பேரறிவாளனின் விடுதலை சரியானது. இனி காலத்துக்கும் எதிரொலிக்கும் ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கிறது. மாநில உரிமைக்கு மிகப் பெரிய ஆமோதிப்பை நீதி மன்றம் வழங்கி இருக்கிறது.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தப் போதே சிறையிலிருந்த காலத்தைக் கணக்கில் கொண்டு (Time served) பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம். ஆயுள் தண்டனை என்பது இந்தியாவில், அமெரிக்கா போல் அல்லாது, ஆயுளுக்கும் தண்டனையல்ல. கொலைக் குற்றத்தில் நேரடி தொடர்பில்லாத அவருக்கு ஆயுள் தண்டனை குறைப்பும், இந்திய சட்டவியலின் படி, சரியானதென்றே நினைக்கிறேன். அவர் குற்றமற்றவர் அல்ல. நீதிமன்றத்தால் குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டவர். விசாரணை குளறுபடிகளெல்லாம் வேறு விவாதம். உச்ச நீதிமன்றம் வரை அவர் குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
நளினி-முருகன் கதை இன்னும் சிக்கலானது. இருவருக்கும் நேரடி தொடர்புண்டு. இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டால் அரசே அவர்கள் குழந்தையை அநாதை ஆக்கும் நிலை இருந்தது. சோனியாவும், பிரியங்காவும் அவர்களை மன்னித்ததை இங்கு குறிப்பிட வேண்டும். (அமெரிக்காவில் ரஷ்யாவுக்காக உளவுப் பார்த்த ரோஸன்பர்க் தம்பதியினர் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு அது நடத்தவும் பட்டது). அக்குழந்தையை நினைக்கும் போது இந்த மரண தண்டனைக் குறைப்பு சரியென தோன்றலாம். ஆனால் ஒரு குழந்தை பிறக்கும் என்று தெரிந்தே கொலைச் செயலில் ஈடுபட்டவர்களை என்னவென்று சொல்வது. மேலும் அவர்கள் செயலால் அநாதையாக்கப்பட்டவர்கள் இருக்கலாமே? அல்லது மொத்த வாழ்வாதாரமும் இழந்தவர்கள் உண்டே. நளினி-முருகனின் குழந்தைக்கு பல நட்புக் கரங்கள் நீண்டு அவர் இங்கிலாந்தில் வளர்ந்தார். ராஜீவோடு இறந்தவர்களின் குழந்தைகளின் நிலை அறிவோமா?
ஒரு தாயாக அற்புதம் அம்மாள் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார். இன்று அவர் கண்ணீருக்கு நீதி கிடைத்திருக்கிறது என்று பலரும் சந்தோஷம் தெரிவிக்கிறார்கள். தவறில்லை. ஒரு நாவலில் ஜெயகாந்தனின் கதாபாதிரமொன்று மனைவிகள் கணவன்மார்களை தண்டிக்க காத்திருப்பதையும் ஒரு தாய் மகன் எப்படிப்பட்டவனாகிலும் ஆதரவளிப்பதையும் ஒப்பிட்டுக் கேள்விக் கேட்கும் (“உங்கள் கணவன்மார்களை தண்டிக்கவே காத்திருக்கிறீகளே, ஏன் அவன் இன்னொருத்தியின் மகன் என்பதாலா?”).
இன்று வெளியாகி இருக்கும் அநேக செய்தி குறிப்புகள், செய்தி ஸ்லைடுகள் எல்லாம் பேரறிவாளன் 30 ஆண்டுகள் சிறையில் இருந்தார், அற்புதம் அம்மாள் போராடினார் என்றே சொல்கிறது. அவர் என்ன சத்தியாகிரகம் செய்தா சிறைக்கு சென்றார்? எங்குமே ராஜீவ் கொலையில் ராஜீவை தவிர இறந்தவர்கள் பற்றியோ அந்த தாக்குதலால் இன்றும் உடல் உபாதைகளோடு வலம் வருபவர்கள் பற்றியோ எந்த குறிப்பும் இல்லை. ராஜீவோடு இறந்த பலர் இன்றும் முகமிலிகள் தானே? அன்று கொல்லப்பட்டவர்களில் 10 வயதே ஆன குழந்தை கோகிலவாணியும் ஒருவர்.
இங்கு இன்னொரு கோணத்தையும் அவதானிக்க வேண்டும். யாகூப் மேமோன் மரண தண்டனையினால் இறந்த போது நிறைய முஸ்லிம்கள் அவர் கடைசி ஊர்வலத்தில் பங்கெடுத்ததை பலர், ஜெயமோகன் உட்பட, விமர்சித்தனர் (அப்போது நான் பால் தாக்கரே, அரசு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர், அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றதை குறிப்பிட்டு தனிக் கட்டுரையே எழுதினேன் ). இதோ இன்று மட்டுமல்ல அடுத்து நளினி-முருகன் விடுதலையானால் தமிழகத்தில் பெரும்பான்மையோர் சந்தோஷப்படுவார்கள். ஒரு அப்ஸல் குருவுக்கு கிடைக்காத வாய்ப்புகள் இந்த எழுவருக்கு கிடைக்கிறது.
யாகூப் மேமானோ, பேரறிவாளனோ ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தரப்பு அவர்களெல்லாம் நீதி மறுக்கப்பட்டவர்களாக கருதுகிறது. இந்திய நீதித் துறையின் மீதான அவ நம்பிக்கை, விசாரணை அமைப்புகள் மீதான அவநம்பிக்கை பரவலாக இருக்கிறது. தவறுகள் நடந்திருக்கின்றன ஆனால் எல்லாமே தவறுகளல்ல.
எழுவர் விடுதலைக் குறித்துப் பேசப்படும் அளவுக்கு கோவை வெடிகுண்டு வழக்கின் பேரில் கைது செய்யப்பட்ட பலர் பற்றி பேச்சே இல்லை. இஸ்லாமியர் கைது செய்யப்பட்டாலே கைதுக்கான காரணத்தில் தீவிரவாதம் சேர்க்கப்படுகிறது. அதனாலேயே தண்டனைக் குறைப்பு லிஸ்டுகளில் அவர்கள் இருக்க முடியாது. இன்று குதூகலிக்கும் பத்திரிக்கையாளர்கள் பலர் இதை குறித்தெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை.
காந்தி கொலையில் நேரடி தொடர்பு கொண்ட கோபால் கோட்ஸே விடுதலை செய்யப்பட்டு அவரும் சிலருக்கு ஹீரோவாக வலம் வந்தார். ஒரு நிராயுதபாணி கிழவரைக் கொன்றது பற்றி எந்த குற்ற உணர்வுமில்லாதவராகவே வாழ்ந்தார். வாழ்க்கை தான் எத்தனை குரூரமானது.
மீண்டும் சொல்கிறேன் பேரறிவாளனின் விடுதலை சரி. அதனைக் கொண்டாடுவதெல்லாம் வேறு லெவல். சரி கொண்டாடிக் கொள்ளுங்கள், கூடவே மற்ற பாதிக்கப்பட்டோருக்கு ஒரு வரியாவது ஒதுக்கி மனசாட்சியோடு கொண்டாடுங்கள்.
No comments:
Post a Comment