Showing posts with label Dravidian. Show all posts
Showing posts with label Dravidian. Show all posts

Wednesday, March 7, 2018

கர்நாடக சங்கீதத்தின் பிராமணமயமாக்கலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியும்

கர்நாடக சங்கீதத்தின் பிராமணமயமாக்கலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியும்

எம்.எஸ். சுப்புலக்‌ஷ்மியின் நிறம் கறுப்பாக இருந்திருந்தாலோ, அவர் தன்னை பிராமணப் பெண்மணியாக முன்னிறுத்தாமல் இருந்திருந்தாலோ, பக்த சிரோன்மணியாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்திருந்தாலோ அவர் இன்று பிராமணர்களிடையே அடைந்திருக்கும் இன்றைய ஏகோபித்த ஏற்பையோ புகழையோ அடைந்திருப்பாரா என்று டி.எம்.கிருஷ்ணா கேள்வி எழுப்ப சர்ச்சை வெடித்தது. 

குறிப்பு: இக்கட்டுரை காலச்சுவடு பத்திரிக்கையில் பிப்ரவரி இதழில் முதலில் வெளிவந்தது. அவர்கள் அனுமதியோடு என் தளத்தில் வெளியிடப்படுகிறது. பிரசுரித்த அவர்களுக்கு நன்றிகள். குறிப்பாக என் தமிழை மெய்ப்புப் பார்த்த அந்தப் பொறுமைசாலிக்கு நன்றிகள். 

தமிழ் வடிவில் எப்படி காலச்சுவடுக்கு அளிக்கப்பட்டதோ அப்படியே இங்கு பதிவிட்டுள்ளேன். காரணம் இரண்டு. பத்திரிக்கைப் பிரதியும் இணையத்தில் வெளியிடப்படுவதும் ஒன்றாக இருக்க வேண்டும். மிகச் சொற்பமான திருத்தங்கள் செய்யப்படுள்ளன. இக்கட்டுரையில் சொன்னதைப் போல் இதன் விரிவான ஆங்கில வடிவம் https://contrarianworld.blogspot.com/2018/02/carnatic-music-and-bharata-natyam.html

சரி, அப்படியென்றால் ஏன் இங்கே வெளியிட வேண்டும். காலச்சுவடு இணையத் தளம் சில மாறுதல்களைச் செய்கிறது. முன்பு கட்டுரை வெளிவந்த 15- நாட்களில் எல்லோரும் படிக்கும் வண்ணம் இருக்கும் இப்போது அப்படியில்லை. இக்கட்டுரை நான் எழுதியவைகளிலேயே அதிக உழைப்பைக் கோரிய ஒன்று. தமிழில் படிப்பது சிலருக்குச் சுலபம். ஆங்கிலக் கட்டுரையை விட இது சுருக்கமானதும் கூட. ஆகவே தான் பதிப்பகத்தாரின் அனுமதி கிடைத்த பின்பே இங்கு வெளியிடுகிறேன்.

முன்னுரை

கிருஷ்ணாவும் அவருக்கு மறுப்பு எழுதிய பலரும் கர்நாடக சங்கீதமும் பரதமும் பிராமணமயமாக்கலின் பின்னனியையும், எம்.எஸ். சமகாலத்தில் எப்படிப் பார்க்கப் பட்டார் என்பனப் போன்றவற்றைத் தரவுகளோடு எழுதப்பட்ட முதன்மை ஆராய்ச்சியாளர்களின் பல்கலைக் கழக வெளியீடுகளைச் சுட்டிக் காட்டவில்லை. வரலாற்றெழுத்தில் முன் முடிவுகளுக்கு சாதகமானத் தரவுகளைத் தேடிப் போக கூடாது, மேலும் சாதகமான தரவுகள் கிடைத்தாலும் அக்கருத்துகள் தகுந்த ஆதாரங்களோடு வைக்கப் பட்டிருக்கின்றனவா, அவற்றை யாராவது மேலதிக ஆதாரங்களோடு மறுத்திருக்கின்றார்களா என்றெல்லாம் சீர் தூக்கிப் பார்த்து எழுதப் பட வேண்டும். அப்படியான முயற்சி இக்கட்டுரை. இக்கட்டுரையின் விரிவான வடிவம் மேலதிக தகவல்களுடன் என் தளத்தில் வெளியிடப்படும். அமண்டா வீட்மேன், லக்‌ஷ்மி சுப்ரமணியன், மில்டன் சிங்கர், முனைவர் கே. சதாசிவன், தாவேஷ் சோன்ஞி, பேராசிரியர் நம்பி ஆரூரன், ஆகியோரின் நூல்களை வைத்து எழுதப்பட்டது இக்கட்டுரை. 

இந்து பத்திரிக்கையின் இலக்கிய விழாவில் உரையாடிய சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன் ஒவ்வொருவர் ஒவ்வொரு தொழிலைச் செய்து பொருள் ஈட்டுவதாகவும் தனக்கு சங்கீதம் அப்படியே என்கிறார். மேலும் சபையோரின் மூலம் தான் உற்சாகம் பெறுவதாகவும் சொல்கிறார். தான் சங்கீதம் கற்க உற்சாகம் அளித்தது நவராத்திரியின் போது வீடுகளில் பாடினால் அதிகமாக கிடைத்த சுண்டல் என்கிறார். இவற்றையெல்லாம் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக் கொண்டு குதூகலமாகப் பேசுகிறார். அவர் பேச்சில் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் இது எதையும் எம்.எஸ் மட்டுமல்ல இன்றைய பிராமண பெண் பாடகர்கள் கூட எளிதில் பேசி விட முடியாது. அது தான் கிருஷ்ணாவின் விமர்சனத்தின் மையம்.



எம்.எஸ். சுப்புலக்‌ஷ்மியின் தோற்றமும் அதன் அரசியலும்

 எம்.எஸ் பற்றி இந்திரா மேனன் சொல்கிறார், “அவர் உலகத் தலைவர்களோடு ஆளுமையாக மென்மையாகவும் கவுரமாகவும் வலம் வந்தாலும் வீட்டில் அவர் சராசரி வீட்டுப் பெண். வீட்டில் அவர் பூஜை அறைக்கு மாலை கோர்த்துக் கொண்டு, கோலம் போட்டுக் கொண்டிருப்பார். மேடையிலோ அவர் ஓர் ஈர்க்கும் புண்ணகை அல்லது தூக்கிய புருவம் ஆகியவற்றால் கவர்கிறார், சபையோருக்காக அல்ல தெய்வத்துக்காக”. 

எம்.எஸ்ஸின் தோற்றம் கவனமாக வடிவமைக்கப் பட்டது என்கிறார் லக்‌ஷ்மி சுப்ரமணியன். பிராமணர்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விழையும் பிம்பங்களுக்கு எம்.எஸ்ஸின் பாடலும் அதில் தோய்ந்த பக்தியும் முக்கியமான அங்கமாயின. ஆண்கள் மேடைகளில் ஜிப்பா, வேஷ்டி-சட்டை என்று விதவிதமாக  அணியலாம் ஆனால் கர்நாடக சங்கீத மேடைகளில் பெண்களுக்கான உடையும் அலங்காரமும் வரையறுக்கப்பட்டவை என்கிறார் வீட்மேன். இதை இன்றும் காணலாம். இது தற்செயல் அல்ல. பெண் என்பவள் பண்பாட்டின் சின்னமாகவும் அவள் உடை பண்பாட்டின் வெளிப்பாடாகவும் பார்க்கும் மரபின் நீட்சி இது. ருக்மினி தேவி தேவதாசிகளின் சதிர் அல்லது சின்ன மேளம் என்றழைக்கப்பட்ட நடனத்தை பரதம் என்று பெயர் மாற்றியதோடு செய்தது பரதநாட்டியத்தின் உடையை மாற்றியமைத்தது தான். பால சரஸ்வதி அந்த உடை மாற்றத்தை ஏற்கவில்லை. எம்.எஸ். மடிஸார் அணியலாமா என்று காஞ்சி பரமாச்சாரியாரிடம் கேட்கப் பட்டது. 

பெண் பாடகிகளின் குரலின் அரசியல்

எம்.எஸ்ஸின் குரல் சுதந்திரமாக ஒலித்தக் காலத்தையும் பின்னர் சபையோருக்கு தேவையான பக்தி ரசமிக்க குரலாக மாறியதை கிருஷ்ணா சுட்டிக் காட்டினார். எம்.எஸ். ‘ராமா நன்னு ப்ரோவரா’ பாடினால் அதில் இழையோடிய சோகமும் பக்தியும் அவர் வாழ்வின் கசப்பில் இருந்து வந்தவை அதனால் தான் அந்த குரலில் அப்படியொரு உணர்வுப் பெருக்கு என்பாராம் வீட்மேனின் சங்கீத ஆசிரியர். பெண் பாடகிகளின் குரல் பற்றி ஆண் விமர்சகர்கள் முன் வைத்த விமர்சனங்களை வீட்மேன் மேற்கோள் காட்டுகிறார்.

“பெண்கள் பாடும் போது அது அவர்களுக்கு இயற்கையாக வரும் குரலாக இருத்தல் அவசியம் என்று கருதப்பட்டது. இயற்கையான குரல் என்பதும் கற்புள்ள பெண் உடலும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தப்பட்டன. 1950-களில் சங்கீதம் பாடும் பெண்களின் குரலும் சினிமா பாடல் பாடும் பெண்களின் குரலும் ‘இயற்கையான குரல்’, ‘செயற்கையான குரல்’ என்று தரம் பிரிக்கப்பட்டன”. எம்.எஸ்ஸின் குரலை புகழ்ந்து எழுதிய கல்கி கிருணமூர்த்தி லதா மங்கேஷ்கரின் குரலை ‘வசீகரமானது’ என்று குறிப்பிட்டு ரசிகர்கள் அதில் தங்கள் மனத்தை தொலைத்து விடலாகாது என்று எச்சரிக்கிறார். இங்கே ‘வசீகரமானது’ என்பது பாலியல் ரீதியாக கவர்ந்திழுப்பதை குறிப்பது என்கிறார் வீட்மேன், சரியாக. 

பெண் பாடகிகளின் குரலின் இயற்கைத் தன்மையும் புனிதத்துவமும் அவர்கள் சங்கீத மேடையைத் தவிர வேறேங்கும் வேறெந்த பிரச்சினையிலும் தங்கள் குரல் ஒலிக்காமல் இருக்கும் போது பாதுகாக்கப் படுவதாக கருதப்படுகிறது என்கிறார் வீட்மேன். பெங்களூர் நாகரத்தினம் அம்மாளும் வை.மு.கோதைநாயகியும் பொது விஷயங்கள் குறித்துச் சுதந்திரமாக கருத்துச் சொன்ன காலத்தில் எம்.எஸ்ஸும் பட்டம்மாளும் மௌனம் காத்தனர். இது இன்றும் தொடரும் பழக்கம். டி.எம்.கிருஷ்ணா, சித்திர வீணை ரவிக்கிரன் ஆகியோர் பத்திரிக்கைகளில் பல விஷயங்கள் குறித்து எழுதிகிறார்கள். ஆனால் பெண்கள்?

அருனா சாய்ராமோடு ஓர் உரையாடலில் வி.ஸ்றீராம் பிருந்தா பற்றி ஓர் ஆண் பாடகர், “தேனொழுக பாடுகிறாள் ஆனால் நாக்குல அரிவாள்மனையை வெச்சிருக்கா” என்றதை மேற்கோள் சொன்னார். ஒரு பெண்ணின் இடம் எது என்பதை ஆண்கள் வரையறுக்கும் தருணம் அது தான். பெண்கள், பிராமணர்கள் உட்பட, தமக்கென ஒரு குரலுடன் இருப்பதை ஆணாதிக்கம் அனுமதிப்பதில்லை.

தேவதாசிகளும் மியூஸிக் ஆகடமியும்

வீணை தனம்மாள், பிருந்தா மற்றும் பால சரஸ்வதியை சென்னை மியூஸிக் அகாடமியும் அவர்களிடம் பயின்ற பிராமண சங்கீத வித்வான்களையும் மேற்கோள் காட்டி அத்தகைய நிகழ்வுகள் கர்நாடக சங்கீதம் மற்றும் அதன் விற்பன்னர்களின் பன்முகத் தன்மைக்கும் ஓர் எடுத்துக் காட்டாகச் சொல்லப் படுகிறது. இந்த நிகழ்வுகளின் பின்னனியில் சிக்கலான வரலாறு உண்டு.

தேவதாசிகளின் வரலாறு வரலாறு அறியாதவர்களால் இப்போது பிரச்சாரம் செய்யப் படுகிறது. சோழர் காலம் முதல் நிலவி வந்த ஒரு வழக்கம் 20-ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது. இடைப்பட்டக் காலத்தில் அம்மகளிர் மேன்மையும் கீழ்மையும் கலந்த வாழ்வையே வாழ்ந்தார்கள். தேவேஷ் சோன்ஞி மற்று முனைவர் சதாசிவத்தின் புத்தகங்கள் தேவதாசிகளின் பிற்கால வாழ்க்கைச் சிதைவையும் அவர்கள் வரலாற்றின் ஏற்றத் தாழ்வுகளையும் எடுத்துக் கூறும் முக்கியமான ஆவணங்கள். 

பிராமண ஆண்கள் ஆதிக்கத்தில் உருவான மியூஸிக் அகாடமி, ருக்மினி அருண்டேலின் கலாக்‌ஷேத்திரா, தேவதாசி ஒழிப்பு முயற்சிகளுக்கு ஊக்கமளித்த இசை வேளாளர்கள் என்ற முன்று தளங்களில் 1850-1947 வரையிலான சமூக மாற்றங்களை ஆராய்ந்தால் இந்த ‘பிருந்தாவை கவுரவித்தோம், பாலா சங்கீத கலாநிதி ஆனார்’ என்ற இறுமாப்பின் இன்னொரு பக்கம் புலனாகும்.

மியூஸிக் அகாடமி பிராமணர்கள் ஏற்க முடிந்த தேவதாசிகளைத் தமிழ் இசை நிர்வாக அமைப்புகள் முன்னிறுத்த விழையவில்லை. அந்த வித்தியாசத்தின் பின் ஓரு சமூகத்தின் அமைப்பு இருக்கிறது. தேவதாசிகள் தொன்றுத் தொட்டுக் கோயிலோடு தொடர்புடையவர்கள், கோயில்களில் அதிகாரம் பிராமணர்களிடம் இருந்தது, இருக்கிறது. அக்காலம் தொட்டே இவ்விருவரிடையேயும் சாஸ்திரம் அனுமதித்த உறவு இருந்தது என்கிறார் சதாசிவம். “ ‘கடவுளின் மனைவியரை’க் காமுறுவதிலோ, அவர்களைக் கிளர்ச்சியுறச் செய்வதிலோ அர்ச்சகர்களுக்கு எவ்விதமான தயக்கமோ, மனச்சான்றின் உறுத்தலோ கிடையாது”. மியூஸிக் அகாடமி பிராமணர்கள் அவர்கள் முன்னிறுத்திய தேவதாசிகளோடு உறவு கொண்டார்கள் என்பதல்ல இங்கே சொல்ல வருவது. மாறாக தேவதாசிகளோடு பழகுவது பிராமண ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்று மற்றும் அது அவர்களுக்கு எவ்வித குலத் தாழ்ச்சியையும் கொடுத்துவிடாது என்கிற கருத்தும் உடந்தை. மேலும், கலைகளை பயிலுதல் அவற்றைப் பேணுதல் ஆகியவை தேவதாசிகள் குல மரபும் தர்மமும் என்று நிறுவப்பட்டதால் அவர்களோடு உறவாடுதல் வர்ணாஸ்ரம தர்மத்தைக் கைக்கொள்ளும் எந்த பிராமண ஆணுக்கும் எவ்வகையிலும் களங்கம் உண்டாக்காது. தேவதாசி ஒழிப்பை எதிர்த்த காங்கிரஸ் தலைவரும் பிராமணருமான ஶ்ரீனிவாச சாஸ்திரி அந்தச் சீர்திருத்த முயற்சி அத்தோடு நில்லாமல் பின்னர் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம் என்று மாறுமோ என அச்சம் தெரிவித்தார்.

இந்த இடத்தில் குல தர்மத்தை மீறி கலைகளில் ஈடுப்பட்ட தம் குலப் பெண்களை அதே பிராமண இசை விற்பண்ணர்கள் எப்படி எதிர் கொண்டார்கள் என்பதை ஒப்பு நோக்கினால் மேற்சொன்ன விவாதத்தின் கோணம் இன்னும் தெளிவாகும்.

எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யை சாருமதி ராமசந்திரன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஆண்கள் பெண் பாடகர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்க இருக்க விரும்புவதில்லை அல்லது தங்களுக்கு பக்க வாத்தியக்காரர்களாக இருக்கவும் விரும்புவதில்லை என்றுச் சொல்லி நீண்ட பட்டியலைத் தருகிறார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், லால்குடி ஜெயராமன், செம்மங்குடி ஶ்ரீனிவாச ஐயர், மதுரை மணி என்று நீள்கிறது அப்பட்டியல். பிராமணரான சரஸ்வதி பாய் ஹரிகதா செய்ய முற்பட்ட போது அவர் சந்தித்த சவால்கள் அநேகம்.

மருத்துவர் முத்துலக்‌ஷ்மி ரெட்டி முன்னெடுத்த தேவதாசிகள் ஒழிப்பு முயற்சிக்கு இசை வேளாளர்களைச் சேர்ந்த ஆண்கள் ஆதரவளித்தனர். தேவதாசிகள் தாயாதி வழி முறையும் அவர்கள் மீது படிந்த கறையும் தங்கள் மீதும் விழுவதாக நினைத்ததும் இசை வேளாளர் இனத்தின் ஆண்களுக்கு சவாலாக அமைந்தது. 1920-இல் இசை வேளாளர்கள் என்று ஒரு தொகுப்பு உருவாக்கப் பட்ட போது ‘அம்பட்டன் இசைக் கலைஞர்கள்’ என்றறியப்பட்டவர்கள் நாகஸ்வரம் மற்றும் நட்டுவனார்களோடும் இணைக்கப்பட்டது எதிர்ப்பைச் சந்தித்தது. இசையும் மிகச் சிக்கலான உள் மடிப்புகள் கொண்ட ஜாதியமும் இரண்டறக் கலந்தது என்பது இதன் மூலம் தெளிவாவதோடு ஒரு காலத்தில் இசை என்பது எப்படி பலத் தரப்பட்ட பிராமணரல்லாதார் மத்தியில் வேரூன்றியிருந்தது என்பதை உணர்த்துகிறது.

தனம், பிருந்தா, பாலா ஆகிய மூவரும் மீண்டும் மீண்டும் நிலை நிறுத்துப்படுவதே தேர்ந்தெடுக்கப்பட்டச் செயல் ஏனென்றால் இந்தக் கௌரவம் வேறெந்த தேவதாசிக்கும் அளிக்கப் படுவதில்லை. இதைத் தான் கிருஷ்ணா “எத்தனை பிருந்தாக்கள் கொண்டாடப் படாமல் மறக்கப்பட்டிருக்கலாம்” என்கிறார்.

தேவதாசிகள் மட்டுமல்ல அவர்களை ஆட்டுவிக்கும் பிள்ளை சமூகத்தைச் சார்ந்த நட்டுவனார்களையும் மேடையிலிருந்து விலக்கி குடும்பப் பெண்களுக்கு ஏற்றவாறு கலையை சீரமைப்பது என்று உறுதிக் கொண்டு அதில் பெரு வெற்றியும் கண்டவர் ருக்மினி அருண்டேல். அவர் முயற்சிகள் நடன மேடையை மட்டுமல்ல சங்கீத மேடையையும் பாதித்தது. இன்று டி.எம்.கிருஷ்ணா சங்கீதத்தின் சமஸ்கிருதமயமாக்கல் பற்றிப் பேசினால் சினம் கொள்ளும் யாரும் அதன் வரலாறு அறியாதவர்கள்.



அன்னி பெஸண்ட், பிராமண எதிர்ப்பு, தேசியம்

இன்று தமிழகத்தில் பரவியிருக்கும் பிராமண துவேஷத்தின் ஆணிவேர் அன்னி பெஸண்ட் முன்னெடுத்த அப்பட்டமான பிராமணீயம் தான். “வேறு யாரையும் விட உயர் ஜாதிக் குழுவினரிடையே ஒரு பிரத்யேக அந்தஸ்து அன்னி பெஸண்டுக்கு உண்டு ஏனென்றால் அவர் திட்டவட்டமாக பிராமணியத்துக்கு பாரபட்சமாய் இருந்தார்” என்கிறார் லக்‌ஷ்மி சுப்ரமணியன். அந்த பிராமணியத்துக்கு எதிர் விசையாக ஆரம்பிக்கப் பட்டது தான் பிராமணரல்லாதோர் சங்கம். 

பரதக் கலைக்கு நாட்டிய சாஸ்திரம் பரத முனிவர் என்கிற தொன்ம ஆளுமை (mythical) பங்களித்ததை விட பன்மடங்கு பங்காற்றியவர்கள் ‘தஞ்சை நால்வர்’ என்றறியப்பட்ட பிள்ளை சமூகத்தைச் சேர்ந்த பொன்னைய, சின்னையா, வடிவேலு ஆகியோர். வடிவேலு வயலின் வாசிப்பதிலும் வித்தகர். தியாகைய்யருக்கு வயலினை அறிமுகப் படுத்தியவர் வடிவேலு. கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை மேற்கத்திய குறியீடுகளோடு (notations) சுப்புராம தீட்சிதர் எழுதுவதற்கு முக்கியப் பங்களித்தவர் சின்னஸ்வாமி முதலியார் என்கிற கிறித்தவர். ஜுத்தூர் சுப்ரமணியன் செட்டியார் நாகஸ்வரக் கலைஞர்களுக்கென ஒரு வைப்பு நிதியை உருவாக்கினார். கிறித்தவர்களான ஆபிரஹாம் பண்டிதர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை முக்கியமானவர்கள். ராஜா அண்ணாமலைச் செட்டியார் இசைக் கல்லூரியை ஸ்தாபித்தார். வீணை தனம், பிருந்தா, பாலா ஆகியோரின் ஆசிரியர்களின் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர்.

தெற்கில் ருக்மினி அருண்டேலும் மியூஸிக் அகாடமியும் முன்னெடித்த சமஸ்கிருதமயமாக்கலை வடக்கே இந்துஸ்தான் இசையில் வி.என். பண்டார்க்கரும் பலுஸ்கரும் செய்தனர். இவ்விரண்டையும் ஒப்பு நோக்கினால் ‘சமஸ்கிருதமயமாக்கலின்’ தீவிரம் புரியும்.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை ஒட்டி பண்பாட்டுத் தளத்தில் “நம் பாரம்பர்யம் எது? நம் பண்பாட்டின் வேர் எங்கிருக்கிறது? பண்பாடு செல்ல வேண்டிய திசை என்ன?” என்ற கேள்விகள் விஸ்வரூபமெடுத்தன. அவற்றுக்கான பதில்களை அளிக்க, அப்போது கல்வியில் முன்னனியில் அதிகம் இருந்தவர்களும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் அதிகம் இருந்தவர்களுமான, ஸ்மார்த்த பிராமணர்கள் மிகவும் ஊக்கத்தோடு முன் வந்தனர். கலைகளின் மூலங்களாக சாஸ்திரங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன, பிறகு அதன் விளைவாக கலைகள் யாரிடம் இருக்கலாம் என்பதும் முக்கியமான கேள்வியாயிற்று.

சென்னையில் பஜனை மரபுகள் காலூன்றிய காலத்தில் அங்கு காங்கிரஸ் மாநாடு 1927-இல் நடந்த போது அதையொட்டி ஓர் இசை மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டுக்காக வசூலிக்கப்பட்ட பணத்தின் மீதியில் ஆரம்பிக்கப்பட்டது மியூஸிக் அகாடமி.  தேசியமும் இசையும் பிணைக்கப்பட்டன. பின்னர் காந்தியின் கூடுகைகளில் கர்நாடக சங்கீதம் இடம் பெற ஆரம்பித்தது. 

மியூஸிக் அகாடமி, தியாகராஜர், பக்தி மார்க்கம், கலாக்‌ஷேத்திரா, இந்துஸ்தானி இசை

மியூஸிக் அகாடமி கர்நாடக இசைக்கு என்று மரபுகளை உருவாக்கத் தொடங்கியது. இம்முயற்சியில் அவர்கள் ஸ்தாபன ரீதியாகச் செய்தவை மெச்சத்தக்கவை ஆனால் அதன் விளைவாக நடந்தவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1930-களில் தான் ‘சங்கீத மும்மூர்த்திகள்’ என்றச் சொற்றொடர் புழக்கத்தில் வந்தது. அம்மும்மூர்த்திகளில் முக்கியமானவராக தியாகராஜர் உருவெடுத்தார். அது வரை தாளத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ராகத்துக்கு இடம் மாறியது. ராகம் முக்கியமான உடன் அதுவரை இசை மேடையில் பிரதானமாக இருந்த இசைக் கருவிகளும் அதை இசைத்த இசை வேளாளர்களும் புறந்தள்ளப் பட்டனர். 1927-இல் நடந்த இசை கூடுகையில் மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், கொன்னக்கோல் வாத்தியக்காரர்கள் பங்குப் பெற்று தத்தம் இசைக் கருவிகளை இசைத்துக் காண்பித்தனர். ஆனால் பின்னர் மியூஸிக் அகாடமி நிறுவப்பட்ட போது கர்நாடக சங்கீத மேடைக்கு மிருதங்கம் மட்டுமேப் போதும் என்று முடிவுச் செய்யப்பட்டது.

பின்னாளில் பிராமணப் பெண்கள் மேடையேறியபோது அவர்களோடு இசை வேளாளர்கள் மேடையில் அமர்வது குறைய ஆரம்பித்தது. தியாகராஜரின் பக்தி விதந்தோதப்பட்டது. ‘நிதி சால சுகமா’ என்று பாடிய தியாகராஜரும் அவர் கொண்ட பக்தியுமே கலையின் பண்பாட்டுக் குறிக்கோளாக அடையாளம் கொள்ளப்பட்டன. மியூஸிக் அகாடமயைத் தொடர்ந்து ஆரம்பிக்கப் பட்ட சபாக்கள் பலவும் அவர்கள் ரசிகர்களின் ஜாதிக்கேற்ப இருப்பிடத்தை மற்றிக் கொண்டதும் நடந்தது. 

“தியாகராஜரை சாதாரண பக்தியையும் உயரிய கல்வியறிவையும் ஒருங்கினைத்து செல்வங்களையும் புகழையும் தேடாமல் நிராகரித்த மேதையாக பார்ப்பதன் மூலம் தங்களைப் பற்றி தங்களுக்கிருக்கும் பிம்பத்தை உறுதிச் செய்துக் கொண்டனர் பிராமணர்கள்”. “பார்ப்பனக் குலம் கெட்டழிவெய்திய கலிகாலம் ஆதலால் வேர்ப்ப வேர்ப்ப பொருள் சேர்ப்பதையேக் குறிக்கோளாகக் கொண்டனன்” என்று பாரதி தன் தந்தைப் பற்றி எழுதியது இங்கே சுட்டத் தக்கது. எம்.எஸ் பணம் வாங்காமல் பாடும் நிலையில் இருப்பதே தன் விருப்பம் என்றும் அரசாங்கம் கலைஞர்களின் வாழ்வியலைப் பார்த்துக் கொண்டால் அப்படி இருக்கலாம் என்றும் சதாசிவம் கூறியதாக படித்திருக்கிறேன். 

பிராமணர்கள் பொது வெளியில் தங்களுகென்று ஓர் தனித்துவமான இடத்தை உருவாக்கிக் கொள்ள இசை உதவியது. இசையை ரசிப்பதையும் இசையோடு தொடர்புபடுத்திக் கொள்வதையும் பிராமணர்கள் தங்களுக்கும் தங்கள் சமூகத்திற்கும் ஒரு பிரத்யேகத் தன்மையை கொடுப்பதாக நினைத்தார்கள். இதைத் தான் கிருஷ்ணா பிராமணர்கள் எம்.எஸ்ஸின் இசையை ரசிக்கும் போது  அதை இசை என்ற ஒன்றையும் தாண்டி ஒரு பண்பாட்டுத் தொடர்புபடுத்தலையும் சேர்த்தே, இன்னும் சொல்லப் போனால், அதனாலேயே ரசிக்கிறார்கள் என்றார். 

மியூஸிக் அகடமி படிப்படியாகச் செய்ததை ருக்மினி அருண்டேல் அதிரடியாகச் செய்தார் ஏனென்றால் அவர் குறிக்கோள் தன்னைப் போன்ற பிராமணப் பெண்கள் ஏறத்தக்க மேடையாக நடன மேடை இருக்க வேண்டும் அதற்காக நடனம் என்பதன் இலக்கணத்தையும் மேடையின் வழக்கங்களையும் மாற்றுவதே வழியென்று அறிந்தார்.

ஒரு விஜயதசமி நாளன்று ருக்மினி தேவி சொன்னார் “பாரம்பர்ய நடன ஆசிரியர்களிடம் இருந்து நம் கலையை பிரித்து விட்டோம். அவர்கள் ஒரு சிறு குழுவினர். வேரு யாரும் அவர்கள் வேலையைச் செய்ய முடியாது என்று நம்பியவர்கள். இது ஒழிக்கப்பட வேண்டும் என்று உறுதி கொண்டேன். பாரம்பர்ய குலத்தின் மகளிர் தான் நடனமாட முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் இப்போதோ நல்லக் குடும்பத்துப் பெண்கள் அற்புதமாக நடனமாடுகிறார்கள். அடுத்ததாக நிகழ்ந்தது நல்ல குடும்பத்தில் இருந்து நட்டுவனார்கள் பயிற்றுவிக்கப்பட்டது. இந்த விஜயதசமி தினத்தன்று அவர்கள் நமக்கு இனித் தேவையில்லை என்று நிரூபித்தது எனக்கு மகிழ்ச்சி”. குரூரமும், வன்மமும், மேட்டிமைத்தன்மையும் கலந்த சொற்கள். இந்த நீண்ட மேற்கோளை குறிப்ப்டிட்டுவிட்டு மேத்யூ ஆலென் விக்கித்துப் போகிறார் “அறிவில் சிறந்தப் பெண்மணி ஒரு சுப தினத்தில் இப்படியாப் பேசுவார்” என்று.

சதிரை கோயில் வளாகத்தில் இருந்து பொது மேடைக்கு பரதம் என்று நாமகரணம் செய்து மேடையேற்றியவர் கோயிலை மேடையில் ஏற்றினார். நடராஜர் விக்கரகமும் மேடை ஏறியது. பால சரஸ்வதி வெறுத்த மாற்றங்களுள் இதுவும் ஒன்று. நடன விமர்சகர்கள் புதிய சொல்லாடல்களை பயன்படுத்தத் தொடங்கினர். “கலையின் மீது பற்றற்றக் காதல்” என்ற வார்த்தைகள், சதிரைப் பற்றி எழுதும் போது உபயோகிக்காத சொற்கள், விமர்சனங்களில் இடம் பெற ஆரம்பித்தன. 

எம்.எஸ்ஸுக்கு சதாசிவம் மீள் உருவாக்கத்தில் உதவியதுப் போல் ருக்மினி தேவி அருண்டேலுக்கு அவர் கணவரும் அன்னி பெஸண்டுக்குப் பின் தியொஸாபிக்கல் சொஸைட்டியின் தலைவரான ஜார்ஜ் அருண்டேல் முக்கியப் பங்காற்றினார். ருக்மினி தேவி நடனத்தில் அறிமுகப் படுத்திய மாற்றங்கள் தியோஸாபிக்கல் சொஸைட்டியோடு நெருங்கியத் தொடர்புக் கொண்டிருந்த பிராமண சமூகம் உதவியது. 

தெற்கே இம்மாற்றங்கள் நிகழும் போது வடக்கே இதே வழி முறைகளைக் கைக்கொண்டு இஸ்லாமியர் பெரும் பங்கு வகித்த இந்துஸ்தானி இசையை பட்காண்டேவும் பலுஸ்கரும் மாற்றினர். வேதத்தை எழுதி வைக்கக் கூடாது என்று வரையறுத்து வாய்மொழி வழியாகவே கற்பிக்கப்பட வேண்டும்  என்றுச் சொன்னவர்களுக்கு இஸ்லாமியரின் ‘கராணா’ முறை எரிச்சல் ஏற்படுத்தியது. இசையை முறைமைப் படுத்தப்பட்டக் கல்வியாக பயிற்றுவிக்க ஸ்தாபன ரீதியான முயற்சிகளைச் செய்தார் பட்காண்டே. பாரம்பர்ய சமூகத்தைச் சார்ந்தவர்கள் பற்றிய எரிச்சலும் எக்காளமும் ருக்மினி தேவியைப் போலவே பட்காண்டேவுக்கும் இருந்தது. இஸ்லாமிய இசை விற்பண்ணர்கள் படிப்பறிவில்லாதவர்கள், முன்னேற்றத்திற்கு தடைக் கற்கள் என்றார். அவர் பின் வந்த பலுஸ்கார் இன்னும் ஒரு படி மேலே போய் பாரம்பர்ய இசை அறிஞர்களின் நடத்தைச் சரியில்லை என்றார். இவ்விருவரும் தேச விடுதலை முயற்சியோடு தங்கள் முயற்சிகளை, தெற்கே நடந்ததைப் போலவே, பிணைத்தார்கள். அவர்களும் இந்துஸ்தானி இசையின் வரலாறை இந்து தொன்மங்களோடும் சாஸ்திரங்களோடும் இணைத்தார்கள்.  இத்தகைய முயற்சியைத் தான் எம்.என். ஶ்ரீனிவாஸ் போன்றவர்கள் ‘சமஸ்கிருதமயமாக்கல்’ என்கிறார்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமையை அறிவுப் பூர்வமாக ஆராயலாமா?

டி.எம்.கிருஷ்ணாவின் கருத்துக்கு எதிராக எழுதியவர்கள் கர்நாடக சங்கீதத்தை இந்து மதத்தின் விழுமியங்களில் இருந்து பிரிப்பது தகாது என்று கிருஷ்ணா கூறியதை மெய்ப்பிக்கும் விதமாக எழுதியதைப் பார்த்திருக்கிறேன். இதனால் தான் தியாகரஜர் விழா என்று க்ளீவேண்டில் நடக்கும் விழாவில் விஷாகா ஹரி தியாகராஜரை ராம பக்தராக முன்னிலைப் படுத்தி கதா காலட்சேபம் நடத்துகிறார். மேற்கத்திய செவ்வியல் இசையில் பாக் எழுதிய கோயில் இசையை (Mass in B minor) வெகு எளிதாக திருச்சபையின் குறியீடுகள் எதுவிமில்லாத மேடையில் இசைத்துப் பார்க்கலாம். தியாகராஜரின் பக்தியைப் பற்றிப் பேசலாகாது என்று சொல்லவில்லை ஆனால் அவரை பக்த சிரோன்மணியாக மட்டுமே குறுக்குவது தான் பிராமணீயம். 

மேற்சொன்னதோடு தொடர்புடையது இன்னொரு மறுப்பு. எம்.எஸ்ஸை அறிவுப் பூர்வமாக அனுகக் கூடாது என்கிறார்கள் சுதா ரகுநாதனும் ரவி கிரணும் மற்றவர்களும். பிராமணர்களுக்கும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட தத்துவப் புரிதலுக்கும் உள்ள முக்கியமான உறவை பௌத்தம், பிராமணியத்தை ஆராயும் யொஹான்ஸ் ப்ராங்க்ஹோஸ்ட் முன் வைக்கிறார். தத்துவத் தளத்தில் பௌத்தத்தோடு சமர் புரிய வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிராமணர்கள் நியாய சாஸ்திரம், தர்க்க சாஸ்திரம் என்று தர்க்க ரீதியான தத்துவத் தளம் அமைத்தார்கள். அத்தகைய எதிர்ப்பு இல்லாத வேறெந்த தளத்திலும் அவர்கள் தர்க்க ரீதியானப் புரிதலை விரும்புவதில்லை என்கிறார். இன்னொரு காரணம், எதையும் பக்தி தளத்தில் வைப்பது பிராமணர்களை முதன்மைப் படுத்தும் என்று அதைச் செய்கிறார்கள். அதனால் தான் தியாகராஜரை ஓர் அறிவாசானாகப் பார்க்காமல், பார்க்க மறுத்து, பக்த சிரோன்மணியாகவே பார்க்கிறார்கள். இதையே எம்.எஸ் விஷயத்திலும் கடைப் பிடிக்கிறார்கள்.

மியூஸிக் அகாடமியும் தமிழ் இசையும்

பிராமணியம் அல்லது சமஸ்கிருதமயமாக்கல் என்று சொல்லும் போது மொழியும் அது சார்ந்த அரசியலும் முக்கியமானதாகிறது. கர்நாடக சங்கீத மேடைகளில் தமிழ் என்றுப் பேச்செடுத்தாலே ‘சங்கீதத்துக்கு மொழியில்லை’ என்பார்கள். வீட்மேன் தெளிவாகச் சொல்கிறார், “கர்நாடக சங்கீதத்தை செவ்வியல் இசை ஆக்கும் முயற்சி மொழியை விட இசையேப் பிரதானம் என்று நிறுவுவதை சார்ந்து இருந்தது. செவ்வியல் இசை என்பதில் மொழி, இசையோடு ஒப்பிட்டால், இரண்டாம் பட்சம். மேலும், மொழி தாய் மொழியோடு சம்பந்தமில்லாததாகவும் சிறப்பாக பயில வேண்டிய ஒன்றாகவும் புதிதாக கட்டமைக்கப்பட்டது. இசைக்கான வரையறைகளை வகுப்பவர்களாக பிராமணர்கள் இடம் பெறப் பெற தெலுங்கும் சமஸ்க்ருதமும் இசையில் முதன்மைப் படுத்தப்பட்டன. கர்நாடக சங்கீதம் தமீழில் இருந்து இலக்கிய மொழியாகவும் தாய் மொழியாகவும் துண்டிக்கப்பட்டது”. 

கர்நாடக சங்கீத உலகம் கை மாறிக் கொண்டிருந்தக் காலத்தில் தான் உலகின் மூத்த மொழியும் மிகுந்த நீண்டப் பாரம்பர்யமும் கொண்ட தமிழ் மொழி கல்வி நிலையங்களில் பிராந்திய மொழியாக (vernacular) பின்னுக்குத் தள்ளப்பட்டு சமஸ்கிருதமும் பிரெஞ்சும் முன்னிலைப் படுத்தப்பட்டன. பல்கலைக் கழக சிண்டிக்கேட்டில் அதிக உறுப்பினர்களான பிராமணர்களும், பிராமணர்கள் நிறுவிய இந்துப் பத்திரிக்கையும் கிட்டத் தட்ட தமிழ் விரோதப் போக்கினை கடைப் பிடித்தார்கள். ‘திராவிட மறுமலர்ச்சி’ எனும் நூலில் பேராசிரியர் நம்பி ஆரூரன் இதை அற்புதமாக ஆவணப் படுத்தியிருக்கிறார்.

தமிழ் இசைக் கோரிக்கை எழுந்த போது மியூஸிக் அகாடெமியும் அதன் பிராமண உறுப்பினர்களும் மிகவும் கோபாவேசமாக எதிர்க் கொண்டார்கள். எம்.எஸ். சுப்புலக்‌ஷ்மி தமிழ் இசை மாநாட்டில் பாடி பணம் திரட்டிக் கொடுத்தார் என்பதற்காக 4-வருடங்கள், டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் தூண்டுதலினால், மியூஸிக் அகாடமி எம்.எஸ்ஸை பகிஷ்காரம் செய்தது. பின்னர் அவர்களுக்கு பணம் திரட்ட வேண்டிய சூழல் வந்த போது எம்.எஸ்ஸின் தேவையை உணர்ந்து அத்தடையை மகிழ்ச்சியோடு நீக்கினார்கள். பால சரஸ்வதியின் துணைவர் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கியமான பிரமுகரும் பின்னர் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சருமான ஷன்முகம் செட்டி என்பது குறிப்பிடத் தக்கது. பாலாவும் தமிழ் இசையில் நாட்டம் கொண்டிருந்தார்.

ராஜா அண்ணாமலைச் செட்டியார் தமிழ் இசையைப் பரப்ப பண உதவிச் செய்த போது அகாடமியும், இந்துப் பத்திரிக்கையும் பணத்தைக் கொண்டு ஒரு வகை இசைக்கு ஆதரவுச் சேர்ப்பதைக் கண்டித்தனர். ஆனால் அதே செட்டியார் மியூஸிக் அகாடமிக்கு பண உதவி செய்த போது யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. சுதந்திர இந்தியாவில், அனைத்திந்திய வானொலி நிலையம் போன்ற கலாசார அமைப்புகளில் அதிகார பீடத்தில் அமர்ந்த பிராமணர்கள் கர்நாடக சங்கீதத்தை முன்னிறுத்தினார்கள். 

காலப் போக்கில் தமிழ் இசையை மேடையேற்ற பெரும்பாலும் பாரதி, ஊத்துக்காடு வெங்கடக் கவி, பாபனாசம் சிவன் என்றுக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் பாடல்கள் மட்டுமே இடம் பெற்றன. மறந்தும் பாரதிதாசன் பாடல்கள் இடம் பெறாது. ‘மொழி’, பிராங்க்ஹோர்ஸ்ட் எழுதுகிறார், ‘பிராமணர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று’. ரவி கிரணின் மனைவி, மங்கையர் மலருக்கு அளித்த பேட்டியில், தன் கணவருக்கு சில மொழிகளைத் தெரியும் என்றுச் சொல்லிவிட்டு சமஸ்கிருதத்தை மட்டும் குறிப்பிடுகிறார். 

சுப்புலட்சுமியின் நிறம்

நிறமும் பிராமணர்களுக்கு முக்கியம். ரிக் வேதம் சொல்கிறது, “வெண்மை நிறமுடையவர்கள் கறுப்பு நிறமுடையவர்களை தெற்கேத் தள்ளினார்கள்”. கறுப்பு நிறமான தன் மருமகளை “சூத்திர நிறத்தில் இருக்கிறாள்” என்றுச் சொன்ன பிராமண அம்மாள் என் நினைவுக்கு வருகிறார். பிராமணர்களுக்கு மட்டுமல்ல இந்தியர்களுக்கே, ஜாதி மதங்களைக் கடந்து, கறுப்பு நிறம் பற்றிய ஒவ்வாமை உண்டு. உலகிலேயே வெண்மையாக்கும் கிரீமை பல கோடி மக்கள் உபயோகிக்கும் தேசத்தில் வாழ்ந்துக் கொண்டு கிருஷ்ணா, “எம்.எஸ் கறுப்பு நிறமாயிருந்தால் ஏற்கப்பட்டிருப்பாரா” என்றுக் கேட்டதற்காக சினம் கொள்வது நகை முரன்.

முடிவுரை

இசையை மொழி, தேசியம், ஜாதி, மதம் என்று மிகச் சிக்கலான கூட்டணியின் பிண்ணனியில் புத்துருவாக்கம் செய்த காலத்தில் அதன் கட்டாயங்களுக்கு உட்பட்டே எம்.எஸ். சுப்புலக்‌ஷ்மி என்கிற மகா கலைஞர் கலையின் உச்சத்தைத் தொட்டார். கிருஷ்ணாவின் கேள்விகளுக்கு அர்த்தம் எம்.எஸ். சிகப்பாகவும், பிராமணியத்தைக் கடைப்பிடிப்பவராகவும் இருந்த காரணம் மட்டுமே அவரை உயர்த்தியது என்பதல்ல. அந்தக் கேள்விகளின் சாரம் “நம் இசை மரபு இன்று அந்த தளைகளில் இருந்து விடுபட்டதா? பெருவாரியான சமூகத்திடம் இருந்து மாறுப்பட்ட வேறு யாராவது எவ்வளவு எளிதில் இந்தக் கலையில் முன்னேற முடியுமா? அப்படி வேறுப்பட்டவர்கள் எளிதாகக் கலையை மட்டுமே உபாசிப்பவர்களாக வரவேற்கும் சூழல் இருக்கிறதா” என்றெல்லாம் சுய பரிசோதனையாக கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பதே அவர் அவா.

தமிழ் நாட்டில் இன்று மிக அருவருக்கத் தக்க வகையில் வேரூன்றியிருப்பது பிராமணத் துவேஷம். நாஜித்தனமான வெறியாகவே இது மாறிவிட்டது. கர்நாடக சங்கீதம் பிராமணர்கள் கைவசம் வந்திருக்காவிட்டால் இன்று பிராமணர்கள் நோக்கிச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் பிள்ளை சமூகத்தினர் குறித்துச் சொல்லப்பட்டிருக்கும் ஏனென்றால் இங்கே எல்லா ஜாதியினரும் தத்தம் உரிமைகளை வேறெவெருக்கும் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ருக்மினி தேவியின் கசப்பில் நியாயமேயில்லை என்றுச் சொல்ல முடியாது. அதற்கு அவர் கண்டப் பரிகாரம் தான் வன்மம் நிறைந்தது. காந்தி என்றுமே தனித்து நிற்பது இதனால் தான். தன்னை சந்தித்த ஜஸ்டிஸ் கட்சியினரிடம் “நீங்கள் ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. மாறாக பிராமண அதிக்கத்திற்குப் பதில் உங்கள் ஆதிக்கம் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்” என்றார். அரசியல் தளத்தில் அந்த ஆரூடம் பலித்தது. பிராமண ஆதிக்கம் இடை நிலை ஜாதியினரின் ஆதிக்கத்திற்கு வழி விட்டது.

மற்ற எல்லாச் சமூகங்களையும் விட சுயப் பரிசோதனைச் செய்வது, சுய விமர்சனம் செய்வது, சீர் திருத்தங்களை மேற்கொள்வது ஆகியவற்றில் பிராமணர்கள் நிச்சயம் முன்னிலை வகிக்கிறார்கள். பாரதி முதல் கிருஷ்ண வரை பிராமண சமூகத்தில் கலகக் குரல்களுக்கு நீண்ட மரபுண்டு.

கிருஷ்ணாவின் விமர்சனம் பல பிராமணர்களை முகம் சுளிக்க வைத்தது. இதை ஏன் கிளறுவானேன் என்று சினந்தார்கள் சிலர். கடந்த காலம் என்பது முழுவதுமாக என்றுமே கடந்த காலமாகாது என்றார் வில்லியம் ஃபாக்னர். வரலாற்றறிவு எதிர் காலத்தை வடிவமைக்க மிக அத்தியாவசியமானது. சாதாரண அலுவலகம் கூட சிறுப்பான்மையினர் சங்கோஜம் இல்லாமல் சிகஜமாக கலந்து பணியாற்றினால் தான் தங்குத் தடையின்றி பலத் தரப்பட்ட பங்களிப்பு நிகழும் என்கிறார்கள். ஒரு பெரும் பண்பாட்டுத் தளத்தில் பல் வகையினரும் கலந்துக் கொள்ளும் வகையில் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதே கிருஷ்ணாவின் விருப்பம். 

நூல் பட்டியல்:

  1. From the Tanjore Court to the Madras Music Academy: A social history of music in South India — Lakshmi Subramanian
  2. Bala Saraswati: Her Art and Life - Douglas M. Knight Jr.
  3. Unfinished Gestures: Devadasis, memory, and modernity in South India - Davesh Soneji
  4. When a Great Tradition Modernizes: An Anthropological Approach to Civilization - Milton Singer
  5. Singing the Classical, Voicing the Modern: The Postcolonial Politics of Music in South India — Amanda Weidman
  6. Nityasumangali: Devadasi Tradition in South India - Saskia Kersenboom
  7. தமிழகத்தில் தேவதாசிகள் - முனைவர் கே. சதாசிவன். (தமிழில்: கமலாலயன்)
  8. Tamil Renaissance and Dravidian Nationalism: K. Nambi Arooran
  9. The Politics of South India: 1920-1937 — Christopher John Baker
  10. Politics and Nationalist Awakening in South India, 1852-1891 — R. Suntheralingam
  11. Two Men and Music: Nationalism in the Making of an Indian Classical Tradition — Janaki Bakhle
  12. Aruna Sairam V. Sriram interview https://youtu.be/G2LfJLDinqc 
  13. Sanjay Subrahmanyan interview https://youtu.be/omMolRDT_uo 
  14. M.S. A Life in Music - T.J.S. George
  15. T.M. Krishna’s speech https://youtu.be/MRyhgog0RtA 
  16. M.S. banned from music academy https://blogs.timesofindia.indiatimes.com/tracking-indian-communities/when-ms-braved-a-ban-to-bring-tamil-centrestage/ 
  17. M.S. Subbulakshmi and Music Academy https://sriramv.wordpress.com/2010/10/28/ms-subbulakshmi-and-the-music-academy/ 
  18. Matthew Allen on Rukmini Devi http://acceleratedmotion.org/wordpress/wp-content/uploads/2014/12/rewriting_script.pdf 
  19. Saraswati Bhai http://www.thehindu.com/features/metroplus/she-paved-the-way/article6887087.ece 
  20. On Devadasis - Johannes Bronkhorst http://www.brill.com/sites/default/files/devadasis.pdf 
  21. Removal and re-introduction of percussion instruments in Carnatic Music - http://www.thehindu.com/features/friday-review/music/Crowning-glory-for-percussion-instruments/article16852558.ece 
22. New Mansions for music: Performance, Pedagogy and Criticism - Lakshmi Subramanian
  

Saturday, March 25, 2017

அசோகமித்திரனும் திராவிட இயக்க வெறியர்களும்

அசோகமித்திரன் பிறப்பால் பிராமணர். இது ஊரறிந்த செய்தி. அமி பிராமணர்கள் நாஜி ஜெர்மனியில் யூதர்கள் ஒடுக்கப்பட்டது போல் ஒடுக்கப் படுகிறார்கள் என்று சொன்ன போது அதை வண்மையாகக் கண்டித்துப் பதிவிட்டேன். நாஜி, யூத மற்றும் யூத அழிப்பின் வரலாறுகளைத் தொடர்ந்து படித்து வரும் என்னால் அத்தகைய ஒப்புமையை ஏற்க முடியாது. சமீபத்தில் சர்ச்சிலை ஹிட்லரோடு ஒப்பிட்டதை எதிர்த்த என் பதிவுகளும் அக்காரணத்தாலேயே எழுதப்பட்டது. 

அமி இறந்து தகனமும் நடந்துவிட்டது இப்போது சில விஷயங்களை நான் சுதந்திரமாகச் சொல்ல முடியும். 

அமியின் புனைவிலக்கிய ஆளுமை பற்றி எல்லோரும் எழுதி தள்ளிவிட்டார்கள். நான் அவரின் 'இன்று', 'ஒற்றன்', 'புலிக் கலைஞன்' ஆகியவற்றையும் கட்டுரைத் தொகுப்புகள் சிலவும் சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரைகள் சிலவும் தான் நான் படித்தவை. அவர் அப்பளம் விற்றார், எழுத்தையே நம்பி வாழ்ந்தார், நல்ல மனிதர், அங்கீகாரமில்லாமல் இறந்தார், பிராமணர் என்பதாலேயே அங்கீகாரம் இல்லை என்பன போன்ற உணர்ச்சி ததும்பல்களை விடுத்து அவர் எழுதிய புனைவுகளை மதிப்பிட பலர் தயாராக இல்லை. ஒரேயொரு ஆறுதல் யாரும் அவர் கட்டுரைகளைப் பற்றிப் பேசாதது. அவர் கட்டுரைகைள் மிக மிக சாதாரணமானவை.



நான் பலமுறை சொல்வது தான், புனைவிலக்கிய எழுத்தாளர்களுக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும், உலக வரலாறு, பண்பாட்டு வரலாறு ஆகியனக் குறித்துச் சராசரியை விடக் கொஞ்சமாவது அதிகமாகத் தெரிந்திருக்க வேண்டும். அமியின் கட்டுரைகளை வைத்துப் பார்த்தால் அவருக்கு உலக வரலாறு ஞானம் லேது. அவர் தனிப்பட்ட முறையில் எதைப் படித்தார், எவ்வளவு படித்தார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது, தேவையுமில்லை. எழுத்தில் அப்படிப் படித்தற்கான அடையாளம் இல்லை. நூல்களின் பட்டியலைத் தரவில்லையென்றோ, நூல்கள் பற்றி எழுதவில்லை என்றோ, மேற்கோள்கள் இல்லை என்ற காரணங்களுக்காகவோ இதைச் சொல்லவில்லை. பிலிப் ராத்தும் மிலன் குந்தேராவும் நடத்திய உரையாடலில் அவர்களின் வரலாறு பிரக்ஞை மிளிரும். நைபாலும் ஹெர்மேன் ஹெஸ்ஸும் வரலாறில் திளைப்பவர்கள். அமி அப்படிப்பட்டவர் அல்ல. 
ஒற்றன் கதை சராசரி நடுத்தர வர்க்கத்து இந்தியன் அமெரிக்கா சென்றால் என்னென்ன மனப் பதிவுகள் இருக்குமோ அது தான் இருக்கும். அதில் அந்தப் பாத்திரம் ஒற்றன், இந்தப் பாத்திரத்தின் வழியாக அமெரிக்க வாழ்க்கையைப் படம் பிடித்தார், எழுத்தாளனே வெளியில் தெரியாமல் அமெரிக்காவிலும் சாதாரணர்களின் வாழ்வியலை அலங்காரமில்லாமல் சொல்கிறார் என்றெல்லாம் களிப்படைபவர்கள் ஞானவான்கள். 
அவர் தமிழ் நாட்டில் பிராமணர்கள் நடத்தப்படும் விதத்தை யூதர்கள் ஐரோப்பாவில் நடத்தப்பட்டதோடு ஒப்பிட்டது வரலாறின் அறியாமையே காரணம். யூதர்கள் 2000 ஆண்டுகளாக ஐரோப்பாவில் அடக்கு முறையையும் அதீத வெறுப்பின் வலியையும் உணர்ந்தவர்கள். ஒரு பேட்டியில் ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் அவருக்கு இருக்கும் ஏமாற்றத்தைப் பற்றிச் சொல்லியிருப்பது மிகவும் குறிப்பிடத் தக்கது ஏனெனில் அது அமியின் உலகுக்கு ஒரு திறப்பு. 
அமி பற்றி எழுதிய பலரும், கிட்டத்தட்ட எல்லோரும், அவர் அலங்காரமில்லாத நடையில் சாதாரான மனிதர்களைப் பற்றி எவ்விதமான வார்த்தை அலங்காரமோ கருத்தியல் அலங்காரமோ இல்லாமல் வாசகன் எவ்விதத்திலும் எழுச்சியடைந்துவிடக் கூடாது என்று எழுதியதாகச் சொன்னார்கள். ஜெயமோகன் ஒருமுறை "அமி அக எழுச்சியே கூடாது என்று எழுதுபவர்" என்றார் எனக்கெழுதிய கடிதத்தில். நான் அயன் ராண்டை ஆராதிப்பவன் எனக்கு அமியின் புனைவுலகம் என்றும் ஒவ்வாதது அவ்வளவு தான். உடனே "அஹா அயன் ராண்ட் ஒரு குப்பை அதைப் படித்தவன் இப்படித்தான் இருப்பான், உனக்கு இலக்கியமே தெரியாது" என்றெல்லாம் பாய வேண்டாம். என் உலகம் வேறு அவர் உலகம் வேறு என்பதற்காகச் சொல்கிறேன் அவ்வளவு தான். 
ஷேக்ஸ்பியர் பற்றி அமி சொல்வனம் பேட்டியில் சொன்னது (http://solvanam.com/?p=31404) : 

"சொ.வ: கவிதை எந்தகாலத்திலயும் உங்களைக் கவர்ந்ததில்லையா?
அ.மி: இல்லே இல்லே இந்தப் பொயட்ரி.. சமீப காலத்துலே எனக்குக் கவிதை மேலே ரொம்ப ஒரு ஏமாற்றமாத்தான் இருக்கு. சொன்னா சண்டைக்கு வந்துடுவாங்க இப்போ – எனக்கு இந்த ஷேக்ஸ்பியரே ஹி வாஸ் மோர் எ க்ளெவர் பெர்ஸன் தேன் எ க்ரேட் பெர்ஸன். அவர் எல்லாத்தயுமே புத்திசாலித்தனமா வேறே மாதிரி சொல்லிடுவார். இந்தப் புத்திசாலித்தனமா வேறே மாதிரி சொல்றது இருக்கே அந்த வேறே மாதிரி சொல்றதுலே ஒரு முயற்சி இருக்கு. அவரோட எண்டர், எக்ஸிட் அதுதான் நார்மலா இருக்கும். ஹேம்லெட் அவரோட ரொம்பப் புகழ் பெற்ற நாடகம். அதுல க்ளாடியஸ் ”பைத்தியம்னாலும் அவனைக் கவனிச்சுண்டு இருக்கணும் ஒரு கண் வெச்சுண்டு இருக்கணும்”னு சொல்வான். இதை அவன் நார்மலா “யூ ஷுட் கீப ஏன் ஐ ஆன் ஹிம், ஆர் யூ ஷுட் வாச் ஹிம்’னு சொல்லலாம். இவன் என்ன சொல்லுவான், “பட் மேட்னெஸ் அண்ட் க்ரேட்னெஸ் மஸ்ட் நாட் அன்வாச்டு கோ’ [1]
(பெரிதாய் சிரிக்கிறார்)
ஷேக்ஸ்பியர்லே இது மாதிரி நெறைய இன்ஸ்டன்ஸஸ் இருக்கு. இப்போ எனக்குத் தோண்றது இதுதான். Madness and greatness must not unwatched go.
(மீண்டும் பெரிதாய் சிரிக்கிறார்)
எனக்கு ரொம்பக் கெட்டிக்காரத்தனமா செய்யறதே கொஞ்சம் பயம்மா இருக்கும்… கெட்டிக்காரங்க கிட்டே நாம என்ன பண்ண முடியும்? பேசாமே வெளில போயிடணும். அதான், கவிதைலெ இப்ப அந்த மாதிரி ஒரு மனநிலை வந்துடுத்து. ஆனா எனக்குதான் இது. மத்தவங்களைப் படிக்காதீங்கன்னு சொல்லலை, ரசிக்காதீங்கன்னு சொல்லலை." 

அமியின் எழுத்தை மட்டுமல்ல அவரின் உள்ளார்ந்த உலகத்தைப் படம் பிடித்துக் காட்டும் வரிகள் அவை. "எனக்கு ரொம்பக் கெட்டிக்காரத்தனமா செய்யறதே கொஞ்சம் பயமா இருக்கும்...கெட்டிக்காரங்க கிட்டே நாம என்ன பண்ண முடியும்? பேசாம வெளியில போயிடனும்". எனக்கு அமியின் உலகம் எப்படி அந்நியமாகவே இருக்குமோ அப்படி அவருக்கு ஷேக்ஸ்பியரின் உலகம் அந்நியம் தான். கவிதைகளில் வார்த்தையின் தேர்வு பற்றி ஏ.சி. பிராட்லியின் புகழ்பெற்ற பேருரைகளின் தொகுப்பில் அவர் Lochinvar எனும் கவிதையில் "Through all the wide border his steed was the best" என்பதை "through all the wide border his horse was the best" என்று எழுதினால் நயம் சிதைவதை சொல்லியிருப்பார். "You should keep an eye on him" என்பதற்கும் "madness and greatness must not unwatched go" என்பதற்கும் இருவேறு உலகாயதமான அறிவு இடைவெளி இருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நாடகத்தை அதன் பண்பாட்டுப் பிண்ணனியில் இருந்து பிய்த்து எடுத்து 21-நூற்றாண்டின் மினிமலிஸம் எனும் கண்ணாடி கொண்டு பார்ப்பது ஒரு புறம் இன்னொரு பக்கம் அவ்வாக்கியத்தைச் செதுக்கியதில் ஷேக்ஸ்பியரின் புத்திசாலித்தனம் வெளி வந்துவிட்டதால் குறையுடையதாகக் கருதும் அவர் விழுமியம் அவருக்கு அறிவுத் தளத்தின் மீதிருக்கும் காழ்ப்பு அல்லது அவ நம்பிக்கை தெரிகிறது. 
எழுத்தாளர்காளை சராசரிகளாக்கிப் பார்க்கும் சமூகத்தின் நோய்மையை ஜெயமோகன் சமீபத்தில் சாடியிருந்தார். அமி சராசரித்தனத்தை மட்டுமே கொண்டாடுவதோடல்லாமல் சராசரிக்கும் மேலானதை சந்தேகிக்கிறார். ஏ.எல். பாஷமை குறித்து அமி சொன்னதாக ஜெயமோகன் எழுதியது: "அவர் ஹிஸ்டரியில் பர்ஸனல் கிரியேட்டிவிட்டியைக் கொண்டு வந்து விடுகிறார்". பேஸ்புக்கில் இன்னொருவர் அதற்குக் காரணம் அமி அலங்காரமில்லாத எழுத்தை விரும்புபவர் என்றார். நான், "அமி ஸ்டைலில் வரலாறு எழுதினால், வந்தான், வென்றான், செத்தான்னு தான் எழுத முடியும்". 
ஷேக்ஸ்பியரின் இன்னொரு மிகப் புகழ் பெற்ற நாடகமான 'மெர்ச்சண்ட் ஆப் வெனிஸ்' கதையில் வரும் ஷலைக்கை பலரும் வெறும் வில்லனாகவே புரிந்துக் கொள்வார்கள். ஆந்நாடகம் வெனிஸில் அன்று யூதர்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டும். அதில் ஷைலக்கின் 'monologue' ஒன்று மிக ஆழமானது. யூதர்களின் நிலைப் பற்றி ஷைலக் சொல்வான்: 

To bait fish withal: if it will feed nothing else,
it will feed my revenge. He hath disgraced me, and
hindered me half a million; laughed at my losses,
mocked at my gains, scorned my nation, thwarted my
bargains, cooled my friends, heated mine
enemies; and what's his reason? I am a Jew. Hath
not a Jew eyes? hath not a Jew hands, organs,
dimensions, senses, affections, passions? fed with
the same food, hurt with the same weapons, subject
to the same diseases, healed by the same means,
warmed and cooled by the same winter and summer, as
a Christian is? If you prick us, do we not bleed?
if you tickle us, do we not laugh? if you poison
us, do we not die? and if you wrong us, shall we not
revenge? If we are like you in the rest, we will
resemble you in that. If a Jew wrong a Christian,
what is his humility? Revenge. If a Christian
wrong a Jew, what should his sufferance be by
Christian example? Why, revenge. The villany you
teach me, I will execute, and it shall go hard but I
will better the instruction. 

அந்த ஒரு monologue போதும் 2000-ஆண்டு வரலாறைச் சொல்ல. அத்தகைய படைப்புலகம் அமிக்கு கைவராதது மட்டுமல்ல அதைப் புரிந்துக் கொள்ளுதலும் அவருக்கு இயலாததே. 
யூத வரலாறு மிகச் சிக்கலானது. யூதப் பேரழிவைக் குறித்துச் சமீபத்தில் வெளி வந்த மருதனின் "ஹிட்லரின் வதை முகாம்கள்" தவிர வேறு நூல்கள் தமிழில் இல்லை. வாசித்தவர்கள் பலர் அப்புத்தகம் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழில் அப்படியொரு புத்தகம் வெளி வந்திருப்பதே மகிழ்ச்சி. வரலாறைப் படித்துப் புரிந்துக் கொண்டவர்கள் யாரும் "ஹிட்லரைப் போல்", "யூதப் பேரழிவைப் போல்" என்பதைச் சீரியஸாகச் சொல்ல மாட்டார்கள். இன்னொரு ஹிட்லரோ, இன்னொரு யூதப் பேரழிவுப் போன்றதோ நிகழாதது வரலாறின் கருணை. 
அமி சாதாரணர் அல்லர். வார்த்தைகளின் தேர்வில் கவனமிருந்திருக்கலாம். பிராமணர்கள் தமிழகத்தில் நடத்தப்படும் நிலைக் குறித்து யூதர்ளை வம்புக்கு இழுக்காமல் பேசியிருக்கலாம். வார்த்தைகளின் தேர்வின் குறைபாடு என்பதை விட வரலாறின் அறியாமை தான் அவரை அப்படிப் பேச வைத்தது. 
'ஹிட்லரைப் போல்', 'யூத பேரழிவைப் போல்' என்று பேசாமல் தமிழ் நாட்டில் அண்ணாதுரையும், ராமசாமி நாயக்கரும் முன்னெடுத்த பிராமணத் துவேஷம் நாஜித்தனத்தின் உட்கூறுகளை ஒத்தது என்று சொன்னால் அது மிகச் சரியான வாதம். அண்ணாதுரையின் "ஆரிய மாயை" பச்சையான நாஜித்தனமான பிரச்சார நூல். விடுதலை பத்திரிக்கையை எடுத்தால் நாயக்கர் கால்ம் தொட்டு இன்றைய அரசியல் தரகரான வீரமணியின் காலம் வரை நாஜித்தனம் தான். 
தான் எழுதிய கதைகளில் பெரும்பாலும் பிராமணக் கதாபாத்திரங்களை வைத்தே எழுதியவர் ஜெயகாந்தன் ஆனால் அமியை நோக்கி வசை மழை வருகிறது அவர் பிராமணக் கதா பாத்திரங்களை வைத்தே எழுதினார் என்று. ஒன்று, அது அவர் வளர்ந்த சூழல். இரண்டு, எதை எப்படி எழுத வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது எழுத்தாளன். அமியின் எழுத்துகளை ஆழ்ந்துப் படித்தவர்கள் சிலர் இந்த வசையில் உண்மையில்லை என்கிறார்கள். அது முக்கியமல்ல. ஜெயகாந்தனை நோக்கி வீசப்படாத வசை ஏன் அமி நோக்கி மட்டும் வீசப்படுகிறது. அது தான் நாஜித்தனம். 
அமியை பிராமணர் என்பதாலேயே பரிந்துரைக்க மறுத்த அரசு இயந்திரங்களை நாஜித்தனம் என விளிக்காமல் வேறென்ன சொல்வது. பிராமணர்கள் என்பதாலேயே ஒரு காலத்தில் சராசரிகளும் கொண்டாடப்பட்டது உண்மை. இன்று இது குறைந்து விட்டாலும் சோ, எஸ்.வி,சேகர், ஒய்.ஜி, மகேந்திரன், கிரேஸி மோகன் ஆகியோர் விஷயத்தில் இது உண்மை. தமிழ் நாட்டில் நாடக கலையை சீரழித்ததில் மேற் சொன்ன எல்லோருக்கும், குறிப்பாக கடைசி மூவருக்கும் பெரும் பங்குண்டு. ஆனால் இன்று பிராமணன் என்பதாலேயே சராசரிக்கு மேலாக இருந்தாலும் புறக்கணிக்கப் படுவது நாஜித்தனம் தான். 
பிராமணக் கதா பாத்திரங்களை வைத்து எதை வேண்டுமானாலும் எழுதலாம் அதையே வேறு சமூகத்தினரை வைத்து எழுதினால் எழுத்தாளரின் உயிருக்கு உத்தரவாதமில்லை. பெருமாள் முருகனை கேட்டுப் பாருங்கள். 'தனம்' போன்ற ஒரு சினிமாவை இன்று எடுத்து வெளியிடலாம் ஆனால் 'மாதொரு பாகன்' எழுதியவர் 'எழுத்தாளன் செத்து விட்டான்' என்று ஆறிக்கை விட வைத்துவிடுவார்கள். பல்லாயிரம் முறை சொல்லி அலுத்துப் போனாலும் இன்னொரு முறை சொல்ல வேண்டிய உதாரணங்கள் இரண்டு. 
ஜெயகாந்தன் 'ரிஷி மூலம்' கதையைப் பிராமணரல்லாத வேறெந்தச் சமூகத்தை வைத்து எழுதியிருந்தாலும் கொலை செய்யப்பட்டிருப்பார். சுஜாதா பிராமணரல்லாத (தேவர்? கவுண்டர்?) வேறொரு ஜாதிப் பெண் கதாபாத்திரம் ஓடி வரும் போது மார்பகங்கள் முயல் குட்டியை போல் துள்ளியதாக எழுதியதற்காக அத்தொடரையே நிறுத்த வேண்டியிருந்தது. ஒரு வேளை அச்சமூகத்தின் பெண்களின் மார்பகங்கள் துள்ளாதோ என்னமோ. சராசரி தமிழன் வடக்கத்தியான மனீஷாவின் துள்ளலை ரசிக்கும் பரந்த மனம் படைத்தவன் என்பது வரலாறு. 
எழுத்தாளன் தான் பிறந்த சமூகத்தைத் தாண்டி மற்ற சமூகங்களை முன் வைக்கும் ஆக்கங்களை இயற்றுவது மேன்மையான ஒன்று. தன் சமூகத்தின் கீழ்மைகளையாவது எழுதினால் நலம். பிராமணச் சூழலை வைத்து எழுதிய தி.ஜாவின் 'இசை' பிராமணச் சமூகத்தின் ஜாதியத்தை இடித்துரைக்கும், எள்ளலோடு. இ.பாவின் 'குருதிப்புனல்' தன் சமூகம் சாராத இன்னொரு சமூகத்தில் நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான சம்பவத்தைத் தன் மேட்டிமைக் கண்ணாடிக் கொண்டு சமைத்துக் கொடுக்கப்பட்ட ஆக்கம். இந்த விவாதங்கள் நிகழ்த்தப் பட வேண்டிய தளம் இலக்கிய ஆய்வு, இலக்கிய விமர்சனம் எனும் தளம். ஆனால் இங்கே நிகழ்த்தப்படுவதோ "செத்தவன் பாப்பான், பாப்பார கதைகளை எழுதி பாப்பான்களால் கொண்டாப்படுபவர்" என்று காறி உமிழும் நாஜித்தனம். 
தமிழ் நாட்டில் மட்டும் தான் சுஜாதா பிராமணச் சங்கத்துக் கூட்டத்திற்குச் சென்றார் என்று அறச் சீற்றத்தோடு, கண்மனி குணசேகரன் பா.ம.க மேடைகளில் தோன்றியதை சவுகரியமாக மறந்து விட்டு, கொந்தளிக்க முடியும். சுஜாதா தன்னை நாத்திகர் என்று எங்கும் முன்னிறுத்தியவர் அல்ல. அவரின் விஞ்ஞானம் பற்றியப் கதைகளில் போர்னோ தன்மை தான் அதிகம் விஞ்ஞானத்தை விட. சுஜாதாவுக்குத் தொழில்நுட்பம் பற்றிய ஞானம் இருந்த அளவு அறிவியலை தத்துவார்த்தமாகப் புரிந்துக் கொண்டவரல்ல. அது அவரது எழுத்துகளை வைத்துச் சொல்வது. கார்ல் பாப்பரை பற்றித் தமிழில் அதிகம் எழுதியவர் ஜெயமோகனாக இருப்பார். தொழில் நுட்பம் வேறு, அறிவியல் என்பது வேறு என்று எழுதியது பி.ஏ. கிருஷ்ணன். மீண்டும், இந்த விமர்சணங்கள் வைக்கப் படத் தளங்கள் வேறு ஆனால் தமிழகப் பெரியாரிய நாஜிக்களுக்குச் 'சுஜாதா பாப்பான்' என்று நிறுவுவதில் தான் முனைப்பு. ஜெயகாந்தனும் பிராமணச் சங்கத்தில் பேசியுள்ளார், அதுவும் 'யார் பிராமணன்' என்று. காண்க, "ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்". வேடிக்கை என்னவென்றால் அங்கே இருந்த நிர்வாகி முதலில் ஜெயகாந்தனை பிராமணர் என்று அறிவித்து விடுவார், "அவர் இங்கு இருக்கலாமா" என்ற கேள்வி எழுந்த போது. தான் பிராமணன் அல்ல என்று தெளிவுப் படுத்தி மாலையில் நடக்கும் Open Forum-இல் மேற்கொண்டு பேசுவதாகச் சொல்லி ஜெயகாந்தன் வெளியேறினார். அந்த நிர்வாகி எழுத்தாளரெல்லாம் பிராமணர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணும் சாதாரனராக இருந்திருக்கக் கூடும். 
அமியின் இந்தச் சர்ச்சை குறித்து வெளிவந்த கட்டுரை ஒன்றில் திராவிட இயக்கத்தின் பிராமணத் துவேஷத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் இன்றி, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ நடக்கிறது, யூதர்கள் போல் என்று சொல்வது தவறு என வாதிட்டுச் சரவணக் கார்த்திக்கேயன் என்பவர் எழுதியுள்ளார் (http://www.writercsk.com/2017/03/blog-post_25.html) . அது தவறு. மேலும் போகிற போக்கில் இட ஒதுக்கீட்டினால் பிராமணர்கள் பாதிக்கப் படவேயில்லை என்று சால்ஜாப்பு. இது தவறு. இன்று இட ஒதுக்கீட்டினால் கிட்டத்தட்ட மருத்துவத் துறை படிப்பை விட்டுப் பிராமணர்கள் விலகி விட்டார்கள் என்பதே நிஜம். அவர்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள் என்று சொல்வது நாஜித்தனம். நுழைவுத் தேர்வு வேண்டும் என்று கபில் சிபல் சொன்ன போது இனி பிராமணர்கள் கல்வி அமைச்சராகவே ஆகக் கூடாது என்று வீரமணி கொக்கரித்தார். நுழைவுத் தேர்வு என்பதே ஆரிய சதி என்றெல்லாம் பேசினார்கள். தமிழகத்தில் ஊடுறுவியிருக்கும் நாஜித்தனமான பிராமணத் துவேஷம் பற்றி எழுதியெழுதி சலித்து விட்டது. 
ஜெயமோகன் ஒரு முறை சுராவிடம் தான் மலையாளி என்று வசைப் பாடப்படுவதாகக் கூறிய போது "விடுங்கள் நான் எழுதி இருந்தால் 'பாப்பாரப் பயலே' என்று சொல்வார்கள்" என்றாராம் சுரா. பி.ஏ.கிருஷ்ணன் இன்று பெரியாரை விமர்சிக்கும் போதேல்லாம் அவரை நோக்கி 'பாப்பான்' என்ற வசை வந்து விழும். தான் நாத்திகர் என்று சொல்லும் ஞானியை திட்ட வேண்டுமென்றாலும் அவர் ஜாதி தான் கையில் கிடைக்கும். 
பிராமணப் பெண்கள் கிண்டல் செய்யப்படுவது கல்லூரிகள் முதல் வீதிகள் வரை நடக்கும் ஒன்று தான். சரவணக் கார்த்திகேயன் கேட்கிறார் "எந்தப் பிராமணர் வாயில் மலத்தைக் கரைத்து ஊற்றியிருக்கிறார்கள்" என்று. தமிழ் நாடு எனும் மூடர் கூடத்தில் தான் சமூகப் போராளியாவதற்கு எளிய வழி "தெருக் கூட்டும் பாப்பாத்தியைப் பார்த்தது உண்டா" என்று கேட்பது. தாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இட ஒதுக்கீடுக்காக அலைந்து, மரத்தை வெட்டிய எந்த ஜாதியினரின் வாயிலும் மலம் ஊற்றபடவில்லை என்பதோடு தலித்துகள் வாயில் மலம் ஊற்றிய யாரும் பிராமணரில்லை என்பது தான் நிஜம். இந்த மொண்ணைத்தனங்கள் எல்லாம் தான் தமிழ் நாட்டில் பிராமணர்கள் நாஜித்தனத்தோடு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கான சான்று. 
சு.வெங்கடேசனின் நாவலை களவை நியாயப்படுத்துகிறது என்று வேளாளச் சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர் 'வேளாள மரபில் வந்த எனக்கு அது ஒரு நெருடல். ஏனெனில் விதை நெல்கள் களவுப் போவதால் உண்டாகும் வலி உணர்ந்தவன். ஆனால் அந்நாவல் முக்கியமானது' என்று மேடையில் சொல்ல முடியாமல் தனிப் பேச்சில் தான் சொல்ல முடிகிறாது. அவராவது அப்படிச் சொல்ல முடியும். எந்தப் பிராமண எழுத்தாளராவது பிராமணர்களின் சித்தரிப்பு பற்றி அப்படிச் சொல்லி விட முடியுமா? அதுவும் மேடையில்? வெங்கடேசனும், குணசேகரனும் அவரவர் சமூகம் பற்றி எழுதுவது சரி ஆனால் அமிக்கு அந்தச் சுதந்திரம் கிடையாது. இதைத் தான் நாஜித்தனம் என்கிறேன். 
அப்புறம் இந்தக் 'கல்வி மறுப்பு' வாதம். பிராமணர்கள் கல்வியை மறுத்தார்கள் என்பது தான் ஆகப் பெரிய நாஜி பிரச்சாரம். பிராமணர்கள் மட்டுமா கல்வி மறுப்பாளர்கள்? எந்தளவு கல்வி உண்மையில் மறுக்கப் பட்டது? வரலாறைப் புரட்டினால் உண்மைகள் தெரியும். ஒரு சமூகத்தை மட்டுமே சமூகத்தில் நிலவிய எல்லாக் குறைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகக் குற்றம் சாட்டி, இன்று அதையே வரலாறாக நிறுவி விட்டது, அப்பட்டமான நாஜியம். 
அசோகமித்திரனின் மறைவுக்குத் திராவிட இயக்கத்தினர் யாரும் இரங்கல் தெரிவித்ததாகவோ நேரில் சென்று பார்த்ததாகவோ தெரியவில்லை. இதை உதாசீனம் என்று நான் நினைக்கவில்லை. அந்தத் தற்குறிகளின் இரங்கல்களால் மாசு பாடாமல் அவர் தகனம் முடிந்ததே மேன்மை. இந்நேரத்தில் ஜெயகாந்தனுக்குக் கருணாநிதி எழுதிய அருவறுப்பான இரங்கலை நினைவுக் கூறவும். நல்ல வேளை அப்படி எதுவும் அசோகமித்திரனுக்கு நடக்கவில்லை.
அசோகமித்திரனின் படைப்புலகமும் என் உலகமும் வெவ்வேறு ஆகவே தான் நான் வேறு எந்த விமர்சந்த்தின் உள்ளூம் செல்லவில்லை. நான் படித்த "ஒற்றன்", 'இன்று' ஆகியவை அவரின் முக்கியமான ஆக்கங்கள் அல்ல. அவரின் முக்கியமான படைப்புகளை முழுதுமாகப் படித்து அதன் மரபிலான மற்ற உலக இலக்கியத்தை கற்றுத் தேர்ந்தவர்கள் தான் முழுமையான விமர்சனம் செய்ய முடியும். நான், அவர் புனைவுலகைப் பொறுத்தவரை, சராசரி வாசகனே.
தமிழ் நாட்டில் பிராமணர்கள் ஒடுக்கப் படுகிறார்கள் என்று பத்ரி சேஷாரத்திரியின் கட்டுரைக்கு வந்த எதிர் வினைகளை முன் வைத்து நான் எழுதியது (ஆங்கிலத்தில்) http://contrarianworld.blogspot.com/2014/12/badri-seshadris-brahminical-angst-meets.html

Monday, February 20, 2017

சபாநாயகர் தனபால் திராவிட இயக்கத்திற்கு கடன்பட்டவரா? தாழ்த்தப்பட்டோரின் கல்விக்கு திராவிட இயக்கம் என்ன செய்து கிழித்தது?

தமிழகச் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தான் தலித் என்பதாலேயே எதிர்க்கட்சி திமுகவினர் இழிவுச்செய்யும் விதமாக நடந்து கொண்டனர் என்றார் சபாநாயகரான தனபால். இதற்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு திமுக உறுப்பினரான மனுஷ்யபுத்திரன், "திமுக என்ற இயக்கம் இல்லாவிட்டால் நீங்கள் படித்துச் சபாநாயகாராக வந்திருக்க மாட்டீர்கள்" என்றார். இது கடைந்தெடுத்த ஆணவம் என்பதோடு பல காலமாகப் பரப்பட்டு வரும் பொய்யும் கூட.



திராவிட இயக்கத்தினால் வந்த படிப்பு என்றே வைத்துக் கொண்டாலும் அவமதிப்புச் செய்தால் அமைதிக் காக்க வேண்டுமா? ஹமீதின் இந்த வார்த்தைகளை யாரேனும் ஓர் ஐயர் சொல்லியிருந்தால் இந்நேரம் பேஸ்புக் போராளிகளெல்லாம் ஒன்று திரண்டு கல்லெறிந்து இருப்பார்களே. மேட்டிமைத் தனமும் ஆண்டப் பரம்பரை குணமும் எந்த ஒரு இனத்துக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல. 

பெ.சு.மணியின் "நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு" நூல் படிக்கக் கிடைத்த போது மிக ஆச்சர்யமான தகவல்கள் தெரிய வந்தன. தாழ்த்தப்பட்டவர்கள், குறிப்பாகத் தலித்துகள், என்னமோ இருளில் மூழ்கிக் கிடந்தது போலவும் ஈ.வெ.ரா தான் பகலவனாகத் தோன்றி அவர்களுக்கு வாழ்க்கைக் கொடுத்தார் என்பது போலவும் திராவிட இயக்கத்தினர் ஒரு பெரும் பிரச்சாரம் செய்து அதில் ஈடில்லாத வெற்றியும் அடைந்துவிட்டனர். இன்று தமிழகத்தில் சராசரி தமிழன் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்தது ஈ.வெ.ரா மட்டுமே என்று நம்புவதோடு அவரல்லாத வேறெந்த தலைவரையும் அறியாமல் இருப்பது தான் நிதர்சனம். அயோத்தி தாசர், எம்.சி. ராஜா, ரெட்டைமலை ஸ்ரீனிவாசன் ஆகியோர் பற்றிய எளிய அறிமுகம் கூட இன்று தமிழகத்தில் பலருக்குக் கிடையாது. 

மணியின் நூலில் இருந்து சில துளிகள். 

பட்டியல் இனத்தவரை "ஆதி திராவிடர்" என்று குறிப்பது எம்.சி.ராஜாவின் முயற்சியால் 1922-ஜனவரியில் அரசானையானது. இப்படிக் குறிப்பதற்கு ஒரு நீண்ட மரபு இருந்தது மகாத்மா பூலேவில் தொடங்கி டி. ஜான் ரத்தினம் வரை. ஜான் ரத்தினம் "1885-ல் தொடங்கிய இதழிற்கு 'திராவிடப் பாண்டியன்' என்று பெயரிட்டார். 1892இல் தொடங்கிய ஓர் அமைப்பிற்குத் 'திராவிடர் கழகம்' என்று பெயர் சூட்டினார்" எனப் பெ.சு.மணி குறிப்பிடுகிறார். 

இந்தியாவில் ஆங்கிலேய அரசின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயனம் மேற்கொண்ட மாண்டேகு செம்ஸ்போர்டை ஒரு மிகப் பெரிய ஆதி திராவிடர் தலைமைக் குழு சந்தித்து ஆதி திராவிடர்களின் சார்பில் விண்ணப்பித்தது. அதன் தொடர்ச்சியாக எம்.சி.ராஜா ஆதி திராவிடர்களின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 

திராவிட இயக்கம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்பாகத் தலித்துகள் தமக்கென அரசியல் அமைப்புகளைக் கொண்டிருந்தனர். 1882-இல் உருவாக்கிய ஆதி திராவிடர் மகாஜன சபை; 1893-இல் 'பறையர் மஹாஜன சபை'; 1928-இல் "அகில இந்திய ஆதி திராவிட மஹாஜன சபை" ஆகியவை அவை. 

அது மட்டுமல்ல ஆதி திராவிடர்கள் தங்களுக்கென முக்கியமான தமிழ் இதழ்களையும் நடத்தி வந்தனர். அவற்றின் பட்டியலை மணி தருகிறார் கீழே: 

மகாவிகடதூதன் - 1886 
பறையன்-1893 
ஒரு பைசாத் தமிழன் - 1907 
சூரியோதயம் - 1869 
பஞ்சமன் - 1871 
சுகிர்தவசனி - 1877 
திராவிட மித்திரன் - 1885 
ஆதி திராவிடன் (கொழும்பு) - 1919 

ரெட்டைமலை ஸ்ரீனிவசன் ஆங்கிலேயே அரசால் ராவ் பகதூர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்டவர். அம்பேத்கரோடு 1930-31 நடந்த வட்ட மேஜை மாநாட்டில் கலந்துக் கொண்டவர். "இவர் தொடக்கப் பள்ளிக் கல்வி வளர்ச்சிக் குழுவின் உறுப்பினராக ஆளுநர் பெண்ட்லாந்து பிரபுவால் 1917-இல் நியமிக்கப் பட்டார்"."ஆதி திராவிடர்களின் இருப்பிடங்களில் அடிப்படைக் கல்வி அறிவுப் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தார்". "பச்சயப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள 21.11.1927இல் தான் எம்.சி.ராஜாவின் பெரு முயற்சியால் முடிவு செய்யப்பட்டது (வ.வே.சு. ஐயரின் குருகுலத்தில் சமபந்தி போஜனம் இல்லை என்று வருத்தப்படுபவர்கள் பச்சயப்பன் கல்லூரியில் ஆதி திராவிடருக்கு அனுமதியில்லை என்பது பற்றி எழுதியதில்லை) 

இட ஒதுக்கீட்டின் முன்னோடி வகுப்புவாரி பிரதிநித்துவம். செப்டெம்பர் 16 1921-இல் முதல் அரசாணை, ஆகஸ்டு 15 1922-இல் இரண்டாம் ஆணை, டிசம்பர் 15 1928-இல் மூன்றாம் அரசாணை அகியன நீதிக் கட்சியின் சாதனைகளாகச் சொல்லப் படுவன. 

ஈ.வெ.ரா மற்றும் திராவிட இயக்கம் என்று இன்று குறிக்கப்படும் எதுவும் முளைப்பதற்கு முன்பே ஒரு நீண்ட எதிர்ப்பு மரபும், சீரிய அறிஞர்களின் தலைமையும் ஆதி திராவிடர்களிடையே இருந்திருக்கிறது என்பதே நமக்குப் புலனாகிறது. ஈ.வெ.ரா ஆகட்டும் காந்தி ஆகட்டும் யாரும் வானத்தில் இருந்து வந்து குதித்து முன்னெப்போதும் இல்லாத சிந்தனைகளைத் தேவ தூதன் போல் உறைக்கவில்லை. இந்தியா போன்ற ஒரு பெரு நிலத்தில் காலனியாதிக்கம் கொண்டு வந்த நவீனக் கல்வியும், தொழில்களும் பல்லாயிரகணக்கான ஆண்டு மரபுகளைப் புரட்டிப் போட்டு நிலப் பரப்பெங்கும் பற்பல அறிவியக்கங்கள் குமிழிகளாகத் தோன்றி ஒன்றோடொன்று இயைந்தும் முரன் பட்டும் ஒரு முரனியக்கத்தை உருவாக்கின. 

"இன்று ஒளி உண்டாவதாக" என்று ஆண்டவர் ஆணையிட்டவுடன் உலகில் ஒளித் தோன்றியது எனக் கிறித்தவ வேதாகமம் சொல்கிறது. அப்படி எந்தச் சுக்கும் நடக்கவில்லை. அதே போல் ஒரு இனமே இருளில் தத்தளித்தது போலவும் தேவதூதனாக ஈ.வெ.ராவும் அவர் அடிப்பொடிகளும் வந்ததுமே இரட்சிப்பு நிகழ்ந்ததாகவும் சொல்வது மடமை. 

அயோத்திதாசரை மறைத்த பெரியார் பிம்பம்: 

பெரியாரின் பிம்பப்படுத்தலினால் ஆதி திராவிடர்களின் தலைவர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டனர். ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய "அயோத்தி தாசர்: வாழும் பௌத்தம்" இது குறித்து முக்கியமான செய்திகளைத் தருகிறது. 

எழுத்தாளரும் 'விடுதலை சிறுத்தைகள்' கட்சி உறுப்பினருமான ரவிக்குமார் என்பவர் அயோத்திதாசரை மீட்டெடுப்புச் செய்தார். அது குறித்து ராஜாங்கம் இவ்வாறு எழுதுகிறாறர்: "பெரியார் என்ற திராவிட இயக்க பிம்பத்திற்கு மாற்றான தலித் பிம்பமாக அயோத்திதாசரை ரவிக்குமார் முன் வைத்தார். அதோடு பெரியார் பேசிய கருத்துகள் பலவும் அயோத்திதாசரால் பேசப்பட்டவையே; அவற்றை உள்வாங்கியே திராவிட இயக்கமும் பெரியாரும் செயற்பட்டனர். ஆனால் 'தாழ்த்தப்பட்டோரான' அயோத்தி தாசரை மறைத்துவிட்டனர் என்று அவரின் விமர்சனம் அமைந்தது" 

ரவிக்குமார் அயோத்தி தாசரை முன்னிறுத்தியதை பெரியார் அன்பர்கள் எதிர்கொண்ட விதம் ரொம்ப எளிமை. அயோத்தி தாசர் தன் இனமான பறையர்களையே முன்னிறுத்தினார் என்றும் அருந்ததியருக்கு எதிரானவர் என்றும் விமர்சித்து அதற்குத் துணையாக அருந்ததியரையும் அமைத்துக் கொண்டனர் என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். "தங்களுடைய கருத்திற்கு உடன்பட்ட அல்லது கீழ்படிந்த பிம்பமாகவோ கருத்தியலாகவோ இருந்தால் உங்களிடம் முரண்கல் இருந்தால் கூடச் சொல்லமாட்டோம். மாறாக உடன்படாவிட்டால் முரண்களைச் சொல்லுவோம்; மறுப்போம்; நிராகரிப்போம்" என்பதாகப் பெரியாரின் பிம்பத்தின் மீது ஈடுபாடுள்ளவர்கள் கையாண்ட தந்திரோபாயம் என்கிறார் ராஜாங்கம். 

திராவிட இயக்கத்தினர் கொடுத்த அழுத்ததின் காரணமாக ரவிக்குமார் அயோத்திதாசர் பற்றியும் பெரியார் பற்றியும் எழுதியவை நிறுத்தப்பட்டு அவர் "திராவிட இயக்கிற்கு வெளியேயும் முன்பேயும் செயல்பட்ட தலித் அமைப்புகளையும் அவர்தம் புரிதல்களையும் பேசும் செயல்பாடு உருவானது. எல்லோரும் நம்புவதுபோலத் தலித் மக்கள் திராவிட இயக்கதினாலோ பிறராலோ கண்விழிக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே நடத்தி வந்த நெடிய போராட்டங்களினா இன்றைய உரிமைகளைப் பெற்றனர் என்று கூறுவதே இதன் அடிப்படை. திராவிட இயக்கம் மீதான எதிர்மறை விமர்சனத்தைத் தலித் வரலாறு என்கிற நேர்மறை தேடல் மூலம் சமப்படுத்தும் முயற்சியாக இதைக் கருதலாம்" என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம். 

கல்வியைச் சீரழித்த கருணாநிதியும் திமுகவும்: 

1967-1977 வரை நடந்த திமுக ஆட்சியில் எந்த அரசு பொறியியல் கல்லூரியோ, அரசு மருத்துவக் கல்லூரியோ திறக்கப்படவில்லை. தமிழகத்தின் தொழில் கல்லூரிகளில் பெரும்பான்மை 1947-67 காலக் கட்டத்தில் திறக்கப்பட்டவை தான். சில கல்லூரிகள் காலனி அரசால் தொடங்கப்பட்டவை. 1990-இல் 4 கோடிப் பேர் கொண்ட மாநிலத்தில் ஏழே அரசு பொறியியல் கல்லூரிகள் இருந்தன. கலைக் கல்லூரிகளின் கதையும் இதே தான். 

திராவிட இயக்கத்தினர் சமூக நீதி என்றவுடன் இட ஒதுக்கீட்டின் மாண்பு குறித்தும் அதற்குத் தாங்களே பிதாமகன்கள் என்றும் பேசுவர். 

நவீனக் கல்வி என்று ஒன்று அறிமுகமான காலம் தொட்டே கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஏதோ ஒரு வகையில் இட ஒதுக்கீடு இருந்தே வந்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுக் காலம் கல்வி மறுக்கப் பட்டது என்பதெல்லாம் வெற்று கோஷமே. உண்மையான வரலாறு அல்ல. கட்டாயமாகத் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்விக் கிடைப்பதிலும் கல்வியை அடைவதிலும் முட்டுக் கட்டைகள் இருந்தன. அதற்கு ஜாதியம் மட்டும் காரணமன்று. மேலும் அந்த முட்டுக்கட்டைகளைப் போட்டவர்கள் பிராமணர்கள் மட்டுமல்ல. 

இட ஒதுக்கீடு என்பது இன்று வோட்டு வங்கி அரசியலானதோடு அக்கொள்கை சமூக நீதியைப் பொறுத்தவரை ஒரு மழுங்கிய ஆயுதமே (a blunt instrument). அரசாங்கங்கள் கல்வியில் முதலீடு செய்யாமல், கல்லூரிகளையும் கல்விச் சாலைகளையும் பெருக்காமல் இருக்கின்ற சீட்டுகளில் ஒதுக்கீடு கொள்கையைப் பயன்படுத்துவது ஒரு குறுகியக் காலத்திற்கு வேலைச் செய்யும். செய்தது. அப்புறம் அது அர்த்தமிழக்கத் தொடங்கும். தொடங்கியது.



ஆதி திராவிடர்களின் பிரச்சனை கல்லூரிகளில் இடம் கிடைப்பது மட்டுமல்ல. அவர்களில் பலர் இன்றும் கிராமங்களிலிருந்து பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருந்து வருபவர்கள். மாநிலத்தில் ஏழே அரசுக் கல்லூரிகள் இருந்தன என்றால் பெரும்பாலான பட்டியல் ஜாதி மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்க வேண்டும். அதற்கான உதவித் தொகைகள் மிகச் சொற்பம். மேலும் சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில், பெரும்பாலும் நகரங்களில், உள்ள கல்லூரிக்குச் செல்வது பணம் செலவாகும் ஒன்று. போதாக்குறைக்கு நகரத்தில் படித்த மாணவர்களோடு போட்டியிட வேண்டிய சூழல், தன் வீட்டில் இருந்தும் தன் சூழலிலில் இருந்தும் அந்நியப்பட்ட தனக்கு எந்த விதத்திலும் பின்புலம் இல்லாத சூழலில் கல்விப் பயில்வதில் அம்மாணவர்கள் கொடும் மன உளைச்சலுக்கு ஆளாவது அன்றாடம் நடப்பது. மேற்சொன்னதில் பலவும் பொருளாதாரத்தால் தாழ்ந்த நிலையில் இருக்கும் மேல் ஜாதியினருக்கும் பொதுவானதே. 

பள்ளிக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வி இன்று தமிழகத்தில் தனியாருக்குத் தாரை வார்த்தது போல் வேறு எந்த மாநிலத்திலும் நடந்துள்ளதா என்பது கேள்விக் குறியே. இத்தனியார் மயத்தினால் உண்டான ஆங்கிலக் காண்வெண்டு பரவலாக்கம், தனியார் கல்லூரிகளில் எம்ஜியார் கொண்டு வந்த இட ஒதுக்கீடு ஆகியவை நன்மை பயத்தன ஆனால் அதற்கான விலை? 

இட ஒதுக்கீடு எனும் சாக்லேட்டை காண்பித்து ஏமாற்றிவிட்டு கல்வியின் தரம், பள்ளிகளின் தரம், ஆசிரியர்களின் தரம் என்று எந்தத் தரத்திலும் கவனம் செலுத்தாது கழக அரசியலின் கொடை. சமீபத்தில் மத்திய கல்வி மையம் நடத்திய ஆராய்ச்சியில் தமிழக மாணவர்கள் பின் தங்கிய மாநிலங்கள் என்று கருதப்படும் நாகாலாந்து, ஒடிஷா மாணவர்களை விடப் பின் தங்கியுள்ளனர் என்று தெரிய வந்தது. இன்னொரு ஆய்வோ தமிழகப் பொறியியல் கல்லூரி மாணவர்களில் 85% எவ்வித நேர்காணலுக்கும் லாயக்கில்லை என்றது. சமச்சீர் கல்வியினால் மாணவர் தேர்ச்சி உயர்ந்திருக்கிறது என்று மார் தட்டினார்கள் உடன் பிறப்புகள். ஆனால் தரம்? பாதாளம். கணிதத்தில் 200/200 வாங்கிய மாணவர்கள் பலர் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் படிப்பில் இரண்டாமாண்டு கணிதத் தேர்வில் பாஸ் ஆகவில்லை. மற்ற மாநிலங்கள் பின்பற்றும் மத்திய கல்வி முறையின் (CBSE) தரத்தின் முன் தமிழகச் சமச்சீர் கல்வியின் தரம் உரைப் போட காணாது. இதெல்லாம் பட்டியல் இனத்து மாணவர்களை வெகுவாகப் பாதிக்கும். 

நுழைவுத் தேர்வு என்றாலே தமிழ் நாட்டு மாணவன் தொடை நடுங்குகிறான். இந்திய அளிவிலான எந்தத் தேர்விலும் தமிழக மாணவர்கள் வெற்றிப் பெறுவது அருகி வருகிறது. ஐஐடி நுழைவுத் தேர்வில் சமச்சீர் கல்வியில் பயின்றவர்கல் 9 பேர் தான் தேர்ச்சிப் பெற்றனர். அவமானம். ஐ.ஏ.எஸ்; UPSC என்றூ அதை எடுத்தாலும் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அவமானகரமானது. (கீழே சுட்டிகளைக் காண்க). 

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் செய்தி வருகிறது திமுகவினர் சபாநாயகர் தனபாலுக்குப் புடவை, வளையல் ஆகியவற்றை அஞ்சல் செய்துள்ளனர் என்று. திமுகவினருன் ஆணாதிக்க மனோபாவத்துக்கும் ஆண்டை மனோபாவத்திற்கும் சான்று.

சபாநாயகருக்கு திமுகவினர் அனுப்பிய அஞ்சல் ( http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dmk-from-pollachi-sent-saree-in-courier-to-speaker-dhanapal-117022000051_1.html
"பிளேடு வச்சுருக்கோம்" - ஸ்டாலின் பயமுறுத்தல்:

சட்டசபையில் இருந்து வெளியேற்ற வந்த போலீஸாரிடம் ஸ்டாலின் "பிளேடு வச்சுருக்கோம், தொட்டீங்க தற்கொலை பண்ணிக்குவோம்" என்று அச்சுறுத்தினாராம். ஆனால் போலீஸார் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவர்களை வெளியேற்றினர். இதில் எதை நினைத்துச் சிரிப்பது என்றுத் தெரியவில்லை. ஸ்டாலினின் குழந்தைத் தனமான நடத்தையை நினைத்துச் சிரிப்பதா அல்லது எதிர்கட்சித் தலைவர் அப்படிச் சொன்னதை ஒருப் பொருட்டாகக் கூட கருதாத போலீஸாரின் அலட்சியத்தை நினைத்துச் சிரிப்பதா?

தூக்கிச் செல்லப்படும் "பிளேடு வைத்திருக்கும்" ஸ்டாலின் (http://tamil.oneindia.com/news/tamilnadu/m-k-stalin-threatern-police-that-he-will-commit-suicide/slider-pf222458-274570.html)

கருணாநிதி அடிக்கடி தான் "சூத்திரன்" என்றுச் சொல்லிக் கொள்வதோடு தன் தவப் புதல்வன் ஸ்டாலின் மட்டும் "வேறுக் குலத்தில் பிறந்திருந்தால் அக்கினிக் குஞ்சு என்றுப் போற்றப்பட்டிருப்பார்" என்பார். ஸ்டாலின் எக்குலத்தில் பிறந்திருந்தாலும் அக்கினிக் குஞ்சாகியிருக்க மாட்டார்.

பிற் சேர்க்கை:

சற்று முன் நினைவுக்கு வந்த இன்னொருத் தகவல். முன்பே எழுதியது தான். கடந்த திமுக ஆட்சியில் டிசம்பர் 21 2010 அன்று சென்னையில் இருக்கும் ஆதி திராவிடர் நல விடுதி ஒன்றின் மாணவர்கள் நகரின் மையச் சாலையான மவுண்ட் ரோடில் தர்னா செய்தனர் தங்கள் விடுதியின் நிலையைச் சீர் செய்ய சொல்லி. பார்ப்பன ஏடு என்றும் மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்றும் திமுகவினர் இகழும் இந்துப் பத்திரிக்கை குழுமத்தின் பிரண்ட்லைன் பத்திரிக்கை தான் முழுக் கட்டுரை வெளியிட்டது. மனிதர்கள் வசிக்க சற்றும் லாயக்கில்லாத விடுதிகள் அவை. மாணவர்கள் உணவை கொண்டு செல்வதற்கு பாத்திரங்கள் இல்லாமல் வாளியைப் பயன்படுத்த வேண்டிய நிலை. தெரு நாய்கள் சர்வ சாதாரணமாக உலா வந்தன விடுதியில். "Hell Hole Hostels" என்று பிரண்ட்லைன் அக்கட்டுரைக்குத் தலைபிட்டது. இந்த லட்சணத்தில் தலித் சமூகத்தினர் திராவிட இயக்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது கயமை.

ஆதி திராவிடர் நல விடுதியில் தெரு நாய்கள். மேலும் படங்களுக்கும் கட்டுரைக்கும் பிரண்ட்லைன் சுட்டியை "சான்றுகள்" பட்டியலில் காண்க

சான்றுகள்:

1. நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு -- பெ.சு. மணி. பூங்கொடி பதிப்பகம்
2. அயோத்திதாசர்: வாழும் பௌத்தம் -- ஸ்டாலின் ராஜாங்கம். காலச்சுவடு பதிப்பகம்.
3. "திராவிட இயக்கம் என்ன செய்து கிழித்தது!": Tamil Nadu's Debt To Kamaraj And M.G.R On Education. --- என்னுடைய பழையப் பதிவு http://contrarianworld.blogspot.com/2013/05/tamil-nadus-debt-to-kamaraj-and-mgr-on.html
4. தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டின் சுருக்கமான வரலாறு - விக்கிப்பீடியா https://en.wikipedia.org/wiki/Reservation_policy_in_Tamil_Nadu
5. தமிழ் நாட்டில் அரசுக் கல்வி நிலையங்கள் https://en.wikipedia.org/wiki/List_of_Tamil_Nadu_Government_educational_institutions
6. தமிழ் நாட்டு மாணவர்களின் UPSC தேர்ச்சி விகிதம் பற்றி http://indiatoday.intoday.in/education/story/upsc-result-tamil-nadu/1/430289.html
7. ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழ் நாட்டு மாணவர்கள் http://www.deccanchronicle.com/141015/nation-current-affairs/article/400-tamil-nadu-candidates-clear-ias-prelims
8.  பிளஸ்–2 வில் 200–க்கு 200: அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தோல்வி! -- விகடன் கட்டுரை http://www.vikatan.com/news/article.php?module=news&aid=12311
10. "தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் என் மீது திமுக தாக்குதல்" - http://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-assembly-speaker-plays-caste-politics-274539.html
11. பிளேடு வச்சுருக்கோம் - ஸ்டாலின் மிரட்டல் http://tamil.oneindia.com/news/tamilnadu/m-k-stalin-threatern-police-that-he-will-commit-suicide-274570.html
12. "Hell Hole Hostels" http://www.frontline.in/static/html/fl2802/stories/20110128280209000.htm