Sunday, February 19, 2023

காந்தியின் தீண்டாமைக்கு எதிரான யாத்திரையில் ஒடுக்கப்பட்டோரின் குரல்

(இக்கட்டுரை 'காலச்சுவடு' ஜனவரி 2023 இதழில் 'தீண்டாமை யாத்திரையில் ஒடுக்கப்பட்டோர் குரல்' என்ற தலைப்பில் வெளியானது. இத்தளத்தில் அக்கட்டுரையின் தலைப்பில் மட்டும் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேறு மாற்றங்கள் இல்லை. -- அரவிந்தன் கண்ணையன்) 

தீண்டாமைக்கு எதிரான காந்தியின் பயணம் ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் நடைபெற்றது. காந்தி இந்தியாவில் பலமுறை பல்வேறு செய்திகளைச் சுமந்து பயணம் செய்திருக்கிறார். எனினும், இடைவிடாத பயணம் என்றால் அது இந்தப் பயணம்தான்.

அத்தோடு அவர் இந்தப் பயணத்தில் சந்தித்த அனுபவங்கள் வேறு பயணத்தில் நிகழாதவை. நீங்கள் வானொலியில் குறிப்பிட்ட நிலையத்தின் அலைவரிசைத் தொடர்பைப் பெற முயலும்போது சில சமயம் பல்வேறு நிலையங்கள் ஒன்றோடு ஒன்று இடைவெட்டிப் பல்வேறு குரல்கள் கேட்கும் நிலையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதுதான் இந்தப் பயணத்தில் காந்தியின் அனுபவம்.




ஒருபுறம் இந்து மகாசபாவின் குரல்; மற்றொரு புறம் சனாதனிகளின் வலிமையான எதிர்ப்புக் குரல்; இன்னொரு புறம் காந்தியின் தரப்பை மறுத்த அந்தந்தப் பிரதேச எதிர்ப்பாளர்களின் குரல்; ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குள்ளாகவே காந்தியின் தலையீட்டை மறுதலித்த குரல்; காந்தியின் செயல்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தியவர்களின் குரல்; விடுதலை நோக்கிய பயணத்தில் இப்போது ஏன் இந்த வேண்டாத வேலை என காங்கிரஸின் தரப்பிலேயே எழுந்த முணுமுணுப்புக் குரல்; அனைவருக்கும் பொதுவான தேசியத் தலைவர் ஒரு தரப்பு மக்களுக்காக நடத்தும் இந்தப் பயணம் தேவையற்றது என்ற சிறுபான்மையினரின் குரல்; காந்தியின் செயல்பாடுகளை ஏளனத்தோடு மட்டுமே பார்க்கக்கூடிய பத்திரிகைகளின் குரல்; ஒடுக்கப்பட்டவர்கள் உடலுழைப்பு சார்ந்த தொழிலாளிகளாய் இருந்ததால் அவர்களைப் பிரதிநித்துவப்படுத்த எங்களுக்கே உரிமையுண்டு என்ற கம்யூனிஸ்டுகளின் குரல் எனப் பல்வேறு குரல்கள் ஏக காலத்தில் இந்திய மண்ணில் எதிரொலித்தன.

எதிர்ப்புக் குரல்களையெல்லாம் மீறி காந்தியின் பின்னால் திரண்ட கோடிக்கணக்கான எளிய மக்களின் நம்பிக்கைக் குரலும் இவற்றினூடே எதிரொலித்ததை நாம் மறந்துவிடுவதற்கில்லை. அதில் ஒடுக்கப்பட்டோரின் குரலும் கலந்திருந்தது. அவர்கள் காந்தியை நம்பிக்கையோடு வரவேற்றார்கள். தங்களுக்கு வேண்டியது என்னென் வென்று எடுத்துரைத்தார்கள். காந்தியிடம் உரையாடுவது சாத்தியமாய் இருந்ததோடு வினா தொடுப்பதும் விமர்சிப்பதும் சாத்தியமாயிருந்ததால் வினா தொடுத்தார்கள், விமரிசிக்கவும் செய்தார்கள்.

தீண்டாமை குறித்த வலிமையான எதிர்ப்புக் குரலை காந்தி தென்னாப் பிரிக்காவிலேயே உருவாக்கிக் கொண்டார். அங்கு இந்தியக் கூலிகள் நடத்தப்பட்ட விதம் ஏறக்குறைய தீண்டாமைக்கு நிகரானதே. எனினும் இந்தியச் சமூகத்தில் நிலவிய தீண்டாமை எதிர்பார்க்கவியலாத பல்வேறு தன்மைகளை உள்ளடக்கியிருப்பதையும் காந்தி பின்னாட்களில் அறிந்துகொண்டார்.  தீண்டாமையைத் தம் மனதளவில் கொள்ளாமையில் தொடங்கி உண்மையில் அவர்களுக்கு வேண்டியதை உணரும் நெடிய பயணமாகவே அவரது சமூக வாழ்வு அமைந்தது எனலாம்.

பலரும் கலந்து வாழும் பொது அமைப்பு

காந்தி, தொடக்கக் காலகட்டத்திலேயே தீண்டாமை குறித்த தன் பார்வையைக் கூர்மையாக்கிக் கொண்டார். தொடர்ந்து அது குறித்துப் பேசியும் எழுதியும் செயல்பட்டும் வந்தாலும் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டுக்குப் பின் அமைப்பு ரீதியிலான முன்னெடுப்புகளைத் தீவிரப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது என அவர் உணர்ந்திருக்கலாம். பூனா ஒப்பந்தம் குறித்த இருவேறு நிலைப்பாடுகளும் அவரை உந்தித் தள்ளின. தீண்டாமைக்கு எதிரான கருத்து தன் சிறு வயதிலேயே உள்ளத்தில் படிந்துவிட்டதாக காந்தி ‘சத்திய சோதனை’யிலும் குறிப்பிட்டிருப்பார். தென்னாப்பிரிக்காவின் இருபத்தோரு வருட வாழ்வு அவரது வாழ்க்கை அமைப்பை முற்றிலும் மாற்றியிருந்தது. அங்கு நடத்தி அனுபவம் பெற்றிருந்த ஃபீனிக்ஸ், டால்ஸ்டாஸ் பண்ணை முறையிலான பல்வேறு வகைப்பட்ட மக்கள் கலந்து வாழும் ஆசிரம வகை முறையையே அவர் மனம் நாடியது. அதனாலேயே இந்தியா திரும்பி, ஒரு சுற்றுப் பயணம் முடிந்ததுமே அவர் அகமதாப் கோச்ரப் ஆசிரமத்தைத் தொடங்குகிறார்.

ஆசிரம விதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தன. அவை விரிவான சுற்றறிக்கையாகத் தேசம் முழுதும் அனுப்பப்பட்டன. அவ்விதிகளில் முக்கியமானதாக எவ்வகையிலும் தீண்டாமையை அனுசரிக்கலாகாது என்று இருந்தது. அவ்விதிகளில் மனப்பூர்வமான சம்மதமும் அதைக் கடைப்பிடிப்பதில் மனவுறுதியும் கொண்டவர்களை மட்டுமே காந்தி அனுமதித்தார். இது ஒரு பயிற்சிக் களம் மட்டுமே, இங்கு பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் பின்னாட்களில் இதுபோன்ற அமைப்புகளை நாடெங்கும் ஏற்படுத்துவார்கள்; அல்லது அப்படித் தொடங்குபவர்களுக்கு உதவுவார்கள்.

காந்தி, தீண்டாமைக்கு எதிரான தம் நிலைப்பாட்டை உறுதியோடு சுமந்தபடியே இந்தியா திரும்பினார். அவருடைய தொடக்கக்கால நடவடிக்கைகள் சிலவற்றைப் பார்த்தாலே நமக்கு அது  விளங்கிவிடும்.  1917இல் சம்பாரண் போராட்டத்தில் முழுமூச்சாக ஈடுபடும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலைப் பலமுறை செவிமடுத்து அதற்குத் தகுந்த வினையாற்றியிருக்கிறார். 1915 பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி பம்பாயில் ‘Depressed Class Mission School’ நிகழ்வில் குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். தான் இந்தியா திரும்பிய பின் நடத்தப்பட்ட பலநூறு நிகழ்வுகளைக் காட்டிலும் குழந்தைகளுடனான இந்நிகழ்வே தமக்குப் பெருமகிழ்வைத் தருவதாகவும், எந்தப் பணி இருப்பினும் இவர்களோடு கலந்துறைவதைத் தாம் தவறாமல் நடத்த முனையப்போவதாகவும் காந்தி பேசுகிறார் ( மகாத்மா காந்தி தொகுதி நூல்கள்: தொகுதி 13,பக் 17).

அடுத்து 1915, ஏப்ரல் 30ஆம் தேதி மதராஸ் வரும் காந்திக்குப் பல்வேறு தரப்பு வரவேற்புகளுக்கிடையே South Indian Depressed Class Society என்னும் அமைப்பும் வரவேற்புத் தருகிறது. அவர்களோடு உரையாற்றிய காந்தி நம் நாட்டின் முக்கியமான இந்தப் பிரச்சினை பெரும் கவனத்தைக் கோருவது என்றும் வெட்ககரமான இந்த வேறுபாடுகள் மறைந்து இம்மக்களும் சம அந்தஸ்து எட்டுவதற்கான நிலையை ஏற்படுத்தப் பெரும் உழைப்புத் தேவைப்படும் என்றும் கூறுகிறார் (காந்தி தொகுதி நூல்கள்: தொகுதி 13,பக் 68).

1915ஆம் ஆண்டின் காந்தி டைரிக் குறிப்புகளில் இதுகுறித்து அவர் அதிகம் சிந்தித்துக்கொண்டே இருந்தது தெரியவருகிறது. பிப்ரவரி மாத 15ஆம் தேதியிலான குறிப்பு Talk with Shinde about bhangis எனக் குறிப்பிடுகிறது. பிப்ரவரி 27ஆம் தேதிக் குறிப்பு Started Marathi. ‘Tried to think out a solution to the problem of bhangis’ என்கிறது. அதற்கு முன்னரே பிப்ரவரி 7 அன்று ‘went to see school for untouchables’ என்றும் பிப்ரவரி 5 அன்று ‘meeting with Patwari, discussions about caste restrictions’ என்றும் பதிவிட்டிருக்கிறார்.




இவை அவரின் எண்ணங்களாக மட்டுமே இருந்த நிலையில் உண்மையான சோதனை தக்கர் பாபாவின் மூலம் வந்தது. காந்தியின் தீண்டாமைக்கு எதிரான செயல்பாடுகளில் முக்கியமாகத் துணை நின்றவர் தக்கர் பாபா. சொல்லப்போனால் தக்கர் பாபாவின் எண்ணங்களுக்கு காந்தி செயல்வடிவம் தந்தார் என்று சொல்வதுகூடப் பொருந்தும். அந்த அளவு முழுமூச்சாக இதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் தக்கர் பாபா. மகாராஷ்டிரத்தில் Depressed Class Mission அமைப்பைத் தொடங்கித் தீண்டாமைக்கு எதிராக முக்கியப் பணியாற்றிய வித்தல் ராம்ஜி ஷிண்டேவையும் (1873-1944) காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலேவையும் தம் முன்னுதாரணங்களாகக் கொண்டவர் தக்கர். அவரின் ஆலோசனை அல்லது வேண்டுகோளின்படி தமது முதலாவது கோச்ரப் ஆசிரமத்தில் ‘dhed’ என்ற ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த தூதாபாய் என்பவர் குடும்பத்திற்கு காந்தி இடமளிக்கிறார். ஆசிரமத்தில் அது கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. கஸ்தூர் பாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். கஸ்தூர்பா இதற்கு ஒப்புக்கொள்ளாதபட்சத்தில் நண்பர்களாகப் பிரிந்துவிடுவோம் என்ற முடிவைக்கூட காந்தி எடுக்கிறார். தீண்டாமையை ஒப்புக்கொள்பவர் எவருக்கும் ஆசிரமத்தில் இடமில்லை என்ற இறுதி முடிவை எடுத்தார்.

1915, செப்டம்பர் 23இல் சீனிவாச சாஸ்திரிக்கு காந்தி எழுதிய கடிதத்தில்,

“The step is momentous because it so lines with the suppressed class mission that I might have no distant time to carry out the idea of shifting to some dhed quarters and sharing their life with dheds” (நான் எடுத்து வைத்திருக்கும் இந்த அடி முக்கியமானதொன்று. ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான திட்டத்தோடு பெருமளவு ஒத்துப்போவது. மிக விரைவாகவே நான் தேட் சமூக மக்களோடு அவர்கள் குடியிருப்பையே பகிர்ந்துகொள்ளும் காலமும் வரலாம்) என எழுதுகிறார். 1916இல் அகமதாபாதில் ஜூன் ஐந்தாம் தேதி, சாதி அமைப்பு குறித்து உரையாற்றும்போது, “தீண்டத்தகாதவர்கள் எனக் கூறப்படுபவர்கள் அறுபது மில்லியனுக்கும் அதிகமாக நம் நாட்டில் உள்ளனர். அவர்களது நிலையை மேம்படுத்த வேண்டியது மிக அவசியம். தென்னாப்பிரிக்காவில் என்னைப் பார்த்து, உங்கள் நாட்டில் தீண்டாமை எனும் பழக்கம் மூலம் பெருமளவிலான மக்களை ஒதுக்கிவைக்கும்போது இங்கு வந்து ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகிறீர்களே என்ற கேள்வியை முன்வைத்தார்கள். நியாயமான கேள்விதானே” என்கிறார்.

1916இல் ஏப்ரல் 30ஆம் தேதி பெல்காமில் கோடிபிஸ் வாடா எனுமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் காந்தி The Depressed Classes என்ற தலைப்பில் உரையாற்றினார். லிங்காயத்துகளும் ஒடுக்கப்பட்டவர்களுமே அதிகமாக அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  பிறப்பினால் உயர்வு தாழ்வு என்ற கருத்தைத் தான் ஆணித்தரமாக மறுப்பதாக காந்தி பேசினார். முன்னதாக, காந்தி இந்தக் கூட்டத்திற்கு வர மாட்டார் என வதந்தி எழுந்தபோது, கங்காதர்ராவ் தேஷ்பாண்டே (கர்நாடகத்தின் சிங்கம் என அறியப்பட்டவர்) காந்திக்கு அதுகுறித்துக் கடிதம் எழுதுகிறார். தன் இறப்பைத் தவிர வேறு எந்தக் காரணமும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிடாமல் தன்னைத் தடுக்க முடியாது என காந்தி பதில் அனுப்புகிறார்.

காந்தி இந்த வகையில் அம்மக்களுடனான உரையாடலில் தொடர்நது பங்கேற்றதற்கு ஏராளமான உதாரணங்களைத் தர முடியும்.

1929இல் தக்கர் பாபா ஒடுக்கப்பட்டவர்கள் குறித்த பொருளடைவு ஒன்றை உருவாக்குகிறார். இந்தியாவில் நிலவும் வகைமாதிரியான தீண்டாமையை அது எதிரொலிக்கிறது. அதை நவஜீவன் பத்திரிகையில் வெளியிட்டு ‘நமது அவமானம்’ என்ற பெயரில் காந்தி விரிவான கட்டுரையையும் எழுதுகிறார் (CWMG தொகுதி 40 பக் 341). அதில் பிர்லா வழங்கும் நிதியினை ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்துக்குச் சரிவரப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு மக்கள் தாராளமாக இதற்கு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறார். கூடவே, தக்கர் பாபாவிடம் இந்தப் பட்டியலில் அந்தந்தப் பிரதேசங்களில் அம்மக்களுக்காக உழைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் முக்கியமானவர்கள் குறித்தும் குறிப்புகள் இணைக்கும்படி கோருகிறார்.


பின்னாட்களில்,1932இல் ‘ஹரிஜன் சேவக் சங்’ அமைப்பை ஏற்படுத்த இந்தத் தகவல் சேகரிப்பு உந்துதலாக இருந்திருக்கும். (முதலில் இதற்கு ‘All India Anti

Untouchability league’ என்று பெயர் இருந்தது.) 1932இல் எரவாடா சிறையில் காந்தி, மகாதேவ் தேசாயின் ஒரு கேள்விக்கு, “ஒடுக்கப்பட்டவர்களைக் கை தூக்கிவிட நாம் யார்? அவர்களுக்கான விடுதலையையும் மேம்பாட்டையும் அவர்களே முயன்று பெறுவார்கள். நாம் அவர்களுக்கு இழைத்த அநீதிக்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டியதே நம் கடன்” என்கிறார். இதே எண்ணம்தான் அவருடைய ஹரிஜன் யாத்திரையிலும் மேலோங்கியிருந்தது.

1934ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தன் யாத்திரையை முடித்துக்கொண்டு வார்தா திரும்பும்முன் செய்தியாளர்களிடம் பேசுகிறார். அதில் ஒரு கேள்விக்கு,  ஒடுக்கப்பட்டவர்களிடையே  குறிப்பிடத்தக்க  அளவு  விழிப்புணர்வைத் தான் கண்ணுற்றதாகவும் பல இடங்களில் அவர்கள் பேசியவையும் அவர்கள் முன்வைத்த வினாக்களும் இதை உறுதிப்படுத்துவதாகவும் கூறிய காந்தி, தீண்டாமை முடிவுக்கு வரும் நாள் வெகுதூரத்தில் இல்லையென்றே அவர்களுடன் இணைந்து தாமும் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

ஒடுக்கப்பட்டோர் காந்தியிடம் எழுப்பிய கேள்விகள்

தீண்டாமை யாத்திரை முழுக்கவே உரத்து ஒலித்த அவர்களது குரலைக் கேட்க முடிகிறது. அவை யாவும் காந்தி தொகுப்பு நூலிலும் ஹரிஜன் பத்திரிகையிலும் முழுக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹரிஜன் பத்திரிகை ஏப்ரல் 20,1934 இதழில் ஒடுக்கப்பட்டவர் ஒருவர் காந்திக்கு எழுதிய கடிதம் பிரசுரமாகியுள்ளது. அதில் இடம் பெறும் கேள்விகள்:

1. மகாத்மாஜி, உங்களுக்கு எங்கள் பிரச்சினைகளில் ஏன் இவ்வளவு ஈடுபாடு?

2. தீண்டாமையை ஒழித்துவிட்டால் எங்கள் மக்கள் பெறும் நன்மை என்ன?

3. இந்துக் கோயில்களுக்கு நாங்கள் ஏன் போக வேண்டும்?

4. இந்துக் கடவுளர்களின் அவதாரங்களும் எங்களை ஒடுக்கத்தானே செய்கின்றன?

5. ஆரியர், ஆரியர் அல்லாதவர்கள் என்ற பிரிவுகள் இருப்பதுபோல நாங்கள் தனித்திருந்தால் என்ன?

6. தீண்டத்தகாதவர்களுக்கு உள்ளேயே பலப் பல சாதிப் பிரிவுகள் உள்ளன. அதுகுறித்து நீங்கள் செய்யப்போவது என்ன?

7. சுயராஜ்யம் வந்துவிட்டால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்று முன்பு கூறினீர்கள். இதோ, இந்த இயக்கம் அதை நோக்கியதுதானா?

8. எல்லா மதங்களும் உங்கள் பார்வையில் ஒன்றே எனும்போது, கிறித்துவர்கள் தீண்டாமைக்கு எதிராகப் போர்புரியக் கூடாதா?

9. கோடிக்கணக்கான தீண்டத்தகாதவர்களுக்கு எல்லா இந்துக்களோடும் சம உரிமை வழங்குவீர்களா?

10. கோயில் நுழைவு, தீண்டாமை ஒழிப்பைவிட எங்கள் வாழ்வாதாரத்துக்கு ஏதேனும் செய்யலாமே?

இவை கடிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள். காந்தி இவற்றுக்குப் பதில் அளித்திருக்கிறார். இதே போன்ற கேள்விகளே பல இடங்களிலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டன. பல இடங்களிலும் கேட்கப்பட்ட இன்னொரு முக்கியமான வினாவிற்கும் காந்தி தொடர்ந்து பதிலளித்துவந்தார்; ஹரிஜன் இதழிலும் அது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹரிஜன் சேவக் சங்கில் ஹரிஜனங்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பது ஏன் கூடாது என்பது அவ்வினா. இச்சங்கம் கடன்பட்டோர் சங்கம். அவர்கள் இதுகாறும் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியவர்கள். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று உண்டு. ஒரு சிறு கமிட்டி அமைத்து ஹரிஜன் சேவக் சங் செய்யும் செயல்களைச் சீர்தூக்கி மதிப்பிடுங்கள். உங்கள் தேவைகளைச் சொல்லுங்கள் என காந்தி பதில் தருகிறார்.

அதற்கு மேலும் விளக்கம் கோரும் விதமாக ஹரிஜன் பத்திரிகையாளர் ஒருவர் காந்திக்குக் கடிதம் எழுதி வினவுகிறார். “நீங்கள் அமைக்கச் சொல்லும் மதிப்பீட்டுக் கமிட்டியின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? அதன் பணிகள், உறுப்பினர் எண்ணிக்கை போன்ற தெளிவான வரையறைகளையும் நீங்கள் கூறினால் நலம். இதுபோன்ற கமிட்டிகள் அவசியம் என்றே நானும் உணர்கிறேன். எனவே தெளிவானதொரு பார்வையைத் தாருங்கள்” என அப்பத்திரிகையாளர் கேட்கிறார்.

காந்தி தீண்டாமை யாத்திரையின் பகுதியாக 1933 டிசம்பர் 10ஆம் தேதி டில்லி வந்தடைந்தார். அங்கு, சிரத்தானந்தா குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்டவர்களிடையே காந்தி நிகழ்த்திய உரை முக்கியமானது. அம்மக்கள் காந்திக்கு அளித்த வரவேற்புரையில், தங்களுக்கென்று தனியான கிணறுகள், பள்ளிகள், கோவில்கள் திறக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தனர். அதை ஒட்டியே காந்தி தமது உரையை அமைத்துக் கொண்டார்.

“உங்களுக்கெனத் தனியான பள்ளிகள், கிணறுகள், கோவில்கள் அமைப்பது என் நோக்கமல்ல. பொதுச் சமூகத்தோடு நீங்கள் இணைந்திருக்க வேண்டுவதே என் ஆவல். ஆனால் சாதி இந்துக்கள் உங்களைக் கிணறுகளின் பக்கம்கூட வரவிடாமல் நடத்துவதைக் கண்டும் காணாமலும் போவது எனக்குச் சாத்தியமில்லை. நகரங்களில் வாழ்ந்தால் ஒருவேளை பாகுபாடின்றிக் குடிநீர் கிடைக்கும். ஆனால் இத்தகைய குடியிருப்புகளில் உங்களுக்கு நீர் அருந்த ஒரு கலங்கிய குட்டைகூட இல்லாமல் இருப்பதுதான் கிணறுகள் ஏற்படுத்துவதன் காரணம். இதே காரணம்தான் பள்ளிகளைத் திறப்பதற்கும். உங்கள் குழந்தைகள் மற்றக் குழந்தைகளோடு பொதுப் பள்ளியில் பயில வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன். அதற்கான பெருமுயற்சிகளில் இப்போதுதான் வெற்றி கிடைத்துவருகிறது. அதுவரை உங்கள் குழந்தைகள் பயிலப் பள்ளிகள் திறக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால், அதில் எவரும் சேர்ந்து பயிலலாம் என்பதே விதி” என காந்தி விடையளித்தார்.

அன்று மாலையில் காந்தியைச் சந்தித்த ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்நதவர்களின் குழு பின்வரும் கேள்விகளைக் காந்தியிடம் முன்வைத்தது.

1. கோவிலில் நுழைவது எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழி என்று நம்புகிறீர்களா?

2. எங்களுடைய பொருளாதார நிலை உயர உதவமாட்டீர்களா? அதுதானே இப்போது முக்கியம்.

3. நீங்கள் திரட்டும் நிதியை எங்களிடம் வழங்கலாமே, உங்கள் ஊழியர்களிடம் எங்களுக்கு நம்பிக்கையில்லை.

4. எங்களுக்கு இருக்கும் பிற பெயர்களோடு நீங்கள் ஹரிஜன் என்ற பெயரையும் சேர்த்திருக்கிறீர்கள். இதுவும் எங்களைப் பிரித்தே காட்டுகிறது. பெயரளவிலேயே பிரித்தால் மனத்தில் ஒற்றுமை வருவது எங்ஙனம்?

இந்தக் கேள்விகள் தில்லியில் மட்டுமல்ல, நாடு முழுக்கக் கேட்கப்பட்டன.

அடுத்து டிசம்பர் 22ஆம் தேதி மாலை நாகேஸ்வர்ராவ் பந்துலுவின்  ஸ்ரீ்ரீபாக் இல்லத்தில் தங்கியிருந்த காந்தியை, Madras Depressed Class Federation அமைப்புக் குழுவினர் சந்தித்தனர். ராவ் பகதூர் ஆர். சீனிவாசன், வி. தர்மலிங்கம் பிள்ளை, சுவாமி சகஜானந்தர், பி.வி. ராஜகோபால பிள்ளை, வி.கே. புஷ்பராஜ் (வழக்கறிஞரான இவர் எழுதிய சிறு புத்தகம் ஒன்றை ஹரிஜன் இரண்டாம் தொகுதி குறிப்பிடுகிறது. As an untouchable feels untouchability -P.K.Pushparaj ‘A clear exposition of the harijan’s view on

untouchability and his attitude towards the present movement for the eradication of untouchability’ price- 1 Ana) இரட்டைமலை சீனிவாசன் முன்வைத்த கோரிக்கைகளின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

தாழ்த்தப்பட்ட சமூகத்தார் தங்களுக்கு வேண்டிய வேட்பாளர்களைத் தங்கள் சமூகத்திலேயே தேர்ந் தெடுக்கும் காலங்களில் சாதி இந்துக்களால் நடைபெறும் முட்டுக்கட்டைகளைத் தடுத்து உதவிட சேவக் சங் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் பூனா ஒப்பந்தம் வியர்த்த நிலைக்கே தள்ளப்பட்டுத் தோல்வியைச் சந்திக்கும்.

சென்னை அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் தீண்டாமைக்கு எதிரான சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் சேவக் சங் பெரும் உதவி புரிய வேண்டும். அரசு நீதியைச் செலுத்துவதில் அதிகாரிகளுக்கு உதவியாக இருப்பதோடு இடையூறு செய்யும் சாதி இந்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துத் தண்டனை வாங்கித் தரவும் சங்கம் உதவியாக இருக்க வேண்டும்.

அரசாங்கம் முன்வந்து செய்யும் உதவிகளில் தலையிட்டு இடையூறு செய்யக் கூடாது.

நீங்கள் இப்போது செய்துவரும் கிளர்ச்சியினால், தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு நேர்ந்தது போன்ற வாய்ப்புகள் கிட்டாத அபாயம் நேருமோ என நாங்கள் ஐயுறுகிறோம்.

கோயில்கள் திறக்கப்பட்டாலும் எங்களுக்கு உசிதமான நேரத்தில் நாங்கள் அதைப் பயனபடுத்திக்கொள்வோம்.

கள்குடிக் கேடு குறித்து எங்களிடம் மாத்திரம் உபதேசிப்பது பொருத்தமாயில்லை. சாதி இந்துக்கள் உட்படப் பல சமூகத்திலும் இப்பழக்கம் இருக்கிறது.

ஹரிஜன் என்ற பெயரில் எங்களுக்கு உவப்பில்லை.

எங்களைச் சார்ந்தமட்டில் ராஜீய விஷயமாய் எது உசிதமானதென்று நிர்ணயிக்க எங்களுக்கே உரிமை இருக்க வேண்டும்.

கல்வி உதவியைப் பொறுத்தவரை, கிறுத்துவர்கள் அமைத்திருக்கும் கல்வி நிலையங்களைப்போல உம்முடைய சங்கம் லேபர் துறையோடும் கல்வி இலாக்காவோடும் ஒத்துழைத்து உயர்தர ஆரம்பக் கலாசாலைகளையாவது நடத்த வேண்டும்.

1934 ஜனவரி மாதம் காந்தி தன் பயணத்தின் அடுத்த கட்டமாகத் தமிழகம் வந்தார். 22ஆம் தேதி சுயமரியாதைக் கட்சியினர் காந்தியைச் சந்தித்துப் பல வினாக்களைத் தொடுத்தனர்.

1. ஒடுக்கப்பட்டவர்களுக்கு இந்த இயக்கம் மூலமாக என்ன செய்கிறீர்கள்?

2.கிறுத்துவத்திலும் இஸ்லாத்திலும்கூட ஒடுக்கப்பட்ட வர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கான உங்கள் செயல்திட்டம் என்ன?

3. தென்னிந்தியாவில் நிலையான வேலை நேரம், உழைப்புக்கேற்ற கூலி இல்லை. கோவில் நுழைவை விடுத்து இதை ஏன் நீங்கள் பேசக் கூடாது?

4. நீங்கள் எங்களைவிட அனுபவம் மிக்கவர் என்பதை மறுக்கவில்லை. ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் சோறும் சம அந்தஸ்தும் கேட்கிறார்கள். நீங்கள் கோவில் நுழைவை முன்வைக்கிறீர்கள்.

5. ஹரிஜன் என்ற பெயரைக் கொடுத்து எங்களைத் தனியாக்கி விட்டீர்கள். இதன்மூலம் சுலபமாகப் பாதிக்கப்படக்கூடிய ஒரு குழுவாக எங்களை மாற்றிவிட்டதை உணர்கிறீர்களா?

இப்படியாகத் தொடர் கேள்விகள்.

1934, பிப்ரவரி ஒன்றாம் தேதி காந்தி குன்னூரில் இருந்தார். அங்கு ஆதி திராவிட ஜன் சபையின் அங்கத்தினர்கள் பன்னிரண்டு பேர் ஆர்.டி. கேசவலு, மாணிக்கம் தலைமையில் காந்தியைச் சந்தித்துத் தம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

1. குன்னூரில் தோல் பதனிடும் தொழிற்சாலையை உருவாக்கினால் பலரும் பயன் பெறுவார்கள்.

2. ஒடுக்கப்பட்டோரின் நிலை குறித்து விரிவாகப் பேச பத்திரிகை ஒன்றை நடத்த வேண்டும். அதற்கு நீங்கள் நிதி உதவி அளிக்க வேண்டும்.

3. இதுவரை இந்தப் பயணம் சார்ந்து சாதி இந்துக்களிடையே மன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஆனால் நீங்கள் அவ்வளவு சொல்லியும் நாட்டார் தரப்பு மறுத்துவிட்டதே?

4. நாங்கள் முதலிலிருந்தே ‘joint electorate with

reservation of seats’ முறையை ஒப்புக்கொண்டு

பணியாற்றத் தயாராயிருக்கிறோம். உங்கள் கைகளில் எங்கள் எதிர்காலம் பத்திரமாயிருக்கும் என்ற

நம்பிக்கை உண்டு. ஆயினும் உங்களிடமிருந்து உத்தரவாதம் வேண்டும்.

5. எரவாடா ஒப்பந்தத்தில் கூறியபடி மதராஸ் லெஜிஸ்லேட்டில் எங்களுக்கு முப்பது இடங்கள் உறுதியானதுதானே?

இப்படிப் பல கோரிக்கைகளையும் ஐயங்களையும் காந்தியிடம் அவர்கள் உரைத்தார்கள்.

குன்னூரில் காந்தி தங்கியிருந்தபோது தமிழ் பேசும் பகுதிகளில் இருந்த ஆதிஇந்துக்கள் சேர்ந்து தம் குறைகளை விளக்கிக் கூறும் மனுவை காந்தியிடம் வழங்கினார்கள். Our Shame என்ற தலைப்பில் காந்தி இதை ஹரிஜன் இதழில் வெளியிட்டார்.

1. உணவகங்கள், லாண்டரி, சலூன், காபி, டீ கடைகள், மண்டபங்கள், பள்ளிகள், அக்ரஹாரங்கள், குளங்கள், கிணறுகள், குடிநீர்க் குழாய்கள், கிராமத்தில் உள்ளஅஞ்சலகங்கள் மற்ற பொது இடங்கள் - கோயில் குறித்துச் சொல்லவே வேண்டாம் - எங்கும் எங்களுக்கு அனுமதியில்லை.

2. பொது இடங்களில் குடை பிடித்தல், செருப்பு அணிதல், முட்டிக்குக் கீழே வேட்டி அணிதல் ஆகியவை பெருங்குற்றமாகப் பார்க்கப்படுகின்றன. எங்கள் பெண்கள் தங்க நகை அணிவதையும் சுத்தமான துணி உடுத்துவதையும் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

3. சடலங்களைப் பொதுவழியாக எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. பொதுச் சாலை வழியாகச் செல்லலாம் என்றாலும் ஏதேனும் கோயிலைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கின்றனர்.

4. எங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும்போதுகூடக் குதிரைகளில் செல்ல அனுமதி இல்லை.

5. கிராமத்துச் சந்தைகளில் வெளுத்த துணிகளை வாங்க விரும்பிக் கைகளால் தொட்டுவிடக் கூடாது.

6. சந்தைகளில் உணவுப் பொருட்களை வாங்கும் விருப்பத்துடன் தொட்டுவிட்டால் தீட்டுப் பட்டுவிட்டது எனக் கூறி மொத்தப் பொருளுக்கான விலையையும் வாங்கிக்கொண்டுதான் நகரவே விடுகிறார்கள்.

7. குடியிருப்புகள் என்று தனியாக எங்களுக்கு எதுவும் இல்லாததால் நிலத்தின் சொந்தக்காரர்கள் ஒதுக்கும் இடங்களில்தான் வசிக்க வேண்டியிருக்கிறது. வேலை நேரத்திற்குக் கணக்கில்லை. கூலி சற்று உயர்த்திக் கேட்டாலும் மறுமொழி இல்லை. மிகக் குறைந்த அளவு ஊதியமாகத் தானியமே வழங்கப்படுகிறது.

8. இசைக்கருவிகள் வாசிப்பவர்கள் திருமணத்திற்கு

அல்லது எங்கள் கடவுளர் ஊர்வலங்களுக்கு வரமறுக்கிறார்கள். எங்களில் எவருக்கும் அக்கலை தெரியாது.

9. மிக ஒதுக்குப்புறமான இடங்களில் வசிக்கும் நாங்கள் சைக்கிள் பயன்படுத்த அனுமதி இல்லை. குதிரை வண்டிகள், பேருந்துகளில் எங்களுக்கு அனுமதி இல்லை.

10. பொது நிதியிலிருந்து கட்டப்பட்ட பொதுக் கழிப்பறைகளில் எங்களுக்கு அனுமதி இல்லை. தொடர்ந்து கேட்டதன் மூலம் தற்போது தனியான கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

11. உள்ளூர் நிர்வாகங்களின் சிகிச்சை மையங்களில் எங்களைத் தொட்டு வைத்தியம் பார்க்க மறுக்கின்றனர்.

12. கடுமையான கோடைக் காலங்களில் தண்ணீர்ப் பந்தல்களில் நீர் தர மறுக்கின்றனர். அப்படியே கொடுத்தாலும் மிக அவமானகரமான நிலையிலேயே அதைப் பெற வேண்டியிருக்கிறது.

13. உள்ளூர் நிர்வாக அமைப்புகளில் நாங்கள் தேர்வானாலும் சாதி இந்துக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமாசெய்துவிடுகின்றனர்.

14. நாங்கள் எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாலும் ஒரு சாதி இந்து அந்த வழியைக் கடந்து போனால் எழுந்து நின்று தலைகுனிந்து மரியாதை செய்ய வேண்டும், தவறினால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

15. முனிசிபாலிட்டி பகுதிகளில் பொதுக் குடிநீர்க் குழாய்கள் வைக்கச் சாதி இந்துக்கள் தொடர்ந்து மறுக்கின்றனர்.

16. பொதுநிதியிலிருந்து கட்டப்பட்ட பள்ளிகளிலும் எங்கள் குழந்தைகளுக்கு இடமில்லை. அப்படியே சேர்ந்தாலும் தனியாகவே அமர வேண்டும். ஆசிரியரிடம் சந்தேகம் கேட்க நெருங்கக்கூட அனுமதியில்லை. பள்ளிக் கழிவறைகளைப் பயன்படுத்தக் கூடாது. சில பள்ளிகளில் எல்லாப் பருவங்களிலும் எங்கள் குழந்தைகள் ஜன்னலுக்கு அருகில் நின்றே பாடம் பயில அனுமதிக்கப்படுகின்றனர். எங்களுக்கான தொடக்கநிலைப் பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் அடுத்துத் தொடர்ந்து பயிலச் சிரமம் உள்ளது. நாங்களேகூட பஞ்சாயத்து உறுப்பினர் என்ற பெயரில் பள்ளிகளில் நுழைந்துவிட முடியாது.

பள்ளிகளில் எங்கள் குழந்தைகள் குடிநீர்ப் பானைகளையோ குழாய்களையோ தொட்டுவிடக் கூடாது. யாராவது சாதி இந்துக் குழந்தை வந்துதான் நீர்சேந்தித் தர வேண்டும். அதையும் கைகளில் பிடித்தே குடிக்க வேண்டும், டம்ளர் வைக்க அனுமதி இல்லை. உண்ணும்போதும் எங்கள் குழந்தைகள் தனியாகவே அமர வேண்டும்.

17. பொதுஇடங்களில் இருக்கும் அஞ்சலகங்களில் நாங்கள் நேரடியாகச் சென்று எதையும் வாங்கிவிட முடியாது. எங்களைக் கடந்து செல்லும் சாதி இந்துக்கள் எவரையாவது கெஞ்சிக் கூத்தாடித்தான் தள்ளி நின்று அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

18. உங்களைப் போன்ற ஒருவர் எங்கள் ஆதி இந்துப் பிரிவில் பிறக்கவில்லையே, பிறந்திருந்தால் எங்கள் துன்பங்கள் புரிந்திருக்குமே என்று நாங்கள் வருந்துகிறோம்.

காந்தியின் தொடர்ந்த பயணத்தில் ஸ்ரீரங்கத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களின் பிரதிநிகள் காந்தியை பிப்ரவரி பத்தாம் தேதி டாக்டர் தி.சே. சௌ. ராஜன் இல்லத்தில் சந்திக்கிறார்கள்.

ஹரிஜன் சேவக் சங்கத்தில் பணிபுரிவோர் 98% பிராமணர்களாகவே இருக்கிறார்களே? இதில் 50% ஊழியர்கள் ஏன் ஒடுக்கப்பட்ட பிரிவினராக இருக்கக் கூடாது? இந்த ஊழியர்கள் எங்களது நம்பிக்கையைப் பெற வேண்டும் அல்லவா எனப் பல வினாக்கள் தொடுக்கப்பட்டன. இந்த வினா தொடர்ந்து பல இடங்களிலும் எழுப்பப்பட்டதை நாம் நினைவுகூரலாம்.

அடுத்து அஸ்ஸாமில் 18.4.1934இல் ஜோர்கட் எனுமிடத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுப் பிரதிநிதிகள் காந்தியைச்

சந்தித்துப் பல வினாக்களைத் தொடுக்கின்றனர். இந்த இயக்கம் உண்மையாகவே எங்கள் பிரிவு மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் என நீங்கள் நம்புகிறீர்களா? கிலாபத் இயக்கத்திற்காகத் துணை நின்று பழிகொண்டதுபோல இதுவும் ஆகிவிடாதா?

இடையறாத உரையாடல்கள்

பம்பாயில் பயணம் மேற்கொண்டிருந்த காந்தியை டாக்டர் அம்பேத்கர், தம் குழுவினரான ஜி.வி. நாயக், அம்ரித் ராவ் காம்பே, பாபுராவ் கெய்க்வாட் ஆகியோருடன் சென்று சந்தித்து உரையாடினார். இது 1934 ஜூன் 15ஆம் தேதி. காந்தி அம்பேத்கரிடம் ஹரிஜன் சேவக் சங் அமைப்பின் பணிகளைச் சீர்தூக்கிப் பார்த்து விமர்சனங்களையும் அதை மேலும் சிறப்புறச் செயல்படுத்த ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அம்பேத்கர் சங், கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கு உதவுகிறது. இதை அரசாங்கமே பல இடங்களில் செய்வதால் இதுபோலச் செய்தல் ஆகிவிடுகிறது. அத்தோடு, தனிப்பட்ட ஒருவருக்கு உபகாரச் சம்பளம் கொடுத்து உதவினால்அந்தத் தனிப்பட்டவர் மீண்டும் சமூகத்துக்குப் பங்களிப்பாரா என்ற கேள்வி அந்தத் தனி நபரைப் பொறுத்தது. எனவே, சேவக் சங் கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் தடையின்றி நீர் பெறவும் பொதுப் பள்ளிகளில் சேர்ந்து பயிலவும் உதவுவதோடு கிராமங்களில் ஒடுக்கப்பட்டோர் மோசமாக நடத்தப்படுவதைத் தடுப்பதிலும் முக்கியப் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அடுத்து கராச்சியில் ஜூலை 10ஆம் தேதி ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் 140 பேர் காந்தியைச் சந்தித்தனர். Punjab Land Alienation Actஇன் காரணமாகத் தாங்கள் தம் நில உரிமைகளை இழந்துவருவது குறித்தும் தேர்தல்களில் தமக்கான இடப்பகிர்வு குறித்தும் அவர்கள் காந்தியோடு உரையாடினார்கள். ஜூலை 13முதல் 17வரை லாகூரில் தங்கியிருந்து பிரச்சாரம் செய்த காந்தியைச் சந்தித்தவர்களில் 13ஆம் தேதி சந்தித்த சர்வ தலித் சபா என்ற அமைப்பும் ஒன்று. தீண்டாமை ஒவ்வொரு பிரதேசத்திலும் பொதுவான சில ஒடுக்குமுறைகளையும் பிரத்யேக ஒடுக்குமுறைகளையும் கொண்டிருந்தது கண்கூடு.

ஜூலை 21ஆம் தேதி கல்கத்தாவிலிருந்து கான்பூருக்குக் கிளம்பிக்கொண்டிருந்த காந்தியைக் கல்கத்தாவின்

Depressed Class Association அமைப்புக் குழுவினர் சந்தித்தனர். பிற இடங்களில் எழுந்த வினாக்களே இங்கும் எழுந்தன.

ஆகஸ்டு 2ஆம் தேதி காந்தியின் தீண்டாமை யாத்திரை பனாரஸில் நிறைவுக்கு வந்தது. ஆனால் தொடர்ந்து

அவர் இப்பிரிவு மக்களிடையே உரையாடிக் கொண்டேதான் இருந்தார்.

இந்த நீண்ட ஒன்பது மாத யாத்திரையில் காந்தி தான் பயணித்த இடங்களில் அமைந்திருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகள் பெரும்பாலானவற்றிற்கு நேரில் சென்றார். அங்கும் வாய்மொழியாகப் பல்வேறு கோரிக்கைகளும் வினாக்களும் எழுந்தன. ஒவ்வொரு பகுதியிலும் வாசித்தளிக்கப்பட்ட வரவேற்புரைகளில் இப்பிரிவு மக்களின் வரவேற்புரைகளும் இருந்தன. அவையும் தொகுக்கப்பட்டிருந்தால் மிகச்சிறந்த ஆவணங்கள் கிடைத்திருக்கும்.

நீளம் கருதியே காந்தியின் பதில்கள் தரப்படவில்லை. இந்தக் கேள்விகள் இன்றளவும் கண்கூடாய் உயிர்ப்போடு இருப்பதால் கேள்விகளும் கோரிக்கைகளுமே முக்கிய மாகின்றன.

இப்பெரும் பிரயத்தனத்தைப் பிரமாண்டமான மரத்தின் சிறு இலை அசைவாகவே காந்தியும் பின்னாட்களில் உணர்ந்துகொண்டார். 1945, ஆகஸ்ட் 21 அன்று பி.எஸ். மூர்த்தி என்பவருடனான உரையாடலில், ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் கல்வியளிக்கலாம்; ஆனால் தீண்டாமைக்கெதிரான கல்வியை சவர்ண இந்துக்களின் மனத்தில் ஊட்டுவது கடினம் என்ற தம் வருத்தத்தைப் பதிவுசெய்துள்ளார்.

‘வென்றிலன் என்றபோதும்’ என்ற கம்பரின் வரிதான் நினைவில் எழுகிறது.

பயன்படுத்திய நூல்கள்.

மகாத்மா காந்தி தொகுப்பு நூல்கள் (ஆங்கிலம்) தொகுதி- 56, 57, 58, 81

ஹரிஜன் இதழ் (ஆங்கிலம்) தொகுதி ஒன்று, இரண்டு

ரெட்டமலை சீனிவாசன் எழுத்துகளும் ஆவணங்களும் தொகுதி -1, தொகுப்பும் பதிப்பும்: கௌதம் சன்னா.

சித்ரா பாலசுப்ரமணியன்: கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அகில இந்திய வானொலி, பொதிகை தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பகுதி நேரப் பணியாற்றிவருகிறார். காந்தியின் 150ஆவது பிறந்த நாளை ஒட்டிப் பல்வேறு ஆளுமைகளை நேர்காணல் செய்தவர். காந்தியின் தண்டி யாத்திரை குறித்த ‘மண்ணில் உப்பானவர்கள்’ என்ற நூலின் ஆசிரியர். காந்தியின் தீண்டாமை யாத்திரை குறித்த நூல் ஒன்று விரைவில் வரவிருக்கிறது.

        

(இக்கட்டுரை 'காலச்சுவடு' ஜனவரி 2023 இதழில் 'தீண்டாமை யாத்திரையில் ஒடுக்கப்பட்டோர் குரல்' என்ற தலைப்பில் வெளியானது. இத்தளத்தில் அக்கட்டுரையின் தலைப்பில் மட்டும் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேறு மாற்றங்கள் இல்லை. -- அரவிந்தன் கண்ணையன்)

Friday, January 20, 2023

அமெரிக்காவில் ஒளிர்ந்த காந்தியப் பேரொளி

 மகாத்மா காந்தி கொலையுண்டச் செய்தியினை இந்தியாவுக்கும் உலகுக்கும் அறிவித்த ஜவஹர்லால் நேரு, “நம் வாழ்விலிருந்து ஒளி மறைந்து விட்டது, எங்கும் இருள் சூழ்ந்து விட்டதுஎன்றார். தொடர்ந்து பேசிய நேரு, “நம் வாழ்விலிருந்து ஒளி மறைந்து விட்டதென்றேன் ஆனால் அது தவறு ஏனென்றால் இந்நாட்டில் ஒளிர்ந்த அந்த ஒளி சாதாரணமானதல்ல. இத்தனை வருடங்கள் நமக்கு வழிகாட்டிய அந்த ஒளி தொடர்ந்து பல்லாண்டுகளுக்கு, ஏன் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும், இந்நாட்டில் காணப்படும், உலகம் அதனைப் பார்க்கும், பல உள்ளங்களுக்கு அமைதியை அவ்வொளி கொடுக்கும்என்றார். ஆம், அந்த பேரொளி உலகெங்கும் பரவியது. காந்தியப் பேரொளி அமெரிக்க கறுப்பினத்தவரின் உரிமைப் போராட்டங்களில் இரண்டறக் கலந்தது பலரும் அறிந்த செய்தி ஆனால் பலரும் அறியாதது, காந்திக்கும் அமெரிக்க கறுப்பினத்தவருக்குமான நெடுங்கால உறவு. இக்கட்டுரை அவ்வரலாற்றின் சில செய்திகளை அறிமுகம் செய்து கறுப்பினத்தவரின் மிக முக்கியப் போராட்டத்தில் எந்தளவு காந்தியம் நிலைப் பெற்றிருந்தது என்று விவரிக்கும்


அமெரிக்க கறுப்பினத்தவரின் உரிமைப் போராட்டங்களைத் தாண்டி அமெரிக்க கிறிஸ்தவர்களையும், நிற பாகுபாடின்றி, காந்தி பாதித்திருந்தார். அது பற்றியும் சிறிதே முக்கியமான உதாரணத்தோடு விளக்குகிறேன்.




காந்தியும் மார்டின் லூதர் கிங்கின் முன்னோடிகளும்


ஒடுக்கப்பட்டோருக்கு எப்போதும் உலகமயமானதொரு பார்வை இருக்கும். ஒடுக்கப்படுகிறவர்கள் தங்களைப் போன்றவர்களின் நிலையும் அதற்கெதிரான போராட்டங்கள் எவ்வாறு சம காலத்தில் உலகில் வேறிடங்களிலும் வரலாற்றிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று கற்று, தங்கள் சூழலுக்குள் அதிலிருந்து ஏதாவது செயலாற்ற முடியுமா என்று விவாதிப்பது உண்டு.


காந்தியை செதுக்கிய ஆசான்களில் பலர் அவரின் வாழ்க்கை வரலாறுகளில் எல்லாம் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறார்கள் - ஹென்றி டேவிட் தோரூ, ஜான் ரஸ்கின், டால்ஸ்டாய், கீதாசார்யன், ராமன், இயேசு முதலானோர். ஆசான்கள் என்ற வகைமைக்கப்பால் காந்தி மாஜினி போன்ற வரலாற்று நாயகனிடமிருந்தும் புக்கர் டி. வாஷிங்டன் போன்ற சமகால உரிமைப் போராளிகளிடமிருந்தும் கற்றார். புக்கர் வாஷிங்டன் அமெரிக்க கறுப்பின உரிமைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். தென்னாப்பிரிக்க போராட்டங்களின் ஆரம்ப நாட்களில் கறுப்பினத்தவர் பற்றி தாழ்வான அபிப்ராயங்களைக் கொண்டிருந்த காந்தி புக்கர் வாஷிங்டனை படித்து தன் கருத்துகளை மாற்றிக் கொண்டதோடு வாஷிங்டனின் உரிமைப் போராட்டம் குறித்த கருத்துகளையும் ஒரு காலம் வரை ஏற்றார். 1903-இல் காந்தி புக்கர் வாஷிங்டன் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறார். அநேகமாக காந்திக்கும் அமெரிக்க கறுப்பினத்தவருக்குமான முதல் தொடர்பு இதுவாகத் தான் இருக்கும்.


இந்தியாவில் காந்தி 1920-இல் ஒத்துழையாமை இயக்கத்தை துவங்கியதில் இருந்து அமெரிக்க கறுப்பினத்தவர் அவரை தொடர்ந்து கவனித்து தங்கள் பத்திரிக்கைகளில் எழுதி வந்தனர். மார்ச் 10, 1922-இல் காந்தி கைது செய்யப்பட்டார், இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 12, 1922 அமெரிக்க கறுப்பின உரிமைப் போராளி மார்கஸ் கார்வி காந்தியின் கைது பற்றி ஒரு நிகழ்ச்சியில் சுட்டிக் காட்டி “380 மில்லியன் மக்களின் உரிமையை நசுக்கும் அரசுகைது செய்திருக்கிறதென்றார். மார்கஸ் கார்வி தொடர்ந்து காந்தியை கவனப்படுத்துபவராக இருந்தார். “The Negro World” பத்திரிக்கை காந்தியின் வழக்கைத் தொடர்ந்து கவனித்து எழுதி வந்தது. மார்கஸ் கார்வியின் சுயசரிதையைப் படித்த காந்தி அதனால் உந்தப்பட்டு 1926-இல் எழுதிய “Race and Arrogance” கட்டுரையில் அமெரிக்க கறுப்பினத்தவர் பற்றி ஆதங்கத்துடன் எழுதியிருக்கிறார்


காந்திக்கும் அமெரிக்க கறுப்பினத்தவருக்குமான முக்கியமான தொடர்பாளர்களில் ஒருவர் டபிள்யு.. டு பாய் (W.E.B. Du Bois). லாலா லஜபதி ராய் அமெரிக்காவில் ஐந்து வருடங்கள் (1914 - 1919) இருந்த போது டு பாயை சந்தித்திருக்கிறார். 1928-இல் அமெரிக்கா சென்ற சரோஜினி நாயுடுவும் சந்தித்தார். காந்தியின் உற்ற நண்பர் சி.எஃப். ஆண்ட்ரூஸும் டூ பாயை சந்தித்திருக்கிறார். இவர்கள் மூலமாகவும் கறுப்பினத்தவரின் பத்திரிக்கைகள் வாயிலாகவும் காந்தியைப் பற்றி அறிந்த டு பாய் தான் 1929-இல் ஆரம்பித்த “The Crisis” பத்திரிக்கைக்கு காந்தியிடமிருந்து செய்தி வேண்டுமென்று கேட்டு கடிதமெழுத காந்தியும் அதற்கு பதில் செய்தி அனுப்பியிருக்கிறார். பின்னர் காந்தி குறித்து டு பாய் கட்டுரையும் எழுதினார்.


1930-களில் வெளிவந்த இரண்டு புத்தகங்கள் அமெரிக்காவில் காந்தியை பெருமளவு பேசுப் பொருளாக்கியது. ரிச்சர்ட் கிரெக் அமைதி விரும்பிகளான குவேக்கர் வகை கிறிஸ்தவர். இவர் சபர்மதி ஆஸ்ரமத்திலும் வேறு இடங்களிலும் இந்தியாவில் ஐந்து வருடம் தங்கியிருந்து காந்தியைப் பயின்றும், பரப்புரையும் செய்தவர். பின்னர் 1934-இல் “The Power of Non-Violence” புத்தகத்தை வெளியிட்டார். இரண்டாம் புத்தகம், 1939-இல் வெளிவந்த “War Without Violence”, இதனை எழுதியவர் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கெடுக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டு பின் அமெரிக்காவுக்கு சென்ற கிருஷ்ணலால் ஷ்ரீதாரணி . கிருஷ்ணாலால் ஷ்ரீதாரணியின் இப்புத்தகம் 1940-இல் ஸ்தாபிக்கப்பட்ட “Congress of Racial Equality” (CORE) நிறுவனத்துக்கு மிகப் பெரிய உந்துதல்


கிருஷ்ணலால் ஷ்ரீதாரணியின் புத்தகத்தால் ஊக்கம் பெற்ற போராளிகளுள் முக்கியமானவர் கறுப்பின பெண்மணி பாலி முர்ரே ( Pauli Murray). முர்ரே தன் நினைவு நூலில் 1940-களில் பல இளம் கறுப்பினத்தவர் காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு தங்கள் போராட்டங்களில் காந்திய வழிமுறைகளை இணைக்க முனைந்தனர் என்கிறார்


Pauli Murray

ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவரின் அறிவுத் தரப்பில் கல்விநிலயங்களில் செல்வாக்குடன் இருந்த மோர்தெகாய் ஜான்சன், பெஞ்சமின் மேய்ஸ், ஹோவர்ட் தர்மன் ஆகியோர் காந்தியுடன் கொண்டிருந்த தொடர்பும் காந்தியம் பற்றி அவர்கள் அமெரிக்காவில் செய்த உரையாடல்களும் மிக முக்கியமானவை. பெஞ்சமின் மேய்ஸ் 1937-இல் காந்தியை சந்தித்து விவாதித்திருக்கிறார். காந்தியத்தை சில விமர்சனங்களோடு தான் மேய்ஸ் ஏற்றார். ஹோவர்ட் தர்மன் 1935-இல் காந்தியை சந்தித்து விவாதித்தார். மார்டின் லூதர் கிங்குக்கு காந்தியை அறிமுகம் செய்ததில் மோர்தெகாய் ஜான்சனுக்கு பெரும் பங்குண்டு.


ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் உரிமைப் போராட்டத்தில் காந்தியத்தை அறிமுகம் செய்து பிணைத்ததில் மிக முக்கியமானவர் பேயார்ட் ரஸ்டின். ரஸ்டினும் கிருஷ்ணாலாலின் புத்தகத்தை படித்திருந்தார். ரஸ்டின் மீது செல்வாக்கு செலுத்திய ஒருவர்அமெரிக்க காந்திஎன்றழைக்கப்பட்ட .ஜே.மஸ்டி. மார்டின் லூதர் கிங் காந்தியை அறிந்திருந்தாலும் காந்தியத்தை செயல்பாடாக்க ரஸ்டின் தான் மிகப் பெரிய காரணி. ரஸ்டின் காந்தியை தத்துவார்த்த ரீதியாக மட்டும் பயிலாமல் யதார்த்த ரீதியாகவும் பயின்றார், மார்டின் லூதரும் அத்தகையதொரு அனுகுமுறையை காண்பித்தார். காந்தியைக் காண வரும் ஆயிரக் கணக்கானவர்களை அவர் கூட்டங்களில் எப்படி ஒழுங்கு செய்யப்பட்டார்கள் என்று அறிந்து அதனை பிற்காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க “March on Washington” கூட்டத்தில் செயல்படுத்தினார். அங்கு தான் மார்டின் லூதர் கிங்எனக்கு ஒரு கனவு இருக்கிறதுஉரையாற்றினார். ரஸ்டினும் மார்டின் லூதர் கிங்கும் இணைந்தது தான் வரலாற்றில்மண்ட்காமரி பேருந்து பிரயாண பகிஷ்கரிப்பு” (Montgomery Bus Boycott).

மார்டின் லூதர் கிங் காந்தியை அறிதல்


அமெரிக்க கல்லூரிகளில் கறுப்பினத்தவருக்காக அவர்களாலேயே நடத்தப்பட்ட பல கல்லூரிகளும் சில பல்கலைக் கழகங்களும் இன்றும் மதிக்கப்படுவன. அம்மாதிரி கல்லூரியான மோர்ஹவுஸ் (Morehouse College, Atlanta) கல்லூரியில் செப்டம்பர் 1944-இல் மார்டின் லூதர் கிங் சேர்ந்தார். அக்கல்லூரியின் பிரசிடெண்டான பெஞ்சமின் மேய்ஸ் மார்டின் மீது மிகப் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவர் என்று மார்டினே பதிவு செய்திருக்கிறார். பெஞ்சமின் மேய்ஸ் காந்தியை சந்தித்தது குறித்து முன்பு குறிப்பிட்டேன். மேய்ஸ் கல்லூரியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உரையாற்றுவது வழக்கம். அப்போதெல்லாம் மேய்ஸ் காந்தி பற்றி அடிக்கடி குறிப்பிடுவாராம். மோர்ஹவுஸ் கல்லூரியில் மார்டின் லூதர் கிங்குக்கு முன் பயின்று காந்தியால் ஈர்க்கப்பட்ட இன்னொருவர் ஹோவர்ட் தர்மன். தர்மன் முன்னர் குறிப்பிட்டது போல் மார்டின் லூதர் கிங்குக்கு முன்பே காந்தியால் ஈர்க்கப்பட்ட கறுப்பினத்தவரில் முக்கியமானவர்.


மோர்ஹவுஸ் கல்லூரிக்குப் பின் மார்டின் மேற்கொண்டு இறையியல் படிக்க பிலடெல்பியா நகரிலுள்ள குரோஸர் இறையியல் கல்லூரியில் சேர்ந்தார் (Crozer Theological Seminary). அங்குஅமெரிக்க காந்தி.ஜே.மஸ்டி  உரையாற்றியதை மார்டின் கேட்டார். மஸ்டியின் பூரண யுத்த எதிர்ப்பையும் நீட்ஷே வலிமையைப் போற்றுவதையும் தத்துவ மோதல்களாக மார்ட்டின் அவதானிக்க ஆரம்பித்தார். இவற்றுக்கிடையே 1950-இல் ஹோவர்ட் பல்கலைக் கழகத்தின் பிரசிடெண்ட் மோர்தெகாய் ஜான்ஸன் பிலடல்பியா நகரின் தேவாலயம் ஒன்றில் காந்தி பற்றி பேசியதை கேட்ட மார்டின் உடனே காந்தி பற்றி அறிய ஆறு புத்தகங்களை வாங்கிப் படித்ததாகச் சொல்கிறார். காந்தி பற்றிய புத்தகங்கள் அந்தளவு எளிதாக பிலடெல்பியாவில் கிடைத்ததே நமக்கு காந்தி எந்தளவு பிரபலமாக இருந்தார் என்பதைச் சொல்லும்


காந்தி ஏன் தன்னை ஆட்கொண்டார் என்று மார்டின் லூதர் கிங் தன்னுடைய “Stride Toward Freedom” நூலில் விளக்கியுள்ளார். “ அன்பை தனி மனிதர்களிடையேயான அறம் என்று மட்டுமே இருந்த புரிதலை காந்தி தனி மனிதனுக்கும் அதிகார திரட்சியான சமூகத்துக்கிடயே உறவுக்கும் பொருந்துமென்று புரிய வைத்தார். சமூக மாற்றத்துக்கு அன்பு ஒரு கருவியென்று காந்தி கருதினார். சமூக மாற்றத்துக்காக நான் பல மாதங்களாக தேடிக் கொண்டிருந்த கருத்தியலாக அன்பை வலியுறுத்தும் காந்தியம் எனக்குத் தோன்றியதுஎன்ற மார்டின் ஜெரமி பெந்தம், ஜான் ஸ்டூவர்ட் மில், கார்ல் மார்க்ஸ், லெனின், ரூஸோ, நீட்ஷே போன்றவர்களின் தத்துவங்களின் போதாமைகளோடு ஒப்பிட்டால் காந்தியின் தத்துவம் ஒடுக்கப்பட்டவர்களுக்கான தத்துவமாக தெரிந்ததாகவும் சொல்கிறார்





காந்தியம் கோழைத்தனமல்ல என்றும் மார்டின் விளங்கிக் கொண்டார். “உண்மையான அமைதி மார்க்கம் தீமைக்கு அடி பணிவதல்ல மாறாக தீமையை வன்முறையற்ற முறையில் எதிர்கொள்வதேதீமையை வன்முறையைக் கொண்டு எதிர்ப்பவருக்கு சற்றும் சளைக்காத வீரியத்தோடு எதிர்ப்பவர் காந்தி, ஒரே வித்தியாசம் அவர் வெறுப்பை தவிர்த்து அன்பின் வழியை கைக் கொள்பவர்.”


மார்டின் லூதர் கிங்குக்கு இறையியலாளர் ரெயின்ஹோல்ட் நீபுர் (Reinhold Neibur) முன்மொழிந்த மனித மனத்தின் தீமையிழைக்கும் பண்பு முக்கிய கருதுகோள் எனினும் நீபுர் மனித மனத்தின் கீழ்மைகளை தீர்க்கமாக கண்டறிந்த அதே நேரத்தில் மனித மனத்தின் கருணைக்கான பண்பினை போதிய அளவு கருத்தில் கொள்ளாதது அந்த தத்துவத் தரப்பின் போதாமை என்று முடிவுக்கு வந்தார். இவ்விடத்தில் தான் அவர் காந்தியத்தின் மகிமையைக் கண்டுணர்ந்தார்

அகிம்சை (non-violence) குறித்து மார்டின் லூதர் கிங் அதன் முக்கிய அம்சங்களை அடையாளப்படுத்தி சொல்பவை காந்தியம் பற்றி அறிந்தவர்கள் உடனடியாக காந்தியோடு தொடர்புபடுத்தி புரிந்துக் கொள்ள முடியும்.


அகிம்சை எதிர் தரப்பினரின் தோல்வியை விரும்புவதற்கு மாறாக அவர்களின் புரிதலையும் நட்பையும் வேண்டும். சத்தியாகிரகி தன் எதிர்ப்பை ஒத்துழையாமை, பகிஷ்கரிப்பு போன்ற செயல்களால் தெரிவிப்பார் ஆனால் அவை எதிர் தரப்பின் மனதில் தங்கள் செய்கை அல்லது கருத்தியல் பற்றி வெட்கம் கொள்ளச் செய்வதற்கு அச்செயல்பாடுகள் ஒரு மார்க்கம் தானே தவிர முடிவல்ல. முடிவில் மனதின் மீட்பும், காழ்ப்புகள் மறைந்த நட்புறவுமே குறிக்கோள்


அகிம்சை வழியின் பண்பு தீமைக்கு எதிரான போராட்டமே தவிர அத்தீமையைச் செய்யும் சூழலில் இருக்கும் மனிதர்களுக்கெதிரானதல்ல……..மண்ட்கோமரி மக்களுக்கு நான் சொல்வது இது தான், “இந்த நகரில் வெள்ளைக்காரர்களுக்கும் கறுப்பினத்தவருக்கும் இடையே உரசல் இல்லை. இங்கிருக்கும் உரசலின் அடித்தளம், நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் இடையே, ஒளிக்கும் இருளுக்குமான போராட்டம். இதில் வெற்றி என்பது 50,000 கறுப்பினத்தவரின் வெற்றி அல்ல மாறாக அது நீதிக்கும் ஒளிக்கும் கிடைத்த வெற்றி. நாம் அநீதியை வீழ்த்த தான் முறபடுகிறோமேத் தவிர அநீதியின் பால் நிற்கும் வெள்ளைக்காரர்களை வீழ்த்த அல்ல”. (‘We are out to defeat injustice and not white persons who maybe unjust”)”


அகிம்சையாளன் எதிரியின் ஓவ்வொரு அடியையும் திருப்பி அடிக்காமல் ஏற்க வேண்டும். ‘சுதந்திரம் கிடைக்கும் முன் ரத்தம் ஆறாக ஓடும் ஆனால் அது நம் ரத்தமாக இருக்க வேண்டும் (எதிரியின் ரத்தம் அல்ல) என்று காந்தி தன் தேசத்தவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்” (நேரு தன் சுயசரிதையில் போலீசாரின் லத்தி அடிகளால் வீழ்த்தப்பட்ட போது ஒரே பாய்ச்சலில் அவர்களை தாக்கும் உணர்வை கட்டுபடுத்திக் கொண்டதை நினைவுகூர்ந்திருப்பார்)


அகிம்சையின் இன்னொரு அம்சம் அது வெளிப்புற ஸ்தூலமான வன்முறையை மட்டும் தவிர்ப்பதல்ல, அது நம் ஆன்மாவினுள் இருக்கும் வன்முறையையும் தவிர்ப்பது. சத்தியாகிரகி எதிரியை சுட்டு வீழ்த்த மறுப்பதோடு அவனை வெறுக்கவும் மறுப்பவன்.”


இவ்விடத்தில் அன்பு செலுத்துவது என்பது மேம்போக்கான உணர்ச்சி அல்லது வெறும் பாசமல்ல. ஒடுக்குமுறையாளர்களை ஒடுக்கப்படுபவர்கள் பாசமாக நேசிக்க வேண்டுமென்பது முட்டாள்தனம். மாறாக, இங்கே அன்பு என்று குறிக்கப்படுவது மனங்களின் மீட்சிக்கான சாத்தியத்தின் புரிதல்” (‘Love in this connection means understanding, redemptive goodwill’).


இது வரை காந்தியத்தை தத்துவார்த்த புரிதலுக்குட்படுத்திய மார்டின் லூதர் கிங், ரஸ்டினைப் போல், அதிலிருந்து சற்றே நகர்ந்தி யதார்த்த புரிதலுக்கு வருகிறார். தங்கள் போராட்டத்துக்காக சிறைச் செல்ல வேண்டியிருக்கும் என்று உணர்ந்து அது குறித்த குற்ற உணர்வுக்கு பதில் சொல்ல மார்டின் காந்தியை மேற்கோள் காட்டுகிறார், “ஒருவன் நீதிக்காக கிளர்ச்சி செய்து சிறை செல்ல நேரிடுமென்றால் அவன் சிறைச் செல்வதை காந்தி சொல்வதுப் போல், 'முதலிரவு அறைக்குச் செல்லும் மணவாளன் போல்சிறிதே அச்சமும் மிகுதியான எதிர்ப்பார்ப்புடனும் செல்லட்டும்”. சிறைச் செல்வதை வெட்கம் கொள்ளத் தக்க செயலல்ல என்றும் கௌரவமாக நினைக்கக் கூடியதென்றும் காந்தியம் நிறுவியதால் பற்பல உயர்குடியினர், குறிப்பாகப் பெண்கள், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர்


இத்தகையப் புரிதல்களுடன் மார்டின் லூதர் கிங் மண்ட்கோமரி பேருந்து பகிஷ்கரிப்பு போராட்ட களத்துக்கு தலைமை ஏற்க வந்தார். அவருடன் களம் புகுந்த கறுப்பினத்தவர் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் மகத்தானதொரு அத்தியாயத்தை எழுத முற்பட்டனர்.


ரோஸா பார்க்ஸும் மண்ட்கோமரி போராட்டமும்


அமெரிக்க நிறப்பாகுபாடு சட்டங்கள்ஜிம் குரோ (Jim Crow) சட்டங்கள்என்று குறிக்கப்படும். அச்சட்டங்கள் வெள்ளைக்காரர்களும் கறுப்பினத்தவரும் சமூகத்தில் கலந்துறவாட தடை விதிக்கும் சட்டங்கள், அவை ஓவ்வொரு பொது இடத்திலும் கறுப்பினத்தவர் என்ன செய்யலாம், செய்யக் கூடாதென்று வரையறுப்பவை. பேருந்துகளில் வெள்ளைக்காரர்கள் முற்பகுதியும் கறுப்பினத்தவருக்கு பிற்பகுதி வரிசைகளும் விதிக்கப்பட்டவை அந்த பிற்பகுதி வரிசையிலும் சிலவற்றை வெள்ளைக்காரர்கள் கூட்டம் அதிகமானால் கறுப்பினத்தவர் விட்டுக் கொடுக்க வேண்டும். இப்படியான சட்டம் இருக்கும் அலபாமா மாநிலத்தில், மண்ட்கோமரி நகரில் ரோஸா பார்க்ஸ் என்கிற கறுப்பு பெண்மணி வெள்ளைக்காரர் ஒருவருக்கு இடமளிக்க மறுத்து தன் இருக்கையில் இருந்த எழாததற்காக டிசம்பர் 1, 1955 கைது செய்யப்பட்டார். ரோஸாவின் கைது ஒரு பெரும் போராட்டத்துக்கு வித்திட்டது. வெகு காலமாகவே இம்மாதிரி உள்ளூர் பேருந்துகளில் நிலவும் பாகுபாட்டிற்கு எதிராக பல இடங்களில் வழக்குகளும் போராட்டங்களும் நடந்துள்ளன. மண்ட்கோமரி நிகழ்வு தேசிய போராட்டமாக உருவெடுத்தது.


ரோஸா பார்க்ஸ் கைதான அடுத்த சில நாட்களிலேயே மார்டின் லூதர் கிங் போராட்டத்துக்கு தலைமையேற்க அழைக்கப்பட்டார். பேருந்துகளை தவிர்ப்பதென்று முடிவெடுத்த உடனே கார் வைத்திருந்த கறுப்பினத்தவர், டாக்ஸிகள் வைத்திருந்த கறுப்பினத்தவர் தங்கள் வாகனங்களை 10 செண்ட்டுக்கு வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு அளித்தனர். கவனிக்கவும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும், பெற்றோர் வேலைக்குச் செல்ல வேண்டும். வேலைக்கு வர இயலாதவர்களுக்கு இடர்கள் உண்டு. இந்த ஏற்பாடுகளைத் தாண்டி பல்லாயிர கணக்கானோர் நடைப் பயணமாக சென்ற காட்சிகள் அமெரிக்கா எங்கும் பரவியது. கறுப்புப் பெண்களை வேலையை விட்டு துரத்தும்படி அறிவுறுத்திய மேயரை வெள்ளைக்கார எஜமானிகள் அவரே வந்து பாத்திரம் கழுவுவாரா என்று கேட்டு தங்கள் வீட்டில் வேலைச் செய்யும் கறுப்புப் பெண்களை தாங்களே காரில் அழைத்து வந்தனர்





டிசம்பர் மாதம் “The Montgomery Advertiser”  ஜூலியட் மார்கன் எனும் வெள்ளைக்காரப் பெண்ணின் கடிதமொன்றை வெளியிட்டது, அப்பெண்மணி எழுதினார், “காந்தியின் மீது தாக்கம் செலுத்திய தோரூவிடமிருந்தும் காந்தியிடமிருந்தும் நம் நீக்ரோக்கள் (அக்காலப் பிரயோகம்) பாடம் கற்று இருக்கின்றனர்”. அவர் மேலும் மண்ட்கோமரி போராட்டத்தை காந்தியின் தண்டி யாத்திரையுடன் ஒப்பிட்டார் என்கிறார் மேரி கிங் (மார்டினின் உறவினரலல்ல) தன் “Mahatma Gandhi and Martin Luther King Jr: The Power of Nonviolent Action” புத்தகத்தில். அப்புத்தகமே இக்கட்டுரை எழுத ஊக்கமும்  செய்திகளும் அளித்ததில் முக்கியம்.


போராட்டத்தை செவ்வனே நடத்த பல கறுப்பினத்தவர் நடத்தும் சர்ச்சுகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டு போராட்ட நோக்கங்கள், போராட்ட வழி முறைகள், மனம் சோராதிருக்க கிறிஸ்தவ பிரசங்கங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய கூட்டங்களின் முக்கியமானதொரு அம்சம்காந்திய வழிமுறைகள் குறித்த குறு நாடகங்களும் பிரச்சாரங்களும்என்கிறார் மேரி கிங்.


போரட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒரு சர்ச் மீது வெள்ளைக்கார இனவெறியாளர்கள் குண்டு வீசி தாக்கினர். பழி வாங்க கறுப்பினத்தவர் ஆயுதங்களோடு ஆஜரான போது அவர்களை அமைதியின் வழி நடக்கச் சொல்லி அனுப்பி வைத்தார் மார்டின் லூதர் கிங். பின்னர் அவர் வேறொரு சமயத்தில்மண்ட்கோமரி போரட்டத்தின் போது எங்களுக்கு காந்தியின் வழிமுறை வழிகாட்டியாக இருந்ததுஎன்றார்


போராட்டத்தின் போது 27 வயதே மார்டின் லூதர் கிங் காந்தியப் போராட்டம் பற்றி அறிந்திருந்தாலும் அவருக்கு போராட்ட வழிகள் மிகப் புதிது என்றுணர்ந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி பேயார்ட் ரஸ்டினை உதவிக்கு அழைத்துக் கொள்ளச் சொன்னார். ரஸ்டினின் காந்திய ஈடுபாடு குறித்தும் உரிமைப் போராட்ட குழுக்களில் அவர் முக்கிய பங்கு பெற்றதையும் முன்பே பார்த்தோம். மண்ட்கோமரி வந்த ரஸ்டின் செய்த முதல் வேலை சிறைக்குச் செல்வது கேவலமல்ல என்றும் அதனை கொண்டாட்டமாகச் செய்யலாம் என்றும் அறிவுறுத்தியது தான். இதைத் தான் பின்னர் இப்போராட்டம் குறித்து எழுதிய மார்டின் காந்தியின் அறிவுரையோடு தொடர்புபடுத்தி எழுதினார். போரட்டத்தின் இடையே முன்பே சுட்டிக்காட்டிய ரிச்சர்ட் கிரெக் எழுதிய “The Power of Nonviolence” புத்தகத்தையும் கிருஷ்ணலால் ஷ்ரீதாரணியின் “War Without Violence” புத்தகத்தையும் மீள் வாசிப்பு செய்தார் மார்டின். இது வரை குறிப்பிட்டத் தகவல்களை நம் மனதுள் தொகுத்துக் கொண்டால் மண்ட்கோமரி போராட்டத்தின் ஆன்மாவாக காந்தியும் காந்தியமும் இருந்தது துலங்கும்.


மண்ட்கோமரி போராட்டத்தின் போது மார்டின் லூதர் கிங் தன் பாதுகாப்புக்கென துப்பாக்கி வைத்திருந்தார். ரஸ்டினை அது உறுத்தியது. காந்தியப் போராட்டத்தின் தலைவர் அப்படி வைத்துக் கொள்ளலாகதென வாதிட்டார். பின்னர் மார்டின் அவ்வழகத்தை விட்டாலும் அவரைச் சுற்றி இருந்தவர்கள் துப்பாக்கிகள் வைத்திருந்தது ஒரு முரண் தான்.


கிட்டத்தட்ட ஒரு வருடம் நீண்ட போராட்டம் கடைசியாக நவம்பர் 1956-இல் உச்ச நீதிமன்றம் இத்தகைய பிரித்து வைக்கும் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்த போது முடிவுக்கு வந்தது. ஒரு வகையில் மிக நீண்ட காந்தியப் போராட்டம் இதுவாகத் தான் இருக்கும். தீர்ப்பு மொத்தமாக எல்லா பிரச்சனையையும் தீர்த்து வைக்கவில்லை. எங்கும் உட்காரலாம் என்று உரிமைப் பெற்ற கறுப்பினத்தவர் பேருந்துகளில் பிரயாணித்த போது தாக்கப்பட்டனர். மிக மோசமாக தாக்கப்பட்டப் பெண் ஒருவர் திருப்பி அடிக்கும் உணர்வை தவிர்த்ததாகச் சொன்னார்


மண்ட்கோமரி போராட்டத்தின் வெற்றி பற்பல உரிமைப் போராட்டங்களுக்கு வழி வகுத்தது. அவற்றுள் வட கரோலினா மாநிலத்தில் கிரீண்ஸ்பரோ நகரில் உணவகங்களில் கறுப்பினத்தவர் மீது திணிக்கப்பட்ட பாகுபாட்டிற்கு எதிராக மாணவர்கள் சிறிய அளவில் ஆரம்பித்த போராட்டம் பல நகரங்களுக்குப் பரவியது. உணவகங்களில் சரி சமமாக உட்கார்ந்து தாங்களும் கடை சர்வீஸ் செய்யப்பட வேண்டுமென்று கோரினர். அப்படி உட்கார்ந்தவர்கள் மீது வெள்ளைக்காரர்கள் தாக்குதல்கள் நடத்துவது வாடிக்கை. இப்படியானஉட்கார்ந்து போராடுவது” (Sit-ins) கல்லூரி மாணவர்களால் முன் எடுக்கப்பட்டது. அவர்கள் வகுத்துக் கொண்ட நெறிமுறைகள், “திருப்பி அடிக்கவோ வசைச் சொற்களை பயன்படுத்துவதோ கூடாது, கடை வாசல்களை மறிக்கக் கூடாது, எப்போதும் நட்புணர்வை வெளிப்படுத்த வேண்டும்ஆகியவை. இப்போரட்டங்களை ஆரம்பித்த ஒருவர் இந்தியா பற்றிய ஆவணப் படம் ஒன்றைன் மூலமாக காந்தியை அறிந்தததாகவும் காந்திய வழிமுறையால் ஈர்க்கப்பட்டதாகவும் சொன்னார். இப்போராட்டம் மண்ட்கோமரி போராட்டம் மாதிரி காந்தியப் போராட்டமாகவே இன்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.


நம் தமிழகத்தில் கடந்த எண்பதுகள் வரையும் கூட மீனாட்சிபுரம் போன்ற ஊர்களில் தலித்துகள் பேருந்துகளில் உட்கார்ந்து பயணிக்க முடியாது. ஆதிக்க சாதியினர், சிறு வயதினர் கூட, எவ்வளவு வயதான தலித்தையும் இருக்கையில் இருந்து எழச் சொல்ல முடியும். அமெரிக்கவிலாவது நிற வேறுபாடு ஒருவரை வேறுபடுத்திக் காட்டிக் கொடுக்கும் ஆனால் தமிழகத்தில் ஒரே மாதிரி இருக்கும் இருவருக்குள் இது எப்படி சாத்தியமாகின்றது என்பதே அவல ஆச்சர்யம். இப்படியான ஒதுக்குதலுக்கு எதிர்ப்பாகத் தான் மீனாட்சிபுரத்தில் தலித்துகள் இஸ்லாமுக்கு மதம் மாறினர். அப்படி மதம் மாறிய ஒருவர் பேட்டியொன்றில் தான் இனி இருக்கையில் இருந்து எழத் தேவையில்லை என்றார். இப்படி ஒரு அநீதி சம காலத்தில் நம் மாநிலத்திலேயே நடப்பது பலரும் அறியாதது.


கிறிஸ்தவ இறையியலின் மீதான காந்தியின் செல்வாக்கு


காந்திக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மிக சுவாரசியமான உறவு இருந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளின் மத மாற்ற முயற்சிகளையும், மதம் மாறுபவர்களையும் அளவுக்கு அதிகமாகவே காந்தி கடிந்துக் கொண்டார். ஆயினும் கிறிஸ்தவ இறையியலாளர்கள் காந்தியை தேன் நிரம்பியப் பூவை மொய்க்கும் வண்டுகள் போல் மொய்த்தனர். காந்தி மேற்கத்திய கிறிஸ்தவ தேவாலயங்களில் பேசப்பட்டதுப் போல் இந்து மடங்களிலோ இந்து சமய அமைப்புகளிலோ பேசப் பட்டதில்லை. காந்தியில் ஒரு கிறிஸ்துவை பல இறையியலாளர்கள் கண்டனர். காந்தியை மதம் மாற்ற முயற்சிகளும் நடந்தன ஆனால் அம்மாதிரி அற்பத்தனங்களில் ஈடுபடாமல் அவரின் சத்தியாகிரக கருத்தியலில் கிறிஸ்துவின் போதனைகளின் சாரத்தைக் கண்டு அவற்றை அவர் நடைமுறைப்படுத்தும் ஆச்சர்யத்தை அறிந்து, விவாதித்து, சுவீகரித்து தங்கள் இறையியல் கற்பிதங்களுக்குள் அவரின் கருத்தியலைப் பொருத்தி கவுரவமான உறவினைக் கொண்டவர்கள் அநேகர். இங்கு இரண்டு உதாரணங்களைக் காண்போம்.


1936-இல் காந்தியை ஹோவர்ட் தர்மன் பார்டோலியில் சந்தித்தார். 1949-இல் தர்மன் எழுதிய “Jesus and the Disinherited” நூலில் காந்தியிடமிருந்து கறுப்பினத்தவர் கற்றுக் கொள்ளக் கூடியதென்று அவர் அடையாளப்படுத்தியது, சமரசமற்ற நேர்மையான சொல்லாடலை. ஒடுக்குமுறையை சமாளிக்கும் தந்திரமாக ஒடுக்கப்படுபவர்கள் கையாளும் தந்திரோபாயங்களுள் பொய்மையும் ஒன்று ஆனால் அது காலப் போக்கில் உள்ளத்தை காவு வாங்கக் கூடியதென்று சொல்லி காந்தி முன் வைக்கும் சமரசமற்ற நேர்மையைப் பரிந்துரைக்கிறார். தர்மன் காந்தியின் யோசனையை விவிலியத்தில் சொல்லப்படும்எக்கேள்விக்கும் ஆம் அல்லது இல்லை என்று தெளிவுறப் பேசினால் பொய்க்கு இடமிருக்காதுஎன்ற வசனத்தோடு தொடர்புபடுத்திச் சொல்கிறார்


Picture from:  https://www.beaconbroadside.com/broadside/2014/10/when-howard-thurman-met-mahatma-gandhi-nonviolence-and-the-civil-rights-movement.html


இரண்டாம் உதாரணம் மார்டின் லூதர் கிங்கின் ஓரு பிரசங்கத்தில் இருந்து. கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளிக்கு முன்பான ஞாயிறு குருத்தோலை ஞாயிறு (Palm Sunday) என்று கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள். முக்கியமான அந்த நாள் ஒன்றில், மார்ச் 22 1959-இல், மண்ட்கோமரி போராட்டத்தின் போது தாக்கப்பட்ட்ட அதே தேவாலயத்தில் காந்தி பற்றி பிரசங்கம் செய்தார் மார்டின்


குருத்தோலை ஞாயிறன்று தான் கிறிஸ்து ஜெருசலேமிற்குள் நுழைந்தார், அவர் தங்கள் அரசர் ஆவார் என்று யூதர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆகவே இந்நாளில் சம்பிரதாயமான பிரசங்கங்கள் தேவனின் அரசத் தன்மை, இறைத் தன்மை என்ற கோணங்களில் இருக்கும் ஆனால் தான் இந்தியர் ஒருவர் பற்றி பேசப் போவதாகவும் அந்த இந்தியர் கிறிஸ்துவின் சாரத்தைப் பிரதிபலித்தவர் என்றும் சொல்லிப் பேச ஆரம்பித்தார் மார்டின் லூதர் கிங்.


காந்தியிடம் கிறிஸ்துவின் சாரமாக மார்டின் கண்டது காந்தி தன் வாழ்வில் தனி வாழ்வு, பொது வாழ்வு என்ற பிரிவினைகள் இல்லாமல் பூரண வெளிப்படைத் தன்மையுடன் வாழ்ந்த நேர்மையை. சராசரி மனிதன் தன் வாழ்வில் எப்பொதும் வாழும் வாழ்க்கைக்கும் வாழ நினைக்கும் வாழ்க்கைக்கும் ஒரு இடைவெளி இருக்கும். அப்படியான இடைவெளியில்லாத நேர்மையான வாழ்வை காந்தி வாழ்ந்தார் என்றார் மார்டின். “In his life there was no gulf between the “is” and the “oughts”. Here was a man who had absolved the “isles” of his being and the “lightness” of his being.”


மனிதர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள், தலைவர்களும். தவறிழைக்கும் தலைவர்கள் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டுமென்று காந்தி வன்முறை நிகழ்வொன்றினுக்குப் பின் தேசமெங்கும் தீவிரமடைந்திருந்த ஒத்துழையாமை போரட்டத்தை மன்னிப்புக் கோரி திரும்பப் பெற்றதை மார்டின் சுட்டிக் காட்டினார்.


இந்த பிரசங்கத்தை மார்டின் இந்தியாவுக்கு ஒரு பயணம் மேற்கொண்டு திரும்பியப் பின் அளித்தது. இந்தியப் பயணத்தின் போது நேருவுடன் விருந்துண்ட போது அங்கிருந்த மற்றொரு விருந்தினர் இந்தியர்களை அடிமைப் படுத்திய காலனிய ஆட்சியின் பிரதிநிதியாக இருந்த வைஸ்ராயின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன் என்று குறிப்பிட்டு இத்தகைய நிகழ்வு வெறுப்பை விலக்கிய காந்தியப் போராட்டத்தால் தான் சாத்தியமாயிற்று என்றார்


தேசத்தின் பிளவுகளை குணப்படுத்த முனைந்ததற்காகவே அபிரஹாம் லிங்கன் போல் காந்தியும் சுடப்பட்டார் என்று பிரசங்கத்தின் இறுதியில் இத்தகைய வாழ்வுகளின் முடிவுகள் பற்றி சொன்னார் மார்டின். அவர் வாழ்வும் அப்படியே முடிந்தது வரலாற்று சோகம்


பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே


ஜவஹர்லால் நேருவின் எழுத்துகளின் தொகுப்பு 90 தொகுதிகளைக் கடந்தது. அத்தொகுதிகளை தொகுத்து முடித்த வரலாற்றாசிரியர் சொன்னது ஓரிடத்தில் கூட நேரு யாரைப் பற்றியும், எந்த குழுவினரைப் பற்றியும் அவச்சொல் சொன்னதில்லை, அவர் முற்றிலுமாகப் பகைமையுணர்வைக் கடந்தவர் என்றார். காந்தியின் வாழ்வின் மையக் கருத்தே அது தான். மார்டின் லூதர் கிங், ஹோவர்ட் தர்மன், பெஞ்சமின் மேய்ஸ், பேயார்ட் ரஸ்டின் போன்ற பலருக்கு காந்தியின் வாழ்வில்பிதாவே இவர்களை மன்னியும்என்று தன்னை சிலுவையில் துடி துடிக்க அறைந்தவர்களுக்காக இறைஞ்சிய காவிய நாயகனை கண்டார்கள். அதுவரை விவிலியத்தில் தொன்மமாக மட்டுமே அறிந்த, தாங்கள் நிஜமென்று நம்பினாலும், அன்றாட வாழ்வில் சாத்தியப்படுமா என்று சந்தேகித்த வாழ்வை ரத்தமும் சதையுமாக காந்தி வாழ்ந்து கொண்டிருந்ததே அவர்களை ஈர்த்தது


காந்தி எப்படி டால்ஸ்டாய், மலை பிரசங்கம், தோரூ என்று பலரிடமிருந்து கற்றாலும் தன் இந்து பண்பாட்டு மரபில் அவற்றை பொருத்தி மீள் உருவாக்கம் செய்து கொண்டாரோ அதே போல் மார்டின் லூதர் கிங் போன்றவர்களும் தங்கள் பண்பாட்டு தளத்திலிருந்த கருத்துகளில் காந்தியத்தை கலந்து தான் மீள் உருவாக்கம் செய்து கொண்டனர். காந்தியும் மார்டினும் ஒருவர் மரபிலிருந்து இன்னொருவர் பெற்றும் கொடுத்தும் மானுடம் உய்வதற்கான வழிமுறைகளை கண்டறிந்த மகான்கள் என்ற அளவில் தான் நான் புரிந்துக் கொள்ள வேண்டும். இன்று இந்தியாவின் தலித் செயல்பாட்டாளர்கள் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் போராட்டங்களில் இருந்து கருத்துகளைப் பெற்று இந்தியாவில் முன்னெடுப்புகள் செய்வதும் இந்த அபாரமான தத்துவ பரிமாற்றத்தின் ஒரு அங்கம்.


நம் போன்ற சாதாரணர்கள் அன்றாட வாழ்வில் நம்மை சுற்றி நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்களைத் தான் முன்னெடுக்க வேண்டும் என்றில்லை. காந்தியும், மார்டின் லூதர் கிங்கும் நமக்கு காட்டும் அற உணர்வுகளின் சிறு துளியாவது நம் மனங்களில் குடியிருந்து ஒடுக்கப்படுகிறவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்காக நம் மனக்குரல் ஒலிக்க வேண்டும், வெறுப்பகளில்லாமல்


நன்றி: இக்கட்டுரை காலச்சுவடு இதழில் ஜனவரி 2023-இல் வெளியானது. காலச்சுவடு ஆசிரியர் குழுவுக்கு நன்றி

உசாத்துணைகள்

சுட்டிகள்

  1. https://en.wikipedia.org/wiki/Sudarshan_Kapoor 
  2. https://www.ncronline.org/opinion/book-reviews/mentors-american-gandhi 
  3. https://en.wikipedia.org/wiki/Montgomery_bus_boycott 
  4. https://en.wikipedia.org/wiki/Martin_Luther_King_Jr (1929 - 1968)
  5. https://en.wikipedia.org/wiki/Ralph_Abernathy (1926 - 1990)
  6. https://en.wikipedia.org/wiki/Bayard_Rustin (1912 - 1987)
  7. https://en.wikipedia.org/wiki/Rosa_Parks (1913 - 2005)
  8. https://en.wikipedia.org/wiki/Congress_of_Racial_Equality Founded in 1942.
  9. https://en.wikipedia.org/wiki/Pauli_Murray (1910 - 1985)
  10. https://en.wikipedia.org/wiki/A._J._Muste (1885 - 1967)
  11. https://en.wikipedia.org/wiki/Marcus_Garvey (1887 - 1940)
  12. https://en.wikipedia.org/wiki/Reverdy_C._Ransom (1861 - 1959)
  13. https://en.wikipedia.org/wiki/Richard_Gregg_(social_philosopher) 
  14. https://en.wikipedia.org/wiki/Krishnalal_Shridharani (1911 - 1960)
  15. https://en.wikipedia.org/wiki/James_Lawson_(activist) (1928 -…) 94 years old.
  16. https://en.wikipedia.org/wiki/Reinhold_Niebuhr (1892 - 1971)
  17. https://crossculturalsolidarity.com/gandhis-connections-with-booker-t-washington-w-e-b-du-bois-and-marcus-garvey/ 
  18. https://thewire.in/history/howard-thurman-gandhi-nonviolence-civil-rights-movement 
  19. https://www.mkgandhi.org/chrono/arrestofmahatma.php 
  20. https://www.nytimes.com/1928/10/14/archives/indias-poetess-to-visit-america-sarojini-naidu-will-tell-of-the.html 
  21. https://theprg.files.wordpress.com/2009/07/puri-lala-lajpat-rai.pdf 
  22. https://credo.library.umass.edu/view/pageturn/mums312-b181-i613/#page/1/mode/1up 
  23. https://credo.library.umass.edu/view/pageturn/mums312-b210-i035/#page/1/mode/1up 
  24. https://gandhiking.ning.com/notes/Gandhi%27s_Influence_on_the_Modern_African_American_Freedom_Struggle 
  25. https://www.baltimoresun.com/news/bs-xpm-1998-01-19-1998019084-story.html 
  26. https://kinginstitute.stanford.edu/sites/mlk/files/publications/vol1intro.pdf#page=16 
  27. https://kinginstitute.stanford.edu/encyclopedia/johnson-mordecai-wyatt 
  28. https://kinginstitute.stanford.edu/encyclopedia/morehouse-college 
  29. https://www.beaconbroadside.com/broadside/2014/10/when-howard-thurman-met-mahatma-gandhi-nonviolence-and-the-civil-rights-movement.html

புத்தகங்கள்

    1. Mahatma Gandhi and Martin Luther King Jr. — Mary King
    2. The Radical King - Edited by Cornel West
    3. Lost Prophet: The Life and Times of Bayard Rustin - John D’Emilio
    4. American Gandhi: A.J. Muste and the History of Radicalism in the Twentieth Century — Leila Danielson
    5. Jesus and the Disinherited - Howard Thurman
    6. Rhetoric, Religion and the Civil Rights MOvement (1954-1965) - Davis W. Hook and David E. Dixon.
    7. Stride Toward Freedom: The Montgomery Story — Martin Luther King Jr.
    8. Negro With a Hat: The Rise and Fall of Marcus Garvey — Colin Grant
    9. Ella Baker and the Black Freedom Movement: A Radical Democratic Vision — Barbara Ransby
    10. The New Abolition: W.E.B. Du Bois and the Black Social Gospel - Gary Dorrien
    11. Pauli Murray: Song in a Weary Throat. Memoir of an American Pilgrimage.