எள்ளத் தனைப்போழு துமபய னின்றி
யிராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
வேல்சக்தி வேல்சக்தி வேல்!
பாரதி வணங்கி விண்ணப்பித்த தமிழ்க் கலைவாணி அவன் கேட்ட வரம் அளித்தாள். எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றிப் போகாமல் எழுதினான் பாரதி, 16 தொகுதிகளில் கிட்டத்தட்ட 5000 பக்கங்களுக்கு.
16 தொகுதிகளுக்கான விலை ரூ.10,000. இணையத்தில் சிலர் கேள்வி எழுப்பினர் ஏன் இவ்வளவு விலை? பாரதி படைப்புகள்தான் நாட்டுடமையாக்கப் பட்டனவே அப்புறம் ஏன் காப்புரிமை? கடைகளில் கிடைக்கும் கவிதை தொகுப்புகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? 16 தொகுதிகள் சராசரி வாசகனுக்குரியதா? தரம் எப்படி? இக்கேள்விகளுக்கு விடைக் கூறும் முகமாக ஒரு நூல் அறிமுகம் தேவை என்று நினைத்ததன் விளைவே இப்பதிவு.
பொறுப்பு துறப்பு:
இது வெறும் ஓர் அறிமுகமே. 16 தொகுதிகளையும் படித்து ஆய்வு செய்து எழுதப்பட்ட முழுமையான விமர்சனமல்ல. முழுமையாகப் படிக்காததால் இப்பதிவில் தகவல் பிழைகளும், புரிதல் பிழைகளும் இருக்கலாம் (இருக்காது என்பது நம்பிக்கை. உத்தரவாதமில்லை). நான் தொழில் முறை விமர்சகனுமல்ல. பாரதியின் மேலுள்ள ப்ரேமையால் எழுதப்படுவது இது.
பாரதியின் கவிதைகளின் பின் இருந்த பாரதி எனும் மனிதன் யார்? அக்கவிதைகளின் அறிவுக் களன் என்ன? இவற்றுக்கும் இன்னும் பல கேள்விகளுக்குமானப் பதில்கள் இத்தொகுதியின் மூலமாகக் கிடைக்கும். அவற்றுள் சிலவற்றைக் கீழே தொகுத்துள்ளேன்.
விடுதலைப் போராட்டக் காலக் கட்டம்:
பாரதி நமக்கு அறிமுகமான விதமே தவறு என்று சொல்லலாம். கவிஞனாக, அதுவும் ‘மகாகவி’ என்ற அடைமொழியுடன், நமக்குப் பாரதி அறிமுகப் படுத்தப்பட்டான்.
பாரதியை நாம் பத்திரிக்கையாளனாகவும், தீவிரமாகச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுப்பட்டவனாகவும், அப்போராட்டத்திற்காகப் பத்திரிக்கை எழுத்தையும் கவி நயமிக்கப் பிரச்சார வகைப் பாடல்கள் எழுதி, பிற்காலத்தில் கவித்துவமிக்கக் கவிதைகளை யாத்த பன்முக ஆளுமையாக அவ்வரிசையில் அறிந்திருந்தால் நமக்கு அவனின் எழுத்துப் பிரவாகத்தைப் புரிந்துக் கொள்ளவும் இலக்கியத்தில் அவனுடைய இடம் குறித்து மனத்தடையின்றி விவாதிக்கவும் முடிந்திருக்கும்.
இந்தியாவின் மகோன்னதச் சுதந்திரப் போராட்ட வரலாறு இன்றும் சரியாக எழுதப்படவில்லை. அதுவும் காந்தியின் தலைமைக்கு முற்பட்ட, 1920-க்கு முன், காலக்கட்டத்தின் சில முக்கியப் பகுதிகளைத் தவிர அநேக விவரங்கள் ஒரு சராசரி வாசகன் படிக்கத் தகுந்த வகையில் கிடைத்தில. அக்காலத்தில் தமிழகம் வங்கத்தோடும் மஹாராஷ்டிரத்தோடும் வகித்த பங்கு அளப்பரியது.
திருநெல்வேலியில் நடந்தது கிளர்ச்சியா, கலவரமா என்பது முதல் வ.உ.சி, அரவிந்தர், தாதாபாய் நவ்ரோஜி, திலகர், சூரத் மாநாடு போன்றவை பற்றி ஒரு பத்திரிக்கையாளராகவும் தேசாபிமானியாகவும் மிகவும் நேர்மையாகவே பாரதி பதிவு செய்துள்ளார். இத்தொகுதியின் பொக்கிஷமாக நான் கருதுவது இப்பதிவுகளையே.
சூரத் காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் காங்கிரசில் பிளவுண்டாக்கினார்கள் என்பது தெரியும். ஆனால் பாரதி அதனை ஒரு நேரடி வர்ணனையாளனின் திறனோடு, இன்றைய எந்தப் பத்திரிக்கையாளரின் நேர்த்திக்கும் குறையாமல், விவரிக்கிறார். தடியடி நடந்தது, வந்திருந்தோருக்குக் காயமேற்பட்டது, ரத்தக் காயம் உள்பட. தொகுப்பாளர் சீனி.விசுவநாதன் பாரதியின் கட்டுரையை ஒப்புநோக்கி மதிப்பிட வேறொரு வெள்ளைக்காரர் எழுதிய விவரணையை முழுமையாகத் தருகிறார். இது போன்ற தருணங்களில் விசுவநாதன் நமக்கு அளித்திருப்பது வெறும் தகவல் குவியல் அல்ல. மாறாகப் பல செறிவான ஆராய்ச்சிகளுக்கான முக்கியமான தரவுகள்.
சூரத்தில் பேசிய நவ்ரோஜி சொன்னார் “இங்கிலிஷ் ராஜ்யத்தினிடம் நாம் பூரண அன்பும் ஆதரவும் கொண்டிருக்கிறோம். அவர்கள் நமக்குக் கொடுத்தக் கல்வியினால் ஒரு புதிய ஒளி பெற்றோம்”. ஆங்கிலேயரின் ஆட்சிக்கு நன்றி கூறிய அந்தச் சூரத் மாநாட்டில் இருந்து 1931-இல் முன் வைத்த ‘பூரணச் சுதந்திரம்’ என்ற கோரிக்கை ஒரு பயணம். அப்பயணத்தின் விளைவே ஆகஸ்டு 15.
24 வயது பாரதி 1906-இல் செங்கல்பட்டில் நடந்த காங்கிரஸ் கூட்டம் பற்றி முக்கிய விமர்சனத்தை முன் வைக்கிறான். அக்கூட்டத்தில் பேசிய ஸர்.வி.ஸி.தேசிகாசாரியார் “காங்கிரஸுக்கு எலெக்ஷன் முறைப்படி பிரதிநிதிகள் ஏற்படுத்துவது இப்போது அவசியமில்லை” என்றதை மறுத்து “ஒரு தேசம் ‘ஜனங்களின் சமஷ்டி’ யென்பதை அவர் மறந்துவிடுகிறார்…வருஷத்துக்கு வருஷம், சிற்ச்சில வக்கீல்களும், உபாத்திமார்களும் சேர்ந்து உபன்யாசங்கள் புரிந்து வருவதால் பெரிய நன்மைகள் விளைந்துவிட மாட்டா” என்கிறார். பின்னாளில் நேரு ராஜாஜியை தேர்தல் மூலமே முதல் மந்திரியாக வேண்டும் என்று நிர்பந்தித்ததை இங்கு நினைவுக் கூறலாம். ஜனநாயக மரபினை வேரூன்ற எவ்வளவு பிரயத்தனம் தேவைப்பட்டது என்பதை அந்த இரு நிகழ்வுகளும் நமக்குக் கூறும்.
1910 வரை பாரதி தேச விடுதலை ஒன்று பற்றியே சிந்திக்கிறான். 5-ஆம் தொகுதியின் உள்ளடக்கப் பட்டியலில் உள்ள சில தலைப்புகள்: ‘மாணிக்தோலா வெடிகுண்டு கேஸ்’, ’தெனாலி வெடிகுண்டு கேஸ்’, ’மிதனபூர் வெடிகுண்டு கேஸ்’, ’நாஸிக் ராஜத்திரோக கேஸ்’,’ ஸ்ரீ அரவிந்தர் கேஸ்’, ’விசேஷ போலீசு ஜோடிப்பு கேஸ்’. அரவிந்தர் மற்றும் வ.உ.சி.யின் மீது தொடரப்பட்ட வழக்குக்குகளை தொடர்ந்து பின்பற்றி, அவை பற்றி மிகத் தெளிவாக எழுதியுள்ளார் பாரதி.
தேச விடுதலைப் போராட்டம் எப்படிக் குடும்பங்களைக் குலைத்துப் போட்டது என்பதற்குப் பாரதி அரவிந்தர் அவர்தம் மனைவிக்கு எழுதிய கடிதங்களை 1909-இல் பிரசுரித்ததின் மூலம் நமக்கு ஒரு சித்திரமளிக்கிறார். மேலும் அக்குலைவுகளுக்குப் போராட்டம் மட்டுமே காரணமன்று. அக்காலத்தில் ஒரு மிகப் பெரிய அறிவு எழுச்சியும், மீட்டெடுத்தலும், குறிப்பாக ஹிந்துக்களிடையே, நிகழ்ந்தது. நம் பாரம்பர்யம் யாது? எது தர்மம்? எத்தகைய விழுமியங்களை ஏற்றுக் கொள்வதோடு எதன் பொருட்டுத் தன்னுடையதையெல்லாம் இழக்கலாம் என்ற கேள்விகளுக்கான தேடல் நிகழ்ந்தது. அரவிந்தரின் கடிதம் இதை துல்லியமாகச் சொல்கிறது. தேச விடுதலைக்கான முயற்சியும், ஆன்ம விடுதலைக்கான முயற்சியுமே இனி தன் வாழ்வை ஆக்கிரமிக்கும் என்பதையும் அத்தகைய முயற்சிகள் உலகத்தாரிடையே தனக்குப் பித்தன் என்ற பட்டத்தைப் பெற்றுத் தரும் என்றும் எழுதுகிறார். இக்கடிதம் நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கடிதம்.
வ.உ.சி கோயமுத்தூர் ஜெயிலில் நடந்த கலவரத்தில் ஜெயிலர்களுக்குச் சாதகமில்லாத சாட்சியம் அளித்ததையும் அதனால் இன்னலுற்றதையும் விரிவாகப் பாரதி விவரிக்கிறார். இங்கிலாந்தில் அரசியல் கைதிகள் (‘ராஜாங்க கைதிகள்’) எப்படிச் சலுகையோடு நடத்தப்படுகின்றனர் என்பதை குறிப்பிட்டு அவ்விதம் இந்தியாவில் ஏன் செய்யவில்லை என்று சாடுகிறார். கவனிக்கவும் 1920-க்குப் பிறகு தான் இந்தியாவில் சிறை நடவடிக்கைகள் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இத்தொகுதிகளில் இருந்து பாரதி எழுதிய காங்கிரஸின் வரலாறு (1885-1910) குறித்து வெளியிட்ட இரு வெளியீடுகள் மற்றும் தேச விடுதலைக் குறித்து எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுத் தனியாக, மேலும் ஆராய்ச்சிக் குறிப்பிகளோடு, வெளியிட்டால் அது தமிழில் வெளிவந்த மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
1910-வரை பாரதி தேசபக்தி கவிதைகளை மட்டுமே எழுதுகிறான். 1910 கொண்டுவரப்பட்ட பத்திரிக்கைச் சட்டம் அவனை முடக்குகிறது. 8-ஆம் தொகுதி 1910-1913-க்கான காலக் கட்டம், மிகச் சிறியது. அக்காலத்தில் தான் பாஞ்சாலி சபதம், உபநிஷத்துகள், சின்னச் சங்கரன் கதை, புதிய ஆத்திசூடி, ஞான ரதம் ஆகியனவற்றை எழுதுகிறான். பாரதி 1910-க்குப் பிறகு தேச பக்திக் கவிதைகள் எழுதுவதை கிட்டத்தட்ட விட்டுவிட்டானென்றே சொல்லலாம்.
பாரதியின் விஞ்ஞான ஆர்வம்:
‘காசிப் புலவன் உரைதனை காஞ்சியிலே கேட்டிட கருவி செய்தல் வேண்டும்’
கல்வியை பற்றி நிறைய எழுதிய பாரதி மீண்டும் மீண்டும் மேற்கத்திய விஞ்ஞான முன்னேற்றங்களை இந்தியர்கள் கற்க வேண்டுமென்று விரும்புகிறான். ஜகதீஷ் சந்திர போஸின் உரைகளைக் கவனமாகப் பின் தொடர்ந்து அவ்வப்போது அதைத் தமிழ் வாசகர்கள் படிக்கும் பொருட்டு மொழிப்பெயர்த்துத் தருகிறான் பாரதி.
1916-இல் ‘லோக குரு’ என்ற தலைப்பிலான கட்டுரையில் போஸின் ஆராய்ச்சி பற்றித் துல்லியமாக ஒரு பத்தியில் எழுதிவிட்டு அவரிடமுள்ள கருவிகளின் மேன்மைக் குறித்தும் எழுதிப் பிறகு “இப்போது “ஸயின்ஸ்’ பயிற்சியில் இவ்வளவு தீவிரமாக மேன்மை பெற்று வருகிறோம்; காலக் கிரமத்தில் தலைமை பெறுவோம்” என்கிறார். (Vol 9 page 500). 1917-இல் ‘உயிரின் ஒலி’ என்ற கட்டுரை போஸ் தன்னுடைய ஆராய்ச்சிக்கூடத்தைத் திறந்து வைத்து தன் கண்டுபிடிப்பு பற்றி ஆற்றிய உரையைச் சரளமாகவும் விஞ்ஞானக் கருத்து சிதையாமலும் அப்படியே தருகிறார் பாரதி. (Vol 10 page 446). அந்தச் சுருக்கமான கட்டுரையால் திருப்தியுறாத பாரதி பின்னர் போஸின் முழு உரையையும் மொழிப் பெயர்த்து 1918-இல் ‘ஜீவ வாக்கு’ என்னும் 20 பக்க வெளியீடு ஒன்றை பிரசுரிக்கிறான். இவை வெறுமனே மொழிப் பெயர்ப்புகளல்ல. தெளிந்த நீரோடைப் போன்ற நடையில் சராசரி தமிழ் வாசகன் உயரிய விஞ்ஞான ஆய்வு முடிவுகளை புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியது முக்கியம். பாரதியின் சமகாலத்தவர் எவர் இதனை செய்தார்கள் என்று சீர் தூக்கிப் பார்ப்பது அவசியம். தென் கோடியில் வறுமையில் உழலும் வேற்று மொழி பத்திரிக்கையாளன் போஸின் இந்த உரைகளைத் தன் சமூகம் வாசிக்க வேண்டி செய்கிறன். கவனிக்கவும் ஐன்ஸ்டீனோடு நேரில் உரையாடக் கூடிய வசதியும் வாய்ப்பும் பெற்ற தாகூர் கூடச் செய்யாதது இது.
டாடா நிறுவனம் ரசாயன ஆய்வு மையம் திறந்தது குறித்து மகிழ்வோடு பதிவு செய்கிறான் பாரதி.
தேசியக் கல்வியும் பாரதியும்:
இந்தியர்களுக்கு எத்தகைய கல்வி அவசியம் என்பது குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டது அக்காலத்தில். பாரதியும் அது குறித்துப் பல கட்டுரைகள் எழுதியுள்ளான்.
காலனியாதிக்க அரசின் கல்விக் கொள்கைகள் நன்மைகளையும் தீமைகளையும் இரண்டறக் கலந்தே கொடுத்தது. ஒரு பக்கம் நவீனக் கல்வி, புதிய மொழி, அப்புதிய மொழியின் வாயிலாக ஒரு புதிய அறிவுலகின் வாசல் திறக்கப்பட்டது, இன்னொரு புறம் இந்தியர்களுக்குத் தங்கள் பாரம்பர்யம் குறித்து வெட்கப்படும்படியான நிந்தனைகளும் அவதூறுகளும் அறிவுத் தளத்தில் முன் வைக்கப்பட்டன. இந்தியாவின் பல அறிவுச் செல்வங்களை மீட்டெடுத்ததும் காலனியாதிக்க அரசுதான்.
கிறிஸ்தவப் பள்ளியில் படிக்கும் இரண்டு பள்ளிப்பருவ இந்துப் பெண்கள் தெருவில் நடக்கையில் இந்து மதம் பற்றிக் கேலியாகப் பேசி சிரித்துச் செல்வதைக் கேட்ட பாரதி சினம் கொள்கிறான். “கிறிஸ்தவக் குருமார் மதாபிவிருத்திக்கு முக்கியத் துணையாகக் குழந்தைப் பள்ளிக் கூடங்கள் வைத்து நடத்துகிறார்கள். நமது குருமார் என்ன செய்கிறார்கள்..ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஹிந்துப் பெண் பாடசாலை ஏற்படுவது நமது தேசாபிவிருத்திக்கு முதல் படி”. இன்னொரு கட்டுரையில் இன்னும் வெளிப்படையாக எழுதுகிறான், “நமது வாலிபர்கள் பாடசாலைகளிலே சுதேச மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங்கொண்டு வளர்கிறார்கள் முக்கியமாகக் கிறிஸ்தவப் பாடசாலைகளில் இவ்விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான ஞானிகளையும்…இவர்கள் கேள்விப்படுகிறதேயில்லை. கேள்விப்பட்டாலும் அவர்களெல்லாம் நவீன நாகரிகந்தெரியாத பைத்தியக்காரர்களென்ற விஷயத்தை கேள்வியுறுகிறார்கள்.”
பாரதி எழுதியது முற்றிலும் உண்மை. எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் நூல் ஒன்று சொல்கிறது. அன்றைய தமிழகத்தில் பகுத்தறிவாளர்கள் என்று கிளம்பியவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள் இந்து மதத்தை நிந்தனை செய்தும் தூஷித்தும் எழுதியதை ஆர்வத்தோடு பகுத்தறிவு என்ற பெயரில் பிரசாரம் செய்தனர்.
ஆங்கிலேயர்களின் மனோபாவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறான், “ஆங்கிலேயர்கள் ஒரு வியவகாரத்தைத் தொடங்குமுன் ஒரு சித்தாந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு விடுகிறார்கள். அதென்னவெனில், தாங்கள் நாகரீகத்திலும், மனப்பயிற்சியிலும் எல்லா ஜாதியாரினும் மேலானவர்களாகையால் இதர ஜாதியினரை அவ்விவிஷயங்களில் நிறுத்துப் பார்க்க வேணுமானால், தங்களுடையா நாகரிகத்திற்கும் பயிற்சிக்கும் எவ்வளவு தூரம் அவர்கள் எட்டி வருகிறார்களென்று மாத்திரம்தான் பார்க்க வேண்டும் என்பதே”.
தாகூர் தன் செல்வத்தை கொண்டு உலகெலாம் சுற்றிப் பொருள் சேர்த்தும் விஸ்வபாரதி பல்கலையை நிறுவினார். ஆயினும் அவரை விட மிகத் தீர்க்கமாகக் கல்வியை பற்றி நடைமுறை படுத்த கூடிய முக்கியமான யோசனைகளை பாரதி முன்மொழிகிறான். ‘தேசியக் கல்வி’ என்ற தலைப்பிலான கட்டுரையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாக மெட்ரிகுலேஷன் படித்தவர்கள் போதும் என்றும், கற்பிக்க வேண்டிய பாடங்களாகச் சரித்திரம், பூகோளம், தத்துவம், வரி விதிப்பு, பிராந்திய வரலாறு என்று பட்டியலிட்டுப் பின் ‘ஐரோப்பிய ஸயன்ஸின் ஆரம்ப உண்மைகளைத் தக்க கருவிகள் மூலமாகவும்” என்று சேர்க்கிறான். மேலும் “பௌதிக சாஸ்த்திரங்கள் கற்றுக் கொடுப்பதில் மிகவும் தெளிவான எளிய தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும் ஸுலபமாக விளங்குபடி சொல்லிக் கொடுக்க வேண்டும்.” என்கிறான். பாடங்கள், குறிப்பாக அறிவியல் சொற்கள் எப்படித் தமிழ்ப்படுத்துவது என்றும் தெளிவாகச் சொல்லியுள்ளான். கற்றுக் கொடுத்தலையும் மாணவனின் சௌகரியம் ஆகியவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழ், சமஸ்கிருதம், ஆங்கில மூலச் சொற்கள் எப்படிப் பயன்படுத்துவது என்று நடைமுறைவாதமாகச் சொல்கிறான். “யாத்திரை” (excursion) படிப்பில் ஓர் அங்கமாக வேண்டுமென்கிறான். இந்துக்கள் அல்லாத மாணாக்கர்களின் மதப்போதனை அவரவர்களின் மத நம்பிக்கையை ஒத்ததாகவும் “அன்னிய மதத் தூஷனை” இல்லாததாகவும் இருக்க வேண்டும். சாந்தினிகேதனில் விஞ்ஞானத்திற்கு இடமில்லை. தாகூரின் கல்வி பற்றிய கொள்கைகள் மிகவும் பின்தங்கியவை, மேற்கை நிராகரிக்கும் மும்முரமே அதில் இருந்தது. தாகூர் தேசியக் கல்வி பற்றி எழுதிய கவிதையை பாரதி மொழிப் பெயர்த்து வெளியிட்டுள்ளான். அக்கவிதையில் விசேஷமாக ஏதுமில்லை. சாரமில்லாத கனவு.
“அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்” என்றவன் “இத்தகைய கல்வி கற்பிப்பதில் பிள்ளைகளிடம் அரையணாக்கூடச் சம்பளம் வசூலிக்கக் கூடாது” என்று எழுதியதில் வியப்பில்லை.
வெறும் ஏட்டுக் கல்வியில் பாரதிக்கு உவப்பில்லை. “செல்வம் பயக்கும் படிப்பையேதான் ஒருவன் படிக்க வேண்டும். அது தான் ‘அர்த்தகரீச வித்யா’ என்று ஹிதோபதேசத்திலும் கூறி யிருக்கிறது. இம்மாதிரி பணம் ஸம்பாதிக்கும் வழியைக் காட்டும் படிப்பை விட்டு வெறும் படிப்பே படித்தால் ஒரு காலத்திலும் தேசத்திற்கு ஒருவித நன்மையும் விளையாது”.
பாரதி இந்து மதம், கிறிஸ்தவம், இஸ்லாம்:
“நம்புவதே வழி என்ற மறைதனை நாம் இன்று நம்பி விட்டோம்”
‘ஹிந்து மதம்’ என்ற கட்டுரையில் பாரதி “நம்பிக்கையே பிரதானம். இது ஹிந்து மதத்தின் முதற் கொள்கை. கடவுள் இருக்கிறாரென்று நம்ப வேண்டும்”
“சுத்த அறிவொன்றே சிவம் என்றோதியறீரோ” என்று கவிப் பாடியவன் எழுதுகிறான் “அறிவை அவருக்குத் திருக்கோயிலாகச் சமைத்து விட வேண்டும்”.
“சுத்த அறிவொன்றே சிவம் என்றோதியறீரோ” என்று கவிப் பாடியவன் எழுதுகிறான் “அறிவை அவருக்குத் திருக்கோயிலாகச் சமைத்து விட வேண்டும்”.
“அச்சம் தவிர்”, “ஆண்மை தவறேல்”, “அச்சமில்லை”, என்பதன் ஊற்றுக் கண்ணாக இருந்தது அவனின் இறை நம்பிக்கையாதலால் “எங்கும், எப்போதும், யாருக்கும், எதற்கும், எந்தக் காரணம் பற்றியும் பயப்படக் கூடாது” என்கிறான். அதற்குச் சான்றாகக் கீதையையும் மேற்கோள் காட்டுகிறான்.
கட்டுரைகளிலும் கவிதையிலும் மீண்டும் மீண்டும் பாரதி வலியுறுத்துவது மத நல்லிணக்கத்தையே. கிறித்தவ மதக் குருமார்களின் இந்து மத நிந்தனையை ஆவேசமாக எதிர்க்கும் பாரதி அவர் பெரிதும் மதிக்கும் அபோதாநந்தா கிறித்தவர்கள் கோயிலுக்குப் போவதே பெண்களைச் சந்திப்பதற்காக என்று பேசியதை கண்டிப்பதோடு அந்த ஒரு காரணம் தொட்டே அவரை வெறுத்துவிட வேண்டாமென்று கிறித்துவர்களைக் கேட்டுக் கொள்கிறார். இஸ்லாமியர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களிடம் நபிகள் நாயகம் பற்றி உரையாற்றித் தாம் இயற்றிய “அல்லா அல்லா” பாடலையும் (கவிதை?) பாடினார் பாரதி.
இஸ்லாமியர் கல்வியில் ஈடுபாடு காட்டுவதாக அறிந்து பாரதி எழுதுகிறான் ““நமது தேசத்துக்குப் பலமாக இருக்கும் மகமதியர்கள் கல்வின்மை முதலிய காரணங்களால் தமது உண்மையான கடமையை அறியாமல் தவறிப்போய் விடுவார்களே என்ற பயம் அனேக அறிஞர்களுக்கிருக்கின்றது. ஆனால் மகமதியர்கள் உண்மையாகவே கல்விப் பயிற்சியிலே ஆசை காட்டத் தொடங்கி அதற்கிணங்கிய பல பெரிய முயற்சிகள் செய்வதைக் கண்டவுடன் அந்தப் பயம் நீங்குவதற்கு ஹேது உண்டாகிறது.”
பாரதியும் பிராமணர்களும்:
“பார்ப்ப னக்குலங் கெட்டழி வெய்திய பாழ டைந்த கலியுக மாதலால்” என்றும் “போலீசுக்கார பார்ப்பானுக்கு உண்டதிலே பீசு” எழுதியவன் ஒரு பகடியில் பிராமணர்கள் உஞ்சவிருத்தி தான் செய்யத் தெரியுமே தவிர வேறு கைத்தொழில் தெரியாதவர்கள் என்று எழுதுகிறான்.
அக்காலத்தில் பிராமண எதிர்ப்பை மூலதனமாகக் கொண்டு அரசியல் சக்தியாக உருவெடுத்த ஜஸ்டிஸ் கட்சியினரை ஆங்காங்கே நிராகரித்தே எழுதுகிறான். “பிராமணர்களைப் பகைப்பதே மனித ஜன்ம மெடுத்ததின் பரம லட்சியமென்றும், தனிப் பெருங்கடமை யென்றும் நினைக்கும் “பிராமணரல்லாதார்” என்ற புதியதோர் எதிர் மறை நாமம் பூண்டு வெளிப்பட்டிருக்கும் ஸ்வதேச விரோதிகள்” என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆரூடம் போல் எழுதியிருக்கிறான்.
ஒரு கூட்டத்தில் பேசிய தியாகராஜ செட்டியார் காந்தியை ‘மஹாத்மா’ என்று விளிக்க மறுத்ததைக் குறித்துக் காந்திப் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் மஹாத்மா என்று சொல்ல வேண்டியதில்லை என்றாலும் “தேசாபிமானி ஒருவருக்கு ஒரு உயர்ந்த பட்டம் கொடுப்பதில் நாமேன் திகைக்க வேண்டுமென்று” மீண்டும் ஆரூடமாகவே கேட்கிறான்.
“ஆறிலொரு பங்கு” கதையின் முகவுரையில் பாரதி “நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரட்சிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம்” செய்கிறான். (விரிவானக் குறிப்பை பதிவின் முடிவில் காண்க). தாகூரின் பல்கலையில் முதலில் இஸ்லாமியருக்கு அனுமதியில்லை, காந்தியின் ஒரு வருகைக்குப் பின்பே சமபந்தி போஜனம் நடைப்பெற்றது. பாரதி வைதிக குடும்பத்தில் பிறந்தவன், தாகூர் சீர்த்திருத்தங்களை முன்னெடுத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
பாரதியும் காந்தியும்:
காந்தி இந்தியாவில் அதிகம் அறியப்படாமல் தென்னாப்பிரிக்காவில் இருந்த போதே பாரதி அவரைப் பற்றி எழுதுகிறான். தென்னாப்பிரிக்காவில் சிறை வைக்கப் பட்ட காந்தி “காபிர்களோடு” ரோடுகளில் வேலை செய்யவும் மலம் அள்ளவும் வைக்கப் பட்டார் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகின்றான். வெகு காலம் காந்தியை ஶ்ரீமான் காந்தி என்று மட்டுமே குறிப்பிடுகின்றான். காந்தியின் அஹிம்சா போராட்ட முறையை ஆதரிக்கும் பாரதி அவரின் பிரம்மசர்யக் கொள்கைகளை நிராகரிக்கிறான். “அவர் துறவு மார்க்கத்தைச் சேர்ந்தவர். நான் இன்ப மார்க்கத்தைச் சேர்ந்தவன்”, என்றும், “அழகும் அன்புமுடைய இளம்பெண்ணை மணஞ் செய்துகொண்டு, அவளுடன் வாழ வேண்டும்” என்று காந்தியை மறுக்கிறான். காந்தி அறிவுறுத்திய உணவுக் கட்டுபாடு பற்றி எழுதும் போது “ஊண் மிக விரும்பு” என்று கூறியவன் சொல்கிறான் “ருசி ருசியான பலவித உணவுகளை உடம்புக்கு வலிமையும், சுகமும், உண்டாகும் படி நல்லோர் உண்டு களிக்க வேண்டும்.” காந்தி யேசுவின் கதை ஒன்றை சொல்லி செல்வம் சேர்க்க கூடாதென்றதற்கு மறுப்பாக “தெய்வத்தை எதிர்த்துச் செல்வம் தேடுதல் தீமை யென்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் தெய்வத்தை நம்பி உடனே செல்வத்தைச் சேர்க்க வேண்டும் இது என்னுடைய கொள்கை. எனக்குத் தெரிந்தவரை ரிக் வேதம் இது போலவே சொல்லுகிறது.”
பாரதி காந்தியை சந்தித்தது குறித்து எழுதியது வ.ரா. ‘மகாகவி பாரதி’ எனும் நூலில் நிகழ்ச்சியை நேரில் கண்டதாகச் சொல்லும் வ.ரா, காந்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அறையில் புயலெனப் பாரதி நுழைந்ததாகவும், காந்தியோடு சமமாக உட்கார்ந்துப் பேசியதாகவும், தான் நடத்தப் போகும் கூட்டதிற்கு வர இயலாதென்று கூறிய காந்தியிடம் “உங்கள் இயக்கத்திற்கு என் ஆசிர்வாதம்” என்று சொல்லி விடைப் பெற்றார் என்றும் அவர் வெளியேறியப் பின் “இவரை இங்கே பாதுகாக்க யாருமில்லையா” என்று காந்தி வினவியதாகவும் சொல்கிறார். நான் சரி பார்த்தவரை பாரதி தொகுப்பில் அதற்கான சான்று இல்லை. வ.ராவின் நூல் ஒரு இடைநிலை மாணவன் தான் ஆராதிக்கும் ஆசிரியர் பற்றி எழுதும் தொனியில் இருக்கும் மிகச் சாதாரணமான சராசரியான எழுத்து.
பாரதி, விவேகாநந்தர் மற்றும் விதவை மறுமணம்:
விவேகாநந்தரின் மீது பெருமதிப்பு கொண்டவர் பாரதி. ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளனின் கோணத்தில் பெண்கள் பற்றிய பார்வையை எத்தருணத்தில் விவேகாநந்தர் மாற்றிக் கொண்டார் எனும் கட்டுரையில், விதவைகள் மறுமணம் குறித்து மிக தீர்க்கமான விமர்சனங்களை வைக்கிறார். உயர் ஜாதியினரிடையே பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் விதவைகள் மறுமணம் செய்தால் கல்யாணமாகாத கன்னிகளுக்கு வரன்கள் கிடைக்காமல் போய்விடும் என்று விவேகானந்தர் ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார். பதிலுக்குப் பாரதி அவ்வழக்கங்கள் ஏற்பட்ட காலத்தில் ‘ஜன சஞ்கிகை’ (census) கிடையாதென்றும் அப்படியில்லாத பட்சத்தில் பாலினக் கணக்கு காரணமாக முடியாது என்று கடிந்து சொல்லி மேற்கொண்டு விதவைகள் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான நியமங்களுக்கு ஜன சஞ்சிகையா காரணம், சாஸ்திரங்களல்லவோ காரணம் என்று சாடுகிறார்.
“காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், கலவியினால் கவலைத் தீருமாம்” என்று எழுதியவன், விதவையாகி விட்டதாலேயே காம உறுப்புகள் மறைந்து விடுமா அல்லது காம உணர்வுகள் தான் மடிந்து விடுமா என்று கடுமையாகக் கேட்டான். 1920-இல் அதை எழுதுவதற்குத் தைரியம் வேண்டுமென்பதை சொல்லவும் வேண்டுமோ?
பாரதியும் பெண் விடுதலையும்:
இன்று உளவியலாளர்கள் கூறும் நல்ல குடும்பமே நல்ல கல்வி முறையின் ஆணிவேர் என்பதைப் பாரதி 1918-இல் எழுதுகிறான். தேசியக் கல்வி பற்றிய கட்டுரையில் “தேசக் கல்விக்குக் குடும்பக் கல்வியே வேர்” என்றும் “மனைவியின் பொருளைத் திருட மனந்துணிந்தோன் கோவில் பணத்தைக் கையாடக் கூச மாட்டான்” என்கிறான். அந்த வரியில் பொதிந்துள்ள முக்கியமான பொருள் மனைவியானவளுக்கென்று பொருள் மீதான தனியுரிமை உண்டு அதைக் கணவன் மீறலாகாது என்ற தத்துவம். “காதலிலே விடுதலையென் றங்கோர் கொள்கை, கடுகிவளர்ந்திடுமென்பார் யூரோப்பாவில்….வீரமிலா மனிதர் சொலும் வார்த்தைக் கண்டீர்” என்று பாரதி அறுபத்தாறில் எழுதியவன் அத்தகைய சுதந்திரம் குடும்பங்களைக் குலைத்துப் போடும் என்று சொல்லி நிராகரிப்பாக முடிக்கிறான், “குடும்பங்களில்லாவிட்டால் தேசம் இல்லை. தேசம் இல்லாவிடிலோ தேசியக் கல்வியைப் பற்றிப் பேச இடமில்லை”.
‘பெண் விடுதலை’ என்று தலைப்பிட்டக் கட்டுரையில், ‘பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை’ என்று ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் சொன்னதை முன் மொழிந்து பென் விடுதலைக்கான ஆரம்பப் படிகளைப் பட்டியலிடுகிறான்: இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்ய வற்புறுத்தக் கூடாது, விவாகரத்திற்கு ஆதரவு, பெண் ருதுவான பின்பே திருமணம் செய்விப்பது, பிதுரார்ஜிதத்தில் பெண்ணுக்கு சம பாகம் கொடுக்க வேண்டும், விதவை மறுமணம், விவாகமே செய்து கொள்ளாமல் தனியாக இருப்பதும் தன் இஷ்டப்படி வியாபாராம் முதலியவற்றில் ஈடுபடும் சுதந்திரம், அன்னிய புருஷர்களோடு சம்பாஷிக்கும் சுதந்திரம், கல்வி மற்றும் உத்யோகத்தில் பெண்களுக்குச் சம உரிமை.
கற்பு பற்றிய கட்டுரையில் பாரதி “அறிவு சம்பந்தப்படாத வெறும் உடலாசை “காதல்” அல்லது பிரேரனை என்று சொல்வதறகுத் தகுதியுடையதில்லை.” “பெண்களுக்குக் கற்பு நிலை எத்தனை அவசியமோ, அத்தனை ஆண்களுக்கு அவசியமில்லையென்று நினைப்பதைப் போல் மூடத்தனம் ஏறு கிடையாது”.
பாரதியின் உலக ஞானம்:
வ.வே.சு ஐயர், அரவிந்தர், வ.உ.சி, ஜி. சுப்ரமணிய ஐயர் என்று நீளூம் பட்டியலில் குறைவாகப் படித்தது பாரதி தான். வ.வே.சு. ஐயரும் அரவிந்தரும் மெத்தப் படித்த ஞானிகள். இதனாலேயே அவர்களுடன் பழகியே பாரதியின் உலக ஞானம் இரவல் பெற்றது போன்ற ஒரு பிம்பம் நிலவுகிறது. உண்மையில்லை. 1905 நடந்த ருஷ்ய புரட்சி பற்றி 1906-இல் கட்டுரை எழுதுகிறான், ஜப்பான் யுத்தம், துருக்கி பற்றி, இங்கிலாந்து பாராளுமன்ற விவாதங்கள், 1917 ருஷ்யப் புரட்சி பற்றிக் கவிதை (ஆஹாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி), பிஜித் தீவில் ஹிந்து பெண்கள், யதுநாத் சர்க்கார் மொகலாயச் சாம்ராஜ்யம் பற்றி எழுதியது, இத்தாலி பற்றி என்று அவன் பார்வையில் இருந்து எதுவும் தப்புவதில்லை.
ராஜ விசுவாசியான பாரதி:
“பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே”
தன் மேலுள்ள கெடுபிடிகள் குறைந்திருக்கும் என்ற நம்பிக்கையில் புதுச்சேரியை விட்டு வந்து பிரிடிஷ் இந்தியாவில் கால் பதித்த போது கைது செய்யப்பட்ட பாரதி கடலூர் சிறையில் இருந்தபடி ஆங்கிலேய கவர்னருக்கு கடிதமெழுதினான்: “I once again assure Your Excellency that I have renounced every form of politics, I shall even be loyal to the British government and law abiding”.
சவர்க்கர், அரவிந்தர், பாரதி ஆகியோர் ஒருக் கட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தைக் கைவிடுவதாக அன்றைய காலனியாதிக்க அரசுகளுக்கு கடிதம் எழுதியதை இன்று நாம் கோழைத்தனம் என்று எண்ணலாகாது. அவர்கள் தேசத்திற்காக கொடுத்த விலை மிகப் பெரிது. அதுவும் பாரதி போன்ற எழுத்தாளன் தன் எழுத்தே தடைபடும்போது பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கையை விட அச்சுறத்தலான ஒரு மரண தண்டனைய எதிர் நோக்கினான். ஸ்டாலினிடம் பணிந்த மிக்காயில் பல்ககோவ், பிரெடிரிக்கிடம் இருந்து தப்பியோடிய வால்டேர், போப்பிடம் மண்டியிட்ட கலிலேயோ என்று வரலாறில் பல உதாரணங்களுண்டு.
தமிழ் சங்கங்கள் பற்றி பாரதி:
பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ் சங்கம் “தழைத்தோங்கி வருகிறதென்று சொல்ல இடமில்லை” என்று சொல்லி அது “யுனிவர்ஸிடியாக வளர்ச்சி பெற” வேண்டும் அதுவும் “ஸயன்ஸ் பகுதி, சரித்திர ஆராய்ச்சிப் பகுதி, கணிதப் பகுதி” ஆகியவை இருக்க வேண்டுமென்கிறான். “பாஷை யாராய்ச்சி மட்டிலும் செய்தால் போதாது. தமிழ் பாஷையை எல்லா வகையிலும் பெருமைப்படுத்தி, தமிழர்களின் அறிவுக்கே மேற்படி சங்கம் ஓர் மூலஸ்தானமாக” இருக்க வேண்டும் என்று கனவு. கண்டான். மீண்டு ஒரு முறை “நவீன ஸயன்ஸ் பரிசோதனைகளையும் மற்றுமுள்ள சாஸ்திர அற்புதங்களையும் தமிழர்களுக்கு, தமிழ் பாஷையிலேயே கற்பிக்கக் கூடிய பண்டிதர்களும் கருவிகளும் வேண்டும்” என்று வலியுறுத்தும் பாராதியின் கனவு அவன் காலத்தை விஞ்சியது. குறிப்பாக ஒரு பல்கலைக் கழகம் எப்படி பல்வகைத் துறைகளைக் கொண்டு அவற்றின் இடையே பாஷை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று எழுதியது, அக்காலத்தில் வேறெவெரும் இத்தகையக் கனவுகளைக் கொண்டிருந்தார்களா என்று தெரியவில்லை.
தமிழ் மொழியின் முன்னேற்றத்தை சிலுவையின் பாரம் போல் சுமப்பதாய் என்னிடம் பல முறை அங்கலாய்க்கும் அமெரிக்கத் தமிழ் சங்கங்கள் செய்யக் கூடியது ஒன்றுண்டு. ஒவ்வொரு சங்கமும் இத்தொகுதியினை வாங்கி தமிழ் நாட்டுப் பள்ளிகள், கல்லூரிக மற்றும் நூலகங்களுக்கு விநியோகிக்கலாம். அதிகமில்லை ஒவ்வொரு சங்கமும் ஒருத் தொகுதியையாவது வாங்கி ஒருப் பள்ளிக்கு நன்கொடையாக அளிக்கலாம். மனம் இருப்பவர்கள் இன்னொருத் தொகுயை வாங்கி இங்கே அமெரிக்காவில் அச்சங்கம் இருக்கும் நகரின் பொது நூலகத்திற்கு நன்கொடை அளிக்கலாம்.
பாரதியின் பன்மொழிப் புலமை:
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்”
பயிற்றுவித்தல் மொழிப் பற்றி ‘நியு இந்தியா’ பத்திரிக்கைக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதிய பாரதி தமிழ் மற்றும் ஆங்கிலமல்லாத மொழிகளை எள்ளலோடு நோக்கும் பாங்கை கண்டித்துவிட்டு தமிழில் காணக் கிடைக்கும் தத்துவம் மற்றும் இலக்கியம் இங்கிலாந்தின் ‘பிராந்திய’ பாஷையில் கிடையாது என்கிறான். கம்பன் வள்ளுவன், இளங்கோப் பற்றிச் சொல்லிவிட்டு, “it may not be irrelevant to add that I have read appreciated the exquisite beauties of Shelley and of Victor Hugo in the original English and French “vernaculars” and of Goethe in English translations”. ஆக, பாரதிக்கு தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்ச்சு மொழிகள் தெரிந்திருக்கிறது. பாரதியின் ஆங்கிலம் சரளமானதாகவே இருக்கிறது. பாரதியின் ஆங்கில எழுத்தின் தன்மை காந்தியுடையது போல் அலங்காரமில்லாதது. நேருவுக்கு ஆங்கிலம் வசப்பட்டதுப் போல் அநேக இந்தியர்களுக்கு வசப்படவில்லை என்பதே உண்மை.
தொகுதி பற்றி:
பாரதியின் எழுத்துகள் எல்லாம் நாட்டுடைமையாக்கப் பட்டதுதான் ஆனால் இது சீனி.விசுவநாதன் என்பவர் தேடித் தேடி சேகரித்த மற்றும் சீராக தொகுத்து, அடிக்குறிப்புகளும், பின்புலக் குறிப்புகளும் கொண்ட அரியப் பொக்கிஷம். இதற்கு காப்புரிமையுண்டு. ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்குக் காப்புரிமை கிடையாது ஆனால் ஒரு பதிப்பாளர் அதை வெளிக்கொண்டு வரும்போது, அதுவும் குறிப்புகள் மற்றும் விளக்கவுரையோடு, அது காப்புரிமைப் பெற்ற இன்னொரு படைப்பாகிறது.
விசுவநாதனின் பெரு முயற்சியினைப் பகீரதப் பிரயத்தனம் என்று விளிப்பது முற்றிலும் பொருந்தும். நேரு நினைவு அருங்காட்சியகத்திலுள்ள சுதேசமித்திரன் மைக்ரோ பிலிம்கள், ரோஜா முத்தையா நூலகம், புதுகோட்டை ஞானாலயா, தஞ்சை டி.என்.ராமசந்திரன் மற்றும் அநேகரிடமிருந்து அரை நூற்றாண்டாகச் சேகரித்த தகவல்களை ஒரு பல்கலைக் கழக ஆய்வகத்தின் நேர்த்தியோடு தொகுத்து விரிவானக் குறிப்புகள், விளக்கங்களோடு இனைத்துக் கொடுத்துள்ளார். பதிப்பாளரும் மிக நேர்த்தியான பதிப்பாக வெளியிட்டுள்ளார். இத்தொகுதியை வாங்குவோர் தன் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் அளவுக்குத் திண்மையான கெட்டி அட்டையும், அருமையான தாளிலும் அச்சிடப்பட்டுள்ளது.
இதழியல் என்ற ஒன்று முறையாகத் தோன்றாத காலத்தே பிராந்திய மொழி பத்திரிக்கைகள் சுதந்திர போரில் ஆற்றிய பங்கு பற்றித் தனியே ஆராய்ச்சியே செய்யலாம். இத்தொகுதி முழுக்கப் பாரதி வெளியிட்ட சித்திரங்கள், அவற்றுக்கு அவன் எழுதிய விளக்கக் குறிப்புகள் என்று ஒரு முக்கியச் சரித்திர ஆவணம் இந்தத் தொகுப்பு.
இப்படிப்பட்ட படைப்புகளுக்குத் தமிழ் நாட்டில் ஒரு புத்தக விமர்சணம் எழுதக் கிடைப்பதே எத்தனைக் கடினம் என்பதை விசுவநாதன் ‘துக்ளக்’ சோவிடம் அணுகிய விவரம் தெரியப் படுத்துகிறது. என்னாலான சிறு உதவி இப்பதிவின் மூலம் அதை நிவர்த்திச் செய்வது.
இப்போது இத்தொகுதியை முழுத் தொகுதியாகத் தான் விற்கிறார்கள் என்று அறிகிறேன். தேர்ந்தெடுத்த தொகுதிகளை வாங்க விரும்புவோர் தொகுதி 2,3,4,5,10,11 ஆகியவற்றை வாங்கலாம்.
விசுவநாதன் தேர்ந்த தகவல் சேகரிப்பாளர் மற்றும் தொகுப்பாளர் ஆனால் எழுத்தாளர் கிடையாது. பாரதி வரலாறாக எழுதப்பட்ட தொகுதி 1 மிகச் சாதாரணம். பாரதிக்கு இன்றும் நல்ல வாழ்க்கை வரலாறு உலகத்தரத்தில் இல்லை. அதே போல் பாரதியின் சங்கீத ஞானம் பற்றிய 15-ஆம் தொகுதி டி.எம்.கிருஷ்ணா போன்ற ஒருவரின் துணைக் கொண்டு எழுதப் பட்டிருக்க வேண்டும்.
“கால வரிசையில் பாரதி பாடல்கள்” என்று ஒரு தொகுதி முன்பு வெளிவந்தது. பாரதியின் கவிதைகள் எப்படி முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டனவோ அப்படியே கொடுத்து, பின் வந்த பதிப்புகளில், குறிப்பாக அரசாங்கப் பதிப்புகளில், என்னென்ன மாற்றங்கள் செய்யப் பட்டன என்ற விவரத்தோடு இருக்கும். அதையும் இத்தொகுதிகளோடு இணைத்தே கொடுத்திருக்கலாம். 16 தொகுதிகளில் காலவரிசையில் கட்டுரைகளோடு கலந்துவிட்ட பாடல்களை தேடிப் படிப்பதைவிடப் பாடல்களுக்கான தொகுதி இருப்பது அவசியம்.
ஒவ்வொரு தொகுதியிலும் பெயர் பட்டியல் (index of names) இருப்பது நன்மை. ஆனால் 16 தொகுதிகளுக்குமாகப் பெயர் மட்டுமல்லாது ஒவ்வொரு தலைப்பில் எந்தத் தொகுதியில் எது இருக்கிறது என்ற ஒரு ‘concordance’ கொண்டு வரப்பட்டால் அது ஆராய்ச்சி செய்வோருக்கு மிக உதவியாக இருக்கும்.
பாரதியின் பிரசுரிக்கப் பட்டப் படைப்புகளின் தொகுதிகள் இவை என்பதால் நமக்குக் கிடைப்பது பொது விஷயங்கள் குறித்த புறவயமான எழுத்துகளே. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில தனிக் கடிதங்களைத் தவிர வேறு தனி நபர் தொடர்புகள் இதில் இல்லை. பாரதியின் சுயவரலாற்றெழுத்து காந்தி, நேரு ஆகியோருடையதைப் போல் அகவயமான உள்நோக்கிய பயணம் அல்ல. 16 தொகுதிகளைப் படித்தாலும் நாம் அறியாத பாரதி ஒருவன் இருக்கவே செய்கிறான்.
சம காலத்தில் பாரதி பற்றி எழுந்த விமர்சணங்கள், அதற்குப் பாரதியின் பதில்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம். ‘பறையன்’ என்ற சொற்பிரயோகத்திற்காக எதிர்ப்பைச் சந்தித்த பாரதி அதற்குத் தான் ‘பட்லர் பறையர்களைப் பற்றிப் பேசவில்லை’ என்று காட்டமாக மறுக்கிறான். ஜெயமோகனின் பாரதி விவாதத்தில் அப்படிப் பாரதியை எதிர்த்தது அயோத்திதாசர் என்று கூறுகிறார். இத்தொகுதியில் பாரதியின் எதிர்வினை மட்டுமேயுள்ளது. இக்குறைகளைத் தாண்டி இத்தொகுதி மிக முக்கியமான வரலாற்று ஆவணம்.
பாரதி மகாகவியா?
ரபீந்திரநாத் தாகூர் பற்றிப் பாரதி கொண்டிருந்த அபிப்பிராயம் இங்கே நினைவு கூறத் தக்கது.
“கீதாஞ்சலி முதலாக அவர் இங்கிலீஷ் பாஷையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் நூல்கள் மிகவும் சிறியன. பார காவியங்களல்ல. பெரிய நாடகங்களல்ல. தனிப் பாடல்கள் சில காண்பித்தார். உலகம் வியப்படைந்தது. நல்வயிர மணிகள் பத்துப் பனிரண்டு விற்றால் லட்சக்கணக்கான பணம் சேர்ந்திடாதோ? தெய்வீகக் கவிதையிலே பத்துப் பக்கம் காட்டினால் உலகத்துப் புலவரெல்லாம் வசப்பட மாட்டாரோ?”
மிகக் கறாரான மதிப்பீடு. தாகூர் செல்வந்தர், செல்வத்தால் கிடைத்த வாய்ப்புகள் கொண்டு கவித்துவமிக்கக் கவிதைகள் தந்தார் பாரதியோ ஏழை என்ற சால்ஜாப்புகள் விமர்சனத்திற்குத் தேவையில்லாதது. கிரிஸ்டோபர் மார்லோ நீண்ட நாள் உயிர் வாழ்ந்திருந்தால் ஷேக்ஸ்பியரை விஞ்சியிருப்பான் என்று சொல்வது போல் அது.
ஜெயமோகன் இது குறித்து நீண்ட விவாதம் ஒன்றை நடத்தினார். அது பற்றிய தீவிரமான ஆராய்ச்சி என் தளமல்ல. ஆயினும் சில புள்ளிகளில் அவர் வைக்கும் விவாதங்களை ஏற்றும் சில புள்ளிகளில் மாறுபட்டும் இருக்கும் என் வரையிலான சில வாதங்களை இங்கே தொகுக்கிறேன்.
எனக்கு எப்போதுமே இந்தப் பட்டங்கள் ஒவ்வாதவை. மஹாத்மா, மகாகவி என்பதெல்லாம் மிகச் சிக்கலான நுட்பமான மனிதர்களைத் தட்டையாக்கும் பட்டங்கள். பாரதி மகாகவி இல்லையென்றால் பாரதிக்கும் தமிழுக்கும் எவ்விதக் குறைவுமில்லை. விவாதமும் பட்டம் பற்றி மட்டுமல்ல, மாறாகப் பாரதி எனும் கவிஞனின் கவித்துவம் பற்றியது. ஜெயமோகனின் வாதமான பாரதியிடம் கவித்துவ உச்சங்கள் குறைவே என்பதை மகிழ்வாகவே ஒப்புக் கொள்கிறேன்.
இலக்கிய விமர்சகர் ஏ.ஸி.பிராட்லி கவிதைகளை மதிப்பிடுதல் பற்றிய புத்தகத்தில் கவிதையென்பது பாடு பொருளும், சொற் செறிவும் ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரித்துக் காண முடியாதபடி ஒன்றையொன்று மேம்படுத்திக் கவிஞன் சொல்ல வந்ததையும் தாண்டி நம்முள் விரிந்து ஒரு அர்த்ததை உருவாக்கிக் கொள்வதே கவிதையின் மாண்பு என்கிறார்.
கீட்ஸுக்கு ஒரு கிரேக்கத் தாழி, டென்னிஸனுக்கு ஓர் ஓடை, வோர்ட்ஸ்வர்த்துக்கு எங்கோ ஒரு பள்ளத் தாக்கில் தனியளாகக் கதிர் அறுப்பவளோ தேம்ஸ் நதியோ, ஷெல்லிக்கு ஒரு பறவையோ வாழ்க்கையின் துயரோ அல்லது நேப்பிள்ஸ் நகரில் மனமுடைந்த தருணமோ, மில்ட்டனுக்கு மானுடத்தின் வீழ்ச்சியும் மீட்சியும் என்று கவிதைப் பாடு பொருள்கள் பல தரப்பட்டன ஆனால் அவை ஒவ்வொன்றிலும் கவித்துவ உச்சங்கள் காணலாம்.
ஷெல்லிக்கு எளிதாகக் கைவசப்பட்ட கவிதை பாரதி பிரச்சாரப் பாடல்களை விடுத்து மற்ற பாடல்கள் இயற்றும் போது ஆங்காங்கே தான் தென்படுகிறது.
பாரதியின் கண்ணன் பாட்டு ஆகியவற்றுள் எதுவும் புதுமையில்லை. அவை இந்து மரபின் நீட்சியே என்பதும் ஏற்புடையதே. கீதாஞ்சலியில் இந்து மரபில் இல்லாத எதை தாகூர் சொல்லி விட்டார்? சினுவா அச்சபே, சிமாமண்டோ அடிச்சி ஆகியோரை எக்காரணம் கொண்டு ஜெயமோகன் நிராகரிக்கிறாரோ அதைக் கொண்டே தாகூரையும் புறங்கையால் தள்ள முடியும். மேற்குலகம் எதை இந்தியா என்று மையல் கொண்டதோ அதையே அவர்கள் உவகைக்கேற்ப சமைத்துக் கொடுத்தவர் தாகூர். ஒருவித கனவுலக ‘mysticism’. தாகூர் அடைந்த அளவுக் கடந்த விளம்பரத்தின் பின்னால் இருந்தது “பாம்பாட்டி தேசத்தில் தத்துவம் எழுதுகிறவர்” என்ற ஆச்சர்யமே.
நோபல் பரிசுக் கொடுத்த உற்சாகத்தில் தாகூர் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த போது யேட்ஸ் கடுமையாக “நானும் ஸ்டர்ஜசும் தான் இவர் நூல்களை மொழிப்பெயர்த்திருக்கிறோமே. இந்தியர்களுக்கு ஆங்கிலம் வராது” என்றாராம். யேட்ஸ் தாகூரை மேற்கத்திய இயந்திரவியலுக்கு எதிரான கிழக்கின் ஆன்மீகப் பார்வையை முன்வைப்பவர் என்றதை இன்றைய விமர்சகர் ஒருவர் அது ஏகாதிபத்திய பார்வை என்கிறார். அதாவது விஞ்ஞானம் என்பது தன் இனத்துக்கும் கனவுக் காண்பது கிழக்கின் மாண்பாகவும் முன் வைக்கப்படும் நுண்ணரசியல் என்கிறார். அக்காலத்திலேயே கூடத் தாகூரின் பார்வையை நிராகரித்தவர்கள் உண்டு. பெர்டிரண்ட் ரஸ்ஸல் தாகூரின் உரையொன்றைக் கேட்டுவிட்டு எரிச்சல் அடைந்தாராம். எவ்வளவு விரைவாகத் தாகூர் உலக அரங்கில் பிரபலமடைந்தாரோ அவ்வளவு சீக்கிரம் அதை இழக்கவும் செய்தார். இன்று உலக இலக்கியத்தில் அவர் இடம் கேள்விக்குறியே.
இன்றும் தாகூர் ‘sentimental’ கவிதைகளைத் தருபவர் என்ற எண்ணம், மேற்கத்திய விமர்சகர்கள் உட்பட, பலருக்குண்டு. வங்கத்தில் தாகூரை விமர்சிக்கலாம் ஆனால் தமிழகத்தில் பாரதியை விமர்சிக்க முடியவில்லை என்று ஜெயமோகன் கூறுவது உண்மையல்ல. குஷ்வந்த் சிங் சமீபத்தில் தாகூரின் கவித்துவத்தைக் கேள்விக்குட்படுத்திய போது அவருக்கு வங்கமே எதிர்ப்புத் தெரிவித்தது. மம்தா பானர்ஜியும் இடது சாரிகளும் தங்கள் பரஸ்பர அரசியல் எதிர்ப்பை கைவிட்டு ஒருமித்த குரலில் குஷ்வந்த் சிங்கை கடிந்தனர்.
ஷேக்ஸ்பியர் கவிதையில் தொட்ட உச்சத்தைப் பாரதி எட்டவில்லை என்ற தொனியில் ஒரு கருத்தை முன்வைக்கிறார் ஜெயமோகன். மார்க் வேன் டோரன் ஷேக்ஸ்பியர் பற்றிய விமர்சனத்தில் ஷேக்ஸ்பியரின் கவிதைகள் முழுமையுறாதவை என்கிறார். வேன் டோரன் கூறியது சரி, ஜெயமோகன் கூறியது தவறு என்றில்லை. ஷேக்ஸ்பியரைக் கூட ஏற்காதவர்கள் உண்டு. இது விமர்சன மரபு.
தமிழகத்து எழுத்தாளர்களுக்குத் தாகூரே ஆதர்சம் பாரதியல்ல என்பது ஏற்கபடுமானால் அதன் பின்புலங்கள் ஆராயப் பட வேண்டும். தாகூர் அவர் வாழ்நாளிலேயே, யேட்ஸ் தயவில் கிடைத்த நோபல் பரிசின் வெளிச்சத்தால், அதிகம் மொழிபெயர்க்கப் பட்டுப் பிரசுரம் செய்யப்பட்டுப் பிரபலமானார் உலகம் முழுதும். பாரதியின் படைப்புகள் முக்கியமாக அவனின் பிரச்சாரத் தன்மையில்லாத கவிதைகள் அந்தளவு பிரசுரிக்கப்பட்டதே இல்லை.
பாரதியின் தேசாபிமானக் கவிதைகள் பிரச்சாரத் தன்மைக் கொண்டவையே. மேடைகளில் எளிதாக மேற்கோள் காட்டத் தக்க வரிகள் என்பதாலேயே காலப் போக்கில் அவை பிரபலமாயின என்பதும் உண்மை.
ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகத் தனக்களிக்கப் பட்ட ‘ஸர்’ பட்டத்தைத் துறந்த தாகூர் அங்கே உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்புவதற்கு ஆதரவு தர மறுத்தார். பாரதியோ தேசாபிமானிகள் சிறைவைக்கப்பட்ட சிறை வாசஸ்தலங்கள் புண்ணியத் தலங்கள் என்று கட்டுரை எழுதினார். இருவரும் இரு துருவங்கள்.
காந்தியை மஹாத்மா என்று விளித்தாலும் தேசியம், தேச விடுதலை, ஒத்துழையாமை என்று எதிலும் காந்தியோடு முரன்பட்டு நின்ற தாகூரும் தேச விடுதலைக்காகக் கவிதையாகவும் கட்டுரையாகவும் எழுதி குவித்த பாரதியும் இரு துருவங்கள். தேசாபிமானப் பாடல்களில் பாரதி எளிமையை முன்னிறுத்தினார் புதுக் கருத்தியல்களை, புதிய படிமங்களை முன் வைத்தார். அக்கவிதைகளை அளக்கும் அளவுகோல்கள் வேறாக இருக்க வேண்டும் என்பது என் தரப்பு. தாகூர் எத்தனை தேசாபிமானக் கவிதைகளை எழுதினார்? மிக, மிகச் சொற்பம்.
பாரதியின் கதைகளைவிட தாகூரின் சிறுகதைகளும், குறு நாவல்களும் மேலோங்கியவையே. ஆனால் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். தாகூரின் நாவல்கள் அக்காலத்தில் மிகப் பிரபலமடைந்தாலும் அந்நாவல்களுக்கு உலக அளவில் இலக்கிய மதிப்பு, அன்றும், இன்றும், அவ்வளவாக இல்லை. தல்ஸ்தோயும், தாமஸ் மானும் எழுதிய காலத்தில் தாகூரின் புனைவுகள் இரண்டாம் தரமே.
தாகூர் இந்திய மரபில் ஊறியக் கருத்துகளையே கவிதைகளிலும் தன் பேருரைகளிலும் முன் வைத்தார். பாரதி புதிய கனவுகளை முன் வைக்கிறான். ஒரு நிலப் பரப்பை தன் அரசன் ஆள்கிறான் என்பதன் அடையாளமாக இந்திய நிலப் பரப்பைக் குறிக்கும் பாடல் எழுதுவது வேறு ஆனால் ஒரு தேசம் என்ற கருத்தியலை முன் வைத்து குடிமகனை நோக்கி “இது உன் தேசம்” என்ற தொனியில் “பாரத நாடு பழம் பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்” என்பதும் வெவ்வேறு தளம். குடிமகனை நோக்கி “இது உன் தேசம், இதன் சிறப்புகளெல்லாம் அவை எங்கிருந்தாலும் உன்னுடையவை” என்று பிரகடனம் செய்யும் “மன்னும் இமைய மலை எங்கள் மலையே” என்பது அக்காலத்திற்கு மட்டுமல்ல எக்காலதிற்கும் புரட்சி வரிகள்.
அமெரிக்காவில் ‘பெண்’ என்ற தலைப்பில் உரையாற்றிய தாகூர் மருந்துக்குக் கூட எந்தப் புதுக் கருத்தையும் சொல்லிவிடவில்லை. பாரதியோ விதவையின் காம உணர்வு குறித்துப் பேசுகிறான். தாகூர் மேற்கத்திய தலங்களில் உரையாற்றும் போதெல்லாம் கிழக்கின் மரபினை விதந்தோதியும் மேற்கின் விழுமியங்களைக் கடிந்துமே பேசுகிறார். ஜகதீஷ் சந்திர போஸுக்குப் பொருளுதவி செய்தாலும் அவர் விஞ்ஞானத்திலோ அறிவியலிலோ தாகூருக்கு எந்த ஈர்ப்பும் இல்லை. “ஆலைகள் செய்வீரே” என்பது பிரச்சார வகைப் பாடலாகவும் கவித்துவம் இல்லாத பாடலாகவும் தெரியும் நாம் அது இயற்றப்பட்ட காலத்தையும் அந்த அறிவுச் சூழலையும் தவிர்த்துப் பார்த்தால்.
பாரதி யாருக்கும் தோன்றாததையெல்லாம் பேசினான் என்று சொல்ல இயலாது. ‘பேசாப் பொருளைப் பேச நான் வந்தேன்’ என்று எழுதினாலும் அதற்கு முன் வேதநாயகம் சாஸ்திரியார் ஆகியோர் முன்மொழிந்த பெண் விடுதலையைத்தான் பாரதியும் சொன்னான். அரிஸோனா பல்கலைக்கழகத்தின் வெளீயீடான ஆர்.சுந்தரலிங்கத்தின் “Politics and Nationalist Awakening in South India:1852-1891” படித்தால் சீர்திருத்த கருத்துகளின் நீண்ட மரபு தெரிய வருகிறது.
கட்டுரை இலக்கியம் என்பது இந்திய இலக்கியத்துக்குப் புதிது. தாகூர் முதல் புதுமைப்பித்தனின் கட்டுரைகள் வரை ஜார்ஜ் ஆர்வெல் போன்றோரின் கட்டுரைகளோடு ஒப்பிட்டால் அவை குழந்தைத் தனமானவையே. சமீபத்தில் வந்த ஜெயமோகனின் ஜனநாயகம் பற்றிய கட்டுரைகளும், பி.ஏ.கிருஷ்ணன் விஞ்ஞானம் பற்றி எழுதிய கட்டுரைகளும் கட்டுரைக்கான இலக்கணத்துக்குட்பட்டவை. வேறு சிலரின் கட்டுரைகள் என்று வெளியானவற்றைப் படித்து “இதையா புகழ்கிறார்கள்” என்று எண்ணியதுதான் உண்மை.
பாரதியை விட அதிக நாள் வாழ்ந்து, மிக அதிகம் எழுதி அதை ஸ்தாபன ரீதியான பலம் கொண்டு பரப்புரை செய்த அரவிந்தர் பற்றிச் சில கேள்விகள் எழுப்பலாம். இன்று தத்துவ உலகில் அரவிந்தருக்கு என்ன இடம்? உலகளாவிய தத்துவ உரையாடலில் என்ன தாக்கத்தை அரவிந்தரின் எழுத்துகள் உண்டுப் பண்ணின? இந்திய மெய்யியலில் மையங்கொள்ளும் ஒன்றிரண்டு வெள்ளைக்காரர்களின் மதிப்பீடு தவிர்த்துப் பார்க்க வேண்டும்.
பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில் பாரதி சொல்கிறான் “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை யுடைய காவிய மொன்று தற்காலத்திலே செய்துதருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்க முள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்”. மொழிக்கும் மக்களுக்குமான தூரத்தை குறப்பதோடு “காவிய நயம் குறைவுபடாமலும்” செய்ய முடிந்ததே பாரதியின் சாதனை.
மொழி செம்மையுற செம்மையுற அம்மொழியில் உருவாகும் படைப்புகளைப் புரிந்து கொள்ள இலக்கண ஞானம் இன்றியமையாததாகிறது என்று, சமஸ்கிருதம் எப்படிப் படித்தவர்கள் மட்டும் புரிந்து கொள்ளும் மொழியானது என்று பண்டைய இந்திய கல்வியியல் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் எழுதுகிறார். பண்டிதர்களின் மொழியாகி விட்ட தமிழை மீண்டும் மக்களின் மொழியாக்கியது ஒரு மாபெரும் நிகழ்வு.
தமிழ் நாட்டில் இன்றுள்ள பகுத்தறிவாளர்களுக்கே உரித்தான குயுக்தியுடன் ஒருவர் “பெண்கள் உபயோகப்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை அர்ச்சனைத் தட்டில் வைத்து வணங்க வேண்டும்” என்று பேஸ்புக்கில் சொல்லவும் எனக்கு உடனே நினைவுக்கு வந்தது ‘பாரதி அறுபத்தாறு’.
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத்தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.”
நான் சங்கரரையும் ராமானுஜரையும் வேதாந்தத்தையும் அறியாப் பருவத்தில் வாசித்த வரிகள் அவை. அதை மேற்கோள் காட்டிவிட்டு சொன்னேன் “இந்து ஞான மரபில் வந்த ஒருவனே இப்படி எழுத முடியும்”. இது தான் பாரதி சாதித்தது.
1850-1947 ஒரு கொந்தளிப்பான காலக்கட்டம். அக்கால அறிவுச் சூழல் வரலாறு பற்றிய புத்தகங்கள் படிக்கும் போது மேலோங்கும் ஓர் எண்ணம், நமக்கு இன்னும் அன்று நிகழ்ந்த பல அறிவு கொந்தளிப்புகள், அவற்றின் ஊடுபாவுகளான சிக்கலான சித்திரத்தின் வீச்சு, சொல்லொண்ணா பிரம்மாண்டமானது. தாகூர், அரவிந்தர், பாரதி, காந்தி, ஸவர்க்கர், திலகர், நேரு என்று யார் பெயரைச் சொன்னாலும் அவர்கள் எவ்வளவு தூரம் புது எண்ணங்களைச் சுவீகரித்தார்கள், புது விழுமியங்களை மரபுகளோடு இணைத்துப் புதுப் படிமங்கள் அளித்தார்கள் என்பதெல்லாம் மிகமிகச் சிக்கலான ஒரு சித்திரம். பாரதியை மகாகவி என்று சொல்லாமல் ஒரு காலத்தின் குரலாகவும் அதே சமயம் காலம் கடந்தும் நம் ஆன்மோவோடு உறவாடும் இறவாத் தன்மை கொண்ட அமரத்துவத்தின் குரலாகவும் காண்பதே எனக்கு உவப்பு.
முடிவுரை:
ஒரு நாள் முதல்வராகும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற வாசகரின் கேள்விக்குப் பதிலளித்த சோ ராமசாமி, “போர்த் தொழில் விந்தைகள் காண்பாய் -ஹே! பூதலமே! அந்தப் போதினில்” என்றார். சாகித்ய அகாதமியின் உயரிய கௌரவம் தன்னைத் தேடி வந்த போது ஜெயகாந்தன், “இது பாரதி எனும் கவிதா மண்டலத்தில் இருந்து உதிர்ந்த என் போன்ற என் சம கால எழுத்தாளர்களுக்கு உரித்தானது” என்றார். 70 அகவையைத் தொட்ட என் தந்தைக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன் “வயது முதிர்ந்துவிடினும் - எந்தை வாலிபக் களையென்றும் மாறுவதில்லை” என்று. கம்பன், வள்ளுவன், இளங்கோ என்றொரு வரிசையை பாரதி நமக்கு அடையாளப்படுத்தினான் காலம் இவ்வரிசையில் பாரதிப் பெயரையும் சேர்த்து இன்று நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஓர் முக்கிய அடையாளமாகத் தமிழின் பெருமைக்குரிய இலக்கியவாதி முதல் என் போன்ற சாமான்யன் வரை இம்மண்ணில் ஜீவித்து மரித்த அந்த அக்னி குஞ்சின் ஜ்வாலைகள் இன்றும் தீண்டியவண்ணம் இருக்கிறது.
ஷேக்ஸ்பியரின் வாழ்நாளிலேயே அவருக்கும் லத்தீணும் கிரேக்கமும் தெரியாது என்று எள்ளி நகையாடப்பட்டார். நாடக இலக்கியம் ஷேக்ஸ்பியருக்கு முன்னும் இருந்தது, பின்பும் பயணித்தது. ஷேக்ஸ்பியருக்கு மனித பலத்தைச் சித்தரிக்கும் திறன் இல்லை என்றார் பெர்னார்ட் ஷா. அதையெல்லாம் தாண்டி இன்று ஒரு மொழியின் அடையாளமாக ஷேக்ஸ்பியர் திகழ்கிறான். “ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது வந்த மாமணி” பாரதி.
நன்றி: உற்ற நண்பரும் தமிழ் இலக்கியத்தில் பேரார்வம் கொண்டவரும் எழுத்தாளருமான 'ஒருப்பக்கம்' ஸ்றீதர் நாராயணனுக்கு பிழைத் திருத்தம் செய்து கொடுத்ததற்கு நன்றி. பிழைத் திருத்தம் செய்ததைத் தவிர வேறெந்தப் பாவத்தையும் அவர் செய்யவில்லை. போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் எனக்கே உரித்தானது. அவர் சரி பார்த்தப் பின்னும் நான் சில சேர்க்கைகள் செய்தேன்.
References:
- கால வரிசையில் பாரதி படைப்புகள் தொகுதி 1-16
- Rabindranath Tagore: The Myriad Minded Man by Krishna Dutta and Andrew Robinson.
- Rabindranath Tagore: Selected Poetry - Translated by William Radice.
- Rabindranath Tagore: Lectures and Addresses - Edited by Anthony Soares
- Creative Unity - Rabindranath Tagore. Contains lecture on Women.
- Colonizing the Realm of Words: The transformation of Tamil Literature in Nineteenth Century South India - Sascha Ebeling
- Politics and National Awakening in South india:1852-1891 by R. Suntharalingam
- Yeats, Russell etc on Tagore -- Article in New Yorker http://www.newyorker.com/magazine/2011/05/30/modern-magus
- பாரதி மகாகவி விவாதம் - ஜெயமோகன் http://www.jeyamohan.in/21493#.V5gPUVfijjU
13 comments:
Who is the author of this introduction ?
விதவா விவாகம் பற்றி சுவாமி விவேகானந்தரோடு மட்டுமல்ல் காந்திஜியின்
கருத்துக்களுடனும் பாரதியார் மோதியுள்ளார்.
காந்திஜி,' இளம் விதவைகள் பெருகக் காரணம் வயது முதிர்ந்தவர்கள் இளம் பெண்களை மறுமணம் செய்வதுதான், எனவே ஆண்கள் மறுமணம் செய்வதயே விட்டு விட்டால் பெண் விதவைகளின் எண்ணிக்கை குறையும்' என்பது போல கருத்துச்சொனார்போல.
பாரதியார்,"பலே பேஷ்!பெண் விதவைகளின் எண்ணிக்கை குறைய, ஆண் விதவைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தச் சொல்கிறார் ஸ்ரீமான் காந்தி.
சம வயதுடைய ஆண் பெண் விதவைகள் திருமணம் செய்து கொள்வதுதான் சரி'என்கிறார்.
(இதே சொற்களில் அல்ல. புத்தகம் உடனே கிடைக்கவில்லை. கருத்து என்னமோ இதுதான்).
தன் கருத்தைச் சொல்வதில் பாரதி பட்சபாதம் இல்லாமல்தான் இருந்துள்ளார்.
உங்கள் புத்தக விமர்சனம் அருமை
ரபீந்த்ரநாத் டாகூர் பற்றி பெர்ட்ராண்ட் ரசல்:
“Here I am back from Tagore’s lecture, after walking most of the way home. It was unmitigated rubbish- cut-and- dried conventional stuff about the river becoming one with the Ocean and man becoming one with Brahma. The man is sincere and in earnest but merely rattling old dry bones. I spoke to him before the lecture afterwards I avoided him.”
[…]
‘I regret I cannot agree with Tagore. His talk about the infinite is vague nonsense. The sort of language that is admired by many Indians unfortunately does not, in fact, mean anything at all.”
(http://www.magicmushroomfactory.com/2015/02/rabindranath-tagores-letter-to-bertrand-russell/)
ரசல் பிரிட்டனின் தத்துவ மரபில் வருபவர் , அதனால் டாகூரைப் பற்றி அப்படி நினைத்ததில் ஆச்சரியம் இல்லை.
பிரிட்டானிய அனாலிடிக், அனுபவார்த்த மரபில் வருபவர் ரசல். அதனால் பிரெஞ்சு இருத்தலியல் தத்துவமும் அவருக்கு பிடிக்காது; இந்திய தத்துவ சிந்தனைபோல் , பிரென்சு தத்துவ எழுத்துகளும் வெரும் வார்த்தை ஜாலங்கள் என நம்புபவர்.
வ.கொ.விஜயராகவன்
Excellent review !
Excellent one...
அருமையான பதிவு...
மிக்க நன்றி .....
brilliant and eye opening.
We have to know for sure that Russel himself is not considered as a great scientist of the stature of Neil's Bohr , Schrödinger or Dirac despite the big put ons he cultivated for himself. Nor is he a man of literature
Like Hugo or Chesterton. It is laughable that he talks satirically about Tagore. Different kinds of infinity are defined by scientists of late. Einstein did have humility when he met Tagore.
Excellent
Interesting review
Excllent
Brilliant piece. Remainding prof. Albert article on Bharathi published on Punaikalam.
Hi,
do you know from where the 16 volumes can be purchased?...a link or store name will be useful
Post a Comment