Sunday, February 19, 2023

காந்தியின் தீண்டாமைக்கு எதிரான யாத்திரையில் ஒடுக்கப்பட்டோரின் குரல்

(இக்கட்டுரை 'காலச்சுவடு' ஜனவரி 2023 இதழில் 'தீண்டாமை யாத்திரையில் ஒடுக்கப்பட்டோர் குரல்' என்ற தலைப்பில் வெளியானது. இத்தளத்தில் அக்கட்டுரையின் தலைப்பில் மட்டும் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேறு மாற்றங்கள் இல்லை. -- அரவிந்தன் கண்ணையன்) 

தீண்டாமைக்கு எதிரான காந்தியின் பயணம் ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் நடைபெற்றது. காந்தி இந்தியாவில் பலமுறை பல்வேறு செய்திகளைச் சுமந்து பயணம் செய்திருக்கிறார். எனினும், இடைவிடாத பயணம் என்றால் அது இந்தப் பயணம்தான்.

அத்தோடு அவர் இந்தப் பயணத்தில் சந்தித்த அனுபவங்கள் வேறு பயணத்தில் நிகழாதவை. நீங்கள் வானொலியில் குறிப்பிட்ட நிலையத்தின் அலைவரிசைத் தொடர்பைப் பெற முயலும்போது சில சமயம் பல்வேறு நிலையங்கள் ஒன்றோடு ஒன்று இடைவெட்டிப் பல்வேறு குரல்கள் கேட்கும் நிலையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதுதான் இந்தப் பயணத்தில் காந்தியின் அனுபவம்.
ஒருபுறம் இந்து மகாசபாவின் குரல்; மற்றொரு புறம் சனாதனிகளின் வலிமையான எதிர்ப்புக் குரல்; இன்னொரு புறம் காந்தியின் தரப்பை மறுத்த அந்தந்தப் பிரதேச எதிர்ப்பாளர்களின் குரல்; ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குள்ளாகவே காந்தியின் தலையீட்டை மறுதலித்த குரல்; காந்தியின் செயல்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தியவர்களின் குரல்; விடுதலை நோக்கிய பயணத்தில் இப்போது ஏன் இந்த வேண்டாத வேலை என காங்கிரஸின் தரப்பிலேயே எழுந்த முணுமுணுப்புக் குரல்; அனைவருக்கும் பொதுவான தேசியத் தலைவர் ஒரு தரப்பு மக்களுக்காக நடத்தும் இந்தப் பயணம் தேவையற்றது என்ற சிறுபான்மையினரின் குரல்; காந்தியின் செயல்பாடுகளை ஏளனத்தோடு மட்டுமே பார்க்கக்கூடிய பத்திரிகைகளின் குரல்; ஒடுக்கப்பட்டவர்கள் உடலுழைப்பு சார்ந்த தொழிலாளிகளாய் இருந்ததால் அவர்களைப் பிரதிநித்துவப்படுத்த எங்களுக்கே உரிமையுண்டு என்ற கம்யூனிஸ்டுகளின் குரல் எனப் பல்வேறு குரல்கள் ஏக காலத்தில் இந்திய மண்ணில் எதிரொலித்தன.

எதிர்ப்புக் குரல்களையெல்லாம் மீறி காந்தியின் பின்னால் திரண்ட கோடிக்கணக்கான எளிய மக்களின் நம்பிக்கைக் குரலும் இவற்றினூடே எதிரொலித்ததை நாம் மறந்துவிடுவதற்கில்லை. அதில் ஒடுக்கப்பட்டோரின் குரலும் கலந்திருந்தது. அவர்கள் காந்தியை நம்பிக்கையோடு வரவேற்றார்கள். தங்களுக்கு வேண்டியது என்னென் வென்று எடுத்துரைத்தார்கள். காந்தியிடம் உரையாடுவது சாத்தியமாய் இருந்ததோடு வினா தொடுப்பதும் விமர்சிப்பதும் சாத்தியமாயிருந்ததால் வினா தொடுத்தார்கள், விமரிசிக்கவும் செய்தார்கள்.

தீண்டாமை குறித்த வலிமையான எதிர்ப்புக் குரலை காந்தி தென்னாப் பிரிக்காவிலேயே உருவாக்கிக் கொண்டார். அங்கு இந்தியக் கூலிகள் நடத்தப்பட்ட விதம் ஏறக்குறைய தீண்டாமைக்கு நிகரானதே. எனினும் இந்தியச் சமூகத்தில் நிலவிய தீண்டாமை எதிர்பார்க்கவியலாத பல்வேறு தன்மைகளை உள்ளடக்கியிருப்பதையும் காந்தி பின்னாட்களில் அறிந்துகொண்டார்.  தீண்டாமையைத் தம் மனதளவில் கொள்ளாமையில் தொடங்கி உண்மையில் அவர்களுக்கு வேண்டியதை உணரும் நெடிய பயணமாகவே அவரது சமூக வாழ்வு அமைந்தது எனலாம்.

பலரும் கலந்து வாழும் பொது அமைப்பு

காந்தி, தொடக்கக் காலகட்டத்திலேயே தீண்டாமை குறித்த தன் பார்வையைக் கூர்மையாக்கிக் கொண்டார். தொடர்ந்து அது குறித்துப் பேசியும் எழுதியும் செயல்பட்டும் வந்தாலும் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டுக்குப் பின் அமைப்பு ரீதியிலான முன்னெடுப்புகளைத் தீவிரப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது என அவர் உணர்ந்திருக்கலாம். பூனா ஒப்பந்தம் குறித்த இருவேறு நிலைப்பாடுகளும் அவரை உந்தித் தள்ளின. தீண்டாமைக்கு எதிரான கருத்து தன் சிறு வயதிலேயே உள்ளத்தில் படிந்துவிட்டதாக காந்தி ‘சத்திய சோதனை’யிலும் குறிப்பிட்டிருப்பார். தென்னாப்பிரிக்காவின் இருபத்தோரு வருட வாழ்வு அவரது வாழ்க்கை அமைப்பை முற்றிலும் மாற்றியிருந்தது. அங்கு நடத்தி அனுபவம் பெற்றிருந்த ஃபீனிக்ஸ், டால்ஸ்டாஸ் பண்ணை முறையிலான பல்வேறு வகைப்பட்ட மக்கள் கலந்து வாழும் ஆசிரம வகை முறையையே அவர் மனம் நாடியது. அதனாலேயே இந்தியா திரும்பி, ஒரு சுற்றுப் பயணம் முடிந்ததுமே அவர் அகமதாப் கோச்ரப் ஆசிரமத்தைத் தொடங்குகிறார்.

ஆசிரம விதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தன. அவை விரிவான சுற்றறிக்கையாகத் தேசம் முழுதும் அனுப்பப்பட்டன. அவ்விதிகளில் முக்கியமானதாக எவ்வகையிலும் தீண்டாமையை அனுசரிக்கலாகாது என்று இருந்தது. அவ்விதிகளில் மனப்பூர்வமான சம்மதமும் அதைக் கடைப்பிடிப்பதில் மனவுறுதியும் கொண்டவர்களை மட்டுமே காந்தி அனுமதித்தார். இது ஒரு பயிற்சிக் களம் மட்டுமே, இங்கு பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் பின்னாட்களில் இதுபோன்ற அமைப்புகளை நாடெங்கும் ஏற்படுத்துவார்கள்; அல்லது அப்படித் தொடங்குபவர்களுக்கு உதவுவார்கள்.

காந்தி, தீண்டாமைக்கு எதிரான தம் நிலைப்பாட்டை உறுதியோடு சுமந்தபடியே இந்தியா திரும்பினார். அவருடைய தொடக்கக்கால நடவடிக்கைகள் சிலவற்றைப் பார்த்தாலே நமக்கு அது  விளங்கிவிடும்.  1917இல் சம்பாரண் போராட்டத்தில் முழுமூச்சாக ஈடுபடும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலைப் பலமுறை செவிமடுத்து அதற்குத் தகுந்த வினையாற்றியிருக்கிறார். 1915 பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி பம்பாயில் ‘Depressed Class Mission School’ நிகழ்வில் குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். தான் இந்தியா திரும்பிய பின் நடத்தப்பட்ட பலநூறு நிகழ்வுகளைக் காட்டிலும் குழந்தைகளுடனான இந்நிகழ்வே தமக்குப் பெருமகிழ்வைத் தருவதாகவும், எந்தப் பணி இருப்பினும் இவர்களோடு கலந்துறைவதைத் தாம் தவறாமல் நடத்த முனையப்போவதாகவும் காந்தி பேசுகிறார் ( மகாத்மா காந்தி தொகுதி நூல்கள்: தொகுதி 13,பக் 17).

அடுத்து 1915, ஏப்ரல் 30ஆம் தேதி மதராஸ் வரும் காந்திக்குப் பல்வேறு தரப்பு வரவேற்புகளுக்கிடையே South Indian Depressed Class Society என்னும் அமைப்பும் வரவேற்புத் தருகிறது. அவர்களோடு உரையாற்றிய காந்தி நம் நாட்டின் முக்கியமான இந்தப் பிரச்சினை பெரும் கவனத்தைக் கோருவது என்றும் வெட்ககரமான இந்த வேறுபாடுகள் மறைந்து இம்மக்களும் சம அந்தஸ்து எட்டுவதற்கான நிலையை ஏற்படுத்தப் பெரும் உழைப்புத் தேவைப்படும் என்றும் கூறுகிறார் (காந்தி தொகுதி நூல்கள்: தொகுதி 13,பக் 68).

1915ஆம் ஆண்டின் காந்தி டைரிக் குறிப்புகளில் இதுகுறித்து அவர் அதிகம் சிந்தித்துக்கொண்டே இருந்தது தெரியவருகிறது. பிப்ரவரி மாத 15ஆம் தேதியிலான குறிப்பு Talk with Shinde about bhangis எனக் குறிப்பிடுகிறது. பிப்ரவரி 27ஆம் தேதிக் குறிப்பு Started Marathi. ‘Tried to think out a solution to the problem of bhangis’ என்கிறது. அதற்கு முன்னரே பிப்ரவரி 7 அன்று ‘went to see school for untouchables’ என்றும் பிப்ரவரி 5 அன்று ‘meeting with Patwari, discussions about caste restrictions’ என்றும் பதிவிட்டிருக்கிறார்.
இவை அவரின் எண்ணங்களாக மட்டுமே இருந்த நிலையில் உண்மையான சோதனை தக்கர் பாபாவின் மூலம் வந்தது. காந்தியின் தீண்டாமைக்கு எதிரான செயல்பாடுகளில் முக்கியமாகத் துணை நின்றவர் தக்கர் பாபா. சொல்லப்போனால் தக்கர் பாபாவின் எண்ணங்களுக்கு காந்தி செயல்வடிவம் தந்தார் என்று சொல்வதுகூடப் பொருந்தும். அந்த அளவு முழுமூச்சாக இதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் தக்கர் பாபா. மகாராஷ்டிரத்தில் Depressed Class Mission அமைப்பைத் தொடங்கித் தீண்டாமைக்கு எதிராக முக்கியப் பணியாற்றிய வித்தல் ராம்ஜி ஷிண்டேவையும் (1873-1944) காந்தியின் அரசியல் குருவான கோபாலகிருஷ்ண கோகலேவையும் தம் முன்னுதாரணங்களாகக் கொண்டவர் தக்கர். அவரின் ஆலோசனை அல்லது வேண்டுகோளின்படி தமது முதலாவது கோச்ரப் ஆசிரமத்தில் ‘dhed’ என்ற ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த தூதாபாய் என்பவர் குடும்பத்திற்கு காந்தி இடமளிக்கிறார். ஆசிரமத்தில் அது கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. கஸ்தூர் பாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். கஸ்தூர்பா இதற்கு ஒப்புக்கொள்ளாதபட்சத்தில் நண்பர்களாகப் பிரிந்துவிடுவோம் என்ற முடிவைக்கூட காந்தி எடுக்கிறார். தீண்டாமையை ஒப்புக்கொள்பவர் எவருக்கும் ஆசிரமத்தில் இடமில்லை என்ற இறுதி முடிவை எடுத்தார்.

1915, செப்டம்பர் 23இல் சீனிவாச சாஸ்திரிக்கு காந்தி எழுதிய கடிதத்தில்,

“The step is momentous because it so lines with the suppressed class mission that I might have no distant time to carry out the idea of shifting to some dhed quarters and sharing their life with dheds” (நான் எடுத்து வைத்திருக்கும் இந்த அடி முக்கியமானதொன்று. ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான திட்டத்தோடு பெருமளவு ஒத்துப்போவது. மிக விரைவாகவே நான் தேட் சமூக மக்களோடு அவர்கள் குடியிருப்பையே பகிர்ந்துகொள்ளும் காலமும் வரலாம்) என எழுதுகிறார். 1916இல் அகமதாபாதில் ஜூன் ஐந்தாம் தேதி, சாதி அமைப்பு குறித்து உரையாற்றும்போது, “தீண்டத்தகாதவர்கள் எனக் கூறப்படுபவர்கள் அறுபது மில்லியனுக்கும் அதிகமாக நம் நாட்டில் உள்ளனர். அவர்களது நிலையை மேம்படுத்த வேண்டியது மிக அவசியம். தென்னாப்பிரிக்காவில் என்னைப் பார்த்து, உங்கள் நாட்டில் தீண்டாமை எனும் பழக்கம் மூலம் பெருமளவிலான மக்களை ஒதுக்கிவைக்கும்போது இங்கு வந்து ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகிறீர்களே என்ற கேள்வியை முன்வைத்தார்கள். நியாயமான கேள்விதானே” என்கிறார்.

1916இல் ஏப்ரல் 30ஆம் தேதி பெல்காமில் கோடிபிஸ் வாடா எனுமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் காந்தி The Depressed Classes என்ற தலைப்பில் உரையாற்றினார். லிங்காயத்துகளும் ஒடுக்கப்பட்டவர்களுமே அதிகமாக அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  பிறப்பினால் உயர்வு தாழ்வு என்ற கருத்தைத் தான் ஆணித்தரமாக மறுப்பதாக காந்தி பேசினார். முன்னதாக, காந்தி இந்தக் கூட்டத்திற்கு வர மாட்டார் என வதந்தி எழுந்தபோது, கங்காதர்ராவ் தேஷ்பாண்டே (கர்நாடகத்தின் சிங்கம் என அறியப்பட்டவர்) காந்திக்கு அதுகுறித்துக் கடிதம் எழுதுகிறார். தன் இறப்பைத் தவிர வேறு எந்தக் காரணமும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிடாமல் தன்னைத் தடுக்க முடியாது என காந்தி பதில் அனுப்புகிறார்.

காந்தி இந்த வகையில் அம்மக்களுடனான உரையாடலில் தொடர்நது பங்கேற்றதற்கு ஏராளமான உதாரணங்களைத் தர முடியும்.

1929இல் தக்கர் பாபா ஒடுக்கப்பட்டவர்கள் குறித்த பொருளடைவு ஒன்றை உருவாக்குகிறார். இந்தியாவில் நிலவும் வகைமாதிரியான தீண்டாமையை அது எதிரொலிக்கிறது. அதை நவஜீவன் பத்திரிகையில் வெளியிட்டு ‘நமது அவமானம்’ என்ற பெயரில் காந்தி விரிவான கட்டுரையையும் எழுதுகிறார் (CWMG தொகுதி 40 பக் 341). அதில் பிர்லா வழங்கும் நிதியினை ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்துக்குச் சரிவரப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு மக்கள் தாராளமாக இதற்கு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறார். கூடவே, தக்கர் பாபாவிடம் இந்தப் பட்டியலில் அந்தந்தப் பிரதேசங்களில் அம்மக்களுக்காக உழைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் முக்கியமானவர்கள் குறித்தும் குறிப்புகள் இணைக்கும்படி கோருகிறார்.


பின்னாட்களில்,1932இல் ‘ஹரிஜன் சேவக் சங்’ அமைப்பை ஏற்படுத்த இந்தத் தகவல் சேகரிப்பு உந்துதலாக இருந்திருக்கும். (முதலில் இதற்கு ‘All India Anti

Untouchability league’ என்று பெயர் இருந்தது.) 1932இல் எரவாடா சிறையில் காந்தி, மகாதேவ் தேசாயின் ஒரு கேள்விக்கு, “ஒடுக்கப்பட்டவர்களைக் கை தூக்கிவிட நாம் யார்? அவர்களுக்கான விடுதலையையும் மேம்பாட்டையும் அவர்களே முயன்று பெறுவார்கள். நாம் அவர்களுக்கு இழைத்த அநீதிக்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டியதே நம் கடன்” என்கிறார். இதே எண்ணம்தான் அவருடைய ஹரிஜன் யாத்திரையிலும் மேலோங்கியிருந்தது.

1934ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தன் யாத்திரையை முடித்துக்கொண்டு வார்தா திரும்பும்முன் செய்தியாளர்களிடம் பேசுகிறார். அதில் ஒரு கேள்விக்கு,  ஒடுக்கப்பட்டவர்களிடையே  குறிப்பிடத்தக்க  அளவு  விழிப்புணர்வைத் தான் கண்ணுற்றதாகவும் பல இடங்களில் அவர்கள் பேசியவையும் அவர்கள் முன்வைத்த வினாக்களும் இதை உறுதிப்படுத்துவதாகவும் கூறிய காந்தி, தீண்டாமை முடிவுக்கு வரும் நாள் வெகுதூரத்தில் இல்லையென்றே அவர்களுடன் இணைந்து தாமும் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

ஒடுக்கப்பட்டோர் காந்தியிடம் எழுப்பிய கேள்விகள்

தீண்டாமை யாத்திரை முழுக்கவே உரத்து ஒலித்த அவர்களது குரலைக் கேட்க முடிகிறது. அவை யாவும் காந்தி தொகுப்பு நூலிலும் ஹரிஜன் பத்திரிகையிலும் முழுக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹரிஜன் பத்திரிகை ஏப்ரல் 20,1934 இதழில் ஒடுக்கப்பட்டவர் ஒருவர் காந்திக்கு எழுதிய கடிதம் பிரசுரமாகியுள்ளது. அதில் இடம் பெறும் கேள்விகள்:

1. மகாத்மாஜி, உங்களுக்கு எங்கள் பிரச்சினைகளில் ஏன் இவ்வளவு ஈடுபாடு?

2. தீண்டாமையை ஒழித்துவிட்டால் எங்கள் மக்கள் பெறும் நன்மை என்ன?

3. இந்துக் கோயில்களுக்கு நாங்கள் ஏன் போக வேண்டும்?

4. இந்துக் கடவுளர்களின் அவதாரங்களும் எங்களை ஒடுக்கத்தானே செய்கின்றன?

5. ஆரியர், ஆரியர் அல்லாதவர்கள் என்ற பிரிவுகள் இருப்பதுபோல நாங்கள் தனித்திருந்தால் என்ன?

6. தீண்டத்தகாதவர்களுக்கு உள்ளேயே பலப் பல சாதிப் பிரிவுகள் உள்ளன. அதுகுறித்து நீங்கள் செய்யப்போவது என்ன?

7. சுயராஜ்யம் வந்துவிட்டால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்று முன்பு கூறினீர்கள். இதோ, இந்த இயக்கம் அதை நோக்கியதுதானா?

8. எல்லா மதங்களும் உங்கள் பார்வையில் ஒன்றே எனும்போது, கிறித்துவர்கள் தீண்டாமைக்கு எதிராகப் போர்புரியக் கூடாதா?

9. கோடிக்கணக்கான தீண்டத்தகாதவர்களுக்கு எல்லா இந்துக்களோடும் சம உரிமை வழங்குவீர்களா?

10. கோயில் நுழைவு, தீண்டாமை ஒழிப்பைவிட எங்கள் வாழ்வாதாரத்துக்கு ஏதேனும் செய்யலாமே?

இவை கடிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள். காந்தி இவற்றுக்குப் பதில் அளித்திருக்கிறார். இதே போன்ற கேள்விகளே பல இடங்களிலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டன. பல இடங்களிலும் கேட்கப்பட்ட இன்னொரு முக்கியமான வினாவிற்கும் காந்தி தொடர்ந்து பதிலளித்துவந்தார்; ஹரிஜன் இதழிலும் அது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹரிஜன் சேவக் சங்கில் ஹரிஜனங்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பது ஏன் கூடாது என்பது அவ்வினா. இச்சங்கம் கடன்பட்டோர் சங்கம். அவர்கள் இதுகாறும் பட்ட கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியவர்கள். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று உண்டு. ஒரு சிறு கமிட்டி அமைத்து ஹரிஜன் சேவக் சங் செய்யும் செயல்களைச் சீர்தூக்கி மதிப்பிடுங்கள். உங்கள் தேவைகளைச் சொல்லுங்கள் என காந்தி பதில் தருகிறார்.

அதற்கு மேலும் விளக்கம் கோரும் விதமாக ஹரிஜன் பத்திரிகையாளர் ஒருவர் காந்திக்குக் கடிதம் எழுதி வினவுகிறார். “நீங்கள் அமைக்கச் சொல்லும் மதிப்பீட்டுக் கமிட்டியின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? அதன் பணிகள், உறுப்பினர் எண்ணிக்கை போன்ற தெளிவான வரையறைகளையும் நீங்கள் கூறினால் நலம். இதுபோன்ற கமிட்டிகள் அவசியம் என்றே நானும் உணர்கிறேன். எனவே தெளிவானதொரு பார்வையைத் தாருங்கள்” என அப்பத்திரிகையாளர் கேட்கிறார்.

காந்தி தீண்டாமை யாத்திரையின் பகுதியாக 1933 டிசம்பர் 10ஆம் தேதி டில்லி வந்தடைந்தார். அங்கு, சிரத்தானந்தா குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்டவர்களிடையே காந்தி நிகழ்த்திய உரை முக்கியமானது. அம்மக்கள் காந்திக்கு அளித்த வரவேற்புரையில், தங்களுக்கென்று தனியான கிணறுகள், பள்ளிகள், கோவில்கள் திறக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தனர். அதை ஒட்டியே காந்தி தமது உரையை அமைத்துக் கொண்டார்.

“உங்களுக்கெனத் தனியான பள்ளிகள், கிணறுகள், கோவில்கள் அமைப்பது என் நோக்கமல்ல. பொதுச் சமூகத்தோடு நீங்கள் இணைந்திருக்க வேண்டுவதே என் ஆவல். ஆனால் சாதி இந்துக்கள் உங்களைக் கிணறுகளின் பக்கம்கூட வரவிடாமல் நடத்துவதைக் கண்டும் காணாமலும் போவது எனக்குச் சாத்தியமில்லை. நகரங்களில் வாழ்ந்தால் ஒருவேளை பாகுபாடின்றிக் குடிநீர் கிடைக்கும். ஆனால் இத்தகைய குடியிருப்புகளில் உங்களுக்கு நீர் அருந்த ஒரு கலங்கிய குட்டைகூட இல்லாமல் இருப்பதுதான் கிணறுகள் ஏற்படுத்துவதன் காரணம். இதே காரணம்தான் பள்ளிகளைத் திறப்பதற்கும். உங்கள் குழந்தைகள் மற்றக் குழந்தைகளோடு பொதுப் பள்ளியில் பயில வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன். அதற்கான பெருமுயற்சிகளில் இப்போதுதான் வெற்றி கிடைத்துவருகிறது. அதுவரை உங்கள் குழந்தைகள் பயிலப் பள்ளிகள் திறக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால், அதில் எவரும் சேர்ந்து பயிலலாம் என்பதே விதி” என காந்தி விடையளித்தார்.

அன்று மாலையில் காந்தியைச் சந்தித்த ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்நதவர்களின் குழு பின்வரும் கேள்விகளைக் காந்தியிடம் முன்வைத்தது.

1. கோவிலில் நுழைவது எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழி என்று நம்புகிறீர்களா?

2. எங்களுடைய பொருளாதார நிலை உயர உதவமாட்டீர்களா? அதுதானே இப்போது முக்கியம்.

3. நீங்கள் திரட்டும் நிதியை எங்களிடம் வழங்கலாமே, உங்கள் ஊழியர்களிடம் எங்களுக்கு நம்பிக்கையில்லை.

4. எங்களுக்கு இருக்கும் பிற பெயர்களோடு நீங்கள் ஹரிஜன் என்ற பெயரையும் சேர்த்திருக்கிறீர்கள். இதுவும் எங்களைப் பிரித்தே காட்டுகிறது. பெயரளவிலேயே பிரித்தால் மனத்தில் ஒற்றுமை வருவது எங்ஙனம்?

இந்தக் கேள்விகள் தில்லியில் மட்டுமல்ல, நாடு முழுக்கக் கேட்கப்பட்டன.

அடுத்து டிசம்பர் 22ஆம் தேதி மாலை நாகேஸ்வர்ராவ் பந்துலுவின்  ஸ்ரீ்ரீபாக் இல்லத்தில் தங்கியிருந்த காந்தியை, Madras Depressed Class Federation அமைப்புக் குழுவினர் சந்தித்தனர். ராவ் பகதூர் ஆர். சீனிவாசன், வி. தர்மலிங்கம் பிள்ளை, சுவாமி சகஜானந்தர், பி.வி. ராஜகோபால பிள்ளை, வி.கே. புஷ்பராஜ் (வழக்கறிஞரான இவர் எழுதிய சிறு புத்தகம் ஒன்றை ஹரிஜன் இரண்டாம் தொகுதி குறிப்பிடுகிறது. As an untouchable feels untouchability -P.K.Pushparaj ‘A clear exposition of the harijan’s view on

untouchability and his attitude towards the present movement for the eradication of untouchability’ price- 1 Ana) இரட்டைமலை சீனிவாசன் முன்வைத்த கோரிக்கைகளின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

தாழ்த்தப்பட்ட சமூகத்தார் தங்களுக்கு வேண்டிய வேட்பாளர்களைத் தங்கள் சமூகத்திலேயே தேர்ந் தெடுக்கும் காலங்களில் சாதி இந்துக்களால் நடைபெறும் முட்டுக்கட்டைகளைத் தடுத்து உதவிட சேவக் சங் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் பூனா ஒப்பந்தம் வியர்த்த நிலைக்கே தள்ளப்பட்டுத் தோல்வியைச் சந்திக்கும்.

சென்னை அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் தீண்டாமைக்கு எதிரான சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் சேவக் சங் பெரும் உதவி புரிய வேண்டும். அரசு நீதியைச் செலுத்துவதில் அதிகாரிகளுக்கு உதவியாக இருப்பதோடு இடையூறு செய்யும் சாதி இந்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துத் தண்டனை வாங்கித் தரவும் சங்கம் உதவியாக இருக்க வேண்டும்.

அரசாங்கம் முன்வந்து செய்யும் உதவிகளில் தலையிட்டு இடையூறு செய்யக் கூடாது.

நீங்கள் இப்போது செய்துவரும் கிளர்ச்சியினால், தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு நேர்ந்தது போன்ற வாய்ப்புகள் கிட்டாத அபாயம் நேருமோ என நாங்கள் ஐயுறுகிறோம்.

கோயில்கள் திறக்கப்பட்டாலும் எங்களுக்கு உசிதமான நேரத்தில் நாங்கள் அதைப் பயனபடுத்திக்கொள்வோம்.

கள்குடிக் கேடு குறித்து எங்களிடம் மாத்திரம் உபதேசிப்பது பொருத்தமாயில்லை. சாதி இந்துக்கள் உட்படப் பல சமூகத்திலும் இப்பழக்கம் இருக்கிறது.

ஹரிஜன் என்ற பெயரில் எங்களுக்கு உவப்பில்லை.

எங்களைச் சார்ந்தமட்டில் ராஜீய விஷயமாய் எது உசிதமானதென்று நிர்ணயிக்க எங்களுக்கே உரிமை இருக்க வேண்டும்.

கல்வி உதவியைப் பொறுத்தவரை, கிறுத்துவர்கள் அமைத்திருக்கும் கல்வி நிலையங்களைப்போல உம்முடைய சங்கம் லேபர் துறையோடும் கல்வி இலாக்காவோடும் ஒத்துழைத்து உயர்தர ஆரம்பக் கலாசாலைகளையாவது நடத்த வேண்டும்.

1934 ஜனவரி மாதம் காந்தி தன் பயணத்தின் அடுத்த கட்டமாகத் தமிழகம் வந்தார். 22ஆம் தேதி சுயமரியாதைக் கட்சியினர் காந்தியைச் சந்தித்துப் பல வினாக்களைத் தொடுத்தனர்.

1. ஒடுக்கப்பட்டவர்களுக்கு இந்த இயக்கம் மூலமாக என்ன செய்கிறீர்கள்?

2.கிறுத்துவத்திலும் இஸ்லாத்திலும்கூட ஒடுக்கப்பட்ட வர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கான உங்கள் செயல்திட்டம் என்ன?

3. தென்னிந்தியாவில் நிலையான வேலை நேரம், உழைப்புக்கேற்ற கூலி இல்லை. கோவில் நுழைவை விடுத்து இதை ஏன் நீங்கள் பேசக் கூடாது?

4. நீங்கள் எங்களைவிட அனுபவம் மிக்கவர் என்பதை மறுக்கவில்லை. ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் சோறும் சம அந்தஸ்தும் கேட்கிறார்கள். நீங்கள் கோவில் நுழைவை முன்வைக்கிறீர்கள்.

5. ஹரிஜன் என்ற பெயரைக் கொடுத்து எங்களைத் தனியாக்கி விட்டீர்கள். இதன்மூலம் சுலபமாகப் பாதிக்கப்படக்கூடிய ஒரு குழுவாக எங்களை மாற்றிவிட்டதை உணர்கிறீர்களா?

இப்படியாகத் தொடர் கேள்விகள்.

1934, பிப்ரவரி ஒன்றாம் தேதி காந்தி குன்னூரில் இருந்தார். அங்கு ஆதி திராவிட ஜன் சபையின் அங்கத்தினர்கள் பன்னிரண்டு பேர் ஆர்.டி. கேசவலு, மாணிக்கம் தலைமையில் காந்தியைச் சந்தித்துத் தம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

1. குன்னூரில் தோல் பதனிடும் தொழிற்சாலையை உருவாக்கினால் பலரும் பயன் பெறுவார்கள்.

2. ஒடுக்கப்பட்டோரின் நிலை குறித்து விரிவாகப் பேச பத்திரிகை ஒன்றை நடத்த வேண்டும். அதற்கு நீங்கள் நிதி உதவி அளிக்க வேண்டும்.

3. இதுவரை இந்தப் பயணம் சார்ந்து சாதி இந்துக்களிடையே மன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா? ஆனால் நீங்கள் அவ்வளவு சொல்லியும் நாட்டார் தரப்பு மறுத்துவிட்டதே?

4. நாங்கள் முதலிலிருந்தே ‘joint electorate with

reservation of seats’ முறையை ஒப்புக்கொண்டு

பணியாற்றத் தயாராயிருக்கிறோம். உங்கள் கைகளில் எங்கள் எதிர்காலம் பத்திரமாயிருக்கும் என்ற

நம்பிக்கை உண்டு. ஆயினும் உங்களிடமிருந்து உத்தரவாதம் வேண்டும்.

5. எரவாடா ஒப்பந்தத்தில் கூறியபடி மதராஸ் லெஜிஸ்லேட்டில் எங்களுக்கு முப்பது இடங்கள் உறுதியானதுதானே?

இப்படிப் பல கோரிக்கைகளையும் ஐயங்களையும் காந்தியிடம் அவர்கள் உரைத்தார்கள்.

குன்னூரில் காந்தி தங்கியிருந்தபோது தமிழ் பேசும் பகுதிகளில் இருந்த ஆதிஇந்துக்கள் சேர்ந்து தம் குறைகளை விளக்கிக் கூறும் மனுவை காந்தியிடம் வழங்கினார்கள். Our Shame என்ற தலைப்பில் காந்தி இதை ஹரிஜன் இதழில் வெளியிட்டார்.

1. உணவகங்கள், லாண்டரி, சலூன், காபி, டீ கடைகள், மண்டபங்கள், பள்ளிகள், அக்ரஹாரங்கள், குளங்கள், கிணறுகள், குடிநீர்க் குழாய்கள், கிராமத்தில் உள்ளஅஞ்சலகங்கள் மற்ற பொது இடங்கள் - கோயில் குறித்துச் சொல்லவே வேண்டாம் - எங்கும் எங்களுக்கு அனுமதியில்லை.

2. பொது இடங்களில் குடை பிடித்தல், செருப்பு அணிதல், முட்டிக்குக் கீழே வேட்டி அணிதல் ஆகியவை பெருங்குற்றமாகப் பார்க்கப்படுகின்றன. எங்கள் பெண்கள் தங்க நகை அணிவதையும் சுத்தமான துணி உடுத்துவதையும் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

3. சடலங்களைப் பொதுவழியாக எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. பொதுச் சாலை வழியாகச் செல்லலாம் என்றாலும் ஏதேனும் கோயிலைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கின்றனர்.

4. எங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும்போதுகூடக் குதிரைகளில் செல்ல அனுமதி இல்லை.

5. கிராமத்துச் சந்தைகளில் வெளுத்த துணிகளை வாங்க விரும்பிக் கைகளால் தொட்டுவிடக் கூடாது.

6. சந்தைகளில் உணவுப் பொருட்களை வாங்கும் விருப்பத்துடன் தொட்டுவிட்டால் தீட்டுப் பட்டுவிட்டது எனக் கூறி மொத்தப் பொருளுக்கான விலையையும் வாங்கிக்கொண்டுதான் நகரவே விடுகிறார்கள்.

7. குடியிருப்புகள் என்று தனியாக எங்களுக்கு எதுவும் இல்லாததால் நிலத்தின் சொந்தக்காரர்கள் ஒதுக்கும் இடங்களில்தான் வசிக்க வேண்டியிருக்கிறது. வேலை நேரத்திற்குக் கணக்கில்லை. கூலி சற்று உயர்த்திக் கேட்டாலும் மறுமொழி இல்லை. மிகக் குறைந்த அளவு ஊதியமாகத் தானியமே வழங்கப்படுகிறது.

8. இசைக்கருவிகள் வாசிப்பவர்கள் திருமணத்திற்கு

அல்லது எங்கள் கடவுளர் ஊர்வலங்களுக்கு வரமறுக்கிறார்கள். எங்களில் எவருக்கும் அக்கலை தெரியாது.

9. மிக ஒதுக்குப்புறமான இடங்களில் வசிக்கும் நாங்கள் சைக்கிள் பயன்படுத்த அனுமதி இல்லை. குதிரை வண்டிகள், பேருந்துகளில் எங்களுக்கு அனுமதி இல்லை.

10. பொது நிதியிலிருந்து கட்டப்பட்ட பொதுக் கழிப்பறைகளில் எங்களுக்கு அனுமதி இல்லை. தொடர்ந்து கேட்டதன் மூலம் தற்போது தனியான கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

11. உள்ளூர் நிர்வாகங்களின் சிகிச்சை மையங்களில் எங்களைத் தொட்டு வைத்தியம் பார்க்க மறுக்கின்றனர்.

12. கடுமையான கோடைக் காலங்களில் தண்ணீர்ப் பந்தல்களில் நீர் தர மறுக்கின்றனர். அப்படியே கொடுத்தாலும் மிக அவமானகரமான நிலையிலேயே அதைப் பெற வேண்டியிருக்கிறது.

13. உள்ளூர் நிர்வாக அமைப்புகளில் நாங்கள் தேர்வானாலும் சாதி இந்துக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமாசெய்துவிடுகின்றனர்.

14. நாங்கள் எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாலும் ஒரு சாதி இந்து அந்த வழியைக் கடந்து போனால் எழுந்து நின்று தலைகுனிந்து மரியாதை செய்ய வேண்டும், தவறினால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

15. முனிசிபாலிட்டி பகுதிகளில் பொதுக் குடிநீர்க் குழாய்கள் வைக்கச் சாதி இந்துக்கள் தொடர்ந்து மறுக்கின்றனர்.

16. பொதுநிதியிலிருந்து கட்டப்பட்ட பள்ளிகளிலும் எங்கள் குழந்தைகளுக்கு இடமில்லை. அப்படியே சேர்ந்தாலும் தனியாகவே அமர வேண்டும். ஆசிரியரிடம் சந்தேகம் கேட்க நெருங்கக்கூட அனுமதியில்லை. பள்ளிக் கழிவறைகளைப் பயன்படுத்தக் கூடாது. சில பள்ளிகளில் எல்லாப் பருவங்களிலும் எங்கள் குழந்தைகள் ஜன்னலுக்கு அருகில் நின்றே பாடம் பயில அனுமதிக்கப்படுகின்றனர். எங்களுக்கான தொடக்கநிலைப் பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் அடுத்துத் தொடர்ந்து பயிலச் சிரமம் உள்ளது. நாங்களேகூட பஞ்சாயத்து உறுப்பினர் என்ற பெயரில் பள்ளிகளில் நுழைந்துவிட முடியாது.

பள்ளிகளில் எங்கள் குழந்தைகள் குடிநீர்ப் பானைகளையோ குழாய்களையோ தொட்டுவிடக் கூடாது. யாராவது சாதி இந்துக் குழந்தை வந்துதான் நீர்சேந்தித் தர வேண்டும். அதையும் கைகளில் பிடித்தே குடிக்க வேண்டும், டம்ளர் வைக்க அனுமதி இல்லை. உண்ணும்போதும் எங்கள் குழந்தைகள் தனியாகவே அமர வேண்டும்.

17. பொதுஇடங்களில் இருக்கும் அஞ்சலகங்களில் நாங்கள் நேரடியாகச் சென்று எதையும் வாங்கிவிட முடியாது. எங்களைக் கடந்து செல்லும் சாதி இந்துக்கள் எவரையாவது கெஞ்சிக் கூத்தாடித்தான் தள்ளி நின்று அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

18. உங்களைப் போன்ற ஒருவர் எங்கள் ஆதி இந்துப் பிரிவில் பிறக்கவில்லையே, பிறந்திருந்தால் எங்கள் துன்பங்கள் புரிந்திருக்குமே என்று நாங்கள் வருந்துகிறோம்.

காந்தியின் தொடர்ந்த பயணத்தில் ஸ்ரீரங்கத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களின் பிரதிநிகள் காந்தியை பிப்ரவரி பத்தாம் தேதி டாக்டர் தி.சே. சௌ. ராஜன் இல்லத்தில் சந்திக்கிறார்கள்.

ஹரிஜன் சேவக் சங்கத்தில் பணிபுரிவோர் 98% பிராமணர்களாகவே இருக்கிறார்களே? இதில் 50% ஊழியர்கள் ஏன் ஒடுக்கப்பட்ட பிரிவினராக இருக்கக் கூடாது? இந்த ஊழியர்கள் எங்களது நம்பிக்கையைப் பெற வேண்டும் அல்லவா எனப் பல வினாக்கள் தொடுக்கப்பட்டன. இந்த வினா தொடர்ந்து பல இடங்களிலும் எழுப்பப்பட்டதை நாம் நினைவுகூரலாம்.

அடுத்து அஸ்ஸாமில் 18.4.1934இல் ஜோர்கட் எனுமிடத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுப் பிரதிநிதிகள் காந்தியைச்

சந்தித்துப் பல வினாக்களைத் தொடுக்கின்றனர். இந்த இயக்கம் உண்மையாகவே எங்கள் பிரிவு மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் என நீங்கள் நம்புகிறீர்களா? கிலாபத் இயக்கத்திற்காகத் துணை நின்று பழிகொண்டதுபோல இதுவும் ஆகிவிடாதா?

இடையறாத உரையாடல்கள்

பம்பாயில் பயணம் மேற்கொண்டிருந்த காந்தியை டாக்டர் அம்பேத்கர், தம் குழுவினரான ஜி.வி. நாயக், அம்ரித் ராவ் காம்பே, பாபுராவ் கெய்க்வாட் ஆகியோருடன் சென்று சந்தித்து உரையாடினார். இது 1934 ஜூன் 15ஆம் தேதி. காந்தி அம்பேத்கரிடம் ஹரிஜன் சேவக் சங் அமைப்பின் பணிகளைச் சீர்தூக்கிப் பார்த்து விமர்சனங்களையும் அதை மேலும் சிறப்புறச் செயல்படுத்த ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அம்பேத்கர் சங், கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கு உதவுகிறது. இதை அரசாங்கமே பல இடங்களில் செய்வதால் இதுபோலச் செய்தல் ஆகிவிடுகிறது. அத்தோடு, தனிப்பட்ட ஒருவருக்கு உபகாரச் சம்பளம் கொடுத்து உதவினால்அந்தத் தனிப்பட்டவர் மீண்டும் சமூகத்துக்குப் பங்களிப்பாரா என்ற கேள்வி அந்தத் தனி நபரைப் பொறுத்தது. எனவே, சேவக் சங் கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் தடையின்றி நீர் பெறவும் பொதுப் பள்ளிகளில் சேர்ந்து பயிலவும் உதவுவதோடு கிராமங்களில் ஒடுக்கப்பட்டோர் மோசமாக நடத்தப்படுவதைத் தடுப்பதிலும் முக்கியப் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அடுத்து கராச்சியில் ஜூலை 10ஆம் தேதி ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் 140 பேர் காந்தியைச் சந்தித்தனர். Punjab Land Alienation Actஇன் காரணமாகத் தாங்கள் தம் நில உரிமைகளை இழந்துவருவது குறித்தும் தேர்தல்களில் தமக்கான இடப்பகிர்வு குறித்தும் அவர்கள் காந்தியோடு உரையாடினார்கள். ஜூலை 13முதல் 17வரை லாகூரில் தங்கியிருந்து பிரச்சாரம் செய்த காந்தியைச் சந்தித்தவர்களில் 13ஆம் தேதி சந்தித்த சர்வ தலித் சபா என்ற அமைப்பும் ஒன்று. தீண்டாமை ஒவ்வொரு பிரதேசத்திலும் பொதுவான சில ஒடுக்குமுறைகளையும் பிரத்யேக ஒடுக்குமுறைகளையும் கொண்டிருந்தது கண்கூடு.

ஜூலை 21ஆம் தேதி கல்கத்தாவிலிருந்து கான்பூருக்குக் கிளம்பிக்கொண்டிருந்த காந்தியைக் கல்கத்தாவின்

Depressed Class Association அமைப்புக் குழுவினர் சந்தித்தனர். பிற இடங்களில் எழுந்த வினாக்களே இங்கும் எழுந்தன.

ஆகஸ்டு 2ஆம் தேதி காந்தியின் தீண்டாமை யாத்திரை பனாரஸில் நிறைவுக்கு வந்தது. ஆனால் தொடர்ந்து

அவர் இப்பிரிவு மக்களிடையே உரையாடிக் கொண்டேதான் இருந்தார்.

இந்த நீண்ட ஒன்பது மாத யாத்திரையில் காந்தி தான் பயணித்த இடங்களில் அமைந்திருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகள் பெரும்பாலானவற்றிற்கு நேரில் சென்றார். அங்கும் வாய்மொழியாகப் பல்வேறு கோரிக்கைகளும் வினாக்களும் எழுந்தன. ஒவ்வொரு பகுதியிலும் வாசித்தளிக்கப்பட்ட வரவேற்புரைகளில் இப்பிரிவு மக்களின் வரவேற்புரைகளும் இருந்தன. அவையும் தொகுக்கப்பட்டிருந்தால் மிகச்சிறந்த ஆவணங்கள் கிடைத்திருக்கும்.

நீளம் கருதியே காந்தியின் பதில்கள் தரப்படவில்லை. இந்தக் கேள்விகள் இன்றளவும் கண்கூடாய் உயிர்ப்போடு இருப்பதால் கேள்விகளும் கோரிக்கைகளுமே முக்கிய மாகின்றன.

இப்பெரும் பிரயத்தனத்தைப் பிரமாண்டமான மரத்தின் சிறு இலை அசைவாகவே காந்தியும் பின்னாட்களில் உணர்ந்துகொண்டார். 1945, ஆகஸ்ட் 21 அன்று பி.எஸ். மூர்த்தி என்பவருடனான உரையாடலில், ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் கல்வியளிக்கலாம்; ஆனால் தீண்டாமைக்கெதிரான கல்வியை சவர்ண இந்துக்களின் மனத்தில் ஊட்டுவது கடினம் என்ற தம் வருத்தத்தைப் பதிவுசெய்துள்ளார்.

‘வென்றிலன் என்றபோதும்’ என்ற கம்பரின் வரிதான் நினைவில் எழுகிறது.

பயன்படுத்திய நூல்கள்.

மகாத்மா காந்தி தொகுப்பு நூல்கள் (ஆங்கிலம்) தொகுதி- 56, 57, 58, 81

ஹரிஜன் இதழ் (ஆங்கிலம்) தொகுதி ஒன்று, இரண்டு

ரெட்டமலை சீனிவாசன் எழுத்துகளும் ஆவணங்களும் தொகுதி -1, தொகுப்பும் பதிப்பும்: கௌதம் சன்னா.

சித்ரா பாலசுப்ரமணியன்: கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அகில இந்திய வானொலி, பொதிகை தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பகுதி நேரப் பணியாற்றிவருகிறார். காந்தியின் 150ஆவது பிறந்த நாளை ஒட்டிப் பல்வேறு ஆளுமைகளை நேர்காணல் செய்தவர். காந்தியின் தண்டி யாத்திரை குறித்த ‘மண்ணில் உப்பானவர்கள்’ என்ற நூலின் ஆசிரியர். காந்தியின் தீண்டாமை யாத்திரை குறித்த நூல் ஒன்று விரைவில் வரவிருக்கிறது.

        

(இக்கட்டுரை 'காலச்சுவடு' ஜனவரி 2023 இதழில் 'தீண்டாமை யாத்திரையில் ஒடுக்கப்பட்டோர் குரல்' என்ற தலைப்பில் வெளியானது. இத்தளத்தில் அக்கட்டுரையின் தலைப்பில் மட்டும் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேறு மாற்றங்கள் இல்லை. -- அரவிந்தன் கண்ணையன்)