Showing posts with label Kumbh Mela. Show all posts
Showing posts with label Kumbh Mela. Show all posts

Tuesday, March 31, 2020

கும்ப மேளாவும், மகாமகமும் காலராவும்: இறந்துப் போன கோடாக்கோடியும். பிளேக் நோய், திலகர், ஒரு கொலை பாதகம்

டில்லி நிஜாமுதீன் இஸ்லாமிய விழாவில் கரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு பிடித்து மருத்துவம் பார்க்காமல் ஓரிடத்தில் அடைத்து வைத்து சாக விட்டு விட வேண்டும் என்று இந்துத்துவர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்

கருனைகளுள் மானுட அளவிலான கருணை, தெய்வாம்சமான கருணை என்று இரு வகைகளை பாரதி குறிப்பிடுகிறான். பின்னது தனக்கு கெடுதல் செய்வோருக்கும் நன்மைப் புரிவது. அத்தகைய கருணைக்கு உதாரண புருஷர்களாக அவன் முன்னிறுத்தியது இயேசு கிறிஸ்துவையும், புத்தனையும். 

நேற்று முதல் எல்லா இந்துத்துவர்களும் விஷம் கக்கிக் கொண்டிருக்கிறார்கள் "ஐயகோ பார்த்தீரா இந்த முஸ்லீம்களை" என்று. எத்தனையோ ஊர்களில் ஊரடங்கு உத்தரவை குப்பையில் போட்டிருக்கிறார்கள். காணொளிகள் கிடைக்கின்றன. இந்திய முஸ்லிம்கள் இந்தியர்கள் தானே? இந்தியர்கள் எப்படிப் பொதுவில் "நீ என்னச் சொல்வது நான் என்ன கேட்பது" என்று இயங்குவார்களோ அப்படித்த்தானே அவர்களும். சினிமா தியேட்டரில் கூட வரிசையில் நின்று டிக்கட் வாங்கத் தெரியாத சமூகத்தில் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும். கோவையில் கடைத்தெருக்களில் கூட்டம் இருக்கிறது, மீன் மார்க்கெட்டில் கூட்டம் இருக்கிறது. அதெல்லாம் பெரும் விவாதமாகவில்லை. அட, கொடுமையே மருத்துவர்களை வீட்டை காலிப் பண்ணச் சொல்கிறார்கள். சரி, அதெல்லாம் ஒரு புறம். கும்ப மேளாவும் காலராவும் என்று சும்மா தட்டிப் பாருங்கள் இணையத்தில்.

2018-இல் வெளியான் ஓர் ஆய்வறிக்கைச் சொல்கிறது, 2015-இல் நடந்த கும்ப மேளாவின் விளைவால் கோதாவரி நதியின் பாக்டீரியா தொகுப்பின் வகைமை மாறியதாம், மேலும் மருந்து எதிர்ப்பு சக்திக் கொண்ட சூப்பர் நுண்கிருமிகள் (super bugs) உண்டானவாம். அது மட்டுமல்ல இயற்கையாக நதிகளில் தோன்றும் பாக்ட்டீரியாக்களை விட மனித முகம், கைகள், மலம் ஆகியவற்றில் தோன்றும் பாக்ட்டீரியாக்கள் மிகுந்தனவாம். சுற்றுச் சூழல் பாதுகாவலர்களுக்கும், தொற்று நோய் தடுப்பாளர்களுக்கும் பிரத்யேக சவால் மக்களின் மூட நம்பிக்கை. புனித நீராடும் தலங்கள் நோய் அளிக்காது என்கிற மூட நம்பிக்கை பெரிய சவால். கும்ப மேளாவுக்கும் காலராவுக்கும் நீண்ட தொடர்புண்டு.

1891-இல் நடந்த கும்ப மேளாவில் காலரா பரவி இறந்தோர் எண்ணிக்கை 724,384. 1895-இல் காப்டன் ஹெர்பர்ட் "The Natural History of Hardware Fair Cholera Outbreaks" என்று ஓர் ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். அற்புதமான ஆய்வறிக்கை (சுட்டியை ரெபெரன்ஸ் பகுதியில் கான்க). சுற்றுச் சூழல் தண்ணீரில் இருந்து சாம்பிள் எடுத்து ஆய்வு, மேளாவுக்கு வந்தவர்கள் கணக்கு, ஹரித்வாரில் கங்கையின் நீரளவு (1881-1894 வரை ஒவ்வொரு ஆண்டும்), படித்துறைகள் பற்றிய குறிப்புகள், மேளாவுக்க்குப் பிறகான தட்ப வெப்பம் என்று மிகச் சீரிய ஆய்வு. பிரமாதம். எல்லாம் வல்ல மெக்காலேவுக்கு நன்றி. இல்லைன்னா "இதெல்லாம் விதிப்படின்னா நடக்குது" அப்படீன்னு சொல்லியிருப்பாங்க. இந்த ஆய்வில் 1894-இல் British Medical Journal கும்ப மேளா பற்றி ஆராய்ந்ததையும் ஹெர்பர்ட் மேற்கோள் காட்டுகிறார், அதில் "தெளிந்த நீர் நேரமாக ஆக குளிப்பவர்களினால் அழுக்கடைந்தது, நாற்றமடித்தது, அந்நீரில் நுண்ணுயிரிகள் பல்கி பெருகின" என்றது. 1867-இலும் இந்திய சுகாதார ஆய்வறிக்கை இதுப் போன்றச் செய்தியைச் சொல்லியிருக்கிறது. 



கும்ப மேளா சமயத்தில் காலரா எல்லா தடவையும் உருவாவதில்லை என்பதையும் சுட்டி அதற்கான விளக்கத்தையும் ஹெர்பர்ட் அளித்தார். முடிவாக அவர் கும்பல் கூடுவதால் அழுக்கான நீர், நீரின் அளவு, தட்ப வெப்பம், ஹரித்துவார் தாண்டி காலரா பரவும் போது அந்தந்த உள்ளூர் வகைமை இன்னும் வலுவுடைய காலராவாக மாற வாய்ப்புகள் உண்டு என்று தெரிவிக்கிறார்.

காலரா உலகளாவிய பரவலாக்கத்தில் (Pandemic) முக்கிய வருடம் 1899. ஹரித்துவார் கும்ப மேளாவில் உருவான காலரா பஞ்சாபை அடைந்தது. அதன் பின் வலுப்பெற்று உலகெங்கிலும் 25 வருடங்கள் பற்பல கோடி உயிர்களை காவு வாங்க்கியது. இந்தியாவில் மட்டும் 800,000. அப்போதிருந்த மக்கட் தொகையில் இது மிகப் பெரிய விழுக்காடு. கும்ப மேளாக்களினால் உருவான காலரா பல வருடங்களில் பல இந்தியர்களை, எல்லா மதத்திலும், காவு வாங்கியிருக்கிறது. இதில் கும்ப மேளாக்களின் போது நடக்கும் கூட்ட நெரிசல் அசம்பாவிதங்களை சேர்க்கவில்லை. அது தனி கணக்கு.

20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே ஆங்கிலேய அரசு இந்து மத விழாக்களின் போது காலரா பரவுவதை தடுக்க நடவிக்கைகள் எடுத்தன. இன்றைய இந்துத்துவ வெறியர்களைப் போல் அவர்கள் நடக்கவில்லை. 1912-இல் அரசு மத யாத்திரை தலங்களில் சுகாதார ஆய்வு நடத்த ஒரு கமிட்டியை ஏற்பாடு செய்தது. சென்னை கமிட்டி சென்னை ராஜதானியில் 21 திருத்தலங்களைப் பார்வையிட்டது. நடுவில் உலக மகா யுத்தம் இடையூறுச் செய்தது. பின்னர் 1920 ஒரு பிரத்தியேக ஆபீஸர் நியமிக்கப்பட்டார். அவர் நேரடிப் பார்வையில் 1920 கும்பகோணம் மகாமகத்துக்கான சுகாதார அமைப்புகள் செய்யப்பட்டன. கும்பகோணத்தில் விழா தொடங்கும் முன்னரே காலரா பரவ ஆரம்பித்தாலும் விழா செவ்வனே நடைப்பெற்றதுடன் விழாவினால் காலரா மேலும் பரவவில்லை. அந்த ஆபீஸர் 1922-இல் இறுதி அறிக்கையை சமர்பித்தார். இந்து பக்த சிரோண்மணிகள் குவியும் இடங்களில் சுகாதார அமைப்புகள் செய்வதன் அவசியத்தை அறிக்கை வலியுறுத்தியது. மகாமகத்தை நல்லபடி நடத்தி முடித்த அந்த ஆபீஸர் மருத்துவர் கே.டி. மேத்யூ. அவர் மேத்யூ, ஜடாயு அல்ல, செத்துப் போகட்டுமே என்று சொல்வதற்கு. 

உச்ச நீதிமன்ற வக்கீலும் எழுத்தாளருமான அபினவ் சந்திரசூட் பிளேக் நோயின் போது ஆங்கிலேய அரசு எடுத்த நடவடிக்கைகளும் அதற்கு மக்கள்பால் எழுந்த அதிருப்தி பற்றியும், முக்கியம பால கங்காதர திலகரால் தூண்டப்பட்ட மருத்துவர்களை கொன்ற சாப்பேக்கர் சகோதரர்கள் பற்றியும் அருமையான கட்டுரை எழுதியுள்ளார். 

1896-இல் மும்பையில் பிளேக் நுழைந்தது. நோய் பீடித்த 80 சதவீதத்தினர் செத்து மடிந்தனர். ஆங்கிலேய அரசு நோயைச் சமாளிக்க ஒரு சட்டத்தை அமல் செய்தது. அச்சட்டத்தின் படி வீடு வீடாக அதிகாரிகள் உட் புகுந்துச் சோதனைச் செய்யவோ, நோயுற்றவர்களை இழுத்துச் செல்லவோ முடியும். அப்போது சமீபத்தில் அறிமுகமான புகைவண்டிகளிலும் பிரயாணிகளை சோதிக்கவோ இழுத்துச் செல்லவோ முடியும். உடல் முழுதும் சநாதனம் ஊறிப் போன பிராமணரான திலகருக்கு கோபம் வந்தது. திலகர் தன் பத்திரிக்கையில் மராட்டிய மன்னன் சிவாஜி காலத்தில் யாராவது நம் வீட்டுப் பெண்கள் மேல் கை வைத்திருப்பார்களா என்று தலையங்கம் எழுதினார். வேறு இரண்டு பேருக்கு (பிராமணர்களா என்று தெரியவில்லை ஆனால் உயர் ஜாதியினர்) உடனே மூக்கில் வேர்த்தது. சாப்பேக்கர் சகோதரர்கள் என்று இன்று அடையாளப்படுத்தும் இருவர் பிளேக் நோயை கட்டுப்படுத்த முயன்ற அதிகாரிகளை சுட்டுக் கொன்றார்கள். அந்த சாபேக்கர்களுக்கு பிந்நாளைய இந்திய அரசு ஸ்டாம்பு வெளியிட்டு கவுரவம் செய்தது. இந்தியர்கள் விந்தையானவர்கள். மகாமகத்தை காப்பாற்றிய கே.டி.மேத்யூ பற்றி ஒரு செய்தியும் கண்டறிய முடியவில்லை ஆனால் சாப்பேக்கர் சகோதரகள் பற்றி விக்கிப்பீடியா பக்கமே இருக்கிறது. 

அப்போது ஆங்கிலேய அரசின் முக்கிய பிரச்சனை மருத்துவமனைக்கு செல்ல மறுத்த இந்துக்களை கவனிப்பது. பலருக்கு மருத்துவமனை சென்று கீழ் ஜாதிக்காரனோடு ஒரே அறையில் இருக்க நேர்வதை விட இறப்பதே மேல் என்ற வீம்பு வேறு. அவர்களை, ஜடாயு சொல்வதைப் போல், 'செத்துப் போ' என்று விடாததற்கு அந்த ஆங்கிலேய அதிகாரி கொடுத்த விலை அவரது உயிர். சந்திரசூட் அக்கட்டுரையில் வைக்கும் முக்கியமான கருத்து அரசு நோயைக் கட்டுப்படுத்த அத்துமீறிய அடுக்கு முறையை ஏவுவது தவறு என்பதே.

ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ் முதல் அநேக ஆயுர்வேத (இந்திய அறிதல் முறை மருத்துவம்) ஆகியவற்றால் தவறான மருத்துவத்தால் உயிர் இழந்தவர்களைப் பற்றி ஆய்வு நடத்த வேண்டிய நிலையில் என்னமோ தாங்கள் மாத்திரம் ஐன்ஸ்டீனின் பேரப் பிள்ளைகள் மாதிரியும் இஸ்லாமியர் மூட நம்பிக்கைகளும் மதப் பற்றும் கொண்டவர்கள் அவர்களை செத்துப் போக விட்டு விட வேண்டும் என்றெல்லாம் கூவுவது அநாகரீகம்.

சென்ற வருடம் கிட்டத்தட்ட ரூ.4200 கோடி செலவழித்து மிக, மிக பிரம்மாண்டமாகவும், சுத்தமாகவும் கும்ப மேளா நடத்தப்பட்டது. ஆங்கிலேய அரசு காப்பாற்றிக் கொடுத்த மேளா தான் இன்று விசுவரூபமெடுத்து இருக்கிறது. இது தான் ஒரு சமூகம் செய்யக் கூடியதும், செய்ய வேண்டியதும். 

அறிவியல் அறிவும்,  அற உணர்வு ஆகியவை கொஞ்சமேனும் நம் அறிவை மேம்படுத்தினால் இந்த விவாதமே தேவையிருந்திருக்காது. 


References:

  1. https://en.wikipedia.org/wiki/Haridwar_Kumbh_Mela
  2. https://en.wikipedia.org/wiki/1899–1923_cholera_pandemic
  3. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/19328/7/07_chapter%203.pdf
  4. ஹெர்பர்ட் ஆய்வறிக்கை https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5142980/pdf/indmedgaz71281-0010b.pdf
  5. https://scienceline.org/2018/11/worlds-largest-gathering-infectious-disease/
  6. https://www.sciencedirect.com/science/article/pii/S1201971216000114#bib0140
  7. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/29536131
  8. https://mumbaimirror.indiatimes.com/opinion/columnists/ajit-ranade/after-kumbh-an-epidemic/articleshow/69065187.cms
  9. https://www.clinicalmicrobiologyandinfection.com/article/S1198-743X(14)00107-4/pdf
  10. https://apps.who.int/iris/bitstream/handle/10665/41711/WHO_MONO_43;jsessionid=CC0CD469FAF655BA182ECB1CBE916D30?sequence=1
  11. Mahamakam and Dr K.T. Matthew https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/102837/6/thiru_chapter%204.pdf
  12. திலகர், பிளேக் நோய் https://theprint.in/opinion/plague-1896-sedition-covid-19-mustnt-set-laws-outlive-crisis/386552/
  13. சாப்பேக்கர் சகோதரர்கள் https://en.wikipedia.org/wiki/Chapekar_brothers














Wednesday, February 13, 2019

2019 கும்ப மேளா: ஒரு குறிப்பு

 ஜெயமோகனின் கும்ப மேளா பற்றிய தொடரில் ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. சுண்டியிழுக்கும் முதல் பத்தியே காரணம். இந்திய 'அறிவார்ந்த' ஊடகங்கள் எல்லாம் கும்ப மேளா பற்றி எதிர்மறையாகவே பிரச்சாரம் செய்கின்ற என்ற வாசகரின் உளக்குமுறுலோடு ஆரம்பமாயிற்று.

இந்தியாவில் ஜனத்திரள் கூடும் எந்த இடம் பற்றியும், அரசியல் மாநாடோ மதம் சம்பந்தபட்டதோ, யாருக்கும் இருக்கும் அச்சம் சுகாதாரமின்மை மற்றும் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடுமோ என்கிற அச்சமும் யதார்த்தமானதே. இதற்கு உடனே மேற்கத்திய ஊடகங்கள், மிஷனரி வரலாறு, காலணியாதிக்கம் என்றெல்லாம் யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம். மகத்தில் பிறந்த மகராசி மகாமக குளத்தில் குளிக்கப் போய் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது இணையத்தைத் தட்டினால் தெரியும். தஞ்சை பெரிய கோவில் சதயத் திருவிழாவில் ஜன நெரிசலில் மாண்டவர்கள் அநேகம்.



1954 மகா கும்ப மேளாவில் நடந்த ஜன நெரிசலில் மாண்டவர்கள் 800. அதற்கு முக்கியக் காரணம் நாகர்களின் முரட்டுத் தனம் தான் என்று அரசாங்க அறிக்கையே சொன்னது. ஒரு அனுமார் கோயில் அருகே அகாராக்களின் ஊர்வலத்தைப் பார்க்க பாதையின் இரு மருங்கிலும் பல்லோர் கூடியிருக்க ஏற்பட்ட நெரிசலில் கூட்டம் ஊர்வலப் பாதைக்குள் சிதற நாகர்கள் அவர்களை இரும்பு சிம்டாக்கள் கொண்டு தாக்க கடைசில் 800 பேர் மரணம். கமலகாண்ட வர்மா சமர்பித்த அறிக்கையில் காட்டமாக எழுதினார், "சோர்ந்தப் போய் நாகர்களின் ஊர்வலப் பாதையில் குறிக்கிட்ட யாத்திரீகனை இரும்பு ஆயுதம் கொண்டு தாக்குவது ஒரு சாது செய்யக் கூடியதா?...இன்றைய சாதுக்களுக்கு என் கோரிக்கை இது தான், உங்கள் வீடுகளை முதலில் ஒழுங்கு படுத்துங்கள், உங்கள் மேன்மைக்குத் திரும்புங்கள். இன்றிருக்கும் நிலை நீடித்தால் 'சாது' என்கிற வார்த்தையின் உண்மையான முக்கியத்துவம் மறைந்து அச்சொல் பிச்சைக்காரன் என்பதற்கு நிகரானதாகிவிடும்." ஜவகர்லால் நேரு அந்தக் கும்ப மேளாவில் பங்கேற்றார். ஆனால் அவர் புனித நீராடுவதாக உலவும் புகைப்படம் அப்போது எடுத்தது அல்லவாம். 

கும்ப மேளாவில் கலவரங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. அது நாகர்களின் இரத்தம் தோய்ந்த வரலாறோடு பிணைந்தது. 1850 கும்ப மேளாவில் சைவ வைணவ ஆயுதம் தாங்கிய சாதுக்களிடையே மோதலை தவிர்க்க ஆங்கிலேய அரசு ஆயுதம் தாங்கிய படையைக் காவலுக்கு வைத்ததோடு இரு பிரிவினரும் குளிப்பதற்குத் தனித் தனிப் படிதுறைகளையும் அவ்விரு படித்துறைகளுக்கு நடுவே பிராமணர்களுக்கு இடமும் ஒதுக்கி மிகப் பெரிய முஸ்தீபுகளோடு தான் நடைப் பெற்றது. 20-ஆம் நூற்றாண்டில் நாகர்களை மையப்படுத்தியே கும்ப மேளா உருப்பெற்றது. அதனாலேயே மேளா என்றாலே நிர்வாண சாதுக்கள், அவர்களின் வித்தியாசமான பழக்க வழக்கங்கள் முன்னிலைப்படுத்துவது என்று பொதுச் சித்திரம் விளைந்தது. மேற்சொன்னத் தகவல்கள் வில்லியம் பின்ச் எழுதிய "Warrior Ascetics and Indian Empires" நூலில் இருந்து. 

2013 கும்ப மேளாவில் அலகாபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் பலி. இவ்வருடம் பிப்ரவரி 5-ஆம் தேதி நெரிசலில் காயமுற்றவர்கள் ஒரு டஜனுக்கும் மேல் என்கிறது இந்துஸ்தான் டைம்ஸ். இவ்வருடம் ஜனவரி 14 அன்று ஒரு சிறிய தீவிபத்தும் ஏற்பட்டிருக்கிறது. 10 கோடி பேருக்கு மேல் கூடும் ஒரு விழாவில் இது ஒன்றுமில்லாத விஷயம் தான் ஆனால் இச்சம்பவங்கள் பெரும் உயிர் சேதமாக உருவெடுக்காதது அதிர்ஷ்டம் மற்றும் அரசாங்கத்தின் சீரிய ஏற்பாடுகள் காரணம். 

கும்ப மேளா என்பது இந்துப் பண்டிகை. அப்படிச் சொன்னால் ஜெயமோகன் கோபித்துக் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். ஆயிரம் வருடத்துக்கு மேலாக இருக்கும் இஸ்லாமியரின் பண்டிகையை இஸ்லாமியப் பண்டிகை என்று தானே குறிப்பிடுகிறோம். எந்த அரசாங்கமும் பொது மக்கள் கூடும் எந்த விழாவுக்கும் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கும்ப மேளாவுக்கான செலவு ரூபாய் 4,300 கோடி. இது ஒரு மதத்தின் ஒரு விழாவுக்கான செலவு அதுவும் எல்லா இந்துக்களும் பங்கேற்காதப் பண்டிகைக்கு. ஹஜ் பயணத்துக்குச் செலவு செய்வதை வயிற்றெரிச்சலோடு பார்த்தவர்களுக்காக இதை அழுத்திச் சொல்கிறேன். உங்களுக்கான புனிதத் தலங்கள் இந்தியாவில் இருக்கின்றன மற்றவர்களுக்கு வேறு இடங்களில் அதற்கு அரசாங்கம் உதவியளித்தது போல் அளித்தது ஆனால் உண்மையில் அது அரசாங்க விமான நிறுவனத்துக்குத் தான் உதவியாக முடிந்தது. ஹஜ் மாணியம் ஏர் இந்தியாவுக்குத் தான் அதிகம் உதவியது. அதுவும் இப்போது நின்று விட்டது. 

NDTV தொகுப்பாளினிகள் மீது ஜெயமோகனுக்கு என்ன கோபமோ போட்டுத் தாளித்து விட்டார். கமல ஹாசனை மாதிரியே அத்தொகுப்பாளினிகள் ஆங்கிலத்தை மேலை நாட்டு உச்சரிப்போடு பேசுகிறார்கள் அவ்வளவு தான். இணையத்தின் தயவில் NDTV கும்ப மேளா பற்றி வெளியிட்ட காணொளி ஒன்றைப் பார்த்தேன். அது குறிப்பாக இந்தக் கும்ப மேளாவில் சுத்தம் பற்றியது. மிகவும் சிலாகித்திருந்தார்கள். வந்திருந்தோரும் சிலாகித்திருந்தார்கள். நல்ல டாகுமெண்டரி தான். மகிழ்ச்சித் தரும் இன்னொரு முக்கிய அம்சம் விழாவுக்கு வரும் சிறுவர்கள் காணாமல் போனால் அடையாளம் காணும் விதமாக 'RAdio Frequency Chip' கொடுக்கப்பட்டதாம் (https://www.telegraphindia.com/india/radio-frequency-identification-tags-for-children-under-14-at-kumbh-mela/cid/1681748) அரசாங்கம் மெனக்கெட்டிருக்கிறது. வாழ்த்துகள். NDTV காணொளி கீழே:



இந்தக் கும்ப மேளாவின் ஏற்பாடுகளில் அரசியல் இல்லாமல் இல்லை எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் வரும் பெரும் இந்து திருவிழா. வரிந்துக் கட்டிக் கொண்டு அரசாங்கம் வேலைச் செய்திருக்கிறது. தன்னைக் காண வரும் தலித்துகளைச் சோப்புப் போட்டுக் குளித்து விட்டு வரச் சொன்ன யோகி ஆதித்தியாநாத் புனித நீராடியிருக்கிறார். சோப்புப் போட்டுக் கொண்டாரா என எனக்குத் தெரியாது. 

கும்ப மேளா பற்றி இணையத்தில் தேடினால் கிடைத்த பல கட்டுரைகளும் இவ்விழாவின் பிரம்மாண்டம், ஆச்சர்யங்கள் பற்றியதே. இந்தியா டுடே அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது (காண்க https://www.indiatoday.in/india/photo/kumbh-mela-2019-images-portraying-essence-largest-gathering-world-1433501-2019-01-18/2). ஒரு சுற்றுலா தளம் 5 நட்சத்திர ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. ரூபாய் 40,000 முதல் 1 லட்ச ரூபாய் வரை வாடகை குடில்கள் இருக்கின்றன.

செம்மொழி மாநாட்டுக்குப் போய் வந்த அதி தீவிர திமுக ஆதரவாளர் ஒருவர் இன்றும் அந்த ஏற்பாடுகள் பற்றி சிலாகித்துப் பேசுவார். அரசாங்கங்கள் நினைத்தால் எதையும் ஒழுங்காக ஒருங்கிணைக்கலாம் என்பது தெளிவாகிறது.

எனக்கு கூட்டமான எந்த நிகழ்வுமே ஒவ்வாமை தான். அது விளையாட்டாக இருந்தாலும் சரி இல்லை வேறு எந்த விழாவாக இருந்தாலும் சரி. ஜெயமோகனின் பதிவொன்றில் ஏதோ ஓரிடத்தில் அவரோ வேறு யாரோ ஒரு பலகையாலானப் பாதையில் அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்த்தப் போது தோன்றியது, "நம்மால் இதெல்லாம் முடியாது". 


1. https://en.wikipedia.org/wiki/2013_Kumbh_Mela_stampede
2. https://www.thehindu.com/news/national/at-rs-4200-crore-this-years-kumbh-mela-costliest-ever/article26000869.ece
3. https://www.huffingtonpost.in/entry/at-kumbh-mela-religious-leaders-are-drumming-up-support-for-modi-and-yogi_in_5c5d200ae4b0a502ca34241d
4. https://www.hindustantimes.com/india-news/over-a-dozen-injured-in-stampede-in-kumbh-mela-area/story-HP5tojhTjxEDu5ZlNUSJ3L.html
5. https://jeyamohan.in/118129#.XGTFfq3MxBw
6. https://en.wikipedia.org/wiki/1954_Kumbh_Mela_stampede
7. https://www.coxandkings.com/promotion/allahabad-kumbh-mela-2019/index.shtml?track=kumbhmela