பாரதி எனும் முதல் இந்தியன்:
யார் ‘இந்தியன்’, இந்தியனாக இருப்பதென்பது யாது என்ற கேள்விக்கு தன் வாழ்வையே பதிலாக அளித்து அதன் பொருட்டே தன் உயிரையும் அளித்தவர் காந்தி அவருக்கும் முன்பாக காந்தி நெடுங்காலம் பயணித்து அடைந்த புள்ளியைச் சுட்டிச் சென்றவன் நம் தமிழ் மகாகவி பாரதி. தாகூரால் கூட எட்ட முடியாத சிந்தனை உயரத்தை அடைந்தவன் பாரதி என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமேயில்லை.
அமெரிக்க அரசு முத்திரையில் “E Pluribus Unum” என்று லத்தீன் வாசகமுள்ளது, “பன்மையிலிருந்து ஒருங்கிணைந்த ஒற்றுமையான ஒன்று” என்ற அர்த்தம் (Out of many, one). பாரதிக்கு அந்த வாசகம் அறிந்ததாக தெரியவில்லை, ஆயினும், 26 வயதே ஆன கவிஞன் 1909-இல் எழுதுகிறான்:
"முப்பது கோடி முகமுடையாள், உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.
நண்பர்களே இந்திய தேசிய கீதத்தை 1911-இல் எழுதும் போது தாகூருக்கு வயது 50, அப்பாடலில் இல்லாத கருத்தியல் பாரதியின் கவியில் தான் உள்ளது. “உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்” எனும் போதே பாரதிக்கு தெரியும் இங்கிருக்கும் பிரிவினைகள், அதனால் தான், “எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம், எல்லாரும் இந்திய மக்கள்” (1922) என்றும் எழுதுகிறான்.
காந்தியும், குறிப்பாக பாரதியும், உயர்குடி என்று சுட்டப்படும் ஜாதிகளில் பிறந்தவர்கள் அதன் பலன்களையும் அடைந்தவர்கள் என்பதோடு அதுவே அவர்களின் விசாலப் பார்வை என்று நாம் இன்று சொல்லக் கூடிய பார்வையை ‘இந்தியா’ என்ற கட்டமைப்புக் குறித்து எழுப்ப முடிந்ததென்று நியாயமான விமர்சனமாகவே சொல்லலாம். சுதந்திர போராட்டமே வெறும் வெள்ளையர் ஆதிக்கத்தை அகற்றுவது என்று மட்டுமே இருந்த காலத்தில் தான் பாரதி வாழ்ந்தான். காந்தி வெகு காலம் தீண்டாமைக்கு எதிராக செயலாற்றினாலும் பூனா ஒப்பந்ததுத்துக்கு பிறகு தான் 6 வருடம் தேச விடுதலையை விட ஒடுக்கப்பட்டோர் நலனை முன்னிறுத்தி செயலாற்றுகிறார். இந்த பின்னணியில் பாரதியை பற்றி சில கோணங்களை முன் வைக்கிறேன்.
“ஸ்வதந்திர பள்ளு” (1909, பாரதியின் அகவை 26) என்ற பாடலை “பள்ளர் களியாட்டம்” என்று உப தலைப்பிட்டே பாரதி எழுதுகிறான். தேச விடுதலை பற்றியப் பாடலின் முதல் வரியே “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே” என்று சொல்லி அதன் பின்னர் தான் “வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே” என்கிறான். ‘சுய சாதி விமர்சனம்’ என்ற கருத்தாடலோ, சொல்லாக்கமோ இல்லாத யுகத்தில் அதனை தொடர்ந்து செய்தவன் பாரதி. இதே பாடலில் மீண்டும் சொல்கிறான், “எங்குஞ் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு”. உண்மையில் இதனை எழுதியவன் இந்தியாவின் தெற்கு மூலையில் ஒரு சிற்றூரில் வாழ்ந்த 26 வயது வாலிபனென்றால் இன்றும் யாரும் நம்ப மாட்டார்கள். அன்றைய இந்தியாவில் பாரதியின் சமகாலத்தில் இப்படி எழுதிய கட்டுரையாளர்கள், கவிஞர்கள் இருந்தார்களா எனத் தெரியவில்லை. சமத்துவமில்லா இந்தியா இந்தியாவே அல்ல என்று தெளிவுடன் இருந்தவன் பாரதி.
பாரதி, எல்லாப் புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள், முன்னோடிகளையும் போல் தன் சம கால விதிகளை மீறுபவனாகவும், தகர்ப்பவனாகவும் இருக்கும் அதே வேளையில் சம காலத்தின் பிடியில் இருந்து மொத்தமாக துண்டிக்கப்பட்டவனுமல்ல என்ற புரிதல் முக்கியம். இதனை குறிப்பாக ஸ்டாலின் ராஜாங்கம் சுட்டிக் காட்டி இருப்பார். சமத்துவ சமூகம் பேசிய பாரதி ஒரு ‘paternalistic’ இடத்தில் இருந்தே பேசுவதை சுட்டிக் காட்டி அது மாறி வரும் இந்திய சமூக உறவுகளின் தொடக்க யுகத்தில் இருந்த சிந்தனையாளனின் போக்கு என்றும் அதனை பரிவுடன் நோக்குதல் வேண்டும் என்றார்.
வ.உ.சி-யைப் பற்றி தாகூர் பாடல் எழுதவில்லை ஆனால் நம் பாரதி திலகர், கோகலே, லாஜபதி ராய் பற்றி பாடல் எழுதினான். தாகூர் அவர்களைப் பற்றியும் பாடல் எழுதியதில்லை. ருஷ்யப் புரட்சி, முதல் உலகப் போரில் பெல்ஜியத்தின் வீழ்ச்சி குறித்தெல்லாம் பாடல் எழுதிய கவிஞர்கள் இந்தியாவில் வேறெங்கிலுமுண்டா? கட்டுரைகளில் எத்தனையெத்தனை உலக விவகாரங்களை பாரதி கையாண்டிருக்கிறான் என்று பார்த்தால் வியப்பு மேலிடும். ஏப்ரல் 23 1920-இல் “செல்வம்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் எழுதுகிறான்:
“ஏற்கனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின் ஸ்ரீமான் மிந்த்ரோஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொதுவுடமையாகி விட்டது….கொலையாளிகளை அழிக்க கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகின்றது. நியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேருகிறது' என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை….மேலும் ருஷ்யாவிலுங்கூட இப்போது ஏற்பட்டிருக்கும் 'ஸோஷலிஸ்ட்' ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருத வழியில்லை.”
சாதி பேதமற்ற இந்தியா மத ரீதியாக பிரிந்து நிற்பதை சகியாதவன் எம் கவிஞன். 1906-இல், 25 வயதில், எழுதுகிறான், “இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவு மகமதியர்களுக்கும் சொந்தம்”. அதே வருடம் திலகர் நடத்தும் சிவாஜி ஞாபகார்த்த கொண்டாட்டங்கள், பவானி பூஜை போன்றவற்றால் இஸ்லாமியரை சாடும் போக்கினை மறுத்து எழுதியவன் “நம் நாட்டார் அனைவரும் அக்பர் சக்கரவர்த்தியின் உற்சவத்தையும் கொண்டாடுவர் என நம்புகிறோம்” என்கிறான். இஸ்லாமியரின் மீலாது நபி விழாக்கள் பலவற்றில் கலந்து கொண்டு முகம்மது நபி பற்றி உரையாற்றி இருக்கிறான். இவ்விடத்தல் நாம் பாரதியை வியக்கும் போதே இப்படி ஒருவனை அழைத்த இஸ்லாமிய சமூகத்தினரையும் வியக்க வேண்டும்.
பாரதி கனவுக் கண்ட இந்தியா புதுமையானது, பழமைகளில் இருந்து விடுதலைப் பெற்று அறிவியல் தழைத்தோங்கும், எல்லோருக்குமான கல்வி கிடைக்கும் தேசமாக மலர வேண்டுமென்பதே அவன் அவா. “காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான்,காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்றவன் எழுதிய அறிவியல் கட்டுரைகள் அபாரம். வங்காள அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸின் உரைகளை தமிழில் சமகாலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிட்டான். ஓ அவன் தான் எப்பேர்ப்பட்ட முன்னோடி. பிச்சை எடுத்தாவது கல்வி கற்க சொன்ன தமிழ் மூதுரையை தலை கீழாக்கி ஏழைக்கு கல்வி அளிப்பதே கோயில், குளம் கட்டுவதை விட சிறப்பென்றான். 1906-இல் “சக்கரவர்த்தினி” இதழில் “மொத்தம் 10,000 ஸ்திரீகளுக்கு, 94 ஸ்திரீகளே கல்விப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இந்த பயிற்சியும் அதி சொற்பமானதாகவே இருக்குமென்று நாம் தெரிவிக்க வேண்டுவதில்லை” என்று கவலைப் படுகிறான். 25 வயதுக்குள் இந்த இளைஞனுக்கு தான் எத்தனையெத்தனை தெளிவும், தொலை நோக்கும். பெண் விடுதலப் பேசியவர்கள் என்று இன்று கொண்டாடப்படும் எவருக்கும் குறைந்தவனல்ல பாரதி என்பதோடு அப்படி கொண்டாடப்படும் பலரின் மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட பக்கங்கள் பாரதிக்கு இல்லை என்பதையும் சுட்ட வேண்டும்.
வரலாற்றில் பாரதியின் இடம் பற்றி எழுத நினைத்ததே இப்பதிவின் காரணம். இந்தியாவின் மிக முக்கியமான சிந்தனையாளனுக்கு இன்றும் ஒரு முழுமையான வாழ்க்கை வரலாறு எழுதப்படாதது பெருங்குறை.
கடவுளால் நேசிக்கப்படுபவர்கள் இள வயதில் இறப்பார்கள் என்ற விதிக்குட்பட்டு 39 வயதில் நம்மை பிரிந்து விட்டான். பராசக்தி பாரதியை கொஞ்சம் குறைவாக நேசித்திருக்கலாம்.
இன்றும் ஒரு தமிழன் மட்டுமல்ல இந்தியாவின் எந்த பிரஜையும் இந்தியனாக இருப்பதென்பது யாது என்று வினவினால் “பாரதியைப் போல்” என்று சந்தேகமற கூறலாம்.
பி.கு: பாரதி பற்றி ஒரு சிறு குறிப்பு தான் இப்பதிவு. பாரதி பற்றிய அறிய நூல்கள் பரிந்துரை பட்டியல் ஒன்றினையும் பாரதி பற்றிய விரிவான நிகழ்வு ஒன்றின் காணொளியின் சுட்டியும் முதல் இரண்டு கமெண்டுகளில் இருக்கிறது.
உதவிய நூல்கள்:
1. காலவரிசையில் பாரதி பாடல்கள் - பதிப்பு சீனி.விசுவநாதன்
2. கால ரிசையில் பாரதி படைப்புகள் -தொகுதி 2 - பதிப்பு சீனி.விசுவநாதன்.
3. கல்விச் சிந்தனையில் பாரதியார் - தொகுப்பு கலாநிதி ந.இரவீந்திரன்
4. பெயரழிந்த வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம் (மற்றும் ஒரு நேரலை நிகழ்ச்சி)
5. ஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம் - கலாபூஷணம் மாணா மக்கீன்.
No comments:
Post a Comment