நண்பர் பூவண்ணனின் காணொளி ஒன்று காண நேர்ந்தது. குலுக்கை யூட்யூப் தளத்தின் கதாநாயகன் பூவண்ணன் தான். நிறைய நேர்காணல்கள் இருக்கின்றன. உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டதை பற்றிய காணொளியை ஆவலுடன் கேட்டேன்.
போர் என்றாலே நாசம் தான். அது உயிர்களை பாதிக்கக் கூடியது என்பதை நெகிழ்வான ஓர் உதாரணத்தோடு விளக்கி இருக்கிறார். போரை சமூகம் வியந்து நோக்கும் ஹீரோயிஸமாகக் காண்பதை நக்கலடிக்கிறார். நியாயம் தான். என்ன கூடவே இந்த புறநானூற்றுப் பெருமைப் பேசியதெல்லாம் திராவிட மேடைகள் தாம், அதை மறந்துவிட்டார்.
இந்திய வெளியுறவுத் துறையில் நிலவும் ஆதிக்க மனோபாவம் குறித்து சொல்லும் போது அத்துறை ஆதிக்க சாதியினரால் நிரப்பட்டதாலேயே தான் பூடான் போன்ற நட்புறவுக் கொண்ட ஆனால் சின்ன நாடுகளை அவமதிப்பதும் நம்மோடு நட்புறவில்லாத சீனா போன்ற நாடு பெரிய நாடாக இருப்பதாலுமே பணிந்துப் போகிறார்கள் என்கிறார். இதில் சாதிய மனோபாவம் தாண்டி யதார்த்த நிலையைப் பற்றி பூவண்ணன் கண்டு கொள்ளவே இல்லை. எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் இடை நிலை சாதியினரை திராவிட கட்சிகள் எப்படி கையாள்கின்றன என்றும் விரித்துப் பேசியிருக்கலாம்…கலாம்…கலாம்.
அவ்வுரையில் என்னை இன்று எழுத வைத்திருப்பது நேரு பற்றிய ஒரு தகவலும் பூவண்ணனின் சாதியப் பார்வையும். லண்டனில் ஹரால்டு லஸ்கியிடம் பயின்ற நாராயணன் 1948-இல் இந்தியா திரும்பினார். அவர் நேருவை சந்தித்தார், நாராயணனை லாஸ்கி புகழ்ந்து எழுதியக் கடிதத்தை படித்த நேரு அவரை வெளியுறவுத் துறைக்கு பரிந்துரைக்க சில அதிகாரிகள் நாராயணின் சாதியைப் பார்த்து நிராகரித்ததாகவும் பின்னர் நேரு நாராயணனை ஜீனியர் போஸ்டில் நியமித்ததாகவும் பூவண்ணன் சொல்கிறார். அக்காலத்தில் நியமணமான மற்றவர்களைப் பாருங்கள் என்கிறார். அதோடு நிறுத்தவில்லை நேருவின் ஜாதியை சுட்டாமல் சுட்டி “அவர் அப்படித்தான், அவர் உணவு, சுற்றத்தார் எல்லாம் அந்த வகை தான்” என்று நேருவை பிராமணர் என்பதாலேயே விமர்சிக்கிறார் பூவண்ணன்.
முதலில் பூவண்ணன் சொன்னதில் நிஜமும் உண்டு. நீலகண்டன் மாதிரி இது ஒரு உத்தி. சிறு உண்மையை மையமாக வைத்து பெரும் பொய்களை வலைப் பின்னுவது. நேருவின் காலத்தில் நியமிக்கப்பட்ட, அதுவும் நாராயணன் பணி கேட்டு வந்த காலத்தில், இரண்டு தூதுவர்கள் விமர்சனத்துக்குட்பட்டவர்களே. ஒன்று, விஜயலக்ஷ்மி பண்டிட், இன்னொன்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இருவரும் பிராமணர்கள், இருவரும் நேருவும் நெருக்கமானவர்கள். விஜயலக்ஷ்மி அடித்த கூத்துகள் பற்றி குஷ்வந்த் சிங் பின்னாளில் எழுதினார். சரி, இவர்கள் மொத்தமாக தகுதியே அற்றவர்களா எனில் அதுவும் இல்லை. கவனிக்கவும் வெளியுறவுத் துறைக்கு துறை சார்ந்த வல்லுனர்களை உருவாக்கவே IFS-ஐ நேரு மாற்றி அமைத்தார். 1948 வரை பிரதமரின் நேரடி நியமன முறையும் அதற்கு பின் அதிகாரிகளின் பரிந்துரை முறையும் நடைமுறைக்கு வந்தது.
விஜயலக்ஷ்மி, ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் கொஞ்சமேனும் நிர்வாக அனுபவம் உண்டு, 1948-க்கு முன்பே. நாராயணன் அப்போது தான் படிப்பை முடித்த மாணவர். அத்தகையவர் எந்த முன் ஆறிமுகமுமில்லாமல் நாட்டின் பிரதமரை சந்திக்க முடிந்திருக்கிறது. பிரதமரும் அவர் திறமையானவர் என்று அடையாளம் கண்டு கொண்டார். நிச்சயம் அதிகாரிகளின் பார்வையில் நாராயணனின் சாதி உறுத்தி இருக்கும்.
நாராயணன் ஒன்றும் சாதாரண போஸ்டுக்கு போகவில்லை. வெளியுறவுத் துறையில் “attache” என்பது ஜூனியர் போஸ்ட் அல்ல. 1948-இல் அப்பதவியில் ஆரம்பித்த நாராயணன் அடுத்தடுத்து பதவிகளில் அமர்கிறார். 1953-இல் First Secretary High Commission of India to United Kingdom. தொடர்ந்து பதவிகள் நாராயணனுக்குக் கிடைக்கிறது. இந்திரா காந்தியின் காலத்தில். ஜே.என்.யூ பல்கலைக் கழக துணை வேந்தர் பதவி, பிறகு அமெரிக்காவுக்கு தூதுவர் என்று நேருவைத் தொடர்ந்து இந்திராவின் காலத்திலும் நாராயணின் தகுதியை மதித்து பதவிகள் தரப்பட்டன.
நேருவைப் பற்றி நாராயணன் எப்போதும் உயர்வாகவே பேசியிருக்கிறார். 1987-இல் “Images and Insights” என்று நாராயணன் எழுதி வெளியிட்ட புத்தகத்தில் ஒரு கட்டுரையின் தலைப்பு, “Nehru: A wonderful human being”. Here is Narayanan about meeting Nehru for the first time, “It was an overwhelming experience of refined kindness and encouragement for a young man on the threshold of his career. He asked innumerable questions, some of them shrewdly calculated to elicit information about my own politics. …I said goodbye and was walking away in a state of mild excitement….Here was the Prime Minister of India sparing a thought for a young man’s career even though the latter had not taken advantage of a magnificent opportunity to raise the issue”. Narayanan has mild criticisms too of Nehru era focusing on legislative means for social reforms.
பர்மாவில் பணியாற்றும் போது அந்நாட்டுப் பெண்ணை விரும்பி மணம் செய்தார் நாராயணன். அது விதிகளுக்குப் புறம்பானது. நேரு தலையிட்டு விதி விலக்களித்தாராம். 1980-இல் நாராயணன் அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்ட போது இந்தியாவில் இருந்த அமெரிக்க தூதுவர் ஆர்ச்சர் பிளட் (Archer Blood, “The Blood Telegram” was by him during Bangladesh crisis) நாராயணன் பற்றி, “கடுமையான உழைப்பாளி, புத்திசாலி” என்று அமெரிக்காவுக்கு குறிப்பு அனுப்பினார். ஆனால் நாராயணனும் இந்திரா காந்தி போன்றே அமெரிக்கா பற்றி எதிர்ப்புணர்வுக் கொண்டிருக்கக் கூடும் என்கிறார். நாராயணன் பொது வெளியில் நன்கறியப்பட்டவராக இருந்திருக்கிறார். பெருமளவு நேரு, இந்திராவுடனான உறவால். அவ்வுறவை பிளட்டும் குறிப்பிடுகிறார்.
உண்மைகள் இப்படி இருக்க பூவண்ணன் சாதியக் காழ்ப்புடன் நேருவை சாதியவாதியாக கட்டமைக்கிறார். மேலும் அந்த நேரு பூவண்ணன் சொல்வதுப் போல் சாதி சார்ந்த உணவுப் பழக்கம் உள்ளவரல்ல. புலாலும் மதுவும் நேருவுக்கு அந்நியமல்ல. நேருவின் அமைச்சரவையில் மிக இள வயது அமைச்சர் பாபு ஜகஜீவன் ராம். ஜகஜீவன் முக்கியமான தொழிலாளர் நலன் அமைச்சரவையை நிர்வகித்தார். அம்பேத்கரை பற்றி சொல்லவும் வேண்டுமோ? அம்பேத்கர் நேருவோடு கருத்து வேறுபாடு கொண்டு ராஜினாமா செய்தார். ஆனால் எக்காரணத்துக்காக அம்பேத்கர் ராஜினாமா செய்தாரோ அந்த இந்து மத சீரமைப்பு மசோதாவை நேரு ச்ட்டமாக்கி காட்டினார். இந்திய பாராளுமன்றத்தில் நேருவுக்கு முக்கியமான எதிர் தரப்பு அரசியல்வாதி விஞ்ஞானியான மேக்னாட் சாஹா. நேருவை சாஹா அணு ஆராய்ச்சித் தொடர்பாக பல முறை எதிர்த்துள்ளார். நேரு சாஹாவின் கேள்விகளால் எர்ச்சலடைந்தாலும் பதில் அளிக்கத் தவறியதேயில்லை (அக்காலத்தில் ஹோமி பாபா, விக்ரம் சாராபாய், பட்நாகர், சாஹா இடையே பெரும் போட்டி நிலவியது. அதெல்லாம் மிகப் பெரிய கதை. அதன் மையக் கதாபாத்திரம் நேரு).
பூவண்ணன் “அவங்க அப்படித்தான்” என்று சொல்வதே சாதியச் சொல்லாடல் தான். பிராமணர் யாராவது “அவங்க அப்படித்தான்” என்று சொன்னால் பூவண்ணன் சும்மா விடுவாரா? சமீபத்தில் முதல்வரின் நூல் வெளியீட்டு விழாவில் கூட ஒருவர் முதல்வர் ஸ்டாலினின் பண்புகள் “பிறப்பிலேயே வந்தது” என்று பேசினார் (அல்லது வேறு விழாவா, நினைவில்லை). “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றால் அதில் பிராமணர்களும் உண்டே? உடனே “அவங்க அப்படி நினைக்கிறார்களா” என்று கேட்டால் “அப்படி நினைப்பவர்கள் பிராமணர்களில் உண்டு. அப்படி நினைக்காத பிராமணரல்லாதாரும் உண்டு” என்றே சொல்வேன்.
சத்தியவாணி முத்து கருணாநிதி பற்றி சொன்ன விமர்சனம் பற்றி பூவண்ணன் பேசும் காணொளிக்காக காத்திருக்கிறேன்.
References.
1. https://en.wikipedia.org/wiki/K._R._Narayanan
2. https://en.wikipedia.org/wiki/Indian_Foreign_Service
3. https://en.wikipedia.org/wiki/Jagjivan_Ram
4. https://m.rediff.com/news/jul/24pres.htm
5. https://www.theguardian.com/news/2005/nov/29/guardianobituaries.india
6. Blood on Narayanan https://history.state.gov/historicaldocuments/frus1977-80v19/d194
7. https://www.nationalheraldindia.com/india/a-generous-man-jawahalal-nehru-was-a-fine-human-being
No comments:
Post a Comment