Wednesday, February 13, 2019

2019 கும்ப மேளா: ஒரு குறிப்பு

 ஜெயமோகனின் கும்ப மேளா பற்றிய தொடரில் ஒரு கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. சுண்டியிழுக்கும் முதல் பத்தியே காரணம். இந்திய 'அறிவார்ந்த' ஊடகங்கள் எல்லாம் கும்ப மேளா பற்றி எதிர்மறையாகவே பிரச்சாரம் செய்கின்ற என்ற வாசகரின் உளக்குமுறுலோடு ஆரம்பமாயிற்று.

இந்தியாவில் ஜனத்திரள் கூடும் எந்த இடம் பற்றியும், அரசியல் மாநாடோ மதம் சம்பந்தபட்டதோ, யாருக்கும் இருக்கும் அச்சம் சுகாதாரமின்மை மற்றும் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடுமோ என்கிற அச்சமும் யதார்த்தமானதே. இதற்கு உடனே மேற்கத்திய ஊடகங்கள், மிஷனரி வரலாறு, காலணியாதிக்கம் என்றெல்லாம் யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம். மகத்தில் பிறந்த மகராசி மகாமக குளத்தில் குளிக்கப் போய் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது இணையத்தைத் தட்டினால் தெரியும். தஞ்சை பெரிய கோவில் சதயத் திருவிழாவில் ஜன நெரிசலில் மாண்டவர்கள் அநேகம்.1954 மகா கும்ப மேளாவில் நடந்த ஜன நெரிசலில் மாண்டவர்கள் 800. அதற்கு முக்கியக் காரணம் நாகர்களின் முரட்டுத் தனம் தான் என்று அரசாங்க அறிக்கையே சொன்னது. ஒரு அனுமார் கோயில் அருகே அகாராக்களின் ஊர்வலத்தைப் பார்க்க பாதையின் இரு மருங்கிலும் பல்லோர் கூடியிருக்க ஏற்பட்ட நெரிசலில் கூட்டம் ஊர்வலப் பாதைக்குள் சிதற நாகர்கள் அவர்களை இரும்பு சிம்டாக்கள் கொண்டு தாக்க கடைசில் 800 பேர் மரணம். கமலகாண்ட வர்மா சமர்பித்த அறிக்கையில் காட்டமாக எழுதினார், "சோர்ந்தப் போய் நாகர்களின் ஊர்வலப் பாதையில் குறிக்கிட்ட யாத்திரீகனை இரும்பு ஆயுதம் கொண்டு தாக்குவது ஒரு சாது செய்யக் கூடியதா?...இன்றைய சாதுக்களுக்கு என் கோரிக்கை இது தான், உங்கள் வீடுகளை முதலில் ஒழுங்கு படுத்துங்கள், உங்கள் மேன்மைக்குத் திரும்புங்கள். இன்றிருக்கும் நிலை நீடித்தால் 'சாது' என்கிற வார்த்தையின் உண்மையான முக்கியத்துவம் மறைந்து அச்சொல் பிச்சைக்காரன் என்பதற்கு நிகரானதாகிவிடும்." ஜவகர்லால் நேரு அந்தக் கும்ப மேளாவில் பங்கேற்றார். ஆனால் அவர் புனித நீராடுவதாக உலவும் புகைப்படம் அப்போது எடுத்தது அல்லவாம். 

கும்ப மேளாவில் கலவரங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. அது நாகர்களின் இரத்தம் தோய்ந்த வரலாறோடு பிணைந்தது. 1850 கும்ப மேளாவில் சைவ வைணவ ஆயுதம் தாங்கிய சாதுக்களிடையே மோதலை தவிர்க்க ஆங்கிலேய அரசு ஆயுதம் தாங்கிய படையைக் காவலுக்கு வைத்ததோடு இரு பிரிவினரும் குளிப்பதற்குத் தனித் தனிப் படிதுறைகளையும் அவ்விரு படித்துறைகளுக்கு நடுவே பிராமணர்களுக்கு இடமும் ஒதுக்கி மிகப் பெரிய முஸ்தீபுகளோடு தான் நடைப் பெற்றது. 20-ஆம் நூற்றாண்டில் நாகர்களை மையப்படுத்தியே கும்ப மேளா உருப்பெற்றது. அதனாலேயே மேளா என்றாலே நிர்வாண சாதுக்கள், அவர்களின் வித்தியாசமான பழக்க வழக்கங்கள் முன்னிலைப்படுத்துவது என்று பொதுச் சித்திரம் விளைந்தது. மேற்சொன்னத் தகவல்கள் வில்லியம் பின்ச் எழுதிய "Warrior Ascetics and Indian Empires" நூலில் இருந்து. 

2013 கும்ப மேளாவில் அலகாபாத் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் பலி. இவ்வருடம் பிப்ரவரி 5-ஆம் தேதி நெரிசலில் காயமுற்றவர்கள் ஒரு டஜனுக்கும் மேல் என்கிறது இந்துஸ்தான் டைம்ஸ். இவ்வருடம் ஜனவரி 14 அன்று ஒரு சிறிய தீவிபத்தும் ஏற்பட்டிருக்கிறது. 10 கோடி பேருக்கு மேல் கூடும் ஒரு விழாவில் இது ஒன்றுமில்லாத விஷயம் தான் ஆனால் இச்சம்பவங்கள் பெரும் உயிர் சேதமாக உருவெடுக்காதது அதிர்ஷ்டம் மற்றும் அரசாங்கத்தின் சீரிய ஏற்பாடுகள் காரணம். 

கும்ப மேளா என்பது இந்துப் பண்டிகை. அப்படிச் சொன்னால் ஜெயமோகன் கோபித்துக் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். ஆயிரம் வருடத்துக்கு மேலாக இருக்கும் இஸ்லாமியரின் பண்டிகையை இஸ்லாமியப் பண்டிகை என்று தானே குறிப்பிடுகிறோம். எந்த அரசாங்கமும் பொது மக்கள் கூடும் எந்த விழாவுக்கும் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கும்ப மேளாவுக்கான செலவு ரூபாய் 4,300 கோடி. இது ஒரு மதத்தின் ஒரு விழாவுக்கான செலவு அதுவும் எல்லா இந்துக்களும் பங்கேற்காதப் பண்டிகைக்கு. ஹஜ் பயணத்துக்குச் செலவு செய்வதை வயிற்றெரிச்சலோடு பார்த்தவர்களுக்காக இதை அழுத்திச் சொல்கிறேன். உங்களுக்கான புனிதத் தலங்கள் இந்தியாவில் இருக்கின்றன மற்றவர்களுக்கு வேறு இடங்களில் அதற்கு அரசாங்கம் உதவியளித்தது போல் அளித்தது ஆனால் உண்மையில் அது அரசாங்க விமான நிறுவனத்துக்குத் தான் உதவியாக முடிந்தது. ஹஜ் மாணியம் ஏர் இந்தியாவுக்குத் தான் அதிகம் உதவியது. அதுவும் இப்போது நின்று விட்டது. 

NDTV தொகுப்பாளினிகள் மீது ஜெயமோகனுக்கு என்ன கோபமோ போட்டுத் தாளித்து விட்டார். கமல ஹாசனை மாதிரியே அத்தொகுப்பாளினிகள் ஆங்கிலத்தை மேலை நாட்டு உச்சரிப்போடு பேசுகிறார்கள் அவ்வளவு தான். இணையத்தின் தயவில் NDTV கும்ப மேளா பற்றி வெளியிட்ட காணொளி ஒன்றைப் பார்த்தேன். அது குறிப்பாக இந்தக் கும்ப மேளாவில் சுத்தம் பற்றியது. மிகவும் சிலாகித்திருந்தார்கள். வந்திருந்தோரும் சிலாகித்திருந்தார்கள். நல்ல டாகுமெண்டரி தான். மகிழ்ச்சித் தரும் இன்னொரு முக்கிய அம்சம் விழாவுக்கு வரும் சிறுவர்கள் காணாமல் போனால் அடையாளம் காணும் விதமாக 'RAdio Frequency Chip' கொடுக்கப்பட்டதாம் (https://www.telegraphindia.com/india/radio-frequency-identification-tags-for-children-under-14-at-kumbh-mela/cid/1681748) அரசாங்கம் மெனக்கெட்டிருக்கிறது. வாழ்த்துகள். NDTV காணொளி கீழே:இந்தக் கும்ப மேளாவின் ஏற்பாடுகளில் அரசியல் இல்லாமல் இல்லை எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் வரும் பெரும் இந்து திருவிழா. வரிந்துக் கட்டிக் கொண்டு அரசாங்கம் வேலைச் செய்திருக்கிறது. தன்னைக் காண வரும் தலித்துகளைச் சோப்புப் போட்டுக் குளித்து விட்டு வரச் சொன்ன யோகி ஆதித்தியாநாத் புனித நீராடியிருக்கிறார். சோப்புப் போட்டுக் கொண்டாரா என எனக்குத் தெரியாது. 

கும்ப மேளா பற்றி இணையத்தில் தேடினால் கிடைத்த பல கட்டுரைகளும் இவ்விழாவின் பிரம்மாண்டம், ஆச்சர்யங்கள் பற்றியதே. இந்தியா டுடே அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது (காண்க https://www.indiatoday.in/india/photo/kumbh-mela-2019-images-portraying-essence-largest-gathering-world-1433501-2019-01-18/2). ஒரு சுற்றுலா தளம் 5 நட்சத்திர ஏற்பாடுகளைச் செய்து தருகிறது. ரூபாய் 40,000 முதல் 1 லட்ச ரூபாய் வரை வாடகை குடில்கள் இருக்கின்றன.

செம்மொழி மாநாட்டுக்குப் போய் வந்த அதி தீவிர திமுக ஆதரவாளர் ஒருவர் இன்றும் அந்த ஏற்பாடுகள் பற்றி சிலாகித்துப் பேசுவார். அரசாங்கங்கள் நினைத்தால் எதையும் ஒழுங்காக ஒருங்கிணைக்கலாம் என்பது தெளிவாகிறது.

எனக்கு கூட்டமான எந்த நிகழ்வுமே ஒவ்வாமை தான். அது விளையாட்டாக இருந்தாலும் சரி இல்லை வேறு எந்த விழாவாக இருந்தாலும் சரி. ஜெயமோகனின் பதிவொன்றில் ஏதோ ஓரிடத்தில் அவரோ வேறு யாரோ ஒரு பலகையாலானப் பாதையில் அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்த்தப் போது தோன்றியது, "நம்மால் இதெல்லாம் முடியாது". 


1. https://en.wikipedia.org/wiki/2013_Kumbh_Mela_stampede
2. https://www.thehindu.com/news/national/at-rs-4200-crore-this-years-kumbh-mela-costliest-ever/article26000869.ece
3. https://www.huffingtonpost.in/entry/at-kumbh-mela-religious-leaders-are-drumming-up-support-for-modi-and-yogi_in_5c5d200ae4b0a502ca34241d
4. https://www.hindustantimes.com/india-news/over-a-dozen-injured-in-stampede-in-kumbh-mela-area/story-HP5tojhTjxEDu5ZlNUSJ3L.html
5. https://jeyamohan.in/118129#.XGTFfq3MxBw
6. https://en.wikipedia.org/wiki/1954_Kumbh_Mela_stampede
7. https://www.coxandkings.com/promotion/allahabad-kumbh-mela-2019/index.shtml?track=kumbhmela