Sunday, December 27, 2015

Simbu+ Anirudh Song and Thuglaq's Idiocy (துக்ளக்கின் கலாசாரத் தலிபானியமும் வக்கிரமும்)

துக்ளக்கின் கலாசாரத் தலிபானியமும் வக்கிரமும்:

சிம்பு+ அனிருத்தைக் கண்டிக்கிறேன் பேர்வழி என்று வரும் பதிவுகளும் சரி அவர்களை ஆதரிப்போரும் செய்யும் முதல் காரியம் தமிழில் இது காறும் வந்த அனைத்துச்  சிலேடை மற்றும் நேரடி வக்கிரமான பாடல்களை வரி வரியாக நினைவூட்டுவதையே முதல் கடமையாகச் செய்கின்றனர். அதாவது இது தமிழ் சினிமா மரபு அல்லது தமிழ் சினிமா ரசிகனின் வக்கிரம் என்று நிறுவுகிறார்களாம். இதற்குத் துணையாக மழைப் பாடல்களைப் பற்றி யுவ கிருஷ்ணாத் தனமான விவரிப்பு வேறு.

From L-R Silambarasan & Anirudh. Image Courtesy http://www.filmibeat.com/img/2015/12/beepsong-14-1450074701.jpg
முதலாவதாக இந்திய தணிக்கைச் சட்டங்களுக்குள் ஓர் எல்லையைத் தாண்ட முடியாமையே இவற்றுக்கெல்லாம் விதை. அதே சமயம் என்னமோ தமிழன் மட்டும் இதையெல்லாம் ரசிக்கிறான் என்று கட்டமைப்பது பைத்தியக்காரத்தனம்.

ஹாலிவுட்டை கிண்டலடித்துச் சுஜாதா எழுதியது நினைவுக்கு வருகிறது. துப்பறியும் படங்களில் சர்வ நிச்சயமாய் இடம் பெரும் கிளப் நடனங்கள் பற்றி நக்கலடித்திருப்பார். சிசில் பி டிமெல்லியின் பைபிள் கதைகளை மையமாகக் கொண்ட படங்களிலேயே கூட அக்கால அமெரிக்கத் தணிக்கை விதிகளுட்பட்டு கவர்ச்சி இடம் பெரும். ரோமாபுரி பற்றிய வரலாற்றுப் படங்களென்றால் அக்கால ரோமாபுரியின் உண்மையான வக்கிரங்களை மிதமிஞ்சும் காட்சியமைப்பு இருக்கும். இப்படிப் படங்களின் நிர்வாணக் காட்சிகளைத் தொகுத்து அளிக்கவென்றே இணையத் தளங்களுமுண்டு.

துக்ளக் பத்திரிக்கை அதற்கேயுரிய வக்கிரத்தோடு ஒருப் பதிவை வெளியிட்டிருக்கிறது ( http://idlyvadai.blogspot.com/2015/12/blog-post.html ). சிம்பு+ அனிருத்தை தமிழ் சினிமா மரபின் நீட்சி என்பது போலப் பாவ மன்னிப்பு வழங்கிவிட்டு அவர்களின் உண்மையான 'டார்கெட்' மீது பாய்ந்தார்கள். தமிழ் சிற்றிலக்கியப் பத்திரிக்கைகளில் பெண் கவிஞர்கள் பெண்ணுறுப்புகளை விவரித்தும் காமத்தை முன்வைத்தும் எழுதும் பாட்டினைச் சாடுகிறார்கள். இதை எழுதியவர் ஓர் இலக்கிய மொண்ணை என்பது நிதர்சனம்.

சிலேடையாக 'இலந்தப் பழம்' என்று எழுதியதையும் நேரடியாக எழுதப் பட்ட நரகலையும் ஒன்றென வாதிடுவதே தவறு.

நான் அடிக்கடிச் சொல்வேன் தி.க/தி.மு.க வினருக்கும் வலது சாரி இந்துத்துவ அமைப்புகளுக்கும் வித்தியாசங்கள் கிடையாதென்று. இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இருவருக்கும் வெறுப்பு வியாபாரம் முக்கியம். ஒரே வித்தியாசம் யார் அல்லது எது வெறுக்கப் படுகிறதென்பதில் தான். இதைப் பற்றி விரிவாக வேறொரு தருணத்தில் எழுதுகிறேன்.

அண்ணாத்துரை கம்ப ராமாயணத்தில் சீதையின் அங்க லாவண்யங்களின் வர்ணனைகளைத் தொகுத்து 'கம்ப ரஸம்' என்று வெளியிட்டுத் தன் அரிப்பையும் தன் உடன்பிறப்புகளின் அரிப்பையும் தீர்த்து வைத்தார். கம்பனை ஒரு சரோஜா தேவி லெவெலுக்கு இறக்கியதில் அண்ணாத்துரை வெற்றியடைந்தார் என்று இன்று ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத துக்ளக்கின் பத்தி ஆசிரியர் செய்திருப்பதும் அதுவே தான். இலக்கியத்தில் பெண் கவிஞர் பெண்ணுறுப்பு பற்றி எழுதுவதும் வக்கிரத்தையே குறி வைத்து எழுதப் பட்ட ஒரு சினிமாப் பாடலுக்கும் வித்தியாசம்  தெரியாத தற்குறித் தனம் தான் அந்தப் பதிவில் இருந்தது.

ஒரு பகுத்தறிவுவாதிப் புளித்துப் போன இன்னொரு வாதத்தை முன் வைத்தார். "அப்படியென்றால் அபிராமி அந்தாதிப் போன்றவைகளை என்ன செய்வது". அவருக்கும் அந்தத் துக்ளக் துக்கிரித்தனத்திற்கும் வித்தியாசமேயில்லை.

இன்னொரு முகம் சுளிக்க வைத்த பதிவு ஒரு பெண்ணியவாதியால் எழுதப் பட்டது. பாடல் சம்பந்தப் பட்ட இருவரில் பிராமணரான அனிருத்தை மட்டும் குறி வைத்து எழுதித் தன் பகுத்தறிவுப் பதாகையைப் பட்டொளி வீசிப் பறக்க விட்ட அறிவிலி அவர். நம் தந்தைகள் எல்லோரும் அக்கா, தங்கை, அம்மாவோடு பிறந்தவர்கள் தான் இருந்தும் நாம் பிறந்தோம். அதற்கு மேல் அதை விளக்கினால் எனக்கும் இந்த அறிவிலித்தனத்திற்கும் வித்தியாசமிருக்காது. இந்த அறிவுக் கெட்ட 'நீ அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா, உன் அம்மா' என்றெல்லாம் கேட்பது காமம் சார்ந்த ஓர் அறிவிலித் தன்மையையே காட்டுகிறது.அதுவும் வள்ர்ந்து சுயமாகத் தனித்தியங்கும் ஓர் ஆணின் செய்கைக்கு அவரின் தாய் மற்றும் சகோதரிகளைப் பெண்ணியம் என்ற போர்வையில் கேள்விக் கேட்கும் அறிவிலித் தனத்தை என்னவென்று இகழ்வது.

நான் பொதுவாக ஹிப்-ஹாப் வகைப் பாடல்களை விரும்புவதில்லை அவற்றிலுள்ள ஆபாசங்களுக்காக ஆனால் இந்த வருடம் முதன் முறையாக ஒரு ஹிப்-ஹாப் ஆல்பத்தை வாங்கினேன். Kendrick Lamar-இன் "Pimp a butterfly" எனும் ஆல்பம் தான் அது. நியு யார்க் டைம்ஸில் மூன்று இசை விமர்சகர்களின் பட்டியலில் இந்த வருடத்தின் சிறந்த ஆல்பம் லிஸ்டில் அது இருந்தது மட்டுமல்லாமல் அவர்கள் அப்பாடல்களில் பேசப்படும் சமக் காலத்திய பிரச்சினைகள் இசை எனும் கலை வடிவத்தின் மூலமாக விவாதிக்கப்பட்டதை வலியுறுத்தியிருந்தனர். அந்தப் பாடல்களிள் ஆபாச வார்த்தைகள் சரமாரியாக வந்து விழும். அதனாலேயே அந்த CD முழுவதும் "Explicit" எனும் ரேட்டிங் கொடுக்கப் பட்டிருந்தது. அப்படி அடையாளப்படுத்தப்படுவதால் அந்த ஆல்பத்தை 18-வயதுகுட்பட்டவர்கல் கடைகளில் வாங்க இயலாது. அது மட்டுமல்ல ஆப்பிளின் ஐ-டியூன்ஸில் அதே ஆல்பத்திற்கு "Clean" என்று இன்னொரு பிரதியும் விற்கும். இந்த "Clean" பிரதியில் கெட்ட வார்த்தைகள் தொழில் நுட்பத்தின் உதவியோடு நீக்கப்பட்டு வேறு சாதாரண வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். அமெரிக்காவில் வீடியோ கேம்ஸ் மற்றும் பாடல்களில் ஆபாசங்கள் மலிந்து அவை சிறார்களைச் சென்றடைகின்றன என்று விவாதிக்கப்பட்டு இன்று அவையும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளும் ஒரு தரப்படுத்தலுக்குட்படுத்தப் படுகின்றன (Ratings). அது மட்டுமல்ல சூப்பர் பெளல் போன்ற நிகழ்ச்சிகளில் ஆபாசம் வந்து விடக் கூடாதென்பதற்காக 'ஒளிப்பரப்புத் தாமதப்படுத்தல்' (delayed broadcasting) முறைக் கடைப் பிடிக்கப் படுகிறது.

மேற்சொன்ன எதுவும் நம் தமிழ் கூறும் நல்லுலகில் வழக்கத்திலில்லை. சினிமாவில் இயக்குனரின் சொற்படியும் வணிக நிர்பந்தங்களுக்குட்பட்டும் எழுதப்படும் பாடல்களும் இசையும் கலை வடிவம் ஆகாது. பாடலாசிரியன் என்பவன் கவிஞனில்லை. திரை இசை என்பது இசை எனும் கலை வடிவம் இல்லை என்பன போன்ற அடிப்படைப் புரிதல்கள் இல்லாத சமூகத்தில் தான் ஒரு நாலாந்தர இசைக் கோர்ப்பை ஒரு சமூகமே தாரைத் தப்பட்டையோடு கொண்டாடும். கென்ட்ரிக் லமாருக்கும் ப்ளேபாய்க்கும் வித்தியாசமுண்டு என்பதை அறிந்தச் சமூகம் முன்னேறியச் சமூகம். அது லமாரின் புகழ் பெற்ற ஆல்பமாகவே இருந்தாலும் குழந்தைகளுக்கானது அல்ல என்று தெளிவும் குழந்தைகளை அப்பாடல்களில் இருந்து பாதுகாக்கும் உணர்வும் கொண்ட சமூகமே வாழத் தக்கது. நான்கு, ஐந்து வயது குழந்தைகளை 'தீப் பிடிக்க தீப் படிக்க' என்றுப் பாட வைத்தோ அப்பாடலுக்கு நடனமாட வைத்தோ அதை வலையேற்றம் செய்யும் மன நோய்க் கொண்ட பெற்றொரும் தன் பெண் பிள்ளைகள் தொலைக் காட்சிப் போட்டி நிகழ்ச்சிகளில் வயதுக்கு மீறீயப் பாடல்களுக்கு நடனமாடுவதை ஊக்குவ்விக்கும் சீக்குப் பிடித்த சமூகத்தில் கவனம் அதிகம் தேவை. சமீபத்தில் சூர்யா ஒரு பேட்டியில் கூறியது போல் "பிள்ளைகள் கெட்ட வார்த்தைப் பேசுவதில்லை, கேட்ட வார்த்தையைத் தான் பேசுகிறார்கள்". தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், தனிப் பாடல் ஆல்பம் ஆகியவற்றுக்கு அவசரமாக தணிக்கைச் சட்டம் தேவை. அது வரை இந்த ஆபாசப் பாடல் தடை செய்யப் பட வேண்டும்.

ஒரு கீழ்த்தரமானப் பாடல் பற்றிய விவாதத்தில் தமிழகத்தில் வேறூன்றியிருக்கும் இனத் துவேஷம்; காமம், இலக்கியம், இசைப் பற்றிய கந்திரக் கோளமான புரிதல்கள் வீதிக்கு வந்தது தான் மிச்சம்.


1 comment:

Anonymous said...

/// திரை இசை என்பது இசை எனும் கலை வடிவம் இல்லை /// ஐயோ! ஏங்க அப்படி?

இடம் பெரும் ... வல்லினம், மெல்லினம் எங்கு வரும்னு பார்த்து எழுதுங்க.
முகம் சுளிக்க.. ல,ள,ழ எல்லாமே இடையினம்தான்னாலும் எது எங்க வரும்னு பார்த்து எழுதுங்க.
அடிக்கடிச் சொல்வேன், அந்தாதிப் போன்றவைகளை,... - ஒற்று எங்கு மிகும்-மிகாது என்று பார்த்து எழுதுங்க.
பத்திரிக்கை - என்னங்க இப்படிப் பண்றிங்களே!

சரவணன்