Thursday, September 22, 2022

வீர சாவர்க்கர் பற்றி மகாகவி பாரதி:

 இந்திரா பார்த்தசாரதி செப்டம்பர் 19 அன்று “It is surprising that Bharati has nowhere mentioned Savarkar in his poems or prose works, although V.V.S. Iyer, (Bharathi’s mentor in a way) and Savarkar were close friends when they were in UK. Bharati’s silence in regard to Savarkar seems to be eloquent” என்று ட்வீட்டினார். உடனே நண்பர் உட்படஆஹாஎன்றார்கள். அதாவது சாவர்க்கரின் இந்துத்துவ அரசியலால் பாரதி அவரை நிராகரித்து விட்டார் என்று அர்த்தப் படுத்திக் கொண்டார்கள். 




அப்போதே இதில் எனக்கு சந்தேகம் வந்தது. நண்பருக்கு பதில் ட்வீட்டில் சாவர்க்கர் இந்துத்துவரானது விடுதலைக்குப் பின் தான் (வெளியுலகுக்குத் தெரிந்து), அவர் விடுதலை ஆனது 1924, அப்போது பாரதி இறந்து விட்டிருந்தான். பாரதியின் ஆயுள் காலத்தில் சாவர்க்கர் விடுதலைக்காக சிறை சென்றவர், அவ்வளவே. வீட்டுக்கு வந்ததும் சீனி விசுவநாதனின்கால வரிசையில் பாரதி படைப்புகள்தொகுதிகளைப் புரட்டினேன். இண்டெக்ஸ் உதவியுடன். கிடைத்தது பொக்கிஷம். தொகுதி 7-இல் இரண்டு இடத்தில் சாவர்க்கர் பற்றி பாரதி எழுதியிருக்கிறான். ஓரிடத்தில் விரிவான பாராட்டாகவே. பார்ப்போம்.



பக்கம் 81:

ஶ்ரீ விநாயக தாமோதர ஸ்வர்க்கர் எழுதியுள்ளஹிந்துஸ்தான் ஸ்வதந்திர யுத்தம்எனும் 1857-ம் வருஷத்திய சிப்பாய் கலக சரித்திரத்தையும் பிரிடிஷ் இந்தியாவுக்குள் கொண்டுவரக்கூடாதென்று இங்கிலீஷ் வைஸிராயின் உத்தரவு” (இந்தியாவுக்குள் கொண்டு வரக்கூடாத ஐந்து பத்திரிகளைப் பட்டியலிட்டு இப்புத்தகம் குறித்தும் எழுதுகிறான் பாரதி) — ‘இந்தியாபத்திரிக்கையில் அக்டோபர் 16, 1909



பக்கம் 189-191 : “ஸ்ரதார்கள் ,ஊவர் ; ஸவர்க்கர்கள் மூவர்

(பாஞ்சாபில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஸர்தார்கள் பற்றியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஸவர்க்கர்கள் பற்றியும் டிசம்பர் 4, 1909 அன்றுஇந்தியாபத்திரிக்கையில் முதல் பக்கத்தில் வெளிவந்த கட்டுரை இது)

பம்பாய் மாகாணத்தில் ஒரே குடும்பத்தில் பிறந்து தேச மாதாவின் ஸேவைக்காகத் தொண்டு பூண்டு, பிரிடிஷ் அரசாங்கத்தாரால் பல அயோக்கியமான தண்டனைகள் விதிக்கப்பெற்ற ஸவர்க்கர் ஸஹோதரர்கள் மூவர். அவர்களின் பெயர்கள் வருமாறு: ஶ்ரீ விநாயக தாமோதர ஸவர்க்கர், ஶ்ரீ கணெச தாமோதர ஸவர்க்கர், ஶ்ரீ கோவிந்த தாமோதர ஸவர்க்கர்.

இவர்களில் ஶ்ரீ விநாயக தாமோதர ஸவர்க்கர் பாரிஸ்டர் பரீக்‌ஷைக்குப் படிப்பதற்காக லண்டன் நகருக்குப் போனார். அங்கு ஸர் வில்லியையும், டாக்டர் லால்காகாவையும் சுட்டுக் கொன்ற ஶ்ரீமான் மதனலால் திங்கராவை நியாய ஸ்தலத்தில் விசாரனை செய்து முடிக்கும் முன் கொலைப் பாதகனென்று சொல்லக்கூடாதென்று ஒரு ஸபையில் அக்‌ஷேபித்ததற்காக வெளிப்படுத்தப்பட்டார். பிறகு மிடில் டெம்பில் பாரிஸ்டர்கள் இவரைத் தங்கள் ஸமூகத்தினின்று நீக்கி விட்டார்கள். ஹிந்துஸ்தான் ஸ்வதந்திர யுத்தத்தைப் பற்றி (1857-ஆம் வருஷத்து கலகம்) இவர் எழுதியுள்ள புஸ்தகத்தை இந்தியாவுக்குள் தரை வழியாகவாவது, கடல் வழியாகவாவது கொண்டு வரக் கூடாதென்று இந்திய கவர்மெண்டார் உத்தரவு செய்துவிட்டார்கள். இவர் இன்னும் லண்டனிலேயே இருக்கிறார்.

இவருடைய தம்பி ஶ்ரீ கணேச தாமோதர் ஸவர்க்கர். இவர் நாஸிக்கில் ஏதோ ராஜ நிந்தனையான பாடல்களை மராட்டி பாஷையிலே எழுதி, பிரசுரம் செய்து நாடெங்கும் பரவும்படி செய்து, அதில் பிரிடிஷ் ராஜாவுடன் போர் புரியும்படி ஜனங்களைத் தூண்டி எழுதியதாய் குற்றம் சாட்டப்பட்டு சொத்து பறியுடன், ஆயுள் பரியந்தம் தீபாந்திர சிக்‌ஷை விதிக்கப்பட்டார். இதன் பேரில் இவர் பம்பாய் ஹைகோர்ட்டுக்கு அப்பீல் செய்தார். ஜஸ்டிஸ்கள் டாக்டர் சந்திரவர்க்கரும் ஹீட்டனும் கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பை உறுதிப்படுத்தி அப்பீலை தள்ளி விட்டார்கள்.

இவருடைய தம்பி ஶ்ரீ கோவிந்த தாமோதர ஸவர்க்கர். இவர் சிறுவரான போதிலும், போலீஸ் புலிகள் இவரை வஞ்சனையில்லாமல், சோதனை போட்டும், உபத்திரவப் படுத்தியும் போலீஸ்கார ஒற்றர்கள் (வேவுகாரர்கள்) அவரைக் கவனித்துக் கொண்டும் வருகின்றார்கள்.

இவர் என்றைக்கு கொட்டடித் தாக்கல்லோ தெரியவில்லை.

என்ன! இவர்கள் ஸமத்வம்! என்ன தேச ஸேவை! எங்களால் சொல்ல முடியவில்லை

தேசமாதா உவந்த உள்ளன்புடன் ஆசி கூறுவதாக. இவர்களைப் பிள்ளையாய்ப் பெற்றவர்கள் பாக்கியமே பாக்கியம்.

ஸர்வ ஜீவ தயாபரனான கடவுள் ஸர்த்தார் மூவர், ஸவர்க்கர் மூவர் ஆகிய இவர்கள் ஆரு பேர்களுக்கும் அயர்வில்லா திருவருள் தந்தருள்வாராக. வந்தே மாதரம்

என் குறிப்பு:

சாவர்க்கர் வழக்கு இந்தியாவில் செப்டம்பர் 10, 1910 ஆரம்பித்து 1911 வரை நீண்டது. ஜூலை 4 1911 அவர் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார். 1910-1913 வரை பாரதி மிக நலிவுற்று அரசியல் செய்திகள் எழுதாமல் சின்ன சங்கரன் கதை., பாஞ்சாலி சபதம், ஆறிலொரு பங்கு, புதிய ஆத்திசூடி, கேநோபநிஷத் என்று ஆன்மிக பாதையில் எழுதினான். மிகச் சொற்பமான ஆனால் முத்தான எழுத்துகள். பாரதி தொகுப்பிலேயே இந்த மூன்று வருட காலத்தை உள்ளடக்கிய 8-ஆம் தொகுதி தான் மிகச் சிறியது.

சாவர்க்கர் இந்துத்துவரானது சிறைவாசத்தின் போது. அவரும் அவர் தம்பியும் அனுபவித்த சிறைவாசம் மிகக் கொடிது. அவர் தம்பியின் தலையில் பழந்துணியை வைத்து விலங்கிட்டு வீதிகளில் இழுத்து வரப்பட்டார். அது ஜாதிய இழிவுக்காகவே அரசு செய்திருக்க கூடும். அக்காலத்தில் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன. குடும்பங்கள் நடுத்தெருவில்.  கணேஷ தாமோதர சவர்க்கரின் மனைவி உள்ளம் உடைந்து அபலையாக இறந்தாராம்

சாவர்க்கரின் சிறைவாசம் கொடிது. இன்று அவரின் மன்னிப்புக் கடிதம் குறித்து ஏளனம் செய்வோர், நாகரீகமாகச் சொல்கிறேன், அறிவிலிகள். சாவர்க்கரின் இந்துத்துவ அரசியல் அவரின் பிந்தைய வாழ்வு அதனை விமர்சிப்பதும் ஒதுக்குவதும் வேறு. சமீபத்திய சில புத்தகங்களின் வாசிப்பின் அடிப்படையில் சொல்வேன் காந்தியின் கொலையில் சாவர்க்கர் விடுவிக்கப்பட்டிருக்கக் கூடாது. அதற்காகவே அவரின் சிலையை பாராளுமன்றத்தில் நிறுவியதும் தவறென்பேன்.  'Veer' Savarkar: Question His Politics, Not His Bravery or Patriotism. The Freedom Struggle and Jail Going.” என்று நான் எழுதிய கட்டுரையின் சுட்டி இங்கேhttps://contrarianworld.blogspot.com/2017/06/veer-savarkar-question-his-politics-not.html


No comments: