தேர்தல் என்பதே அரசு நடத்த ஆட்சியாளர்களை ‘தேர்ந்தெடுப்பது’ தான். தேர்தலில் முதன்மைக் கேள்வி தற்போதய அரசின் மீதான மக்களின் தீர்ப்பு, இரண்டாவதாக, நடக்கும் அரசுக்கு மாற்றுத் தேவை என்று மக்கள் கருதினால் அத்தகைய மாற்றத்தை அளிக்கக் கூடியக் கூட்டணி இருக்கிறதா என்ற தேடல். தமிழகத்தில் பெரும்பாலும் இரண்டு பிரதானக் கட்சிகளும் மாறி மாறித் தான் ஆட்சி செய்திருக்கின்றன. எந்த கட்சியையும் பிரத்தியேகமாக சமூக சீர்கேடுகளுக்கு காரணமென்று மக்கள் நினைப்பதில்லை, அவ்வப்போது அந்தந்த ஆட்சியை நீக்குவது இந்த சீர்கேடுகளுக்கு அதிகார மாற்றம் ஒரு குறைந்த பட்ச பிரேக்காக இருக்கும் என்று கருதுவதே காரணம். தமிழகம் அமைதிப் பூங்கா என்பதே ஒரு பிம்பம் தான். கடந்த 5 ஆண்டு ஆட்சியில் தொடர்ச்சியாக நடந்த வன்முறைகள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதென ஒரு சித்திரத்தை அளிக்கிறது.
லாக்கப் மரணங்கள்:
கடந்த அதிமுக ஆட்சியில், 19 ஜூன் 2020 அன்று பென்னிக்ஸ், ஜெயராஜ் என்று இருவர் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் மிகக் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு இறந்தது தமிழகர்ரை உலுக்கியது. அப்போதைய எதிர்கட்சியான திமுக இதனை கடுமையாக கண்டித்தது. ஆனால் அடுத்து வந்த திமுக ஆட்சியில் லாக்கப் மரணங்களின் எண்ணிக்கையும் கொடூரமும் கொஞ்சமும் குறையவில்லை.
மிக முக்கிய சட்டம்=ஒழுங்கு சீர்கேடு காவல்துறையால் நடத்தப்பட்ட லாக்கப் மரணங்களே, 5 ஆண்டுகளில் 27 லாக்கப் கொலைகள் நடந்துள்ளன, பாதிக்கப்பட்டோரில் 11 பேர் (40%) பட்டியல் இனத்தவர் என்று 'தி நியூஸ் மினிட்' ஆய்வு சொல்கிறது.
![]() |
| The News Minute Graphics |
ஒரு காவல் அதிகாரி, பல்வீர் சிங், மிகக் கொடூரமாக விசாரணைக் கைதிகளின் பற்களை கொரடால் பிடுங்குவதை வழக்கமாகவே கொண்டிருந்தார். இவர் மீது வழக்கு பதியப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டது ஆனால் அந்த நீக்கம் சட்ட விதிகளைச் சுட்டிக் காட்டி அரசு ரத்து செய்தது. மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன், 'இடைநீக்கத்திற்கு கால வரம்பு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த காலகட்டத்திற்குள் உரிய நடவடிக்கையை எடுக்காதது யார் தவறு? முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் துறை இது. அவர் பதில் அளிப்பாரா? தேர்தல் வரும்போது என்னவெல்லாம் சொன்னார்களோ அதற்கு மாறாகச் செயல்படுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி அமுதா அளித்த அறிக்கை ஏன் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது? அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு ஒன்பது மாதங்களாகியும் எந்த நடவடிக்கை முடிவும் ஏன் எடுக்கப்படவில்லை? இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டது. அது தொடர்பாக இப்போதுவரை அரசு பதிலளிக்கவில்லை. "
![]() |
| The BBC |
கைது செய்யப்பட்டோர் காவல் நிலைய கழிப்பறைகளில் ‘வழுக்கி விழுந்து’ கை முறிந்ததென்று சொல்லும் வழக்கம் பரவலானது. இம்முறைகேடு சென்ற அதிமுக ஆட்சியில் ஆரம்பித்து தற்போது வழக்கமாகவே மாறிவிட்டது. 2020, மே மாதம் வெளியான ஒரு கட்டுரை காவல்துறையில் விசாரணையின் போது 'வழுக்கி விழுந்தவர்கள்" எண்ணிக்கையைக் கேட்டு காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது என்கிறது. ஆகஸ்டு 2024-இல் காவல்துறை விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர்களை ஆபாசமாகப் பேசி தாக்கும் காணொளி வெளியாகி சர்ச்சையானது. மே 2025 ஐகோர்ட், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழுக்கி விழும் நிலையில் காவல் நிலைய கழிவறைகள் மட்டும் உள்ளதா" என்று வினவியது.
குண்டாஸ் முறைகேடு:
குண்டாஸ் சட்டம் தொடர்ச்சியாக இந்த அரசு துஷ்பிரயோகம் செய்கிறது. திமுக அரசை விமர்சிக்கும் சவுக்கு சங்கர் மீது தொடர்ச்சியாக குண்டாஸ் சட்டம் ஏவப்பட்டது, நீதிமன்றங்கள் அதனை ரத்து செய்து சங்கரை விடுவித்தன. அரசியலர் ஏர்போர்ட் மூர்த்தி மீதும் குண்டாஸ் ஏவப்பட்டு பின் நீதிமன்றம் ரத்து செய்தது. பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரியின் சர்ச்சையான பேட்டிக்கு அவர் கைது செய்யப்பட்டது பலரால் கண்டிக்கப்பட்டது.
தூத்துகுடி கள்ளச் சாராய மரணங்கள்:
அதிகார துஷ்பிரயோகத்தில் காட்டிய மும்முரத்தை காவல்துறை மக்களைக் காக்கக் காட்டியிருன்ந்தால் அதிகபட்சம் 6 பேர் மரணத்தோடு முடிந்திருக்க வேண்டிய கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் 65 பேர் இறக்கக் காரணமானது, தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி துயர சம்பவம் சட்டம் ஒழுங்கின் நிலையைக் கேள்விக் குறியாக்கியது. 'தி இந்து' பத்திரிக்கை இச்சம்பவத்தின் நிகழ்வுகளை கோர்த்து ஒரு சித்திரம் வெளியிட்டது. நேரடியாக நகர ஆட்சியரும், எஸ்.பி-யும் முதல் சுற்றில் நிகழ்ந்த மரணத்துக்குக் காரணம் கள்ளச் சாராயம் அல்ல என்று சொன்னதே அடுத்த ரவுண்ட் மரணங்களுக்கு வழி வகுத்தது என்று சுட்டுகிறது அக்கட்டுரை. கள்ளச் சாராயத்துக்கு விதை அரசு டாஸ்மாக்குகளில் நடக்கும் ஊழல் என்று சொல்லவும் வேண்டுமோ?
அதிகரிக்கும் கற்பழிப்புகள்:
தூத்துக்குடியில் 17 வயது சிறுமி காணாமல் போன போது அச்சிறுமியின் பெற்றோர் பல காவல்நிலையங்களுக்கு சென்று வழக்கு பதிய வைக்க கெஞ்ச வேண்டியிருந்தது, திமுக எம்.எல்.ஏ-வை சந்தித்து அழுத்தம் கொடுத்தப் பின்னரே வழக்கு பதியப் பட்டத்து. அடுத்த நாள் அச்சிறுமியின் கொலையுண்ட சடலம் தான் கிடைத்தது. பொது மக்களின் கோபம் தணிக்க காவல்துறை உயரதிகாரி தமிழகத்தில் கொலை, கொள்ளை முதலியவை குறைந்துள்ளதாக புள்ளி விவரம் சொன்னார். "2021-இல் 1,597 கொலைவழக்குகள் பதியப் பட்டன, 2026-இல் அது 1,461-ஆக குறைந்திருக்கிறது, 2021-இல் 422-ஆக இருந்த கற்பழிப்புகள் 2025-இல் 401-ஆக குறைந்திருக்கிறது" என்றார். அவ்விவரத்தின் படியே பார்த்தாலும் அதிக வீழ்ச்சி என்று சொல்ல இயலாது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 கொலைகளும், 1 கற்பழிப்பும் நிகழ்கிறது. சட்ட வல்லுனர்கள் சிறைகளில் அதிகமாகி இருக்கும் கைதிகளின் எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டி குற்றங்கள் பெருகி இன்ருக்கின்றன என்று அரசு தரப்பின் ஆதாரத்தை மறுக்கின்றனர்.
கற்பழிப்புகளும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளும் (POCSO குற்றங்கள்) அதிகமாக நிகழ்கின்றன என்றே சொல்லலாம். 2023-ஐ விட 2024-இல் 2000 POCSO கற்பழிப்புகள் அதிகம் என்கிறது புள்ளி விபரம். “2023-இல் 3,407 கற்பழிப்புகள், 2024-இல் அது 5,319”. அதாவது ஒரு நாளைக்கு 15 குழந்தைகள் வண்புணர்வு செய்யப்படுகின்றன.
தலித்துகளுக்கு எதிரான வன்முறை:
கடந்த 5 வருடத்தில் தலித்துகளுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகள் தமிழகத்தில் வெகு காலமாக உள்ள சாதிய வன்முறை அடங்காததோடு சாதியம் பற்பல புது வடிவங்களை தரித்துக் கொள்வதன் விளைவே. வி.சி.க-வின் பாரளுமன்ற உறுப்பினர் முனைவர் இரவிக்குமார் ஒரு பேட்டியில் தமிழகத்தில் அதிகரித்து வரும் தலித்துகளுக்கு எதிரான வன்முறையைச் சுட்டிக் காட்டி, வன்முறையாளர்களுக்கு சட்டபடி தண்டனை கிடைப்பதும் மிக அரிதென்கிறார். அப்பேட்டி இடம்பெற்ற கட்டுரை சொல்கிறது, “இந்திய அளவில் வன்கொடுமை செயல்களுக்கான தண்டனை 31.9%, தமிழகத்தில் 12.2%” தான். “2023-இல் 1,921 வன்கொடுமை குற்றங்கள்” நிகழ்ந்தென என்கிறார் ரவிக்குமார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 17 வயது சிறுவனும், 14 வயதுடைய அவன் தங்கையும் சக பள்ளி மாணவர்களால், சாதியக் காழ்ப்பின் காரணமாக, வெட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளித்ததோடு காவல்துறையின் செயல்பாட்டுக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு நியாயம் பெற போராட வேண்டியிருந்தது அவலம்.
![]() |
| The Indian Express |
சமீபத்தில் நாங்குனேரியில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மணல்மேடு சங்கர் (2007-இல்) நினைவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் சீண்டப்பட்ட சாதி இந்துக்கள் தலித்துகள் மீது தாக்குதல் தொடுத்ததில் இருவர் கொலையுண்டனர்.
![]() |
| The Hindu |
இவை எல்லாவற்றையும் விட மனதை உலுக்கியது வேங்கைவையல் கிராமத்தில் தலித்துகளின் குடியிருப்புகளுக்கு தண்ணீர் சேமிக்கும் நீர்த் தொட்டியில் விஷமிகள் மலம் கழித்தனர் என்று தண்ணீர் பருகிய சிலர் நோய்வாய்ப்பட்ட பின் தெரிய வந்தது, இன்று வரை அதைச் செய்தவர்கள் யாரென்று காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.
ரவிக்குமார் தன் பேட்டியில் இரண்டு திராவிட கட்சிகளையும் குறை சொல்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆட்சிகள் மாறினாலும் தலித்துகள் எதிர்கொள்ளும் சவால்கள் மாறாததற்கு காரணம் இங்கிருக்கும் சாதியம்.
அதிகரிக்கும் போதை பழக்கம்:
தமிழ்நாடு போதை மாத்திரை கலாச்சாரத்தில் வீழ்ந்து கிடக்கிறது (சாராய கலாச்சாரம் தனி) என்றால் மிகையில்லை. வெகுகாலம் போதை வஸ்து என்றால் கஞ்சா என்றிருந்தது மாறி கஞ்சா குறைந்துவிட்டது, அதனிடத்தில் பல்வேறு புதிய போதை மாத்திரைகள் மாநிலமெங்கும் பரவி இருக்கிறது.
கஞ்சா பறிமுதல் 2022-இல் 28,383 கிலோவாக இருந்தது 2025-இன் ஆரம்பத்தில் 3,767-ஆக குறைந்தது (முழு வருடம் அல்ல). அதே வேளையில் போதை மாத்திரை பறிமுதல் 2022-இல் 62,750 ஆக இருந்தது 2024-இல் 141,760-ஆக உயர்ந்தது (255% அதிகம்). Opiod வகை மருந்துகள் தமிழகத்திலேயே தயாராகி விநியோகிக்கப்படுகிறது. இந்த பறிமுதல்கள் நமக்குச் சொல்வது காவல்துறையின் செயல்பாட்டை அல்ல மாறாக தமிழகம் வீழ்ந்து கொண்டிருக்கும் பாதாளத்தைச் சொல்கிறது. இளைஞர்களே இதில் பெருமளவில் பலியாகிறார்கள்.
![]() |
| The Federal |
முடிவுரை - தொடரும் அவலங்கள்
மேலேச் சொன்ன தகவல்களைத் தொகுத்துப் பார்த்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் நிலை கவலைக்கிடம் என்று சொல்லலாம். இதில் எதுவும் புதிதல்ல எல்லாமே தொடர்ச்சி தான். ஆட்சிகள் மாறினாலும் அவலங்கள் மாறுவதில்லை. ஆரம்ப பத்தியில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன், எந்த கட்சியையும் பிரத்தியேகமாக சமூக சீர்கேடுகளுக்கு காரணமென்று மக்கள் நினைப்பதில்லை, அவ்வப்போது அந்தந்த ஆட்சியை நீக்குவது இந்த சீர்கேடுகளுக்கு அதிகார மாற்றம் ஒரு குறைந்த பட்ச பிரேக்காக இருக்கும் என்று கருதுவதே காரணம்.
இதில் கட்சிகளை மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்லை. பத்திரிக்கை உலகம் மொத்தமும் இன்று திமுக பாக்கெட்டில். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பத்திரிக்கையாளர்கள் இன்னும் விலைப் போகவில்லை என்பதே ஆறுதல். சமீபமாக இத்தனை டி.வி. விவாதங்கள் நடந்ததே எதிலாவது இவைக் குறித்து விரிவான விவாதம் நடந்ததா? இல்லை. கிடையாது. நஹி. நோ.
சுட்டிகள்:
- https://en.wikipedia.org/wiki/Death_of_P._Jayaraj_and_J._Bennix
- https://www.thenewsminute.com/tamil-nadu/a-look-at-27-custodial-deaths-in-tamil-nadu-most-victims-were-poor-and-marginalised
- https://www.ndtv.com/tamil-nadu-news/class-9-student-allegedly-gang-raped-in-tamil-nadu-2-arrested-11199603
- https://www.newindianexpress.com/states/tamil-nadu/2025/Apr/29/rape-cases-in-tn-including-those-under-pocso-went-up-in-24-policy-report
- https://www.thehindu.com/infographics/2024-09-13/kallakurichi-hooch-tragedy/index.html
- https://indianexpress.com/article/india/tamil-nadu-complaining-school-caste-harassment-teen-siblings-attacked-sickles-inside-home-8888337/
- https://www.thehindu.com/news/national/tamil-nadu/seven-held-for-murdering-2-persons-in-indiscriminate-attack-in-nanguneri/article70700299.ece
- https://thefederal.com/category/states/south/tamil-nadu/tamil-nadu-thoothukudi-teen-girl-death-row-alleged-improving-crime-rates-dmk-govt-234231
- https://www.thehindu.com/news/national/tamil-nadu/political-disempowerment-of-dalits-in-tn-is-cause-of-rise-in-atrocities-vck-general-secretary-d-ravikumar/article70299478.ece
- https://www.hindutamil.in/news/tamilnadu/556917-how-many-have-slipped-in-the-police-station-bathroom-in-the-last-3-years-human-rights-commission-notices-to-police-commissioner-to-report.html
- https://www.dailythanthi.com/news/tamilnadu/are-police-station-toilets-the-only-places-where-accused-people-can-slip-and-fall-high-court-question-1158008
- https://tamil.samayam.com/latest-news/state-news/video-of-police-attacking-some-youths-at-police-station-in-tamil-nadu-have-surfaced-on-social-media/articleshow/112372077.cms
- https://www.bbc.com/tamil/articles/cqv6e46x152o
- https://www.thehindu.com/news/national/tamil-nadu/the-vengaivayal-case-explained/article69137593.ece
- https://thefederal.com/category/states/south/tamil-nadu/tn-youth-drugs-narcotic-tablets-ganja-182065
- https://www.bbc.com/tamil/articles/c07z2dxn387o








No comments:
Post a Comment