Showing posts with label Bharathiyar. Show all posts
Showing posts with label Bharathiyar. Show all posts

Thursday, September 10, 2020

பாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்

 செப்டம்பர் 11 1921-இல் பாரதி இறந்த போது வயது 38. அதற்குள்ளாக அவன் எழுதியதையெல்லாம் தொகுத்த படைப்பு 16 தொகுதிகளை எட்டுகிறது. பாரதி தமிழின் அடையாளம், இந்தியாவின் அடையாளம். பாரதியியல் என்று கூறத் தக்க அளவில் இப்போது பாரதி எழுத்துகளின் தொகுப்புகளும் பாரதி பற்றி மற்றவர்கள் எழுதியவையும் வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 11 அன்று முகநூலில் பலரும் பாரதியின் ஏதோ ஒரு பிரபலமான கவிதையை பகிர்வார்கள். இவ்வருடம் வேறு ஏதாவது அர்த்தமுள்ளதாகச் செய்யலாமே என்ற ஆசையில் கடந்த சில வருடங்களாக பாரதி பற்றிய புத்தகங்களை தேடித் தேடி வாங்கியவற்றை ஒரு பட்டியலிட்டால் பாரதி ஆர்வலர்களுக்கு அது உபயோகமாயிருக்கும் என்று எண்ணியதன் விளைவு இப்பதிவு. 



1. கால வரிசையில் பாரதி படைப்புகள் - தொகுப்பாசிரியர் சீனி விசுவநாதன். 16 தொகுதிகள். அல்லயன்ஸ் பதிப்பகம். 2015 வெளியீடு. ரூ 10,000. ஒரு பல்கலைக்கழக துறை செய்ய வேண்டிய வேலையை ஒரு தனி மனிதர் செய்து முடித்திருக்கிறார். பகீரத பிரயத்தனம். பாரதி எழுதிய அனைத்தும் கால வரிசையில், எங்கெங்கு விளக்கக் குறிப்பு அங்கெல்லாம் விளக்கத்தோடு தொகுக்கப்பட்டது. இத்தொகுதிப் பற்றியும் பாறதி மகாகவியா என்பது பற்றியும் நான் எழுதிய கட்டுரை https://contrarianworld.blogspot.com/2016/07/collected-works-of-bharathi.html

2. கால வரிசையில் பாரதி பாடல்கள் - தொகுப்பாசிரியர் சீனி விசுவநாதன். இது ஒரு தொகுதி, பாடல்கள் மட்டும் கால வரிசையில் தொகுக்கப்பட்டது. முக்கியமான மேலதிக தகவல்கள் அடங்கிய தொகுதி. பாரதி பாடல்களின் இசை வகைமை, பெயர்கள் எந்த வெளியீடுகளில் யாரால் எப்படி மாற்றப்பட்டது என்பனப் போன்றவை சிரத்தையோடு சேர்க்கப்பட்டுள்ளன.  வெளியீடு சீனி. விசுவநாதன். ரூ650 (2012). 





3. பாரதி விஜயம்: மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் (தொகுதி 1) -- பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம். சந்தியா பதிப்பகம். 2017 வெளியீடு. ரூ 1000. பாரதியின் நண்பர்களும் குடும்பத்தினருன் எழுதிய கட்டுரைகளை மிகுந்த சிரத்தையோடு தொகுத்திருக்கிறார் கடற்கரய். பாரதியின் சீடர் கனகலிங்கம், செல்லம்மா பாரதி, தங்கம்மாள் பாரதி, சகுந்தலா பாரதி, வ.உ.சி, உ.வே.சா, பரலி நெல்லையப்பர், யதுகிரி அம்மாள் ஆகியோரின் கட்டுரைகளும் சிறு நூல்களும் அடங்கிய தொகுதி. கனகலிங்கம் மற்றும் யதுகிரி அம்மாளின் சிறு நூல்கள் முக்கிய ஆவணங்கள்.

4. பாரதி விஜயம்: மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் (தொகுதி 2) -- பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம். சந்தியா பதிப்பகம். 2020 வெளியீடு. ரூ 220. முந்தையத் தொகுதியில் வெளியான கட்டுரைகள் மேலும் செம்மையாக்கப்பட்டு மேலதிக கட்டுரைகளோடு வெளியான இரண்டாம் தொகுதி.

5. பாரதியியல்: கவனம் பெறாத உண்மைகள் -- முனைவர் ய. மணிகண்டன். பாரதி புத்தகாலயம் வெளியீடு (2016). ரூ 140.  பாரதி சமகாலத்தில் அங்கீகரிக்கப்பட்டானா? பாரதியின் 'இந்தியா' பத்திரிக்கையில் எழுதிய தமிழறிஞர்கள் என்று அதிகம் அறியப்படாத செய்திகளை தொகுக்கும் புத்தகம்.

6. மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும் -- முனைவர் ய. மணிகண்டன். பாரதி புத்தகாலயம் வெளியீடு (2013). ரூ 70.  பாரதி சங்க இலக்கியம் பயின்றவனா? பாரதிக்கு பழந்தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சியுண்டா என்ற விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் முகமாக எழுதப்பட்டது.

7. பாரதியின் இறுதிக் காலம்: 'கோவில் யானை' சொல்லும் கதை -- ஆய்வும் பதிப்பும் முனைவர் ய. மணிகண்டன். வெளியீடு காலச்சுவடு (2015). ரூ 60. யானை தன்னை தாக்கிய நிகழ்வை வைத்து பாரதி எழுதிய சிறு நாடகம் 'கோவில் யானை'. "பாரதி நூலெதிலும் இடம்பெறாத இந்நாடகத்தைக் கண்டெடுத்து வழங்கும்" நூல் என்று பதிப்பக குறிப்புச் சொல்கிறது.




8. பாரதியைப் பற்றி நண்பர்கள் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். வெளியீடு காலச்சுவடு (2016).ரூ 225. கடற்கரய் தொகுத்த 'பாரதி விஜயம்' தொகுதியில் காணும் கட்டுரைகளில் சில இந்த நூலில் இருக்கும்.

9. பாரதியின் கடிதங்கள் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். வெளியீடு காலச்சுவடு (2016). ரூ 100. பாரதியின் கடிதங்கள், குறிப்புகள் அடங்கிய சிறு தொகுதி.

10. பாரதியார் கவிநயம் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன்.  வெளியீடு காலச்சுவடு (2016). ரூ 225. பாரதியின் கவி நயம் பற்றி வ.ரா, ராஜாஜி, வையாபுரி பிள்ளை, கு.பரா, புதுமைப் பித்தன், திரிலோக சீதாராம், குகப்ரியை, வை.மு.கோதைநாயகி அம்மாள் முதலானோர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு.




11. பாரதி -கவிஞனும் காப்புரிமையும்: பாரதி படைப்புகள் நாட்டுமையான வரலாறு -- அ.இரா.வேங்கடாசலபதி. வெளியீடு காலச்சுவடு (2015). ரூ 120. பாரதியின் கவிதைகள் நாட்டுடுமையானது சுவையான கதை. இப்புத்தகம் பற்றிய என் மதிப்பீடு https://contrarianworld.blogspot.com/2016/02/bharathi-from-being-copyrighted-to.html

12. பாரதி கருவூலம்: 'ஹிந்து' நாளிதழில் பாரதியின் எழுத்துகள் (முதல் முறையாக நூல் வடிவில்) -- அ.இரா.வேங்கடாசலபதி. வெளியீடு காலச்சுவடு (2014). ரூ 175. பாரதி 'ஹிந்து' நாளிதழுக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிங்கள். ஆங்கிலத்திலும் சரளமான பாரதியின் எழுத்துகள் ஆச்சர்யபடுத்தும். ஆங்கில கடிதங்களுக்கு தமிழாக்கமும் அருகிலேயே கொடுத்திருப்பது சிறப்பு.

13. பாரதி: 'விஜயா' கட்டுரைகள் (முதன்முறையாக நூல்வடிவில்) -- தொகுப்பு அ.இரா.வேங்கடாசலபதி. வெளியீடு காலச்சுவடு (2017). ரூ 450. "பாறதி ஆசிரியராக விளங்கிய ஒரே நாளேடு 'விஜயா'. 1909-1910இல் புதுச்சேரியிலிருந்து வெளியான" நாளேடு, "இது வரை ஓரிதழ் கூட முழுமையாகக் கிடைக்காத 'விஜயா'வின் பல இதழ்களை பெருமுயற்சி செய்து பாரீசில் கண்டுபிடித்து" மேலும் "அரசின் இரகிசிய ஆவணம்" மற்றும் பாரதி "பங்கெடுத்துக் கொண்ட பிராமண சபைக் கூட்டம் பற்றி ஓர் அரிய ஆவணமும் நூலில் இடம்பெற்றுள்ளன" என்கிறது பதிப்பக குறிப்பு.

14. எழுக, நீ புலவன்! : பாரதி பற்றிய கட்டுரைகள் --தொகுப்பு அ.இரா.வேங்கடாசலபதி. வெளியீடு காலச்சுவடு (2016). ரூ 250. பாரதி பாரதிதாசன் சந்திப்பு நிகழ்ந்தது எப்போது?, பாரதி பார்வையில் தாகூர், பாரதி படைப்புகள் எப்படி வெளியாயின அக்காலத்தில் எழுத்து மற்றும் பதிப்பகச் சூழல் எப்படி இருந்தது, என்பன போன்ற கட்டுரைகள் அடங்கிய தொகுதி.




15. என் குருநாதர் பாரதியார் - ரா. கனகலிங்கம். வெளியீடு அகரம் (2015). ரூ 80. பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட சீடர் என்று பரவலாக அறியப்பட்ட ரா.கனகலிங்கம் எழுதிய முக்கியமான நூல். சுவையான தகவல்கள் அடங்கியது. இப்புத்தகத்தை பற்றிய என் கட்டுரை https://contrarianworld.blogspot.com/2020/03/blog-post.html




16. மகாகவி பாரதியார் - வ.ரா. வெளியீடு தோழமை (2011). ரூ 75. தகுதிக்கு மீறி மிகப் பிரபலமாகிவிட்ட பாரதி பற்றிய வாழ்க்கை வரலாறு. 

17. பாரதி நினைவுகள்: ம.கோ.யதுகிரி அம்மாள் -- மீள் பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம். வெளியீடு சந்தியா பதிப்பகம். ரூ 150. க.நா.சு சுதேசமித்திரனில் யதுகிரி அம்மாளின் புத்தகம் பற்றி சுதேசமித்திரனில் 1956-இல் எழுதிய மதிப்புரை, அரிய புகைப்படங்கள், முதற்பதிப்புக்கு எழுதப்பட்ட முகவுரை என்று ஓர் ஆவணமாக தருகிறார் கடற்கரய்.




18. பாரதியார் சரித்திரம் -- செல்லம்மாள் பாரதி. வெளியீடு பாரதி புத்தகாலயம். ரூ 100.

19. மகாகவி பாரதியார் கட்டுரைகள் -- தொகுப்பாசிரியர்கள் ஜெயகாந்தன் & சிற்பி பாலசுப்பிரமணியம். வெளியீடு சாகித்ய அகாதெமி (2019). ரூ 280. நிறைய கட்டுரைகள் இதற்கு முன் வெளிவந்த பூம்புகார் வெளியீட்டை குறிப்பவை. ஆராய்ச்சியாளனை சோர்வடையச் செய்யும் வகையில் பாரதியின் மூல வெளியீட்டைச் சொல்லாமல் நிறைய கட்டுரைகள் பூம்புகார் வெளியீட்டை சுட்டிக் காட்டும். ஜெயகாந்தன் இதில் என்ன பங்காற்றினார் என்று தெரியவில்லை.

20. பாரதியார் கட்டுரைகள் -- பூம்புகார் வெளியீடு (2009). ரூ 75. எவ்வித குறுப்பும் இல்லாமல் வெறும் கட்டுரைகள் அடங்கியத் தொகுதி. தவிர்க்கலாம். ஆனால் மலிவு விலை, எளிதில் கிடைப்பது.

21. சித்திர பாரதி (220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரப்பூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு) -- தொகுப்பு ரா.ஆ.பத்மநாபன். வெளியீடு காலச்சுவடு (2006). ரூ 325.   




என் பரிந்துரைகள்: பாரதியை கையடக்க கவிதை வெளியீடுகள் தாண்டி அறிந்துக் கொள்ள ஒரு சராசரி வாசகன் எவற்றை வாங்கலாம் என்கிற என் பரிந்துரை. மேலேச் சொன்ன பட்டியலின் வரிசை எண்கள் கொண்டு இப்பரிந்துரை. 2 (பதிப்பில் இருந்ந்தால்), 3 அல்லது 4, 9, 12, 13, 15, 17, 21. 3-ஐ வாங்கினால் 15-ஐயும் 17-ஐயும் தவிர்க்கலாம். பாரதி பற்றி இன்றும் ஒரு முழு நீள வாழ்க்கை சரித்திரம் இல்லாதது பெருங்குறை. 

Saturday, March 28, 2020

என் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம்

பாரதிக்கு இன்று வரை முறையான வாழ்க்கைச் சரித்திரம் கிடையாது. மாறாக நினைவுக் குறிப்புகள் என்று கூறத் தக்கவை தான் அதிகம். அவற்றுள் நூல் வடிவில் வெளிவந்தவைகளில் மிகுந்த கவனம் பெற்றவை, முறையே, வ.ரா வின் 'மகாகவி பாரதியார்', யதுகிரி அம்மாளின் ‘பாரதி நினைவுகள்’ மற்றும் செல்லம்மாள் பாரதியின் நூல். ரா.கனகலிங்கத்தின் ‘என் குருநாதர் பாரதியார்’ பிரசித்திப் பெற்ற அளவுக்குப் அங்கீகரிக்கப்படவில்லை என்றேத் தோன்றுகிறது.

கனகலிங்கம் பற்றிய பிம்பம்


பாரதி பற்றி அநேக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ய. மணிகண்டன் கனகலிங்கம் பற்றிய ஒரு கட்டுரையில் இப்படித் தொடங்குகிறார், “பாரதியின் அன்புக்குரிய சீடர், ஒடுக்கப்பட்ட சமூகத்தவர், பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர், ‘என் குருநாதர் பாரதியார்’ எனும் நூலைப் படைத்தவர்". கட்டுரை கனகலிங்கம் பற்றிக் கிடைத்த புதியதோர் தகவல் பற்றியது. அதற்கான முதல் வரிகள் தான் அவை.

கனகலிங்கம் என்கிற நூலாசிரியரை அறிமுகப்படுத்தும் முகமாக, சீடர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர் என்றெல்லாம் சொல்லிவிட்டு தான் அவர் எழுதிய நூலே குறிப்பிடப்படுகிறது. வ.ரா எழுதிய “மகாகவி பாரதியார்” நூலுக்கும் இப்படி ஓர் அறிமுகம் கிடைக்குமா என்று தெரியவில்லை. “பாரதியின் அன்புக்குரிய சீடர், ஆதிக்கச் சமூகத்தவர், பாரதியால் பூணூல் கழற்றியவர், ‘மகாகவி பாரதியார்’ எனும் நூலை எழுதிய வ.ரா என்று யாரும் எழுதிப் பார்த்ததில்லை.


கனகலிங்கத்தின் கல்வியும் பாரதியின் அறிமுகமும்

கனகலிங்கத்தின் நூலுக்கு எஸ். வையாபுரிபிள்ளையும், பி.ஶ்ரீ. ஆசார்யாவும் எழுதிய முன்னுரைகளின் காலத்தை வைத்துப் பார்க்கும் போது இந்நூல் 1947-இல் வெளி வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்நூல் பாரதியைப் பற்றி மட்டுமல்ல அக்காலச் சாதியம் பற்றியும் தகவல்களை அளிக்கிறது. எழுத்து நடையும் அபாரம். கனகலிங்கத்துக்குப் பாரதி பூணூல் மாட்டி விட்டார் என்கிற கதையில் மறக்கப்பட்ட (அல்லது மறைக்கப்பட்ட உண்மை) கனகலிங்கத்தின் பின்புலம்.

கனகலிங்கம் 1907-இல் பாரதி புதுவை வந்ததாக நினைவிலிருந்து எழுதுகிறார். பாரதி புதுவைக்கு வந்தது 1908-இல். 1907-இல் கனகலிங்கம் புதுவையின் பாரம்பர்யமிக்கக் கல்வே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார், வயது 17 என்கிறார். (ஆக அவர் பிறந்த வருடம் 1890 என்று தோராயமாகக் கணிக்கலாம். பாரதியை விட 7-8 வயது இளையவர். பாரதி பிறந்தது டிசம்பர் 11 1882). பள்ளிக் காலத்தில் தோழர் ஒருவர் மூலம் ‘இந்தியா’ பத்திரிக்கை கிடைக்கப் பெற்று அதன் மூலம் பாரதி பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. கனகலிங்கத்தின் கல்வி மற்றும் அறிவுத் தேடலுக்கு இது ஒரு சான்று.


1912-இல் Progressive Union Cricket Club என்கிற அமைப்பின் சார்பில் கனகலிங்கமும் வேறு மூன்று நண்பர்களும் பாரதியை உரையாற்ற அழைக்கிறார்கள். கவனிக்கவும், கனகலிங்கம் எம்மாதிரியான கிளப் ஒன்றில் உறுப்பினராயிருந்திருக்கிறார் என்று. பாரதி சாதியம் பற்றி உரையாற்றுகிறேன் என்கிறார். உரை நடக்கும் தினத்தன்று மாறுவேடத்தில் வந்த காவல் கண்காணிப்பாளரை கனகலிங்கம் அற்புதமாக வர்ணிக்கிறார், “நல்ல சிவப்பு நிறம், சுமார் ஆறடி உயரம், கிராப்புத் தலை, நெற்றியில் நாமம், மேலே கறுப்புச் செக்குக் கோட்டு, இடுப்பில் கரைப் போட்ட வேட்டி”. ஒரு நாவலாசிரியனுக்கே உரிய வர்ணனை.

குவளைக்கண்ணனும் கனகலிங்கமும்


கனகலிங்கத்தோடு கல்வே பள்ளியில படித்த இன்னொருவர் குவளைக்கண்ணன் என்று அறியப்படுகின்ற கிருஷ்ணமாச்சார்யார். ‘எனது நண்பர் குவளைக்கண்ணன்’ என்று கனலிங்கம் குறிப்பிடுகிறார். பள்ளிக் கால நட்பைக் குறிப்பிடுகிறாரா இல்லை பின்னால் பாரதியின் மூலம் நண்பரானதை குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. இதில் இருந்து நமக்குத் தெரிவது கனகலிங்கம் படித்தவர் என்பதோடு பிராமணர்கள் பயின்ற பள்ளியிலேயே பயின்றார் என்பது. அப்பள்ளியில் பயின்ற இன்னொரு பாரதி நண்பர் டி. விஜயராகவாச்சார்யார்.

குவளைக்கண்ணன் பெருமாள் கோயில் பட்டாச்சார் வேலைப் பார்த்ததோடு இன்னொரு வேலையும் அவ்வப்போது செய்தார் என்கிறார் கனகலிங்கம். புதுவை நீதிமன்றங்களில் சாட்சி சொல்வோர் ஏற்க வேண்டிய சத்திய பிரமாணம் சாதி, மத ரீதியாக வேறுப்பட்டிருந்ததாம். இஸ்லாமியருக்கு முஸ்லிம் ஒருவர் குர்-ஆன் புத்தகம் கொண்டும், பிராமணரல்லாதோருக்கு ஐயங்கார் ஒருவர் துளசி தீர்த்தப் பாத்திரத்தோடும், “ஹரிஜன சமூகத்தாருக்கு வள்ளூவப் பண்டாரம் ஒருவர் துளசி தீர்த்தப் பாத்திரத்தோடும்” சத்திய பிரமானம் செய்விப்பார்களாம்.



புதுவையில் பாரதி இருந்த காலத்தில் தேர்தல்கள் அமளிப்பட்டன என்று கனகலிங்கமும், செல்லம்மாளும் பதிவுச் செய்கிறார்கள். பாரதி தேர்தல் காலத்தில் ஹரிஜனங்களைக் கோயில் அனுமதிக்க வேண்டும் என்று அறிக்கை எழுதி குவளைக்கண்ணனையும் கையொப்பமிட வைத்து விடுகிறார். அதன் பலனாகக் குவளைக்கண்ணன் சக ஐயங்கார்களால் ஜாதி பிரஷ்டம் செய்யப்பட்டாராம்.

கனகலிங்கத்துக்குப் பூணூல்: இரு பார்வைகள்


கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டிய நிகழ்வை பூணூலை கழற்றினாலும் பிராமணராகவே இருந்து பதிவுச் செய்கிறார் வ.ரா. வ.ராவின் பார்வையில் அது ஒரு கேலிக்குரிய நிகழ்வு. “உன் ஜாதி என்ன என்று யாராவது கேட்டால் பிராமணன் என்று சொல்” எனப் பாரதி முழங்கும் போது அந்த வைபவத்துக்காகப் பாறதி அழைத்திருந்த பிராமண நண்பர்கள் யாரேனும் நகைக்கிறார்களா என்று நோட்டம் விட்டதாக வ.ரா எழுதுகிறார். கனகலிங்கத்தைக் குறிக்கும் போது ‘அவன்’, ‘பையன்’ (கனகலிங்கம் 22 வயது ஆண். வ.ராவை விட ஒரு வயது இளையவராக இருந்திருப்பார்) என்று தான் வ.ரா குறிக்கிறார். மேலும் தன் பூணூலை கழற்றிவிட்ட பாரதி ஏன் பூணூல் அணிந்து இன்னொருவருக்குப் பூணூல் அணிவிக்கிறார் என்று கேள்வி எழுப்பினார் வ.ரா. அதற்குப் பாரதி பிராமணனான தான் அந்த அடையாளத்தைத் துறப்பதன் அவசியமும் அதே அடையாளத்தைக் கனகலிங்கத்துக்குக் கொடுப்பதன் வித்தியாசத்தையும் விளக்கினார்.



கனகலிங்கம் சில காலமாகப் பாரதி தனக்கு வேத மந்திரங்கள் கற்றுக் கொடுத்துப் பின்னர் ஒரு நாள் உபநயணம் செய்விப்பதாகச் சொல்லி வீட்டுக்கு அழைத்ததையும், அங்கிருந்த பாரதியின் நண்பர்களையும் நினைவுக் கூர்கிறார். பாரதியின் வீடு வைபவத்திற்குத் தயார் செய்யப்பட்டிருந்தது. “கூடத்தில் லட்சுமி, ஸரஸ்வதி, கிருஷ்ணன்” ஆகியவரின் அலங்கரிக்கப்பட்ட படங்கள் இருந்தன என்றும் கிருஷ்ணனின் படத்துக்கு அடியில் “பிச்சுவா” கத்தி இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். இக்குறிப்புகள் வ.ராவின் புத்தகத்தில் இல்லை.

கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டியது குறித்து யாரேனும் தன்னுடன் வாதம் ஆரம்பிக்க மாட்டார்களா என்றும் அப்படிச் செய்தால் “வேத முனிவர்களின் பரந்த மனப்பான்மையையும், உண்மையான இந்து மதத்தின் உயர்ந்த லட்சியங்களையும்” பற்றி எடுத்துரைக்கப் பாரதி ஆவலாக இருந்தாராம்.

உப்பளம் மாரியம்மனும் பாரதியும்


பாரதியின் “தேடி உனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி” பாடலின் பூர்வீகம் சுவாரசியம். புதுவையில் உப்பளம் தேச முத்து மாரி அம்மன் கோயில் ஹரிஜனங்களுக்கான கோயில் அங்கிருந்த பூசாரி நாகலிங்கம் என்னும் வள்ளுவப் பண்டாரம். அவருக்கும் பாரதி பூணூல் அணிவித்தார், அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க. ஆரம்பக் காலத்தில் அப்பாடல் “உப்பளம் தேச முத்துமாரி” என்ற தலைப்பில் தான் வெளியானதென்றும் பிற்காலத்தில் ஏனோ வெறுமே ‘தேச முத்துமாரி’ என்றும் தலைப்பிடப்பட்டது என்று வருத்தத்தோடு குறிப்பிடுகிறார் கனகலிங்கம். இது உண்மை. பாரதியின் கவிதைகளைக் கால வரிசைப்படுத்தி வெளியிட்ட சீனி.விஸ்வநாதனும் இத்தகவலை பதிவு செய்திருக்கிறார். பாரதியின் பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட போது இது மாதிரி திருகு தாளங்கள் நடந்தன.

அந்தப் பாடல் பற்றி எழுதிய கனகலிங்கம் பாரதி ஜாதி வித்தியாசங்கள் தலைவிரித்தாடிய சிவன், விஷ்ணு, மற்ற தெய்வங்களின் கோயில்கள் பற்றிப் பாடல் எழுத்த மறுத்துத் தங்கள் அம்மனை பற்றிச் சிறப்பாகப் பாடினார் என்கிறார்.

பாரதியும் சமத்துவமும்


பாரதி தீவிர இந்து தான். “ஆரிய பூமி” என்றெல்லாம் பாட்டெழுதியவன் தான் ஆனால் அதுமட்டுமா பாரதி என்றால் இல்லவே இல்லை என்கிறார் கனகலிங்கம். புதுவை சர்ச்சில் ஈஸ்டர் பண்டிகைக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்வான் பாரதி, இஸ்லாமியர் போல் உடையணிந்து சுற்றத்தாரை துணுக்குற வைப்பான், இஸ்லாமியர் நடத்திய டீக்கடையில் எல்லோரும் பார்க்க டீ பருகுவான், இஸ்லாமிய உனவகத்தில் பண்டம் வாங்கிச் சாப்பிடுவான், தன் பெண்ணைக் கனகலிங்கம் கைப்பிடித்து அழத்துச் செல்ல அனுமதிப்பான், தன் வீட்டில் சாப்பிட்ட பிரஞ்சுக்காரரை காபி கோப்பையைத் தூக்கி அருந்தாமல் வாயில் வைத்து பருகச் சொல்வான், எல்லோரும் சாப்பிட்ட இலையைச் செல்லம்மாளை அப்புறப் படுத்த சொல்வான், ஒரு நாள் திடீரென்று கனகலிங்கம் வீட்டுக்கே போய் உட்கார்ந்து கொண்டு செல்லம்மாளை அழைத்து வர முயல்வான், இன்னும், இன்னும் இன்னும்.

ஒரு பிராமணரின் வீட்டில் அமர்ந்து கொண்டு கனகலிங்கத்தை அழைப்பான், கனகலிங்கம் உள்ளே வரத் தயங்கினால் அவரை வலுக்கட்டாயமாக உள்ளிழுத்து ஓங்காரத்தோடு “இன்று முதல் நான் எந்த இடத்தில் இருக்கிறேனோ, அந்த இடத்தில் தீண்டாமைப்பிணி இருக்கவே இருக்க முடியாது” என்று சூளுரைச் செய்கிறான். தேசிய கீதங்களை ஏன் கும்மி, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து வகையில் மெட்டமைத்தார் என்ற கேள்விக்கு “என் பாட்டு தேசிய கீதமானதால், மூட்டை தூக்கும் ஆள் முதற்கொண்டு பாகவதர் வரையில் சுலபமாகப் பாடவேணும்” என்று பதில் சொல்கிறான்.

வ.ரா போன்றவர்களின் பாரதி பற்றிய பார்வைக்கும் கனகலிங்கத்தின் பார்வைக்குன் இங்குத் தான் வித்தியாசம் காண முடிகிறது. மீண்டும் மீண்டும் கனகலிங்கம் சேர்ந்துண்பது, சேர்ந்து இருப்பது, சாதிய வித்தியாசங்களின் நிலவரம் ஆகியவற்றைக் கவனப்படுத்துகிறார். இந்நூலின் இன்னொரு சிறப்பு ஆசிரியர் மிக அழகாக ஆங்காங்கே பாரதியின் கவிதைகளைப் பயன்படுத்தியிருப்பார். தன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு சாப்பாடு வரவழைத்துச் சாப்பிட்ட பாரதி பற்றிச் சொல்லிவிட்டுப் பின் வருமாறு எழுதுகிறார்:

“என் குருநாதர் பாரதியார் ஹரிஜங்களின் சுகதுக்கத்தைத் தமதாக்கிக் கொண்டார். இத்தகைய வாழ்க்கையில் பிறந்தது தான்,

தஞ்சம் உலகினில் எங்கணுமின்றித் தவித்துத் தடுமாறி
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்
பாரமுனக்காண்டே! ஆண்டே! பாரமுனக்காண்டே’”

முதலாம் உலகப்போரின் சமயம் கனகலிங்கமும் பாரதியும் பிரிந்து விடுகிறார்கள். கனகலிங்கம் குமாஸ்தா வேலைக்காக மெஸொப்பொட்டேமியா போய்விடுகிறார். அவர் திரும்பி வரும் போது பாரதி சென்னைக்குப் போய் விடுகிறான். பணிக்காலம் முடிந்து புதுவை திரும்பிய கனகலிங்கம் தானும் சென்னைக்குப் போய் விடுகிறார். சென்னையில் அக்காலத்தில் ஹரிஜனங்களிடையே ‘திராவிடர்’, ‘ஆதி திராவிடர்’ அரசியல் மும்முரமாக இருந்ததையும் அக்கூட்டங்களுக்குத் தான் போனதையும் அங்கு எங்குமே பாரதியை காணாததையும் கனகலிங்கம் பதிவுச் செய்கிறார். தலித் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் சமீபத்தில் பாரதியும் அயோத்திதாசரும் ஏன் பரஸ்பரம் ஒருவரைப் பற்றி இன்னொருவர் ஏதும் குறிப்பிடவில்லை என்று வியந்து எழுதியது குறிப்பிடத் தக்கது.

பாரதியை கனகலிங்கம் கண்டு பிடித்து விடுகிறார். சில சந்திப்புகளுக்குப் பிறகு கனகலிங்கம் தன் நண்பர் சார்பில் பாரதியிடம் “எங்கள் சமூகத்தாரை திராவிடர் என்று அழைப்பதா, ஆதிதிராவிடர் என்றழைப்பதா” என வினவுகிறார். பாரதி அதற்கு, “அடேய் எனக்கு ஜாதியும் கிடையாது, சுண்டைக்காயும் கிடையாது. என்னிடம் ஆதித்திராவிடர், அநாதித்திராவிடர் என்று விவகாரத்தை ஏன் கொண்டு வந்தாய்” என்றாராம், ‘வேடிக்கையாக’. இல்லை ஏதாவது சொல்லுங்கள் என்று அழுத்திக் கேட்டதற்குப் பாரதி தனக்கு “திராவிடர், ஆதி திராவிடர், ஆரியர், என்ற வேற்றுமையும் பிடிக்காது; எல்லா மக்களும்” சமம் என்று சொல்லச் சொல்கிறார்.

பாரதி பற்றிய சொற்சித்திரமும் கனகலிங்கமும்


பாரதி பற்றித் தகவல்கள் மூலம் ஒரு சித்திரத்தை கனகலிங்கம் அளிக்கிறார். பாரதி கொடுமையான வறுமையை அனுபவித்த காலங்கள் அவை. எழுதுவதற்குக் காகிதம் வாங்க தன்னிடம் உள்ள பழைய செய்தி தாள்களை விற்றுக் காகிதம் வாங்குவாராம் பாரதி. வீட்டு மாடியில் வெற்று மேல் உடம்போடு தலைமுடி காற்றில் அசைய சக்தி பூஜை செய்தோ அல்லது பிரமைப் படித்து உலவியோ அயலாரை பாரதி பயமுறுத்தியிருக்கிறார்.

பாரதி சிறுவனாக இருந்த போதே தன்னைச் சிறுமைப்படுத்த நினைத்த வயதில் மூத்த புலவரான காந்திமதிநாதனை தன் கவிதையில் மூக்குடைத்த கதை பிரபலம். ஆனால் அப்போதே பாரதி இன்னொரு கவிதையையும் சொல்லி தான் என்ன இருந்தாலும் சிறுவனே என்று காந்திமதிநாதனுக்கு வணக்கம் தெரிவித்ததை இன்று பலரும் மாறந்து விடுகிறார்கள். பாரதி சிறூ வயது முதலே பெருந்தன்மை மிக்கவன். அதனால் தான் ‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே’ என்று பட்டு எழுதியதோடு நம்மை வருத்துகிறவர்கள் பால் அன்புச் செய்வதே தெய்வாம்சமான கருணை என்று ஒரு உரையில் சொல்கிறான். கனகலிங்கம் அப்படி ஓற் நிகழ்வைப் பதிவுச் செய்கிறார்.

புதுவைத் தேர்தல் காலத்தில் தோட்டி இனத்தைச் சேர்ந்த தம்பலா என்றழைக்கப்பட்ட தலைவர் ஒருவர் அதிகம் அச்சமூட்டியவர். அவர் வீடு தேடிப் போய்ப் பாரதி இரண்டு வார்த்தைகள் பேசுகிறான். “யாரையும் ஒதுக்குதல் கூடாது. முரடராயிருந்தாலும். பேசினால் தான் அவர்களை நம் பக்கம் இழுக்க முடியும்” என்று கனகலிங்கத்துக்குப் பயிற்றுவிக்கிறான்.

பாரதியினால் உந்தப்பட்ட கனகலிங்கம் சுதேசமித்திரனுக்குச் சாதிய பிரச்சனைக் குறித்து எழுதிய கடிதம் ஒன்று சமீபத்தில் காணக்கிடைத்திருக்கிறது என்றும் அதன் மூலம் நமக்கு அறிய வரும் கனகலிங்கம் இன்னொரு பரிமாணத்தை அடைகிறார் என்று ஆரம்பத்தில் சுட்டிக் காட்டிய ய.மணிகண்டனின் கட்டுரைச் சொல்கிறது.

கனகலிங்கத்தின் நூல் முக்கியமான வாசக அனுபவம். எளிமையான அதே சமயம் செறிவான எழுத்து நடை. பாசாங்கில்லாத நடை. நிச்சயமாக யதுகிரியின் நூலோடு சேர்ந்துப் படிக்க வேண்டிய நூல். அதற்கு மேலாகப் பொதுப் புரிதலில் கனகலிங்கத்தின் ஜாதியை வைத்து அவரைப் பற்றி இருக்கும் பிம்பத்தையும் திருத்திக் கொள்ளுதல் அவசியம். இந்த நூல் வெளியீட்டாளர்களே ஏனோ வெற்றுடம்போடு இருக்கும் கனகலிங்கத்தின் புகைப்படத்தைத் தான் அட்டையில் பதிப்பித்திருக்கிறார்கள். விக்கிப்பீடியாவில் அவர் கோட் போட்ட புகைப்படம் கிடைக்கிறது.


References:

1. வ.ரா கனகலிங்கத்துக்கு பூணூல் மாட்டிய நிகழ்வுப் பற்றி எழுதியது இங்கே http://www.mahakavibharathiyar.info/varalaru_vara17.htm
2. வ. ரா பற்றி விக்கிப்பீடியா https://ta.wikipedia.org/wiki/வ._ராமசாமி

Tuesday, July 26, 2016

Collected Works of Bharathi - An Introduction and Mahakavi Debate (பாரதி படைப்புகள் தொகுப்பு: ஒரு நூல் அறிமுகமும் மகாகவி விவாதமும்)

எள்ளத் தனைப்போழு துமபய னின்றி
             யிராதென்றன் நாவினிலே
      வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
             வேல்சக்தி வேல்சக்தி வேல்!

பாரதி வணங்கி விண்ணப்பித்த தமிழ்க் கலைவாணி அவன் கேட்ட வரம் அளித்தாள். எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றிப் போகாமல் எழுதினான் பாரதி, 16 தொகுதிகளில் கிட்டத்தட்ட 5000 பக்கங்களுக்கு



16 தொகுதிகளுக்கான விலை ரூ.10,000. இணையத்தில் சிலர் கேள்வி எழுப்பினர் ஏன் இவ்வளவு விலை? பாரதி படைப்புகள்தான் நாட்டுடமையாக்கப் பட்டனவே அப்புறம் ஏன் காப்புரிமை? கடைகளில் கிடைக்கும் கவிதை தொகுப்புகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? 16 தொகுதிகள் சராசரி வாசகனுக்குரியதா? தரம் எப்படி? இக்கேள்விகளுக்கு விடைக் கூறும் முகமாக ஒரு நூல் அறிமுகம் தேவை என்று நினைத்ததன் விளைவே இப்பதிவு

பொறுப்பு துறப்பு
இது வெறும் ஓர் அறிமுகமே. 16 தொகுதிகளையும் படித்து ஆய்வு செய்து எழுதப்பட்ட முழுமையான விமர்சனமல்ல. முழுமையாகப் படிக்காததால் இப்பதிவில் தகவல் பிழைகளும், புரிதல் பிழைகளும் இருக்கலாம் (இருக்காது என்பது நம்பிக்கை. உத்தரவாதமில்லை). நான் தொழில் முறை விமர்சகனுமல்ல. பாரதியின் மேலுள்ள ப்ரேமையால் எழுதப்படுவது இது

பாரதியின் கவிதைகளின் பின் இருந்த பாரதி எனும் மனிதன் யார்? அக்கவிதைகளின் அறிவுக் களன் என்ன? இவற்றுக்கும் இன்னும் பல கேள்விகளுக்குமானப் பதில்கள் இத்தொகுதியின் மூலமாகக் கிடைக்கும். அவற்றுள் சிலவற்றைக் கீழே தொகுத்துள்ளேன்

விடுதலைப் போராட்டக் காலக் கட்டம்

பாரதி நமக்கு அறிமுகமான விதமே தவறு என்று சொல்லலாம். கவிஞனாக, அதுவும்மகாகவிஎன்ற அடைமொழியுடன், நமக்குப் பாரதி அறிமுகப் படுத்தப்பட்டான்

பாரதியை நாம் பத்திரிக்கையாளனாகவும், தீவிரமாகச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுப்பட்டவனாகவும், அப்போராட்டத்திற்காகப் பத்திரிக்கை எழுத்தையும் கவி நயமிக்கப் பிரச்சார வகைப் பாடல்கள் எழுதி, பிற்காலத்தில் கவித்துவமிக்கக் கவிதைகளை யாத்த பன்முக ஆளுமையாக அவ்வரிசையில் அறிந்திருந்தால் நமக்கு அவனின் எழுத்துப் பிரவாகத்தைப் புரிந்துக் கொள்ளவும் இலக்கியத்தில் அவனுடைய இடம் குறித்து மனத்தடையின்றி விவாதிக்கவும் முடிந்திருக்கும்

இந்தியாவின் மகோன்னதச் சுதந்திரப் போராட்ட வரலாறு இன்றும் சரியாக எழுதப்படவில்லை. அதுவும் காந்தியின் தலைமைக்கு முற்பட்ட, 1920-க்கு முன், காலக்கட்டத்தின் சில முக்கியப் பகுதிகளைத் தவிர அநேக விவரங்கள் ஒரு சராசரி வாசகன் படிக்கத் தகுந்த வகையில் கிடைத்தில. அக்காலத்தில் தமிழகம் வங்கத்தோடும் மஹாராஷ்டிரத்தோடும் வகித்த பங்கு அளப்பரியது

திருநெல்வேலியில் நடந்தது கிளர்ச்சியா, கலவரமா என்பது முதல் ..சி, அரவிந்தர், தாதாபாய் நவ்ரோஜி, திலகர், சூரத் மாநாடு போன்றவை பற்றி ஒரு பத்திரிக்கையாளராகவும் தேசாபிமானியாகவும் மிகவும் நேர்மையாகவே பாரதி பதிவு செய்துள்ளார். இத்தொகுதியின் பொக்கிஷமாக நான் கருதுவது இப்பதிவுகளையே

சூரத் காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் காங்கிரசில் பிளவுண்டாக்கினார்கள் என்பது தெரியும். ஆனால் பாரதி அதனை ஒரு நேரடி வர்ணனையாளனின் திறனோடு, இன்றைய எந்தப் பத்திரிக்கையாளரின் நேர்த்திக்கும் குறையாமல், விவரிக்கிறார். தடியடி நடந்தது, வந்திருந்தோருக்குக் காயமேற்பட்டது, ரத்தக் காயம் உள்பட. தொகுப்பாளர் சீனி.விசுவநாதன் பாரதியின் கட்டுரையை ஒப்புநோக்கி மதிப்பிட வேறொரு வெள்ளைக்காரர் எழுதிய விவரணையை முழுமையாகத் தருகிறார். இது போன்ற தருணங்களில் விசுவநாதன் நமக்கு அளித்திருப்பது வெறும் தகவல் குவியல் அல்ல. மாறாகப் பல செறிவான ஆராய்ச்சிகளுக்கான முக்கியமான தரவுகள்

சூரத்தில் பேசிய நவ்ரோஜி சொன்னார்இங்கிலிஷ் ராஜ்யத்தினிடம் நாம் பூரண அன்பும் ஆதரவும் கொண்டிருக்கிறோம். அவர்கள் நமக்குக் கொடுத்தக் கல்வியினால் ஒரு புதிய ஒளி பெற்றோம்”. ஆங்கிலேயரின் ஆட்சிக்கு நன்றி கூறிய அந்தச் சூரத் மாநாட்டில் இருந்து 1931-இல் முன் வைத்தபூரணச் சுதந்திரம்என்ற கோரிக்கை ஒரு பயணம். அப்பயணத்தின் விளைவே ஆகஸ்டு 15. 

24 வயது பாரதி 1906-இல் செங்கல்பட்டில் நடந்த காங்கிரஸ் கூட்டம் பற்றி முக்கிய விமர்சனத்தை முன் வைக்கிறான். அக்கூட்டத்தில் பேசிய ஸர்.வி.ஸி.தேசிகாசாரியார்காங்கிரஸுக்கு எலெக்ஷன் முறைப்படி பிரதிநிதிகள் ஏற்படுத்துவது இப்போது அவசியமில்லைஎன்றதை மறுத்துஒரு தேசம்ஜனங்களின் சமஷ்டியென்பதை அவர் மறந்துவிடுகிறார்வருஷத்துக்கு வருஷம், சிற்ச்சில வக்கீல்களும், உபாத்திமார்களும் சேர்ந்து உபன்யாசங்கள் புரிந்து வருவதால் பெரிய நன்மைகள் விளைந்துவிட மாட்டாஎன்கிறார். பின்னாளில் நேரு ராஜாஜியை தேர்தல் மூலமே முதல் மந்திரியாக வேண்டும் என்று நிர்பந்தித்ததை இங்கு நினைவுக் கூறலாம். ஜனநாயக மரபினை வேரூன்ற எவ்வளவு பிரயத்தனம் தேவைப்பட்டது என்பதை அந்த இரு நிகழ்வுகளும் நமக்குக் கூறும்

1910 வரை பாரதி தேச விடுதலை ஒன்று பற்றியே சிந்திக்கிறான். 5-ஆம் தொகுதியின் உள்ளடக்கப் பட்டியலில் உள்ள சில தலைப்புகள்: ‘மாணிக்தோலா வெடிகுண்டு கேஸ்’, ’தெனாலி வெடிகுண்டு கேஸ்’, ’மிதனபூர் வெடிகுண்டு கேஸ்’, ’நாஸிக் ராஜத்திரோக கேஸ்’,’  ஸ்ரீ அரவிந்தர் கேஸ்’, ’விசேஷ போலீசு ஜோடிப்பு கேஸ்’.  அரவிந்தர் மற்றும் ..சி.யின் மீது தொடரப்பட்ட வழக்குக்குகளை தொடர்ந்து பின்பற்றி, அவை பற்றி மிகத் தெளிவாக எழுதியுள்ளார் பாரதி

தேச விடுதலைப் போராட்டம் எப்படிக் குடும்பங்களைக் குலைத்துப் போட்டது என்பதற்குப் பாரதி அரவிந்தர் அவர்தம் மனைவிக்கு எழுதிய கடிதங்களை 1909-இல் பிரசுரித்ததின் மூலம் நமக்கு ஒரு சித்திரமளிக்கிறார். மேலும் அக்குலைவுகளுக்குப் போராட்டம் மட்டுமே காரணமன்று. அக்காலத்தில் ஒரு மிகப் பெரிய அறிவு எழுச்சியும், மீட்டெடுத்தலும், குறிப்பாக ஹிந்துக்களிடையே, நிகழ்ந்தது. நம் பாரம்பர்யம் யாது? எது தர்மம்? எத்தகைய விழுமியங்களை ஏற்றுக் கொள்வதோடு எதன் பொருட்டுத் தன்னுடையதையெல்லாம் இழக்கலாம் என்ற கேள்விகளுக்கான தேடல் நிகழ்ந்தது. அரவிந்தரின் கடிதம் இதை துல்லியமாகச் சொல்கிறது. தேச விடுதலைக்கான முயற்சியும், ஆன்ம விடுதலைக்கான முயற்சியுமே இனி தன் வாழ்வை ஆக்கிரமிக்கும் என்பதையும் அத்தகைய முயற்சிகள் உலகத்தாரிடையே தனக்குப் பித்தன் என்ற பட்டத்தைப் பெற்றுத் தரும் என்றும் எழுதுகிறார்இக்கடிதம் நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கடிதம்.

..சி கோயமுத்தூர் ஜெயிலில் நடந்த கலவரத்தில் ஜெயிலர்களுக்குச் சாதகமில்லாத சாட்சியம் அளித்ததையும் அதனால் இன்னலுற்றதையும் விரிவாகப் பாரதி விவரிக்கிறார். இங்கிலாந்தில் அரசியல் கைதிகள் (‘ராஜாங்க கைதிகள்’) எப்படிச் சலுகையோடு நடத்தப்படுகின்றனர் என்பதை குறிப்பிட்டு அவ்விதம் இந்தியாவில் ஏன் செய்யவில்லை என்று சாடுகிறார். கவனிக்கவும் 1920-க்குப் பிறகு தான் இந்தியாவில் சிறை நடவடிக்கைகள் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது

இத்தொகுதிகளில் இருந்து பாரதி எழுதிய காங்கிரஸின் வரலாறு (1885-1910) குறித்து வெளியிட்ட இரு வெளியீடுகள் மற்றும் தேச விடுதலைக் குறித்து எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுத் தனியாக, மேலும் ஆராய்ச்சிக் குறிப்பிகளோடு, வெளியிட்டால் அது தமிழில் வெளிவந்த மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை

1910-வரை பாரதி தேசபக்தி கவிதைகளை மட்டுமே எழுதுகிறான். 1910 கொண்டுவரப்பட்ட பத்திரிக்கைச் சட்டம் அவனை முடக்குகிறது. 8-ஆம் தொகுதி 1910-1913-க்கான காலக் கட்டம், மிகச் சிறியது. அக்காலத்தில் தான் பாஞ்சாலி சபதம், உபநிஷத்துகள், சின்னச் சங்கரன் கதை, புதிய ஆத்திசூடி, ஞான ரதம் ஆகியனவற்றை எழுதுகிறான். பாரதி 1910-க்குப் பிறகு தேச பக்திக் கவிதைகள் எழுதுவதை கிட்டத்தட்ட விட்டுவிட்டானென்றே சொல்லலாம்.

பாரதியின் விஞ்ஞான ஆர்வம்

காசிப் புலவன் உரைதனை காஞ்சியிலே கேட்டிட கருவி செய்தல் வேண்டும்’ 

கல்வியை பற்றி நிறைய எழுதிய பாரதி மீண்டும் மீண்டும் மேற்கத்திய விஞ்ஞான முன்னேற்றங்களை இந்தியர்கள் கற்க வேண்டுமென்று விரும்புகிறான். ஜகதீஷ் சந்திர போஸின் உரைகளைக் கவனமாகப் பின் தொடர்ந்து அவ்வப்போது அதைத் தமிழ் வாசகர்கள் படிக்கும் பொருட்டு மொழிப்பெயர்த்துத் தருகிறான் பாரதி

1916-இல்லோக குருஎன்ற தலைப்பிலான கட்டுரையில் போஸின் ஆராய்ச்சி பற்றித் துல்லியமாக ஒரு பத்தியில் எழுதிவிட்டு அவரிடமுள்ள கருவிகளின் மேன்மைக் குறித்தும் எழுதிப் பிறகுஇப்போதுஸயின்ஸ்பயிற்சியில் இவ்வளவு தீவிரமாக மேன்மை பெற்று வருகிறோம்; காலக் கிரமத்தில் தலைமை பெறுவோம்என்கிறார். (Vol 9 page 500). 1917-இல்உயிரின் ஒலிஎன்ற கட்டுரை போஸ் தன்னுடைய ஆராய்ச்சிக்கூடத்தைத் திறந்து வைத்து தன் கண்டுபிடிப்பு பற்றி ஆற்றிய உரையைச் சரளமாகவும் விஞ்ஞானக் கருத்து சிதையாமலும் அப்படியே தருகிறார் பாரதி. (Vol 10 page 446). அந்தச் சுருக்கமான கட்டுரையால் திருப்தியுறாத பாரதி பின்னர் போஸின் முழு உரையையும் மொழிப் பெயர்த்து 1918-இல்ஜீவ வாக்குஎன்னும் 20 பக்க வெளியீடு ஒன்றை பிரசுரிக்கிறான். இவை வெறுமனே மொழிப் பெயர்ப்புகளல்ல. தெளிந்த நீரோடைப் போன்ற நடையில் சராசரி தமிழ் வாசகன் உயரிய விஞ்ஞான ஆய்வு முடிவுகளை புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியது முக்கியம். பாரதியின் சமகாலத்தவர் எவர் இதனை செய்தார்கள் என்று சீர் தூக்கிப் பார்ப்பது அவசியம். தென் கோடியில் வறுமையில் உழலும் வேற்று மொழி பத்திரிக்கையாளன் போஸின் இந்த உரைகளைத் தன் சமூகம் வாசிக்க வேண்டி செய்கிறன். கவனிக்கவும் ஐன்ஸ்டீனோடு நேரில் உரையாடக் கூடிய வசதியும் வாய்ப்பும் பெற்ற தாகூர் கூடச் செய்யாதது இது

டாடா நிறுவனம் ரசாயன ஆய்வு மையம் திறந்தது குறித்து மகிழ்வோடு பதிவு செய்கிறான் பாரதி

தேசியக் கல்வியும் பாரதியும்

இந்தியர்களுக்கு எத்தகைய கல்வி அவசியம் என்பது குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது அக்காலத்தில். பாரதியும் அது குறித்துப் பல கட்டுரைகள் எழுதியுள்ளான்

காலனியாதிக்க அரசின் கல்விக் கொள்கைகள் நன்மைகளையும் தீமைகளையும் இரண்டறக் கலந்தே கொடுத்தது. ஒரு பக்கம் நவீனக் கல்வி, புதிய மொழி, அப்புதிய மொழியின் வாயிலாக ஒரு புதிய அறிவுலகின் வாசல் திறக்கப்பட்டது, இன்னொரு புறம் இந்தியர்களுக்குத் தங்கள் பாரம்பர்யம் குறித்து வெட்கப்படும்படியான நிந்தனைகளும் அவதூறுகளும் அறிவுத் தளத்தில் முன் வைக்கப்பட்டன. இந்தியாவின் பல அறிவுச் செல்வங்களை மீட்டெடுத்ததும் காலனியாதிக்க அரசுதான்

கிறிஸ்தவப் பள்ளியில் படிக்கும் இரண்டு பள்ளிப்பருவ இந்துப் பெண்கள் தெருவில் நடக்கையில் இந்து மதம் பற்றிக் கேலியாகப் பேசி சிரித்துச் செல்வதைக் கேட்ட பாரதி சினம் கொள்கிறான். “கிறிஸ்தவக் குருமார் மதாபிவிருத்திக்கு முக்கியத் துணையாகக் குழந்தைப் பள்ளிக் கூடங்கள் வைத்து நடத்துகிறார்கள். நமது குருமார் என்ன செய்கிறார்கள்..ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஹிந்துப் பெண் பாடசாலை ஏற்படுவது நமது தேசாபிவிருத்திக்கு முதல் படி”. இன்னொரு கட்டுரையில் இன்னும் வெளிப்படையாக எழுதுகிறான், “நமது வாலிபர்கள் பாடசாலைகளிலே சுதேச மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங்கொண்டு வளர்கிறார்கள் முக்கியமாகக் கிறிஸ்தவப் பாடசாலைகளில் இவ்விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான ஞானிகளையும்இவர்கள் கேள்விப்படுகிறதேயில்லை. கேள்விப்பட்டாலும் அவர்களெல்லாம் நவீன நாகரிகந்தெரியாத பைத்தியக்காரர்களென்ற விஷயத்தை கேள்வியுறுகிறார்கள்.” 

பாரதி எழுதியது முற்றிலும் உண்மை. எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் நூல் ஒன்று சொல்கிறது.  அன்றைய தமிழகத்தில் பகுத்தறிவாளர்கள் என்று கிளம்பியவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள் இந்து மதத்தை நிந்தனை செய்தும் தூஷித்தும் எழுதியதை ஆர்வத்தோடு பகுத்தறிவு என்ற பெயரில் பிரசாரம் செய்தனர்

ஆங்கிலேயர்களின் மனோபாவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறான், “ஆங்கிலேயர்கள் ஒரு வியவகாரத்தைத் தொடங்குமுன் ஒரு சித்தாந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு விடுகிறார்கள். அதென்னவெனில், தாங்கள் நாகரீகத்திலும், மனப்பயிற்சியிலும் எல்லா ஜாதியாரினும் மேலானவர்களாகையால் இதர ஜாதியினரை அவ்விவிஷயங்களில் நிறுத்துப் பார்க்க வேணுமானால், தங்களுடையா நாகரிகத்திற்கும் பயிற்சிக்கும் எவ்வளவு தூரம் அவர்கள் எட்டி வருகிறார்களென்று மாத்திரம்தான் பார்க்க வேண்டும் என்பதே”. 

தாகூர் தன் செல்வத்தை கொண்டு உலகெலாம் சுற்றிப் பொருள் சேர்த்தும் விஸ்வபாரதி பல்கலையை நிறுவினார். ஆயினும் அவரை விட மிகத் தீர்க்கமாகக் கல்வியை பற்றி நடைமுறை படுத்த கூடிய முக்கியமான யோசனைகளை பாரதி முன்மொழிகிறான். ‘தேசியக் கல்விஎன்ற தலைப்பிலான கட்டுரையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாக மெட்ரிகுலேஷன் படித்தவர்கள் போதும் என்றும், கற்பிக்க வேண்டிய பாடங்களாகச் சரித்திரம், பூகோளம், தத்துவம், வரி விதிப்பு, பிராந்திய வரலாறு என்று பட்டியலிட்டுப் பின்ஐரோப்பிய ஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும்என்று சேர்க்கிறான். மேலும்பௌதிக சாஸ்த்திரங்கள் கற்றுக் கொடுப்பதில் மிகவும் தெளிவான எளிய தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும் ஸுலபமாக விளங்குபடி சொல்லிக் கொடுக்க வேண்டும்.” என்கிறான். பாடங்கள், குறிப்பாக அறிவியல் சொற்கள் எப்படித் தமிழ்ப்படுத்துவது என்றும் தெளிவாகச் சொல்லியுள்ளான். கற்றுக் கொடுத்தலையும் மாணவனின் சௌகரியம் ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழ், சமஸ்கிருதம், ஆங்கில மூலச் சொற்கள் எப்படிப் பயன்படுத்துவது என்று நடைமுறைவாதமாகச் சொல்கிறான். “யாத்திரை” (excursion) படிப்பில் ஓர் அங்கமாக வேண்டுமென்கிறான். இந்துக்கள் அல்லாத மாணாக்கர்களின் மதப்போதனை அவரவர்களின் மத நம்பிக்கையை ஒத்ததாகவும்அன்னிய மதத் தூஷனைஇல்லாததாகவும் இருக்க வேண்டும். சாந்தினிகேதனில் விஞ்ஞானத்திற்கு இடமில்லை. தாகூரின் கல்வி பற்றிய கொள்கைகள் மிகவும் பின்தங்கியவை, மேற்கை நிராகரிக்கும் மும்முரமே அதில் இருந்தது. தாகூர் தேசியக் கல்வி பற்றி எழுதிய கவிதையை பாரதி மொழிப் பெயர்த்து வெளியிட்டுள்ளான். அக்கவிதையில் விசேஷமாக ஏதுமில்லை. சாரமில்லாத கனவு

அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்என்றவன்இத்தகைய கல்வி கற்பிப்பதில் பிள்ளைகளிடம் அரையணாக்கூடச் சம்பளம் வசூலிக்கக் கூடாதுஎன்று எழுதியதில் வியப்பில்லை

வெறும் ஏட்டுக் கல்வியில் பாரதிக்கு உவப்பில்லை. “செல்வம் பயக்கும் படிப்பையேதான் ஒருவன் படிக்க வேண்டும். அது தான்அர்த்தகரீச வித்யாஎன்று ஹிதோபதேசத்திலும் கூறி யிருக்கிறது. இம்மாதிரி பணம் ஸம்பாதிக்கும் வழியைக் காட்டும் படிப்பை விட்டு வெறும் படிப்பே படித்தால் ஒரு காலத்திலும் தேசத்திற்கு ஒருவித நன்மையும் விளையாது”. 

பாரதி இந்து மதம், கிறிஸ்தவம், இஸ்லாம்

நம்புவதே  வழி என்ற மறைதனை நாம் இன்று நம்பி விட்டோம்” 

‘ஹிந்து மதம்என்ற கட்டுரையில் பாரதிநம்பிக்கையே பிரதானம். இது ஹிந்து மதத்தின் முதற் கொள்கை. கடவுள் இருக்கிறாரென்று நம்ப வேண்டும்

சுத்த அறிவொன்றே சிவம் என்றோதியறீரோஎன்று கவிப் பாடியவன் எழுதுகிறான்அறிவை அவருக்குத் திருக்கோயிலாகச் சமைத்து விட வேண்டும்”. 

அச்சம் தவிர்”, “ஆண்மை தவறேல்”, “அச்சமில்லை”, என்பதன் ஊற்றுக் கண்ணாக இருந்தது அவனின் இறை நம்பிக்கையாதலால்எங்கும், எப்போதும், யாருக்கும், எதற்கும், எந்தக் காரணம் பற்றியும் பயப்படக் கூடாதுஎன்கிறான். அதற்குச் சான்றாகக் கீதையையும் மேற்கோள் காட்டுகிறான்

கட்டுரைகளிலும் கவிதையிலும் மீண்டும் மீண்டும் பாரதி வலியுறுத்துவது மத நல்லிணக்கத்தையே. கிறித்தவ மதக் குருமார்களின் இந்து மத நிந்தனையை ஆவேசமாக எதிர்க்கும் பாரதி அவர் பெரிதும் மதிக்கும் அபோதாநந்தா கிறித்தவர்கள் கோயிலுக்குப் போவதே பெண்களைச் சந்திப்பதற்காக என்று பேசியதை கண்டிப்பதோடு அந்த ஒரு காரணம் தொட்டே அவரை வெறுத்துவிட வேண்டாமென்று கிறித்துவர்களைக் கேட்டுக் கொள்கிறார். இஸ்லாமியர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களிடம் நபிகள் நாயகம் பற்றி உரையாற்றித் தாம் இயற்றியஅல்லா அல்லாபாடலையும் (கவிதை?) பாடினார் பாரதி

இஸ்லாமியர் கல்வியில் ஈடுபாடு காட்டுவதாக அறிந்து பாரதி எழுதுகிறான் ““நமது தேசத்துக்குப் பலமாக இருக்கும் மகமதியர்கள் கல்வின்மை முதலிய காரணங்களால் தமது உண்மையான கடமையை அறியாமல் தவறிப்போய் விடுவார்களே என்ற பயம் அனேக அறிஞர்களுக்கிருக்கின்றது. ஆனால் மகமதியர்கள் உண்மையாகவே கல்விப் பயிற்சியிலே ஆசை காட்டத் தொடங்கி அதற்கிணங்கிய பல பெரிய முயற்சிகள் செய்வதைக் கண்டவுடன் அந்தப் பயம் நீங்குவதற்கு ஹேது உண்டாகிறது.” 

பாரதியும் பிராமணர்களும்: 

பார்ப்ப னக்குலங் கெட்டழி வெய்திய பாழ டைந்த கலியுக மாதலால்என்றும்போலீசுக்கார பார்ப்பானுக்கு உண்டதிலே பீசுஎழுதியவன் ஒரு பகடியில் பிராமணர்கள் உஞ்சவிருத்தி தான் செய்யத் தெரியுமே தவிர வேறு கைத்தொழில் தெரியாதவர்கள் என்று எழுதுகிறான்

அக்காலத்தில் பிராமண எதிர்ப்பை மூலதனமாகக் கொண்டு அரசியல் சக்தியாக உருவெடுத்த ஜஸ்டிஸ் கட்சியினரை ஆங்காங்கே நிராகரித்தே எழுதுகிறான். “பிராமணர்களைப் பகைப்பதே மனித ஜன்ம மெடுத்ததின் பரம லட்சியமென்றும், தனிப் பெருங்கடமை யென்றும் நினைக்கும்பிராமணரல்லாதார்என்ற புதியதோர் எதிர் மறை நாமம் பூண்டு வெளிப்பட்டிருக்கும் ஸ்வதேச விரோதிகள்என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆரூடம் போல் எழுதியிருக்கிறான்

ஒரு கூட்டத்தில் பேசிய தியாகராஜ செட்டியார் காந்தியைமஹாத்மாஎன்று விளிக்க மறுத்ததைக் குறித்துக் காந்திப் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் மஹாத்மா என்று சொல்ல வேண்டியதில்லை என்றாலும்தேசாபிமானி ஒருவருக்கு ஒரு உயர்ந்த பட்டம் கொடுப்பதில் நாமேன் திகைக்க வேண்டுமென்றுமீண்டும் ஆரூடமாகவே கேட்கிறான்

“ஆறிலொரு பங்கு” கதையின் முகவுரையில் பாரதி “நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரட்சிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம்” செய்கிறான். (விரிவானக் குறிப்பை பதிவின் முடிவில் காண்க). தாகூரின் பல்கலையில் முதலில் இஸ்லாமியருக்கு அனுமதியில்லை, காந்தியின் ஒரு வருகைக்குப் பின்பே சமபந்தி போஜனம் நடைப்பெற்றது. பாரதி வைதிக குடும்பத்தில் பிறந்தவன், தாகூர் சீர்த்திருத்தங்களை முன்னெடுத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

பாரதியும் காந்தியும்

காந்தி இந்தியாவில் அதிகம் அறியப்படாமல் தென்னாப்பிரிக்காவில் இருந்த போதே பாரதி அவரைப் பற்றி எழுதுகிறான். தென்னாப்பிரிக்காவில் சிறை வைக்கப் பட்ட காந்திகாபிர்களோடுரோடுகளில் வேலை செய்யவும் மலம் அள்ளவும் வைக்கப் பட்டார் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகின்றான். வெகு காலம் காந்தியை ஶ்ரீமான் காந்தி என்று மட்டுமே குறிப்பிடுகின்றான். காந்தியின் அஹிம்சா போராட்ட முறையை ஆதரிக்கும் பாரதி அவரின் பிரம்மசர்யக் கொள்கைகளை நிராகரிக்கிறான். “அவர் துறவு மார்க்கத்தைச் சேர்ந்தவர். நான் இன்ப மார்க்கத்தைச் சேர்ந்தவன்”, என்றும், “அழகும் அன்புமுடைய இளம்பெண்ணை மணஞ் செய்துகொண்டு, அவளுடன் வாழ வேண்டும்என்று காந்தியை மறுக்கிறான். காந்தி அறிவுறுத்திய உணவுக் கட்டுபாடு பற்றி எழுதும் போதுஊண் மிக விரும்புஎன்று கூறியவன் சொல்கிறான்ருசி ருசியான பலவித உணவுகளை உடம்புக்கு வலிமையும், சுகமும், உண்டாகும் படி நல்லோர் உண்டு களிக்க வேண்டும்.” காந்தி யேசுவின் கதை ஒன்றை சொல்லி செல்வம் சேர்க்க கூடாதென்றதற்கு மறுப்பாகதெய்வத்தை எதிர்த்துச் செல்வம் தேடுதல் தீமை யென்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் தெய்வத்தை நம்பி உடனே செல்வத்தைச் சேர்க்க வேண்டும் இது என்னுடைய கொள்கை. எனக்குத் தெரிந்தவரை ரிக் வேதம் இது போலவே சொல்லுகிறது.” 

பாரதி காந்தியை சந்தித்தது குறித்து எழுதியது .ரா. ‘மகாகவி பாரதிஎனும் நூலில் நிகழ்ச்சியை நேரில் கண்டதாகச் சொல்லும் .ரா, காந்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அறையில் புயலெனப் பாரதி நுழைந்ததாகவும், காந்தியோடு சமமாக உட்கார்ந்துப் பேசியதாகவும், தான் நடத்தப் போகும் கூட்டதிற்கு வர இயலாதென்று கூறிய காந்தியிடம்உங்கள் இயக்கத்திற்கு என் ஆசிர்வாதம்என்று சொல்லி விடைப் பெற்றார் என்றும் அவர் வெளியேறியப் பின்இவரை இங்கே பாதுகாக்க யாருமில்லையாஎன்று காந்தி வினவியதாகவும் சொல்கிறார். நான் சரி பார்த்தவரை பாரதி தொகுப்பில் அதற்கான சான்று இல்லை. .ராவின் நூல் ஒரு இடைநிலை மாணவன் தான் ஆராதிக்கும் ஆசிரியர் பற்றி எழுதும் தொனியில் இருக்கும் மிகச் சாதாரணமான சராசரியான எழுத்து

பாரதி, விவேகாநந்தர் மற்றும் விதவை மறுமணம்

விவேகாநந்தரின் மீது பெருமதிப்பு கொண்டவர் பாரதி. ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளனின் கோணத்தில் பெண்கள் பற்றிய பார்வையை எத்தருணத்தில் விவேகாநந்தர் மாற்றிக் கொண்டார் எனும் கட்டுரையில், விதவைகள் மறுமணம் குறித்து மிக தீர்க்கமான விமர்சனங்களை வைக்கிறார். உயர் ஜாதியினரிடையே பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் விதவைகள் மறுமணம் செய்தால் கல்யாணமாகாத கன்னிகளுக்கு வரன்கள் கிடைக்காமல் போய்விடும் என்று விவேகானந்தர் ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார். பதிலுக்குப் பாரதி அவ்வழக்கங்கள் ஏற்பட்ட காலத்தில்ஜன சஞ்கிகை’ (census) கிடையாதென்றும் அப்படியில்லாத பட்சத்தில் பாலினக் கணக்கு காரணமாக முடியாது என்று கடிந்து சொல்லி மேற்கொண்டு விதவைகள் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான நியமங்களுக்கு ஜன சஞ்சிகையா காரணம், சாஸ்திரங்களல்லவோ காரணம் என்று சாடுகிறார்

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், கலவியினால் கவலைத் தீருமாம்என்று எழுதியவன், விதவையாகி விட்டதாலேயே காம உறுப்புகள் மறைந்து விடுமா அல்லது காம உணர்வுகள் தான் மடிந்து விடுமா என்று கடுமையாகக் கேட்டான். 1920-இல் அதை எழுதுவதற்குத் தைரியம் வேண்டுமென்பதை சொல்லவும் வேண்டுமோ

பாரதியும் பெண் விடுதலையும்

இன்று உளவியலாளர்கள் கூறும் நல்ல குடும்பமே நல்ல கல்வி முறையின் ஆணிவேர் என்பதைப் பாரதி 1918-இல் எழுதுகிறான். தேசியக் கல்வி பற்றிய கட்டுரையில்தேசக் கல்விக்குக் குடும்பக் கல்வியே வேர்என்றும்மனைவியின் பொருளைத் திருட மனந்துணிந்தோன் கோவில் பணத்தைக் கையாடக் கூச மாட்டான்என்கிறான். அந்த வரியில் பொதிந்துள்ள முக்கியமான பொருள் மனைவியானவளுக்கென்று பொருள் மீதான தனியுரிமை உண்டு அதைக் கணவன் மீறலாகாது என்ற தத்துவம். “காதலிலே விடுதலையென் றங்கோர் கொள்கை, கடுகிவளர்ந்திடுமென்பார் யூரோப்பாவில்….வீரமிலா மனிதர் சொலும் வார்த்தைக் கண்டீர்என்று பாரதி அறுபத்தாறில் எழுதியவன் அத்தகைய சுதந்திரம் குடும்பங்களைக் குலைத்துப் போடும் என்று சொல்லி நிராகரிப்பாக முடிக்கிறான், “குடும்பங்களில்லாவிட்டால் தேசம் இல்லை. தேசம் இல்லாவிடிலோ தேசியக் கல்வியைப் பற்றிப் பேச இடமில்லை”. 

பெண் விடுதலைஎன்று தலைப்பிட்டக் கட்டுரையில், ‘பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலைஎன்று ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் சொன்னதை முன் மொழிந்து பென் விடுதலைக்கான ஆரம்பப் படிகளைப் பட்டியலிடுகிறான்: இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்ய வற்புறுத்தக் கூடாது, விவாகரத்திற்கு ஆதரவு, பெண் ருதுவான பின்பே திருமணம் செய்விப்பது, பிதுரார்ஜிதத்தில் பெண்ணுக்கு சம பாகம் கொடுக்க வேண்டும், விதவை மறுமணம், விவாகமே செய்து கொள்ளாமல் தனியாக இருப்பதும் தன் இஷ்டப்படி வியாபாராம் முதலியவற்றில் ஈடுபடும் சுதந்திரம், அன்னிய புருஷர்களோடு சம்பாஷிக்கும் சுதந்திரம், கல்வி மற்றும் உத்யோகத்தில் பெண்களுக்குச் சம உரிமை

கற்பு பற்றிய கட்டுரையில் பாரதிஅறிவு சம்பந்தப்படாத வெறும் உடலாசைகாதல்அல்லது பிரேரனை என்று சொல்வதறகுத் தகுதியுடையதில்லை.” “பெண்களுக்குக் கற்பு நிலை எத்தனை அவசியமோ, அத்தனை ஆண்களுக்கு அவசியமில்லையென்று நினைப்பதைப் போல் மூடத்தனம் ஏறு கிடையாது”. 

பாரதியின் உலக ஞானம்

.வே.சு ஐயர், அரவிந்தர், ..சி, ஜி. சுப்ரமணிய ஐயர் என்று நீளூம் பட்டியலில் குறைவாகப் படித்தது பாரதி தான். .வே.சு. ஐயரும் அரவிந்தரும் மெத்தப் படித்த ஞானிகள். இதனாலேயே அவர்களுடன் பழகியே பாரதியின் உலக ஞானம் இரவல் பெற்றது போன்ற ஒரு பிம்பம் நிலவுகிறது. உண்மையில்லை. 1905 நடந்த ருஷ்ய புரட்சி பற்றி 1906-இல் கட்டுரை எழுதுகிறான், ஜப்பான் யுத்தம், துருக்கி பற்றி, இங்கிலாந்து பாராளுமன்ற விவாதங்கள், 1917 ருஷ்யப் புரட்சி பற்றிக் கவிதை (ஆஹாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி), பிஜித் தீவில் ஹிந்து பெண்கள், யதுநாத் சர்க்கார் மொகலாயச் சாம்ராஜ்யம் பற்றி எழுதியது, இத்தாலி பற்றி என்று அவன் பார்வையில் இருந்து எதுவும் தப்புவதில்லை

ராஜ விசுவாசியான பாரதி:
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

தன் மேலுள்ள கெடுபிடிகள் குறைந்திருக்கும் என்ற நம்பிக்கையில் புதுச்சேரியை விட்டு வந்து பிரிடிஷ் இந்தியாவில் கால் பதித்த போது கைது செய்யப்பட்ட பாரதி கடலூர் சிறையில் இருந்தபடி ஆங்கிலேய கவர்னருக்கு கடிதமெழுதினான்: “I once again assure Your Excellency that I have renounced every form of politics, I shall even be loyal to the British government and law abiding”.

சவர்க்கர், அரவிந்தர், பாரதி ஆகியோர் ஒருக் கட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தைக் கைவிடுவதாக அன்றைய காலனியாதிக்க அரசுகளுக்கு கடிதம் எழுதியதை இன்று நாம் கோழைத்தனம் என்று எண்ணலாகாது. அவர்கள் தேசத்திற்காக கொடுத்த விலை மிகப் பெரிது. அதுவும் பாரதி போன்ற எழுத்தாளன் தன் எழுத்தே தடைபடும்போது பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கையை விட அச்சுறத்தலான ஒரு மரண தண்டனைய எதிர் நோக்கினான். ஸ்டாலினிடம் பணிந்த மிக்காயில் பல்ககோவ், பிரெடிரிக்கிடம் இருந்து தப்பியோடிய வால்டேர், போப்பிடம் மண்டியிட்ட கலிலேயோ என்று வரலாறில் பல உதாரணங்களுண்டு.  

தமிழ் சங்கங்கள் பற்றி பாரதி:

பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ் சங்கம்தழைத்தோங்கி வருகிறதென்று சொல்ல இடமில்லைஎன்று சொல்லி அதுயுனிவர்ஸிடியாக வளர்ச்சி பெறவேண்டும் அதுவும்ஸயன்ஸ் பகுதி, சரித்திர ஆராய்ச்சிப் பகுதி, கணிதப் பகுதிஆகியவை இருக்க வேண்டுமென்கிறான். “பாஷை யாராய்ச்சி மட்டிலும் செய்தால் போதாது. தமிழ் பாஷையை எல்லா வகையிலும் பெருமைப்படுத்தி, தமிழர்களின் அறிவுக்கே மேற்படி சங்கம் ஓர் மூலஸ்தானமாகஇருக்க வேண்டும் என்று கனவு. கண்டான். மீண்டு ஒரு முறைநவீன ஸயன்ஸ் பரிசோதனைகளையும் மற்றுமுள்ள சாஸ்திர அற்புதங்களையும் தமிழர்களுக்கு, தமிழ் பாஷையிலேயே கற்பிக்கக் கூடிய பண்டிதர்களும் கருவிகளும் வேண்டும்என்று வலியுறுத்தும் பாராதியின் கனவு அவன் காலத்தை விஞ்சியது. குறிப்பாக ஒரு பல்கலைக் கழகம் எப்படி பல்வகைத் துறைகளைக் கொண்டு அவற்றின் இடையே பாஷை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று எழுதியது, அக்காலத்தில் வேறெவெரும் இத்தகையக் கனவுகளைக் கொண்டிருந்தார்களா என்று தெரியவில்லை.

தமிழ்
மொழியின் முன்னேற்றத்தை சிலுவையின் பாரம் போல் சுமப்பதாய் என்னிடம் பல முறை அங்கலாய்க்கும் அமெரிக்கத் தமிழ் சங்கங்கள் செய்யக் கூடியது ஒன்றுண்டு. ஒவ்வொரு சங்கமும் இத்தொகுதியினை வாங்கி தமிழ் நாட்டுப் பள்ளிகள், கல்லூரிக மற்றும் நூலகங்களுக்கு விநியோகிக்கலாம். அதிகமில்லை ஒவ்வொரு சங்கமும் ஒருத் தொகுதியையாவது வாங்கி ஒருப் பள்ளிக்கு நன்கொடையாக அளிக்கலாம். மனம் இருப்பவர்கள் இன்னொருத் தொகுயை வாங்கி இங்கே அமெரிக்காவில் அச்சங்கம் இருக்கும் நகரின் பொது நூலகத்திற்கு நன்கொடை அளிக்கலாம்.  

பாரதியின் பன்மொழிப் புலமை:

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்

பயிற்றுவித்தல் மொழிப் பற்றிநியு இந்தியாபத்திரிக்கைக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதிய பாரதி தமிழ் மற்றும் ஆங்கிலமல்லாத மொழிகளை எள்ளலோடு நோக்கும் பாங்கை கண்டித்துவிட்டு தமிழில் காணக் கிடைக்கும் தத்துவம் மற்றும் இலக்கியம் இங்கிலாந்தின்பிராந்தியபாஷையில் கிடையாது என்கிறான். கம்பன் வள்ளுவன், இளங்கோப் பற்றிச் சொல்லிவிட்டு, “it may not be irrelevant to add that I have read appreciated the exquisite beauties of Shelley and of Victor Hugo in the original English and French “vernaculars” and of Goethe in English translations”. ஆக, பாரதிக்கு தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்ச்சு மொழிகள் தெரிந்திருக்கிறது. பாரதியின் ஆங்கிலம் சரளமானதாகவே இருக்கிறது. பாரதியின் ஆங்கில எழுத்தின் தன்மை காந்தியுடையது போல் அலங்காரமில்லாதது. நேருவுக்கு ஆங்கிலம் வசப்பட்டதுப் போல் அநேக இந்தியர்களுக்கு வசப்படவில்லை என்பதே உண்மை.

தொகுதி பற்றி

பாரதியின் எழுத்துகள் எல்லாம் நாட்டுடைமையாக்கப் பட்டதுதான் ஆனால் இது சீனி.விசுவநாதன் என்பவர் தேடித் தேடி சேகரித்த மற்றும் சீராக தொகுத்து, அடிக்குறிப்புகளும், பின்புலக் குறிப்புகளும் கொண்ட அரியப் பொக்கிஷம். இதற்கு காப்புரிமையுண்டு. ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்குக் காப்புரிமை கிடையாது ஆனால் ஒரு பதிப்பாளர் அதை வெளிக்கொண்டு வரும்போது, அதுவும் குறிப்புகள் மற்றும் விளக்கவுரையோடு, அது காப்புரிமைப் பெற்ற இன்னொரு படைப்பாகிறது.

விசுவநாதனின் பெரு முயற்சியினைப் பகீரதப் பிரயத்தனம் என்று விளிப்பது முற்றிலும் பொருந்தும். நேரு நினைவு அருங்காட்சியகத்திலுள்ள சுதேசமித்திரன் மைக்ரோ பிலிம்கள், ரோஜா முத்தையா நூலகம், புதுகோட்டை ஞானாலயா, தஞ்சை டி.என்.ராமசந்திரன் மற்றும் அநேகரிடமிருந்து அரை நூற்றாண்டாகச் சேகரித்த தகவல்களை ஒரு பல்கலைக் கழக ஆய்வகத்தின் நேர்த்தியோடு தொகுத்து விரிவானக் குறிப்புகள், விளக்கங்களோடு இனைத்துக் கொடுத்துள்ளார். பதிப்பாளரும் மிக நேர்த்தியான பதிப்பாக வெளியிட்டுள்ளார். இத்தொகுதியை வாங்குவோர் தன் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் அளவுக்குத் திண்மையான கெட்டி அட்டையும், அருமையான தாளிலும் அச்சிடப்பட்டுள்ளது

இதழியல் என்ற ஒன்று முறையாகத் தோன்றாத காலத்தே பிராந்திய மொழி பத்திரிக்கைகள் சுதந்திர போரில் ஆற்றிய பங்கு பற்றித் தனியே ஆராய்ச்சியே செய்யலாம். இத்தொகுதி முழுக்கப் பாரதி வெளியிட்ட சித்திரங்கள், அவற்றுக்கு அவன் எழுதிய விளக்கக் குறிப்புகள் என்று ஒரு முக்கியச் சரித்திர ஆவணம் இந்தத் தொகுப்பு

இப்படிப்பட்ட படைப்புகளுக்குத் தமிழ் நாட்டில் ஒரு புத்தக விமர்சணம் எழுதக் கிடைப்பதே எத்தனைக் கடினம் என்பதை விசுவநாதன்துக்ளக்சோவிடம் அணுகிய விவரம் தெரியப் படுத்துகிறது. என்னாலான சிறு உதவி இப்பதிவின் மூலம் அதை நிவர்த்திச் செய்வது

இப்போது இத்தொகுதியை முழுத் தொகுதியாகத் தான் விற்கிறார்கள் என்று அறிகிறேன். தேர்ந்தெடுத்த தொகுதிகளை வாங்க விரும்புவோர் தொகுதி 2,3,4,5,10,11 ஆகியவற்றை வாங்கலாம்

விசுவநாதன் தேர்ந்த தகவல் சேகரிப்பாளர் மற்றும் தொகுப்பாளர் ஆனால் எழுத்தாளர் கிடையாது. பாரதி வரலாறாக எழுதப்பட்ட தொகுதி 1 மிகச் சாதாரணம். பாரதிக்கு இன்றும் நல்ல வாழ்க்கை வரலாறு உலகத்தரத்தில் இல்லை. அதே போல் பாரதியின் சங்கீத ஞானம் பற்றிய 15-ஆம் தொகுதி டி.எம்.கிருஷ்ணா போன்ற ஒருவரின் துணைக் கொண்டு எழுதப் பட்டிருக்க வேண்டும்

கால வரிசையில் பாரதி பாடல்கள்என்று ஒரு தொகுதி முன்பு வெளிவந்தது. பாரதியின் கவிதைகள் எப்படி முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டனவோ அப்படியே கொடுத்து, பின் வந்த பதிப்புகளில், குறிப்பாக அரசாங்கப் பதிப்புகளில், என்னென்ன மாற்றங்கள் செய்யப் பட்டன என்ற விவரத்தோடு இருக்கும். அதையும் இத்தொகுதிகளோடு இணைத்தே கொடுத்திருக்கலாம். 16 தொகுதிகளில் காலவரிசையில் கட்டுரைகளோடு கலந்துவிட்ட பாடல்களை தேடிப் படிப்பதைவிடப் பாடல்களுக்கான தொகுதி இருப்பது அவசியம்

ஒவ்வொரு தொகுதியிலும் பெயர் பட்டியல் (index of names) இருப்பது நன்மை. ஆனால் 16 தொகுதிகளுக்குமாகப் பெயர் மட்டுமல்லாது ஒவ்வொரு தலைப்பில் எந்தத் தொகுதியில் எது இருக்கிறது என்ற ஒரு ‘concordance’ கொண்டு வரப்பட்டால் அது ஆராய்ச்சி செய்வோருக்கு மிக உதவியாக இருக்கும்

பாரதியின் பிரசுரிக்கப் பட்டப் படைப்புகளின் தொகுதிகள் இவை என்பதால் நமக்குக் கிடைப்பது பொது விஷயங்கள் குறித்த புறவயமான எழுத்துகளே. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில தனிக் கடிதங்களைத் தவிர வேறு தனி நபர் தொடர்புகள் இதில் இல்லை. பாரதியின் சுயவரலாற்றெழுத்து காந்தி, நேரு ஆகியோருடையதைப் போல் அகவயமான உள்நோக்கிய பயணம் அல்ல. 16 தொகுதிகளைப் படித்தாலும் நாம் அறியாத பாரதி ஒருவன் இருக்கவே செய்கிறான்

சம காலத்தில் பாரதி பற்றி எழுந்த விமர்சணங்கள், அதற்குப் பாரதியின் பதில்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். ‘பறையன்என்ற சொற்பிரயோகத்திற்காக எதிர்ப்பைச் சந்தித்த பாரதி அதற்குத் தான்பட்லர் பறையர்களைப் பற்றிப் பேசவில்லைஎன்று காட்டமாக மறுக்கிறான். ஜெயமோகனின் பாரதி விவாதத்தில் அப்படிப் பாரதியை எதிர்த்தது அயோத்திதாசர் என்று கூறுகிறார். இத்தொகுதியில் பாரதியின் எதிர்வினை மட்டுமேயுள்ளது. இக்குறைகளைத் தாண்டி இத்தொகுதி மிக முக்கியமான வரலாற்று ஆவணம்

பாரதி மகாகவியா

ரபீந்திரநாத் தாகூர் பற்றிப் பாரதி கொண்டிருந்த அபிப்பிராயம் இங்கே நினைவு கூறத் தக்கது

கீதாஞ்சலி முதலாக அவர் இங்கிலீஷ் பாஷையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் நூல்கள் மிகவும் சிறியன. பார காவியங்களல்ல. பெரிய நாடகங்களல்ல. தனிப் பாடல்கள் சில காண்பித்தார். உலகம் வியப்படைந்தது. நல்வயிர மணிகள் பத்துப் பனிரண்டு விற்றால் லட்சக்கணக்கான பணம் சேர்ந்திடாதோ? தெய்வீகக் கவிதையிலே பத்துப் பக்கம் காட்டினால் உலகத்துப் புலவரெல்லாம் வசப்பட மாட்டாரோ?” 

மிகக் கறாரான மதிப்பீடு. தாகூர் செல்வந்தர், செல்வத்தால் கிடைத்த வாய்ப்புகள் கொண்டு கவித்துவமிக்கக் கவிதைகள் தந்தார் பாரதியோ ஏழை என்ற சால்ஜாப்புகள் விமர்சனத்திற்குத் தேவையில்லாதது. கிரிஸ்டோபர் மார்லோ நீண்ட நாள் உயிர் வாழ்ந்திருந்தால் ஷேக்ஸ்பியரை விஞ்சியிருப்பான் என்று சொல்வது போல் அது

ஜெயமோகன் இது குறித்து நீண்ட விவாதம் ஒன்றை நடத்தினார். அது பற்றிய தீவிரமான ஆராய்ச்சி என் தளமல்ல. ஆயினும் சில புள்ளிகளில் அவர் வைக்கும் விவாதங்களை ஏற்றும் சில புள்ளிகளில் மாறுபட்டும் இருக்கும் என் வரையிலான சில வாதங்களை இங்கே தொகுக்கிறேன்

எனக்கு எப்போதுமே இந்தப் பட்டங்கள் ஒவ்வாதவை. மஹாத்மா, மகாகவி என்பதெல்லாம் மிகச் சிக்கலான நுட்பமான மனிதர்களைத் தட்டையாக்கும் பட்டங்கள். பாரதி மகாகவி இல்லையென்றால் பாரதிக்கும் தமிழுக்கும் எவ்விதக் குறைவுமில்லை. விவாதமும் பட்டம் பற்றி மட்டுமல்ல, மாறாகப் பாரதி எனும் கவிஞனின் கவித்துவம் பற்றியது. ஜெயமோகனின் வாதமான பாரதியிடம் கவித்துவ உச்சங்கள் குறைவே என்பதை மகிழ்வாகவே ஒப்புக் கொள்கிறேன்

இலக்கிய விமர்சகர் .ஸி.பிராட்லி கவிதைகளை மதிப்பிடுதல் பற்றிய புத்தகத்தில் கவிதையென்பது பாடு பொருளும், சொற் செறிவும் ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரித்துக் காண முடியாதபடி ஒன்றையொன்று மேம்படுத்திக் கவிஞன் சொல்ல வந்ததையும் தாண்டி நம்முள் விரிந்து ஒரு அர்த்ததை உருவாக்கிக் கொள்வதே கவிதையின் மாண்பு என்கிறார்

கீட்ஸுக்கு ஒரு கிரேக்கத் தாழி, டென்னிஸனுக்கு ஓர் ஓடை, வோர்ட்ஸ்வர்த்துக்கு எங்கோ ஒரு பள்ளத் தாக்கில் தனியளாகக் கதிர் அறுப்பவளோ தேம்ஸ் நதியோ, ஷெல்லிக்கு ஒரு பறவையோ வாழ்க்கையின் துயரோ அல்லது நேப்பிள்ஸ் நகரில் மனமுடைந்த தருணமோ, மில்ட்டனுக்கு மானுடத்தின் வீழ்ச்சியும் மீட்சியும் என்று கவிதைப் பாடு பொருள்கள் பல தரப்பட்டன ஆனால் அவை ஒவ்வொன்றிலும் கவித்துவ உச்சங்கள் காணலாம்

ஷெல்லிக்கு எளிதாகக் கைவசப்பட்ட கவிதை பாரதி பிரச்சாரப் பாடல்களை விடுத்து மற்ற பாடல்கள் இயற்றும் போது ஆங்காங்கே தான் தென்படுகிறது

பாரதியின் கண்ணன் பாட்டு ஆகியவற்றுள் எதுவும் புதுமையில்லை. அவை இந்து மரபின் நீட்சியே என்பதும் ஏற்புடையதே. கீதாஞ்சலியில் இந்து மரபில் இல்லாத எதை தாகூர் சொல்லி விட்டார்? சினுவா அச்சபே, சிமாமண்டோ அடிச்சி ஆகியோரை எக்காரணம் கொண்டு ஜெயமோகன் நிராகரிக்கிறாரோ அதைக் கொண்டே தாகூரையும் புறங்கையால் தள்ள முடியும். மேற்குலகம் எதை இந்தியா என்று மையல் கொண்டதோ அதையே அவர்கள் உவகைக்கேற்ப சமைத்துக் கொடுத்தவர் தாகூர். ஒருவித கனவுலக ‘mysticism’. தாகூர் அடைந்த அளவுக் கடந்த விளம்பரத்தின் பின்னால் இருந்ததுபாம்பாட்டி தேசத்தில் தத்துவம் எழுதுகிறவர்என்ற ஆச்சர்யமே

நோபல் பரிசுக் கொடுத்த உற்சாகத்தில் தாகூர் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த போது யேட்ஸ் கடுமையாகநானும் ஸ்டர்ஜசும் தான் இவர் நூல்களை மொழிப்பெயர்த்திருக்கிறோமே. இந்தியர்களுக்கு ஆங்கிலம் வராதுஎன்றாராம். யேட்ஸ் தாகூரை மேற்கத்திய இயந்திரவியலுக்கு எதிரான கிழக்கின் ஆன்மீகப் பார்வையை முன்வைப்பவர் என்றதை இன்றைய விமர்சகர் ஒருவர் அது ஏகாதிபத்திய பார்வை என்கிறார். அதாவது விஞ்ஞானம் என்பது தன் இனத்துக்கும் கனவுக் காண்பது கிழக்கின் மாண்பாகவும் முன் வைக்கப்படும் நுண்ணரசியல் என்கிறார். அக்காலத்திலேயே கூடத் தாகூரின் பார்வையை நிராகரித்தவர்கள் உண்டு. பெர்டிரண்ட் ரஸ்ஸல் தாகூரின் உரையொன்றைக் கேட்டுவிட்டு எரிச்சல் அடைந்தாராம். எவ்வளவு விரைவாகத் தாகூர் உலக அரங்கில் பிரபலமடைந்தாரோ அவ்வளவு சீக்கிரம் அதை இழக்கவும் செய்தார். இன்று உலக இலக்கியத்தில் அவர் இடம் கேள்விக்குறியே

இன்றும் தாகூர் ‘sentimental’ கவிதைகளைத் தருபவர் என்ற எண்ணம், மேற்கத்திய விமர்சகர்கள் உட்பட, பலருக்குண்டு. வங்கத்தில் தாகூரை விமர்சிக்கலாம் ஆனால் தமிழகத்தில் பாரதியை விமர்சிக்க முடியவில்லை என்று ஜெயமோகன் கூறுவது உண்மையல்ல. குஷ்வந்த் சிங் சமீபத்தில் தாகூரின் கவித்துவத்தைக் கேள்விக்குட்படுத்திய போது அவருக்கு வங்கமே எதிர்ப்புத் தெரிவித்தது. மம்தா பானர்ஜியும் இடது சாரிகளும் தங்கள் பரஸ்பர அரசியல் எதிர்ப்பை கைவிட்டு ஒருமித்த குரலில் குஷ்வந்த் சிங்கை கடிந்தனர்

ஷேக்ஸ்பியர் கவிதையில் தொட்ட உச்சத்தைப் பாரதி எட்டவில்லை என்ற தொனியில் ஒரு கருத்தை முன்வைக்கிறார் ஜெயமோகன். மார்க் வேன் டோரன் ஷேக்ஸ்பியர் பற்றிய விமர்சனத்தில் ஷேக்ஸ்பியரின் கவிதைகள் முழுமையுறாதவை என்கிறார். வேன் டோரன் கூறியது சரி, ஜெயமோகன் கூறியது தவறு என்றில்லை. ஷேக்ஸ்பியரைக் கூட ஏற்காதவர்கள் உண்டு. இது விமர்சன மரபு

தமிழகத்து எழுத்தாளர்களுக்குத் தாகூரே ஆதர்சம் பாரதியல்ல என்பது ஏற்கபடுமானால் அதன் பின்புலங்கள் ஆராயப் பட வேண்டும். தாகூர் அவர் வாழ்நாளிலேயே, யேட்ஸ் தயவில் கிடைத்த நோபல் பரிசின் வெளிச்சத்தால், அதிகம் மொழிபெயர்க்கப் பட்டுப் பிரசுரம் செய்யப்பட்டுப் பிரபலமானார் உலகம் முழுதும். பாரதியின் படைப்புகள் முக்கியமாக அவனின் பிரச்சாரத் தன்மையில்லாத கவிதைகள் அந்தளவு பிரசுரிக்கப்பட்டதே இல்லை

பாரதியின் தேசாபிமானக் கவிதைகள் பிரச்சாரத் தன்மைக் கொண்டவையே. மேடைகளில் எளிதாக மேற்கோள் காட்டத் தக்க வரிகள் என்பதாலேயே காலப் போக்கில் அவை பிரபலமாயின என்பதும் உண்மை

ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகத் தனக்களிக்கப் பட்டஸர்பட்டத்தைத் துறந்த தாகூர் அங்கே உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதற்கு ஆதரவு தர மறுத்தார். பாரதியோ தேசாபிமானிகள் சிறைவைக்கப்பட்ட சிறை வாசஸ்தலங்கள் புண்ணியத் தலங்கள் என்று கட்டுரை எழுதினார். இருவரும் இரு துருவங்கள்

காந்தியை மஹாத்மா என்று விளித்தாலும் தேசியம், தேச விடுதலை, ஒத்துழையாமை என்று எதிலும் காந்தியோடு முரன்பட்டு நின்ற தாகூரும் தேச விடுதலைக்காகக் கவிதையாகவும் கட்டுரையாகவும் எழுதி குவித்த பாரதியும் இரு துருவங்கள். தேசாபிமானப் பாடல்களில் பாரதி எளிமையை முன்னிறுத்தினார் புதுக் கருத்தியல்களை, புதிய படிமங்களை முன் வைத்தார். அக்கவிதைகளை அளக்கும் அளவுகோல்கள் வேறாக இருக்க வேண்டும் என்பது என் தரப்பு. தாகூர் எத்தனை தேசாபிமானக் கவிதைகளை எழுதினார்? மிக, மிகச் சொற்பம்

பாரதியின் கதைகளைவிட தாகூரின் சிறுகதைகளும், குறு நாவல்களும் மேலோங்கியவையே. ஆனால் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். தாகூரின் நாவல்கள் அக்காலத்தில் மிகப் பிரபலமடைந்தாலும் அந்நாவல்களுக்கு உலக அளவில் இலக்கிய மதிப்பு, அன்றும், இன்றும், அவ்வளவாக இல்லை. தல்ஸ்தோயும், தாமஸ் மானும் எழுதிய காலத்தில் தாகூரின் புனைவுகள் இரண்டாம் தரமே. 

தாகூர் இந்திய மரபில் ஊறியக் கருத்துகளையே கவிதைகளிலும் தன் பேருரைகளிலும் முன் வைத்தார். பாரதி புதிய கனவுகளை முன் வைக்கிறான். ஒரு நிலப் பரப்பை தன் அரசன் ஆள்கிறான் என்பதன் அடையாளமாக இந்திய நிலப் பரப்பைக் குறிக்கும் பாடல் எழுதுவது வேறு ஆனால் ஒரு தேசம் என்ற கருத்தியலை முன் வைத்து குடிமகனை நோக்கிஇது உன் தேசம்என்ற தொனியில்பாரத நாடு பழம் பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்என்பதும் வெவ்வேறு தளம். குடிமகனை நோக்கிஇது உன் தேசம், இதன் சிறப்புகளெல்லாம் அவை எங்கிருந்தாலும் உன்னுடையவைஎன்று பிரகடனம் செய்யும்மன்னும் இமைய மலை எங்கள் மலையேஎன்பது அக்காலத்திற்கு மட்டுமல்ல எக்காலதிற்கும் புரட்சி வரிகள்

அமெரிக்காவில்பெண்என்ற தலைப்பில் உரையாற்றிய தாகூர் மருந்துக்குக் கூட எந்தப் புதுக் கருத்தையும் சொல்லிவிடவில்லை. பாரதியோ விதவையின் காம உணர்வு குறித்துப் பேசுகிறான். தாகூர் மேற்கத்திய தலங்களில் உரையாற்றும் போதெல்லாம் கிழக்கின் மரபினை விதந்தோதியும் மேற்கின் விழுமியங்களைக் கடிந்துமே பேசுகிறார். ஜகதீஷ் சந்திர போஸுக்குப் பொருளுதவி செய்தாலும் அவர் விஞ்ஞானத்திலோ அறிவியலிலோ தாகூருக்கு எந்த ஈர்ப்பும் இல்லை. “ஆலைகள் செய்வீரேஎன்பது பிரச்சார வகைப் பாடலாகவும் கவித்துவம் இல்லாத பாடலாகவும் தெரியும் நாம் அது இயற்றப்பட்ட காலத்தையும் அந்த அறிவுச் சூழலையும் தவிர்த்துப் பார்த்தால்

பாரதி யாருக்கும் தோன்றாததையெல்லாம் பேசினான் என்று சொல்ல இயலாது. ‘பேசாப் பொருளைப் பேச நான் வந்தேன்என்று எழுதினாலும் அதற்கு முன் வேதநாயகம் சாஸ்திரியார் ஆகியோர் முன்மொழிந்த பெண் விடுதலையைத்தான் பாரதியும் சொன்னான். அரிஸோனா பல்கலைக்கழகத்தின் வெளீயீடான ஆர்.சுந்தரலிங்கத்தின் “Politics and Nationalist Awakening in South India:1852-1891” படித்தால் சீர்திருத்த கருத்துகளின் நீண்ட மரபு தெரிய வருகிறது

கட்டுரை இலக்கியம் என்பது இந்திய இலக்கியத்துக்குப் புதிது. தாகூர் முதல் புதுமைப்பித்தனின் கட்டுரைகள் வரை ஜார்ஜ் ஆர்வெல் போன்றோரின் கட்டுரைகளோடு ஒப்பிட்டால் அவை குழந்தைத் தனமானவையே. சமீபத்தில் வந்த ஜெயமோகனின் ஜனநாயகம் பற்றிய கட்டுரைகளும், பி..கிருஷ்ணன் விஞ்ஞானம் பற்றி எழுதிய கட்டுரைகளும் கட்டுரைக்கான இலக்கணத்துக்குட்பட்டவை. வேறு சிலரின் கட்டுரைகள் என்று வெளியானவற்றைப் படித்துஇதையா புகழ்கிறார்கள்என்று எண்ணியதுதான் உண்மை

பாரதியை விட அதிக நாள் வாழ்ந்து, மிக அதிகம் எழுதி அதை ஸ்தாபன ரீதியான பலம் கொண்டு பரப்புரை செய்த அரவிந்தர் பற்றிச் சில கேள்விகள் எழுப்பலாம். இன்று தத்துவ உலகில் அரவிந்தருக்கு என்ன இடம்? உலகளாவிய தத்துவ உரையாடலில் என்ன தாக்கத்தை அரவிந்தரின் எழுத்துகள் உண்டுப் பண்ணின? இந்திய மெய்யியலில் மையங்கொள்ளும் ஒன்றிரண்டு வெள்ளைக்காரர்களின் மதிப்பீடு தவிர்த்துப் பார்க்க வேண்டும்

பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் பாரதி சொல்கிறான்எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை யுடைய காவிய மொன்று தற்காலத்திலே செய்துதருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்க முள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்”. மொழிக்கும் மக்களுக்குமான தூரத்தை குறப்பதோடுகாவிய நயம் குறைவுபடாமலும்செய்ய முடிந்ததே பாரதியின் சாதனை

மொழி செம்மையுற செம்மையுற அம்மொழியில் உருவாகும் படைப்புகளைப் புரிந்து கொள்ள இலக்கண ஞானம் இன்றியமையாததாகிறது என்று, சமஸ்கிருதம் எப்படிப் படித்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ளும் மொழியானது என்று பண்டைய இந்திய கல்வியியல் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் எழுதுகிறார். பண்டிதர்களின் மொழியாகி விட்ட தமிழை மீண்டும் மக்களின் மொழியாக்கியது ஒரு மாபெரும் நிகழ்வு

தமிழ் நாட்டில் இன்றுள்ள பகுத்தறிவாளர்களுக்கே உரித்தான குயுக்தியுடன் ஒருவர்பெண்கள் உபயோகப்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை அர்ச்சனைத் தட்டில் வைத்து வணங்க வேண்டும்என்று பேஸ்புக்கில் சொல்லவும் எனக்கு உடனே நினைவுக்கு வந்ததுபாரதி அறுபத்தாறு’.
 
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதைத்தெளிவா விரித்துச் சொல்வேன்
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.” 

நான் சங்கரரையும் ராமானுஜரையும் வேதாந்தத்தையும் அறியாப் பருவத்தில் வாசித்த வரிகள் அவை. அதை மேற்கோள் காட்டிவிட்டு சொன்னேன்இந்து ஞான மரபில் வந்த ஒருவனே இப்படி எழுத முடியும்”. இது தான் பாரதி சாதித்தது

1850-1947 ஒரு கொந்தளிப்பான காலக்கட்டம். அக்கால அறிவுச் சூழல் வரலாறு பற்றிய புத்தகங்கள் படிக்கும் போது மேலோங்கும் ஓர் எண்ணம், நமக்கு இன்னும் அன்று நிகழ்ந்த பல அறிவு கொந்தளிப்புகள், அவற்றின் ஊடுபாவுகளான சிக்கலான சித்திரத்தின் வீச்சு, சொல்லொண்ணா பிரம்மாண்டமானது. தாகூர், அரவிந்தர், பாரதி, காந்தி, ஸவர்க்கர், திலகர், நேரு என்று யார் பெயரைச் சொன்னாலும் அவர்கள் எவ்வளவு தூரம் புது எண்ணங்களைச் சுவீகரித்தார்கள், புது விழுமியங்களை மரபுகளோடு இணைத்துப் புதுப் படிமங்கள் அளித்தார்கள் என்பதெல்லாம் மிகமிகச் சிக்கலான ஒரு சித்திரம். பாரதியை மகாகவி என்று சொல்லாமல் ஒரு காலத்தின் குரலாகவும் அதே சமயம் காலம் கடந்தும் நம் ஆன்மோவோடு உறவாடும் இறவாத் தன்மை கொண்ட அமரத்துவத்தின் குரலாகவும் காண்பதே எனக்கு உவப்பு

முடிவுரை:
ஒரு நாள் முதல்வராகும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற வாசகரின் கேள்விக்குப் பதிலளித்த சோ ராமசாமி, “போர்த் தொழில் விந்தைகள் காண்பாய் -ஹே! பூதலமே! அந்தப் போதினில்” என்றார். சாகித்ய அகாதமியின் உயரிய கௌரவம் தன்னைத் தேடி வந்த போது ஜெயகாந்தன், “இது பாரதி எனும் கவிதா மண்டலத்தில் இருந்து உதிர்ந்த என் போன்ற என் சம கால எழுத்தாளர்களுக்கு உரித்தானது” என்றார். 70 அகவையைத் தொட்ட என் தந்தைக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன் “வயது முதிர்ந்துவிடினும் - எந்தை வாலிபக் களையென்றும் மாறுவதில்லை” என்று. கம்பன், வள்ளுவன், இளங்கோ என்றொரு வரிசையை பாரதி நமக்கு அடையாளப்படுத்தினான் காலம் இவ்வரிசையில் பாரதிப் பெயரையும் சேர்த்து இன்று நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஓர் முக்கிய அடையாளமாகத் தமிழின் பெருமைக்குரிய இலக்கியவாதி முதல் என் போன்ற சாமான்யன் வரை இம்மண்ணில் ஜீவித்து மரித்த அந்த அக்னி குஞ்சின் ஜ்வாலைகள் இன்றும் தீண்டியவண்ணம் இருக்கிறது.

ஷேக்ஸ்பியரின் வாழ்நாளிலேயே அவருக்கும் லத்தீணும் கிரேக்கமும் தெரியாது என்று எள்ளி நகையாடப்பட்டார். நாடக இலக்கியம் ஷேக்ஸ்பியருக்கு முன்னும் இருந்தது, பின்பும் பயணித்தது. ஷேக்ஸ்பியருக்கு மனித பலத்தைச் சித்தரிக்கும் திறன் இல்லை என்றார் பெர்னார்ட் ஷா. அதையெல்லாம் தாண்டி இன்று ஒரு மொழியின் அடையாளமாக ஷேக்ஸ்பியர் திகழ்கிறான். “ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது வந்த மாமணி” பாரதி.

நன்றி: உற்ற நண்பரும் தமிழ் இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவரும் எழுத்தாளருமான 'ஒருப்பக்கம்' ஸ்றீதர் நாராயணனுக்கு பிழைத் திருத்தம் செய்து கொடுத்ததற்கு நன்றி. பிழைத் திருத்தம் செய்ததைத் தவிர வேறெந்தப் பாவத்தையும் அவர் செய்யவில்லை. போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் எனக்கே உரித்தானது. அவர் சரி பார்த்தப் பின்னும் நான் சில சேர்க்கைகள் செய்தேன்.



References:


  1. கால வரிசையில் பாரதி படைப்புகள் தொகுதி 1-16
  2. Rabindranath Tagore: The Myriad Minded Man by Krishna Dutta and Andrew Robinson.
  3. Rabindranath Tagore: Selected Poetry - Translated by William Radice.
  4. Rabindranath Tagore: Lectures and Addresses - Edited by Anthony Soares
  5. Creative Unity - Rabindranath Tagore. Contains lecture on Women.
  6. Colonizing the Realm of Words: The transformation of Tamil Literature in Nineteenth Century South India - Sascha Ebeling
  7. Politics and National Awakening in South india:1852-1891 by R. Suntharalingam
  8. Yeats, Russell etc on Tagore -- Article in New Yorker http://www.newyorker.com/magazine/2011/05/30/modern-magus
  9. பாரதி மகாகவி விவாதம் - ஜெயமோகன் http://www.jeyamohan.in/21493#.V5gPUVfijjU