Thursday, August 9, 2018

கருணாநிதியை தலித்துகள் கொண்டாடுவதில் உள்ள முரண்கள்.

பிராமணர்களைத் தவிர்த்துப் பார்த்தால் திராவிட இயக்கத்தை விமர்சனத்துக்கும், ஆய்வுக்கும் சமீப காலத்தில் உட்படுத்தியவர்கள் தலித்துகள் என்றால் அது மிகையில்லை. ஆனால் விநோதமாகக் கருணாநிதியை கொண்டாடும் சில தலித் சமூகத்தினரின் பேஸ்புக் பதிவுகளைப் பார்த்தேன். துணுக்குற்றேன். நேற்று வரை இரண்டாம், மூன்றாம் கலைஞரையெல்லாம் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் தீடீரென்று அவர்களை உருவாக்கிய முதலாம் கலைஞரை புனிதர் ரேஞ்சில் பேச ஆரம்பித்து விட்டார்கள். இது சரியா?

அடிப்படையில் எனக்கு மேற்கத்திய மனம் என்ற முடிவுக்கு நான் எப்போதோ வந்துவிட்டேன். இறப்பது யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றிக் கொஞ்சமேனும் நேர்மையாக எழுதப்பட்ட அஞ்சலி குறிப்புகள் தான் இங்கு வெளிவரும். அதுவும் இறந்து சில மணி நேரத்துக்குள்ளாகவே. அமெரிக்காவின் மிகப் பிரபலமான மதப் பிரச்சாரகர் பில்லி கிரஹாம் இறந்த சில மணி நேரத்துக்குள் வெளியான ஒரு அஞ்சலி குறிப்பு அவர் எளியர், ஆழ்ந்தப் புரிதல் இல்லாதவர் என்ற ரீதியில் இருந்தது.

பல பிராமணர்கள் கருணாநிதி மெரினாவில் தான் புதைக்கப் பட வேண்டும் என்று எழுதியதைப் பார்த்தேன். இன்னும் சிலர் அவர் ஒரு சகாப்தம் என்றார்கள். கருணாநிதியை தனிப்பட்ட முறையில் கரித்துக் கொட்டிய பிராமணர்களுமுண்டு. அவர்கள் பெரும்பாலும் இந்துத்துவர்கள். ஆனால் அவர்கள் கூடக் கருணாநிதி என்ற தனி மனிதனைத் தான் ஏசினார்கள் அவர் இனத்தையல்ல.

அடிப்படையில் இந்திய மனம் பெருந்தன்மையானது என்று சொல்லலாம். In a charitable way, not too literally. அந்த வகையில் தலித் பதிவுகளையும் சேர்க்கலாம். ஆனால் சமீபமாக மனத்தில் உழலும் சில சிந்தனைகளை அப்பதிவுகள் கிளறியதால் சிலவற்றுக்கு இன்று பதில் சொல்லலாம் என்று நினைத்தேன்.

திருநெல்வேலியில் வேலிக்குள்ளே அம்பேத்கர் (https://tamil.samayam.com/latest-news/state-news/mla-vasantha-kumar-garlanded-dr-ambedkar-statue-in-tirunelveli/articleshow/58177621.cms)


கருணாநிதியும் சுய மரியாதையும்:


கருணாநிதி யாரும் காலில் விழுவதை விரும்புவதில்லை என்றார் ஒருவர். வைகோ பலமுறை விழுந்துள்ளாரே, புகைப்படங்களும் இருக்கிறதே என்ற போது, 'இல்லை அதைக் கலைஞர் விரும்பவில்லை' என்றார் பதிவு எழுதியவர். கலைஞர் மனத்தில் என்ன எண்ணம் ஓடியது என்பதை அவர் எப்படியோ அறிந்துள்ளார்.

பிராமணர்களில் சில நண்பர்கள் சமீபத்தில் "நாங்கள் சாதுவானவர்கள்" என்றார்கள். அப்போது அவர்களிடம் வன்முறை என்பது வெட்டரிவாளும், வேல் கம்பும் மட்டுமல்ல என்றேன். அது பற்றி விரிவானப் பதிவு சீக்கிரம் வரும். அதே மாதிரி காலில் விழுவது மட்டுமா சுய மரியாதை இழுக்கு?

கருணாநிதியின் 2006-11 ஆட்சியின் போது துதிப்பாடல் அருவருப்புகளின் எல்லைகளை விஸ்தீரணம் செய்தது. கம்பனும், வள்ளுவனும், இளங்கோவும் கருணாநிதியின் காலில் மலர் சொறிவது போல் பிளெக்ஸ் போர்டு வைக்கப்பட்டது அதை அவரும் ரசித்தார் என்றது பத்திரிக்கை குறிப்பு.

8 மணி நேரம் சினிமா துறையினர் ஆபாச நடனங்களும் அதை விட ஆபாசமான முதுகுச் சொறியும் துதிப் பாடல்களை அரங்கேற்றி கருணாநிதியின் மனம் குளிர வைத்தனர். அதை அவரும் ஏதோ இமைய மலை வென்றெடுத்த மமதையோடும் மந்தகாச சிரிப்போடும் ரசித்தார். எழுத்தாளர் ஞானி ஒருவர் மட்டும், "இதுவா ஒரு அமைச்சரவையின் வேலை? ஒரு கல்வியாளரின் பேருரையை ஒரு மணி நேரம் இவர்கள் கேட்பார்களா?"என்றுக் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவில் குடியரசு கட்சியைச் சார்ந்த கவர்னர்கள் கூட்டம் ஒன்றில் ஒரு மதியத்தை ஒதுக்கி யேல் பல்கலைக் கழகப் பேராசிரியர், தலைச் சிறந்த அறிவியல் சம்பந்தமான பத்தி எழுத்தாளர், நியூ யார்க் டைம்ஸின் பிரசித்திப் பெற்ற எழுத்தாளர், ஆகியோரோடு நீண்ட விவாதங்கள் நடத்தினர் அமெரிக்காவில் எப்படிக் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதென்று. ஹ்ஹ்ம்ம்ம்...

கருணாநிதி எழுத்தாளர்களிடம் நட்புடன் இருப்பார். தமிழ் எழுத்தாளர்களும், ஜெயகாந்தன் உட்பட, அவரிடம் சகஜமாகவே பழகினர். பராக் ஒபாமா பல எழுத்தாளர்களுடன் நட்பில் இருந்தார். இரண்டும் வேறு வகை. முன்னதில் ஜெயகாந்தன் தவிர மற்ற அனைவரும் கிட்டத் தட்ட கருணாநிதி காலில் விழாத குறை தான். வைரமுத்துவும், அப்துல் ரகுமானும் கிட்டத்தட்ட மாவட்ட செயலாளர் ரேஞ்சில் தான் இருந்தார்கள்.

அதிமுக அடிமை கூடாரம் என்பது மட்டுமல்ல தாங்கள் அடிமைகள் என்பதும் அடிமைகளாக இருப்பதற்கு மட்டுமே தகுதியுடையவர்கள் என்பதையும் உணர்ந்தவர்களின் கூடாரம். திமுகவினர் தாங்கள் கொத்தடிமைகள் என்பதை உணராமலோ அல்லது உணர்ந்தாலும் என்னமோ தன்மானச் சிங்கங்கள் போல் பம்மாத்துக் காட்டும் அடிமைகள் நிரம்பிய கூட்டம். அண்ணாதுரை நூற்றாண்டு விழாவில் தனக்குத் தானே அண்ணா விருது அளித்துக் கொண்டு அதற்கும் தானே கவியரங்கம் ஏற்பாடு செய்து, அதற்கு ரஜினிகாந்தை அடிமையாகப் பக்கத்தில் உட்கார வைத்து இரண்டு மணி நேரம் திகட்ட திகட்ட ஒலித்த புகழாரங்களைக் கேட்டு திளைத்தார் சுய மரியாதை சிங்கம். ஜகத்ரட்சகன் தன்னை நாயாக உருவகித்துப் பேசினார். வாலியும், வைரமுத்துவும், மற்றவர்கள் பேசியதையெல்லாம் கேட்பதற்குப் பதில் ஓபிஎஸ் ஜெயலலிதா முன் நெஞ்சான்கிடையாக விழுவதைப் பார்க்கலாம்.

ஒரு மனிதனை உடல் ரீதியாகக் காலில் விழவைத்து 'நீ அடிமை' என்பதற்கு அவன் அறிவை அதிகார பலம் கொண்டோ வசீகரித்தோ வளைத்துத் தனக்குச் சேவகம் புரிய வைப்பது கொஞ்சமும் குறைவான வக்கிரமல்ல.

மேடையில் பேசிய பலரும் கருணாநிதியின் தாராள குணம் பற்றி அரற்றினார்கள். எம்ஜியார் வாழ்ந்து அரசியல் எதிரியாக இருந்த போது அவர் சட்டசபையில் தாக்கப் பட்டார், இரண்டாம் நிலைப் பேச்சாளர்கள் அவர் ஆண்மை குறித்துப் பேச ஊக்குவிக்கப்பட்டனர், அவரை மலையாளி என்று தூற்றினார்கள். ஆனால் இறந்தவுடன் 'நாற்பதாண்டு கால நட்பு" என்றாராம், திமுகக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க ஆணையிட்டாராம்.

கருணாநிதியின் அரசியல் நாகரீகம் என்பது பச்சைப் பொய். அரசியல் மேடைகளில் நாகரீகம் தொலைந்ததே அண்ணாதுரையும் கருணாநிதியும் ஈவெராவும் அரசியலுக்கு வந்த பின்னர்த் தான். இது தான் வரலாறு.

கருணாநிதியின் போராட்ட குணமும் அரசியல் சாதுர்யமும் 


இது அடுத்த மாய்மாலம். அரசியலுக்கு வரும் யாருக்கும் போராட்ட குணமிருக்கும். எம்ஜியார் கட்சி ஆரம்பித்த போது அவர் வயது முதிர்ந்தவர், அவர் சினிமா வாழ்வு தேய்பிறையிலுருந்தது, வெகு ஜன அரசியல் அறியாதவர். அவருக்கு அது ஒரு மிகச் சிக்கலான காலக்கட்டம். ஜெயலலிதா மிகுந்த போராட்ட குணமுடையவர் தான். மறுக்க முடியுமா?

கருணாநிதி என்றதும் பால்யத்தில் அவர் முன்னெடுத்த கல்லக்குடி போராட்டம் என்பார்கள். ஓடாத ரயிலின் முன் உட்கார்ந்து தர்ணா செய்தார், எழுத்துப் பலகை மீது தார் அள்ளிப் பூசினார். அவ்வளவு தான்.

இந்திப் போராட்டத்தில் முதலில் உயிர் நீத்தது நடராசன் என்னும் தலித் இளைஞர் பின்னர்த் தான் தாளமுத்து. ஆனால் திராவிட இயக்க வரலாறு அவர்களை எப்போதும் தாளமுத்து-நடராசன் என்று வரிசை மாற்றிச் சொல்கிறதே என்று ஆதங்கப் பட்டவர்கள் தான் இன்று 'என்ன இருந்தாலும்...' என்று தழுதழுக்கிறார்கள்.

எம்ஜியார் ஆட்சியில் 'நீதிக் கேட்டு நெடும் பயணம்', இலங்கைப் போராட்டம் என்று ஏதாவது செய்து கொண்டிருந்தவர் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் பெரிதும் ஓய்ந்துப் போய் விட்டார் என்பது தான் உண்மை. வயதும், உடல் நிலையும் காரணமாய் இருக்கலாம்.

கருணாநிதியின் அரசியல் சாதுர்யம் மிகவும் மிகைப் படுத்தப்பட்ட பிம்பம். எம்ஜியாருக்கு இருந்த கவர்ச்சியை மிகவுக் குறைத்து மதிப்பிட்டார் 13 ஆண்டுக் கால வனவாசம் அனுபவித்தார். 1996-இல் ஜெயலலிதா மட்டும் வளர்ப்பு மகன் திருமணம் என்ற கூத்தை நடத்தி தன் தலையில் தானே மன்னை வாரிப் போட்டுக் கொள்ளவில்லையென்றால் 1996-இல் ஆட்சியைப் பிடித்தது நடந்திருக்காது. 2001-இல் தப்பு கணக்கு. 2006-இல் கலர் டீவி என்ற போதை மருந்தை விற்று மைனாரிட்டி ஆட்சி. அதன் பிறகு இரண்டு சட்டசபை தேர்தல், ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி. அந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி வரலாறு காணாதது. ஜெயாவின் பிரச்சாரத் திறமையை, 'செய்வீர்களா', கிண்டலடித்தார்கள் ஆனால் எந்தக் கூட்டனியுமில்லாமல் தன்னந்தனியாய் ஜெயா அமோக வெற்றிப் பெற்றார்.

அடுத்தப் பெரிய கட்டமைப்பு மாநில உரிமை சுயாட்சிப் பற்றியது. அதெல்லாம் ஒரு சுக்கும் நடக்கவில்லை. சுதந்திர தினமன்று மாநில முதல்வர் கொடியேற்றலாம் என்ற ஒரு சாதனை தான். மற்றப்படி தோற்றாலும் ஜெயித்தாலும் மருமகனுக்கு முக்கிய அமைச்சரவையை மத்தியில் கெஞ்சி கூத்தாடிப் பெறுவார் அவ்வளவு தான்.

கலர் டீவி இலவசமும் தலித் மாணவர்கள் போராட்டமும்:


2006 தேர்தலில் ஆரம்பக் கால கருத்து கணிப்புகள் ஜெயலலிதா ஜெயிக்கக் கூடும் என்ற போது லயோலா கல்லூரி பொருளாதார பேராசிரியர் நாகநாதன் அறிவுரையின் மேல் எல்லோருக்கும் இலவச கலர் டீவி என்றார். முழுப் பெரும்பான்மைக் கிடைக்காமல் மைனாரிட்டி அரசாக பதியேற்றார். டீவி கொடுத்தார், பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில்.

டிசம்பர் 21 2010 சென்னை நகரம் ஸ்தம்பித்தது. பிரதான சாலையை ஒட்டியிருந்த ஆதி திராவிட மாணவர் விடுதியைச் சேர்ந்த மாணவர்கள் சாலை மறியல் செய்திருந்தார்கள். சென்னை நகரின் முழுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அந்த விடுதியைப் பற்றிய கட்டுரையை பிரண்ட்லைன் பத்திரிக்கை "Hellhole Hostels" (https://www.frontline.in/static/html/fl2802/stories/20110128280209000.htm ) என்றுத் தலைப்பிட்டது. மனுஷப் பிறவியெடுத்த யாரும் வசிக்க முடியாத இடம் நாயும் புசிக்க முடியாத உணவு. காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட எம்.சி.ராஜா மாணாவர் விடுதி மூத்திர நாத்தம் அடித்தது. ஆனால் தமிழகமே இலவச டீவியில் மானாட மயிலாடப் பார்த்து மகிழ்ந்தது.

வாளியில் தான் சாப்பாட்டை எடுத்துச் செல்ல வேண்டும். பெரியாரும் அம்பேத்கரும் புகைப்படங்களாக இருக்கிறார்கள்

அஜீத் படத்தின் தலைப்பு 'காட்பாதர்' என்று இருந்தால் தமிழ் செத்து விடுமா இல்லை அதை 'வரலாறு' என்று மாற்றியதால் தமிழ் வாழ்ந்து விடுமா? பின்னதுக்கு விலை தமிழக வரிப்பணம் நூறு கோடிக்கு ஒவ்வொரு வருடமும் ஐந்து வருடங்கள் செலவானது. எத்தனை பள்ளிகள் கல்லூரிகளுக்கான பணம் அது. யாருக்கு அதிகப் பாதிப்பு?

இட ஒதுக்கீடு கொடுத்தார் என்கிறார்கள். எந்த ஊரிலாவது அரசாங்கப் பள்ளிகள் மனித குழந்தைகள் படிக்கும் நிலையில் இருக்கிறதா? அது யாரை அதிகம் பாதித்தது? தலித்துகளைத் தானே?

அரசாங்கம் இலவச மருத்துவமனை நடத்துகிறது ஆனால் அதில் பலவும் கழிப்பறைகளை விட மோசமான நிலையில் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்தாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு வரிப்பணம் மடை மாற்றம் செய்யப் பட்டது பல்லாயிரம் கோடியாகக் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில். கிராமங்களில் நல்ல தனியார் மருத்துவமனைகள் கிடையாது. ஆக இதுவும் கிராமப் புறங்களைத் தான் பாதித்தது. மருத்துவச் செலவுகள், வரிப்பணம் இனாமாகக் கிடைப்பதால், மருத்துவமனைகளால் விஷம் போல் ஏற்றப் பட்டது தான் கண்ட பலன்.

சமச்சீர் கல்வியை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிமுகப் படுத்தியது எந்த இனத்தவரை அதிகம் பாதித்தது? சும்மா வந்து நீட் மீது பழிப் போடாதீர்கள். நீட்டில் பிரச்சனைகள் உண்டு அது வேறு விஷயம். ஆனால் எந்த இந்திய அளவிலான தேர்விலும் தமிழக மாணவர்கள் சோபிப்பதில்லை. இன்று சாதாரணத் தொழிலாளி கூடப் பிள்ளைகளைப் பல்லாயிரம் செலவழித்துத் தனியார் பள்ளிக்குத் தான் அனுப்புகிறார். இது தான் நிதர்சனம். இந்தியாவிலேயே தமிழ் நாடு தான் கல்விக் கடனில் முதல். இது யாரை பாதிக்கிறது நண்பர்களே?

"கலைஞர் ஆட்சி வந்திருந்தால் நாங்கள் வேலைக்குப் போயிருப்போம்" என்று தமிழக ஆசிரியர் படிப்புப் பட்டதாரிகள் சொன்னதை நிலைத் தகவலாகப் பகிர்வது வேடிக்கை. 1996-2001 கல்வி அமைச்சராக இருந்த அன்பழகன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி திறப்பதில் ஊழல் செய்தவர் (தனிப்பட்ட முறையில் தெரியும்). இன்றைய தமிழக ஆசிரியர் பட்டப் படிப்பு படித்த பலர் ஆசிரியர் தேர்வில் தோற்றார்கள் இது தான் பலரின் தரம். எல்லாமே சீரழிந்தது கல்வியைப் பொறுத்தவரை. இதற்கு ஜெயா அரசுகளும் காரணம் தான். ஆனால் யாரும் ஜெயலலிதாவை கல்வியின் காவலர் என்று தலையில் தூக்கி வைத்து ஆடுவதில்லையே. கொஞ்சமாவது மன சாட்சியோடு துதிப் பாடுங்கள்.

இட ஒதுக்கீட்டை பெருமளவு உயர்த்தியது எம்ஜியார். அதற்குச் சட்ட பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தது ஜெயலலிதா. மறுக்க முடியுமா? 1967-77 பத்து வருடக் காலம் ஒரு தொழில் கல்லூரி கூடத் தொடங்கப்படவில்லை தெரியுமா? மன சாட்சியை உறங்க வைத்தால் தான் கருணாநிதி புகழ் பாட முடியும்.

நவோதயாப் பள்ளிகலள் மற்ற மாநிலங்களில் தலித்துகளுக்கு அதிகம் உதவியது. அவற்றைத் தமிழ் நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்து குலக் கல்வியைத் திணித்தது எந்த மகானுபவர்? சிந்திப்பீர்.

பெரியார் என்கிற பிம்பம். திமுகவும் திருமாவும்:


பெரியார் என்கிற பிம்பத்தை வளர்த்து அயோத்தி தாசர் இருட்டடிப்புச் செய்யப் பட்டார் என்று உங்கள் நண்பரும் ஆய்வாளருமான ஸ்டாலின் ராஜாங்கம் தான் சொல்கிறார். பெரியாரை விமர்சித்து எழுதிய ரவிக் குமார் சந்தித்த சவால்கள் ஊரறியுமே. சவால்கள் எங்கிருந்து முளைத்தன? மறந்ததோ?

மு.க.வின் ஜாதிக் குறித்துப் பாமக வட்டாரங்களில் எப்போதும் நக்கல் இருக்கும் ஆனால் எளிதாக ஒரு கல்யாணப் பத்திரிக்கைக் கொடுக்கப் போன இடத்தில் தேர்தல் உடன்படிக்கையயும் முடித்து விட்டு எகத்தாளச் சிரிப்போடு வெளி வந்தார் ராமதாஸ். தேர்தல் சமயத்தில் ஜாதிக் கட்சி ஆரம்பித்த கண்ணப்பனுக்கு அள்ளிக் கொடுத்தார்கள் 7 சீட்டுகள். விசிகவுக்கு முதலில் கொடுத்தது 1, சமீபத்தில், இன்னும் 1 கிடைப்பதற்குத் திருமா பகீரதப் பிரயத்தனம் செய்தார். தகவல் சரி தானே?

திருமாவை செத்துப் போ என்றும் அவர் ஜாதியைக் குறித்தும் திமுகவினர் ஏசியதெல்லாம் மறந்ததா? யார் கொடுத்த கலாசாரம் அது?

திமுகவினர் பிராமணர்களை மிக, மிக ஆபாசமாக ஏசியிருக்கிறார்கள் ஆனால் என்றாவது சோ அல்லது சுவாமி வீட்டுக்கு புடவையும் உடைந்த வளையல்களையும் பார்சல் அனுப்பியிருக்கிறார்களா திமுகவினர்? அந்தப் பாக்கியம் தனபாலுக்குத் தானே கிடைத்தது? மறந்து விட்டீர்களா நண்பர்களே? பிராமணக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரை திட்டுவதற்கு 'அவாள்' கவிதை தான் அதிகப் பட்சம்.

தீண்டாமைச் சுவர் பிரச்சனைகளில் உதவுவது கம்யூனிஸ்ட் கட்சியினர் தானே? என்றாவது திமுகவினர் கீழ்வெண்மணி பற்றியோ இம்மானுவேல் சேகரன் பற்றியோ பேசியதுண்டா?

நிலம் எங்கள் உரிமை என்று இரண்டு ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டவருக்காகக் கோஷம் எழுப்புவது நிலமற்ற உங்கள் சகோதரனை கேலிச் செய்வது. கலைஞரின் இந்து மதத் துவேஷத்தையும் அம்பேத்கரின் இந்து மதத் துவேஷத்தையும் ஒப்பிட்டு கலைஞரை அம்பேத்கருக்கு அருகில் வேறு யாராவது நிறுத்தியிருந்தால் தலித்துகள் சும்மா விடுவார்களா? விடலாமா? சுருட்டுப் புடிச்சவரெல்லாம் சர்ச்சில் இல்லை. அது சரி 'ராமன் எந்தக் கல்லூரியில் இஞ்னியரிங் படித்தார்' என்று கேட்டவர் 'புத்தர் எங்கே படித்தார்' என்றோ 'ஆசையைத் துறந்தவனுமில்லை அழுக்குத் தீர குளித்தவனுமில்லை' என்று பேசினால் என்ன செய்வீர்கள். அம்பேத்கரை மணந்த பிராமணப் பெண் பற்றிப் பெரியார் பேசியதை மறந்தீர்களோ?

ஆ.ராசா மட்டும் தனியே மாட்டியிருந்தால் கை கழுவி இருப்பார்கள். நல்ல காலம் கனிமொழியும் சேர்ந்தே மாட்டினார். அப்படியிருந்தும் ராசா தன் சொந்த திறமையால் தானே வெளிவந்தார். திமுக என்ன கிழித்தது ராசாவுக்கு? ராசா மிகத் திறமையாகப் பேசுகிறார் பேட்டிகளில் ஆனால் திமுகவில் அடுத்தப் பட்டத்து இளவரசர் மூன்றாம் கலைஞர் தானே? ராசாவின் இடம் எங்கே? உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.

உணர்ச்சி வசப்படலாம் ஆனால் உண்மைகளைக் காற்றில் பறக்க விடலாமா?No comments: