Showing posts with label Pa.Ranjith. Show all posts
Showing posts with label Pa.Ranjith. Show all posts

Tuesday, July 30, 2019

ராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்

தமிழ் நாட்டில் ஒரே இரவில் அதிக வரலாற்றாசிரியர்களை உருவாக்கிய பெருமையும், இன்று கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி மற்றும் சுப்பராயலு முதலானோர் பெயர்கள் பட்டித் தொட்டியெல்லாம் ஒலிக்கச் செய்தப் பெருமையும் இயக்குநர் பா.ரஞ்சித்தையே சேரும். இன்று ராஜராஜனை பற்றிப் பேசும் பலரும் உண்மையிலேயே சாஸ்திரியின் புத்தகத்தை வாங்கிப் படித்திருப்பார்களேயானால் அப்புத்தகம் காணாமல் போயிருக்காது. 

ராஜராஜன் ஆட்சிப் பற்றிய ரஞ்சித்தின் விமர்சனம் நியாயமானதா? இறந்தக் காலம் என்பது இறந்தக் காலம் அல்ல மாறாக இன்றைய வாழ்வின் மீதும் அதன் நிழல் படியும். சோழப் பேரரசின் நிழல் 21-ஆம் நூற்றாண்டில் எந்தளவுப் படிந்திருக்கிறது? தேடுவோம். அறிவோம்.

வரலாற்றாசிரியன் யார்? 


சர்ச்சைகளுக்குள் போகும் முன் ஒரு தன்னிலை விளக்கம். நான் வரலாற்றைக் கற்கும் மாணவன் மட்டுமே. இன்று வரலாற்றாய்வாளர்கள் என்று வலம் வருவோரில் சிலர் அந்த வகை தான். மற்றப்படி பெரும்பாலானோர் ஒன்று நுனிப்புல் மேய்பவர்கள் அல்லது தங்கள் அஜெண்டாவுக்காக வரலாற்றை திரிப்பவர்கள் தான்.  

நாகசுவாமி மாதிரி சிலர் வரலாறு எனும் பெருந்துறையில் ஏதேனும் ஒரு உள்துறையின் வல்லுனர்கள் மட்டுமே. நாகசுவாமியை வரலாற்றாசிரியராக முன் வைக்கும் ஒரு வழக்கம் ஆரம்பித்திருக்கிறது. அவர் தொல்லியல் ஆய்வாளர், செப்பேடு ஆய்விலும் ஈடுபட்டவர் அவ்வளவே. வரலாற்றாசிரியன் என்பவன் கடந்த காலத்தைப் பல்வித உள் துறைகளின் மூலம் சேகரித்த தகவல்களைச் சீர் தூக்கி ஒரு பெருஞ்சித்திரத்தை உருவாக்குபவர். நீலகண்ட சாஸ்திரி வரலாற்றாசிரியர். நாகசுவாமி ஒரு துறை வல்லுநர் அவ்வளவே. இங்கே சுப்பராயலு, கராஷிமா போன்றவர்களைச் சொல்லாமல் குறிப்பாகச் சாஸ்திரியை நாகசுவாமிக்கு மாற்றாகச் சொல்வதற்குக் காரணம் பிராமணத் துவேஷம் என்ற பழி வராமலிருக்க. இதெல்லாம் தமிழ் நாட்டின் தலை விதி. 

அதே போல் வரலாற்று ஆர்வலர்கள் வேறு ரகம். இதற்குச் சிறந்த உதாரணம் தமிழ் பாரம்பர்ய அறக்கட்டளை நடத்தும் சுபாஷினியும் அதன் அங்கத்தினர்களும். அந்த அமைப்பின் வலைத் தளத்தில் சுபாஷினி முனைவர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார் ஆனால் அவர் முனைவர் பட்டம் வாங்கியதோ கணினி துறையில். 



அந்த மூன்று நிமிடங்கள் 


ரஞ்சித் உமர் பாருக் என்பவரின் நினைவு நாளில் உரையாற்றினார். 17 நிமிட உரையில் ராஜராஜன் பற்றிக் கடைசி 3-4 நிமிடங்கள் தான் பேசியிருக்கிறார். அந்தப் பகுதி தான் இவ்வளவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது என்பதை நினைவில் கொள்வது மிக அத்தியாவசியம். அவர் உரையின் பெரும் பகுதி தலித்துகளின் நிலவுடமை குறித்துத் தான். மேலும் சதயத் திருவிழாவை முன்னிட்டு சில பறையர் அமைப்புகள் உட்படப் பல்வேறு ஜாதியினரும் ராஜராஜன் தங்கள் குலத்தைச் சேர்ந்தவன் என்ற பரப்புரையை ஆரம்பித்திருந்தனர். அந்தப் பின்னனியில் ராஜராஜனின் ஆட்சியை விமர்சித்து அவன் தன் இனமாக இருக்கத் தேவையில்லை என்றும் அப்படிச் சொந்தம் கொண்டாடி பெருமைத் தேடிக் கொள்ளத் தேவையுமில்லை என்பதே ரஞ்சித் பேசியது. 

ரஞ்சித் பேசியதற்கு ஆதாரமுள்ளதா என்பதைப் பேசும் முன் ராஜராஜனின் ஆட்சியில் நில உடைமை மற்றும் சமூக அமைப்பு குறித்து ஓர் அறிமுகம் தேவை. 

ராஜராஜன் ஆட்சியில் நில உடைமை 


கடந்த சில வாரங்களில் பிரம்மதேயம், தேவதானம், பறைச் சேரி என்கிற வார்த்தைகள் மிக அதிகம் பேசப்பட்டவை ஆனால் சில சிக்கலான உண்மைகள் அறியாமையாலோ வேறு காரணங்களாலோ பேசப்படவில்லை. 

உதாரணமாக ஒருவர், சாதிய காழ்ப்பினால் உந்தப்பட்டு, “ராஜாவுக்கு எல்லா நிலமும் சொந்தம், பறையர்களிடமிருந்தா நிலத்தை அபகரித்திருப்பார் ராஜராஜன்” என்றார். உண்மையில்லை. சோழர் காலத்தில் ராஜாவும், ராணிகளும், சுருக்கமாகச் சொன்னால் அரச குடும்பத்தினர், நிலங்களை விலைக் கொடுத்து வாங்கியதற்குச் சான்றுகள் இருக்கின்றன. அப்படியென்றால் ராஜ்ஜியம் முழுமையும் ராஜாவுக்குச் சொந்தமல்ல. ராஜா கேட்டு மறுத்திருக்கிறார்களா, கொடுக்கப்பட்ட விலை நியாய விலையா என்பதைப் பற்றித் தீர்மானமாகச் சொல்லப் போதுமான ஆதாரங்கள் இல்லை. 

ராஜராஜனின் காலத்தில் நில அளவைகள், விற்பனை, வரி விதிப்புப் பாகுபாடுகள் நவீன அரசாங்கத்துக்குரிய அளவில் இருந்தன ஆனால் அவை தீடீரென்று முளைத்ததல்ல முந்தைய பல்லவ மற்றும் ஏனைய அரசுகளில் இருந்த வழக்கங்களின் அடிப்படையில் விரிவுச் செய்யப்பட்டதென்று மட்டும் தான் கூறலாம். 

இவ்வளவு கவனம் வரி விதிப்பின் மீதும் நில உடைமையின் மீதும் குவிந்ததற்கான காரணம் என்ன? முதல் முக்கியமான காரணம் ராஜராஜன் சோழ அரசை சோழப் பேரரசாக மாற்ற முனைந்ததே. கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் ஆட்சி செய்த ராஜராஜன் அதில் பெரும் பகுதியை போர்கள் மேற்கொள்வதற்கே செலவழித்தான். அடுத்து வந்த ராஜேந்திர சோழனின் ஆட்சியும் அப்படியே. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் போர்கள் தான் முதன்மை தொழில். போரின் முதல் தேவை வருவாய். வருவாய்க்கான முக்கிய வழி நிலம் சார்ந்த வரி தான். வேறு தொழில் வரிகள் பற்றித் தகவல்கள் இல்லை. 

நிலம் வரி விதிப்புக்கு மட்டும் அடித்தளமல்ல அதை விட முக்கியமாகச் சமூகப் பாகுபாடுக்கும் அடித்தளமானது. சமூக அமைப்பின் அடித்தளமாக நில உடைமை முதன்மை பெற்றது சோழர்கள் ஆட்சியில் தான். இது ஒரு தொடர் சங்கிலி. நில உடைமை சமூக அமைப்புக்கு ஆதாரம் அதே சமயம் சமூக அமைப்பே நிலம் யாருக்கு உடைமையாகும் என்பதைத் தீர்மானித்தது. இது ஒரு விஷம் தோய்ந்த வட்டம். A vicious cycle. இதைத் தான் ரஞ்சித்தும் மற்ற தலித் ஆய்வாளர்களும் பேச முற்படுகிறார்கள். 

சோழ அரசாட்சி நான்காகப் பிரிக்கப்படுகிறது. முதல் காலம், விஜயாலயன் முதல் உத்தம சோழன் வரை ( 846-985 பொ.யு). இரண்டாம் காலம், ராஜராஜன் முதல் ஆதிராஜேந்திரா வரை (985-1070 பொ.யு). மூன்றாம் காலம், முதலாம் குலோத்துங்கனில் இருந்து இரண்டாம் ராஜாதிராஜன் வரை (1070-1179 பொ.யு). நான்காம் காலம், மூன்றாம் குலோத்துங்கனில் இருந்து மூன்றாம் ராஜேந்திர சோழன் வரை (1179-1279 பொ.யு) 

நில பரிவர்த்தனையின் முக்கிய நோக்கம் மடங்களுக்குத் தானமளிப்பதே. சோழ ஆட்சிக் காலத்தில் மடங்களே பிரதான நில உரிமையாளர்களாக மாறினர். மடம் சாராத காரணத்துக்காகவும் நிலம் வாங்கி விற்கப்பட்டிருக்கிறது. ஆனால் மடம் சாராத பரிவர்த்தனைகள் பற்றி அவ்வளவாகக் குறிப்புகள் கிடைக்கவில்லை. மடம் அல்லது கோயில்கள் சார்ந்த நிகழ்வுகள் ஆவணப் படுத்தப் பட்ட அளவுக்கு மற்றவை ஆவணப் படுத்தப்படவில்லை என்பது சோழ ஆட்சி என்றல்ல பொதுவாக இந்திய ராஜாங்க காலத்தின் நிலை. இதனால் ஒரு காலத்தில் சமூகத்தின் முழுமையான சித்திரத்தை எந்த வரலாற்றாசிரியராலும் கொடுக்க முடியவில்லை. முகமதிய ஆட்சியிலும் பின்னர்க் காலனி ஆட்சியிலும் தான் இந்நிலை மாற்றம் அடைந்தது. இதற்கு இன்னொரு முக்கியக் காரணம் கிரேக்க-ரோமானிய மரபை போல் வரலாற்றெழுத்து இந்திய மரபில் காலனி ஆட்சி வரை இல்லாதிருந்தது. 

சோழர் காலத்தில் பிரம்மதேயம் என்பது பிராமணர்கள் குடியிருப்பு. பிராமணர்கள் அல்லாதவர்களின் குடியிருப்பு ஊர் என்றழைக்கப்பட்டது. ஊர் ‘வேளான்வகை’ எனப்படும் கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கும். பிரம்மதேயங்களில் நிலம் சபை என்கிற கூட்டு உரிமையிலும் தனி உரிமையிலும் இருக்க வாய்ப்புண்டு. மாறாக ஊர்களில் தனி உரிமை இல்லை என்றே சொல்லலாம். இந்த முரன் ஓர் முக்கியமான சமூக அமைப்பை நமக்குக் காட்டுகிறது. சோழர்கள் காலத்தில் பிராமணர்களுக்குத் தனிச் சொத்துரிமை இருந்திருக்கிறது மற்றவர்களுக்கு இல்லை. 

பிராமணக் குடியிருப்புகள் 20% தான், ஊர்களின் சதவீதம் 80% ஆனால் நில பரிவர்த்தனையில் பிராமணர்களே அதிகம் பங்கெடுத்திருக்கிறார்கள். இதற்குக் காரணங்கள் சில. முதலாவது கோயில்களுக்கு விற்கப்பட்ட நிலங்களே அதிகமாக ஆவணமாகியிருக்கின்றன அவை பிராமணர்களோடு சம்பந்தப்பட்டவை. ஊர் குடியிருப்புகள் நில உடைமையைப் பாதுகாக்கும் பொருட்டு அதிகம் விற்கவில்லை. காலப் போக்கில் பிராமணர்கள் பொருளாதார நிலையில் பின்னடைந்ததும் அவர்கள் விற்பதற்கான காரணமாக இருக்கலாம்.
 
நில உடைமை சம்பந்தமாக ஏராளமான கலைச் சொற்கள் கிடைக்கின்றன. மேல்வாரம், கீழ் வாரம், இறையிலி, குடி நீக்கி நிலம், குடி நீங்கா நிலம், உடைமை, காணியாட்சி என்று அநேகம். எத்தகைய நிலம், வரிக்கு உட்பட்டதா இல்லையா, யாருக்கு நிலம் சொந்தம் என்று பல காரணிகளை (Criteria) வைத்து நிலமே பற்பல வகையாகப் பிரிக்கப்பட்டது. மேலும் சமூகமும் பல அடுக்குகளையும் பிரிவுகளையும் அப்போதே உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்தது. இவ்வளவு பாகுபாடுகளும் சமூகத்தையும் நிலத்தையும் பிணைத்துப் போட்டது. இந்தளவு பாகுபாடுகள், அதுவும் பின்னாளில் உடைக்க முடியாத இறுக்கத்துடன், வேறு கலாசாரங்களில், உதாரணத்துக்குக் கிரேக்க-ரோமானிய கலாசாரத்தில், இருந்ததாகத் தெரியவில்லை. 

ஒரு பெரிய சமூகம் குறித்து அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான வரலாறைப் பேசும் போது பொதுப்படையாகத் தான் பேசலாமே தவிர ஏதேனும் ஒரு செய்கை எப்போதும் ஒரே மாதிரி தான் இருந்தது என்று சொல்ல இயலாது. இறையிலி நிலம் பற்றிய விவாதத்தில் பிரம்மதேயங்களும் தேவதானங்களும் மிகவும் அதிகம் பேசப்பட்டன. இறையிலி நிலங்கள் வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவை ஆனால் அப்படிப்பட்ட நிலங்களும் ஏதேனும் ஒரு வகையான வரியை செலுத்தின. மேலும் எல்லாப் பிரம்மதேயங்களும் எப்போதும் இறையிலி என்றழைக்கப்படவில்லை. வரி வசூலிக்கப்படாத இடங்களில் பறையர் சேரிகளும், சுடுகாடு, கம்மா சேரிகளும் அடக்கம். அந்நிலங்கள் நீக்கிய நில அளவுக்கே ஒரு ஊர் வரி செலுத்த வேண்டியிருந்தது. 

பிராமணர்கள் நிச்சயமாகச் சமூக அமைப்பில் ஒரு பிரதான இடத்தை மிகவும் ஸ்திரமாக அடைந்தது சோழப் பேரரசில் தான். பிராமணக் குடியிருப்புகளான பிரம்மதேயங்களில் பிராமணரல்லாதோர் வசிக்க முடியாது. இந்த வழக்கம் தான் பத்து நூற்றாண்டுகள் கழித்தும் அக்ரஹாரத்தில் வேறு யாரும் வீடுகள் வாங்க முடியாமைக்கு அடித்தளம். பொ.யு. 1002, பொ.யு 1018-இலும் அரசாணைகல் பிரம்மதேயங்களில் நிலம் வைத்திருந்த பிராமணரல்லாதோரை அவர்கள் நிலங்களை விற்றுவிடக் கட்டாயப்படுத்தியது (பிரம்மதேயங்களில் மற்றவர்கள் நிலம் வைத்திருந்தது சொற்பமே அதுவும் பறிக்கப்பட்டது. பிராமணர்களுக்காக). 

பிரம்மதேய நிலங்களில் விவசாயம் செய்யும் குத்தகைதாரர் (tenant) ‘உள்குடி’ என்றழைக்கப்பட்டனர். பிராமணர்கள் நிலம் வைத்திருந்தார்களே தவிர அவர்கள் உழவுச் செய்யவில்லை. மாறாக நிலமுடைய வெள்ளாளர்கள் உழவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த ‘உள்குடி’ என்றழைக்கப்படுதல் மிக முக்கியச் சமூக அந்தஸ்து. பறையர்கள் பொதுவாக உரிமையில்லாத ‘புறகுடி’ என்றே குறிக்கப்பட்டனர். இந்தப் பாகுபாடு பல நூற்றாண்டுகளுக்கு நீடித்துப் பறையர்களைச் சமூகத்தில் இருந்து விலக்கியே வைத்திருந்தது. இப்பாகுபாட்டை இக்கட்டுரையில் மீண்டும் காண்போம். 

கோயில்களுக்கு அளிக்கப்பட்ட தேவதானம் என்றழைக்கப்பட்ட நிலங்கள் சோழர்கள் காலத்தில் மிக அதிகரித்தது. சோழர்கள் செங்கல் (brick) கோயில்களைக் கல் (stone) கோயில்களாக மாற்றியதோடு அநேக தேவதானங்களை உருவாக்கினர். தேவதானங்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் இரு வகைப்பட்டன, குடிநீக்கி தேவதானம், குடி நீங்கா தேவதானம். நிலத்தில் பூர்வீக உரிமையாளரும் அதனை ஒட்டிய உழவர்களும் ‘குடி’ என்றழைக்கப்பட்டனர். குடி நீங்கா தேவதானம் என்பது பழைய குத்தகைதாரர் அல்லது உரிமையாளர் தொடர்ந்து நிலத்துக்குச் சொந்தக் காரராக இருப்பார் ஆனால் வரி மட்டும் அரசாங்க கஜானாவுக்குப் போகாமல் கோயில் பராமரிப்புக்குப் போகும். குடி நீக்கி தேவதானம் என்பது நிலத்தை உரிமையாளரிடமிருந்து வாங்கி அவர்களை அப்புறப் படுத்திவிட்டு கோயிலுக்கு அளிப்பது. 

ரஞ்சித்தின் குற்றச்சாட்டான பறையர்களிடம் இருந்து நிலம் பறிக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாகப் பறையர்கள் சமூகத்தின் அடித்தட்டில் இருந்தார்கள் என்பதும், அவர்களுக்கு 10-ஆம் நூற்றாண்டு முதலே உரிமைகள் இல்லை என்பதும் தெளிவாகிறது. அவர்கள் சேரிகளில் ஒதுக்கப்பட்டார்கள். சோழர் காலச் சமூக அமைப்பை நோக்கினால் இது இன்னும் தெளிவாகும். 



சோழர் காலத்தில் சமூக அமைப்பு: ஒரு குறிப்பு 


பிராமணர்கள் சமூக அமைப்பில் தலைமையிலிருந்தாலும் அக்காலத்தில் கிட்டத்தட்ட அவர்களுக்கு இணையாகவே வெள்ளாளர்கள் இருந்தார்கள். பிராமண-ஷத்திரிய கூட்டணியும் வர்ணாஸ்ரமத்தை அடிப்படையாகக் கொண்டது. இது இந்தியாவின் சமூக அமைப்பை தேச முழுதும் பல நூற்றாண்டுகளுக்கு நிர்ணயித்தது. இதில் பிராமணர்களும் ஷத்திரியர்களும் ஒருவருக்கு ஒருவர் தேவைப் பட்டவர்களாகவே இருந்தார்கள். இந்த உறவை ஒற்றைப் படையாகப் பார்க்க இயலாது. 

நீலகண்ட சாஸ்திரி மீண்டும் மீண்டும் அடிக்கோடிடுவது அக்காலச் சமூகம் பெருமளவு வர்க்கங்களுக்கிடையே ஐரோப்பிய வரலாற்றைப் போல் எந்த ரத்த சகதியுமான புரட்சிகள் இல்லாமல் இசைந்தே இருந்தது என்பதை. சோழப் பேரரசின் காலத்தில் இங்கிலாந்தின் வரலாற்றை நோக்கினால் தெளிவாக வித்தியாசம் தெரியும். சற்றுப் பின் கட்டுரையில் அதை நோக்குவோம். இந்தச் சமூக அமைதியின் பின்புலம் வர்ணாஸ்ரமம். 10-ஆம் நூற்றாண்டில் அமைதியின் பின்புலமாக இருந்த ஒரு சித்தாந்தம் அதற்குப் பலியாகக் கேட்டது சமூகத்தின் ஓர் அங்கத்தையும் தனி மனித சுதந்திரம் போன்ற கோட்பாடுகளையும். புரட்சியோ, ரத்தமோ சோழர் காலத்தில் பெருக்கெடுத்து ஓடவில்லை ஆனால் அன்று விதைக்கப்பட்டவை தான் பிற்காலத்தில் விஷ விருட்சமாக வளர்ந்தது.

பறையர் சேரி என்று பிரிக்கப்பட்டதோடல்லாமல் பறையர் குளம் என்றும் பறையர் சுடுகாடு என்றும் கூடப் பிரிக்கப்பட்டது. இது இன்றும் தொடரும் அவலம் என்பது நமக்குச் சாதிய அடக்குமுறை நூற்றாண்டுகள் கடந்தும் எப்படிக் கட்டுக்கோப்பாக இருக்கிறதென்று. 

அடிமை முறை என்றதும் பலருக்கும் அமெரிக்கா தான் நினைவுக்கு வரும் ஆனால் அவர்களுக்கு உண்மையான முன்னோடி சோழப் பேரரசு தான். “விவசாயத் தொழில் செய்த கூலியாட்கள், அடிமை வாழ்வே வாழ்ந்தனர்”. “கோயில்களுக்குத் தான் பெருவாரியான அடிமைகள் விற்கப்பட்டனர்”. சொற்ப காசுகளுக்குப் பெண்கள் கோயிலுக்கு விற்கப்பட்டுள்ளனர். அடிமை முறை உலகெங்கிலும் அக்காலத்தில் இருந்தது தான். மற்ற சமூகங்களில் அவர்களைப் பற்றி விரிவான குறிப்புகள் கிடைக்கிறது ஆனால் இந்தியாவில் பொதுவாக வரலாற்றுக் குறிப்புகள் மேட்டுக் குடியினர் பற்றித் தான். சவுகரியமான மவுனங்கள் இந்திய வரலாற்றில் நிறைய உண்டு. வரலாற்றாசிரியர்கள் பலரும் அக்காலத்திய குறிப்புகள் பெரும்பாலும் கோயில் சார்ந்ததாகவே இருப்பதைச் சுட்டிக் காட்டி கோயில் சாராத சமூகம் பற்றி அதிகம் தெரியவில்லை என்கிறார்கள். இந்தியர்களுக்கு வரலாறு எழுதும் வழக்கம் இன்று போல் அன்றும் இல்லை. 

தேசத்துரோகி என்ற கோஷம் சமீபத்திய கண்டு பிடிப்பன்று அதுவும் சோழர் காலக் கொடை தான். துரோகி என்ற சொற்றொடர் ராஜத்துரோகி, சிவ துரோகி, குரு துரோகி, நாட்டுத் துரோகி, இனத் துரோகி, என்று வகைப்படும். பிராமணர்களின் குடிமையைச் செலுத்தாத வெள்ளாளர்கள் நாட்டுத் துரோகி என்றும் குரு துரோகி என்றும் தண்டிக்கப்பட்டனர். மனு ஸ்ம்ரிதியை ஒட்டி பிராமணர்கள் உயர்வென்று கருதிய தானங்களுக்கு ஊறு விளைவிப்பது மட்டும் பாவம் என்று கருதிய காலம் போய்ச் சோழர் ஆட்சிக் காலத்தில் பாவங்களின் பட்டியல் அதிகமானது. வலிகண்டபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுச் சொல்கிறது, “நான்கு ஊர்களின் வரியை செலுத்துவதில் தடையேற்படுத்துவோரின் மனைவி அவர்கள் வீட்டுக் குதிரைகளுக்குப் புல் வெட்டிப் போடும் புலையனிடம் ஒப்படைக்கப் படுவார்”. 

மனு ஸ்ம்ரிதியும், பிராமண ஆதிக்கமும் அரசனோடு கை கோர்த்து ஜாதி முறையை உருவாக்கியதிலும் அதைப் பேணியதிலும் முக்கிய அம்சம் என்கிறார் நொபோரு கராஷிமா. சோழர் காலத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான சமூகம் மாற்றம் வலங்கை, இடங்கை என்று இரண்டாக ஜாதிகள் அணிவகுத்து எதிரெதிராக நின்றது தான். காலனி ஆட்சிக் காலத்தில் வலங்கை-இடங்கை இடையே மூர்க்கமான மோதல்கள் நடந்தன. அதன் ஆரம்பம் சோழர்கள் ஆட்சிக் காலம் தான். இரு குழுவும் அடித்துக் கொண்டதில் ராஜமகேந்திர சதுர்வேதி மங்கலம் கிராமமும் கோயிலும் நாசமாக்கப்பட்டன, கோயில் கஜானா சூறையாடப்பட்டது. 

பொ.யு. 1160-இல் திருக்கடையூர் மகாசபை முக்கிய முடிவை எடுத்தது. சிவன் கோயில் தர்மகர்த்தாக்கள் வைணவர்களோடு “கலந்து, தாராளமாகப் பழகினால், அவர்களுடைய சொத்து, கோயிலுக்குப் பறிமுதல் செய்யப்படும்” என்பதே அம்முடிவு. இது காலப் போக்கில் சமயங்களிடையே மோதல் கொள்ளும் போக்கினை சுட்டிக் காட்டுவதாக நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். இந்து மதம் பல சமயங்களையும் வரைமுறையில்லாமல் தன்னுள் இழுத்துக் கொண்டது சமூக ஒருங்கினைப்புக்காகத் தானே ஒழிய சமதர்மத்துக்காக இல்லை என்பதையும் சாஸ்திரி சுட்டிக் காட்டுகிறார். இந்த ஒருங்கினைப்பில் மேன்மக்களின் நம்பிக்கைகள் கீழ் ஜாதியினரின் நம்பிக்கைகளால் ஓரளவேனும் குறைப்பட்டிருக்கலாம் என்றும் நீலகண்ட சாஸ்திரி சொல்கிறார். 

சோழர் காலத்து தேவரடியார்கள்


ரஞ்சித்தின் பேச்சில் ராஜராஜன் காலத்தில் 400 தேவரடியார்களை ‘மங்கள விலாஸ்’ எனப் பெயரிட்ட அந்தப்புரம் மாதிரியான ஒரு வேலைக்குத் தான் அமர்த்தினான் என்று குறிப்பிட்டார். இது தவறு. ‘மங்கள விலாஸ்’ ராஜா சரபோஜி உருவாக்கியது. பலரும் தேவதாசிகள் பழந்தமிழ் மரபில் மிக உயரிய ஸ்தானத்தில் இருந்ததாகவும், கலைகளின் உறைவிடமாகவும் கோயில் மற்றும் ராஜாங்க காரியங்களில் மிக மதிக்கப்பட்ட இடத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்கள். இதுவும் தவறு. 


சோழர் காலத்தில் கோயில் பெண்டிர் அல்லது தேவரடியார்கள் பற்றித் தீர்க்கமான ஆராய்ச்சியை மேற்கொண்டவர் லெஸ்லி ஓர். லெஸ்லி ஓர் சோழர் காலக் கோயில் பெண்டிர் பற்றித் தெளிவானச் சித்திரம் தருகிறார். 

கோயில் பெண்டிர் (Temple women) கோயிலுக்குக் கொடை அளிப்பவர்களாகவும் கோயிலின் அன்றாட அலுவல்களில் ஒத்தாசை செய்பவர்களாகவும் தான் இருந்திருக்கிறார்கள். நாம் தேவதாசியின் கலை மரபுகள் என்று பேசுவதெல்லாம் பெரும்பாலும் 18-ஆம் அல்லது 19-ஆம் நூற்றாண்டில் உருவானவை தான். பாட்டும் நடனமும், சோழர் காலத்தில், கோயில் பக்தி சார்ந்த (ritual) கடமைகளில் பிரதானமாக இருந்ததில்லை. கோயில் பெண்டிர் பற்றிப் பேசிய 304 சோழர் காலக் கல்வெட்டுகளில் வெறும் 4-இல் தான் ‘நடனம்’ குறிப்பிடப்பட்டிருக்கிறது. நடனத்தில் ஆண்களும் பங்கெடுத்திருப்பதாகத் தெரிகிறது. கோயில் பெண்டிரில் சிலர் கோயில் நடனம் ஆடும் உரிமையைக் கோயிலிடம் இருந்து ‘வாங்கினார்கள்’. இது தான் இங்கு முக்கியம். கோயில் பெண்டிர் கோயிலுக்குத் தானம் அளிப்பவர்களாகவும், நில பரிவர்த்தனைகளில் ஈடுபட்டவர்களாகவும் தெரிகிறது.5
 
கோயிலில் பாடல்கள் பெரும்பாலும் ஆண்களால் தான் பாடப்பட்டன. திருவெம்பாவை மட்டும் தான் பெண்கள் பாடுவதற்கென்றெ ஒதுக்கப்பட்டது. பெண்கள் கோயிலில் சமைக்கவும், சுத்தம் செய்யவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சில சமையம் அடிமைகளாக விற்கப்பட்டதுமுண்டு. 

கோயில்களின் தேவை

 
ராஜராஜன் தன்னை ‘சிவபாத சேகரன்’ என்று குறிப்பிட்டுக் கொண்டான். சிவனுக்கு ராஜராஜன் தேவையோ இல்லையோ ராஜராஜனுக்குச் சிவ பெருமான் தேவையாக இருந்தார். 

சோழர் காலத்தில் ஏன் கோயில்களும் தேவதானங்களும் பிரதானமாயின? ரோமாபுரி சீஸர்கள் எப்படிப் பாகனியத்தின் பல் தெய்வ வழிபாடு மரபோடு தங்களை இணைத்துக் கொண்டு தாங்களே கடவுளாகவும் கடவுளால் அங்கீகரிக்கப்பட்டவர்களாகவும் முன்னிறுத்திக் கொண்டார்களோ அதையே சோழர்களும் செய்தனர். 

கேசவன் வேலுதாட் சோழர்கள் கோயில்களை நிர்மானித்ததற்கான காரணங்களைக் கிட்டத்தட்ட மார்க்ஸிய கண்ணோட்டத்தில் பட்டியலிடுகிறார். சாதிய படி நிலைகளை ஒற்றி அமைக்கப்பட்ட சமூகத்தில் கோயில் மேல் ஜாதியையும் கீழ் ஜாதியையும் தன் வருவாய் சார்ந்த செயல்களின் மூலமாக இணைத்தது என்கிறார் வேலுதாட். கோயில் நிலங்களின் உடைமை மேல் ஜாதியிடமும் அதில் உழைக்கும் கடமை கீழ் ஜாதியிடமும் இருந்தது. உழுபவர்களின் உற்பத்தி திறனின் பொருளியல் அதீதத்தை (surplus)அறுவடை செய்யும் ஓர் அமைப்பாகக் கோயில் இருந்தது. வேலுதாட்டும் நீலகண்ட சாஸ்திரியும் கோயில்கள் வெறும் வழிப்பாட்டுத் தலங்கள் அல்ல என்றும் அவை பல நேரங்களில் கோட்டைகளாகவும், பெரும் சொத்துகளுக்குக் கருவூலங்களாகவும் இருந்தன என்கிறார்கள். இதுவே அந்நிய படையெடுப்புகள் கோயில்களைக் குறி வைக்க ஒரு காரணம் என்பதும் தெளிவு.

தஞ்சை பெரிய கோயில் பற்றிச் சொல்லும் போது சாஸ்திரி தெளிவாகச் சொல்கிறார் ராஜராஜனின் படையெடுப்புகளில் மற்றவர்களிடமிருந்து அபகரித்த பெரும் செல்வங்கள் கோயிலுக்கு அளிக்கப்பட்டன. 

சோழர்கள் சைவ மதத்தைத் தீவிரமாகத் தன் ஒழுக்கமாகக் கொண்டதோடு அதையே சமூகத்திற்கும் முன் வைத்தார்கள். சைவ சமய நெறிகளின்படி அரசன் ராஜகுருவின் ஆலோசனைப் படி நடக்க வேண்டியவன். யாருக்கேனும் சுப்ரமணியம் சுவாமியின் ‘நான் பிராமணன், மோதி சௌகிதார். நான் ஆணையிடுவேன் அவர் நடத்துவார்’ என்றது நினைவுக்கு வந்தால் தப்பில்லை. 

பக்தி இயக்கம் உச்சத்தை அடைந்த சோழர் காலத்தில் தெய்வத்தை ‘உடையார்’ என்றும் ‘பெருமாள்’ என்றும் விளித்துப் பக்தன் தன்னைத் தானே ‘அடியார்’ என்று விளிக்க ஆரம்பித்ததும் தெய்வத்தின் இடத்தில் அரசனும் பொருந்திப் பார்க்கப்பட்டது மிக முக்கியமான மாற்றம். சுந்தரமூர்த்தி நாயனார் பிராமணமயமான பக்தி இயக்கத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில், ‘தில்லை பிராமணர்களுக்கு அடியார்க்கு அடியான்’ என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 

“தேவராஜர்” என்கிற கோட்பாடு நிலைப்பெற்றது ஆரம்பக் காலச் சோழர்களின் ஆட்சியில். கோயில் தெய்வங்கள் ராஜாவின் பெயராலேயே அழைக்கப்பட்டன. பள்ளிப்படைக் கோயில்களின் கர்ப்பகிருஹத்தில் புதைக்கப்பட்ட எலும்புகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. எகிப்திய ராஜாக்களும் வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் புதைக்கப்பட்டவர்களும் நினைவுக்கு வரலாம். எல்லா இடத்திலும் காரணங்கள் ஒன்றே. கோயில் நிர்மானமும், அரசர்கள் கடவுளாகத் தங்களை முன்னிறுத்தியதும், புரோகித வர்க்கமும் அரச வர்க்கமும் கைக் கோர்த்ததும் உலகெங்கிலும் நடந்தவை தான். 

பிராமண-வேளாளர் கூட்டு என்பது சோழ ராஜ்ஜியத்தில் கோயிலும் சைவமும் சமூகத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல் படி என்பது பர்டன் ஸ்டெயினின் கருதுகோள். 

சோழர்களும் மதப்பூசல்களும்


தமிழகத்தில் சமணம் மிகப் பரவலாகப் பின்பற்றப்பட்டதா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. சைவ இலகியங்களில் சமணத் துறவிகள் தான் இகழப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டுக் காட்டுக் ஆய்வாளர் வேலுப்பிள்ளை சமணத்தைப் பின்பற்றிய மக்கள் அதிகமாக இருந்தததாகத் தெரியவில்லை என்கிறார். இந்தியா முழுதும் சமணத்துக்கும் இந்து மதம் என்று இன்று தொகுப்பாக அழைக்கப்படுகிற சைவம், வைணவம், பிராமணியம் ஆகியவற்றுக்கும் தத்துவ அளவில் மட்டும் போட்டி நிகழவில்லை. ஸ்தூலமாகவும் போட்டியும் அழிவும் ஏற்பட்டது. 

நீலகண்ட சாஸ்திரி சமண ‘பள்ளிகள்’ நிலங்கள், ‘பள்ளிச் சந்தம்’, இறையிலி நிலங்களாக ஆங்காங்கே வகைப்படுத்தப்பட்டதைச் சொல்கிறார். திருச்சி அருகே குந்தவை சமணக் கோயில் கட்டினார். திருப்பரங்குன்றத்தில் சமணம் தழைத்து என்கிறார் சாஸ்திரி. இதில் சம்பகலக்‌ஷ்மி வேறுபடுகிறார். 

சோழர்களுக்கு முந்தைய காலத்திலேயே சமணத்தை ஒடுக்குவது ஆரம்பித்து விட்டது என்கிறார் சம்பகலக்‌ஷ்மி. பொ.யு.மு. முதலாம் நூற்றாண்டில் (1 B.C.E) திருப்பரங்குன்றம் மலைச் சார்ந்த பகுதிகளில் பரவலாக இருந்தனர். அக்குன்று பின்னர்ப் பிராமணிய இனக்குழுக்கள் கைப்பற்றின. பொ.யு. 773 ஆண்டு அங்கு ஒரு பிராமணக் குகைக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் சிவன், விஷ்ணு, ஸ்கந்தா, துர்கை என்று பல கடவுள்கள் இருந்த அக்கோயில் காலப் போக்கில் ‘சுப்ரமணியன்’ வழிப்பாட்டுத் தலமாகி அறுபடை வீடுகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுத் தமிழ் கடவுளான முருகன் பிராமணக் கடவுள்களில் வரிசையில் சிவனின் பிள்ளையாக ஏற்கப்பட்டுவிட்டான். (குறிப்பு: இது எதுவும் என் கருத்தல்ல). இதண் முக்கியக் காரணம் அரச புரவலர்கள் மதம் மாறியது தான். பிள்ளையார்பட்டி, குன்னக்குடி, நார்த்தாமலை, குடிமியான்மலை, அழகர்மலை ஆகிய இடங்களில் சமணக் கோயில்கள் பின்னர் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்ட பல இடங்களுள் சில. 

கடந்த காலம் எப்போதும் இறந்த காலம் அல்ல. பிராமணர்களின் மொழியை வைத்து அவர்களைத் தமிழ்ச் சமூகத்தினின்று வெளி நிறுத்தி ஒரு மொழி வாரி அரசியலை திராவிட இயக்கங்கள் 1950-களில் ஆரம்பித்தன ஆனால் அதன் முன்னோடி சம்பந்தர். சம்பந்தர் சமணர்களைத் தமிழ் அறியாதவர்கள், சமஸ்கிருதம் பேசாதவர்கள் என்று பழித்து அவர்கள் தமிழ்த் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியதை அ. வேலுப்பிள்ளையும் இந்திரா விஸ்வநாதனும் முக்கியமான தந்திரமாகக் கருதுகிறார்கள். சமணமும் பௌத்தமும் இலக்கியத் தமிழையோ சமஸ்கிருதத்தையோ உபயோகப்படுத்தியதைவிடப் பிராந்தியத் தமிழைப் பயன்படுத்தினார்கள். எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் மொழியை வைத்து ஓர் இனத்தை வேற்றுமைப் படுத்துவது பலனளிக்கக் கூடியது. 

சமணம் செல்வாக்கிழந்ததன் காரணங்களாகச் சம்பகலக்‌ஷ்மி அடையாளம் காட்டுவது: வணிகம் சார்ந்த சமூகம் உழவு சமூகமாக மாறியது, பிராமணிய வர்ணாஸ்ரமம் சமூக அமைப்பின் இலக்கணமாக மாறியது, பிராமணர்களுக்கும் கோயில்களுக்கும் அளிக்கப்பட நில தானங்கள், பிராமணியம் ஏனைய சமய பாரம்பர்யங்களைச் சுவீகரித்தது (கத்தோலிக்கத் திருச்சபை இந்து மதப் பாரம்பர்யங்களைக் கைக்கொள்வது ஏன் வன்மத்தோடு இன்று எதிர்க்கப்படுகிறது என்பதை இங்கு நினைவுக் கூற வேண்டும். தான் பிறருக்குச் செய்தது தனக்கு நேர்ந்துவிடலாகாது என்கிற நியாயமான அச்சம்). 

நிலவுடமை, மீண்டும், ஒரு பெரும் சமூக மாற்றத்தில் முக்கியமான காரணமாக இருப்பதை, ரஞ்சித் சொல்வது போல், காண்கிறோம். சோழர் காலப் படையெடுப்பகளை ஆராய்ந்த கௌஷிக் ராய் இன்னொரு ஆசிரியரை மேற்கோள் காட்டி சோழர்கள் படையெடுப்புகளுக்காகச் சமணர்களின் மீதும் அவர்கள் கோயில்களின் மீதும் கடுமையான வரிகளை விதித்துப் பணம் சம்பாரித்தனர் என்கிறார். இது நீலகண்ட சாஸ்திரி சொல்வதை மறுக்கிறது. 

1898 Calcutta Review எனும் இதழில் சோழர் கால வரி விதிப்புகள் பற்றிய குறிப்பு ஒன்று வரி விதிப்புக்குட்பட்டவை என ஒரு பட்டியலை சொல்கிறாது: தொழில் வரி, பொற்கொல்லர்கள் மீது வரி, நெசவு வரி, நீர் நிலைகள் மீது வரி என நீளும் அப்பட்டியலில் ‘சமணர்கள் மீதான வரி’யும் இருக்கிறது. 

ராய் சொல்வது உண்மையானால் இஸ்லாமிய அரசுகள் இந்துக்கள் மீது விதித்த வரிக்கு நிகரானவை சோழர்கள் சமணர்கள் மீது விதித்த வரிகள். 

சோழர்கள் வரி வசூலிப்பதிற்காக உருவாக்கியது தான் மிக விரிவான நில உடைமையும் அதற்கு அடித்தளமான சமூக அமைப்பும். போர்களே சோழப் பேரரசு பேரரசாவதற்குக் காரணம். தமிழர்களாக அது பற்றிப் பெருமை கொள்வது அற்பத்தனம். ஏனெனில் அதற்கு மற்றவர்கள் கொடுத்த விலை அநேகம். 

வர்ணாஸ்ரமும் சமூக அமைதியும்


வர்க்கங்களுக்கிடையே பெரும் பூசல்கள் இருந்ததில்லை என்றும் அது வர்ணாஸ்ரமத்தின் குறைகளைக் கடந்து அச்சமூக அமைப்பின் பெருமை என்று கருதுவோர் இன்றுமுண்டு. சோழர் காலத்தில் உருவான இடங்கை-வலங்கைப் பிரிவுகள் தம்மிடையே வன்முறைக் கலந்த பூசல்களில் பிற்காலத்தில் ஈடுபட்டனர் அதற்கான விதைகள் சோழர் காலத்திலேயே இடப்பட்டன என்று நீலகண்ட சாஸ்திரி ஒப்புக் கொள்கிறார். ஆனால் வர்க்கப் பேதம் பூசலை உண்டாக்கவில்லை என்றும் கூறுகிறார்.

சமீபத்தில் கட்டிட வேலைச் செய்யும் தலித் மற்றும் தலித் அல்லாத தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரி டம்ப்ளரில் காபி அளித்ததாகவும் தலித் தொழிலாளர்கள் அதை, வேறு யாரின் கட்டுப் படுத்தலும் இன்றி, தொடவில்லை என்று ஒரு நண்பர் தன் பரிசோதனை முயற்சிப் பற்றிச் சொன்னார். ராஜாஜியின் 13-வயது மனைவி மங்கை வீட்டு வாசலில் இரண்டு கலயம் வைப்பார். ஒன்றில் அரிசியும் இன்னொன்றில் வரகும் இருக்கும். அரிசி பிராமணர்களுக்கு, வரகு தலித்துகளுக்கு. இதைப் படித்தப் போது தோன்றியது, 13-வயது சிறுமிக்குக் கூட இந்தப் பாகுபாடு தெரிகிறது. மேலும் அங்கே எந்த காவலாளும் தேவையில்லாமலே தலித்துகள் அரிசியை மறந்தும் தொட்டிருக்க மாட்டார்கள். இது தான் வர்ணாஸ்ரமத்தின் வெற்றி. இங்கே ராஜராஜன் குலசேகரன், சமூகம் அமைதியாயிருந்தது எனும் போது அந்த அமைதிக்கு யார் பலியானார்கள் என்பது முக்கியம்.  

போர்களும் விளைவுகளும்


சமீபத்திய இந்துத்துவ உரையாடல்களில் நரம்பு புடைக்கப் பேசப்படுவது இஸ்லாமிய படையெடுப்புகளில் சூறையாடப்பட்ட கோயில்கள் பற்றியும் பண்பாட்டு அழிவுகள் பற்றியும். கஜினி முகமதின் முன்னோடி ராஜராஜ சோழனும் மற்ற சோழ அரசர்களும் தான். 


ராஜராஜ சோழன் பெரு வீரன் அவன் ஈட்டிய போர் வெற்றிகள் அபாரமானவை. சோழர் காலக் கப்பல் படையைப் பற்றி வியப்புடனே குறிப்பிடுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஆனால் அவர்கள் போர் செய்வதை முதன்மையாகக் கொண்டிருந்தவர்கள். The Cholas were warmongers. கங்கைப் பற்றிப் புத்தகமெழுதிய சுதிப்தா சென் சொல்கிறார், “சோழர்கள் போரிடுவதையும் சூறையாடுவதையும் தொழிலாகவே கொண்டிருந்தார்கள்”. அனுராதபுரத்தை இலங்கை படையெடுப்பில் கைப்பற்றிய சோழப் படை பௌத்த மடங்களையும், ஊரையும், பௌத்த விஹாரத்தையும் சூறையாடியது. புத்த மதச் சின்னங்கள் களவாடப்பட்டன. அக்காலத்தில் எதிரிகளின் தலைகளைக் கொய்வதும் நியமமாகவே இருந்தது. சாளுக்கியர்களைத் தோற்கடித்த சோழர்கள் அவர்கள் ஊர்களைச் சூறையாடினார்கள். 

போரின் விளைவுகள் என்ற தலைப்பில் நீலகண்ட சாஸ்திரி எழுதுகிறார், “அமைதியாக வாழ்ந்த மக்கள் துன்புறுத்தப்பட்டனர். பெண்கள் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்”, “சாளுக்கிய கல்வெட்டுகள் முதலாம் இராஜேந்திரன் கோயில்களை அழித்தான் என்றும் குற்றம் சாட்டுகின்றன. சமய வேறுபாட்டினால் இது செய்யப்பட்டிருக்கலாம் என்றாலும், பொருளாசையும் ஒரு காரணமாக இருந்தது போலும். சாளுக்கிய நாட்டில் செல்வ செழிப்புடன் இருந்த பல சமணப் பள்ளிகள் (பஸ்திக்குகள்) ஆழ்ந்த சிவ பக்தனான ராஜேந்திரனுக்கு நல்ல வேட்டைக் களமாக அமைந்தனப் போலும்”. இப்படி வந்த செல்வங்கள் கோயில்களுக்கும் கொடுக்கப்பட்டுச் சைவம் வளர்க்கப் பயன் பட்டது. 

சர்ச்சிலை ஆங்கிலேயர்கள் கொண்டாடுகிறார்கள் ஆனால் இந்தியர்களுக்கு அவர் வில்லன். ராஜராஜன் நமக்கு ஹீரொ ஆனால் சாளுக்கியர்களுக்கும், சமணர்களுக்கும், பௌத்தர்களுக்கும், அப்படி அல்ல. 

சோழர் காலக் கல்வி முறை 


சோழர் காலக் கட்டிடக் கலையை வியந்து நோக்கும் பாமரர் முதல் மெத்தப் படித்தவர்களும் எளிதாக முன் வைக்கும் யூகம் அக்காலக் கல்வி முறை பிரமாதமாக இருந்திருக்கும் என்பது. இரண்டாவதாக மிகச் சூடாக விவாதிக்கப்படுவது பிராமணர்கள் ஏனையோருக்குக் கல்வி மறுத்தார்களா என்பதே. 

சோழர் கால நில உடைமை ஆராயப்பட்ட அளவு அக்காலக் கல்வி முறை ஆராயப்படவில்லை. நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாறும், பண்டைய இந்தியாவில் கல்வி என்ற தலைப்பில் ஹார்ட்முட் ஷார்ஃப் எழுதிய புத்தகங்களும் தான் முக்கியச் சான்றுகள்.

நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ புத்தகத்தில் அநேக இடங்களில் அவரின் முடிவுகளும் அவரே சொல்லும் ஆதாரங்களும் முரன்படுவதைக் காணலாம். கல்வெட்டுச் செதுக்கியவர்கள் “கலையழகுடன் பிழையின்றியும் தங்கள் வேலையைச் செய்திருப்பது இன்னும் நமக்கு வியப்பூட்டுகின்றது” என்கிறார் ஆனால் அடுத்த வரியிலேயே, “கல்வெட்டுக்கள், செப்பேடுகள் பலவற்றில் வார்த்தைகளும் சொற்றொடர்களும் கொச்சையாயும், மருவியும், மாறியும் சிதைந்தும் திரிந்தும் இருக்கின்றன. இதிலிருந்து அந்தத் தொழிலாளர்கள் பெரிய படிப்பாளிகள் அல்லர், எழுத்துக் கூட்டி எழுதப் படிக்க மட்டுமே தெரிந்தவர்கள் என்று கருதலாம்”. 

“உயர்கல்வி, ஜாதி தழுவியே கற்பிக்கட்டு, மடங்களையும், கோயில்களையும் சாற்ந்த பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பயிலப்பட்டது”. இத்தருணத்தில் பறையர்கள் சேரிகளுக்கு ஒதுக்கப்பட்டதையும் தீண்டாச் சேரிகள் இருந்ததையும் நினைவுக் கூற வேண்டும். மேலும் தொழில் முறை ஜாதிகளுக்கு, ஊருக்குள் இருக்கும் அனுமதி இருந்தாலும், இத்தகைய உயர் கல்வியில் அனுமதி இருந்ததா என்பது கல்வெட்டுகளில் தெரியும் எழுத்தின் தரம் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆனால் நீலகண்ட சாஸ்திரி மேற்கண்ட கேள்விகளை எழுப்பவில்லை அவை என் கேள்விகள். 

மீமாம்ஸம், இலக்கணம், கல்ப சூத்திரம், ஞானச் சூத்திரம் ஆகியவையும் சிலருக்கு வேதங்களும் பயிற்றுவிக்கப்பட்டன. கவனிக்கவும் மனு சாஸ்திரமும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. மனு சாஸ்திரம் யாருக்கு எதைப் பயிற்றுவிக்க வேண்டுமென்று தெளிவாகவே சொல்கிறது. வேதம் சொல்லிக் கொடுப்பவர்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் ஆசாரங்கள் படி நெல்லோ தங்கமோ வழங்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் என்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டாலும் கிடைத்த ஆதாரங்கள் மிகச் சொற்பமான மாணவர் கணக்கையே சொல்கிறது. 

பொ.யு 1025 சேர்ந்த கல்வெட்டு ஒன்று எண்ணாயிரம் கிராமத்தில் வேத கல்லூரி ஒன்று இருந்ததையும் அங்கு 300 மாணவர்களும், 15 ஆசிரியர்களும் இருந்ததையும், கல்வியும் தங்குமிடமும் இலவசமாக அளிக்கப்படதையும் அதற்காக 300 ஏக்கர் நிலம் சாசுவதமாக்கப்பட்டதையும் சொல்கிறது. கவனிக்கவும் இது வேத கல்விக்கு. 300-ஏ மாணவர்கள் ஆனால் நிலமோ 300 ஏக்கர். வேதம் சார்ந்த படிப்பே பிரதானமாக இருந்தது. கிரேக்க மரபை போலல்லாமல் கணிதம், geometry, பௌதிகம் பயிற்றுவிக்கப்படவில்லை என்கிறார் ஷார்ஃப். நீலகண்ட சாஸ்திரி சொல்லும் கல்வெட்டுகளின் ஆதாரத்தை வைத்துப் பயிற்றுவிக்கப்பட்ட பாடங்களின் பட்டியலைப் பார்த்தால் அது உண்மை என்றே தெரிகிறது. 

கல்வெட்டுகள் பெரும்பாலும் சமஸ்கிருத கல்விப் பற்றியே பேசுகின்றன தமிழ்க் கல்வி பற்றிக் குறிப்புகள் இல்லை என்றும் தமிழ்க் கல்வியும் சிறந்திருக்கலாம் என்று ஒரு யூகத்தை மட்டுமே சாஸ்திரி சொல்கிறார். பற்பல இடங்களில் சாஸ்திரி கல்வெட்டுகள் பிராமணர்கள் அல்லது மேட்டுக் குடிகள் பற்றி மட்டுமே பேசுகின்றன என்றும் கோயில் சார்ந்த நிகழ்வுகளே ஆவணப் படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் சொல்கிறார். சாதாரணர்கள், கீழ் ஜாதியினர், அன்றாட வாழ்வு குறித்து அதிகத் தகவல்கள் இல்லை. நமக்குத் தான் கிரேக்க-ரோமானிய வரலாற்று மரபு இல்லையே. 

யூதப் பேரழிவு மறுப்பாளர்கள் முன் வைக்கும் பிரதானமான கேள்வி ஹிட்லர் கையொப்பமிட்ட எந்த ஆணையும் ஏன் இன்று வரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது தான். அவர்கள் தரப்பு வாதம், ஆகவே ஹிட்லருக்கு தெரியாமலோ அல்லது அவரை மீறியோ தான் அப்பேரழிவு நடந்தது என்பது. மனு சாஸ்திரம் தெளிவாகவே யாருக்கு வேத கல்வி கூடாதென்கிறது, மனு சாஸ்திரம் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, வேதங்களே முக்கியமான பாடங்கள், மேலும் கல்வி நிலையங்கள் கோயில்களோடு ஒட்டியவை. இதற்கு மேல் எழுதிய ஆணை ஒன்று வேண்டுமா என்ன? 

கல்வி சாதாரணமாக இருந்ததென்றால் மாபெரும் கட்டிடங்கள் எப்படிச் சாத்தியமாயின? இந்த இடத்தில் கொஞ்சம் உலக வரலாற்றைக் காண்போம். அது உலக வரலாற்றில் சோழப் பேரரசின் இடத்தையும் ராஜராஜனின் இடத்தையும் மதிப்பிட உதவும். 

10-13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய வரலாறு 


ராஜராஜ சோழன் தன்னைச் சிவபாத சேகரன் என்று அறிவித்துக் கொண்ட அதே காலத்தில் ஐரோப்பாவில் ஆள்பவர்கள் இயேசுபாத சேகரன்களாக மாறியிருந்தார்கள். அதாவது மதம் என்பதும் இறை நம்பிக்கையும் ஆள்பவர்களுக்குச் சமூகத்தை இணைக்கவும் பாகுபாடுச் செய்யவும் முக்கியமான ஆயுதம். 

உலகப் பண்பாட்டின் வரலாறை 11 பெரும் தொகுதிகளில் எழுதிய வில் துரந்த் 3-13 ஆம் நூற்றாண்டை குறிக்க ‘இறை நம்பிக்கையின் காலம்’ (The Age of Faith) என்று தலைப்பிட்டார். 

“1000-ஆம் ஆண்டின் முதல் அடுத்த மூன்று நூற்றாண்டுக்கு ஏன் கிழக்கு ஐரோப்பா இத்தனை சர்ச்சுகளை எழுப்பியது? இன்றிருக்கும் மக்கள் தொகையை விட ஐந்து மடங்கு குறைவான மக்கள் தொகையேயிருந்த காலத்தில் பிரம்மாண்ட சர்ச்சுகள் ஏன் நிர்மானிக்கப்பட்டன? இன்று அவற்றில், பண்டிகை நாட்களில் கூட, சர்ச் பாதிக் காலையாகத் தான் இருக்கிறது.” 12-14 ஆம் நூற்றாண்டில் எழுப்பட்ட பிரம்மாண்ட தேவாலயங்கள் சோழர் காலக் கட்டிடக் கலைக்குச் சவால் விடுவன, பிரம்மாண்டத்திலும் அழகியலிலும். ‘சவால் விடுவன’ என்று நான் சொல்வது இத்தகையம் பிரம்மாண்டங்களும் வேலைப்பாடுகளும் ஏதோ நமக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பதை மறுக்கவே. 

கல்வி கற்பிப்பதை சர்ச்சுகள் தங்கள் கடமைகளில் ஒன்றாகக் கொண்டன. சர்ச் சட்டங்களும் அதைக் கோரியது. ஏழை மாணவர்களும் பயிற்றுவிக்கப்பட்டனர். பொருளியல் மாற்றங்கள் கல்விக் கற்றவர்களின் தேவையை அதிகமாக்க மதச் சார்பற்றக் கல்வி பெருகத் தொடங்கியது. ஐரோப்பா முழுவதும் பல்கலைக் கழகங்கள் தோன்றின. 

பாரீஸ், பொலோன்யா, ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் ஆகிய நகரங்களில் 10-12 ஆனம் நூற்றாண்டுகளில் தோன்றிய பல்கலைக் கலழகங்களோடு ஒப்பிட்டால் சோழர் காலக் கல்வி வெறும் கிராமியப் பள்ளிக் கூடக் கல்வி தான். 

இந்தியக் கல்வி பின் தங்கியதன் காரணங்களைக் கேட்டால் நாலந்தாவை பக்தியார் கில்ஜி சூறையாடிவிட்டான் என்று மூக்குச் சிந்தும் பிரகஸ்பதிகள் மூளைச் சோம்பேறிகள் (Intellectually lazy) மறப்பது தென் இந்தியா அது போன்ற செயல்களில் இருந்து பெரும் பாலும் தப்பியது. மேலும் ஐரோப்பா புனிதப் போர்களால் ரத்தம் பெருக்கெடுத்து ஓடிய அக்காலத்தில் தான் பல்கலைக் கழகங்களும் தோன்றின. இரு வேறு பண்பாடுகளின் விளைவே இது. இன்றும் ஆக்ஸ்போர்டு கேம்ப்ரிட்ஜோடு ஒப்புச் சொல்லக் கூடிய எந்தப் பல்கலைக்கழகமும் இந்தியாவில் இல்லை. இந்தியத் தத்துவம் பற்றிய ஆகச் சிறந்த நூல்கள் எந்த வேதப் பாடசாலையிலிருந்தும் வெளிவரவில்லை மாறாக மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து தான் வருகின்றன. கல்வியை வைதிகத்தோடு மனப்பாடக் கல்வியாகப் பாவித்த சோழர் காலப் பண்பாட்டின் விளைவே இது. சோழர் கால வேதக் கல்வி மனப்பாடக் கல்வி தான் என்கிறார் நீலகண்ட சாஸ்திரி. 

இருபதாம் நூற்றாண்டில் தனி மனித உரிமையைப் பாதுகாக்கும் மிக முக்கியச் சட்டம் ‘ஹேபியஸ் கார்பஸ்’. அதன் விதை 12-ஆம் நூற்றாண்டில் கையெழுத்தான ‘அஸ்ஸைஸ் ஆஃப் கிளாரெண்டான்’ (Assize of Clarendon). அடுத்து வந்த மாக்ன கார்டா (Magna Carta) இன்றைய நவீனச் சட்டங்களின் பிதாமகன். ஐரோப்பிய வரலாறு இரத்தம் தோய்ந்தது. ஆனால் ‘குலசேகரன்’ என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்ட ராஜராஜனின் வம்சம் கொடுக்க முடியாததை ஐரோப்பா கொடுத்தது. குலசேகரனின் ஆட்சி அருளியதோ இருபதாம் நூற்றாண்டு வரை நீடித்த சாதிய நில உடைமைச் சமூகம். 


சோழர் கால ஆட்சியின் நிழல் படிந்த 19-20 ஆம் நூற்றாண்டுகள் 


17 நிமிட உரையில் மூன்றே நிமிடங்கள் பேசப்பட்ட ராஜராஜன் குறித்த பகுதி கிளப்பிய சூறாவளியைப் பார்த்து தலித் தரப்பில் எழுந்த முக்கியமான ஆதங்கம் ரஞ்சித் பேசியதில் ஒன்றிரண்டு வரிகளைப் பிடித்துக் கொண்டு அவை வரலாற்று உண்மையா என்று நரம்பு புடைக்கக் கேள்விக் கேட்ட பலரும் தலித்துகளுக்கு மறுக்கப்பட்ட நில உடைமை குறித்துப் பேச கூடத் தலைப்படவில்லை என்பது தான். 

ரூபா விஸ்வநாத் எழுதிய “பறையர்கள் ஒரு பிரச்சனையாக” (The Pariah Problem: Caste, Religion, and the Social in Modern India) பறையர்களின் நில உடைமை தொடர்பான மிக முக்கியமான புத்தகம்.

பறையர்களை அடிமைகளாக வைத்திருந்ததை ஐரொப்பாவில் எழுந்த அடிமை முறை ஒழிப்பினால் பாதிக்கப்படாமல் இருக்க ஆங்கிலேய கம்பெனி அரசும் பின்னர் வந்த காலனி அரசும் அவர்களை இடக்கரடக்கலாக ‘நிலத்தோடு ஒன்றானவர்கள்’ (‘attached to the soil’, ‘adscripti glebae’) என்று குறித்தன. 

மிராசுதாரர், அல்லது காணியாட்சிக்காரர் (இது சோழ, பாண்டிய காலத்துச் சொற்றொடர்), என்பவருக்கென்று சில உரிமைகள் தெளிவாகச் சொல்லப்பட்டன அதில் பறையர் சேரிகள் மீதும் பறையர்கள் மீதும் அவர்களுக்கு உரிமையுண்டு என்றது. பறையர்களை ‘அடிமையாள்’, ‘பண்ணையாள்’ என்றும் தெளிவான அடிமை முறையில் அழுத்தி நிலமற்றவர்களாக வைத்திருப்பதே அந்தப் பொருளாதார அமைப்பின் அடித்தளம். ‘தமிழன்’ என்ற சொல்லே பறையர்கள் அல்லாத தமிழர்களை மட்டுமே குறித்தது என்கிறார் ரூபா. மொத்தத்தில் பறையர்கள், பஞ்சமர்கள், இந்துக்கள் என்ற வட்டத்தில் மட்டுமல்ல தமிழர்கள் என்ற வகைமையில் கூட விலக்கி வைக்கப்பட்டவர்கள். அடிப்படையில் பறையர்கள் மனிதர்களாகவே கருதப்படவில்லை. 

நில உடைமை பறையர்களுக்குத் திட்டவட்டமாக மறுக்கப்பட்டது என்கிறார் செங்கல்பட்டில் நில உடைமை பற்றி ஆராய்ச்சி செய்த டிரெமென்ஹீர். காசு கொடுத்து விலைக்கு வாங்க பறையன் ஒருவன் தயாராக இருந்தாலும் நிலம் கைக்குக் கிடைப்பதிலோ வாங்குவதிலோ அநேகத் தடைகள் உண்டு என்கிறது அவரது ஆய்வுக் குறிப்பு. இது 20-ஆம் நூற்றாண்டுக்கும் பொருந்தும். திருச்சி கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருந்த முனைவர் பட்டம் பெற்ற தலித் ஒருவர் சந்தை விலைக் கொடுத்து நிலம் வாங்க முன் வந்த போது அவருடைய ஜாதியின் பொருட்டு அவருக்கு நிலத்தை விற்க மறுத்தார் தஞ்சையைச் சேர்ந்த உயர் ஜாதி நிலச்சுவாந்தார் ஒருவர். அவர் படித்தது வெறும் பி.ஏ. தான். 

1921-இல் தஞ்சை மாவட்டத்துக் கிராமம் ஒன்றில் வீடு பட்டாக்கள் வாங்க தலித்துகள் பணம் திரட்டிய போது இஸ்லாமிய மிராசுதார்கள் பறையர்சேரியில் புகுந்து ஆயுதங்களொடு பெரும் தாக்குதல் நடத்தினார்கள். அது போதாதென்று பஞ்சமர்கள் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டன என்கிறது அக்காலக் குறிப்பொன்று. 

பிராமணர்கள் கல்வியை நேசித்தார்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள் ஆகவே கல்வி கற்பதில் முன்னனியில் நின்றார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது. பிராமணரல்லாதோரிடையே கூடப் பிராமணர்கள் கல்விமான்கள் என்றும் கல்வி அவர்களுக்குப் பிறப்பிலேயே எளிதாகக் கைக்கூடும் என்றும் நினைக்கிறார்கள். இது மிகவும் மேலோட்டமான பார்வை. பிராமண-ஷத்திரிய கூட்டணியின் அடித்தளம் பிராமணர்கள் தங்களைச் சாஸ்திரத்தால் சாஸ்திரம் படிக்கவும் ஷத்திரயனை மகுடாபிஷேகம் செய்விக்கும் இடத்தில் இருக்கவும் கடமைப் பட்டவர்கள் என்று ஓர் அமைப்பை உருவாக்கி பலனைடைந்தார்கள். கல்வியைக் கல்விக்காகப் பிராமணர்கள் நேசிக்கவில்லை. அதிகார பீடத்துக்குத் தங்களுக்கான நுழைவாயிலாகத் தான் கல்வியைப் பிராமணர்கள் நேசித்தனர். 

கல்வியை நேசித்தவர்கள் தலித்துகள் தான். கல்வி மறுக்கப்பட்டதால் பின் தங்கிவிட்டோம் என்று ஆதங்கத்தோடு கிறிஸ்தவப் பாதிரிமார்களிடம் கல்வியை முக்கியக் கோரிக்கையாக்கினார்கள், மீண்டும் மீண்டும், என்கிறார் ரூபா விஸ்வநாத். 

ராஜராஜன் பேரரசனா? ராஜராஜன் ஆட்சி பொற்காலமா?


 

இரண்டு கேள்விகளுக்கும் சுருக்கமான பதில், இல்லை என்பதே. இவ்வகைக் கேள்விகள் அர்த்தமற்றுப் போய்விட்ட இருபத்தோராம் நூற்றாண்டில் இந்த விவாதம் தேவையாயிருப்பதே ஓர் அவலம். 
இன்றைய தேசங்களின் ஜனநாயகங்களே கூடப் பொற்காலம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. ஜவஹர்லால் நேருவே கூடத் தன் ஆட்சிக்காலம் பொற்கால ஆட்சி என்று சொல்ல மாட்டார். ஜனநாயகமே இந்த லட்சணம் என்றால் மன்னர் ஆட்சிக்காலங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஓர் அறக்கட்டளை இந்தச் சர்ச்சையின் பின்னனியை வைத்து ராஜராஜன் கொடுங்கோலனா இல்லை முற்போக்காளனா என்ற தலைப்பில் நாகசுவாமி உரையாற்றுவார் என்று அறிவித்தது. எங்கே போய் முட்டிக் கொள்வது? ‘முற்போக்கு’ என்பது மிக நவீனச் சொற்றொடர் அது குறிக்கும் சித்தாந்தத்தின் சாயல் கூட ராஜராஜனிடம் இல்லை. 

ராஜராஜன் குறித்துப் பேசும் போதெல்லாம் வியப்போடு குறிப்பிடப் படுவது அவனுடைய கடற்படையும் அதன் மூலம் அவன் ஈட்டிய வெற்றிகளும். காலனி காலத்துக்கு முந்தைய இந்திய வரலாற்றில் போரியல் பற்றி ஆய்வு நடத்திய கௌஷிக் ராய் ராஜராஜன் காலத்திய கடற்படையைச் சீனத்து பேரரசான மிங் அரசோடு ஒப்பிட்டு இரண்டும் மிகப் பெரும் வெற்றிகள் என்று சொல்லத்தக்க வெற்றிகளை ஈட்டியதில்லை என்பதோடு அவை பெரிய கடற்படை பாரம்பர்யங்களாக உருவெடுக்கவில்லை என்று சுட்டிக் காட்டுகிறார். உடனே இலங்கையைக் கைப்பற்றியதையெல்லாம் சொல்லாதீர்கள். உலக வரலாற்றில் அது போன்ற வெற்றிகள் அநேகம். ஒரு தமிழனாகக் கொஞ்சம் பெருமைக் கொள்ளலாம் அவ்வளவே. 

கெங்கிஸ் கான் என்றதும் கொன்று குவித்தவன் என்றே பொதுவான புரிதல். மிகப் பெரும் பேரரசை நிறுவியதோடு செங்கிஸ் கான் செய்தது இன்னொரு ஆச்சர்யம் தன் ராஜ்ஜியத்தில் மதச் சார்பின்மையை ஒரு கோட்பாடாகக் கொண்டது தான். பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட சாம்ராஜ்ய ஒருங்கிணைப்பிற்கு மதச் சார்பின்மை கெங்கிஸ் கானுக்குத் தேவைப்பட்டது. ராஜராஜனுக்குச் சாம்ராஜ்ய ஒருங்கிணைப்பிற்கு மதம் தேவைப்பட்டது. 

ஜூலியஸ் சீஸர், மார்கஸ் அரீலியஸ், ஹேட்ரியன், அக்பர் என்றொரு வரிசையை உருவாக்கினால் நிச்சயமாக ராஜராஜனுக்கு அதில் இடமில்லை. சீஸரும் அரீலியசும் எழுத்தாளர்களும் கூட. 10 நூற்றாண்டுகள் கடந்தும் பெரிய கோயில் நிற்பது ஆச்சர்யமே ஆனால் ஹேட்ரியன், ரோமாபுரி அரசன், முதலாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் கட்டிய சுவர் இன்றும் நிற்கிறது. முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ரோமாபுரி விளையாட்டரங்கம், கொலோஸியம், உலகின் அதிசயங்களுள் ஒன்று. 

அக்பர் அநேக ஆச்சர்யங்கள் நிறைந்தவன். பேரரசை நிறுவியதோடு பெரும் அறிவு வேட்கையும் கொண்டவன் அக்பர். அக்பர் காலத்தில் தான் முதன் முதலில் கிறிஸ்தவ ஜெஸூயிட் பாதிரியார்கள் இந்தியாவுக்கு வந்தனர். அநேக மதப் பிரசாரகர்களோடு அக்பர் விவாதிப்பதை மிக விரும்பினார். அவர் காலத்தில் மகாபாரதம் மொழிப் பெயர்க்கப்பட்டது. ஒரு பெரும் நூலகத்தையும் அக்பர் நிறுவியதோடு தனக்கு எழுத்தறிவில்லாததால் புத்தகங்களைப் படிக்க வைத்து காதால் கேட்டு நினைவில் ஏற்றிக் கொள்வதில் சமர்த்தர். கெங்கிஸ் கானைப் போலவே அக்பர் மதச் சார்பின்மையைப் பின்பற்றியவர். மதச் சார்பின்மையைக் கைவிட்ட அவுரங்கஸீப் முகலாயச் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குக் காரணமானான். புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.

விஞ்ஞானி ஐசக் நியூட்டன் இறந்த போது இங்கிலாந்தின் மிக உயரிய கௌரவத்தோடு வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் புதைக்கப்பட்ட போது அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பிரெஞ்சு தத்துவவியலாளர் வோல்டேர் சில காலம் முன்பு கேட்க நேர்ந்த ஓர் உரையாடலை நினைவு கூர்ந்தார். “வரலாற்றில் பிரம்மிக்கத்தகவன் யார்? சீஸரா, அலெக்ஸாந்தரா, கிராம்வெல்லா?” என்ற விவாதத்தின் போது ஒருவர் “அவர்கள் யாருமல்ல ஐசக் நியூட்டன் தான் ஏனெனில் நம் அறிவை உண்மைகளைச் சொல்வதன் மூலம் ஆள்பவனே அறிவை ஆயுதம் கொண்டு அடிமைச் செய்பவனை விட மேலானவன்” என்றாராம். அதே வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் தான் சார்லஸ் டார்வினும், ஸ்டீபன் ஹாக்கிங்கும் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். கலிலேயோவும் மைக்கலேஞ்சலோவும் ஒரே தேவாலயத்தில் தான் புதைக்கப்பட்டிருக்கின்றனர். ஐசக் நியூட்டனை உருவாக்காத சமூகத்தில் தான் ராஜராஜன் பேரரசனா என்று வெட்டி விவாதம் செய்து கொண்டிருப்பார்கள். 


ரஞ்சித் சந்தித்த வன்மம்


அத்திவரதருக்கு இன்று கூடும் கூட்டம், ஆண்டாள் பற்றிய வைரமுத்து உரைக்கு எழுந்த பெரும் எதிர்ப்பு, ரஞ்சித் எதிர்நோக்கும் வன்மம் நிறைந்த எதிர்ப்பு ஆகியவை சொல்லும் தமிழகம் பயணிக்கும் பாதையை. இன்று தமிழகப் பாஜகவை விட அதிகப் பக்த சிரோன்மணிகள் அநேகமாகத் திமுகவில் தான் இருப்பார்கள்.

17 நிமிட உரையில் 3-4 நிமிடமே நீடித்த குறிப்புகளுக்காக ஒரு காவல் நிலையம் தாமாக முன்வந்து ரஞ்சித் மீது வழக்குப் பதிந்தது. இந்தளவு துரிதமாக அவர்கள் ஆணாவக் கொலைகள், வன்கொடுமை வழக்குகளைக் கூட விசாரிப்பதில்லை. 

தமிழ்நாட்டில் அன்றாடம் வரலாறை வளைப்போரும் சிதைப்போரும் அநேகம் பிறகேன் ரஞ்சித்துக்கு இத்தனை எதிர்ப்பு? கவனிக்கவும் வைரமுத்து மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை. காரணம் வெளிப்படை. ரஞ்சித் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். 

அவர் பேசிய இரண்டு கருத்துகளுக்கு ஆதாரமில்லை ஆனால் உண்மைகள் அவர் சொன்னதை விடக் கசப்பானது. பறையர்களிடமிருந்து நிலம் பிடுங்கப்படவில்லை என்பதில் எந்த ஆறுதலும் இல்லை மாறாகப் பல நூற்றாண்டாக அவர்களுக்கு நிலத்தின் மீது உரிமையில்லை என்பதே ஒரு சமூகம் வெட்கப்பட வேண்டிய உண்மை. அதே மாதிரி தான் மங்கள விலாஸ் விவகாரமும். உண்மையில் அந்தப் பெண்கள் கோயிலில் சாதாரண வேலைகள் செய்வதற்கே பெரும்பாலும் பணியமர்த்தப்பட்டனர். 

ரஞ்சித்தின் உரைக்குப் பின் தீடீரென்று தமிழகமெங்கும் வரலாற்றுண்மைகளு க்குக் காவலாளிகள் முளைத்தனர். எல்லாப் பக்கமும் ‘ஆதாரம் எங்கே?’ என்றும் ‘ஆதாரம் வேணுமில்லா’ என்ற கூக்குரல்கள் கிளம்பின. நீலகண்ட சாஸ்திருக்கு ஒர் இரவிலேயே ரசிகர் மன்றங்கள் தோன்றின. நீலகண்ட சாஸ்திரி மிக அற்புதமான அறிஞர் ஆனால் அவர் வரலாற்றெழுத்து ஒரு துறையாக இந்தியாவின் கல்வி நிலையங்களில் காலூன்றிய ஆரம்பக்கட்டத்தில் வாழ்ந்து எழுதியவர். அவருக்குப் பின் கிடைத்த ஆதாரங்களும் புதிய ஆய்வுகளும் மேலும் கேள்விகளை அளிப்பதோடு முந்தய முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. 

ரூபா விஸ்வநாத்தின் பறையர்கள் பற்றிய நூல் தரும் பார்வைகள் ஒரு வகை என்றால் அர்ஜுன் அப்பாதுரை சென்னை பார்த்தசாரதி கோயிலை வைத்து எழுதிய நூல் இன்னொரு வகைத் திறப்பு. காலனி ஆட்சிக்காலத்தில் தான் இந்தியச் சமூகத்தின் பல செயல்பாடுகள் சட்டத்தின் வரம்புக்குள் வந்து நீதிமன்ற வழக்குகளாகி நமக்கு மிக விரிவான சித்திரத்தை அளிப்பதைக் காணலாம். 

பார்த்தசாரதி கோயிலின் கட்டுப்பாட்டுக்காகப் பிராமணத் தென்கலையினர் எவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டனர் என்பதையும் அக்கோயிலை வைத்து எத்தனை சச்சரவுகள் தோன்றின என்பதையும் 1878 முதல் 1925 வரை நீதிமன்றம் விசாரித்த 17 வழக்குகள் நமக்குச் சொல்லும். 

1895-இல் அப்பாசாமி பிள்ளை பார்த்தசாரதி ஐயங்கார் (கோயில் அப்படித்தான் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டது) மேல் தொடுத்த வழக்கில் பிராமணத் தென்கலையினர் பிராமணரல்லாத தென்கலையினர் கோயில் அதிகாரகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுக்குவதற்காகக் கல்வியறிவு மற்றும் கட்டணத் தொகைப் போன்ற ‘சூழ்ச்சிகளை’ சட்டமாக்கியதாகக் கூறப்பட்டது. பிராமணரல்லாதாரிடையே படித்தோரும், கட்டணம் செலுத்துவோரும் அதிகமாக இருக்க மாட்டார்கள் என்ற அளவில்லாத, அர்த்தமுள்ள, தன்னம்பிக்கை பிராமணர்களுக்கு. பின்னாளில் வேறொரு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு அக்கட்டுப்பாடுகளை நிலைநிறுத்தி பிராமணரல்லாதார் அக்கோயிலின் அதிகாரங்களில் பங்கு கொள்ள முடியாத நிலையை உருவாக்கியது. இந்த வன்மங்களும் தந்திரங்களும் திடீரென்று முளைத்தனவா இல்லை பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் இருட்டுப் பக்கங்களில் பார்வைக்கு வராமல் இருந்தனவா?
காலனி ஆட்சிக் காலத்தில் தலித்துகளின் உரிமைகளுக்கெதிராகத் தொடுக்கப்பட்ட பல வழக்குகளில் பிராமணரல்லாதோருமுண்டு. ராஜராஜன் விஷயத்தில் கோயில் முக்கியமான பேசு பொருள் ஆகவே இந்த உதாரணத்தை அளித்தேன். 

சோழர் காலத்தில் கோலோச்சிய வெள்ளாளச் சமூகம் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய போது (அந்தச் சமூகத்தின் உட்பிரிவுகளைச் சொல்கிறேன்) மதம் மாறிய தலித்துகளைத் தலித்துகளாகவே நடத்தினர். தலித்துகள் மதம் மாறினாலும் தலித்துகளே அவர்களுக்கு எந்தப் புதிய உரிமையும் கிடையாது என்று நீதிமன்றம் வரை சென்ற வழக்குகள் இருக்கின்றன. அதுவும் மண் பானை உபயோகிக்கலாமா, குடை வைத்துக் கொள்ளலாமா என்பன போன்ற வழக்குகள். இந்த வழக்குகளின் விசித்திரம் என்ன என்றால் வழக்கைத் தொடுத்த மதம் மாறிய தலித் அல்லாத கிறிஸ்தவர்கள் இந்து சாஸ்திரங்களைக் காரணம் காட்டி தலித்துகளுக்கு உரிமையில்லை என்றார்கள். காலனி ஆட்சிக் காலத்து வழக்குகளைத் தொகுத்து ஆராய்ந்தால் அற்புதமான வரலாறு எழுத முடியும். 

மேற்கத்திய நாடுகளில் இன்றும் பல்கலைக்கழகங்களுக்கும் அவை அமைந்திருக்கும் ஊருக்குமிடையே உரசல்கள் நிகழ்வதுண்டு. ‘Town vs Gown’ என்றே ஒரு சொலவடையுண்டு. இன்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகமும் பிரின்ஸ்டன் நகரும் குடுமிப் பிடிச் சண்டியிடும். 13-ஆம் நூற்றாண்டு முதலே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தும் நகரத்துக்கும் பிணக்கு தான். விரிவான வரலாறுகள் இருக்கின்றன. நமக்குத் தான் 300 ஏக்கர் நிலம் ஒரு கல்லூரிக்கு அளிக்கப்பட்டது என்பதைத் தவிர வேறெதுவும் தெரியாது. காலனி ஆட்சிக் காலம் தான் இந்திய வரலாற்றியலுக்குப் பொற்காலம். 1901-இல் தஞ்சையில் மூன்றில் ஒரு பங்கு மக்கட்தொகை கோயிலுக்குள் நுழைய அனுமதியில்லை என்கிறது ஒரு கணக்காய்வு. அப்படியொரு கணக்கெடுப்பை இன்று கூட நம் அரசுகள் செய்வதில்லையே. 

இவ்வளவு இடைவெளிகள் இருக்கும் வரலாற்றில் ரஞ்சித் மீது பாய்ந்த எதிர்ப்புக் கணைகள் பலவும் அப்பட்டமான சாதியமே. நான் தஞ்சையில் 20 வருடம் வாழ்ந்தேன், கீழ் வெண்மணி பற்றிக் கேள்விப்பட்டதுண்டு ஆனால் சமீப காலத்தில் இணையம் கொடுத்த சுதந்திரத்தால் சாத்தியமான ஆவணப் படம் (‘ராமையாவின் குடிசை’) பார்க்கும் வரை அந்நிகழ்வின் குரூரம் தெரியாது. ரூபா விஸ்வநாத்தின் புத்தகம் 2014-இல் தான் வெளிவந்தது. தலித் வரலாறு வெளிப்படையாகப் பேசப்படுவது சமீபத்தில் தான் என்றால் மிகையில்லை. இணையம் அளிக்கும் சுதந்திரமும் தலித் எழுச்சியும் அதற்கு முக்கியக் காரணங்கள். 

தங்கள் தரப்பு வரலாற்றைப் பேசுவதற்கும் கவனம் ஈர்க்கவும் தலித்துகள் பேசினால் மட்டும் போதாது உரத்துக் கூவவும் தேவையாயிருக்கிறது. இன்று தமிழகத் தலித்துகளுக்கு ரஞ்சித் ஒரு வரப்பிரசாதம். அவரால் சாத்தியமான ‘நீலம் பண்பாட்டு மையம்’ தமிழகத்தில் தலித் வரலாற்றையும் வரலாற்றூ நாயகர்களையும் அறிந்து கொள்ள மிக முக்கியமான முன்னெடுப்பு. அதில் காந்தி விடுப்பட்டது பற்றி எனக்கு இன்றும் ஒப்புதலில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இப்படி ஒரு முக்கியமான நிகழ்வை தமிழகத்தின் மிக முக்கியப் பத்திரிக்கை ‘தி இந்து’ எவ்விதமான வெளிச்சத்தையும் கொடுக்கவில்லை. இதே பத்திரிக்கை ஶ்ரீநிதி சிதம்பரம் நடத்தும் நாட்டிய நிகழ்ச்சி அந்நிகழ்ச்சி நடைபெறும் முன்பே ஒரு விளம்பரம் போல் நிகழ்ச்சி நிரலை ஒரு செய்தி குறிப்போடு வெளியிட்டது. நாகசாமியை கூப்பிட்டு உரையாற்றச் சொல்பவர்கள் தலித் ஆய்வாளர்களைக் கூப்பிடுவதில்லை. 

ராஜராஜன் சர்ச்சை ஆச்சர்யப்படத்தக்க ஒன்று ஏனெனில் சமீப காலம் வரை பெரிய கோயிலுக்குப் போனால் கெட்டது நேரும் என்பது கிட்டத்தட்ட ஐதீகமாகவே இருந்தது. 1984-இல் எம்ஜியாரும், இந்திரா காந்தியும் பெரிய கோயிலை தரிசித்த பின் ஒருவர் நோயுற்றார் இன்னொருவர் கொலையுண்டார். பின்னர் ஜெயலலிதா தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடத்திய போது ராஜராஜனுக்கு மணி மண்டபம் எழுப்பினார். அப்புறம் சதயத் திருவிழாக்கள் முக்கியத்துவம் பெற்றன. சமீபத்திய இந்து எழுச்சியின் காரணமாகச் சரபோஜி காலம் முதல் 1960-கள் வரை நடந்த சித்திரைத் திருவிழா மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. திராவிட இயக்கங்கள் ராஜராஜனை கொண்டாடின, இந்துத்துவர்கள் பெரிய கோயிலையும் சேர்த்துக் கொண்டாடினர். ஒரு பெரும் தரப்பின் நாயகனாக உருவாகிவிட்டிருந்த அரசனை ரஞ்சித் தான் கொண்டாடத் தேவையில்லை என்று சிரித்துக் கொண்டே ஒதுக்கியது எதிர்ப்புக் கனலை மூட்டியது அவர் தலித்தாக இருந்தது அத்தனலில் நெய்யூற்றியது. 

இருபத்தியோராம் நூற்றாண்டில் கூடச் சோழர் காலத்தின் சாதிய அமைப்புகள், நில உரிமைகள் குறித்த சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால் மனித உரிமைகள், ஜனநாயக அமைப்புகள், அரசியலமைப்புகள், அரசியல் கட்டுரைகள் என்று எதை எழுதினாலும் மேற்கத்திய பண்பாட்டில் முளைத்த சொற்களுக்குத் தமிழாக்கம் செய்து தான் எழுத முடியும். இப்போது சொல்லுங்கள் வரலாற்றில் ராஜராஜனுக்கு என்ன இடம்? 

ரஞ்சித் பேசியதில் முக்கியமானது நில உடைமை. தலித்துகள் இன்றும் ஜேம்ஸ் டிரெமென்ஹீரை கொண்டாடுவதற்குக் காரணம் அவர் தலித்துகளுக்கு அளித்த நில உரிமை. பஞ்சமி நிலங்கள் என்றழைக்கப்படும் அந்நிலங்களில் பல இன்று மற்றவர்களால் சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்கிறது பிரண்ட்லைனின் முக்கியக் கட்டுரை ஒன்று (சுட்டியை தரவுகளின் பட்டியலில் கொடுத்துள்ளேன்). 

சோழர் காலத்தில் விதைத்த சாதியத்தின் சாட்டைத் தழும்புகளை இன்றும் சுமக்கும் சமூகத்தில் இருந்து ஒருவர் அக்காலப் பெருமையைப் புறங்கையால் தள்ளி நிராகரிப்பதோடு அப்பெருமைகளைக் கேள்விக்குள்ளாக்குவதில் என்ன தவறு? சஷி தரூர் என்றாலே எட்டிக்காய் கசப்பு என்கிற இந்துத்துவர்கள் கூட அவர் இங்கிலாந்து பல்கலைக்கழக விவாதமொன்றில், நுனி நாக்கு ஆங்கிலத்தில், காலனி ஆட்சிக் காலத்தை விமர்சித்த போது அந்த விமர்சணத்தில் வரலாற்றுப் பிழைகள் இருந்த போதும் புளங்காகிதம் அடைந்தவர் அநேகம். இன்று நம் பாரம்பரயத்தை நம்மில் ஒருவர் கேள்விக்குட்படுத்தும் போது வந்து விழும் விமர்சனங்கள் சொல்லும் சஷி தரூர் செய்வதை ஏன் ரஞ்சித் செய்ய முடியவில்லை என்று. 

10-14 ஆம் நூற்றாண்டில் உலக வரலாறை தொகுத்துப் பார்த்தால் நம் வரலாறு பற்றிக் கேள்விகளே மிஞ்சும். அந்நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் விழுந்த விதைகள் பின்னர் புத்துயிர்ப்பு (Renaissance) மற்றும்  சீரமைப்பு (Reformation) விளைவாக அறிவியல், கலை, இலக்கியம் என்று பெரும் பாய்ச்சலை கண்டது. 1660-இல் ராயல் சொஸைட்டி நிறுவப் பட்டது. ஆனால் இங்கோ குலசேகரன் புண்ணியத்தில் சாதியமும் சமயமும் நில உடைமையை அடித்தளமாகக் கொண்ட ஒரு சமூகத்தை ஈன்றது. 

ராஜராஜன் தமிழன், கோயில்களைக் கட்டினான், மடங்களுக்கு நிலங்களை அள்ளி வழங்கினான், போரில் வெற்றிகளைக் குவித்தான், தன் அரசாட்சிக்கு உதவியாக மதத்தை ஒரு கருவியாகக் கொண்டான் என்பதில் எல்லாம் ஒருவர் பெருமைக் கொள்ளலாம் என்றால் அதே காரணத்துக்காக இன்னொருவர் ராஜராஜனை விமர்சிக்கவும் நிராகரிக்கவும் உரிமை இருக்கிறது. இரண்டாமவருக்கு வரலாறும் துணை நிற்கும். 

முடிவாக ஒன்று சொல்ல வேண்டும். கடந்த ஒரு மாதமாக சோழர் வரலாறு மற்றும் உலக வரலாற்றினை படிக்க நேர்ந்ததில் எவ்வளவோ செறிவான விவாதங்கள் முன்னெடுக்கப்படாமல் வெறும் குலப் பெருமையும் சாதியக் காழ்ப்புமாக உரையாடல்கள் நிகழ்ந்தது தமிழ்ச் சமூகம் அறிவுத் தளத்தில் அடைந்திருக்கும் வீழ்ச்சையைத் தான் காட்டுகிறது.  மதச் சார்பற்ற அரசின் காலம் வெறும் 400 ஆண்டு காலம் தான் என்றும் அதன் சாதக பாதகங்களை ஒரு லிபரல் என்று அறியப்படுகிற மார்க் லில்லா மென்மேலும் விவாதத்தைத் தூண்டும் விதமாக எழுதுகிறார்.
மதமும் கோயில்களும் அரசாட்சியும் என்பது பற்றி ஒரு நல்ல வரலாற்றாசிரியன், மார்க்ஸியராகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை, சுவயாகவும் மேலும் விவாதங்களைத் தூண்டும் விதமாகவும் பேசவோ எழுதவோ செய்திருக்கலாம். நம் துயர் நமக்கு வாய்த்ததெல்லாம் சுபவீக்களும், நாகசுவாமிகளும் தான்.

நூல் பட்டியலும் சுட்டிகளும்
  1. The Cholas - K.A. Nilakanta Sastri (2nd edition 1955, 1984 Reprint)
  2. சோழர்கள் - தொகுதி 2. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (NCBH வெளியீடு)
  3. South Indian society in transition: Ancient to Medieval - Noboru Karashima
  4. South Indian history and society: Studies from Inscriptions A.D. 850 - 1800 - Noboru Karashima
  5. Rural Society in Southeast India - Kathleen Gough
  6. The Early Medieval in south India - Kesavan Veluthat
  7. South India Under the Cholas - Y. Subbarayalu
  8. Religion, Tradition, and Ideology: Pre-Colonial South India - R. Champakalakshmi
  9. Open Boundaries: Jain Communities and Cultures in Indian Historu - Edited by John E. Cort
  10. The Pariah Problem: Caste, Religion, and the Social in Modern India - Rupa Viswanath
  11. Worship and Conflict under Colonial Rule: A South Indian Case - Arjun Appadurai
  12. Genghis Khan and the Quest for God: How the World's Greatest Conqueror Gave Us Religious Freedom - Jack Weatherford
  13. Town and Gown: The 700 Years War in Cambridge - Rowland Parker
  14. Story of Civilization: The Age of Faith - Will Durant
  15. Ganges: The Many Pasts of an Indian River - Sudipta Sen
  16. Warfare in Pre-British India:1500 BCE to 1740 CE - Kaushik Roy
  17. How Dalit Lands Were Stolen - Frontline Exclusive by Ilangovan Rajasekaran
  18.  Stalin Rajangam on Ranjith Speech
  19. Pa. Ranjith Speech
  20. Casteist Slander About Ranjith -- Viewer Discretion Required for Language
  21. Tamil Heritage Trust Subhashini 

Wednesday, October 4, 2017

பா.ரஞ்சித் பேசியது சரியா? நான் கண்ட பிராமணர்கள். கலையுலகில் ஜெயகாந்தன். அதிகாரப் படி நிலைகளும் எதேச்சாதிகாரமும்.

தமிழ் நாட்டில் பேச்சிலும் எழுத்திலும் அறிவு ஜீவியாய் மிளிர்வதற்கு இரண்டு விஷயங்களைச் செய்தால் போதும். ‘பெரியார்’ என்று அவ்வப்போது மந்திர உச்சாடனம் செய்ய வேண்டும். பெரியாரை படிக்காமலோ, படித்ததும் புரிந்துக் கொள்ளமலோ, புரிந்தாலும் புரியாதது போல் நடித்தாலோ மிகச் சிறப்பு. அதைச் செய்யத் தவறினாலும் தவறக் கூடாதது ‘இன்று சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் பார்ப்பணீயமும் மனு தர்மமும்’ என்று நரம்பு புடைக்கக் கூவுவது. அறிவு ஜீவியாவதோடு கொஞ்சம் வைரலாகவும் வேண்டும் என்றால் அம்பேத்கரியம், தலித்தியம் என்று சில ஈயங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேற் சொன்ன எதிலும் வரலாறோ, உண்மைகளோ, நுட்பங்களோ கொஞ்சமும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் நீங்கள் பேரறிஞர். 

Pa. Ranjith (Image Courtesy Pa-Ranjith-380.jpg)
திருச்சி BHEL (பெல்) நிறுவனத்திற்கு நான் அடிக்கடி வேலைச் சம்பந்தமாகச் சென்றதுண்டு 1995-98-இல். அப்போது நான் பார்த்த ஒரு காட்சி. ஓர் உயர் அதிகாரி (Sr. DGM), பிராமணர், தன் அறையில் இருந்து வெளியே வந்து நடக்கும் போது இரு பக்கத்திலும் இருக்கும் அலுவலர்கள் உட்கார்ந்திருப்பதற்கும் நிற்பதற்குமான இடை நிலையில் ஒரு கோமாளித்தனமான போஸை பாவித்து ‘குட் மார்னிங்’ என்பார்கள். உயரதிகாரியோ ஒரு மனுஷ ஜீவன் தன்னருகே வணக்கம் தெரிவிப்பதைக் கூடக் கண்டு கொள்ளாமல் ஏதோ ஏகாந்தத்தை அனுஷ்டித்தப்படி வான் நோக்கியப் பார்வையோடு கடந்து செல்வார். ‘ஆஹா பார்ப்பணீயம் பாரீர்’ என்று குதூகலிப்பதற்கு முன் மேலும் படியுங்கள். இந்த வணக்கம் போடுவதில் இருவர் பிராமணரல்லாதோர் அதில் ஒருவர் இன்னொருவரின் கீழ் பணி புரிபவர். அந்த இருவரில் மேலதிகாரியானவர் இன்னொருவரை மனிதராகக் கூட மதித்து நான் பார்த்ததில்லை. 

நான் வேலைப் பார்த்த சென்னை கம்பெனியின் மேலாளர் (MD) பிராமணர். வேலையில் சேர்ந்த முதல் நாள் அவர் என்னைக் கடந்து சென்ற போது எழுந்து நின்று “Good Morning Sir” என்றேன். என் தோளில் சிநேகமாய்க் கை வைத்து நான் எப்போதும் அப்படிச் செய்யத் தேவையில்லை என்றார். அங்கு வேலைப் பார்க்கும் கடை நிலை ஊழியரிடம், பிராமணரல்ல, அந்த மேலாளர், கம்பெனி பார்ட்டிகளின் போது, மிகத் தோழமையோடு சகஜமாக உரையாடுவார். அவருடைய தனிப்பட்ட பண்பும் அந்தக் கம்பெனி ஒரு ஆங்கிலேய கம்பெனியின் அங்கம் என்பதாலும் அந்த வழக்கங்கள் கைக்கொள்ளப்பட்டன. பிரிட்டன் என்றில்லை மேலை நாட்டுக் கம்பெனிகளில் மேலாளரும் அவர் கீழ் வேலைச் செய்பவர்களும் சக மனிதர்களாகப் பழகுவதைக் காணலாம். அதற்காக அதிகாரப் படி நிலைகளே இல்லை என்று சொல்லவில்லை ஆனால் கூழைக் கும்பிடு போட்டு ‘எஜமான்’ என்று மறுகுவதும் இல்லை. நான் அமெரிக்கா வந்த பிறகும் அந்த மேலாளருக்குத் தொடர்பிலிருந்தேன். அவரை ‘Sir’என்றும் அவர் மனைவியை ‘madam’ என்றும் ஈமெயிலில் குறிப்பிட்டேன். உடனே பதில் வந்தது ‘நீ இன்றிருக்கும் இடத்தில் இத்தகைய பழக்கங்கள் இல்லை நீ என்னையும் என் மனைவியையும் பெயரிட்டே அழைக்கலாம்’ என்றார். என்னை விட 15-20 வயது மூத்தவர். என்னை விடப் படித்தவர், ஒரு கம்பெனியை நிர்வகித்தவர். 20 ஆண்டுகள் கழித்தும் நாங்கள் நண்பர்களே. 

நான் படித்த கல்லூரி பிராமணர்களால் நடத்தப்பட்ட ஷன்முகா பொறியியல் கல்லூரி (இன்று சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக் கழகம்). காருண்யாவில் முதலில் தெரியாமல் சேர்ந்துவிட்டு வீட்டுச் சாப்பாட்டிற்காகவும் அங்கிருந்த சூழலும் பிடிக்காமல் தஞ்சைக் கல்லூரியில் சேர வந்தேன். தாளாளர் அறைக்குள் நானும் அப்பாவும் நுழைந்தோம். இருவரும் ஒவ்வொரு சேரில் அமர்ந்தோம். தாளாளர், வயதானவர், கொதித்து விட்டார். “குருவுக்கு முன் மாணவன் உட்காரலாமா” என்று சினந்தார். பின்னர்த் தெரியவந்தது அவர் மிகக் கண்டிப்பான, காந்தியவாதியும் எளிமையானவரும் மிக நேர்மையானவரும் என்று. அக்கல்லூரியில் ஓர் ஆங்கிலப் பேச்சுக் கலை கிளப் ஒன்றை ஆங்கிலப் பேராசிரியர் அந்த வருடம் தான் ஆரம்பித்திருந்தார். அதன் முதல் கூட்டத்தில் என் பேச்சு மிகக் கவனம் ஈர்த்தது. அது முதல் அந்தக் கிளப்பின் அடையாளம் ஆனேன். கல்லூரிக்கு மாநில அளவில் பல பரிசுகளை வென்றேன். கடைசி வருடம், கடைசிக் கூட்டத்தில் பேசி விட்டு சபையோரை நோக்கி அது என் கடைசி உரையென்றும் ஒரு நிமிடம் எல்லோரும் ஆசைத் தீரப் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொல்லி விடைப்பெற்று இறங்க எத்தனித்த போது அங்க்கிருந்த தாளாளர் என்னை மேடையிலேயே நிற்கச் சொன்னார். அடுத்ததாகக் கூடியிருந்த சபையோரை, பல பேராசிரியகளும் இருந்தனர், எழுந்து நின்று எனக்குக் கரவொலி எழுப்பச் செய்தார். நான்கு வருடம் முன் தனக்கு முன் ஒரு மாணவன் உட்காரக் கூடாது என்று சொன்னவர் இன்று கல்லூரியின் பேராசிரியர்கள் பலர் இருக்கும் அரங்கில் எனக்கு “standing ovation” கொடுத்தார். அவருக்கு என் குலம் கோத்திரம் தெரியாது ஆனால் நான் பிராமணனில்லை என்பது நிச்சயமாகத் தெரியும். இன்று அந்தக் கல்லூரி இந்துத்துவக் கூடாரமாகியிருப்பது வருத்தம். அந்த மேலாளர் இறந்துப் பல வருடங்கள் ஆகின்றது. 

+2-வில் நான் டியூஷன் படித்த ஆசிரியர்களில் இயற்பியல்-வேதியியல் கற்றுக் கொடுத்தவர்கள் பிராமணத் தம்பதியர், கணிதம் கற்பித்தவர் பிராமணரல்லாதவர் (கள்ளர்?). மூவரிடமும் நிறைய மாணவர்கள் பயின்றனர். அதில் பலர் பிராமணரல்லாதவர்கள். மூவரும் கடின உழைப்பாளிகள் தங்களிடம் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் 95%, 100% வாங்க வேண்டும் என்று நினைத்தவர்கள். என்னையும், அப்பாவையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் கூட. நான் அப்போதும் மிக வெளிப்படையாகப் பேசுபவனே. இயற்பியல் ஆசிரியை முதலில் எனக்குத் தலைக் கணம் உள்ளதென்றார் பின்னர் “அப்படி நினைத்தது தவறு. ஒன்று நீ வெளிப்படையானவன். இரண்டு உன் போல் பாடத்தைக் கவனமாகக் கேட்பவர்கள் குறைவு”. 

பிராமணர்களில் மோசமானவர்கள் இல்லையா? இருக்கிறார்கள். நிச்சயமாக. நான் படித்த மேல்நிலைப் பள்ளியின் தாவரவியல் ஆசிரியர் வெண்ணிற ஆடை மூர்த்தியை விட மிகக் கேவலமாகவும் அருவருப்பாகவும் பேசுவார். இன்னொரு வாத்தியார் பச்சை ரவுடி. மெல்லிய இனவாதத்தை அவ்வப்போது காட்டுபவர்களும் உண்டு. ஆனால் இதெல்லாம் இல்லாத இனங்களை எனக்குக் காட்டுங்கள்!! பிராமணரல்லாதவர்களில் மகத்தான அறிவு ஜீவிகளைப் பார்த்து இருக்கிறேன், பிராமணர்களிடையே சராசரிகளும், மூடர்களையும் பார்த்து இருக்கிறேன். 

டைரக்டர் முன்பு அசிஸ்டண்ட் டைரக்டர் உட்கார்ந்துவிட்டால் துணுக்குறுவது பார்ப்பணீயம், அப்படிச் செய்பவர்கள் பார்ப்பணர்களாக இல்லாத போதும், என்பது பச்சையான இனவாதம். அப்படிப்பட்ட மனோநிலையைச் சித்தரிக்கப் பிரபுத்துவ மனோ நிலை (feudal mindset), எதேச்சாதிகாரம், மேட்டிமைத் தனம், அகங்காரம் என்று எத்தனையோ சொற்கள் இருக்க அதைக் குறிப்பாக ‘பார்ப்பணீயம்’ என்று அழைத்துவிட்டு அது ஒரு இனத்தைக் குறிப்பதல்ல மாறாக ஒரு ஆதிக்க மனோபாவத்தை மரபாகக் கொண்டிருந்தவர்களால் அப்படிப்பட்ட மனோபாவத்தைக் குறிப்பது மட்டுமே என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இன்று வன்னியர்கள் முதல் பட்டியல் இனத்தவர் வரை எல்லோரும் ஏதோ ஒரு ஆண்டப் பரம்பரை கதையைச் சொல்கிறார்கள் அதில் சிலர் தங்கள் ஜாதிப் பெயரோடு ‘ஷத்திரிய’ என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள். எந்த ஷத்திரியன் அடக்க ஒடுக்கமாக இருந்தான்? அவர்கள் அடக்கமாக இல்லாத அதிகார மரபினர் என்பதற்காகவே அப்படிப்பட்ட ‘ஆண்ட பரம்பரை’ கதைகளும் உருவாக்கப் படுகின்றன என்பதை மறுக்க முடியாது. 

ரஞ்சித்துக்குக் கொஞ்சமாவது இலக்கியம் அல்லது சமூகவியலில் உள்ள ஆராய்ச்சிகளின் பரிச்சயமாவது இருந்திருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டார். 

ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘மிருகப்பண்ணை’ கதை அதிகாரம் எப்படிச் சுபாவங்களை மாற்றி அதிகாரத்தை அடந்தவர்கள், முன்பு படி நிலையில் கீழிருந்தவர்கள், எதேச்சாதிகார மனோ நிலைக்கு ஆட்படுகிறார்கள் என்பதை மிகச் சுவாரசியமாகப் படிமங்களின் வாயிலாகச் சொன்னதற்காக இன்றும் வாசிக்கப்படும் புதினம். 

ஸ்டான்பர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சி ஒன்று மிகப் பிரசித்தமானது. சிறையில் கைதிகாளகவும் ஜெயலர்களாகவும் பல்கலைக் கழக மாணவர்கள் நடிக்க வைக்கப்பட்டனர். ஆறே நாளில் கைவிடப்பட்ட ஆராய்ச்சியின் போது ஆரம்பத்தில் நடிக்கிறோம் என்ற நினஒவோடு செயல்பட்டவர்கள் மிக விரைவில் கொடுங்கோல் ஜெயலர்களாகவும், அதிகாரத்துக்குக் கீழ் படிகிற கைதிகளாகவும், ஜெயலர்களால் ஏவப்பட்ட சக கைதியை வதைப்பவர்களாகவும் மாணவர்கள் மாறினர். 

அமெரிக்கக் கறுப்பு இனத்தவரிடையே ஆசியர்களை வெறுக்கும் போக்கு உண்டு. வாஷிங்டன் டி.சி. நகரின் கறுப்பு மேயர் ஆசியர்கள் நடத்தும் கடைகளைக் குறித்து மிகக் கேவலமாகப் பேசினார். பால்டிமோரில் நடந்த கலவரத்தின் போது ஆசியர்களின் கடைகள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. யூத வெறுப்பும் அமெரிக்கக் கறுப்பினத்தவரிடையே உண்டு. உலகத்தின் எல்லா மூலைகளிலும் யாரோ யாரையோ அவர்களின் நிறம், இனம், மொழி, மதம் என்று ஏதோ ஒரு காரணத்துக்காக வெறுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் எல்.டி.டீயினர் முஸ்லிம்களைத் துரத்திய போது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது மனித இயல்பு. தலித்துகளிடையே கூடத் தீண்டாமை உண்டே!!! 

உலக வரலாற்றின் மிகப் பெரிய அழித்தொழிப்பில் இருந்து மீண்டு தங்களுக்கென்று ஒரு நாட்டையும் உருவாக்கிக் கொண்ட இஸ்ரேலின் ராணுவப் பயிற்சி மையத்தில் ஒரு பேராசிரியர் “உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் அரேபியர்களைக் கொலைக்களனுக்கு அனுப்புவீர்களா?” என்று கேட்டதற்கு மானவர்களில் பலர் “ஆமாம்” என்று கைத் தூக்கினார்களாம். ஆசிரியர் அதிர்ந்து விட்டார். (இஸ்ரேலின் இன்றைய பிரச்சினைகள், பாலஸ்தீனம் எல்லாம் மிகச் சிக்கலானவை. இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுவதன் நோக்கம் அதிகாரம் மானுட இயல்பை மாற்றுவதைச் சுட்டிக் காட்டத்தான்). 

அன்றாட வாழ்வில் அதிகாரப் படி நிலைகளில் உயர்ந்தாரோடு சராசரி மனிதர்கள் பாவிக்கும் உறவு முறையை ஒரு சமன்பாடாய் உருவகித்து அமெரிக்கக் கலாசாரத்தில் இரு வேறு நிலைகளில் இருப்பவரிடையே இருக்கும் தூரச் சமன்பாடு (power distance equation) மற்ற கலாசாரங்களை விடக் குறுகலான தூரம் உடையது என்கிறார் மால்கம் கிளாட்வெல். இதை என் 19 வருட அமெரிக்க வாழ்வில் கண் கூடாய்க் கண்டிருக்கிறேன். மிக உயர்ந்த நிலையில் இருக்கும் மேலதிகாரியை ‘ஹெல்லோ’ என்பார் அலுவலக உணவகச் சிப்பந்தி. செனட்டர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் தத்தம் தொகுதி மக்களோடு மிகச் சகஜமாகப் பழகுவார்கள். மக்கள் பிரதிநிதிகள் தொகுதிவாசிகளைச் சந்திக்கும் கூட்டங்களில் கேள்விகள் சரமாரியாக வந்து விழும். கீழிருக்கும் ஒரு காணொளியைப் பாருங்கள் (சுட்டி https://www.youtube.com/watch?v=_TDkgIEn5Ac )



நவீனப் பல்கலைக்கழகங்களின் பிறப்பிடம் ஜெர்மனி ஆனால் இன்று உலகத்தின் பிரசித்திப் பெற்ற பல்கலைக் கழகங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில். இது குறித்த எழுதப்பட்ட புத்தகத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு வந்த ஜெர்மானியர்கள் அங்குப் பேராசிரியராக இருந்த நோபல் பரிசு வாங்கிய மார்கனை (Thomas Hunt Morgan) அவர் மாணவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அழைப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்தார்களாம். ஹார்வர்டை மாணவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற கட்டுரைல் லாரி ஸம்மர்ஸ் (Larry Summers) தன் பல்கலைக் கழகத்தில் நோபல் பரிசுப் பெற்ற ஆசிரியரை மாணவன் கேள்விக் கேட்கும் சுதந்திரம் உண்டு என்றார். தாமஸ் பிக்கெட்டியின் பல மில்லியன் விற்பனையான பொருளாதாரம் குறித்த புத்தகத்தைக் கேள்விக் கேட்டு பிரசித்தியான கட்டுரையை எழுதியவர் முனைவர் படிப்பை முடிக்காதவர். 

தமிழ் சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சினை அடிப்படையான மனிதப் பண்புகளைக் குழித் தோண்டிப் புதைத்த தனி மனித துதியும் அதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்ட ஜனநாயகப் பண்புகளும். இதன் முழு முதல் காரணக் கர்த்தா திராவிட இயக்கம். அலங்காரப் பட்டங்கள், போதாக் குறைக்கு மேடைகளில் கிரீடங்களைச் சூட்டிக் கொள்வது, ‘போர்ப்படை தளபதி’ என்று எதற்கெடுத்தாலும் நகைக்கத் தகுந்த சுயத் தம்பட்டங்கள். 

எழுத்தாளர் சமஸின் “எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா” என்ற கட்டுரை இணையத்தில் இந்தக் கட்டுரைக்காகத் தரவுகளைத் தேடியபோது கிடைத்தது. மிகச் சுவாரசியமானதும், நேர்மையானதுமான கட்டுரை. அக்கட்டுரையில் எனக்கு ஏற்க முடியாத பகுதிகள் உள்ளன ஆனால் அதைத் தாண்டி அவர் முன் வைத்த முக்கியமான கேள்விகள் உண்டு. 

சமஸைப் போல் நானும் தஞ்சையில் வளர்ந்த காலத்தில் கீழ் வெண்மணி பற்றிக் கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் திராவிட இயக்கங்கள் தயாரித்த எந்தப் பாட நூலிலும் அது பற்றிப் படித்ததில்லை. கீழ் வெண்மணி படுகொலைக்குப் பிறகு அங்குப் பெரும் பணியாற்றிய காந்தியவாதியான (பெரியாரிஸ்ட் அல்ல) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனைச் சமஸ் சந்திதிக்கிறார்.

சமஸ் “‘பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களை மட்டுமே உள்ளடக்கியது அல்ல; அது என்னையும் உள்ளடக்கியிருக்கிறது; நானும் எனக்குக் கீழ் ஒரு பெருங்கூட்டத்தை மிதித்து நசுக்கிக்கொண்டிருக்கிறேன்’ என்பதை உணர்ந்த நாள் அது” என்கிறார். 

கிருஷ்ணம்மாள் அவரிடம் சொல்கிறார்: 

“தமிழ்நாட்டோட விவசாயத் தொழிலாளர்கள்ல அஞ்சுல மூணு பேர் தலித்துகள். நிலம் வெச்சிருக்குற தலித்துகளை எடுத்துக்கிட்டா, தொண்ணூறு சதவிகிதம் பேர் ஒரு ஹெக்டேருக்கும் கீழ நெலம் வைச்சிருக்குறவங்க; இவ்வளவு ஏன், தலித்துகள்ல நால்ல ஒருத்தருக்குக் கையெழுத்துப் போட தெரிஞ்சா அதிகம். ஆனா, இன்னமும் ஒரு நாளைக்குச் சராசரியா மூணு தலித் பெண்கள் பலாத்காரத்தை எதிர்கொள்றாங்க, ரெண்டு பேர் தாக்கப்படுறாங்க; எங்க? சமூகநீதியில நாட்டுலேயே முன்னேறுன மாநிலமான தமிழ்நாட்டுல. அப்படின்னா, நம்ம நாடு முழுக்க உள்ள நிலை எப்படி இருக்கும்? சுதந்திரம் அடைஞ்சு 50 வருஷங்களுக்கு அப்புறமும் இதுதான் நிலைமைன்னா, முன்னாடி எப்படி இருந்திருக்கும்? சாதி ஒழிப்பைப் பத்திப் பேசுறவங்க எல்லாரும் இதெல்லாம் எங்கேயோ யாராலேயோ நடத்தப்படுறதாவும், தங்களுக்கு இதுல எந்தச் சம்பந்தமும் இல்லைன்னும் நெனைக்கிறாங்க. ஆனா, ஒவ்வொருத்தருக்கும் இதுல ஏதோ ஒரு வகையில தொடர்பு இருக்குங்கிறதுதான் உண்மை.” 

கிருஷ்ணம்மாளின் பேச்சைக் கேட்ட சமஸ், “ ‘பார்ப்பனியம் என்பது பார்ப்பனர்களை மட்டுமே உள்ளடக்கியது அல்ல; அது என்னையும் உள்ளடக்கியிருக்கிறது; நானும் எனக்குக் கீழ் ஒரு பெருங்கூட்டத்தை மிதித்து நசுக்கிக்கொண்டிருக்கிறேன்’ என்பதை உணர்ந்த நாள் அது” என்கிறார். 

தனக்குள் இருக்கும் ‘பார்ப்பனரை’ அடையாளம் கண்டு கொண்ட சமஸ் கைர்லாஞ்சியில் தலித் குடும்பம் மிகக் கொடூரமாகக் கொலைச் செய்யப்பட்டது தன்னை வாட்டியது என்றும் அதன் பின்னனியில் நண்பர்களோடு “அவரவர் சாதிகளின் அயோக்கியத்தனங்களை மனம் திறந்து பேச முயன்றால் என்ன?” என முயன்றிருக்கிறார். “பார்ப்பனர் அல்லாதவர் என்கிற கூரையின் கீழ் வசதியாக அதுவரை ஒன்றுபட்டிருந்த எல்லோரும் மிக விரைவில், அவரவர் சாதியின் கீழ் பதுங்க இடம் தேடினார்கள். விவாதம் சண்டை ஆனது.” என்கிறார். “அவர்களைப் பொறுத்தவரை பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே சாதி எதிர்ப்பு” 

அக்கட்டுரையில் இருந்து மேலும் சில பகுதிகள் கீழே: 

“இந்து மதத்தின் 10-ல் ஒரு பங்கு மக்கள்தொகையைக்கூடத் தொட முடியாத ஒரு சாதியின் குற்றங்களை மட்டுமே பேசிக்கொண்டு, ஏனைய 9 பங்கு சாதிக்காரர்கள் வசதியாக, நம்முடைய சுயசாதி விமர்சனங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதும், நம்முடைய சாதிகளை அவற்றின் அநீதிகளிலிருந்தும் கொடுஞ்செயல்களிலிரு ந்தும் மறைத்துவிடுவதும் ஒருபோதும் சாதி ஒழிப்புக்கு உதவாது என்று நினைக்கிறேன். மேலும், இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்றும் நினைக்கிறேன்”. 

“இன்றைக்கு மிக அரிதாக, விரல் விட்டு எண்ணிவிடத் தக்க அளவில் பொதுத் தளத்தில் வலுவாக ஒலிக்கும் சுயசாதி விமர்சனக் குரல்கள் பார்ப்பனர்களுடையவை என்பதை  ஒப்புக்கொள்வதில் நமக்குத் தயக்கம் இருக்க முடியாது”. 

“பார்ப்பனர் அல்லாத ஏனைய சாதிகளையோ எதிர்த்துப் பொதுத் தளத்தில் இன்றைக்குப் பேசவோ, எழுதவோ முடியுமா? எங்கேனும் அதற்கான இடம் இருக்கிறதா? அப்படிப் பேசினாலோ, எழுதினாலோ குறைந்தபட்சம் அது சகித்துக்கொள்ளவாவதுபடுமா?” 

வேறு எந்தச் சாதியின் பெயரையும் சொல்லத் திராணியில்லாததால் தான் ரஞ்சித் சவுகரியமாக எல்லாவற்றையும் ‘பார்ப்பணீயம்’ என்கிறார். 

ஒரு பேட்டியில் ‘கபாலி’ என்று ரஜினியின் பாத்திரத்திற்குப் பெயர் வைத்தது ஒரு ஸ்டீரியோடைப்பை உடைப்பதற்காக என்கிறார் சமூக விஞ்ஞானி ரஞ்சித். இவரின் ரஜினி என்ன கதையில் பெரிய அறிவு ஜீவியாகவோ, மருத்துவராகவோ, விஞ்ஞானியாகவோ, சமூகச் சேவகராகவோ, ஆசிரியராகவோவா வந்தார்? கோட்டு, சூட்டைப் போட்டாலும் ரவுடி ரவுடி தானே? ரவுடி, அதுவும் ரவுடிகள் ரவுடிகளுக்காகவே நடத்தப்படும் பார்ட்டியில் கலந்து கொண்டு, “காந்திப் போட்ட டிரஸ்ஸூம், அம்பேத்கர் போட்ட டிரஸ்ஸுக்கும் அரசியல் இருக்கு” அப்படீன்னு டயலாக் பேசினா ஸ்டீரியோடைப் உடையுமா? இது என்ன அறிவிலித்தனம். தமிழ் சினிமாவில் எத்தனையோ ஸ்டீரியோடைப். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிராமணர்கள் பற்றிச் சொல்லப்படாத எதிர்மறை ஸ்டீரியோடப்பா? 

ரஞ்சித்தின் பேச்சு உண்மையில் சாரமற்ற பேச்சு. எனக்கு உண்மையில் கொண்டாடப்படுவதற்கு அதில் என்ன இருக்கிறது என்பது விளங்கவில்லை. வெறும் உணர்ச்சிக் குவியலான பேச்சு. வீடுகளில் சகோதரர்கள் சகோதரிகளை ‘டீ’ போட்டுப் பேசுவது பார்ப்பனியம் கற்றுக் கொடுத்தது என்கிறார். எந்தச் சுவற்றில் முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை. சகோதரிகள் சகோதரர்களை ‘டா’ போட்டு பேசுவதைப் பெரியாரா கற்றுக் கொடுத்தார்? இதில் வேடிக்கை இந்த உரையைத் திராவிட இயக்க உடன் பிறப்புகள் மிக மகிழ்ச்சியாகப் பகிர்ந்தது தான். ‘பாப்பானை திட்டுறான்யா, உடனே ஷேர் பண்ணு’ என்று பகிர்ந்தார்கள். பாவம். அதில் ரஞ்சித் திட்டியது 50-ஆண்டுக் காலத் திராவிட இயக்க ஆட்சியினை. ‘சமூக நீதியற்ற தமிழ் நாடு’ என்கிறார். எங்கும் சாதி மறையவில்லை என்கிறார். இடை நிலைச் சாதியினர் தங்களை விலக்குகிறார்கள் என்றார். என்ன இதையெல்லாம் பட்டியலிட ஆரம்பித்தவர் அப்புறம் யூ-டர்ன் அடித்து எல்லாத்தையும் போடு பாப்பான் தலையில் என்று போட்டுவிட்டுச் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டார். போகிற போக்கில் தமிழ் தேசியம் என்ற சித்தாந்தத்தை வெற்றுக் கோஷம் என்று நிறுவியதும் உடன் பிறப்புகள் மனம் குளிர வைத்த ஒன்று. இந்த ரஞ்சித்தே பேச்சுகளில் அனிதாவை ‘அவள்’ என்று தான் குறிப்பிடுகிறார். 

மேடை மேடையாக ரஞ்சித் அநீதிகள் பற்றிக் கொதிக்கிறார் ஆனால் ஓரிடத்தில் கூட பிரச்சினைகள் குறித்தோ அதற்கான தீர்வுகள் குறித்தோ முறையான எந்த அலசலும் இல்லை. நீட் தேர்வு அரசுப் பள்ளி மாணவர்களுக்கெதிரானது என்று காது கிழிய கத்தினார்கள். இந்த ஆண்டு ஐந்தே அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க அட்மிஷன் கிடைத்தது. இதற்கு முன் “சராசரியாக 30 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க” அனுமதிக் கிடைத்தது என்கிறது விகடன் கட்டுரை ஒன்று. கிட்டத்தட்ட 3000 இடங்களில் 30 தான். 1% தான். இது தான் தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளின் லட்சணம். அனிதாவே தனியார் பள்ளியில் தான் +1, +2 படித்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு அமர்ந்த 95% விண்ணப்பதாரர்கள் பெயில் தமிழ் நாட்டில். (‘நீட் விவகாரம்: பேசப்படாத கல்வியின் தரம், பேசப்பட்ட நாஜித்தனம்’ என்று இன்னொரு கட்டுரை எழுத திட்டம் அப்போது இது குறித்து விரிவாக எழுதுகிறேன். இன்ஷா அல்லா) 

ஏதாவது பள்ளிக்குச் சென்று மாணவர்களின் தேவைகள் என்ன என்று எட்டியாவது பார்த்தாரா ரஞ்சித்? எத்தனை பள்ளிகளில் நூலகங்கள் இருக்கின்றன? எத்தனை மாணவர்களால் தங்கள் பாடப்புத்தகம் அல்லாத எந்தப் புத்தகத்தையாவது படிக்க முடிகிறது? கிராமத்து அரசுப் பள்ளிகளில் இருந்து கல்லூரிக்கு வருபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எத்தனை? 

இந்தியை திணிக்கிறது என்று சொல்லி நவோதயாவை எதிர்த்தார் என்று திருமாவளவனின் வலைப் பக்கம் சொன்னது. இது துரோகம். தலித் மாணவர்கள் இந்தியையும், ஆங்கிலத்தையும் நன்றாகப் பயின்றால் அதனால் வரும் லாபங்கள் நிறைய. கருணாநிதியின் குடும்பத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் ரஞ்சித். அவர் பிள்ளைகள், பேரன்கள் எல்லாம் ஆங்கிலக் கான்வெண்டுகளில் தான் படித்தார்கள். கருணாநிதி அளவுக்குக் காந்தி நல்ல தகப்பன் இல்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமிழ் நாட்டு மாணவனுக்குச் சொந்தம். “அறிவை விரிவுச் செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று சொல்லிக் கொடுங்கள். கருணாநிதியைப் பாருங்கள் ஒரு மகனை மாநிலத்தில் துணை முதல்வராக்கினார், இன்னொரு மகனை டில்லியில் மந்திரியாக்கினார். கற்றுக் கொள்ளுங்கள் ஐயா. மாணவர்களை உலகுக்குத் தயார் செய்யும் கல்வியைத் தருமாறு கல்வியாளர்களோடு பேசுங்கள். சும்மா மிஷ்கின், அமீர் இவர்களோடு கூட்டம் போட்டால் ஒன்றுக்கும் உதவாது. 

இன்று ரஞ்சித் இருக்கும் உயரத்தில் இருந்து அவர் செய்யக் கூடியது அநேகம். ஆனால் இது போன்ற உணர்ச்சி மயமான பேச்சுகள் பேஸ்புக் ஷேர்களைத் தாண்டி எதையும் செய்யாது. அவனவன் இதைப் பகிர்ந்துவிட்டு “ஆஹா பெரியார்”, ‘பாரீர் ரஞ்சித்’ என்றெல்லாம் சொல்லிவிட்டுத் தத்தம் பிள்ளைகளைக் கான்வெண்டுகளுக்கும், நகரில் விலையுயர்ந்த டியூஷனுக்கும் அனுப்பப் போய் விடுவார்கள். 

கடந்த கருணாநிதி ஆட்சியின் போது சென்னையில் இருக்கும் ஆதி திராவிடர்கள் நல விடுதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள் அவர்கள் விடுதியின் அவல நிலையை அரசுக்குக் கவனப்படுத்த. ஒவ்வொரு ஊரிலும் அந்த விடுதிகள் மிருகங்கள் கூட வாழ லாயக்கில்லாதவை என்பது தானே நிஜம். பார்ப்பனீயம் பேசுவது எளிது ரஞ்சித்துக்கு. இதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கும் ஆனால் மேடையில் பாஜக, பார்ப்பனீயம், 20 வருடங்களுக்குப் பாஜக ஆட்சி வந்து விடுமோ, என்றெல்லாம் பேசுவது கரகோஷமும் திராவிட இயக்க உடன் பிறப்புகளிடம் ‘சமூகப் போராளி’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத் தரும். அமெரிக்காவில் கறுப்பு விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், நடிகர்கள் அநேகம் பேர் குழந்தைகள் நலன், கல்வி ஆகியவற்றுக்கு மிகப் பெரும் உதவிகள் செய்கிறார்கள். ரஞ்சித் கற்றுக் கொள்ளலாம். அவர்களெல்லாம் நிச்சயமாக இனவாதத்துக்கு எதிராகவும் தேவைப் படும் போது பேசுகிறார்கள், தத்தம் வழியில் போராடுவார்கள் ஆனால் அதைத் தாண்டி ஆக்கப் பூர்வமான உதவிகளைச் செய்கிறார்கள். 

துணை இயக்குனர் உட்கார்ந்தால் வரும் எரிச்சல் பற்றி ரஞ்சித் குறிப்பிட்ட போது எனக்கு ஜெயகாந்தனின் ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ புத்தகத்தில் வரும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. 

ஜெயகாந்தனும் ஏ.எல். நாரயணனும் ஒரு ‘முக்கியப் புள்ளி’யை சந்திக்கப் போனார்கள். சினிமா உலகுக்கே உரித்தான ‘கூஜா’ ஒருவரும் வந்ததாக ஜெயகாந்தன் சொல்கிறார். நால்வரும் அமர்ந்துப் பேசும் போது ஜெயகாந்தன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துவிட்டார். மேலும், அந்த முக்கியப் புள்ளி தான் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டு சிகரெட் பாக்கெட்டை ஏ.எல். நாராயணனிடம் நீட்ட அவரும் எடுத்துக் கொள்கிறார் ஆனால் ஜெயகாந்தன் தனக்கும் அளித்த முக்கியப் புள்ளியிடம் ‘தாங்க்ஸ்’ என்று சொல்லிவிட்டு தன் சட்டைப் பையில் இருந்து தன் சொந்த சிகரெட்டை எடுத்துப் புகைத்தாராம். கூஜாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. வெளியில் வந்த பிறகு ஜெயகாந்தன் மரியாதைக் கெட்டு நடந்து கொண்டார் என்று கடிந்துக் கொண்டாராம். 

‘பேண்ட்’ போட்டால் “கால் மீது கால் போட்டு உட்கார்ந்தால் தான் கம்பீரமாயும் அழகாயும் இருக்கும்” என்பது தன் அபிப்பிராயம் என்றும் அப்படி அமர்வதே தன் வழக்கம் என்கிறார். “இந்தத் தேசத்தின் மேலான மரியாதைக்குரிய பல உன்னதமான மனிதர்களோடு கம்யூனிஸ்ட் கட்சியில் சமத்துவமாகப் பழகி வளர்ந்தவன். எங்கள் அகராஇயில் மரியாதை என்பதற்கு எழுந்து நிற்பது, சிகரெட்டை மறைத்துக் கொள்வது என்ற அர்த்தங்களே கிடையாது. ஒரு அடிமையின் மரியாதைப் பண்புகளை நான் எப்போதுமே அறியாதவன்’ என்கிறார். கவனிக்கவும் அவர் ‘அடிமையின் மரியாதைப் பண்பு’ என்றாரே தவிர ‘பார்ப்பனீயம்’ என்று பசப்பவில்லை. அது சரி, அவர் ஜெயகாந்தன் ஆயிற்றே, அவர் என்ன ரஜினிகாந்தை ‘சார்’ என்று அழைத்தவரா? 

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்த வந்த இளையராஜா நிகழ்ச்சியின் நடுவே, ஆயிரம் பேருக்கு மேல் கூடியிருந்த அரங்கில், அதில் பலரும் கைப்பேசி மூலம் பதிவு செய்து கொண்டிருந்தார்கள், பிழையாக வாசித்த இசைக் குழு அங்கத்தினர் ஒருவரை ‘அறிவிருக்கா’ என்றார். கூட்டம் கைத்தட்டி மகிழ்ந்து, புல்லரித்தது. அடுத்த நாள் பலரும் மிகச் சிலாகித்து ‘அவர் பிழைப் பொறுக்க மாட்டார்’ என்று புல்லரித்தார்கள். அற்பர்கள். சரியாகப் பயிற்சிகள் நடத்தி மேடையேறியிருக்க வேண்டிய பொறுப்பு ராஜாவுடையது. பிழை நடந்ததும் சபையிடம் அவர் தான் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். ஒரு ஸிம்பனி நிகழ்வில் தவறு நடந்தால் நடத்துனர் தான் மன்னிப்புக் கேட்பார், நடத்துநரைத் தான் குறைச் சொல்வார்கள். ஆனால் நம் அடிமைச் சமூகத்தில் பாவப்பட்ட அந்த வாத்தியக்காரர் வசையை வாங்கிக் கொண்டார். நினைத்துப் பாருங்கள், அந்த மனிதரின் மனைவி, பிள்ளைகள் என்ன பாடுபட்டிருப்பார்கள். இது முதல் முறையல்ல ராஜா இது போன்ற எதேச்சாதிகாரங்களுக்குப் பிரசித்தம். ராஜா தலித். (விநாயக முருகனைக் கேட்டால் ‘கன்வர்ட்டட் பார்ப்பான்’ என்பார்) 


பிரச்சினைகளை நேர்மையாகப் பேசாவிடில் பிரச்சினைகள் தீராது. எதெற்கெடுத்தாலும் பிராமணர்களைத் திட்டித் தீர்த்துவிட்டல் பிரச்சினைகள் தீரவும் தீராது இன்னும் சொல்வதானால் இந்த மன நோய் பல சமயங்களில் உண்மையான காரணங்களைப் பதுக்கத்தான் உதவுகிறது.


References: