாவர்க்கர் நிர்வாணமாகக் குதித்ததாகச் சொல்கிறார். வழக்கு ஆவணம் ஒன்று "almost naked" என்கிறது ஆனால் சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு எழுதிய விக்ரம் சம்பத் அது பற்றிச் சொல்லவில்லை.
கடலில் குதித்த சாவர்க்கரை போலீசார் நீந்தி துரத்தினர். நிர்வாணமாகக் கரையேறிய சாவர்க்கர் தனக்காக வண்டியுடன் கரையில் காத்திருக்கும் வ.வே.ஸு. ஐயர் மற்றும் மேடம் காமா நோக்கி ஓட பின்னால் போலீஸ் துரத்தி அவரைப் படித்து விட்டது என்கிறார் ராஜன். சம்பத்தின் புத்தகம் ஐயரும் காமாவும் வந்தடைய தாமதமாகி விட்டதென்கிறது. எப்படியோ சாவர்க்கர் பிடிப்பட்டார்.
சாவர்க்கரின் கைதுக்குப் பின் ஐயர் ஓர் இஸ்லாமியராக வேடமிட்டு இந்தியாவுக்கு "எகிப்து, பம்பாய், கொழும்பு, கடலூர்" வழியே தப்பி வந்தார். "அந்தணர் குலத்தவர் இஸ்லாமியப் பக்கிரியாக மாறினார். அதற்கான சின்னங்கள், முஸ்லீம் பழக்கங்கள், பேச்சு இவைகளுடன் உளவுப் போலீஸ்காரர்களுக்குத் தெரியாமல் தப்பினார்" என்கிறார் ராஜன்.
சாவர்க்கர் வழக்கில் முக்கியமானவர்கள் ராமராவ் என்பவரும் அரிச்சந்திர கோரேகாவகர் (Harishchandra Khoregaonkar) என்பரும் முக்கியமானவர்கள்.
பாரீஸில் துப்பாக்கிகளையும் ரவைகளையும் எளிதாக வாங்க முடியும் என்பதால் அங்குத் தங்கியிருந்த காலத்தில் துப்பாக்கிகளை வாங்கி இந்தியா செல்லும் ராமராவ் மூலம் அனுப்பினார் ஐயர். ஆனால் பாரீஸில் இங்கிலாந்து உளவுத் துறை இதை மோப்பம் பிடித்து விட்டதை ஐயரும் ராமராவும் உணரவில்லை. பாம்பே வந்திறங்கிய ராமராவ் கைது செய்யப்பட்டுத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் ராமராவ் கொடுத்த வாக்குமூலம் சாவர்க்கரை நாஸிக் வழக்கில் சிக்க வைக்க உதவியது. 1917-இல் காங்கிராச் மாநாட்டில் ராமராவை சந்தித்ததைக் கசப்போடு நினைவு கூர்ந்தார் ராஜன்.
கோரேகாவ்கர் மிக முக்கியமான சாட்சியம் வழங்கினார். இந்தியா ஹவுஸில் தங்கியிருந்த போது சாவர்க்கரோடு உரையாடியது, திங்கிராவின் கொலைத் திட்டம், இன்னும் பல விவரங்களை அளித்துச் சாவர்க்கருக்கு எதிரான வழக்கு வலுப் பெற கோரேகாவ்கர் முக்கியக் காரணம். அரிச்சந்திரன் என்று பெயர் கொண்டவர் இப்படித் துரோகம் செய்து விட்டாரே என்று வருந்தி எழுதுகிறார் ராஜன்.
இந்தியாவில் ஜூன் மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமானுக்குப் போகும் வழியில் சென்னை வந்தார் சாவர்க்கர். 17 ஜூன் 1911-இல் ஆஷ் துரையை வாஞ்சி கொன்றிருந்த செய்தி சாவர்க்கரை அடைந்ததென்றும் அவர் அச்செயலுக்கு ஐயர் அனுப்பிய துப்பாக்கிகள் உதவியிருக்கலாம் என்று உணர்ந்ததாகச் சாவர்க்கரின் வரலாறு எழுதிய விக்ரம் சம்பத் சொல்கிறார். (ஆதாரம் எதுவும் கொடுக்கவில்லை).
குருகுலமும் முடிவும்
1920-இல் புதுச்சேரியை விட்டுச் சென்னை வந்த ஐயர் 'தேசபக்தன்' என்று ஒரு இதழில் எழுதிய கட்டுரைக்காக 9 மாதம் சிறையில் இருந்தார். சிறையில் இருந்து வெளி வந்த ஐயர் திருநெல்வேலிக்கு அருகே சேர மாதேவி என்ற இடத்தில் "பாரத்துவாஜ ஆசிரமம்" என்ற பெயரில் காங்கிரசிடம் இருந்தி ரூ.10,000 பெற்று (முதல் தவணை ரூ. 5000) ஒரு குருகுலம் ஆரம்பித்தார்.
குருகுலத்தில் சில பிராமண மாணவர்களுக்குத் தனியாக உணவு பரிமாறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாக வரதராஜுலு நாயுடுவும் ஈ.வெ.ராவும் முன் நின்று எதிர்த்தார்கள். ஐயங்காரான ராஜன் தானும் தனியே ஐயரிடம் இப்படிச் செய்யலாகாது என்று கூறியதாக எழுதுகிறார். இன்றளவும் இந்த ஒரு விஷயத்தை வைத்தே ஐயர் பேசப்படுகிறார். சம காலத்தில் அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துக்காகத் தலித்துகள் சமைத்தால் தங்கள் பிள்ளைகள் சாப்பிடக் கூடாதென்று இடை நிலை சாதி இந்துக்கள் எதிர்த்த போது திராவிட இயக்கம் பாராமுகமாக இருந்து விட்டது.
இந்தச் சச்சரவு "1924-ஆம் வருஷம் துவங்கிற்று. 1925-ஆம் வருஷம் ஜூலை 3" அன்று "பாபநாசம் நீர் வீழ்ச்சியில் தம் மகளைக் காப்பாற்றும் பொருட்டு ஐயர் உயிர் நீத்தார்". வ.வே.சு. ஐயருக்கு வயது 44.
மதிப்புரை
முதல் கேள்வி ராஜனின் புத்தகம் வரலாறா? நிகழ்வுகளை நம்பலாமா? விக்ரம் சம்பத் எழுதிய சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றோடு ஒப்பிட்டுச் சொல்கிறேன் ராஜன் எழுதியது வரலாறு. ஆச்சர்யமான விஷயம் சம்பத் எங்குமே ராஜனின் புத்தகத்தைச் சொல்லவில்லை, ராஜனின் புத்தத்தில் மட்டுமே கண்டிருக்கக் கூடுய ராஜன் துப்பாக்கி பயிற்சி பெற்றது பற்றிக் கூட எழுதியிருக்கிறார் சம்பத் ஆனால் ராஜனின் புத்தகத்தைச் சுட்டவில்லை. மற்ற நிகழ்வுகளுக்குச் சம்பத் வேறு ஆதாரங்கள் தருகிறார் ஆனால் அவை எல்லாமே ராஜன் எழுதியதோடு ஒத்துப் போகின்றது.
T.S.S. Rajan (1880-1953) |
1946-இல் வெளிவந்த இந்நூல் ஒரு காலத்தின் சித்திரத்தை கூட அல்ல மாறாக ஒரு நிழலை, silhouette, அளிக்கிறது என்று தான் கொள்ள வேண்டும். இந்திய விடுதலை என்பது நீண்ட பயணம். அதில் மிக ஆச்சர்யப்படத்தக்கவர்கள் பயணித்திருக்கிறார்கள். "தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம்" என்ற பாரதியின் வரி சத்தியமான உண்மை.
ராஜனின் வாழ்வே ஆச்சர்யமானது தான். வைதிக குடும்பத்தில் ஶ்ரீரங்கத்தில் பிறந்து திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்து, ரங்கூனில் பணியாற்றி, லண்டனில் படித்து மருத்துவராகி, விடுதலைப் போராட்டத்தில் இரண்டு முறை (இரண்டறை வருடம்) சிறையில் இருந்தவர், தமிழ் நாடு ஹரிஜன சேவா சங்கத் தலைவர், சென்னை அரசில் இரண்டு முறை அமைச்சராக இருந்திருக்கிறார்.
எம்.பி.டி ஆச்சார்யா எப்பேர்ப்பட்ட வாழ்வு அவருடையது. வைஷ்ணவர், இந்தியா பத்திரிக்கை நடத்தியவர், இங்கிலாந்துக்குப் போய் உளவுப் பார்த்தவர், பின்னர்க் கம்யூனிஸ்டாகி லெனினை சந்தித்தவர், மிக ஏழையாகப் பம்பாயில் இறந்தார்.
காந்தி, பாரதி, வ.வே.சு. ஐயர், நேரு, சாவர்க்கர் இவர்கள் எல்லோருமே மாஜினியையும், கரிபால்டியையும் பற்றிப் படித்தும் எழுதியும் இருப்பது உலகத்தின் விடுதலை மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையெல்லாம் நம் தேச விடுதலைக்காகப் படித்து ஆராய்ந்ததைச் சொல்லும். 1850-1950 நூற்றாண்டை இந்தியா உருவான நூற்றாண்டு என்று சொல்ல முடியும்.
எப்படியாவது தேசத்துக்கு விடுதலை கிடைத்து விட வேண்டும் என்று தமக்குச் சரி என்று தோன்றிய எல்லா வழிகளையும் தேச பக்தர்கள் கையாண்டிருக்கிறார்கள். இதில் முக்கியமாகப் பிராமணர்கள், தன்னளவில் ஆசார நம்பிக்கைகள் கொண்டிருந்தாலும், நிறையச் சாதிய கட்டுப்பாடுகளை மீறி இருக்கிறார்கள். இன்று நாம் தட்டையான சித்திரங்களால் புரிந்து கொண்டிருக்கும் பலரும் மிகச் சிக்கலான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.
எளிய மொழியில் எழுதப்பட்ட சிறிய நூல் ஆனால் இன்றைய சந்ததியினர் அவசியம் படிக்க வேண்டிய நூல் ராஜனின் 'வ.வே.ஸு. ஐயர்'. வ.வே.சு. ஐயர் பற்றிய இன்னொரு முக்கியமான நூல் பெ.சு. மணியின் "வ.வே.சு. ஐயர் அர்சியல்-இலக்கிய பணிகள்". ராஜன் தொடாத ஐயரின் இலக்கியப் பணிகள் குறித்து மணி எழுதியிருக்கிறார்.
No comments:
Post a Comment