2017-இல் தமிழகம் கண்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் பற்றி என் அப்போதையப் பதிவுகளைத் தொகுத்து கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட "ஜல்லிக்கட்டு" புத்தகத்தில் கட்டுரையாக வெளிவந்தது இக்கட்டுரை. 8 வருடங்கள் கழித்து இன்றும் என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை.
ஒரு மாத காலம் தமிழகத்தையே கட்டிப்போட்டதோடு ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ஜல்லிகட்டு போராட்டம். பெருவாரியான மக்களால் விதந்தோதப்பட்ட இந்தப் போராட்டம் சாதித்தது என்ன? அலசுவோம்.
பண்பாடு எனும் முக்காடு
ஜல்லிக்கட்டை ஏன் காப்பாற்றவேண்டும் என்பதற்குச் சொல்லப்படும் முக்கியமான காரணம், பண்பாடு. இந்த ஒற்றைச் சொல்லைக் கொண்டு நீதிமன்றத்தைச் செயலிழக்கச் செய்யும் தாரக மந்திரம் ஒன்று உருவானது. இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பல சீர்திருத்தங்கள் ஆரம்பம் முதலே பண்பாடு என்னும் பெயரால்தான் எதிர்க்கப்பட்டு வந்தன. தேவதாசி முறை, குழந்தைத் திருமணம், உடன் கட்டை ஏறுவது, தீண்டாமை என்று ஒரு நீண்ட பட்டியலையே தயாரிக்கலாம். இவையனைத்துமே பண்பாட்டின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டன. அந்த எஃகு கோட்டையைத் தகர்த்துதான் சீர்திருத்தங்கள் சாத்தியமாயின.
இதன் பொருள் பண்பாடு என்றாலே பழமை, எனவே எல்லாவற்றையும் குப்பையில் வீச வேண்டும் என்பதல்ல. அதே போல் பண்பாடு என்பதற்காகவே கேள்விகள் எதையும் எழுப்பக்கூடாது என்று சொல்லப்படுவதும் ஏற்கத்தக்கதல்ல. ஜல்லிக்கட்டு தமிழர்கள் அனைவரின் பண்பாடு வெளிப்பாடா? இதைப் பாதுகாக்கத்தான் வேண்டுமா? இதில் சாதியம் இல்லையா? இப்படி எதிர்க்கேள்விகளை எழுப்பினால் ‘தமிழ் விரோதி’ என்று முத்திரை குத்தப்படுகிறது. விவாதங்கள் எதுவுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் ஒருவித மயக்க நிலையில் ஒன்றை ஏற்றுக்கொள்வதும் செயல்படுத்துவதும் பெருமைப்படத்தக்கதல்ல.
ஜல்லிக்கட்டில் சாதியம் உள்ளது என்று அதன் ஆதரவாளர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஜல்லிக்கட்டை ஆதரித்து எழுதும் என் உற்ற நண்பர்கள் சிலரிடம் பேசினேன். எல்லோரும் இங்கே அமெரிக்காவில் இருப்பவர்கள், பல தரப்பட்ட அரசியல் சார்புடையவர்கள். ஜல்லிக்கட்டு நிச்சயம் நடத்தப்பட்டே தீரவேண்டும் என்பது அவர்கள் திடமான கருத்து. சரி, தலித்துகள் பங்கேற்பு இல்லை என்று சொல்லப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் அளித்த பதில்கள் இவை. ‘தலித்துகள் பங்கேற்பில் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஆட்சேபணை எதுவுமில்லை’. ‘சமூகம் மாற நாம் அதன் போக்கில் விட்டுப் பிடிக்கவேண்டும்’. ‘ஒரே நாளில் இதற்கெல்லாம் தீர்வு காணமுடியாது’. ‘முதலில் ஜல்லிக்கட்டு. மற்ற விஷயங்களைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’.
2025 ஜல்லிக்கட்டில் பட்டியல் இன மாடு பிடி வீரர் ஒதுக்கப்பட்டதில் எழுந்த சர்ச்சை |
ஆக இவர்கள் எல்லோருக்கும் தங்கள் பண்டிகை தடையில்லாமல் கோலாகலமாக நடக்கவேண்டும் என்பதில் மட்டும்தான் அக்கறை இருக்கிறது. அனைவருக்குமான பண்டிகையாக அது இருக்கவேண்டும் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல.
வரலாற்றாசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் பி.பி.சி.க்கு ஜல்லிக்கட்டில் சாதியம் பற்றி அளித்த பேட்டியின் சுட்டி https://www.bbc.com/tamil/media-38687862
ஒருவர் மிகவும் அதிர்ச்சி தரத்தக்க எதிர் வாதங்களை முன்வைத்தார். அமெரிக்காவில் அவர் குடியிருக்கும் பகுதியிலிருந்து சிறிது தூரம் தள்ளி ஹிஸ்பானிக் மக்கள் குடியிருக்கிறார்களாம். அவர்களுடைய பழக்கவழக்கங்கள் வேறுபட்டவை. தலித்துகளும்கூட ஒருவகையில் ஹிஸ்பானிக்குகளைப் போன்றவர்கள்தாம் என்றார் அவர். ‘அவர்கள் பகுதியில் அவர்கள் மாடு பிடி நடத்துவது சரிதானே?’ என்றார். தவிரவும், அலங்காநல்லூரில் தலித்துகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதாகவும் அவர் சொன்னார். ஆனால் மற்ற இனத்தவரின் மாடுகளை தலித்துகள் அடக்கினால் பல கிராமங்களில் கலவரம் வெடிக்கும் அல்லவா? அதை எப்படிப் புறக்கணிக்கமுடியும்?
ஒன்றிணைந்திருக்கிறார்களா?
ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழினமே பாகுபாடின்றி ஒன்றிணைந்திருக்கிறது என்பதெல்லாம் பசப்பு. இந்த மாணவர்கள் மட்டும் ‘இனி ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு இருக்கக்கூடாது‘ என்று சொல்லிப் போராடியிருந்தால் இவ்வளவு பெரிய கூட்டம் சேர்ந்திருக்குமா? மாணவர்களிடையே சாதி இல்லை என்பதெல்லாம் வீண் பேச்சு. சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும் தேவர் மாணவர்கள் அக்கல்லூரியின் முழுப் பெயரான ‘அம்பேத்கர் சட்டக் கல்லூரி’ என்பதைச் சொல்ல மறுத்தும் அதைத் தொடர்ந்து கலவரம் வெடித்ததும் நமக்கெல்லாம் தெரியும்.
‘அரசாங்க மேற்பார்வைக் குழு ஒன்று அமைத்து, போட்டி பாதுகாப்பாகவும் எல்லாரும் பங்கேற்பதாகவும் இருக்கும்படி விதிகளைச் சட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்’ என்று நண்பரிடம் சொன்னேன். ‘அதெல்லாம் சரி வராது. உள்ளூர் மட்டத்தில்தான் இதையெல்லாம் கையாளவேண்டும்’ என்று மறுத்துவிட்டார் அவர். ‘ஐயா, உள்ளூர் வழக்கங்களுக்குக் கட்டுப்பட்டால் சமூக நீதி கிடைக்காதே’ என்றேன். அதற்கு அவர் ‘நீங்கள் ஐரோப்பிய மனநிலையில் பேசுகிறீர்கள்’ என்று முடித்துக்கொண்டார்.
இங்கே காந்தியின் பூனா ஒப்பந்தத்தை நினைவுகூற வேண்டும். பிரச்னை தனித் தொகுதி கொடுப்பதில் ஆரம்பித்தது. ஆனால் அதுவே ஆலய நுழைவு, தீண்டாமை ஒழிப்பு என்று விரிவடைந்தது. சிறையில் இருந்து மீண்ட மகாத்மா, தேச விடுதலைப் போராட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு சமூக விடுதலைக்காக நடைப்பயணம் மேற்கொண்டார்.
எல்லோருக்கும் வாக்குரிமை, இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு, மதச் சுதந்தரம் ஆகிய லட்சியங்களை உள்ளடக்கி 1950ல் இந்திய அரசியல் சாசனம் உருவெடுத்தது. ‘லோக்கல் உணர்வுகள்’ என்று புறக்கணித்திருந்தால் தலித்துகள் மட்டுமல்ல அவர்களை இன்று ஒடுக்கும் பலரும்கூட ஒடுக்கப்பட்ட நிலையிலேயே இருந்திருப்பார்கள்.
சட்டத்தின் முக்கியத்துவம்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்திய விஷயம் சராசரி தமிழருக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு, சட்டம் பற்றியும் நீதிமன்றம் குறித்தும் இருந்த பாமரத்தனமான புரிதலே. கும்பலின் எண்ணிக்கை எனும் அளவுகோலுக்கு சட்டத்தைக் கைப்பாவையாக்கியது காண சகிக்காதது. ஜல்லிக்கட்டு போராளிகள் பலரும் நீதிமன்ற தடையுத்தரவை எப்படியெல்லாம் சட்டசபையின் துணையோடு முறியடிக்கலாம் என்பதில்தான் முனைப்பாக இருந்தனர். மேலும் காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு கண்டுகொள்ளாதது சுட்டிக் காட்டப்பட்டு ‘நாமும் அப்படியே செய்யலாமே’ என்றொரு கோஷம் எழுந்தது.
ராஜிவ் காந்தி அரசு ஷா பானோ வழக்கில் நடந்துகொண்ட விதம்தான் இதற்கான உந்துசக்தி. இஸ்லாமியப் பெண்ணான ஷா பானோ ஜீவனாம்சம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகி அதற்கான உரிமையைப் பெற்றார். அன்று நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை கொண்டிருந்த ராஜிவ் அரசு ஓட்டு அரசியலுக்காக அத்தீர்ப்பை மறுத்து சட்டமியற்றியது. பின்னர் நீதிமன்றம் அச்சட்டத்தை ரத்து செய்தது. அதனால் இஸ்லாமியப் பெண்கள் நன்மையடைந்தனர்.
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இன்னும் உயிர்ப்புடன் செயல்படும் ஒன்று. காவிரி பிரச்னையில் தவறு நீதிமன்றத்தில் இல்லை. மத்திய அரசும், மாறி மாறி மத்திய அமைச்சரவைகளில் அங்கம் வகித்த தமிழ் நாட்டு மாநிலக் கட்சிகளும்தான் இதற்குப் பொறுப்பு. மிக முக்கியமான உரிமைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே நமக்கு அரணாக நிற்கிறது. மெரினாவில் கூடிய கும்பலிடம் கேஷவானந்த பாரதி வழக்கு, நக்கீரன் கோபால் வழக்கு, 356 சட்டப் பிரிவு குறித்த எஸ்.ஆர். பொம்மை வழக்கு ஆகியன பற்றிய அறிமுகமாவது உண்டா என யாராவது கேட்டால் இல்லையென்றே பதில் வந்திருக்கும். தமிழகத்தில் பலரும் கோரிய ராஜிவ் கொலையாளிகளின் மரண தண்டனை குறைப்பைக் கடைசியில் உச்ச நீதிமன்றமே செய்தது. மத்திய அரசு அவர்களின் கருணை மனுக்கள்மீது 20 வருடங்களுக்கு மேலாக முடிவெடுக்காததால் நீதிமன்றம் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.நமக்கு ஒரு தீர்ப்பு பிடிக்கவில்லை என்பதற்காக சட்டத்தின் இடுக்குகளில் புகுந்து போராட்டம் என்ற பெயரில் கும்பல் சேர்த்துவிட்டால் அதையே சாதனையாக எடுத்துக்கொள்ளமுடியுமா?
இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதை நிறுத்துவதற்காகச் சில விதிமுறைகளை நீதிமன்றம் அறிமுகப்படுத்தியது. ஆனால் அவை பின்பற்றப்படுவதில்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்தான் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்களோ பீட்டாவைத் தடை செய்யவேண்டுமென்று குதிக்கிறார்கள். அவர்கள் அப்படி என்ன செய்துவிட்டார்கள்? இந்தத் தடை இல்லையென்றால் மாடுகள் நடத்தப்பட்ட நிலை பற்றியும் ஜல்லிக்கட்டில் நிலவும் சாதி வெறி பற்றியும் உரையாடலாவது நடந்திருக்குமா?
இன்னமும் இவர்கள் யாரும் மாடுகள் நடத்தப்படும் விதம் மட்டுறுத்தப்படும் என்றோ, ஜல்லிக்கட்டில் சாதியத்துக்கு இடமில்லை என்றோ விதிமீறல்களைக் கண்டறிய மேற்பார்வை அவசியம் என்றோ சொல்லவில்லை. பீட்டாவைத் தடை செய்து மிருக வதை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்று அவர்கள் கோருவதற்குக் காரணம் மேற்பார்வை என்பதே இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். நிச்சயம் பீட்டா விமரிசனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. அந்நிறுவனம் அமெரிக்காவிலேயே அதிகம் விமரிசிக்கப்படும் ஓர் அமைப்புதான். ஆனால் மிருக வதை குறித்து விழிப்பூட்டுவதில் அவர்களுடைய பங்களிப்பு முக்கியமானது என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்து தெய்வங்களோடு சம்பந்தப்பட்ட மிருகங்களின் பட்டியலைப் போட்டுவிட்டு, ‘எங்களுக்கா மிருகங்களை நடத்த தெரியாது?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிலர். நடத்தத் தெரியாது என்பதுதான் உண்மை. கோயில் யானைகளின் நிலை பரிதாபகரமானது. மாட்டு வண்டிகள் பரவலாக இருந்த காலத்தில் அவை பெருமளவில் கொடுமைப்படுத்தப்பட்டன. மிருகங்களை நடத்தும் விதம் பற்றி பல நாடுகளில் சமீபத்தில்தான் விழிப்புணர்வு மேம்பட்டிருக்கிறது. மருத்துவப் பரிசோதனைகளுக்கு மிருகங்களை உட்படுத்தும் வழக்கம் இன்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் தமிழ் நாடோ இந்த விஷயத்தில் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
அவசர சட்டம் இயற்றிய பிறகு நடந்த ஜல்லிக்கட்டுகளில் பலர் காயமுற்று இருக்கின்றனர். இறந்தவரில் ஒருவர் அவருடைய கிராமத்தின் முதல் பட்டதாரி. பார்வையாளர்கள் பலர் காயப்பட்டுள்ளனர். ஆக, மாடுகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும்கூட பாதுகாப்பு இல்லை என்பதே யதார்த்தமான நிஜம்.
மாலுமியில்லாத கப்பல்
ஜல்லிக்கட்டுப் போராட்டம் தலைவனில்லாத போராட்டம் என்று பெருமையுடன் கூறப்படுகிறது. பேருந்துகளின் கண்ணாடிகள் உடைபடவில்லை. ஆண்களும் பெண்களும் சகஜமாகத் தோளோடு தோள் நின்று போராடுகிறார்கள். தீக்குளிப்புகள் நிகழவில்லை. இப்படி நல்ல மெச்சத்தக்க, வியக்கத்தக்க வகையில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் பாராட்டுக்குரியர்வர்கள். அதே சமயம், இவையனைத்தும் இயல்பாக நடக்கவேண்டிய விஷயங்கள்தாம். இவற்றை வியந்து பாராட்டவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதே உண்மை.
மெரினா போராட்டத்தை வைத்து, தமிழகம் பெண்களைப் போற்றும் மாநிலம் என்று யாராவது நம்பினால் அது தவறு. இதே தமிழகத்தில்தான் பெண்கள் பற்றி மிக, மிக ஆபாசமான மொழிகளில் வசைகளும் வந்துவிழும். இப்போராட்டத்திலும் அதைப் பார்க்கமுடிந்தது. ஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி என்று பலர் சிலாகித்தார்கள். அரபு வசந்தம்போல் இது தமிழ் வசந்தம் என்றும் சிலர் உணர்ச்சிவசப்பட்டனர்.
அரபு வசந்தம் மட்டுமல்ல, பிளாக் லைவ்ஸ் மேட்டர், வால்ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம் ஆகியவையும்கூட சமூக ஊடகங்கள் வழியாக முகிழ்ந்தவைதாம். இந்தப் போராõட்டங்களுக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்பதும் உண்மைதான். ஒரு சமூகத்தில் பல காரணங்களுக்காகக் கனன்று கொண்டிருக்கும் கோபம் ஏதோவொரு பொறியில் வெடிக்கும். அத்தருணத்தை யாராலும் கணிக்கமுடியாது. இந்தக் கோபம் சமூக ஊடகம் தரும் இணைப்பு காரணமாக காட்டுத் தீயாகப் பரவி சுயம்பு போராட்டமாக உருவெடுக்கும்.
இப்போராட்டங்களுக்கு மையத் தலைமைகள் இராது. அத்தகைய தலைமைகள் உருவாவதை இவர்கள் நிராகரிக்கவும் செய்வார்கள். மேலும், சமகால அரசியல் அமைப்புகள் அனைத்தையும் இவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும் செய்வார்கள். அமெரிக்காவின் மதிக்கப்படும் போராளியும் தற்கால காங்கிரஸ் உறுப்பினருமான ஜான் லூயிஸை, ‘நீயும் அமைப்பின் ஒரு பகுதிதான்’ என்று சொல்லி வெளியேறச் சொன்னார்கள். இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் தோல்வியைத் தழுவின அல்லது பிசுபிசுத்துப் போயின.
ஜல்லிக்கட்டு இந்த இடத்தில் மாறுபடுகிறது. அது பிசுபிசுக்கவில்லை என்பதோடு வெற்றியும் பெற்றது. அதற்குக் காரணம் தெளிவாக வரையறுக்கக்கூடிய குறிக்கோளை அது கொண்டிருந்ததுதான். ‘இது நிறைவேறினால் வெற்றி’ என்று சொல்லத்தக்க ஒரு விஷயத்தை அவர்கள் எடுத்துக்கொண்டனர்.
ஜல்லிக்கட்டை விமரிசித்தவர்களைப் போராட்டக்காரர்களும் அவர்களைப் பின்னாலிருந்தும் தொலைவிலிருந்தும் ஆதரித்தவர்களும் உதாசீனப்படுத்தியதையும் எட்டப்பர்கள் என்று வசை பாடியதையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது. ‘அரசு வன்முறைக்குப் பலியாகாதீர்கள்’ என்றுச் சொன்ன மனுஷ்யபுத்திரன், ராகவா லாரன்ஸ் போன்றோர் அரசின் ஏஜெண்டுகள் என்று அழைக்கப்பட்டனர். போராட்டத்தின் இறுதிக் கணங்களில் காவல்துறையினரிடம் அடிபட்டு மாணவர்கள் கொடுத்த விலை அதிகம் என்றாலும் அது தவிர்க்கவியலாதது என்று சிலர் நியாயப்படுத்தினார். அவர்களுடைய சொந்த மகனோ மகளோ இப்படி அடிபட்டிருந்தால் அவ்வாறு சொல்லியிருப்பார்களா?
காவல் துறை எங்களுடைய நண்பர்கள் என்று சொல்லிவந்த போராட்டக்காரர்கள் ஒரு கட்டத்தில் மோதலைச் சந்திக்கவேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது? அதற்கான காரணத்தை இரண்டு தரப்பிடமும் தேடவேண்டும். காவல் துறை பல இடங்களில் தன் கோர முகத்தைக் காட்டியிருக்கிறது. அதேபோல்தான் போராட்டக்காரர்களும். சரியான தலைமை இருந்திருந்தால் அல்லது தலைமையை ஏற்கும் பண்பிருந்தால் இது நடந்திருக்காது. ஆனால் இந்த இரண்டு பண்புகளுமே இத்தகைய போராட்ங்களின் தன்மைக்கு ஒவ்வாதவை.
மாணவர்களின் அறியாமை அப்பட்டமாக வெளிப்பட்டதையும் நாம் பார்த்தோம். போராட்டக்களத்தில் இருந்து அவர்கள் அளித்த பேட்டிகள் அவர்களுடைய புரிதல் திறனை மட்டுமல்ல தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறித்த சந்தேகத்தையும் எழுப்பின. தமிழ் நாட்டில் கல்வி தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இந்தியாவிலேயே கல்விக் கடன் பெறுவதில் தமிழ் நாடு முதலிடம் வகிக்கிறது. இருந்தும் தமிழ் நாட்டுப் பொறியியல் கல்லூரி மாணவர்களில் 18% பேர் மட்டுமே ஒரு நேர்முகத் தேர்வில் தேர்ச்சிப் பெறமுடியும் என்று அரசாங்க ஆய்வு சொல்கிறது. 2015ம் ஆண்டு சமச்சீர் கல்வியில் பயின்ற மாணவர்களில் 9 பேர் மட்டுமே ஐஐகூ-ஒஉஉ தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பல கல்வி நிலையங்களில் ‘நன்கொடை’ பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதற்கெல்லாம் போராடாத மாணவர்களை எக்காலத்திலும் மதித்துவிடமுடியாது.
அறப் போராட்டமா?
காந்தியைப் பற்றி அறியாதவர்கள் மட்டுமே இந்தப் போராட்டத்தை காந்திய போராட்டம் என்று அழைக்கமுடியும். ஹிப் ஹாப் ஆதியின் ‘டக்கர்’ பாட்டு இப்போராட்டத்துக்கு முக்கியக் காரணி. ஆனால் அந்தப் பாட்டு விவரிக்கும் சூழல் என்பது ஒரு சதி கேட்பாடு மட்டுமே. காந்தியம் என்பது வெறும் போராட்ட உத்தியல்ல. ஆரம்பம் முதல் கடைசி வரை சத்தியம் என்பதுதான் காந்தியம். காந்தியம் என்பது எதிர் கருத்துடையவனை மட்டுமல்ல விலகிச் செல்பவனைக்கூட எதிரியாகவோ துரோகியாகவோ பார்க்காது. பண்பாடு என்னும் பெயரில் மிருக வதையை அவர் ஒப்புக்கொண்டிருப்பாரா? மக்களில் ஒரு சாரார் விலக்கி வைக்கப்படுவதை நீக்கினாலொழிய காந்தியின் கையொப்பம் இதற்குக் கிடைத்திருக்காது. பண்பாடு, கலாசாரம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு போராடுபவர்களின் பதில் என்ன? ஆக காந்தியம் குறித்தும்கூட இவர்கள் அரைகுறையாகத்தான் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
முதலில் போராட்ட இடத்தில் சிறார்களையும் பெண்களையும் காந்தி அனுமதித்திருக்க மாட்டார். காந்தியின் போராட்டங்கள் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டவை. மார்ட்டின் லூதர் கிங் தன் பேரணியைத் திட்டமிட்டபோது, காந்தி எப்படித் தன் கூட்டங்களை ஒழுங்குபடுத்தினார், கழிப்பறை வசதிகளை எப்படிப் பார்த்துக்கொண்டார் என்பதைத் தன்னுடைய உதவியாளரைக் கொண்டு ஆராயச் சொன்னார். பல்லாயிரக்கணக்கான கறுப்பினத்தவர் உரிமைக்குரல் எழுப்பும் இடத்தில் ஒரு சின்ன அசம்பாவிதம் நடந்தாலும் பெரும் இழுக்கு வந்துசேரும் என்பதால் கிங் அதே கவலைகளைக் கொண்டிருந்த காந்தியை ஆராய்ந்தார். நம் போராட்டக்காரர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை.காந்தியிடம் இவர்கள் பயிலாத இன்னொன்று, போராட்டத்தை எப்போது திரும்பப்பெறவேண்டும் என்பதை. இதுவே பெரிய அவலத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் ஆதரவு
அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் என்பவை கேளிக்கை விரும்பிகளின் கூடாரங்களாகவே இருக்கின்றன. படித்த பண்பாளர்கள்கூடத் தங்கள் மாண்புகளை இழந்து சராசரிகளாகும் இடம் தமிழ்ச் சங்கம். ‘மீசையை முறுக்கு, பீட்டாவை நொறுக்கு’ என்று தொண்டைக் கிழிய இங்குள்ள பெண்கள் கத்தும்போது சிரிப்புதான் வருகிறது. இப்பஐ முழங்குவதன்மூலம் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் என்ன கற்றுக்கொடுக்கிறீர்கள்? ஓர் அமைப்பின் செயல் பிடிக்கவில்லையா? அதை எதிர்த்து கோஷம் போடலாம், அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தித் தோற்கடிக்கலாம். ஆனால் தடை செய்ய கோருவது அநாகரிகம் இல்லையா? பிடிக்காதவர்களை ‘நொறுக்க’ வேண்டும் என்று சொல்வது அறுவறுப்பு இல்லையா? அதுவும் மீசையை முறுக்கிக்கொண்டு? ஒரு வேளை இந்த ஆபாசங்கள்தான் தமிழர் பண்பாடோ?
ஒவ்வொருமுறை தமிழ் சங்கங்களுக்குச் சென்று வரும்போதும் தோன்றுவது இதுதான். ‘காப்பாற்றத்தக்க எந்த பண்பாடும் நம்மிடையே இல்லையா?’ இந்தச் சிந்தனைதான் ஜல்லிக்ட்டு விஷயத்திலும் தோன்றியது. அமெரிக்காவில் தனியார் கம்பெனியில் டாலரில் சம்பாதித்துக்கொண்டு கோக் குடித்துக்கொண்டே தமிழ் நாட்டுக்காரனுக்கு ‘கோக் குடிக்காதே, தனியார்மயமாக்கலை எதிர்த்துப் போராடு’ என்று உபதேசம் செய்ய நம் தமிழர்களைப் போல் நெஞ்சுரம் யாருக்கு வரும்? வெறும் நடிப்பு சுதேசிகள்.
அநேகருக்கு இந்திய இலக்கியமோ வரலாறோ கிஞ்சித்தும் தெரியவில்லை என்பதும்கூட அவர்களுடைய அர்த்தமற்ற முழக்கங்களில் வெளிப்பட்டது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் கல்லூரிகளில் கேட்ட அதே ‘பனைமரத்துல வவ்வாலா, தமிழனுக்கே சவாலா’ போன்ற முழக்கங்களைத்தான் இன்றும் கேட்கமுடிகிறது.
மாநிலமும் நாடும்
தேசம் குறித்தும் சட்டம் குறித்தும் உரிமைகள் குறித்தும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். நீதிமன்றமும் நாடாளுமன்றமும் செயல்படும்விதம் குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டும். நம்முடைய நிறை, குறைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும். போராடுவது தவறல்ல, ஆனால் நோக்கம் முக்கியமானது. இது போக, தமிழர்களுக்குச் சொல்ல தனிப்பட்ட செய்தி ஒன்று இருக்கிறது. இந்தியாவோ உலகமோ உங்களுக்கு எதிரியல்ல. வேற்று மொழிகள்மீது விரோதம் கொள்ள தேவையில்லை. எல்லாவற்றிலும் சதி இருப்பதாக சந்தேதிக்கவேண்டியதும் இல்லை.
இதைச் சொல்வதற்குக் காரணம் தனித் தமிழ்நாடு குரல்களும் இந்திய வெறுப்புக் குரல்களும் இந்தப் போராட்டத்தில் வெளிப்பட்டதைப் பார்த்தோம். இந்தியா ஒரு தேசம் என்பதை ஏற்கமுடியாது என்றும்கூடச் சிலர் ஜல்லிக்கட்டை முன்வைத்து வாதிட்டனர். தேசம் என்பதே கற்பிதம் என்றால் மொழி, இனம் என்பதெல்லாமும் கற்பிதங்களே. பண்பாடு, கலாசாரம் ஆகியவையும்கூட கற்பிதங்கள்தாம். அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு தனித் தமிழ்நாடு பற்றி நீட்டி முழக்குபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். தேசம் சிதறுவதைத் தடுப்பதற்காகவே உள்நாட்டுப் போரொன்றை முன்னெடுத்து ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகையை இழந்த நாடு அமெரிக்கா. இந்தியாவை அறிந்திராத, அதன் பண்பாடு பற்றி அறிந்திராதவர்களின் அறிவு வீழ்ச்சிதான், குடியரசு தினத்தைத் தமிழர்கள் கொண்டாடக்கூடாது என்னும் முழக்கமும் தனித் தமிழ்நாடு என்னும் கோரிக்கையும் ஆகும்.
சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவை வெறும் விடுமுறை தினங்களல்ல அவை பெரும் குறியீடுகள். அதனால்தான் ஒரு சாரார் அதனைத் துக்க நாள் என்று குறிக்கத் துடிக்கிறார்கள். அது சரியல்ல. ஏன்? முதலில் உங்களைச் சுற்றிப் பாருங்கள். பாகிஸ்தான், மியான்மர், சீனா, ஆப்கானிஸ்தான், கொஞ்சம் தள்ளி ரஷ்யா, சிங்கப்பூர் என்று ஆசியக் கண்டத்தில் இந்தியா போன்ற நிலப் பரப்பும், வேற்றுமைகளையும் உள்ளடக்கி ஒரு முதிர்ந்த ஜனநாயகமாகவும் எந்த நாடும் இல்லை என்பது தற்செயல் அல்ல.
அரசியல் சாசனம் எழுதப்பட்ட காலத்தில் (1947-1950) இந்தியாவின் சூழலைக் கவனித்துப் பாருங்கள். மிகப் பெரிய மனித இடப்பெயர்வு, உள்நாட்டுப் போருக்கு இணையான கலவரங்கள், எல்லையில் அடுத்தடுத்த போர்கள் இவற்றுக்கிடையே இந்தியா உருவாக்கிய அரசியல் அமைப்பு அபாரமானது. முப்பது வருடங்களுக்கு முன்பு லெனினால்கூடச் செய்யமுடியாதது அது. இந்தியனாகப் பிறந்த யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்றும் அதற்காகப் பரப்புரையும் மேற்கொள்ளலாம் என்று அக்காலத்தில் சொல்வதற்கு அசாதாரணமான நெஞ்சுறுதி வேண்டும். தீண்டாமை ஒழிப்பு, மனித உரிமைகள், எல்லோருக்குமான ஓட்டுரிமை, பேச்சுரிமை என்று நம்மைச் சுற்றியுள்ள பல நாடுகளிலும் இல்லாத உரிமைகள் சராசரி இந்தியர்கள் அனுபவிக்கிறார்கள்.
நேருவின் முதல் அமைச்சரவையைப் பார்த்தால் அதில் இந்தியாவை ஒருவர் பார்க்கமுடியும். பாகிஸ்தானில் ஓர் இந்து ஜனாதிபதியாகமுடியுமா என்று கேட்பதற்குப்பதில் இந்தியாவில் ஒரு சீக்கியர், இஸ்லாமியர், தலித் ஜனாதிபதியாகலாம் என்று நாம் பெருமிதம் கொள்ளவேண்டும். கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கமுடியுமா என்பதைவிட கர்நாடக இலக்கியவாதிக்குச் சென்னையில் சிலை வைக்கும் மாண்பு தமிழனுக்கு இருக்கிறது என்பது முக்கியமானது. காமராஜரும் கக்கனும் ஆட்சி செய்த அரசியல் அமைப்பு நம்முடையது.
தமிழகம் இந்தியாவில் இருந்து பெற்றதும் அதிகம், கொடுத்ததும் அதிகம். எதை இழந்தோம் என்று கணக்குப் பார்த்தாலும் பெற்றதே அதிகம். ‘என் மகள் தமிழ் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்‘ என்றார் நேரு. தேசிய அளவில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவுக்குத் தமிழகமும் தமிழகத்துக்கு இந்தியாவும் ஒன்றுக்கொன்று இன்றியமையாதவை.
எந்தத் தேசத்திலும் எந்த அரசியல் அமைப்பிலும் குறைகளோ அக்குறைகளால் உண்டாகும் கோபங்களோ இல்லாமல் இல்லை. 250 வருடப் பாரம்பர்யம் கொண்ட அமெரிக்க அரசியல் அமைப்பை இன்று எகானமிஸ்ட் பத்திரிக்கை ‘குறைபாடுள்ள ஜனநாயக நாடுகள்’ பட்டியலில் சேர்த்திருக்கிறது. உலக நாகரிகங்கள் குறித்து எழுதிய வில் டூரண்ட்,நாகரிகம் என்பது ஒவ்வொரு தலைமுறையும் புதுப்பிக்க வேண்டிய ஒன்று என்கிறார். நமக்கான நாகரிகத்தை நாம்தான் உருவாக்கவேண்டும்.
No comments:
Post a Comment