Saturday, March 28, 2020

என் குருநாதர் பாரதியார்: ரா.கனகலிங்கம்

பாரதிக்கு இன்று வரை முறையான வாழ்க்கைச் சரித்திரம் கிடையாது. மாறாக நினைவுக் குறிப்புகள் என்று கூறத் தக்கவை தான் அதிகம். அவற்றுள் நூல் வடிவில் வெளிவந்தவைகளில் மிகுந்த கவனம் பெற்றவை, முறையே, வ.ரா வின் 'மகாகவி பாரதியார்', யதுகிரி அம்மாளின் ‘பாரதி நினைவுகள்’ மற்றும் செல்லம்மாள் பாரதியின் நூல். ரா.கனகலிங்கத்தின் ‘என் குருநாதர் பாரதியார்’ பிரசித்திப் பெற்ற அளவுக்குப் அங்கீகரிக்கப்படவில்லை என்றேத் தோன்றுகிறது.

கனகலிங்கம் பற்றிய பிம்பம்


பாரதி பற்றி அநேக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ய. மணிகண்டன் கனகலிங்கம் பற்றிய ஒரு கட்டுரையில் இப்படித் தொடங்குகிறார், “பாரதியின் அன்புக்குரிய சீடர், ஒடுக்கப்பட்ட சமூகத்தவர், பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர், ‘என் குருநாதர் பாரதியார்’ எனும் நூலைப் படைத்தவர்". கட்டுரை கனகலிங்கம் பற்றிக் கிடைத்த புதியதோர் தகவல் பற்றியது. அதற்கான முதல் வரிகள் தான் அவை.

கனகலிங்கம் என்கிற நூலாசிரியரை அறிமுகப்படுத்தும் முகமாக, சீடர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர் என்றெல்லாம் சொல்லிவிட்டு தான் அவர் எழுதிய நூலே குறிப்பிடப்படுகிறது. வ.ரா எழுதிய “மகாகவி பாரதியார்” நூலுக்கும் இப்படி ஓர் அறிமுகம் கிடைக்குமா என்று தெரியவில்லை. “பாரதியின் அன்புக்குரிய சீடர், ஆதிக்கச் சமூகத்தவர், பாரதியால் பூணூல் கழற்றியவர், ‘மகாகவி பாரதியார்’ எனும் நூலை எழுதிய வ.ரா என்று யாரும் எழுதிப் பார்த்ததில்லை.


கனகலிங்கத்தின் கல்வியும் பாரதியின் அறிமுகமும்

கனகலிங்கத்தின் நூலுக்கு எஸ். வையாபுரிபிள்ளையும், பி.ஶ்ரீ. ஆசார்யாவும் எழுதிய முன்னுரைகளின் காலத்தை வைத்துப் பார்க்கும் போது இந்நூல் 1947-இல் வெளி வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்நூல் பாரதியைப் பற்றி மட்டுமல்ல அக்காலச் சாதியம் பற்றியும் தகவல்களை அளிக்கிறது. எழுத்து நடையும் அபாரம். கனகலிங்கத்துக்குப் பாரதி பூணூல் மாட்டி விட்டார் என்கிற கதையில் மறக்கப்பட்ட (அல்லது மறைக்கப்பட்ட உண்மை) கனகலிங்கத்தின் பின்புலம்.

கனகலிங்கம் 1907-இல் பாரதி புதுவை வந்ததாக நினைவிலிருந்து எழுதுகிறார். பாரதி புதுவைக்கு வந்தது 1908-இல். 1907-இல் கனகலிங்கம் புதுவையின் பாரம்பர்யமிக்கக் கல்வே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார், வயது 17 என்கிறார். (ஆக அவர் பிறந்த வருடம் 1890 என்று தோராயமாகக் கணிக்கலாம். பாரதியை விட 7-8 வயது இளையவர். பாரதி பிறந்தது டிசம்பர் 11 1882). பள்ளிக் காலத்தில் தோழர் ஒருவர் மூலம் ‘இந்தியா’ பத்திரிக்கை கிடைக்கப் பெற்று அதன் மூலம் பாரதி பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. கனகலிங்கத்தின் கல்வி மற்றும் அறிவுத் தேடலுக்கு இது ஒரு சான்று.


1912-இல் Progressive Union Cricket Club என்கிற அமைப்பின் சார்பில் கனகலிங்கமும் வேறு மூன்று நண்பர்களும் பாரதியை உரையாற்ற அழைக்கிறார்கள். கவனிக்கவும், கனகலிங்கம் எம்மாதிரியான கிளப் ஒன்றில் உறுப்பினராயிருந்திருக்கிறார் என்று. பாரதி சாதியம் பற்றி உரையாற்றுகிறேன் என்கிறார். உரை நடக்கும் தினத்தன்று மாறுவேடத்தில் வந்த காவல் கண்காணிப்பாளரை கனகலிங்கம் அற்புதமாக வர்ணிக்கிறார், “நல்ல சிவப்பு நிறம், சுமார் ஆறடி உயரம், கிராப்புத் தலை, நெற்றியில் நாமம், மேலே கறுப்புச் செக்குக் கோட்டு, இடுப்பில் கரைப் போட்ட வேட்டி”. ஒரு நாவலாசிரியனுக்கே உரிய வர்ணனை.

குவளைக்கண்ணனும் கனகலிங்கமும்


கனகலிங்கத்தோடு கல்வே பள்ளியில படித்த இன்னொருவர் குவளைக்கண்ணன் என்று அறியப்படுகின்ற கிருஷ்ணமாச்சார்யார். ‘எனது நண்பர் குவளைக்கண்ணன்’ என்று கனலிங்கம் குறிப்பிடுகிறார். பள்ளிக் கால நட்பைக் குறிப்பிடுகிறாரா இல்லை பின்னால் பாரதியின் மூலம் நண்பரானதை குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. இதில் இருந்து நமக்குத் தெரிவது கனகலிங்கம் படித்தவர் என்பதோடு பிராமணர்கள் பயின்ற பள்ளியிலேயே பயின்றார் என்பது. அப்பள்ளியில் பயின்ற இன்னொரு பாரதி நண்பர் டி. விஜயராகவாச்சார்யார்.

குவளைக்கண்ணன் பெருமாள் கோயில் பட்டாச்சார் வேலைப் பார்த்ததோடு இன்னொரு வேலையும் அவ்வப்போது செய்தார் என்கிறார் கனகலிங்கம். புதுவை நீதிமன்றங்களில் சாட்சி சொல்வோர் ஏற்க வேண்டிய சத்திய பிரமாணம் சாதி, மத ரீதியாக வேறுப்பட்டிருந்ததாம். இஸ்லாமியருக்கு முஸ்லிம் ஒருவர் குர்-ஆன் புத்தகம் கொண்டும், பிராமணரல்லாதோருக்கு ஐயங்கார் ஒருவர் துளசி தீர்த்தப் பாத்திரத்தோடும், “ஹரிஜன சமூகத்தாருக்கு வள்ளூவப் பண்டாரம் ஒருவர் துளசி தீர்த்தப் பாத்திரத்தோடும்” சத்திய பிரமானம் செய்விப்பார்களாம்.



புதுவையில் பாரதி இருந்த காலத்தில் தேர்தல்கள் அமளிப்பட்டன என்று கனகலிங்கமும், செல்லம்மாளும் பதிவுச் செய்கிறார்கள். பாரதி தேர்தல் காலத்தில் ஹரிஜனங்களைக் கோயில் அனுமதிக்க வேண்டும் என்று அறிக்கை எழுதி குவளைக்கண்ணனையும் கையொப்பமிட வைத்து விடுகிறார். அதன் பலனாகக் குவளைக்கண்ணன் சக ஐயங்கார்களால் ஜாதி பிரஷ்டம் செய்யப்பட்டாராம்.

கனகலிங்கத்துக்குப் பூணூல்: இரு பார்வைகள்


கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டிய நிகழ்வை பூணூலை கழற்றினாலும் பிராமணராகவே இருந்து பதிவுச் செய்கிறார் வ.ரா. வ.ராவின் பார்வையில் அது ஒரு கேலிக்குரிய நிகழ்வு. “உன் ஜாதி என்ன என்று யாராவது கேட்டால் பிராமணன் என்று சொல்” எனப் பாரதி முழங்கும் போது அந்த வைபவத்துக்காகப் பாறதி அழைத்திருந்த பிராமண நண்பர்கள் யாரேனும் நகைக்கிறார்களா என்று நோட்டம் விட்டதாக வ.ரா எழுதுகிறார். கனகலிங்கத்தைக் குறிக்கும் போது ‘அவன்’, ‘பையன்’ (கனகலிங்கம் 22 வயது ஆண். வ.ராவை விட ஒரு வயது இளையவராக இருந்திருப்பார்) என்று தான் வ.ரா குறிக்கிறார். மேலும் தன் பூணூலை கழற்றிவிட்ட பாரதி ஏன் பூணூல் அணிந்து இன்னொருவருக்குப் பூணூல் அணிவிக்கிறார் என்று கேள்வி எழுப்பினார் வ.ரா. அதற்குப் பாரதி பிராமணனான தான் அந்த அடையாளத்தைத் துறப்பதன் அவசியமும் அதே அடையாளத்தைக் கனகலிங்கத்துக்குக் கொடுப்பதன் வித்தியாசத்தையும் விளக்கினார்.



கனகலிங்கம் சில காலமாகப் பாரதி தனக்கு வேத மந்திரங்கள் கற்றுக் கொடுத்துப் பின்னர் ஒரு நாள் உபநயணம் செய்விப்பதாகச் சொல்லி வீட்டுக்கு அழைத்ததையும், அங்கிருந்த பாரதியின் நண்பர்களையும் நினைவுக் கூர்கிறார். பாரதியின் வீடு வைபவத்திற்குத் தயார் செய்யப்பட்டிருந்தது. “கூடத்தில் லட்சுமி, ஸரஸ்வதி, கிருஷ்ணன்” ஆகியவரின் அலங்கரிக்கப்பட்ட படங்கள் இருந்தன என்றும் கிருஷ்ணனின் படத்துக்கு அடியில் “பிச்சுவா” கத்தி இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். இக்குறிப்புகள் வ.ராவின் புத்தகத்தில் இல்லை.

கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டியது குறித்து யாரேனும் தன்னுடன் வாதம் ஆரம்பிக்க மாட்டார்களா என்றும் அப்படிச் செய்தால் “வேத முனிவர்களின் பரந்த மனப்பான்மையையும், உண்மையான இந்து மதத்தின் உயர்ந்த லட்சியங்களையும்” பற்றி எடுத்துரைக்கப் பாரதி ஆவலாக இருந்தாராம்.

உப்பளம் மாரியம்மனும் பாரதியும்


பாரதியின் “தேடி உனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரி” பாடலின் பூர்வீகம் சுவாரசியம். புதுவையில் உப்பளம் தேச முத்து மாரி அம்மன் கோயில் ஹரிஜனங்களுக்கான கோயில் அங்கிருந்த பூசாரி நாகலிங்கம் என்னும் வள்ளுவப் பண்டாரம். அவருக்கும் பாரதி பூணூல் அணிவித்தார், அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க. ஆரம்பக் காலத்தில் அப்பாடல் “உப்பளம் தேச முத்துமாரி” என்ற தலைப்பில் தான் வெளியானதென்றும் பிற்காலத்தில் ஏனோ வெறுமே ‘தேச முத்துமாரி’ என்றும் தலைப்பிடப்பட்டது என்று வருத்தத்தோடு குறிப்பிடுகிறார் கனகலிங்கம். இது உண்மை. பாரதியின் கவிதைகளைக் கால வரிசைப்படுத்தி வெளியிட்ட சீனி.விஸ்வநாதனும் இத்தகவலை பதிவு செய்திருக்கிறார். பாரதியின் பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட போது இது மாதிரி திருகு தாளங்கள் நடந்தன.

அந்தப் பாடல் பற்றி எழுதிய கனகலிங்கம் பாரதி ஜாதி வித்தியாசங்கள் தலைவிரித்தாடிய சிவன், விஷ்ணு, மற்ற தெய்வங்களின் கோயில்கள் பற்றிப் பாடல் எழுத்த மறுத்துத் தங்கள் அம்மனை பற்றிச் சிறப்பாகப் பாடினார் என்கிறார்.

பாரதியும் சமத்துவமும்


பாரதி தீவிர இந்து தான். “ஆரிய பூமி” என்றெல்லாம் பாட்டெழுதியவன் தான் ஆனால் அதுமட்டுமா பாரதி என்றால் இல்லவே இல்லை என்கிறார் கனகலிங்கம். புதுவை சர்ச்சில் ஈஸ்டர் பண்டிகைக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்வான் பாரதி, இஸ்லாமியர் போல் உடையணிந்து சுற்றத்தாரை துணுக்குற வைப்பான், இஸ்லாமியர் நடத்திய டீக்கடையில் எல்லோரும் பார்க்க டீ பருகுவான், இஸ்லாமிய உனவகத்தில் பண்டம் வாங்கிச் சாப்பிடுவான், தன் பெண்ணைக் கனகலிங்கம் கைப்பிடித்து அழத்துச் செல்ல அனுமதிப்பான், தன் வீட்டில் சாப்பிட்ட பிரஞ்சுக்காரரை காபி கோப்பையைத் தூக்கி அருந்தாமல் வாயில் வைத்து பருகச் சொல்வான், எல்லோரும் சாப்பிட்ட இலையைச் செல்லம்மாளை அப்புறப் படுத்த சொல்வான், ஒரு நாள் திடீரென்று கனகலிங்கம் வீட்டுக்கே போய் உட்கார்ந்து கொண்டு செல்லம்மாளை அழைத்து வர முயல்வான், இன்னும், இன்னும் இன்னும்.

ஒரு பிராமணரின் வீட்டில் அமர்ந்து கொண்டு கனகலிங்கத்தை அழைப்பான், கனகலிங்கம் உள்ளே வரத் தயங்கினால் அவரை வலுக்கட்டாயமாக உள்ளிழுத்து ஓங்காரத்தோடு “இன்று முதல் நான் எந்த இடத்தில் இருக்கிறேனோ, அந்த இடத்தில் தீண்டாமைப்பிணி இருக்கவே இருக்க முடியாது” என்று சூளுரைச் செய்கிறான். தேசிய கீதங்களை ஏன் கும்மி, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து வகையில் மெட்டமைத்தார் என்ற கேள்விக்கு “என் பாட்டு தேசிய கீதமானதால், மூட்டை தூக்கும் ஆள் முதற்கொண்டு பாகவதர் வரையில் சுலபமாகப் பாடவேணும்” என்று பதில் சொல்கிறான்.

வ.ரா போன்றவர்களின் பாரதி பற்றிய பார்வைக்கும் கனகலிங்கத்தின் பார்வைக்குன் இங்குத் தான் வித்தியாசம் காண முடிகிறது. மீண்டும் மீண்டும் கனகலிங்கம் சேர்ந்துண்பது, சேர்ந்து இருப்பது, சாதிய வித்தியாசங்களின் நிலவரம் ஆகியவற்றைக் கவனப்படுத்துகிறார். இந்நூலின் இன்னொரு சிறப்பு ஆசிரியர் மிக அழகாக ஆங்காங்கே பாரதியின் கவிதைகளைப் பயன்படுத்தியிருப்பார். தன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு சாப்பாடு வரவழைத்துச் சாப்பிட்ட பாரதி பற்றிச் சொல்லிவிட்டுப் பின் வருமாறு எழுதுகிறார்:

“என் குருநாதர் பாரதியார் ஹரிஜங்களின் சுகதுக்கத்தைத் தமதாக்கிக் கொண்டார். இத்தகைய வாழ்க்கையில் பிறந்தது தான்,

தஞ்சம் உலகினில் எங்கணுமின்றித் தவித்துத் தடுமாறி
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்
பாரமுனக்காண்டே! ஆண்டே! பாரமுனக்காண்டே’”

முதலாம் உலகப்போரின் சமயம் கனகலிங்கமும் பாரதியும் பிரிந்து விடுகிறார்கள். கனகலிங்கம் குமாஸ்தா வேலைக்காக மெஸொப்பொட்டேமியா போய்விடுகிறார். அவர் திரும்பி வரும் போது பாரதி சென்னைக்குப் போய் விடுகிறான். பணிக்காலம் முடிந்து புதுவை திரும்பிய கனகலிங்கம் தானும் சென்னைக்குப் போய் விடுகிறார். சென்னையில் அக்காலத்தில் ஹரிஜனங்களிடையே ‘திராவிடர்’, ‘ஆதி திராவிடர்’ அரசியல் மும்முரமாக இருந்ததையும் அக்கூட்டங்களுக்குத் தான் போனதையும் அங்கு எங்குமே பாரதியை காணாததையும் கனகலிங்கம் பதிவுச் செய்கிறார். தலித் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் சமீபத்தில் பாரதியும் அயோத்திதாசரும் ஏன் பரஸ்பரம் ஒருவரைப் பற்றி இன்னொருவர் ஏதும் குறிப்பிடவில்லை என்று வியந்து எழுதியது குறிப்பிடத் தக்கது.

பாரதியை கனகலிங்கம் கண்டு பிடித்து விடுகிறார். சில சந்திப்புகளுக்குப் பிறகு கனகலிங்கம் தன் நண்பர் சார்பில் பாரதியிடம் “எங்கள் சமூகத்தாரை திராவிடர் என்று அழைப்பதா, ஆதிதிராவிடர் என்றழைப்பதா” என வினவுகிறார். பாரதி அதற்கு, “அடேய் எனக்கு ஜாதியும் கிடையாது, சுண்டைக்காயும் கிடையாது. என்னிடம் ஆதித்திராவிடர், அநாதித்திராவிடர் என்று விவகாரத்தை ஏன் கொண்டு வந்தாய்” என்றாராம், ‘வேடிக்கையாக’. இல்லை ஏதாவது சொல்லுங்கள் என்று அழுத்திக் கேட்டதற்குப் பாரதி தனக்கு “திராவிடர், ஆதி திராவிடர், ஆரியர், என்ற வேற்றுமையும் பிடிக்காது; எல்லா மக்களும்” சமம் என்று சொல்லச் சொல்கிறார்.

பாரதி பற்றிய சொற்சித்திரமும் கனகலிங்கமும்


பாரதி பற்றித் தகவல்கள் மூலம் ஒரு சித்திரத்தை கனகலிங்கம் அளிக்கிறார். பாரதி கொடுமையான வறுமையை அனுபவித்த காலங்கள் அவை. எழுதுவதற்குக் காகிதம் வாங்க தன்னிடம் உள்ள பழைய செய்தி தாள்களை விற்றுக் காகிதம் வாங்குவாராம் பாரதி. வீட்டு மாடியில் வெற்று மேல் உடம்போடு தலைமுடி காற்றில் அசைய சக்தி பூஜை செய்தோ அல்லது பிரமைப் படித்து உலவியோ அயலாரை பாரதி பயமுறுத்தியிருக்கிறார்.

பாரதி சிறுவனாக இருந்த போதே தன்னைச் சிறுமைப்படுத்த நினைத்த வயதில் மூத்த புலவரான காந்திமதிநாதனை தன் கவிதையில் மூக்குடைத்த கதை பிரபலம். ஆனால் அப்போதே பாரதி இன்னொரு கவிதையையும் சொல்லி தான் என்ன இருந்தாலும் சிறுவனே என்று காந்திமதிநாதனுக்கு வணக்கம் தெரிவித்ததை இன்று பலரும் மாறந்து விடுகிறார்கள். பாரதி சிறூ வயது முதலே பெருந்தன்மை மிக்கவன். அதனால் தான் ‘பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே’ என்று பட்டு எழுதியதோடு நம்மை வருத்துகிறவர்கள் பால் அன்புச் செய்வதே தெய்வாம்சமான கருணை என்று ஒரு உரையில் சொல்கிறான். கனகலிங்கம் அப்படி ஓற் நிகழ்வைப் பதிவுச் செய்கிறார்.

புதுவைத் தேர்தல் காலத்தில் தோட்டி இனத்தைச் சேர்ந்த தம்பலா என்றழைக்கப்பட்ட தலைவர் ஒருவர் அதிகம் அச்சமூட்டியவர். அவர் வீடு தேடிப் போய்ப் பாரதி இரண்டு வார்த்தைகள் பேசுகிறான். “யாரையும் ஒதுக்குதல் கூடாது. முரடராயிருந்தாலும். பேசினால் தான் அவர்களை நம் பக்கம் இழுக்க முடியும்” என்று கனகலிங்கத்துக்குப் பயிற்றுவிக்கிறான்.

பாரதியினால் உந்தப்பட்ட கனகலிங்கம் சுதேசமித்திரனுக்குச் சாதிய பிரச்சனைக் குறித்து எழுதிய கடிதம் ஒன்று சமீபத்தில் காணக்கிடைத்திருக்கிறது என்றும் அதன் மூலம் நமக்கு அறிய வரும் கனகலிங்கம் இன்னொரு பரிமாணத்தை அடைகிறார் என்று ஆரம்பத்தில் சுட்டிக் காட்டிய ய.மணிகண்டனின் கட்டுரைச் சொல்கிறது.

கனகலிங்கத்தின் நூல் முக்கியமான வாசக அனுபவம். எளிமையான அதே சமயம் செறிவான எழுத்து நடை. பாசாங்கில்லாத நடை. நிச்சயமாக யதுகிரியின் நூலோடு சேர்ந்துப் படிக்க வேண்டிய நூல். அதற்கு மேலாகப் பொதுப் புரிதலில் கனகலிங்கத்தின் ஜாதியை வைத்து அவரைப் பற்றி இருக்கும் பிம்பத்தையும் திருத்திக் கொள்ளுதல் அவசியம். இந்த நூல் வெளியீட்டாளர்களே ஏனோ வெற்றுடம்போடு இருக்கும் கனகலிங்கத்தின் புகைப்படத்தைத் தான் அட்டையில் பதிப்பித்திருக்கிறார்கள். விக்கிப்பீடியாவில் அவர் கோட் போட்ட புகைப்படம் கிடைக்கிறது.


References:

1. வ.ரா கனகலிங்கத்துக்கு பூணூல் மாட்டிய நிகழ்வுப் பற்றி எழுதியது இங்கே http://www.mahakavibharathiyar.info/varalaru_vara17.htm
2. வ. ரா பற்றி விக்கிப்பீடியா https://ta.wikipedia.org/wiki/வ._ராமசாமி

1 comment:

krishnan said...

மிகவும் நன்று.பாரதி,கனகலிங்கம் ஆகியோர் குறித்து சரியான புரிதலை கொடுக்கும் கட்டுரை.நன்றி.