பெரியார் பிறந்த நாளை "சமூக நீதி நாள்" எனக் கொண்டாட தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து ஒரு விவாதத்தில் பி.ஏ.கே-வும் ஆழி செந்தில்நாதனும் மற்றவர்களும் பங்கேற்றனர். அவ்விவாதம் பற்றிய என்னுடைய சில எண்ணங்கள்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதை அண்ணாதுரை போகிற போக்கில் சொன்னது அது திமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடல்ல என்கிறார் செந்தில்நாதன். இது உண்மையல்ல.
சமீபத்திய தேர்தலின் போது திமுக இந்து விரோத கட்சியென்ற பரப்புரைக்கெதிராக (அவதூறு என்றே சொல்லலாம் ஏனென்றால் தற்போதய திமுக முன்னெப்போதையும் விட மிக ஆன்மீகமான கட்சி என்பது வெளிப்படை) திமுக அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதே திமுகவின் தொடர் நிலைப்பாடு என்றார். மேலும், "திமுகவுக்கு என்று தனித்த வெளிப்படையான கொள்கைகள் உண்டு. இவை யாருடைய மனதையும் புண்படுத்துவதும் இல்லை. யாருடைய நம்பிக்கைக்கும் எதிரானவர்களும் அல்ல." அதாவது, செந்தில்நாதன் சொல்கிறாரே "திமுக-திக இரட்டை குழல் துப்பாக்கி என்று" அது திமுகவின் நிலைப்பாடு அல்ல. (https://www.hindutamil.in/news/tamilnadu/564560-one-tribe-one-god-position-dmk-must-instruct-volunteers-to-realize-and-act-on-the-tactical-politics-of-internet-scandals-2.html)
இது தொடர்பாக சுப.வீ அவர்கள் ஒரு பேட்டியில் சொல்கிறார் "பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக உள்ள சமூகத்தில் அவர்களது நம்பிக்கைக்கு மாறாகப் பேசி தேர்தல் அரசியல் நடத்துவது கடினம். எனவே பெரியாரைப் போலல்லாமல் இணக்கமாகப் போகவேண்டிய தேவை அவருக்கு இருந்தது. எனவே திருமூலரிடம் இருந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற வரியை எடுத்துக்கொண்டார்." (https://www.bbc.com/tamil/global-41292186)
பெரியார்-அண்ணா உறவு:
திமுக ஆட்சி என்பது தி.கவின் அரசியல் பாதை அவ்வளவே என்று பூசி மெழுகுகிறார் செந்தில்நாதன். இதுவும் மேலோட்டமாகத்தான் உண்மை. அண்ணா பெரியாரை முதலில் மறுத்ததே விடுதலை நாளை கறுப்பு தினமென்று குறிப்பிட மறுத்தது. (https://www.bbc.com/tamil/india-45527633)
அண்ணாதுரை பெரியாரிடமிருந்து தத்துவார்த்தமாகவே விலகினார் என்பது தான் உண்மை. அது ஜனநாயக அரசியல் நிர்பந்தத்துகாக மட்டும் என்று சுருக்குவது நியாயமில்லை. பெரியாரின் பார்ப்பண எதிர்ப்பை அண்ணாதுரை பார்ப்பணீய எதிர்ப்பு என்று மாற்றினார்.
பி.ஏ.கே. சொல்வது போல் திமுக என்றுமே பெரியாரின் முக்கியமான கருதுகோள்கள் பலவற்றை நிராகரித்தது என்பதே உண்மை. பெரியார் முக்கியமாக கருதிய சாதி மறுப்புக் கூட பெயரளவில் தான் திமுக ஏற்றது. சாதி ஒழிப்புக்காக ஒரு சிறு அசைவைக் கூட செய்யாததோடு சாதிப் பார்த்தே வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தது. அண்ணாதுரை தன் சாதியை வினவியப் பின் தேர்தலில் இடமளித்தார் என்று ஆற்காடு வீராசாமி வெளிப்படையாகச் சொன்னார்.
பெரியாரையும் அண்ணாதுரையையும் மீண்டும் ஓரளவு இணைத்ததில் சுய மரியாதை திருமண மசோதா நிறைவேற்றத்திற்கு பங்குண்டு. ஆனால் மசோதா பற்றி உரையாற்றிய அண்ணாதுரை சுட்டிக் காட்டியது சுய மரியாதை திருமணங்கள் தமிழ் மரபே என்று திரு.வி.க.வும் மறைமலை அடிகளும் சொன்னார்கள் என்பதே. இவ்விடத்தில் நேரு இந்து மத சீரமைப்பு மசோதா மேலான விவாதத்தின் போது கையாண்ட உத்தியையே அண்ணா கையாண்டார். இது பெரியாரின் மொழி அல்ல. பெரியாரின் வழிகள் ஜனநாயக வழிகளுக்கு ஒவ்வாதது என்று தெளிந்த அண்ணாவின் சாதுர்யமான பயணம் இது.
சார்லஸ் ரையர்சன் அவருடைய "Regionalism and Religion: The Tamil Renaissance and Popular Hinduism" அண்ணாதுரை பெரியார் போன்று பூரண நாத்திகத்தை வலியுறுத்தாது தமிழ்க் கடவுள்கள் ஆரிய கடவுள்கள் போலல்ல என்று நுட்பமாக பிரித்துப் பேசியதை அடையாளம் காட்டுகிறார்.
காந்தி-பெரியார்-அண்ணா
காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார் கடைசி மூச்சு வரை காந்தியை எதிர்த்தார். மிக மூர்க்கமாகவே. காந்தி கொல்லப்பட்டதும் பெரியார் இந்தியவுக்கு காந்தி தேசம் என்று பெயரிடச் சொல்லி தலையங்கம் எழுதினார். இதை அடிக்கடி குறிப்பிடும் திராவிட இயக்கத்தனர் பூசி மெழுகுவது பெரியார் அதனை பின்னர் மிக சிக்கலான விளக்கங்கள் கொடுத்தார். காந்தி கொலையுண்டதை விட அக்கொலையை செய்தவன் பிராமணன் என்பதில் பெரியாருக்கு மிக அதிக திருப்தி. இத்தருணத்தில் கீழ வெண்மனி படுகொலைத் தொடர்பாக பெரியாரின் அறிக்கையை நினைவுப் படுத்திக் கொள்ளவும். நாகூரில் 28 பிப்ரவரி 1948-இல் பெரியார் பேசுகிறார், "காந்தி தான் நமது நாட்டை வடநாட்டானுக்கும் பார்ப்பானுக்கும் ஒப்படைத்து நம்மை அடிமையாக்கியதற்கு காரணம்". பின்னர் சிதம்பரத்தில் 29 செப்டம்பர் 1948-இல் உரையாற்றிய பெரியார் விடுதலைக்குப் பின் காந்தி பல தவறுகளை உணர்ந்து மாற ஆரம்பித்ததாகவும் தானே மறுபடி அவருக்கு சிஷ்யனாக மாறும் வாய்ப்பு வாய்க்கும் என்று எண்ணியதாகவும் சொல்கிறார். முதுகுளத்தூர் கலவரத்தின் போது மீண்டும் வன்மத்தோடு காந்தியை தாக்கிப் பேசினார். மொத்தத்தில் பெரியார் காந்தி குறித்து முன்ன்னும் பின்னுமாக கருத்துகள் உதிர்த்தார்.
அண்ணாதுரை 1948, காந்தி இறந்த பின், "உலகப் பெரியார் காந்தி" எழுதிய புத்தகம் சுவாரசியமானது. காந்தியை வெகுவாகப் புகழ்ந்து அண்ணா எழுதினார். ரையர்சன் ஒரு முக்கிய நிகழ்வைச் சுட்டிக் காட்டினார். "The Rising Sun" பத்திரிக்கையில் 15 அக்டோபர் 1971 அன்று குடிசை மாற்று வாரியம் துவக்கியதைப் பற்றிய செய்திக் குறிப்பில் திமுக அரசு "மகாத்மா காந்தி ஏழையின் முன் கடவுள் தோன்றினால் ரொட்டியாகத் தோன்ற வேண்டும் என்றார், அண்ணா இன்னும் ஒரு படி மேலே போய் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார்" என எழுதியது. அண்ணாவையும் காந்தியையும் கழக அரசு தொடர்ந்து தொடர்பு படுத்தியது என்கிறார் ரையர்சன்.
கருணாநிதியும் பெரியாரும்
2021 தேர்தலை ஒட்டி நான் எழுதிய ஒரு பேஸ்புக் பதிவில் ரையர்சனின் புத்தகத்தை மேற்கோள் காட்டி பெரியார் இன்று பெரும் அடையாளமாக கட்டமைக்கப்பட்டச் சூழல் 1971-க்குப் பின் கருணாநிதியினால் தான் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முக்கிய பிண்ணனியாக அமைந்தது சேலத்தில் பெரியார் ஜனவரி 24-25 தேதிகளில் 1971-இல் நடத்திய "மூட நம்பிக்கை ஒழிப்பு கருத்தரங்கு". விழாவை ஒட்டி நடத்தப்பட்ட பேரணியில் இந்து கடவுள்களை, குறிப்பாக ராமனை, ஆபாசமாக சித்தரித்து தட்டிகள் ஏந்தி சென்றனர். மிகப் பெரும் சர்ச்சை வெடித்தது. பேரணியில் எடுத்துச் செல்லப்பட்ட தட்டிகளின் போட்டோக்களை 'துக்ளக்' வெளியிட திமுக அரசு பத்திரிக்கையை பறிமுதல் செய்ய காவல்துறைக்கு ஆணையிட்டது.
தன் அரசு பிராமணர்களுக்கு எதிரானதல்ல என்று நிரூபணம் செய்ய கருணாநிதி பிப்ரவரி 7 அன்று ஒரு உரையில், "திமுக பிராமணர்களை பாதுகாத்திருக்கிறது" என்றும் தான் நியமித்த பிராமண மாவட்ட அட்சியர்கள் பற்றியும், தன் நிதி அதிகாரி ஒரு பிராமணர் என்றும் சொன்னார் (சமீப அரசு நிதி சார்ந்த குழுவிலும் பிராமணர்கள் உண்டு. திமுக என்றுமே பிராமணர்களை ஆதரிக்கும் கட்சி தான். மேடையில் சவடால் விடுவது வேறு).
சர்ச்சையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட காமராஜரும், ராஜாஜியும் கைக் கோர்த்தனர். ஆரம்பத்தில் கொஞ்சம் சமாதானமாக பிரச்சனையை முடிக்க நினைத்த முதல்வர் கருணாநிதி அரசியல் எதிர்ப்பைக் கண்டு தன் நிலைப்பாட்டை உஷ்ணமாகவே வெளிப்படுத்தினார் என்கிறார் ரையர்சன். "நாங்கள் செய்த பாவம் என்ன? எங்களை அழிக்க ஏன் துடிக்கிறார்கள்? உயர் குடியில் பிறக்காதது தான் நாங்கள் செய்த பாவம். நான் ஒரு சாதாரண ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவன்....பெரியாரும், அண்ணாவும் தான் எங்கள் சுய மரியாதையை மீட்டெடுத்தனர்.." என்றார் கருணாநிதி. மேலும் விநாயகர் சிலையை உடைத்தப் போது சும்மா இருந்த ராஜாஜி ராமனை அவமதித்ததற்காக கோபம் கொள்வது அவர் விநாயகரை பூஜிக்காதவர் என்பதால் என்றார் கருணாநிதி. இன்னொரு அறிக்கையில் "இது வரை தமிழகத்தில் நடைபெறாத சாதி, இனக் கலவரம் நடக்குமோ என்று அச்சப்படுகிறேன்" என்றார். அடுத்த நாள் நடைப்பெற்ற ராஜாஜி-காமராஜர் தலைமையிலான கூட்டம் முடிவுப் பெறும் போது பெரும் கலவரம் நடந்தது. மீண்டும் கருணாநிதி பத்திரிக்கைகள் தான் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்ததால் தான் இப்பிரச்சனையை ஊதிப் பெரிதாக்குகின்றன என்றார்.
தேர்தல் பிராமணர்-பிராமணரல்லாதோர் என்று பிளவுப்பட்டது. 1971 தேர்தலில் திமுக அமோக வெற்றிப் பெற்றது. வெற்றிக்குப் பின் கடவுளுக்கு எதிராக பொது அமைதிக்கு குந்தகம் விளைவுக்கும் எதையும் அரசு அனுமதிக்காது என்றார் கருணாநிதி. ஆனால் அவர் தெளிவாக அண்ணாவின் மிதவாத போக்கில் இருந்து மாறி பெரியாரின் பாதைக்கு திரும்பினார் என்கிறார் ரையர்சன். அண்ணாவின் 62-வது பிறந்த நாளை முன்னிட்டு கழக அரசு அண்ணாவின் பிராபல்யத்தை அறுவடைச் செய்து கிடைத்த தேர்தல் வெற்றிக்கான நன்றியாகத் தான் இந்த பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறது என்றது விகடனின் தலையங்கம்.
சினத்தின் உச்சிக்கே சென்ற கருணாநிதி முரசொலியில் 20 செப்டம்பர் 1971-இல் வெளியான உரையில் கொதித்தார், "பிராமணர்கல் கழக அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள்...எத்தனை சாம்ராஜ்யங்களை இவர்கள் கவிழ்த்திருப்பார்கள் என்று தெரியாதா? கைபர் கனவாய் வழியே வந்தவர்கள்...பெரியார் போர்க் கொடி தூக்கியதே உங்களை எதிர்த்து தான்".
தேர்தல் வெற்றிக்குப் பின் சென்னையில் ஜூன் 7 (அல்லது 8) 1972-இல் பகுத்தறிவு மாநாடு நடத்தினார் கருணாநிதி. பெரியார் பற்றி புகைப்படங்கள், இந்து கடவுள்களை விமர்சித்த (மோசமாக சித்தரித்த) படங்கள் எல்லாம் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டது. அதன் பின் பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டே கருனாநிதி இந்து மதத்தை விமர்சித்தார் ஆனால் தெளிவாக அண்ணாவின் கொள்கையான "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றார். பழனியில் பேசும் போது ஒரு முறை கருணாநிதி ஆய்வாளர்கள் முருகனே தமிழ் கடவுல் என்பதை ஆய்வு செய்ய வேண்டுமென்றார்.
இப்போது ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்வோம் பெரியார் திமுகவுக்கு எதற்கு பயன்பட்டார்?
திமுகவின் பெரியார் தேவை
பெரியாரின் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, சாதி ஓழிப்பு எதிலும் திமுகவுக்கு நம்பிக்கை என்றுமே இருந்ததில்லை. அதெல்லாம் மேடை பேச்சோடு சரி. இன்று ஆத்திகர்கள் நிரம்பியக் கட்சி திமுக தான். அந்த விவாத நெறியாளர் சொல்வதுப் போல் சமூக நீதி, பெண் விடுதலை என்பதெல்லாம், மற்றவர்கள் அவற்றை முன் எடுத்திருந்தாலும், பெரியாரால் தான் சாத்தியமானது என்பது அப்பட்டமான திரிபு, வரலாற்றை மறைப்பது. நீதிக் கட்சி, தலித் அரசியல் முன்னெடுப்புகள், காந்திய பேரியக்கத்தால் உண்டான முன்னெடுப்புகள், தமிழக காங்கிரஸ் ஆட்சியல் நடந்தவை, மத்திய அரசு நிறைவேற்றிய அரசியல் சாசனம், இந்து மத சீரமைப்பு மசோதா என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று வரை தி.க.வின் தலைமை ஆண்கள் மட்டுமே. திமுகவிலும் அது தான் நிலை.
திமுகவுக்கு, குறிப்பாக கருணாநிதிக்கு, பெரியார் தேவைப்பட்டது ராஜாஜி, சோ, விகடன் ஆகிய பிராமண எதிர்ப்பை சமாளிக்கத்தான். பெரியாரின் பிராமண துவேஷம் வேர் விட்ட அளவு வேறு எந்த பெரியாரியக் கொள்கையும் தமிழகத்தில் நிலைக்கவில்லை. இன்றும் சாதி வேற்றுமை மற்றும் சாதி வன்முறையில் தமிழகம் யாருக்கும் சளைத்ததல்ல.
திமுக, குறிப்பாக கருணாநிதி, முன்னெடுத்த பண்ப்பாடு சார்ந்த கருத்தியல்கள் பெரியாரிமா என்று தாராளமாக கேள்விக் கேட்கலாம். தமிழை முன் வைத்து பழம் பெருமைப் பேசுவது, பாரம்பர்ய பெருமைப் பேசுவது, கண்ணகியையும் சிலப்பதிகாரத்தையும் முன் வைத்தது, ராஜராஜனுக்கு சதய விழா, ராஜேந்திர சோழனுக்கு விழா என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அடிப்படையில் திமுக பிராமண எதிர்ப்பைத் தாண்டி வேறு பல கருத்தியல்களில் பெரியாருக்கு எதிர் திசையில் தான் பயணித்தனர். கருணாநிதியின் பிராமண எதிர்ப்பும் கூட பல சமயங்களில் அரசியல் நாகரீகம் என்ற பெயரில் பின் வாங்கியது என்பதே நிஜம்.
பெரியாரின் மொழி சமூக நீதிக்கான மொழியல்ல. அதே சமயம் பி.ஏ.கிருஷ்ணன் அதனை நாஜித்தனம் என்று சித்தரிப்பதையும் நான் ஏற்றதில்லை. அது பற்றி நீண்ட விவாதமே அவரோடு செய்திருக்கிறேன். யூட்யூப் காணோளி கீழே. (சுட்டிhttps://youtu.be/s9Gic-vpRaM )
திமுக இன்று பல தரப்பட்ட சமூகத்தினரையும் திருப்திப் படுத்துவதே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்துக்களுக்கு தாங்கள் இந்து மதத்தின் நண்பர்கள் என்று காட்டிக் கொள்ள அதீதமாகவே பிரயத்தனப்படுகிறார்கள். அதே சமயம் தாங்கள் பெரியார் வழி வந்தவர்கள் என்பதையும் நிலை நாட்டிக் கொள்ள பெயரளவில் இந்த சமூக நீதி நாள் போன்ற முன்னெடுப்புகளையும் செய்கிறார்கள். அந்தளவில் தான் பெரியார் இன்று பயன்படுகிறார்.
குறிப்பு: ஒரு சாதாரண பேஸ்புக் பதிவாகத்தான் ஆரம்பித்தேன் வளர்ந்து விட்டது. கட்டுரை என்றும் சொல்ல இயலாது. அதற்கான கட்டமைப்பும் கொஞ்சம் சிதைந்திருக்கிறது.
No comments:
Post a Comment