Sunday, April 28, 2019

ஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க

பரவலான இந்தியர்களுக்கு அறிமுகமான ஆளுமைகளோ முதன்மைச் சிந்தனையாளர்களோ எதுவும் இல்லாத இந்துத்துவத் தரப்பு சமீப காலமாக முன்னெடுத்து வரும் தந்திரோபாயம் சர்தார் படேல், ராஜாஜி, காமராஜர் ஆகியோரையும் அம்பேத்கரையும் கூடத் தங்கள் தரப்பாகச் சுவீகரித்து முன்னிறுத்துவது. அதன் தொடர்ச்சியாகச் சில தமிழ் இந்துத்துவர்கள் இப்போது ஜெயகாந்தனையும் தங்கள் தரப்பாக முன் வைக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே இறந்து விட்டவர்கள் ஆதலால் அவர்களால் எதுவும் சொல்ல இயலாது என்பது மிகப் பெரிய சவுகரியம். ஆனால் வரலாறு அவ்வளவு எளிதாக வளைக்கக் கூடியதல்ல. அந்தப் பட்டியலில் பலரும் அவர்கள் சிந்தனைகளை, நம்பிக்கைகளைத் தெளிவாக எழுதியும் அவரவர் பதவிகளில் இருந்த போது செயலாற்றியும் வைத்தவை பதிவாகி இருக்கிறது. ஜெயகாந்தனைப் படித்தால் தெரியும் அவர் மோடிக்கு ஓட்டுப் போடுவாரா என்பது.





ஜெயகாந்தனின் பார்வை:


1977-2002 வரை ஜெயகாந்தன் பல பத்திரிக்கைகளில் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகளைத் தொகுத்து "எனது பார்வையில்" தலைப்பில் 2003 வெளியிடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, மதச் சார்பின்மை மற்றும் தேசியம் குறித்த அவர் பார்வையை அத்தொகுப்பில் இருக்கும் கட்டுரைகளின் ஊடாகத் தெளிவாக நிறுவலாம். இந்தப் பதிவு ஜெயகாந்தனின் பார்வைகளின் விமர்சனமல்ல. அது இங்கு நோக்கமில்லை. சில இடங்களில் அவர் கருத்து எனக்கு ஏற்புடையதா இல்லையா என்பதை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன். இக்கட்டுரையின் முதன்மை நோக்கம் சோ ராமசுவாமி மாதிரியான இந்துத்துவர் ஒருவரோடு ஜெயகாந்தனையும் தொடர்பு படுத்தலாமா என்ற கேள்விக்கான பதில் தான்.

இந்தக் கட்டுரைத் தொகுப்பில் முதலில் எரிச்சலுறச் செய்வது ஒவ்வொரு கட்டுரையும் எந்த இதழில், எப்போது வெளியிடப்பட்டது என்பதைக் குறிப்பிடாதது தான். ஆனால் கட்டுரையில் குறிப்பிடப்படும் சில நிகழ்வுகளை வைத்துத் தோராயமாகச் சிலவற்றைத் தேதியிட முடிகிறது.

மத மாற்றம், மதச் சார்பின்மை மற்றும் இந்துஸ்தானம்: 


எது மதச் சார்பின்மை என்று ஜெயகாந்தன் தெளிவுறக் கூறுகிறார்,
'செக்குலர்' என்பதற்கு 'எந்த ஒரு தனி மதமும் சாராத' என்பது தான் மெய்ப்பொருள். நடைமுறையில் செக்குலர் என்பது மத எதிர்ப்பு என்று கருதப்படுகிறது. கம்யூனிஸ ஆட்சியில்லாத ஜனநாயக நாடுகளில் 'செக்குலர்' என்பது மத எதிர்ப்பு அல்ல. 
அமெரிக்காவின் மிக முக்கிய அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் அதைத் தான் சொல்கிறது. அரசு எந்த மத அமைப்பையும் நிறுவாது என்பதோடு எந்த மதமும் சுதந்திரமாகச் செயல்படலாம் என்கிறது.

திராவிட இயக்கங்களின் மதச் சார்பின்மை, மூட நம்பிக்கை எதிப்பு என்பதெல்லாம், "இஸ்லாம் அல்லாத, கிறிஸ்துவம் பௌத்தம் அல்லாத 'மத எதிர்ப்பு' என்பதை அவர்களின் நடைமுறையில் இருந்து அறியலாம்" என்கிறார்.

இக்கட்டுரை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு 2002-இல் கொண்டு வந்த 'கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம்' காலத்தில் எழுதப்பட்டது. ஜெயகாந்தன் அச்சட்டத்தை ஆதரிக்கிறார் ஏனென்றால் அச்சட்டம் மத மாற்றத்தைத் தடைச் செய்யவில்லை மாறாக ஆசைக் காட்டியோ, அன்பளிப்பு அளித்தோ செய்யப்படும் மத மாற்றங்களை மட்டுமே தடைச் செய்தது அது ஒரு நெறிப் படுத்துதலே என்கிறார்.

இன்குலாப் எழுதிய "சாரே ஜஹான் சே அச்சா" பாடலின் கடைசி வரிகளாக வரும் "ஹிந்தி ஹை ஹம்! ஹிந்தி ஹை ஹம்! ஹிந்தி ஹை ஹம்! வதன் ஹை ஹிந்துஸ்தான் ஹமாரா" என்பதைக் குறிப்பிட்டு உருது மொழியில் இஸ்லாமியரான இக்பால் எழுதிய அக்கவிதை இந்தியர்கள் அனைவரும் இந்துக்களே "எங்கள் நாடு ஹிந்துஸ்தானம்" என்ற முழக்கம் மீண்டும் இந்தியர்களின் செவிகளில் ஒலிக்க வேண்டும் என்கிறார்.

"ஹிந்து மதம் என்ற ஒன்று எவராலும் நிறுவப்பட்டதோ, அந்த மதத்துக்கு எவரும் மாற்றப் பட்டதோ, எவரும் அதிலிருந்து விலக்கப்பட்டதாகவோ கதைக் கூடக் கிடையாது" என்கிறார்.

மேற்சொன்னவையெல்லாம் இந்துத்துவர்களுக்கு உவப்பானவை. அதனால் ஜெயகாந்தனை இந்துத்துவராகச் சித்தரிக்கலாமா என்ற முடிவுக்கு வருவதற்கு முன் ஒரு சிறு விமர்சனம்.

ஜெயலலிதா அரசு கொண்டு வந்த மத மாற்றத் தடைச் சட்டம் வெறும் நெறிப்படுத்துதல் அல்ல. அது இந்துத்துவ அரசியலுக்காகச் செய்யப்பட்டது தான். மதத்தால் மக்கள் ஏமாறக் கூடாதென்றால் அன்றாடம் அநேக இந்துச் சாமியார்கள் ஏமாற்று வேலையையும் அதில் சேர்த்திருக்க வேண்டும்.

காந்தி முதல் ஜெயகாந்தன் வரை மத மாற்றங்களின் சமூக நிர்பந்தங்கள் சரி வரப் புரிந்து கொள்ளப் படவேயில்லை என்பது தான் உண்மை. மீனாட்சிபுரத்தில் பல நூறு குடும்பங்கள் இஸ்லாமுக்கு மாறிய போது அது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மீனாட்சிபுரத்துக்கே சென்று மதம் மாறியவர்களைப் பேட்டி எடுத்து ஜெயகாந்தன் 'ஈஸ்வர், அல்லா தேரே நாம்' என்றொரு நாவலை எழுதினார். அது நாவலாகவோ சமூக ஆய்வாகவோ கைக் கூடாத ஆக்கம். சமீபத்தில் தன் முனைவர் ஆய்வுப் பொருளாகத் திருமாவளவன் மீனாட்சிபுரத்தின் மத மாற்ற காரணிகளை ஆராய்ந்திருக்கிறார். அது இன்னும் எனக்குப் படிக்கக் கிடைக்கவில்லை. ஆனால் வெளியான சில பகுதிகளும் அந்நிகழ்வுக் குறித்து நான் படித்தறிந்தவையும் சொன்னவை அங்கு நிலவிய உயர் சாதி அடக்கு முறைக்கு அம்மத மாற்றம் ஒரு முக்கிய எதிர் வினை என்று.

இந்தியாவில் பிறந்த எல்லோரும் இந்துக்கள் என்பது எல்லாம் வெத்து வேலை. ஒரு கம்யூனிஸ்ட் பேசும் பேச்சே அல்ல அது. ஜெயகாந்தன் உண்மையிலேயே கம்யூனிஸ்டா என்றே விவாதிக்கலாம். ஜெயகாந்தன் அந்த மூலக் கவிதையைச் சரியாகப் புரிந்துக் கொண்டாரா என்பதும் கேள்வியே. விக்கிப்பீடியாவில் இருக்கும் வரிகள் சொல்வதெல்லாம் "ஹிந்தி ஹை ஹம்! வதன் ஹை ஹிந்துஸ்தான்". அதன் அர்த்தம் நாம் 'ஹிந்து' எனும் நிலப் பரப்பை அல்லது 'civilization' சார்ந்தவர்கள் என்பது தான். 'நாம் ஹிந்து மதம் சார்ந்தவர்கள்" என்ற அர்த்தம் வரவில்லை.

'சாரே ஜஹான் சே அச்சா' எழுதிய இன்குலாப் பின்னர் தீவிர பாகிஸ்தான் ஆதரவாளர் ஆனார். அக்கவிதையையே கூடச் சற்றே மாற்றி "நாம் எல்லோரும் முஸ்லிம் இந்த உலகம் நம் வீடு" என்று எழுதினார்.



எவரும் இந்து மதத்தில் இருந்து விலக்கப்பட்டதாக கதைக் கூடக் கிடையாதென்கிறார். அப்படியென்றால் பஞ்சமர்களுக்கு நேர்ந்தது என்ன?

ஜெயகாந்தன் அடிப்படையில் ஓர் மனிதாபிமானி என்பதை வள்ளலார் பற்றி அவர் ஆற்றிய உரை நமக்குச் சொல்கிறது. தெய்வத்தின் பெயரால் "பகைத் தீயை வளர்க்கும் மதாபிமானிகளைவிட" மத நம்பிக்கையற்றவர்களாயினும் "அன்பும் சமத்துவமும் நிலப் பெறப் பாடுபடும் நாத்திகவாதமுமே" உவப்பாக இருந்தக் காலத்தில் வள்ளலார் பற்றி அறிய நேர்ந்து வள்ளலாரை உள்வாங்கியவர் ஜெ.கே.

பெரியார் போற்றுதலுக்குரியவர்:


"பிராமணீயத்தையும் இந்து மதத்தையும் கடுமையாய் இழித்தும் பழித்தும் பேசிய பெரியார் இஸ்லாம் மதத்தில் சேரும் படி தாழ்த்தப்பட்டோரைத் தூண்டினார். ஐரோப்பாவைக் காப்பியடிக்கும்படி உபதேசித்தார்" என்று சொல்லி அதன் பொருட்டே பெரியாரின் கருத்துகளையு நிராகரித்ததாகச் சொல்கிறார் ஜெயகாந்தன். "கடவுளை நம்பாதிருந்த நான் கூடக் 'கடவுளை நம்புகிறவனெல்லாம் முட்டாள்' என்ற பெரியாரின் பொன்மொழியை ஆராயப் போய், கடவுளை ஆதரிக்கிறவனாகவும், மக்களுக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவின் மகத்துவத்தைப் போற்றுகிறவனாகவும் மாற நேர்ந்தது" என்கிறார்.

பெரியாரின் பிராமணத் துவேஷத்தை எதிர்கொள்ள "உடம்பு கூசியது" என்றும் அத்துவேஷம் "தனிப்பட்ட முறையிலும் சமுதாய அளவிலும் ஆராய்ச்சிக்கே இடமில்லாத அநாகரீகம்" என நிரூபனமானதென்கிறார்.

பெரியாரின் நூற்றாண்டு விழா நடந்த ஆண்டில் எழுதப்பட்ட இக்கட்டுரையில் அவரது "கொள்கைகள், அவரது கோட்பாடுகள் பல எதிர்மறை அம்சங்கள்" கொண்டிருந்தாலும் "மண்ணில் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், கடவுளின் பெயராலும் ஏற்றத் தாழ்வுகளும் அடிமைத் தனமும் ஒடுக்கு முறையும் நிலவுகிற வரை பெரியாரின் கொள்கைகளுக்குத் தமிழர்கள் கூட்டங் கூடு திருவிழா எடுத்துக் கொண்டு தான் இருப்பார்கள்" என்ற நம்பிக்கையைத் தெரிவித்து "மக்களின் அந்த உணர்ச்சி 'வகுப்பு வாத பிற்போக்கு வெறியர்களுக்கு எதிராகப் பயன்படுமாறு ஜனநாயக இயக்கங்கள்" இங்கு அமைய வேண்டும் என்பதையும் அக்கறையோடு சுட்டிக் காட்டுகிறார் ஜெயகாந்தன்.

நேரு:


இந்துத்துவர்களின் அடி வயிற்றிலிருந்து அமிலத்தை உமிழ வைக்கும் சக்தி ஒரேயொரு பெயருக்குத் தான் இருக்கிறது அந்தப் பெயர் 'ஜவஹர்லால் நேரு'.

ஜெயகாந்தன் நேருவை தன் ஆசிரியர் நிலையில் வைத்துப் பேசுகிறார். "Glimpses of World History" மூலம் சரித்திரம் பயின்றதாகவும் அதன் மூலமே நம் பழங்காலச் சரித்திரத்தையும் நம் சரித்திரம் போன்றே மற்ற பண்டைய நாகரீகங்களின் சரித்திரம் இருந்ததையும் அறிந்ததாகச் சொல்கிறார். நேருவைப் பற்றி இந்துத்துவ அறிவிலிகள் சொல்லும் குற்றச்சாட்டு அவர் இந்திய பாரம்பர்ய பண்பாட்டை மதிக்கவில்லை என்பது. ஜெயகாந்தனின் பார்வையில் நேரு இந்திய வரலாற்றையும் பண்பாட்டு வேர்களையும் சம நோக்கோடு அங்கீகரித்தவர்.

"வேதங்களைப் பற்றியும் உபநிஷத்துகக்களைப் பற்றியும் மஹாபாரத இராமாயண இதிகாசங்களைப் பற்றியும் அவர் மிக உயர்வான மதிப்பீடுகளைப் பல நூல்களில் வழங்கியிருக்கிறார்".  
"மதங்களில் ஏற்பட்டிருக்கிற சீரழிவையும், மூட நம்பிக்கைகளையும் அவர் கடுமையாக வெறுத்தார். எனினும் அவற்றின் மூல மேன்மைகளை அவர் மறந்ததுமில்லை; மறுத்ததுமில்லை. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தைப் பற்றி, அதில் மிளிர்ந்த ஜனநாயகப் பண்புகள் பற்றி, அர்த்த சாஸ்திரம் வல்யுறுத்துகிற வாழ்வியல் முறைகள் பற்றி அவர் மிகவும் உன்னதமான மதிப்பீடுகளைச் செய்திருக்கிறார்". 

மேற்சொன்ன இரு கருத்துகளுக்கும் ஜெயகாந்தன் அநேகமாக ஆதாரமாகக் கொண்டது 'இந்தியாவைக் கண்டடைதல்' நூலாக இருக்கும். ஏன் 'பல நூல்கள்' என்று ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை.

நேருவின் "இதயம் மிகவும் விசாலமானது" என்று சொல்லி, "இவரது எண்ணங்களால், எழுத்துகளால் அசோகன் காலத்து இந்தியாவைப் போல் இந்தத் தேசம் இவர் (நேரு) காலத்தில் புத்தியிர் பெற்றது" என்று கட்டுரையைக் கொஞ்சம் அதீதமான விதந்தோதலுடன் முடிக்கிறார் ஜெயகாந்தன்.

கவனிக்க வேண்டியது ஜெயகாந்தன் நேருவிடம் வியந்த குணாதிசியங்கள். இவரா இன்று இந்துத்துவத்தை ஏற்பார். ஆர்.எஸ்.எஸ் பற்றிய கட்டுரை தான் இத்தொகுப்பிலேயே மிக இண்டது. 30 பக்கங்கள். கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்:


ஜெயகாந்தனின் பிள்ளைப் பருவத்தில் அவர் சுற்று வட்டாரத்தில் ஆர்.எஸ்.எஸ் "காளமேகம் போல் தமிழ் இளைஞர்களைக் கவர்ந்து கொள்ள முயன்றது". அவர் பார்த்த ஆர்.எஸ்.ஏஸ்-இல் "முஸ்லிம் சிறுவர்களோ, தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த சிறூவர்களோ, கிறிஸ்தவர்களோ ஒருவர் கூட இருக்கவில்லை".

இரண்டாம் உலக யுத்தம் முடிந்திருந்த காலத்தில், அப்போது ஜெயகாந்தனுக்கு 10-11 வயது, டாங்கிகளும், போர் விமானங்களும் அறிமுகமாகியிருந்த சூழலில் ஆர்.எஸ்.எஸ்-இன் உடற்பயிற்சி முறைகளைப் பகடிச் செய்கிறார் ஜெயகாந்தன். "பாவம் இந்தப் பிராமணப் பிள்ளைகள் இந்தக் காலத்தில் வாளும் கேடயமும் தூக்கிக் கொண்டு, பண்டைக் காலக் காட்டுமிராண்டிகள் போல் ஆடுகிறார்களே" என்று நகைக்கிறார். அவர்களின் அரசியல் குறித்து அடுத்துக் காட்டமாகச் சொல்கிறார்.
" 'நான் ஒரு ஹிந்து' என்று ஒரு வகை, அருவறுக்கத்தக்க ஆவேசத்துடன் இவர்கள் கூறிக் கொண்டார்கள். அமைதியும் சாந்தமும் அகிம்சையும் வடிவமாகக் கொண்டு நம்மிடையே வாழ்ந்துக் கொண்டிருக்கிற மஹாத்மா காந்திஜியின் மூலம் இந்த 'ஹிந்து' என்ற வார்த்தைக்கு உயரிய பொருள் கொண்டு - நானும் ஒரு ஹிந்துவே என்று உணர்ந்தவன் நான். ஆயினும் இந்த ஆர்.எஸ்.எஸ்காரர்கள் 'நான் ஹிந்து...ஹிந்து' என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு நின்ற போது - 'நான் ஹிந்து இல்லை...ஹிந்து இல்லை' என்று கத்திக்கொண்டு ஓட வேண்டும் போல் எனக்குத் தோன்றியது"
ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட பின் "அதே ஸ்வஸ்திகா சின்னத்துடன் ஒரு காவி முக்கோணக் கொடியை ஏற்றி நெஞ்சில் கை வைத்துச் சல்யூட்" அடித்த ஆர்.எஸ்.எஸ் நண்பர்களைப் பார்த்து "அறிவீனம்' என்று மட்டுமே எண்ணியதாகவும் "அது ஒரு புதிய ஆபத்தின் அறைகூவல்" என்று அப்போது பலருக்கும் புரியவில்லை என்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் பற்றி மேலும் அறிந்தப் போது அவர்கள் "முற்றமுழுக்கப் பாசிசத்தையே ஹிந்து வர்ணம் பூசித் தரித்துக் கொண்டவர்கள்" என்று கண்டு கொண்டார் ஜெயகாந்தன். காந்தி கனவுக் கண்ட சமத்துவத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரின் கனவான "ஹிந்து ராஷ்டிரத்தில் இடம்" கிடையாது என்று தெளிவாக உணர்கிறார் ஜெயகாந்தன். அகண்ட ஹிந்துஸ்தானத்துக்குத் தாங்களே அதிபர்கள் என்று 'ஜெர்மன் நாஜிகள் போன்றே நம்பினார்கள்" என்கிறார். சவர்க்கரை ஹிட்லரோடு ஒப்பிட்டே பேசுகிறார் ஜெயகாந்தன்.

பாகிஸ்தானைப் போன்றே இந்தியாவிலும் ஹிந்து மதத்தின் பேரால், இங்கே வாளேந்தி மற்ற மதத்தினரைப் பூண்டோடு அழிக்கவும் சர்வாதிகார ஆட்சியை நிறுவவும் இவர்கள் அன்றே போர் சன்னத்தர்களாயினர்" என்று பின்னோக்கிப் பார்த்துச் சொல்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் தடை நீக்கம் பெற்று பல கட்சிகளையும் ஊடுறுவி நிற்கிறது என்றும் காந்தியின் கொலைப் பழியிலிருந்து தங்களை விடுவிக்கும் பொருட்டுக் கோட்ஸே ஆர்.எஸ்.எஸ் காரன் இல்லையென்றும் (கோட்ஸெ உண்மையில் ஆர்.எஸ்.எஸ்-ஐ விட்டு வெளியேறியப் பிறகு தான் கொலைச் செய்தான்) "ஆயிரம் பொய்களைப் பேசி அழகாக முடிச்சவிழ்க்கப் பார்க்கிறார்கள்" என்று குற்றம் சாட்டுகிறார்.

ஆர்.எஸ்.எஸ்-ஐ தமிழர்கள் எதிர்க்க வேண்டும் என்கிறார் ஜெயகாந்தன். "இவர்களை எதிர்த்தும், இவர்கள் மத நெடி வீசுகிற கருத்துக்களைக் காறித்துப்பியும், வெறும் இந்து வீரம் பேசி மதத்துவேஷம் வளர்க்கின்ற மாய் மாலத்தையும், ஆரியப் பெருமையையும் தமிழர்கள் ஆப்பாரைந்து தகர்திருக்கிறார்கள். இனியும் தகர்ப்பார்கள்".

ஆர்.எஸ்.எஸ்-இன் மத வெறிக்கு எதிராகத் திராவிட இயக்கத்தின் நாத்திகம் வேருன்றியதைச் சுட்டிக் காட்டி ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்க்க முக்கியமான உத்தியை ஜெயகாந்தன் சொல்லியிருக்கிறார்.

"நமது தொழிலாளி வீட்டுப் பிள்ளைகளும் விவேகாநந்தர், காந்திஜி, பாரதி, ராமலிங்க அடிகளார் போன்றோரின் சமரச சத்திய ஞானப் போதனைகளைப் பயிற்றுவிக்கிற இளைஞர் இயக்கங்களை ஊர்கள் தோறும் தோற்றுவிக்க வேண்டும்". இதைச் செய்யத் தமிழர்கள் தவறியதால் தான் இன்று நம்மிடையே பா.ஜ.க காலூன்றியதோடு இந்துத்துவர்களின் மாய்மாலப் பிரச்சாரங்களை எதிர் கொள்ள ஒரு அறிவியக்கம் தமிழர்களிடையே இல்லாமல் போனது.

"தமிழகமே உஷார்! இவர்களைச் சந்திக்கத் தயார் நிலையில் நில்!" என்கிறான் 'ஆல் அமர்ந்த ஆசிரியன்'

'நீங்கள் எந்தப் பக்கம்?'


அநேகமாக 1996-2001 காலக் கட்டத்துக்குள் பா.ஜ.க பங்குப் பெற்ற ஏதேனும் ஒரு தேர்தலின் போது எழுதப் பட்டதாக இருக்கும் 'நீங்கள் எந்தப் பக்கம்?' என்ற தலைப்பிட்டக் கட்டுரை.

மிகத் தெளிவாகச் சொல்கிறார் ஜெயகாந்தன், "ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அரசியல் இயக்கமே பாரதிய ஜனதாவும் அதன் அணியைச் சேர்ந்த கட்சிகளுமாகும்". இந்த அணி ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் "பல விஷயங்களில் மாறுபாடு கொண்ட கட்சிக் கொள்கைகள் உடையனவாயினும் காந்தியின் சித்தாந்தமான மத ஒற்றுமையை ஏற்றுக் கொண்டு அதற்காகப் பாடுபடும் கட்சிகள்". "இதில் எதைப் பெரும்பான்மை இந்திய வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்?"

"பாஸிசத்தை எதிர்த்து, உலக அறிஞர்களையும் எழுத்தாளர்களையும், ஒவ்வொரு பிரஜையையும் ஒன்று திரட்ட ஒரு காலத்தில் 'நீங்கள் எந்தப் பக்கம்?' என்று ஒரு கேள்வியை" மாக்ஸிம் கார்க்கி முன் வைத்தார். அதே கேள்வியை இந்திய வாக்காளன் முன் வைக்கிறார் ஜெயகாந்தன். இவரா சோ இராமசாமியோடு வைக்கத் தகுந்தவர்? இவரா இந்துத்துவர்? இவரா மோடிக்கு ஆதரவளிப்பார்?

'விசாலப் பார்வைக் கொள், தமிழா!'


அநேகமாக 1996-2001 திமுக ஆட்சியில் எழுதப்பட்ட கட்டுரை, 'விசாலப் பார்வைக் கொள், தமிழா!'. அகிலனுக்குப் பிறகு தமிழ் எழுத்தாளர்கள் யாருக்கும் ஞானபீடம் கொடுக்கப்பட்டதில்லை என்று வருத்தம் நிலவுவதைச் சிறு எள்ளலோடு குறிப்பிட்டு அதைப் பற்றிக் கவலைப் படாமல் தமிழர்கள் இந்திய மொழிகளை, சமஸ்கிருதம், உட்படத் தமிழ் நாட்டில் கௌரவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, "இந்தியாவைப் பற்றியும் இந்திய மொழிகள் குறித்தும் நமது பார்வை விசாலமுறுதல் வேண்டும்" என்கிறார். "விசாலப் பார்வையால் இந்தியாவையே நாம் விழுங்குதல் வேண்டும்" என்று பாரதிதாசனை எதிரொலிப்பவரா இந்துத்துவத்துக்குக் குடைப் பிடிப்பார்? அறிவிலிகளே உங்கள் மனச் சுருக்கத்தையும் மன விகாரத்தையும் கொண்டு ஒரு சமூகத்தின் ஆசிரியனை அளக்க முற்படுகிறீர்கள்.

ரவி சுப்ரமணியனின் நாலாந்தர ஆவணப் படத்தில் ஆங்காங்கே வரும் நல்ல தருணங்களில் இரண்டு முக்கியமானவை. என் பார்வையில்.

கர்நாடக மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கக் கிளம்பிய எதிர்ப்பும் அது சார்ந்து தமிழகத்தில் கர்நாடக மாநிலம் மீதும் இங்கு வாழும் கண்ணடர்கல் மீதும் எழுந்த அதிருப்தி தமிழர்களுக்கு அழகு சேர்ப்பதல்ல என்று சொல்லி தமிழர்கள் கர்நாடகாவுக்குப் பெருந்தன்மைக் கற்பிக்கும் பொருட்டுத் தமிழ் நாட்டில் கர்நாடக கவி ஒருவருக்குச் சிலை எழுப்ப வேண்டும் என்று சொல்லும் இடம் முக்கியம். இவரா இந்து மதம் மற்ற மதங்கள் தன்னோடு நல்லிணக்கமாக இருந்தால் மட்டுமே சகோதரத்துவத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்வார்?

யாரோ ஒரு வடக்கத்திய சங்கராச்சார்யார் ராமன் பற்றிச் சொன்ன கருத்தைப் பற்றிக் கேட்கும் போது வெகுண்டெழுகிறார், "யாரோ சங்கராச்சாரி ஏதோ சொன்னானாம் அதற்கு நான் பதில் சொல்ல வேண்டுமா? வெறுப்பைத் தேடிக் கொண்டு அலைகிறீர்கள்". இவரா இந்துத்துவர்?

கருத்துகளும் பார்வைகளும்:


ஜெயகாந்தனின் நாவல்களில் பல சுவாரசியமானதும் விவாதப் பொருளாவதும் அவரது முன்னுரைகளே. இத்தொகுப்பிலும் அவ்வாறே. இரண்டு மேற்கோள்கள் கீழே:
"எனது கருத்துக்களை கேட்கிறவர்களும், படிக்கிறவர்களும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்ப்பார்ப்பதுமில்லை. அதற்கு எதிரான மாறுதலான கருத்துகள் ஏற்கனவே நிலவி வருவதை நன்கு தேர்ந்தப் பிறகே நான் அவற்றை வெளிப்படுத்துகிறேன். அதன் மீது விவாதமும் ஆதரவும் மறுப்பும் ஏற்படுவது அவற்றின் இயல்பேயாகும் என்பதால் எனது கருத்துகளை மறுப்பவர்கள் மீதும், மாறுபாடு கொள்பவர்கள் மீதும் எனக்கு மாச்சர்யங்கள் ஏற்படுவதில்லை"
"இது எனது பார்வை. இது ஒன்று தான் பார்வை; இதுவே சரியான பார்வை என்பதோ, வேறு பார்வைகளை நான் மறுக்கிறேன் என்றோ இதற்குப் பொருள் அல்ல. எனது பார்வைக்கு என்று நான் எடுத்துக் கொள்ளுகிற விஷயங்களும் மனிதர்களும் எனது பார்வைக்குள் மட்டும் அடங்கி விடுகிறவை அல்ல. அவை மேலும் மேலும் அறியத் தகுந்தன. அவற்றின் வரம்பும் எல்லைகளும் விரிக்க விரிக்கப் பெருகும் இயல்புடையன."
ஜெயகாந்தன் என்கிற மானுடத்தை நேசித்த கலைஞனை மூடர்கள் மட்டுமே ஒரு வெறுப்பியக்கத்தோடு சம்பந்தப் படுத்த முடியும். அதைச் செய்த ஒருவர் மென்மையான எதிர் வினகைகளைக் கூடப் பொறுத்துக் கொள்ளவோ மெலும் விவாதிக்கவோ இயலாதவர். அவருக்கு ஜெயகாந்தனைப் புரியாமல் போனது விந்தையல்ல. ஒருவரை புரிந்துக் கொள்ளவும் ஏற்கவும் அவர் வாழ்வும் கருத்தியலும் நம் உள்ளத்தோடு ஓரளவுக்காவது சேர்ந்திசைக்க வேண்டும் (Resonate).

இப்புத்தகத்தைப் படிக்கும் போதும் சமீபத்தில் ஜெயகாந்தன் பற்றி இன்னொருவருடன் வாதிடும் போதும் என் மனத்தில் தோன்றிய வாசகம் ஜெயமோகன் ஜெயகாந்தனை 'ஆல் ஆமர்ந்த ஆசிரியன்' என்று தன் அஞ்சலி உரையில் குறிப்பிட்டது. கிறிஸ்தவம், இஸ்லாமிய அடிப்படை வாதம், மத மாற்றம், இந்து மதத்தில் தான் கொள்ளும் பெருமிதம் ஆகியன பற்றி மிக மிகக் காத்திரமாக இன்றும் எழுதுகிறவர் ஜெயமோகன். அவற்றில் பல கருத்துகளோடு நான் முரண்படுகிறவன் ஆனால் ஜெயமோகனும் ஜெயகாந்தனும் இணையும் புள்ளி, ஆர்.எஸ்.எஸ் பற்றிய விமர்சனத்தில் அல்ல, இந்து மதம் இந்துத்துவம் அல்ல என்பதிலும் இந்து மதத்தை இழிவு செய்வது இந்துத்துவம் என்பதிலும் தான்.

ஜெயகாந்தன் 'ஆல் ஆமர்ந்த ஆசிரியன்' ஆனால் அவரின் விழுதுகள் அவரைப் புரிந்து கொண்ட வாசகர்களேயன்றி அங்கொன்றும் இங்கொன்றும் படித்துத் தங்கள் சவுகரியத்துக்கு அவரை வளைப்பவர்களோ பிதுரார்ஜித உரிமைக் கொண்டாடுபவர்களோ அல்ல.

பின் குறிப்பு: 


ஜெயகாந்தன் படங்களுக்காக இணையத்தைத் தேடிய போது கிடைத்தது தான் அந்தக் கறுப்பு-வெள்ளை 'RSS' என்று எழுதி மண்டை ஓட்டோடு இருக்கும் படம். அது வெளியானது 'கல்பனா'. அப்படத்தில் 'ஜெயகாந்தனின் கல்பனா' என்பது தெரிகிறது. ஜெயகாந்தனின் படத்தின் கீழே மங்கலாகத் தெரியும் பெயர் 'ரா. கிருஷ்ணையா'. கிருஷ்ணையா ஜெயகாந்தனின் உற்ற நண்பரும் கல்பணாவின் பதிப்பாசிரியரும் ஆவார். அவர் ஒரு வகையில் எனக்கு உறவினரும் கூட. அவர் மகன் மணந்தது எங்கள் வீட்டுப் பெண்ணை. ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவன்' படமாக்கலில் உதவி புரிந்தார் கிருஷ்ணையா என்று கேள்வி. ஜெயகாந்தனின் 'ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்" புத்தகத்தில் தோழர் கிருஷ்ணையா என்றே ஒரு அத்தியாயமுண்டு. கிருஷ்ணையா சோவியத் ரஷ்யாவில் கலாசார நிறுவனம் ஒன்றில் ரஷ்யாவிலும் பணியாற்றி இருக்கிறார். அகிலனின் 'நான் கண்ட ரஷ்யா'வில் கிருஷ்ணையா பற்றிக் குறிப்புண்டு.

References:

1. 'எனது பார்வையில்' - ஜெயகாந்தன். கவிதா பதிப்பக வெளியீடு
2. https://en.wikipedia.org/wiki/Sare_Jahan_se_Accha
3. https://ta.wikipedia.org/wiki/இந்தியாவில்_சிறுபான்மையினர்_உரிமை
4. https://en.wikipedia.org/wiki/Jayakanthan#Awards_and_honours

No comments: