Tuesday, September 12, 2023

அமெரிக்காவில் நரேந்திர மோடி: கட்டமைக்கப்பட்ட பிம்பங்களும் உண்மைகளும்

 அமெரிக்காவில் நரேந்திர மோடி: கட்டமைக்கப்பட்ட பிம்பங்களும் உண்மைகளும்


இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பிரயாணமாக அமெரிக்காவுக்கு ஜூன் 21-23 வருகை தந்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்திய பிரதமருக்கு கோலாகல வரவேற்பளித்தார். இந்திய-அமெரிக்க உறவில் இப்பிரயாணம் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு சிவப்புக் கம்பளம் விரித்தார் என்றால் மிகையில்லை. இத்தகைய வரவேற்பு அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே கணிசமாக இருக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல சராசரி இந்திய-அமெரிக்கர்களிடையேயும் மிகுந்த ஆச்சர்யமளித்தது உண்மை. இந்திய ஊடகங்கள் இந்த வரவேற்பை மோடியின் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் இருக்கும் மரியாதை என்றதோடு இவ்வரவேற்பு புதிய இந்தியாவை பறைசாற்றுவதாகவும் முந்தைய, குறிப்பாக காங்கிரஸ், பிரதமர்களால் சாதிக்க இயலாதது போன்ற பிம்பத்தை கட்டமைத்தன. மோடியின் அமெரிக்க வருகை உண்மையில் சாதித்ததென்ன ஊடக பிரச்சாரங்களில் என்னென்ன மிகைப்படுத்தல்கள் இருந்தன என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை இந்திய-அமெரிக்க உறவு


மிகச் சுருக்கமாக இந்திய-அமெரிக்க உறவையும் முந்தைய பிரதமர்களை அமெரிக்கா எதிர்கொண்ட விதங்களையும் நினைவு படுத்திக் கொள்வது மோடியின் இந்த வருகைப் பற்றிய பிம்பக் கட்டமைப்புகளைப் புரிந்து கொள்ள உதவும்


அக்டோபர் 11, 1949-இல் மூன்று வார அரசு முறை சுற்றுப் பயணமாக ஜவஹர்லால் நேரு அமெரிக்காவுக்கு அப்போதைய ஜனாதிபதி ஹரால்ட் டிரூமனின் அழைப்பின் பேரில் வந்தார். நேரு அமெரிக்கா வருவதற்கு ஒரு நாள் முன் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைநேருவின் வருகையின் முக்கியத்துவம் தலைநகர வரவேற்க தயாராவதில் தெரிகிறது: இந்திய பிரதமர் ஆசிய தலைவர்களுள் முக்கியமானவராகப் பார்க்கப்படுகிறார்என்று செய்தி கட்டுரை வெளியிட்டது. அக்கட்டுரையில் நேரு பற்றி, “மேற்குலகத் தலைவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பிரபலத்தை மக்களிடையே சம்பாதித்தவர் நேரு, சமீபத்திய வழக்கமான தயார் செய்யப்பட்ட உரைகளைப் பேசாது மிகத் திறம்படப் பேசக் கூடியவர் அவர், தீவிர கொள்கைகள் உடையவர், பண்பாட்டு புரிதல் உடையவர், வெளிப்படையாகப் பேசுபவர், நயமுடைவர்என்று சித்திரம் எழுதியது. அப்போது லண்டனில் இருந்து நேருவை அழைத்து வர டிரூமன் தன் பிரத்தியேக விமானத்தை அனுப்பியதோடு நேருவை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார் டிரூமன். 1949-இல் இந்தியா ஒரு குடியரசுக் கூடக் கிடையாது, மிக ஏழ்மையான நாடு, பிரிவினையால் மிகுந்த குருதி சிந்திய நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது யாரும் இந்தியாவில் நீங்கள் சிறுபான்மையினரை நல்லவிதமாக நடத்துவீர்களா என்று கேள்வி எழுப்பவில்லை ஏனென்றால் நேருவின் மீது உலகம் நம்பிக்கைக் கொண்டிருந்தது. நேரு சென்ற இடமெல்லாம் அமெரிக்காவில் அமெரிக்கர்கள் ஆயிரக் கணக்கில் குழுமினர், தெருவெங்கும் நேருவுக்கு வரவேற்பு கரை புரண்டோடியது, பெரும் விளையாட்டரங்கம் நிரம்பி வழிந்தது, அறிஞர்களை நேரு சந்தித்தார், நேருவை அறிஞர்களும் நாடினர், அமெரிக்கப் பத்திரிக்கைகளுக்கு நேரு பல பேட்டிகள் அளித்தார். அந்த முதல் வருகையின் போதே நேரு அமெரிக்கக் காங்கிரஸில் உரையாற்றினார்


நேருவின் அடுத்த அமெரிக்கப் பயணம் டிசம்பர் 16 1956-இல் ஐசன்ஹோவர் ஜனாதிபதியாக இருந்த போது நிகழ்ந்தது. ஐசன்ஹோவர் நேருவின் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தவர். நேருவின் 1949 வருகையின் போது ஐசன்ஹோவர் உலகப் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக் கழகத்தின் தலைவர். அப்போது நேருவை தன் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பிரதம உரையாற்ற அழைத்துக் கௌரவ முனைவர் பட்டமும் அளித்துச் சிறப்பித்தார். டிசம்பர் 16, 1956 வாஷிங்டன் டி.சி. வந்தடைந்த நேருவை கெட்டிஸ்பர்க் நகரிலுள்ள தன் பண்ணை விட்டுக்கு தன்னுடனே அழைத்துச் சென்றார் ஐசன்ஹோவர். ஐசன்ஹோவரின் பண்ணை விட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதல் வெளிநாட்டு பிரமுகர் நேரு. அந்தப் பயணத்திலும் பின்னர் வீட்டிலும் கிட்டத்தட்ட 14 மணி நேருவும் ஐசன்ஹோவரும் நேருவும் உரையாடினர். தங்கள் உரையாடலைப் பற்றி ஐசன்ஹோவர் 14 பக்கம் குறிப்புகள் எழுதினாராம். நேருவின் அமெரிக்க விஜயங்களிலேயே இந்த வருகை மிக மிகப் பலனளித்த ஒன்று. அமெரிக்கா இந்தியாவுக்கு அளித்த பொருளாதார உதவி இரண்டு மடங்கானது. இந்திய-அமெரிக்க உறவை மேலும் பலப்படுத்த இந்தியாவுக்கு ஐசன்ஹோவர் வந்தார், இந்தியா வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி அவர். இக்கட்டுரையில் இந்திய-அமெரிக்க உறவின் ஏற்றத் தாழ்வுகளையும், நம்பிக்கைகளையும் ஏமாற்றங்களையும் முழுதுமாகத் தொகுக்க இடமில்லை. நான் மேலே சொன்னது மிகுந்த ஏழ்மையான நாடாக இருப்பினும் நேரு என்ற தனி மனிதர் இந்தியாவுக்குச் சம்பாதித்துக் கொடுத்த கௌரவம் எப்படி இந்தியாவை உலக அரங்கில் அப்போதே முன் நிறுத்தியது என்பதைச் சுட்டிக் காட்டவே

லிண்டன் ஜான்சன், ரிச்சர்ட் நிக்ஸன், ரோனல்ட் ரேகன் என்று மூன்று அமெரிக்க ஜனாதிபதிகளோடு இந்திய-அமெரிக்க உறவை கட்டமைத்தார் இந்திரா காந்தி. ஜான்சனும் நிக்ஸனும் இந்திராவோடு மோதியதோடு இந்தியாவுக்கு அளித்த உணவு உதவிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதித்தனர். உணவு சார்ந்து அமெரிக்காவுக்குக் கீழ்படிய மறுத்த இந்திரா இந்தியாவை உணவில் தற்சாற்புடைய நாடாக மாற்ற உறுதிப் பூண்டு பெரு வெற்றியும் கண்டார். ரேகன் முந்தய ஜனாதிபதிகளை விட நட்புடன் இந்திராவை அணுகினார். அதே நட்பினை ரேகன் ராஜீவிடமும் காண்பித்ததைக் காணொளிகளில் காணலாம்

இந்திய-அமெரிக்க உறவில் மைல்கல் என்று சொல்லத்தக்க உறவு ஜார்ஜ் புஷ் (இரண்டாமவர்) மன்மோகன் சிங் காலத்தைத் தான் சொல்ல முடியும். 2005-இல் மன்மோகன் சிங்கை ஜார்ஜ் புஷ் வரவேற்று விருந்தளித்தார். பின்னர் 2006-இல் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தார். மன்மோகன் சிங் அமெரிக்கா வந்த போது அவரும் புஷ்ஷும் சேர்ந்து அமெரிக்கா இந்தியாவின் ஆயுதம் சாரா அணுசக்திக்குத் தேவையான, அது வரை தடைச் செய்யப்பட்டிருந்த, எரிபொருள் முதலானவற்றை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. பின்னர் 2006-இல் இந்தியாவுக்குப் புஷ் பயணமான போது தன் விமானத்தில் இருந்த படியே ஒப்பந்தத்தை மன்மோகன் சிங்கோடு நேரடியாகப் பேசி இறுதி செய்து அதனை டில்லியில் இறங்கியதும் அறிவித்தார். இந்த இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தைக் கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து அப்போதைய பாஜக எதிர்த்தது வரலாறு. இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம் அதுவரை பல்லாண்டுகளாக இந்தியவுடனான எந்த ஒப்பந்தத்தையும் பாகிஸ்தானின் மனம் நோகாமல் தான் அமெரிக்கா செய்து வந்தது ஆனால் முதன் முறையாக இந்தியாவைப் பாகிஸ்தானோடு சேர்ந்து பார்ப்பதை தவிர்த்துத் தங்கள் சர்வதேச தந்திரோபாயங்களுக்காக அமெரிக்கா இந்தியாவைத் தனித்துப் பார்த்து ஒப்பந்தம் செய்தது. ஒபாமா பதவிக்கு வந்ததும் முதல அரசு விருந்தை மன்மோகன் சிங்கை தான் அழைத்து அளித்தார். மன்மோகன் சிங்கின் மீது புஷ்ஷும் ஒபாமாவும் பெருமதிப்புக் கொண்டிருந்தனர்

சுருக்கமாகச் சொன்ன 60 ஆண்டு இந்திய-அமெரிக்க உறவில் சில துலக்கமான விஷயங்கள் உள்ளன. ஆசிய கண்டத்தில் இந்தியா முக்கியமான பங்களிக்கும் தேசமாகவே பார்க்கப்பட்டதோடு இந்தியத் தலைவர்கள் தனி மதிப்பையும் பெற்றிருந்தனர். மாறிவரும் சர்வதேச சதுரங்க ஆட்டத்தினாலும் வர்த்தக நோக்குகளினாலும் இந்தியாவின் முக்கியத்துவம் கடந்த 20-25 ஆண்டுகளாகவே ஏறுமுகம் கண்டிருக்கிறது. ஜிம்மி கார்டருக்குப் பின் இந்தியா வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன், அதுவும் தன் பதவி காலத்தில் கடைசி ஆண்டில் வெறும் ஊர் சுற்றிப் பார்க்கவே பிரதானமாக வந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த சர்வதேச மாற்றங்களும் இந்தியாவுக்கு மன்மோகன் சிங் போன்ற ஒருவர் தலைவராக இருந்ததும் இந்திய-அமெரிக்க உறவை அமெரிக்க ஜனாதிபதிகளின் முக்கியத்துவ வரிசையில் முன் நகர்த்தியது. இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதிகளின் வருகையும் இந்திய பிரதமர்கள் அமெரிக்காவுக்கு அரசு விருந்தினராகத் தடபுடலாக அழைக்கப்படுவதும் மோடிக்கு முன்பே துவங்கிய ஒன்று தான்


அமெரிக்க காங்கிரஸில் மோடியின் உரை: பருந்தாக முயன்ற ஊர்க் குருவி


அமெரிக்க பாராளுமன்றத்தில் இன்னொரு நாட்டின் தலைவர் உரையாற்றும் போது பொதுவான அம்சங்கள் இருக்கும். இரு நாட்டுக்குமான நல்லுறவை நினைவூட்டுவது அல்லது அதன் தேவையை வலியுறுத்துவது, இரு நாட்டுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தக நலன் பற்றியும் பாதுகாப்பு நலன் பற்றியும் பேசுவது, பண்பாட்டு ஒற்றுமை அம்சங்களை வலியுறுத்துவது என்று சில மேம்போக்கான கூறுகள் இருக்கும். அவை எல்லாமே மோடியின் உரையில் இருந்தன. இன்று மோடியின் அமெரிக்க வருகை பற்றிய அதீத பிம்ப கட்டமைப்புகள் இயற்றப்படுகின்றன ஆகவே அவ்வுரையை சற்றே ஆராய்வோம்


பிரதமரின் உரையில் இந்தியாவின் சாதனைகளை குறிப்பிட்டது பற்றி மாற்று கருத்தில்லை. இந்தியா இன்று பெரும் பொருளாதாரச் சந்தை ஆக அவர் பட்டியலிட்ட சாதனைகளை பல முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும். அவ்வகையில் அது நல்லதொரு பட்டியல்.   இந்தியா-அமெரிக்கா என்றதுமே இவ்விரு நாடுகளும் ஜனநாயக நாடுகள், ஒன்று உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இன்னொன்று மிக மூத்த ஜனநாயகம் என்பது வழமை. உண்மையில் இன்று இவ்விரண்டிலும் ஜனநாயகம் ஊசலாடுகிறது. ஒரு அமெரிக்க ஜனாதிபதியே தேர்தல் தோல்வியை புரட்டிப் போட ஒரு கலவரத்தை ஏவியது அமெரிக்க வரலாற்றின் கறுப்பு நாள், அந்த அபாயம் இன்றும் அமெரிக்காவின் தலை மீது கத்தியாகத் தொங்குகிறது. இந்தியாவோ தேர்தல் அளவில் மட்டுமே இன்று பிரதானமாக ஜனநாயக நாடு, பாராளுமன்றம் பிரதமரின் ரசிகர் மன்றம். ஜனநாயகம் மரபணுவில் இருக்கிறது என்று பிரதமர் பேசியது நல்ல ஜோக்.

இன்று எல்லா தலைவர்களின் இம்மாதிரி உரைகள் உரை எழுத்தாளர்கள் கொண்டு எழுதப்படுவதே, ஆனால் அதற்கென்று சில நயங்கள் உள்ளன. பேச்சாளரின் பொதுவான உரை வடிவங்கள், சொற் பிரயோகங்கள், சித்தாந்த சாய்வுகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்து பேசுபவரின் இயல்புக்கு ஏற்றவாறு தான் எழுதுவார்கள், எழுத வேண்டும். தலைவர்களும் எழுதிக் கொடுத்ததை ஒப்பிக்காமல் அதன் மீது சில மாற்றங்களையாவது சுயமாகச் செய்வார்கள். மோடியின் உரையில் இருந்த சில வாக்கியங்கள் அப்பட்டமான ஹாஸ்யம்


அபிரஹாம் லிங்கனை பிரதியெடுத்து “Standing here, seven Junes ago, that’s the June when Hamilton swept all the awards, I said” என்றார் மோடி. மோடிக்கு லிங்கனின் மொழி கிடையாது என்பது குறைபாடல்ல ஆனால் அதை செயற்கையாக பாவிப்பது கேலிக்கூத்து. அதுவும் ஹேமில்டன் நாடகமெல்லாம் அவருக்கு சுத்தமாகத் தெரியாது என்பது கேட்போர் யாருக்கும் தெரியும். ஹேமில்டன் நாடகம் தெரியாதது குறையே அல்ல ஆனால் ஒரு பிரதமர் அது தெரிந்தது போல் காட்டிக் கொள்வதெல்லாம் வெட்கக் கேடு. அப்புறம் ஜான் லூயிஸ் இறந்த போது ஒரு இரங்கல் ட்வீட் மட்டும் சொன்னவர் இன்று என்னமோ காலகாலமாக ஜான் லூயிஸையும் அவர் போராட்டத்தையும் அறிந்தது போல் பாவ்லா காட்டியதை என்னவென்று சொல்ல? சரி அதையெல்லாம் செய்தவர் அமெரிக்க காங்கிரஸில் கறுப்பினத்தவருக்கென்று ஒரு குழுமம் இருக்கிறதென்பதை அறிவாரா, அவர்களை சந்தித்தாரா? காந்தியின் வழியில் கறுப்பினத்தவரோடு நேருவும் கறுப்பினத்தவரோடு நட்புறவில் இருந்தார். நேருவை ஆங்கிலேய அரசு சிறையில் வைத்த போது அதை கண்டித்து லாங்க்ஸ்டன் ஹ்யூஸ் கவிதை எழுதி அதனை அமெரிக்காவில் தங்கள் நிலையுடன் ஒப்பிட்டார். (Show me that you mean / Democracy please— / Cause from Bombay to Georgia / I’m beat to my knees / You can’t lock up Nehru / Club Roland Hayes /  Then make fine speeches / About Freedom’s way)


மோடி நேரு போல் பேச முயன்ற இடமெல்லாம் தோற்றுத் தான் போனார். காண மயிலாட கண்டிருந்த வான்கோழி நிலை தான். உயர உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. மோடியின் சுயம் வெளிப்பட்ட இடங்கள் மூன்று


இந்தியா 1000 ஆண்டு காலம் அடிமைப் பட்டிருந்தது என்று மொகலாய சாம்ராஜ்ய காலத்தை எல்லாம் வெளிநாட்டு ஆதிக்கத்தோடு சேர்த்து பேசியது “vintage Modi”. அடுத்தது இந்தியா என்றதுமே வேத காலத்தோடு மட்டுமே தொடர்பு படுத்திப் பேசுவது தற்செயலோ பண்டைய மரபு ஒன்றின் நினைவுக் கூரலோ மட்டுமல்ல. இந்தியா என்பது மோடியின் மனதில் என்றும் இந்துஸ்தானம் தான். மூன்றாவது அமெரிக்கா மீதான 9/11 தாக்குதலையும் இந்தியா மீதான நவம்பர் தாக்குதலையும் சம்பந்தபடுத்தி தீவிரவாதம் பற்றிய குறிப்பு. உடனே பலர், மோடி எதிர்ப்பாளர்கள் உட்பட, அது நிஜம் தானே என கேட்கலாம். அவ்விரு நிகழ்விலும் அந்தந்த நாட்டின் இஸ்லாமியருக்கு எந்த பங்குமில்லை அவை கடல் கடந்த பல காரணங்களை உள்ளடக்கிய மதத்தை போர்வையாகக் கொண்ட தீவிரவாதம். அது உலகளாவிய பிரச்சனையல்லவா என்றால் ஆமாம் பிரச்சனை தான். சரி அதனை பேசியவர் இன்று அமெரிக்கா இந்தியாவை நெருங்குவதற்கான உண்மையான காரணமான சீன அச்சுறுத்தல் பற்றியும் சொல்லி இருக்கலாமே? இன்று இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் சீனா தான், அது தான் இன்றைய நிகழ்வுகளுக்கான நிர்பந்தம்


பலனடைந்தது யார்?


மோடியின் வருகை அமெரிக்க பத்திரிக்கைகளில் விபரமாகவே முதல் பக்கங்களில் இடம் பிடித்தது. இணையத்திலும் நியூ யார்க் டைம்ஸ் உட்பட பல பத்திரிக்கைகள் அநேக கட்டுரைகள் வெளியிட்டன. இந்த ஊடக வெளிச்சத்துக்குப் பலக் காரணங்களுண்டு. அமெரிக்கா இன்று சீனாவை, ருஷ்யாவை விட, முக்கியமான எதிர் சக்தியாகப் பார்க்கிறது, சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவை முக்கியமான நட்பு சக்தியாகக் கொண்டு ஒரு தரப்பை அமெரிக்கா கட்டமைக்கிறது, இந்திய சந்தையை அமெரிக்க பெரு நிறுவனங்கள் தங்கள் உலக வர்த்தகத்தின் ஓர் அங்கமாகப் பார்க்கின்றன, செல்வ செழிப்புள்ள பல்லாயிர கணக்கான இந்திய-அமெரிக்க பிரஜைகள், அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு அதிகரித்திருப்பது, ஊடகங்கள் இணையத்தில் எளிதாகச் செய்தி வெளியிடும் தன்மை, மோடியின் மீது இருக்கும் ஆச்சர்யம் - ஒரு பக்கம் அவரை ஆராதிக்கும் கோடானுக் கோடி இந்தியர்கள், மறுபுறம் அவர் கட்சியினர் முன்னெடுக்கும் மக்களைப் பிளக்கும் அரசியலும் அதற்காக அவரை வெறுப்போரும் கணிசமாக இருக்கும் வினோதம்- எல்லாம் காரணங்கள்


மோடியின் இப்பயணத்தின் முதன்மை பலனாளிகள் அமெரிக்க இராணுவத் தளவாட விற்பனையாளர்கள் என்றால் மிகையாகாது. அடுத்தது அமெரிக்க கம்பெனிகள். பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ உபயோகத்துக்கான கருவிகள் விற்பனைக்கு கையெழுத்திடப் பட்டுள்ளது. அமெரிக்க கம்பெனிகள் இந்தியாவில் உற்பத்திச் செய்யவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது இரண்டு நாடுகளுக்கும் நன்மைப் பயக்கும்


பைடன் மீதான விமர்சனமும் அமெரிக்க பத்திரிக்கையாளரை எதிர்த்த சங் பரிவாரமும். ஒபாமாவின் விமர்சனம்


மோடிக்கு ஜோ பைடன் தடபுடலான வரவேற்பு அளிப்பது அமெரிக்காவில் விமர்சனத்தையும் உண்டாக்கியது. மோடி அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து அமெரிக்க பத்திரிக்கைகளில் கவனப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அமெரிக்க அரசின் வருடாந்திர உலக நாடுகளில் மதச் சுதந்திரத்தின் நிலைப் பற்றிய அறிக்கைகளில் இந்தியா பற்றி தொடர்ந்து விமர்சனங்கள் காணப்படுவது இந்திய அரசை எரிச்சல்படுத்தி இருப்பதை கடந்த கால அறிக்கைப் போர்களில் காணலாம். இந்தியா-அமெரிக்கா உறவு இரண்டு ஜனநாயக நாடுகளுக்கிடையேயான பரஸ்பர பொது மேன்மையான விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டதென காலம் காலமாகச் சொல்லப்பட்டாலும் இப்போது மோடியின் அரசின் செயல்பாடுகளை கணக்கில் கொள்ளும் போது அமெரிக்க கருத்தியலாளர்கள் விமர்சனத்துக்கு உட்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் பிரதான சர்வதேச உறவுகள் பற்றிய பத்திரிக்கை (Foreign Affairs) இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பொது விழுமியங்கள் என்று சொல்வதை விட பொதுத் தேவைகள் இருக்கின்றன என்பதே சரி என்று இடித்துரைத்துக் கட்டுரை எழுதியது. அக்கட்டுரையில் மோடி அரசின் சிறுபான்மை விரோத போக்கினை சுட்டிக் காட்டினார் கட்டுரையாளர். பைடன் மோடியை சந்திக்கும் போது மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவின் கருத்தை தெரிவிப்பாரா என்று செய்தியாளர்கல் வினவினார்கள்.


மோடியும் பைடனும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிக்கையைச் சேர்ந்த சப்ரீனா சித்திக்கி மோடியிடம் இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்து கேள்வி எழுப்பினார். முன்பொரு முறை குஜராத் கலவரம் பற்றிக் கரண் தாபர் கேள்விக் கேட்ட போது எப்படி ஒரு மிடறு தண்ணீர் குடித்தாரோ அதே போல் இப்போதும் ஒரு மிடறு தண்ணீர் குடித்துப் பின் பொத்தாம் பொதுவாக இந்தியா ஜனநாயக நாடு என்றெல்லாம் கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் பதில் சொன்னார் மோடி. விஷயம் அத்தோடு முடிந்திருக்கலாம் ஆனால் மோடி ஆதரவாளர்களுக்கு ஒரு இஸ்லாமியப் பெண் இப்படி ஒரு கேள்விக் கேட்டதே கோபத்தின் உச்சிக்கு அவர்களைக் கொண்டு சென்றது. அடுத்த சில நாட்கள் அப்பெண் நிருபர் இணையத்தில் பெரும் தாக்குதலை எதிர்கொண்டார். எதிர்ப்புகள் எல்லாம் நிருபரின் மதத்தை குறிவைத்தன. விஷயம் தீவிரமடைந்து அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரப் பூர்வமாக கண்டனம் தெரிவிக்கும் அவலச் சூழலுக்கு இட்டுச் சென்றது

இதற்கிடையே முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சி.என்.என்னனுக்கு அளித்தப் பேட்டி ஒன்றில், மோடியின் வருகையின் போதே, இந்தியாவில் மக்களிடையே நல்லிணக்கம் நிலவ வேண்டுமென்றுமென்றும் அப்படி இல்லையென்றால் தேசம் இரண்டு திசைகளில் இழுபட்டு முன்னேற்றத்துக்குத் தடையாகும் என்றார்மோடியின் மூத்த அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முதல் பலரும் ஒபாமாவை கண்டிப்பதோடுஅமெரிக்கா என்ன ஒழுங்காஎன்ற ரீதியில் தாக்குதல்கள் தொடுத்தனர். இதுவும் சாதாரணமாக கடந்து போயிருக்கவோ மென்மையாக கையாண்டோ ஒன்றுமில்லாமல் செய்திருக்க முடியும் ஆனால் ஒரு கருத்தை தேசத்தின் மூத்த அமைச்சர் எதிர்கொண்ட விதம் தன்னம்பிக்கையான உலக சக்தி என்று பிரகடனம் செய்து கொள்ளும் நாட்டிற்கு அழகல்ல. மேலும் ஒபாமா அதையும் புதிதாகச் சொல்லிவிடவில்லை. 2014-இல் மோடி பிரதமராக இருக்கும் போதே இந்திய குடியரசு தினத்தில் பிரதம விருந்தாளராக கலந்து கொள்ள வந்திருந்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஒபாம டில்லியில் அற்றிய உரையில் தான் வளர்ந்த அமெரிக்காவில் தானும் தன்னைப் போன்றவர்களும் எதிர்கொண்ட ஒடுக்குமுறைகளையும் விமர்சித்து இந்தியாவில் சிறுபான்மையினர் பற்றியும் பேசினார். கவனிக்கவும் ஒரு அமெரிக்க ஜனாதிபதியே தன் நாட்டை இன்னொரு நாட்டின் விருந்தினராக இருக்கும் போது விமர்சித்த உரை அது, அதுவே அமெரிக்க மரபுகளுக்கு மாறுபட்டது என்பதே அமெரிக்க சுய விமர்சனம் நோக்கி நகர்ந்ததை உணர்த்துகிறது, அதில் முக்கியப் பங்காற்றியவர் ஒபாமா. ஆக மோடி ஆதரவாளர்கள்இனி இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதிகளை கிடுக்கிப் பிடி போட்டு கேள்விக் கேட்டு சங்கடப்படுத்துவோம்என்று இணையத்தில் கொக்கரித்தது, மென்மையாகச் சொன்னால், சிறுபிள்ளைத் தனம் மட்டுமல்ல அது தேசத்தில் பாஜக ஆதரவாளர்களின் சகிப்பின்மையையும் முதிர்ச்சியின்மையையும் படம் போட்டுக் காட்டுகிறது


ஏற்றுமதியாகும் இந்துத்துவம்


மோடி மற்றும் பாஜகவினர் மீண்டும் மீண்டும்வசுதைவ குடும்பகம்என்ற சொற்றொடரை தாரக மந்திரம் போல் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மந்திர உச்சாடனம் போல் உதிர்க்கிறார்கள். அத்தகைய உலக சகோதரத்துவப் பார்வை கிட்டத்தட்ட எல்லா மதங்களிலும் சமூகங்களிலும் உண்டு ஆனால் ஒன்று கருத்தியலாக இருப்பதாலேயே அதுவே நிதர்சன நடைமுறையும் என்று நினைப்பது பெரும் பிழை. சாதியம் ஊறிப் போன தமிழகத்தில் தான்யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்போன்ற சொற்றொடர்களும் புழங்குகின்றன


பொதுவாக புலம்பெயர்ந்த இந்தியர்கள், குறிப்பாக மேற்குலக நாடுகளில், “முன் மாதிரி சிறுபான்மையினர்என்று அழைக்கப்படுவதுண்டு. அம்மாதிரி வகைப்படுத்துவதே ஒரு சிக்கலான இன அரசியல் என்பது வேறு விவாதம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு குடியேறிய இந்தியர்கள் பலர் பட்டதாரிகள், அந்தந்த நாடுகளில் நடுத்தர, உயர் ந்டுத்தர வர்க்கத்தில் இவர்கள் இடம்பெற்றார்கள். புலம்பெயர் இந்தியர்கள் எந்த கலவரங்களிலோ ஏன் அரசியலிலோ கூட இடம்பெற்றதில்லை என்ற பிம்பம் உண்டு. இதனை பிம்பம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் புலம்பெயர் இந்தியர்களிடையே இருக்கும் ஜாதிப் பிரிவினைகள், ஜாதி சங்கங்கள் பற்றி அமெரிக்கர்களுக்கு சமீப காலம் வரை அறிதல் கிடையாது
இந்தியர்கள் பற்றி மேற்சொன்ன சித்திரம் சமீபகாலமாக மாற்றம் உண்டாகி இருக்கிறது, காரணம் ஏற்றுமதியாகும் இந்துத்துவம். இன்று இந்திய வெளியுறவுக் கொள்கை இந்துத்துவ மயமாகி இருக்கிறது என்று வெளியுறவு ஆய்வாளர்கள் பலர் கவனப்படுத்துகிறார்கள். இதன் மிக வெளிப்படையான பிரதிபலிப்புகளின் மாதிரிகளாக இரண்டு நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டலாம், அவை-ஒன்றுஇங்கிலாந்தில் லீஸ்டர் எனும் நகரில் கடந்த வருடம் நிகழ்ந்த இந்து-முஸ்லிம் கலவரம். இரண்டு, நியூ ஜெர்ஸியில் இந்திய சுதந்திர தின பேரணியில் உத்தரபிரதேச முதல்வர் இஸ்லாமிய வீடுகளை நொறுக்க பயன்படுத்தும் புல்டோசர் மாதிரி ஒன்று இடம்பெற்று சர்ச்சைக் கிளப்பியது- ஆகியவை. அமெரிக்காவில் நிறம், இனம் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சட்டங்களை விரிவாக்கி சாதியையும் சில மாநிலங்கள் சேர்க்க ஆரம்பித்த போது அதற்கு அமெரிக்காவில் இருக்கும் பாஜக சார் இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்து மதம், இந்திய வரலாறு குறித்து எழுதும் அமெரிக்க பல்கலைக் கழக ஆய்வாளர்களின் எழுத்துகளும் பேராசிரியர்களுமே நேரடி அச்சுறுத்தல்களை இந்த இந்துத்துவ அமைப்புகளிடம் சந்திக்கின்றன


மோடியின் இந்துத்துவ அரசியல் கடல் கடந்து புலம்பெயர் இந்திய சமூகங்களையும் பிளந்திருக்கின்றன என்றால் மிகையாகாது


எதிர்காலம்


மோடியின் அமெரிக்க பயணம் அமோக வெற்றி என்று சொல்லக் கூடியத் தருணத்தில் இந்தியாவின் சிறுபான்மை விரோத மனநிலையும், விமர்சனங்களை காட்டமாக எதிர்கொள்ளும் சகிப்பின்மையும் ஒரு நல் விருந்தில் கடைசியில் கசப்பான பதார்த்தத்தை சாப்பிட்டால் என்ன உணர்வு எஞ்சுமோ அதனை அளித்தது எனலாம். அதற்காக இந்திய-அமெரிக்க உறவே பின்னடைவு சந்தித்தது என்றோ பயணமே விழலுக்கு இறைத்த நீர் என்பதோ அதீதம். வர்த்தக உறவுகள் இம்மாதிரி கசப்புகளை எளிதில் கடந்து நிலைபெறும் என்பதை அமெரிக்காவின் சர்வதேச உறவுகளின் வரலாறு சொல்லும். ஆனால் அதற்கும் இன்று எல்லைகள் உண்டு. அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகள் அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் கேள்விக் கேட்பதுண்டு, இந்தியாவில் நிலைமை கை மீறினால் அது அந்நிறுவனங்களுக்கு சவால் தான்


எவ்வளவு தான் மோடி நேருவை இழித்தும் பழித்தும் பேசினாலும் இன்றும் மோடியின் சர்வதேச கொள்கைகளும் நிலைப்பாடுகளும் நேரு முதலான காங்கிரசாரின் கருத்தியலையும்