Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

Sunday, May 14, 2017

ரோமிலா தாப்பர், ஜெனரல் தாப்பர் பற்றி ஜெயமோகன்: கருவாடு மீனாகாது, கிசுகிசு வரலாறாகாது

"எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா - ஒரு கிசுகிசு வரலாறு" என்ற ஜெயமோகனின் பதிவு அவருக்கே உரித்தான விரிந்தப் பார்வையோடு எழுதப்பட்டது, சுவாரஸ்யமான வாசிப்புக்குரியது ஆனால் சில மனச்சாய்வுகளால் உண்டான சில புரிதல் திரிபுகளும் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்றாசிரியரான ரோமிலா தாபர் பற்றி. இந்தப் பதிவே கிட்டத்தட்ட "இப்படியான மரத்தில் அந்தப் பசுக் கட்டப்பட்டிருந்தது" எனும் வகை எழுத்துக்கான முதன்மை உதாரணம்.

ஜெயமோகன் மிகச் சரளமாகச் சில வார்த்தைகளை ஒன்றொடொன்று மாற்றிப் பொருத்துகிறார். மிகச் சரியாக ஆங்கிலத்தில் இதைத் தெளிவாகச் சொல்லலாம். He uses terms like 'official history' and 'history' rather loosely and interchangeably. They're not interchangeable terms. There's no such thing as 'gossip history'. It is either 'gossip' or 'history' but it cannot be a hybrid of both.

முதலில் இந்த வார்த்தை 'அதிகாரப் பூர்வ வரலாறு' என்பதை வரையறுத்துக் கொள்வோம். இச்சொற்றொடர் பெரும்பாலும் அதிகார மையத்தோடு தொடர்புடைய அதிகார ஸ்தாபனங்களின் வெளியீடாக வரும் வரலாறுகளைக் குறிப்பது. அதுவும் முக்கியமாக அதிகார மையத்திடம் இருந்து சுதந்திரமாகவோ தன்னிச்சையாகவோ (autonomous) செயல்படமுடியாத ஸ்தாபனங்களில் பணிபுரியும் ஆய்வாளர்களால் அரசாங்கத்தின் பண உதவிக் கொண்டோ, அரசாங்கத்தின் வெளியீடாகவோ எழுதப்படுவது தான் 'அதிகாரப் பூர்வ வரலாறு' எனப்படும். இதைப் பெரும்பாலும் செய்தவை கம்யூனிஸ்ட் நாடுகள் தான். அரசாங்கம் சார்ந்த ஸ்தாபனங்களில் இருந்து வெளியாகும் வரலாறை பொத்தாம் பொதுவாக இவ்வகையில் வைக்கக் கூடாது. வரலாறை எழுதுபவர்களின் சுதந்திரம், வெளியீட்டில் அரசாங்கத் தலையீடு, வரலாறை எழுதும் விதத்தில் தலையீடு என்பதையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.



ஸ்தாபனங்களின் துணைக் கொண்டு எழுதப்படுவதைச் சந்தேகக் கண் கொண்டு மதிப்பிடலாம். தவறில்லை. ஆனால் ஸ்தாபங்களின் துணைக் கொண்டோ, நிதி ஆதாரத்தைக் கொண்டோ எழுதப்படுவதாலேயே ஒரு எழுத்து தன் கௌரவத்தை இழக்காது. எழுத்தை எழுத்தின் தரம் மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். எப்படி நிதி ஆதாரம் பெற்று எழுதுவதனாலேயே உண்மைகள் பொய் ஆகாதோ, அப்படியே, சொந்தக் காசில் எழுதுவதனாலேயே பொய்கள் உண்மையாகாது.

பெரும் ஆராய்ச்சிகள் இன்றும் வளர்ந்த நாடுகளிலேயே அரசாங்கத்தின் நிதி ஆதாரம் கொண்டு தான் செய்யப்படுபவை. அது தான் சாத்தியம். வரலாறை எழுதுவதிலும் அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் ஆராய்ச்சிகளிலும் அரசாங்கத்தின் நிதியோ அல்லது பெரு நிறுவனத்தின், அது பல்கலைக் கழகமாகக் கூட இருக்கலாம், நிதியோ இல்லாமல் எங்கும் சாத்தியமில்லை.

ராதாகிருஷ்ணன், எஸ்.என்.தேஷ்பாண்டே இருவரும் பெரும் ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்திய தத்துவ இயல் பற்றி இன்றும் படிக்கப்படும் நூல்களை எழுதினார்கள். இருவரும் கேம்ப்ரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்கள் கொடுத்த உதவியை வைத்து தான் எழுதினார்கள். எழுத்தின் தரம், உலகத் தரம். பி.வி. கானே (P.V. Kane), பாரத ரத்னா வழங்கப்பட்ட இந்திய தத்துவ இயல் ஆசிரியர், முப்பது வருட உழைப்பில் எழுதிய 'இந்திய தர்ம சாஸ்திரம்' ஒரு ஸ்தாபனத்தின் உதவியும், காலனி அரசின் உதவியால் நடந்த 'ஏஷியாடிக் சொஸைட்டி' ஸ்தாபனத்தின் உதவியாலும் எழுதப்பட்டது தான். கானேயின் எழுத்தை ஸ்தாபன ரீதியான எழுத்து என்று புறங்கையால் தள்ளுவதை ஜெயமோகனே ஒப்புக் கொள்ள மாட்டார். ஆனால் அந்த ஸ்தாபனம் ஒரு மார்க்ஸிய வரலாற்றாசிரியருக்கு அத்தகைய உதவியைக் கொடுத்திருக்குமா? இருக்காது. அதற்காக அந்தப் பெரும் தொகுதி எஜமானர்களின் விருப்பத்துக்காக எழுதப்பட்டது என ஒதுக்கலாமா? கூடாது. கூடவே கூடாது. அந்த எழுத்தின் தரம் மட்டுமே நமக்கு உரைக்கல்லில் சோதித்துப் பார்க்க வேண்டியது.

இந்திய வரலாறு எழுத்தில் நிலகண்ட சாஸ்திரிக்கு தனி இடமுண்டு. அவர் முன்னெடுத்த ஆராய்ச்சிகளும் வெளியிட்டப் புத்தகங்களும் அரசாங்க ஸ்தாபன ரீதியான உதவிப் பெற்றவை தான். மௌரியர்கள் பற்றிய வரலாறுப் புத்தகம் ('Age of the Nandas and Mauryas') இந்திய வரலாறை எழுதுவதற்காகக் காங்கிரஸ் இயக்கம், ராஜேந்திர பிரசாத் தலைமையில், 1937-இல் நிறுவிய 'இந்திய வரலாறு பரிஷத்' ஸ்தாபனத்தின் உதவியில் எழுதப்பட்டது தான். அந்த ஸ்தாபனமே பின்நாளில் சுதந்திரத்தின் பின் அரசாங்க ஸ்தாபனமாக முகிழ்ந்தது. 14 ஜனவரி 1948 பிரசாத் மௌலானா ஆஸாத்துக்கு எழுதிய கடிதத்தில் அந்நிறுவனத்துக்குப் பணம் ஒதுக்குமாறு கேட்டு எழுதிய கடிதம் இணையத்தில் பிரசாத்தின் தொகுதிகளில் கிடைக்கிறது. கவனிக்கவும் 14 ஜனவரி 1948 என்பது மிக முக்கியமான காலம். மகாத்மா காந்தி இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் இனக் கலவரத்துக்கு எதிராகவும் தலைநகர் தில்லியிலேயே உண்ணவிரதம் மேற்கொண்ட இரண்டாம் நாள். தில்லியும் வட இந்தியாவும் இனக் கலவரத்தின் கோரப்பிடியில் சிக்கியிருந்த நாட்கள் அவை. தில்லி ரத்த பூமியான நாட்கள் அவை. இந்தச் சூழலில் வரலாறு ஸ்தாபனத்துக்கு அரசாங்கப் பணம் கேட்கிறார் பிரசாத். வரலாறு எழுதுவதில் தேசத் தலைமைக்கு இருந்த ஆவல் எல்லாக் காலத்திலும் எல்லா நாட்டிலும் உண்டு. 'அதிகாரப் பூர்வ வரலாறு' என்று நீலகண்ட சாஸ்திரி எழுதியதை பொத்தாம் பொதுவாகச் சொல்லலாம். ஆனால் இன்றைய புரிதலில் 'அதிகாரப் பூர்வ வரலாறு' என்பது அரசாங்கங்கள் நேரிடையாகத் தலையிட்டுத் தகுதியில்லாதவர்களைப் பதவியில் அமர்த்தி ஆதாரங்களை வளைத்து நெளித்து எழுதப்படுவதைக் குறிப்பது. நீலகண்ட சாஸ்திரியை அந்த வரிசையில் வைக்க முடியாது. சுருங்கச் சொன்னால் நீலகண்ட சாஸ்திரி கோ.வி.மணிசேகரன் அல்ல.

முன்பொரு முறை வரலாறு எழுத்தை வல்லுநர்களே செய்ய வேண்டும் என்றும் வல்லுநர்கள் அல்லாதவர்களின் விலகி இருந்தால் நலம் எனும் கருத்தில் ஜெயமோகனே எழுதியிருக்கிறார். அந்த வல்லுநர்கள் எங்கிருந்து வருவார்கள்? கல்வி ஸ்தாபனங்களில் இருந்து தானே வர முடியும். பல்கலைக் கழகங்களில் இடது சாரிகள் கோலோச்சுவது இந்தியாவில் மட்டுமல்ல இன்றைய அமெரிக்காவிலும் உண்டு. அதற்கான காரணங்களுண்டு ஆனால் அவ்விவாதம் இந்தப் பதிவுக்கு அப்பாற்பட்டது. மார்க்சியம், இடது, வலது என்ற லேபிள்களைத் தாண்டி நாம் எழுத்தை அதன் தரம் கொண்டே நிர்ணையிக்க வேண்டும். சொல்லப்படும் கருத்தின் ஆதாரங்கள், அதைக் கொண்டு எழுப்பப்படும் கருத்தியலுக்கான தர்க்க நியாயங்கள், எதிர் கருத்தை கையாளும் நேர்மை, எதிர் கருத்துகள் எப்படி மறுக்கப்படுகின்றன ஆகியவற்றை உற்று நோக்கியே மதிப்பிட வேண்டும்.

உதாரணத்திற்கு, இர்பான் ஹபீப் எழுப்பிய பாரத மாதா சர்ச்சையைச் சொல்லலாம். 'பாரத மாதா' என்பது காலணியக் காலத்தின் கருத்தாக்கம் என்றார் ஹபீப். நான்கு திசைகளில் இருந்தும் 'தேசத்துரோகி', 'மார்க்சியன்' என்று அவர் மீது அமிலம் உமிழ்ந்தார்கள். ஜெயமோகனும் கடிந்து கொண்டார். ஆனால் எந்த லேபிளும் இது வரை ஒட்டப்படாத சுமதி ராமசாமி எனும் வரலாறாசிரியர் அமெரிக்கப் பல்கலையின் வெளியீடாக எழுதிய புத்தகமும் அதையே தான் சொன்னது. அந்தப் புத்தகத்தையும் அந்தச் சர்ச்சையையும் ஏன் ஹபீப் சொன்னது சரி என்றும் விரிவாக எழுதியிருக்கிறேன். ஹபீப்பை மறுக்கலாம் ஆனால் மறுப்பவர்கள் தர்க்க நியாயங்களுக்குட்பட்டுச் செய்ய வேண்டும், தரவுகளின் அடிப்படையில் செய்ய வேண்டும்.

இந்தியாவில் பல்கலைக்கழகங்களும் அவற்றின் நிழலில் உருவாகும் ஆராய்ச்சிகளும் சமீபத்தில் தான் அரசாங்கங்களின் கைப்பாவை ஆயின. தமிழ் நாட்டில் தமிழ் பற்றி ஆராய்ச்சி செய்யும் யாரும் திராவிட இயக்கம் முன் வைத்த எந்த முடிவுகளையும், ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ, மறுதலித்து எழுதிவிட முடியாது, அதுவும் அரசாங்க வேலையில் இருந்து கொண்டு. திராவிட இயக்க பிதாமகன் அண்ணாதுரையின் எழுத்தின் தரம் பற்றியோ ஈ.வெ.ரா அடித்துவிட்ட கருத்துகளையோ எந்தப் பல்கலைக் கழக ஆசிரியரும் கேள்விக்கு உட்படுத்திப் பல்கலைக் கழக ஆய்வாக எழுதிவிட முடியாது. அண்ணாதுரைக்கு நோபல் பரிசு கிடைக்காதது ஆரியச் சதி என்று வேண்டுமானால் எழுதலாம்.

இந்தச் சமீபத்திய அவலம் வட இந்தியாவில் வேறு வகையாக வளர்கிறது. அங்கே இந்திய கலாசாரத்தில் இல்லாத எதையும் மேற்கத்திய அறிவியல் கண்டு பிடித்துவிடவில்லை என்றோ இன்று வரை பரவலாக, ஆதாரத்தின் அடிப்படையில், ஏற்றுக் கொள்ளப்பட்டதை இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காத பட்சத்தில் ஆதாரங்களே இல்லாமல் தொன்மங்களைத் திரித்துச் சொல்லும் போக்கு அதிகரித்திருக்கிறது. மாட்டு மூத்திரத்தில் புற்று நோய்க்கும் எய்ட்ஸுக்கும் மருந்து இருக்கிறது, ப்ரம்மாஸ்திரத்தின் சூத்திரத்தில் அணுப் பிளவின் சூத்திரம் இருக்கிறது என்று எழுதினால் கை மேல் விருது. இந்திய அரசாங்கத்தின் உதவியால் நிகழும் அறிவியல் கூட்டரங்கில் நடந்த கேலிக் கூத்துகள் பொறுக்க முடியாமல் நோபல் பரிசு வாங்கிய வெங்கி வெளியேறினார்.

ஜெயமோகன் எழுத வந்தது வலம்புரி ஜான் என்னும் பத்திரிக்கையாளர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பற்றி எழுதிய புத்தகத்தைப் பற்றி. வலம்புரி ஜான் பத்திரிக்கை நடத்தி அதில் எழுதியதால் பத்திரிக்கையாளர் என்று குறிக்கப்படலாம் மற்றப்படி அவரை எந்தத் தரப்பட்டியலிலும் சேர்த்துவிட முடியாது. இந்தியாவில் ஆளுமைகள் குறித்து நேர்மையோடு வெளிப்படையாக எழுதுவது கடினம். சட்டங்கள் அதற்கு அனுகூலமானவை அல்ல. இதனால் பல புத்தகங்களும் சினிமாக்களும் கிசு கிசு பாணியிலேயே இருக்கிறது. தமிழ் நாட்டில் இதன் ஆகச்சிறந்த உதாரணம், ஜெயமோகன் சுட்டியது போல், கண்ணாதாசனின் 'வனவாசம்'. சினிமாக்களில் 'இருவர்' திரைப்படமும் 'பம்பாய்' திரைப்படமும் அந்த வகை.

தன் வரலாறு எழுதும் பலர் இந்தக் கிசுகிசு உத்தியை இந்தியாவில் கையாள்கிறார்கள் அல்லது கிசுகிசு தரத்தில் எழுதுகிறார்கள். அபுல் கலாம் ஆஸாத் அவருடைய தன் வரலாறில் 30 பக்கங்களை 50 வருடங்கள் வெளியிடக் கூடாதென்று வைத்திருந்தார். அவை வெளியான போது சப்பென்று இருந்தது. சமீபத்தில் அமெரிக்காவில் வெளியுறவுத் துறையில் பெரும் பதவிகள் வகித்த ஜார்ஜ் கெண்னன் தன் வாழ்க்கையை எழுத ஓர் ஆசிரியரை நியமித்து அந்தப் புத்தகம் ஜார்ஜ் இறந்த பிறகே வெளியிட வேண்டுமென்றார். ஜார்ஜ் கெண்னன் 101 வயது வரை வாழ்ந்தார்.

வாழ்க்கை வரலாறு எழுத ஒருவரை நியமிப்பது மேற்குலகில் சகஜம். நைபால், தாட்சர், கெண்னன் ஆகியோர் அப்படிச் செய்தார்கள். அப்படி நியமிக்கப்படுபவர்கள் தங்களுக்கு முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது வழக்கம். அப்படி எழுதப்படுவது அப்புறம் நேர்மையற்ற துதிப் பாடலாக வெளிவந்தால் எழுதியவரும் எழுதுப் பொருளாக இருந்தவரும் மதிப்பிழப்பார்கள். அது தான் நியாயம். நியமன எழுத்து என்பதற்காகவே ஒன்றை நிராகரிக்கக் கூடாது. கெண்னனின் வாழ்க்கை வரலாறு பற்றிய இந்த, 'Is this George Kennan?' (http://www.nybooks.com/articles/2011/12/08/is-this-george-kennan/) மதிப்புரையை நோக்கவும்.

டி.ஜி.பி மோகன் தாஸின் எம்.ஜி.ஆர் பற்றிய புத்தகம் அன்றைக்குப் பொது வெளியில் தெரிந்திருந்த சமாசாரங்களையே சொன்னது, எம்.ஜி.ஆருக்கு எந்தத் தருணத்திலும் ஜானகியைத் தவிர வேறொரு பெண் மனைவி ஸ்தானத்தில் இருந்தார் என்பது உட்பட. உள் வட்டத்தைச் சேர்ந்தவராகக் கருதப்பட்ட மோகன் தாஸ் அதை எழுதிய போது அது பேசப்பட்டது.

கிசுகிசு வகையில் எழுதப்பட்ட இந்த நூல்களைப் பற்றி எழுதுமிடத்தில் இந்திய-சீனா போர் பற்றியோ, ரோமிலா தாபர் பற்றியோ எழுத என்ன நிர்பந்தம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இந்தக் கிசுகிசு நூல்களைக் கிசிகிசு-வரலாறு என்று புதியதொறு வகைமையை (genre) அறிமுகப்படுத்தி அதற்கு முகமனாக எம்.ஓ.மத்தாய், பிரிகேடியர் டால்வி என்று அஸிதிவாரத்தை அமைக்கிறார் ஜெயமோகன்.

பேஸ்புக் மற்றும் இணைய விவாதங்களில் நம்மவர்கள் கையாளும் ஒரு போக்கைப் பற்றி விரிவாக எழுத எண்ணம். சுருக்கமாக இங்கே. நம்மவர்களில் பலர் தமக்கு ஒவ்வாத, முக்கியமாகக் காந்தி மற்றும் நேரு சம்பந்தமாக, எங்கே எந்தத் துணுக்குக் கிடைத்தாலும் அதை "அஹா கிடைத்தது பாரீர் ஆதாரம்" என்று களிக் கொள்கிறார்கள். அதில் பலவும் இம்மாதிரியான தன் வரலாறுகளில் இருக்கும் துணுக்குகள்.

இறப்பதற்குச் சில காலம் முன்பு அம்பேத்கர் பி.பி.சிக்கு அளித்த பேட்டி மிகப் பிரசித்தம். அப்பேட்டியில் காந்தி ஒரு நேர்மையற்ற அயோக்கியர் எனும் அர்த்தம் வருமாறு அம்பேத்கர் பேசியிருப்பார். "ஆஹா அறிவாசான் அம்பேத்கர் சொல்லிவிட்டார்" என்று பலரும் அதை இன்றும் பகிர்கிறார்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிக் கவலைப்படாமல். காந்தி ஆங்கிலத்தில் எழுதும் போது மிக நல்லவராகத் தோன்ற வைக்கும் வகையில் எழுதியதாகவும் குஜராத்தி/ஹிந்தியில் எழுதிய அவர் எழுத்துகள் வேறு வகையானவை என்றும் பெரும்பாலோர் ஆங்கில எழுத்துகளின் அடிப்படையிலேயே காந்தியைக் கொண்டாடுகிறார்கள் என்பார் அம்பேத்கர். இது முட்டாள்தனம். காந்தியின் வாழ்நாளிலேயே அவரைக் காட்டமாகவும், வன்மமாகவும் மறுத்துப் பேசியவர்கள் உண்டு அவர்களில் பலருக்கு இரு மொழிப் புலமையும் உண்டு. இதை ஒரு நிமிடம் மனத்தில் இருத்தினாலே அந்தப் பேட்டியை புறங்கையால் தள்ளிவிட முடியும்.

மத்தாயின் நூலை இது வரை பல முறை ஜெயமோகன் கிட்டத்தட்ட வரலாறு நூல் எனும் தரத்தில் பேசிவிட்டார் அதை 'அடப்பக்காரன் வரலாறு' என்று சில முறை குறிப்பிட்டுமுள்ளார். மத்தாயின் நூல் எந்த வகையிலும் சீரிய விவாதத்தின் போது வைத்துப் பேச தக்க நூல் அல்ல. நம்மவர்களின் சிக்கலே இது தான். இதோ இப்போது அரையும் குறையுமாகச் சஷி தரூர் பேசியதை தலையில் வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள் அதிலுள்ள வரலாற்றுப் புரிதலின் பிழைகளைக் கண்டு கொள்ளாமலே. 'அடப்பக்காரன் வரலாறு' என்று சொன்னப் பிறகு அதை ஏன் மேற்கோள் காட்டுவானேன்? கிசு கிசு என்றுமே வரலாறு ஆகாது. இரண்டு வார்த்தைகளையும் இணைப்பதே தவறு. இது 'வரலாறு' எனும் கருத்தாக்கத்தின் ஆணிவேரில் வெண்ணீர் ஊற்றுவதற்கு இணை.

கிசு கிசு தரத்திலான நூலைப் படிக்கலாம், தவறில்லை ஆனால் அதன் மேற்கொண்டு கறாரான நூல்களைக் கண்டடைய வேண்டும். இந்தியா-சீனா போரைப் போல் மிக அதிகமாகத் தவறாகவும், அரைகுறை தகவல்கள் வழியாகவும், காலாவதியான ஆதாரங்கள் வழியாகவும் புரிந்து கொள்ளப்பட்ட இந்திய நிகழ்வு வேறொன்று இருக்காது.

பிரிகேடியர் டால்வியின் நூலும், நெவில் மாக்ஸ்வெல்லின் நூலும் இன்று வரை இந்திய-சீனா யுத்தம் பற்றிய எந்த விவாதத்திலும் இடம் பெறுபவை. டால்வியின் நூலுக்கும் "அதிகாரப் பூர்வ வரலாற்றுக்கும் மிகப் பெரிய முரண்பாடு இருந்தது. அது என்னை ஒரு வகையில் உலுக்கியது" என்கிறார் ஜெயமோகன். இந்திய-சீனா போரைப் பற்றி எந்த "அதிகாரப் பூர்வ வரலாறு" வெளியிடப்பட்டது? எதுவுமில்லை. அப்புறம் என்ன முரண்பாடு?

இந்திய-சீனா போர் மற்றும் நேருவின் முடிவுகள் பற்றி இவ்வருடம் விரிவாக எழுதவதாகத் திட்டம். ராணுவ வரலாறாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் எழுதிய 'War and Peace in Modern India' புத்தகத்திற்கு நான் எழுதிய மதிப்புரையில் இந்திய-சீனா போர் பற்றித் தொட்டிருக்கிறேன். அந்த விரிவான விவாதத்திற்குள் செல்லாமல் ஜெயமோகன் முன் வைத்த ஜெனரல் தாப்பர், ரோமிலா தாப்பர் பற்றிய கருத்துகளுக்கு மட்டும் இங்கே மறுப்புச் சொல்கிறேன்.

மேக்ஸ்வெல் தன்னுடைய நூலின் முன்னுரையில் மிக மிக முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறார். அந்த நூலில் ஒரு சமமின்மை இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டு அதற்குக் காரணம் தனக்குப் பிரச்சினையின் இரண்டு சாராரிடையே, இந்தியா-சீனா, ஒரு சார்பில் மட்டும், இந்தியாவின் பக்கத்தில், மிக வெளிப்படையாக அணுக முடிந்ததாகவும், வெளிப்படையாக ஆராய முடிந்ததாகவும், உலக நாடுகளிலேயே இந்தியா மிக வெளிப்படையான நாடு என்றும், சீனாவுக்குள் ஆராய எந்த அனுமதியும் கிட்டவில்லை என்றும் சீனாவின் அதிகாரப்பூர்வ வெளியீடுகளை மட்டுமே வைத்து எழுதியதாகவும் அதனாலேயே சீனாவின் தரப்பிலான முடிவுகள் இந்தியாவின் முடிவுகள் போலல்லாமல் எதார்த்தமாகத் தெரியுமாறு எழுதிவிட்டதாகச் சொல்கிறார்.

சில வருடங்களுக்கு முன் பிரின்ஸ்டனில் எனக்குப் பிடித்த புத்தகக் கடையில் மிக அரிதான ஒரு நூல் கிடைத்தது. சீன அரசாங்கம் இந்தியா-சீனா எல்லை சர்ச்சைப் பற்றி அப்போது வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ நூல் அது. அதில் வரைபடங்களோடு முக்கியமாகச் சீன அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வ நாளேடுகளில் நேருவை ஏகாதிபத்தியவாதியாகச் சித்தரித்து எழுதப்பட்ட காட்டமான கட்டுரையும் வேறு சில கட்டுரைகளும் இருந்தன. இது போன்ற 'அதிகாரப் பூர்வ' பரப்புரையை இந்தியாச் செய்ததாக நான் படித்ததில்லை.

ஸ்ரீநாத் ராகவன் ஜெனரல் தாப்பர் நியமனம் பற்றித் தெளிவாக எழுதியுள்ளார். மாக்ஸ்வெல் தான் தாப்பர் "தர்பாருக்கு இனக்கமான அதிகாரி" என்று எழுதினார். அதை ராகவன் மறுக்கிறார். தாப்பர் தான் பணி மூப்பு முறைப் படி வந்தார் என்றும் ராணுவத்தில் இருக்கும் பிரமோஷன் முறைகளும் காரணம் என்கிறார் ராகவன். எல்லா நாட்டிலும், இன்றும் கூட, ராணுவத்தின் உயர் அதிகாரி நியமனத்தில் பணி மூப்பு மட்டுமல்லாது வேறு சில தகுதிகளையும், ஆட்சியாளர்களோடு அனுசரிப்பது ஆட்சியாளர்களின் ஆட்சி முறைப் பார்வை (outlook) அனுசரிக்கும் திறன், பார்த்து தான் நியமிக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் ஐசன்ஹோவர் நியமிக்கப்பட்டதும் அப்படித் தான்.

இந்திய ராணுவத்தை நேருவும் கிருஷ்ண மேனனும் நிர்வகித்த விதம் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. சமீபத்தில் ஸ்டீவன் வில்கின்ஸன் எழுதிய 'Army and Nation' முக்கியமான புத்தகம் இந்தியாவில் ராணுவம் எப்படிக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது என்பது பற்றியும், ராணுவ சீரமைப்பு, நேருவின் தலைமைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டது (அதற்கான மதிப்புரை இங்கே ).

இந்தியா-சீனா போர் என்றாலே இந்தியர்கள் பலர் இன்னும் நெவில் மேக்ஸ்வெல், டால்வி ஆகியோரை மட்டுமே சுட்டுகிறார்கள். மேக்ஸ்வெல் எழுதியது காலாவதியாகிவிட்டது என்று சொல்ல மாட்டேன் ஆனால் அவரைத் தாண்டி இன்று புதிய தகவல்களின் அடிப்படையில் புரிதல்கள் விரிவடைந்திருகின்றன.

இந்திய-சீனா போர் குறித்தும் பனிப்போர் காலத்தில் இந்தியாவின் வெளியுறவுகள் குறித்தும் புதிய தகவல்களோடு எழுதப் பட்ட கறாரான நூல்கள் சமீபத்தில் வந்திருக்கின்றன, அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் வாயிலாக. இந்திய-சீனா சிக்கலில் திபெத்தை வைத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆடிய சதுரங்க விளையாட்டை ப்ரூக்கிங்க்ஸ் ஆய்வகத்தைச் சேர்ந்தவரும் சி.ஐ.ஏவில் பணியாற்றிவருமான ப்ரூஸ் ரைடெல் (Bruce Reidel) எழுதிய புத்தகம் எப்படிப்பட்ட உலக அளிவிலான சதுரங்க விளையாட்டில் நேருவும் இந்தியாவும் காய் நகர்த்த வேண்டியிருந்தது என்பதை வெளிக் கொணர்ந்தது. அந்நூல் மிகக் கறாரானது அல்ல ஆனால் முக்கியமானது. நூல் ஆசிரியர்கள் ஒரு புதுப் பார்வையை முன்வைப்பதற்காக எழுதுவார்கள் அப்படி எழுதும் போது தங்கள் பார்வைக்குத் தேவையானதை மட்டுமே செதுக்கி முன் வைப்பார்கள். இந்திய-சீனா போர் மிகச் சிக்கலான பற்பல ஊடு-பாவுகளைக் கொண்டது. ஒரு வாசகன் ஒரே புள்ளியில் தேங்கி விடாமல் மென்மேலும் படித்து ஒரு சித்திரத்தை தனக்குத் தானே தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்திய-சீனாப் போர் குறித்துத் தெளிவுப் பெற சமீபத்தில் வந்த நூல்களின் பட்டியலை இப்பதிவின் முடிவில் பரிந்துரைக்கிறேன்.

ஜெனரல் தாப்பர் இணக்கமானவர் என்று மேக்ஸ்வெல் சொன்னது தவறு மட்டுமல்ல நேர்மையற்றதும் என்கிறார் ஸ்ரீநாத் ராகவன். ராகவன் ஜெனெரல் புஷெர் (General Bucher) மேக்ஸ்வெல்லிடம் அவரின் முடிவுகள் ஏன் தவறானவை என்று மறுத்து எழுதியதை மேக்ஸ்வெல் மறைத்து விட்டார் என்கிறார் ராகவன். வெறும் உறவை வைத்து நாட்டின் மிக முக்கியமான பதவியைத் தூக்கிக் கொடுக்க நேரு என்ன கருணாநிதியா இல்லை எம்,ஜி.ஆரா?

தாப்பர் ஒன்றும் நேருவுக்கு நேரடிச் சொந்தமும் கிடையாது. தாப்பரின் மனைவி பிம்லா என்பவர் கௌதம் செஹ்காலின் தங்கை. கௌதம் செஹ்காலின் மனைவி நயந்தாரா செஹ்கல் விஜயலக்‌ஷ்மி பண்டிட்டின் மகள். அதாவது நேருவின் தங்கை விஜயலக்‌ஷ்மியின் மகளின் கனவரின் தங்கை தாப்பரின் மனைவி. அப்பாடா. மூச்சு முட்டுகிறது. அந்த ஜெனெரல் தாப்பரின் மகன் கரன் தாப்பர், ஜென்ரல் தாப்பரின் 'niece' ரோமிலா தாப்பர். அப்பப்பா. இதைத் தான் "இப்படியான மரத்தில் அந்தப் பசுக் கட்டப்பட்டிருந்தது" எனும் வகை எழுத்து எனலாம். Guilt by association.

ஜெனெரல் தாப்பர் தகுதியை மீறி பதவிக்கு வந்தார், அப்படியாப்பட்ட தாப்பரின் உறவுப் பெண் ரோமிலா தாப்பர். இவர்கள் எல்லோரும் இந்திய வெறுப்பாளர்களாம். ராணுவத்தில் பணியாற்றும் யாரைக் குறித்தும் சொல்லக் கூடிய மிக வன்மமான வசை தேசத்தை வெறுப்பவர் என்பது.

போதாக்குறைக்கு ஜெனெரல் தாப்பர் செயலற்று கோல்ப் விளையாடினார் என்றும் அந்தச் செயலற்றத் தன்மைக்குக் காரணம் அவர் சீனா மற்றும் இடது சாரிகளோடு கொண்டிருந்த உறவுக் காரணமோ என்று வரலாறு ஆய்வாளர்கள் ஐயப்படுகிறார்களாம். ஸ்ஸ்ஸ் அப்பா கண்ணைக் கட்டுதே. அந்த ஆய்வாளர்கள் யாரோ? இணையத்தில் தேடியதில் கிடத்த சுட்டிகளில் இந்துப் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை தாப்பரை பற்றி மிக நல்லதாகத் தான் சொல்கிறது. இந்தியா-சீனா போரில் இந்தியா அடைந்த தோல்வியை ஆராய்ந்த ஹெண்டர்ஸன்-ப்ரூக்ஸ் அறிக்கை இன்றும் ரகசியம். ஆனால் மேக்ஸ்வெல் அதில் ஒரு பகுதியை 2014-இல் வெளியிட்டார். அதைப் பற்றிய இந்தியா-டுடே கட்டுரை வெளியிடப்பட்ட பகுதியில் நேரு பற்றியும் தாப்பர் பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை என்கிறது. ஆக, எந்த வரலாறாசிரியர் தாப்பர் சீனாவின் கைக்கூலி என்று சொன்னார் என்று தெரியவில்லை.

ரோமிலா தாப்பர் இந்தியாவின் தலைச் சிறந்த வரலாறு ஆய்வாளரும் ஆசிரியரும். அவரின் மிக முக்கியமான ஆய்வு அசோகரின் ஆட்சிப் பற்றியது. ரோமிலாவை மார்க்சியர் என்று தூற்றி அவரின் இடத்தையே கேள்விக்குள்ளாக்குவது ஜெயமோகனை இந்துத்துவர் என்று தூற்றி தமிழ் இலக்கியத்தில் அவரின் இடத்தைக் கேள்விக்குள்ளாக்குவதற்கு இணையானது. தாப்பர் மார்க்சியராகவே இருக்கட்டுமே. குடியா முழுகிவிடும். மீண்டும் மீண்டும் ரோமிலா தாபரை இந்திய வெறுப்பாளர் என்கிறார் ஜெயமோகன். அந்த அம்மாள் நினைத்திருந்தால் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கலாம். அவர் அமெரிக்காவின் மிக உயரிய பல்கலைக் கழகங்களில் வருகை தரும் ஆசிரியராக இருக்கிறார். ரோமிலா தாப்பரின் நூல்களைக் கறாராக மறுத்து எழுதலாமே ஜெயமோகன் விதந்தோதும் மிஷெல் தானினோ, ராய் மாக்ஸ்ஹாம் போன்றவர்கள்.

இந்திய ஐஐடிக்களில் தலை விரித்தாடும் இந்துதுவத்தைப் பயன்படுத்திக்கொண்டு மிஷெல் தானினோ போன்றவர்கள் ஆய்வாளர்களாகச் சுற்றித் திரிகிறார்கள். அவரின் எந்தப் புத்தகமாவது சர்வதேச அரங்கில் வைக்க முடியுமா? அவர் ஆய்வாளரா? அதிகாரப்பூர்வ வரலாறை சமைப்பதில் இன்று தானினோ போன்றவர்கள் தான் முதல் வரிசையில் நிற்கிறார்கள்.

இடது சாரி ஆய்வாளர்கள் எழுத்தாளர்களுக்கு மாற்றாக இந்திய வலது சாரிகள் முன்னிறுத்தும் அநேகர் வெறும் 'charlatans'. இன்றைக்குத் தமிழ் நாட்டின் ஆகப் பெரிய வலது சாரி சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டன், ராஜீவ் மல்ஹோத்ரா ஆகியோர் தான். இவர்களின் எந்தக் கட்டுரையையாவது எந்த உலக ஆய்வரங்கிலாவது ஏற்றுக் கொள்ளப்படுமா? ரோமிலா தாபர், இர்பான் ஹபீப்புக்கு இணையாக வலது சாரிகளில் யாரும் இல்லையே? இங்கேயிருக்கும் வலது சாரிகள் கருணாநிதி, அண்ணாதுரை தரத்தில் தானே இருக்கிறார்கள்.

ஜெயமோகனின் கட்டுரை சம்பந்தமாக இணையத்தில் தேடியபோது 'Centreright.in' எனும் தளத்தில் வெளியானக் கட்டுரை ஒன்றுக் கிடைத்தது. ஜெயமோகன் தாப்பர் பற்றிக் கூறியது, நேருவின் குடும்பத்தோடு திருமண உறவு, தோராட், திம்மைய்யா பற்றியெல்லாம் அதேப் போல் கூறுகிறது. இதுப் போன்ற தளங்களும் அதில் வெளியாகும் கட்டுரைகளும் அவர் வட்டத்தில் பிரசித்தம். அந்த உரையாடலை ஒட்டி ஜெயமோகனும் தன் தகவல்களைத் தொகுத்திருக்கலாம் அதை எம்.ஜி.ஆர் பற்றி எழுதும் போது ஒரு தொகுத்துக் கொண்ட சிந்தனையாகவும் வரலாறுப் பற்றியப் பார்வையாகும் வைத்திருக்கிறார். ஆனால் தளத்தில் வந்தக் கட்டுரை கிசிகிசு வரலாறு அல்ல வெறும் கிசுகிசு. கட்டுரையின் சுட்டி http://centreright.in/2012/03/army-chief-row-will-history-repeat/#.WRef11LMxBw

ஜதுநாத் சர்க்கார் பற்றிய அற்புதமான புத்தகம் ஒன்றில் இந்தியாவில் வரலாறு என்பது கல்வி அமைப்பில் எப்படி மிகச் சமீபத்தில் தான் ஒரு தனித் துறையாக உருவானது என்று சுட்டிக் காட்டப்பட்டது. வி.ஏ.ஸ்மித் போன்றவர்கள் வரலாறாசிரியர்களோ ஆய்வாளர்களோ அல்ல. அவர்கள் காலனி அரசில் பணியாற்றியவர்கள் அவ்வளவே. வரலாறை ஒரு துறையாக அங்கீகரித்து அதற்கான வல்லுநர்கள் உருவானது மிகச் சமீபத்தில் என்கிறார் அந்த ஆசிரியர். இந்தியாவில் இன்னமும் வரலாறு படாதபாடு படுகிறது. ஆளுமைகளைப் பற்றியோ, இந்தியாவின் வரலாறுப் பற்றியோ சொல்லப்படும் நேர்மையான கருத்துகள் பல, அதுவும் கடந்த 20 வருடங்களில், பெரும் எதிர்ப்பைச் சந்திக்கின்றன. பற்பல செய்திகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதாலேயே வரலாறு உண்மைகளாக இன்றும் இந்தியர்கள் மனத்தில் நின்று விட்டது. ராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்தார் என்பது, பெரியார் வைக்கம் வீரர் என்பது ஆகியவை இன்றைக்கும் சராசரியான தமிழன் மட்டுமல்ல தன்னை வரலாறாசிரியர் என்று அழைத்துக் கொள்ளும் சலபதி போன்றவர்களும் செய்வது தான். சில சமயங்களில் ஜெயமோகனே அதைக் குறித்தெல்லாம் எழுதும் போது எதிர்ப்புகளைச் சந்தித்து இருக்கிறார்.

இன்று இரு வகை வரலாறுகள் இருப்பதாக ஜெயமோகன் சொல்கிறார். ஒன்று, அதிகாரப் பூர்வ வரலாறு, இரண்டு கிசு-கிசு வரலாறு. இல்லை. வரலாறு என்றும் ஒன்று தான். உண்மை தான் வரலாறு. உண்மையைக் கண்டடைதல் ஒரு பயணம், புத்தகங்கள் அதை நோக்கிய பயணம். நேர்மையற்ற கிசு கிசுக்கள் அப்பயணத்தில் மைல்கற்கள் அல்ல அவை பயணத்தைத் தடம் புரளச் செய்பவை.

இந்த இரண்டாம் வகை வரலாறுத் தோல்வி அடைந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டவர்களும் எழுதுவது என்கிறார் ஜெயமோகன். இது, ஜெயித்தவன் எழுதுவது வரலாறு ஆகிறது என்கின்ற க்ளீஷேவை புரட்டிப் போட்டுச் சொல்கிறது. தோல்வி அடைந்தவர்களும், புறக்கணிக்கப்பட்டவர்களும் மிக நேர்மையாக ரத்தம் தோய்ந்து எழுதியது தான் வரலாறு என்று கௌரவிக்கப்பட வேண்டும் மற்றதை நிர்தாட்சயனமாக நிரகரிக்க வேண்டும். சோல்சினெட்சின் எழுதியதையும் மத்தாய் எழுதியதையும் வெவ்வேறு வகை வரலாறு என்பது சோல்சினெட்சினை செறுப்பால் அடிப்பதற்குச் சமம். ஜெயித்தவனோ தோற்றவனோ எழுதுவதல்ல வரலாறு. எதில் உண்மை இருக்கிறதோ அது வரலாறு என்று மதிக்கப்பட வேண்டும்.

பி.கு: இந்தக் கட்டுரையில் ஒரு மிகப் பெரிய ஆறுதல் நேருவை நேரடியாகத் தாக்கவில்லை.

ஜெயமோகனின் கட்டுரை: http://www.jeyamohan.in/98396#.WReTWVLMxBw

Recommended Reading:

1. War and Peace in Modern India - Srinath Raghavan. My review is here http://contrarianworld.blogspot.com/2017/01/war-and-peace-in-modern-india.html
2. India's China War - Neville Maxwell
3. Protracted Contest: Sino-Indian Rivalry in the Twentieth Century -- Garver Joh
4. The Cold War in South Asia: Britain, the United State and the Indian Subcontinent, 1945-1965 -- Paul M. McGarr
5. The Global Cold War -- Odd Arne Westad
6. The Cold War on the Periphery: The United States, India and Pakistan -- Robert J. McMahon
7. The United States and India, Pakistan, Bangladesh - W. Norman Brown
8. Comrades at odds: The united States and India 1947-1964 -- Andrew J. Rotter
9. The Calling of history: Sir Jadunath Sarkar and his empire of truth -- Dipesh Chakrabarthy
10. JFK's forgotten crisis: Tibet, the CIA and the Sino-Indian war -- Bruce Reidel. My review is here http://contrarianworld.blogspot.com/2016/03/jfk-nehru-tibet-cia-and-sino-indian-war.html
11. Army and Nation: The military and Indian democracy since independence -- Steven Wilkinson. My review is here http://contrarianworld.blogspot.com/2016/05/army-and-nationthe-military-and-indian.html

Other References:
1. Book Review of Romila Thapar's 'Somanatha' -- http://contrarianworld.blogspot.com/2016/05/somanatha-temple-mahmud-of-ghazni.html
2. Bharat Mata ki Jai (and review of Sumathi Ramaswamy's 'The goddess and the Nation: Mapping mother India'. Published by Duke University) -- http://contrarianworld.blogspot.com/search?q=Bharat+Mata
3. Article in Hindu that speaks of General Thapar's role http://www.thehindu.com/opinion/lead/In-dubious-battle-at-heaven’s-gate/article12557779.ece
4. India Today article on Henderson-Brooks report released by Neville Maxwell http://indiatoday.intoday.in/story/the-guilty-men-of-1962-india-china-war-jawahar-lal-nehru-krishna-menon/1/350080.html
5. General Thapar https://en.wikipedia.org/wiki/Pran_Nath_Thapar
6. Article on leaked Henderson-Brooks report http://www.sunday-guardian.com/investigation/army-generals-not-nehru-and-krishna-menon-responsible-for-62-war-defeat

Sunday, October 2, 2016

இந்தியாவின் நாற்றங்கால், காந்தி. செல்வந்தர்களின் செல்லப் பிள்ளையா? நீலகண்டனுக்கு மறுப்பு

காந்தியும் நேருவும் "பணத்தில் கொழித்துப் புரண்ட" குடும்பங்களில் இருந்து வந்து காங்கிரஸ் தலைமைக்கு வந்ததிலிருந்து இரண்டாம் நிலைத் தலைவர்கள் உருவாகாத "மலட்டுத் தன்மை" உருவானது என்று அரவிந்தன் நீலகண்டன் தன் கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார். மதிமாறன் எனும் திராவிட இயக்கத்தவர் காந்தியின் உடை ஒரு காஸ்டியூம் என்று பேசியதை மறுத்து எழுதிய போது நான் நீலகண்டன் போன்ற இந்துத்துவர்களின் அவதூறையும் சுட்டிக் காட்டினேன். இன்று காந்தி ஜெயந்தி ஆகவே விரிவான மறுப்புரை.

கருணாநிதிகளையும் நரேந்திர மோடிகளையுமே பார்த்துப் பழகிய கண்களுக்கும் மனங்களுக்கும் காந்தியையும் நேருவையும் புரிந்து கொள்ளும் அறிவுத் திறன் இல்லாதது ஆச்சர்யமல்ல. காந்தி எப்படித் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் என்ற வரலாறைப் பின்னோக்கிப் பார்த்தல் அவசியம்

அரசியல் அனாதையான காந்தி

ஜனவரி 9 1915 காந்தி மும்பை வந்தடைந்தார். அவருக்குக் கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டது தென்னாப்பிரிக்காவில் அவர் ஆற்றிய தொண்டுகளுக்கு மதிப்பளித்து. வரவேற்புகளும் புகழுரைகளும் காந்தியைச் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்தன. நெடுங்காலமாக இந்தியாவில் வாழாதக் காரணத்தால் இந்தியாவை முதலில் அறிந்து கொள்ளும் வரை மவுனம் காக்கும்படி கூறிய கோகலேவின் கட்டளையை ஏற்றுக் காந்தி அரசியல் தளத்தில் மவுனம் காத்தார். அரசியலில் ஈடுபடாவிடினும் சமூகப் பணியாற்ற விழைந்த காந்தி கோகலே நடத்திய 'ஸர்வண்ட்ஸ் ஆப் இந்தியா'வில் இணைய விண்ணப்பித்தார். கோகலேவின் தோழர்கள் காந்தி சேருவதை விரும்பவில்லை. விண்ணப்பம் ஏற்கப் படவில்லையென்றாலும் பணியாற்ற விரும்பிய காந்தி சங்கத்தின் கழிப்பறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். துணுக்குற்ற கோகலே காந்தியை தடுத்தார். பின்னர் ஆசிரமம் தொடங்க காந்தி எத்தனித்த போது கோகலே தன் சங்கத்திலிருந்து பண உதவி செய்யப் படும் என்றார். ஆனால் ஒரே மாதத்தில் கோகலே இறந்தார். தலைமைப் பொறுப்பேற்ற ஸ்றீனிவாச சாஸ்திரியும் ஏனையோரும் காந்தியிடம் சங்கத்தின் விதிகளின் படி ஒரு வருடம் இந்தியா முழுதும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டுமென்றனர். அதை ஏற்றுக் காந்தி இந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். "பணத்தில் கொழித்துப் புரண்ட" குடும்பத்தில் பிறந்தவர் ரயிலில் மூன்றாம் வகுப்பில் பணித்தார். அவ்வகுப்புக் கழிப்பறைகளில் மலம் கனுக்கால் வரை தேங்கி நிற்கும் அவலைத்தைப் பின்னர்க் காந்தி எழுதினார். அந்நாட்களில் சென்றவிடமெல்லாம் கொண்டாடப் பட்டாலும் எந்த இயக்கமும் காந்தியை ஏற்கத் தயாரில்லை. காந்தி அரசியல் அனாதையாக உலா வந்த காலம் அது.



தமிழகம் வந்த ஏழை தேசாந்திரித் தம்பதி. மாயவரம் உரை.

பார்ப்பதற்கு வடக்கிலிருந்து வந்த ஏழை தேசாந்திரிகள் போல் துணி மூட்டையுடனும், கசங்கிய உடையிலும் ரயிலின் மூன்றாம் வகுப்பில் இருந்து காந்தியும் கஸ்தூரிபாவும் சென்னை புகை வண்டி நிலையத்தில் இறங்கினார்கள் என்கிறார் டி.ஜி. டெண்டுல்கர். ஜி.ஏ. நடேசன் வீட்டில் ஒதுக்கப்பட்ட அறையில் மேஜை, நாற்காலி, படுக்கை என்று ஏற்பாடாகியிருந்தது அவற்றை அப்புறப் படுத்த சொன்னார் காந்தி.

டெண்டுல்கரின் புத்தகத்தில் காணப்படும் உரைகளின் தமிழாக்கம் "தமிழ் நாட்டில் காந்தி' எனும் புத்தகத்தில் கிடைக்கிறது. ஏப்ரல் 21 1915 நடந்த வரவேற்பில் தமக்களிக்கப் பட்ட புகழுரைகளை மறுதலித்த காந்தி தென்னாப்பிரிக்கப் போராட்டங்களில் உயிர் நீத்த தமிழர்களை நினைவுக் கூர்ந்து "அந்தப் பெரிய மனிதர்களுக்கும் மாது சிரோன்மணிகளுக்கும் நான் உணர்வூட்டியதாக நீங்கள் கூறீயிருப்பதை நான் ஏற்க முடியாது. நம்பிக்கையுடன் எவ்விதமான பலனையும் எதிர்பாராது பணியாற்றிய அந்த எளிய மக்கள் தான் எனக்கு உணர்வூட்டியவர்கள்". அன்றும் இன்றும் இப்படித் தனக்கான புகழுரைகளை மறுத்த தலைவர்கள் சொற்பம். காந்தியின் அடியொற்றி வந்த நேரு அத்தைகயப் பண்பாளராக இருந்தார். அது அவர் காந்தியிடம் பயின்றது.

சென்னையில் அன்னி பெஸண்ட் அம்மையாரின் ஸ்தாபனங்களைக் கண்ட காந்தி ஸ்தாபனத்துக்குரிய கட்டிடங்கள் படாடோபமாகவும் 'பஞ்சமர் பள்ளி' தகரக் கொட்டகையில் இயங்குவதையும் கண்டு வெகுண்டார். பின்னர் மாயவரத்தில் பேசிய காந்தி தீண்டாமை பற்றிக் கடுமையாகப் பேசினார்.

"தங்களுடைய தற்கால நிமைமை பூர்வீகத் தவபலத்தால் தலைமுறை தத்துவமாய்க் கிடைத்தது என்று பிராமணர்கள் சொல்வார்களேயானால் அவர்களே தேசத்தை நாசமாக்கும் பாவிகளாவார்கள்...வெளிநாடுகளில் இருந்து கொண்டு நான் இந்து மதத்தைப் பற்றி அறிந்த வரை தாழ்த்தப்பட்டோர் முதுகில் ஏறி உட்காருவது இந்து மதமல்ல என்றே தெரிந்தது. இது தான் இந்து மதம் என்று என்னிடம் மெய்ப்பிக்கப்பெற்றால், நான் அதன் பகிரங்க விரோதியாவேன்."

காந்தியின் கருத்துகளை வெறும் பேச்சுகள் என்று ஒதுக்கிவிடக் கூடாது. காந்தியைப் போலல்லாது ஏழமையில் பிறந்த திலகர் பெண்கள் கல்வி, குழந்தைகளை மணம் செய்விப்பது, தாழ்ந்த சாதியினரின் கல்வி என்று ஒன்று விடாமல் எல்லாவற்றிலும் அதி தீவிர சநாதன இந்துவாகவே இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஏழ்மையில் பிறந்தார்களா செல்வம் கொழிக்கும் குடும்பங்களில் பிறந்தார்களா என்பதல்ல முக்கியம் என்ன வாழ்க்கை வாழ்ந்தார்கள் யாருக்காகப் பேசினார்கள் எதன் பொருட்டுப் போராட்டங்களை முன்னெடுத்தார்கள் என்பது தான் முக்கியம். ஒரு புறம் சநாதனம் பேசிய திலகர் இன்னொரு புறம் பிராமணீயத்தை தேசிய விழுமியங்களாக முன்னிறுத்திய பெஸண்ட் இவர்களிடையே எல்லோரும் கொண்டாட விரும்பிய ஆனால பின்பற்றத் தயாரில்லாத காந்தி.

மேலும் பேசிய காந்தி "இங்கே வரவேற்புரை ஆங்கிலத்தில் இருந்தது. காங்கிரஸ் மாநாட்டில் சுதேசிக் கொள்கையை ஆங்கிலத்தில் பிரகடனம் செய்கின்றார்கள்....நான் ஆங்கிலத்திற்கு எதிரியல்ல ஆனால் பிராந்திய மொழிகளின் சமாதியின் மீது ஆங்கிலம் எழுப்பப்படுமானால் நீங்கள் உண்மையான சுதேசித்தன்மையை ஆதரிக்கவில்லை என்பேன்". காந்திக்குப் பிறகு தான் காங்கிரஸில் பிரதேச மொழிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸை மையப்படுத்தப் பட்ட ஸ்தாபனமாக இருந்ததைப் பிரதேசக் கிளைகள் திறக்கச் செய்து பிரதேச மொழிகளில் நிகழ்ச்சிகள் நடத்த வைத்து எல்லாத் தளத்திலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டத் தலைவர்கள் மலரக் காரணம் காந்தியே.

"காந்தி, உட்கார்" வாரணாசியில் மோதிய காந்தியும் அன்னி பெஸண்டும்

பிப்ரவரி 4 1916 வாரணாசி இந்துப் பல்கலைக் கழகத் திறப்பு விழாவில் அன்னி பெஸண்டுடன் பேச அழைக்கப் பட்ட காந்தி வைஸ்ராயும், ராஜா ராணிகளும் செல்வந்தர்களும் வீற்றிருந்த மேடையில் சன்னதம் செய்தார்.

"விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்றேன். அக்கோவில் இருக்கும் தெரு அசுத்தமாக இருக்கிறது. இது சரியா? இந்துவாக வலியோடு பேசுகிறேன். நம் கோவில்களே சுத்தத்திற்கும் விசாலத்திற்கும் எடுத்துக் காட்டாக இல்லாமல் போனால் நாம் அமைக்கப் போகும் சுயராஜ்ஜியம் எப்படி இருக்கும்?"

போலீஸ் பாதுகாப்போடு வளைய வந்த வைஸ்ராயை, "இப்படி வாழும்போதே செத்துக் கொண்டிருப்பதை விட வைஸ்ராய் செத்து விடலாம்". தீவிரவாதிகளின் மன நிலை புரிந்து கொள்ளக் கூடியது என்றார் காந்தி. சினத்தின் உச்சிக்குச் சென்ற பெஸண்ட் "காந்தி, உட்கார்" என்று ஆணையிட்டார்.

சம்பரான் போராட்டமும் காந்தி தலைமை நோக்கி நகர்ந்ததும்

கோகலேவின் மறைவுக்குப் பிறகு 1916-இல் கூடிய லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் திலகர் மீண்டும் காங்கிரஸில் இனைந்தார். ஒரு புறம் முஸ்லீம்களூடனான ஒப்பந்தம், திலகர் இனைப்பு, தீர்மானங்கள் என்று மாநாடு முக்கியத்துவம் பெற்ற போது அங்கே எந்தத் தலைமைப் பொறுப்பிலுமில்லாத காந்தியை ஓர் ஏழை விவசாயி அனுகினான்.

வடக்கே நேபாளத்தை ஒட்டிய பீகார் மாநிலத்தைச் சார்ந்த சம்பரான் எனும் கிராமத்து விவசாயிகளின் கண்ணீர் கதையைக் காந்தியிடம் சொன்னான் அந்த விவசாயி. அம்மாநாட்டில் குழுமியிருந்த அத்தனை தலைவர்களிடமும் செல்லத் துணியாத அந்த விவசாயி காந்தியை, ஒரு குஜராத்தியை, அணுக முடியும் என்று யாரோ சொன்னதைக் கேட்டு அவ்வாறே செய்கிறான்.

சம்பரான் போராட்டம் பற்றி அறிய சிறந்த புத்தகம் ஜூடித் பிரவுன் எழுதிய "Gandhi's Rise to Power: Indian Politics 1915-1922". காந்தியின் தலைமை மலட்டுத் தன்மை வாய்ந்தது என்று விஷம் கக்கும் நீலகண்டன் போன்றோர் படிக்க வேண்டிய புத்தகம் அது.

ராஜேந்திர பிரசாத், கிருபளாணி என்று ஒரு சிறு அணி ஏற்கனவே சம்பரானில் இயங்கி வந்தது. தொண்டாற்றும் வழக்கறிஞர்கள் காசு பெறலாகாது என்று அவர்களுக்குக் காந்தி உணர்த்தினார். பின்னர்த் தான் சிறை செல்லத் தயாராக இருப்பதாகச் சொல்லி "எனக்குப் பிறகு இப்போராட்டத்தை யார் முன்னெடுத்துச் செல்வீர்கள் என்று வினவினார்". "நீங்கள் சிறைக்குச் சென்று விட்டால் அதன் பிறகு எங்களுக்கு இங்கென்ன வேலை நாங்கள் எங்கள் ஊருக்குப் போய் விடுவோம்" என்றார்கள் அந்த வழக்கறிஞர்கள். பதிலைச் சொன்னப் பிறகு தான் காந்தி எதிர்ப்பார்ப்பது அவரைப் பின் தொடர்ந்து தாங்களும் சிறைச் செல்லத் தயாராக வேண்டுமென்பதே. உண்மை உரைத்த தொண்டர்கள் இசைந்தனர்.

பிரவுன் சொல்கிறார், "சம்பரான் போராட்டத்தின் போது காந்தி அக்கிராமத்தின் உயர் குடியினரின் தொடர்பை தவிர்த்தார்". "காந்தியின் முக்கியமான உதவியாளர்கள் நடுத்தர வர்க்க படித்தவர்களும் குக்கிராமங்களிலுள்ள சிறு வியாபாரிகளும்". ஒரு வெகுஜனப் போராட்டத்தில் முரன்பாடுகளுடைய தூய எண்ணமற்றவர்களும் இணைவார்கள் அவர்களையும் ஒதுக்காமலே தான் முன் செல்ல வேண்டுமென்று காந்தி உணர்ந்திருந்தார்.

காந்தியின் போராட்ட முறைகளைப் பற்றிப் பிரவுன் ஒரு வித வியப்புடனே விவரிக்கிறார். சம்பரானை ஒரு விவசாயப் போராட்டமாக மட்டுமே காந்தி முன்னிறுத்தினார். அதில் எவ்விதமான விடுதலைப் போராட்டத்தின் சாயலையும் அவர் அனுமதிக்கவில்லை ஏனென்றால் அது பிரச்சினையைத் திசை திருப்பி விடுமென்பதால். பத்திரிக்கைகளுக்குச் செல்லும் செய்திகளைக் கவனமாக ஒழுங்குப் படுத்தினார். போராட்டத்திற்கு விளம்பர வெளிச்சம் தேவைப் படும் போது மட்டும் செய்திகளை ஊக்குவித்து மற்ற நேரங்களில் செய்திகள் பரவுவதையோ அவை போராட்டத்தின் தன்மையைச் சிதைத்துவிடுவதையோ தடுத்தார். பிரசாத்தும், கிருபளானியும் ஆயிர கணக்கான விவசாயிகளிடம் நேர்முகம் நடத்தி ஆய்வறிக்கையைத் தயார் செய்தனர். காந்தியும் அவர் குழுவும் அதற்கு முன்னர் எந்த அரசியல் வாதியும் செல்லாத குக்கிராமங்களுக்குச் சென்றனர். காங்கிரஸில் இதற்கு முன்னர் யாரும் இப்படிச் செய்ததில்லை.

காந்தி எப்போதும் முழுமையான விடுதலை நோக்கி நகர்தலையே விரும்பினார். சம்பரானில் வெறும் விவசாயக் கஷ்டங்களை நிவர்த்திச் செய்வது என்பது அவர் வழியல்ல. அம்மக்களின் வறுமை அவரை வருத்தியது. பள்ளிகள் நிறுவினார், அதற்குத் தன்னார்வலர்களைச் சேர்த்தார். மக்கள் அழுக்கையே உடுத்துவது கண்டு சுத்தமான உடைகள் அணிய வேண்டுமென்றார். கஸ்தூரிபாவை தன் குடிசைக்கு அழைத்துச் சென்ற ஓர் ஏழைப்பெண்மணி தன்னிடம் இருப்பதே ஓர் ஆடை தான் ஆகவே துவைத்து வேறு உடை அணிய முடியாதென்று காட்டி கலங்க வைத்தார். காந்திக்கு முன்பிருந்த அரசியல் வாதிகள் யாரும் இது பற்றியெல்லாம் அறிந்ததுமில்லை இவற்றைப் பொருட்படுத்தியதுமில்லை.

திலகர் இந்திய வரலாற்றில் முக்கியப் பங்காற்றினார் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் காந்தியே முதன் முதலில் சுதந்திரம் என்பது வெறும் காலணியாதிக்கத்திடமிருந்து விடுதலைப் பெறுவதல்ல மாறாகச் சமூகமும் அதை உருவாக்கும் தனி மனிதனும் விடுதலையடை வேண்டுமென்று அதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பனித்தார். திலகர் சிறைச் சென்ற காலங்களில் சிறைகள் மனிதத் தன்மையற்றவையாக இருந்தது உண்மை ஆனால் திலகர் ஒன்றும் வெகுஜனப் போராட்டத்திற்காகச் சிறைச் செல்லவில்லை என்பதும் கசப்பான உண்மை. காந்திக்கு முன் எத்தனை வெகுஜனப் போராட்டங்களைக் காங்கிரஸ் முன்னெடுத்தது? காந்திக்குப் பின் எத்தனை?

சாதாரணப் பிரதேசத் தொண்டனாக இருந்த பிரசாத் பின்னர்த் தேசத் தலைவரானார். சம்பரானைத் தொடர்ந்து குஜராத்தில் கேதா மற்றும் அகமெதாபாத் ஆகிய இடங்களில் தொழிலாளர்கள் சார்பில் முக்கியமான போராட்டங்களை முன்னெடுத்தார். குஜராத்தில் இப்போராட்டங்களில் காந்திக்குத் துணையாக இருந்த பின்னாளில் சர்தார் என்று பெயரெடுத்த வல்லபாய் பட்டேல். வரலாற்றில் சீஸரும் அலெக்ஸாந்தரும் இத்தனை தளபதிகளை உருவாக்கியதில்லை. அமெரிக்கச் சுதந்திர வரலாற்றில் வாஷிங்டன் யாரையுமே உருவாக்கவில்லை என்று சொல்லலாம். ருஷ்யப் புரட்சியும் அப்படியே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உருவான அளவு இரண்டாம் நிலை தலைவர்கள் வேறெங்கும் வேறெப்போதும் உருவானார்களா என்பது சந்தேகம். அப்படி உருவானவர்கள் எல்லோரும், காந்தியை எதிர்த்தவர்கள் உட்பட, காந்தியோடும் அவர் உருவாக்கியச் சூழலோடும் தொடர்புடையவர்களே.

1919-20 நெருங்கிய போது பிரசாத் என்ற பீகாரி, நேரு என்ற காஷ்மீரி, ராஜாஜி என்ற தமிழர், பட்டேல் என்ற குஜராத்தி, கிருபளானி, மகாதேவ் தேசாய் என்று தேசம் தழுவிய முரன்பாடுகளுடைய ஒரு பெரும் கூட்டம் காந்தியின் பின் அணிவகுத்து நின்றது. பஞ்சாப் படுகொலைக்குப் பிறகு 1920 ஆகஸ்டு 1-ஆம் தேதி மாபெரும் சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்திருந்தார் காந்தி. அதே நாளில் திலகர் மறைந்தார். அதன் பின் முப்பதாண்டு காலம் காந்தி இந்தியாவில் விஸ்வரூபமெடுத்தார் என்றால் மிகையாகாது.

போலீஸ் தடியடியில் காயம்பட்ட ஜவஹர்லாலும் ஸ்வரூப் ராணியும்

நேரு குடும்பத்தினரின் செல்வ செழிப்பு மிகுந்த காழ்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது. இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களின் தியாகம் மெச்சத் தக்கது. ஆனால் இழப்பதற்கு நிறைய இருந்து அவற்றை இழக்கத் தேவையில்லாதவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு இழப்புகளைச் சுமந்ததும் வணங்கத் தக்கதே. சுதந்திரத்தின் பின் நேருவும் அவர் தங்கையும் அடைந்த புகழும் அதிகார பீடங்களில் அமர்ந்ததும் பலருக்கு இன்றும் ஒவ்வாமையைத் தருகிறது. நேரு குடும்பத்தினர் செல்வ செழிப்போடு கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன் அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும் நீலகண்டன் அவர்கள் பின்னாளில் காந்தியினால் ஈர்க்கப்பட்டு இந்திய உடைகளைத் தரித்ததும் சிறைச் சென்றதும் போலீஸ் தடியடிகளில் காயம் பட்டதையும் சேர்த்திருக்கலாம். ஆனால் அதெற்கெல்லாம் ஓர் அடிப்படை நேர்மை வேண்டுமே.

போலீஸ் தடியடியில் அடி வாங்கியது பற்றி நேரு ஓர் அத்தியாயமே எழுதியிருப்பார் தன் சுயசரிதையில். தான் அடிப்பட்டதைப் பிரலாபிக்கும் நோக்கத்தில் எழுதவில்லை மாறாக ஒரு இளைஞனாகத் தான் திருப்பி அடிக்கும் உணர்வைக் கட்டுப் படுத்தியதையும் அத்தகைய வன்முறைகளை எதிர் கொண்ட மன நிலையையும் விவரித்திருப்பார் நேரு. நேருவின் அம்மா ஸ்வரூப் ராணி செல்வ சீமாட்டி அவரும் வீதிக்கு வந்து போராடுகிறார் அதுவுமில்லாமல் தடியடியில் காயப்பட்டார். காந்தி எவ்வகையான குடும்பத்தில் பிறந்தார் என்பதை விட இங்கே நாம் ஆச்சர்யப்பட வேண்டியது பல செல்வந்தர்களும், செல்வம் ஈட்டும் கல்விப் பெற்றவர்களும் அதையெல்லாம் துறந்து துயர் அனுபவிக்கத் தயாரானது தான். அதுவும் வசதியான வீட்டுப் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டது மாபெரும் புரட்சி. கேதா போராட்டத்தில் மண் சுமந்த அனுசுயா பென் பணக்கார முதலாளியின் பெண்.

நேருக் குடும்பத்தில் சிறைச் செல்லாத பெண்ணே கிடையாது. சிறைவாசத்தின் நடுவே நோய்வாய்ப்பட்ட தன்னைக் காணவந்த நேரு சிறைக்குத் திரும்பிச் செல்லும் முன் அவரைத் தன்னருகே அழைத்து ஈனஸ்வரத்தில் "அரசாங்கத்திற்கு ஏதும் உத்தரவாதம் கொடுத்து விடாதீர்கள்" என்று கூறுகிறார் எங்கே தன் கணவன் தன் பொருட்டு மண்டியிட்டுவிடுவாரோ என அச்சப்பட்டு. நேரு தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்தார்.

வன்முறைக்கு எதிர்வினை வன்முறையல்ல என்ற கருத்துடைய ஷெல்லியின் "மாஸ்க் ஆப் அனார்க்கி" (Mask of Anarchy) காந்திக்கும் நேருவுக்கும் உவப்பான ஒரு கவிதை. இருவரும் அதை மேற்கோள் சொன்னதுண்டு.

And if then the tyrants dare
Let them ride among you there,
Slash, and stab, and maim, and hew,-
What they like, that let them do.

'With folded arms and steady eyes,
And little fear, and less surprise,
Look upon them as they slay
Till their rage has died away.

தடியடியில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக லாலா லஜபதி ராய் இறக்கவும் நேர்ந்தது. "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா" என்று பாரதி ஆருடமாக எழுதினான்.

காந்தி-பிர்லா உறவு: செல்வந்தர்களும் காங்கிரஸும்

அகாகான் மாளிகையில் சிறைவாசம் இருந்ததையும் கடைசி நாட்களில் பிர்லா மாளிகையில் தங்கி இருந்ததையும் வைத்தே காந்தி என்னமோ செல்வந்தர்களின் செல்லப் பிள்ளையாக இருந்தது போலவும் காங்கிரஸை மிட்டா மிராசுகளுக்குத் தாரை வார்த்தார் என்றும் திமுக மேடைகள் முதல் இந்துத்துவ முகாம்கள் வரை ஒரு அவதூறு பரப்பப்படுகிறது.

"In search of Gandhi" என்ற புத்தகத்தில் பி.ஆர்.நந்தா இந்த அவதூறை திட்டவட்டமாக மறுப்பதுடன் இந்திய முதலாளிகளுடனான காந்தியின் உறவு பற்றி அழகான கட்டுரை ஒன்றைத் தருகிறார்.

இந்திய முதலாளிகள் காங்கிரஸை பயன்படுத்திக் கொண்டது தான் அதிகம் காங்கிரஸ் அவர்களைப் பயன் படுத்திக் கொண்டதை விட. சுதேசி தொழிற்சாலைகளின் பாதுகாப்பிற்காகக் காங்கிரஸின் உதவியை நாடி அதில் பயனும் பெற்ற பிறகு தேர்தல் நிதி கோரிய மோதிலால் நேருவிடம் அகங்காரத்தோடு காந்தி உட்பட மற்ற காங்கிரஸ் தலைவர்களோடு நேர்முகம் வேண்டும் என்று கேட்டபோது மிகக் கடுமையான கடிதமொன்று எழுதி மறுத்தார் மோதிலால் நேரு.

ஜம்னாலால் பஜாஜ் போன்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே முதலாளிகள் காங்கிரசிற்கு உதவினர். பிர்லா தன் உறவு காந்தியோடு தான் காங்கிரசோடு அல்ல என்பதை அரசுக்குத் தெளிவுப் படுத்தினார். 1920 ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த போது டாடா உட்படப் பல முதலாளிகள் இயக்கித்திற்கு உதவ மறுத்ததோடு எதிர் அணியையே துவக்கி மும்முரமாக எதிர்த்தனர். பின்னாளில் ஜவஹர்லால் நேரு, பூலாபாய் தேசாய், கோவிந்த் பல்லப் பந்த் ஆகியோர் நிதித் திரட்ட செல்வந்தர்களை அணுகியபோது கல்லில் நார் உரிப்பதை விட அதிகம் கஷ்டப்பட்டனர்.

காந்தி எப்போதும் தில்லியில் சேரிகளில் தான் தங்குவார். ஜனவரி 1948-இல் கலவர பூமியான தில்லியில் சேரியில் தங்குவது அங்கிருப்போருக்குச் சங்கடத்தை உண்டாக்கும் என்று தான் பிர்லா மாளிகையில் தங்கினார். காந்தி சேரியில் தங்கினால் அதிகாரிகளும், செல்வந்தர்களும் அங்கே சென்றனர்; மாளிகையில் தங்கினாலோ சாமான்யர்களும் அங்கே சென்றனர். காந்தி எங்கே தங்கினாலும் அதைச் சமத்துவப் பூங்காவாக்கினார் என்பது தான் முக்கியம்.

விவிலியத்தில் பணக்காரன் கொடுக்கும் கொடையை விட ஏழைப் பெண்மனி கொடுக்கும் கொடையே சிறந்தது என்பார் இயேசு. இயேசு என்பவர் வாழ்ந்தாரோ இல்லையோ காந்தி என்பவர் வாழ்ந்தார்.

'காந்தியின் வருகை' - நேரு

ஜவஹர்லால் நேரு "டிஸ்கவரி ஆப் இந்தியா" (Discover of India) புத்தகத்தில் காந்தியின் வருகை எத்தகைய மாற்றத்தை உண்டுப் பண்ணியது என்று அவருக்கேயுரிய நுண்ணுணர்வுடன் விவரித்தது எனக்கு பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடம்.

"He was like a powerful current of fresh air that made us stretch ourselves and take deep breaths; like a beam of light that pierced the darkness and removed the scales from our eyes; like a whirlwind that upset many things, but most of all the working of people's minds. He did not descend from the top; he seemed to emerge from the millions of India, speaking their language and incessantly drawing attention to them and their appalling condition.....The greatest gift for an individual or a nation, so we had been told in our ancient books, was abhaya, not merely bodily courage but the absence of fear from the mind....against all pervading fear that Gandhi's quiet and determined voice was raised: Be not afraid.

Gandhi influenced millions of people in India in varying degree. Some changed the whole texture of their values, others were only partly affected, or the effect wore off; and yet not quite, for some part of it could not be wholly shaken off."

இன்றளவும் என் அரசியல் பார்வையை, அமெரிக்க அரசியலோ இந்திய அரசியலோ எதுவாயினும், காந்தியப் பார்வை ஆக்கிரமித்திருக்கிறது.



காந்தியின் எளிமைப் பற்றி ஜெயமோகன்

காந்தியின் எளிமைப் பற்றிய எள்ளி நகையாடல்களுக்கு பதில் சொல்லும் முகமாக ஜெயமோகன் எழுதியக் கட்டுரை முக்கியமானப் பார்வையை முன் வைக்கிறது. அக்கிட்டுரையில் நேருப் பற்றிய காழ்ப்பு மிகுந்த கருத்துகளை அவர் இன்றும் அப்படியே கொண்டுள்ளாரா என்றுத் தெரியாது அது முக்கியமுமல்ல. அக்கட்டுரையில் இருந்து ஒருப் பகுதி:

"காங்கிரசுக்கு காந்தி காலத்தில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் முழுநேர ஊழியர்கள் இருந்தார்கள். சம்பளம் பெறும் ஊழியர்கள்.  அவர்களுக்கு மாதம் எட்டணா ஊதியம் அளிக்கப்பட்டது. படுகேவலமான வறுமையில்தான் அவர்கள் வாழ்ந்தாக வேண்டும். வக்கீல்கள், ஜமீந்தார் பிள்ளைகள், பட்டதாரிகள் அந்த ‘வருமானத்துக்குள்’ வாழ்ந்து ஊர் ஊராகச் சென்று பணியாற்றினார்கள். வெறுந்தரையில் படுத்து இரந்து உண்டு கால்நடையாக அலைந்தார்கள். 

எண்ணிப்பாருங்கள், காந்திவரும்வரை காங்கிரஸில் அந்தப் பண்பாடு இருந்ததா? சட்டமேதைகளும் பேராசிரியர்களும் முதல்வகுப்பில் சென்று கட்சிகட்டிய காலம் அது. வருடம்தோறும் மாநாடு போடுவதற்கு அல்லாமல் எதற்கும் காங்கிரஸ் கூடாமலிருந்த காலம். [உண்மையில் காங்கிரஸ் என்ற பேரே மாநாடு என்ற பொருளில்  போடப்பட்டது. வெறுமெ கூட்டங்கள் நடத்துவதற்கு மேலாக காங்கிரஸை ஒருவெகுஜன இயக்கமாக ஆக்கும் நோக்கமேதும் முன்னோடிகளுக்கு இருந்ததில்லை.] எளிய மக்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பும் இல்லை. காந்தி எப்படி பலலட்சம் ஊழியர்களை கவர்ந்தார்? கோகலேயிடமும் திலகரிடமும் இல்லாத எது அவரிடம் இருந்தது? எளிமை. முன்னுதாரணமான எளிமை."

வரலாற்றுத் திரிப்பே தொழிலாக.

மதிமாறன் பெரியார் திடலில் விநியோகிக்கப்படும் துண்டறிக்கைகளைத் தாண்டி வேறெதுவும் படித்து விடக் கூடாதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர். நீலகண்டன் அப்படியல்ல. அதனாலேயே நீலகண்டனுக்குப் பரவலாக ஒரு பிம்பம் உண்டு. நீலகண்டனின் பார்வைகளோடு ஒத்துப் போகாதவர்கள் கூட அவரை ஒரு ஆராய்ச்சியாளராக முன்னிறுத்துவதைக் கண்டிருக்கிறேன்.

அரவிந்தன் நீலகண்டனைப் போல் வரலாறைத் திரிப்பதற்கும், தேர்ந்தெடுத்த உண்மைகளின் (selective truth telling or half truths) துணைக் கொண்டு தன் தரப்பை நிறுவுவதற்கும், அடிப்படை நேர்மையைக் காற்றில் பறக்க விட்டு எழுதுவதற்கும் இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். அவருடைய கட்டுரைகள் முதல் சமீபத்தில் வெளிவந்த 'இந்திய அறிதல் முறைகள்' வரை கொஞ்சம் நெருங்கி தகவல்களைச் சரி பார்த்தால் திரிபுகள் அம்பலம் ஆகும். ('இந்திய அறிதல் முறைகள்' குறித்து விரிவான விமர்சணம் அல்லது கட்டுடைப்புச் செய்ய உத்தேசம். காலம் கனிய வேண்டும்).

டான் அஷோக் என்னும் திமுக அனுதாபி ஒருவர் இன்று (காந்தி ஜெயந்தி) எழுதுகிறார் காந்தி சாதி ஒழிப்புக்குப் பாடு படவில்லையென்று. திமுக அனுதாபி அல்லவா திமுக மேடைப் பேச்சுகளைத் தவிர வேறொன்றும் படித்தறியாதவர் போலும். ஜோசப் லெலிவெல்ட் காந்தியின் தீண்டாமை ஒழிப்பு யாத்திரைப் பற்றி ஆச்சர்யம் பொங்க எழுதியுள்ளார். தன் வாழ்நாளெல்லாம் தீண்டாமைக்கெதிராக உழைத்தவர் காந்தி. 'பிராமணர்கள் நடு நடுங்க வேண்டும்' என்ற பிரகடணத்தோடு உதயமான ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர்களெல்லாம் தீண்டாமை ஒழிப்புக்கு என்ன செய்து கிழித்தார்கள் அவரவர் ஜாதியில் எல்லாம் தீண்டாமையை ஒழித்துச் சமபந்தி போஜனம் நடத்தி விட்டார்களா என்ன?

காந்தியை விமர்சிக்கவே கூடாதா என்று கேட்பவர்களுக்கு என் பதில் என்றும் "காந்தியே அவரின் முதல் விமர்சகர்". சம காலத்தில் காந்தி விமர்சிக்கப் பட்டார், சிலரால் முழுவதுமாக நிராகரிக்கவும் செய்யப் பட்டார்.

ஜூடித் பிரவுன் தொகுத்த "The Cambridge Companion to Gandhi" அற்புதமான கட்டுரைகளைக் கொண்டது. தனிகா சர்க்கார் என்பவர் துல்லியமாக "காந்திக்குச் சாமான்யனை நோக்கிப் பேசத் தெரிந்தது. ஆனால் அவர் எப்போதும் சாமான்யனுக்காகப் பேசினார் என்று சொல்ல முடியாது". நகர்புற வாழ்க்கை, நகர்புறத்தாரின் விழுமியங்கள் குறித்த காந்தியின் பார்வை, குஹா காந்தி பற்றி முன் வைத்த விமர்சனங்கள் ஆகியவற்றைச் சரமாகத் தொகுத்துள்ளார்.

நம் சமூகத்தில் இன்றும் அவதூறூக்கும் விமர்சனத்திற்கும் வித்தியாசம் தெரியாததே மிகப் பெரிய நோய்.

இந்தியாவின் நாற்றங்கால்

காந்தியை கடுமையாக விமர்சிக்கவும் நிராகரிக்கவும் செய்யலாம் ஆனால் அதில் ஒரு அடிப்படை நேர்மை வேண்டும். அது அரவிந்தன் நீலகண்டன், மதிமாறன் போன்றோரிடம் கிடையாது. காந்தியை நிராகரிப்பதில் இந்துத்துவர்களும் பெரியாரிஸ்டுகளும் கைக்கோர்த்தே செயல்படுகிறார்கள். திராவிட இயக்கத்தினரின் எழுத்துகள் புறங்கையால் எளிதாகத் தள்ளிவிடக் கூடியவை. இந்துத்துவர்களின் பிரச்சார உத்திகள் கோயபல்ஸையே பள்ளி மாணவன் தரத்தில் பின் தள்ளக் கூடியவை.

நியு ஜெர்ஸியில் உரையாற்றிய ஜெயமோகன் இந்திய இலக்கியத்தின் ஆளுமைகளுக்குக் காந்தி எப்படியொரு மைய ஈர்ப்பாக இருந்தார் என்று நிறுவி இந்திய இலக்கியத்தின் நாற்றங்கால் காந்தி என்றார். அதை இன்னும் நீட்டித்து இந்தியாவின் நாற்றங்கால் என்பது மிகப் பொறுத்தம்.


References:

1. அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை http://www.tamilhindu.com/2013/11/tea2/
2. 'Mahatma' by D.G. Tendulkar Vol 1. Pages 156-234
3. 'The Life of Mahatma Gandhi' by Louis Fischer. Pages 157-176, 189-197
4. 'Gandhi's Rise to Power: Indian Politics 1915-1922' by Judith Brown. Pages 16-123
5. 'Jawaharlal Nehru' by Sarvepalli Gopal - Vol 1. Pages 172-193
6. 'Discovery of India' by Jawaharlal Nehru pages 358-359
7. 'In search of Gandhi: Essays and Reflections' by B.R. Nanda. Pages 124-138
8. 'தமிழ் நாட்டில் காந்தி' - அ.ராமசாமி pages 166-170
9. 'காந்தியின் எளிமையின் செலவு' - ஜெயமோகன் கட்டுரை http://www.jeyamohan.in/557#.V_Gwljvijoo
10. 'The Cambridge Companion to Gandhi' Edited by Judith Brown and Anthony Parel. Pages 173-199
11. Autobiography by Jawaharlal Nehru